Saturday, March 05, 2011

ஆராவமுதே! - 3



"நெடுமால் ஆழ்வார் மேல் கொண்டுள்ள அன்பால் ஆழ்வாரின் உடலமும் அன்பாகி நீர்பண்டம் போல் உருகி நிற்கச் செய்தான். ஆனால் அவனது அந்த அன்பின் வெளிப்பாடாக குளிர நோக்குதல், வாவென்று அழைத்தல், நலம் வினவுதல், ஆரத் தழுவுதல் என்று ஒன்றுமே செய்யவில்லை. குளிர்ந்த காற்று வீசவும் அதில் மயங்கி உறங்குபவன் போல் தன் திருமேனியின் அழகெல்லாம் நன்கு திகழும்படி கிடந்தான். நீ கிடந்ததை மட்டும் தான் காண்கிறேன் என் தலைவனே; உன் அன்பின் வெளிப்பாடுகளைக் காணவில்லை என்கிறார் ஆழ்வார்"

"ஆழ்வார் இதனை எல்லாம் பாசுரத்தில் சொல்லியிருக்கிறாரா? ஆகா அருமை. எப்படி என்று விளக்குங்கள்".

"சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

என்பவை இந்த பாசுரத்தின் அடுத்த அடிகள்.

தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்று உடல், மொழி, மனம் என்ற மூன்றாலும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே உயிர்களின் இயல்பு என்று சான்றோர் சொல்வார்கள் அல்லவா? பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவுள்ள உயிர்கள் மட்டுமின்றி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களுக்கும் அது தானே இயல்பு. அந்த இயல்பையே செந்நெல்லின் சீர் என்று ஆழ்வார் இங்கே குறிக்கிறார்.

காற்றில் இயல்பாக ஆடி அசையும் செந்நெல்லைக் கண்டு அது இறைவனுக்குக் கவரி வீசுவதாகச் சொல்லலாமே என்று ஒரு மறுப்பு எழலாம். அப்படி சொல்லலாம் தான். ஆனால் இந்த ஆழ்வாரும் ஆழ்வாரை அடிமை கொண்டுள்ள இறைவனும், உயிர்களுக்கும் இறைவனுக்கும் இயல்பாக அமைந்துள்ள உடைமை உடையவன் என்ற தொடர்பை நன்கு உணர்ந்தவர்கள் என்பதால் அவ்விருவர் பார்வைக்கும் காற்றில் அசையும் செந்நெல் இறைவனுக்குத் தொண்டு செய்வது போன்றே தோன்றுகிறது.

ஆழ்வார் என்றும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே தன் இயல்பு என்பதை உணர்ந்தவர் என்பதாலும் அதுவே எல்லா உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்று அறிந்ததாலும் செந்நெலும் இறைவன் உறங்க கவரி வீசித் தொண்டு செய்வதாக நினைக்கிறார்.

இயல்பாக உயிர்களிடத்தில் தனக்குத் தோன்றும் கருணையை வாரி வழங்க தற்செயலாக ஏதேனும் ஒன்றை உயிர் செய்யாதா என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவனும் தற்செயலாக ஆடும் செந்நெல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எண்ணிக் கொண்டு அதற்கு தன் கருணை என்னும் செழுநீரை வாரி வழங்குகிறான்".

"ஆகா. ஆகா. அடுத்த முறை திவ்ய தேசங்களில் தற்செயலாக ஆடும் மரம் செடி கொடிகளைக் கண்டால் இந்த நினைவு வந்து தானே நம் கைகள் வணங்காதா?! அதனைக் கண்டு இறைவனும் ஆஆ என்று ஆராய்ந்து அருளானா?! அவன் திருவுள்ளம் தான் உகக்காதா?! ஆழ்வாரின் அமுத மொழிகள் நம் நினைவில் என்றும் நின்று அவன் உள்ளம் உகக்கும்படி செய்யட்டும்!"

"உண்மை தான் பகவரே. ஆழ்வார் பாசுரங்களில் ஒரு சொல் போதுமே உலகைக் கடைத்தேற்ற.

இப்படி தொண்டு என்னும் சீர் நிறைந்த செந்நெல் இறைவனின் அருள் என்று சொல்லலாம்படியான செழுமையான நீர் நிலைகளில் நின்று ஆடி அசைந்து கவரி வீசும் ஊர் திருக்குடந்தை. அந்த திருப்பதியில் தனது அழகெல்லாம் திகழும் படியாக இறைவன் உறங்குகின்றான்.

சிலரை நிற்கும் போது பார்த்தால் அழகாக இருப்பார்கள். சிலர் அமரும் போது அவர்களது அழகு வெளிப்படும். ஆனால் இவனுக்கோ இவனது ஒப்பில்லாத அழகு எல்லாம் கிடக்கும் போது தான் திகழ்ந்து விளங்குகிறது. அப்படி அழகெல்லாம் திகழும் படியாக இவன் திருக்குடந்தையிலே கிடக்கிறான். அதனைக் கண்டேன் என்கிறார் ஆழ்வார்".

"கண்டேன் எம்மானே என்று தானே சொன்னார். வருத்தப்படுவதாக தேவரீர் சொன்னீர்களே"

"ஆமாம் பகவரே. திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே என்று சொல்லும் போது என் உயிரையும் உடலையும் உருக்கும் திருக்கோலத்தைக் கண்டது மட்டும் தான் உண்டு; ஆனால் நான் எதிர்பார்த்து வந்தவை நடக்கவில்லை என்று சொல்வதாகத் தானே பொருள். வந்தாயா என்று அன்புடன் வினவுதல், தாமரைக்கண் திறந்து குளிரக் காணுதல், ஆரத்தழுவுதல் போன்றவை தானே இவர் விரும்பி வந்தவை. அவற்றை எல்லாம் காணேன். கிடந்ததை மட்டுமே கண்டேன் என்கிறார்.

வாரும் பிள்ளாய். அருகில் அமருக".

வந்த இளைஞன் இருவரையும் பணிந்து அமர்கிறான்.




"இவன் பெயர் கண்ணபிரான். எம்பெருமானார் திருவுள்ளம் எதையெல்லாம் விரும்பியதோ அவற்றை பற்றியே என்றும் சிந்திக்கும் உள்ளத்தவன்.

பிள்ளாய். ஆழ்வாரின் ஆராவமுதே பாசுரத்தின் பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்".

"ஐயா. அடியேன் தேவரீர் திருமாளிகைப் புறத்திலே நின்று தேவரீர் அருளியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் புக வேண்டாம் என்று தயங்கி நின்றிருந்தேன்".

"பெரியோரை மதிக்கும் உன் பணிவைத் தான் இந்த ஊரே நன்கு அறியுமே. இடையில் புக வேண்டாம் என்று தயங்கிய நீ இப்போது வந்தது ஏனோ?"

"சீரார் செந்நெல் கவரி வீசும் என்ற ஆழ்வார் அருளிச்செயலின் இருக்கும் இன்னொரு அருத்த விசேஷமும் மனத்தில் தோன்றியதால் அதனை தங்களிடம் விண்ணப்பிக்க உள்ளே நுழைந்தேன். அடியேனை மன்னிக்கவேண்டும்"

"ஆகா. இன்னொரு அருத்த விஷேசமா? எம்பெருமானார் திருவுள்ளம் போன்ற உள்ளம் அல்லவா உன்னது. அந்தப் பொருளையும் சொல். கேட்போம்!"

"எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது தான் உயிர்களின் இயல்பு என்பதை லக்ஷ்மி சம்பன்னான இளைய பெருமாளும் பரதாழ்வானும் காட்டி நின்ற போது எம்பெருமான் தொண்டு என்பதோ நம் இயல்புக்கு சத்ரு எம்பெருமான் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே நம் இயல்பு என்று நின்றானே சத்ருக்கனாழ்வான். அவனைப் போன்றது இந்த சீரார் செந்நெல்".

"ஆகா. ஆகா. ஆழ்ந்த பொருள் சொன்னாய் கண்ணபிரான். இன்னும் எளிமையாக விளக்கமாகச் சொல்".

"இறைவனுக்குத் தொண்டு செய்வது உயிர்களின் இயல்பு. பெருமாள் காட்டில் வாழ்ந்த காலம் எல்லாம் இளைய பெருமாள் தொண்டே வடிவாக இருந்து உயிர்களின் இயல்பினை விளக்கும் ஓர் அரிய எடுத்துக் காட்டாக இருந்தான்".

"ஆமாம்".

"ஆனால் அவனும் காட்டுக்கு என்னுடன் வராதே என்ற காகுத்தனின் சொல்லை மறுத்து அடம் பிடித்து அவனுடன் காட்டுக்கு ஏகி நிலையான தொண்டினைச் செய்தான். தொண்டிலே அவனுக்கு ஊக்கம்".

"ஆமாம்".

"பரதனோ சுவர்க்கமோ நரகமோ நாடோ காடோ எங்கே நீ என்னை இருத்துகிறாயோ அங்கேயே இருக்கிறேன் என்று பரமன் சொல்படி பாதுகா ராஜ்யம் என்னும் மகா பாரத்தைச் சுமந்தான். அவன் இளையபெருமாளை விட ஒரு படி ஏற்றம்".

"ஆமாம்".

"இவ்விரு வகையில் இறைவனுக்குத் தொண்டு செய்வது இதனை விட உயர்ந்ததான அடியவருக்குத் தொண்டு செய்யும் பேற்றினை அடையாமல் செய்துவிடும். அதனால் பகவத் கைங்கர்யம் என்பதே மகாவிரோதி! சத்ரு! இப்படி எண்ணிக் கொண்டு இராகவனுக்கு மட்டுமே தொண்டு செய்யாமல் அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே சிறப்பு என்று பரதனுக்குத் தொண்டு செய்தான் சத்ருக்னன். பகவத் கைங்கர்யம் என்னும் மகாசத்ருவை வென்று பாகவத கைங்கர்யம் என்னும் அடியவர் தொண்டில் ஆட்பட்டதால் அன்றோ அவன் சத்ருக்களை வென்றவன் சத்ருக்னன் என்று புகழ் பெற்றான்"

"ஆகா. உண்மை. உண்மை. சீரார் செந்நெல் எந்த வகையில் சத்ருக்னனைப் போன்றது என்றும் விளக்கமாகச் சொல்".

"ஆடி அசையும் செந்நெல் இலக்குவனைப் போல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எம்பெருமான் நினைத்துக் கொள்கிறான். அருகில் இருந்து தொண்டு செய்ய இயலாமல் செழுநீர்க் குளத்தில் இருந்து கவரி வீசுவதால் பரதனைப் போல் என்று ஆழ்வார் எண்ணிக் கொள்கிறார். ஆனால் இவ்விரண்டையும் இந்த சீர் பெறும் செந்நெல் செய்யவில்லை. அடியவர்களின் தலைவரான ஆழ்வார் திருக்குடந்தையில் நுழைவதைக் கண்டு அவருக்குத் தானே கவரி வீசி வரவேற்கிறது இந்த செந்நெல்! அதனைத் தான் சொன்னேன்!"

"ஆகா. ஆகா. என்ன அற்புதமான விளக்கம். ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே!"

15 comments:

Sankar said...

அருமை அண்ணா!

krs said...
This comment has been removed by the author.
குமரன் (Kumaran) said...

KRS said:

நீராய் அலைந்து கரைய "உருக்கு"கின்ற நெடுமாலே...

உருக்கினால், சூடு ஆற விசிற வேண்டும் தானே?
அதான் அடுத்த அடியில் சீரார் செந்நெல் "கவரி வீசும்", செழுநீர் திருக்குடந்தை!

யாருக்கு உருகியதோ, அவர்களுக்கே கவரி வீசல்!

ஆழ்வார் மனம் தானே உருகியது? அதனால் நெல் கவரி வீசுவது அடியவருக்கே, ஆண்டவனுக்கு அல்ல!

அதனால் தான், இயற்கையான கவரிக் காற்றுக்கு ஆசைப்பட்டு, இந்தக் குடந்தைப் பெருமாள், தான் ஆராவமுத-"ஆழ்வார்" ஆக விரும்பி, ஆழ்வாரை திருமழிசைப்-"பிரான்" என்று ஆக்கி விட்டான் போலும்!

பேரில் மட்டும் ஆழ்வார்-ன்னு வச்சிக்கிட்டா போதுமா? மனம் உருகாத பெருமாளுக்கு, செந்நெல்லே கவரி நீ வீசாதே!

குமரன் (Kumaran) said...

ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே!

குமரன் (Kumaran) said...

நன்றி சங்கர்.

எழுதச் சொல்லி வற்புறுத்திய ஊக்கத்திற்கும் நன்றி.

நாடி நாடி நரசிங்கா! said...

ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே!"

நாடி நாடி நரசிங்கா! said...

ஆராவமுதே! அடியேன் உடலம் * நின்பால் அன்பாயே * நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே
"சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

எவ்ளோ அழகான பாசுரம்!

நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
அப்படியே ஆழ்வார் கரைய அந்த நீரை நாம் பருகினால் ஆழ்வார் அனுபவம் நமக்கு முழுதும் கிடைக்குமா!

ஆராவமுதே! அடியேன் உடலம் * நின்பால் அன்பாயே * நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே

நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே

நீராய் அலைந்து கரைய * உருக்குகின்ற நெடுமாலே
:)

நாடி நாடி நரசிங்கா! said...

ஆகா. ஆகா. அடுத்த முறை திவ்ய தேசங்களில் தற்செயலாக ஆடும் மரம் செடி கொடிகளைக் கண்டால் இந்த நினைவு வந்து தானே நம் கைகள் வணங்காதா?! அதனைக் கண்டு இறைவனும் ஆஆ என்று ஆராய்ந்து அருளானா?! //

:)

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜேஷ். :)

Sankar said...

அமுதனை பற்றி படிக்கும் போதெல்லாம் அவனை நேரில் காண்பதாகவே எண்ணம் தோன்றுகிறது. உங்களுக்கு நன்றிகள். :)

Radha said...

குமரன்,
ஒரு த்யாகராஜர் கீர்த்தனை. "கிரிபை..." என்று தொடங்கும். முன்பே கேள்விப்பட்டு இருக்கலாம். த்யாகராஜர் ராமரைக் கண்ட பொழுது வார்த்தை வராமல் பிதற்றியதாக சொல்வார்.

"அடியேன் உடலம் நின்பால் அன்பாயே" என்று படிக்கும் பொழுது எல்லாம் ஆழ்வார் அகம் குழைந்ததால் வார்த்தைகளும் குழைந்து விட்டனவோ என்று தோன்றும்.

Radha said...

பதிவில் உள்ள விளக்கம் எல்லாம் அருமை.
பின்னூட்டத்தில் உள்ள விளக்கமும் அருமை.

Unknown said...

திருக்கச்சி நம்பிகள் போல....செந்நெல் கவரி வீசுவதை நினைத்துக் கொண்டிருந்தேன் குமரன்.
ஆண்டான்-அடிமை தத்துவம் ஒரு புறம் இருந்தாலும்....தொண்டு என்பதே அன்பின் வெளிப்பாடு என்று தோன்றுகிறது.
ரொம்ப யோசிக்கிறேன் போல...ஜெ.மோ கட்டுரைகளை வாசிப்பதை எல்லாம் கொஞ்சம் நிறுத்த வேண்டும் . ;-)
****
"ஆராவமுதே" என்று மற்ற ஆழ்வார்களும் கூவி உள்ளார்கள்.இந்த பாசுரத்தில் ஆழ்வார் அகம் குழைந்து உடலும் கரைந்து வார்த்தைகள் தாக்கம் நம்மையும் ஏதோ செய்கிறது.

குமரன் (Kumaran) said...

தொண்டு என்பதே அன்பின் வெளிப்பாடு! சரி தான் இராதா. அதுவும் ஏகாரத்துடன் 'தொண்டு என்பதே' என்று சொன்னீர்கள் பாருங்கள் அது தான் சிறப்பு. :-)

பதிவில் உள்ள விளக்கமும் பின்னூட்டத்தில் உள்ள விளக்கமும் சொன்னது யாரு?! கண்ணபிரான் அல்லவா? கேட்கவும் வேண்டுமா?! :-)

அகம் குழைந்ததால் வார்த்தை குழைந்தது என்பதும் சரி தான் இராதா.

Radha said...

//பதிவில் உள்ள விளக்கமும் பின்னூட்டத்தில் உள்ள விளக்கமும் சொன்னது யாரு?! கண்ணபிரான் அல்லவா? கேட்கவும் வேண்டுமா?! :-)
//
இப்படி ஆழ்வார் பாசுரம் போட்டால் கண்ணபிரான் மறைவில் இருந்து வெளி வருவார் என்றால் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை போடுங்க. :-)