Thursday, September 27, 2007

பூங்கா இதழும் தமிழ்மணத்தின் நெகிழ்வும்

பூங்கா வலைப்பதிவிதழ் ஆகஸ்ட் 27க்குப் பின்னர் வரவில்லை. ஏன் என்று அறிவிப்பு ஏதேனும் வந்ததா? பூங்காவை வாராவாரம் வேக வேகமாகப் புரட்டிப் பார்ப்பதோடு எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடும். என்னைக் கவரும் தலைப்புகளை ஏற்கனவே படித்திருப்பேன். அந்த இதழ் மூலம் புதிதாகப் படித்த வலைப்பதிவுகள் மிகச் சிலவே.

இரண்டு மூன்று வாரங்களாக புதிய இதழ் வராமல் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. தமிழ்மணத்தாருக்கு எழுதிக் கேட்கலாமே என்கிறீர்களா? செய்திருக்கலாம் தான். ஆனால் ஏற்கனவே ஒரு அறிவிப்பு வந்திருந்தால் நீங்களே அதனைச் சொல்லிவிடமாட்டீர்களா? அதான் இங்கே கேட்கிறேன். :-)

***

இந்த இடுகையின் தலைப்பு தமிழ்மணத்தின் நெகிழ்வினைப் பற்றியும் ஏதோ சொல்ல விழைகிறது. இல்லையா? வளர்ச்சியை விரும்பும் எதுவும் உறுதியோடும் நெகிழ்வுத்தன்மையோடும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்மணம் பயனர்களின் செயல்பாட்டை வைத்து நெகிழ்ந்து கொடுப்பதாக இரு பற்றியங்களால் (விதயங்களால்) புரிந்துகொள்கிறேன். இரண்டும் தொடர்புடையதே. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டியல் & சூடான இடுகைகள் பட்டியல்.

***

முதல் பட்டியலால் வலைப்பதிவர்கள் பெரும் பயன் பெறுகிறார்கள். நல்ல இடுகைகள் தகுந்த கவனத்தைப் பெறுகின்றன. கும்மிப்பதிவுகள் (அப்படிச் சொல்ல மனது வரவில்லை - வேடிக்கையும் விளையாட்டுமாகவோ வினையாகவோ அவரவர் பதிவுகளில் நண்பர்களுடன் பேசிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கும்மிப்பதிவுகள் என்று சொல்லும் போதே அது ஒரு தவறான ஒன்று என்றதொரு குறிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் எல்லோரும் சொல்வதால் அதனையே பயனுறுத்துகிறேன்) மிகுதியாக இந்தப் பட்டியலில் வந்து மற்ற பதிவுகள் பெற வேண்டிய கவனத்தைப் பெற முடியாமல் செய்துவிடுகின்றன என்றதொரு குறை இருந்தது. அதனால் 40 பின்னூட்டங்கள் வரை முதல் பக்கத்தில் தெரியும்; அதற்குப் பின்னர் 40+ இரண்டாவது பக்கத்திற்குச் சென்று விடும் என்று அமைத்தவுடன் இந்தக் குறை பெரும்பாலும் நீங்கியது என்று நினைக்கிறேன். அண்மைக்காலமாக அந்த 40+ இரண்டாவது பக்கத்தையும் பார்க்கிறேன். எந்த ஒரு 24 மணி நேரப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அந்தப் பக்கத்தில் ஆறோ ஏழோ இடுகைகளே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இதிலிருந்து இரண்டு வகை முடிவுக்கு வரலாம். முதல்வகை முடிவு, இரண்டாவது பக்கத்தில் பிரித்து இட வேண்டிய அளவிற்கு 40+ பின்னூட்டங்கள் பெறும் இடுகைகள் அவ்வளவாக இல்லை. இரண்டாவது வகை முடிவு, இப்படி இரண்டாவது பக்கத்திற்குத் தள்ளியதால் கும்மிப்பதிவுகள் குறைந்து போய்விட்டன. நண்பர்களுடன் அடிக்கும் அரட்டையை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

இரண்டாவது வகை முடிவு சரி என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மொத்தமாக எல்லா இடுகைகளும் பெற வேண்டிய அளவிற்கு கவனத்தைப் பெறுகின்றன இப்போது என்று நினைக்கிறீர்களா?

***

இரண்டாவது பட்டியலான சூடான இடுகைகள் பட்டியல் வந்த போது நானெல்லாம் 'ஏன் இந்த தேவையில்லாத வகைப்படுத்தல்' என்று மனத்தில் நினைத்ததுண்டு. ஆனால் மக்கள் சூடான இடுகைகளில் வருபவற்றையே மீண்டும் மீண்டும் படித்து அவற்றிற்கு மேலும் சூடேற்றுவதைப் பார்க்கும் போது மக்களுக்கு சூடான பற்றியங்களைப் படிப்பதில் உள்ள ஆர்வம் புரிந்து 'சரி. இது சரியான வகைப்படுத்தல் தான்' என்று தோன்றியது. ஆனால் சிறிது நாட்களிலேயே தலைப்பையும் இடுகையின் முதல் சில வரிகளையும் சுடேற்றும் வகையில் அமைத்துக் கொண்டு வரும் இடுகைகளின் எண்ணிக்கை மிகுதியானது - நானும் அப்படி ஒரு இடுகை இட்டிருக்கிறேன். அதனால் உண்மையிலேயே சூடேற வேண்டிய இடுகைகளைத் தாண்டி தலைப்பில் மட்டும் சூடு இருக்கும் இடுகைகள் பட்டியலில் மேலேறத் தொடங்கின. தமிழ்மணத்தாரும் அந்தப் பட்டியலைத் தூக்கி இரண்டாம் பக்கத்தில் போட்டுவிட்டார்கள் இப்போது. இதனால் பதிவர்களின் செய்கை மாறியிருக்கிறதா? உண்மையிலேயே சுடேற வேண்டிய இடுகைகள் மட்டும் தான் சூடேறுகின்றனவா? பதிவர்கள் தலைப்பில் மட்டும் சூடேற்றுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்களா? தமிழ்மணத்தாரின் அடுத்தச் செயல்பாடு நடக்கும் வரை அது தெரியுமா என்று தெரியவில்லை.

14 comments:

செல்வன் said...

எது எப்படியோ, இந்த இடுகை சூடான இடுகைகள் பட்டியலில் இடம் பெறும் என்பது உறுதி:-))

மாசிலா said...

பூங்கா விதயத்தில், கவனக்குறைவும் அலட்சிய போக்கும்தான் இதற்கு காரணம் என தெரிகிறது. காலம் தாழ்த்தாமல், இதை சரி செய்வார்கள் என நம்புவோம்.

குமரன் (Kumaran) said...

செல்வன்,

வாயை வச்சீங்களா? அவ்வளவு தான் போங்க. படிக்கிறதுக்கும் ஆள் இல்லாம போச்சுன்னு நினைக்கிறேன். யாரும் அவ்வளவா ஒன்னும் சொல்லலையே?

குமரன் (Kumaran) said...

மாசிலா. ஒருவரோ ஒரு குழுவோ முயற்சி எடுத்துத் தானே பூங்கா இதழ் வந்து கொண்டிருந்தது? அப்படி இருக்க கவனக்குறைவும் அலட்சியப்போக்கும் காரணமாக இருக்குமா என்று ஐயமாக இருக்கிறது. குழுவில் எல்லோருக்கும் வேலை அதிகமாக இருக்க வேண்டும் அல்லது தற்காலிகமாக ஏதாவது காரணத்திற்காக நிறுத்தியிருக்க வேண்டும். வேறு காரணங்களும் இருக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

கும்ஸ், சூடான இடுகைகள் இருந்த நேரத்தில் வைத்திருக்க வேண்டிய தலைப்பாச்சேன்னு நினைச்சுக்கிட்டே உள்ள வந்தேன்... ஹிஹி...

மதுரையம்பதி said...

நான் படிப்பது கூகிள் ரிடர் முலமாகத்தான் குமரன். அலுவலகத்தில் தமிழ்மணம்/தேன்கூடு பிளாக் செய்யப்பட்டுள்ளது....சனி-ஞாயிறு மட்டுமே எனக்கு வீட்டிலிருந்து திரட்டிகளைப் பார்க்க வாய்ப்பு. அதிலும் நான் பூங்கா எல்லாம் பார்ப்பதில்லை.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். அப்ப வச்சா என்ன இப்ப வச்சா என்ன? செல்வன் சொன்ன மாதிரி சூடான இடுகைகள்ல வந்திருக்கே. :-)

ஆனா இடுகையில சொன்னதுக்கு மாசிலா தவிர யாருமே ஒன்னுமே சொல்லலையே?

மாசிலா said...

குமரன்,
உண்மையில் சொல்லப்போனால், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் இருந்து அன்றாடம் இடைவிடாமல் பூங்காவை திறந்து பார்ப்பது என வழக்கம். கடந்து சில வாரங்களாக அதையும் கைவிட்டு விட்டேன்.

வெறுத்தே போய்விட்டது!
:-(

குமரன் (Kumaran) said...

மௌலி. நீங்க சொல்ற மாதிரி தான் நிறைய பேரு இருப்பாங்க போல இருக்கு. பூங்காவை எல்லாம் படிக்காம. அதனால தான் சொடுக்கல் கணக்கை (க்ளிக் கவுண்ட்ஸை) வச்சு பூங்கா நின்னுப்போச்சோ என்னவோ?!

கூகுள் ரீடர்ல நானும் நிறைய பதிவுகளைப் போட்டு வச்சிருக்கேன் மௌலி. ஒரு நாளைக்கு இருபது முப்பதுன்னு பதிவுகள் ஏறிக்கிட்டுப் போகுது. எல்லாத்தையும் படிச்சு முடிக்க ரொம்ப நேரம் ஆகுது. ;-)

குமரன் (Kumaran) said...

மாசிலா. உங்க ஒருத்தருக்காக மட்டுமாவது பூங்காவைத் தொடரலாம்ன்னு நினைக்கிறேன். பூங்கா தொகுப்பாசிரியர்கள் கருணை காட்டணும்.

வல்லிசிம்ஹன் said...

குமரன்,
நிறைய பதிவுகள் படிக்காமல் விட்டுப் போவதற்கு நேரம் இல்லாததுதான் காரணம்.

அதிலும் சூடான இடுகைகள் சிலசமயம் தலைப்போடு நின்று விடுகிறதோ என்றும் தோன்றும்.

விமரிசனம் செய்யும் அளவுக்கு எனக்கு வலை பரிச்சயம் இல்லை என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்:))))

மதுமிதா said...

அசத்துங்க குமரன்:-)

குமரன் (Kumaran) said...

வல்லியம்மா. நீங்க சொல்றதும் சரி தான். இன்னைக்கு இரவிசங்கரும் ஒரு தலைப்புல மட்டும் சூடு இருக்கிற இடுகையைப் போட்டிருக்கார். :-)

நான் கூகுள் ரீடருல நிறைய பேரு பதிவை போட்டு வச்சிருக்கிறதால நேரம் கிடைக்கிறப்ப படிக்க முடியுது. உங்க இடுகைகள் எல்லாத்தையும் படிக்கிறேன். சிலதுக்குத் தான் பின்னூட்டம் இட முடிகிறது.

குமரன் (Kumaran) said...

பாத்தீங்களா மதுமிதா அக்கா. என் பதிவு பக்கமே ரொம்ப நாளா வராத உங்களை, வந்தாலும் பின்னூட்டம் போடாத உங்களை (நேரம் இல்லைன்னு ஒத்துக்கிறேன்) இந்த இடுகை பின்னூட்டம் போட வச்சிருக்குதே. அது அசத்தல் தான். :-)