Tuesday, August 28, 2007

திருக்குறளை எரித்தார் பாண்டித்துரை தேவர்

பாண்டித்துரை தேவர் திருக்குறள் நூற்களை வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்று சிவமுருகன் முன்பொரு பதிவின் பின்னூட்டத்தில் சொன்னதைப் படித்தபோது மிக்க வியப்பாக இருந்தது. அதனால் அந்த நிகழ்ச்சியைப் பற்றித் தேடிப் படித்தேன். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தமிழ்ப்புலவர் வாழ்ந்த மதுரையில் பிழை மலிந்த திருக்குறள் பதிப்பு என்றால் அவற்றை எரித்ததும் பொருத்தமான தமிழ்த் தொண்டே.

மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தொடங்கினார். தமிழ் அணி இலக்கணம் பேசும் எதுகை மோனைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார். 'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

ஒரு முறை நான்காம் தமிழ்ச்சங்கம் தந்த வள்ளலாம் பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார். அந்தப் பதிப்பில் இருந்த குறைபாடுகளைக் கண்டு மிகவும் மனம் நொந்தார் பாண்டித்துரை தேவர்.

திருக்குறளின் முதல் குறட்பா இப்படி திருத்தப்பட்டிருந்தது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு


இப்படியே நூல் முழுக்க நெடுகவும் பெரும்பிழைகள் இருந்தன. தன் சினத்தை மறைத்துக் கொண்டு தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார். முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர், இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் தம் கண் முன் தீயிட்டுக் கொளுத்த வைத்தார்.

'இப்பித்துக்கொள்ளியிடம் எஞ்சியிருந்த முன்னூறு பிரதிகளும் அறிஞர் பாற் சென்று மனத்துன்பம் விளைக்காதிருப்பதற்கும் அறியாதார் திருக்குறளை தாறுமாறாக பாடமோதாமல் இருப்பதற்கும் இது தான் தக்க பரிகாரம்' என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தார் தேவர்.

***

இந்த நிகழ்ச்சியைப் படித்தவுடன் சில எண்ணங்கள் தோன்றின. ஸ்காட் துரையின் தமிழார்வம் மெச்சத் தகுந்ததே. அந்த ஆர்வத்தால் தமிழ் கற்றுக் கொண்டது பாராட்டத் தகுந்தது. அது போல் தற்காலத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பதிவர்கள் பலரும் கொள்ளும் ஆர்வமும் அதில் அவர்கள் செலவிடும் நேரமும் மெச்சவும் பாராட்டவும் தகுந்தவை. எதுகை மோனைகளை மட்டும் கற்றுக் கொண்டு அதிலேயே தமிழ் இலக்கியம் எல்லாமும் முடிந்துவிட்டதாக எண்ணி திருக்குறளை பொருட்குறை தோன்ற திருத்தினார் ஸ்காட். அதே போல் தான் இந்தப் பதிவர்களும் தாங்கள் படித்த சில உண்மைகளையும் பல திரிக்கப்பட்ட உண்மைகளையும் தன் கண்முன் காண்பவை சிலவற்றையும் கொண்டு சில கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். அவையே முடிந்த முடிபு என்பது போல் ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுரைகள் ஸ்காட் துரையின் திருக்குறள் பதிப்பைப் போல் தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார் இல்லை. ஸ்காட்டிடம் கேட்டிருந்தால் மிகத் தெளிவாக விளக்கியிருப்பார் 'அகர என்று வந்ததால் உகர என்று வருவதே எதுகைக்குப் பொருத்தம். உலகு என்று வந்ததால் உகர என்று வருவதே மோனைக்குப் பொருத்தம். அது மட்டும் இல்லாமல் பொருளிலும் தவறு ஒன்றும் இல்லை. எழுத்துகள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன. உலகு என்ற சொல் உகரத்தில் தொடங்குகிறது. இது தான் வள்ளுவர் சொன்னது' என்று அடித்துச் சொல்லியிருப்பார். திருக்குறள் அறியாதவர் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதும் நடந்திருக்கும். ஆகா ஓகோ என்று புகழ்வதும் நடந்திருக்கும். அவர் ஒரு ஆங்கிலேயர் என்பதும் அந்த புகழ்ச்சிகளுக்கு ஊட்டம் கொடுத்திருக்கும். அதே போல் தான் பதிவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் நடக்கிறது. அவற்றில் எழுதியதை மிக நன்கு விளக்கிக் கூற அந்த கட்டுரையாளர்களால் முடிகிறது. அந்த விளக்கத்தை பலர் ஏற்றுக் கொண்டு ஆகா ஓகோ என்று புகழ்வதும் நடக்கிறது.

தேவர் செய்ததைப் போல் அந்தப் பிரதிகளை வாங்கி எரிக்க இந்தக்காலத்தில் முடியாது. இப்போது முடிவதெல்லாம் அந்தக் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளைத் தகுந்த முறையில் எடுத்துக்காட்டி மாற்றுக்கட்டுரைகள் வரைவதே. அதனையே செய்ய வேண்டும். ஸ்காட் துரையோ மாற்றார். அதனால் தேவர் அவர்கள் அவரிடம் விளக்க முயலவில்லை போலும். ஆனால் இங்கு கட்டுரை எழுதுபவர்கள் நம்மவர்கள். அதனால் கருத்துப் பரிமாற்றம் நன்கு நிகழவேண்டும். நிகழட்டும்.

26 comments:

வவ்வால் said...

நன்றாக சொன்னீர்கள் குமரன்,

இணையத்தில், அதுவும் பதிவுலகில் எதை சொன்னாலும் உடனே சுட்டி ஒன்று தாருங்கள் ,பிறகு ஏற்றுக்கொள்கிறேன் என சொல்கிறார்கள், என்னமோ வலைமனைகளில் போடுவதெல்லாம் உண்மை என்பது போல, பலரும் அச்சு புத்தங்களில் படித்து இருப்பார்கள், ஒளிவருடி(ஸ்கேனர்) எல்லோரிடமும் இருக்கும் என சொல்ல முடியாது, அப்படி இருக்கும் போது, படித்ததை சொல்லி புத்தகம் சொன்னாலும் நம்ப மாட்டார்கள் , ஆன் லைனில் காட்ட வேண்டும் என்பார்கள்.

உண்மையில் இணையத்தில் வரும் பல தகவல்கள் சும்மா குத்துமதிப்பாக , வரவன் போறவன் சொன்னதுலாம் எழுதி வைப்பது ஆக இருக்கிறது.

அதையெல்லாம் பிடித்துக்கொண்டு அந்த சைட்டில் போட்டான் அதான் உண்மை என ஜல்லி அடிப்போர் அதிகம் ஆகிவிட்டார்கள்!

சிவபாலன் said...

குமரன்,

பகிர்வுக்கு நன்றி!

இது என்னங்க.. எதையும் எதையும் முடிச்சு போடுறீங்க.. :)


இட ஒதுக்கீடு கூடாது என்று ஒருவருக்கு தோன்றும் அதற்கு தேவையான விடயங்களை அடங்கிய கட்டுரையைத் தான அவர் தருவார். இது போல் எதிர் கருத்து உள்ளபவரும் செய்வார்.

படிக்க வருபவர்கள் இரண்டையும் படித்து எது சரி எனப் படுகிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். எது பிடிக்கிறதோ அதைப் பாராட்டுகிறார்கள். :)


இதுதானே நடை முறை. மாற்றுக் கருத்தை கட்டுரை வடிவில் தருவதுதான் முறை.

உங்கள் கருத்துதான் சரி, அல்லது அவர் கருத்துதான் சரி என்பது அவரவரைப் பொருத்து மாறுபடும்.

உண்மையில் இது உங்களுக்கு நன்றாக தெரிந்த விடயமே.. பிறகு எதற்கு இப்படி ஒரு இடுக்கை.. :)


தெரிந்துகொள்ளலாம் என கேட்கிறேன். :)

வெற்றி said...

குமரன்,
மிகவும் சுவாரசியமான பதிவு. பாண்டித்துரை தேவர் அவர்களின் பணி மெச்சத்தக்கதே.

இப் பதிவைப் படித்த போது கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள் பாடல் வரிகளுக்கு மிகவும் முக்கியம் கொடுப்பவர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஒரு திரைப் படத்தில் மகாகவி பாரதியாரின் பாடலான, "சிந்து நதியின் மிசை " எனும் பாடலைப் பதிவு செய்யும் போது பாடலில் உள்ள 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து' எனும் வரியை மாற்றித் தரும்படி மெல்லிசை மன்னர் கவியரசரிடம் கேட்டாராம். பாட்டிசைத்து என்று சொல் பாட்டி செத்து என்பது போல கேட்கிறது என்றாராம் மெல்லிசை மன்னர்.
பாரதியின் பாடலை மாற்றக் கூடாது என கவியரசர் கண்டிப்புடன் மெல்லிசை மன்னருக்குச் சொன்னாராம்.

குமரன் (Kumaran) said...

சிவபாலன். நான் தவறாக ஒன்றும் சொல்லிவிடவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்வதையே தான் நானும் சொல்லியிருக்கிறேன். நானும் மாற்றுக்கருத்தைச் சொல்ல வேண்டியதன் அவசியத்தையும் கருத்து பரிமாற்றத்தின் தேவையையும் தான் இங்கே பேசியிருக்கிறேன். நிகழவேண்டும். நிகழட்டும். என்று தானே இந்த இடுகையை முடித்திருக்கிறேன். தவறான கருத்துகள் என்று ஒருவருக்குத் தோன்றுபவை மற்றவருக்கு எப்படி சரியாகத் தோன்றுகிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் சொல்ல வந்தேன். அது தொடர்பில்லாத முடிச்சு என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறது. :-) மீண்டும் இடுகையைப் படித்துப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லையும் சிந்தித்தே சொல்லியிருக்கிறேன். யாரையும் குறை சொல்லவில்லை.

நளாயினி said...

அடடாh அடடாh மெச்சுகிறேன் தங்களை உண்மையின் சிகரமென.நம்மால் என்ன செய்ய முடியும். நீங்களே சொல்லுங்களேன்.
யாவாராயினும் நா காகக்க.

குமரன் (Kumaran) said...

வவ்வால். வீட்டில் என் கண் முன்னால் நடப்பதையே நான் கவனிக்கவில்லை என்றால் என்னால் அறுதியிட்டு இப்படித் தான் நடந்தது என்று சொல்ல முடியவில்லை. (வீட்டில் அடிக்கடி இதனால் பிரச்சனை வருகிறது - நான் சொல்றதை எல்லாம் காதுலயே போட்டுக்கிறதில்லைன்னு சண்டை போடறாங்க - அது வேறு பற்றியம் (விதயம்) :-) ). அப்படி இருக்க ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய கருத்து பெரும்பாலும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களின் கதையாகத் தான் இருக்கிறது.

பதிவுலகில் இன்று எழுதுவது நாளை ஆதாரம். தான் எழுதிய பழைய கட்டுரைகளையே தன் புதிய கட்டுரைக்கு தரவுகளாகக் காட்டுவது பதிவுலகப் 'பண்பாடு'. அச்சுப்புத்தகத்தில் வருபவை எல்லாமும் கூட முடிந்த முடிபுகள் இல்லையே?! புதிய புதிய தரவுகள் வெளிப்படும் போது பழைய கருத்துக்கோர்வைகள் அவிழ்ந்து போவதும் உடைந்து போவதும் நடக்கத் தானே செய்கின்றன?!

இந்தக் குத்துமதிப்பாகச் சொல்வது என்றிருக்கிறதே அதனை நானும் செய்திருப்பேன் என்றே நினைக்கிறேன். அவற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

நளாயினி said...

உண்மையில் இணையத்தில் வரும் பல தகவல்கள் சும்மா குத்துமதிப்பாக , வரவன் போறவன் சொன்னதுலாம் எழுதி வைப்பது ஆக இருக்கிறது.

அதையெல்லாம் பிடித்துக்கொண்டு அந்த சைட்டில் போட்டான் அதான் உண்மை என ஜல்லி அடிப்போர் அதிகம் ஆகிவிட்டார்கள்!


புரிஞ்சா சரி.

நளாயினி said...

சிவபாலன் said...
இட ஒதுக்கீடு கூடாது என்று ஒருவருக்கு தோன்றும் அதற்கு தேவையான விடயங்களை அடங்கிய கட்டுரையைத் தான அவர் தருவார். இது போல் எதிர் கருத்து உள்ளபவரும் செய்வார்.

தெரிந்துகொள்ளலாம் என கேட்கிறேன். :)

August 28, 2007 2:02 PM


இது லூசுத்தனம்.

வவ்வால் said...

குமரன் ,
//பதிவுலகில் இன்று எழுதுவது நாளை ஆதாரம். தான் எழுதிய பழைய கட்டுரைகளையே தன் புதிய கட்டுரைக்கு தரவுகளாகக் காட்டுவது பதிவுலகப் 'பண்பாடு'. அச்சுப்புத்தகத்தில் வருபவை எல்லாமும் கூட முடிந்த முடிபுகள் இல்லையே?! புதிய புதிய தரவுகள் வெளிப்படும் போது பழைய கருத்துக்கோர்வைகள் அவிழ்ந்து போவதும் உடைந்து போவதும் நடக்கத் தானே செய்கின்றன?!
//

நீங்கள் சொல்வது சரிதான் , நம்பதகுந்த புத்தங்கள் என்றி சொல்லி இருக்க வேண்டும் , அதிலும் பிழைகள் இருக்கலாம், ஆனாலும் இணையத்தில் கிடைப்பது போல அத்தனை ஆதாரம் அற்ற தகவல்கள் , அல்லது விரும்பியவறு புத்தகம் போடுவது குறைவு , இணையத்தில் வெகு எளிதாக ஒருவரால் தவறான செய்தியை கூட நம்பதகுந்த உண்மை போல கட்டமைக்கலாம்.

அதனைத்தான் சொல்ல வந்த்தேன் . குறிப்பாக எது ஒன்று பற்றி இங்கு பேசினாலும் சுட்டி எங்கே என்று கேட்பவர்கள் அதிகம் அதனால் தான் இணையத்தில் இல்லாத எதுவும் ஏற்க தக்கது இல்லையா என்ற பொருளில் சொன்னேன்!

பொதுவாக எப்பொருள் யார் கூறினும் மெய்ப்பொருள் காண வேண்டும் என்பது தான் சரி!

சிவபாலன் said...

பிரச்சனையே அங்கதான்.. லூசுத்தனம் என்பது அவரவர் பார்வையில்..

இதுதான் சரி என்றோ தவறு என்றோ யாரும் சொல்ல முடியாது..

ஆதிபகவன் முதற்றே எனச் சொல்லி..

தெய்வத்தினால ஆகதெனினும்..

இப்படியும் இருக்கே.. இது லூசுதனமா?

வார்த்தையை சரியா பயன்படுத்துங்க.. டைப் அடிக்கத்தெரியும் என்பதற்காக எதுவேண்டுமானலும் டைப் அடிக்கலாம் என செய்யதீங்க..

சிவபாலன் said...

அண்ணாவின் நாடகத்தில், நீதி தேவன் மயக்கம் எனற ஒரு நாடகம்.. கேள்விக்கனைகளை தொடுத்திருப்பார்..

இராமணயத்தின் குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அது லூசுத்தனமாகத்தான் தெரியும்..

மற்றவர்களுக்கு..

குமரன் (Kumaran) said...

நளாயினி, நீங்கள் சொல்ல வரும் கருத்துகள் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி.

தாயே யசோதா என்று தொடங்கும் பாடலைப் பாடுபவர்கள் சில நேரம் 'தாயேய சோதா உந்தன் நாயர் குலத்துதித்த' என்று பாடுவார்கள். அப்படிப் பாடாமல் மிகத் தெளிவாக 'பாட்டிசைத்து' என்று பாடி டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் காப்பாற்றிவிட்டார் போலும். :-) இது வரை அந்த சொல் அந்தப் பாட்டில் எம்.எஸ்.வி. சொன்னது போல் ஒலித்ததில்லை. நல்ல வேளை.

கவியரசர் பாரதியின் பாடலை மாற்றக்கூடாது என்று சொன்னது சரி. ஆனால் செல்லரித்தும் பழமையாலும் சில பாரதியார் பாடல்களில் சில சொற்கள் காணாமல் போன போதும், பதிப்புக்களுக்கிடையில் பாடபேதங்கள் உண்டான போதும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் பாரதியாரின் பாடல்களில் அந்த காணாமல் போன சொற்களை இட்டு நிரப்பியும், பாடபேதங்களைக் களைந்தும் பாரதியார் கவிதைகள் என்ற நூலைப் பதித்தார் என்று படித்திருக்கிறேன். அந்த பதிப்பு தான் தற்கால பாரதியார் கவிதைகள் புத்தகங்களுக்கு எல்லாம் அடிப்படை புத்தகமாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நளாயினி,

'மெச்சுகிறேன் தங்களை உண்மையின் சிகரமென' என்று எழுதியிருக்கிறீர்கள். வஞ்சப்புகழ்ச்சியாகத் தொனிக்கிறது. வஞ்சப்புகழ்ச்சி தானே?!

யாகாவாராயினும் நா காக்க என்று சொல்லிவிட்டு அடுத்தப் பின்னூட்டத்திலேயே லூசுத்தனம் என்று எழுதியிருக்கிறீர்களே? ஏன் இந்த முரண்?

முன்னுக்குப் பின் முரண்படுவது எல்லாரும் செய்வது தான். ஆனால் அடுத்த அடுத்த நொடியில் முரண்படுவது தெளிவாகத் தெரிகிறதே.

குமரன் (Kumaran) said...

உண்மை வவ்வால். இலவசமாக பிளாக்கரும் தமிழில் எழுதக் கருவிகளும் கிடைத்துவிட்டதால் கிடைத்த பதிவுச் சுதந்திரம் நல்லது செய்வது போல் கெட்டதும் செய்கிறது. ஆனால் கால வெள்ளத்தில் நிற்பதே நிற்கும் என்பதால் எதிர் எதிர் கருத்துகளைச் சொல்லிச் சென்று கொண்டே இருப்போம். தங்குவது தங்கட்டும்.

அச்சுப்புத்தகங்களைப் பதிப்பது முன்பு போல் தற்போது கடினமாக இல்லாவிட்டாலும் இன்றும் அது ஒன்றும் எளிதான காரியமில்லை. அதனால் தனக்குத் தோன்றியதை எல்லாம் அச்சுப்புத்தகங்களில் எழுதுவது மிகக்குறைவே. இணையம் அளவிற்குப் பிழைகள் அச்சுப்புத்தகங்களில் இருப்பதில்லை என்ற கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு. வள்ளுவர் சொல்லிட்டார். ஆனால் பல நேரங்களில் நானெல்லாம் மறந்துவிடுகிறேனே. :-)

G.Ragavan said...

பாண்டித்துரைத்தேவர் செய்தது சரிதான். ஆனால் அதற்குக் காரணம்...குறள் வேறொருவர் எழுதியது. அதில் இன்னொருவர் என்ன கைவப்பது.

அதே நேரத்தில் கருத்து சொல்வதில் சுதந்திரம் இருக்கத்தான் வேண்டும். அதே நேரத்தில் அனைவரும் அனைத்தும் அறிந்தவர் இல்லர்.

ஒருவர் சொல்கிறது தவறு என்று தோன்றினால் அதற்கு எதிரான கருத்தை விளக்கிப் பதிவிடலாம். அதுதான் சரியான முறை.

ஆனால் எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தமிழ்வலைஞர்கள் பலருக்கும் வரவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//தேவர் செய்ததைப் போல் அந்தப் பிரதிகளை வாங்கி எரிக்க இந்தக்காலத்தில் முடியாது. இப்போது முடிவதெல்லாம் அந்தக் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளைத் தகுந்த முறையில் எடுத்துக்காட்டி மாற்றுக்கட்டுரைகள் வரைவதே.//

நல்ல கட்டுரை,

பாண்டித்துரை செய்தது நற்செயல்.

அந்த காலத்தில் பாண்டித்துரைகள் இருந்திருந்தால் பரிமேல் அழகர் உரைகள் நமக்கு கிடைத்திருக்காது. எல்லாவற்றிற்கும் திருவள்ளுவர் என்ன சொன்னார் என்பதைவிட பரிமேல் அழகர் அதை எப்படி புரிந்து கொண்டுள்ளார் என்பதைக் காட்ட முற்படுகின்றனர்.
:(

குமரன் (Kumaran) said...

உண்மை சிவபாலன். உண்மை இது தான் என்றோ மற்றவை பொய் என்றோ யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. அறிஞர் அண்ணாவின் படைப்புகளைப் படித்ததில்லை. மதுரை திட்டத்தில் இருக்கின்றனவா? இருந்தால் விரைவில் படிக்கிறேன். இல்லை அடுத்த முறை ஊருக்குச் செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

அந்த மனப்பக்குவம் இல்லாததால் தான் பெரும்பான்மையான நேரங்களில் எதிர்கருத்தினைச் சொல்லாமல் மௌனமாக இருந்துவிடுகிறீர்கள் போலும் இராகவன். எதிர் கருத்துகள் சொல்வது முக்கியமா நட்பு முக்கியமா என்ற கேள்வி எல்லோர் முன்னும் பல முறை தோன்றுவது தான். நீங்கள் நட்பே முக்கியம் என்று பலமுறை முடிவெடுத்துவிடுகிறீர்கள். சிலர்/பலர் கருத்து சொல்வதே முக்கியம் என்று முடிவெடுத்து நட்பில் கீறல் விழ வைத்து விடுகிறோம்.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்.

பரிமேலழகர் உரை பிடிக்காதவர்கள் படிப்பதற்குத் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் தேவநேயப் பாவாணரின் உரை இருக்கிறது. அதனைப் படிக்கலாம்.

http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm

Geetha Sambasivam said...

உள்ளேன் ஐயா! :))))))

குமரன் (Kumaran) said...

உள்ளேன் ஐயாவுக்கு நன்றி கீதாம்மா. :-)

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன்.

பரிமேலழகர் உரை பிடிக்காதவர்கள் படிப்பதற்குத் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் தேவநேயப் பாவாணரின் உரை இருக்கிறது. அதனைப் படிக்கலாம்.

http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm
//


தகவலுக்கு நன்றி குமரன்,

நட்சத்திர வாரத்தைத் தொடர்ந்து பூங்கா தொகுப்பிற்க்காக என்னிடம் தமிழ்மணம் கேட்டிருந்த சில பரிந்துரைகளில் இந்த இடுகையையும் சேர்த்திருக்கிறேன். பூங்காவில் வருகிறதா என்று பார்போம் !
:))

குமரன் (Kumaran) said...

நன்றி கோவி.கண்ணன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
இவர் செய்தது மிகச்சரி..இன்று போதிய பணம் இருந்தால், பல (தவறான)புத்தகங்களையும் ஏனைய பல தமிழ் விடயங்களையும் காசைக் கொடுத்து வாங்கி எரித்து விடலாம்.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. இன்றெல்லாம் நூல்களைப் பதிப்பது மிக எளிது. அதற்கும் மேல் இலவச வலைப்பதிவுகளும் இருக்கின்றன. சிறிதே நேரம் செலவழித்தால் மனத்தில் தோன்றுவதை எல்லாம் தரவுகளே தராமல் தான் தோன்றித் தனமாக எழுதிக் குவிக்கலாம். எல்லாவற்றையும் வாங்கி எரிக்க யாரிடமும் நேரமும் பணமும் கட்டாயம் இருக்காது. :-)