Friday, February 15, 2008

நாலாயிரம் கற்போம்!!!

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களின் பொருளை விரிவாக எழுத வேண்டுமென்ற எண்ணம் வலையில் எழுத வந்த நாள் முதல் உண்டு. விரிவாக எழுதுவதென்றாலே அதற்கு உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது. இரண்டுமே தேவையான அளவிற்கு இல்லாததால் என்றோ தொடங்கிய கோதை தமிழ் வலைப்பதிவும் விஷ்ணு சித்தன் வலைப்பதிவும் தொடராமல் நின்று கொண்டிருக்கின்றன. திருவாய்மொழிக்கும் ஒரு கூட்டுப் பதிவு வேண்டும் என்று என் குருநாதர்களில் ஒருவரும் வெகு நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். சரி. விரிவாக எழுதத் தான் நேரமில்லை; சுருக்கமாகவாவது எழுதுவோம் என்று இன்று இந்த 'நாலாயிரம் கற்போம்' தொடரைத் தொடங்குகிறேன். இந்த கூடல் வலைப்பதிவின் வலப்பக்கத்தில் இந்த பகுதி இடம் பெறும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அடுத்த அடுத்த பாசுரங்களாக எழுதி வருகிறேன். வலைப்பதிவில் எழுதுவதற்கும் இங்கு வலப்பக்கத்தில் எழுதுவதற்கும் ஒரு வேறுபாடு - வலைப்பதிவில் எழுதுவது பல நாட்களுக்கு நின்று வருங்காலத்தில் வந்து படிப்பவர்களுக்கும் உதவும்; வலப்பக்கத்தில் எழுதுவது அப்படி இல்லை. குறையொன்றும் இல்லாத கோவிந்தனைப் பாடிப் பரவிய ஆழ்வார்களின் அமுதத்தைப் பருக அந்தக் குறை தடையாக இருக்க வேண்டாம்.

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் ஜீயர் திருவடிகளே சரணம்

****

வலப்பக்கம் எழுதப்படுபவை இந்த இடுகையிலெயே சேர்த்து வைக்கப்படும்.

****
15 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் திருமொழி தனியன்கள்:

1. நாதமுனிகள் அருளிச் செய்தது:

குருமுகம் அனதீத்ய ப்ராஹவேதான் அசேஷான்
நரபதி பரிக்லுப்தம் சுல்கம் ஆதாது காம:
ஸ்வஸுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய சாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

குருவின் மூலம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் அனைத்து வேதங்களையும் குறைவின்றி அறிந்து, மக்கள் தலைவனான பாண்டியன் கட்டிவைத்த பொற்கிழியை அடைந்த, தேவர்களால் வணங்கப்பெறும் திருவரங்கநாதனுக்கு மாமனாரான, வேதியர் குலத் திலகமான, விஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரை போற்றுகிறேன்.


***

17 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் திருமொழி தனியன்கள்:

2. பாண்டிய பட்டர் அருளிச் செய்தது:

மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து


மனமே - நீயும் நானும் - ஒளிவீசும் பெரிய மதில்கள் சூழ்ந்த வில்லிபுத்தூர் என்று ஒரு முறையேனும் சொன்னவர்களின் திருவடிகளைத் தலையின் மேல் சூடினோம்; முன்பொரு நாள் பொறிகிழியை அறுத்தான் என்று அவன் புகழ் உரைத்தோம்; அதனால் கீழ்மையினில் சேரும் வழியை அடைத்துவிட்டோம்.


***

18 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் திருமொழி தனியன்கள்:

3. பாண்டிய பட்டர் அருளிச் செய்தது:


பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.வல்லப தேவ பாண்டியன் கொண்டாடும் வகையில் பட்டர்பிரானான பெரியாழ்வார் மதுரைக்கு வந்தார் என்று போற்றி வகை வகையாக பெரும் எண்ணிக்கையில் இருக்கும் சங்குகளை பலரும் ஊத, பரம்பொருள் யார் என்று நிறுவும் வகையில் வேண்டிய வேதங்களை எல்லாம் ஓதி பொற்கிழியை அறுத்தவராம் பெரியாழ்வாரின் திருவடிகளே எங்களுக்கான பற்றுதல்.


***

20 - பிப்ரவரி - 2008 அன்று எழுதப்பட்டது:

பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு:

பாசுரம் 1.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் - மல்லாண்ட
திண் தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்வி திருக்காப்பு.


வாழ்க பல்லாண்டு. வாழ்க பல்லாண்டு. வாழ்க பல்லாயிரத்தாண்டு. வாழ்க பல கோடி நூறாயிரம் ஆண்டு. முஷ்டீகன், சாணூரன் போன்ற மல்லர்களை வென்ற திண்மையான திருத்தோள்களை உடைய கருமணியைப் போன்ற நிறத்தை உடையவா! உன்னுடைய செம்மையான திருவடிகளின் அழகிற்கு குறைவற்ற பாதுகாப்பு உண்டாகட்டும்!

***

நல்லவரும் அல்லவரும் நிறைந்த பூவுலகில் பெருமாளுக்குத் தீங்கு நேர்ந்துவிடுமோ என்ற தாயுள்ளதோடு பல்லாண்டு பாடுகிறார் ஆழ்வார். அதனைக் கண்ட பெருமாள் தன்னுடைய மல்லாண்ட திண் தோள்களை ஆழ்வார் பயம் நீங்கும்படி காட்ட, அதுவே ஆழ்வாரின் பயத்தைக் கூட்டுகிறது. மகன் தீரனாயிருந்தால் 'ஒருவரையும் பொருட்படுத்தாமல் போர் புரியப் போய்விடுவானே. யாராலே என்ன கெடுதி நேர்ந்துவிடுமோ' என்று தாயுள்ளம் பதறுவதைப் போல் பதறி மேலும் பல்லாண்டு பாடுகிறார் ஆழ்வார்.


***

பாசுரம் 2. (23 Feb 2008)

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

உன் அடியார்களான எங்கள் எல்லோருக்கும் உன்னோடு எந்த காலத்திலும் எந்த நிலையிலும் பிரிவில்லாமல் இருக்கும் தொடர்பு ஆயிரம் பல்லாண்டு காலங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்க வேண்டும். அழகு தேவதையாக, நீயே பரம்பொருள் என்று நிறுவும் ஒரு அடையாளமாக, உன்னுடைய திருமார்பின் வலப்பக்கத்தில் என்றும் நிலையாக வாழ்கின்ற இளமையும் அழகும் பெருமையும் மிக்க மங்கையான திருமகளும் என்றென்றும் பல்லாண்டு இருக்க வேண்டும். அழகுடைய திருவுருவம் கொண்டு தனது பேரொளி உன்னுடைய திருமேனி எங்கும் பரவி வீசும்படியாக இருக்கும் உன் வலக்கை உறையும் சுடர் வீசும் திருவாழி ஆழ்வானும் என்றென்றும் பல்லாண்டு இருக்க வேண்டும். படைகள் போர் செய்கின்ற போது அங்கே புகுந்து முழங்குகின்ற தன்னிகரில்லாத அந்த பாஞ்சஜன்யம் என்னும் திருச்சங்காழ்வானும் என்றென்றும் பல்லாண்டு இருக்க வேண்டும்.

***

அடியோமோடும் என்று சொல்லி இறைவனின் லீலா விபூதி என்று சொல்லப்படும் இந்த பிரபஞ்சத்தில் வாழ்பவர்கள் எல்லோருக்கும் இறைவனோடு இருக்கும் தொடர்பை சொன்னார். திருமகள், திருவாழியாழ்வான், திருச்சங்காழ்வான் என்றிவரைச் சொல்லி இறைவனின் நித்ய விபூதி என்று சொல்லப்படும் பரமபதத்தில் வாழ்பவர்கள் எல்லோருக்கும் இறைவனோடு இருக்கும் தொடர்பை சொன்னார். இதனால் இந்தப் பாசுரத்தில் லீலா விபூதி, நித்ய விபூதி என்று இரண்டு விபூதிகளுக்கும் இறைவன் இவன் என்று சொன்னார்.


&&&

பாசுரம் 3. (26 Feb 2008)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


உய்ந்து போவதற்கு ஒரே வழியான இறைவனின் அடிமைத் தொழிலில் ஈடுபட்டு அதிலேயே நிலைத்து நிற்பவர்களே! நீங்கள் எங்களோடு வந்து இறைவனுடைய திருவடிச் சேவைகளைச் செய்யுங்கள்; அந்தச் சேவைகளில் ஈடுபாடு கொண்டிருங்கள். கூழினை (சோற்றினை) வேண்டி பிறருக்கு அடிமைத் தொழில் செய்திருப்பவர்களை எங்கள் குழுவினில் சேர்த்துக் கொள்வது இயலாது. நாங்கள் ஏழு தலைமுறைகளாக ஒரு வித குற்றமும் இல்லாதவர்கள். இராக்கதர்கள் வாழ்ந்த இலங்கை பாழாகும் படி படையெடுத்துப் போர்புரிந்தவனுக்குப் பல்லாண்டு கூறுவோம்.

***

தனித்திருந்து இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் நிறைவு பெறாமல் உலகத்தில் இருக்கும் மற்றவர்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார் ஆழ்வார். சாவா மருந்தெனினும் மற்றவர்களோடு சேர்ந்து உண்ண வேண்டும் என்றும் கூடி இருந்து குளிர்ந்து உண்ண வேண்டும் என்றும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?

உலகத்தில் இருக்கும் மக்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இறைவனையே வேண்டுபவர்கள், கைவல்யமாகிய ஆத்மானுபவத்தை வேண்டுபவர்கள், செல்வங்களை வேண்டுபவர்கள் என்று மூன்று வகையினரில் இந்தப் பாசுரத்தில் முதல் வகையினரைப் பல்லாண்டு பாட அழைக்கிறார். ஆழ்வாரும் அந்த முதல் வகையினரில் ஒருவர் என்பதால் தன்னையும் அந்தக் குழுவில் அங்கமாகக் கொண்டு 'கூறுதுமே' என்று தன்மைப் பன்மையில் கூறுகிறார்.

இங்கே மண்ணும் மணமும் கொள்மின் என்று சொன்னதில் மண் கொள்ளுகையாவது இறைவனின் தொண்டில் ஈடுபடுவது; மணம் கொள்ளுகையாவது அந்தத் தொண்டில் வேண்டா வெறுப்பாக ஈடுபடாமல் முழு மன நிறைவோடு ஈடுபடுவது.

&&&


பாசுரம் 4. (02 Mar 2008)

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாயவென்று
பாடும் மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே.


(உயிரற்ற) உடலை நிலத்தில் கிடத்தும் முன்னரே இங்கு வந்து எங்கள் குழுவினில் புகுந்து எங்களுடனும் இறைவனுடனும் கலந்துவிட எண்ணம் கொண்டவர்களே! எந்த விதமான தடைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் மீறி விரைவில் வந்து எங்களுடன் சேருங்கள். நாட்டிலுள்ளவர்களும் நகரத்தில் உள்ளவர்களும் நன்கு அறியும் படி எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்தைச் சொல்லி பாட வேண்டும் என்ற மனத்தையுடைய பக்தர்களே! இங்கே வந்து இறைவனுக்குப் பல்லாண்டு கூறுங்கள்.

***

கைவல்யமாகிய ஆத்மானுபவத்தை வேண்டி இறைவனைத் தொழுபவரை இங்கே பல்லாண்டு பாட அழைக்கிறார் பட்டர்பிரான்.

ஏடு என்னும் சூக்ஷ்ம உடலை கைவல்ய நிலத்தில் இடுவதன் முன்னம் வேறு ஒன்றையும் வேண்டாமல் இறைவனையே வேண்டும் எங்கள் குழுவினில் வந்து புகுந்து நீங்களே உங்களுக்கு வகுத்து வைத்துக் கொண்ட வரம்புகளை எல்லாம் மீறி எங்களுடன் கூடும் மனத்துடன் விரைவாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள். கைவல்ய அனுபவத்தை மட்டுமே வேண்டி பிரணவமந்திரத்தை மட்டுமே ஓதும் வரம்பை ஒழித்து பிரணவம் இயற்கையாகவே கூடியிருக்கும் எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்தை நாடும் நகரமும் நன்கு அறிய பாடும் மனம் கொண்டு இங்கே வந்து இறைவனுக்குப் பல்லாண்டு கூறுங்கள்.

கைவல்யத்தை விரும்புபவர்கள் வேறு குழுவினைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆழ்வார் இங்கே 'கூறுமினே' என்று படர்க்கை பன்மையில் சொல்கிறார்.


&&&

&&&

பாசுரம் 5. (09 Mar 2008)

அண்டக்குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக்குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே


பற்பலவாய் நிற்கின்ற அண்டங்களுக்கெல்லாம் அதிபதியானவன் எம்பெருமான். அசுரர்கள், இராக்கதர்கள் இவர்களுடைய அளவில்லாத கூட்டத்தை களையெடுத்தவன் எம்பெருமான். அதோடு மட்டுமின்றி புலன்களுக்கும் தலைவன் அவன். (ஹ்ருஷிகேச: = இருடிகேசன் = புலன்களை நடத்துபவன்). அவனுக்கு அடியவராக இருக்க விருப்பம் உடைய குழுவினில் இருப்பவர்களே. நீங்கள் இங்கே வந்து அவன் திருவடிகளைத் தொழுது அவனுடைய ஆயிர நாமங்களை சொல்லி உங்களுடைய பழைய அடையாளங்களை எல்லாம் தவிர்த்து (அடியார் என்ற அடையாளம் மட்டுமே பெற்று) இறைவனுக்குப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று சொல்லுங்கள்.

***

மூன்றாம் பாசுரத்தில் தான் அங்கமாக இருக்கும் 'இறைவனை அன்றி மற்ற எந்த பயனும் வேண்டோம்' என்றிருக்கும் அடியார்கள் கூட்டத்தை அழைத்து 'நாமெல்லாம் பல்லாண்டு பாடுவோம்' என்றார். நான்காம் பாசுரத்தில் சமாதி நிலையடைந்து ஆத்மாவை அனுபவிக்க விரும்பும் கைவல்யத்தை விரும்பும் அடியவர்கள் கூட்டத்தை அழைத்து 'பல்லாண்டு பாடுங்கள்' என்று சொன்னார். இந்தப் பாசுரத்தில் மூன்றாவது வகையான அடியவர்கள் - செல்வத்தை விரும்புபவர்கள் - கூட்டத்தை அழைத்துப் 'பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுங்கள்' என்கிறார்.

செல்வத்தை விரும்பும் அடியவர்கள் இருவகையினர். 1. புதிதாகச் செல்வம் விரும்புபவர்கள். 2. முன்பு செல்வம் பெற்று அதனை இழந்து மீண்டும் பெற விரும்புபவர்கள். அண்டக்குலங்களுக்கு இறைவன் அதிபதி என்று சொன்னது புதிதாக செல்வம் பெற விரும்பும் அடியவர்களுக்காக. அசுரர் இராக்கதரை எடுத்துக் களைந்தவன் என்று சொன்னது அப்படிப்பட்ட தடைகளால்/வினைப்பயன்களால் செல்வத்தை இழந்து அதனை மீண்டும் பெற விரும்பும் அடியவர்களுக்காக.

&&&
பாசுரம் 6. (18 Mar 2008)

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே


நான், என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை, அவரது தந்தையும் பாட்டனாரும் என ஏழு தலைமுறைகளாக வழி வழியாக இறைவன் திருமுன் வந்து அவனுக்குத் தொண்டு செய்கிறோம். அழகிய மாலைப் பொழுதில் நரசிம்ம உருவம் கொண்டு இரணியனை அழித்தவனை அப்போது தோன்றிய அசதி தீரும் படி திருவோணத் திருவிழாவில் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று போற்றிப் பாடுவோம்.

***

மூன்றாம் பாசுரத்தில் தான் அங்கமாக இருக்கும் 'இறைவனை அன்றி மற்ற எந்த பயனும் வேண்டோம்' என்றிருக்கும் அடியார்கள் கூட்டத்தை அழைத்து 'நாமெல்லாம் பல்லாண்டு பாடுவோம்' என்றார். அப்போது ஏழாட்காலும் பழிப்பிலோம் என்றார். அதனையே இங்கு மீண்டும் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் என்று கூறுகிறார். இறைவனை அன்றி வேறொன்றையும் வேண்டாத அந்த ஞானிகளின் கூட்டத்தில் இருக்கும் ஆழ்வார் அவர்களுடன் சேர்ந்து தானும் பல்லாண்டு கூறுவதை 'கூறுதுமே' என்று தன்மைப் பன்மையில் இங்கே குறித்தார்.

ஆழ்வார் காலத்தில் திருவோணத் திருவிழா பெரும் விழாவாக இருந்தது என்பது இந்தப் பாசுரத்தின் மூலம் அறிகிறோம். திருவோணம் என்ற பண்டிகை இன்று கேரளத்தில் மட்டும் பெரும் ஈடுபாட்டோடு கொண்டாடப் படுகிறது. அந்தத் திருவிழா வாமன அவதாரம், மாவலிப் பேரரசன் இவர்களின் தொடர்புடையதாகக் கொண்டாடப்படுகிறது. இங்கே ஆழ்வார் திருவோணத் திருவிழவில் என்று கூறும் போது நரசிம்ம அவதாரத்தை நினைவில் கொள்வதைப் பார்த்தால் திருவோணத் திருவிழாவிற்கும் நரசிம்ம அவதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.

&&&

பாசுரம் 7. (1 Apr 2008)

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.


'இறைவனுக்கு நாங்கள் அடிமைகள்' என்று கூறும் விதமாகத் திருக்கோவிலிலே தீயில் வெம்மையாக்கப்பட்டதால் ஒளி பெற்று பொலிகின்ற சிவந்த சுடர் வீசும் திருவாழி ஆழ்வானின் திருவுருவச் சக்கரத்தின் பொறியாலே எங்கள் தோள்களில் அடையாளம் செய்து கொண்டு குடும்பம் குடும்பமாக இறைவனுக்குத் தொண்டு செய்கிறோம். மாயங்கள் பல செய்து போர் செய்யும் வாணாசுரனை அவனது ஆயிரம் தோள்களும் குருதி பாயும் படி திருவாழியாலே வெட்டி வீழ்த்திய வல்லவனுக்குப் பல்லாண்டு கூறுவோம்.

***

நான்காம் பாசுரத்தில் 'ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்' என்று தொடங்கி தன் ஆத்மாவை அனுபவிப்பது என்னும் கைவல்யத்தில் ஆசை கொண்டுள்ளவர்களை 'வரம்பொழித்து வந்து விரைவில் கூடுங்கள்' என்றும் 'நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று பாடும் மனமுடை பக்தர் ஆகுங்கள்' என்றும் அழைத்தார். அவர்கள் இப்போது நாடும் நகரம் நன்கறிய திருச்சக்கரத்தின் கோயிற்பொறியாலே ஒற்றுண்டு தங்களது வரம்பை ஒழித்து குடி குடி ஆட்செய்ய வந்ததனால் தன்னையும் அவர்கள் கூட்டத்தில் ஒருவராகக் கொண்டு 'கூறுதுமே' என்று தன்மைப் பன்மையால் சொன்னார் ஆழ்வார்.

&&&

எட்டாம் பாசுரத்தைச் சேமிக்க மறந்தேன். மன்னிக்கவும்.
&&&

பாசுரம் 9. (17 Apr 2008)

உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


இறைவா! நீ உடுத்துக் களைந்த உன்னுடைய பொன்னாடையை உடுத்துக் கொண்டும், நீ அமுது செய்த பின் மிகுந்திருக்கும் உணவை நீ உண்ட கலத்தில் இருந்து உண்டு கொண்டும், தொடுத்த துளசி மாலைகளை நீ சூடிக் களைந்த பின் சூடிக் கொண்டும் உனக்கே அடிமைகளாக நாங்கள் இருக்கிறோம். நீ எந்த திசையில் சென்று என்ன செயல் செய்ய ஆணையிடுகிறாயோ அவற்றை மிகத் திறமையுடன் திருத்தமாகச் செய்து அகன்று பரந்திருக்கும் படமெடுத்த பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்ட உனக்கு திருவோணத் திருவிழா நாளில் பல்லாண்டு கூறுவோம்.

***

'வாழாட்பட்டு', 'எந்தை தந்தை தந்தை' என்று தொடங்கிய பாசுரங்களால் சொல்லப்பட்ட 'இறைவனைத் தவிர வேறொன்றும் வேண்டாத' பாகவதர்கள் இறைவனை நோக்கிப் பல்லாண்டு பாடுவதை இந்தப் பாசுரம் சொல்கிறது. வேறொரு பயனும் வேண்டாமையால் அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாமும் - அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, இருப்பிடம் எல்லாமும் - அவன் திருக்கோவிலிலேயே அவர்களுக்குக் கிடைக்கிறது. அதனால் அவர்கள் தங்களுக்கு என்று வேறொன்றும் செய்ய வேண்டியதின்றி இறைவனின் ஆணைப்படியான செயல்களையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

&&&

பாசுரம் 10. (22 Apr 2008)

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

எம்பெருமானே. எந்த நாளில் நாங்கள் உனக்கு அடிமைகள் என்று எழுதிக் கொடுத்தோமோ அந்த நாள் முதலாகவே அடியவர்களாகிய எங்களின் உடைமைகளும் உரியவர்களும் (குடும்பம், உறவினர், முன்னோர், வழி வருவோர் என அனைவரும்) விடுதலை பெற்று நல்ல நிலையை அடைந்துவிட்டது. செம்மையுடைய திருநாளில் தோன்றி திருமதுரையாம் வடமதுரையில் கம்சனுடைய யாகசாலையிலிருந்த வில்லை வளைத்து முறித்து, படமெடுத்தாடும் ஐந்து தலைகளை உடைய காளிய நாகத்தின் தலை மேல் குதித்து ஆடியவனே! உன்னை பல்லாண்டு கூறி வாழ்த்துகின்றோம்.

***

'ஏடு நிலத்தில்', 'தீயிற் பொலிகின்ற' என்று தொடங்கும் பாசுரங்களில் சொல்லப்பட்ட 'தன் ஆத்மாவை தனித்து உணர்ந்து அனுபவிக்கும்' கைவல்ய மோக்ஷத்தை வேண்டி நின்றவர்கள் இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ருசி உண்டாகி அவனை நோக்கிப் பாடுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கைவல்ய மோக்ஷத்தை அடைந்திருந்தால் அவர்கள் மட்டுமே உய்ந்து போயிருப்பார்கள். இறைவனுக்கு அடியவர் என்று எழுத்துப்பட்டதால் அவர்களின் அடிக்குடில், அவர்களின் தொடர்பு கொண்ட யாவரும் எவையும் உய்ந்து போயின. முன்பு 'வரம்பொழித்து வந்து ஒல்லை கூடுமின்' என்று ஆழ்வாரால் அழைக்கப்பட்டு 'கோயிற் பொறியாலே ஒற்றுண்டு குடிகுடியாட் செய்கின்றோம்' என்று வந்தார்கள் கைவல்யத்தை விரும்பியவர்கள். அப்படி குடிகுடியாட்செய்ததால் விளைந்த பயனைப் பற்றி இங்கே மகிழ்ச்சியுடன் பேசி நிற்கின்றார்கள்.

&&&

பாசுரம் 11. (29 Apr 2008)

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணாயவென்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே


திருமகள் கேள்வனே! மேலோர் கடிந்த வழிமுறைகள் ஒன்றையும் செய்யாத, அழகிய திருக்கோஷ்டியூரில் வாழ்பவர்களுக்குத் தலைவனான, உன்னுடைய அளவில்லாத அன்பைப் பெற்ற செல்வ நம்பியைப் போலவே நானும் உனக்கு பழமையான அடியவன். அடியேனுக்கு நன்மை உண்டாகும் படி 'நமோ நாராயணா' என்று உன்னுடைய திருநாமங்கள் பலவற்றைப் பாடிப் பரவி பல வகைகளிலும் குற்றமொன்றில்லாத கோவிந்தனே உனக்குப் பல்லாண்டு கூறுகிறேன்.

***

'அண்டக்குலத்துக்கு', 'நெய்யிடை' என்று தொடங்கிய பாசுரங்களில் பேசப்பட்ட உலக செல்வங்களை விரும்பும் ஐஸ்வர்யார்த்திகள் திருந்தி எம்பெருமானுக்குப் பல்லாண்டு கூறுவதை இந்தப் பாசுரம் கூறுகிறது.

செல்வநம்பி என்பார் பெரியாழ்வாரின் ஆசாரியர் என்றும் அவர் பாண்டியனுக்கு அமைச்சராக இருந்தார் என்றும் ஒரு செய்தி உண்டு.

&&&

பாசுரம் 12. (07 May 2008)

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டேபல்லாண்டு பல்லாண்டு என்று தூயவனை, உயர்ந்த நிலையாம் பரமபதத்திற்குரியவனை, சார்ங்கம் என்னும் வில்லை உடையவனை, வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் விரும்பிச் சொன்ன இந்த பாசுரங்கள் கிடைத்தது நம் பேறு என்று சொல்லி, அந்தப் பாசுரங்களால் வணங்கி 'நமோ நாராயணாய' என்று எட்டெழுத்து மந்திரத்தை உரைப்பவர் பரமாத்மனான எம்பெருமானை எல்லா நேரங்களிலும் சூழ்ந்து இருந்து பல்லாண்டு காலங்களும் வணங்கிக் கொண்டிருப்பார்கள்

***

பன்னிரண்டாவது பாசுரமாகிய இந்தப் பாசுரம் 'நூற்பயன்' கூறுகிறது. தூயவனும் பரமபத நாதனும் ஆன எம்பெருமானை இந்தப் பாசுரங்களால் போற்றித் துதித்தால் அந்த பரமபதமே கிடைக்கும் என்பது நூற்பயன். முதல் இரண்டு பாசுரங்களும் எம்பெருமானை நோக்கி ஆழ்வார் பாடுவதாக அமைந்திருக்கிறது. அடுத்து மும்மூன்று பாசுரங்களால் 'எம்பெருமானையே கதியும் பயனுமாகக் கொண்டவர்கள்', 'தன்னுடைய ஆத்மாவை அனுபவிக்க விரும்புபவர்கள்', 'உலக செல்வங்களை விரும்புபவர்கள்' என்ற மூவகை பக்தர்களைச் சொன்னார். முதல் மூன்றால் (3,4,5) அப்படிப்பட்டவர்களைப் பல்லாண்டு பாட அழைத்தார். அடுத்த மூன்றால் (6,7,8) அந்த மூவகையினரும் பல்லாண்டு பாட வந்து சேர்ந்ததைக் கூறினார். அடுத்த மூன்றால் (9,10,11) அந்த மூவகையினரும் எம்பெருமானை நோக்கிப் பாடுவதாக அமைந்திருக்கிறது. கடைசிப் பாசுரமான இந்தப் பாசுரம் (12) நூற்பயனைக் கூறுகிறது.

இந்தப் பாசுரத்துடன் பெரியாழ்வார் அருளிச் செய்த 'திருப்பல்லாண்டு' நிறைவு பெறுகிறது. அடுத்து 'பெரியாழ்வார் திருமொழி' பாசுரங்களைப் பார்க்கலாம். இங்கே சுருக்கமாகச் சொல்லிச் சென்ற விளக்கங்களை இன்னும் விரித்து 'விஷ்ணு சித்தன்' வலைப்பதிவில் எழுத எண்ணியிருக்கிறேன். எம்பெருமானின் திருவருள் முன்னிற்கட்டும்.

36 comments:

RATHNESH said...

ஒரு வேண்டுகோள் தான்.

என்னைக் கேட்டால் நீங்கள் இந்திரவிழா தொடரை விட இதற்கு முக்கியத்துவம் கொடுத்து முழுமையான பதிவாகவே தொடர்ந்து எழுதலாம் என்பேன். ஏனென்றால் நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்லும் தெய்வீகக் கருத்துக்களைத் தாண்டி அது தமிழுக்குத் தந்துள்ள அதி அற்புதமான VOCABULARY பற்றிப் பலருக்குத் தெரியாது. தங்கள் இலக்கிய அறிவையும் கலந்து சில ஒப்புமைகளுடனும் எழுதுவீர்களாயின் தமிழுக்குச் செய்த மிகச் சிறந்த சேவையாக இருக்கும்.

(இந்திரவிழா / காதலர்விழா பற்றிய தொடரை எழுதாதீர்கள் என்று சொல்லவில்லை. அதன்மூலம் - இதனுடைய ஒப்பீட்டில் - பெரிய நன்மை ஏதும் விளைய வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பின்னாளில் எழுதலாம் என்பது என் அபிப்ராயம்.)

அன்புடன், RATHNESH

ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆகா, நல்ல செய்தி குமரன்.
ஆவலோடு காத்திருக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

ஜூனியர்,
வாழ்க, வளர்க ! பாராட்டுக்கள், தங்களின் இப்பணிக்கு !
சீனியர்

குமரன் (Kumaran) said...

இரத்னேஷ். தங்கள் கருத்துக்கு நன்றி. வரிசைக்கிரமத்தை மாற்றிக் கொள்ள முயல்கிறேன். அதற்கும் ஒரு வாக்கெடுப்பு நடத்திப் பார்க்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகக் கொண்டு அதன் படி செய்கிறேன். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா. காத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு முறை இந்த வலைப்பதிவிற்கு வரும் போதும் வலப்பக்கம் பாருங்கள். 'நாலாயிரம் கற்போம்' பகுதி இருக்கும்.

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பாலா/சீனியர்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அண்ணா வணக்கம்!
நாலாயிரம் நவில வந்தமைக்கு அடியோங்கள் பேறு பெற்றோம்!
வாழ்க! வாழ்க!!

சைட் பாரில் முந்தைய பாசுரங்களை எப்படிப் பார்ப்பது?

குமரன் (Kumaran) said...

நான் எப்ப அறிஞர் அண்ணா ஆனேன் இரவிசங்கர்? முந்தைய பாசுரங்களைப் பாக்க முடியாது. அது தானே இடுகையில் சொல்லப்பட்ட குறை. அதனால இங்கே வர்றப்ப எந்த பாசுரம் இருக்கோ அதனைப் படிச்சுக்க வேண்டியது தான். ரெண்டு நாளைக்கொரு தடவை வந்து பாத்தா எல்லாத்தையும் படிக்கலாம். :-)

வவ்வால் said...

குமரன்,

நாலாயிரம் கற்க எத்தனை ஆயிரம் தருவிங்க, ஒரு இரண்டாயிரம் தாங்க நான் கற்க வருகிறேன் :-))

குமரன் (Kumaran) said...

வவ்வால். இது தானே வேணாங்கறது?! நாலாயிரம் படிக்க இரண்டாயிரம் வேணுமா? ஏற்கனவே ஆழ்வார்கள் பாடின நாலாயிரம் பாட்டுகளைப் படிக்கக் கூப்புட்டா நான் இரண்டாயிரம் பாட்டு எழுதித் தந்தா தான் படிப்பேன்னா எப்படி? அம்புட்டு ஞானம் இல்லியேப்பா?!! அவ்வ்வ்வ்வ்வ்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திருவாய்மொழிக்கும் ஒரு கூட்டுப் பதிவு வேண்டும் என்று என் குருநாதர்களில் ஒருவரும் வெகு நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்//

குருவின் ஆணையைக் குமரன் மீறலாமா?
குருவாய் வருவாய் அருள்வாய் குமரா!

//சரி. விரிவாக எழுதத் தான் நேரமில்லை; சுருக்கமாகவாவது எழுதுவோம் என்று இன்று இந்த 'நாலாயிரம் கற்போம்' தொடரைத் தொடங்குகிறேன்//

இதை அப்படியே சேமித்து வைத்து கூட்டு வலைப்பூக்குப் பயன்படுத்தக் கூடாதா?

//வவ்வால் said...
எத்தனை ஆயிரம் தருவிங்க, ஒரு இரண்டாயிரம் தாங்க நான் கற்க வருகிறேன் :-))//

வவ்ஸ், 50-50 மறந்துறாதீங்க! :-)

வவ்வால் said...

குமரன்,

//ஏற்கனவே ஆழ்வார்கள் பாடின நாலாயிரம் பாட்டுகளைப் படிக்கக் கூப்புட்டா நான் இரண்டாயிரம் பாட்டு எழுதித் தந்தா தான் படிப்பேன்னா எப்படி? அம்புட்டு ஞானம் இல்லியேப்பா?!! அவ்வ்வ்வ்வ்வ்.//

ஞானக்கடல் , அள்ள அள்ள குறையாது, நீங்களே இப்படி சொன்னா எப்படி, ஞானம் இல்லைனாலும் வங்கில பணம் இருந்தா போதும், பாருங்க இப்போவே 50-50 னு கேஆரெஸ் துண்டு போட்டு இடம் பிடிச்சுட்டார்!

-------------------

கேஆரெஸ்,

நீங்களே குமரனிடம் வாங்கி அதுல உங்க பாதி எடுத்துக்கிட்டு என் பாதிய மணி ஆர்டர் செய்துடுங்க! :-))

குமரன் (Kumaran) said...

குருவின் ஆணைப்படியே இந்த இடுகையிலேயே சேமித்து வைக்கத் தொடங்கிவிட்டேன் இரவிசங்கர். மகிழ்ச்சி தானே?! :-)

வானத்துக் கோட்டை கட்டுகிறார் வவ்வால். அவரிடம் நீங்கள் 50 - 50 கேட்கிறீர்களே?! அவரு பாருங்க. அந்தக் கோட்டையை நீங்களே கட்டிக்கிட்டு அவருக்கும் பாதி குடுக்கச் சொல்றார். :-)

குமரன் (Kumaran) said...

வவ்வால். நீங்க யாருன்னு எனக்குத் தெளிவா சொல்லுங்க. வெறும் முகமூடிப் பெயரான வவ்வால் தான் எனக்குத் தெரியும். நீங்க யாருன்னு தெளிவா தெரிஞ்சா ஆயிரம், ரெண்டாயிரம் என்ன அதற்கு மேலயும் கொடுக்கலாம். என்ன சொல்றீங்க? :-)

மதுரையம்பதி said...

அடடா, 2 நாள் படிக்காம விட்டுட்டேன் போல இருக்கே?

selvanambi said...

miha parantha thiruvullam thangalukku.kathukondirukirom karpatharku.adiyongalin bagyam

வவ்வால் said...

குமரன்,

//வானத்துக் கோட்டை கட்டுகிறார் வவ்வால். அவரிடம் நீங்கள் 50 - 50 கேட்கிறீர்களே?! அவரு பாருங்க. அந்தக் கோட்டையை நீங்களே கட்டிக்கிட்டு அவருக்கும் பாதி குடுக்கச் சொல்றார். :-)//

ஆகாசத்துல தானே இந்திரன், எமன் எல்லாம் ஆட்சி செய்றாங்க அவங்கலாம் கோட்டை கட்டி இருக்கும் போது நான் கட்டக்கூடாதா :-))

//வவ்வால். நீங்க யாருன்னு எனக்குத் தெளிவா சொல்லுங்க. வெறும் முகமூடிப் பெயரான வவ்வால் தான் எனக்குத் தெரியும். நீங்க யாருன்னு தெளிவா தெரிஞ்சா ஆயிரம், ரெண்டாயிரம் என்ன அதற்கு மேலயும் கொடுக்கலாம். என்ன சொல்றீங்க? :-)//

ச்சே அது எப்படி, நீங்க காசு தருகிறேன் என்றதும் நானே நான் யாருனு சொல்லிட்டா , சரித்திரம் என்ன சொல்லும் காசு வாங்கிட்டு தன்னையே காட்டிக்கொடுத்த எட்டப்பன் என்று சொல்லாதா :-))

குமரன் (Kumaran) said...

கவலை வேண்டாம் மௌலி. ரெண்டு நாளா படிக்காததையும் எழுதி இடுகையில் சேர்த்துவிடுகிறேன். இந்த இடுகை மட்டும் உங்க ரீடர்ல திரும்பத் திரும்ப வரும். நான் ஒவ்வொரு பாட்டா சேர்க்கிறப்ப எல்லாம். :-)

குமரன் (Kumaran) said...

பெரியாழ்வார் திருமொழின்னு சொன்னவுடனே செல்வ நம்பி நீங்க வந்தாச்சா? ரொம்ப மகிழ்ச்சி. அடியேன் சிறிய ஞானத்தன்.

குமரன் (Kumaran) said...

அப்ப நீங்களும் தேவர்கள்ல ஒருத்தர்ன்னு சொல்றீங்க. ரொம்ப மகிழ்ச்சி வவ்வால். :-)

வரலாறு என்ன சொல்லும் என்றெல்லாமுமா நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வியப்பாக இருக்கிறதே. எது சரி; எது சரியில்லை - இப்படி மட்டும் தானே பாப்பீங்க எப்பவும். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உன் சேவடி செவ்வி திருக்காப்பு//
//திருவடிகளின் அழகிற்கு குறைவற்ற பாதுகாப்பு உண்டாகட்டும்!//

பொதுவா குழந்தை பாதுகாப்பா இருக்கட்டும்-னு தான் சொல்லுவாங்க! இல்லீன்ன்னா உடம்பைப் பத்திரமாப் பாத்துக்க-ன்னு சொல்லுவாங்க!

அது என்ன "சேவடி"க்கு மட்டும் பாதுகாப்பு உண்டாகட்டும்-னு பாடறாரு பெரியாழ்வார்?
அடியேன் ஐயத்தைத் தீர்த்து வைத்து அருளுமாறு குமரனை வேண்டிக் கொள்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டுக்கு நன்றி குமரன்!

இன்னொன்று கவனித்தீர்களா?
வலப்பக்கம் தான் கருணையின் திருவான அன்னை
அதே வலப்பக்கம் தான் சக்கரமும் கூட!

சக்கரம் இல்லாத போரா? ஆனால் ஆழ்வார் இங்கு போரைச் சங்குக்கு ஆக்கி விடுகிறார்! சக்கரம் ரொம்பவே சாது! வடிவு ஆர் சோதி "வலத்து" உறைவதால் போலும்! :-)))

selvanambi said...

indha parama kainkaryathai seyyum thangal thiruvadikkum pallandu!

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். அபிராமி அந்தாதி 100 பாடல்களும் இன்னும் சில நாட்களில் நிறைவு பெற்றுவிடும். பின்னர் பெரியாழ்வார் திருமொழியைத் தான் விஷ்ணுசித்தன் வலைப்பதிவில் தொடரலாம் என்று எண்ணியிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு பாசுரத்திற்கும் மிக விரிவான பொருளைக் காணலாம். அதனால் இப்போதைக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்குச் சுருக்கமாக விடை சொல்கிறேன். விரிவை பெரியாழ்வார் பதிவில் காண்போம்.

தாயுள்ளதோடு பெரியாழ்வார் பல்லாண்டு பாடும் போதும் பெருமாளுடன் அடியவர்களுக்கு இருக்கும் இன்னொரு தொடர்பான பெருமாள் - தாய், அடியவர் - குழந்தை என்ற தொடர்பும் முன்னிற்கின்றது போலும். பிறந்தக் குழந்தைக்குத் தாயின் வேறு உறுப்புகளை விட அந்தக் குழந்தையின் வாழ்விற்கு ஆதாரமான தாயின் கொங்கைகள் மட்டும் தானாகத் தெரிவது போல அடியவர்களுக்குப் பெருமாளின் திருவடிகள் தென்படுகின்றன என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

பெரியவர்கள் சொல்லும் வேறு விளக்கங்களும் உங்களுக்குத் தெரியும் என்று அடியேனுக்குத் தெரியும். அவற்றை பெரியாழ்வார் பதிவில் கூடியிருந்து குளிர்ந்து பேசி அனுபவிப்போம்.

குமரன் (Kumaran) said...

வலப்பக்கம் தான் அன்னையும் இருக்கிறாள்; சக்கரத்தாழ்வானும் இருக்கிறார். கவனித்தேன் இரவிசங்கர். ஆனால் அதனால் சக்கரம் சாது என்றும் கருணையின் வடிவென்றும் எப்படி சொல்கிறீர்கள்?

சங்கு முழங்கி போரைத் தொடங்காவிட்டால் சக்கரத்திற்கு ஏது வேலை? அதனால் படை போர் புக்கு முழங்கும் என்று சங்குக்குப் போரின் தொடர்பை சொல்லிவிட்டார் போலும். அதனால் சக்கரம் சாது என்று பொருள் இல்லை. அடியாருக்குத் தீங்கு விளைத்தால் அவர் யாராக இருந்தாலும் மூவுலகிலும் விடாமல் துரத்தும் தன்மை கொண்டது அது. :-)

குமரன் (Kumaran) said...

அடியேன். தங்களின் அன்பான வார்த்தைகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றிகள் செல்வநம்பி.

selvanambi said...

nandri குமரன் ஒரு பாசுரம் ஒரு நால் என்ட்ரால் நாலாயிரம் நாட்கல் ஆகுமே.ஒரு நால் mooன்ட்ரு பாசுரஙலவது எழுதலாமே.

குமரன் (Kumaran) said...

மூன்று நாட்களுக்கு ஒரு முறை எழுதுவதற்கே சாத்தியப்பட மாட்டேன் என்கிறது செல்வ நம்பி. அப்படியிருக்க ஒரே நாளில் மூன்று பாசுரங்கள் எழுதுவதா? இயலாது என்று நினைக்கிறேன். இன்றைக்கு அடுத்த பாசுரம் எழுத முயல்கிறேன்.

நீங்கள் சொன்னது போல் ஒரு நாளைக்கு ஒரு பாசுரம் என்றாலே நாலாயிரம்+ நாட்கள் ஆகலாம். இப்போது எழுதும் வேகத்தில் அதற்கும் மேலாக ஆகலாம்.

selvanambi said...

vyagyanam arumai

குமரன் (Kumaran) said...

நன்றி செல்வநம்பி.

சிவமுருகன் said...

எனக்கு திவ்ய பிரபந்தம் பற்றி அவ்வள்வாக அறிமுகம் கிடையாது. ஓரிரு வருடம் கூடல் அழகரை ச்ரீ பக்த சபையாருடன் இப்பல்லாண்டு பாடலையும், சஹஸ்ரநாமமும் மேலும் பல தோத்திர பாடல்களை பாடி வலம்வந்துள்ளேன்! அவ்வளவே! அதை பற்றி தெரிந்து கொள்ள நேரமோ வாய்ப்போ, அறிவிக்கும் நபரோ கிட்டவில்லை!

இப்போது எல்லாம் கூடிவரும் சமயம் என்று ஆனந்தமாக இருக்கின்றது.

நன்றி.

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி சிவமுருகன். இந்த இடுகையைக் குறித்து வைத்துக் கொண்டு தொடர்ந்து படித்து வாருங்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அரியுருவாகி அரியை அழித்தவனை//

இரணியனுக்கும் அரி-ன்னு ஒரு பேரா குமரன்?

//ஆழ்வார் காலத்தில் திருவோணத் திருவிழா பெரும் விழாவாக இருந்தது//

ஆமாங்க குமரன். மாதாமாதம் வரும் திருவோணம் கூட புறப்பாடு-ன்னாலும் திருவோண விழா பெரும் விழா தான்! கேரளத்தில் ஆவணி மாசம்!
திருமலையில் புரட்டாசித் திருவோணம் தான் பிரம்மோற்சவம்!

குமரன் (Kumaran) said...

அரி என்றால் எதிரி என்றொரு பொருளும் இருக்கிறது இரவிசங்கர். அந்த வகையில் பொன்னனும் (ஹிரண்யன்) அரியாகிறான். ஆளரியாகி (நரசிம்மமாகி) அரியை (எதிரியை) அழித்தான் என்று சொல்கிறார்.

ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திற்கும் பெருமாள் கோவில்களில் புறப்பாடு உண்டா இரவி? அப்படியென்றால் அதனைச் சொல்லியிருக்கலாம் பட்டர்பிரான்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திருப்பல்லாண்டு பாசுரப் பொருளை நிறைவு செய்தமைக்கு இங்கு அடியோங்கள் நன்றியையும் பதிக்கிறேன் குமரன்!
பல்லாண்டு தொடரட்டும் இந்தப் பணி!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர்.