Tuesday, December 18, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 7

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.



மலை மேல் ஏறிப்போகும் கற்படிகளால் ஆன பாதையில் நூறு அடிக்கு ஒரு மின்விளக்கு இருந்தது. ஒரு விளக்கின் ஒளி மங்கிப் போகும் இடத்தில் அடுத்த விளக்கின் ஒளி மங்கலாகத் தொடங்கிவிட்டது. அதனால் பாதையைப் பிடித்துச் செல்லுவது கடினமாக இல்லை. இருட்டின் அமைதியில் சுற்றிலும் சிறு பூச்சிகள் செய்யும் ஓசைகள் பெரிதாகக் கேட்டன. பத்து பதினோரு விளக்குகளைத் தாண்டியவுடன் அடிமுடி கோவில் வந்துவிட்டது. தாத்தா வெளியே உட்கார்ந்து இன்னும் நாலைந்து தாத்தாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். மூன்று பேரும் வருவதைப் பார்த்து உள்ளே செல்லும் படி சைகை காட்டிவிட்டு மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.

பகலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அந்த அறை அவ்வளவு ஒன்றும் வித்தியாசமாக இல்லை. அதே அறை தான். இப்போது மஞ்சள் குமிழ் மின்விளக்கின் 60 வாட்ஸ் ஒளியில் கொஞ்சம் மங்கலாக இருந்தது. முழு அறைக்கும் ஒரே விளக்கு தான்.

மூன்று பேரும் உள்ளே வந்து உட்கார்ந்த சிறிது நேரத்தில் தாத்தாவும் உள்ளே வந்தார்.

"தரிசனமெல்லாம் எப்படி இருந்தது?"

"நல்லா இருந்தது தாத்தா" சொன்னான் கேசவன்.

"கிரிவலமும் போயிட்டு வந்தாச்சு போல"

"ஆமாம் தாத்தா"

"என்ன என்ன பாத்தீங்க?"

"அர்த்தநாரீஸ்வரர் கோவில், இடுக்குப் பிள்ளையார், எட்டு திக்கு லிங்கம்"

"எது உனக்கு ரொம்ப பிடிச்சது மோகன்?"

"இடுக்குப் பிள்ளையார் தாத்தா"

"ஈசான்ய லிங்கம் பிடிக்கலையா?" என்று கேட்டுவிட்டு சத்தமில்லாமல் சிரித்தார்.

"பிடிச்சுது தாத்தா" பொய் சொன்னான் கந்தன்.

"அப்புறம் வேற என்ன பாத்தீங்க?"

"கோவிலுக்குப் போனோம் தாத்தா" தொடர்ந்தான் கேச்வன்.

"அங்கே என்ன பிடிச்சது"

"பிடாரி அம்மன்" தன்னை அறியாமல் முந்திக் கொண்டு சொன்னான் கந்தன்.

இதற்கும் ஒரு புன்னகை தான் பதில். இதுவரை பொதுவாக மூவரிடமும் பேசிக் கொண்டிருந்த தாத்தாவின் கவனம் இப்போது கந்தனிடம் வந்த மாதிரி இருந்தது.

"மோகன். நீ நல்லா பாட்டு பாடுவ இல்லை. ஒரு பாட்டு பாடு"

வழக்கம் போல் தயங்கினான் கந்தன். திடீரென்று பாட்டு பாடச் சொன்னால் என்ன பாடுவது என்று தெரியவில்லை. கூச்சமும் இருந்தது.

"என்ன பாட்டு பாடறது தாத்தா?"

"இந்த ஊரைப் பத்தி ஒரு பாட்டு பாடு"



கொஞ்ச நேரம் யோசித்தான் கந்தன். திருவண்ணாமலையில் தான் திருவெம்பாவை பாடப்பட்டது என்பது நினைவிற்கு வந்தவுடன் திருவெம்பாவை முதல் பாட்டு பாடத் தொடங்கினான்.

ஆதியும் அந்தமும்
இல்லா அருட்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும்
வாட்தடங்கண் மாதே வளருதியோ
வன்செவியோ நின் செவி தான்?
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே
விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல்
நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்
கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி
பரிசேலோர் எம்பாவாய்

(பாடலின் பொருள்)

சரியான இடத்தில் பிரித்துப் பிரித்துப் பாடியதால் பாடலுக்குப் பொருள் எளிதாக விளங்கியது மணிகண்டனுக்கும் கேசவனுக்கும். பாடிவிட்டு கந்தன் தாத்தாவைப் பார்த்தான்.

"இந்த பாட்டு யாரு பாடுனது?"

"மாணிக்கவாசகர் பாடுனது தாத்தா. திருவண்ணாமலையில நடந்த பாவை நோன்புக்காக பாடுன திருவெம்பாவை"

"இது திருவண்ணாமலைல பாடுனதுங்கறதுக்கு ஏதாவது குறிப்பு பாட்டுல இருக்கா?"

"இருக்கு தாத்தா. மொதோ வரியிலயே இருக்கு. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதின்னு திருவண்ணாமலை தலபுராணத்தைச் சொல்லியிருக்காரு"

"ம்ம்ம்" சிரித்துக் கொண்டார் தாத்தா. "இன்னும் பாடு"

அவனுக்குப் பிடித்த இன்னொரு திருவெம்பாவைப் பாட்டைப் பாடத் தொடங்கினான் கந்தன்.




முன்னைப் பழம்பொருட்கும்
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும்
பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப்
பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம்
ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர்
ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே
தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே
எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்
ஏலோர் எம்பாவாய்

(பாடலின் பொருள்)

பாட்டு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது இரு இளைஞர்களுக்கும்.

"இந்தப் பாட்டு என்ன சொல்லுது மோகன்?"

"சிவனடியாரை தான் கணவனா வரணும்ன்னு பொண்ணுங்க வேண்டிக்கிறாங்க தாத்தா"

"அவ்வளவு தானா?"

கொஞ்ச நேரம் யோசித்தான் கந்தன்.

"கடவுள் புராணமயமானவன்"

"அப்படின்னா?"

தாத்தா தெரிந்து கொண்டே மற்றவர்களுக்காகக் கேட்கிறார் என்று புரிந்தது.

"புராணம்ன்னா ஒரே நேரத்தில பழமையாவும் புதுமையாவும் இருக்கிறது. புரான்னா பழசு. நவன்னா புதுசு. கடவுள் எல்லாத்துக்கும் பழசா இருக்காரு. அதே நேரத்துல எல்லாத்துக்கும் புதுசாவும் இருக்காரு"

தலையாட்டி ஆமோதித்தார் தாத்தா. கேசவன் 'பாட்டுல எளிமையா சொல்லியிருக்காங்க. புராணமயமானவன் அப்படி இப்படின்னு இந்த கந்தன் தான் கொஞ்சம் குழப்புறான்' என்று எண்ணிக் கொண்டான்.

"அப்புறம்"

"அவ்வளவு தான் தாத்தா"

"பொண்பிள்ளைங்களுக்கு அடியார்கள் கணவராகணும். சரி. ஆண்பிள்ளைகளுக்கு எப்படி?"

'ஆகா. மாட்டிவிட்டுட்டாரே. இது வரைக்கும் பொண்ணுங்க இந்தப் பாட்டைப் பாடற மாதிரி தானே பொருள் புரிஞ்சு வச்சிருந்தேன். இப்ப ஆம்பளைகளுக்கு எப்படின்னு கேக்குறாரே'

சிந்தித்தான் கந்தன். அந்த இடத்தின் ஆளுமையா தாத்தாவின் ஆளுமையா தெரியவில்லை. விடை தெரிந்தது கந்தனுக்கு.

"ஆம்பளைங்களுக்கும் அதே அர்த்தம் தான் தாத்தா. அடியார்க்கு அடியாரா இருக்கணும்ன்னு வேண்டிக்கணும் இந்தப் பாட்டைப் பாடறப்ப"

ஆமோதித்துத் தலையாட்டினார் தாத்தா. "அடியாருக்கு அடியாரா இருக்கிறதுன்னா என்ன?"

"அவங்க மனசு கோணாம இருக்கிறது"

"அப்புறம்"

"அவங்களுக்குத் தோழரா இருக்கிறது. அவங்க சொல்படி நடக்கிறது. அவங்களோட சந்தோசமே நமக்கு சந்தோசமா இருக்கிறது"

"அடியார்ன்னா யாரு?"

சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை கந்தனுக்கு.

"அடியார்ன்னு சொல்லிக்கிறவங்க எல்லாம் அடியாரா?" அடுத்த கேள்வியை வீசினார் தாத்தா.

"அப்படி சொல்ல முடியாது தாத்தா"

"அப்புறம்?"

"அவங்க முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும். அவங்களைப் பாத்தாலே தெரியும் தாத்தா"

"உண்மையாவா? உனக்கு அப்படி யாரையாவது தெரிஞ்சிருக்கா?"

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை கந்தனுக்கு. கேசவனைப் பார்த்தார் தாத்தா.

"அடியார்ன்னு யாரை கடவுள் ஏத்துக்கிறாரோ அவங்க தான் அடியார் தாத்தா"
"சரியா சொன்ன கேசவா. கடவுள் ஏத்துக்கிட்டாருன்னு எப்படி தெரியும்?"

கேசவனுக்கும் பதில் தெரியவில்லை.

தாத்தா சிரித்துக் கொண்டே "ம்ம். சரியாத் தான் சொல்றீங்க. ஆனா இன்னும் கொஞ்சம் அனுபவம் வேணும். அந்த அனுபவம் வந்தா தானா கடவுளைப் பார்க்கலாம். அடியாரையும் பார்க்கலாம். சரி அடுத்த பாட்டு பாடு"



காத்துக் கொண்டிருந்தது போல் கொஞ்சம் கூட தயங்காமல் அடுத்தப் பாட்டைத் தொடங்கினான் கந்தன்.

போற்றி அருளுக நின்
ஆதியாம் பாத மலர்
போற்றி அருளுக நின்
அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும்
தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும்
போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும்
ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும்
காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய
ஆட்
கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீர்
ஆடேலோர் எம்பாவாய்

(பாடலின் பொருள்)

"பொருத்தமான பாட்டு"

தாத்தா அப்படி சொன்ன பிறகு தான் திருவண்ணாமலைக்கும் அடி முடி கோவிலுக்கும் பொருத்தமான வரிகள் இந்தப் பாட்டில் வந்தது புரிந்தது கந்தனுக்கு. அவனை அறியாமலேயே 'போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்' என்ற வரியை இரு முறை பாடியிருந்தான்.

இந்த பாட்டு பாடி முடிப்பதற்குள் கேசவன் கண்களில் நீர் நிறைந்திருந்தது. பாடலில் நன்கு லயித்துவிட்டான் என்று தெரிந்தது. கந்தனின் மனமும் நன்கு பண்பட்ட நிலம் போல் மாறியிருந்தது. இறுகியிருக்கும் நெஞ்சம் இளகியிருந்தது.

"உனக்குப் பிடிச்ச இன்னொரு பாட்டு பாடு" மீண்டும் கட்டளை வந்தது தாத்தாவிடமிருந்து. கொஞ்சம் சிந்தித்துவிட்டு அடுத்தப் பாடலைத் தொடங்கினான் கந்தன்.

நாராயண தே நமோ நமோ பவ
நாரத சன்னுத நமோ நமோ (நாராயண)

முரஹர நகதர முகுந்த மாதவ
கருட கமன பங்கஜ நாபா
பரம புருஷ பவ பஞ்ஜன தே நமோ
நரம்ருக சரீர நமோ நமோ (நாராயண)



இப்போது மணிகண்டனும் பாடுவதில் சேர்ந்து கொண்டான்.

ஜலதி சயன ரவி சந்த்ர விலோசன
ஜலருஹ பவனுத சரணயுக
பலி பந்தன கோவர்த்தன வல்லப
நளினோதர தே நமோ நமோ (நாராயண)

இப்போது தாத்தாவும் சேர்ந்து கொண்டார்

ஆதி தேவ சகலாகம பூஜித
யாதவ குல மோஹன ரூபா
வேதோத்தர திருவேங்கட நாயக
ராதா ப்ரிய தே நமோ நமோ (நாராயண)

(பாடலைக் கேட்க)

திருவேங்கட நாயக என்று பாடும் போது கந்தனின் கண்களிலும் நீர் ஆறாகப் பெருகியது.

பாடல் முடிந்த பின் பத்து நிமிடம் அங்கே அமைதி நிலவியது. எதுவும் சொல்லாமல் படுக்கையைக் கை காட்டி விட்டு தாத்தா கயிற்றுக் கட்டிலை நோக்கிச் சென்றார். மூவரும் பாயை விரித்துப் படுக்கத் தயாராகும் போது டேப் ரிகார்டரில் பாட்டை ஓடவிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார் தாத்தா. மிக இனிமையான குரலில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடத் தொடங்கினார்.

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல் வண்ணன் பண்டொரு நாள்
கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார்
கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

அரும்பொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த
உறுபசி ஒன்றின்றியே உலகடைய உண்டனையே
உண்ட வாய் களவினால் உறி வெண்ணெய் உண்ட வாய்
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே



திரண்டு அமரர் தொழுது ஏத்தும்
திருமால் நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும்
இருள் தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே

பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம்
விரி கமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே

மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே



பாடலின் பொருள்
பாடலைக் கேட்க

பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே என்ற வரிகள் வரும் போது கந்தனை உறக்கம் தழுவியது.

26 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா....
குட்டிப் பசங்கள தாத்தா என்னென்னமோ பேசி, போட்டு வாங்குறாரா? நல்ல சில உரையாடல்கள், குமரன்!

//பொண்பிள்ளைங்களுக்கு அடியார்கள் கணவராகணும். சரி. ஆண்பிள்ளைகளுக்கு எப்படி//

அதானே!
ஆம்பிளைங்க நோன்பு நோற்க மாட்டாங்களோ?
என் தோள்கள் நின் அன்பரல்லாப் பெண்களைத் தழுவற்க-ன்னு பாட மாட்டாங்களோ?

அது என்ன பெண்கள் தான் அப்படி வெளிப்படையா உருகணுமா?
ஆண் அடியார்கள் உருகக் கூடாதா?

நல்லா கேட்டாருப்பா! ;-)

//அடியார்ன்னு யாரை கடவுள் ஏத்துக்கிறாரோ அவங்க தான் அடியார் தாத்தா//

அடியாரை மட்டும் அல்ல! அல்லாதாரையும் தான் கடவுள் ஏத்துக்கிடுவாரே!

கடவுளை விசுவாசத்துடன், முழுப் பற்றுதலுடன் யார் ஏத்துக் கொண்டு நடக்குறாங்களோ,
அவங்க தான் அடியார் தாத்தா! -

அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே!

அடியேன் சொன்னதா தாத்தாவிடம் சொல்லி விடுங்கள் குமரன்! :-)))

இலவசக்கொத்தனார் said...

நல்லாத்தேன் இருக்கு பாட்டும் கூத்துமாய்!! :))

மெளலி (மதுரையம்பதி) said...

இந்த பதிவினை படித்தபின் கதையின் கரு என்று நான் எதிர்பார்ப்பது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது..பார்க்கலாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாடல்கள் அருமை!
அதிலும் போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர் - நெக்குருகும்!

நாராயண தே நமோ நமோ பாடலில் எங்கு கந்தன் கலங்கினான்-னு சொன்னீங்களோ, அதே அனுபவம் இங்கும் ஏற்பட்டிருக்கு! ;-)

//தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது//

படர்ந்து ஆரணம் முழங்க-ன்னு வரும்-னு நினைக்கிறேன் குமரன்.
மறை ஒலி படர்ந்து ஒலிக்குதுன்னு பொருளா?

மிக அருமையான பாடல்! சிலம்பின் ஆய்ச்சியர் குரவைப் பாட்டை எமெஸ் குரலில் கேட்பதே ஒரு தனி சுகம்!

jeevagv said...

ஆகா, சத்சங்கம் நன்றாக களை கட்டி இருக்குது!

VSK said...

மார்கழி மாதத்துக்கு ஏற்ற புனிதப் பதிவு.

பல நல்ல விளக்கங்கள்!

"சொல்லும் பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்" என்பதை ஒட்டி அமைந்திருக்கின்றன.

//ஆண் அடியார்கள் உருகக் கூடாதா?
நல்லா கேட்டாருப்பா! ;-)//

இவை பாவை நோன்புப் பாடல்கள்.

பெண்கள் நோற்பதாக அமைந்தவை.

எனவே அவர்கள் கேட்பதாக இயற்றியாஅண் ஆசிரியரே அமைத்திருக்கிறார்.

இதில் குறை சொல்ல என்ன இருக்கிறது.

அவர்கள் கேட்க மாட்டார்களோ என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றுகிறது.


//அடியாரை மட்டும் அல்ல! அல்லாதாரையும் தான் கடவுள் ஏத்துக்கிடுவாரே!//

கடவுள் ஏத்துக்கறதைப் பத்தி இங்கு பேசலியே! அவர் 'இன்னார் அடியார், இவர் அடியார் அல்ல' என இருவரையும் சமமாத்தான் ஏத்துக்குவாரு.

இந்தப் பெண்கள் கேட்பதெல்லாம், 'அதெல்லாம் உனக்கு சரிப்பா! நீ சமாளிச்சுக்குவே! எங்களுக்கு மட்டும் அடியாராப் பார்த்து அனுப்பு' என மட்டுமே!

இதில் தவறில்லையே!
:))

Geetha Sambasivam said...

"புராணம்ன்னா ஒரே நேரத்தில பழமையாவும் புதுமையாவும் இருக்கிறது. புரான்னா பழசு. நவன்னா புதுசு. கடவுள் எல்லாத்துக்கும் பழசா இருக்காரு. அதே நேரத்துல எல்லாத்துக்கும் புதுசாவும் இருக்காரு"

அருமையான சொல்லாடல், நல்லா இருக்கு. பாடலும், விளக்கமுமாக, இது கன்ஃபெஷன் என்று கண்ணன் சொன்னதும் திரும்பிப் படிச்சதும்தான் புரியுது! நன்றியும், வாழ்த்துக்களும்.

G.Ragavan said...

என்ன குமரன், இந்த வாட்டி பாட்டுகளாப் போட்டுட்டீங்க. ம்ம்ம்..இன்னமும் கதை புடிபடலை எனக்கு. நீங்க இனிமே சொல்லப் போறதுக்கும் இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருக்குறதுக்கும் தொடர்ப்பு வெச்சிருக்கீங்கன்னு புரியுது. ஆனா என்னன்னு புரியலையே...ம்ம்ம்ம்ம்...இன்னும் ஒன்னு ரெண்டு பதிவுல புரிஞ்சிருமே. :)

என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க....எப்பேற்பட்ட வரிகள்.. இந்த வரிகள் செஞ்ச வம்புகள் எத்தனையெத்தனை. அடடா!

குமரன் (Kumaran) said...

குட்டிப் பசங்களா? யாரைச் சொல்றீங்க இரவிசங்கர்? மணிகண்டனை வேணும்னா குட்டிப் பையன்னு சொல்லலாம். மத்த ரெண்டும் தடிப்பசங்க. கல்யாண வயசு ரெண்டு பேருக்கும். :-)

கேசவன் சொன்னதை தாத்தா சரியா புரிஞ்சிக்கிட்டாரு போல. நீங்க தான் புரிஞ்சிக்கலை போல இருக்கு இரவிசங்கர். அடியார்ன்னு யார் வேணும்ன்னாலும் சொல்லிக்கலாம். இப்ப நான் சொல்லிக்கலையா அப்படி. ஆனால் இறைவன் 'இவன் என் அடியான்' என்று ஏற்றுக் கொள்ளும் படி 'நடந்து' கொண்டால் தான் அவர்கள் அடியார்கள். மற்றவர்கள் எல்லாம் உருத்திராட்ச பூனைகள். அடியார்கள் என்று சொல்லிக் கொள்ளாதவர்களைப் பற்றியோ அவர்களைக் கடவுள் ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பதைப் பற்றியோ பேசவில்லை.

கடவுளை முழுப் பற்றுதலுடன் விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்கிறார்களோ அவங்க 'அடியார்' என்ற அடைமொழிக்கு ஏற்ப நடந்து கொள்பவர்களாக இருப்பார்களா? அப்படி என்றால் கடவுள் அவர்களை அடியார்கள் என்று ஏற்றுக் கொள்வார். அப்போது அவர்கள் அடியார்கள் தான். (எப்படி கடவுள் ஏற்றுக் கொள்வார் என்று உனக்குத் தெரியும் என்று கேட்டால் - எனக்குத் தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும் என்பது என் பதில்).

நீங்க சொன்னது தான் கேசவனும் சொல்லியிருக்கான் இரவிசங்கர். கேசவன் சொன்னது சரின்னு தாத்தா சொல்லிட்டதால நீங்க சொன்னதும் சரி தான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவை பாவை நோன்புப் பாடல்கள்.
பெண்கள் நோற்பதாக அமைந்தவை.

இதில் குறை சொல்ல என்ன இருக்கிறது//

SK ஐயா!
பாவை நோன்பு பெண்கள் நோற்பது! அதனால் திருவெம்பாவைப் பாடல் அப்படி இருக்கு! அது முற்றிலும் புரிகிறது! அடியேன் கேட்டது திருவெம்பாவை பற்றி அல்ல!
அதைப் பற்றிக் குறையும் சொல்ல வரவில்லை!

நான் கேட்டது தாத்தாவின் ஊடுருவும் கேள்வியை ஒட்டித் தான்! திருவெம்பாவையை ஒட்டி அல்ல!

தாத்தாவின் இந்தக் கேள்வி மிகவும் அற்புதமான ஒன்று! பல சிந்தனைகளைத் தூண்டி விடும் கேள்வி! அதைத் தான் அடியேனும் பின்னூட்டமாகத் தூண்டி விட்டேன்! பெண்கள் நோற்பது போல், இறையனுபவத்தில் ஆண்களின் நோற்பு நிலைகள் பலப்பல! நாயகன்-நாயகி பாவம், அடியார்க்கு அடியாராய் கூடி இருந்து குளிர்ந்து இருத்தல் என்று பல நிலைகள்!

அதை எல்லாம் நீங்களும் மற்ற அன்பர்களும் வந்து பதிலாகச் சொல்லி எங்களை மகிழ்விக்கணும்-னு தான் நான் தூண்டி விடுவது போல் விளையாட்டாய்க் கேட்டிருந்தேன்! அது ஓவராகத் தொனித்திருந்தால்...மன்னியுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேசவன் சொன்னதை தாத்தா சரியா புரிஞ்சிக்கிட்டாரு போல. நீங்க தான் புரிஞ்சிக்கலை போல இருக்கு இரவிசங்கர். அடியார்ன்னு யார் வேணும்ன்னாலும் சொல்லிக்கலாம்//

குமரன்...
இந்தக் கதையின் உரையாடல்களோடு ஒன்றியதால், தாத்தா என்னைத் தான் கேட்கறாரு-ன்னு, அடியேனின் பதிலையும் உங்க மூலமாச் சொன்னேன்! கேசவன் பதிலை ஆராய வரவில்லை! என் பதிலையும் தாத்தாவிடம் எடுத்துச் சொன்னேன்! அம்புட்டு தான்!

இறைவனின் திருவுள்ள உகப்பிற்காகவே தங்களை ஆட்படுத்திக் கொள்பவர்கள் அடியவர்கள்! - இது தான் அடி நாதம்!

இதில் இரண்டு பார்வைகள் உண்டு!
1. இறைவன் நம்மை அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பார்வை!
2. இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டானா என்று கூட ஆராயப் புகாது, அவன் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் நடந்து கொண்டே இருப்பது!

இறைவன் தங்களை அடியாராக ஏற்றுக் கொண்டு விட்டானா என்றோ, இல்லை சக அடியவர்களை அடியாராக ஏற்றுக் கொண்டு விட்டானா என்று பார்த்துக் கொண்டு இராமல்...
உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகங்குழைய மாட்டேனே!
உனது ஆளாக என்றென்றும் பார்த்திருப்பேன் அடியேனே!
என்று அகம் குழைந்து இருப்பவர்களைப் பற்றிக் குறிப்பிட வந்தேன்!.

மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்ல வந்த சிவவேடம் தாங்கியவரை, கொன்ற பின்னர் கூட, அடியார் என்று கும்பிட்ட வண்ணமே இருந்தார் நாயனார்! இவன் கொலைகாரன் என்றோ, உருத்திராட்ச பூனை என்றோ அவருக்குத் தோன்றவில்லை!

இறைவன் ஏற்றுக் கொள்ளும் படி 'நடந்து' கொண்டால் தான் அவர்கள் அடியார்கள் - மற்றவர்கள் உருத்திராட்சப் பூனைகள் - இது உலகத்தின் பார்வைக்கு!

இறைவன் ஏற்றுக் கொண்டானோ இல்லையோ என்று கூட அறிய விழையாது...சக அடியவர்களை எடை போடாது, அவன் ஆளாக என்றென்றும் "பார்த்திருப்பது’ - இது அடியவர் பார்வைக்கு!

இப்படி அடியேனுக்குத் தோன்றியதையும் தாத்தாவிடம் சொல்லணும் போல் இருந்தது! அவ்வளவு தான்!

cheena (சீனா) said...

பாடல்களும், பாடல்களுக்கான விளக்கங்களூம் அருமை. வகுப்பிலே ஆசிரியர் கேள்வி கேட்பதும், அறிவுள்ள மாணவன் பதில் சொல்வதும், அதன் மூலம் வகுப்பே கற்றுக்கொள்வதும் தான் இயற்கை. தாத்தா - கந்தன் உரையாடல் பலப்பல செய்திகளைக் கற்றுத் தருகிறது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கொத்ஸ் பாட்டும் ஆனந்தக் கண்ணீருமா நல்ல கூத்து தான் போங்க. :-)

குமரன் (Kumaran) said...

அப்படியா மௌலி. இந்த இடுகையின் கடைசி வரியில் மட்டும் தான் ஒரு குறிப்பு தந்திருக்கிறேன். அதுவும் அடுத்த இடுகையைப் பற்றிய குறிப்பு மட்டும் தான். மற்ற படி கதை தலைப்பு சொல்லும் கதை தான். :-)

குமரன் (Kumaran) said...

//அதிலும் போற்றி அருளுக நின் ஆதியாம் பாத மலர் - நெக்குருகும்!

நாராயண தே நமோ நமோ பாடலில் எங்கு கந்தன் கலங்கினான்-னு சொன்னீங்களோ, அதே அனுபவம் இங்கும் ஏற்பட்டிருக்கு! ;-)
//

ஒரு வேளை இது உங்க கதை தானோ இரவிசங்கர்? :-)

//படர்ந்து ஆரணம் முழங்க-ன்னு வரும்-னு நினைக்கிறேன் குமரன்.
மறை ஒலி படர்ந்து ஒலிக்குதுன்னு பொருளா?
//

ஆமாம் இரவிசங்கர். சிலப்பதிகார மூலத்தில் ஆய்ச்சியர் குரவையில் படர்ந்தாரணம் முழங்க என்று தான் இருக்கிறது. அப்படித் தான் பொருள் சொல்லியிருக்கும் முந்தைய இடுகையிலும் சொல்லியிருக்கிறேன். எம்.எஸ். பாடியதில் தொடர்ந்தாரணம் முழங்க என்று இருக்கிறது. அதனை இங்கே சொல்லியிருக்கிறேன்.

மறை படர்ந்து தொடர்ந்து முழங்க என்று பொருள்.

மெளலி (மதுரையம்பதி) said...

//இறைவன் ஏற்றுக் கொண்டானோ இல்லையோ என்று கூட அறிய விழையாது...சக அடியவர்களை எடை போடாது,//

எனக்கென்னமோ இதுதான் சரின்னு நினைக்கிறேன். இறைவனோ அல்லது நம் பக்கத்தில் இருப்பவனோ ஏன் நாமே நம்மையோ கூட சொல்லிக்கொள்ள வேண்டாம். என் செயல் பணிசெய்து கிடப்பதேன்னு போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். என்ன சொல்லற அளவு இதனை எல்லா நேரங்களிலும் செயல்படுத்த முடிவதில்லை. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்படியா மௌலி. இந்த இடுகையின் கடைசி வரியில் மட்டும் தான் ஒரு குறிப்பு தந்திருக்கிறேன்.//

மூன்றாம் பகுதியிலிருந்து நான் எனக்குள் ஒரு மாதிரி கெஸ் பண்ணிகிட்டு வருகிறேன் குமரன், அதனை கன்பார்ம் பண்ணும்படி சில இந்த பதிவில் உள்ள உரையாடல் தோன்றியது....

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜீவா. நல்ல சத்சங்கம் தான்.

குமரன் (Kumaran) said...

இந்த அத்தியாயப் பொருள் முன்பே எழுதி வைத்தது தான் எஸ்.கே. இன்று இந்த அத்தியாயத்தை இடும் போது நீங்கள் சொன்னதைத் தான் நினைத்துக் கொண்டேன். மார்கழி என்றால் திருப்பாவையும் திருவெம்பாவையும் தானே நினைவிற்கு வருகின்றன. இந்த அத்தியாயத்தில் திருவெம்பாவையை கந்தன் பாடுவதாக அமைந்துவிட்டது.

தாத்தாவுக்கு எதையும் பொருள் தெரியாம பன்ணக்கூடாது போலிருக்கு. அதான் பொருள் கேட்டிருக்கார்.

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா. போன அத்தியாயத்துல Confessionன்னு சொல்றதுக்கு கல்லூரிக் காலக் கதை இருந்தது. இந்த அத்தியாயத்தில அப்படி எதுவும் இல்லையே அம்மா?

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். இன்னும் ஒன்னு ரெண்டு அத்தியாயத்துல புரிஞ்சிரும். :-)

அந்த வரிகள் செய்த வம்புகளைத் தான் சொல்லுங்களேன். ஒரு முறை திருவரங்கத்திற்கும் திருவானைக்காவிற்கும் சென்று வரலாம். :)

குமரன் (Kumaran) said...

நல்ல கேள்விகளைத் தான் கேட்டிருக்கிறீர்கள் இரவிசங்கர். நீங்களே தகுந்த விளக்கமும் தந்து மகிழ்வித்ததற்கும் மிக்க நன்றி. விளக்கங்கள் மிக அருமை.

குமரன் (Kumaran) said...

இந்த உரையாடல்களில் நிறைய பேசாம கொஞ்சமா பேசி விட்டிருக்காங்க சீனா ஐயா. தாத்தா எப்பவுமே ரொம்ப அதிகம் பேசாதவர் போல. மத்தவங்களைப் பேச விட்டு சொல்ல வேண்டியதைச் சொல்றாரு.

குமரன் (Kumaran) said...

சரியா சொன்னீங்க மௌலி.

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமேன்னு தாயுமானவரும் சொல்லியிருக்காரே.

இனி வர்ற பகுதிகளையும் பார்த்து உங்கள் ஊகம் சரியா அமைஞ்சதான்னு சொல்லுங்க மௌலி.

rv said...

இந்த ஸ்டைல்ல சொல்றது ரொம்ப நல்லாருக்கு கும்ஸு..

குமரன் (Kumaran) said...

நன்றி இராம்ஸு.