
வீட்டில் எல்லா விதமான செல்வங்களும் இருக்கின்றன. எந்தக் குறையும் இல்லை. மாடு மனை, வீடு வாசல், நன்செய் புன்செய் என்று எல்லாமே கொழிக்கின்றன. செய்யும் அறச்செயல்களுக்கோ அளவில்லை. வேண்டி நின்றார் வேண்டிற்றளவும் கொடுத்து வள்ளல் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வேளாளர்த் தலைவர் காரிக்கும் அவர் தம் மனைவியார் உதயநங்கைக்கும் தம் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்பது தான் பெருங்குறை.
பொருநை நதிக் கரையில் திருக்குருகூரில் கோயில் கொண்ட ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று குழந்தை வரம் வேண்டினால் நிச்சயம் அருள் கிடைக்கும் என்று பெரியோர்கள் சொல்ல, இதோ ஆதிநாதப் பெருமாள் கோயிலுக்கு வந்து அவன் அருளை வேண்டி இறைஞ்சி நிற்கின்றனர் . கோயில் பிரகாரத்திலேயே அன்றிரவு தங்கிவிட்டனர்.
கனவில் வந்தான் மாயவன். அடியார் படும் துயரைக் காணச் சகிக்காதவன் அல்லவா அந்த அச்சுதன் . தன் அம்சமான சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனரே அவர்களுக்கு ஒரு மகனாய் பிறப்பார் என்று அருள் செய்கிறான். மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர் கணவனும் மனைவியும்.
***
இன்று பிரமாதி வருடம், வைகாசி மாதம், விசாக நட்சத்திரம். உதய நங்கை மிகுந்த ஒளியுடன் கூடிய ஒரு ஆண்மகவை ஈன்றிருக்கிறாள். கண்ணன் பிறந்த போது அன்று ஆய்ப்பாடி பட்ட பாடு காரியார் திருமாளிகை இன்று பட்டது. எங்கும் ஒரே கோலாகலம்.
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
ஆனந்தத்தால் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் சிலர்; கீழே விழுகிறார்கள் சிலர்; விரும்பி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்கிறார்கள்; நம் தலைவன் எங்கு பிறந்துள்ளான்? எங்கே உள்ளான்? என்று அவனைக் காண விரும்பி நாடுவார்கள் சிலர்; பாடுவார்கள் சிலர்; பலவிதமான பறைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுகிறார்கள் சிலர்; இப்படிப் பட்ட கோலாகலம் கண்ணன் பிறந்த போது ஆய்ப்பாடியில் ஏற்பட்டது.
***
நாட்கள் சென்றன. குழந்தை பிறந்தது முதல் அழவேயில்லை. எந்த விதமான உணவும் உட்கொள்ளவில்லை. ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. எப்போதும் ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பது போல் ஆடாமல் அசையாமல் இருக்கிறது. வந்துப் பார்த்த வைத்தியர்கள் எல்லாம் எதுவும் செய்ய முடியவில்லை. உணவு உட்கொள்ளாமலேயே குழந்தை வளர்ந்து வருவதால் கொஞ்சம் நாள் சென்றால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர்.
ஆதிநாதப் பெருமாள் அருளால் பிறந்த இந்த குழந்தை இப்படி மற்ற குழந்தைகளை விட மாறுதலாய் இருப்பதால் ஊரார் 'மாறன்' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். குழந்தைகளை பிறந்தவுடனே 'சடம்' என்னும் ஒரு வாயு தாக்குவதால் தான் குழந்தைகள் அழ ஆரம்பிக்கின்றன. இந்தக் குழந்தை பிறந்தது முதல் அழாததால் அந்த சட வாயு இவனை அண்டவில்லை என்று தோன்றுகிறது. அதனால் இவனைச் 'சடகோபன்' என்று அழைக்கலாம் என்று பெரியவர்கள் சொல்ல அதுவும் அந்தக் குழந்தைக்குப் பெயராகியது.
***
வைத்தியர்கள் சொன்ன மாதிரி சிறிது நாட்கள் சென்றால் குழந்தை சரியாகிவிடும் என்று தான் பெற்றோர் நினைத்தனர். ஆனால் ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை அப்படியே தான் இருக்கிறது. எந்த இறைவனின் திருவருளால் குழந்தை பிறந்ததோ அந்த இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்றால் ஒரு வேளை குழந்தை மாற்றமடையலாம் என்று எண்ணி குழந்தையை ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். குழந்தையை இறைவன் திருமுன்பு வைத்து அவனை இறைஞ்சி நின்றனர்.
ஆஹா. என்ன ஆச்சரியம்? இதுவரை ஆடாமல் அசையாமல் வெறும் பிண்டம் போல் கிடந்த குழந்தை தவழ்ந்து தவழ்ந்து அந்த புளிய மரம் நோக்கிச் செல்கிறதே. அந்தப் புளிய மரமும் சாதாரண மரமன்று. அது உறங்காப்புளி. எல்லாப் புளிய மரங்களும் இரவில் தம் இலைகளை மூடும் . இந்த புளியமரம் இரவிலும் தன் இலைகளை மூடுவதில்லை.
அந்த உறங்காப் புளியின் அருகில் சென்று அமர்ந்துவிட்டது குழந்தை. ஒரு வயதுக் குழந்தை தாமரை ஆசனம் இட்டு அமர்ந்திருப்பது ஏதோ தவத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. எத்தனையோ முறை முயன்றும் மாறனை அம்மரத்தடியில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் பெற்றோரும் ஆதிநாதர் திருக்கோயிலுக்கு அருகிலேயே வசித்து தினமும் தங்கள் திருமகனை வந்துப் பார்த்துப் போகிறார்கள்.
***
'ஹும். நமக்கும் வயதாகிவிட்டது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தத் தெய்வத் திருநாடாம் தென்பாண்டி நாட்டுத் திருக்கோளூரில் பிறந்து நம் குல ஆசாரத்திற்கு ஏற்ப தமிழ்மொழி இலக்கிய இலக்கணங்களையும் வடமொழி வேதங்களையும் கற்று பெரும்பண்டிதன் என்று புகழ் பெற்றோம். சிறு வயதிலிருந்தே இனிமையான கவிதைகள் பாடி வருவதால் மதுரகவி என்றும் அழைக்கப் படுகிறோம். பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமனைச் சேவித்து அவன் அருள் என்னும் அழியாச் செல்வத்தைப் பெற, இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுதலைப் பெற, மோக்ஷபுரிகள் என்று சொல்லப் படும் அயோத்தி, மதுரா (வட மதுரை), மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), பூரி (புவனேஷ்வர்), துவாரகை என்று எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று அங்கேயே சிறிது காலம் தங்கிப் பார்த்தோம். அயோத்தி நம் மனதிற்கு உகந்ததாகவும் இராமபிரானையும் அன்னை சீதையையும் தினமும் தொழுவதற்கு ஏற்பதாகவும் இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். ஆனால் அவன் அருள் வந்ததாகவும் தெரியவில்லை. முக்தி மார்க்கம் தென்படுவதாகவும் தெரியவில்லை. கற்ற கல்வி அனைத்தும் ஒரு சதாசாரியன் கிடைக்காவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் என்பது எவ்வளவு உண்மை. வயது கூடக் கூட ஒரு நல்ல ஆசாரியன் கிடைப்பான் என்னும் நம்பிக்கை தளர்ந்து வருகிறது. இறைவா. எனக்கு ஒரு நல்ல ஆசாரியனைக் காட்டக் கூடாதா?'
மதுரகவியார் இப்படி இறைவனை இறைஞ்சி அடிக்கடி பெருமூச்சு விடுவது வழக்கமாய் விட்டது. கருணைக் கடலான இறைவன் நல்ல வழி காட்டாமலா போய்விடுவான்.
***
'ஆஹா. அது என்ன பெருஞ்சோதி. ஆதவன் மறைந்த பின் சில நாட்களாக தென் திசையில் இந்த பெரும் ஒளி தோன்றுகிறதே. என்னவாக இருக்கும்?'
'நண்பரே. அங்கு பார்த்தீர்களா? தெற்கில் ஏதாவது விசேஷமா? ஒரு பெரும் ஒளி தோன்றுகிறதே?'
'மதுரகவியாரே. எந்த ஒளியைச் சொல்கிறீர்கள்? எனக்கு எதுவும் தெரியவில்லையே?'
'இதே தான் எல்லாருடைய பதிலாகவும் இருக்கிறது. நமக்கு மட்டும் இந்த ஒளி தினமும் இரவில் தோன்றுகிறதே. அது என்ன என்று அறிந்து கொள்ள மிக்க ஆவலாக இருக்கிறது. நாளை நாம் தெற்கு நோக்கிச் செல்வோம். அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிப்போம்'.
இப்படி எண்ணி அயோத்தியிலிருந்து கிளம்பினார் மதுரகவியார். தினமும் பகலில் ஓரிடத்தில் தங்கிப் பகலவன் மறைந்த பின் ஒளிக்கற்றையை நோக்கி நடந்து நடந்து மதுரகவியார் தென்னாட்டிற்கு வந்தார். பல நாட்கள் பயணித்தபின் திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் வந்த போது அந்த ஒளி மறைந்தது. பின்னர் தோன்றவே இல்லை.
ஆதிநாதர் திருக்கோயிலில் தான் ஏதோ அதிசயம் இருக்க வேண்டும் என்று எண்ணி அங்குள்ள மக்களிடம் கேட்டார். அவர்கள் காரிமாறன் சடகோபனைப் பற்றிச் சொல்லி மதுரகவியாரை உறங்காப்புளி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
'அடடா. இந்த 16 வயது பாலகன் எவ்வளவு காந்தியுடன் இருக்கிறான். இவன் பிறந்தது முதல் அசையவே இல்லை என்று சொல்கிறார்களே. எந்த உணவும் உட்கொள்ளவில்லை என்றும் கண் திறந்து பார்த்ததில்லை என்றும் வாய் திறந்து பேசியதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் இச்சிறுவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. உடலிலோ முகத்திலோ எந்த வித வாட்டமும் இல்லை. அவன் முகத்து ஒளியை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருக்கிறதே. இந்தப் பாலகனைப் பேசவைத்துப் பார்க்கலாம். இறைவன் நமக்கு ஒரு சதாசாரியனை இறுதியில் காட்டிவிட்டான் என்றே தோன்றுகிறது'.
மதுரகவியார் இப்படி எண்ணிக்கொண்டு ஒரு சிறு கல்லை எடுத்து அந்த சிறுவன் அருகில் போட்டார் . அந்த ஒலியைக் கேட்டு இதுவரை கண் திறக்காத மாறன் கண் திறந்து மதுரகவியாரைப் பார்த்தான்.
மதுரகவியார் உடனே 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?' என்று வினவினார்.
சடகோபன் உடனே தன் திருவாய் மலர்ந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார்.
அதனைக் கேட்டவுடன் முதியவரான மதுரகவியார் கீழே விழுந்து அந்தச் சிறுவனை வணங்கி தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றார். மாறன் சடகோபனும் ஏற்றுக் கொண்டார்.
***
'நடந்ததைக் கேட்டாயா? இந்த பிராமணக் கிழவர் மதுரகவியார் கோயிலில் ஆடாமல் அசையாமல் கிடந்த, நம் தலைவர் காரியாருடைய மகன் மாறன் ஒரு சிறுவன் என்று கூடப் பாராமல் அவன் காலில் விழுந்து தன்னைச் சீடனாக்கிக் கொள் என்று சொல்கிறாரே? இது தகுமா? அவர் வயது என்ன? இவன் வயது என்ன? அவர் குலம் என்ன? இவன் குலம் என்ன? அவர் கற்றது எவ்வளவு? இவன் கற்றது எவ்வளவு? எதற்கும் ஒரு அளவு உண்டு'.
'ஆம் நண்பா. நீ சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். வேளாளர்களாகிய நம் குலத்தில் பிறந்த இந்தச் சிறுவனை அந்தப் பார்ப்பனக் கிழவர் கீழே விழுந்து வணங்குவதும் என்னை சீடனாக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்பதும் அதற்கு அந்த பாலகன் ஒத்துக் கொள்வதும் மிக்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. உலகவழக்கிற்கு எதிராகவும் இருக்கிறது. மதுரகவியார் செய்வதில் ஏதேனும் பொருள் இருக்கும். அவர் ஏதோ கேட்க, சிறுவன் மாறன் சடகோபன் ஏதோ பதில் சொன்னானே. என்ன என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்'.
***
'சுவாமி. நீங்கள் கோயிலுக்கு வந்து சடகோபனைப் பார்த்தவுடன் ஏதோ கேட்டு அவனும் ஏதோ பதில் சொன்னானே. அது என்ன என்று எங்களுக்கு விளக்க முடியுமா?'
'அன்பர்களே. திருக்கோயிலில் இருக்கும் நம் ஆசார்யன் சாதாரணமானவர் இல்லை. எல்லா ஞானமும் உடையவர். நான் கேட்டது
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
என்பது. இதன் பொருள் உயிரில்லாததாகிய இந்த உடலில் அணு உருவமாய் சிறியதாய் இருக்கும் ஜீவன் பிறந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எந்த நிலையில் இருக்கும் என்பது.
அதற்கு நம் ஆசார்யன் சொன்ன பதில்
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்
என்பது. இதன் பொருள் அந்த உயிர் சாதாரணமான உயிராய் இருந்தால் அந்தப் பிறவி நேரக் காரணமான முன்வினைகளுக்கு ஏற்ப இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டு அந்த உடலிலேயே வினைப்பயன் முடியும் அளவும் கிடக்கும்; அதுவே இறையுணர்வு கொண்ட உயிராய் இருந்தால் எம்பெருமானிடம் எப்போதும் ஈடுபாடு கொண்டு அவனிடமே தோய்ந்து கிடக்கும் என்பது'.
'விளக்கத்திற்கு நன்றி. இது பெரும் விஷயமாகத் தான் இருக்கிறது. சடகோபன் ஞானமடைந்தவன் என்பது தெளிவாகிறது. ஆனால் வயதிலும் கல்வியிலும் உயர்ந்தவரான நீங்கள் எப்படி இந்தச் சிறுவன் காலில் விழுந்து அவனை ஆசாரியனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இது தகுமா?'
'அன்பர்களே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். மேலோன் கீழோன் என்பதெல்லாம் உலக வழக்கில் நமக்கு நாமே அமைத்துக் கொண்ட வழிமுறைகள். சிறியவர் பெரியவரை வணங்க வேண்டும் என்பதும் அந்த வழிமுறைகளில் ஒன்று. ஆனால் ஒருவர் ஞானமடைந்திருந்தால் அவர் எந்த வயதினராக இருந்தாலும், எந்த குலத்தினராக இருந்தாலும், எப்படிப் பட்டவராய் இருந்தாலும் நம்மால் வணங்கப்பட வேண்டியவர். ஞானிகளிடம் குலம் கோத்திரம் கல்வி கேள்வி வயது போன்றவைகளைப் பார்க்கக் கூடாது. அதனால் நான் நம் ஆசாரியன் சடகோபனிடம் அடைக்கலம் பெற்றது மிகவும் சரியே'.
***

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்.
(1) இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் மேலானவன் என்பதையும், (2) என்றும் நிலையான உயிர்களின் இயல்புகளையும், (3) அந்த உயிர்கள் மேலான இறைவனை அடையும் வழியையும், (4) அந்த வழிக்குத் தடையாக எப்போதும் தொடர்ந்துவரும் முன்வினைகளையும், (5) அவனருளாலே அவன் தாள் அடைந்து அனுபவிக்கும் பேரானந்தப் பெருவாழ்வையும், தன் பாடல்களில் கூறுகின்ற திருக்குருகூர் மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் வேதங்களை யாழின் இசையுடன் இசைத்தது போன்றுளது.
வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே சரண்.
எனக்கு வேறொன்றும் தெரியாது. வேதங்களைத் தமிழில் திருவாய்மொழியாக இசைத்த மாறன் சடகோபன் திருக்குருகூர் ஏறு - அவரே எங்கள் வாழ்வு' என்று ஏத்தும் மதுரகவியாழ்வார், எங்களை ஆள்பவர். அடியார்க்கு அடியாரான அவரே அடியோங்களுக்கு அடைக்கலம்.
***
இது ஒரு மீள்பதிவு. வைணவர்கள் தங்கள் குலமுதல்வனாக நம்மாழ்வாரான மாறன் சடகோபனைத் தான் கருதுகிறார்கள். அடியவர்களின் குலத்தை ஆய்வதும் அதனைப்பற்றிக் கேட்பதும் பேசுவதும் பெரும்பாவம் என்று வைணவத்தில் சொல்வார்கள். வைணவத்தில் இருக்கும் மேன்மையைச் சுட்டும் முகமாகவே குலத்தைப் பற்றி இங்கே பேசியிருக்கிறேன்; அந்த அபராதத்தை இறைவனும் அடியார்களும் பொறுத்தருள வேண்டும்.
மாறன் என்ற பெயருக்கான காரணமாக இடுகையில் ஒன்றைக் கூறியிருக்கிறேன். ஆனால் நம்மாழ்வார் பாண்டியர் குலத்தவராக இருந்ததால் பாண்டியர்களின் பெயரான மாறன் என்ற பெயர் அவருக்கு இடப்பட்டது என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.
16 comments:
அன்பு நண்பர் குமரன்,
பார்பனர் அல்லாத நம்மாழ்வாரை வைணவ மரபினர் குழதெய்வமாக போற்றுகிறார்கள் என்பதை அண்மையில் தான் படித்தேன். நீங்கள் அதில் மேலும் பலதகவல்களை தந்திருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
அருமை அருமை.
படிக்கப் படிக்க அப்படியே ஆழ்ந்துவிட்டேன்.
மிக்க நன்றி.
உறங்காப்புளிக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று விளக்கமாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
ஒரு சிறிய ஐயம், அந்தப் படத்தில் புளியம் பொந்துக்குள் இருக்கும் மாறனார் நல்லாடையோடும் நற்சின்னங்களோடும் இருக்கிறாரே! சரி. உண்ணாமலே வளர்ந்தார் என்றது நடக்கையில் துணி வளர்வதும் சின்னம் துலங்குவதுமா பெரிய விடயம்.
கோவி.கண்ணன்,
இடுகையில் சொன்னது போல் இது ஒரு மீள்பதிவு. என்னுடைய நட்சத்திர வாரத்தில் 'பொருநைத் தலைவன்' என்ற தலைப்பில் இந்த இடுகையை இட்டேன். அப்போது பலர் படித்திருக்கிறார்கள். அப்போது நம்மாழ்வாரின் பிறந்த குலத்தைப் பற்றி அழுத்தம் கொடுக்காவிட்டாலும் அதனையும் சொல்லியிருந்தேன். இப்போது அந்த குலத்தைப் பற்றி அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழ்மண நிலைக்காக தலைப்பை மாற்றி இங்கே மீண்டும் இட்டேன். வைணவத்தில் தமிழுக்கு முதலிடம், குலத்திற்கு இடமில்லை என்று தான் வைணவ முதல்வர்கள் சொல்லியிருக்கிறார்கள்; தற்கால நடைமுறையில் தமிழுக்கு இன்னும் முதலிடம் இருக்கிறது - குலம் பார்க்காதே என்ற அறிவுரையை மட்டும் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு அடியார்களிடம் மட்டும் பார்க்காமல் மற்றவர்களிடம் பார்க்கிறார்கள் வைணவர்கள் - அதில் பார்ப்பனர்களும் மற்றவர்களும் (நாயக்கர், செட்டியார் என்று பலரும்) உண்டு.
வைணவத்தில் தமிழைப் போற்றும் மரபைத் தொடர்ந்து கொண்டு குலத்தை பார்க்காமல் இருப்பதை மீண்டும் நிலைநாட்ட சில வைணவ ஆசிரியர்கள் (ஆசாரியர்கள்) முயன்று கொண்டிருக்கிறார்கள். திரிதண்டி சின்ன ஜீயர் என்று ஒருவர் ஆந்திர நாட்டில் அதனைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் அந்த ஊருக்கு ஏற்ற படி தமிழ், தெலுங்கு, வடமொழி என்று மூன்று மொழிகளையும் (சொன்ன வரிசையிலேயே) வைணவத்தில் முதன்மை கொடுக்கிறார். ஆனால் குலத்தை மறுக்கிறார். பார்ப்பனர் அல்லாத பலர் அவர் வழியில் நின்று வைணவத்தில் முழுமையாக ஈடுபடுவதை இங்கே அமெரிக்காவிலும் காண்கிறேன்.
மதுரகவியாழ்வார் புரட்சி செய்தாரா என்றால் இல்லை என்றே சொல்வேன். அந்தக் காலகட்டத்தில் வருண தருமம் ஆழ்ந்து ஊன்றியிருந்தாலும் தென்னகத்தில் ஞானிகளிடம் குலம் பார்ப்பது இல்லை என்றே இருந்திருக்கிறார்கள். அதனைத் தான் மதுரகவியாழ்வாரின் வாய்மொழிகளாக இந்த இடுகையில் கூறினேன்.
எல்லா ஆழ்வார்களும் பெருமாளைப் பாடியிருக்க, பெருமாளைப் பாடாமல் மாறன் சடகோபனை மட்டுமே பாடியிருக்கிறார் மதுரகவியாழ்வார்.
நன்றி குமார். இரவிசங்கர் கண்ணபிரான் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரும் எழுதுவார் விரைவில். விருந்து தான். :-)
இந்த இடுகையை முதலில் இட்ட போதும் நீங்கள் படித்துப் பின்னூட்டம் இட்டிருந்தீர்கள் இராகவன். அதனால் உங்களுக்குத் தெரிந்த செய்தி தான். வேறு இடங்களிலும் உறங்காப்புளியைப் பற்றி படித்திருப்பீர்கள்.
நல்ல கேள்வி. உண்ணாமலேயே வளர்ந்தவர் உடுக்காமலேயே உடை கொண்டிருப்பதும் பூணாமலேயே நற்சின்னங்களைக் கொண்டிருப்பதும் பெரிதா என்ன? :-)
படத்தை வரைந்தவர் வைணவ குலமுதல்வன் என்பதால் அதனைக் காட்ட வேண்டி திருச்சின்னங்களுடன் வரைந்தார் போலும்.
அருமையான பதிவு நணபரே.விருத்தம் வயது முதிர்வு என்பது மூன்று வகைகள்
வயோ விருத்தன்=வய்தின் காரணமாக வருவது
ஞான விருத்தன்=பெற்ற ஞானத்தின் காரணமாக வருவது
சீலவிருத்தன்=கடைபிடிக்கப்படும் ஒழுக்கத்தின்காரணமாக வருவது.
கடைசியில் சொன்ன இவர்களை வயாதில் சிறியவர்களாக இருந்தாலும்
வணங்கத்தகுதி உள்ளவர்கள்.மாறனாரும் இந்த வகையைச்சேர்ந்தவர்தாம்
Hi..
I am suresh from Sivakasi(Madurai).I read your blog and it is very interesting, and I have created a new Blogspot in the name of Thandayuthapani.blogspot.com and I want to write about lord Muruga...Pls guide me how to post a blog and how to write in Tamil
Thanks,
sureshans66@gmail.com
நன்றி திராச. நீங்கள் இந்த இடுகையை முன்பு இட்டபோதே படித்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன். இல்லை போலும்.
ஆமாம் திராச. ஞான விருத்தர்களையும் சீல விருத்தர்களையும் அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் வணங்கலாம் என்பதே நம் பெரியவர்கள் காட்டிய வழி.
வாங்க சுரேஷ். தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி. தங்கள் வலைப்பதிவிற்கு வந்து தமிழில் எழுதுவதைப் பற்றிய பின்னூட்டம் இட்டிருக்கிறேன். திருமுருகனைப் பற்றி நிறைய எழுதுங்கள். முருகனருள் வலைப்பதிவையும் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கலாம்.
http://muruganarul.blogspot.com/
குமரா!
இளமையில் சமய பாடத்தில் ஆழ்வார்கள் பெயர்களைப் படித்தோம். ஆனால் அவற்றில் இவ்வளவு விபரம் இல்லை.முதல் முறை படிக்கிறேன்.
இந்த உறங்காப் புளி..ஆச்சரியமான செய்தி, நான் 400 வருட பழமையான புளியடியில் வளர்ந்தவன். ஆனால் புளியமிலை இரவில் மூடுவதை அவதானிக்கவில்லை.
நான் இலைகள் மூடும் புளியமிலைகளைப் பார்த்ததாக நினைவிருக்கிறது ஐயா. இந்த உறங்காப்புளி இன்றும் தாமிரவருணிக் கரையில் ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் திருக்கோவிலில் இருக்கிறது ஐயா. அடியேன் சென்று தரிசித்ததில்லை.
ஆழ்வார்கள், இராமானுஜர், மற்ற வைணவ ஆச்சாரியர்கள், நாயன்மார்கள் திருக்கதைகளைத் தொடர்ந்து முடிந்த போதெல்லாம் எழுதி வர எண்ணியிருக்கிறேன் ஐயா. ஆன்மிகம் எழுதும் மற்ற அன்பர்களும் எழுதும் படி வேண்டிக் கொள்கிறேன்.
குமரன்
முன்னரும் படித்தேன். இப்போதும் படித்தேன்.
நம்மாழ்வார் மீள் பதிவோ, புதுப் பதிவோ, எதுவாகிலும் அது படித் தேன்!
தக்க சமயத்தில் எடுத்துக்காட்ட வேண்டிய சூழல் இருப்பதால் எடுத்துக் காட்டியே ஆக வேண்டும்! உரக்கச் சொன்னால் தான் சந்தையில் கேட்கப்படும்! :-)))
//சரி. உண்ணாமலே வளர்ந்தார் என்றது நடக்கையில் துணி வளர்வதும் சின்னம் துலங்குவதுமா பெரிய விடயம்//
ஜிரா
அது ஓவியரின் கருத்தாக்கம். ஆனால் அதில் உண்மையும் கூட! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அந்தக் குழந்தையின் தாயும் சுற்றமும் என்ன தான் அது ஞானக் குழந்தை என்றாலும், அம்போ என்று விட்டு விடுவார்களா என்ன?
நாளும் நீராட்டுதலும், துலங்குதலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தன. இதே போல் திருமழிசை ஆழ்வார் இளமைக் கதையும் உண்டு!
// குமரன் (Kumaran) said...
நன்றி குமார். இரவிசங்கர் கண்ணபிரான் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரும் எழுதுவார் விரைவில். விருந்து தான். :-)//
என்னை மாட்டி விடணும்னா, குமரனுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடற மாதிரி! :-)))
த்ரிதண்டி சின்ன நாராயண ஜீயர் ஆந்திரத்தில்!
நம் தமிழ் நாட்டிலேயே இது போன்று குலம் பார்க்காது வைணவம் வளர்ப்பது பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது!
என்ன, அவர்களுக்கு வித்தியாசமான தலைப்பிட்டுச் சூடான இடுகை ஆக்கத் தெரியாது! :-)
இன்று பெரிதும் பேசப்படும் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம், பாஞ்சராத்ர ஆகமத்தில் ஏற்கனவே இருக்கு!
அதை நடைமுறைப்படுத்தி திருவரங்கத்தில் நடத்தியும் காட்டினார் ராமானுசர். இன்றளவும் எம்பெருமானார் மடம் என்னும் மடத்தில் இது நடந்து கொண்டு தான் இருக்கு! இதை அறிந்து தான் முதல்வர் கலைஞர் அவரை இந்த அரசின் திட்டத்துக்கு வழிகாட்டுமாறும் பாடநூல் வகுக்குமாறும் கேட்டுக் கொண்டார்! இது பற்றி சிவபாலன் பதிவில் ஏற்கனவே பின்னூட்டி இருந்தேன்!
திருக்கோவிலூர் என்ற ஊரில் உள்ள ஜீயர் பற்றி நான் விரைவில் எழுதுகிறேன்! அங்கு போய் பார்த்தால் தான் தெரியும் எத்தனை பேர் சாதி கடந்து அர்ச்சகராக உள்ளார்கள் என்று!
அப்துல் கலாம் சொல்வது போல, ஆக்கப் பணிகளுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் மிகக் குறைவு! விபத்துகள், பிரச்சனைகள் தான் முதல் பக்கச் செய்தியாக்கப்பட்டு, exceptions are standardized! அதற்காக ஆக்கப் பணிகளைச் சொல்லாமல இருக்க முடியுமா? நம்மால் இயன்ற வரை உரக்கவே சொல்லிக் கொண்டிருப்போம்!
ஆமாம் இரவிசங்கர். நம்மாழ்வார் பாசுரங்கள் மட்டுமில்லை. அவரைப் பற்றிப் பேசுவதும் படிப்பதும் கூட படித் தேன் தான். :-)
உரக்கச் சொன்னால் தான் சந்தையில் கேட்கப்படும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் எத்தனை உரக்கச் சொன்னாலும் காது கொடுப்பவர் காதுகளில் மட்டுமே விழும் என்பது என் அனுபவம். நமக்கும் அப்படித் தானே. :-)
நாளும் நீராட்டுதலும் துலக்குதலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருந்திருக்கும் என்பது சரியாகத் தான் தோன்றுகிறது இரவிசங்கர். விரைவில் திருமழிசைப்பிரானைப் பற்றி எழுதுங்கள்.
இரவிசங்கர். உங்களை மாட்டி விடறதுன்னா எனக்கு புளியோதரை சாப்பிடற மாதிரி. எனக்குச் சர்க்கரைப் பொங்கல் அவ்வளவா பிடிக்காது. :-)
இந்த இடுகையும் சூடான இடுகை ஆகவில்லை இரவிசங்கர். ஒன்றுக்கு இரண்டாக தலைப்பு இட்டும். :-) எனக்கு எப்படி சூடாக்குவது என்று இன்னும் தெரியவில்லை போலும்.
திருவரங்கம் எம்பெருமானார் திருமடத்தில் நடப்பதைப் பற்றியும் சிவபாலன் பதிவில் இட்ட பின்னூட்டத்தை விரித்தும் விரைவில் எழுதுங்கள் இரவிசங்கர். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கிறது. ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள் என்று அறிவேன்.
Yes Exceptions are greatly generalized. And then those generalizations become the proof for further demonization.
Post a Comment