Monday, June 30, 2008

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ?


அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து - என்னைக் காத்து அருளும் செழுந்தமிழாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துடன் உண்டு

உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? - உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்து குளிக்கும் படி என்று நேருமோ?

உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் - உள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள்

கவிமழை சிந்தக் கண்டு - கவிதை மழை சிந்த அதனைக் கண்டு

களிக்கும் கலாப மயிலே! - மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே!

சகலகலாவல்லியே! - கலைவாணியே!

Saturday, June 28, 2008

அபிராமி அந்தாதி 98 பாடல் விளக்கம் தேவை

நண்பர்களே.

இது வரை அன்னையின் அருளால் அபிராமி அந்தாதியின் 97வது பாடல் வரை பொருள் சொல்லிவிட்டேன். 98ம் பாடலுக்குப் பொருள் சொல்ல முயலும் போது இந்தப் பாடல் அவ்வளவாகப் புரியவில்லை. முதலில் வரும் தைவந்து என்ற சொற்றொடருக்குப் பொருள் என்ன? கைவந்த தீயும் தலை வந்த ஆறும் ஏன் மறைந்தது? எப்போது மறைந்தது? இந்தக் கதை யாருக்காவது தெரியுமா? மீனாட்சித் திருக்கல்யாணத்தின் போது சுடலையாண்டி சுந்தரேஸ்வரராக மாறி வந்தார் என்று படித்திருக்கிறேன். அதனைத் தான் பட்டர் இங்கே சொல்கிறாரா? ஆனால் அப்போது கையிலிருக்கும் தீ மறைந்திருக்கலாம்; தலையில் கங்கையையும் மறைத்துக் கொண்டா வந்தார்? அது தெரியவில்லை. வாமனாவதாரத்தில் பிரம்மச்சாரியாக வரும் போது மார்பில் நிலையாக இருப்பவளை குறுக்கு ஆடையால் மறைத்துக் கொண்டு கள்ளன் வந்தது போல இவரும் வந்தாரா? தெரிந்தவர் தயை செய்து சொல்லுங்கள்.

தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே

Friday, June 27, 2008

தகப்பன் சாமி!

"அப்பா அப்பா ஒரு கதை சொல்லுங்க அப்பா" 

 "இப்பத் தானே, அம்மா ஒரு கதை புத்தகத்தைப் படிச்சுக் காமிச்சாங்க. அப்பாவுக்குத் தூக்கம் வருது. தூங்கணும்" 

 "அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா. ஒரே ஒரு கதை அப்பா" 

 "இல்லைம்மா. அப்பா பாட்டு பாடறேன். சீக்கிரம் தூங்கு. காலையில எந்திரிச்சுப் பள்ளிக்கூடம் போகணும்" 

 "ஒரே ஒரு கதைப்பா. ஒன்னே ஒன்னு. ப்ளீஸ். ப்ளீஸ்" 

 "உழந்தாள் நறுநெய்..." 

 "ம்ம்ம். கதை வேணும்பா" 

 "ஓரோ தடா உண்ண..." 
 
"ம். சரி. பாடுங்க" 

 "உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ண 
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் 
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் 
முழந்தாள் இருந்தவா காணீரே 
முகிழ் முலையீர் வந்து காணீரே" 

"தூங்கிட்டியா அம்மா?" 

"தூக்கம் வர்றமாதிரி இருக்கு. ஆனா இன்னும் தூங்கலை" 

 "சரி. கதை சொல்லவா?" 

 "கதையா! ம்.ம். சொல்லுங்கப்பா. சொல்லுங்க" 

 "எந்தக் கதை வேணும்?" 

 "ம்.ம். கண்ணன் கதை. கண்ணன் கதை" 

 "ம். அப்பாவும் அதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரி. கண்ணனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்?" 

 "வெண்ணெய். வெண்ணெய்" 

 "ஆமாம். வெண்ணெய் தான். ஒரு தடவை அவங்கம்மா.." 

 "யசோதாவா? தேவகியா?" 

 "யசோதாம்மா தான். அவங்க ஒரு தடவை ரொம்ப நேரம் வேலை பார்த்து ஒரு பானை நிறைய வெண்ணெய் சேர்த்து வச்சாங்களாம்" 

 "எம்புட்டு பெரிய பானைப்பா?" 

 "நம்ம வீட்டுல இட்லி மாவு வப்போமே. அது மாதிரி பெரிய பானை" 

 "இட்லி மாவு பானையில இருக்காதே. பாத்திரத்துல தானே இருக்கும்" 

 "ஹிஹி ஆமாம். அந்த மாதிரி பெரிய பானைன்னு சொல்றேன்" 

 "அப்ப சரி" :-) 

 "அம்மா அந்தப் பக்கம் போனவுடனே இந்தக் கண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா?" 

 "தெரியும் தெரியும். அந்தப் பானையில இருக்குற வெண்ணெயை எல்லாம் தின்னுட்டான்" 

 "உனக்கும் குடுத்தானா என்ன?" 

 "இல்லை. எனக்குக் குடுக்கலை" 

 "அப்ப எப்படி உனக்குத் தெரியும்?" 

 "அப்பா தான் சொன்னீங்க. இன்னொரு கதை சொல்றப்ப" 

 "ம். :-). ஆமாம். அந்தப் பானையில இருக்குற எல்லா வெண்ணெயையும் அவன் வழிச்சு சாப்டான். கொஞ்ச நேரம் கழிச்சு அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு. அம்மாவுக்கோ கோவமோ கோவம். ஒரு பானை வெண்ணெயை முழுங்குனா என்ன ஆகும்?" 

"வயிறு வலிக்கும்" 

"ம். அதான். வயிறு வலிக்கும்ல. இந்தத் திருட்டுப்பய அம்மா எத்தனை தடவை சொன்னாலும் கேக்காம பானை வெண்ணெயை முழுங்கியிருக்கான். கண்ணனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு பயம். அடடா நாம எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறானே. இவனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு கோவம் கோவமா வருது" 

 "ம்" 

 "அம்மா அந்த கோவத்துல கண்ணனை அடிக்க வர்றாங்க. அம்மா அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சவுடனே கண்ணனுக்கு பயம் வந்திருச்சு. உடனே அழ ஆரம்பிச்சுட்டான்" 

 "அப்பா" 

 "என்னம்மா?" 

 "இனிமே நான் நிறைய சாக்லேட் சாப்ட மாட்டேம்பா" 

 "இப்ப எதுக்கும்மா சாக்லேட் நினைவு வந்தது?" 

 "இன்னைக்கு காலையில நான் ரெண்டு பார் சாக்லேட் சாப்புட்டேன்னு அப்பா அடிச்சீங்கள்ல. எனக்கு வயிறு வலிக்கும்ன்னு நீங்க பயந்து தானே அடிச்சீங்க" 

அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது.


Thursday, June 26, 2008

கண்ணன் பாட்டு 100வது இடுகைக்கு வாழ்த்துகள் - திரு. இந்திரா சௌந்தர்ராஜன் & திரு. அண்ணா கண்ணன்


'கண்ணன் பாட்டு' வலைப்பதிவின் நூறாவது இடுகைக்கு வாழ்த்துகளை தொலைக்காட்சித் தொடர் 'மர்மதேசம்' புகழ் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் தமிழ்சிபி, தமிழ் சமாசார் ஆசிரியர் திரு. அண்ணா கண்ணன் அவர்களும் அனுப்பியிருக்கிறார்கள்.

***

திரு. இந்திரா சௌந்தர்ராஜன்:

kaNNan paattu 100vathu postkku enathu manam niraindha vaazththukkaL!

anbarkaL anaivarukkum paaraattukkaL!

Indrasoundarrajan(writer)

Madhurai

கண்ணன் பாட்டு 100வது இடுகைக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

இந்திரா சௌந்தர்ராஜன் (எழுத்தாளர்)
மதுரை.

***

திரு. அண்ணா கண்ணன்:


கண்ணன் பாட்டு என்ற இந்தக் கூட்டு வலைப் பதிவு, நூறாவது இடுகையைக் கண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எட்டு பேர்கள் இணைந்து ஒன்றரை ஆண்டில் நூறு பதிவுகள் இட்டுள்ளார்கள். கண்ணனின் அழகை, அருளை, புகழை, லீலைகளை... கண்ணன் தொடர்பான ஒவ்வொன்றையும் ரசித்து, ருசித்துத் தொகுத்துள்ளார்கள். கண்ணன் பாட்டு என்று பதிவின் பெயர் இருந்தாலும் கண்ணனுடன் சேர்த்து ராமனும் அவர்களின் அடியவர்களும் காதல் பாடல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் கண்ணனாகப் பார்ப்பது ஒரு வகை உயர்ந்த ஆன்மீகம். அதனால் தான் உலகில் 660 கோடி ஆழ்வார்கள் இருக்கிறார்கள் என இவர்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது.

கோயிலில் கொசுத் தொல்லை என்பதால் அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வைத்துக் கொடுக்கும் அன்பு மயமான உள்ளத்தை இங்குதான் நான் கண்டேன்.

ஒவ்வொரு பதிவாகப் பின்னால் பார்த்துக்கொண்டே சென்றேன். அழகிய பாடல்கள், அவற்றின் உரை வடிவம், இசை வடிவம், வாய்ப்பிருந்தால் வீடியோ எனப்படும் ஒளி வடிவம், எழில் சிந்தும் புகைப்படங்கள், கண்ணன் தொடர்பான செய்திகள், கேள்விகள் - விளக்கங்கள்... எனத் தேடித் தேடித் தொகுத்த ஒவ்வொன்றும் ஈர்த்தன.

திரைப் பாடல்கள், தனிப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள்... எனக் கண்ணன் தொடர்பான எல்லாப் பாடல்களையும் அவற்றின் வரி வடிவத்துடன் வெளியிட்டு வருவது அருமை. புகழ் பெற்ற பாடல்கள் ஒரு புறம் அணி சேர, பதிவாளர்களே சொந்தமாகப் பாட்டெழுதி அதைப் பாடியும் வெளியிட்டுள்ளது இன்னும் சிறப்பு.

கே ஆர் எஸ் எனப்படும் கண்ணபிரான் ரவிஷங்கர், வேற்று மொழிப் பாடலைத் தமிழில் தந்துள்ளதும் கவர்ந்தது. தாயாருக்குத் திருமஞ்சனம் செய்விக்கையில் அதனை ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவதுடன் ஒப்பிட்டது கவித்துவமாக ஒளிர்கிறது.

ஷைலஜாவுக்குத் திருவரங்கப்ரியா என்றொரு பேர் இருப்பதை இந்த வலைப்பதிவிலிருந்து அறிந்துகொண்டேன். அவரும் நாகி நாராயணனும் இணைந்து பாடியது, செவிக்கினிமை சேர்த்தது.

இப்படியாக

* தி. ரா. ச.(T.R.C.)
* மடல்காரன்
* மலைநாடான்
* G.Ragavan
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* Raghavan
* kannabiran, RAVI SHANKAR (KRS)
* dubukudisciple

ஆகிய ஒன்பது பேர்களும் ஒரு புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு மதம் தொடர்புடைய வலைப் பதிவு என்றாலும் கூட, மதத்தைப் பிரச்சாரம் செய்யும் நோக்கம் இவர்களிடம் இல்லை. தங்களை அடியவர்களாகக் கருதி, தங்கள் இறைவனை ரசித்து, ஆழந்து பக்தியில் மூழ்கி முத்தெடுத்து வருகிறார்கள். இந்த 21ஆம் நூற்றாண்டில், பரபரப்பான இணைய வெளியில் அமைதியைப் பரப்பும் உயர்ந்த நோக்கம் இவர்களிடம் உள்ளது. அதற்காக இவர்களைத் தனித் தனியாகப் பாராட்டுகிறேன்.

வலைப் பதிவின் இடுகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை என்றால், பல பின்னூட்டங்களும்கூட சுவையாகவே இருக்கின்றன. இந்த எட்டு பேர் அல்லாது மேலும் பலரின் பங்களிப்பும் உள்ளதை இந்த வலைப் பதிவுத் தடத்தில் கண்டேன். மதுமிதாவின் பாடலாகட்டும் வல்லிசிம்ஹனின் இசையாகட்டும் நா.கண்ணனின் சுட்டியாகட்டும் ஒவ்வொன்றும் இந்த வலைப் பதிவுக்கு வலிமை சேர்க்கின்றன.

இந்த இனிய முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். நான் இந்த வலைப்பதிவையும் அதன் உறுப்பின்ர்களையும் வாழ்த்தத் தகுதியுடையவன்தானா? என் பெயரில் கண்ணன் இருப்பதால் எனக்கு இதில் தொடர்பு ஏற்பட்டுவிட்டதா? நான் கண்ணனை ஒரு கடவுளாக ஏற்கிறேனா? என்ற கேள்விகள் என் முன்பு எழுகின்றன. இவை தொடர்பாக ஒரு சிறு விளக்கத்தை நான் அளிக்க வேண்டும்.

கண்ணனை ஒரு கதாபாத்திரமாக நான் மிகவும் ரசிக்கிறேன். அவனது சிறையில் பிறந்து, நதியைக் கடந்து, ஆயர்பாடியில் வளர்ந்து, காளிங்க நர்த்தனம் ஆடி, புல்லாங்குழல் இசைத்து, மாடுகள் மேய்த்து, வெண்ணெய் திருடி, சேலைகளை ஒளித்துவைத்து, கோபிகையருடன் விளையாடி, காதலில் குழைந்து, கம்சனைக் கொன்று.... என அழகான கதாநாயகனாக அவனை ஏற்கிறேன். கண்ணன் என்றில்லை; எந்தக் கடவுளையும் நம்பி, வணங்கி, துதித்து, வேண்டும் வழக்கம் என்னிடம் இல்லை.

நான் ஒரு நாத்திகனா? என்ற கேள்விக்கும் என்னிடம் தெளிவான பதில் இல்லை. கடவுள் வெளியில் இல்லை; நமக்குள் இருக்கிறார் என்ற கருத்தினை நான் ஏற்கிறேன். இதன் மூலம் நாமே கடவுளாக வாய்ப்பிருப்பதை உணர்கிறேன். யோகம், தியானத்தின் வழியே ஓர் உன்னத நிலையை அடையலாம் என்ற வழியை நான் ஏற்கிறேன். தாய்மை உணர்வு பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடம் இருந்தாலும் அவரும் தாயே என்ற கருத்து எனக்கு உண்டு. கடவுளுக்கு உருவம் கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அறிவியல்பூர்வம் அல்லாத சடங்கு, சம்பிரதாயங்களில் எனக்கு ஈடுபாடில்லை. என் ஆன்மீகக் கோட்பாடு இப்படியாகச் சில புள்ளிகள் கொண்டது.

ஒரு பயணியாக நான் ஆலயங்களுக்குச் செல்வேன். சுற்றிப் பார்ப்பேன். அங்கு துளசியும் நீரும் கொடுத்தால் விருப்பத்துடன் பருகுவேன். தல விருட்சங்களின் காற்றினை ஆழ நுகர்வேன். கலைநயம் மிகு சிற்பங்களை ரசிப்பேன். விக்கிரகங்களுக்குச் செய்த அலங்காரங்களை ஆர்வத்துடன் கவனிப்பேன். மனத்தை உருக்கும் பாடல்களைக் கேட்டு அந்த இசையில் கரைவேன். ஆனால் கடவுளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் என் மதம் அறிவியல். அது ஏற்கும் எதையும் நான் ஏற்பேன். அது மறுக்கும் எதையும் நான் வெளிப்படையாக மறுக்க மாட்டேன். விடை தெரியாத பலவற்றையும் ஆய்வுக்குரியது என்ற தலைப்பிலேயே வைக்க விரும்புகிறேன்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரு புள்ளியில் சந்திக்குமானால் அங்கு தாராளமாக என்னைப் பொருத்தலாம். ஏனெனில் நிரந்தரக் கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை. அவ்வப்போதைய நிரூபணங்களுக்கு ஏற்ப, நெகிழ்ந்து கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்.

இவ்வளவு விளக்கமாக நான் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிட்டால் நான் கிருஷ்ண பக்தி கொண்டவன் என்ற தவறான கருத்து ஏற்பட வாய்ப்புண்டு.

கண்ணன் பாட்டு என்ற வலைப்பதிவினைப் பாராட்டும் நான் அதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்துள்ளேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

நண்பர்களே,

கண்ணன் பாட்டின் மூலம், இணைய தளத்தில் தமிழின் ஆன்மீகச் சாரத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்கள் முயற்சியின் மூலமாக ஆன்மீகம் வளருவது இருக்கட்டும். உறுதியாகத் தமிழ் வளர்கிறது. அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

திரை இசை முதல் தனி இசை வரை இனிய இசையை வளர்க்கிறீர்கள். அவற்றைக் கேட்கக் கேட்க மனம் மகிழ்கிறது. அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்.

வலைப் பதிவில் எழுத்து, இசை ஆகியவற்றுடன் இனிய புகைப்படங்களையும் ஒளிப்படங்களையும் இணைத்து, இணையத்தின் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்துகிறீர்கள். இவற்றுக்குத் தமிழ்த் தொன்மம் என்ற அடையாளம் இருப்பதால் இதன் மூலம் தமிழரின் நம்பிக்கைகள், வழிபாடு, தத்துவம், இலக்கியம்.... ஆகிய பலவற்றையும் பாதுகாத்து இணையத்தில் சேமிக்கும் அரிய பணியில் உங்கள் கைகளையும் சேர்த்துள்ளீர்கள். இந்த நற்பணிக்காக உங்களை நாவினிக்கப் போற்றுகிறேன்.

தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட மாட்டார்கள் என்ற அவதூறு ஒன்றுண்டு. அதைப் பொய்யாக்கி, எட்டு பேர் இணைந்து ஒரு கூட்டு வலைப்பதிவை வெற்றிகரமாய், ஒரு வீணையின் தந்திகளைப் போல் நடத்துகிறீர்களே அதற்காக உங்களை வானளாவ வாழ்த்துகிறேன்.





--
Annakannan

Tamil Editor

http://tamil.sify.com
http://tamil.samachar.com
http://annakannan-photos.blogspot.com

பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய்


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே

சகலகலா வல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அருள்பவளே! கலைவாணியே!

பங்கயாசனத்தில் கூடும் - தாமரை மலர் இருக்கையில் வீற்றிருக்கும்

பசும்பொற் கொடியே - பசும்பொன்னால் செய்யப்பட்டக் கொடி போன்றவளே!

கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - பெருத்தக் குன்றினைப் போன்ற கொங்கைகளும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பைப் போல் இனியவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் - நானும் இந்த உலகமும் விரும்பும், பொருட்சுவையும் சொற்சுவையும் தோய்ந்து வரும், நான்கு விதமான கவிதைகளையும் பாடும் பணியில் என்னைப் பணித்தருள்வாய்!

----------

நான்குவிதமான கவிதைகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்று கவிதைகள் நான்கு வகை. நினைத்தவுடன் புதுமையாக இதுவரை யாரும் பாடாத ஒரு பொருளைப்பற்றிப் பாடுவது ஆசுகவி. இசையுடன் கூடி இனிமையான சொற்களும் உவமைகளும் கூடி வரும்படிப் பாடுவது மதுரகவி. தேர் போன்ற ஒரு சித்திரத்தில் வைக்கலாம் படி சொற்களை அழகுற அமைத்துப் பாடுவது சித்திரக் கவி. பலவிதமான வடிவங்களில் அமைத்துப் பாடுவது வித்தாரக் கவி.

ஐம்பால் காடு - விளக்கம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Wednesday, June 25, 2008

சர்வேசனுக்கு வணக்கம் (கேள்வி பதில் 3)

'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன'ன்னு ஒரு இடுகை போட்டேன். அப்ப நிறைய பேர் கேள்விங்க கேட்டாங்க. ஒவ்வொன்னா பதில் சொல்லிக்கிட்டு வர்றேன். இதுக்கு முன்னாடி வந்த கேள்வி பதில் இடுகைகள் இங்கே: இடுகை1, இடுகை2

இப்ப இந்த இடுகையில சர்வேசன் கேட்ட கேள்விக்களுக்குப் பதில்கள்.

1) கடவுள் உண்மையிலேயே இருக்காருன்னு உங்களுக்கு எது சொல்லுது? கடவுள் உண்மையிலேயே இருக்கான்னு, தினம் தினம் தெருவோரத்தில் (ஒரு தவறும் பண்ணாத) வயிற்றுப் பசியுடன் பிச்சைக்காரனுக்கு எது சொல்லும்னு நெனைக்கறீங்க?

நல்லா மாட்டிவிட்டீங்க சர்வேசரே. இதுக்கு என்ன பதில் சொல்றது? டக்குன்னு தோணுன பதிலைச் சொல்றதா? சிந்திச்சு பதில் சொல்றதா?

டக்குன்னு தோணுன பதில்: கடவுள் இருக்காருன்னு எனக்கு எது சொல்லுதுன்னு எனக்குத் தெரியலைங்க. எதாவது நிச்சயமா சொல்லுதான்னே ஐயமா இருக்கு. :-)

பிச்சைக்காரருக்கு எது சொல்லும்ன்னு அவருகிட்ட தானுங்க கேக்கணும். தாயும் பிள்ளையும் ஆனாலுமே வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றாங்களே. எனக்கே எது சொல்லுதுன்னு தெரியாதப்ப அவருக்கு எது சொல்லும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? :-)

சிந்திச்சப்ப வந்த பதில்: உள்ளுணர்வும் வருங்காலத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையும் கடவுளின் இருப்பைச் சொல்லும். எனக்கும் சரி தெருவோர பிச்சைக்காரருக்கும் சரி. :-)

2) உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேர பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.

இது வரைக்கும் இந்த மாதிரி சிந்திச்சதே இல்லீங்க. சிந்திச்சா குழப்பமா தான் இருக்கு.

நினைவுக்கு வந்த திருப்பங்களில் சில: சின்ன வயசுல படிக்கக் கிடைச்ச பாட்டியோட ஆன்மிக/சமய புத்தகங்கள், பத்தாவது படிக்கும் போது அம்மா இறந்தது, கல்லூரியில நுழைஞ்சவுடனே வந்த முதல் காதல், பி.இ.யில் இடம் கிடைத்தது, முதலாம் ஆண்டிலயே வந்த இரண்டாவது காதல் (அதுக்கப்புறமும் நிறைய காதல் வந்தன; ஆனா அதெல்லாம் திருப்பம் இல்லை:-) ), எம்.இ.யில் இடம் கிடைத்தது, டி.சி.எஸ்ஸில் வேலை கிடைத்தது, அமெரிக்கா வந்தது, திருமணம், மகள் பிறந்தது, தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தது, வலைப்பதிவிற்கு வந்தது, மகன் பிறந்ததுன்னு எல்லா நேரங்களிலேயும் வாழ்க்கை மாறியிருக்கு. இதுல பெரீரீரீய திருப்பம்ன்னா எதைச் சொல்றது? ம்ம்ம்ம்.

எம்.இ. கிடைத்தது தான் பெரிய திருப்பம்ன்னு நினைக்கிறேன். அது கிடைச்ச கதையைச் சொல்றதா? கிடைக்காம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்ன்னு சொல்றதா? ரெண்டையும் தானே கேட்டிருக்கீங்க? ரெண்டையும் சொல்றேன். சுவையா சொல்லணும்ன்னு கேட்டிருக்கீங்க. அது மட்டும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது.:-) உண்மையைச் சொல்லணும்ன்னு சொல்லியிருக்கீங்க. நீதிமன்றத்துல சொல்ற மாதிரி 'நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை'ன்னு ஏதாவது ஒரு புத்தகத்து மேல கையை வச்சுக்கிட்டு உறுதி மொழியெல்லாம் தரணும்ன்னு கேக்கலையே. அது வரைக்கும் மகிழ்ச்சி. :-) நெஞ்சாங்கூட்டுல என்ன இருக்கோ அதைச் சொல்றேன் - ஆனா கொஞ்சம் சொந்தப்பெருமையைப் பேசுற மாதிரி வந்ததுன்னா கோவிச்சுக்கக்கூடாது. ஏன்னா அது தானே உள்ளத்தில இருக்கு. :-)

அந்தத் திருப்புமுனைக்குக் காரணமானவங்க யாருன்னும் கேட்டிருக்கீங்க. அதுக்கு பதில் தான் கொஞ்சம் சிந்திக்கணும். சொல்லிக்கிட்டே வர்றேன். காரணங்கள் யார் யாருன்னு நீங்களே படிச்சுப் பாத்து சொல்லுங்க. :-)

பி.இ. படிக்கும் போது கலசலிங்கம் கல்லூரி ரொம்ப பிடிச்சுப் போச்சு. எல்லாருக்கும் அப்படித் தானே. அவங்க அவங்க கல்லூரின்னா ரொம்ப பிடிக்கும்ல. ரெண்டாம் ஆண்டுல தொடங்குன பஜனைக் குழு கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (நான் கல்லூரியை விட்டு வந்த பின்னாடியும் ரெண்டு மூனு வருடம் அந்தக் குழு இருந்தது. அப்புறம் புதுப்பசங்க வந்து 'உலகத்திலேயே பஜனைக்குழு இருக்கும் ஒரே பொறியியல் கல்லூரி'ங்கற பெருமையை கலசலிங்கம் இழக்குற மாதிரி பண்ணிப்புட்டங்க). வாராவாரம் சனிக்கிழமை கூட்டு வழிபாடுன்னு ஒரு கூட்டத்தை வச்சுக்கிட்டு சின்ன மடாதிபதியா நடந்துக்கிட்டதும் எங்க போனாலும் அந்தக் கூட்டத்தோடவே போய் அளப்பரை பண்ணுனதும் இன்னும் நினைவுல பசுமையா இருக்கு. விடுதியில இரவு உணவுக்கு ஒரு கூட்டமா இந்த பஜனைக் குழு 20, 25 பேர் நம்ம தலைமையில கிளம்புனாங்கன்னா சீனியர், ஜீனியர் எல்லாருமே 'டேய். குமரன் அடியாட்களோட கெளம்பிட்டான்டா. ஒதுங்கி வழி விட்றுங்க'ன்னு பவ்யமா ஒதுங்கி வழிவிட்டதும் நல்லா நினைவு இருக்கு. நடுவுல நாலு பேருக்கு நான் என் காதலைச் சொன்னதும் என் கவிதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என் கதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என்னிடம் தங்கள் காதலைச் சொன்னதும்ன்னு அதுவும் நடந்தது. அதுல யாரையும் நான் தொடர்ந்து காதலிக்கலை. திருமணம் வரைக்கும் அந்தக் காதல்கள் வரலை. :-) ரெண்டாம் ஆண்டு படிக்கிறப்ப தொடங்குன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்குறது கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (அதுல ஒரு மறைபொருள் - இரகசியம் இருக்கு. அதை உங்ககிட்ட மட்டும் சொல்றேன். வேற யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க. நான் படிக்கிறப்ப மதுரைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ வர்ற கல்லூரிகள்ல எங்க கல்லூரியில மட்டும் தான் அளவியியல் & கட்டுப்பாட்டுப் பொறியியல் - Instrumentation and Control Engineering - இருந்தது. அதனால எங்க வகுப்புல ரெண்டாவது இடம்னாலே பல்கலைக்கழகத்துலயும் ரெண்டாவது இடம் தான். இன்னும் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்கற பொய்யான மெய்யைச் சொல்லிக்கிட்டு வர்றேன். நீங்களும் அப்படியே சொல்லிக்கிட்டு வாங்க. சரியா? )

இப்படி சொல்லத் தொடங்குனா சொல்லிக்கிட்டே போகலாம் கலசலிங்கம் வாழ்க்கையைப் பத்தி. அப்படி பேரும் புகழுமா வாழ்ந்து நல்லா அனுபவிச்சதால அங்கேயே வாழ்க்கை முழுக்க இருந்துரலாம்ன்னு ஒரு எண்ணம். கலசலிங்கத்துலேயே வாத்தியார் வேலைக்குச் சேர்ந்து கல்லூரி பக்கத்துலயே ஒரு பங்களா கட்டிக்கிட்டு குழந்தை குடும்பம்னு (இப்ப எல்லாம் யாராவது குழந்தை குட்டின்னு சொல்லுவாங்களா என்ன? அதான் குடும்பம்ன்னு சொல்லிட்டேன்) இருந்தா வாழ்க்கை அமைதியா போகும்ன்னு ஒரு கனவு. அந்த மாதிரியே செய்யறதுக்காக படிச்சு முடிச்ச பின்னாடி சென்னைக்குப் போய் திரு.கலசலிங்கம் ஐயாவைச் சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே நம்ம பஜனைக் குழு மூலமா செஞ்ச சில தொண்டு நடவடிக்கைகள் மூலம் ஐயாவோட அறிமுகம் இருந்தது. அவரோட சொந்த ஊருல இருக்கிற பள்ளி ஆண்டுவிழாவுல ஐயா தலைமை ஏத்து நடத்துறப்ப முதல், இரண்டு, மூன்றாம் நிலையைப் பெற்ற எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் நம்ம பணத்துல பரிசுகள் வழங்குனதுலயும் ஐயாகிட்ட நல்ல பேரு எனக்கு. அதனால உடனே வேலை போட்டுக் குடுக்க சம்மதம் தெரிவிச்சு பரிந்துரை கடிதம் குடுத்து அனுப்பிட்டாரு.

நான் கல்லூரிக்கு வந்து முதல்வரைப் பாக்குறதுக்கு முன்னாடி எங்க துறைத்தலைவரைப் போய் பாத்தேன். அவருக்கோ ஒரே அதிர்ச்சி. 'குமரா. நீ நல்லா படிக்கிற பையன். சரியா படிக்காம வேற எங்கையும் வேலை கிடைக்காம கடைசியில தான் இங்க வாத்தியார் வேலைக்கு வருவாங்க. நீ இந்த வேலைக்கு வந்தா உன்னோட ஜூனியர்கள் ரொம்ப நொந்து போயிடுவாங்க. உனக்கே வேலை கிடைக்கலையா வெளிய? நமக்கெல்லாம் எப்படி கிடைக்கும்ன்னு' அப்படி இப்படின்னு சொல்லத் தொடங்கிட்டாரு. என்ன என்னவோ சொல்லிப் பாக்குறேன். அவரு விடலை. கடைசியில 'அப்ப்டி நீ வாத்தியார் வேலைக்குத் தான் வருவேன்னா ஒன்னு செய். போய் எம்.இ. படிச்சுட்டு வா. எப்படியும் வாத்தியாரா தொடரணும்ன்னா எம்.இ. படிக்கணும். மொதல்ல அதை முடிச்சுட்டு வா. அப்புறம் வேலை குடுக்குறேன்'னு சொல்லிட்டார். அவர் சொன்னதும் சரின்னு பட்டதால முதல்வரைப் பாக்காமலேயே திரும்பி வந்துட்டேன்.

இப்ப எம்.இ. சேர்றதுக்காக GATE தேர்வுக்காகப் படிக்கணும். எனக்கோ வீட்டுல உக்காந்திருக்கப் பிடிக்கலை. அப்பத் தான் ஒரு நண்பன் புட்டபர்த்தியிலேயே தங்கியிருக்கான்னு தெரிஞ்சது. நானும் புட்டபர்த்திக்குப் போயிட்டேன். அங்கேயே ஒரு நாலு மாசம் தங்கியிருந்து தரிசனம் பார்த்த நேரம் போக மத்த நேரம் தேர்வுக்காகப் படிச்சேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போவான்னு பாத்தா இப்படி புட்டபர்த்தியில போயி உக்காந்திருக்கானேன்னு எங்கப்பாவுக்கு கடுப்பு. யாரு அதையெல்லாம் கண்டுக்கிட்டாங்க? அப்பத் தான் நான் காதலிக்கிறேன்னு சும்மாவாச்சும் சொன்ன பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் திருமணமும் ஆச்சு. அதனால மனசு நொந்து நான் சாமியாரா போயிட்டேன்னு ஒரு நண்பன் வதந்தியை வேற கிளப்பிவிட்டுட்டான். :-) .

தேர்வு நேரமும் வந்து தேர்வும் எழுதி முடிந்து வெளியே வந்த போது எனக்குத் துளி கூட நம்பிக்கை இல்லை. ஒழுங்கா வீட்டுல இருந்து படிச்சிருந்தாலாவது நல்லா எழுதியிருக்கலாம். புட்டபர்த்துக்குப் போயி நேரத்தை வீணாக்கிட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா எம்.இ. முடிக்காம திரும்பவும் கலசலிங்கத்துக்கும் போக முடியாது; சரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலாவது சேரலாம்ன்னு அங்கே முயற்சி செய்யத் தொடங்கினேன். நான் கலசலிங்கத்துல படிக்கிறப்ப வாராவாரம் திருநகர் வந்து ஒருத்தர்கிட்ட பகவத் கீதை கத்துக்கிட்டேன். அவர் தியாகராஜர்ல ஆசிரியரா இருக்கார். அவர் பரிந்துரையில வேலை கிடைச்சிரும்ன்னு நம்பிக்கை.

தேர்வு முடிவுகள் இன்னும் வரலை. ஆனா கல்லூரிக்களுக்கு விண்ணப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகம், கோவை தொழிற்நுட்பக் கல்லூரி (CIT) ரெண்டு இடத்துலயும் விண்ணப்பப் படிவம் வாங்கிட்டேன். தேர்வு முடிவுகள் வர்றதுக்கு முன்னாடியே சிஐடியில விண்ணப்பிக்க வேண்டியதா இருந்ததால அதைச் செஞ்சுட்டேன். தேர்வு முடிவுகள் வந்த பின்னாடி மொத்தமா நம்பிக்கை இழந்ததால அண்ணா பல்கலைக்கழகப் படிவத்தை நண்பருக்குக் குடுத்துட்டேன். (அந்த நண்பருக்கு அண்ணாவுல இடம் கிடைச்சு எல்லாம் உன் கைராசின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. அடப் போடா என் கைராசி எனக்குக் கைகுடுக்கலைன்னு நொந்துக்குவேன்).

சிஐடியில இருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்தது. சரி அழைப்பு வந்திருக்கே போகலாம்ன்னு போய் பாத்தா 4 இடங்களுக்கு 500 பேரு வந்திருக்காங்க. பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட பேச்சு குடுத்துப் பாத்தா ஒவ்வொருத்தரும் அருமையா மதிப்பெண்கள் வாங்கியிருக்காங்க. ஏன்டா என்னையெல்லாம் கூப்புட்டு வதைக்கிறாங்க இவங்கன்னு நெனைச்சுக்கிட்டு சரி கிளம்பிற வேண்டியது தான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்ப வந்தாரு குருராஜர். எம்.இ. ரெண்டாம் ஆண்டு படிக்கிற குருராஜன் தேர்வுக்கு எத்தனை பேரு வந்திருக்காங்க, யாரு யாரு வந்திருக்காங்கன்னு பாக்க வந்திருக்காரு. வந்து பக்கத்துல உக்காந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு பேசத் தொடங்குனாரு. நான் அப்ப என்ன மனசுல ஓடிச்சோ அதை அவருகிட்ட சொன்னேன். வந்தது வந்துட்டே; நேர்முகம் முடிஞ்ச பிறகு போகலாம்ன்னு அவர் வற்புறுத்த நான் கிளம்பியே ஆகணும்ன்னு கிளம்புனேன். அவரு விடவே இல்லை. முதல் பார்வையிலேயே ஒரு நட்பு, பந்தம் வந்திருச்சு. அவர் சொல்றதைத் தட்ட முடியாம காத்திருந்து நேர்முகத்துக்கும் போனேன். உள்ள போனா சுத்தி ஆறு பேரு உக்காந்துக்கிட்டு கேள்விகளால வேள்வி செஞ்சாங்க. பாதி கேள்விகளுக்குத் தான் பதில் சொன்னேன். மீதிக்கு நல்லா முழிச்சேன்.

வெளியே வர்றப்ப கட்டாயம் நமக்கு இடம் கிடைக்காதுன்னு தோணியாச்சு. குருராஜன் 'சரி போகட்டும். வா. சாப்புட்ட பிறகு போகலாம்'ன்னு விடுதிக்குக் கூட்டிக்கிட்டு போயி சாப்பாடு போட்டார். நல்ல சாப்பாடு. சாப்புட்டு முடிச்சு 'சரி நான் கெளம்புறேங்க. இப்பக் கெளம்புனாத் தான் மருதமலைக்குப் போயிட்டு ராத்திரிக்குள்ள ஊரு போயி சேரலாம்'ன்னு சொன்னா 'இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர்வு முடிவுகளைச் சொல்லிருவாங்க. அதுக்கப்புறம் போகலாம்'ன்னு நிறுத்தி வச்சாரு. அன்புத் தொல்லைக்காக நின்னேன். நேரம் ஆக ஆக 'வெட்டியா இங்க உக்காந்திருக்கோமே. மருதமலையானைப் பாக்க நேரம் இருக்காதோ'ன்னு குறுகுறுப்பு. புலம்பிக்கிட்டு இருந்தேன். நாலு மணி போல முதல்வர் வந்து ஒவ்வொரு பேரா கூப்பிட்டாரு. 'செந்தில் குமரன்' ஒல்லியா ஒரு பையன் வந்து முன்னாடி நின்னான். 'வேணுகோபால்' குண்டா உயரமா ஒரு பையன் (ஆளு?) வந்து நின்னாரு. 'நாகேஸ்வரராவ்' குள்ளமா (என்னை விட ஒரு இஞ்ச் தான் குள்ளமா இருப்பாரு. ஆனாலும் அவரைக் குள்ளம்ன்னு சொல்லுவோம்ல) ஒருத்தர் வந்து முன்னாடி நின்னாரு. 'குமரன்' யாரும் முன்னாடி வரலை 'எம்.என்.குமரன்' அட நம்ம பேரு தான்னு அப்ப தான் உறைச்சது. வேக வேகமா முன்னாடி போய் நின்னேன். 'நீங்க நாலு பேரும் முதல் மாடியில இருக்குற அலுவலகத்துக்குப் போங்க'ன்னு பத்திவிட்டாரு. நாலு பேரும் படிக்கட்டுல போறப்பவே ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். யாருக்கும் எதுக்கு நாம மேல போறோம்ன்னு தெரியலை. வேணுகோபால் 'நான் ப்ராஜக்ட் ரிபோர்ட் கொண்டு வரலை. நீங்களும் அப்படித் தானா? அதுக்குத் தான் நம்மளை தனியா அனுப்பியிருக்காங்க'ன்னு சொல்றார். செந்திலோ 'எனக்கு ஒன்னும் புரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு'ன்னு புலம்புறாரு. அலுவலகத்துக்கு வந்து இப்படி முதல்வர் எங்க நாலு பேரையும் அனுப்புனாருன்னு சொன்னா 'கட்டணப்பணம் கொண்டு வந்திருக்கீங்களா? எடுத்துக்கட்டுங்க'ங்கறாரு அலுவலர். அப்பவும் ஒன்னும் புரியல. 'கட்டணமா? எதுக்கு?'ன்னு கேட்ட பின்னாடி 'அடப்பாவிங்களா. உங்களுக்கு எம்.இ. இடம் கிடைச்சுருக்கு. அதுக்குத் தான் கட்டணம்'ன்னு சொல்றாரு. அப்பத் தான் புரியுது எல்லாருக்கும் ராவ்-க்கு மட்டும் ஏற்கனவே தெரியும் போல - இந்த தமிழாளுங்க கிட்ட நமக்கென்ன பேச்சுன்னு கமுக்கமா இருந்திருகாரு. செந்திலும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்காதது தான் குறை. அப்படி ஒரு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லா கட்டணத்தைக் கட்டி வகுப்புல சேர்ந்தோம்.

இதையேன் பெரீரீரீய திருப்பம்ன்னு சொல்றேன்னு இன்னேரம் புரிஞ்சிருக்கும். இல்லியா? அதையும் விலாவாரியா சொல்லணும்ன்னா சொல்றேன். :-) ஆனா ஒன்னு. கலசலிங்கத்துல அதுக்கப்புறம் படிச்சப் பசங்க செஞ்ச புண்ணியம் தான் அவங்களை எங்கிட்ட இருந்து காப்பாத்தியிருக்குன்னு மட்டும் கட்டாயம் சொல்லலாம். :-)

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

காண இனியது நீறு - அணிந்தவர்களைக் காண இனிமையாக இருக்கும்படி செய்வது திருநீறு

கவினைத் தருவது நீறு - அழகையும் நற்குணங்களையும் தருவது திருநீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு - உளம் விரும்பி பேணி அணிபவர்களுக்கெல்லாம் பெருமையைக் கொடுப்பது திருநீறு

மாணம் தகைவது நீறு - மாண்பைத் தருவது திருநீறு. (உறுதிப்படுத்தும் ஆதாரமாய் (பிரமாணமாய்) அமைவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

மதியைத் தருவது நீறு - நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு

சேணம் தருவது நீறு - விண்ணுலகப்பேற்றையும் உயர்வையும் அளிப்பது திருநீறு. (கடினமான நேரங்களில் மன அமைதியைத் தருவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் மதுரையம்பதியில் வாழும் இறைவனின் திருநீறே

***

முதல் இரண்டு அடிகள் எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு கடினமாகத் தோன்றியது கடைசி இரு அடிகள். கொடுத்துள்ள பொருள் தவறாக இருப்பின் திருத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

திருத்தங்கள் 07 நவம்பர் 2006 அன்று செய்யப்பட்டது. திருத்தங்களைச் சொன்ன நண்பர்களுக்கு மிக்க நன்றி.