Tuesday, October 31, 2006

சொல்வது ஒன்று புரிவது ஒன்று

அடிப்படையில் மனம் ஒரு ஊகிக்கும் இயந்திரம். புரியாததை ஏற்கனவே தெரிந்ததை வைத்து இட்டு நிரப்புவதை தனது வேலையாக மனம் நினைக்கிறது. அதனால் ஏற்படும் விளைவு 'துணிபுகள்'. இந்தத் துணிபுகள் முக்காலங்களையும் சேர்ந்த பல காரணிகளால் ஆனது - நினைவுகள், நம்பிக்கைகள், தற்போதைய பார்வைகள்/கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள், சூழ்நிலைகள், ஆசாபாசங்கள், நோக்கங்கள். ஒருவர் சொல்வதைப் புரிந்து கொள்வது என்பது கடினமான வேலை என்று தோன்றுகிறதா? எளிதில் தவறு செய்யக் கூடிய ஒன்று தோன்றுகிறதா? உண்மை.

- அண்மையில் கலந்து கொண்ட 'The Art of Listening' பயிற்சி வகுப்பிலிருந்து.

துணிபுகள் - Assumptions
காரணிகள் - Factors

Monday, October 30, 2006

மாற்றம் எனது மானிடத் தத்துவம்

உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
என் அளவுகளை மீண்டும் எடுக்கும்
தையல் காரரே
உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!

Wednesday, October 25, 2006

கடவுளும் அவள் இடையும்

கடவுளும் அவள் இடையும் ஒன்று
சிலர் உண்டென்பர்
சிலர் இல்லையென்பர்

கல்லூரியில் நுழைந்தவுடன் எழுதியது (1989 - 1990)

Tuesday, October 17, 2006

தீபாவளியை முன்னிட்டு...

இதோ தீபாவளி வந்திருச்சுங்க....நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க? வழக்கம் போல புதுத்துணி உடுத்திக்கிட்டு, பலகாரம் தின்னுட்டு, குழந்தைக்குட்டிகளோட பட்டாசு வெடிச்சு கொண்டாடலாம்ன்னு இருக்கீங்களா? நல்லதுங்க. அதுக்குத்தானே பண்டிகைன்னு ஒண்ணு இருக்கு.

அப்படி நாம பண்டிகை கொண்டாட்டத்துல மூழ்கி இருக்கிறப்ப நம்மல சுத்தி ஏழை பாழைங்க யாராவது இருந்தா அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி பண்ணப் பாருங்க. உங்க வீட்டுல வேலைக்காரங்க யாராவது இருந்தா அவங்க பசங்க படிக்கிறாங்களான்னு பாத்து அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க. யாராவது ஒரு ஏழைக்கிழவியோ கிழவனோ நீங்க போற பாதையில இருந்தாங்கன்னா அவங்களுக்கு என்ன உதவி பண்ணலாம்ன்னு பாருங்க.

நாம பண்டிகை கொண்டாடற அதே நேரத்துல நம்மச் சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும்ன்னு என்னை மாதிரி நீங்களும் ஆசைப்படுவீங்கன்னு தெரியும். ஆனா எல்லாரையும் சந்தோசமா நம்மால வச்சுக்க முடியுமா என்ன? ஏதோ முடிஞ்ச வரைக்கும் நம்மச் சுத்தி இருக்கிறவங்க சந்தோசமா இருக்க ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.

என்னை மாதிரி வெளிநாட்டில இருக்கிறவங்க நம்ம மக்களுக்கு சேவை செய்ற ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஏதாவது நம்மால முடிஞ்சது தீபாவளியை முன்னிட்டு கொடுங்க.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில இருக்கிறவங்க எல்லாரும் படிச்சு அவங்கவங்க முடிஞ்ச உதவி நம்ம மக்களுக்கு செய்யணும்ன்னு நினைச்சீங்கன்னா + வோட்டு போட்டுட்டுப் போங்க. குறைஞ்சது தீபாவளி முடியற வரைக்குமாவது தமிழ்மணத்துல இந்த பதிவு நிக்கும் இல்லீங்களா?

உங்க கருத்துகளையும் மறக்காம எழுதிட்டுப் போங்க. எந்த எந்த வகையில உதவி பண்ணலாம்ன்னு உங்களுக்குத் தோணுறதை எழுதிட்டுப் போனா உங்களுக்குப் பின்னால இந்த வலைப்பதிவ படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்.

ரொம்ப நன்றிங்க.

***

இது ஒரு மீள்பதிவு. போன வருடம் இட்ட பதிவையும் அதில் உள்ள பின்னூட்டங்களையும் இங்கே காணலாம். நன்றிகள்.

Monday, October 16, 2006

இது தான் கடவுள்

செய்கின்ற தொழிலே தெய்வமென்பார்
செய்தொழில் கரணங்கள் தெய்வமென்பார்
உய்வழி காட்டும் அவ்வாயுதங்கள்
ஒவ்வொன்றும் உறுதியாய் தெய்வமென்பார்

பாங்காக வருடத்தில் ஒரு நாளேனும்
பகுத்தறிவு கொண்டுஅத் தெய்வம் தன்னை
நீங்காத நற்செல்வம் அருள்வாய் என்று
நிறைவாக ஆயுத பூஜை செய்வார்

காலையில் எழுந்ததுமே கடுங்குளிரில்
களைப்பின்றி செல்வதற்கு உதவும் தெய்வம்
கார் என்ற பெயர் கொண்டு விளங்கும் அதனை
கணப்பொழுதும் மறவாமல் வணங்குகின்றோம்

ஆள்பாதி ஆடையும் பாதியென்றே
அருமையாய் சொன்னார்கள் முன்னோர் அன்று
அதற்கேற்ப ஆடைகளை துவைக்கும் தெய்வம்
அதை வணங்க எனக்கென்ன வெட்கம் வெட்கம்?

பல் போனால் சொல் போச்சு என்பதோர் சொல்
பழங்காலச் சொல்வழக்கு அதை மறவாமல்
பல்தன்னை தினந்தோறும் விளக்கிக் சொல்லை
பலநாளாய் காக்கின்ற தெய்வம் நன்று

பற்றுக பற்றற்றான் பற்றை என்றே
பழந்தமிழர் சொல்லிவைத்தார் பலநாள் முன்பே
பற்றற்றான் பற்றென்றால் என்னவென்றால்
பண்ணவனின் பாதுகைகள் என்று சொன்னார்

பாதுகைகள் பெருமை தனை பாரிலுள்ளோர்
பல்லாண்டு பாடியே வாழ்த்துகின்றார்
பாதுகைகள் பெருமைதன்னை ஆயிரம் பா
பாடியுமே வாழ்த்தியுள்ளார் அறிவீர் நீரே!

காரென்ன வாஷிங் மெஷினுமென்ன
கனஜோராய் டூத் பேஸ்ட் அதுவுமென்ன
கால்தன்னைக் காக்கின்ற காலணியென்ன
காண்கின்றோம் அத்தனையும் தெய்வம் தெய்வம்

மேல் சொன்ன உயிரற்ற பொருட்களுடன்
மேல் நின்ற உயிருள்ள மாந்தர் மாக்கள்
தாள் பரப்பி நிற்கின்ற ஈசன் அவனின்
தகை சார்ந்த வடிவங்கள் என்று கண்டோம்

தூணிலும் இருக்கின்றான் தும்மலிலும் உண்டு
பேணி நின்ற எல்லாவற்றிலும் உண்டு
நாணி நிற்கும் நல்ல பெண் தன்னிலும் உண்டு
நனி நின்ற தலித் அன்பன் தன்னிலும் உண்டு

ஓர் தெய்வம் அவன் எங்கும் நிறைந்து உள்ளான்
ஒருமையுடன் அவன் திருவடி வணங்குகின்றோம்
மாறுபடு கருத்துகளைச் சொல்லும் நண்பர்
மனம் உவக்க என்றுமே சொல்லிச் செல்க!

செருப்புக் கடவுளின் மேல் ஆயிரம் பாடல்கள்

இது ஒரு Impulse பதிவு என்று நீங்கள் நினைக்கலாம். நண்பர் சிவபாலனின் நாத்திகப் பதிவிற்கான எதிர்ப்பதிவு என்றும் நீங்கள் நினைக்கலாம். (அது ஆத்திகம் என்று சொன்னால் நண்பர் கோவித்துக் கொள்வார். அதனால் தெளிவாகச் சொல்லிவிட்டேன் அது நாத்திகப் பதிவு என்று). ஆனால் அவர் 'அட இது கூட கடவுள் தான்' என்று காலணியைக் காட்டியிருந்தார். அதனைக் கண்டவுடன் தோன்றியதே இப்பதிவு. அதனை அங்கேயே பின்னூட்டமாக இட்டிருக்கலாமே என்று கேட்கிறீர்களா? எதற்கு வம்பு? நம் பதிவில் இட்டாலாவது அது நம் கருத்து என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. மற்றவர் பதிவில் நம் கருத்தைச் சொல்லி அவர்கள் அதனை அவர்களின் பதிவினைக் கடத்துவதாக எண்ணிக் கொண்டால்?

இந்தப் பதிவினால் யாருடைய மனமாவது புண்பட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த உ.கு.வும் இந்தப் பதிவில் இல்லை. எல்லாம் நேரடியாகத் தெளிவாகத் தான் சொல்லப் போகிறேன்.

செருப்பைக் கடவுளாகப் பார்த்தார்களா? இப்போதும் அது நடக்கிறதா? செருப்பின் முன்னால் உட்கார்ந்து வணங்குகிறார்களா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் ஆம்; ஆம்; ஆமாம்.

ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார்கள் காலணியை ஏத்தி. நண்பர்களே அந்த ஆயிரம் பாடல்களுக்கும் பொருள் உரைக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஏற்கனவே எடுத்துக் கொண்ட பணிகள் முடிந்தவுடன் அதனைத் தொடங்குகிறேன். இப்போதைக்கு 'New Blog ideas' என்ற வலைப்பூவில் இதனைச் சேர்த்துவிடுகிறேன்.

அந்த ஆயிரம் பாடல்கள் உள்ள நூல் எது என்று சொல்லவில்லை பார்த்தீர்களா? ஹிஹி உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்களே சொல்லுங்கள். - இது கட்டாயம் இரவிசங்கர் கண்ணபிரானின் 'புதிரா? புனிதமா?' பதிவினைப் பார்த்துப் போடும் புதிர் இல்லை :-)

Tuesday, October 03, 2006

ஆண்டொன்று போனால்...

ஆண்டொன்று ஆச்சுங்க. 2005ம் ஆண்டு இதே அக்டோபர் மூன்றாம் நாள் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கினேன். இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. வலைப்பதிவுகள் எழுத ஊக்கம் கொடுத்த நண்பர் சிவபுராணம் சிவராஜாவின் பெயரைச் சொல்லாமல் இந்த மாதிரி பதிவுகள் எழுதியதே இல்லை. :-) அவருக்கு நன்றி.

என் விண்மீன் வாரத்தில் சொன்ன மாதிரி தமிழ்மணம் மட்டும் இல்லையென்றால், அடியேன் எழுதியதைப் படித்து நண்பர்கள் பின்னூட்டங்கள் இடாமல் போயிருந்தால், தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது ஐயமே. ஊக்கத்தைத் தொடர்ந்து கொடுக்கும் நண்பர்களுக்கும் தமிழ்மணத்திற்கும் நன்றி.

எழுத வேண்டும் என்று நினைத்த போது என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இதனை எழுதலாமா, அதனை எழுதலாமா என்று பல விதயங்களைப் பற்றி மனம் அலைபாய்ந்தது. ஆனால் எதற்குத் தமிழ்மணத்தில் வரவேற்பு இருக்கும் என்ற புரிதல் இல்லாததால் மனம் குழம்பியது. அபிராமி அந்தாதிக்குப் பொருள் சொல்கிறேன் என்று பல நாட்களாக (வருடங்களாக) என் வீட்டம்மாவிடமும் ஒரு நெருங்கிய நண்பரிடமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தேன். இருவரும் என் தொல்லை தாங்காமல் தப்பித்துத் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தார்கள். :-) அதனால் முதல் பதிவாக அதைத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொன்றாக ஒவ்வொரு தலைப்பிலும் வலைப்பூ தொடங்கி இப்போது எல்லாவற்றிலும் எழுத நேரமின்றி போயிற்று. :-)

கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்மணம் ஒரு போதையைப் போல் ஆகியது. வலைப்பதிவுகளை விட்டால் உலகில் வேறெதுவும் இல்லாதது போல் தோன்றத் தொடங்கியது. எல்லா நேரங்களிலும் பதிவுகள் இடுவதிலும் படித்தவைகளைப் பற்றியுமே சிந்தனை எல்லாம் இருந்தது. வீடு, வேலை எல்லாம் இரண்டாம் நிலை பெற்றது.

பதிவுகள் தொடங்கிய மூன்றாம் மாதமே தமிழ்மண விண்மீன் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அந்த விண்மீன் வாரம் மிக மிக மகிழ்ச்சியாய் சென்றது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. நிறைய புது நண்பர்களையும் அந்த வாரம் அடையாளம் காட்டியது.

அந்த ஒரு வாரத்தில் உலகத்தில் உள்ள மற்ற எல்லாமே மறந்து போனது. வீடு, வேலை என்று எல்லா இடங்களிலும் தாறுமாறாய்ப் போனது. பணியிடத்தில் மீண்டும் பழைய நிலை திரும்ப ஏறத்தாழ ஒரு மாதம் ஆனது. வீட்டிலோ அந்த வாரத்தின் தாக்கம் இன்னும் இருக்கிறது. :-) வீட்டில் அந்த வாரம் ஏற்படுத்திய தாக்கம் நிலையானது என்று நினைக்கிறேன். தாக்கம் குறைய மாட்டேன் என்கிறது.

கடந்த இரு மாதங்களாக வலைப்பதிவுகள் இடுவதிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டேன். அப்படி விடுமுறை எடுத்துக் கொள்வதால் வீட்டிலும் வேலையிலும் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றன எனப் பார்க்க விரும்பினேன். அருமையான நன்மைகளைக் கண்டேன். பதிவுகள் இடாமல் இரண்டு மாதங்கள் இருப்பது கடினமாகத் தான் இருந்தது. மற்றவர் பதிவுகளைப் படிக்கவும் பின்னூட்டங்கள் இடவும் என்னை நானே அனுமதித்துக் கொண்டதால் பரவாயில்லாமல் இருந்தது. கிடைத்த நன்மைகளை அப்படியே தொடர விரும்புவதால் முன்பு போல் நிறைய பதிவுகள் இடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். பதிவுகள் இடாமலேயே இருப்பது தற்போதைக்கு என்னால் முடியாத ஒன்று. அதனால் வாரத்திற்கு அதிகம் மூன்று பதிவுகள் மட்டுமே என்று ஒரு முடிவில் என்னை நானே இட்டுக் கொள்கிறேன்.