***
பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்.
இந்த மென்மையாகப் பேசி மனத்திற்கு இனிமை சேர்க்கும் இந்தப் பெண்ணின் வெண்ணிறப் பற்களில் ஊறிய எச்சில் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது.
பாலொடு தேன் கலந்து அற்றே - பாலும் தேனும் கலந்தது போல் உள்ளதே
பணிமொழி - இனிமையும் மென்மையும் கூடிய சொற்களை உடைய பெண்
வால் - வெண்மையான
எயிறு - பற்களில்
ஊறிய நீர்.
இயல்பாக எச்சில் விலக்கத்தக்கது; வெறுக்கத்தக்கது. எச்சில்பண்டத்தை யாரும் உண்ண விரும்ப மாட்டார்கள். ஆனால் காதலர்கள் நடுவில் அதே எச்சிலே அமுதமாக ஆகிவிடுவதைக் காண்கிறோம். சொல்லும் மொழியும் தோன்றும் காலத்திற்கு முன்பிருந்தே இதே நிலை தான் போலும். வள்ளுவர் காலத்திலும் அப்படியே இருந்திருக்கிறது.

காதலியின் வாயில் ஊறிய நீர் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது அவள் வெண்மையான பற்களில் ஊறி ஊறி மிக்கச் சுவை பெற்றது போல் இருக்கிறது காதலனுக்கு.
பால் மட்டும் தனித்து உண்டால் அதில் உள்ள இனிமை குறைவாக இருப்பதால் நிறைய அருந்தத் தோன்றாது. தேன் மட்டும் தனியாக உண்டால் அதன் இனிமை மிகுதியாக இருப்பதால் அதிகம் அருந்த முடியாமல் திகட்டும். ஆனால் பாலும் தேனும் கலந்த போது இரு இனிமைகளும் ஒன்றுடன் ஒன்று கூடி அருந்தக் கூடிய இனிமை பெற்று அருந்த அருந்தத் திகட்டாதத் தித்திப்பைக் கொண்டிருக்கும்.
பாலை மட்டும் இவள் வால் எயிறு ஊறிய நீருக்கு ஒப்பாகக் கூறினாலோ தேனை மட்டும் கூறினாலோ இவள் வாய் அமுதம் உண்ணுவதில் காதலனுக்குச் சலிப்பு ஏற்படலாம் என்ற குறிப்பு கிடைக்கும். இங்கே பாலும் தேனும் கலந்தது போல் இருக்கிறது இவள் வால் எயிறு ஊறிய நீர் என்று சொன்னதால் இவள் வாய் அமுதம் உண்பதில் இவனுக்கு சலிப்பே ஏற்படுவதில்லை; தொடர்ந்து அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தருகின்றது என்ற குறிப்பு கிடைக்கிறது.
***
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள காதல் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள காதல்.
உடம்பொடு உயிர் இடை என்ன - உடம்புக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் காதல் எப்படிப்பட்டதோ
அன்ன - அப்படிப்பட்டது
மடந்தையொடு எம்மிடை - கள்ளம் கபடமில்லாத இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் இடையில் உள்ள
நட்பு - காதல். நள்ளுதல் என்றால் அன்பு கொள்ளுதல். அந்த வகையில் நட்பு என்ற சொல் முதலில் காதலைக் குறித்துப் பின்னர் அதன் நீட்சியாக நண்பர்கள் இடையே ஆன நட்பினையும் குறித்தது. முக நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அக நக நட்பதே நட்பு - என்ற குறளில் நட்பு என்பதற்கு காதல் என்ற பொருள் கொண்டால் அந்தக் குறளின் சுவை கூடுவதை உணரலாம்.
இயற்கைப் புணர்ச்சியின் பின்னர் 'இவன் பிரிந்துவிடுவானோ?', 'சென்றால் திரும்பி வருவானோ?' என்று கவலை கொள்கிறாள் காதலி என்பதைக் குறிப்பால் உணர்ந்த காதலன் 'பிரியேன். அப்படிப் பிரிந்து சென்றால் உயிர் தரியேன்' என்று சொல்கிறான் இங்கே.
உயிருக்கும் உடலுக்கும் இடையில் உள்ள நட்பு தொன்று தொட்டு வருவது. தொடக்கம் முதல் பிரியாமல் வருவது. இன்ப துன்பங்களை ஒன்றாக நுகரக்கூடியது. ஒன்று இருப்பதற்கு மற்றொன்று இன்றியமையாததாக இருப்பது. அப்படியே நமது காதலும் பிரியாதது; இன்ப துன்பங்களை ஒன்றாக நுகரக்கூடியது; ஒருவரின்றி மற்றவர் வாழ இயலாதது என்று கூறி தலைமகளின் மனக்குழப்பத்தை நீக்குகிறான் தலைமகன்.
***
கருமணியில் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
என் கண்ணின் கருமணியில் இருக்கும் உருவமே! நீ வெளியே வருவாய். நீ அங்கேயே இருந்தால் நான் விரும்பும் அழகுள்ள நெற்றியை உடைய என் காதலிக்கு இடம் இருக்காது.
கருமணியில் பாவாய் - கண்ணின் கருமணியில் தெரியும் உருவமே!
நீ போதாய் - நீ வெளியே வா!
யாம் வீழும் - நான் விரும்பும்
திருநுதற்கு - அழகிய நுதலை உடைய பெண்ணுக்கு
இல்லை இடம்.
என் கண்ணின் கருமணியைப் போன்றவள் நீ; உன்னைக் காணாமல் என்னால் இருக்க இயலாது என்று தலைவன் தலைவிக்கு உணர்த்துவதைப் போல் கண்ணில் இருக்கும் பாவையிடம் சொல்கிறான்.
***

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து.
மிகச் சிறப்பான அணிகலன்களை அணிந்த என் காதலி உயிருக்கு வாழ்தல் என்பது எப்படியோ எனக்கு அப்படிப்பட்டவள்; என்னை விட்டு அவள் நீங்கும் போது உயிருக்குச் சாதல் எப்படியோ எனக்கும் அப்படிப்பட்டவள்.
ஆயிழை - ஆய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவள்; ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளை உடையவள்
வாழ்தல் உயிர்க்கு அன்னள் - (கூடுமிடத்து) என் உயிர்க்கு வாழ்தலைப் போன்றவள்
நீங்கும் இடத்துச் சாதல் அதற்கு அன்னள் - பிரியும் போது என் உயிர்க்குச் சாதலைப் போன்றவள்.
அவளுடன் கூடுவதே உயிர் வாழ்தலைப் போன்றும் பிரிவதே சாதலைப் போன்றும் இருக்கிறது என்பதைச் சொல்லி, தான் என்றும் பிரியாமல் கூடியிருப்பேன் என உறுதி கூறுவதைப் போல் சொல்கிறான் அவன்.
வாழ்தலை விட இனியது இல்லை; அது போல் அவளுடன் கூடி இருப்பதை விட இனியது இல்லை. சாதலை விட இன்னாதது இல்லை; அது போல் அவளைப் பிரிவதை விட இன்னாதது இல்லை.
நீங்கும் இடத்து என்பதை மட்டும் சொல்லி கூடும் இடத்து என்பதை வருவித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இந்தக் குறள். இதனைத் தானே ஏகதேச உருவக அணி என்பார்கள்?!
***
உள்ளுவன் மன் யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
மறந்தால் அல்லவோ நான் நினைப்பது? ஒளி பொருந்திப் போர் செய்யும் கண்ணை உடையவளின் அழகையும் குணங்களையும் மறந்து அறியேன்.
உள்ளுவன் மன் யான் மறப்பின் - நினைப்பேன் நான் மறந்தால்
மறப்பு அறியேன் - மறப்பது என்பதை அறியேன்
ஒள்ளமர்க்கண்ணாள் - ஒளி பொருந்திய கண்ணினை உடையவளின்
குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, அன்பு, கற்பு, அழகு போன்ற குணங்கள்.
தலைவியும் தலைவனும் இரவிலும் பகலிலும் இயற்கைப் புணர்ச்சியில் திளைக்க அதனை ஒருவாறாக அறிந்த ஊரில் அலர் எழுந்தது. அதனால் தலைவனும் தலைவியும் சில நாட்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. ஒருவாறாக அலர் கொஞ்சம் தணிந்த பின் மீண்டும் வந்த தலைவனிடம் தோழி 'பிரிந்திருந்த போது தலைவியை நீர் நினைத்தீரா?' என்று வினவ அதற்குத் தலைவன் சொன்ன மறுமொழி இது.
மறந்தால் தானே நினைப்பது என்று தற்காலப் பாடலிலும் இந்தக் குறள் பயின்று வந்துள்ளது.
***
தலைவியின் வாய்மொழியான அடுத்த ஐந்து குறட்பாக்களையும் அடுத்த இடுகையில் பார்ப்போம்.