Friday, September 26, 2008

உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன்

திருமுருகாற்றுப்படையின் முதல் பகுதியாகிய திருப்பரங்குன்றத்துப் பகுதியைப் பார்த்து வருகிறோம். இது வரை வந்த இடுகைகளில் முதல் ஆறு அடிகளைப் பார்த்தோம். இன்று அடுத்த ஐந்து அடிகளைப் பார்ப்போம்.

ஞாயிறு போல் தோன்றினான் என்று முதலில் அவன் திருஒளியைக் கூறிவிட்டு பின்னர் அவனது திருவடிப் பெருமையைக் கூறினார் நக்கீரர். பின்னர் திருக்கரங்களின் பெருமையைக் கூறிவிட்டு அவனது அடையாளத்தைக் கூறுவதைப் போல் அவன் மனைவியைக் கூறி அவள் கணவன் என்றார். இந்த ஐந்து அடிகளில் அவனது அழகிய மாலையைப் பற்றி கூறுகிறார்.

கடம்ப மாலை திருமுருகனுக்கே சிறப்பாக உரியது என்பது மரபு. அவன் அன்னையும் அப்பனும் அம்மலரை அணிபவரானாலும் அவனைப் பற்றிக் கூறும் போது சிறப்பாக கடம்ப மலரைக் கூறுவது மரபாகவே அமைந்திருக்கிறது. அந்த மரபு திருமுருகாற்றுப்படையில் தொடங்கியது போலும். இந்த அடிகளில் 'உருள் பூ' என்று கடம்பமலரைச் சொல்கிறார்.

இந்த உருள் பூவினால் செய்யப்பட்ட தாரை அணிந்த மார்பன் என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அந்த உருள்பூந்தார் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது என்று சொல்கிறார். அந்த குளிர்ச்சி எங்கிருந்து வந்ததென்றால் அந்தப் பூ பூத்த கடம்ப மரத்திலிருந்து வந்தது. அந்த மரம் ஏன் குளிர்ச்சியாய் இருந்தது? அடர்ந்து வளர்ந்த கடம்ப வனத்துள் அந்த மரம் இருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்தால் தான் என்ன? அடர்ந்து வளர்ந்திருந்ததனால் பகலவனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாமல் எந்த நேரமும் இதமான குளிர் அங்கே நிறைந்திருந்தது. பகலவன் கதிர்கள் மட்டும் நுழைய முடியாவிட்டால் குளிர்ச்சி அமைந்துவிடுமா? இல்லை தான். கடலில் இருந்து நீரை முகந்து கொண்டு வந்த சூல் கொண்ட மேகங்கள் முதன் முதலில் இந்த கடம்பங்காட்டில் தான் மழை பொழிந்தன. அதில் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டது. ஓகோ. அப்படி என்றால் இந்த மலர் மார்பனின் திருமார்பில் வீற்றிருப்பது கடலின் குளிர்ச்சியா? சரி தான்.

இப்படித் தான் கடம்பந்தாரைப் பற்றி பாடியிருக்கிறார் நக்கீரர்.

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்


மேகங்கள் நீரை முகந்து கொள்வதால் கடலுக்கு கார் கோள் என்ற பெயர் வந்தது. அந்தக் கார்கோளிலிருந்து நீரினை முகந்து எடுத்துக் கொண்ட மிகப்பெரும் சூலை/கருவைக் கொண்ட பெரும் மேகமானது, பகலவனும் மதியவனும் ஒளி வீசும் வானத்தில் நின்று சிறு சிறு துளிகளாகச் சிதறி, முதல் மழையைப் பொழிந்ததால் தழைத்து வளர்ந்த குளிர்ந்த மணம் வீசும் காட்டில் இருள்படும் படி நெருங்கி வளர்ந்த காட்டு மரத்தின் உருள் பூவினால் ஆன குளிர்ச்சியான மாலை புரளும் மார்பினன் திருமுருகன்.

கற்பின் வாணுதல் என்று முன்பு தெய்வயானையம்மையைக் குறிப்பாகக் கூறினார். உருள்பூ என்று இங்கே கடம்பத்தைக் குறிப்பாகக் கூறினார். கடவுளருக்குரிய வேறெந்த பூவும் உருண்டு இருப்பதில்லை; கடம்பம் மட்டுமே அவ்வுருவம் கொண்டது என்பதை கடம்ப மலரினைப் பார்த்தவர் அறிவர். அதனால் உருள்பூ என்றே குறிப்பாகக் கூறுவது போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் கற்பின் வாணுதல் என்ற உடன் தெய்வயானையம்மை என்ற புரிதல் இருந்தது போல் உருள் பூ என்றவுடன் கடம்பம்பூ என்ற புரிதலும் இருந்தது போலும்.

வாணுதல் என்று முன்னர் சொன்னதை 'வாள் + நுதல்' என்று பிரித்து ஒளி பொருந்திய நெற்றியினைப் பெற்ற பெண் என்று பொருள் சொல்வார்கள். அப்படியே நானும் சொல்லியிருந்தேன். ஆனால் நண்பர் ஒருவர் வாள் நுதல் என்பதற்கு வாளினைப் போல் கூர்மையான நெற்றி என்று முன்பொரு முறை பொருள் சொல்லியிருந்தார். இங்கே மீண்டும் 'வாள் போழ் விசும்பு' என்று வருகிறது. இதற்கு எல்லா உரையாசிரியர்களும் ஒளி வீசும் வானம் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதனையே நானும் கொண்டேன்.

கடும்கோடையில் முதல் மழை பெய்தால் எவ்விதமான அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் இந்தக் கடம்பங்காட்டில் கிடைக்கும் போலிருக்கிறது. அந்த முதல் மழையையே இங்கே தலைப்பெயல் என்றார்.

உருள் பூவினால் செய்ததால் தான் போலும் இவன் திருமார்பில் அந்த பூந்தார் ஓரிடத்தில் நிற்காமல் புரண்டு கொண்டே இருக்கின்றது. :-)

Wednesday, September 24, 2008

வடகரை வேலன், தேவராஜன் ஐயா, சங்குமுகம் மூவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 8)

ஜூன் மாதத்தில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இப்பத் தான் பதில் சொல்ல முடிந்தது. மன்னித்துக் கொள்ளுங்கள்.

இந்த இடுகையோடு இது வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்லிவிட்டேன். இனி மேல் 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' என்று ஒரு இடுகை இட்டுத் தான் கேள்விகளை வாங்க வேண்டும். :-)

முதலில் வடகரை வேலன் கேட்ட கேள்வியைப் பார்ப்போம்.

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வேறு ஒருவராக இடம் மாறி வாழ வாய்ப்பு கிடைத்தால் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள்?

இதென்ன கேள்விங்க? ரொம்ப பொதுவா கேட்டுபுட்டீங்க? சரி. பதில் சொல்ல முயல்கிறேன்.

தற்போது வாழும் வாழ்க்கையை அப்படியே வாழத்தான் ஆசை. நீங்களும் அது மாறணும்ன்னு சொல்லலை போல. அது மாறாம ஆளு மட்டும் மாறணும்ன்னா உடல் மட்டும் மாறுதுன்னு சொல்லுங்க. அது எனக்குப் பொருத்தம் தான். ரொம்ப குண்டா இருக்கேன்னு தெரியுது. ஆனா நாக்கைக் கட்டுப்படுத்தி சாப்பாட்டைக் குறைக்க முடியலை; உடற்பயிற்சியும் செய்யுறதில்லை. அதனால இன்னொருவருடைய உடல் எனக்குக் கிடைக்கணும்ன்னு நான் நினைக்கிறது உண்டு. அந்த உடல் 'இதுவரைக்கும் நன்கு உழைத்து இனிமேல் எந்த உயற்பயிற்சியும் செய்ய வேண்டாம் என்ற வகையில் உடல் இருகிப் போயிருக்கும் யாரோ ஒருவருடைய உடல்'. அம்புட்டுத் தான். :-)

***

இப்ப தேவராஜன் ஐயா கேட்ட கேள்வி:


அன்பரே, சங்க நூல்களில் காணப்படும் தெய்வ வழிபாடு, புராணச் செய்திகள் குறித்த பதிவெல்லாம் எங்கிருந்து பெறலாம்?

நிறைய புத்தகங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் ஐயா. குறிப்பாக முனைவர் திரு. பி.எஸ். சோமசுந்தரன் அவர்கள் எழுதிய 'முக்கண்ணனும் முகில்வண்ணனும்' என்ற நூலில் முதலத்தியாயங்களில் சங்க இலக்கியத்தில் இருக்கும் இரு பெரும் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். இந்த நூல் சென்னை தி.நகரில் இருக்கும் பல பதிப்பகங்களிலும் கிடைக்கின்றது. வேறு நூற்களும் பதிவுகளும் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஹரியண்ணாவின் (திரு. ஹரிகிருஷ்ணன்) சில நூற்களை கிழக்கு பதிப்பகம் சில நூற்களை வெளியிட்டிருக்கலாம். இணையத்தில் அப்படி தொகுக்கப்பட்டவை இருக்கின்றதா தெரியவில்லை.

அடியேன் அந்த முயற்சியில் இருக்கிறேன். இந்தப் பதிவின் வலப்பக்கத்தில் இருக்கும் வகைகளில் 'இலக்கியத்தில் இறை' என்ற வகையைப் பிடித்துச் சென்றால் இதுவரை இந்த முயற்சியில் வந்த இடுகைகளைப் படிக்கலாம். இந்த முயற்சி தொடர்கின்றது.

***

இனி சங்குமுகம் கேட்ட கேள்வி:


இந்து மதத்தில் உள்ள எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பக்தி சிரத்தையாக எழுதுகிறீர்கள். படிக்கும் எனக்கு இவருக்கு சாமியே கிடையாதா என்பதுவே.

இப்படி எல்லாசாமிக்கும் அரோகரா போட்டால், எந்த சாமிதான் உங்களை நம்புவார்?

Hinduism does have polytheism at lower levels. It says as man grows up in his spirituality, he reaches a level of having one Ultimate Reality, the Supreme Being, nameless and formless.

If you continue with polytheism, does it not indicate that you are still at the lowest level of polytheism!

You could clarify.


உங்கள் கேள்விகளுக்குப் பல நிலைகளில் பதில் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

என் பெயர் குமரன். என் பெற்றோர் 'மகனே' என்று அழைக்கிறார்கள்; என் மக்கள் 'அப்பா' என்று அழைக்கிறார்கள். என் மாமனார் 'மாப்பிள்ளை' என்று அழைக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் குமரனா மகனா அப்பாவா மாப்பிள்ளையா? எல்லாமும் தானே. இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பதால் நான் வெவ்வேறு ஆளாகிவிடுவேனா?

இந்து மதம் என்று இன்று அறியப்படும் மதத்தில் பலவிதமான நம்பிக்கைகளும் சமயங்களும் இருக்கின்றன. அவை சொல்லும் கடவுளர்கள் மட்டுமின்றி வேறு மதங்கள் என்று அறியப்படும் கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், பார்சி என்று பல மதங்களும் சொல்லும் கடவுளர்களும் எனக்கு வணங்கத் தக்கவர்களே. அவர்களைப் பற்றியும் எழுதுவேன். அப்படி பலவித உருவங்களும் பெயர்களும் ஒருவருக்கே என்பதில் எந்த வித ஐயமும் எனக்கு இல்லை என்பதால்.

எல்லா உருவங்களும் பெயர்களும் ஒருவருடையதே என்னும் போது எந்தப் பெயரில் அழைத்தால் என்ன எந்த உருவத்தை வணங்கினால் என்ன அந்த ஒருவர் தானே குறிப்பிடப்படுகிறார். அப்படி இருக்கும் போது 'எல்லா சாமிகளுக்கும் அரோகரா போட்டால் எந்த சாமி தான் உங்களை நம்புவார்' என்ற கேள்வி பொருளற்றது. :-)

(எல்லா சாமிகளுக்கும் அரோகரா போடுகிறேனே. நீங்கள் இடம் மாற்றி வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். முருகனுக்கும் அண்ணாமலையாருக்கும் அரோகரா போட்டிருப்பேன். வேறு இறைப்பெயர்களுக்கும் 'அரோகரா' போடுவது எங்கள் இரவிசங்கர் கண்ணபிரான் மட்டுமே. :-) அவர் தான் 'ஏடுகொண்டலவாடா வேங்கடரமணா அரோகரா' என்று சொல்லுவார். இன்னொரு நண்பரும் சொல்லுவார் - ஆனால் அவர் அதனைச் சொல்லும் போது அதற்கு வேறு பொருள். :-) )

இந்து மதம் என்பது பல விதமான நம்பிக்கைகளை உடையது என்று சொன்னேன். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். 'பல கடவுளர்களை வணங்குவது கீழ்நிலை; ஒரே இறைவனை வணங்குவது மேல்நிலை' என்று சில இந்து மதப் பிரதிநிதிகளாக எண்ணப்படும் சில பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதனைத் தான் நீங்கள் இங்கே சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பெரியவர்கள் கருத்துப்படி நான் கீழ் நிலையில் இருப்பவனாக இருக்கலாம்; அன்றி எல்லா பெயர்களும் உருவங்களும் ஒரே இறையுடையதே என்ற புரிதல் இருப்பதால் மேல் நிலையில் இருப்பவனாக இருக்கலாம். தற்போதைக்கு எந்த நிலையில் இருக்கிறேன் என்று அறிவதில் ஆர்வம் இல்லை; கவலையும் இல்லை. 'பல கடவுளர்களை வணங்குவது கீழ் நிலை; ஒரே கடவுளை வணங்குவது மேல் நிலை' என்ற கருத்தில் முழு ஒப்புதலும் இல்லை. :-)

கீழ் நிலை என்று சொல்லப்படுவதில் இருக்கும் பெயர், உருவம், குணம் இவற்றை அனுபவித்திலேயே என் மனம் இப்போது ஈடுபட்டிருக்கிறது. பெயரில்லா உருவமில்லா குணமில்லா இறை சுவைக்கவில்லை. என்னுடைய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்துப் பாருங்கள். வலப்பக்கத்தில் 'வகைகள்' என்ற தலைப்பின் கீழ் சுட்டி இருக்கின்றது. அந்தக் கதையில் கதைப்போக்கில் என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்.

***

என்ன நண்பர்களே. அடுத்த இடுகையாக 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' போட்டுவிடவா? கேள்விகளைக் கேட்பீர்களா? :-)

Tuesday, September 23, 2008

காற்றே என் வாசல் வந்தாய்! மெதுவாகக் கதவு திறந்தாய்!

அடிக்கடி கேட்கும் பாடல். மனத்தை மயக்கும் பாடல். மெல்லிய தென்றல் வந்து வாசற்கதவையோ சாளரக்கதவையோ சற்றே நகர்த்தும் போதெல்லாம் மனத்தில் ஓடும் பாடல். காற்றைக் காதலனும் காதலியும் விளிப்பது போல் தொடங்கும் பாடல் விரைவில் அவர்களுக்கிடையே நடக்கும் சுவையான உரையாடலாக மாறிவிடும். அந்த உரையாடலும் ஆழ்ந்த பொருள் கொண்ட உரையாடல். பாடலைக் கேட்டுப் பாருங்கள்.காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

கார் காலம் அழைக்கும் போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா?
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா?
நீ என்னருகில் வந்து நெளிய
நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என் உருவம் கண்டுபிடிப்பாயா?

பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க!
பூமிக்கு மேலே வான் உள்ள வரையில் காதலும் வாழ்க! (காற்றே)

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்து போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே!
திறக்காத சிப்பி என்னைத் திறந்து கொள்ளச் சொல்கிறதா?
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே!

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்
உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா?
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா?
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா? (காற்றே)


திரைப்படம்: ரிதம்
வெளிவந்த வருடம்: 2000
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்கள்: கவிதா, உன்னிகிருஷ்ணன்

Thursday, September 11, 2008

விவேகானந்தரின் சிகாகோ பேச்சின் ஆண்டு விழா!


1893ம் வருடம் இதே நாளில் தான் (செப்டம்பர் 11) சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் அனைத்துலக சமய மாநாட்டில் தன்னுடைய அருமையான உரையை நிகழ்த்தினாராம். இன்று தான் அதனை அறிந்தேன். மின் தமிழ் குழுமத்தில் 'கண்ணன் நடராஜன்' ஐயா அனுப்பியிருந்த மின்னஞ்சலின் மூலம். அவர் தினமணியிலிருந்து எடுத்து இட்டிருந்த கட்டுரை இன்றைக்குப் பொருத்தமான கட்டுரையாகத் தோன்றியது. அதனை இங்கே இடுகிறேன். நன்றிகள்.

***

சகோதர, சகோதரிகளே, (1893)

இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளையும், பல்வேறு மதங்களையும் சேர்ந்த 6 ஆயிரம் பேர் அசைவற்று நின்றனர். அதுவரை அப்படியொரு வார்த்தையை அவர்கள் மேடைப்பேச்சில் கேட்டதே இல்லை.
சீமான்களே, சீமாட்டிகளே வார்த்தைகளுக்கு பழகிப் போன அவர்களது காதுகளுக்கு, அந்த வார்த்தை சற்றே அதிர்ச்சியையும், ஒருவித சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. முதல் வார்த்தையிலேயே அங்கு கூடியிருந்தவர்களை அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர், அடுத்து பேசிய வார்த்தைகளால் அனைவரையும் கட்டிப்போட்டார்.

காவி உடை தரித்து மேடையில் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் அன்று அனைவரையும் வசீகரித்தான். அந்த இளைஞன் பேச தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் அவரது குரல் வளத்துக்கும், வார்த்தைகளின் கருத்துச் செறிவுக்கும் தங்ளையே இழந்துவிட்டதாக அடுத்த நாள் அமெரிக்காவில் வெளியான பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.

1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இதே நாளில் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வமத மாநாட்டில், கடைசியாக பேச சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டபோது அவர் உரையை யாரும் கேட்பதற்குத் தயார் இல்லை என்ற தோரணையில் ஆங்காங்கு கூட்டமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் சகோதர, சகோதரிகளே என்று பேச்சைத் தொடங்கியதும், நிசப்தம் ஏற்பட்டது. அனைவரது பார்வையும், எண்ணங்களும் விவேகானந்தரை நோக்கி செல்லத் தொடங்கியது.

அவர் பேசத் தொடங்கும் வரை, இந்தியா அறிவு இல்லாத மக்கள் வசிக்கும் நாடு, பொருளாதாரத்தில் மட்டுமன்றி அறிவிலும் ஏழைகளே அங்கு வசிப்பர், இந்து மதம் துறவறத்தை மட்டும் வலியுறுத்தும் என பலவாறு தாங்கள் நினைத்ததைப் பேசி வந்த மேலைநாட்டு மேதைகள் விவேகானந்தரின் உரையைக் கேட்ட பின்னர், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதும், இந்து மதத்தின் மீதும் பிற நாட்டினர் வைத்திருந்த சில தவறான எண்ணங்களுக்கு, அவர் சில நிமிஷங்களிலே முடிவு கட்டினார்.

மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி உயர்வாகவும், அவர்கள் வணங்கும் இறைவனை பற்றி புகழ்ந்தும், தங்களது கலாசாரமே உயர்ந்தது என்றும் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், விவேகானந்தர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பற்றி பேசிவிட்டு, இறுதியாக இம்மாநாட்டில் ஒலிக்கும் மணி ஒலி, மத வெறிக்குச் சாவு மணியாக இருக்கட்டும் என்று கூறியபோது அனைத்து மதத் தலைவர்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து, ஒன்றுபடச் செய்தது.

அதன்பின்னர் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டங்களில், விவேகானந்தர் பேச்சைக் கேட்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடினர். விவேகானந்தர் பேச்சே 10 நாள் மாநாட்டின் பிரதானமாக இருந்தது.

மாநாட்டின் முன்புவரை இந்தியர்களுக்கு அறிமுகமாயிருந்த விவேகானந்தர், மாநாட்டிற்குப் பின்னர் உலகின் அனைத்து நாட்டினருக்கும் அறிமுகமானார். இந்தப் புகழை அவர் சாதாரணமாகவோ, எந்த கஷ்டமும் இல்லாமலோ பெற்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது.

சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலாலும், முயற்சியாலும், சிகாகோவுக்கு அந்த ஆண்டு மே மாதம் கப்பலில் புறப்பட்ட விவேகானந்தருக்கு ஜூலை மாதம் சர்வமத மாநாடு என்று கூறப்பட்டு இருந்தது. சிகாகோவில் இறங்கிய விவேகானந்தருக்கு இடியேன ஒரு செய்தி கிடைத்தது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, செப்டம்பர் மாதம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.

குறைவான பணத்துடனே சென்றிருந்த விவேகானந்தருக்கு அந்த குளிர் பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது என்ற பல பிரச்னைகள் எழத் தொடங்கின. ஒருவாறு, திடீரென அறிமுகமாகிய சில நண்பர்கள் வீட்டில் தங்கி, நாள்களை ஓட்டினார் விவேகானந்தர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பதிவுசெய்ய வேண்டிய தேதி முடிந்துபோன நிலையில், பின்னர் பதிவு செய்தவதற்காக அவர் ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பலவாறு கஷ்டப்பட்டு மாநாட்டுக்குச் சென்ற விவேகானந்தர், ஒட்டுமொத்த பாரதத்துக்காகவே பேசினார். விவேகானந்தர் பேச்சுக்கு அடிமையாகிப் போன அமெரிக்கர்கள், மாநாட்டுக்குப் பின்னர் அவரை உடனே நாடு திரும்ப விடவில்லை. அமெரிக்கர்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் எங்கெல்லாம் பேச அழைத்தார்களோ, அங்கெல்லாம் பேசினார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சுக்கும் அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டார்.

அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பிரசங்கம் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1897ம் ஆண்டு பாரதம் திரும்பினார். தாயகம் திரும்பிய விவேகானந்தர், முதல் வேளையாக பேலூரில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு மடத்தை உருவாக்கினார். அந்த மடத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்ய, தனது சீடர்களை பணித்தார்.

இன்றுவரை அந்த மடத்தின் மூலம் அவரது சீடர்கள் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்து வருகின்றனர். அதோடுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கீழ் பல ஆயிரம் பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.


115 ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய புதிய முகாந்திரம்தான் இன்றளவும் நமக்கு வெளிநாடுகளில் உள்ளது. இந்தவேளையில், விவேகானந்தரையும், அவரது கருத்துகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கே. வாசுதேவன்

நன்றி: தினமணி

பிரதீப் பாடும் 'பாட்டும் நானே பாவமும் நானே'

அருமை அருமை. மிக அருமை. கேட்டுப் பாருங்கள்.

Tuesday, September 09, 2008

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்...

திருமுருகாற்றுப்படையைப் படிக்கத் தொடங்கி படித்தவற்றை உடனுக்குடன் இடுகைகளாகவும் எழுத எண்ணி இரு இடுகைகளை இது வரை இட்டிருக்கின்றேன். இந்தப் பதிவின் வலப்பக்கத்தில் 'திருமுருகாற்றுப்படை' என்ற வகையில் அவ்விரு இடுகைகளையும் படிக்கலாம். அப்படி தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய ஒரு வருடம் ஓடிவிட்டது. அவ்விரு இடுகைகளிலும் திருமுருகாற்றுப்படையின் முதல் மூன்று வரிகளை மட்டுமே பார்த்திருந்தோம். இந்த இடுகையில் அதற்கடுத்த மூன்று வரிகளைப் பார்க்கலாம். உரையாசிரியர்கள் இந்த ஆறு அடிகள் சேர்ந்தே ஒரு தொடர் என்று எண்ணுகிறார்கள். அதனால் அந்த ஆறு அடிகளையும் இங்கே தருகிறேன். முதல் மூன்று அடிகளுக்கான பொருளை முன்னர் இட்ட இடுகைகளில் பாருங்கள்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

சுருக்கமாக முதல் மூன்று அடிகளின் பொருளானது: உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும்படி உலகத்தை வலம் வரும் பலரும் புகழும் ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல், எத்திசையில் நோக்கினும் விளக்கமாகத் தோன்றும் குறைவற்ற ஒளி கூடிய (திருமுருகன்).இனி அடுத்த மூன்று அடிகளின் பொருளைப் பார்ப்போம்.

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை

உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும் படி தோன்றினாலும் அவனை அடைந்தவர்கள் அவனை வெறுத்தவர்கள் என்று இருவகையான உயிர்கள் எங்கும் இருக்கின்றனவே. அவனை அடைதல் என்பது அவனது உரிமைப்பொருட்களான உயிர்களையும் உலகத்தையும் நேயத்துடன் நோக்கி அவற்றிற்கு தொண்டு செய்தல். அவனை வெறுத்தலானது அவ்வுயிர்களையும் உலகத்தையும் வெறுத்து அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பது.

அவனது உடைமைகளான உயிர்களையும் உலகத்தையும் விரும்புபவர்கள் அவனுக்கு உரியவர்கள். அவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி அவர்களுக்கு நன்மைகள் செய்து தாங்குகிறான் திருமுருகன். அதனால் 'உறுநர்த்தாங்கிய' என்றார் ஆசிரியர்.

அவ்வாறு அவனை விரும்பாமல் அவனை வெறுத்தவர்களை இவ்வுலகில் இல்லாமல் செய்தும் காக்கிறான் திருமுருகன். இவ்வகை மக்களை இல்லாமல் செய்தல் என்பது இரண்டுவிதமாகச் செய்யலாம். அவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்களை அழித்து இல்லாமல் செய்வது; அப்படி அழிக்கப்பட்டவர்களைக் கண்டு மனம் திருந்தி செறுநர்களாக இருந்தவர்கள் உறுநர்களாக மாறுவதால் செறுநர்கள் இல்லாமல் செய்வது. சூரனைப் போன்றவர்கள் செறுநர்களுக்கு எடுத்துக்காட்டுகள். அவர்களை அழித்து இல்லாமல் செய்கிறான் கந்தன். அவர்களே மனம் திருந்தி வணங்கும் போது மயிலும் சேவலுமாக அவர்களைத் தன் அணிகளாகக் கொள்கிறான் கடம்பன். இதனையே 'செறுநர்த் தேய்த்த' என்று குறிக்கிறார் ஆசிரியர்.

இவ்விரு செயல்களையும் திருமுருகனே செய்தாலும் அச்செயல்களைச் செய்வதில் முனைப்புடன் இருப்பவை அவனது இரு அங்கங்கள்.

உறுநரைத் தாங்குவது அவனது அழகும் வலிமையும் பொருந்திய திருத்தாள்கள். அழகுடன் இருப்பதால் உறுநர்களைக் கவர்ந்து அடி சேர்க்கிறது. அவர்களின் தீவினைப்பயன்களை நீக்கி அவர்களது அறியாமை இருளையும் நீக்குவதால் வலிமை கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வாறு உறுநரைத் தாங்குவது அவனுடைய அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகள் என்பதால் 'உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்' என்றார் ஆசிரியர்.

உறுநரைத் தாங்குவது அவனது திருவடிகள் என்றால் செறுநரைத் தேய்ப்பதோ தடக்கைகள். இடியைப் போன்றும் மேகத்தைப் போன்றும் விளங்கும் நீண்ட திருக்கைகள் செறுநரைத் தேய்க்கின்றன. முன்பு சொன்னது போல் அத்திருக்கைகள் மறக்கருணை செய்யும் போது இடியைப் போல் விளங்குகின்றன. அறக்கருணை செய்யும் போது அவை மேகங்களைப் போல் அன்பைப் பொழிகின்றன. இவ்வாறு இடியைப் போல் அழித்தும் மேகத்தைப் போல் கருணை செய்தும் செறுநரைத் தேய்ப்பதால் 'செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை' என்றார் ஆசிரியர்.

முதல் நான்கு அடிகளையும் ஒரு தொடராகக் கொண்டு 'உலகம் உவக்கும் படி தோன்றி ஒளி பெற்று விளங்குவது திருமுருகனின் திருவடிகள்' என்றும் பொருள் கொள்வார் உண்டு.

இவ்விதமாக அடியவரைக் காத்தும் வெறுப்பவர்களைக் குறைத்தும் திகழும் திருமுருகனின் இன்னொரு முதன்மையான அடையாளத்தை அடுத்த வரியில் சொல்கிறார் ஆசிரியர். வடமொழியிலும் புருஷசூக்தம் 'உனக்கு மண்மகளும் திருமகளும் மனைவிகள்' என்று மனைவியரை முன்னிட்டே மாதவனை அடையாளம் சொல்லும். இங்கே நக்கீரனாரும் அப்படியே திருமுருகனின் மனைவியைச் சொல்லி அவனை அடையாளப்படுத்துவதைப் பார்த்தவுடன் புருஷசூக்தம் நினைவிற்கு வந்தது.முதல் அடையாளமாக உறுநரைத் தாங்குதலையும் இரண்டாவது அடையாளமாக செறுநரைத் தேய்த்தலையும் சொல்லிய பின் மூன்றாவதாக அவனது மனைவியைப் பற்றி சொல்லி அவனது அடையாளத்தை உறுதி செய்கிறார் ஆசிரியர்.

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

அழகிய ஒளிபொருந்திய நெற்றியை உடையவளின் கணவன் என்று மட்டுமே சொன்னால் எந்தப் பெண்ணைச் சொன்னார் என்ற குழப்பம் நேரிடும். திருமுருகனின் மனைவியரான வள்ளியம்மையாகவும் இருக்கலாம் தெய்வயானையம்மையாகவும் இருக்கலாம். அதனால் 'மறு இல் கற்பின்' என்ற அடைமொழியை இங்கே தருகிறார் ஆசிரியர். வள்ளியம்மையை மணந்ததோ களவு மணம் என்ற வகையில் அடங்கும். பெற்றோரையும் உற்றோரையும் எதிர்த்து அவருடன் போராடி வள்ளியம்மையை மணம் புரிந்தான் இக்கிழவன். அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'களவு மணம்' என்ற வகையில் அமையும். இரண்டு பக்கத்துப் பெற்றோரும் உற்றோரும் மகிழ்ந்து மணமுடித்துத் தர தெய்வயானையம்மையை மணந்தான் இத்தேவசேனாபதி. அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'கற்பு மணம்' என்ற வகையில் அமையும்.

அப்படி குற்றம் சொல்ல முடியாத வகையில் கற்பு மணத்தால் கொண்ட ஒளிபொருந்திய நெற்றியைக் கொண்ட தெய்வயானையின் கணவன் திருமுருகன் என்பதை 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்றார் ஆசிரியர்.

இனி வரும் இடுகைகளில் தொடர்ந்து திருமுருகாற்றுப்படை நூலைப் பயிலலாம்.

உலகத்தின் கடைசி நாளா இன்று?

இதை நான் சொல்லவில்லை. அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். செர்னில் செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் பரிசோதனையில் கருந்துளைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதால் நாளை உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் படிக்க

Monday, September 08, 2008

விண்மீன் வார இடுகைகளில் அன்பர்களுக்குப் பிடித்தவை...

விண்மீன் வாரக் கடைசி நாளில் அந்த வாரத்தில் வந்த இடுகைகளில் எது பிடித்தது என்று அன்பர்களிடம் கேட்டிருந்தேன். அன்பர்களும் வாக்களித்து தங்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். சென்ற வாரமே வாக்குகளைத் தரும் நாள் முடிந்திருந்தாலும் வழக்கமான காரணங்களால் இன்று தான் அவற்றைப் பற்றி எழுத நேரம் வாய்த்தது.

மொத்தம் 34 வாக்குகள் வந்திருக்கின்றன. 'எதுவுமே பிடிக்கவில்லை' என்றொரு வேட்பையும் வைத்திருந்தேன். அந்த வேட்பில் மூன்று வாக்குகள் விழுந்திருக்கின்றன. 34 வாக்குகளில் மூன்றே வாக்குகள் மட்டுமே அந்தக் கருத்தைச் சொன்னதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். :-) மற்றவர்கள் பேசாமல் சென்று விட்டார்கள் என்று நினைக்கிறேன். :-)


இராம.கி. ஐயா, டோண்டு ஐயா, துளசியக்கா, சிந்தாநதி வரிசையில் நானா? 8 (23%)

இந்த வார முன்னோட்டம்: எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன! 5 (14%)

வெண்மதி வெண்மதியே நில்லு... 7 (20%)

இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்? 13 (38%)

தமிழா? ஆரியமா? 17 (50%)

அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை! 21 (61%)

நான் தோமா கிறித்தவன் ஆகப் போகிறேன்!!! 9 (26%)

தமிழ் இறைவனுக்கும் முன்னால்... 16 (47%)

கண்ணன் என்னும் கருநிறக் கடவுள் 19 (55%)

எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு) 19 (55%)

இயற்கைக் குணம்? 15 (44%)

பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் தேவையா? 18 (52%)

எதுவுமே பிடிக்கவில்லை!!!!! :-)) 3 (8%)
Votes so far: 34
Poll closed

மொத்தத்தில் என்னுடைய அடிப்படை வலிமைகளாக நான் எண்ணிக் கொள்ளும் இலக்கியமும் ஆன்மிகமுமே மிகுதியான வாக்குகள் பெற்றிருப்பது அவற்றையே தொடர்ந்து இனிமேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

தொடக்கத்தில் அபிராமி அந்தாதி நிறைவிற்காக நண்பர் இரவிசங்கர் எழுதித் தந்த இடுகைக்கு கூடுதலான வாக்குகள் இருந்தன. ஒரு நேரத்தில் அந்த வேட்பையே நீக்கிவிடுமாறும் இரவிசங்கர் கூறினார். விண்மீன் வாரத்தில் வந்த எல்லா இடுகைகளைப் பற்றியும் தானே கேட்கிறேன்; அதனால் மிகுதியான வாக்குகள் உங்கள் இடுகைக்கே கிடைத்தால் அதில் ஒன்றும் தவறில்லை; கவலை வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதன் பின்னர் அவர் ஏதோ சதி வேலை செய்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னர் வந்த வாக்குகள் அகலிகைக் கதை இடுகையையும் கண்ணன் என்னும் கருநிறக் கடவுள் இடுகையையும் மெச்சத் தொடங்கிவிட்டன. நண்பர்களுக்குத் தனி மடலில் அவர் ஏதேனும் வேண்டுகோளை வைத்திருந்தார் என்றால் தேர்தல் அதிகாரியான என்னிடம் தெரியப்படுத்துங்கள். செல்லாத வாக்குகளை நீக்கிவிடலாம். :-)

தற்போது இருக்கும் வாக்குகளின் அடிப்படையில் 'அகலிகைக் கதை' இடுகை 21 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 19 வாக்குகள் பெற்று அபிராமி அந்தாதி நிறைவு இடுகையும் கண்ணன் என்னும் கருநிறக்கடவுள் இடுகையும் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கின்றன. 18 வாக்குகள் பெற்று பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் தேவையா என்ற இடுகை மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இந்த இடுகைகளைப் பிடிக்கும் என்று வாக்களித்தவர்கள் ஏன் அவை பிடித்தது, அவற்றில் எந்தப் பகுதி பிடித்தது, அவற்றை எந்த வகையில் இன்னும் சுவையாக எழுதலாம் என்று சொன்னீர்கள் என்றால் மிக மகிழ்வேன்.

அடுத்த மூன்று இடங்களை மீள்பதிவுகள் பெற்றிருக்கின்றன. நல்ல இடுகைகள் என்று நான் எண்ணுபவை நண்பர்களுக்கும் பிடிக்கிறது என்பதை இது காட்டுகின்றது என்று நினைக்கிறேன். மகிழ்ச்சி.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஆனால் சொல்லுவதற்கு கருத்துகள் இருக்கின்றது என்று எண்ணுபவர்களும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளிப்படையாகச் சொல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்.

Wednesday, September 03, 2008

சங்ககால மக்கள் வாழ்க்கை - மயிலை சீனி.வேங்கடசாமி

சங்க காலத்து வாணிகத்தைப் பற்றிப் பேசும் போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும்.
சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி.பி. 250-க்கு முற்பட்ட காலம். இக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அக் காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு.

இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித வாழ்க்கையும் நாகரிகமும், மட்டமாகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தன. வாழ்ந்த இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கபடி அவர்களுடைய நாகரிகமும், வாழ்க்கையும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தன.

அவர்கள் வாழ்ந்த இடங்களும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையாக இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை வெவ்வேறு விதமாகத் துன்பமாக அல்லது எளிதாக இருந்தது.

அந்தக் காலத்தில் மனிதர் எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. நிலத்தினுடைய இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்கள் வாழ்க்கை ஐந்து விதமாக அமைந்திருந்தது.

குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலை நிலம் என்னும் நிலப் பிரிவுப்படி அவர்களுடைய வாழ்க்கையும் ஐந்து வகையாக இருந்தது.

மலையும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன. மலைகளின் மேலும் மலைச்சாரல்களி லும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மலைகளுக்குக் கீழே இருந்த காடுகளும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் என்று பெயர் பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மலைகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட வேறுவிதமாக இருந்தது. ஆறுகள் பாய்கிறதும் அல்லது ஏரி குளங்கள் உள்ளதுமான சமவெளிகள் மருதம் என்று பெயர் பெற்றன.

இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மற்றவர்களுடைய வாழ்க்கையைவிட மேலானதாக இருந்தது. கடற்கரையோரமாக இருந்த நிலங்கள் நெய்தல் நிலம் என்று பெயர் பெற்றன.

சங்க காலத்தில் மிக நீண்ட கடற்கரை தமிழகத்துக்கு இருந்தது. அக்காலத்தில், மேற்குக் கடற்கரையையடுத்திருந்த சேரநாடும் (இப்போதைய மலையாள நாடு) துளு நாடும் (இப்போதைய தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தமிழ் நாடாக இருந்த படியால், பழந்தமிழகத்துக்கு மிக நீண்ட கடற்கரை இருந்தது.

கடற்கரையான நெய்தல் நிலத்தில் வசித்தவர் வாழ்க்கை துன்பகரமான வாழ்க்கை. அவர்கள் நாள் தோறும் கடலில் வெகு தூரம் சென்று மீன்பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள்.

இந்த நால்வகையான இயற்கை நிலம் அல்லாத வரண்ட பிரதேசம் பாலை நிலம் என்று பெயர் பெற்றது. இங்கு இயற்கையாக மக்கள் வாழவில்லை. யாரேனும் இங்கு வசித்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கை மிருக வாழ்க்கை போல இருந்தது.

இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வெவ்வேறு வகையாக இருந்தது. அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் வெவ்வேறு விதமாக இருந்தன. அவற்றைச் சுருக்கமாக கூறுவோம்.

குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை

மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர்.

இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இறவுளர் என்றும் அழைக்கப்பட்டார்கள். இறவுளர் என்பவர் இக்காலத்தில் இருளர் என்று கூறப்படுகின்றனர்.

இங்குச் சுனை நீர் உண்டு. மலையருவிகளும் உண்டு. பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டு விடும். எக்காலமும் ஓடிக் கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே. மலைப்பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு.

குறிஞ்சிச் செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத்தக்கவை. மூங்கிற் புதர்கள் உண்டு. வேங்கை, திமிசு, தேக்கு, சந்தனம், அகில், கடம்பு, கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன. பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை. புலி, யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.

மலைகளிலும் மலைச் சாரல்களிலும் ஐவன நெல்லையும், தினையையும் அரிசியையும் பயிர் செய்தார்கள்; மரம் செடி கொடி களை வெட்டி அப்புறப் படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலத்தைப் பண்படுத்தினார்கள்.

பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.

மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று. பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன. யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடினார்கள்.

தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். தினையரிசியிலிருந்தும் மதுபானம் உண்டாக்கினார்கள். மிகத் தாழ்வான சிறிய குடில் களைக் கட்டி அதன் மேல் தினைத்தாளையும் ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது. இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று, பற்றாக்குறையாகவே இருந்தது. மலைத்தேன், யானைத் தந்தம், புலித்தோல், அகில், கட்டை, சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள். இவர்களுடைய வாணிகம் பண்டமாற்றாக இருந்தது. இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.


முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக் கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன.
இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், எயினர் (எயினர் - வேடர்), இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள்.

வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவரை, துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள். குளங்களிலிருந்து நீர் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள், மழையை, எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால் தயிர் நெய்களையும் உணவாக உண்டார்கள்.

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத் தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள்.

இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன. பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்ட மாற்றாகவே விற்றார்கள். முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை, குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது. இவர் கள் அவர்களை விட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

மருத நிலத்து மக்கள் வாழ்க்கை

ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நிலவளமும் நீர் வளமும் உள்ள மருத நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும், எருமைகளையும் பூட்டிய ஏர்களி னால் நிலத்தை உழுது, பண்படுத்தி எருவிட்டு விதை விதைத்து நீர்பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள். கரும்பையும் பயிரிட்டார்கள்.

காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். நெல்லைப் பயிரிட்டு உணவுக்கு கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தபடியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்ற நிலத்து மக்கள் வாழ்க்கையைவிட பலமடங்கு உயர்ந்திருந்தது. வாழ்க்கையில் அதிகம் கவலைப்படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது. ஆகவே இவர்கள் நாகரிகம் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது.

உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே.

ஆகவே மருத நிலத்திலே தான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம் பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும் மாளிகை களையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை

கடலைச் சார்ந்த நிலம் நெய்தல் நிலம் என்று கூறினோம். கடற்கரைக் குப்பங்களிலும் பாக்கங்களிலும் வசித்த நெய்தல் நிலத்து மக்கள் பரதவர் என்றும் பட்டினவர் என்றும் பெயர் பெற்றனர். மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை.
ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்துவந்து விற்று வாழ்ந்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் கிடைத்தன. அவற்றைப் பிடித்துவந்து அயல் ஊர்களில் விற்று (பண்டமாற்று செய்து) தானியங்களைப் பெற்று வாழ்ந்தார்கள். விற்று மிகுந்த மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்தி உலர்த்திக் கருவாடு செய்து விற்றார்கள்.

சில இடங்களில் கடற்கரை யோரங்களில் உப்பளங்கள் இருந்தன. அந்த அளங்களில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு உண்டாக்கினார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை கடினமான வாழ்க்கையே. குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை ஒரு வகையில் கடினமானது என்றால் நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை வேறு வகையில் கடினமானது.

கடற்கரையோரங்களில் சில இடங்களிலே துறை முகங்கள் இருந்தன. துறை முகங்களிலே வாணிகக் கப்பல்கள் வந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்தபடியால் துறைமுகப் பட்டினங்களில் வாணிகமும் செல்வமும் பெருகின.

ஆகவே துறைமுகப் பட்டினங்கள் நாகரிகமும் செல்வமும் பெற்று விளங்கின. பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை என்று கூறினோம். வாழ்வதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லாத பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை. வாழ்ந்தவர்களும் மனிதராக வாழவில்லை. மாக்களைப் போல வாழ்ந்தார்கள்.

இவ்வாறு வெவ்வேறு இயற்கையான சூழ்நிலைகள் அமைந்த இடங்களில் வசித்த அக்காலத்துத் தமிழர் வெவ்வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

விரைவான போக்கு வரத்துச் சாதனங்களும் தந்தி தபால் வசதிகளும், மற்றும் இக்காலத்து வசதிகள் பலவும் அக்காலத்தில் இல்லாத படியால் கல்வி, பொரு ளாதாரம், நாகரிகம் முதலியவை வளர்ச்சியடைய இயலாமற் போயின. இக் காலத்தில் மிக எளிய மக்கள் பெறுகிற வசதியைக்கூடச் செல்வம் பெற்றவர் பெற முடியாத சூழ்நிலை அக்காலத்தில் இருந்தது. இத்தகைய சூழ்நிலை தமிழருக்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லா நாட்டிலும் இப்படிப் பட்ட நிலைதான் இருந்தது.

அந்தக் காலத்தில் தமிழருடைய நாகரிகம் மருத நிலத்திலும் துறைமுகப்பட்டினங்களிலும் வளர்ந்தன என்று கூறினோம். ஆம், பட்டணங்களிலும் பட்டி னங்களிலும் தான் அக்காலத்து தமிழரின் நாகரிகம், பண்பாடு, கலைகள் எல்லாம் வளர்ந்தன.

தமிழரின் வாணிகம் அக் காலத்தில் எவ்வாறு நடந்தது என்பதைப் பார்ப்போம். இக்காலத்தில் சிறு விலையுள்ள பொருளுக்கும் அதிக விலையுள்ள பொருளுக்கும் காசு பயன்படுகிறது.

ஆனால் காசு (நாணயம்) ஆதிகாலத்தில் ஏற்படவில்லை. ஆதிகாலத்தில் பண்டமாற்று - ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக மற்றொரு பொருளைப் பெறுவது - நடந்தது. பிறகு பையப்பைய நாணயம் (காசு) வழங்கத் தலைப்பட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய சங்க காலத்துத் தமிழகத்திலே பண்ட மாற்றும் நாணயச் செலாவணியும் நடைபெற்றன.

கட்டுரை: கீற்று வலைத்தளம்