Friday, July 12, 2013

மாதங்களில் நான் மார்கழி


'அப்பா. நன்கு சொன்னீர்கள். பாவை நோன்பு நோற்று கண்ணனை கோபியர் அடைந்ததைப் போல் அடியேனும் அவன் அருள் பெற ஒரு நல்ல வழி காட்டினீர்கள். பக்தியால் மட்டுமே வசப்படுபவன் அவன். அவனை நோற்றுத் தான் அடைய முடியும். அந்த நோன்பினை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அப்பா'.

'கோதை. நீ சொல்வது உண்மை தான் அம்மா. பக்தியுடையவர்களுக்கு எளியவன் கண்ணன்; மற்றவர்களுக்கு அரியவன். இந்த பாவை நோன்பினை நோற்கும் முறையினைச் சொல்கிறேன் கேள்.

மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னான் கீதாசார்யன். அந்தப் புனிதமான மார்கழி மாதம் முழுக்க கடைபிடிக்க வேண்டிய நோன்பு இது'.

'மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் சொல்லும் அளவிற்கு உயர்ந்ததா மார்கழி? அதன் பெருமைகளைச் சொல்லுங்கள் அப்பா'.

'நல்ல கேள்வி கேட்டாய் மகளே. ஒரு நாளில் எல்லா காலங்களும் நல்ல காலம் என்பதைப் போல் மாதங்களில் எல்லா மாதங்களும் சிறந்தவையே. ஒரு நாளில் எல்லா நேரமும் நல்ல நேரம் ஆனாலும் இறை வழிபாட்டிற்கு பகலவன் உதிப்பதற்கு முன் இருக்கும் ஐந்து நாழிகைகளும் (இரண்டு மணி நேரம்) (காலை 4 முதல் 6 வரை) மாலை கதிரவன் மறையும் நேரத்தை ஒட்டிய ஐந்து நாழிகைகளும் (மாலை 6 முதல் 8 வரை) ஏற்றவை என்பது உலக வழக்கு. மற்ற நேரங்களை விட அந்த நேரத்தில் மனம் இறைவழிபாட்டில் ஒன்று படுவதை நன்கு காணலாம். அந்த இரண்டு நேரங்களிலும் அதிகாலை நேரம் மிக உயர்ந்தது. அந்த நேரத்திற்கு பிரம்ம முஹூர்த்தம் என்றே பெரியோர் பெயர் இட்டிருக்கின்றனர். அந்த அதிகாலை நேரத்தில் இறை வழிபாடு செய்தல் மிக மிக உகந்தது.

காலக் கணக்கில் நம் ஒரு வருட காலம் தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களின் பகல்; ஆடி தொடங்கி மார்கழி வரை அவர்களின் இரவு. ஆக மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தம்; ஆடி மாதம் தேவர்களின் மாலை நேரம். தேவர்களுக்குப் புனிதமான இந்த காலங்களில் இறைவழிபாடு செய்தால் மனிதர்களுக்கும் நலம் என்பதால் அவ்விரண்டு மாதங்களையும் தெய்வ வழிபாட்டிற்காக என்று சிறப்பாக வைத்தார்கள் நம் முன்னோர்.

மார்கழி, ஆடி இவ்விரண்டு மாதங்களிலும் தேவர்களின் பிரம்ம முஹூர்த்தமான மார்கழி மாதம் மிகச் சிறப்பானது. ஒரு குழுவில் எதுவெல்லாம் சிறப்பானவையோ அவற்றை எல்லாம் தன் வடிவாக கண்ணன் கீதையில் சொல்லிக் கொண்டு வரும் போது தான் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்கிறான். இப்போது மார்கழியின் பெருமை புரிந்திருக்குமே'.

'புரிந்தது அப்பா. இனி நோன்பு செய்யும் முறையைச் சொல்லுங்கள்'.

'அம்மா. மறந்தும் புறந்தொழாத நாம் இந்த நோன்பையும் கண்ணனை முன்னிட்டே செய்ய வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில் பகலவன் தோன்றுவதற்கு முன் எழுந்து நன்னீராடி தூய உடை அணிந்து கொண்டு இறைவன் நாமங்களைப் பாடி பாவை நோன்பு நோற்பதற்கு ஏற்பட்டுள்ள பாவைக்களத்திற்குச் சென்று அவன் திருவருளை எண்ணி வணங்க வேண்டும். இந்த நோன்பை தனியாக செய்தாலே சிறப்பு தான். ஆனால் அனைவரும் கூடியிருந்து இந்த நோன்பை நோற்றால் இன்னும் மிகச் சிறப்பு. அதிலும் ஒத்த எண்ணமுடையவர்கள் சேர்ந்து செய்தால் இன்னும் பல மடங்கு சிறப்பு'

'அப்பா. நீங்கள் சொன்ன படியே இந்த நோன்பை நோற்கிறேன். நான் மட்டும் இன்றி என் தோழியர் அனைவரையும் சேர்த்துக் கொண்டு நாங்கள் எல்லோருமே இந்த நோன்பை நோற்கிறோம் அப்பா'

'அப்படியே செய்வாய் மகளே. மாயவன் திருவருள் முன்னின்று காக்கட்டும்'.

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

Thursday, July 11, 2013

காத்யாயினி விரதம்

'இப்போதெல்லாம் நம் வீட்டு வேலைகள் எல்லாம் மிக நன்றாக நடக்கிறது. கவலை தொலைந்தது. நல்ல கட்டுபாட்டை விதித்தோம். நம் பெண்டு பிள்ளைகள் எல்லாம் நம் கட்டுபாட்டில் இருந்தால் எல்லாம் தானாகவே நன்கு நடக்கிறது பாருங்கள்'.

'சரியா சொன்னீங்க. வீடு ஒழுங்கா இருந்தா தானே ஊரும் நாடும் ஒழுங்கா இருக்கும்.'

'ஒரு கவலை விட்டதுன்னா இன்னொரு கவலை. இந்த வானம் ஒரு நேரத்துல பெஞ்சு கெடுக்குது. இன்னொரு நேரம் பெய்யாம கெடுக்குது. ஹும்'.

'ஐயா. நான் ஊருக்கு புதுசு. நீங்க எல்லாம் ஆயர்கள் தானே. வேளாண் தொழில் செய்பவர்களைப் போல் வானம் பொய்த்ததற்கு வருந்துறீங்க? ஒன்னும் புரியலையே?!'

'தம்பி. நீங்க சொல்றது சரி தான். விவசாயம் பாக்குறவங்களுக்குத் தான் மாதம் மும்மாரி பெய்யணும்ன்னு கவலை இருக்கும். அவங்க பருவம் பாத்து பயிர் செய்றவங்க. அதுனால அவங்களுக்குப் பருவம் தவறாம மழை பெய்யணும். ஆனா எங்களுக்கும் ஒழுங்கா காலா காலத்துல மழை பெய்யணுமப்பா. இல்லாட்டி மாடு கன்னுகளுக்கு எப்படி தண்ணி காட்டுறது? அதுங்க தானே எங்க சொத்து? அதுங்களுக்கு நேரா நேரத்துக்கு தண்ணி கிடைக்கலைன்னா பால் வருமா? அதை வித்து நாங்க வாழ்க்கை தான் நடத்த முடியுமா? அது தான் எங்க கவலை'

'ஓ. அப்படியா? நான் கூட எங்க ஊரு பாட்டுக்காரர் ஒருத்தர் பாடுன மாதிரியோன்னு நினைச்சேன்.'

'உங்க ஊரு பாட்டுக்காரர் பாடுன மாதிரியா? என்ன பாடுனாரு?'

'அதுவா? தண்ணியப் பாத்து அவரு பாடுவாரு.

"தண்ணீரே. நீ வானத்துல இருக்கும் போது மேகம்ன்னு உனக்குப் பேரு. மண்ணுல விழும்போது மழைன்னு பேரு. எங்க ஊரு ஆய்ச்சிமாரு கண்ணுல பட்டுட்டா நீர்மோருன்னு உனக்குப் பேருன்னு பாடுவாரு. அதான்".

'தம்பி. உனக்கு ரொம்பத் தான் குறும்பு. விருந்தாளியாச்சேன்னு பாக்கறேன்'

'கோவிச்சுக்காதீங்க ஐயா. ஏதோ நினைவுல வந்தது. அதான் சொன்னேன்'.

'சரி. சரி. இந்த வீண் பேச்சை எல்லாம் விடுங்கள். இப்படி மழை பெய்யாமல் இருக்கிறதே. அதற்கு ஏதாவது ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள்'

'நாட்டாமை ஐயா. உங்களுக்குத் தெரியாத வழியா? நீங்களும் நம்ம ஊரு பெரியவங்களும் சேர்ந்து ஆலோசிச்சு ஒரு நல்ல வழியைச் சொல்லுங்க'

'ம். பல வழிகளையும் சிந்திச்சோம். ஒரு வழி சரியா வரும்ன்னு தோணுது. நம்ம ஊரு கன்னிப் பொண்ணுங்க எல்லாம் காத்யாயினி நோன்பு இருந்தா மழை தானா பெய்யும்ன்னு சொல்றாங்க. அது எனக்கும் சரின்னு படுது. நீங்க என்ன சொல்றீங்க?'

'காத்யாயினி நோன்பா? அப்படின்னா என்ன நோன்பு?'

'கன்னிப் பெண்கள் எல்லாம் வெள்ளென எழுந்து யமுனையில் நீராடி ஒரு பாவையை நோன்புக்காக உருவாக்கி அதனை காத்யாயினியாக வரித்து நோன்பு நோற்க வேண்டும். இப்படி முப்பது நாட்கள் செய்தால் நல்ல மழை பெய்யும்'.

'நல்ல நோன்பாகத் தான் இருக்கிறது. ஆனால் நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை எல்லாம் எப்படி அந்த அதிகாலை வேளையில் தனியாக யமுனை நதிக்கரைக்கு அனுப்புவது? எந்த நேரத்துல என்ன நடக்குமென்றே இப்போதெல்லாம் தெரிவதில்லை? அரக்கர்களும் அரக்கிகளும் இந்த சுற்று வட்டாரத்தில் உலாவிக் கொண்டே இருக்கிறார்கள். தகுந்த பாதுகாப்போடு தான் நம் பெண்களை நதிக்கரைக்கு அனுப்ப வேண்டும்'.

'நீங்கள் சொல்வதும் சரி தான். நம் காளையர்களைத் தான் அந்த பெண்களுக்குத் துணையாக அனுப்ப வேண்டும்.'

'நல்ல கதை போங்கள். பாலுக்குக் காவல் பூனையா?'

'அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். நாமே தேர்ந்தெடுப்போம் ஆட்களை. நல்லவர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் எந்த குறையும் நேராது'

'சரி சரி. என்ன செய்தாலும் பார்த்து செய்யுங்கள்'

***

'இன்றோடு நம் தொல்லைகள் எல்லாம் தீர்ந்ததடி நிருபமா.'

'ஏன் அப்படி சொல்கிறாய் சாருலேகா? கண்ணனைக் காணாத நாளும் ஒரு நாளா? எத்தனை நாள் ஆனது அவனைக் கண்டு?'

'அதற்குத் தான் விடிவு காலம் வந்ததென்றேன் நிருபமா'.

'உண்மையாகவா? ஊர்க்கட்டுப்பாட்டை நீக்கிவிட்டார்களா? இனி மேல் நம் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாமா?'

'ஊர்க் கட்டுப்பாட்டை நீக்கவில்லை. ஆனால் மழை வேண்டி நம்மை எல்லாம் நோன்பு நோற்கச் சொல்லியிருக்கிறார்கள்'

'நோன்பா? என்ன நோன்பு? அதனால் நமக்கு என்ன பயன்?'

'பாவை நோன்பு தான் தோழி. அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி பாவையைத் தொழுது நோன்பு நோற்க வேண்டும்.

அந்த நோன்பிற்குக் காவலாக இளைய கோபர்களை அனுப்புகிறார்கள். கோபகுமாரன் நந்தகுமாரனும் வருகிறான்.'

'உண்மையாகவா? கண்ணனும் வருகிறானா? அவனைக் காணலாமா? இதனை ஏனடி முதலிலேயே சொல்லவில்லை'.

'என்ன செய்வது? இது வரை உன் தாயார் இங்கே இருந்தார்களே. அவர்கள் முன்னால் எப்படி சொல்வது? நாளை முதல் நோன்பு தொடங்குகிறது. நோன்பினை நன்கு கடைபிடித்தால் கண்ணனையும் காணலாம். மழையும் பொழியும். அப்படி நடந்தால் ஊர்க்கட்டுப்பாடும் தளரும் வாய்ப்பு உண்டு. கண்ணனை நாம் அடையும் வாய்ப்பும் உண்டு'.

'நோன்பைக் கட்டாயம் நல்லவிதமாகக் கடைபிடிப்போம். மழை வேண்டி நீங்கள் வேண்டுமானால் நோன்பிருங்கள். நான் கண்ணனை வேண்டி இருக்கப் போகிறேன்'

'அடிப் போடி. நீ மட்டுமா? எல்லாருமே அப்படித் தான். அவனை அடைய இதுவே தகுந்த வாய்ப்பு. அவனையே வேண்டி நோன்பை நோற்போம்'

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

Wednesday, July 10, 2013

வீட்டுச் சிறையில் ஆய்க்குலச் சிறுமியர்

'நல்ல கதையாகச் சொன்னீர்கள் அப்பா. கோபியர்களை நினைத்தால் அவர்கள் மேல் பொறாமையும் நட்பும் பெருமையும் பரிதாபமும் என்று பல உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் வருகின்றன'

'கோதை. உனக்கு அவர்கள் மேல் நட்பும் பரிதாபமும் ஏன் வருகின்றன என்று எனக்குப் புரிகிறது. உன்னைப் போன்றே அவர்களும் கண்ணனால் அவன் மேல் வைத்தக் காதலால் படாத பாடு பட்டார்கள் அல்லவா?

இப்போது நீ சூடிக் கொடுக்கும் மலர்மாலைகளை மாயவன் விரும்பி அணிகின்றான். உன் ஆசைப்படி உன்னையும் அவன் ஏற்றுக் கொள்வான் என்று இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது அம்மா. அந்த நல்ல காலத்தை விரைவாக வரச்செய்ய கோபியர்கள் செய்ததையே நீயும் செய்யலாம் அம்மா'

'அப்படியா சொல்கிறீர்கள் அப்பா?! அவனை அடைய என் காலடி மண்ணை அவன் தலைமேல் அணியக் கொடுக்க வேண்டும் என்றாலும் நான் கொடுப்பேன்'

'அப்படி சொல்லவில்லை அம்மா. கோபியர் செய்தது இன்னொன்று இருக்கிறது. அதனைச் செய்ததால் அவர்கள் அவனுடன் இணைந்தார்கள். அதனைச் செய்தால் நீயும் அவனை அடையலாம்'

'அப்பா. இவ்வளவு நாள் அதனைப் பற்றி சொல்லவே இல்லையே அப்பா. விரைவில் சொல்லுங்கள் அப்பா. அவர்கள் என்ன செய்தார்களோ அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் நானும் செய்கிறேன். செய்து பலனைப் பெறுகிறேன்.'

'அம்மா. உன்னைப் போல் தான் அவர்களும் கண்ணனையே பலனாக விரும்பி ஒரு நோன்பு நோற்றார்கள். அதே நோன்பை நீயும் நோற்கலாம். கண்ணன் அருளால் அந்த நோன்பை நோற்கும் மார்கழி புண்ய காலமும் நெருங்கி வருகிறது'.

***

'கோகுலத்தில் எந்த வேலையும் இப்போதெல்லாம் நடப்பதில்லை. இந்தக் கண்ணனின் குழலோசையைக் கேட்டால் போதும். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு இந்த இளஞ்சிறுமியர் அவன் குழலொலியைக் கேட்க ஓடி விடுகின்றனர். சிறுவனான கண்ணன் சிறுமியரை இப்படி கவர்கிறான் என்றால் அவன் தாயைப் போலும் தமக்கையைப் போலும் வயதுடைய பெண்டிர்களும் அப்படித் தான். அவனைத் தம்பி தம்பி என்று கொஞ்சுவது என்ன? தன் மகன் என்றே எண்ணி மகிழ்வது என்ன? இப்படி ஆய்ப்பாடிப் பெண்கள் எல்லோரும் கண்ணனின் மேல் ஆசையும் பாசமும் வைத்து எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் வீட்டு வேலைகளை எல்லாம் யார் செய்வது?'

'நாட்டாமை. நீங்க சொல்றது சரிதான். இப்படித் தான் என் பொண்டாட்டியும் பிள்ளைங்களும் எப்பப் பாத்தாலும் கண்ணன் கண்ணன்னு அவன் பெயரையே சொல்லிக் கொண்டு எந்த வீட்டு வேலையும் செய்வதில்லை.'

'என் பொண்டாட்டியாவது நான் சொல்றதைக் கேட்டுக்கிட்டு எப்பவாவது தான் கண்ணனைப் பார்க்கப் போகிறாள். ஆனால் என் பத்து வயது மகளைத் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் வயதுத் தோழியர்களுடன் கண்ணனைக் காணவும் அவனுடன் விளையாடவும் ஓடிவிடுகிறாள். அவளை அடக்கினால் போதும்; மற்ற பெண்களும் அடங்கிவிடுவார்கள்'.

'என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? எதற்காக யாரையாவது அடக்க வேண்டும்? ஏற்கனவே நம் பெண்டிரை நாம் அடக்கி வைத்திருப்பது போதாதா? அழகுக் கண்ணனின் கீதத்தை அவர்கள் கேட்பதையுமா தடுக்க வேண்டும்?'

'நாட்டாமை ஐயா. இந்த குமுதன் சொல்வதைக் கேட்காதீர்கள். கொஞ்சம் படித்துவிட்டாலே இப்படித் தான். பெண்களை அடக்கக் கூடாது; சுதந்திரம் தரவேண்டும் என்று பேசத் தொடங்கிவிடுவார்கள். நாம் நம் முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டியது தான்'

'சரி. எல்லாரும் சொல்றதுனால இப்படி செஞ்சா என்னன்னு ஒரு யோசனை தோணுது. பேசாம நம் வீட்டுப் பெண்களில் பதினாறு வயதிற்கு குறைவானவர்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களுடன் தான் அதுவும் ஆண் துணையுடன் தான் வெளியே வரவேண்டும். தனியாகவோ தன் வயதொத்தவர்களுடனோ வெளியே வரக்கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடு போட்டுவிட்டால் என்ன?'

'சரியாச் சொன்னீங்க நாட்டாமை ஐயா. அப்படியே செஞ்சுடலாம்'.

'சரி. எல்லாரும் என்ன சொல்றீங்க. எல்லாருக்கும் சம்மதமா?'

'எனக்குச் சம்மதம் இல்லை. ஆனா நான் சொல்றதை யாரு இங்க கேக்கப் போறீங்க? நடத்துறதை நடத்துங்க'.

'சரி. குமுதனைத் தவிர வேறு யாராவது மறுப்பு தெரிவிக்கிறீங்களா?'

'இல்லை. இல்லை'

'நல்லது. நம் ஆயர்குலத்துக்கு அதிபதியான நந்தகோபரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு இப்படி ஒரு கட்டுப்பாட்டைப் போட்டுவிடலாம். நீங்கள் அனைவரும் இந்தக் கட்டுப்பாட்டின் படி நடந்து கொள்ள வேண்டும்'.

'நடந்து கொள்கிறோம். நடந்து கொள்கிறோம்'.

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

Tuesday, July 09, 2013

பாவமா? எது பாவம்?

கோகுலத்தில் வழக்கம் போல் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. கண்ணன் இருந்த நாட்களை நினைவில் கொண்டு 'அந்த நாளும் வந்திடாதோ?' என்று ஏங்கிக் கொண்டு கோபர்களும் கோபியர்களும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். கண்ணனைக் குழந்தையாகவும் சிறுவனாகவும் இடர்களிலிருந்து காப்போனாகவும் கண்டு மகிழ்ந்திருந்த நாட்களை வயதில் மூத்த ஆயர்களும் ஆய்ச்சியர்களும் தங்களுக்குள்ளும் மற்றவர்களிடமும் சொல்லிச் சொல்லிப் பெருமிதமும் ஆற்றாமையும் இன்பமும் துன்பமும் என மாறுபாடான உணர்ச்சிகளை ஒருங்கே அனுபவித்துக் கொண்டிருந்தனர். இளைய ஆயர்கள் கண்ணனின் கூட்டாளிகளாகக் கானகத்திற்குப் பசுக்களையும் கன்றுகளையும் எருதுகளையும் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்ற அந்த நாட்களை நினைத்துக் கொண்டு, அந்த நாட்களில் தாங்களும் கண்ணனும் பலதேவனும் செய்த குறும்புகளையும் நினைத்துக் கொண்டு, அடிக்கடி அவற்றை மீண்டும் நடித்துக் கொண்டு, தங்களுக்குள் கண்ணனைப் பிரிந்த துக்கத்தை மறக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

கன்னியரின் நிலையோ இன்னும் பரிதாபம். புழக்கடையில் வளர்ந்து நிற்கும் மூங்கில்களில் தானே காற்று புகுந்து எப்போதாவது இசை கேட்டால் அது கண்ணனின் குழலோசை என்றே மயங்கி, போட்டது போட்டபடியே விட்டுவிட்டு காற்றினிலே வரும் கீதத்தின் திசை நோக்கி ஓடிச் சென்று அது தானே எழும் ஓசை என்று கண்டு வருந்தி நிற்பதும் உண்டு. கருத்த மேகங்களைக் கண்டாலும் சரி; வண்டுகளின் ரீங்காரங்களைக் கேட்டாலும் சரி; மேய்ச்சலுக்குக் கறவைகள் செல்லும் போதும் சென்று வரும் போதும் அவற்றின் கழுத்து மணி ஓசையைக் கேட்டாலும் சரி; இப்படியே எவை எல்லாம் கண்ணனை நினைவூட்டுகிறதோ அவை எல்லாம் நிகழும் போது கண்ணனைக் காண ஓடி வந்து கண்ணனைக் காணாமல் மனம் வருந்தி செயல் மறந்து வருந்தியே காலம் கழிந்து கொண்டிருக்கிறது. ஆயர்களைப் போல் தங்களுள் ஒருத்தியைக் கண்ணனாக நடிக்கச் செய்து பார்ப்பதும் உண்டு. என்ன செய்து என்ன பயன்? கண்ணன் எனும் கருந்தெய்வம் கறுத்த மனம் கொண்டவனாக இருக்கிறானே. தானும் வருவதில்லை. தன்னைப் பற்றியச் செய்தியையும் அனுப்புவதில்லை. அடியாரைக் கடைசி வரை துன்புறச் செய்துவிட்டு கடைசியில் வருவது தானே அவன் கருத்தாக இருக்கிறது.

***

'நீளா. அங்கே வருவது யார்? முன்பு ஒரு முறை பார்த்தது போல் இருக்கிறதே'

'அவர் நாரத மகரிஷி மாலதி. முன்பொரு முறை கண்ணனைக் காண வந்திருக்கிறார் இங்கே'

'வாருங்கள் மகரிஷியே. தங்கள் வரவு நல்வரவாகட்டும்.'

'பெண்களே. நீங்கள் யார்?'

'சுவாமி. நாங்கள் கோகுலவாசிகள். என் பெயர் மாலதி. இவர்கள் என் நண்பர்கள் நீளா, மாதவி, சந்திரரேகா, நிர்விதந்திகா, புண்டரிகா, சிதாகந்தி, சாருலேகா, சுதந்திகா, ஸ்ரவந்திதா, ஹரிமித்ரா, கௌரி, சாருசண்டி, குந்தி, வருணா, சுந்தரி, சிவா, ரத்னப்ரபா, ரதிகலா, சுபத்ரா, ரதிகா, சுமுகி, தனிஷ்டா, காலஹம்ஸி, கலாபினி, குஞ்சரி, ஹரிணி, சாபலா, தாமினி, சுரபி, சுபானனா, சுசரித்ரா, மண்டலி, மணிகுண்டலா, சந்திரிகா, சந்த்ரலதிகா, தேஜஸ்வினி, பங்கஜாக்ஷி, சுமந்திரா, திலகினி, சௌரசேனி, சுகந்திகா, ரமணி, காமநகரி, நாகரி, நாகவேணிகா, கமலவேணி, சுமதுரா, சுமத்யா, மதுரேக்ஷணா, தனுமத்யா, மதுஸ்பந்தா, குணசூடா, வராங்கதா, துங்கபத்ரா, காவேரி, ரங்கவதி, யமுனா, சரஸ்வதி, சித்ரரேகா, விசித்ராங்கி, சசிகலா, கமலா, கங்கா, மதுரேந்திரா, கந்தர்ப்ப சுந்தரி, பிரேம மஞ்சரி, சாருசீலா, சுகேசி, மஞ்சுகேசி, மனோஹரா, வ்ருந்தா, குணமாலா, மஞ்சுளா, நந்திமுகி, பிந்துமதி, சந்த்ராவளி, சுகந்தி, நர்மதா, குஸுமப்ரியா, நளினி, காத்யாயணி, மந்த்ரிகா, சுபலா, உஜ்வலா, பாக்யவதி, கார்க்கி, விஜயா, கந்தர்வா, ம்ருதுளா, லலிதா, விஷாகா, சித்ரா, இந்துலேகா, துங்கவித்யா, ரங்கதேவி, சுதேவி. இவள் எங்களுக்கெல்லாம் நாயகப் பெண்பிள்ளையான ராதிகா. நாங்கள் எல்லோரும் வணங்குகிறோம். விரைவில் கண்ணனின் தரிசனம் எங்களுக்குக் கிடைக்க ஆசி கூறுங்கள்'.

'கண்ணனின் தரிசனமா? விரைவில் உங்களுக்கு கண்ணனின் தரிசனம் கிட்டட்டும். நான் இப்போது தான் பகவானின் தரிசன சௌபாக்கியத்தைப் பெற்று வந்து கொண்டிருக்கிறேன்'.

'கண்ணனைக் கண்டீர்களா? எப்படி இருக்கிறான் கண்ணன்?'

'நேரத்திற்கு உண்கிறானா?'

'இன்னும் அதே குறும்பு தானா?'

'எங்கள் நினைவு இருக்கிறதா?'

'உங்களை அவன் தான் அனுப்பினானா?'

'எங்களுக்கு ஏதாவது செய்தி சொன்னானா?'

'மெலிந்தான் என்று சொன்னார்களே. மெலிந்துவிட்டானா?'

'அவனுக்கென்ன உண்டு உறங்கி நலமாக இருப்பான். நாம் தான் மெலிவோம். மெலிவொன்றும் இல்லாதவன் அவன்'.

இப்படியே பற்பல கேள்விக்கணைகள் எல்லா திசைகளிலும் இருந்து வரவே நாரத முனிவரால் எல்லாவற்றிற்கும் விடை கூற இயலவில்லை.

'பொறுங்கள் பெண்மணிகளே. ஒரே நேரத்தில் எல்லோரும் இப்படி கேள்விகளைக் கேட்டால் எப்படி? கண்ணன் தான் இங்கே என்னை அனுப்பினான். அவன் உடல் நலம் இப்போது அவ்வளவு நன்றாக இல்லை'.

இந்தச் செய்தியைக் கேட்டதும் எல்லா கோபியர்களுக்கும் ஒரே நேரத்தில் பனியும் பெய்து வெயிலும் கொளுத்தியதைப் போன்று இருந்தது.

'சுவாமி. எங்கள் கண்ணனுக்கு உடல் நலம் சரியில்லையா? என்ன ஆயிற்று சுவாமி? விரைவில் சொல்லுங்கள்' என்று பதைபதைத்துக் கேட்டனர்.

'கண்ணனுக்குக் கடுமையான தலைவலி நங்கையர்களே. ஒரு விசித்திரமான மருந்து மட்டுமே அந்தத் தலைவேதனையை நீக்கும் என்று சொல்லிவிட்டான் கண்ணன். அதைத் தேடித் தான் இங்கே வந்திருக்கிறேன்'.

'கண்ணன் தலைவலிக்கு மருந்து கோகுலத்திலா? உடனே சொல்லுங்கள் மகரிஷியே. நாங்கள் எப்பாடு பட்டேனும் அந்த மருந்தைக் கொண்டு வந்து தருகிறோம்'.

'பெண்களே. அது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. கண்ணனின் மேல் மிக அந்தரங்கமான அன்பு உடைய பக்தரின் திருவடித் துகள்கள் வேண்டும். அதனை கண்ணன் தன் தலையில் தடவிக் கொண்டால் அவன் தலைவலி நீங்கிவிடுமாம்'.

நாரதர் முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை. ஒரு பெண் தன்னுடைய மேலாடையைத் தரையில் விரித்தாள். எல்லா பெண்களும் அதில் ஏறிக் குதித்துத் தங்கள் காலடி மண்ணைக் கைகளால் தடவி எடுத்து ஒரு சிறு மூட்டையாக்கி நாரதரின் கைகளில் கொடுத்தார்கள். நாரதருக்கோ ஒன்றுமே புரியவில்லை. திகைத்து நிற்கிறார். கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பின்னர் அந்தப் பெண்களைப் பார்த்து கேட்டார்.

'என்ன செய்கிறீர்கள் நீங்கள்? ஏன் இப்படி உங்கள் காலடி மண்ணை மூட்டை கட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்?'

'சுவாமி. கண்ணனுக்கு தலைவலி என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே. விரைவில் இதனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். அவன் தலைவலி நீங்க வேண்டும் என்பதே எங்கள் முதல் கவலை. அது நீங்கிய பின் உங்களுக்கு விளக்கம் சொல்கிறோம். தயைசெய்து விரைவில் இதனை எடுத்துக் கொண்டு சென்று கண்ணனின் தலைவலி தீர வழி செய்யுங்கள்'.

'என்ன சொல்கிறீர்கள் பெண்களே? உங்கள் காலடி மண் கண்ணனின் தலைவலியைத் தீர்த்துவிடுமா? நீங்கள் அவ்வளவு பெரிய பக்தர்களா?'

'சுவாமி. நேரம் ஆகிறது. விரைந்து எடுத்துக் கொண்டு செல்லுங்கள். பின்னர் தங்கள் கேள்விகளுக்கு விடை சொல்கிறோம்'.

'பெண்களே. என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். அப்போது தான் நான் திரும்பிச் செல்வேன்'.

'ஆகட்டும் சுவாமி. உங்கள் கேள்விகளுக்கு விடை சொல்கிறோம். எங்களில் யார் பக்தர் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் கண்ணன் எங்களிடம் உங்களை அனுப்பியதால் எங்களில் ஒருவர் பக்தர் என்பது நன்கு தெரிகிறது. அந்த பக்தரைத் தேடிப் பிடிக்க இப்போது நேரம் இல்லை. அதனால் தான் நாங்கள் எல்லோருமே எங்கள் காலடி மண்ணைத் தந்தோம்'

'நீங்கள் சொல்வது சரி தான். இங்கே சிறந்த பக்தர் இருக்கிறார் என்று தான் என்னை இங்கே அனுப்பினான் கேசவன். ஆனால் அவன் சொன்ன பக்தரை எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்றல்லவா எண்ணினேன். நீங்கள் இப்படி சொல்கிறீர்களே?!'

'சுவாமி. எங்களுக்கு பக்தி என்றால் என்ன என்றெல்லாம் தெரியாது. அதனால் நாங்கள் பக்தர்களா என்று தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கண்ணன் மட்டுமே. உண்ணும் சோறு, பருகும் நீர், உடுக்கும் உடை என்று எல்லாமுமே கண்ணன் என்று இருக்கும் படி கண்ணன் கருணை செய்திருக்கிறான். அவன் எங்களுள் பக்தர் இருக்கிறார் என்று சொன்னதால் அது அப்படித் தான் இருக்கும் என்று எண்ணிக் கொள்கிறோம்'.

'சரி. உங்களில் யார் பக்தர் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் எல்லோருமே சேர்ந்து இந்த மருந்தைத் தந்தீர்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இறைவனான கண்ணனின் தலையில் உங்கள் காலடி மண் படுமே?! அது பெரும் பாவமாயிற்றே? அதனைப் பற்றி நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லையா? பேதைப் பெண்களாய் அல்லவா இருக்கிறீர்கள்?'

'சுவாமி. கண்ணன் இறைவனா? இருக்கலாம். நீங்கள் பெரிய அறிவாளி. நீங்கள் சொல்வதால் அது உண்மையாக இருக்கலாம். அவன் தலை மேல் எங்கள் காலடி மண் பட்டால் எங்களுக்குப் பெரும் பாவம் வரலாம். அதுவும் நீங்கள் சொல்வதால் உண்மையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு பாவம் வந்தாலும் பரவாயில்லை சுவாமி. கண்ணனின் தலைவலி உடனே நீங்க வேண்டும். அது தான் முதன்மையானது. மற்றதெல்லாம் அதற்குப் பின்னர் தான்'.

'பெண்களே. நீங்கள் பெரும்பாவம் செய்கிறீர்கள். இது சரியன்று. ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்துக் காத்து அழித்துக் கொண்டிருக்கும் பரம்பொருள் கண்ணன். அவன் தலையில் உங்கள் காலடி மண் படுவது சரியன்று. வேண்டாம் இந்த அபராதம்'.

'சுவாமி. எங்களுக்கு வரும் பாவத்தைப் பற்றி பின்னர் பேசலாம். ஒவ்வொரு நொடியும் கண்ணன் தலைவலியால் அவதிப்படுகிறானே என்று எண்ணினால் ஒவ்வொரு நரம்பும் வேதனையால் துடிக்கிறது. விரைவில் செல்லுங்கள். கண்ணனின் தலைவலி தீரும் வழியைச் செய்யுங்கள்'.

ஒன்றுமே புரியாமல் கோபியர்கள் முதுகைப் பிடித்துத் தள்ள அந்த வற்புறுத்தலால் அவர்கள் கொடுத்த சிறு மூட்டையுடன் அங்கிருந்து கிளம்பினார் நாரதர்.


***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

Monday, July 08, 2013

தாமோதரனின் தலைவலி

'அப்பா. அந்தி நேரமும் வந்துவிட்டது. கோபியர் செய்ததைப்போல என்று காலையில் நீங்கள் சொன்னீர்களே. அந்தக் கதையைக் கூறுங்கள் அப்பா'.

'கோதை. கதை சொல்கிறேன் என்று சொன்னது நினைவிருக்கிறது. இதோ வந்துவிட்டேன் அம்மா. கொஞ்சம் பொறு'.

'விரைவில் வாருங்கள் அப்பா. கண்ணனுக்காகப் பாவத்தையும் செய்யத் துணிந்த கோபியர்கள் என்ன செய்தார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது'.

'வந்துவிட்டேன் மகளே. கதையைக் கேள்'

***

ஒரு முறை மூவுலகங்களுக்கும் சென்று எல்லோருக்கும் நன்மையை விளைவிக்கும் தேவரிஷி நாரதர் எம்பெருமான் கண்ணனைத் தரிசிக்க துவாரகைக்கு வந்தார். எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும் துவாரகையில் அன்று எல்லோரும் தங்கள் தங்கள் வேலைகளை அமைதியாகச் செய்து கொண்டிருந்தனர். நாரத மகரிஷியைக் கண்டதும் முகமன் கூறினர் - ஆனால் அதில் வழக்கமாக இருக்கும் குதூகலம் இல்லை. நாரதர் இதனை எல்லாம் கண்ணுற்று ஏன் இப்படி என்று சிந்தித்துக் கொண்டே கண்ணனின் திருமாளிகையை அடைந்தார். அங்கும் எப்போதும் இருப்பது போன்ற கொண்டாட்டங்கள் இல்லை. எல்லோரும் அவரவர் வேலைகளை ஒரு வித முக வாட்டத்துடன் செய்து கொண்டிருக்கின்றனர்.

வாயிற்காவலரிடம் எம்பெருமானைத் தரிசிக்கத் தான் வந்திருப்பதாகவும் அவரது அனுமதி பெற்று வருமாறும் நாரதர் கேட்டுக் கொண்டார். வாயிற்காவலர் 'சுவாமி. இன்று காலையிலிருந்து எம்பெருமானை யாரும் தரிசிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் திருத்தேவியார்களைப் பார்த்துப் பேசுங்கள்' என்றார். இதுவும் நாரதருக்கு வியப்பைக் கொடுத்தது. 'சரி. அப்படியே செய்யலாம்' என்றார். வாயிற்காவலரும் ருக்மிணி பிராட்டியிடமும், சத்யபாமா பிராட்டியிடமும் அனுமதி பெற்று வந்து நாரதரை உள்ளே அழைத்துச் சென்றார்.

திருத்தேவியர் இருவரும் நாரத மகரிஷியை எதிர் கொண்டு அழைத்தனர்.

'வாருங்கள் மகரிஷியே. நல்ல நேரத்தில் வந்தீர்கள். உங்களைப் போன்ற பக்தர்களின் வரவையே இந்த நேரத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'.

'தேவியர்களே. எம்பெருமானுக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் யாருக்கும் தரிசனம் தருவதில்லை? வழக்கத்திற்கு மாறாக துவரைப்பதி முழுவதும் மகிழ்ச்சியின்றிக் காணப்படுகிறதே? நீங்களும் வழக்கத்திற்கு மாறாக என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்களே? என்ன தான் நடக்கிறது?'

'சுவாமி. நம்பெருமாளுக்கு இன்று காலை முதல் கடுமையான தலைவலி. அதனால் தான் எல்லோரும் மகிழ்ச்சியின்றி இருக்கிறோம்'.

'தலைவலி என்றால் ஏதாவது மருந்தைத் தரலாமே. அரண்மனை வைத்தியர்கள் இருப்பார்களே'.

'அவர்கள் பலவகையான மருந்துகளைத் தந்துவிட்டார்கள் சுவாமி. ஆனாலும் கேசவனின் தலைவேதனை குறைந்ததாகவே தெரியவில்லை. அதனால் தான் உங்களைப் போன்ற பக்தர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்தோம்'.

'அரண்மனை வைத்தியர்கள் தந்த மருந்து எதுவும் வேலை செய்யவில்லையா? அப்படியென்றால் சுவாமியிடமே மருந்து என்ன என்று கேட்டிருக்கலாமே'.

'கேட்டோமே. அவர் சொன்ன மருந்தைத் தான் எப்படி பெறுவது என்று அறியாமல் திகைக்கிறோம்'

'அப்படி என்ன மருந்தை அவர் சொன்னார்?'

'அவரிடன் நெருக்கமான அன்பும் பக்தியும் கொண்ட அடியாரின் திருவடித் துகள்களை எடுத்துக்கொண்டு வந்து அவர் தலையில் தடவ வேண்டுமாம். அப்போது தலைவலி தீர்ந்துவிடுமாம்'

'ஆ. விசித்திரமான மருந்து தான். திருத்தேவியரான உங்களைத் தவிர்த்து வேறு யார் எம்பெருமானின் மேல் நெருக்கமான அன்பும் பக்தியும் உடையவர்களாக இருப்பார்கள்? நீங்களே அந்த மருந்தைத் தந்திருக்கலாமே'.

'என்ன சுவாமி இப்படி கேட்டுவிட்டீர்கள்? பெருமானின் மேல் எங்களுக்கு நெருக்கமான அன்பும் பக்தியும் இருக்கலாம். ஆனாலும் எங்களின் காலடித் துகள்கள் எம்பெருமானின் தலையில் படுவதா? அது பெரும்பாவம் அல்லவா? அந்தப் பாவத்தை நாங்கள் செய்ய முடியுமா? அது மட்டுமா? அவரின் தலைவலி அப்படியும் தீரவில்லை என்றால் பாவமும் செய்து பழியும் அல்லவா வந்து சேரும்?'

'நாரதர் தன் மனதிற்குள் - தேவியர் சொல்வது சரி தான். நாமும் இந்தப் பாவத்தைச் செய்ய முடியாது. பாவமும் வரும். தேவியர் சொன்னது போல் நமக்கு எம்பெருமானின் மேல் அன்பும் பக்தியும் இல்லை என்ற பழியும் வரும்.

வெளியே 'அப்போது என்ன தான் வழி?'

'சுவாமி. அதற்காகத் தான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் தான் எப்போதும் அவர் திருநாமங்களைப் பாடிக் கொண்டே இருப்பவர். உங்களை விட சிறந்த பக்தரைக் காணமுடியாது. பக்திக்கே இலக்கணம் வகுத்து 'நாரத பக்தி சூத்திரம்' இயற்றியவர். அதனால் நீங்கள் தான் உங்கள் திருப்பாதத் துகள்களைத் தந்தருள வேண்டும்'.

'அம்மா. நீங்கள் சொல்வது சரியில்லை. அடியேனை மட்டும் பாவம் செய்யத் தூண்டுகிறீர்களே.

ம்ம். எம்பெருமான் ஏதோ திட்டத்துடன் தான் இருக்கிறார். எந்த பக்தனுமே தன் காலடித் துகள்களை பகவானின் திருமுடிகளில் படுமாறு தரமாட்டான். அதனால் அவரிடமே ஒரு உபாயம் கேட்கவேண்டியது தான்'

அனைவரும் கண்ணனின் அறைக்குச் செல்கின்றனர்.

***

'மாதவா. கேசவா. மதுசூதனா. தாமோதரா. கண்ணா. மணிவண்ணா, கார்மேகவண்ணா, மாயவா, துவராபதி, இதயக்கமலவாசா, என்னையுடையவனே சரணம் சரணம் சரணம்'

'வா நாரதா. நலமா?'

'சுவாமி. அடியேன் நலமே. தாங்கள் தான் தலைநோவால் அவதிப்படுவதாக திருத்தேவியர் கூறினர். இப்போது எப்படி இருக்குறது சுவாமி?'

'தலைவலி அப்படியே இருக்கிறது நாரதா. மருந்தைத் தேடிச் சென்றவர்கள் எல்லாம் போனவர் போன இடத்திலேயே இருந்துவிடுகிறார்கள் போலிருக்கிறது. யாரும் வரவில்லை. என் தலைவேதனையும் தீரவில்லை'.

'ஐயனே. தங்கள் தலைவலிக்கு வேறு மருந்து இருக்கிறதா? பக்தர்களில் அடிப்பொடி வேண்டுமென்றால் கிடைப்பது அரிதாயிற்றே'

'ஏன் நாரதா? பக்தர்களே இல்லாமல் போய்விட்டார்களா?'

'அப்படி இல்லை பெருமானே. எந்த பக்தரும் தன் காலடி மண் எம்பெருமானின் திருமுடியில் பட தானே அறிந்து தரமாட்டாரே. அதனால் சொன்னேன்'.

'அப்படி இல்லை நாரதா. யாராவது கோகுலத்திற்குச் சென்று பார்த்தார்களா? அங்கே கட்டாயம் பக்தர்களின் பாத தூளி கிடைக்கும்'.

'அப்படியா? அங்கே அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்து மக்கள் தானே இருக்கிறார்கள்? அங்கே பக்தியில் சிறந்தவர் உண்டா?'

'ஏன் நாரதா நீயே சென்று கண்டு வரலாமே'.

'அப்படியே செய்கிறேன் சுவாமி. அடியேனுக்கு விடை கொடுங்கள்'.

நாராயண நாமத்தை பாராயணம் செய்தபடி நாரதர் கோகுலத்திற்குச் செல்கிறார்.

***
***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

Sunday, July 07, 2013

சூடிக் கொடுத்த சுடர்கொடி!!!



'அம்மா கோதை. மலர்மாலைகளைத் தொடுத்துவிட்டேன். இந்த மலர் மாலைகளைச் சூடிக் கொடுப்பாய் அம்மா. அதனை விரைந்து எடுத்துக் கொண்டு சென்று வடபெருங்கோவிலுடையான் திருமேனியை அலங்கரித்து அவன் திருமுக மலர்ச்சியைக் காண வேண்டும் அம்மா.'

'அப்பா. தங்கள் கட்டளைப் படியே செய்கிறேன். நெருநல் நான் செய்ததைக் கண்டித்து அது தவறென்று சொல்லி வருந்தினீர்களே அப்பா. இப்போது அதனையே நீங்களும் செய்யச் சொல்கிறீர்களே. பெருமாளுக்கென்று தொடுத்து வைத்த மலர் மாலைகளை எம்பெருமான் சூடிக் களைவதற்கு முன்பே நாம் சூடுவது பாவமா அப்பா?'

'மகளே. நல்ல கேள்வியை கேட்டாய். எம்பெருமான் விருப்பம் எதுவோ அதனைச் செய்வதே நம் கடமை. எம்பெருமான் சூடிக் களைந்ததைச் சூடுவதே அடியார்களின் மரபு. அதனை மாறிச் செய்வது பாவம். ஆனால் அதே பாவத்தை அவன் விருப்பம் என்றால் அதனைச் செய்வதே நம் கடமை. கோபியர்கள் செய்ததைப் போல'.

'கோபியர்கள் செய்ததைப் போன்றா? அந்தக் கதையைச் சொல்லுங்கள் அப்பா'.

'கோதை. இன்று பொழுது சாய்ந்து முதல் நாழிகையில் அந்தக் கதையைச் சொல்கிறேன் அம்மா. இப்போது சிறிதும் காலம் தாழ்த்தாது மாலைகளைச் சூடிக் கொடு. எம்பெருமான் காத்துக் கொண்டிருக்கிறான். அவனைக் காக்க வைப்பது நமக்கு அழகில்லை'.

'அப்படியே அப்பா. இதோ மாலைகளைச் சூடிக் கொண்டேன்'.

சரிந்த கொண்டையிலும் தலையிலும் கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் என எம்பெருமான் எந்தெந்த இடங்களில் எந்தெந்த மலர் மாலைகளைச் சூடுவானோ அவற்றை அந்த அந்த இடங்களில் சூடிக் கொண்டாள் கோதை.

பெரியாழ்வார் அந்த மாலைகளை தலை மேல் ஏந்திக் கொண்டு திருக்கோவிலுக்கு விரைகிறார்.

***

'அதோ பட்டர்பிரான் கோதை சூடித்தந்த மாலைகளுடன் திருக்கோவிலுக்கு விரைகிறார். வாருங்கள். நாமும் சென்று பெருமாளைச் சேவித்து வரலாம்'.

'ஆகா. அப்படியே செய்வோம். வாருங்கள். வாருங்கள்.'

***

திருக்கோவிலில் இந்த தெய்வீகமான திருக்காட்சியைக் காண பெருந்திரளாக மக்கள் கூடியிருக்கிறார்கள்.

'அர்ச்சகர் பெருமானே. இதோ எம்பெருமான் விருப்பப்படி கோதை சூடிக் கொடுத்த மாலைகளை ஏந்தி வந்திருக்கிறேன். விரைவில் எம்பெருமான் திருமேனியில் இவற்றைச் சாற்றுங்கள்.'

'அடியேன். அப்படியே செய்கிறேன் பட்டர்பிரானே'.

அர்ச்சகர் பெருமாளின் திருமேனி முழுக்க கோதை சூடிக் கொடுத்த மாலைகளைச் சூட்டுகிறார். எம்பெருமானின் திருமுக மண்டலம் வாட்டத்தை நீக்கி மலர்ச்சி அடைகிறது. அந்தத் திருக்காட்சியைக் கண்டு பெரியாழ்வாரும் அர்ச்சகரும் அங்கே குழுமியிருக்கும் மக்களும் மகிழ்ச்சிக் கண்ணீர் சொரிந்து ஆரவாரிக்கின்றனர்.

'பட்டர்பிரானே. பார்த்தீர்களா எம்பெருமான் முகமலர்ச்சியை?! இதனைப் போன்று ஒரு அதிசயம் பார்த்திருக்கிறோமா இதுவரை? மாலவன் துழாய் மாலையின் மேல் மால் கொண்டவன் என்று அறிவோம். மாலவன் திருவின் மேல் மால் கொண்டு திருமாலவன் எனப்படுவான் என்றும் அறிவோம். கோதை சூடிக் கொடுத்த மாலைகளின் மேலும் மால் கொண்டானே இந்த மாலவன். வியப்பிலும் வியப்பு. எம்பெருமானின் நீர்மையைப் போற்றுவோமா? கோதையின் ஏற்றத்தைப் போற்றுவோமா?

பெருங்குடி மக்களே. எம்பெருமான் விருப்பத்திற்கு ஏற்ப மலர் மாலைகளைச் சூடி கொடுத்த நம் கோதையை இன்று முதல் நாம் சூடிக் கொடுத்த சுடர்கொடி என்று அழைப்போம்'

மக்கள் 'சூடிக் கொடுத்த சுடர்கொடி வாழ்க வாழ்க' என்று வாழ்த்துகின்றனர்.

'பொருத்தமான திருப்பெயர் அர்ச்சகரே பொருத்தமான திருப்பெயர். பட்டர்பிரான் திருமகளார் நம் எல்லோரையும் உய்விக்க வந்த திருமகள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடியே தான்'

திருத்தலத்தார் இப்படி சொல்லவும் மக்கள் மீண்டும் 'சூடிக் கொடுத்த சுடர்கொடி வாழ்க வாழ்க' என்று வாழ்த்துகின்றனர்.

***

அருஞ்சொற்பொருள்:

நெருநல்: நேற்று

மால்: மயக்கம்; காதல்

திரு: திருமகள்; இலக்குமி; லக்ஷ்மி தேவி

நீர்மை: பலவகையாலும் பெருமை உடைய பெரியவர் தம் பெருமையைப் பொருட்படுத்தாமல் எளியோர்களிடம் கலந்து பழகும் குணத்தை நீர்மை குணம் என்பார்கள். எம்பெருமான் எல்லாரையும் விட உயர்ந்தவன்; அவனை விட உயர்ந்தவர் இல்லாத அளவிற்கு உயர்ந்தவன். ஆனாலும் அவனின் பெருமை அந்த உயர்வற உயர்நலம் உடைமையை விட அப்பெருமையை எண்ணாமல் காதலாகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்க நிற்கும் அடியாரிடம் தாழ்ந்து வருகிறானே அந்த நீர்மைக் குணமே அவனுக்குப் பெருமை என்பர் பெரியோர்.

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

Saturday, July 06, 2013

சூடிக் கொடுப்பாயா சுடர்கொடி?


'இரு கோமளவல்லி. என்ன இவ்வளவு விரைவில் கிளம்பிவிட்டாய்? உன் நாயகர் வீட்டிற்கு வர இன்னும் கொஞ்சம் நாழிகை செல்லுமே. இரு. அதோ அரங்கநாயகியும் வருகிறாள். அவளிடமும் கொஞ்சம் பேசலாம்'.

'கமலவல்லி. கோமளவல்லி. உங்களைத் தேடித் தான் வந்தேன். சேதி தெரியுமா?'

'அரங்கநாயகி. கோதை செய்த குறும்பைத் தானே சொல்கிறாய்? அது தான் நன்கு தெரிந்ததாயிற்றே'

'கமலவல்லி. உங்களுக்கு நேற்றைய நிலவரம் தான் தெரியும் போலிருக்கிறது. இன்றைய நிலவரம் தெரியாதா?'

'இன்றைய நிலவரமா? என்ன சொல்கிறாய் அரங்கநாயகி?'

'நேற்று இரவு வடபெருங்கோவிலுடைய தேவர் திருத்தலத்தார் கனவிலும் விட்டுசித்தர் கனவிலும் வந்து கோதை சூடிக் கொடுத்த மாலைகள் தான் தனக்கு விருப்பமானது என்று சொல்லியிருக்கிறார்'.

'என்ன கனவில் பெருமாள் வந்தாரா? கொஞ்சம் விவரமாகச் சொல் அரங்கநாயகி.'

'கோமளவல்லி. இன்று உதயத்தில் திருக்கோவிலை நோக்கி விட்டுச்சித்தர் மிகுந்த பரவசத்துடன் ஓடோடிப் போவதைக் கண்டு என்னவர் பின்னாலேயே சென்றார். பெரியாழ்வார் நேராக அர்ச்சகர், திருத்தலத்தார் எல்லோரும் கூடியிருக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கேயோ ஏற்கனவே அவர்கள் மிகுந்த பரவசத்துடன் பேசிக் கொண்டிருந்தனராம். பெரியாழ்வாரைப் பார்த்தவுடன் அவர்களும் ஓடி வந்து எதிர் கொண்டு அவர்கள் கண்ட கனவினைப் பற்றிச் சொன்னார்களாம்.

திருத்தலத்தார் அனைவரின் கனவிலும் அர்ச்சகர் கனவிலும் பெரியாழ்வார் கனவிலும் ஒரே நேரத்தில் பெருமாள் வந்து கோதையின் கூந்தல் மணம் இல்லாத மாலைகளைச் சூடியதால் தான் கடந்த இரண்டு நாட்களாக தன் முகம் வாட்டம் கொண்டிருந்தது என்றும் இனிமேல் நாள் தோறும் கோதை சூடிக் கொடுக்கும் மலர்மாலைகளையே தனக்குச் சூட்ட வேண்டும் என்றும் சொன்னாராம். யாராவது ஒருவர் கனவில் மட்டும் பெருமாள் வந்து இப்படி சொன்னார் என்றால் அதனை மற்றவர் ஐயுற்றிருப்பார்கள். ஆனால் ஒரே இரவில் அனைவரின் கனவிலும் வந்து ஒரே விதமாகச் சொல்லியிருப்பதால் யாரும் இதனை ஐயுறவில்லை'

'உண்மை தான் அரங்கநாயகி. ஒரே இரவில் எல்லார் கனவிலும் வந்து பெருமாள் சொல்லியிருக்கிறார் என்றால் அதனை நம்பாமல் இருக்க முடியுமா? என்ன கமலவல்லி. இப்போதாவது கோதையின் மேல் நீ கொண்ட சினத்தை மாற்றிக் கொள்கிறாயா?'

'கோதையின் மேல் எனக்கென்ன சினம் கோமளவல்லி? நான் அறிந்த வரை சொன்னேன். அவள் குழல் மணத்தை கோவிந்தனே விரும்புகிறான் என்றால் நாம் என்ன சொல்லிவிட முடியும்? அரங்கநாயகி. என்ன செய்வதாக திருத்தலத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்?'

'பெருமாளே சொன்ன பிறகு திருத்தலத்தார் வேறு என்ன முடிவு செய்வார்கள் கமலவல்லி? பெரியாழ்வார் இன்று முதல் கோதை சூடித்தந்த மாலைகளையே பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பட்டர்பிரானும் மிக்க மகிழ்ச்சியுடன் மாலைகளைத் தொடுக்க வீட்டிற்குச் சென்றிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் மாலைகளை எடுத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு விரைந்துவிடுவார்'.

'அப்படியா? அப்படியென்றால் கோதை மலர்மாலைகளைச் சூடித் தரும் நேரம் ஆகிவிட்டதே. விரைவில் கோதையின் இல்லத்திற்குச் சென்று அந்த அரிதான காட்சியைக் காணலாம். வாருங்கள்'.

***

அருஞ்சொற்பொருள்:

திருத்தலத்தார் - கோவில் அதிகாரிகள்; ஸ்தலத்தார் என்றும் சொல்வதுண்டு.

Friday, July 05, 2013

கோதை செய்தது சரியா?

'ஏனடி கோமளவல்லி. இந்த அநியாயத்தைக் கேட்டாயோ? கோதை பெருமாளுக்கு என்று தொடுத்து வைத்திருந்த மாலைகளை அவளே அணிந்து பார்த்தாளாமே?!'

'ஆமாம் கமலவல்லி. என்னவரும் சொன்னார்.'

'விஷ்ணுசித்தர் மிக மிக வருத்தப்பட்டாராம். மகள் செய்த தவற்றைக் கண்டிக்காமல் இருக்கவும் முடியவில்லை; திருமகளைப் போல் ஒரு மகள் பெற்றுளேன் என்று அவள் மேல் இருக்கும் பேரன்பால் கண்டிக்கவும் முடியவில்லை. சினந்து சில வார்த்தைகளை மட்டும் சொல்லிவிட்டு கோவிலுக்கு விரைந்து சென்றுவிட்டாராம்.'

'ஆமாம் கமலவல்லி. புதிதாக மலர்மாலைகளைத் தொடுத்துக் கொண்டு சென்றாராம். அப்படியும் பெருமாளின் திருமுகத்தில் இருந்த வாட்டம் நீங்கவில்லை என்று அர்ச்சகரும் பட்டர்பிரானும் பேசிக்கொண்டார்கள் என்று அப்போது திருக்கோவிலில் திருமஞ்சனத்தைத் தரிசிக்கச் சென்றிருந்த என்னவர் சொன்னார்'

'என்ன தான் அரசவைக்குச் சென்று எல்லா வேதங்களையும் ஓதி பொற்கிழி பரிசு பெற்றிருந்தாலும் பெண்ணைச் செல்லம் கொடுத்து வளர்த்தாலே இப்படித் தான். சொல் பேச்சு கேட்க மாட்டார்கள்.'

'என்ன இப்படி சொல்லிவிட்டாய் கமலவல்லி? கோதை சிறுமியாக இருக்கும் போது அவளின் அறிவையும் அழகையும் எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பாயே. இப்போது சொல் பேச்சு கேட்காதவள் என்று சொல்கிறாயே. பாவம் அவள். தந்தையார் சினந்ததற்காக ரொம்பவும் மனம் வருந்தியிருப்பாள்'

'கோமளவல்லி. காரணம் இல்லாமலா நான் அப்படி சொல்கிறேன். கோதை மனம் வருந்தினாள் என்றா நினைக்கிறாய். இல்லவே இல்லை. "நான் என்ன தவறு செய்தேன்? கண்ணாடியில் கண்ணன் தெரிந்தான். அவனுக்குரிய மாலையை அவனுக்குச் சூட்டினேன்" என்கிறாளாம். செய்யத் தகாததைச் செய்து விட்டுப் பின்னர் அதற்கு ஒரு காரணமும் சொல்கிறாளே?!'

'அப்படியா சொன்னாள்? சொல்லியிருப்பாள். அவள் தான் எப்போதும் கண்ணன் நினைவாகவே இருக்கிறாளே. என் மகள் கூடச் சொன்னாள். மாதவனுக்கே நான் உரியவள் என்று சொல்லிவிட்டாளாம்.'

'ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று திமிராகவும் சொன்னாளாம். யார் மீதும் அவளுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. தந்தையாரிடமே அப்படிச் சொன்னாள் என்றால் அவளின் திமிரை என்ன சொல்வது? அதனால் தான் அவள் சொல் பேச்சு கேட்காதவள் என்றேன். இப்போது ஒத்துக் கொள்கிறாயா?'

'என்ன கமலவல்லி? இப்படி சொன்னால் எப்படி? காதல் கொண்ட யார் தான் பெரியவர் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கிறார்கள்? காதல் வந்தாலே பெற்றாரும் உற்றாரும் எதிரிகள் என்று தோன்றத் தொடங்கிவிடுமே. அது காதலர் குற்றமா? அது காதல் செய்யும் வேலை. இவளும் கண்ணன் மேல் காதல் நோய் கொண்டு நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறாளே. அந்த காதல் வேகத்தில் அப்படி சொல்லியிருப்பாள். அதனைப் போய் குற்றமாகச் சொல்லலாமா?'

'கோமளவல்லி. நீ என்ன தான் சொல். எனக்கு கோதையின் போக்கே பிடிக்கவில்லை. என் பெண்ணாய் இருந்தால் இதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டேன். இவள் செய்த செயலால் எங்கே தெய்வ குற்றமாக ஆகியிருக்குமோ என்று இப்போது எல்லோரும் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மண்டலமாய் இந்தத் தவற்றைச் செய்தாளாமே?! இது வரை நம் ஊரில் யாருக்கும் எந்த தீங்கும் வராமல் இருப்பதே பெரிய வியப்பு. இனி மேலும் எந்த தீங்கும் வந்துவிடக்கூடாது என்று ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று என்னவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்'

'கமலவல்லி. கோதை அறியாத பெண். அவள் செய்ததெல்லாம் பெரும் தவறே இல்லை. பெருமாளும் கருணைக்கடல். எந்தத் தீங்கும் நம் ஊருக்கு வராது. நீயும் வருந்தாதே. உன்னவரிடமும் வருந்த வேண்டாம் என்று சொல்லிவிடு. (மனத்தில் : இதற்கு மேல் இங்கிருந்தால் நமக்கும் கோதையின் மேல் வெறுப்பு வரும் படி செய்துவிடுவாள்.) எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. பின்னர் வருகிறேன்'

Thursday, July 04, 2013

அறியாத பெண் செய்த குற்றம்

என்ன குற்றம் செய்தோமோ தெரியவில்லையே. எம்பெருமான் திருமுக வாட்டம் கொண்டது ஏனோ? நம் பணியில் ஏதேனும் குறையோ? நேற்று திருக்கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடுத்த மாலையில் தலைமுடி இருந்ததைக் கண்டோமே. அவனுக்கெனத் தொடுத்த மாலையில் தலைமுடி படும் படி நாம் வைத்திருந்தது குற்றமோ? அதனால் தான் புதிதாக மலர் மாலைகள் தொடுத்துக் கொண்டு திருவடிகளில் சமர்ப்பித்தும் இறைவன் திருவுள்ளம் மகிழவில்லையோ? அறியோமே.

நேற்று இரவு முதல் எப்படி எப்படியோ எண்ணிப் பார்த்தாலும் ஒரு தெளிவு பிறக்கவில்லையே. கதிரவனும் குணதிசைச் சிகரம் நீங்கி எழும் நேரம் ஆகிவிட்டது போலிருக்கிறது. விடிவெள்ளியும் எழுந்து அதுவும் மறையும் நேரம் ஆகிவிட்டது. இன்றைக்காவது மலர்மாலைகளை இறைவன் திருவுள்ளம் உகக்கும் படியாகத் தொடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஹரி ஹரி ஹரி.

***

கீழ்வானம் வெளுத்துவிட்டது. மலர்மாலைகளும் தொடுத்தாகிவிட்டது. உடனே எடுத்துக் கொண்டு திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டியது தான்.

நல்லவேளை நினைவிற்கு வந்தது. கேசவன் திருமண்காப்பு வேண்டும் என்று கேட்டானே. இன்று திருக்கோவிலுக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறேன். மறக்காமல் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.

***

திருமண் காப்பினை எடுத்துக் கொண்டு வர பெரியாழ்வார் அப்புறம் செல்கிறார். அவர் அப்புறம் சென்ற நேரம் கோதைத் திருமகள் வழக்கம் போல் மலர்மாலைகளை தான் அணிந்து கண்ணாடி முன் நின்று கண்ணனைக் காண்கிறாள். திரும்பி வந்த பட்டர் பிரான் கோதை மலர்மாலை சூடி நிற்பதைக் கண்டு பதறுகிறார்.

***



'கோதை. என்ன காரியம் செய்தாய்? எம்பெருமானுக்கென்றுத் தொடுத்து வைத்திருக்கும் மலர்மாலைகளை அவன் சூடிக் களையும் முன் அடியோங்கள் சூடலாமா? அது தவறல்லவா? இறைவன் சூடிக் கொடுத்ததை அணிந்து மகிழ்வதல்லவா மரபு? நாம் அணிந்ததை எம்பெருமானுக்குச் சூடலாமா? அது பெருந்தவறு அல்லவா?'

கோதை ஒன்றும் புரியாமல் திகைக்கிறாள். அவள் கிருஷ்ண தியானத்தில் இருப்பதால் தந்தையாரின் கேள்விகளுக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை.

'அடடா. இப்பெரும் பாவத்தை எப்படி தீர்க்கப் போகிறோம்? ஐயனே. அறியாத பெண் இவள். இவள் செய்த தவறை பொறுத்தருள வேண்டும். பொறுத்தருள வேண்டும்' கண்ணீருடன் பெருமாளை வேண்டுகிறார் பெரியாழ்வார்.

திடீரென முந்தைய நாள் மலர்மாலையில் தலைமுடி இருந்தது நினைவிற்கு வந்தது.

'கோதை. நேற்றும் நீ இப்படி மலர்மாலைகளைச் சூடிக் கொண்டாயா?'

'ஆம் அப்பா.' என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் குரல் கம்முகிறது.

'எவ்வளவு நாளாக இப்படி செய்கிறாய் கோதை? நேற்று தான் இந்தத் தவறைச் செய்யத் தொடங்கினாய் என்று சொல்லிவிடு'.

'இல்லை அப்பா. ஒரு மண்டலமாக மலர்மாலைகளைச் சூடிப் பார்க்கிறேன் அப்பா'.

'என்ன? ஒரு மண்டலமாகவா? ஆஆ. என்ன பிழை செய்தேன்? என்ன பிழை செய்தேன்? என் மகள் சூடிக் களைந்ததையா எம்பெருமான் சூடுவதற்குத் தந்தேன். இந்த மாபெரும் பிழையைப் பொறுக்காமல் தானா எம்பெருமானின் திருமுகம் வாடிவிட்டது?

எம்பெருமானே. கருணைக்கடலே. இவ்வளவு நாட்கள் எங்கள் பிழை பொறுத்தாயே. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாய். நாங்களும் அதே தவற்றைச் செய்தோம். கடைசியில் உன் திருவுள்ளத்தை நாங்கள் அறியும் வகையில் நேற்று உன் திருமுக வாட்டத்தைக் காட்டினாயே. என்னே உன் கருணை. என்னே உன் கருணை.

கோதை. பெருந்தவறு செய்திருக்கிறாய் அம்மா. எம்பெருமானுக்கென்றுத் தொடுத்த மாலைகளை மானிடர்கள் நாம் சூடுவது தவறு அம்மா. எம்பெருமான் திருவருளால் ஏதோ இன்றேனும் இந்தத் தவறு என் கண்களில் தென்பட்டதே. இனி இந்தத் தவற்றைச் செய்யாதே அம்மா'.

இப்படி சொல்லிவிட்டு விரைவில் மாற்று மலர் மாலைகளைத் தொடுத்துக் கொண்டு திருக்கோவிலுக்கு விரைந்தார் பட்டர்பிரான்.

***

அருஞ்சொற்பொருள்:

குணதிசைச் சிகரம்: குணதிசை என்றால் கிழக்குதிசை. கிழக்கில் இருக்கும் மலையில் இருந்து கதிரவன் உதிக்கின்றதைச் சொல்கிறார் பெரியாழ்வார்.

ஹரி ஹரி ஹரி: அதிகாலையில் துயில் எழும் போது ஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டே எழுதல் மரபு. 'மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்' என்று கோதையும் திருப்பாவையில் சொல்லியிருக்கிறாள்.

Tuesday, July 02, 2013

திரும்பி வந்ததே திருமுக வாட்டம்!


இந்த மாலையில் இருக்கும் மலர்களுக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி. அழகனின் திருமார்பிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் துலங்கி அழகுக்கு அழகு சேர்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. சிற்றஞ்சிறு காலே இன்று எழுந்ததால் எல்லா மாலைகளையும் நேரத்தோடு தொடுத்து இறைவனின் திருப்பணிக்காகக் கொண்டு செல்ல முடிகிறது.

அடடா. இது என்ன இது? தலைமுடி போல் தெரிகிறதே. அபச்சாரம். அபச்சாரம். இறைவனுக்காகத் தொடுத்த மலர்மாலையில் தலைமுடியா? நீண்டு இருப்பதைப் பார்த்தால் ஒரு பெண்ணின் கூந்தல் முடியைப் போல இருக்கிறதே. மலர் மாலையை அடியேன் தொடுத்தேன். வீட்டில் அடியேனை விட்டால் கோதை மட்டும் தானே உண்டு. அவள் தோட்டத்தில் தானே இருந்தாள்?! அவள் இந்த மலர்மாலைகளைத் தொட்டிருக்க வாய்ப்பில்லையே. எப்படி இந்தத் தலைமுடி வந்தது?

அந்த ஆராய்ச்சியைப் பின்னர் செய்து கொள்ளலாம். நல்ல வேளையாக புதிய மலர்மாலைகளைத் தொடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்குச் செல்ல இன்னும் பொழுதிருக்கிறது. உடனே போய் மலர்களைப் பறித்து மலர்மாலைகளைத் தொடுக்க வேண்டும்.

***

மலர்மாலைகளை இன்னொரு முறை தொடுத்து வேக வேகமாக திருக்கோயிலுக்குச் சென்று மாலைகளை அர்ச்சகரிடம் கொடுக்கிறார் பெரியாழ்வார்.

***

'வாருங்கள் பட்டர்பிரானே. இப்போது தான் திருமஞ்சனம் செய்ய தீர்த்தம் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.'

'ஆகா. ஆனந்தம். ஆனந்தம். மிக்க மகிழ்ச்சி பட்டரே. திருமஞ்சனம் செய்யுங்கள். இதோ எம்பெருமானுக்குச் சூட்ட திருத்துழாய் மாலைகளும் மலர் மாலைகளும். நீங்கள் நெருநல் சொன்னது போல் கொஞ்சம் திருத்துழாயைத் தனியாகவும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.'

'ஆகட்டும் பட்டர் பிரானே. மிக்க மகிழ்ச்சி'.

***

வடபெருங்கோயிலுடையானுக்கு அர்ச்சகர் திருமுழுக்காட்டுகிறார். பட்டர்பிரானும் மற்ற அடியவர்களும் அந்தத் திருக்காட்சியைக் கண்குளிரச் சேவிக்கின்றனர். திருமஞ்சனத்திற்குப் பிறகு திரையை இட்டுவிட்டு அர்ச்சகர் நன்கு காய்ந்த மென்மையான வெண்பருத்தியாடையால் எம்பெருமான் திருமேனியைத் துவட்டிவிட்டு அழகிய மஞ்சள் பட்டாடையை எம்பெருமானின் திருவரையில் சாற்றுகிறார். கஸ்தூரி திலகத்தை திருப்புருவங்களின் நடுவில் இட்டுவிட்டு திருவாபரணங்களையும் சூட்டிவிட்டு ஒவ்வொன்றாக எல்லா மலர் மாலைகளை அணிவிக்கிறார்.

***

'என்ன இது. எம்பெருமான் ஏதோ மனக்குறையுடன் இருப்பது போல் தோன்றுகிறதே. அன்றொரு நாள் திருத்துழாய் மாலைகளைச் சூட்டிய பின்னரும் எம்பெருமானின் திருமுகவாட்டம் தீராமல் இருந்து பின்னர் மலர்மாலைகளைச் சூட்டிய பின் திருமுகவாட்டம் தீர்ந்ததே. இன்று திருத்துழாய் மாலைகளையும் சூட்டிவிட்டோம். எல்லா மலர்மாலைகளையும் சூட்டிவிட்டோம். ஆனாலும் திருமுகவாட்டம் மாறவில்லையே. பெரியாழ்வாரையும் கேட்போம்'.

திரையை விலக்கிய பின் பட்டர்பிரானின் திருமுகத்தைப் பார்க்கிறார் அர்ச்சகர். எம்பெருமானின் திருமுக தரிசனம் எனும் அமுதத்தைப் பருக காத்துக் கொண்டிருந்த பட்டர்பிரானின் திருமுகம் முதலில் மலர்ந்து பின்னர் கொஞ்சம் சுணங்குகிறது. விட்டுசித்தரின் திருப்புருவங்கள் கொஞ்சம் நெரிகின்றன.

'பட்டரே. என்ன இது? எம்பெருமானுக்கு ஏதாவது மனக்குறையா? திருமுகமண்டலம் வாட்டமுற்றதைப் போல் தோன்றுகிறதே'.

'விட்டுசித்தரே. அடியேனுக்கும் அப்படியே தோன்றியது. உங்களைக் கேட்கலாம் என்று நினைத்தேன். தாங்களும் அதனையே சொல்கிறீர்கள். எம்பெருமானே. உமக்கு என்ன மனக்குறை? அடியோங்கள் அறியத் தரலாகாதோ?'

'மாலே. மணிவண்ணா. இன்று முதலில் தொடுத்த மலர்மாலைகளில் தலைமுடி இருந்ததைக் கண்டு புதிய மலர்மாலைகளைத் தொடுத்து வந்தேனே. இன்னும் ஏதாவது அபச்சாரம் நேர்ந்துவிட்டதா? அடியோங்கள் அறியாமல் செய்த எல்லாப் பிழைகளையும் பொறுத்தருள வேண்டும்.'

இப்படி பலவிதமாக பெரியாழ்வாரும் பட்டரும் அங்கு கூடியிருந்த அடியார்கள் எல்லாம் எம்பெருமானின் திருமுக வாட்டம் நீங்க வேண்டிக்கொண்டிருந்தனர். எம்பெருமானின் திருமுக வாட்டம் நீங்கவில்லை. ஏனென்றே புரியாமல் மன வருத்தத்துடன் பட்டர்பிரானும் மற்றவர்களும் தங்கள் இல்லம் திரும்பினர்.

***

அருஞ்சொற்பொருள்:

சிற்றஞ்சிறு காலே - அதிகாலையிலே

திருமஞ்சனம், திருமுழுக்காட்டு - சென்ற பதிவைப் பாருங்கள்.

நெருநல் - நேற்று

அடியோங்கள் - நாங்கள்

***

***

(2007ல் எழுதியதன் மறுபதிவு)

தீர்ந்தது திருமுக வாட்டம்!

'வாருங்கள் பட்டர்பிரானே. தங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன். திருமுழுக்காட்டும் இப்போது தான் நிறைவு பெற்றது. எம்பெருமான் பீதகவாடை அணிந்து கொண்டு தேவரீர் கொண்டு வரும் திருத்துழாய் மாலைகளுக்காகவும் பல்வகை பூமாலைகளுக்காகவும் காத்திருக்கிறான்'.

'திருமுழுக்காட்டு ஆகிவிட்டதா? அடடா! என்றும் திருமுழுக்காட்டு காண வந்துவிடுவேனே. இன்று திருத்துழாய் சிறிது குறைந்தது என்று இரண்டாவது முறை சென்றுப் பறித்து வந்து மாலையைத் தொடுத்ததால் சற்று நேரமாகிவிட்டது பட்டரே. எப்படியோ பெருமானை வெகு நேரம் காக்க வைக்காமல் நேரத்திற்கு வந்தேனே. இதோ மலர் மாலைகளும் திருத்துழாய் மாலைகளும். ஆலிலைப்பள்ளியானுக்குச் சாற்றுங்கள்'.

'விட்டுசித்தரே. திருமுழுக்காட்டு நடக்கும் போதெல்லாம் எம்பெருமான் திருமுகமண்டலத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் சிறிது நேரமாக அவன் திருமுகத்தில் வாட்டம் தெரிவதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. தேவரீர் கொஞ்சம் பார்த்துச் சொல்ல வேண்டும்'.

'ஆமாம் பட்டரே. அடியேனுக்கும் அப்படியே தோன்றுகிறது. தாங்கள் நேற்று சூட்டிய திருத்துழாயைக் களைந்து வெகு நேரம் ஆகிவிட்டதா என்ன?'

'இல்லை விட்டுசித்தரே. சிறிதே நேரம் தான் ஆகியது. நமக்குத் தான் திருமாலவன் திருவிடம் மட்டுமின்றி திருத்துழாயிடமும் மால் கொண்டவன் என்று தெரியுமே. திருமுழுக்காட்டின் போதும் திருத்துழாய் மாலையை அணிவித்துத் தானே திருமுழுக்காட்டுவோம். புதிய ஆடையை இப்போது தான் அணிவித்தேன். அதற்குள் தாங்கள் வந்துவிட்டீர்கள். எம்பெருமானால் அந்த சிறிது நேரத்திற்குக் கூட திருத்துழாயைப் பிரிந்து இருக்க முடியவில்லையா? வியப்பு தான்'.

'பட்டரே. காலம் தாழ்த்தாமல் எம்பெருமானுக்குத் திருத்துழாய் மாலையைச் சூட்டுங்கள். அவன் திருமுகம் மேகம் சூழ்ந்த நிலவு போல் இருப்பதைக் காண இயலவில்லை'.

'இதோ சூட்டிவிட்டேன் பெருமானே. கொஞ்சம் பொறுத்தருளுங்கள்'.

'வடபெருங்கோயிலுடையானே. இதென்ன விந்தை?! திருத்துழாயை அணிந்த பின்னும் உன் திருமுகவாட்டம் மறையவில்லையே. பட்டரே. அனைத்து மலர்மாலைகளையும் சூட்டுங்கள். மாலவன் மனம் அப்போதாவது குளிர்கிறதா பார்ப்போம்'.

'இதோ சூட்டிவிட்டேன் பட்டர்பிரானே. இதோ சூட்டிவிட்டேன்'.

'என்ன விந்தை இது? திருத்துழாயை அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மலர்மாலைகளைச் சூட்டியவுடன் மாறிவிட்டதே. என்ன வியப்பு? ஆகா. இப்போது சுவாமியின் திருமுகம் முழு மதியைப் போல் விளங்குகிறதே. ஆயிரம் கண் போதாதே. ஆயிரம் கண் போதாதே. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு'.

'ஆமாம் விட்டுசித்தரே. உண்மை தான். மாயவன் மிகுந்த மாயைகள் புரிகிறான். திருத்துழாய் அணிந்த பின்னும் மாறாத திருமுகவாட்டம் மற்ற மலர் மாலைகளைச் சூட்டியதும் மாறிவிட்டதே. வியப்பிது காண்.'

***

விஷ்ணுசித்தரும் மற்றவர்களும் எம்பெருமானைப் பணிந்து இல்லம் திரும்புகின்றனர். இதே போல பல நாட்கள் கோதை சூட்டிக் கொடுத்த மலர்மாலைகளை அணிந்து கோவிந்தன் மன மகிழ்ந்து அடியவர்களுக்கு அருள் சொரிந்து கொண்டிருக்கிறான். அவனின் திருமுக மணடலத்தில் தோன்றும் பெருமகிழ்ச்சியையும் அவன் கரியவாய திருக்கண்களையும் காண வேண்டுமா? இதோ...



***

அருஞ்சொற்பொருள்:

பட்டர்பிரான் - பாண்டியன் சபையில் பரம்பொருளை அறுதியிட்டுக் கூறியதற்காக பாண்டியன் அவையில் பெரியாழ்வாருக்குக் கொடுக்கப் பட்ட பட்டம். பட்டர்பிரான் திருக்கதையைப் படிக்க 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவைப் பாருங்கள்.

திருமுழுக்காட்டு - அபிஷேகத்திற்கான தமிழ்ச்சொல். வைணவர்கள் அன்று முதல் இன்று வரை அபிஷேகத்திற்குச் சொல்லும் சொல்.

பீதகவாடை - மஞ்சள் ஆடை. பீதாம்பரம் என்று வடமொழியில் சொல்லப்படுவது.

திருத்துழாய் - துளசி.

பட்டர் - அர்ச்சகர். பெருமாள் கோயில் அர்ச்சகரை பட்டர் என்றும் பட்டாச்சாரியர் என்றும் அழைப்பார்கள்.

ஆலிலைப்பள்ளியான் - எல்லா உலகங்களும் தோன்றும் முன் ஒரு குழந்தை வடிவில் ஆலிலை மேல் பள்ளி கொள்வான் பரந்தாமன். அதனால் அவனுக்கு ஆலிலைப்பள்ளியான் என்று பெயர். அது வடமொழியில் வ்டபத்ரசாயி என்று பெயர்ப்பாகும். அதுவே வில்லிபுத்தூரில் வாழும் இறைவனின் திருப்பெயர்.

விட்டுசித்தர் - விஷ்ணு சித்தர் என்னும் திருப்பெயர் தமிழில் விட்டுசித்தர் ஆகிவிடுகிறது. பெரியாழ்வாரே தன் பாடல்களில் தன்னை விட்டுசித்தன் என்றே குறித்துக் கொள்கிறார். விஷ்ணு சித்தன் பெயர் விளக்கம் 'விஷ்ணு சித்தன்' வலைப்பூவில் காண்க.

திருமுகமண்டலம் - இறைவனின் முகம். இறைவனையும் அடியார்களையும் சேர்ந்த எதனையும் திரு என்ற அடைமொழியுடன் சொல்வது வைணவ மரபு.

தேவரீர் - தெய்வத்திற்கு சமமான தாங்கள். பெரியவர்களையும் மதிக்கத் தகுந்தவர்களையும் வைணவர் அழைக்கும் சொல்.

அடியேன் - தன்னைக் குறித்துக் கொள்ள வைணவர் சொல்லும் சொல். ஒருவர் மாற்றி ஒருவர் அடியேன் என்று சொல்லிக் கொண்டு பேசுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

மால் - மயக்கம்; திருமால் - திருவிடம் மயங்கியவன்; மயக்குபவன்.

வடபெருங்கோயிலுடையான் - வில்லிபுத்தூர் பெருமானின் திருப்பெயர்.

முடிந்தவரை கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று எண்ணும் சொற்களுக்கு அருஞ்சொற்பொருள் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். அதனால் பதிவைப் படிக்கும் போது ஏதாவது சொல் புரியவில்லை என்றால் பதிவின் இறுதியில் பாருங்கள். பெரும்பாலும் அந்த சொற்களுக்குப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி அடியேன் ஏதேனும் சொல்லுக்குப் பொருள் சொல்லாமல் விட்டிருந்தால் கேளுங்கள். அவற்றையும் பட்டியலில் பொருளுடன் சேர்த்துவிடுகிறேன்.

***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

Monday, July 01, 2013

தென்பட்டான் கண்ணன்!!!

எத்தனை உருகினால் தான் என்ன? கல் நெஞ்சம் கொண்டவர்க்கு கருணை என்பதும் உண்டா? உடலைப் போல் உள்ளமும் கருத்தவன் அல்லவா அவன்? இந்த நேரத்தில் தோழியர் தொல்லை வேறு தாங்கமுடியவில்லை. என் நோய் தீர என்ன செய்வது என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். ஆனால் அவர்கள் அதனைப் பற்றிக் கவலைப் படுவதாகவே தெரியவில்லை. அவர்கள் எண்ணம் எல்லாம் தங்களை அலங்கரித்துக் கொண்டு ஒருவரிடம் மற்றவர் தங்கள் அழகினைக் காட்டி நிறை குறைகளைப் பேசிப் பொழுதைக் கழிப்பதிலேயே இருக்கிறது. என்னிடமும் அலங்கரித்துக் கொள்ளச் சொல்கிறார்கள். என் மனநிலையை அறிந்தவர் இந்த உலகில் எவருமே இல்லையா? தந்தையார் என் நிலையை உணர்ந்தவர் போல் சில நேரம் பேசுகிறார். மற்ற நேரங்களில் அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதே நம் கடன்; அவனை மணக்க முடியுமா என்றும் பேசுகிறார். என் துயரம் யாருக்குமே புரியவில்லையா?

'கொஞ்சம் நில்லடி கோமளவல்லி. இப்போது நீ காட்டினாயே அந்தக் கண்ணாடியை இங்கே தா. விரைவில் தா'.

'கோதை. இதென்ன விந்தை?! இது நாள் வரை அலங்கரித்துக் கொள்ள மாட்டேன் என்று எப்போதும் அழுத கண்ணீரும், கண்ணீரை இறைக்கும் கைகளுமாய் இருந்தாயே. முன்பொரு காலத்தில் 'காறை பூணும் கண்ணாடி பார்க்கும்' என்று உன் தந்தையார் உன்னைப் பார்த்துப் பாடும் படி நடந்து கொண்டாயே அந்த நாட்கள் திரும்பி வந்தனவா?'

'கோமளவல்லி. உனக்குச் சொன்னாலும் புரிவதில்லை. அந்தக் கண்ணாடியை இங்கே கொடு'

கோமளவல்லி கைக் கண்ணாடியை கோதையிடம் கொடுக்கிறாள். கோதை அதில் தன் முகம் பார்க்கிறாள்.

'கோமளவல்லி. இது கண்ணாடி தானா? இல்லை கண்ணனின் ஓவியமா? இதனைக் கண்ணாடி என்று சொல்லி சற்று முன் நீட்டினாய். அப்போது இதில் கண்ணனின் திருவுருவம் தெரிந்தது. இப்போதும் தெரிகிறது. நீ ஏன் இதனைக் கண்ணாடி என்று சொன்னாய்?'

'கோதை. உனக்கு கண்ணன் மேல் பைத்தியம் மிகவும் அதிகமாகிவிட்டது. அது கைக்கண்ணாடி தான். இப்போது தானே அதில் என் முகத்தைப் பார்த்து புருவம் திருத்தினேன். அதனைப் பார்த்து கண்ணன் ஓவியம் என்கிறாயே. என்னை விட்டுவிடடி. நான் என் இல்லத்திற்கே செல்கிறேன். உன்னோடு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் எனக்கும் பைத்தியம் பிடித்துவிடும்'.

கோமளவல்லி அகன்று செல்கிறாள். அவள் போனபின்பு கண்ணாடியில் தெரியும் கண்ணனின் திருவுருவை கோதை பார்த்துக் கொண்டே தனக்குள் சிந்திக்கிறாள்.



'கோமளவல்லி சொல்வதும் சரி தான் போலிருக்கிறதே. இது கண்ணாடி தான். பல நாட்கள் நானும் இதில் என் முகம் பார்த்திருக்கிறேன். ஏன் இன்று என் முகம் தெரியாமல் கண்ணனின் முகம் இதில் தெரிகிறது. அதோ அந்த நிலைக்கண்ணாடியில் சென்று பார்ப்போம்.'

நிலைக்கண்ணாடியில் கண்ணனின் முழு உருவம் தெரிகிறது. இவள் என்ன செய்கிறாளோ அதனையே கண்ணன் நிலைக்கண்ணாடியில் செய்கிறான்.

'ஆகா. எத்தனை நாளாக உருகினோமோ அதற்கு பயன் கிட்டிவிட்டதா? கண்ணன் மனம் கடைசியில் இரங்கிவிட்டதா? அதனால் தான் கண்ணாடியில் காட்சி தருகிறானா? அவன் உருவத்தைக் கண்டு மனம் துள்ளுகிறதே. ஆகா அவனுக்கு ஏற்ற ஆடை அணிகலன்களை அணிவோம் என்றால் இது என்ன கண்ணாடியில் பார்த்துக் கொள்ளவே முடியவில்லையே. அவன் திருவுருவம் தானே தெரிகிறது. இது நாள் வரை கண்களில் தென்படாமல் கொடுத்தத் தொல்லை போதாதென்று இன்று கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் தென்பட்டு தொல்லை கொடுக்கிறானே. இவனை என் சொல்ல? தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறானே. என்னைப் போன்ற பேதைப் பெண்களைத் தொல்லைப் படுத்திப் பார்ப்பதே இவனுக்கு வேலையாகப் போய்விட்டது.

கண்ணாடி இல்லாவிட்டால் என்ன? கைகளும் கால்களும் எங்கே இருக்கின்றன என்று தெரியாமலா போய்விட்டது. முடிந்த வரை கண்ணாடி பார்க்காமலேயே நம்மை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் தெரியும் கண்ணன் முன் வருவோம்'.

இப்படி எண்ணிக் கொண்டு கோதை தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியின் முன் வருகிறாள். அங்கே கண்ணனைக் கண்டு மிக மகிழ்ந்து நிற்கிறாள். அப்போது அருகில் பெருமானுக்காக விஷ்ணு சித்தர் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலைகள் தென்படுகின்றன.

'என் கண்ணனுக்காகவே அப்பா இந்த மலர் மாலைகளைத் தொடுத்து வைத்திருக்கிறார். அவனுக்கு இந்த மாலைகள் தான் எவ்வளவு பொருத்தமாக இருக்கும். கண்ணாடியில் தெரியும் கண்ணனுக்கு இவற்றை அணிவித்துப் பார்ப்போம். கண்ணா, இந்தா இந்த மலர் மாலையை அணிந்து கொள்'.

கண்ணாடியில் தெரியும் கண்ணன் திருவுருவம் மலர் மாலையை அணிந்து கொள்ளவில்லை.

'கண்ணா. உன் மனம் மீண்டும் கல்லாகிவிட்டதா? கண் முன் தெரிகிறாய். ஆனால் நான் வேண்டிக் கொண்டு தரும் இம்மாலையை அணிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய். உன்னை என்ன தான் செய்வது?'

கண்ணன் கண் முன் தெரிவதால் கண்ணனை முன் போல் கடிய வார்த்தைகளால் கடிந்து கொள்ள கோதைக்கு முடியவில்லை. ஆனாலும் தந்தையார் மிகுந்து பக்தியுடன் தொடுத்து வைத்திருக்கும் மலர் மாலையைக் கண்ணனுக்கு அணிவித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

'கண்ணா. நான் வருந்தி அழைத்துக் கொடுத்தாலும் மாலையை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாயே. உனக்கு இந்த மாலைகளை எப்படி அணிவிப்பது என்று எனக்குத் தெரியும்'

இப்படி சொல்லிக் கொண்டே மாலைகளை ஒவ்வொன்றாக தானே அணிந்து கொள்கிறாள்.
ஒவ்வொரு மாலை அணியும் போதும் கண்ணாடியில் இருக்கும் திருவுருவமும் அந்த மாலையை அணிந்து கொள்கிறது. ஒவ்வொரு மாலையை அணிந்து கொண்டும் அவனின் திருவுருவத்திற்கு அந்த மாலை எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது என்று இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி அழகு பார்க்கிறாள் கோதை. இப்படி எல்லா மாலைகளையும் அணிந்து பார்த்த பின் அவற்றை திரும்பவும் குடலையில் இட்டுவிட்டு கைக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு மீண்டும் கண்ணன் திருமுகத்தைக் காண வேறுபுறம் சென்றுவிடுகிறாள். இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தது என்று தெரியாமல் இருந்த மகிழ்ச்சி மீண்டும் அவள் முகத்தில் குவிந்திருக்கிறது.

***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)