Thursday, August 23, 2007

தமிழ் இறைவனுக்கும் முன்னால்





'ஏன்டா. சீக்கிரம் வெளிய வா. பெருமாள் ஏளறார்'.

'ஏளரார்ன்னா என்னடா?'

'அதுவா. பெருமாள் வீதி உலா வர்றதைத் தான் அப்படிச் சொல்வோம்'

'அப்படியா. நாங்க எல்லாம் சாமி வருதுன்னு சொல்லுவோம்'.

'சரி. சரி. வெளிய வா. நாம் பெருமாளைச் சேவிக்கலாம்'

'சேவிக்கலாமா? அப்படின்னா?'

'தப்பாச் சொல்லிட்டேன். பெருமாளைக் கும்புடலாம் வாடா'

'சரி. என்னடா இது. இவ்வளவு பெரிய கூட்டம் சாமி முன்னாடி போகுது'

'அதுவா. அது பிரபந்த கோஷ்டிடா. சரி. சரி. பெருமாளை நல்லா சேவிச்சுக்கோ...இல்லை...இல்லை...கும்புட்டுக்கோ'.


'சாமிக்கு நல்லா அலங்காரம் பண்ணியிருக்காங்கடா. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஏன்டா சாமி இவ்வளவு வேகமா போகுது?'

'அதுவா பிரபந்த கோஷ்டி வேகமா போகுதுல்ல அதான்'

'ஏன்டா. முன்னாடி ஒரு கூட்டம் போச்சு. பின்னாடியும் ஒரு கூட்டம் போகுது. முன்னாடி போன கூட்டமாவது என்னமோ தமிழ்ல பாடிகிட்டுப் போனாங்க. பின்னாடி போறவங்க என்னமோ கத்திக்கிட்டுப் போறாங்களே. யாருடா இவங்க?'

'முன்னாடி போறவங்க பிரபந்த கோஷ்டிடா. ஆழ்வார்கள் பாடின நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் சேவிச்சுக்கிட்டுப் (பாடிக்கிட்டுப்) போறாங்க. பின்னாடி போறவங்க வேத பாராயண கோஷ்டி. வேதங்களை ஓதிக்கிட்டுப் போறாங்க'.

'வேதங்களை ஓதுறாங்களா. அது வடமொழியில இருக்கிறதால எனக்குப் புரியலைன்னு நெனைக்கிறேன். அதான் கத்துற மாதிரி தோணிச்சு. ஆமா. முன்னாடி போறவங்க பிரபந்தம்ன்னு என்னமோ சொன்னியே. அவங்க தமிழ்ல பாடுற மாதிரில்ல இருந்துச்சு?'

'அது தமிழ் தான்டா. ஆழ்வார்கள் பாடுன தமிழ் பாட்டுகளை எல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம்ன்னு சொல்லுவாங்க'.
'அப்டியா. ஹேய். இவங்களும் ஏன்டா சாமி பின்னாடி ஓடுறாங்க?'

'பெருமாள் பிரபந்த கோஷ்டி பின்னாடி ஓடுறார். வேத பாராயண கோஷ்டி பெருமாள் பின்னாடி ஓடுறாங்க'.

'ஏன் எல்லாரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ஓடுறாங்க? வேடிக்கையா இருக்கே?'

'அதுவா. எங்க தாத்தாகிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவரோட ஆசாரியர் சொன்னதை அவர் எனக்குச் சொன்னார்.


வடமொழி வேதங்கள் தன்னோட சொந்த முயற்சியால பெருமாளைத் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்ச மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால பெருமாளோட முழுப் பெருமையும் பாட முடியாம வேதங்கள் பின்வாங்கிடுச்சாம். ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அதனால பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்காங்க. அவங்களோட இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார். அவரை இன்னும் முழுசாத் தெருஞ்சுக்காத வேதங்களை ஓதுறவங்க அவரைத் தொரத்திக்கிட்டுப் போறாங்க'.

'நல்லா இருக்கே இந்த விளக்கம். எப்படியோ தமிழுக்கு முதலிடம் கெடைச்சா சரிதான்'.

'எங்க வீட்டுல எப்பவுமே தமிழுக்குத் தான்டா முதலிடம். ஏன் அப்படிச் சொல்ற'.

'அத விடு. ஆமா. இந்த போர்டுல உங்க தாத்தா பேருக்கு முன்னாடி என்னமோ உ.வே.ன்னு போட்டிருக்கே? அப்டின்னா என்னடா? திரு.ன்னு போட்டுப் பாத்துருக்கேன். ஆனா இது புதுசா இருக்கே'.

'அதுவா. அது உபய வேதாந்தி அப்படிங்கறதோட சுருக்கம்'.

'அப்டின்னா என்னடா?'

'எங்க ஆளுங்க சமஸ்கிருதத்துல இருக்கிற வேதங்களோட ஆழ்வார்கள் பாடுன திவ்யப் பிரபந்தங்களையும் தமிழ் வேதங்கள்ன்னு சொல்லுவாங்க. உபய வேதாந்தின்னா ரெண்டு வேதங்கள் உடையவர்ன்னு அர்த்தம். வடமொழி வேதங்களை விட தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட. ஆழ்வார் அருளிச்செயல்ன்னு எங்க தாத்தா எப்பவுமே ஆழ்வார் பாட்டுகள் பாடிக்கிட்டே இருப்பார்'

'ஆமான்டா. நானும் கேட்டுக்கேன். அப்ப எல்லாம் ஏதோ பழைய பாட்டாப் பாடுறார்ன்னு நெனைச்சுக்குவேன்.'

'சரி வா. பெருமாள் அடுத்தத் தெருவுக்குப் போயிட்டார். நாம உள்ள போகலாம். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு'.


இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே

பாடிக்கொண்டே வந்தார் தாத்தா...

***

இது ஒரு மீள்பதிவு.

26 comments:

குமரன் (Kumaran) said...

இந்திரனுக்கும் பிரம்மனுக்கும் முதல்வனை,
பெரிய பூமி, காற்று, தீ, நீர், வானம் என்ற ஐம்பூதங்களாய் நின்றவனை,
செம்மையில் சிறந்த தமிழோசையும் வடசொல்லுமாய் நின்றவனை,
நான்கு திசைகளும் ஆகி,
நிலவும் ஞாயிறுமாய் நின்றவனை,
வானில் உள்ள தேவர்களுக்கும் கிடைக்காத அழகும் குளிர்ச்சியும் உள்ளவனை,
அந்தணர்களின் மந்திரமானவனை,
எட்டெழுத்து மந்திரத்தால் வழிபட்டு மறவாது என்றும் நீ வாழ்ந்தால் நல்கதி பெற்று வாழ்ந்து போவாய் என் மட நெஞ்சமே

- திருக்கலிகன்றி, நீலன், பரகாலன், திருமங்கைமன்னன், முக்குலத்துதித்தோன், திருமங்கையாழ்வார்.

இடுகையில் இருக்கும் பாடல் திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகத்தில் இருக்கும் பாசுரம். தமிழ்வேதமாம் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் ஒரு பகுதி திருநெடுந்தாண்டகம். என்னுடைய பின்னூட்ட விதிகளின் படி பாடலுக்குப் பொருள் இந்தப் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். :-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//அவங்களோட இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார். //

இனிமையான விளக்கம்..

jeevagv said...

தமிழிலேயே ஓதினாலும் என்ன சொல்கிறார்கள் என்பத் என்றைக்கும் புரிந்ததில்லை. அதுவும் அவற்றை முன்ன்னால் கேட்டிராவிட்டால்!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர். இது நானே சொல்லும் விளக்கம் இல்லை. மீண்டும் மீண்டும் இராமானுஜரின் குருவிற்கு குரு (நாதமுனிகள்) காலத்திலிருந்து சொல்லப்படும் விளக்கம் இது. இன்றைக்கும் இப்படித் தான் தமிழின் பின்னால் பெருமாள் ஓடுவதையும் அவர் பின்னால் வேதபாராயணம் செய்பவர்கள் ஓடுவதையும் எல்லா திவ்ய தேசங்களிலும் காணலாம். மதுரையில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் தெற்கு கிருஷ்ணன் கோவில் பெருமாள் புறப்பாட்டிலும் அதனைச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

Unknown said...

அருமையான பதிவு.

கடவுள் மொழிகளை கடந்தவன் என்றாலும் கடவுளை மொழியாக்கி பார்த்தது நம் நாடு. இசை,இயல்,நாடகம் என முத்தமிழும் அவனை போற்றவே பிறந்தது அல்லவா? தமிழை தன் குழந்தையாக எண்ணித்தானே சிவன் தமிழை முருகனாக ஈன்றான்?

குமரன் (Kumaran) said...

உண்மை ஜீவா. முன்னரே பாசுரங்கள் தெரியாவிட்டால் என்ன சொல்கிறார்கள் என்று முதலில் புரிவது கடினமாகத் தான் இருக்கும். ஆனால் பாசுரங்கள் தெரிந்தால் அவர்கள் உணர்வுடன் சொல்வதையும் பாசுரங்களில் எந்த எந்த இடத்தில் நிறுத்துகிறார்கள் ஏன் நிறுத்துகிறார்கள் என்பது நன்கு புரியும்.

குமரன் (Kumaran) said...

அருஞ்சொற்பொருள்:

ஏளறார் - எழுந்தருளுகிறார் என்பதின் பேச்சுமொழி.

வடுவூர் குமார் said...

யாராவது,பெரியவர்கள் வீட்டிற்கு வந்தால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் "சுவாமிகள் ஏளறது" என்று சொல்லக்கேள்விப்பட்டுள்ளேன்.
உ.வே அர்த்தம் தெரிந்துகொண்டேன்.

Anonymous said...

இந்தப் பதிவை முகப்பில் வந்தவுடனேயே பார்த்து
விட்டேன். படித்தவுடன் நல்ல பதிவு என்று
இரண்டு வார்த்தை பின்னூட்டம் போட்டுவிட்டுப்
போய்விடலாம் என்று நினத்தேன். ஏனோ செய்யவில்லை. இன்று இங்கு நல்ல அடை மழை.மழை சற்று நின்றவுடன் எங்காவது போய் வரலாம் என்று கிளம்பினேன். இலக்கில்லாமல் போவது எனக்குப் புதிதில்லை. கோவிலுக்குப் போகலாம் என்று காரணமேயில்லாமல் மனத்தில் தோன்றியது.கோயிலில் கூட்டமேயில்லை. பெருமாள் கோயில்.உள்ளே போனால், பெருமாள் சப்பரத்தில் ஊர்வலம். சப்பரத்தை இழுக்க நாலு பேர்தான்.என்னையும் இழுக்கச் சொல்லி ஒருவர் கையசைத்தார். உங்கள் பதிவில் வந்த விதயங்கள்
கண் முன்னே! சப்பரத்திற்கு முன்னால் தமிழில்
பெருமாள் புகழ் பாட ஆறு பேர். பின்னால்
வடமொழியில் ஓத இரண்டு பேர்! அதில் ஒருவர்
அர்ச்சகர். முன்னால் திறந்த மார்புடன் போனவர்களுக்கு வடமொழியும் தெரிந்திருக்கும் என்று பார்த்தாலே தெரிந்தது. நடப்பது கனவா
என்று தோன்றியது. வீட்டிற்குப்போய் பின்னூட்டம்
இடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்!

குமரன் (Kumaran) said...

நல்ல கருத்து. நன்றி செல்வன்.

குமரன் (Kumaran) said...

இந்த இரண்டிற்கும் பொருள் தெரிந்து கொண்டீர்களா? மகிழ்ச்சி குமார். நன்றி.

குமரன் (Kumaran) said...

கருமுகில். எந்த ஊர், எந்த கோவில் என்றுச் சொல்லவில்லையே.

இதில் எனக்கு எந்த வியப்பும் இல்லை. உண்மை துளியும் பொய் பெரும்பகுதியும் கொண்ட பிரச்சாரம் காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தத் துளி உண்மை பெரும்பகுதி பொய்யையும் மெய்யாக்கிக் காட்டுவதால் அந்தப் பொய் பிரச்சாரத்தை நாம் நம்பி விடுகிறோம். பெரும்பகுதி பொய்யாக இருப்பதை உண்மைகளைக் காணும் போது உணர்ந்து கொள்கிறோம்; அப்போது அது வியப்பாகத் தான் இருக்கும். இன்னும் எத்தனை எத்தனை பொய்கள் இப்படியே காலம் காலமாகச் சொல்லிக் கொண்டு வரப்போகிறார்களோ?!

நீங்கள் அனுபவித்ததைப் பின்னூட்டமாக இட்டுச் சொன்னதற்கு மிக்க நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
முன்னோடல் பின்னோடலுக்கு நல்ல சுவையான விளக்கம்.
படங்கள் அருமை. இந்த அலங்காரமென்பதை ஈழத்தில் சாத்துப்படி என்போம். எங்கள் நல்லூரில் அந்த நாளில் குமாரசாமிக் குருக்கள். சாத்துப்படியில் விண்ணன்.அவர் வேலை அது மாத்திரமே!! ஒரு பிசிறு;நூல்;நார் வெளியே தெரியாது.
இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரோ தெரியவில்லை.ஆனால் நல்லைக் கந்தனை எல்லோர் கண்ணுக்குள் நிற்க வைத்தவர்.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. நல்லூர் திருவிழா நடக்கும் இந்த நேரத்தில் நல்லூர் கந்தனே எண்ணமெல்லாம் நிறைந்து தித்திக்கிறான் போலும். அவன் நினைவாகவே இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மதுரையில் சித்திரை திருவிழா நடக்கும் போது நானும் சிவமுருகனும் இருக்கும் நிலை போன்றது அது என்று புரிகிறது.

தமிழகத்திலும் வைணவ பரிபாஷையில் சாத்துபடி என்ற ஒரு சொல் உண்டு. சரியான பொருள் நினைவிற்கு வரவில்லை. சாற்றுமுறை என்ற ஒன்றும் உண்டு - ஆராதனை முடிந்த பின் திருப்பல்லாண்டு, திருப்பாவை பாசுரங்களை எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள். சாத்துபடி என்பதைப் படித்தவுடன் அது தான் எனக்கு நினைவிற்கு வந்தது.

Anonymous said...

இரண்டு ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள். உங்கள் பதிவைப் படித்தது. பின்பு அதை நேரில் பார்த்தது! இது தற்செயலாக நடந்ததாக நினைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.சாதாரண வாழ்க்கை விதயங்களில் இப்படியெல்லாம் நடப்பதில்லை :-) இதனால் காசு பணம் உபயோகம் இல்லயென்றாலும், பெருமாள் ஏதாவது என்னிடம் சொல்ல நினக்கிறாரா என்று யோசிக்கிறேன்!:-) நடந்த இடம் சிகாகோ அரோரா பாலாஜி கோயில். வேறு எந்தக் கேள்விக்கும் இன்னொரு முறை பதில் சொல்கிறேன்! இப்பொழுது வேண்டாமே! மனதை நெகிழ வைத்த பதிவு! நேற்று பிரம்மோத்சவம் - ரதம் என்று சொன்னார் ஒரு அன்பர். இது கூடத் தெரியவில்லையா என்ற மாதிரி இருந்தது அவர் பார்வை :-)

மெளலி (மதுரையம்பதி) said...

அறிந்த விஷயம், தங்கள் எழுத்தில் இன்னும் அருமை...நன்றி குமரன்.

குமரன் (Kumaran) said...

கருமுகில்வண்ணன் இந்த இடுகையை இன்று மறுபதிவு செய்து தங்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்க எண்ணியிருக்கிறான் கருமுகில். :-)

சிகாகோ செல்லும் போதெல்லாம் தவறாமல் நாங்கள் அரோரா கோவிலுக்குச் சென்று வருவோம். பெருமாளைப் பார்க்க மட்டும் இல்லை. கீழே வந்து சுவையான உணவையும் உண்ண. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்த அலங்காரமென்பதை ஈழத்தில் சாத்துப்படி என்போம்//

//தமிழகத்திலும் வைணவ பரிபாஷையில் சாத்துபடி என்ற ஒரு சொல் உண்டு. சரியான பொருள் நினைவிற்கு வரவில்லை.//

குமரன்
யோகன் அண்ணா சொன்ன
"அலங்காரம்" தான் தமிழகக் கோவில்களிலும் சாத்துப்படி என்று சொல்லுவார்கள்!

பரிபாஷையில் இரண்டுக்கும் அதே பொருள் தான் - அலங்காரம், அணிசெய்தல்.

உற்சவ மூர்த்திகளின் கரம், பாதம், முகம் - இவை எல்லாம் திருப்பும் வசதி கொண்டவை. (screw threaded)
அதனால் கைகளை உயர்த்தியும் வளைத்தும் குதிரை ஓட்டுவது போலவோ, மயில் ஏறுவது போலவோ, இன்னும் பலப்பல அழகிய கற்பனைகளை வாகனத்துக்கும் உற்சவத்துக்கும் ஏற்றாற் போல் உருவாக்க முடியும்.

இவ்வாறு செய்வதற்குச் சாத்துப்படி என்பது வைணவ ஆலயங்களில் பிரசித்தம்.

குமரன் (Kumaran) said...

சாத்துபடி என்ற வைணவ பரிபாஷைச் சொல்லின் விளக்கத்தைத் தெளிவுறுத்தியதற்கு நன்றி இரவிசங்கர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கருமுகில் கண்ணிலே படவேண்டும் என்பதற்காகவே தான் இந்த மீள்பதிவைக் கண்ணன் காட்டினான் போலும்! :-))

//சப்பரத்திற்கு முன்னால் தமிழில்
பெருமாள் புகழ் பாட ஆறு பேர். பின்னால் வடமொழியில் ஓத இரண்டு பேர்!//

கருமுகில் உங்களுக்கு ரெண்டு பேராச்சும் கிடைத்தார்களே...
தமிழக ஆலயங்கள் பலவற்றில் வடமொழி வேத கோஷ்டிக்கு ஆட்களைத் தேட வேண்டும்...

திருவரங்கத்தில் கூட ஏறக்குறைய இந்த நிலை தான்!
பெரும்பாலும் தமிழ்ப் பாசுர குழாத்துக்கு செல்லத் தான் பல பேர் விரும்புவார்கள். தமிழின் இனிமை ஒன்று. பிரசாத இனிமையும் முதலில் இவர்களுக்குத் தான் கிடைக்கும்! :-))))

//உண்மை துளியும் பொய் பெரும்பகுதியும் கொண்ட பிரச்சாரம் காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது//

:-)
கண்ணால் காணாமல், தீர விசாரியாமால், கேட்டதையும் எங்கோ வாசித்ததையும் வைத்து எழுதினால், இந்த நிலை தானே குமரன்!

கவலைப்படாதீங்க!
தானே தெரியும்; தானே தெளியும்!!!

குமரன் (Kumaran) said...

சரித்திர நாவல்கள் எழுதுபவர்களும் அதனைத் தானே செய்கிறார்கள் இரவிசங்கர். சில உண்மைகளைச் சுற்றி அவர்களின் கற்பனை வளத்தைக் கொண்டு புதினங்களைச் சமைப்பார்கள். அந்தப் புதினங்களையே உண்மை என்று எடுத்துக் கொள்ளும் மக்களும் இருக்கிறார்களே. இவர்களின் நடுவில் ஆய்வுக் கட்டுரை என்ற வகையில் உண்மை கொஞ்சமும் அதனைச் சுற்றிப் பொய்களையும் கற்பித்து எழுதும் போது புதினங்களை நம்பும் மக்கள் இந்தப் புனைவு ஆய்வு கட்டுரைகளை மிக மிக எளிதாக நம்பிவிடுவார்கள். பின்னர் அவற்றை ஆதாரங்களாகச் சுட்டி மற்றவர்கள் காட்டுவதும் நடக்கும். இருக்கும் உண்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ள யாருக்கும் நேரம் இல்லை என்பதால் பொய் சொல்கிறோம் என்று புரியாமலேயே சொல்லிக் கொண்டு செல்பவர்களும் அதனை மெச்சுபவர்களும் பெருகிக் கொண்டே போவார்கள். புத்தக ஆதாரங்களும் பதிவு ஆதாரங்களும் இப்படி தானே வருகின்றன.

இந்த வகையில் ஆன்மிக எழுத்துகளை எழுதும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று இராகவன் சொல்லுவதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். தீர விசாரித்தே எழுதுவோம். ஆனால் இராகவன் அதே கருத்தை அவரது மற்ற நண்பர்களிடமும் சொன்னால், அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டால், மிக நன்றாக இருக்கும்.

பொய்யான பதிவுகளுக்கு/கருத்துகளுக்குப் பதில் சொல்லாமல் புறக்கணிப்பதே மிக நல்ல வழி என்ற எண்ணம் ஒரு வகையில் சரி. நாம் அதனை எதிர்த்துச் சொல்ல நாம் எதிர்த்த கருத்திற்குத் தேவையில்லாத விளம்பரம் கிடைக்கிறது; புறக்கணிக்கும் போது அந்தக் கருத்து வளர்வதில்லை.

ஆனால் அதே நேரத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அப்படி நம்மால் புறக்கணிக்கப்படும் பொய் கருத்துகள் மீண்டும் திரும்பவும் சொல்லப்படும். அந்தக் கருத்துகள் உள்ள பதிவுகளும் புத்தகங்களும் ஆதாரங்களாகக் கொள்ளப்படும். அப்படி பல முறை நிகழ்வதைக் காணலாம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கோயில்களுக்கு அதிகம் போனதில்லை. ஆனால், எந்தக் கோயிலாக இருந்தாலும் அர்ச்சனை என்றால் அது வடமொழியில் தான் என்பதாக அனுபவத்திலும் மனதிலும் பதிந்து போய் இருக்கிறது. ஐயப்ப சாமிகளும் முருக சாமிகளும் தான் தமிழில் பாட்டுப் பாடிப் பார்த்து இருக்கிறேன். ஏதாவது சிவன் கோயில்களில் அடியார்கள் மட்டும் தனியே அமர்ந்து ஓதிக் கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கிறேன். இந்த இடுகையில் சொன்ன மாதிரி உண்மையிலேயே நடக்கிறது, அதுவும் பெரும்பான்மை இடங்களில் என்று அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் அமெரிக்கக் கோயிலில் நடைபெறுவது வியப்பளிக்கிறது. திருப்பதியில் மார்கழியில் காலையில் திருப்பாவை பாடுவார்கள் என்று அறிந்த போதும் இந்த வியப்பு வந்தது. உண்மை நிலையை எடுத்துரைப்பதற்கு நன்றி.

மற்ற எல்லா இந்துக் கடவுகள்களைக் காட்டிலும் கண்ணன் மேல் எனக்கு ஈர்ப்பு அதிகம். அதற்காகவும் தமிழுக்காகவுமே கண்ணன் குறித்த தமிழ்ப் பாசுரங்களைப் படிக்கப் பிடித்திருக்கிறது.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். உங்கள் அனுபவம் சரி தான். பெருமாள் கோவிலோ சிவன் கோவிலோ வேறெந்த ஆகம வழிபாடுகள் கொண்ட கோவிலோ அங்கெல்லாமுமே வடமொழியில் தான் அர்ச்சனை நடக்கிறது. தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்ன்னு முன்பு போட்டிருந்தார்கள். இப்போது தமிழில் அர்ச்சனை செய்யப்படும்ன்னு அதனை மாற்றிவிட்டார்களாம்.

சிவன் கோவிலில் அடியார்கள் தனியே அமர்ந்து தமிழில் தேவார திருவாசகங்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தனியாக ஒருவரோ இருவரோ சொல்லிக் கொண்டிருந்தால் அவர்கள் ஓதுவார் மூர்த்திகள் எனப்படுபவர்கள். பாரம்பரிய முறையில் பாடிக் கொண்டிருப்பார்கள் - சிவபாலன் இதைப் பற்றி அதிகம் சொல்ல முடியும் என்றெண்ணுகிறேன். கூட்டமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்கள் நம்மைப் போன்ற அடியவர்கள். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் அப்படிப் பட்ட அடியவர்கள் குழாத்துடன் அடியேனும் தேவார திருவாசகங்கள் பாடிப் பரவியிருக்கிறேன். பெருமாள் கோவில்களில் தமிழுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கருவறையில் அர்ச்சகர் முதற்கொண்டு குழுமியிருக்கும் அடியார்கள் எல்லோரும் (பாசுரங்கள் தெரிந்திருந்தால்) திருப்பல்லாண்டு, திருப்பாவை என்று தமிழ் பாசுரங்கள் பாடி வணங்குவார்கள். பெருமாள் புறப்பாடு நடக்கும் போது இந்த இடுகையில் சொன்னது போல் தான் நடக்கும். தமிழ் முன்னே வழிகாட்டிச் செல்ல பெருமாளும் வடமொழியும் பின்பற்றி நடப்பார்கள்.

தமிழகத்தில் மட்டுமில்லை எல்லா இடங்களிலும் (அமெரிக்காவிலும்) பெருமாள் கோவில்களில் இதனைக் காணலாம். சென்ற சனிக்கிழமை இங்கே மினியாபொலிஸ் பெருமாள் கோவிலுக்குச் சென்ற போதும் கருவறையில் பெருமாள் முன்னிலையில் அர்ச்சகர் தொடங்கி முன் மண்டபத்தில் இருக்கும் பல அடியவர்களும் பாசுரங்கள் பாடினார்கள். அடியேனும் அந்த கோஷ்டியில் கலந்து கொண்டேன் (நவீன ஆடைகளுடன் தான்).

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். இன்னொன்றையும் சொல்ல நினைத்தேன். மறந்துவிட்டேன். இந்த இடுகைக்கு முதலில் 'தமிழைத் துரத்தும் பெருமாள்' என்று தான் இந்த மறுபதிவு செய்யும் போது தலைப்பு இடலாம் என்று எண்ணினேன். அப்போது சூடான இடுகையில் வரும் வாய்ப்பு உண்டு. அப்புறம் நீங்கள் ஒரு முறை கடிந்து கொண்டது நினைவிற்கு வந்து பழைய தலைப்பையே இட்டேன். :-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//இரவிசங்கர். இன்னொன்றையும் சொல்ல நினைத்தேன். மறந்துவிட்டேன். இந்த இடுகைக்கு முதலில் 'தமிழைத் துரத்தும் பெருமாள்' என்று தான் இந்த மறுபதிவு செய்யும் போது தலைப்பு இடலாம் என்று எண்ணினேன். அப்போது சூடான இடுகையில் வரும் வாய்ப்பு உண்டு. அப்புறம் நீங்கள் ஒரு முறை கடிந்து கொண்டது நினைவிற்கு வந்து பழைய தலைப்பையே இட்டேன். :-)//

மகிழ்ச்சி. இறைவனுக்கும் தமிழுக்கும் பரபரப்புக் குறுக்கு வழிகள் தேவை இல்லையே..

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். சில நேரங்களில் தேவைப்படும் என்றே நினைக்கிறேன்.