Friday, July 29, 2011

பகிர்தல் - 2

பத்து நாளைக்கு முன்னாடி திடீர்ன்னு ஒரு நாள் நம்ம இரவி நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுன இடுகைகளை (இடுகை 1) (இடுகை 2) படிச்சுட்டு 'நீங்க இன்னொரு ஜெயமோகன்'னு சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்புனார். 'என்னடா இவரு இந்த மாதிரி கேலி பண்றாரே'ன்னு நெனச்சுக்கிட்டு 'எதுக்கு அப்புடி சொல்றீங்க'ன்னு கேட்டா 'அவரு தான் இப்புடி டெக்னிகல் டெர்ம்ஸ் நெறைய போட்டு எழுதியிருப்பாரு. நீங்களும் அப்படி எழுதியிருக்கீங்க'ங்கறார். 'சரி. நாம எழுதுனதை முக்குனாலும் சரி மொனகுனாலும் சரி புரிஞ்சிக்க முடியாதுங்கறதைத் தான் நாசூக்கா இப்படி சொல்றாரு'ன்னு நெனைச்சுக்கிட்டேன்.

இன்னைக்கி வேணுவனத்துல சுகா எப்பவோ எழுதியிருந்த ஒரு இடுகையைப் படிக்கிறப்ப தான் எனக்கும் ஜெயமோகனுக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமையும் தெரிஞ்சிச்சு. (அப்பாடா! இரவி கிண்டலா சொன்னதையும் 'இன்னொரு'ன்னு இங்கே ஒரு சொல்லைப் போட்டு பெருமையா ஏத்துகிட்டாச்சு!). அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்! ஹேஹே ஓஹோ லாலலான்னு பாடாத கொறைதான்! (அந்தப் பாட்டுல சைக்கிள்லெயே ஊரைச் சுத்துவாங்க. அதுவும் இப்ப நினைவுக்கு வந்து படுத்துதே!)

இந்த வேனற்காலத்துல தோப்புக்கும் ஏரிக்கரைக்கும் நண்பர்கள் அவங்க குடும்பங்கள்ன்னு போறப்ப எல்லாம் அவங்கவங்க இந்த மிதிவண்டியைக் கொண்டு வர்றாங்க. எனக்கு ஓட்டத் தெரியாதுன்னு ஒவ்வொரு தடவையும் வெக்கத்தோட சொல்ல வேண்டியிருக்கு. அதெப்படிங்க எத்தனை தடவை சொன்னாலும் மறந்து போகுது. அதுல இன்னும் பாவம் என்னான்னா எனக்கு ஓட்டத் தெரியாததால என் முகத்தைப் பாத்துட்டு தங்கமணியும் ஒதுங்கிக்கிறாங்க. பாவம்.

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பொண்ணு முந்நிலைப் போட்டியில (triathlon) கலந்துக்கிட்டான்னு சொன்னேன்ல. அப்ப எடுத்த படங்களை எல்லாம் எங்க அணியில இருக்குறவங்களுக்கு அனுப்பியிருந்தேன். எங்க துறைத் தலைவர் (VP) அன்னைக்கு காலையில தான் அவரும் முந்நிலைப் போட்டிகள்ல கலந்துக்குவார்ன்னு சொல்லியிருந்தாரு. உடனே ஆகா நம்ம பொண்ணும் கலந்துகிட்டான்னு சொல்லலாமேன்னு படங்களை அனுப்புனேன். படங்களைப் பாத்துட்டு மொதோ ஆளா பதில் மின்னஞ்சல் அனுப்புனார் 'அவங்கப்பாவையும் சீக்கிரம் இந்த மாதிரி போட்டிகள்ல கலந்துக்கச் சொல்லுன்னு உன் பொண்ணுக்கிட்ட சொல்லு'ன்னு எழுதியிருந்தார். அடப்பாவமே. முந்நிலை என்ன ஒரு நிலை போட்டியில கூட அவங்கப்பாவால கலந்துக்க முடியாதுன்னு தெரியாம எழுதுறாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். பின்ன? மிதிவண்டி ஓட்டவும் தெரியாது; நீச்சலும் தெரியாது; ஓட மட்டும் முடியும்; அதுவும் இந்த பெரிய உடம்பை வச்சுக்கிட்டு ஓடுனா கொஞ்ச தூரத்திலேயே இளைப்பு வந்திரும்! நம்மளைப் பத்தி ஒன்னுமே இவருக்குத் தெரியலையேன்னு நெனைச்சுக்கிட்டேன்.

**

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் போரடிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கிறப்ப ஏதாவது படம் பாக்கலாம்ன்னு குறுந்தட்டுகளைப் புரட்டுனா குசேலன் தட்டு சிக்கிச்சு. படத்தைப் போட்டு எழுத்துங்க ஓடறப்ப 'ஐ. சிவாஜி படமா!'ன்னு பொண்ணுக்கு ஒரே சந்தோசம். எத்தனை தடவை சொன்னாலும் ரஜினி பேரை மறந்துட்டு சிவாஜின்னு தான் சொல்றா. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திருவிளையாடல் பாக்குறப்ப 'இது சிவாஜி படம்'ன்னு சொன்னேன்; அவ ரஜினி படம்ன்னு நெனைச்சுக்கிட்டு எங்கே இன்னும் சிவாஜி வரலை சிவாஜி வரலைன்னு கேட்டுக்கிட்டு இருந்தா. பையன் தான் சிவபெருமானா வந்த சிவாஜியை காமிச்சு 'இதோ சிவா'ன்னு சொன்னான். ரெண்டு பேருக்கும் ஒரே சண்டை. 'இது லார்ட் சிவா. ஆனா சிவாஜி இல்லை'ங்கறா பொண்ணு. 'இது தான் சிவா'ங்கறான் பையன். நாங்க சிரிச்சுக்கிட்டே அவங்க சண்டையப் பாத்துக்கிட்டு இருந்தோம்.

குசேலன் படத்தைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சு திருவிளையாடலுக்குப் போயிட்டேன். குசேலன் படம் போட்டவுடனே பையன் 'இது என்ன படம்'ன்னு கேட்டான். ரஜினி படம்ன்னா அவனுக்கு புரியாதுன்னு வேணாம்ன்னு அழுவான்; அதனால 'இது குசேலன் கதை; கிருஷ்ணன் வருவான்'னு சொல்லிட்டேன். அவனும் கடைசி வரைக்கும் பொறுமையா உக்காந்து 'எப்ப பாலகிருஷ்ணன் வருவான்'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தான். பார்பர் பாலுவைக் காமிச்சு 'இவர் தான் பாலகிருஷ்ணன்'ன்னு சொன்னா 'இல்லை. இது பாலகிருஷ்ணன் இல்லை. பாலகிருஷ்ணன் சட்டை போட்டிருக்க மாட்டான்'ன்னு சொல்றான்.

எப்படியோ ரெண்டு பேரையும் அழுத்தி உக்கார வச்சு படம் பார்த்தேன். படம் கொஞ்சம் போர் தான். ரஜினி பள்ளிக்கூட கூட்டத்துல பேசுற காட்சிக்காக உக்காந்து பாத்துக்கிட்டிருந்தேன். அந்தக் காட்சி வந்தப்ப தங்கமணியும் வந்து குழந்தைகளுக்கு அந்தப்பக்கமா உக்காந்துக்கிட்டாங்க. காட்சி முடியற நேரம் ஒருத்தரை ஒருத்தர் திரும்பி பாத்துக்கிட்டா ரெண்டு பேருக்கும் சிரிப்பு தாங்கலை. ஏன்னா ரெண்டு பேரு கண்ணுலயும் தாரை தாரையா தண்ணி! ரஜினி என்ன சொன்னாரு; ஏன் அழறீங்க நீங்க ரெண்டு பேரும்ன்னு பொண்ணு கேட்டு படுத்தி எடுத்துட்டா.

இந்த மாதிரி படத்தைப் பாத்து கண்ணீர் விடறவங்க நெறைய பேரு இருங்காங்கன்னு தான் நினைக்கிறேன். நீங்க எப்படி?

**

கேட்டதில் பிடித்தது:



இந்தப் பாட்டைக் கேக்க பிடிக்கும். பாக்கப் பிடிக்காது. என்னமோ தெரியலை.

12 comments:

Kavinaya said...

//அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்!//

அடக் கடவுளே!

//ரஜினி என்ன சொன்னாரு; ஏன் அழறீங்க நீங்க ரெண்டு பேரும்ன்னு//

நானும் கேக்கறேன். சொல்லுங்க! நானு அந்தப் படம் பார்த்ததில்லை.

குமரன் (Kumaran) said...

சூப்பர் ஸ்டாருக்கும் தொடர்பு விட்டுப்போன அவருடைய இளமைக்கால நண்பருக்கும் உள்ள நட்பின் ஆழத்தைச் சொல்லும் படம் அக்கா அது.

மதுரையம்பதி said...

ஆஹா!, சேந்தனுக்கு இப்படி ஒரு நிலையா :-)

குமரன் (Kumaran) said...

பையனுக்கு இன்னும் கொஞ்சம் வயசானா நிலைமை மாறும்ன்னு நினைக்கிறேன் மௌலி. இப்போதைக்கு அப்பா, அம்மா, அக்கா இவங்களுக்குப் பிடிச்சதை மட்டும் தான் அவன் செய்ய முடியுது. :-)

தமிழ் said...

triathlon என்றால் முந்நிலைப் போட்டியா? இல்ல முத்தடகளப் போட்டியா? #டவுட்டு

-முகில்

குமரன் (Kumaran) said...

முகில்,

நீங்கள் சொன்ன பிறகு தேடிப் பார்த்தேன். அப்படி ஒரு சொல் புழக்கத்தில் இருக்கிறது. எனக்குத் தெரியாததால் புதிதாக ஒரு சொல் புழங்கினேன். இனி நினைவு வைத்துக் கொண்டு தடகளப்போட்டி என்று புழங்க முயல்கிறேன். ஆனால் அச்சொல்லின் பொருள் தான் இன்னும் புரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் said...

அது மூன்றுமே track ல நடக்குறது. நீச்சல், மிதிவண்டி, ஓட்டம். மூன்று+தடம்+களம்.

எனக்கு இந்த வார்த்தை சரிதானான்னு தெரில. ஒரு சந்தேகத்துலதான் சொன்னேன். இணையத்துலத் தேடிப்பார்த்தா அப்படி ஒரு வார்த்தையே வரல.

குமரன் (Kumaran) said...

தடகளப்போட்டிங்கற சொல் கிடைக்குது இணையத்துல.

Radha said...

//அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதாம்!//

நம்ப முடியவில்லை...மீண்டும் மீண்டும் படித்தேன். :-)

குமரன் (Kumaran) said...

எது இராதா? அவருக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாதுங்கறது தானே? :-)

கோவி.கண்ணன் said...

//எத்தனை தடவை சொன்னாலும் ரஜினி பேரை மறந்துட்டு சிவாஜின்னு தான் சொல்றா. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திருவிளையாடல் பாக்குறப்ப 'இது சிவாஜி படம்'ன்னு சொன்னேன்; அவ ரஜினி படம்ன்னு நெனைச்சுக்கிட்டு எங்கே இன்னும் சிவாஜி வரலை சிவாஜி வரலைன்னு கேட்டுக்கிட்டு இருந்தா.//
செம காமடி.

இடுகையும் நகைச்சுவைத் தூக்கலாக இருக்கு, எப்ப நகைச்சுவைக்கு மாறினிங்க, நீங்க ரொம்ப சீரியஸ் ஆனவர் ஆச்சே........

குமரன் (Kumaran) said...

அப்படியா கண்ணன்?! என் பொண்ணு அடிக்கடி சொல்றது: 'Baba. You are the most funniest person in the world'. தங்கமணி சொல்றது: 'ஐயோ அறுவை தாங்கலை'. பையன் சொல்றது: 'You are always joking me. I dont like you'. :-)