Wednesday, February 13, 2008

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா - Valentines Day

அனைவருக்கும் இனிய காதலர் திருநாள் நல்வாழ்த்துகள்.

இன்றைக்கு நாம் காதலர் தினம் என்று ஒரே ஒரு நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்குக் கூட 'வெளிநாட்டு இறக்குமதி; நம் பண்பாட்டிற்கு ஒவ்வாதது' என்றொரு மறுப்பும் சொல்லப்படுகிறது. இன்றைய நிலை இப்படி இருக்க பண்டைத் தமிழகத்தில் காதல் திருவிழா ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு நடந்தது என்று சொன்னால் அது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால் பழந்தமிழ் இலக்கிய மரபை அறிந்தவர்க்கு அதில் வியப்புற ஒன்றுமில்லை. காதலையும் வீரத்தையும் இரு கண்களாகக் கொண்டு அகம், புறம் என்று இலக்கிய வகைகளைக் கொண்டிருந்த தமிழகம் காதலை ஒரு மாத காலம் கொண்டாடியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மாசி மாத சித்திரை நட்சத்திர நாளிலிருந்து பங்குனி மாத சித்திரை நட்சத்திர நாள் வரை மொத்தம் இருபத்தி எட்டு நாட்கள் பழந்தமிழகத்தில் காதல் திருவிழா நடைபெற்றிருக்கிறது. இப்படி இருபத்தி எட்டு நாட்கள் விழா நடந்தது என்பதை மணிமேகலை 'நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர்' என்று சொல்கிறது.

இந்தத் திருவிழா எந்த விழா என்று கேட்கிறீர்களா? இதனைக் காமன் விழா என்று அழைத்திருக்கிறார்கள். காமனின் கரும்புவில்லைப் போற்றுவது போல் வில் விழா என்றும் அழைத்திருக்கிறார்கள். இன்னொரு பெயரைச் சொன்னால் எல்லோருக்கும் இந்தக் காதல் திருவிழா எந்த விழா என்று புரியும். அதற்கு இந்திர விழா என்றும் பெயர் இருந்திருக்கிறது.

இந்திர விழாவைப் பற்றி சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நன்கு சொல்லியிருக்கிறது. அந்த விழா எப்படிக் கொண்டாடப்பட்டது, யாரால் தொடங்கப்பட்டது, எங்கெல்லாம் கொண்டாடப்பட்டது, அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் எப்படி இருந்தன என்றெல்லாம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புகார் நகரத்தில் நடந்த அந்த இந்திர விழாவைப் பற்றிப் பேசும் சிலப்பதிகாரம் கூடல்மாநகரான மதுரையில் நடந்த வில் விழாவைப் பற்றியும் பேசுகிறது.

இந்த இடுகையை ஒரு முன்னோட்டமாக இடுகிறேன். இங்கே சொன்னவற்றை எல்லாம் இன்னும் நன்கு விரித்து இலக்கியப் பகுதிகளை எல்லாம் எடுத்து எழுதி ஒரு தொடராக இடலாமா என்றொரு எண்ணமும் இருக்கிறது. ஆனால் இதனை இப்போது செய்வதற்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. படிக்க ஆவலுடன் மக்கள் இருந்தால் எழுத நேரத்தை உண்டாக்கிக் கொள்வேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்தத் தொடர் தொடங்கப்படும். :-)

32 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Kaadhal, Love ellathukkum
me the firshteeeeeey!
:-)

Iniya Kaathalar Thina Vaazthukkal!
Vote pottache!

சிறில் அலெக்ஸ் said...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :)

அந்தக் கால காதலர்தினத்(மாதத்) தேவைக்கு இப்படி ஒரு காரணம் இருக்கலாம். கட்டுப்பாடுகள் காரணமாய் ஆண் பெண்கள் மற்ற காலத்தில் பழக வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். அதற்காக இப்படி ஏற்பாடுகள் தேவைப்பட்டிருக்கலாம்.

இந்தக் காலத்துல 'பழக' வாய்ப்புக்கள் அதிகம் இருக்குது. காதலர்தினம் புதிதாய் எதையோ பழக பயன்படுத்தப் படுவதாகத் தகவல் .. :)

ச்சும்மா ஒரு யூகம்தான்.. தெளிவு செய்யுங்கள்.

குமரன் (Kumaran) said...

இது வரைக்கும் 5 பேர் வாக்களித்திருக்கிறார்கள். எல்லோரும் முதல் கருத்தையே கொண்டிருப்பதால் நான் இரண்டாம் கருத்திற்கு வாக்களித்திருக்கிறேன். :-) ஆக என்னையும் சேர்த்து ஆறு பேர்.

குமரன் (Kumaran) said...

காதல், லவ் எல்லாத்துக்கும் நீங்க முதல்ல வருவீங்களா? காதலுக்கும் லவ்வுக்கும் என்ன வேறுபாடு இரவிசங்கர்?

வாழ்த்துகளுக்கும் வாக்குகளுக்கும் நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

பாருங்க. இப்படி கருத்து கேட்டாத் தான் நீங்க எல்லாம் வந்து படிக்கிறீங்களா இல்லையான்னு தெரியும் சிறில். :-)

நீங்கள் சொல்ற காரணம் நான் சொல்ற கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. மிக அண்மைக்காலமாகத் தான் ஆண்களையும் பெண்களையும் பழக விடாமல் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

வாலண்டைன்ஸ் டே தப்பா பயன்படுத்தப்படுதுன்னா அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது தான். ஆனால் மொத்தமாக அதனை எதிர்ப்பது, அதுவும் பண்பாட்டுக்காரணத்தைச் சொல்லி எதிர்ப்பது ஏற்புடையதாகத் தோன்றவில்லை.

அரை பிளேடு said...

ஆமாம்னு வோட்டு போட்டாச்சு.

:)

குமரன் (Kumaran) said...

வாக்களித்ததற்கு நன்றி அரைபிளேடு. எனக்கு வேலை வைக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்படித் தானே? :-)

உடுக்கை இழந்தவை கை நான்காம் பகுதி போட்டாச்சு. பாத்தீங்களா?

பினாத்தல் சுரேஷ் said...

எனக்கு இந்த காதலர் தினம் எல்லாம் சுத்த வேஸ்டாதான் தோணுது. உண்மையான காதல் தினம் தினம் இருக்குமே தவிர காதலர் தினம் அன்று மட்டும் வாராதே! (சேம் லாஜிக் பார் மனைவியர் தினம், மகளிர் தினம்)..

ஆனா கலாசாரம் பண்பாடுன்னு நம்ம பண்டை இலக்கியங்களை முன்வச்சுகிட்டே சொல்றதும் தப்பாதான் தோணுது. நீங்க சொல்றது மாதிரி பல டபூக்கள் சென்ற 2 3 நூற்றாண்டா ஒட்டின மாதிரிதான் தெரியுது.

காதலர் தினம் ஒரு பைத்தியக்காரத்தனம், ஆனால் பைத்தியக்காரனாய் இருப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு:-)

மெளலி (மதுரையம்பதி) said...

//உண்மையான காதல் தினம் தினம் இருக்குமே //

காதலர் தினம் என்பதில் நான் பினாத்தலாருடன் ஒத்துப்போகிறேன்.

இந்திர விழா என்பது தாங்க்ஸ் கிவ்விங் அப்படின்னுல்ல நினைச்சேன்.

எது எப்படியாகிலும், உங்களது "உடுக்கை இழந்தவன்.." படிப்பதன் விளைவாக சிலப்பதிகாரத்தையும் உங்களிடமிருந்து அறிய ஆவலாகயிருக்கிறது.

தொடர வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன். :-)

//. இப்படி கருத்து கேட்டாத் தான் நீங்க எல்லாம் வந்து படிக்கிறீங்களா இல்லையான்னு தெரியும்//

அடேடே உங்க கிட்ட இப்படி ஒரு பதிலா? :-)

//காதலர் தினம் ஒரு பைத்தியக்காரத்தனம், ஆனால் பைத்தியக்காரனாய் இருப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு//

பினாத்தலார் சோவை நினைவுபடுத்தும் வார்த்தைகள். :-)

santha said...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பினாத்தல் சுரேஷ் said...
எனக்கு இந்த காதலர் தினம் எல்லாம் சுத்த வேஸ்டாதான் தோணுது. உண்மையான காதல் தினம் தினம் இருக்குமே தவிர காதலர் தினம் அன்று மட்டும் வாராதே//

அண்ணாச்சி
தெனம் தெனம் தான் பொங்கல் சாப்புடறோம்! விதம் விதமான சட்னியோட!

ஆனா பொங்கல் அன்னிக்கு மட்டும் ஸ்பெசலா பொங்கறது இல்லையா? பொங்கலோ பொங்கல்-னு கூவறது இல்லியா? அன்னிக்கும் பொங்கல் அதே வெள்ள கலர் தானே! :-)

பினாத்தலாரை மடக்கணும்னா பொங்கல், புத்தாண்டு-ன்னு தான் ஆரம்பிக்கணும் யாரோ சொன்னாங்க! அதான் பொங்கல் எடுத்துக்காட்டு! :-)))))
காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

குமரன் (Kumaran) said...

இந்த உலகத்துல எதுவுமே வேஸ்டில்லைன்னு தத்துவமா பேசலாம்ன்னு பாக்குறேன் சுரேஷ். என்ன சொல்றீங்க? :-)

உண்மையான காதல் காதலர் தினத்தன்னைக்கு மட்டுமே வரணும்ன்னு சொல்லலையே? தினம் தினம் இருக்கிற காதலைக் கொண்டாடுற ஒரு நாள்னு வச்சுக்கலாமே? (சேம் லாஜிக் பார் மனைவியர் தினம், மகளிர் தினம், அம்மா தினம், அப்பா தினம்,...) :-)

கலாச்சாரம்/பண்பாடு - இது ஆற்றொழுக்கு மாதிரி ஓடிக்கிட்டே தான் இருக்கும்; இருக்கணும். மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது. ஓடாம நின்னா சாக்கடையா தானே ஆகும்? அந்தக் காலத்துல இருந்தது எல்லாமே நல்லதும் இல்லை; அவை எல்லாமே கெட்டதும் இல்லை. அடிப்படை நல்லது கெட்டது மட்டுமே மாறாம இருக்கும். ஆனால் இந்த பண்பாடுங்கறதெல்லாம் வாழ்க்கை முறைகள் - அவை மாறிக்கிட்டே தான் இருக்கும். ஹோலி கொண்டாடுனா தப்பில்லை; வாலன்டைன்ஸ் டே தப்புன்னு சொல்வாங்க. அது அவங்களுக்குச் சரியா தோணலாம். நமக்குத் தோணுமா?

உண்மை தான். யார் எப்படி இருக்கணும்ன்னு சொல்லி அவங்கவங்க உரிமையை நாம தடுக்கக் கூடாது தான். :-)

(ஏதோ பதில் சொல்லியிருக்கேன். சொன்னதிலெல்லாம் ஆழ்ந்த கருத்து எல்லாம் எதுவும் இல்லை - டிஸ்கி) :-)

குமரன் (Kumaran) said...

பொங்கல் விழா தாங்க்ஸ் கிவ்விங்க்; இந்திர விழாவும் தாங்க்ஸ் கிவ்விங்கா? தெரியலை மௌலி. நானும் உங்களோட சேர்ந்து தான் சிலப்பதிகாரம் படிக்கப் போறேன். என்ன சொல்லியிருக்குன்னு பாக்கலாம்.

'உடுக்கை இழந்தவன் கை' தொடர் பழந்தமிழ் இலக்கியத்தைச் சுவையாகச் சொல்லுதுன்னு உங்க வார்த்தையில இருந்து தெரியுது. மிக்க மகிழ்ச்சி. அதே சுவையை/அதை விட மேம்பட்டச் சுவையை இலக்கியத்தைப் பற்றி எழுதும் போதெல்லாம் கொடுத்திட எம்பெருமான் ஈசன் குடக்கூத்தன் கோவிந்தன் அருள் செய்ய வேண்டும்.

சிறில் இப்ப எல்லாம் ரொம்ப பதிவுகள் பக்கம் வர்றதில்லை. அதனால அப்படி சொன்னேன் மௌலி. நேரம் செலவழித்து எழுதுவதை நிறைய பேர் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. உடுக்கை இழந்தவன் கை தொடரின் ஒவ்வொரு பகுதியும் எழுத குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகிறது. இந்த 'காதலர் தினம்' தொடரும் அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். அதனால் தான் எத்தனை பேரு படிப்பீங்கன்னு கேட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சாந்தகுமார். வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

உண்மைத்தமிழன் said...

குமரன், நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

நமது மூதாதையர்கள் இக்காதலுக்காக எந்த விதத்தில் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.. அல்லது எளிதாக எட்டியிருக்கிறார்கள் என்பதை அறிய ஆசைதான்..

பெனாத்தலார் சொல்வது போல.. இது பைத்தியக்காரத்தனம் என்றாலும் முந்தைய பைத்தியங்கள் என்ன செய்தார்கள் என்பதையும் தெரிந்து கொண்டால், எந்தப் பைத்தியம் முழு பைத்தியம், எது அரை பைத்தியம் என்பதை தெரிந்து கொள்ளலாமே.. அதுக்குத்தான்..

G.Ragavan said...

காதலுக்குத் தமிழ்ப் பண்பாட்டில் மிகப்பெரிய இடமிருந்திருக்கிறது. அகப்பாடல்கள் அத்தனையையும் பாருங்கய்யா...அள்ளித் தெளிச்சுச் சொல்லீருக்காங்க. வண்டோடக் காதலைக் கூட மதிச்ச கதையெல்லாம் அதுல வரும். வண்டுகள் சோலைல மலர்ப்படுக்கைல இருக்கு. தலைவன் தேரில் வருகிறான். கார்காலம் வரும் பொழுது பொருள் சேர்த்து வருகிறான். தலைவியைக் காணும் ஆவல்.....தேர்மணி ஒலிக்கிறது. கபக்குன்னு அதப் பிடிச்சிக் கட்டீர்ரான். ஏன்னா..அந்த ஓசை வண்டுகளின் உறவைத் தொந்தரவு செஞ்சிருமாம். அப்படியிருந்த பண்பாடு. அட காதலுக்குக் கடவுளே தூது போன கதையெல்லாம் நம்ம கிட்ட இருக்கே.

வவ்வால் said...

//அட காதலுக்குக் கடவுளே தூது போன கதையெல்லாம் நம்ம கிட்ட இருக்கே.//

இராகவன்,

ஆமாம் ஆமாம் அதுவும் இரண்டாவதா கட்டிக்க கூட கடவுள் தூது போய் இருக்கார்னா இரண்டு பொண்டாட்டிக்கட்டிக்கிறது கூட சரிதான்னு ஆகுது இல்ல :-))

----------------------
குமரன்,
கைம்மாறு வேண்டாக்கடப்பாடாக தமிழ் தொண்டாற்றும் நீங்களா இப்படி... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் னு கேள்விக்கேட்டு பதிவு போடுவது :-))

நான் எழுதுறதை எல்லாம் படிக்கணும், ஆனா மற்றவங்க என்ன எழுதினாலும் நான் படிக்க மாட்டேன்னு சில பெருந்தலைகள் இங்கே இருக்காங்க, அப்படிலாம் இல்லாம சுற்றி சுற்றி வந்து பதிவிடும் நீங்கள் இதை எல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ளலாமா?

நீங்கப்பாட்டுக்கு பதிவ போடுங்க, சந்தேகம் கேட்க தான் நான் இருக்கேன்ல :-))

இந்திரவிழாவில் கானல் வரி பாடுவது, ஆடுவது , புனலாடுவது(wind surfing லாம் செய்துள்ளார்கள்) என களியாட்டங்கள் இடம்பெற்றப்போதிலும் அது காதலர் விழா என்று அப்போதுக்கருதினார்களா என்பதே கேள்வி(official status of the festival), அதை வசந்த விழா என்ற நோக்கில் வைத்திருந்ததாக நினைக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்பு குமரா!
வவ்வால் கூறும் வசந்த விழாக்கள் காதலர் விழாவா??; இந்த வசந்தவிழாக்கள் இலங்கையில் மலையகத்தில் தென்னிந்திய வம்சாவளித் தமிழர்கள் மத்தியில் நான் அறியும் காலத்திலேயே இருந்துள்ளது.
இதேவேளை ஈழத்தில் ஏனைய தமிழர் பகுதிகளிலும் ,எமது காலத்துக்கு முன் இருந்ததாக பேசுவது கேள்விப்பட்டுள்ளேன்.
இதையொட்டிய வசந்தன் பாடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபலம்.
சரி எழுதுங்கள். அறிவோம்.

✪சிந்தாநதி said...

வசந்த விழா என்பதே காதல் திருவிழா தான். வசந்த விழாவின் போது காதலியைச் சந்திக்க காதலன் காத்திருக்கும் காட்சி பற்றி, காதலி தோழியைத் தூதுவிடுதல் பற்றியெல்லாம் ஒரு இலக்கிய கட்டுரை படித்தது நினைவிருக்கிறது... அது எந்த நூலின் விரிவுரை என்பது நினைவில் இல்லை.

மேலும் வசந்த விழாவில் நடைபெறும் வீரப் போட்டிகளில் வென்று காதலியைக் கரம்படிக்கும் காதலர்கள் பற்றியும்...

தமிழர்களின் வீரம்,காதல் இரண்டுக்கும் வசந்த விழாவுக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

குமரன் (Kumaran) said...

குருவே இரவிசங்கர். நானும் சுரேஷ் சொன்னதைப் படிச்சவுடனே பொங்கலையும் புத்தாண்டையும் தான் இழுக்கலாம்ன்னு நினைச்சேன். அப்புறம் உங்க பின்னூட்டம் வந்தது. சரி. ஆளு ஏற்கனவே நொந்து போயிருக்காரு. இன்னும் நோகடிக்கவேணாம்ன்னு விட்டுட்டேன். :-)

இட்லிவடை தெரியும்; சட்னிவடை தெரியும். நீங்கள் சட்னி பொங்கல்ன்னு சொல்றீங்க. எதுவா இருந்தாலும் சரி தான் எல்லாமே கிருஷ்ணார்ப்பணம்ன்னு சொல்லிட்டுச் சாப்பிட வேண்டியது தான்.

நீங்க 'அனுபவித்த' கட்டிப்பிடி சுகத்துல அவருக்கு வாழ்த்துகள் சொல்றீங்க. அவருக்கும் அந்த மாதிரி அமைஞ்சா அவரும் சொல்லமாட்டாரா என்ன? பாவம் பாடம் நடத்தி பாடம் நடத்தி நொந்து போயிருக்காரு. அவரைப் 'பைத்தியம்' ஆக்காதீங்க. :-)

குமரன் (Kumaran) said...

வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி. 36 வாக்குகள் (35 வாக்குகள் + 1 வாக்கு என்னுடையது) வந்திருக்கின்றன. அந்த 35ல் 31 வாக்குகள் 'ஆமாம். இலக்கியம் படிக்க மிக்க ஆவலுடன் இருக்கிறேன்' என்பதற்கும் 4 வாக்குகள் 'இல்லை. இதெல்லாம் வெட்டிவேலை.' என்பதற்கும் கிடைத்திருக்கின்றன. மிகப் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்தவர்களின் கருத்தின் படி இந்தத் தொடரை 'உடுக்கை இழந்தவன் கை' தொடர் முடிந்த பின்னர் தொடங்குகிறேன்.

'ஆமாம். இலக்கியம் படிக்க ஆவல் உண்டு தான். ஆனால் உங்கள் நடை (அதாவது எனது - குமரனின் - நடை) கொஞ்சம் கடினமாக இருக்கிறது. எளிதாக இருந்தால் படிப்பேன்.' என்று யாரும் சொல்லாததும் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. :-)

குமரன் (Kumaran) said...

உண்மைத் தமிழன்,

பழந்தமிழர்கள் காதலுக்கு பெரும் முதன்மையைத் தந்திருக்கிறார்கள். காதலால் உருக்கப்பட்டிருக்கிறார்கள். அவற்றைப் பாடியும் வைத்திருக்கிறார்கள். அகத்திணைகளில் எழுதப்பட்டப் பாடல்களில் ஒரு அருமையான அழகும் இருக்கிறது. புறத்திணைகளில் பாடப்பட்ட பாடல்களில் பாடப்பட்டவர்களைப் பற்றி நேரடியாகச் சொல்லிவிட்ட போது அகத்திணைகளில் அபப்டி நேரடியாகப் பாடப்பட்டவர்களைச் சொல்லவில்லை. அதனால் அவர்கள் அன்று பட்ட உணர்வுகளை இன்றும் நாம் படலாம். நாமும் அந்தப் பாடல்கள் சொல்லும் மாந்தர்களாக மாறி வாழலாம். அகம் சொல்லும் உணர்வுகள் எல்லோருக்கும் பொது என்பதால் அவற்றில் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் புறம் சொல்லுபவை (வீரம், கொடை போன்றவை) சிறப்பானவை என்பதால் அங்கே பெயர்களைச் சொன்னார்கள் என்றும் ஒரு விளக்கத்தைப் படித்திருக்கிறேன்.

காதல் கொள்வது பைத்தியக்காரத்தனம் என்று நினைப்பதற்கு உங்களுக்கும் பெனாத்தலாருக்கும் உரிமை உண்டு. அதனை மறுக்கவில்லை. ஆனால் அதே காதல் உணர்வு தான் வீட்டுப்பேற்றையும் தரும் வழியாக நம் முன்னோர்கள் கண்டு சொல்லியிருப்பதை மறந்துவிட வேன்டாம். சித்தரும் பித்தரும் ஒரே மாதிரி தோன்றுவார்கள்.

குமரன் (Kumaran) said...

இப்படியெல்லாம் இலக்கியச் சுவையை 'இனியது கேட்கின்' பதிவில் எழுதுவதை விட்டுவிட்டு வீம்பாக வேறொன்றைத் தான் எழுதுவேன் என்று நீங்கள் இருந்தால் என்ன செய்வது இராகவன்? அழகுடனும் எளிமையுடனும் நீங்கள் சொல்லும் விளக்கங்களைப் படிக்க இயலவில்லையே என்று வருந்துவதை விட வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

காதல் கொண்டபின் திருமணம் புரிவதே தமிழர் மரபு; அதனால் தான் வால்மீகி சொல்லாத 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்ற நிகழ்ச்சியை வில்லை முறித்து 'அவளை' 'அண்ணல்' மணப்பதற்கு முன்னர் கம்பநாடன் வைத்தான் என்றும் சொல்லுவார்களே.

குமரன் (Kumaran) said...

வவ்வால். இரண்டாவது மட்டுமா? ஆற்று மணலை எண்ணிவிடலாம். அருச்சுனன் பொண்டாட்டிங்களை எண்ணி முடியாதுன்னு சொல்ற அளவுக்கு அளவில்லாம கட்டிக்கிட்ட அருச்சுனனுக்கும் கடவுள் உதவியிருக்காரே.

பொன்னொளிர் மேனி சுபத்திரை மாதைப்
புறங்கொண்டு போவதற்கே - இனி
என்ன வழி என்று கேட்கில் உபாயம்
இருகணத்தே உரைப்பான்

அப்படின்னு பாரதியாரும் கண்ணன் பாட்டுல பாடியிருக்காரே?! :-) கண்ணன் அந்தக் காலத்துல உதவுனதால இந்தக் காலத்துலயும் அப்படி கட்டிக்கிறது தப்பில்லைன்னு நீங்க சொல்ல வருவீங்க. அதை நான் ஒத்துக்கணுமா? நம் நாட்டுச் சட்டமும் ஒத்துக்குமா? ஒத்துக்கவே ஒத்துக்காது.

அப்பாடா. கடைசியில ஒருத்தர் என்னை ஆன்மிகப் பதிவர்ன்னு சொல்லாம தமிழுக்குத் தொண்டாற்றுறேன்னு சொல்லிட்டாருப்பா. இதுவரைக்கும் நான் உழைத்த உழைப்பிற்கெல்லாம் கைம்மாறு கிடைச்சிருச்சு. (என்ன சொன்னீங்க. கைம்மாறு கருதாம செய்யுறேனா? சரி தான். இப்ப நான் சொன்னதைக் கண்டுக்காதீங்க. நீங்க சொன்ன மாதிரி கைம்மாறு கருதாம உழைக்கிற பெருமையோட நான் இருந்துக்கிறேன். :-)) )

நீங்க பெருந்தலைகள்னு யாரைச் சொல்றீங்கன்னு தெரியலை. ஆனா அவங்களும் அவங்களுக்கு ஈடுபாட்டைக் கொடுக்கும் பதிவுகளைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் மறுமொழி சொல்ல வேண்டியதாக ஏதேனும் அமைந்தால் மறுமொழி இடுகிறார்கள். சுத்தி சுத்தி வந்து பதிவு போடறேன்னு சொல்றீங்களே?! பதிவா பின்னூட்டமா? நீங்க சொன்னது பின்னூட்டமா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். முடிஞ்ச வரைக்கும் பலருடைய பதிவுகளை காலம் தாழ்த்தியாவது படித்துவிடுகிறேன். நிறைய பேருக்கும் படித்தேன் என்று சொல்லும் வகையில் பின்னூட்டமும் இட்டுவிடுகிறேன்.

ஐயம் கேட்க நீங்க இருக்கீங்களா? அது வேறயா? அடடா. சொ.செ.சூ. வச்சுக்கிட்டேன் போலிருக்கே. :-))

வசந்தவிழாவுக்கும் காதலர் விழாவுக்கும் என்ன வேறுபாடு பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை. பின்பனி காலத்தில் தொடங்கும் விழா இளவேனில் வரைக்கும் தொடர்கிறது. அதனால் அது இளவேனில் விழா மட்டும் என்று சொல்ல முடியாது. காதலைக் கொண்டாடும் விழாவும் கூட.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. வசந்த விழாக்கள் காதலர் விழாக்களாகத் தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இளையவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மஞ்சள் நீர் இறைத்து விளையாடும் கொண்டாட்டமும் இந்த வகையில் அமையும். அந்தக் காலத்தில் அரசர்களும் வசந்த விழாவென்று தங்கள் காதலியர்களுடன் கொண்டாடியிருக்கிறார்கள். மக்களும் வசந்த விழாக்களைக் கொண்டாடியிருக்கிறார்கள் - அங்கும் இளையவர்கள் காதல காதலியர்களுடன் கொண்டாடுவதாக இருந்திருக்கிறது. அரசர்கள் கொண்டாடியதன் நினைவாகக் கோவில்களில் கொண்டாடப்படும் வசந்தவிழாவைக் கூடச் சொல்லலாம்.

குமரன் (Kumaran) said...

நன்கு சொன்னீர்கள் சிந்தாநதி. நானும் அப்படித் தான் கருதுகிறேன். வசந்த விழா என்றாலே காதல் திருவிழா தான். வசந்த விழாக்களில் காதலியர் கரம் பிடிக்க ஏறு தழுவுதல் போன்ற வீர விளையாட்டுகளும் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. அதுவும் காதலைச் சேர்ந்தது தானே. கண்ணனும் நப்பின்னையை மணக்க ஏழு ஏறுகளைத் தழுவி அடக்கினான் என்று தமிழிலக்கியம் சொல்கிறது.

வவ்வால் said...

குமரன்,

//அப்பாடா. கடைசியில ஒருத்தர் என்னை ஆன்மிகப் பதிவர்ன்னு சொல்லாம தமிழுக்குத் தொண்டாற்றுறேன்னு சொல்லிட்டாருப்பா. இதுவரைக்கும் நான் உழைத்த உழைப்பிற்கெல்லாம் கைம்மாறு கிடைச்சிருச்சு. (என்ன சொன்னீங்க. கைம்மாறு கருதாம செய்யுறேனா? சரி தான். இப்ப நான் சொன்னதைக் கண்டுக்காதீங்க. நீங்க சொன்ன மாதிரி கைம்மாறு கருதாம உழைக்கிற பெருமையோட நான் இருந்துக்கிறேன். :-)) )//

ஆன்மீகம் பேசினாலும் தமிழில் பேசனும்ல, அதான் இங்க முக்கியம், 63 நாயன்மார்களும் சரி, ஆழ்வார்களும் சரி சமஸ்கிருத சுலோகம் சொல்லி பக்தி வளர்க்கவில்லை, தமிழில் பாடல்கள் பாடித்தான் வளர்த்தார்கள், தமிழில் நூல் இயற்றுவது ஒரு திறமை அல்லவா? அதில் பக்தியும் வளர்ந்தாலும், அதனை தமிழ் வளர்ச்சி என்றேப்பார்ப்பேன். என்னளவில் அந்நூல்களில் பக்தியை விட நான் தமிழையே பார்க்கிறேன்.

இப்போது சங்கீத மும்மூர்த்திகள் இருக்கிறார்கள், அவர்கள் சங்கீதத்திற்கு சேவை செய்தார்கள், ஆனால் தமிழுக்கு அல்ல தானே, ஏன் எனில் அவர்கள் பாடியது எல்லாம் தெலுங்கு கீர்த்தனைகள், அதை அவர்கள் தமிழில் பாடி இருக்கலாமே?

அதே வகையில் தான் உங்கள் பக்தி சேவையிலும் தமிழுக்கு அதிக இடம் இருக்கும் போது தமிழ் தொண்டு என்றால் ஒன்றும் தப்பில்லை தானே!

//வசந்தவிழாவுக்கும் காதலர் விழாவுக்கும் என்ன வேறுபாடு பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.//

அந்த விழாக்களில் காதல் களியாட்டங்கள் இருந்தாலும் அதனை காதலர் விழா என்று சொல்லிக்கொள்வதில்லை, வசந்த விழா என்று சொன்னது , நம்மவர்களின் "இடக்கர் அடக்கலாக" இருக்கலாம் என்று சொல்வ வந்தேன்.

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

முன்பு எப்போதோ சொல்லியிருந்தேன். ஆன்மிகம் எழுதும் அளவிற்கு ஆன்மிகம் அல்லாத மற்ற இலக்கியங்களைப் பற்றியும் நான் எழுதுகிறேன். ஆனால் யாருமே என்னை தமிழ் இலக்கியங்களைப்பற்றி எழுதுபவன் என்று சொல்வதில்லை; ஆன்மிகம் எழுதுபவன் என்று தான் சொல்கிறார்கள் - என்று. நீங்கள் தமிழ்த் தொண்டுன்னு சொன்னவுடனே அது தான் நினைவுக்கு வந்தது. நீங்கள் அப்படி சொன்னதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இடக்கரடக்கலாக இருக்குமான்னு தெரியலை. இந்தக் காலத்துல காமம் என்றால் தப்பா நினைக்கிறோம். அந்தக் காலத்துல காதல் என்பதற்குக் காமம் என்ற சொல்லைத் தான் புழங்கியிருக்கிறார்கள். வள்ளுவரின் இன்பத்துப் பாலை காமத்துப் பால் என்று சொல்லுவோமே. அந்த பாலிலும் நிறைய குறட்பாக்களில் காதல் என்ற பொருளிலேயே காமம் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார். கொங்கை, அல்குல், புணர்ச்சி என்றெல்லாம் எழுதியவர்களுக்கிடையில் காதல் திருவிழா என்று சொல்வதில் தயக்கம் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

Unknown said...

குமரன், லேட்டா வந்துட்டேன்னு நினைக்கிறேன் :)
என் ஓட்டையும் முதல் ஆப்ஷனுக்கு நீங்களே போட்டுடுங்க... தொடருக்கு ஆவலாய் இருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

உங்கள் வாக்கையும் சேர்த்துக் கொள்கிறேன் தஞ்சாவூரான். உடுக்கை இழந்தவன் கை தொடர்கதை முடித்தவுடன் அடுத்தத் தொடராக காதல் திருவிழா எழுத எண்ணியிருக்கிறேன்.

வெற்றி said...

நல்ல பதிவு குமரன். இது பற்றி உங்கடை விரிவான அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்ரை வாக்கையும் சேருங்கோ. நன்றி.

/*புகார் நகரத்தில் நடந்த அந்த இந்திர விழாவைப் பற்றிப் */

புகார் நகர் எண்டு நீங்கள் சொல்லுமிடம் பூம்புகாரையா? அல்லாட்டில் வேற இடமோ?

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி. இப்போது எழுதிக் கொண்டிருக்கும் 'பாரி வள்ளலின் கதை' ஒரு தொடர்கதை. அது முடிந்த பின்னர் இந்தத் தலைப்பில் தொடர் எழுத எண்ணம். உங்கள் வாக்கையும் சேர்த்துக் கொண்டேன். நன்றிகள்.

புகார் என்று சொல்வது பூம்புகாரைத் தான். இன்னொரு பெயர் காவிரிபூம்பட்டினம். இளங்கோவடிகள் புகார் என்றே சொல்லியிருக்கிறார்.