Wednesday, August 22, 2007

அதிக வேலை எப்போது நடக்கிறது? (ஒரு நிமிட மேலாளர் - பகுதி 3)

பகுதி 1, பகுதி 2

சென்ற பகுதியில் இரண்டு வகை மேலாளர்களைப் பார்த்தோம். இரண்டு வகை மேலாண்மையும் (சர்வாதிகார மேலாண்மை, மக்களாட்சி மேலாண்மை) எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்த்தோம். அது ஏன் என்பதற்கும் சில காரணங்களை அங்கே பார்த்தோம். இங்கே இன்னொரு காரணத்தைப் பார்க்கப் போகிறோம்.

நீங்கள் அலுவலகத்தில் எந்தப் பொழுதில் அதிக வேலையைச் செய்து முடித்திருக்கிறீர்கள்? நீங்கள் உங்களைப் பற்றிய மகிழ்வான எண்ணத்தில் இருக்கும் போதா? உங்களைப் பற்றி ஏதோ ஒரு குறை மனத்தில் இருக்கும் போதா?

நான் பார்த்தவரையில் என்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையும் என்னைப் பற்றிய குறையும் மனத்தில் இல்லாமல் நான் நன்கு வேலை செய்கிறேன், எனக்கு அதற்குரிய திறன்கள் இருக்கின்றன என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது நிறைய வேலைகள் நடந்து முடிவதைப் பார்த்திருக்கிறேன். அதே போல் நான் பழகிய மற்றவர்களிடமும் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால் - பதிவுலகிலும் அப்படித் தான். சில வாரங்களில் (சில நாட்களில்) நான் தொடர்ந்து சில இடுகைகள் இட்டிருப்பேன். அப்போது பார்த்தால் அந்த நேரங்களில் என்னைப் பற்றிய குறை உணர்வு எதுவுமே எனக்கு இல்லாமல் இருந்ததைக் கவனித்திருக்கிறேன். நேரம் கிடைக்காமல் இடுகைகள் இடாமல் இருந்ததுண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நேரம் இருந்தும் என்ன எழுதி என்ன பயன் என்ற எண்ணமோ, நாம் எழுதுவதை யார் படிக்கிறார்கள் என்ற எண்ணமோ வேறு ஏதாவது மனக்குறையோ இருக்கும் போது இடுகைகள் எழுத முடிவதில்லை. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல் அலுவலகத்திற்கு வெளியே உள்ள வாழ்க்கையில் வேறு பல எடுத்துக்காட்டுகள் காட்டலாம். (எல்லா எடுத்துக்காட்டுகளும் எல்லோருக்கும் பொருந்தாது).

அதனால் நிறைய வேலையை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் சர்வாதிகார வகையில் இருக்கும் மேலாளர்கள் அதனை நன்கு நிறைவேற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இந்தப் பகுதியிலேயே அதற்கு விடை இருக்கிறது. சொல்லுங்கள்.

***

மக்கள் தங்களைப் பற்றி எப்போது நல்லதாக உணர்கிறார்களோ அப்போது நிறைய வேலை செய்கிறார்கள். நம்மிடம் பணிபுரிபவர்கள் நல்லவிதமாகத் தங்களைப் பற்றித் தாங்களே உணர்ந்தால் தான் அவர்கள் நிறைய வேலைகளை நேரத்தோடு செய்து முடிப்பார்கள். அதனால் அவர்களிடம் பேசும் போது அவர்கள் செய்த தவற்றை பெரிது பண்ணி அவர்களைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அவர்கள் நம்மிடம் பயப்படுவார்களே தவிர வேலை செய்து முடிப்பதில்லை; குறை கண்டு குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு அந்த குறை தீர அவர்களையே நல்ல வழிகளைக் காண உதவி செய்து அவர்கள் தங்களைப் பற்றி நல்லவிதமான எண்ணம் கொள்ளும் வகையில் பேசிப் பழகினால் அவர்களுக்குத் தங்களைப் பற்றிய நல்லெண்ணம் மிகும்; மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்; நம் நோக்கமான வேலைகளும் நேரத்தில் முடியும்.

சொல்லுவது யாருக்கும் எளிது தான். இந்த மாதிரி செய்ய இரண்டாவது வகை (மக்களாட்சி வகை) மேலாளருக்கு முடியும். அவர்களுக்கு அது இயற்கை. ஆனால் சர்வாதிகார மேலாளருக்கு? அது மிகக் கடினம். ஆனால் அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு எளிய வழி இது தான்.

12 comments:

நாஞ்சிலான் said...

//நிறைய வேலையை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் சர்வாதிகார வகையில் இருப்பவர்கள//

புரிய வில்லையே. கொஞ்சம் விளக்குங்களேன்.

குமரன் (Kumaran) said...

நாஞ்சிலான். இரண்டாம் பகுதியைப் படித்துப் பாருங்கள். அப்போதும் புரியவில்லை என்றால் சொல்கிறேன்.

நாமக்கல் சிபி said...

எதிர்மறை எண்ணங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு உற்சாகமாக வேலையைத் தொடங்குங்கள்!

(சரிதானே குமரன்?)

வவ்வால் said...

குமரன்,
//ஆனால் பெரும்பாலான நேரங்களில் நேரம் இருந்தும் என்ன எழுதி என்ன பயன் என்ற எண்ணமோ, நாம் எழுதுவதை யார் படிக்கிறார்கள் என்ற எண்ணமோ வேறு ஏதாவது மனக்குறையோ இருக்கும் போது இடுகைகள் எழுத முடிவதில்லை.//

இது உங்களை பொருத்தவரையில் இருந்து இருக்கலாம். ஆனால் பொதுவாக நான் அப்படி நினைப்பதே இல்லை, எனது பல பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை எனினும் , எனக்கு தோன்றும் போதெல்லாம் பதிவிடுவேன். இணையம் வர இயலவில்லை எனில் அப்படியே இருக்கும்.

யார் படிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் கணக்கில் கொள்வதே இல்லை. எனக்கு தோன்றுவதை பதிவு செய்து வைக்க ஒரு இடம் , படித்தால் அவர்களுக்கு லாபம் இல்லையா, அவர்களுக்கு தான் நஷ்டம் என எடுத்துக்கொள்வேன்!

ஒரு வேலை நீங்கள் தமிழ்மண அளவுகோல்களின் அடிப்படையில் இதைப்பார்த்து இருக்கலாம்.

ஆனால் வேலை சூழலில் நீங்கள் சொன்னவாறு சர்வாதிகார போக்கை யாராவது காட்டினால் வீம்புப்புகு இழுத்தடிப்பது உண்டு! ஆனால் அதை பதிவுகள் இடுவதில் பொருத்த முடியாது.

குமரன் (Kumaran) said...

இடுகையை இன்னொரு முறை படித்துப் பார்த்தேன். சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது. திருத்தி எழுதிவிட்டுச் சொல்கிறேன். மீண்டும் படித்துப் பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

இடுகையைத் திருத்தி எழுதியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நாஞ்சிலான். இப்போது படித்துப் பாருங்கள். இன்னும் விளக்கம் வேண்டுமா?

குமரன் (Kumaran) said...

உண்மை சிபி. நீங்கள் சொல்வது நாமே நமக்குச் செய்து கொள்வது. நான் கேட்டது மேலாளர்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்குச் செய்ய வேண்டியது என்ன என்று. இப்போது அதையும் பேசியிருக்கிறேன். சரி தானா என்று பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

வவ்வால். அது ஒரு எடுத்துக்காட்டு தான். அதுவும் என்னைப் பொறுத்தவரையில் தான். அது உலகளாவிய எடுத்துக்காட்டு போல் தொனித்திருந்தால் மன்னிக்கவும்.

தமிழ்மண அளவுகோல்களின் படி, பின்னூட்ட எண்ணிக்கையின் படி என்பதெல்லாம் ஒரு காரணி என்றாலும் அவை பற்றி நான் பேசவில்லை. அவற்றைத் தாண்டி சில நேரங்களில் சுயபரிதாபம், இயலாமை உணர்வுகள் தோன்றும்; அந்த நேரங்களைச் சொன்னேன்.

வவ்வால் said...

குமரன் ,
நீங்கள் தவறாக எதுவும் சொல்லிவிடவில்லை.
மனச்சோர்வு , சுயபரிதாபம்,வேலைப்பளு எல்லாம் உண்மையில் பாதிக்கும் தான்.

//என்ன எழுதி என்ன பயன் என்ற எண்ணமோ, நாம் எழுதுவதை யார் படிக்கிறார்கள் என்ற எண்ணமோ//
நீங்கள் யார் படிக்கிறார்கள் எனவும் சொன்னதால் தான் அதை சொன்னேன்.

எவ்வித நிர்பந்தமும் இல்லாத நிலைதான் எதற்கும் உகந்தது!

மனதில் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்க வேண்டும் என நீங்கள் சொல்லவருவதும் புரிகிறது!

Machi said...

"He is the Man" or " You are the Man" அப்படின்னு பாராட்டணும். :-))

குமரன் (Kumaran) said...

உண்மை குறும்பன். ஆனால் பாராட்டுகள் வெறும் உதட்டளவில் இருக்கக்கூடாது. உண்மையாக இருக்க வேண்டும். உதட்டளவில் இருக்கும் பாராட்டுகளை ஆண்டவன் முதல் ஆண்டி வரை அனைவரும் உடனே கண்டு கொள்வார்கள். இல்லையா? :-)