Tuesday, December 25, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 10

தஞ்சை நகரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு காட்டில் ஒரு பருந்துக் குடும்பம் வாழ்ந்து வருகிறது. தாயும் தந்தையும் இரு குழந்தைகளும் என்று அழகான அளவான மகிழ்ச்சியானதொரு குடும்பம். வேண்டிய அளவிற்கு உணவு கிடைத்துவிடுவதால் காட்டிலேயே பறந்து திரிந்து வாழ்ந்து வருகின்றன இந்த வெண்கழுத்துடைய பருந்துகள். நாள் முழுக்க வானத்தில் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் இந்தப் பருந்துகள் அந்தி சாயும் முன்னர் தான் தாம் வாழும் பொந்திற்கு வருகின்றன. பொந்திற்கு வந்தவுடன் சிறிது நேரம் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பேசிக் கொஞ்சி சிறிது நேரம் கழிந்த பின் இருட்டியவுடனே பொந்தில் தூங்கிவிடுகின்றன. இப்படி வாழ்க்கை மிக்க மகிழ்வுடன் சென்று கொண்டிருக்கிறது.

அன்றைய பொழுது விடிந்த போது வானம் மேக மூட்டமாக இருந்தது. காலை நேரப் பனி இன்னும் முழுதுமாக விலகவில்லை. கதிரவன் மேகங்களின் பின்னால் மறைந்து இருப்பதால் பனி விலகியும் விலகாமலும் இருக்கின்றது. இளைய பருந்து புள்ளரசனுக்கு அதிகாலையிலிருந்தே இருப்பு கொள்ளவில்லை. தன் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நாள் இன்று என்றொரு தவிப்பு. இருட்டு விலகாத பொழுதே விழிப்பு ஏற்பட்டுவிட்டது. இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் தாய், தந்தை, அண்ணன் மூவரும் எப்போது எழுவார்கள்; எப்போது விடியும் என்று ஆவலுடன் காத்திருந்தது. மேகமூட்டமானதால் அவர்கள் வழக்கத்தை விட தாமதமாகத் தான் எழுந்தார்கள். சரியான நேரத்திற்கு விழிப்பு வந்தாலும் எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் திரும்பிப் படுத்துவிட்டார்கள். பொறுமையாகக் காத்திருந்த புள்ளரசன் நேரம் செல்லச் செல்லப் பொறுமை இழந்து அண்ணன் பொற்காலனை மெதுவாக எழுப்பினான்.

"என்ன புள்ளரசா? ஏன் எழுப்புகிறாய்? இன்னும் விடியவில்லையே?"

"இல்லை அண்ணா. நன்கு விடிந்துவிட்டது. மேகமூட்டமாக இருப்பதால் தான் தெரியவில்லை. எழுந்திரு அண்ணா"

மெதுவாகக் கண் விழித்துப் பார்த்த பொற்காலன் தாயும் தந்தையும் இன்னும் உறங்குவதைக் கண்டு மீண்டும் தூங்கத் தொடங்கினான். தம்பி விடவில்லை. தம்பியின் தொந்தரவால் எழுந்த அண்ணன் விடிந்துவிட்டதைப் பார்த்து மீண்டும் தூங்கச் செல்லவில்லை. இருவரும் செய்த அரவத்தால் தாயும் தந்தையும் எழுந்துவிட்டனர்.

"அப்பா. அம்மா. விரைவில் வாருங்கள். கீழ்த்திசையில் நமக்கு இன்று ஏதோ வேலை இருக்கிறது. விரைவில் குளித்துவிட்டுப் போகலாம் வாருங்கள்"

"கீழ்த்திசையிலா? நாம் வழக்கமாக மற்ற மூன்று திசைகளில் தானே செல்வோம் கண்ணா? நாம் வசிப்பது இந்தக் காட்டின் கீழ்க்கோடியில் தான். அதனால் கீழ்த்திசையில் பறந்தால் காட்டை விட்டு வெளியே நாட்டிற்குச் சென்றுவிடுவோம்"

"நமக்கு வேலை நாட்டில் தான் அப்பா. இன்று அதிகாலையிலிருந்து அந்த திசையிலிருந்து ஏதோ ஒரு அழைப்பு எனக்கு வந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். அதிகம் கேள்விகள் கேட்காமல் கிளம்புங்கள் அப்பா"

"என்ன இன்று இந்தச் சின்னவன் ரொம்பத் துள்ளுகிறானே. பருந்துகளான நமக்கு உள்ளுணர்வுகள் இருப்பதுண்டு தான். ஆனால் ஒரு திசையிலிருந்து அழைப்பு எல்லாம் வருவதில்லையே. இவன் சொல்வது விசித்திரமாக இருக்கிறதே. அன்பே. நீ என்ன சொல்கிறாய்?"

"சின்னவன் கொஞ்சம் சூட்டிகையானவன் தானே. நாம் அந்தத் திசையில் சென்று உணவு தேடாமல் இருப்பதால் அந்தத் திசையைக் காண வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கும். அதனை நேரடியாகச் சொன்னால் செல்ல விடமாட்டோம் என்று இப்படி உள்ளுணர்வைக் காரணம் காட்டுகிறான்"

"அப்பா. எனக்கும் அப்படி ஒரு அழைப்பு வருகிறது. இன்று நம் குடும்பத்திற்கே ஒரு நன்னாள் என்பதான ஒரு உள்ளுணர்வு தோன்றுகிறது. அதனால் தம்பியைச் சந்தேகப் பட வேண்டாம். வாருங்கள். உடனே கிளம்புவோம்"

"இருவருக்கும் அப்படி ஒரு உள்ளுணர்வு ஏற்படுகின்றதென்றால் கிளம்ப வேண்டியது தான். சிறுவர்களான உங்களுக்கு பல நேரங்களில் அந்த உள்ளுணர்வு நன்கு செயல்படும். வயது ஆக ஆக அந்த உள்ளுணர்வை உணரும் சக்தி குறைந்துவிடுகின்றது போலும்"

நால்வரும் உடனே கிளம்பினார்கள். செல்லும் வழியில் ஒரு சின்ன குட்டை இருந்தது. அதில் இருந்த தெளிந்த நீரில் விரைவாக முழுக்காடிவிட்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அரை மணி நேரம் பறந்த பின் தூரத்தில் ஒரு புதிய மலை ஒன்று தெரிந்தது.

"அது என்ன மலை. ஒரு கூம்பு வடிவத்தில் இருக்கிறதே. ஒரே ஒரு சிகரத்தைக் கொண்ட மலையை நான் இதுவரை பார்த்ததில்லை. அன்பே. நீ பார்த்திருக்கிறாயா?"

"இல்லை. நானும் பார்த்ததில்லை. அது மலையைப் போல் இல்லை. யாரோ புதிதாகக் கட்டியதைப் போல் இருக்கிறது"

"அப்பா. அந்த கூம்பு வடிவ கட்டிடத்தில் இருந்து தான் அழைப்பு வருகிறது. அங்கே ஏதோ ஒரு பெரும் சக்தி குடி கொள்கிறது. இன்று தான் அது குடி புகும் நாள் போலும். பக்கத்தில் பார்த்தீர்களா? புகை சூழ்ந்து இருக்கிறது. அந்தப் புகையும் அதே அழைப்பை விடுக்கிறது. அண்ணா. உனக்கும் அப்படி தோன்றுகிறதா?"

"ஆமாம் தம்பி. நீ சொல்லும் அந்தச் சக்தி பொன்னிறத்தில் அந்த புதிய கட்டிடத்தில் மேலும் கீழும் உள்ளும் புறமும் ஒளி வீசி நிற்கிறது. அது தான் நம்மை அழைக்கிறது"

"சிறுவர்களே. என் தந்தையார் முன்பொரு முறை சொல்லியிருக்கிறார். சுற்றுவட்டாரத்தில் யாராவது தெய்வத்திற்குக் கோவில் கட்டி குடமுழுக்கு செய்தால் அந்த நேரத்தில் நமக்கு இப்படி ஒரு அழைப்பு வருமாம். குடமுழுக்கின் போது நாம் வந்து அந்த இடத்தைச் சுற்றினால் தான் தெய்வ சக்தி அந்த இடத்தில் குடிபுகுந்ததாகப் பொருள் என்பது இந்த மனிதர்களின் நம்பிக்கை. இந்தப் புதிய கட்டிடமும் ஒரு கோவில் என்று தான் நினைக்கிறேன். அதில் குடி புகும் சக்தி தான் இன்று நம்மை அழைத்திருக்கிறது"

"ஆமாம் அப்பா. அந்த சக்தி நீங்கள், அம்மா, நான், அண்ணன் என்று எல்லோருள்ளும் நின்று இயங்கும் சக்தி என்பதாக எனக்குத் தோன்றுகிறது. என்னையும் அறியாமல் என் உடல் சிலிர்க்கிறது. மனம் குழைகிறது. இன்று இந்த கோபுரத்தை வட்டமிட்டுத் தொண்டாற்றவே நாம் பிறந்தோம் என்று தோன்றுகிறது. நாம் பிறவி எடுத்ததன் பயன் இன்று நிறைவேறப் போகிறதப்பா"

"புள்ளரசா. நீ சொல்வது மிகவும் சரி. நல்ல வேளையாக உன் பேச்சைக் கேட்டு கிளம்பினோம். இன்றைய நாள் நமக்கு ஒரு நல்ல நாளாக அமைந்தது"

நால்வரும் அந்த கோபுரத்தை நோக்கிப் பறந்தார்கள். அருகில் செல்லச் செல்ல அந்த கோபுரத்தின் பிரம்மாண்டம் தெரியத் தொடங்கியது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மலையைப் போல் தெரிந்தது வெறும் பிரமை இல்லை என்பது புரிந்தது. கோவிலைச் சுற்றி எந்தப்பக்கம் பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்திருந்தனர். ஹர ஹர சிவ சிவ என்ற கோஷம் எங்கும் கேட்டது. விண்ணைத் தொடும் அந்த பேரொலியைக் கேட்க கேட்க பருந்துகளின் உடலும் உள்ளமும் மென்மேலும் சிலிர்த்தன. மெலிதாகத் தூறல் விழத் தொடங்கியது. கோபுரத்தின் அருகில் சென்ற பருந்துகள் அந்த கோபுரத்தை மும்முறை வலம் வந்து பின் வந்த வழியே திரும்பிச் சென்றன.

கீழே இருக்கும் மாமனிதர் ஒருவர் அந்தக் கோவிலைக் கட்டிய பேரரசரிடம் 'இராஜராஜா. இறைவன் தன் முழு மனத்துடன் இந்தத் திருக்கோவிலில் குடி புகுந்தான் என்பதற்கு பல நற்சகுனங்கள் தெரிகின்றன. இதோ பார் இதுவரை மேகம் சூழ்ந்து இருந்தது. நீ புனித நீருடன் மகா மேருவாம் இந்த பெரிய கோபுரத்தின் உச்சிக்குச் சென்றவுடன் மேகங்களில் ஒரு பிளவு தோன்றி கதிரவன் கோபுர சிகரத்தில் தன் பொன்னொளியை வீசினான். நீ குடமுழுக்கு ஆட்டிய பின் கீழ் இறங்கி வந்தாய். பின்னர் இப்போது சிறு தூறல் விழுகின்றது. எங்கிருந்தோ நான்கு கருடப் பறவைகள் வந்து கோபுரத்தை வலம் செய்து செல்கின்றன. எல்லா சகுனங்களுக்கும் மேலான உயர்ந்த சகுனம் கருடப் பறவைகள் வந்து வலம் செய்வது. இதுவே இங்கே இறைவனின் வெளிப்பாடு நிறைவாக இருக்கிறது என்பதற்கு பெரும் அடையாளம்" என்றெல்லாம் சொல்லுவதைக் கேட்க வேண்டிய தேவை அந்தப் பருந்துகளுக்கு இல்லை. எதற்காகத் தங்களின் பிறவி ஏற்பட்டதோ அதற்குரிய கடமையைச் செய்து அந்தப் பருந்துகள் மிக்க மகிழ்வுடன் தங்கள் பொந்தினை நோக்கிச் சென்றுவிட்டன.

38 comments:

cheena (சீனா) said...

ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழாவினை நேரில் கண்ட மகிழ்வு. புள்ளரசனின் தொடர்ந்த வேண்டுகோள்களாலும், பொற்காலனின் பரிந்துரைப்பினாலும், பெற்றோர் சம்மதத்துடன் அனைவரும், தெளிந்த நீரில் முழுக்காடி விட்டு, கோபுரத்தை மும்முறை வலம் வந்து வணங்கி, இறைவன் குடி புகுவதை மக்களுக்கு உணர்த்தி, கடமையைச் செய்து விட்டு, பலனை எதிர்பாராமல் பறந்து சென்ற பருந்துக் குடும்பம் நமக்கு உணர்த்தும் செய்திகள் ஆயிரமாயிரம்.

நல்ல பதிவுகளைப் படிக்கும் பேறு பெறுகிறோம்.

நன்றி குமர

மதுரையம்பதி said...

குமரன்,

ஏன் கருடன் என குறிப்பிடாது, பருந்து என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
பருந்து, கருடன், கழுகு இதன் வித்தியாசம் என்ன?.

மதுரையம்பதி said...

//எல்லோருள்ளும் நின்று இயங்கும் சக்தி என்பதாக எனக்குத் தோன்றுகிறது//


உண்மைதான், ஆனால் இதை உணரத்தான் எத்தனை மன்றாடல்கள், அனுபவங்கள்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

புல்லாகிப் பூடாய்
புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப்
பறவையாய்ப்
ஓ..இன்று பறவையா? கருடனா? சூப்பரு!

//குடமுழுக்கு செய்தால் அந்த நேரத்தில் நமக்கு இப்படி ஒரு அழைப்பு வருமாம்//

உண்மை தான் குமரன்.
may be sheer coincidenceஆகக் கூட இருக்கலாம்! ஆனால் பெரும்பாலும் எல்லாக் குடமுழுக்கிலும் இதைக் காணமுடிகிறது! சைவ, வைணவ, ஏன் ஜைனக் கோயில் முழுக்கில் கூடக் கருடனைக் கண்டுள்ளேன்!

அது ஏன் கருடன் மட்டும்?
வேறு பறவைகள் வராதா?
ஆகம விளக்கம் ஏதாச்சும் இருக்கா?

cheena (சீனா) said...

//ஏன் கருடன் என குறிப்பிடாது, பருந்து என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
பருந்து, கருடன், கழுகு இதன் வித்தியாசம் என்ன?.//

மெளளியின் சந்தேகம் எனக்கும் உண்டு
ஆகவே ரிப்பீட்ட்ட்ட்டேடேடேடேய்ய்ய்ய்ய்

அப்புறம் இந்த மெள எப்படி தட்டச்சிடுவது. MeLa வுக்கும் Mow வுக்கும் எப்படி வேறு பாடு காட்டுவது?

Kailashi said...

உங்கள் பதிவைப் படித்ததும் அப்படியே மெய் சிலிர்த்தது. திருமயிலையில் ஒரு தடவை குட முழுக்கின் போது கருடன் வந்ததைப் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

வளர்க உங்கள் தொண்டு. நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

ஒருவேளை கருடன் என்ற சொல் வடமொழி என்று கருதி பருந்து என்ற சொல்லால் குறுப்பிட்டீர்களோ? அப்படி என்றால் கருடனுக்கு ஒப்பான தமிழ்ச் சொல் எது?
அதுபோல குடமுழுக்கின் போது சூரிய வட்டமும் ஆகயத்தில் தோன்றும்.மழைத்துளியும் வரும்
யார் இதற்கெல்லாம் அதிகாரி அதை நாம் எண்ணிட வேண்டாமோ

நானானி said...

குடமுழுக்கு நேரத்தில் வட்டமிடவேண்டும் என்ற நியதியை அப்புள்ளரசனுக்கு உணர்த்தியது இயற்கையா...தெய்வமா...?
வட்டமிடம் கருடன் மேல் அமர்ந்து சென்ற சுகம் பதிவைப் படித்தபோது.
குமரனுக்கு வாழ்த்துக்கள்!!

குமரன் (Kumaran) said...

ஆகா. எனக்கும் எழுதும் போது அப்படியே இருந்தது சீனா ஐயா. நேரில் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கில் கலந்து கொண்டது போன்றதொரு உணர்வு. தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி. பாராட்டிற்கும் நன்றி. கடைசி பத்தியில் இராஜராஜனிடம் பேசும் மாமனிதரைப் போல் நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். அந்த மாமனிதர் என்று நான் யாரைக் குறிப்பிட்டேன் என்று தெரிகிறதா?

குமரன் (Kumaran) said...

மௌலி. எந்த முக்கிய காரணமும் இல்லை. கருடன் என்பதை கருடப் பறவைகளைப் பற்றி பேசும் போது சொல்லாமல் இராஜராஜனிடம் பேசும் மாமனிதர் சொல்வதாகச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம். அது மட்டும் இல்லாமல் சொல்லி வரும் செய்திகளின் மூலம் (வெண்கழுத்துடைய பருந்து, புள்ளரசன், பொற்காலன் போன்றவை) மூலம் படிப்பவர்களுக்கே கருடனைப் பற்றிச் சொல்கிறேன் என்ற எண்ணமும் தோன்ற வைக்க வேண்டும் என்ற எண்ணம். அவ்வளவு தான். மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை.

பருந்து, கருடன், கழுகு இவற்றிடையே ஆன வேறுபாட்டை இந்த இடுகை எழுதும் போது இரவிசங்கரிடம் கேட்டேன். அவர் மின்னஞ்சலில் சொன்னது:

கழுகும் பருந்தும் ஒரே இனம் என்றாலும் வேறுபாடுகள் நிறைய!
கழுகு=eagle; பருந்து! = kite

பருந்து அடிக்கடி வட்டமிடும். கரும் பருந்து, வெண் பருந்து எல்லாம் இருக்கு.
கருடன் வெண் பருந்து. (சுபர்ணோ வாயு வாகன) = தலையும் கழுத்தும் வெள்ளை. இறக்கையின் நுனி கருப்பு.

இவை இல்லாம vulture(வல்லூறு), hawk-ன்னும் இருக்கு.

குமரன் (Kumaran) said...

மௌலி. நீங்கள் சுட்டிக் காட்டிய வரிகள் சொல்லும் செய்தியும் முக்கிய செய்தி தான். நீங்கள் சொன்னதைப் போல் அதனை உணரத் தான் எத்தனை அனுபவங்கள் தேவைப்படுகின்றன. அந்தர்யாமியாக இறைவன் இருக்கிறான் என்று சொன்னாலும் சரி, இறைவனே நானாக இருக்கிறான் என்று சொன்னாலும் சரி அந்த இறைச்சக்தி தான் எல்லாவற்றையும் இயக்குகிறது என்பதை உணரத் தான் எவ்வளவு நாட்கள் ஆகின்றன. புரிதல் அளவில் அது புரிந்தாலும் உணர்வு பூர்வமாகவும் மறு இயற்கை என்ற அளவிலும் அந்த உண்மை இறங்கி சமன்படுவது மிகக்கடினமாகத் தான் இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். கல், மரம் வரிசையில் இப்போது பறவை. அடுத்து என்ன என்று தெரிகிறதா?

நானும் பார்த்தவரையில் எல்லா குடமுழுக்கிலும் இது நடந்திருக்கிறது இரவிசங்கர். சிறு சிறு கோவில்களின் குடமுழுக்குகளிலும் கருடப்பறவைகள் வந்து வட்டமிட்டிருக்கின்றன. ஏன் கருடன் மட்டும், மற்ற பறவைகள் வரக்கூடாதா? தெரியவில்லை. ஆகம விளக்கம் ஏதும் உண்டா? தெரியவில்லை.

பந்தளத்திலிருந்து சபரிமலைக்கு ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி செல்லும் போதும் ஒரு கருடப்பறவை திருவாபரணப் பெட்டியின் மேலாகத் தொடர்ந்து பறந்து வரும் என்பதையும் படித்திருக்கிறேன்; படத்திலும் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தவர்கள் உண்டா? வருடாவருடம் அப்படி நடக்கிறதா?

குமரன் (Kumaran) said...

mau என்று அடித்தால் எனக்கு மௌ வந்து விடுகிறது சீனா ஐயா.

உங்கள் ரிப்பீட்டேய்க்கு பதில் மௌலிக்குச் சொன்ன போது சொல்லியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி. இந்த இடுகை ஒரு தொடர்கதையின் பகுதி. ஆனாலும் தனிக்கதையாகவும் இந்த இடுகை அமைந்திருக்கிறது. அதனால் தொடர்கதை முழுவதும் படிக்காவிட்டாலும் இந்தக் கதையை மட்டும் படித்தாலே முழுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

திராச. கருடன் என்பது வடமொழிச் சொல்லா இல்லையா என்றே சிந்திக்கவில்லை. இப்போது சிந்தித்தாலும் கருடன் என்பது வடசொல்லா என்று தெரியவில்லை. புள்ளரசன், புள், கலுழன் என்று பல சொற்களால் கருடனைச் சொல்லியிருக்கிறார்கள் ஆழ்வார்கள். ஆனால் கருடன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார்களா என்பது நினைவில்லை. அதனால் இது தமிழ்ச்சொல்லா இல்லையா என்று உறுதிபடக் கூற இயலவில்லை.

பருந்து என்று சொன்னதற்கு தமிழா வடமொழியா என்பது காரணமில்லை.

ஆமாம் திராச. சூரிய வட்டத்தையும் தூறலையும் பல குடமுழுக்குகளில் கண்டுள்ளேன். கருடன் வருவது தவறாமல் நிகழ்வது. சூரிய வட்டமும் தூறலும் சில குடமுழுக்குகளில் தான் கண்டுள்ளேன்.

குமரன் (Kumaran) said...

நானானி. பெருமாள் ஆகிவிட்டீர்கள். கருடனின் மேல் ஊர்ந்து செல்பவன் அவன் தானே. :-)

தங்கள் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. கடந்த மூன்று அத்தியாயங்களை எழுதும் போதும் மனது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது என்பது உண்மை.

மதுரையம்பதி said...

ராஜராஜனுடன் வரும் பெரியவர் கருவூர் சித்தர் தானே குமரன்?.

தஞ்சைக் கோவில் மேலே உள்ள படங்களில் இவரது படமும் இருப்பதாக ப்டித்த ஞாபகம்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி. கருவூரார் தான். இராஜராஜன் தன் மூன்று பட்ட மகிஷிகளுடனும் கருவூர் சித்தருடனும் இருக்கும் ஓவியம் பெரிய கோவிலில் இருப்பதாகப் படித்திருக்கிறேன். உடையார் நாவலில் அந்த ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
இப்படத்தில் குறிப்பிட்ட பறவையை
ஈழத்தில் பருந்தென்போம்.சிலர் முகவெள்ளை எனக் கூறுவார்கள்.
இதைவிட சாம்பல் நிறத்திலும் சற்று
அளவில் பெருதாகவும் இதே இனப்பறவை அதை ஆலா என்போம்.
செங்கை ஆழியான் எனும் எழுத்தாளரும் தன் வாடைக்காற்று கதையில் குறிப்பிடுகிறார்.
கரையோரப் பகுதிகளில் அதிகம், ஆல், பனையில் கூடுகட்டி வாழும்.
இது வட்டமிட்டால் மழை பெய்யும் எனும் நம்பிக்கையுண்டு.
வல்லூறு என்பது ஈழத்தில் காகம் அளவிலான இதே இனப் பறவை.
ஆசிய,ஆபிரிக்க,அமெரிக்க இவ்வினப்பறவைகள் வித்தியாசமானவை. இப்படத்தில் உள்ள பறவை கனடா பிரிட்டிஸ் கொலம்பியாவில் அதிகம்.
வட அமெரிக்காவில் இதே இனம்,சற்று வேறுபாட்டுடன் கொண்டோர் என அழைக்கப்படுகிறது.
நம்போல் செவ்விந்தியரும் இதை சகுனத்துடன் தொடர்பு படுத்துவது
வியப்பே...
கருடன் என்பது சமஸ்கிருதமாக இருக்கலாம். இராமாயணத் தொடர்புடைய இந்தோனேசிய விமான சேவை.
கருடா எயர்லைன்ஸ்...என அழைக்கப்படுகிறது.
கழுகு வட்டமிடுவதற்கு சரியாக விளக்க முடியாது .ஆனால் உயரத்தில்
ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுற்றுவதால் அது தன் உணவை தேடலாம்.
ஆபிரிக்காக் காடுகளில் மிருகங்கள் கூடும் இடத்தில் மேலே கழுகு வட்டமிடுவதற்கு ஆய்வாளர்கள் தந்த விளக்கம், அக்கூட்டத்தில் அடிபட்ட நோய்வாய்பட்ட இறக்கும் விலங்குகளை தேட எனக் கூறக் கேட்டுள்ளேன்.
கோவில் மேல் சுற்றுவதற்கான விளக்கம் சரியாகக் கொள்ள முடியாவிடிலும், மிக உயரத்தில் இருந்து பார்க்கும் போது இந்த மனித ஒன்று கூடல், கழுகுக்கு வேறு கோணத்தில் தெரிகிறதா??
ஆய்வுக்குரியவை.
அடுத்து வட இந்தியாவில் ஒரு இனத்தவர் இறந்த உடலை மலையுச்சியில் கழுகுக்கு உணவாக்குவார்கள் எனவும் படித்தேன்.
அதாவது இறந்தும் எதற்காவது உதவவேண்டுமென்பதாக...

என் அறிவுக்கெட்டியவரை ஈழத்தில்
நடந்த குடமுழுக்கெதுவிலும் இப்படிச் சம்பவம் கேள்விப்படவில்லை.
கதை முழுதும் படித்தபின் அபிப்பிராயம் கூறுகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

குமரன், ரொம்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும். உள்ளேன் ஐயா!

குமரன் (Kumaran) said...

நிறைய தகவல்களைக் கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி யோகன் ஐயா.

வட இந்தியாவில் பார்ஸிகள் நீங்கள் சொல்வது போல் செய்வார்கள் என்று படித்திருக்கிறேன். கதை முழுவதையும் படித்துத் தங்கள் கருத்தினைச் சொல்லுங்கள் ஐயா.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ்,

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவீங்கன்னு பார்த்தா வழக்கம் போல் உள்ளேன் ஐயா தானா? :-)

கேட்டவுடன் வந்ததற்கு நன்றி.

கீதா சாம்பசிவம் said...

"கருடப்பறவை திருவாபரணப் பெட்டியின் மேலாகத் தொடர்ந்து பறந்து வரும் என்பதையும் படித்திருக்கிறேன்; படத்திலும் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தவர்கள் உண்டா? வருடாவருடம் அப்படி நடக்கிறதா?"

நாங்கள் நேரடி ஒளிபரப்பைப் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து கருடன் தொடர்ந்து பறந்து வருவதைப் பார்க்கிறோம்.

தஞ்சைப் பெரிய கோயிலின் தரிசனமும் இம்முறையும் கிடைத்தது, நேரிலும், உங்கள் பதிவிலும்.

குமரன் (Kumaran) said...

பந்தளத்தில் இருந்து கிளம்பும் திருவாபரணப் பெட்டிக்குக் காவலாக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கருடன் வருவதை உறுதி செய்ததற்கு நன்றி கீதாம்மா.

இந்தப் பகுதியை எழுதும் போதும் மனது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நானும் உங்களைப் போல் ஒரு முறை பெரிய கோவில் குடமுழுக்கு நடந்த காலத்திற்குச் சென்று வந்தேன்.

கோவி.கண்ணன் said...

திருக்கழுக்குன்றத்திற்கு மதிய உணவிற்கு வரும் கழுகுகள் தினமும் காசியில் இருந்து வருவதாக நம்பிக்கை இருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு.

அந்த கழுகுகளுக்கு உணவு வைக்கும் போது கூடவே ஒரு கிண்ணத்தில் எண்ணையும், மற்றொரு கிண்ணத்திலும் சீயக்காயும் வைப்பார்களாம், முதலில் எண்ணையில் அலகை நுழைத்துவிட்டு, பின்பு சீயக்காயில் அலகை நுழைக்குமாம், அதன் பிறகு அதற்கு வைத்த உணவை சுவைக்குமாம்.

நான் பார்த்ததில்லை, எனது அப்பா சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஆபரணபெட்டிக்கு மேல் கருடன் வட்டமிடுவதை பம்பையில் நேரடியாக பார்த்திருக்கிறேன்.

***********
விலங்குகளை / பறவைகளை / பாம்புகளைக் கூட நன்றாக பழக்க முடியும் என்று தேவர் படங்களில் பார்த்திருக்கோமே.
:)))

குமரன் (Kumaran) said...

கீதாம்மாவிற்குப் பதில் எழுதும் போது நீங்கள் சொன்னதைத் தான் நினைத்தேன் கோவி.கண்ணன். :-) கருடப்பறவைகளைப் பழக்கி திருவாபரணப்பெட்டியின் மேலும் குடமுழுக்குகளின் போதும் அனுப்புகிறார்கள் போலும்.

திருக்கழுக்குன்றத்தில் இரு கழுகுகள் வந்து உணவு உண்டு கொண்டிருந்தது தெரியும். இப்போது அவை வருவதில்லை என்றும் படித்திருக்கிறேன். ஆனால் கிண்ணத்தில் உணவோடு எண்ணெயும் சிகைக்காயும் வைப்பார்கள் என்பது புதிய செய்தி. நன்றி கோவி.கண்ணன்.

Radha said...

kumaran said...
//புள்ளரசன், புள், கலுழன் என்று பல சொற்களால் கருடனைச் சொல்லியிருக்கிறார்கள் ஆழ்வார்கள். ஆனால் கருடன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார்களா என்பது நினைவில்லை. அதனால் இது தமிழ்ச்சொல்லா இல்லையா என்று உறுதிபடக் கூற இயலவில்லை.//

வாக்கு தூய்மை இல்லாமையினாலே ,
மாதவா உன்னை வாய் கொள்ள மாட்டேன்;
நாக்கு உன்னை அல்லல் அறியாது;
நான் அது அஞ்சுவன், என் வசம் அன்று;
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று
முனிவாயேலும் என் நாவினுக்கு
ஆற்றேன்; காக்கை வாயிலும் கட்டுரை
கொள்வர்; காரணா ! கருளக் கொடியானே !
(பெரியாழ்வார் பாசுரம்)

கருடன் என்று வராது கருளன் என்று வருவது எதனால் என்றால் "காக்கை வாய்" கொஞ்சம் குழறியது. :)

for a nor convincing usage:
"கருடக் கொடியோன் காண மாட்டா கழற்சேவடி...." (திருவாசகம் - ஆசைப் பத்து)

:) this is to say that i am done reading all parts of this multi-episode mini novel. :)

Radha said...

Radha said...
//for a nor convincing usage:
"கருடக் கொடியோன் காண மாட்டா கழற்சேவடி...." (திருவாசகம் - ஆசைப் பத்து)
//
Typo...it should have been:
"for a more convincing usage".

குமரன் (Kumaran) said...

Thanks Radha. I requested all my friends reading this thodar to write a vimarsanam. Can you please write one and send it to me? Please do not hesitate to say anything you want to say.

Radha said...

குமரன்,
என்னை தெரிந்து ஒரு மாதம் தான் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன். விமர்சனம் கேட்டதற்கு மிக்க நன்றி. :-)
என் கிரிதாரியை கேட்டு சொல்கிறேன். :-)
//
அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும்.
//

இந்த அத்தியாயத்திற்கு அடுத்த அத்தியாயங்களில் ஒன்றிலே மேலே உள்ள வாசகங்களை கண்டேன். இது ஆசைகள் பற்றிய உங்கள் அனுபவ புரிதலா அல்லது இதற்கு வேத உபநிஷத் /புராண/இதிஹாச தரவு எதாவது உண்டா ?
தெரிந்து கொள்ள ஆவல். :-)

குமரன் (Kumaran) said...

ஒரு நாளோ ஒரு மாதமோ ஒரு வருடமோ அதற்கும் மேற்பட்டோ இணைய நட்பில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையே இராதா. உங்கள் பெயர் தெரியும்; உங்கள் ஆர்வங்களில் சில தெரியும்; உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் தெரியும். அவை முதல் நாளிலேயே ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது; அந்தத் தோற்றம் உங்களிடம் விமர்சனம் கேட்க முன் தள்ளியது. உங்களுக்கும் அப்படிப்பட்ட தோற்றம் என்னைப் பற்றி உண்டாகியிருக்குமே. நேரில் காணும் போது அந்தத் தோற்றங்கள் அப்படியே இருக்கலாம்; நேர்மாறாகவும் இருக்கலாம். :)

வாசனைகளின் நீக்கம் பற்றி பெரியவர்கள் சொன்னதைப் படித்துப் புரிந்து கொண்டதைத் தான் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தரவுகள் இருக்கலாம் - எதுவும் இப்போது நினைவில்லை. அனுபவங்களாகவும் இருக்கலாம். தெரியவில்லை.

Radha said...

நன்றி குமரன் ! :-) விமர்சனம் தர கொஞ்சம் அவகாசம் தேவை.அதற்கு முன் இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தேவை.
வாசனைகள் என்பதை "ஆசைகளை அனுபவித்ததன் பதிவுகள்" என்று அர்த்தம் கொள்ள வேண்டுமா? ஆசைகள் என்றே எளிமையை படுத்தி புரிந்து கொண்டால் தவறாகுமா? இல்லை முற்றிலும் வேறு ஏதாவது அர்த்தம் உண்டா? ஒரு கேள்வின்னு சொல்லிட்டு நிறைய கேள்விகள் கேட்டுவிட்டேன். :) எல்லாம் ஒரு விஷயத்தை பத்தி தான். :)

குமரன் (Kumaran) said...

உங்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் இராதா.

வாசனைகள் என்றால் ஆசைகளின் அனுபவப் பதிவுகள் மட்டுமில்லை; ஆசையில்லாதவற்றின் அனுபவப்பதிவுகளும். அதனால் வாசனைகள் என்பதை ஆசைகள் என்று புரிந்து கொண்டால் ஒரு பகுதியை மட்டுமே புரிந்து கொண்டதாகும். அலுவலக வேலை செய்கிறோம்; விருப்பத்துடன் செய்தால் செய்யும் வேலையின் அனுபவப்பதிவுகள் வலுவாக இருக்கும்; விருப்பமின்றிச் செய்தாலும் அந்த வேலையின் அனுபவப்பதிவுகள் இருக்கும் அவ்வளவாக வலுவின்றி. ஆக விருப்பம் உண்டோ இல்லையோ ஐம்புலன்களால் செய்யப்படும் எதற்கும் பதிவுகள் உண்டு - அவையே வாசனைகள். வாசனைகள் மனம், மொழி, மெய் என்று முக்கரணங்களிலும் உண்டு. விரும்பியோ விரும்பாமலோ உடற்பயிற்சி செய்தால் அதன் வாசனை மெய்யில் தெரியும். :-) அப்படியே மற்ற கரணங்களுக்கும் சொல்லலாம். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விட்டால் அடுத்து பஞ்ச கோசத்தைப் பற்றியும் பேசத் தொடங்குவோம் போலிருக்கிறது. :-)

Radha said...

புரிந்தது குமரன். :) "Imprints of past deeds" என்று ஆங்கிலத்தில் எளிமையாக சொல்லி விடலாம். என்னுடைய கேள்வி, (ஜகன்மோகனுக்கு உபதேசம் செய்யும்) அந்த இடத்தில் தாங்கள் முழுமையான அர்த்தத்தில் தான் பிரயோகம் செய்து உள்ளீர்களா என்ற ஆவலில் எழுந்தது. உங்களுடைய மொத்த கதையில் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது அந்த வாசகங்களே. அதனால் தான் தரவுகள் உள்ளனவா என்றும் கூட கேட்டேன். மிக்க நன்றி !! :)
பஞ்ச கோசங்கள் பற்றி ஒருவரிடம் முன்பு பேச ஆரம்பித்து, அப்படியே ஏழு தளங்கள், நிர்விகல்ப சவிகல்ப சமாதி நிலைகள், விசிஷ்டாத்வைத மோக்ஷம், அத்வைத மோக்ஷம்,விசிஷ்டாத்வைத கைவல்யம், அத்வைத கைவல்யம் என்றெல்லாம் முடிவே இல்லாமல் பேச வேண்டியதாய் போயிற்று.
இனி இம்மாதிரி விஷயங்களை பற்றி அதிகமாக யாருடனும் பேசுவதில்லை என்று அப்பொழுது செய்த சங்கல்பம் நன்றாய் நினைவில் உள்ளது.:) அந்த வாசனை இன்னும் அகலவில்லை. :)

பொறுமைக்கு நன்றி !!

walajabalaji said...

thiru Kumaran,

Thanks for your good job.
The term SAGUNAM was determined by the animails. The time jugment because of birds known as NIMITHAM.

குமரன் (Kumaran) said...

வேறுபாட்டைச் சொன்னதற்கு நன்றி பாலாஜி.