Monday, July 18, 2011

பகிர்தல் - 1

அலுவலகத்தில் வேலை அதிகம். தற்போது இருக்கும் target.com அமேசான் நிறுவனத்தின் இணைய வழங்கியில் அவர்களது மென்பொருளால் நடந்து கொண்டிருக்கிறது. நான் வேலை செய்யும் டார்கெட் நிறுவனமே சொந்தமாக மின்வணிக மென்பொருளையும் புதிய தளத்தையும் தற்போது எழுதிக் கொண்டிருக்கிறது. 2009ல் தொடங்கிய இந்த வேலை இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும். இந்த திட்டப்பணிக் குழுவில் ஒரு உறுப்பினனாக நான் இருப்பதால் நிறைய வேலை. அதிகம் எழுத இயலவில்லை.

சுருக்கமாக சில பகிர்தல்களை இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணுவதால் இதோ முதல் பகிர்தல். இரவிசங்கர் சிரிக்கப் போகிறார். இப்படி எத்தனை தொடர்களைத் தொடங்கிவிட்டு அம்போ என்று விட்டுவிட்டீர்கள். இன்னும் ஒரு தொடர் அந்த பட்டியலில் சேர்கிறதா என்று. :-)

**

வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாக குளிராகவும், டிசம்பர் ஜனவரி மாதங்களில் கடுங்குளிராகவும் இருக்கும் எங்கள் ஊரில் சென்ற ஜூலையிலிருந்து நல்ல வெயில். அதனால் வாராவாரம் வார இறுதிகளில் முடிந்தவரை இங்கிருக்கும் பல இடங்களுக்கு மகிழுலா சென்று கொண்டிருக்கிறோம். எங்கள் ஊருக்கு 'ஆயிரம் ஏரிகளின் ஊர்' என்று பெயர். தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் குளம், குட்டை, ஏரிகள் தான். ஏரிக்கரைகளும், நீர்ப்பூங்காகளும் (Water Park) இங்கே நிறைய இருக்கின்றன. அது போக மிஸ்ஸிசிப்பி ஆற்றங்கரையும் உண்டு.

சில நாட்கள் வெயில் மிகவும் அதிகமாகப் போய் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் உண்டு. இந்த ஞாயிறு அப்படி அமைந்துவிட்டது. வீட்டிற்குள்ளேயே நிறைய வேலை இருக்கிறதே - நால்வரும் அவற்றை எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம். நால்வரும் என்றா சொன்னேன்?! பெரியவர்கள் வேலை செய்ய சிறியவர்கள் உதவி செய்கிறோம் என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நல்லதிற்குத் தான். எங்களுக்கு உதவி செய்கிறோம் என்ற மன நிறைவும் அவர்களுக்குக் கிடைக்கிறது. எங்கள் வேலைகளைச் செய்யமுடியாமல் அவர்கள் தொந்தரவு கொடுப்பதும் குறைகிறது. :-)

**

ஜூன் ஒன்றாம் நாள் நான் அமெரிக்க குடியுரிமையை பெற்றேன். ஜூலை ஆறாம் நாள் என் மனைவி பெற்றார். சென்ற வியாழக்கிழமை அவரது பணியிடத்தில் அவரது குழுவினர் ஆலிக்குழைவினால் (Ice Cream) செய்யப்பட்ட இன்னப்பத்தைக் (cake) கொண்டு வந்து அவருக்கு எதிர்பாரா குறுவிருந்து தந்தனர். எனது குழுவினர் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. புதிய தளம் அமைப்பதில் இரவு பகலாக எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பதால் இதெல்லாம் கொண்டாட யாருக்கும் நேரம் இல்லை. கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது. :-)

**
சனிக்கிழமை மகள் மூன்று நிலை போட்டி (Triathlon) ஒன்றில் கலந்து கொண்டாள். புற்று நோய் ஆராய்ச்சிக்கு உதவும் ஒரு நிறுவனம் வருடந்தோறும் இதனை நடத்துகிறது. அவளது பள்ளித் தோழி ஒருத்தி சிறுவயதில் புற்றுநோயிலிருந்து தேறியவள். தோழியின் பெயரில் ஒரு அணி அமைத்து அவளது பள்ளியிலிருந்து இருபது மாணவ மாணவியர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அங்கே செல்லும் வரை அவளுக்கு கொஞ்சம் படபடப்பாகத் தான் இருந்தது என்று நினைக்கிறேன்; ஆனால் அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நோகோமிஸ் ஏரியில் நான்கு நீச்சல் குள நீளத்திற்கு முதலில் நீச்சல்; அதைத் தொடர்ந்து மிதிவண்டியில் மூன்று மைல் ஏரிக்கரைச் சுற்று; அதைத் தொடர்ந்து ஒரு மைல் ஓட்டம். ஜூனில் ஒரே ஒரு முறை பயிற்சி செய்தாள். அப்புறம் பயிற்சியே செய்யவில்லை. ஆனால் எப்படியோ மூன்றையும் நிறைவு செய்துவிட்டு வெற்றிகரமாகத் திரும்பி வந்தாள்.

**

சென்ற வியாழன் குருபூர்ணிமா தினம். இரு வருடங்களுக்கு முன்பு குருபூர்ணிமா நாள் மாலை என் தந்தையார் இயற்கை எய்தினார். திதியின் படி அப்போது பூர்ணிமை முடிந்து பிரதமை வந்துவிட்டது. அதனால் இந்த வருடம் வெள்ளிக்கிழமை தான் சிரார்த்தம் செய்வதற்கான திதி நாள் என்று தம்பி சொல்லியிருந்தார்.

மதுரையில் தம்பி அந்த சடங்குகளை எல்லாம் என் சார்பிலும் முறையாகச் செய்ய, நான் இங்கு கோவிலுக்காவது சென்று வரலாம் என்று வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு விடுப்பு இட்டுவிட்டேன். மனைவியாரும் விடுப்பு எடுத்துக் கொண்டார். குழந்தைகள் இருவரையும் அவர்களின் வேனிற்பள்ளியில் விட்டுவிட்டுப் பின்னர் கோவிலுக்குச் செல்லலாம் என்று திட்டம். அவர்கள் இருவரையும் விடச் சென்ற போது அவர்களது ஆசிரியர் 'இருவர் தலையிலும் பேனும் ஈரும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; இங்கே பல சிறுவர்களுக்கு பேன் இருப்பதால் அவர்களை வீட்டிற்குத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்று சொன்னார். சரி பாருங்கள் என்று சொன்ன பின்னர், அவர் இருவர் முடியையும் சோதித்துவிட்டு இருவருக்கும் ஈர் இருக்கிறது என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார். எனக்கோ திட்டப்படி நடந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தம். அது சினமாக மாறி அந்த ஆசிரியையிடம் 'இவர்களுக்கு பேன் தான் இல்லையே! ஒன்றிரண்டு ஈர்கள் தான் கண்களுக்குப் படுகின்றன. அவற்றையும் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. ஏன் தேவையில்லாமல் இருவரையும் திருப்பி அனுப்புகிறீர்கள்' என்று சண்டை இடத்தொடங்கிவிட்டேன். மகள் ஓடிப்போய் மகிழுந்தில் அமர்ந்திருந்த என் மனைவியை 'அப்பா டீச்சரிடம் சண்டை போடுகிறார்' என்று கூறி அழைத்து வந்துவிட்டார். அவர் வந்து 'ஏன் தேவையில்லாமல் ஆசிரியரிடமெல்லாம் சண்டை போடுகிறீர்கள். நாளெல்லாம் அவர்கள் தானே நம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள்' என்று கூறி இழுத்துவந்துவிட்டார்.

சரி எல்லோரும் சேர்ந்தே கோவிலுக்குச் செல்வோம் என்று கிளம்பினால் சரியான மழை. கோவில் வீட்டிலிருந்து நாற்பத்தி ஐந்து மைல் தொலைவில். நெடுஞ்சாலையில் செல்லும் போது மழையால் முன்னால் செல்லும் உந்தும் தெரிய மாட்டேன் என்கிறது. பின்னிருக்கையில் இருவரும் விளையாட்டுச் சண்டை போடுகிறார்கள். 'சரி இந்த மழையில் இவர்களைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்குப் போய் வர இயலாது. காலையில் வீட்டில் வழக்கம் போல் சாமி கும்பிட்டோமே அதுவே போதும்' என்று சொல்லி உந்தை வீட்டிற்கே திருப்பிவிட்டேன்.

அப்பாவிற்கு ஊனுணவு பிடிக்கும். ஆனால் திதி அன்று அவற்றை நாங்களும் உண்ண முடியாது. அவருக்கும் படைக்க முடியாது. அதனால் அவருக்குப் பிடித்த உளுந்து வடை, பருப்பு வடை செய்து படைப்போம் என்று வடைகளைச் சுட்டு அவர் படத்திற்கு முன் வைத்து வணங்கினோம். மழை நேரத்தில் சூடான வடைகள் சுவையாக இருந்தன; அவருக்கும் அப்படியே இருந்திருக்கும்.

வார இறுதியில் இரண்டு நாட்களும் பேன்கொல்லி மருந்தைக் குழந்தைகள் தலையில் தடவி முழுக்காட்டி, செத்த பேன்களையும் ஈருகளையும் வாரி எடுப்பதிலேயே நிறைய நேரம் செலவழித்தார் மனைவியார். பெண் தலையில் கொஞ்சம் ஈர் இருந்தது. பையன் தலையில் சுத்தம். ஒன்று கூட இல்லை. 'நீங்க சண்டை போட்டது சரி தான். இவன் தலையில தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குது. இவனையும் திருப்பி அனுப்புனது தப்பு தான்'னு மனைவியார் பலமுறை சொல்லிவிட்டார். தேவையில்லாத இந்த வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று கடுப்பும் அலுப்பும் அவருக்கு.

இன்று காலை எழுந்தவுடன் பையன் 'எனக்கு தலையில் பேன் இருக்கிறது' என்று சொல்லத் தொடங்கிவிட்டான். இன்னொரு நாள் விடுப்பு கிடைக்கும் என்று நினைக்கிறானோ என்னவோ. வழக்கமாக நான் தான் இருவரையும் அவர்கள் பள்ளியில் விடுவேன். 'இன்றைக்கும் நீங்கள் போனால் சண்டை போடுவீர்கள். நான் போய் விடுகிறேன்' என்று மனைவி குழந்தைகளை அழைத்துப் போயிருக்கிறார். திருப்பி அனுப்பாமல் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படி அனுப்பினால் வேறு பள்ளி பார்க்க வேண்டியது தான். என்ன வேனிலுக்காகக் கட்டிய சிறப்புக் கட்டணத்தைத் திருப்பித் தரமாட்டார்கள்.

**

ஒரு கொட்டகையில் ஐம்பது மாடுகளும் இரு மேய்ப்பர்களும் இருக்கிறார்கள். இரு மேய்ப்பர்களும் கடிகாரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே மொத்தம் எத்தனை கால்கள் எத்தனை கைகள் இருக்கின்றன.

இந்தக் கேள்வியை மகளிடம் இன்று காலை கேட்டிருக்கிறேன். நான் வீட்டை விட்டு கிளம்பும் வரை யோசித்துக் கொண்டிருந்தாள். மாலையில் பதிலைச் சொல் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

பையன் சட்டென்று 'One thousand legs'ன்னு சொல்லிவிட்டான். :-)

**

"பாபா. Did you get a call?" என்று கேட்டாள் மகள் நேற்று.

"No. Did you grill it or fry it?" என்றேன் நான். அவளுக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்ததா?

19 comments:

ILA(@)இளா said...

சரி! விடுகதைக்கான பதிலை எப்ப சொல்லுவீங்க?

குமரன் (Kumaran) said...

வாங்க இளா. ரெண்டு நாள்ல சொல்றேன். :-)

குமரன் (Kumaran) said...

முதல் கேள்விக்கு விடை(கள்):

204 கால்கள், 8 கைகள் (கடிகாரங்களுக்கு இரு கைகள் இருந்தால்) - இந்த விடையைத் தான் மகள் சொன்னாள்.
204 கால்கள், 10 கைகள் (கடிகாரங்களுக்கு மூன்று கைகள் இருந்தால்). :-)
204 கால்கள், 4 கைகள் (மின்னணு கடிகாரங்களாக இருந்தால்). :-)

இரண்டாம் கேள்விக்கு விடை:

call = கால் (கோழிக்கால்) என்று இரு மொழிச் சொற்களின் ஒத்த ஒலியைக் கொண்டு ஒரு சொற்விளையாட்டு. :-)

இராஜராஜேஸ்வரி said...

பகிர்தலுக்குப் பாராட்டுக்கள். விடுகதை சிந்திக்க வைத்தது. நன்றி. வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

Radha said...

அருமையான பகிர்வுகள்...
//சில நாட்கள் வெயில் மிகவும் அதிகமாகப் போய் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் உண்டு.//
சென்ற வாரம் அமெரிக்காவில் பல இடங்களில் அனல் காற்று வீசியதாய் செய்திகள் படித்தேன். உங்கள் பகுதியிலும் அவ்வாறு நிகழ்ந்ததா?

அப்புறம் உங்கள் வியாதி எனக்கும் வரப்போகிறது என்று நினைக்கிறேன் குமரன். :-) எங்கிருந்தோ திடீரென தொடர் எழுத ஆவல் பிறந்துள்ளது. :-))
ஐஸ்க்ரீம் என்பதற்கெல்லாம் எங்கிருந்து தமிழ் பதம் கண்டுபிடித்தீர்கள்? :-)

கவிநயா said...

வாழ்த்துகள் குமரா! இன்னப்பம் உங்களுக்கு சாப்பிடவாச்சும் கிடைச்சுதா? :)

குமரன் (Kumaran) said...

இராதா, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி எங்க ஊருல அனல் மீறி அக்னி நட்சத்திரம் மாதிரி இருந்தது. சென்ற வாரம் பரவாயில்லை. நியூஜெர்ஸி பக்கம் போன வாரம் அனல்ன்னு சொன்னாங்க.

ஐஸ்கிரீம்க்குத் தமிழ்ச் சொல் இராம.கி. ஐயா சொன்னது.

குமரன் (Kumaran) said...

கிடைச்சது அக்கா. அதுவும் அன்னைக்கே கொண்டு வரலை வீட்டுக்கு. நானும் குழந்தைகளும் அடம் பிடிச்சதால மறுநாள் தான் கொண்டு வந்து தந்தாங்க. :-)

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன், உங்கள் வாழ்க்கையில் சில நாட்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
சேந்தனும், தமக்கையும் அழகாக வளர்ந்திருப்பார்கள்.

நாங்களும் கிளம்புகிறோம். அப்பாவுக்கு என் அஞ்சலிகளையும் சேர்த்து
விடுங்க

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லியம்மா.

தமிழ் said...

அப்பாவுக்கு எங்களின் அஞ்சலிகள்!

பொண்ணுக்கிட்ட ஆடின சொல் விளையாட்டு எனக்குப் புரிஞ்சுடுத்து.. அதப்படிச்சுட்டு சிரிச்சிட்டு நிமிர்ந்து பாத்தா, எங்க வீட்டில என்னைய பார்த்து சிரிக்கிறாங்க... ;-))

குமரன் (Kumaran) said...

எங்க வீட்டுல 'ஐயோ அறுவை'ன்னு தலையில அடிச்சுக்கிட்டாங்க. உங்களுக்குப் புரிஞ்சு சிரிச்சதுல மகிழ்ச்சி. :-)

கோவி.கண்ணன் said...

//ஜூன் ஒன்றாம் நாள் நான் அமெரிக்க குடியுரிமையை பெற்றேன்//

நல்வாழ்த்துகள், நானும் கூட இங்கே. வாழும் ஊர் எதுவாகிலும் இப்புவியில் தானே.
:)

கோவி.கண்ணன் said...

//இன்று காலை எழுந்தவுடன் பையன் 'எனக்கு தலையில் பேன் இருக்கிறது' என்று சொல்லத் தொடங்கிவிட்டான். இன்னொரு நாள் விடுப்பு கிடைக்கும் என்று நினைக்கிறானோ என்னவோ.//

:)

குமரன் (Kumaran) said...

நன்றிகளும் வாழ்த்துகளும் கண்ணன்.

வவ்வால் said...

குமரன்,

சரி தான், நானே ஆறப்போட்டு ஊறப்போட்டு வந்தா எனக்கு போட்டியாக நீங்களும் வறிங்களே, இது என்ன மீள்ப்பதிவா?

கோழிக்கு மட்டுமா கால் இருக்கு ஆட்டுகால் எல்லாம் சாப்பிட மாட்டிங்களா?

ஆலிக்குழைவு இதெல்லாம் யார் தமிழ் படுத்துறாங்க, அருவினு தமிழ்ல நல்ல பெயர் இருக்குனு தெரியாமவாட்டர் ஃபால்ஸ் அ நீர் வீழ்ச்சினு சொல்றாப்போல இருக்கு, ,ஐஸ்கிரீம் க்கு பனிக்கூழ் னு ஒரு பெயர் ஏற்கனவே இருக்கு, சக்கரத்தை மறுபடியும் கண்டுப்பிடிக்காம இருக்கா மாட்டாங்க போல:-))

குமரன் (Kumaran) said...

இது மீள்பதிவு இல்லை வவ்வால். நானும் இப்போதெல்லாம் நிறைய எழுதுவதில்லை. நிறைய வேலை.

ஆட்டுக்கால் சூப் மதுரையில் குடிச்சிருக்கேன். அப்ப ஆட்டுக்காலும் சாப்பிட்டிருக்கேன். இங்கே ஆட்டுக்கறி கிடைக்கிறது; ஆனால் ஆட்டுக்காலைப் பார்த்ததில்லை.

ஆலிக்குழைவுன்னு கூகிளாரைக் கேளுங்க. ஏன் பனிக்கூழை விட ஆலிக்குழைவு ஏத்ததுன்னு ஒரு பதிவு வரும். ஆனா பனிக்கூழ் தான் எளிமையா இருக்குன்னா அதை நிறைய பேர் புழங்குனாங்கன்னா அது நிலைக்கும். நிலைக்கட்டும். :-)

வவ்வால் said...

குமரன்,

எனக்கு ரொம்ப நாளா ஒரு எண்ணம் உண்டு , இணையத்தில சிலர் தப்பு தப்பா தமிழை மொழிப்பெயர்த்து வச்சுட்டு போயிடுறாங்க, கூகிளில் தேடினா தப்பானது தான் முதலில் வருகிறது என்று கடுப்பு உண்டு, அதை இப்போ ஒரு பதிவாகவும் போட்டு இருக்கேன். நீங்க இணையத்தில ஆலிக்குழைவுக்கு பார்க்க சொல்றிங்க.தொழில்நுட்ப விடயங்களுக்கு இணையம் நல்லா கைக்கொடுக்குது தமிழ் பத்தி தேடினா ஒரே இம்சை தான் போங்க.

இந்த பதிவ நேரம் இருந்தா பார்க்கவும்.
http://vovalpaarvai.blogspot.com/2011/11/blog-post_07.html

உதாரணமா சொல்றேன், சைக்கிள் டூயுபுக்கு பஞ்சர் ஒட்டுறது எப்படினு ஒருத்தர் ஒட்ட தெரியாம பதிவு போடுவாரா?(ஹி..ஹி உங்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதுன்னாலும் ,பஞ்சர் தான் உதாரணம் சொல்றேன்)

ஆனா , நான் வீட்டில , வெளில தமிழ் பேசுறேன், இன்னும் சில பேர் நான் ஆந்திரா என் பொண்டாட்டி தமிழ் அதனால எனக்கு தமிழ் நல்லா தெரியும்னு கம்பர், வள்ளுவர் , இளங்கோவடிகள் எழுதியதுக்கு எல்லாம் விளக்கம் சொல்றேன்னு சொந்த கருத்தை இணையத்தில அரங்கேற்றம் செய்றாங்க!

வெள்ளைக்காரன் ஒருத்தன் தமிழ் கத்துக்கிட்டு குறள் படிச்சானாம், அவனுக்கு தப்பா தெரிஞ்சதாம் ,திருக்குறள் மேல 4 சீர் ,கீழ 3 சீர் இருக்கு தப்புனு மேலயும் கிழயும் 4 சீர் ஆக்கி திருக்குறள் புத்தகம் போட்டானாம் , அதை மதுரை பாஸ்கரசேதுபதி பார்த்துட்டு அவனைப்பகைச்சுக்காம எல்லாம் சூப்பர்னு சொல்லி , மொத்தமா வாங்கி நெருப்பு வச்சு கொளுத்திட்டாராம்.(உங்க ஊர் மேட்டர் சொல்லிட்டேன்ல)

தமிழ்சங்கத்தை அமைத்த பாஸ்கர சேதுபதி இருந்தா இப்படிப்பட்ட பதிவுகளுக்கு நெருப்பு வச்சு இருப்பார். இணையத்தில தமிழ் பத்தி தேடினா ,மரத்தடி,திண்ணை, முட்டு சந்துனு அவன் அவன் பினாத்தி வச்சது தான் முன்ன வருது.