பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு 'மோகன். வருடத்திற்கு எத்தனை தடவை இந்த மாதிரி எனக்குப் பணம் தருவ?' என்று கேட்டார் தாத்தா. கந்தனுக்கு திக்கென்றது. 'ஒரு தடவை ஐநூறு ரூபாய் கொடுத்தால் இன்னும் எத்தனை தடவை கொடுப்பாய் என்று கேட்கிறாரே இந்தத் தாத்தா? சரியான பணத்தாசை பிடித்தவராய் இருப்பார் போலிருக்கிறது.' ஒரு நொடியில் பலவிதமான சிந்தனைகள் ஓடின கந்தனின் மனத்தில். மென்று முழுங்கி 'நீங்களே சொல்லுங்க தாத்தா' என்றான். 'எனக்கு மாசாமாசம் கொடு. ஆனா ஐநூறு ரூபாயில்லை. உன்னால முடிஞ்சது கொடு' என்றார். 'அப்பாடா. அம்பதோ நூறோ கொடுத்துக்கலாம்' என்று நினைத்துக் கொண்டு 'சரி தாத்தா' என்றான் கந்தன்.
'கேசவா. நீ மாசாமாசம் அன்னதானம் செய்யுற இல்லை? எப்படி நடக்குது அது?' என்று கேசவனிடம் தாத்தா கேட்க, அவனும் 'ஆமாம் தாத்தா. இருபத்தஞ்சு பொட்டலம் புளியோதரையோ சாம்பார் சாதமோ செஞ்சு பஸ் ஸ்டாண்ட், கோவில்ன்னு போயி அவங்க கையில கொடுக்குறேன் தாத்தா' என்றான். 'கொஞ்சம் தயிர் சாதமும் கொண்டு போ. யாருக்கு எது வேணும்னு கேட்டுக் குடு. இந்தா இந்த ஐநூறு ரூபாயை அதுக்கு வச்சுக்கோ. மோகனும் இனிமே மாசாமாசம் உன்னோட சேர்ந்துக்குவான். மோகன். எனக்கு நீ கொடுக்குறேன்னு சொன்ன பணத்துல நீயும் கேசவனும் சேர்ந்து அன்னதானம் பண்ணுங்க' என்றார் தாத்தா. கந்தனும் தலையாட்டினான்.
'சரி வாங்க உள்ள போகலாம்' என்று அவர்களை அழைத்துக் கொண்டு பனையோலைகளாலும் தென்னங்கீற்றுகளாலும் ஆன வீட்டிற்குள் கூட்டிச் சென்றார். நீள் சதுரமாக இருந்தது அந்த அறை. ஒரே அறை தான். அங்கேயே ஓரத்தில் ஒரு சின்ன மண்ணெண்ணெய் அடுப்பு இருந்தது. ஒரு சின்ன டேப்ரிகார்டரும் சில காஸெட்டுகளும் கிடந்தன. ஒரு கயிற்றுக் கட்டில் சுவரோரமாக இருந்தது. இரண்டு மூன்று பாய்களும் இரு தலையணையும் இன்னொரு ஓரத்தில் கிடந்தன.

கோவில் என்று மணிகண்டன் சொன்னானே என்று கந்தன் எண்ணிக் கொண்டே இருக்கும் போதே 'மோகன். இதோ இந்த படியில ஏறி உள்ளே பாரு. இது தான் கோவில்' என்று சொன்னார் தாத்தா. அவனும் உள்ளே போய் பார்க்க ஒரே இருட்டாக இருந்தது. கருவறை போல் இருந்த ஒரு அறையில் ஒரு நட்டு வைத்தக் கல் இருந்தது. சிவலிங்கமா ஏதாவது சிலையா என்று தெரியவில்லை. மணிகண்டன் வந்து தீபத்தை ஏற்றிய பிறகு தான் அது லிங்கோத்பவர் சிலை என்று தெரிந்தது. சிவலிங்கம் போன்ற கல்லில் முன் பகுதியில் சிவபெருமானின் திருமுடியும் திருவடிகளும் கொஞ்சமே மறைந்திருக்க ஒரு அன்னப்பறவை திருமுடி பக்கத்திலும் ஒரு பன்றி திருவடிகள் பக்கத்திலும் இருந்தன. பார்த்துவிட்டு கை கூப்பி வேக வேகமாகக் கும்பிட்டுவிட்டு திரும்பி வந்தான் கந்தன். கேசவன் வெளியில் இருந்தே கைகூப்பி கும்பிட்டுவிட்டான்.
'உள்ளே என்ன இருக்கு?' என்று தாத்தா கேட்டவுடன் 'லிங்கோத்பவர்' என்று சொன்னான் கந்தன். 'கேசவா. லிங்கோத்பவர்ன்னா என்னன்னு தெரியுமா?' என்று தாத்தா கேட்க கேசவன் தெரியாது என்று தலையாட்டினான். தாத்தா கந்தனைப் பார்க்க 'பிரம்மாவும் விஷ்ணுவும் ஜோதி ரூபமா நின்ன சிவனோட அடியையும் முடியையும் பார்க்க ட்ரை பண்ற மாதிரி இருக்கிறது தான் லிங்கோத்பவர்' என்றான் கந்தன். புன்சிரிப்போடு 'அவ்வளவு தானா?' என்று தாத்தா கேட்க 'இவர் என்ன இப்படி கேட்கிறாரே? இன்னும் என்ன சொல்ல?' என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டு திடீரென நினைவு வந்தவன் போல் கந்தன் 'அப்படி ஜோதி உருவமா சிவன் நின்ற இடம் தான் இந்த மலை. அந்த தீயே இப்ப மலையா நிக்குது. அதனால தான் இந்த மலையே சிவன்னு சொல்லுவாங்க' என்றான். தாத்தா ஆமோதிப்பதைப் போல் தலையாட்டிவிட்டு மீண்டும் 'அவ்வளவு தானா?' என்றார். கந்தனுக்கு அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. 'ஆமாம் தாத்தா' என்றான். தாத்தாவும் 'சரி போதும்' என்று சொல்லிவிட்டு 'எப்ப கோவிலுக்குப் போறீங்க?' என்று கேட்டார். கேசவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடு பார்த்தான் கந்தன்.
அடுத்த அத்தியாயம் இங்கே