Thursday, February 07, 2008

ஆய்தம்

அண்மையில் ஆய்தத்தைப் பற்றிய சிறு கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதிலிருந்த செய்திகளில் என் மனத்தில் நின்றவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆய்த எழுத்தைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய பயன்பாட்டில் நாம் ஃ என்ற ஆய்த எழுத்தை அவ்வளவாகப் புழங்காவிட்டாலும் தமிழ் கற்றுக் கொள்ளும் போது அதனையும் கற்றுக் கொள்கிறோம்; இலக்கியங்களிலும் அந்த எழுத்து புழங்குவதைக் கண்டிருக்கிறோம். இந்த எழுத்துக்கு ஏன் ஆய்த எழுத்து என்ற பெயர் வந்தது என்பதற்கு இந்தக் கட்டுரையாளர் நல்லதொரு விளக்கம் சொல்லியிருந்தார்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் வரை சின்ன வயதில் எனக்கு யாரோ சொன்னது போல் இது கேடயத்தில் இருக்கும் முக்கோணப் புள்ளிகளைப் போல் எழுதப் படுவதால் ஆயுத எழுத்து என்றிருந்து ஆய்த எழுத்தாகியது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் தமிழறிஞர்களும் இலக்கிய உரைகளும் எங்கேயும் இதனை ஆயுத எழுத்து என்று சொல்ல வில்லை; ஆய்த எழுத்து என்றே சொன்னார்கள். அதனால் மனதில் ஐயம் இருந்தது. பதிவுகளிலும் ஆய்தம் என்றே எழுதி வந்தேன்.

ஆய்தம் என்பது ஆய்தல் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம்; ஆய்தல் என்பதற்கு நுணுகிய ஓசை என்ற பொருளுண்டு என்று கட்டுரையாளர் சொல்லிவிட்டுப் பின்னர் வேறுவகையில் இந்தப் பெயருக்கு விளக்கம் தருகிறார்.

ஆய்தத்திற்கு யகர மெய்யொலி (ய்) இயல்பானது என்று சொல்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனில் கூரிய தில்


என்னும் திருக்குறள் 759 குறட்பாவைக் காட்டுகிறார். இங்கே எதுகை இலக்கணப்படி செய்க என்ற சொல்லிற்கு எஃக என்ற சொல்லை வள்ளுவர் புழங்கியிருப்பதால் இது ய் என்பதற்கு ஒட்டிய ஓசையைக் கொண்டிருந்தது என்கிறார்.

அ - அகரம் எனப்படுவது போல் தொடக்கத்தில் ஃ - அஃதம் எனப்பட்டிருக்க வேண்டும். அஃதத்தின் யகர மெய் ஒலிப்பினால் அஃதம் அய்தம் என பலுக்கப்பட்டு பின்னர் ஆய்தம் ஆகியிருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இந்த மாற்றங்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என்று தரவுகள் இல்லை. தேடிப் பார்த்தால் கிடைக்கும்.

திருவாய்மொழியிலிருந்து இன்னொரு எடுத்துக்காட்டும் தருகிறார்.

இஃதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின்கழல் யானெய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யேலே.


இந்தப் பாசுரத்திலும் இஃதே என்பது எதுகை இலக்கணப்படி யகர் மெய்யாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. மைதோய், எய்தா, கைதா என்ற அடுத்த மூன்று அடிகளிலும் இருக்கும் சொற்களைப் பார்க்கும் போது இங்கும் ஆய்தம் யகர மெய்யொலி கொண்டது என்பது தெரிகிறது.

இப்படி இரண்டு எடுத்துக்காட்டுகளால் எப்படி ஆய்தம் யகர மெய்யொலி பெறுகிறது என்று காட்டுவதன் மூலம் அஃதம் --> அய்தம் --> ஆய்தம் என்ற தன் கருத்துக்கு வலு சேர்க்கிறார். ஆனால் அதே நேரத்தில் ஆய்தம் குகர ஒலியையும் பெறுவதை இலக்கிய எடுத்துகாட்டுகளால் காட்டுகிறார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (குறள் 226)

அற்றால் அளவறிந்துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு (குறள் 943)

இந்த இரண்டு இடங்களிலும் ஆய்தம் யகர மெய்யொலி பெற்றால் தளை பிறழ்ந்துவிடும். குகரவொலி ஏற்றால் மாமுன் நிரையென வெண்பா இலக்கணம் பிறலாது. (இந்தப் பகுதி எனக்கு முழுவதும் புரியவில்லை. அவர் சொன்னதையே சொல்லிவிட்டேன்)

இவ்வளவு அருமையான கருத்தைச் சொன்ன கட்டுரையாளரின் பெயர் தான் அந்த கட்டுரையில் கிடைக்கவில்லை. அவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள்.

8 comments:

R. said...

குமரன்,
அருமையான பதிவுகள் அள்ளி வழங்கும் தன்மை போற்றுதலுக்கு உரியது. மகிழ்ச்சி.
நன்றி,
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
'பிப்ரவரி 7, 2008

செருக்கறுக்கும் என்றிருக்கவேண்டும்
என்பதில்
லு று என்று மாறவேண்டும்.

குமரன் (Kumaran) said...

ஆகா. எழுத்துப்பிழை விட்டுவிட்டேனா? திருத்தியதற்கு மிக்க நன்றி திரு.இராதாகிருஷ்ணன். இதோ இடுகையில் திருத்திவிடுகிறேன்.

தங்கள் அன்பான சொற்களுக்கும் மிக்க நன்றி.

VSK said...

நல்ல தகவல் குமரன்!

நன்றி!

RATHNESH said...

நல்ல பதிவு குமரன்.

கட்டுரையின் முழுப்பகுதியே இவ்வளவு தானா; ஏதும் விடுபட்டிருக்கிறதா? நல்ல ஆய்வு. முழுமையாக முடிவாக சொல்ல வரும் செய்தி என்ன?

ஃ-த்திற்கு யகர மற்றும் ககர உச்சரிப்புகள் இரண்டுமே இடம் பொருத்து அனுமதிக்கப்படலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஏனென்றால் குறளில், அஃதொருவர், வெஃகாமை, அஃதொப்பது, அஃதிறந்து, அஃகி அகன்ற, அஃகாமை என்று எடுத்தாளப்பட்டுள்ள பல இடங்களில் சிலவற்றில் யகர உச்சரிப்பிலும் வெண்பா இலக்கணம் தட்டாமல் வருகிறது.

தமிழ் இலக்கணத்தைக் கர்வமின்றிக் கற்ற எவராவது விளக்கிச் சொன்னால் தமிழுக்கு நல்லது.

குமரன் (Kumaran) said...

நன்றி எஸ்.கே.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரத்னேஷ் அப்பா. கட்டுரையின் முழுப்பகுதியே இவ்வளவு தான்.

சொல்ல வரும் செய்திகள்: ஆய்தம் என்ற பெயர் எப்படி வந்திருக்கலாம் - ஃ என்ற எழுத்துக்கு ய் ஒலிப்பு உண்டு. அந்த வகையில் அஃதம் அஃதம் ஆகி ஆய்தம் ஆனது.

ஃ க்கு ய் ஒலிப்பு மட்டுமின்றி க் ஒலிப்பும் இருக்கிறது. அதனால் ஃ என்ற எழுத்தை ய் ஒலிப்புக்கும் க் ஒலிப்புக்கும் இடையில் பலுக்கலாம்.

தமிழ் இலக்கணத்தைக் கற்றவர் சொன்னால் நன்று தான். அவர்கள் கருவத்துடன் கற்றார்களா இல்லையா, கற்றபின் கருவம் கொண்டார்களா என்பதெல்லாம் தடையில்லை எனக்கு. :-) பெரும்பாலானவர் அறியாத ஒன்றை அறிந்தால் ஒரு பெருமிதம் தானாக வருவது இயல்பு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி குமரன்!

ஆய்த எழுத்துக்கு அஃகேனம் என்ற ஒரு பெயர் உண்டு தெரியுமா?
அதே போல் "ஃ"-க்கு முன்னால் எப்பவும் குறில் மட்டுமே வரும்! நெடில் வராது!
எடுத்துக்காட்டாக, இது, ஈது!
இது இஃது ஆகும்
ஆனால் ஈது ஈஃது ஆகவே ஆகாது!

அதே போல் பின்னால் வல்லின எழுத்து மட்டுமே வரும்! வேறு எழுத்து எதுவும் வராதுன்னே நினைக்கிறேன்!

ரத்னேஷ் ஐயா,
என் தமிழாசிரியர் டேனியல் ஐயா சொல்லிக் கொடுத்த விதிகள் இவை!
ஆனா அவருக்குக் கருவம் கொஞ்சம் மிகுதியோ? என்னை "டேய் சங்கரா" ன்னு தான் அழைப்பார்! :-)

குமரன் (Kumaran) said...

இப்போது நீங்கள் சொல்லித் தான் அஃகேனம் என்ற பெயர் ஆய்தத்திற்கு உண்டென்பது தெரியும் இரவிசங்கர்.

ஆய்தத்திற்கு முன்னால் குறில் மட்டுமே வரும்; நெடில் வராது என்பதைக் கவனித்திருக்கிறேன். ஆய்தத்திற்குப் பின்னால் வல்லினம் மட்டுமே வரும் என்பதைக் கவனித்ததில்லை. இங்கே நீங்கள் சொன்னதைப் பார்த்துவிட்டுத் திருக்குறளில் மட்டும் நோக்கினேன். எல்லா இடத்திலும் ககரவரிசை எழுத்தோ தகரவரிசை எழுத்தோ தான் வந்திருக்கிறது. அதனால் நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்.

உங்கள் தமிழாசிரியர் நல்ல விதிகளை நீங்கள் மறந்து போகாத அளவிற்குச் சுவையாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. இங்கே வந்து எனக்கும் சொன்னதற்கு நன்றிகள்.