Wednesday, February 20, 2008

தமிழ் இணையப் பல்கலைகழகம் - அறிமுகம்

ஒரு வருட காலமாக பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்த போது மதுரைத் திட்டத்தில் இருக்கும் நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஆனால் அவை மூல நூல்களாக மட்டுமே இருந்தன. உரைகள் இல்லை. உரைகள் இன்றிச் சங்க நூற்களைக் கற்பது கடினமாக இருந்தது. ஜூனில் மதுரை சென்ற போது இலக்கியப் பண்ணையிலிருந்து பல நூற்களை வாங்கி வந்தேன். அவையும் சுருக்கமாகச் சங்க நூற்களைப் பற்றிப் பேசினவே ஒழிய நான் விரும்பும் அளவிற்கு விரிவாக இல்லை. தற்செயலாக தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தைக் கண்டேன். விரும்பியது விரும்பிய அளவிற்குக் கிடைக்கிறது. நாலைந்து மாதங்களாக எழுதும் பெரும்பாலான இடுகைகளுக்குத் தேவையான செய்திகளை இந்த நூலகத்தில் இருந்து தான் பெறுகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்திற்கு ஒரு அருமையான அறிமுகக் கட்டுரையைக் கண்டேன். அது எல்லோருக்கும் பயன் தரலாம் என்று எண்ணியதால் இதனை இங்கே எடுத்து இடுகிறேன்.

நன்றி: திண்ணை & முனைவர். திரு. க. துரையரசன்.

***

Friday April 7, 2006

தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் - வசதிகளும் வாய்ப்புகளும்

முனைவர் க.துரையரசன்





முன்னுரை


உலகு தழுவி வாழும் தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரையிலான படிப்புகளை வழங்கும் செயல் திட்டத்துடன் இயங்கி வருகிறது. இப்படிப்புகளுக்கான பாடங்கள் கணிப்பொறியின் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி எழுத்து வடிவம், ஒலிவடிவம், ஒளி வடிவம் முதலியவற்றின் வாயிலாக படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர் மட்டுமின்றி விரும்புகின்ற அனைவரும் பயன்பெறுகின்ற வகையில் மிகச் சிறந்த மின்நூலகம் ஒன்று இப்பல்கலைக்கழக இணையத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகளைப் பயனாளர் தேவைக்கேற்ப பெறுகின்ற வகையில் பல்வேறு தேடுதல் வசதிகளுடன் இம்மின்நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் தேடுதல் வசதிகளுடன் இந்நூலகம் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பாகும். இந்நூலகத்தின் வசதிகளும் வாய்ப்புகளும் குறித்துத் தொடர்ந்து நோக்கலாம்.



மின் நூலகம்


தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், கலைச்சொற்களம், பிற இணையத்தளங்களுக்குரிய இணைப்புகள் ஆகிய கூறுகளை உள்ளடக்கி உள்ளது.


நூல்கள்


சங்க காலம் முதல் இன்றுவரையிலான இலக்கண, இலக்கிய நூல்கள் அனைத்தும் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுகாறும் 93817 பக்கங்களைக் கொண்ட 208 நூல்கள் இணையத்தில் இடப்பெற்றுள்ளன. மேலும் 51852 பக்கங்களைக் கொண்ட 110 நூல்கள் இணையத்தில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நூலகத்தில் இலக்கணம் என்ற தலைப்பின் கீழ், தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், வீரசோழியம், நம்பியகப்பொருள் விளக்கம், நன்னூல் ஆகிய நூல்கள் உரைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.


சங்க இலக்கியங்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் முழுமையாக உரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.


காப்பியங்கள் என்ற தலைப்பின் கீழ், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், இரட்சணியமனோகரம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் ஆகியவையும் இதன்கண் உள்ளன.


சமய இலக்கியங்கள் என்ற தலைப்பில், சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகள், வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறித்துவ இலக்கியங்களான தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், திருஅவதாரம், இயேசு காவியம், இரட்சணியமனோகரம், இசுலாமிய இலக்கியங்களான சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி ஆகியவை இணையத்தளப் படுத்தப்பட்டுள்ளன.


சிற்றிலக்கியங்கள் என்னும் தலைப்பின்கீழ், குமரேச சதகம், அபிராமி அந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், தண்டலையார் சதகம், திருக்கருவைப்பதிற்றுப்பந்தாதி, கச்சிக்கலம்பகம், குற்றாலக்குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, கொங்கு மண்டலச் சதகம், பாண்டிமண்டலச் சதகம், திருசெந்தூர் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், புலவராற்றுப்படை, இரணியவதைப்பரணி, அரிச்சந்திரபுராணம், தணிகைப்புராணம், அஷ்ட பிரபந்தங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


திரட்டு நூல்கள் என்னும் தலைப்பின் கீழ், சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு, இராமலிங்க சுவாமிகள் நூல்கள், தாயுமானவர் சுவாமிகள் நூல்கள் ஆகியவை அமைந்துள்ளன.


நெறி நூல்கள் என்ற தலைப்பில், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, உலகநீதி, நீதிநெறிவிளக்கம், அறநெறிச்சாரம் ஆகிய நூல்கள் தரப்பட்டுள்ளன.


இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்கள் என்ற தலைப்பில், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், கண்ணதாசனின் இயேசுகாவியம், கவிமணியின் நீதிநூல் ஆகிய கவிதைகளும், இருபதாம் நூற்றாண்டு உரைநடை இலக்கியங்கள் என்ற தலைப்பின் கீழ், பாரதியார் கதைகள் மற்றும் கட்டுரைகள். சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், தம்மபதம், பெண்மதிமாலை, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்மொழி வரலாறு, பாவாணர் படைப்புகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.


நாட்டுப்புற இலக்கியங்கள் வரிசையில் தமிழர் நாட்டுப்பாடல்கள், மலையருவி, காத்தவராயன் கதைப்பாடல் ஆகியவையும் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பலவும் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன.


உரைகள்


பழந்தமிழ் இலக்கண நூல்களும், சங்க இலக்கிய நூல்களும் அனைவரும் எளிதில் படிப்பதற்குரிய வகையில் பதம் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அதுபோல் ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் துணை செய்யும் பல்வேறு உரைகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.


எடுத்துக்காட்டாக, தொல்காப்பியத்தைப் பொறுத்த வரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் ஆகியோர் உரைகள் தளத்தில் இடப்பட்டுள்ளன. மேலும், தெய்வச்சிலையார், கல்லாடர், பாவலர் பாலசுந்தரம், ஆ.சிவலிங்கனார் ஆகியோர் தம் உரைகளும் சேர்க்கப்பட உள்ளன.


அதுபோல் திருக்குறளுக்குப் பரிமேலழகர், மணக்குடவர், மு.வரதராசன், தேவநேயப்பாவாணர் ஆகியோரின் உரைகளும் ஜி.யு.போப், சுத்தானந்த பாரதி ஆகியோரின் மொழிபெயர்ப்புகளும் தளத்தில் இடப்பட்டுள்ளன.


தொல்காப்பியம், திருக்குறள் போன்றே பிற இலக்கண, இலக்கிய நூல்களுக்குப் பல்வேறு உரைகளையும், கடின நடை கொண்ட உரைகளைப் பதம்பிரித்தும் வழங்கும் எண்ணம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு.


தேடுபொறி வசதிகள்


தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தின் சிறப்புக் கூறுகளுள் தலையாயது தேடுபொறி வசதிகள் அமைந்துள்ளமையாகும். இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு தேவையான நூல்களிலிருந்து வேண்டிய செய்திகளை எளிதில் பெறலாம். எடுத்துக்காட்டாக, திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம்.


திருக்குறளுக்கு மேற்சுட்டியவாறு அறுவரின் உரைகள் உள்ளன. இவற்றில் வேண்டிய உரைகளைத் தேர்வு செய்தும் தகவல்களைப் பெறலாம்; அல்லது அறுவரின் உரைகளையும் ஒருசேரப் பார்க்க வேண்டுமானாலும் தேர்வு செய்து பார்க்கலாம். அதாவது ஒருகுறளைப் படிப்பதற்கு முன் தேவையான உரைகளைத் தேர்வு செய்து கொண்டு படிக்கலாம். இது ஒரு முறை.


சில வேளைகளில் திருக்குறளைப் படித்துக் கொண்டே செல்கின்ற போது உரைகளின் மூலம் தெஒளிவு பெற வேண்டிய அவசியம் ஏற்படலாம் அவ்வேளையில் வேண்டிய உரைகளைப் பெறுகின்ற வசதியும் இத்தளத்தில் செய்து தரப்பட்டுள்ளது.


மேலும், எண் தேடல், சொல் தேடல், அதிகாரம் தேடல் ஆகிய தேடுபொறி வசதிகளும் திருக்குறளுக்குச் செய்து தரப்பட்டுள்ளன. சொல் தேடல் என்பதில் திருக்குறளில் பயின்றுவரும் ஏதேனும் ஒரு சொல்லைக் கொடுத்துக்கூட தேடிப்பெறலாம். இதன் மூலம் ஒரு சொல் திருக்குறளில் எத்தனை இடத்தில் பயின்று வந்துள்ளது; ஒரு சொல் குறளின் தொடக்கத்தில் - இடையில் - இறுதியில் எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பன போன்ற புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது திருக்குறளில் தெரிந்த ஒரு சொல்லை மட்டுமே கொண்டு ஒருவர், அது குறித்து தேவையான தகவல்களைப் பெறக்கூடிய வகையில் திருக்குறளில் தேடுதல் வசதி அமைந்துள்ளது சிறப்பாகும். இதுபோலவே எண் தேடல், அதிகாரம் தேடல் என்ற வகையிலும் கூட குறள்களையும் அவற்றிற்கான உரைகளையும் பெறலாம்.


மேலும் ஓர் எடுத்துக்காட்டு


எட்டுத்தொகையில் ஒன்றான நற்றிணை என்ற நூல், எண், பாடியோர், பாடப்பட்டோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் முதலிய தேடுதல் வசதிகளுடன் இணையத் தளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தேடுதல் வசதிகளின் துணை கொண்டு நற்றிணையில் இடம் பெற்றுள்ள மலர்கள் எத்தனை - அவை எந்த பாடல்களில் எல்லாம் பயின்று வந்துள்ளன - எத்தனைமுறை பயின்று வந்துள்ளன என்றெல்லாம் கணக்கிட்டுவிட முடியும். இது போலவே மீன்கள், விலங்குள், பறவைகள் ஆகிய அனைத்தையும் கண்டறிந்து புள்ளி விவரங்களாக்கி விட முடியும். இவை மட்டுமின்றி நற்றிணையில் இடம் பெற்றுள்ள சில சிறப்புச் செய்திகளைக் கொண்டு - உதாரணமாக, புலியின் முன்னங்கால்கள் சிறியவை என்ற தகவலை மட்டுமே கொண்டுகூட அப்பாடலைக் கண்டறிந்து கொள்ளும் வகையில் தேடுதல் வசதி செய்து தரப்பட்டுள்ளமை வியக்கத்தக்க ஒன்றாகும்.


திருக்குறள், நற்றிணை போன்றே இத் தளத்தில் உள்ள வெவ்வேறு நூல்களும் ஆய்வாளர்களின் நலன் கருதி பல்வேறு தேடுதல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.



ரோமன் வடிவம்


தொல்காப்பிய நூற்பாக்கள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முழுவதும் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல நூல்கள் ரோமன் வடிவத்தில் வழங்கப்பட உள்ளன.


அகராதிகள்


மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அகராதிகள் பெரிதும் பயனளிக்கக் கூடியவை என்பதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது. இக் கருத்தை ஒட்டியே தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் தற்பொழுது நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. அவை;


(i) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் - தமிழ் - ஆங்கிலப் பேரகராதி

(ii) பழனியப்பா சகோதர்களின் ஆங்கிலம் - தமிழ் - பால்ஸ் அகராதி

(iii) சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி

(iv) பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை அவர்களின் தமிழ் - தமிழ் அகராதி.


இவ்வகராதிகள் சொல் தேடல், பக்கம் தேடல், அகரவரிசைப்படி சொற்களைப் பார்த்தல் ஆகிய தேடுதல் வசதிகளுடன் கூடியவை.


தமிழ்ச் சொற்களைத் தட்டச்சுச் செய்வது பலருக்கும் கடினமாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இவ்வகராதிகளைப் பார்ப்பவர்கள் தமிழில் எளிதாகத் தட்டச்சுச் செய்யும் வகையில் தமிழ் விசைப்பலகை (Tamil Key Board) கணினித் திரையில் தெரியும். அவ்விசைப் பலகையில் உள்ள எழுத்துகளைச் சுட்டியின் (Mouse) துணைகொண்டு தேர்வு செய்து வேண்டிய சொற்களுக்கு உரிய பொருளைக் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும், இத் தளத்தில் தமிழ்-தமிழ், தமிழ்-பிறமொழி, பிறமொழி - தமிழ் என்ற பல வகையான அகராதிகள் இடம் பெற உள்ளன.


பண்பாட்டு நிகழ்ச்சிகள்


உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களது ஆர்வத்தை மதிக்கின்ற வகையில் தமிழர்களுக்கே உரிய பண்பாட்டு நிகழ்வுகளைக் காட்டும் ஒலி - ஒளிக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், புலியாட்டம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை போன்ற இன்னும் பிற தமிழ்நாட்டுக் கலைகள் இடம் பெற உள்ளன.


கோயில்களுக்குப் பெயர் போனது தமிழகம். அவ்வகையில் தமிழகத்தில் உள்ள தேர்ந்தெடுத்த கோயில்களின் படக் காட்சிகளும் (Photo Clippings), ஒளிக் காட்சிகளும் (Video Clippings) தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் உள்ளன. இதுவரை 137 சைவ, வைணவக் கோயில்களின் படக்காட்சிகளும், ஒளிக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன்கண் மேலும் பல கோயில்கள் சேர்க்கப்பட உள்ளன. சைவ, வைணவக் கோயில்கள் மட்டு மன்றி கிறித்தவ ஆலயங்கள் மற்றும் இசுலாமியரின் பள்ளிவாசல்களும் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.



கலைச் சொற்களம்


சமுதாயவியல், மருத்துவவியல், கால்நடை மருத்துவவியல், உயிரியல் தொழில்நுட்பவியல், கலை மற்றும் மானிடவியல், தகவல் தொழில் நுட்பவியல், பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல், வேளாண்மைப் பொறியியல், அறிவியல், சட்டவியல், மனைஇயல் ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச் சொற்கள் இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் 61,786 சொற்கள் விரைவில் இடம் பெற உள்ளன. இக் கலைச் சொற்களம், கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர்க்கும் அதனைத் தரப்படுத்த விழைவோர்க்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய ஒன்றாகும்.


பிற இணையத் தளங்களுக்கான இணைப்புகள்


தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத்தளத்திலிருந்து பிற இணையத் தளங்களுக்குச் செல்வதற்குரிய இணைப்பு வசதிகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. இதன் வழி தற்பொழுது Project Madurai, Upenn, Tamilnet99 ஆகியவற்றிற்கான இணைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொள்ள விரும்புவோர் கட்டணம் ஏதுமின்றி இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமது இணையத்தளத்தில் பிற தளங்களுக்கான இணைப்புகளை வழங்கவும், பிற இணையத்தளங்களில் தமது தளத்திற்கு இணைப்பு வழங்கவும் தயாராக உள்ளது.



முடிவுரை


தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் மின் நூலகம், தமிழ் நூல்களைக் கொண்ட பிற இணையத்தளங்கள் அளிக்கின்ற வசதிகளை விட, கூடுதலான வசதிகளைக் கொண்டதாக உள்ளதைக் குறிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் நூல்களைக் கொண்ட இணையத் தளங்கள் பெரிதும் தமிழ் நூல்களின் பட்டியலைத் தரக் கூடியனவாக உள்ளன அல்லது தமிழில் உள்ள சில நூல்களைப் பக்கம் பக்கமாகப் பார்த்துப் படிக்கின்ற வகையில் அமைந்துள்ளன. ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம், தமிழ் இலக்கண, இலக்கிய நூல் களின் பாடுபொருள்களைப் பயனாளர் தேவை கருதி ஒரு சில வினாடிகளில், அவர்கள் தேடிப் பெறுகின்ற வகையில் தேடுதல் வசதிகளுடன் அமைந்துள்ளது. தமிழக அரசின் நிதியுதவியுடன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் ஒரு பகுதியாக செயல்படும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், அதன் மின் நூலகத்தை மிகுந்த பொருள்செலவில் வடிவமைத்துள்ளது. இருப்பினும்கூட இப்பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தைப் பயனாளர்கள் எவரும் - எங்கிருந்தும் - எப்பொழுதும் - எவ்விதக் கட்டணமுமின்றி பயன்படுத்திக்கொள்ள இணையக் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளது.


இணையக் கதவின் திறவுகோல் : www.tamilvu.org


தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகத்தைப்


பார்ப்பீர்... பயன்பெறுவீர்... கருத்துரை வழங்குவீர்...


முனைவர் க.துரையரசன்

உதவி இயக்குநர்

த.இ.ப., சென்னை - 113.

darasan2005@yahoo.com


----

22 comments:

இரா. வசந்த குமார். said...

ஐயா... மிக்க நன்றிகள். தங்கள் கொடுத்த அறிமுகத்திற்கு.

Thamiz Priyan said...

அற்புதமான ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி!
தமிழ் ஆர்வலர்கள் கண்டிப்பாக காண வேண்டிய தளம்.

வவ்வால் said...

குமரன்,

தமிழ் இணையப்பல்கலைக்கழகம், மதுரை திட்டம் எல்லாம் எனக்கு அவ்வப்போது கை கொடுத்து வந்தவை(அதான் தெரியுமே என்கிறீர்களா) இல்லை என்றால் நான் எல்லாம் இலக்கியம் பேசுவேனா :-))

முன்னர் தமிழ் இணையப்பல்கலையில் சென்னை பல்கலையின் பேரகராதி இல்லை என நினைக்கிறேன், இப்போது தான் போட்டுள்ளார்கள் போலும், ஒரு முறை அந்த அகராதியில் இருக்குகிறது பாருங்கள் என்று சொன்னேன் உங்களை, அச்சில் இருப்பதை படிக்க சொல்வீர்களா என்று கூட கேட்டீர்கள், அப்போது தேடி தேடி நானும் வெறுத்துட்டேன், இப்போ அகராதி வந்துள்ளது ரொம்ப வசதியா போச்சு.என்னிடம் இருப்பது 1967 இல் வந்த அகராதியின் மறுபதிப்பு அதன் பின்னர் புதிதாக வெளியிடவில்லை அதையே மறுபதிப்பு போடுகிறார்கள் என நினைக்கிறேன்!இணையத்தில் புதிய சொற்களுடன் வந்திருக்கிறதா?

குமரன் (Kumaran) said...

வவ்வால். அகராதி இருப்பதே இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் தான் எனக்குத் தெரியும். போய் பார்க்க வேண்டும். இதுவரை இலக்கியக்களை மட்டுமே (அதுவும் பெரும்பாலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள்) பார்த்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வாங்க வசந்த குமார் ஐயா. அறிமுகம் பயனுள்ளதாக அமைந்தால் மிக்க மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

உண்மை தமிழ் பிரியன். நான்கைந்து மாதங்களாக நிறைய இலக்கியப் பதிவுகள் இட முடிவதற்குக் காரணம் இந்த நூலகம் தான்.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக பயனுள்ள அறிமுகம். நானே உங்களுக்கு தனிமடலிட்டு எப்படி இதையெல்லாம் படிக்கிறீர்கள் என்று கேட்கவேண்டும் என்றிருந்தேன்.

வ்ருகிறேன் :-)

Subbiah Veerappan said...

நல்ல தகவல்!
நன்றி குமரன் அவர்களே!

குமரன் (Kumaran) said...

அடடா. இப்ப என்னோட இலக்கிய அறிவைப் பத்தின இரகசியம் உங்களுக்கும் தெரிய வச்சுட்டேனா மௌலி? இன்னும் கொஞ்ச நாள் உங்களை மலைக்க வைச்சிருக்கலாம் போலிருக்கே. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி வாத்தியார் ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி குமரன்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தான் எனக்குத் துவக்க நாளில் இருந்தே கைகொடுத்து வந்தது!

ஆங்காங்கே பதிவுகளில் உசாத்துணை(Reference) என்று போட்டுக் கொடுத்திருப்பேன்! நீங்களும் உங்கள் பதிவுகளில் முன்னரே சொல்லி இருக்கீங்க!

சங்க நூல்களின் உரை தான் இதுல ஹீரோ!
புதிதாகப் பலவற்றைச் சேர்த்துள்ளார்கள்!

அதில் மிக முக்கியமானது
கலைச் சொல் அகராதி!
இந்தாங்க நேரடிச் சுட்டி! பதிவிலும் சேர்த்து விடுங்க!
http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm

மருத்துவம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், சட்டம், வேளாண்மை-ன்னு எக்கச்சக்கமாத் துறைகள் இருக்கு அங்கிட்டூ!


சுவடிக் காட்சியகம் நல்லா இருக்கு!
பண்பாட்டுக் காட்சியகத்தில் சில நல்ல ஒலி/ஒளி அசை படங்கள் இருக்கு! தமிழகத் திருத்தலங்கள் பற்றி!

Unknown said...

குமரன்,

அருமையாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்! நானும், என் மகளும் அடிக்கடி செல்கிறோம், தமிழ் கற்க, மேலும் வளப்படுத்திக்கொள்ள!

குமரன் (Kumaran) said...

தொடக்கத்துல இருந்து உங்களுக்குத் தெரியுமா? அருமை இரவிசங்கர். உங்க பதிவுகள்லயும் உசாத்துணையாச் சொன்னதைப் பாத்திருக்கேன்.

முதன்முதலில் சங்க நூற்களின் உரைகளைப் பார்த்த போது அடைந்த உணர்வு இருக்கே. சொல்ல இயலாது. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.

கலைச் சொல் அகராதியையும் இதுவரைக்கும் பார்த்ததில்லை. சுவடிக் காட்சியகம் கொஞ்சமா பார்த்திருக்கேன். பண்பாட்டுக் காட்சியகம் நல்லாவே பார்த்திருக்கேன்.

குமரன் (Kumaran) said...

நீங்களும் உங்கள் மகளும் இந்தப் பல்கலைகழகத்தைப் பயன்படுத்துவதை அறிந்து மகிழ்ச்சி தஞ்சாவூரான்.

jeevagv said...

இந்தத் தளம் யுனிகோடில் இல்லாததால், அகராதியினை பயன்படுத்துவதில் சிரமங்கள் எனக்கிருந்தன.
அகராதியாக நான் பயன்படுத்தும் தளம்:
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

Machi said...

ஓ... தமிழ் இணைய பல்கலைகழகத்துல இவ்வளவு சங்கதி இருக்கா ... நல்ல அறிமுகம் குமரன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜீவா. பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கும் நூற்கள் யூனிகோடில் இல்லாததால் எனக்கும் சில நேரங்களில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. எதையாவது முக்கியமான ஒன்றை உசாவ நினைக்கும் போது எழுத்துரு பிரச்சனை வந்து கடுப்பேற்றும்.

நானும் நீங்கள் சொன்ன வலைப்பக்க அகராதியைத் தான் பயன்படுத்துகிறேன்.

குமரன் (Kumaran) said...

வாங்க குறும்பன். ரொம்ப நாளா காணலையே.

ஆமாம். இவ்வளவும் இதற்கு மேலும் இருக்கின்றன. நீங்களும் தொடர் பயனாளர் ஆகிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன்.

Unknown said...

இதில் புலம் பெயர்ந்த தமிழர் தம் மக்கள் பயன் பெற தமிழ்ப் பள்ளி, ‍ http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm இல் இடது பக்கத்தில் "பாடத் திட்டங்கள்", மூன்று / நான்கு (அறிமுகம், இடைநிலை என்று) நிலைகள் அதைத் தவிர செர்டிஃபிகேஷன் வேறு. பாடங்கள் குழந்தைகள் பயனுறும் வகையில் ஒலி/ஒளி அசைப் படங்களாக பாடங்கள்.

cheena (சீனா) said...

குமரன்,

நல்ல சேவை - பயனுள்ள தகவல் - நன்று - நன்றி -

இத்தளத்தினை நாங்கள் ஏற்கனவே சென்று சில விவாதங்களுக்குரிய பொருளுக்கான விளக்கங்களைத் தேடி இருக்கிறோம். பொறுமை நேரம் இல்லாத காரணத்தால் விட்டு விட்டோம். இனித் தேவை இருப்பதால் தேடுவோம்.

தமிழக அரசுக்கு நன்றி.

நேரமிருப்பின் வருகை புரிக.

http://ennassiraku.blogspot.com

குமரன் (Kumaran) said...

நீங்க சொன்ன பாட திட்டங்களை நானும் பார்த்திருக்கிறேன் கெக்கேபிக்குணி. தஞ்சாவூரானும் சொல்லியிருக்கிறார். என் மகளுக்காகவும் இந்தப் பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சீனா ஐயா. தேடிப் படிப்பதற்கு நிறைய இருக்கின்றன. நேரம் தான் போதுவதில்லை.

எண்ணச்சிறகில் புதிதாக எதை எழுதும் போதும் வந்து படிக்கிறேன். பின்னூட்டம் இடுகிறேன்.