Wednesday, February 13, 2008

உடுக்கை இழந்தவன் கை - 4 (பாரி வள்ளலின் கதை)

மாலை நேரம் ஆகிவிட்டது. பறம்பு மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலருக்கு இருட்டுவதற்குள் பாரியின் மாளிகையைச் சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருக்கிறார். புலவரின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. பாரியைக் காணும் ஆவலும் புலவரின் நடையை விரைவுபடுத்தியது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும் தானாகப் புலன்களின் வழியே உள் நுழைந்து மனத்தை மயக்கும் பறம்பு மலையின் இயற்கை அழகும் நறுமணமும் நல்லொலிகளும் புலவரின் விரைவை அவ்வப்போது மட்டுப்படுத்திக் கொண்டிருந்தன.

திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது. மரங்களில் வேங்கையும் சந்தனமும் நிறைந்து வளர்ந்திருந்தன. மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. விதவிதமான மலர்கள் என்றென்றும் மலர்ந்து இருக்கும் என்பதற்கு அடையாளமாக மரங்கள் தோறும் தேனடைகள். எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி பிரான் மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலர் நடந்து கொண்டிருந்தார்.

இந்த மலை வளத்தை எல்லாம் காணும் போது இந்த மலையில் மாளிகை மட்டுமே பாரிக்குரியது என்பதும் மற்றபடி இந்த மலையில் இருக்கும் ஊர்களை எல்லாம் பரிசிலர்களுக்கு ஏற்கனவே பாரி வழங்கிவிட்டான் என்பதும் நினைவிற்கு வந்தது. தனக்குரியதை எல்லாம் இப்படி வாரி வழங்கிவிட்டு பெயருக்கு இந்த பறம்பு நாட்டிற்கு அரசன் என்று வாழ்கிறானே இந்த பாரி என்று தோன்றியது. இனி மேலும் புலவர்களும் பாணர்களும் வந்தால் என்ன கொடுப்பான் பாரி என்றும் கேள்வி எழுந்தது.

இந்த எண்ணங்களோடு நடந்து கொண்டிருந்த கபிலரை அருகில் இருந்த வேங்கை மரத்திலிருந்து வந்த நறும்புகை கவர்ந்தது. வேங்கை மரத்திற்கு இவ்வளவு மணமா என்று வியப்பு கூடியது.



'வேங்கை மரம் வலுவுள்ளது என்று அறிவேன். ஆனால் அது நறுமணமும் மிக்கதோ? இந்த நறும்புகை எங்கிருந்து வருகிறது? ஓ இது வேங்கையிலிருந்து வரும் புகை இல்லை. மரத்தின் அருகில் ஒரு குறத்தி குளிர் காய்வதற்காக சிறு நெருப்பு மூட்டியிருக்கிறாள். அதிலிட்ட விறகு சந்தன மர விறகானதால் இந்த நறுமணம்.'

தனக்குள் சிரித்துக் கொண்டார் கபிலர்.

'இப்படித் தானே பாரியும் நடந்து கொள்கிறான். சந்தன மர விறகு தான் எரிந்து வேங்கை மரத்திற்கு நறுமணம் ஊட்டுவது போல் பாரி தன்னிடம் இருக்கும் உடைமைகளை எல்லாம் பரிசிலர்களுக்கு அளித்து விட்டு தானும் பரிசிலாக மாறி நிற்கிறானே. என்னே இவன் பெருமை'

மனத்தில் தோன்றிய இந்த எண்ணங்கள் ஒரு பாடலாக மாறியது. அழகிய அந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் இயன்மொழியாக அமைந்த அந்த பாடலை வாய்விட்டுப் பாடினார் புலவர்.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலில் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினை தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே.


(குறத்தி ஏற்படுத்திய காய்ந்த விறகின் கொள்ளி ஆரம் எனும் சந்தனம் ஆதலால் அதன் நறும்புகை அருகில் இருக்கும் சாரலில் வளர்ந்த வேங்கையின் பூவினையுடைய கிளைகளிலும் தவழும். பறம்பு மலை முழுக்க பாடிப் பரிசில் கொண்ட பாணர்களின் உடைமை. வழங்குதல் எனும் அறம் பூண்ட பாரியும் பரிசிலர் வேண்டினால் தன்னையே கொடுப்பான்; அவர்கள் பின்னே வரமாட்டேன் என்று சொல்லான். வேண்டியவர்கள் எல்லையில் சென்று நிற்பான்.)

வியப்பும் மகிழ்ச்சியும் பாடலும் பொருளும் என்று பாரியின் மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் நடைக் களைப்பு எதுவும் தோன்றவில்லை கபிலருக்கு. அன்றைய நாள் முழு நிலவு நாளாகவும் இருந்ததால் இருள் கவியத் தொடங்கினாலும் பாதை நன்கு தெரிந்தது. இன்னும் அரை நாழிகையில் பாரியின் மாளிகையை அடைந்துவிடலாம் என்று இன்னும் நடையினை விரைவுபடுத்தினார் கபிலர்.

***

தாயில்லாப் பிள்ளைகள் என்று பெயர் தானே ஒழிய அங்கவைக்கும் சங்கவைக்கும் தாயில்லா குறையே தெரியவில்லை. தாயுமாகித் தந்தையுமாகி நல்சுற்றமுமாகி பாரி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டான். போதாததற்கு பெரியப்பா கபிலர் வேறு. நல்லாசானாக அவர்களுக்கு நல்ல கல்வியும் கேள்வியும் அமையுமாறு பார்த்துக் கொண்டார் கபிலர். என்ன தான் தாய், தந்தை, ஆசானாக இவர்கள் இருந்தாலும் நல்ல நட்பு ஒன்றிருந்தால் வேறெந்த குறையும் தெரியாது இல்லையா? ஒத்த வயதினர் நட்பாக இருக்கும் போது நல்லது கெட்டது தெரியாமல் புரியாமல் எல்லாவற்றையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதுவே கொஞ்சம் வயதில் மூத்தவர் நட்பாக இருந்தால் நல்லது கெட்டது சொல்லி அன்போடு நல்வழி காட்டுவார்கள் இல்லையா? அப்படி மூத்தவர்கள் நட்பாக இருப்பது எல்லோருக்கும் அமைவதில்லை. அங்கவையும் சங்கவையும் அந்த வகையில் நல்லூழைக் கொண்டிருக்கிறார்கள். பாரியும் கபிலரும் அவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும் விளங்கினார்கள்.

ஒவ்வொரு முழு நிலவு இரவும் மாளிகையின் நிலா முற்றத்தில் தான் இரவு உணவு அருந்திவிட்டு நால்வரும் அமர்ந்து இரவு நான்கு நாழிகை வரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று முழு நிலவு நாள். மாலை மயங்கிவிட்டது. இன்னும் கபிலரைக் காணவில்லை. அவர் தமிழ் சங்க அழைப்பின் பேரில் மதுரைக்குக் கிளம்பி ஒரு பட்சம் ஆகிவிட்டது. அவர் கிளம்பிச் சென்ற சில நாட்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லப் பாரிக்கும் அவன் பெண்களுக்கும் கபிலர் இல்லாத குறை நன்கு தெரியத் தொடங்கிவிட்டது. எப்படியும் முழு நிலவு நாளுக்குள் திரும்பி வந்துவிடுவார் என்ற உறுதி இருந்ததால் அவர் வரும் நாளையும் பொழுதையும் எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் செல்லச் செல்ல பாரிக்கு பரபரப்பு அதிகமானது. இரு வீரர்களை அழைத்து கபிலர் வரும் வழியில் சென்று பார்க்குமாறு சொன்னான். அவர்களும் சிறிது தொலைவு சென்றுவிட்டு கபிலரைக் காணவில்லை என்று வந்துவிட்டார்கள். கபிலருக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமோ என்ற கவலையும் பாரிக்குச் சேர்ந்து கொண்டது.

முழு நிலா நாளன்று ஒரு இளமையான ஆடாகப் பார்த்து அறுத்து அதன் குருதியையும் புலாலையும் தனித் தனியே சமைத்து மிகுந்த குருதியையும் புலாலையும் இட்டு சமைத்த செஞ்சோற்றுடன் அவற்றை வேலனுக்குப் படைத்து உண்பதும் பல நாட்களாகத் தொடர்ந்து வரும் வழக்கம். இன்று மாலை வேலனுக்கு குருதியும் புலாலும் செஞ்சோறும் படைத்து வேலனின் வெறியாட்டமும் முடிந்துவிட்டது. வேலவன் கோட்டத்தில் நின்று வேலனைத் தொழுதுக் கொண்டிருந்த அந்த நேரத்திலாவது கபிலர் வந்துவிடுவார் என்று பாரி எண்ணினான். தந்தையின் பரபரப்பை அப்போது கண்ட மகள்கள் இருவரும் அவரது துடிப்பைப் புரிந்து கொண்டனர். கபிலருக்கு எந்த தீங்கும் நேரக் கூடாது என்று அவர்கள் இருவரும் கந்தனை வேண்டிக் கொண்டனர்.


இறைவனைத் தொழுது முடித்த பின்னர் பாரி உடனே அந்த இடத்தை விட்டு நகன்றுவிட்டான். பாரி மகளிர் இருவரும் சிறிது நேரம் கூடுதலாக அங்கு தங்கி இறை வழிபாட்டைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். வேலனுக்குப் படைத்த உணவு நறவுடன் சேர்த்து உண்ணப்படுவதற்காக நிலா முற்றத்திற்கும் சென்று அடைந்துவிட்டது. கபிலர் வராமல் எப்படி நிலா முற்றத்தில் உணவுண்பது என்ற தயக்கமும் கபிலருக்கு என்னவாயிற்றோ என்ற கலக்கமும் கொண்டு பாரி நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் ஒரு வீரன் ஓடி வந்து வணங்கி கபிலரின் வருகையைச் சொன்னான். சேந்தனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு கபிலரைக் காண விரைந்தான் பாரி.

"வாருங்கள் நண்பரே. ஏன் இந்த தாமதம்? எங்கே நீங்கள் இன்று வராமல் நின்றுவிடுவீர்களோ என்று தவித்துப் போனேன்"

"பாரி. அதெப்படி நான் வராமல் போவேன்? இன்று முழு நிலவு நாளல்லவா? சொன்னபடி இரவு உணவிற்கு வந்துவிட்டேன் பார்"

"கபிலரே. நீங்கள் வரத் தாமதம் ஆனதால் வீரர்களை அனுப்பி வழி பார்த்து வரச் சொன்னேன். உங்களைக் காணவில்லை என்று சொன்னார்களே?"

"அவர்கள் நான் வழக்கமாக வரும் வழியில் சென்று பார்த்திருப்பார்கள். விரைவாக இங்கு வர வேண்டும் என்பதற்காக நான் வேறு வழியின் வந்தேன் பாரி"

எல்லா பரபரப்பும் கவலையும் இப்போது நீங்கிவிட்டன. கபிலர் சொன்னதைக் கேட்டு புன்சிரிப்பு உதிர்த்தான் பாரி.

"கபிலரே. வேலன் வெறியாட்டமும் முடிந்து உணவு நிலா முற்றத்திற்குச் சென்றுவிட்டது. நீங்கள் எப்போது சொல்கிறீர்களோ அப்போது நாம் எல்லோரும் சென்று உணவருந்தலாம்"

"உடனே செல்லலாம் பாரி. நடந்த களைப்பிற்கு ஊனையும் நறவையும் உண்டால் வெகு நன்றாக இருக்கும். இதோ கை, கால், முகம் அலம்பி வருகிறேன். எங்கே என் மகள்கள்?"

"அவர்கள் இருவரும் இன்னும் சேயோனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்"

***

பாடற்குறிப்பு:

புறநானூறு 108ம் பாடல். திணை: பாடாண்திணை (தலைவனைப் புகழ்ந்து பாடுவது), துறை: இயன்மொழி (உள்ளதை உள்ளபடி பாடுவது); பாடியவர்: கபிலர். பாடப்பட்டவர்: பாரிவேள்.

32 comments:

Thamiz Priyan said...

மிகவும் சிறப்பாக வந்து கொண்டுள்ளது. தொடருங்கள். :)

குமரன் (Kumaran) said...

நன்றி தமிழ்பிரியன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அப்பாடா....
பாரியைப் பாத்துச்சுப்பா இந்தப் பதிவுல! அத விட சந்தோசம், ரொம்ப நாள் கழிச்சி நண்பர்களும் சேர்ந்துட்டாங்க! சீக்கிரம் ராச்சாப்பாடு போடுங்க குமரன்!
சாப்பாடு டைம்ல தொடரும்-னு போடறது ஆன்மீகப் பேரொளி குமரனுக்கு அழகாமோ? :-)

குமரன் (Kumaran) said...

என்ன பண்றது இரவிசங்கர்...பாரி மகளிருக்குச் சொல்லி அனுப்பி வரவேணாமா? அவங்க வந்தவுடனே சாப்புட வேண்டியது தான். பேசாம சாப்புட்டா கதை வேகமா போகும். சொன்னா கேக்கப் போறாங்களா என்ன?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாரி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டான். போதாததற்கு பெரியப்பா கபிலர் வேறு//

ஓ...அப்ப பாரி, கபிலரை அண்ணா-ன்னு ஆசையாக் கூப்புடுவாரு போல! நல்ல நண்பர்கள் போங்க! :-)

//அதிலிட்ட விறகு சந்தன மர விறகானதால் இந்த நறுமணம்.'
//

சந்தனம் தேய்க்க தேய்க்கத் தான் மணக்கும்-னு சொல்லுவாங்க! சுட்டால் நறும் புகை வருமா என்பது எந்த அளவுக்கு அறிவியல் பூர்வமானது, குமரன்?

//மதுரைக்குக் கிளம்பி ஒரு பட்சம் ஆகிவிட்டது//
பட்சம் மீன்ஸ் வாட்? :-)

//அதுவே கொஞ்சம் வயதில் மூத்தவர் நட்பாக இருந்தால் நல்லது கெட்டது சொல்லி அன்போடு நல்வழி காட்டுவார்கள் இல்லையா?//

எவ்வளவு உண்மை! எனக்குக் கூட அப்படி ஒரு மூத்த முருக நண்பர் இருக்காரு! :-) வேலும் மயிலும் அவரும் துணை! :-))

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

//சந்தனம் தேய்க்க தேய்க்கத் தான் மணக்கும்-னு சொல்லுவாங்க! சுட்டால் நறும் புகை வருமா என்பது எந்த அளவுக்கு அறிவியல் பூர்வமானது, குமரன்?
//

நீங்க இப்படி கேக்கப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு எழுதுறப்பவே கூகிளாரைக் கேட்டேனே. நீங்களும் கேட்டுப் பாருங்க. என்ன சொல்றாருன்னு சொல்லுங்க. :-)

பட்சம் என்றால் என்னவென்று உண்மையிலேயே தெரியாதா என்ன? நாட்கள் கணக்கில் நாள், வாரம், பட்சம், திங்கள், காலம் (பெரும்பொழுது) என்று வருமே. அதில் வருவது தான் பட்சம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு இளமையான ஆடாகப் பார்த்து அறுத்து அதன் குருதியையும் புலாலையும் தனித் தனியே சமைத்து//

புலாலைச் சமைக்கலாம்! தெரியும்!
இரத்தத்தை எப்படிச் சமைப்பாங்க? பெரியவங்க வந்து வெவரஞ் சொல்லுங்கப்பா!

//மிகுந்த குருதியையும் புலாலையும் இட்டு சமைத்த செஞ்சோற்றுடன் அவற்றை வேலனுக்குப் படைத்து உண்பதும் பல நாட்களாகத் தொடர்ந்து வரும் வழக்கம்//

வேலவா! வேலவா!
படையலை ஏற்றுக் கொண்டு, உள்ளத்து
அடையலை ஏற்றுக் கொண்டு, தமிழ்த்
தொடையலை ஏற்றுக் கொண்டு, எமக்கு
நடையலைக் காட்டி நல்லருள் செய்யப்பா!

குமரரே!
அது என்ன இடுகல் மாதிரி ஒரு படம்? அதான் வேலவனா?
வேலன் வெறியாட்டம் என்றால் என்ன? அது ஏன் "வெறி" ஆட்டம்?
ஆன்மீகப் பதிவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் வந்து விளக்க வேணுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். நீங்கள் சின்ன வயசுல அசைவம் சாப்பிட்டது உண்டு தானே? ரத்தப் பொரியல் கேள்விபட்டதில்லையா? நான் மதுரை பேருந்து நிலையத்துல சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன். ஆட்டுக்கால் சூப், கோழி சூப் விக்கிறவங்க இரத்தப் பொரியலையும் விப்பாங்க.

அடையல், தொடையல், நடையல்ன்னு எல்லாம் எழுதியிருக்கீங்க. அப்படின்னா என்ன?

அடுத்து கேட்டிருக்கிறதெல்லாம் ஆன்மிகப் பெரியவர்கள் வந்து விளக்குவாங்க. எனக்குத் தெரிஞ்சதை விட அவங்களுக்குத் தான் நிறைய தெரியும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீங்க இப்படி கேக்கப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு எழுதுறப்பவே கூகிளாரைக் கேட்டேனே. நீங்களும் கேட்டுப் பாருங்க//

அதெல்லாம் கேக்க மாட்டோம்!
எங்களுக்குக் கூடலே கூகுள்! :-)

//பட்சம் என்றால் என்னவென்று உண்மையிலேயே தெரியாதா என்ன?//

பார பட்சம்-னு சொல்லுவாங்களே! அதுவா? :-)
ஓ..அமாவாசைக்குப் பின் பதினைந்து நாள் ஒரு பட்சம், பெளர்ணமிக்குப் பின் இன்னொரு 15 days இன்னொரு பட்சம்! அதுவா குமரன்?

// இரவிசங்கர். நீங்கள் சின்ன வயசுல அசைவம் சாப்பிட்டது உண்டு தானே?//

உண்டு உண்டு!

//ரத்தப் பொரியல் கேள்விபட்டதில்லையா?//

ஹூம்! நான் தான் அஞ்சாங் கிளாஸ்ஸோட நிறுத்திப்புட்டேனே! :-(
பசங்க சைதாப்பேட்டை, தரமணி ரோட் சைட் பாப்பா அக்கா கடைல திம்பாங்க! ஞாபகம் வந்திரிச்சி! :-)

G.Ragavan said...

மிக அழகா எழுதீருக்க ரசிச்சுப் படிச்சேன். நல்ல எழுத்து நடை உங்களுடையது. சொற்களைக் கூட்டுவதும் அவைகளைச் சேர்த்துப் பூட்டுவதும்..பூட்டியவைகளை எங்கள் கண்களுக்குக் காட்டுவதும் என்று விளையாண்டிருக்கின்றீர்கள். நன்று நன்று.

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

குமரரே!
அது என்ன இடுகல் மாதிரி ஒரு படம்? அதான் வேலவனா?
வேலன் வெறியாட்டம் என்றால் என்ன? அது ஏன் "வெறி" ஆட்டம்?
ஆன்மீகப் பதிவர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் வந்து விளக்க வேணுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! //

அப்ப நீங்கதான தெய்வமே வந்து விளக்கனும். விளக்குங்க விளக்குங்க. தெரிஞ்சுக்கக் காத்திருக்கோம். சரியான வெறிபிடிச்ச சாமியா இருக்கும் போல இருக்கே!!!!! :) ஆனா நீங்க வெளக்குனா எங்களுக்கும் புரிஞ்சிரும்.

துளசி கோபால் said...

எனக்கும் இதைத்தான் கேக்கணும்...
அந்தப் படம்?

நடுகல்லா?

துளசி கோபால் said...

சந்தனக்கட்டை அடுப்பில் எரியும்போது வாசனை ஆளைத் தூக்கும்.

பழங்காலத்தில் அக்கா வீட்டில் பார்த்துருக்கேன்.

விறகு ஒடிச்சுக் கொண்டுவந்து விற்கும் ஆட்கள் சிலசமயம் விறகுக்கட்டில் சந்தனக் கொம்புகள் வச்சிருவாங்க.

அப்ப, அது எல்லாம் சந்தனமரம் என்ற விவரம்கூட எங்களுக்கு இல்லை(-:

சிவமுருகன் said...

//இன்று மாலை வேலனுக்கு குருதியும் புலாலும் செஞ்சோறும் படைத்து வேலனின் வெறியாட்டமும் முடிந்துவிட்டது.//

சைவ சமய கடவுளுக்கு அசைவ படையலா? ஒருவேளை இவர் கிராம தெய்வமோ? விளக்கவும்!

மெளலி (மதுரையம்பதி) said...

அப்பாடியோவ்....என்ன கற்பனை. அதை எப்படி சொல்கிறீர்கள். இதுவரையில் தமிழ் படிக்கவில்லையேன்னு வருந்த வைக்கிறது இந்த தொடர்.

//அடையல், தொடையல், நடையல்ன்னு எல்லாம் எழுதியிருக்கீங்க. அப்படின்னா என்ன? //

ரீப்பீட்டே!!!

நறவுடன் - நறவு அப்படின்னா?

Geetha Sambasivam said...

வேலன் வெறியாட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன், விளக்கத்தை எதிர்பார்க்கிறேன், உங்களிடம் இருந்து.

VSK said...

என்னவொரு இனிமையான நடை! படிக்கும்போதே வேங்கை மரத்தினின்று சந்தனப் புகை வந்து மூக்கைத் துளைத்தது போன்ற உணர்வு குமரன்!

ரவி நம்மளை இழுத்து என்னமோ வம்பு பண்றாரு போல!:))

வெறியாட்டம் பற்றி மேலும் அறிய நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையில் விளக்கம் இருக்கிறது. இன்று மாலை மீண்டும் வந்து விளக்கமாகச் சொல்கிறேன்!

சும்மாவாச்சும் 'அடையல், தொடையல் நடையல்'னு படிக்காம முந்திய சொல்லோடு சேர்த்துப் படியுங்க! பொருள் புரியும்!
உள்ளத்தை அடைதல், அடையல்!
தொடுத்த மாலை, தொடையல்!
அலைகள் தொடர்ந்து அடுத்தடுத்து வருதல் போல அழகாக நடத்தல், நடையலை!

சரியா ரவி!
:))

இதெல்லாம் சாப்பிடாத எனக்கே தெரிஞ்ச ரத்தப் பொறியல், ரவிக்கு தெரியாமல் போனதெப்படியோ!?

கிருஷ்ண பட்சம், சுக்ல படசம் அப்போ டக்குன்னு நினைவுக்கு வரலை! அப்படித்தானே ரவி?:)))))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

சிறப்பான நடை விரிவான தமிழ்ப் பதிவு.படிக்கத்தூண்டும் வண்ணம் எழுதுகிறேன்

குமரன் (Kumaran) said...

சென்ற இடுகையில் சொன்னது தான் இராகவன். உங்களது இடுகைகளைப் படித்ததில் கற்றுக் கொண்டது தான் இந்த நடை. இப்படி எழுதி வரும் போது கொஞ்சம் எளிமையாக இருக்க வேண்டுமென்று முயல்கிறேன். அது எவ்வளவு தூரத்திற்கு வெற்றி பெறுகிறது என்று தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கரின் ஐயத்தைத் தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி துளசியக்கா.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். நாம் இன்று வணங்கும் அதே முருகன் தான் இந்த வேலவனும். இன்றைக்குத் தான் சைவக் கடவுள் (புலால் படைக்கக் கூடாத கடவுள்). கபிலரின் காலத்தில் இவருக்கும் புலால் படைக்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது. கபிலரும் தன்னை அந்தணர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஒரு பாட்டில்; அவரும் பாரியுடன் உண்ட புலால் உணவைப் பற்றி இன்னொரு பாட்டில் பேசுகிறார். அந்தப் பாடல்கள் எல்லாம் இனி மேல் இந்தத் தொடரில் வரும்.

இன்றைக்கு அசைவப் படையல் பெறும் தெய்வங்களைச் சிறு தெய்வம் என்றும் கிராம தெய்வங்கள் என்றும் சொல்லுகிறோம். அன்றைக்கு அந்தப் பிரிவுகள் இல்லை போலும். இதே முருகனை இன்றைக்கு நாம் வணங்குவதைப் போல் எல்லாம் வல்ல எல்லாமும் ஆகிய எங்கும் நிறைந்த எல்லாம் அறியும் தெய்வமாகத் தான் போற்றுகிறது பரிபாடல்.

குமரன் (Kumaran) said...

மௌலி. பாரியின் கதை வேண்டும் என்று யோகன் ஐயா சொன்ன பிறகு தேடியதில் பல பாடல்கள் கிடைத்தன. அவை தொடர்ச்சியாகவும் அமைந்திருப்பதாகத் தோன்றியது. அந்தத் தொடர்ச்சியைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து அந்த வகையில் கதையை அமைத்துக் கொண்டு போகிறேன். அந்த பாடல்கள் எல்லாவற்றையும் ஒன்றாகப் படித்தால் எல்லோருக்கும் இந்தத் தொடர்ச்சி எளிதாகப் புரிந்துவிடும். அதனால் எனக்கு இதில் தனித் திறமை இருக்கிறது என்று எண்ணவில்லை.

பாடல்களில் இல்லாத கருத்துகளையும் நிகழ்வுகளையும் 'புனைவு' என்ற அடிப்படையில் சொல்லி வருகிறேன். ஆனால் அவற்றிற்கும் தரவுகள் வேறு இடங்களில் இருக்கின்றன. இங்கே முருக வழிபாடு பற்றிச் சொல்லியிருக்கிறேனே - அவற்றிற்கும் இலக்கியத் தரவுகள் இருக்கின்றன. அவற்றை வேறு இடங்களில் படித்திருக்கிறேன். அவற்றையும் வைத்துக் கதை சொல்லிக் கொண்டு போகிறேன். கடைசியில் பார்த்தால் தொகுத்து தந்தது மட்டுமே புனைவாகவும் சொல்லப்பட்டவை பெரும்பாலும் தரவடிப்படையில் ஆனவையாகவும் அமையும் என்று நினைக்கிறேன்.

இது வரையில் தமிழ் படிக்காட்டி என்ன? இனி மேல் படிப்போமே! எனக்கு மற்ற சிலர் தமிழில் சுவையை உண்டாக்கினார்கள். இது போன்ற தொடர்களால் இன்னும் சிலருக்குத் தமிழில் ருசி ஏற்பட்டால் நல்லது தான். இரவிசங்கர் ஆன்மிகச் சுவையை இளைஞர்களுக்குக் காட்டுவது போல் இங்கே அடியேன் தமிழ்ச்சுவையைக் காட்ட முயல்கிறேன். :-)

நறவு என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. தேன் என்பது ஒரு பொருள். கள் என்பது இன்னொரு பொருள். இங்கே இரண்டாவது பொருளை எடுத்துக் கொள்ளுங்கள்.

கள்ளிற்குத் தேறல் என்றும் ஒரு பொருள் உண்டு. வடித்தெடுக்கப்பட்ட கள் என்று அதற்குப் பொருள் வரும். தானியங்களிலிருந்து எடுக்கப்படும் மதுவகைகளுக்கும் தேறல் என்ற பெயர் வழங்கியிருக்கிறது கபிலர் காலத்தில்.

பாச மலர் / Paasa Malar said...

முன்பே படித்த போது கேள்விகள் அதிகம் எழுந்தன..அதே கேள்விகளும் விடைகளும் இப்போது பின்னூட்டத்தில் படித்துத் தெளிந்தேன்..

உங்கள் நடை பகுதிக்குப் பகுதி எளிமை இயல்பாகி வருகிறது...
அதிலும் சிறப்பாக இந்தப் பகுதி..

நடு நடுவே நீங்கள் சொல்லும் செய்திகளும் சுவாரசியம்..அந்த வகையில் இந்தப் பகுதியில் நட்பு பற்றியது...சம வயது நட்பு..மூத்த வயது நட்பு..மிகவும் உண்மை.

அந்த நடுகல் போன்ற படத்தின் விளக்கம் இன்னும் கிடைக்கவில்லையே..
வேலவனின் உருவம்தனா அது?

VSK said...

வேலனின் அருள் தன் மீது வந்து, வெறியாட்டாளன் என்கின்ற பூசாரி ஆவேசம் கொண்டு ஆடுகின்ற ஆட்டமே வெறியாட்டம் என வழங்கப் படுகிறது.

திருமுருகாற்றுப்படை, கந்தபுராணம் நாலடியார் இவற்றி எல்லாம் இதற்கான குறிப்புகள் இருக்கின்றன.

155 வெறியயர் கின்ற காலை வேலன்மேல் வந்து தோன்றிப் பிறிதொரு திறமும் அன்றால் பெய்வளை ...
'கந்தபுராணம்'

வேலன் தஇய வெறியயர் ளனும். ாடுங் ாவுங் வின்பெறு துருத்தியும். யாறுங் குளனும் வேறுபல் ...
'திருமுருகாற்றுப்படை'

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறங்கண்ணி முன்னர்த் தயங்க ...
'நாலடியார்'

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
நாலு ,ஐந்து வரிக்குள் இவ்வளவு இருக்கிறதா???விபரிப்புகள் காட்சியை முன் நிறுத்துகின்றன,
தொடரை உடன் படித்தாலும் முக்கியமானவர்கள் பின்னூட்டத்திற்கு காத்திருப்பது என் வழமையாகி
விட்டது.
நிறைய விடயங்களை அறிய முடிகிறது.

தேறல் என்பது மது, இந்த தேறலுக்கு முதல் நிலை ஊறல் என்பார்கள்.
செய்திகளில் படித்திருப்பீர்கள். ' கள்ளச் சாராயம் காச்சுவோரின் ஊறல்களுடன் பானைகள்
அடித்து நொருக்கப்பட்டன.'
ஊறலைக் காச்சி,வடித்துத் தேற்றியதால் இந்தப் பெயரா??

குமரன் (Kumaran) said...

கீதா அம்மா. வேலன் வெறியாட்டத்தைப் பற்றி விளக்கமாகக் கடைசியில் சொல்கிறேன். எஸ்.கே.யும் நல்ல குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

குமரன் (Kumaran) said...

தங்கள் பாராட்டிற்கு நன்றி எஸ்.கே. சொன்னது போல் மீண்டும் வந்து குறிப்புகளைத் தந்தற்கு மிக்க நன்றி.

இரவிசங்கரோட கவிதைக்கு விளக்கம் சொன்னதற்கும் நன்றி. இந்த விளக்கம் இல்லாவிட்டால் எனக்கு புரிந்திருக்காது.

அதெல்லாம் டக்குன்னு அவருக்கு பட்சம்ன்னா என்னன்னு நினைவுக்கு வந்தாச்சு. சும்மா கொக்கி போட்டுப் பாக்குறாரு. :-)

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி தி.ரா.ச.

குமரன் (Kumaran) said...

முதல் பகுதியில் எந்த விதமான விவரங்கள் இந்தத் தொடரில் வரும் என்று சுட்டும் முகமாக கேள்விகளை நானே கேட்டு விடைகளைச் சொல்லியிருந்தேன். அப்படிப்பட்ட விவரங்கள் இந்தக் கதையின் நடுவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன பாசமலர். அதனால் படிக்கும் போது கேள்விகள் வந்தால் தயங்காமல் கேளுங்கள். விளக்கங்களை முடிந்த வரை கதையிலேயே சொல்லிவிடுகிறேன். அங்கே விளக்கம் தேவையில்லாத விவரங்களுக்கு விளக்கங்கள் பின்னூட்டங்களில் நானோ படிக்கும் மற்றவர்களோ தரலாம்.

இந்தப் பகுதியில் நடை எளிதாக இருந்ததா? மகிழ்ச்சி. மற்றவர்கள் சிலரும் நடையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். அடுத்தப் பகுதிகள் எழுதும் போது இந்தப் பகுதியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுதவேண்டும் போலிருக்கிறது. :-)

நட்பைப் பற்றி நான் சொன்னதை இன்னும் விவரித்துச் சொல்ல வேண்டும். இது கல்லூரியில் நடந்தக் கலந்துரையாடலில் பெற்ற கருத்து. தாய், தந்தை, ஆசான், நண்பர் இவர்களில் இளைஞர்கள் யாரிடம் நெருக்கமாக இருக்கிறார்கள்? யாரை வழிகாட்டியாகக் கொள்கிறார்கள்? - இது கலந்துரையாடலின் தலைப்பு. தாய், தந்தை, ஆசான் இவர்கள் வழிகாட்டிகளாக இருக்கத் தகுந்தவர்கள் - ஆனால் இவர்களிடம் நெருக்கம் இல்லை. நண்பர்களிடம் நெருக்கம் உண்டு; ஆனால் அவர்களுக்கு வழிகாட்டியாகும் அனுபவம் இல்லை - அதனால் தாய், தந்தை, ஆசான் இவர்கள் நண்பர்களாக அமைந்துவிட்டால் அதுவே பெரிய கொடுப்பினை - இப்படிப் போனது அந்தக் கலந்துரையாடல். அது உண்மை தான் என்று நீங்களும் ஒத்துக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.

வேலவனின் உருவத்தைப் பற்றியும் கடைசியில் கூறுகிறேன்.

குமரன் (Kumaran) said...

வேலனாட்டத்தைப் பற்றிய குறிப்புகள் தந்து உதவியதற்கு நன்றிகள் எஸ்.கே.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஐயா. பின்னூட்டங்களில் ஒரு உரையாடல் நடத்துவதற்கு இந்த வலைப்பதிவில் தொடர்கதை எழுதும் முறை நன்கு வாய்ப்பளிக்கிறது.

ஊறல் காய்ச்சி வடித்துத் தேற்றுவதால் தேறல். சரியாகச் சொன்னீர்கள். தெளிவான மது என்றும் அதற்குப் பொருள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உள்ளத்தை அடைதல், அடையல்!
தொடுத்த மாலை, தொடையல்!
அலைகள் தொடர்ந்து அடுத்தடுத்து வருதல் போல அழகாக நடத்தல், நடையலை!
சரியா ரவி!
:))//

ஆகா, திருப்புகழ் வித்தகர் அடியேன் பொடியேனைப் பாத்து சரியா என்று கேட்பதும் சரியா? :-)
அருமையான எளிமையான அதே கவிதை நடையில் விளக்கம் சொல்லிக் கலக்கிட்டீங்க SK!

"வெறியயர்" - வேலன் வெறியாட்டத்துக்குத் தக்க இலக்கியச் சான்றுகள் தந்த SK வாழ்க! வாழ்க!!

குமரன், வெயிட்டிங் ஃபார் யுவர் விளக்கம்ஸ்!