Friday, July 23, 2010

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!


பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற


தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும் அன்பு கொண்டு


நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய


ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி

உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் அறிவொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து - அழியாத இன்பமாகியத் தேனினைச் சொரிந்து


புறம் புறம் திரிந்த செல்வமே - எல்லாப் புறங்களிலும் கூட வந்து என்னைக் காக்கும் செல்வமே!


சிவபெருமானே - சிவபிரானே!


யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து

சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன்

எங்கெழுந்தருளுவது இனியே - இனிமேல் நீ எங்கே எழுந்தருளிச் செல்வது?

பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!

17 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"சிக்கெனப்" பிடித்தேன் என்கிறாரே!
பார்க்க சிக்-குனு இருக்கா-ன்னு பசங்க எல்லாம் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்! :)

"சிக்" என்றால் என்ன குமரன்? தமிழ்ச் சொல்லா? இலக்கியங்களில் புழங்கப்படுவது தானா? ரொம்ப கேள்விப்படாத மாதிரி இருக்கே!

திருவாசகத்தில் லோக்கல் சொற்களைப் போடுகிறாரே மாணிக்கவாசகர்-ன்னு மக்கள் யாரும் கோச்சிக்கலையா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நானும் கேள்வி கேட்கக் கூடாது, பின்னூட்டம் போடக் கூடாது-ன்னு தான் பாக்குறேன்! :)
நீங்க இந்தியாவுக்குப் போயி பதிவு எழுதிட்டு இருக்கீங்க! உம்ம்ம்ம்...

சிவபெருமான் பற்றிய பதிவாப் போயிரிச்சே-ன்னு பின்னூட்டம் இட வேண்டியதாப் போயிரிச்சி!

cheena (சீனா) said...

அன்பின் குமர

கேயாரெஸ் போடாத பின்னூட்டமா - இல்லைஎனில் அது இடுகையே இல்லை.
அதேபோல் குமரன் மறுமொழி போடாத கேயாரெஸ்ஸின் இடுகைகள் இடுகைகளே அல்ல

நல்தொரு நட்பு - வளர்க !
நல்வாழத்துகள் கேயாரெஸ் குமரன்
நட்புடன் சீனா

குமரன் (Kumaran) said...

நாளைக்கு மிக முக்கியமான இடுகை இட வேண்டியிருக்கே இரவி. இப்படி சொன்னா எப்படி?

Mukil said...

வணக்கம்,

அனைவரும் நலம்தானே...

சிக்கெனப் பிடித்தேன் ன்னா, என்னன்னு நான் அறிந்ததைச் சொல்றேன்.

தவறு என்றால் குமரன் ஐயா வந்து திருத்துவாங்க... :-)

சிக்கு என்னும் சொல் புழக்கத்திலயே பல அர்த்தங்கள் ல்ல வரும்..

எண்ணெய் - நாள்பட்ட எண்ணைய் ல வர நாற்றத்தை சிக்குவாடை ன்னு சொல்லுவாங்க...

நூல், முடி இது போன்ற மெல்லிய பொருள்களில் பின்னிக் கொண்டு பிரிக்க முடியாத நிலைக்கு சிக்கு விழுந்துடுச்சுன்னு சொல்வாங்க...

எங்காவது விடுபட முடியாம அகப்பட்டுக் கொள்வதற்கு சிக்கிக் கொள்ளுதல் ன்னு சொல்வாங்க...

நான் முதல்ல சிக்கெனப் பிடித்தேன் என்றால் விடுபட முடியாம உங்களை இறுகப்பற்றிக் கொண்டேன் னு சொல்றாரு ன்னு தான் புரிஞ்சுட்டேன்.. :-)

சிக்கு என்றால் அகராதி ல இறுக்கமாக,உறுதியாக ன்னு பொருள் இருக்கு.. ஒரு வேளை, அந்த காலத்துல உறுதிங்கற பொருள்ல்ல கூட புழங்கிஇருந்திருக்கலாம்.

சமய இலக்கியங்கள்ல வட்டார சொல் வருவது ஒன்றும் புதிதோ, தவறோ இல்லீங்களே அண்ணா.

நான் நிறைய சொற்கள், சாதாரண உச்சரிப்பையே அப்படியே பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். பள்ளி செய்யுள் இலக்கியங்கள் ல்ல... :-)

வேண்டுமென்றால் நினைவுபடுத்தி சொல்கிறேன்..

நன்றி!

-முகிலரசிதமிழரசன்

குமரன் (Kumaran) said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள். அறிவினா கேட்ட இரவிசங்கருக்கும் அருமையான விளக்கம் சொன்ன முகிலரசிதமிழரசனுக்கும் பாராட்டிய சீனா ஐயாவிற்கும் நன்றிகள்.

வெற்றி said...

குமரன்,
வணக்கம். மாணிக்க வாசக சுவாமிகளின் திருவாசகத்திற்கு விளக்கம் தேடித்திரிந்தேன். உங்களின் தயவால் சில திருவாசக பாடல்களை விளங்கிக் கொண்டேன்... மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

வணக்கம் வெற்றி. உங்களைப் பார்த்து வெகு நாளாச்சு. இங்கே எழுதியும் ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கிறீர்கள்?

தமிழ் விக்கிபீடியாவில் பல திருவாசகப் பாடல்களுக்குப் பொருள் இருப்பதாக நினைக்கிறேன். தேடிப் பாருங்கள்.

நாகு (Nagu) said...

http://open.spotify.com/track/2M2IflwnxY0hctZepN1Hca

சந்திர மௌலி said...

நமசிவாய வாழ்க

Unknown said...

சிவாயநம🙏🙏🙏

Sambandam Swaminathan said...

Good Devotional song🔱🙏

Sambandam Swaminathan said...

Good Devotional song 🔱🙏

Unknown said...

Last line explain thaan puriyala sir

Unknown said...

அருமையான பின்னூட்டம்

anmaai said...

"உணர்ந்த பார் உவப்பில்லா ஆனந்தம்" என்ற ஒருவரின் மொழிகளை நம்பியே தேடிப் படித்தேன்... சிவபுராணம்
சித்தம் அதுபித்தமாகி சத்தமின்றி நகர்ந்தேன்.. தமிழின் வரிகளில் தான் எத்தனையோ ஜாலங்கள்
அருமையான உங்களின் விளக்கம் வாழ்த்துக்கள்.
கண்ணபிரான் ரவிஷங்கர் அவர்களே

P.MAHARAJAN said...

மிகச்சிறந்த பின்னூட்டம் முகிலரசி அம்மா....