Tuesday, December 29, 2009

வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்

கர்நாடக இசை மும்மூர்த்திகளில் முதன்மையானவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் முதன்மை சீடர்களில் ஒருவர் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர். அவருடைய நினைவினைப் போற்றி இந்திய அஞ்சல் துறை அவருடைய திருவுருவ அஞ்சல்தலையை 27 டிசம்பர் 2009 அன்று மதுரையில் வெளியிட்டுள்ளது.

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் எனப்படும் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோவிலில் வேங்கடரமண பாகவதரின் திருவுருவச் சிலை இருக்கிறது. அந்தத் திருவுருவச் சிலையின் படத்தை இங்கே தருகிறேன்.

வேங்கடரமண பாகவதரின் வரலாறு, பாடல்கள் போன்றவற்றைப் படிக்கவும் கேட்கவும் இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

Saturday, December 26, 2009

அகநானூறு போற்றும் புரிசடை அந்தணன்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.

எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!


பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.

இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?

இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.

'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.

சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.

தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.

சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.

அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.

தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.

திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.

வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.

யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.

தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

Tuesday, December 22, 2009

தன்னைத் தானே சுற்றுதல்!


சித்திரைத் திருவிழாவின் போது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது ஆற்றிலும் ஆற்றங்கரையிலும் நின்று அந்தத் திருநாளைத் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் வினோதமான ஒரு நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய சிறிது நேரத்தில் ஆற்றில் ஏற்கனவே வெள்ளி குதிரை வாகனத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெருமாள் எதிர் வந்து கள்ளழகரை வரவேற்பதையும் கள்ளழகரை மூன்று முறை வலம் வந்து முதல் மரியாதைகளைப் பெறுவதையும் காணலாம். திருமலை நாயக்கர் காலம் முதலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். அப்படி கள்ளழகரிடம் இருந்து ஆற்றில் இறங்கிய உடனே முதல் மரியாதை பெறுபவர் மதுரை தெற்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள்.

மதுரை கூடல் அழகர் திருக்கோவிலுக்குத் கிழக்கே சிறிது தொலைவில் மதுரை தெற்கு கிருஷ்ணன் திருக்கோவில் அமைந்திருக்கிறது. அதற்கும் கிழக்கே ஏறக்குறைய தெற்கு கிருஷ்ணன் கோவிலுக்கு நேர் முன்னர் இருப்பது வீரராகவப்பெருமாள் திருக்கோவில். சிறு வயதில் நவராத்திரியின் போது ஒவ்வொரு இரவும் தெற்கு கிருஷ்ணன் கோவில் தொடங்கி, வீரராகவப் பெருமாள் திருக்கோவில், தெற்கு மாசி வீதி காமாட்சி அம்மன் திருக்கோவில், தெற்கு மாசி வீதி திரௌபதி அம்மன் திருக்கோவில், தெற்கு மாசி வீதி தென் திருவாலவாய சுவாமி திருக்கோவில், மேல மாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில், மேல மாசி வீதி மதனகோபால சுவாமி திருக்கோவில், கூடல் அழகர் திருக்கோவில் என்று வரிசையாகச் சென்று நவராத்திரி அலங்காரங்களைத் தரிசித்தது இப்போது நினைவிற்கு வருகிறது. வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் வீரராகவப் பெருமாளும் திருவரங்கநாதனும் தனித்தனியே நவராத்திரிக் கொலு வீற்றிருப்பார்கள். திருக்கோலங்கள் காணக் கண் கோடி பெறும்.

திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வீற்றிருந்த தேனூர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்து கள்ளழகர் திருமேனியைக் காத்தார் வீரராகவப் பெருமாள் கோவில் அர்ச்சகர். அந்தத் தீரச் செயலைப் பாராட்டி திருமலை மன்னர் தனக்குரிய முதல் மரியாதையை அர்ச்சகருக்கு வழங்க, அர்ச்சகரோ தன் வழிபடு தெய்வமான வீரராகவப் பெருமாளுக்கு அந்த முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று சொன்னார். அதன் படி அப்போதிலிருந்து சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வீரராகவருக்கு முதல் மரியாதை தருகிறார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னரே வெள்ளி குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் மதுரையிலிருந்து கிளம்பி வந்து ஆற்றில் இறங்கி காத்திருப்பார். கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளியவுடன் வீரராகவர் எதிர் சென்று வரவேற்பார். பின்னர் மும்முறை கள்ளழகரைச் சுற்றி வருவார். பின்னர் கள்ளழகர் வீரராகவருக்கு மாலை, பரிவட்டம், தீர்த்தம் முதலியவற்றை அளிப்பார். வீரராகவருக்கு மாலையும் பரிவட்டமும் சூட்டப்படும். வீரராகவரின் பிரதிநிதியாக அர்ச்சகர் தீர்த்த பிரசாதம் பெற்றுக் கொள்வார்.

அடுத்த முறை சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண அழகர் அழைத்தால் இந்த நிகழ்ச்சியையும் கட்டாயம் கண்டு களியுங்கள்.

Monday, December 21, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 5 (மணக்கால் நம்பி)

தமிழக வைணவ குருபரம்பரையில் திருமால், திருமகள், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார் ஆகியோரின் வாழித் திருநாமங்களை இதுவரைப் பார்த்திருக்கிறோம். இன்று உய்யக்கொண்டாரின் சீடரான மணக்கால் நம்பியின் வாழித் திருநாமத்தைப் பார்க்கப் போகிறோம்.

"இராதா மோகன். இரவி உய்யக்கொண்டாரைப் பற்றி சொல்லும் போது அவருடைய சீடரான மணக்கால் நம்பியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னார். அவரைப் பற்றி சொல்லுங்களேன்".

"என்ன குமரன் விளையாடுகிறீர்களா? உங்களுக்கு மணக்கால் நம்பியைப் பற்றி தெரியாதா என்ன?"

"கொஞ்சம் தெரியும் இராதா. அவர் உய்யக்கொண்டாருடைய சீடர் என்றும் நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாருடைய ஆசாரியர் என்று தெரியும். மற்ற படி ஒன்றும் தெரியாது".

"சரி. எனக்கு அவரைப் பற்றித் தெரிந்த சிலவற்றைச் சொல்கிறேன்.

மணக்கால் நம்பியின் இன்னொரு பெயர் இராமமிச்ரர். பரசுராமன், இராமன், பலராமன் இம்மூவரையும் முதல் மூன்று இராமர்கள் என்றும் இவரை நான்காவது இராமர் என்றும் சொல்வார்கள். திருச்சிக்கு அருகில் இருக்கும் அன்பில் என்ற கிராமத்தில் பிறந்தவர்."

"கூரத்தில் பிறந்தவர் கூரத்தாழ்வான் என்று பெயர் பெற்றதைப் போல் மணக்கால் என்ற ஊரில் பிறந்ததால் இவருக்கு மணக்கால் நம்பி என்று பெயர் வந்ததாக நினைத்தேனே. அது தவறா?"

"அதுவும் ஒரு வகையில் சரி தான் குமரன். அன்பில் என்ற ஊரில் இருந்த ஒரு பகுதிக்கு மணக்கால் என்ற பெயர் இருந்தது என்று சொல்லக் கேள்வி. ஆனால் மணக்கால் நம்பியின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் அவருக்கு இந்தத் திருப்பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்".

"எந்த நிகழ்ச்சி அது இராதா?"

"உய்யக்கொண்டாரின் மனைவியார் மறைந்த பின்னர் உய்யக்கொண்டாரின் வீட்டு மேற்பார்வையையும் சமையல் வேலைகளையும் இராமமிச்ரரே ஏற்றுக் கொண்டார். உய்யக்கொண்டாருக்கு சிறுமியர்களான இரு மகள்கள் இருந்தனர். அவர்களை தாயைப் போல் வளர்த்தார் இராமமிச்ரர். ஒரு முறை அச்சிறுமியர் ஆற்றுக்குச் சென்று நீராடி வரும் போது வழியில் இருந்த சேற்றில் கால் வைக்கத் தயங்கினார்கள். அதனைக் கண்ட இராமமிச்ரர் அச்சேற்றில் தானே விழுந்து தன் உடலின் மேல் அச்சிறுமியர் ஏறிச் செல்லுமாறு சொன்னார். அதே போல் அவர்கள் செய்ய அவர்களின் காலடித் தடங்கள் அவர் உடலில் விழுந்தன. மணற்கால் தடங்கள் பெற்றதால் அவருக்கு மணக்கால் நம்பி என்ற பெயர் வந்தது".

"அடடா. அவருடைய ஆசாரிய பக்தியை என்றென்றும் எல்லோரும் நினைத்து நல்வழி காணும்படியாக அவருக்கு இந்தத் திருப்பெயரே நிலைத்துவிட்டது போலும்".

"ஆமாம் குமரன். ஆசாரியன் மட்டுமின்றி அவருக்குத் தொடர்புடைய எல்லோரும் நம்மை ஆளும் உரிமையுடையவர்கள் என்று எண்ணுவதும் அதே போல் நடந்து கொள்வதும் தான் சீடனுக்கு இலக்கணம் என்று சொல்வார்கள். அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்தவர் இந்த நான்காம் இராமர்".

"இராதா. வெகு நாட்களாக எனக்கு ஒரு ஐயம் உண்டு. நாதமுனிகளின் பேரர் தானே யமுனைத்துறைவனான ஆளவந்தார். அப்படியிருக்க நேரடியாகத் தன் பேரனுக்குத் தானே உபதேசம் செய்யாமல் ஏன் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்?"

"குமரன். நாதமுனிகள் மறைந்த போது ஆளவந்தார் சிறுவர். அதனால் தான் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்".

"ம்ம். அது சரி. ஆனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடுவில் இரு ஆசாரியர்கள் வந்துவிடுகிறார்களே. ஏன் அப்படி?"

"உய்யக்கொண்டார் நாதமுனிகளை விட சில வருடங்களே இளையவர். மணக்கால் நம்பிகள் உய்யக்கொண்டாரை விட சில வருடங்களே இளையவர். ஒருவருக்கு அடுத்து ஒருவர் மறையும் காலம் வந்ததால் ஆளவந்தாருக்குக் குருவாய் இருக்கும் பொறுப்பை ஒருவர் அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டி வந்தது. நாதமுனிகள் நேரடியாகத் தன் பேரனுக்கு உபதேசம் தர விரும்பினார். ஆனால் காலம் வந்துவிட்டதால் அந்தப் பொறுப்பை உய்யக்கொண்டாருக்குத் தந்தார். அவரும் ஆளவந்தாரைச் சீடராய் அடையும் நேரத்திற்கு முன்னரே மறைய வேண்டி வந்ததால் மணக்கால் நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். அதனாலேயே நாதமுனிகளை ஆளவந்தாரின் நேரடி ஆசாரியராகச் சொல்லும் வழக்கமும் உண்டு".

"இப்போது புரிகிறது இராதா. நன்றி".

"இன்னொன்றும் சொல்ல வேண்டும் குமரன். சேனை முதலியாரின் அம்சம் நம்மாழ்வார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். சேனை முதல்வரான விஷ்வக்சேனரின் சேனைத்தலைவர்கள் கஜானனர், குமுதர், குமுதாட்சர், ஹரிவக்த்ரர் என்பவர்கள். கஜானனர் நாதமுனிகளாகவும், குமுதர் உய்யக்கொண்டாராகவும், குமுதாட்சர் மணக்கால் நம்பியாகவும், ஹரிவக்த்ரர் ஆளவந்தாராகவும் அவதரித்தார்கள் என்றும் சொல்லுவார்கள்".

"ஆகா. அருமை அருமை. மிக்க நன்றி இராதா. இப்போது மணக்கால் நம்பிகளுடைய வாழித் திருநாமத்தைப் படித்தால் நன்கு புரியும் என்று நினைக்கிறேன்".

***

தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசி மகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே


உலகம் உய்யும் வகையில் தமிழ் மறைகளை நிலை நாட்டியவரான உய்யக்கொண்டாரின் திருவடிகளைத் தன் தலையில் ஏந்திக் கொள்ளும் மணக்கால் நம்பி வாழ்க!

தென்னரங்கரின் சிறந்த அருளை என்றும் நினைத்திருப்பவர் வாழ்க!

தசரதன் மகனான இராமனின் திருநாமம் உலகில் தழைக்கும் வகையில் நான்காவது இராமனாக வந்தவர் வாழ்க!

தமிழ் மறைகளை மீட்டுத் தந்த நாதமுனிகளின் மகிழ்ச்சியை நிலைநாட்டியவர் வாழ்க!

அன்புடன் உயர்ந்தவரான ஆளவந்தாரை நல்வழியில் செலுத்தியவர் வாழ்க!

நீள் நிலத்தில் பத்து ஆழ்வார்களின் பாசுரங்களை நிலை நிறுத்தியவர் வாழ்க!

மாசி மகம் தன்னில் உலகம் விளங்க வந்து உதித்தவர் வாழ்க!

திருமாலே என்னும் படியான மணக்கால் நம்பி திருவடிகள் உலகத்தில் வாழ்க வாழ்க!

Saturday, December 19, 2009

தமிழின் திருநாள்

மார்கழி மாதத்தில் வரும் தமிழின் திருநாளாம் திருவாய்மொழி திருமொழித் திருநாளைப் பற்றி திரு. மோகனரங்கன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே 'படித்ததில் பிடித்தது' வகையில் தருகிறேன்.

***

திருமொழித் திருவாய்மொழித் திருநாள்

தமிழின் திருநாள்

சார்! வைகுண்ட ஏகாதசி வரது போல இருக்கே! ஸ்ரீரங்கம் போகப்போறீங்களா? என்றார் நண்பர் தொலைபேசியில். கூப்பிட்டால் போகலாம் என்றேன். 'என்ன சார் இதுக்கெல்லாம் கூப்பிடுவாங்களா? நாமேதான் போகவேண்டும்' என்று உபதேசம் செய்தார். 'ஆமாம் சரிதான்' என்று சொல்லிவைத்தேன். ஆனால் நான் மட்டுமன்று. நெடுங்காலம் ஸ்ரீரங்கத்திலேயே ஊறிப்போனவர்கள் யாரை நீங்கள் கேட்டாலும் இது போன்ற பதில்தான் வரும். இப்பொழுது டி வி சானல்கள் வந்து எல்லாவற்றையும் மழுங்க அடித்திருக்குமோ என்னவோ. உண்மையான ஸ்ரீரங்கத்துக்காரர் என்றால் அப்படித்தான். 'அவனுக்கு என்ன சார் எதைப் பற்றியுமே கவலையில்லாமல் படுத்துண்டு இருக்கான்' என்று சொன்னால் நீங்கள் ஸ்ரீரங்கத்தில் 'யாரு? வீட்டிலயா? பையனா? மாமாவா? தோப்பனாரா? ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கத்தைச் சொல்வது ஏதோ உபசாரமாக அன்று. ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களில் ஸ்ரீவைகுண்டம் என்பது என்ன விவரணைகளோடு அமைந்திருக்கிறதோ அதனுடைய ஆர்கிடெக்ட் மாடல் போன்றதுதான் ஸ்ரீரங்கம். ஏன் பாரமேஸ்வர சம்ஹிதையில் என்னென்ன திக்பாலர்கள், அதிஷ்டான தேவதைகள், கிரியா பாதத்தின் படி என்னென்ன மூர்த்தி பேதங்கள், உற்சவாதிகளின் தாத்பர்யம் அனைத்தையும் நுணுக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை கோவிந்தாச்சாரியார் ஸ்வாமி ஒரு காலத்தில் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த நுணுக்கங்களை எழுதி வாங்கிப் பாதுகாக்க வேண்டும் என்று பல மகனீயர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அதற்குள் காலங்கள் மாறிவிட்டன.

ஆகமங்களில் ஜீவனின் முக்தி அடைதலைப் பற்றிய விவரணைகள் வரும். அர்ச்சிராதி கதியில் சென்று ஜீவன் முக்தியை அடைகிறான் என்பது செய்தி. அர்ச்சிர் என்றால் ஒளி. ஓளிமயமான வழியில் உயிரின் கடைத்தேற்றத்திற்கான பயணம் என்பது எத்தனை ஆரோக்கியமான ஒரு சித்திரம்.! நாம் தான் எல்லாவற்றையும் 60 வயதிற்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, 60 வருவதற்கு முன்னரே, சார் கண் பிரச்சனை, ரொம்ப நேரம் படிக்க முடியலை, உட்கார்ந்த முதுகு பிடிக்கறது, நடந்தா உடம்பு கூட வருகிறது, கால் எல்லாம் விண் விண் என்று இழுக்கிறது, அதிக நேரம் உட்கார்ந்து கேட்க முடியலை, சார் ஏதாவது நல்ல ஸத் விஷயமா காதுல விழுந்தா அப்பா என்ன சுகமா தூக்கம் வருதுங்கிறீங்க, ---இப்படித்தான் நமது ததவார்த்த ரீதியான விஷய்ங்களில் அக்கறையும், கொடுப்பினையும் இருந்து கொண்டிருக்கிறது. 'சார் என்ன நினைச்சிண்டு இருக்கீங்க? அதற்கெல்லாம் ஏது சார் நேரம்? வயிற்றுப் பாடே பெரும் பாடு. அது போதாதுன்னு ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல், வீட்டில், ஆபீசில். ஆனால் கிரிக்கட் பார்க்க இதெல்லாம் தடையாவதில்லை. சினிமா நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டங்களைப் பார்க்க எதுவும் தடையில்லை. இதில் எதுவும் தப்பில்லை. ஏனெனில் லோகோ பின்ன ருசி: ஆயினும் 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் தளர்விலராகில் சார்வது சதிர்' என்று போய்ப்பார்த்தால், அதுவும் மார்கழி மாதத்தில் விடியற் பொழுதின் பனிப்படலத்தில், அன்றாடம் பொங்கிய பொங்கலும், பொழியும் இசையும், வழியும் கதிரொளியுமாய் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்டமேதான் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஸ்ரீரங்கநாதனோ ஆகமங்களில் சொல்லியபடி ஜீவன் முக்தி அடையும் அர்ச்சிராதி மார்க்கத்தைத் தானே முக்தனாக வேஷம் போட்டுக் காண்பித்து நடித்துக்க்கொண்டிருப்பான்.

மார்கழி முதல் தேதி முதல் தொடங்கும் திருப்பாவை நம்மை ஸர்வ அவஸ்தைகளினின்றும் துயிலெழத் தூண்டியபடியே இருக்கும். பகல் பத்து இராப் பத்து என்று 21 நாட்கள் மக்கள எல்லாம் கோவிலை நோக்கிப் போவதும், அர்ஜுன மண்டபத்தில், திருமாமணி மண்டபத்தில் என்று மாறி மாறி அரங்கத்தரவின் அணையான் அக்காவின் தொணப்பல் தாங்காமல் ஒருவழியாய் எழுந்து சுறுசுறுப்பாகக் கிளம்பித் தமிழை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பான். தமிழை அவனுக்கு எடுத்துச் சொல்லும் அரையர்களோ மகாராஜாக்கள் போல் தலையில் கிரீடம் தரித்து நின்று சொல்வார்கள். இந்த டியூஷன் படிக்கற பிள்ளை சமத்தாகத் தன் கூட்டாளிகளை எல்லாம் செட் சேர்த்துக்கொண்டு உட்கார்ந்து கேட்கும். இந்த ட்யூஷன் வாத்யார்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பு. கொஞ்சம் விட்டால் பிள்ளையாண்டான் தூங்கப் போய்விடும் என்று தெரியும்.

அது சரி. இந்த மாதிரி கோவிலில் தெய்வத்திற்குத் தமிழைச் சொல்வது என்பது நாம் விளையாட்டாகச் சொல்லி விட முடிகிறது. ஆனால் எந்தக் காலத்தில் யார் ஏற்படுத்தினது? உலக மதங்களிலேயே இன்றும் பொருள் தெரிகிறதோ இல்லையோ கடவுளுக்கு என்று புராதன மொழியில்தான் சொல்ல வேண்டும் என்பது பெரிதும் மாறாமல் இருக்கும் போது இங்கு மட்டும் சாந்தமாக ஒரு புதுமை. கவிதை சொட்டச் சொட்டப் பைந்தமிழில் கடவுள் காதலைக் கைங்கர்ய பரர்கள் விண்ணப்பம் செய்ய அவன் சற்று அங்கும் இங்கும் திரும்பினாலும் ம்ம்ம்ம் 'மெய் நின்று கேட்டருளாய்' என்று அதட்டி அன்போடு ஸேவிக்கின்றார்கள். யார் இதற்கெல்லாம் அடிப்படை இட்டது தெரியுமா?

வேறு யார் திருமங்கை மன்னன் தான். ஊரை வளைத்து மதிலைக் கட்டினார். உண்மையை வளைத்துத் தமிழைக் கட்டினார். உறங்கிய பக்தியை துயிலெழுப்பினாள் அக்கா. உறங்காத தெய்வம் விழித்துக் கொண்டது. தமிழ் பின் சென்ற பெருமாள் தண் தமிழ்க் கொண்டல் பொழிய திருவோலக்கம் இருந்து நனைகின்றான். திருமங்கை மன்னனுக்குத் திருவாய்மொழி என்றால் கொள்ளை ஆசை. நம்மாழ்வாரின் பக்திப்பெருக்கில் அமிழ்ந்தார். தம்முடைய திருவாய்மொழியைக் கேட்டு ஆரார் வானவர்கள் என்று சடகோபன் சொன்னது அவர் மனத்தில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருந்தது. நிதய சூரிகளே இங்கிருப்போர் அங்கு சென்றால் 'உங்களுக்குத் திருவாய்மொழி தெரியுமா? சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்லிக் கேட்டு திருப்தி அடைய மாட்டார்களாம். ஸ்ரீவைகுண்டத்திலேயே இந்த கதி என்றால் பூலோக வைகுண்டத்தில் நிச்சயம் அது நடைமுறைக்கு வரவேண்டுமே என்று நினைத்தவர் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அரஙகனின் அருளப்பாடு வந்தது. 'கலியன் என்ன வேண்டும் உமக்கு?' சரியான சமயம். கலியன் விடுவாரா? 'நாயன் தே! வடமொழி வேதங்களை நீர் அத்யயனத் தொடக்கம் தொடங்கி செவி மடுப்பது போல் திராவிட வேதமாகிய திருவாய்மொழியையும் அதற்கு முந்தைய பத்து நாட்கள் தேவிமார் பரிஜனங்கள் உடனே திருவோலக்கமாக வீற்றுக் கேட்டருள வேண்டும்.' என்றார். வானிளவரசு வைகுந்தக் குட்டன்
வரந்தரும் பெருமாள் ஆனார்.

அன்று தொடங்கி ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து திருவாய்மொழித் திருநாள் நடத்தும் வழக்கம் நடந்தது. அதற்கு நம்மாழ்வாருக்கு அழைப்பு ஓலை பெருமாள் கைப்பட எழுதி அனுப்புவது திருக்கார்த்திகை தீபத்தின் அன்று. பின் காலம் இருட்டாகி திருவாய்மொழி மறைந்து, நாதமுனிகள் 'ஆராவமுதே' பத்துப்பாட்டின் பின் தொடர்ந்து சென்று ,
திருவாய்மொழி, திருமங்கை மன்னன் மற்ற ஆழ்வார்கள் அனைவரது பாடல்களையும் மீட்டது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய வரலாறு.

நாதமுனிகள் திவ்ய பிரபந்தங்களை மீட்டு, நின்று போயிருந்த தமிழ்த் திருநாளை மீண்டும் தொடங்கி, பண்டை நாளைவிட இன்னும் விமரிசையாக தேவ கானம் என்ற புதிய இசை முறையில் ஆழ்வார் பாடல்களை இசையமைத்து உரியவரைப் பயிற்றி பெரும் ஓலக்கமாகச் செய்து திருவிழாவாக ஆக்கிவிட்டார். திருவாய்மொழிக்கு திருநாள் கண்ட கலியனின் திருமொழிகளையும், மற்றுமுள்ள ஆழ்வார்களின் பாசுரங்களையும் திருவாய்மொழி பத்துநாளுக்கு முந்தைய பத்துநாளும் பகலில் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்து, திருமொழித் திருவாய்மொழித் திருநாளாக வளர்த்தெடுத்த பெருமை நாதமுனிகளைச் சேரும். மங்கை மன்னன் வேற் கலியன் மான வேல் பரகாலன் கண்ட கனா அவர் காலத்திலேயே வேரூன்றி நாதமுனிகள் காலத்தில் கப்பும் கிளையும் கனியும் தட நிழலுமாய் விரிந்து எம்பெருமானார் காலத்திலோ பெரும் கற்பக விருட்சமாய் விச்வரூபம் எடுத்ததுதான் சங்கத் தமிழ் ரங்கத் தமிழாகித் திருவோலக்கம் வீற்று இன்றும் இனியும் விண்ணும் ஆண்டு நிற்கிறது மண்ணூடே.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடி
சொல்லிக் கொடுத்த நெறிப்படி
சங்கத் தமிழ்ச் சங்கமத்தில்
சாத்வத நூல் சையோகத்தில்
வேதாந்தம் விளையுதம்மா
விண்ணும் இங்கே தெரியுதம்மா
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ !

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

***

Tuesday, December 01, 2009

Friday, October 16, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 4 (உய்யக்கொண்டார்)

கூரத்தாழ்வானின் ஆசாரிய பரம்பரையில் திருமால், திருமகள், சேனைமுதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள் ஆகியோரின் வாழித் திருநாமங்களை இதுவரை பார்த்திருக்கிறோம். இன்று நாதமுனிகளின் சீடரான உய்யக்கொண்டாரின் திருநாமத்தைப் பார்க்கிறோம்.

"இரவி. உய்யக்கொண்டாரைப் பற்றி எழுதலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர் பெயர் மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது. அவரைப் பற்றி சொல்லுங்களேன்"

"குமரன். இது அறிவினா தானே? என்னைச் சோதித்துப் பார்க்கிறீர்களா?"

"இல்லை இரவி. உண்மையாகவே தான் சொல்கிறேன். உய்யக்கொண்டார் நாதமுனிகளின் சீடர் என்று மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது"

"சரி. நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்று நம்பி அவரைப் பற்றி சொல்கிறேன்.

உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர். திருவெள்ளறையில் பிறந்தவர். இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886.

சிறுவயதில் தந்தையாரிடம் வேத வேதாந்தங்களைக் கற்றவர். திருவெள்ளறையில் இருக்கும் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் தொண்டு புரிந்தவர்கள் இவர் குடும்பத்தவர்கள். தகுந்த வயதில் இவரை மேலும் கல்வி கற்க நாதமுனிகளிடம் அனுப்பினார்கள் இவரின் பெற்றோர்கள்"

"இவர் இயற்பெயர் புண்டரீகாக்ஷர் என்றால் உய்யக்கொண்டார் என்ற பெயர் எப்படி வந்தது?"

"அதுவா? உலகத்து மக்களின் மேல் இவருக்கு இருக்கும் அன்பைக் கண்டு நாதமுனிகள் வைத்த பெயர் அது!"

**

"அடியேன்".

"வாரும் பிள்ளாய். நலமாய் உள்ளீரா?"

"தேவரீரின் திருவருட் பெருமையால் அடியேன் அன்பனாய் உள்ளேன்".

"தாமரைக்கண்ணரே. நீரும் குருகைக்காவலப்பனும் எனது முதன்மைச் சீடர்கள். என்னிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றன. பக்தியோகத்தால் ஒருவர் தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்; ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரப் பனுவலால் ஒருவர் தன்னையும் மற்றவரையும் கடைத்தேற்றிக் கொள்ளலாம். உமக்கு யோக இரகசியம் வேண்டுமா? நாலாயிரப் பனுவல் வேண்டுமா?"

"ஐயனே. பிணம் கிடப்பார் வீட்டில் மணம் உண்டோ? உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவன் திருவடி நினையாமல் செத்துக் கொண்டிருக்கும் போது ஒற்றை உயிர் இறைவன் திருவடிகளை அடைவதில் என்ன பயன்? அடியேனுக்கு தேவரீர் அருளிச் செயல்களையே அருளிச்செய்ய வேண்டும்"

"ஆகா. புண்டரீகாட்சரே! உலகம் உய்யக்கொண்டீரே! உம் விருப்பம் போலவே நாலாயிரப் பனுவல்களையும் சொல்லித் தருகிறேன்"

**
"இரவி. இவருடைய வாழித் திருநாமத்தைப் படித்துப் பார்த்தேன். அதில் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு என்று வருகிறது. திருப்பாவையை ஐயைந்தும் ஐந்தும் என்றும் நாச்சியார் திருமொழியை ஒரு நூற்று நாற்பத்தி மூன்று என்றும் சொல்வது போல் இவர் இயற்றிய பாடல்களைச் சொல்கிறார்களா?"

"குமரன். இவர் நூலெதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. திருப்பாவைக்குத் தனியன் எழுதியவர் இவர்."

"எந்த தனியன் இரவி?"

"அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


படிச்சிருப்பீங்களே! இந்தத் தனியனும்

சூடிக் கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு


இந்தத் தனியனும் இவர் எழுதியது."

"ஆமாம். இந்தத் தனியன்கள் தெரியும். ரொம்ப எளிமையான தனியன்கள். இவர் இந்தத் தனியன்கள் மட்டுமே எழுதினார் என்றால் வாழித் திருநாமத்தில் வரும் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு எல்லாம் என்ன?"

"ரொம்ப விளக்கமாக சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் குமரன். மூன்று மறைப்பொருட்களான ரகஸ்ய த்ரயம் தான் அவை"

"இரகசியத் திரயமா? ஓஓ. இரகசியத் திரயமா? சரி தான். இப்போது புரிகிறது.

நாலிரண்டு எட்டு - எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய. நான் உன்னையன்றி இலேன். நீ என்னையன்றி இலாய். சரி தான்.

ஐயைந்து இருபத்தியைந்து - இரு வரிகளில் இருபத்தியைந்து எழுத்துகளில் வரும் துவய மந்திரம்.

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:


திருமகள் நாதன் திருவடிகளை சரணாக நான் அடைகிறேன். திருமகள் கேள்வனுக்கே உரியவன் எனக்குரியேன் அல்லன்.

நாலெட்டு முப்பத்தியெட்டு - முப்பத்தியெட்டு எழுத்துகளில் வரும் கீதைச் சுலோகமான சரம சுலோகம்.

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:


எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்.

அருமை. இம்மூன்றையும் அடுத்த தலைமுறைக்குப் பொருளுடன் கொண்டு சென்றவர் என்பதால் இவரை இப்படி போற்றுகின்றதா வாழித்திருநாமம்"

**
வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையத்தில் வாழியே


இளஞ்சூரியன் அழகு மிகுந்தவன். இருளை நீக்கி வண்ண ஓவியங்களை வானமெங்கும் பூமியெங்கும் அவன் ஒளி எழுதும். அவன் ஒளி கண்களைக் கூசாது. அப்படிப் பட்ட இளம்பரிதியின் வடிவழகை வெல்லும் அழகைப் பெற்றுள்ளவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!

பரசுராமன், இராமன், பலராமன் என்று முன்பு திருமாலின் வடிவாய் வந்த மூன்று இராமர்களைப் போல் நான்காவது இராமனாய் வந்த இராமமிச்ரரான மணக்கால் நம்பி தன் குருவாகக் கொண்டு தொண்டு செய்யும் மலர்களைப் போன்ற திருப்பாதங்களை உடையவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!

நற்குணங்களும் நன்னடத்தையும் நல்லெண்ணங்களும் உடைய நாதமுனிகள் என்னும் ஆசாரியரின் பெருமைகளை எப்போதும் உரைத்துக் கொண்டிருப்பவர் வாழ்க வாழ்க!

சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரப் பெருநாளில் உலகம் சிறக்க பிறந்தவர் வாழ்க வாழ்க!

நாலிரண்டான எட்டெழுத்து மந்திரத்தின் பொருளையும் ஐயைந்தான துவய மந்திரத்தின் பொருளையும் நமக்கு உரைத்தவர் வாழ்க வாழ்க!

நாலெட்டான சரம சுலோகத்தின் உட்பொருளை தன் வாழ்க்கையில் நடத்திக் காண்பித்தவர் வாழ்க வாழ்க!

திருமாலவன் திருவரங்கன் அழகிய மணவாளன் திருப்பெயர்களையும் திருப்புகழ்களையும் எப்போதும் சொல்லுபவர் வாழ்க வாழ்க!

உலகம் உய்யக் கொண்டவரின் திருவடிகள் இந்த வையகத்தில் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க!

Sunday, October 04, 2009

புல்லாகிப் பூண்டாகி - இராதாமோகன் விமரிசனம்

சில மாதங்களுக்கு முன்னர் எழுதிய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்துவிட்டு நண்பர் இராதாமோகன் எழுதியிருக்கும் விமரிசனம் இங்கே:

***

குமரன்,

கதையைப் படிச்சோமா, ரசிச்சோமா, அடுத்தக் கதைக்கு போனோமான்னு இருக்கற
பேர்விழியிடம் விமர்சனம் எழுதச் சொன்னால்...நான் என்ன எழுதுவது என்று
புரிபடாமல் முன்பே பிறர் கொடுத்துள்ள விமர்சனங்களை படித்துப் பார்த்தேன்.
புதிதாக சொல்ல இனி என்ன இருக்க போகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும்
என் கிரிதாரியின் துணையுடன் முயற்சி செய்கிறேன். :)

முதலாவதாக, கதைக் கரு, பின்னர் எழுத்து நடை, பின்னர் கதையில்
ஆங்காங்கே தென்படும் தத்துவங்கள் என்ற வரிசையில் எனது கருத்துகளை தெரிவிக்கிறேன்.

**********

கதைக் கருவைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், "கண்ணன் காலடி பட்டு கல் உயிர்
பெற்றது; பிறவிச் சுழலில் அகப்பட்டது" என்பது ஒரு சுவாரஸ்யமான கற்பனை.
பிறவிச் சங்கிலியை அறுக்கும் திருவடி பிறவியைத் தந்தது... இறைவனின் லீலா
வினோதங்களில் எது தான் சாத்தியமில்லை என்ற நோக்கில் இந்தப் புதிய
சிந்தனை ரசிக்கும்படி உள்ளது. புதிது என்றாலும் யாரையும் புண்படுத்தும்
அபாயம் இல்லாத சிந்தனை என்றே நினைக்கிறேன். தொடரின் முடிவில் எனக்கு
புதுமைப் பித்தனின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது. "சாப விமோசனம்" என்ற
அந்தக் கதையில், இலங்கை யுத்தம் எல்லாம் முடிந்து சீதா-ராமர் அயோத்தி
நகர் திரும்பும் வழியில், கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வருகை புரிவர்.
அங்கே அகலிகை சீதையுடன் உரையாடுவதாக ஒரு காட்சி வரும்.
சீதையை ராமன் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான் என்பதை அகலிகையால்
தாங்கவே முடியாது. மன அதிர்ச்சியில் அகலிகை மீண்டும் கல்லாகச் சமைந்தாள்
என்று வரும். இக்கதை அந்த நாட்களில் நிறைய சர்ச்சையை எழுப்பியதாக
சொல்வர்.

(அந்தக் கல் தான் மீண்டும் இங்கு கண்ணன் காலடிப்பட்டு புனர்ஜென்மம்
எடுத்ததோ என்னவோ. :))

கதையின் ஆரம்பத்தில் எல்லா சராசரி மனிதர்களையும் போல அற்ப விஷயங்களுக்கு
பொறாமைப் படுதல், டம்பம் அடித்துக் கொள்ள விரும்புதல் போன்ற நல்ல
குணங்களுடன் கதாநாயகன் கந்தன் அறிமுகமாகிறான். அதே கந்தன் முந்தைய
பிறவிகளில் இறைவன் ஒருவனையே நினைத்துக் கொண்டிருக்கும் நரசிம்மதாசனாக
இருந்தான் என்று பின்னர் தெரிய வருகிறது. இதைப் படிக்கும் பொழுது, இன்றைய
சராசரிகள் அனைவரும் நமது தெய்வீகத் தன்மையை மறந்து விட்ட கந்தனை போலத்
தான் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. "நீ தெய்வீகமானவன் !" என்ற
விவேகானந்தரின் கூற்றை உங்கள் கதை நினைவூட்டுகிறது.

(நீங்க உடனே உங்களை விவேகானந்தராகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். :))

**********

அடுத்ததாக எழுத்து நடை பற்றி...சம்பாஷணை மூலம் கருத்துகளைத் தெரிவித்தல்,
மூன்றாம் நபராக இருந்து பாத்திரங்களை அறிமுகம் செய்வது, பாத்திரங்களின்
நினைவுகள் வாயிலாக பாத்திரத்தினுள் வாசகனை நுழைப்பது போன்ற கதை எழுதும்
யுக்திகள் எல்லாம் சிறப்பாகவே தென்படுவதால் இது உங்களது முதல் படைப்பு
என்பதை நம்பக் கடினமாக உள்ளது.

எல்லா பின்னூட்டங்களையும் படித்துப் பார்த்த பொழுது, தொடரின் ஆரம்பம்
மட்டும் சிலருக்கு ஒரு தொய்வினை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
உங்களுக்கு உரையாடல் மூலமாக கதை சொல்வது என்பது அருமையாக வருகிறது. இதனை
நீங்கள் ஆரம்ப அத்தியாயங்களில் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்
என்று நினைக்கிறேன். திருவண்ணாமலை சம்பந்தமாக நிறைய உழைப்புடன், நிறையவே
பொறுமையுடன் நீங்கள் சொல்லிய கதைப் பாங்கில் ஆங்காங்கே வசனங்கள்
இருந்தாலும், அவை தொடர்ச்சியாக, பெரிய பெரிய பத்திகளில் வந்தது ஒரு
கட்டுரை படிக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருக்கலாம்.

அன்னமாசார்யர் கீர்த்தனை, முகுந்தமாலா ஸ்லோகம், திருவெம்பாவை
பாடல்கள்...என்று ஆங்காங்கே மஹான்களின் பனுவல்களை தூவியிருந்தது அருமை.
ஒரு குறுந்தொடர் கதையில் இது போல படித்தது இதுவே முதல் முறை.
இந்த நடை கல்கியின் நடையை நினைவூட்டியது. (பொன்னியின் செல்வனில்,
பதிகங்களையும் பாசுரங்களையும் கதாப் பாத்திரங்கள் வாயிலாக கதையினூடே
அழகாக கோர்த்திருப்பார்.)

பின்னூட்டங்களைப் படித்தபோது, "பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன
நாவே என்ற வரிகள் வரும் போது கந்தனை உறக்கம் தழுவியது." என்று முடித்தப்
பின்னர், அடுத்த அத்தியாயத்தில் பாண்டவ தூது ஒரு கனவு என்பதை வாசகர்கள்
யூகிக்க முடியாமல் போனது அதிசயமாக உள்ளது.

(இங்கே அதிசயம் சம்பந்தமாக ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் எழுத்துகளில்
ஆச்சர்யக் குறியை(!) எங்கும் பயன்படுத்துவதில்லை என்று விதி
வைத்திருக்கிறீர்களா?! :)) "இனியும் இங்கிருக்க எனக்கு விருப்பமில்லை.
இறைவா. என் வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாய்." என்று அடுத்த
அத்தியாயத்தில் முடித்து, அதற்குப் பின்னர் மரமாகப் பிறவி எடுத்தத்
தொடர்ச்சியை, புத்தக வடிவில் இருந்தால் எளிதாக யூகித்திருப்பார்கள் என
நினைக்கிறேன்.

என்றாலும் உங்கள் எழுத்து நடை ஆங்காங்கே சில குழப்பங்களையும்
ஏற்படுத்தியது என்பதையும் சொல்லிவிடுகிறேன். உதாரணமாக, நரசிம்மதாசனின்
அறிமுகம் முடிந்து, அடுத்தப் பத்தியில், "இவன் பிறந்து ஐந்து
வருடங்களுக்குப் பின்னர் நவத்வீபத்தில் ஒரு பெரும் ஜோதி தோன்றியது."
என்று படித்தபோது, இன்னமும் நரசிம்மதாசனைப் பற்றியே சொல்கிறீர்கள் என்று
தான் நினைத்திருந்தேன். இடையில் வந்தப் படம் "இது தான் நரசிம்மதாசனின்
படம் போல" என்று என்னை நினைக்கத் தூண்டியது. அடுத்த வரியைப் படித்தபோது
சுதாரித்துக் கொண்டேன். :)

படங்களைப் பற்றி எல்லோரும் சொல்லி விட்டனர். கண்ணன் துரியோதனன்
மாளிகைக்குச் செல்ல மறுத்து, விதுரர் வீட்டிற்குச் சென்றான் என்ற
இடத்தில், பக்தியை உயர்த்தும் தராசு படம், மாதுர்ய பக்தியே இருக்கும்
எல்லா பக்தி முறைகளிலும் மிக மிகச் சிறந்தது என்று சொல்லுமிடத்து
ராதா-கிருஷ்ணன் ஊஞ்சலாடும் படம், ஒன்பது கலவைகளுடன் போகர் படம் என்று
நிறைய இடங்களில் படங்களின் தேர்வுகள் அருமை.

**********

அடுத்ததாக தத்துவங்கள்..."மாதுர்ய பக்தியே இருக்கும் எல்லா பக்தி
முறைகளிலும் மிக மிகச் சிறந்தது" என்பதை படித்தபோது இவ்விடத்தில் இங்கு
சைதன்யருக்கு பதிலாக ஒரு பெரியாழ்வார் அல்லது ஒரு அப்பர் பெருமான்
இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. :)

பின்னர், அடுத்த அத்தியாயத்தில், ஜகன்மோகனுக்கு பஞ்ச கோசங்கள் பற்றிய
உணர்வு ஏற்பட்டது என்று மட்டுமே சொல்லி, அதற்கு அப்பால் உள்ளப் பொருளைப்
பற்றிய உணர்வு ஏற்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
என்று எண்ணினேன். பின்னர் ஜகன்மோகன்,"இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த
பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன்." என்று படித்தபோது அதன்
காரணம் புரிந்தது. (இவ்விடத்தில், நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றவரும்
கூட அதனை நழுவ விடாமல் சஹஜ சமாதியில் நிலைக்க முயற்சிக்க வேண்டும் என்ற
ரமணர் வாக்கு நினைவிற்கு வந்தது. அது தொடர்பாக எல்லாம் மேலும் யோசியாமல்
கதையினை தொடர்ந்து படித்து முடித்தேன்.)

"அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை
முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும்
ஆவலும் நீங்கும்." என்பதை படித்தபோது, "ஆசை அனுபவித்தெல்லாம் தீருமா?"
என்ற எண்ணம் எழுந்ததையும், அதனைத் தொடர்ந்து, பாகவதத்தில் யயாதியின்
சரித்திரம், கீதை வாக்கியங்கள் என்று நிறைய எண்ணங்கள் எழுந்ததையும்
தவிர்க்க முடியவில்லை. "ஆசையை அனுபவித்து ஆவல் நீங்குவது என்பது எரிகிற
அக்னியை அணைக்க அதில் நெய்யை விடுவது போல" என்றபடியெல்லாம் எங்கோ படித்த
நினைவு....

அந்த வரியைத் தொடர்ந்து, "மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள்
நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து
பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும்."
என்பதையும் படித்தப் பொழுது மேலும் பல எண்ணங்கள் எழுந்தன...

நன்றாகக் கனிந்த பழம் தானே விடுபட்டு கீழே விழும் என்று பெரியோர்
சொல்கிறார்கள். இரண்டு வழிகளுமே "விட்டுவிடுதல்" என்ற ஒரு வழியில்
சேர்வது போன்ற ப்ரமை ஏற்படுகிறது. :)

"கள்ளம் கபடம் இல்லாத இந்த மக்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம்
குதூகலிக்கிறது." , "அடியார் முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும்."
போன்ற வசனங்கள் அருமை.
இரண்டாவதைப் படித்தபோது, "There are two signs of a person who has
attained spiritual knowledge. First, he has no pride; second, he
develops a serene attitude." என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி
நினைவிற்கு வந்தது.

இது போன்ற நிறைய வசனங்கள்; கந்தன் மூலமாக நாத்திக வசனங்களும் ரசிக்கும்படி இருந்தன.

**********

கடைசியாக ஒரு (அடாவடித்தனமான) இலவச விமர்சனம்:
முதல் அத்தியாயம் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை கண்ணன் வாசம் வீசுகிறது.:)
முதலில் கேசவனாக கண்ணன் உள்ளே நுழைகிறான். நான் சொல்லலை குமரன்.
"கேசவன் மட்டும் ஒவ்வொரு பிறவியிலயும் உன்னோடவே வர்றவன்"னு தாத்தா
சொல்கிற இடத்தில் ஒரு படம் போட்டு உள்ளீர்களே...அது சொல்கிறது. :)
கடைசியில் கல்யாணப் பத்திரிக்கையில் கண்ணன். :)
எடுக்கின்ற பிறவிகள் எல்லாம் கண்ணனுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
குளிர்ச்சிக்கே பெயர் பெற்ற வேப்ப மரம், அல்லது ஒரு மாமரம், அல்லது ஒரு
பெரிய ஆலமரம் என்றெல்லாம் இல்லாமல் கண்ணன் கடம்பேறி காளிங்க மடுவில்
குதித்தான் என்பதனால் கடம்ப மரமாக பிறவி ஏற்பட்டதோ? :)
பறவை என்றால் ஒரு குயில், முருகனின் ஒரு மயில், இல்லை மீனாக்ஷி கையில்
உள்ள ஒரு பச்சைக் கிளி என்றெல்லாம் இல்லாமல், அது எப்படி கருடனாக ஒரு
பிறவி? (ஒ ! கண்ணன் பாரிஜாத மரத்தை துவாரகாவிற்கு கொண்டு வர கருடன்
மீதேறி தானே இந்தரலோகம் சென்றான் !! :))

அட! இதெல்லாம் போகட்டும். ஒன்பது வகை பக்தி பற்றி பாகவதம் சொல்கிறது
என்று சொல்லி, அடைப்புக் குறிக்குள் கண்ணனை அழகாக நுழைத்து விட்டீர்கள்.
:) பொதுவாக இறைவன், பகவான், பரம்பொருள் என்று சொல்லாமல்...எப்படி கண்ணன்
அங்கே வந்தான் என்றால்...சட்டியிலே இருக்கறது தானே அகப்பையில் வரும். :))

**********

விமர்சனம் முற்றும். ராதே கிருஷ்ணா !!
~
ராதா

Friday, September 25, 2009

வெக்கை தணிய வீசு!

"ஐயா. நான் உங்கள் அடிமை. உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். கட்டளை இடவேண்டும்".

தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி காதில் விழும்? உறங்குவான் போல் யோகு செய்கிறான் என்று என்ன தான் மற்றவர்கள் சொன்னாலும் உண்மையில் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தானே இந்த நெடியவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்?

வந்தவர் மீண்டும் உரத்தக் குரலில் கூவுகிறார்.

"ஐயா. நான் உங்கள் அடிமை. என்ன சேவை அடியேன் செய்யலாம் என்று கட்டளை இடவேண்டும்".

திடுக்கிட்டு எழுந்தார் நெடியவர். யாரது உரக்கக் கூவி என் உறக்கத்தைக் கலைத்தது என்பது போல் மெதுவாகத் தலையைத் திருப்பி வந்தவரைப் பார்த்தார். வந்தவர் யார் என்று தெரிந்தது.

"வாருமையா. எங்கே இவ்வளவு தூரம்?"

"ஐயா. அடியேன் தொண்டை மண்டலத்துக்காரன். உங்கள் அடிமை. உங்களிடம் அடிமைச் சேவை செய்யலாம் என்று வந்தேன்".

"என்ன தொழில் தெரியும்?"

"என்ன வேலை வேண்டுமானாலும் செய்வேன் ஐயா"

"இது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்?"

"விசிறி வீசிக் கொண்டிருந்தேன் ஐயா".

"விசிறி வீசினீரா? அது இங்கே வேண்டாமே! ஏற்கனவே இரு ஆற்றின் இடையில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கே எப்போதும் குளிர்ந்த காற்று வீசுகின்றது. அதனால் தான் அந்த சுகத்தில் நீர் வந்த போது நன்கு உறங்கிவிட்டேன். ம்ம். உம்மை யாரிடம் அனுப்புவது?

சரி. என்னைப் போல் ஒருவன் வடவெல்லையில் நிற்கிறான். அவனிடம் செல்லும். அவன் உம் பணியை ஏற்றுக் கொள்வான்"

"அப்படியே செய்கிறேன் ஐயா"

***

"வாரும் ஐயா. வந்த நோக்கம் என்னவோ?"

"ஐயனே. நான் உங்கள் அடிமை. உங்களிடம் சென்று பணி செய்யுமாறு ஆற்றங்கரை ஐயன் பணித்தார்."

"ஓ. கிடந்தான் அனுப்பினானோ?! சரி தான். என்ன பணி தெரியும்?"

"இட்ட பணி ஏதெனினும் செய்வேன் ஐயா. இது வரை விசிறும் பணி செய்துள்ளேன்"

"விசிறும் பணியா? சரி தான் போம். இங்கே மலை மேலே குளிர் தாங்க முடியவில்லை. உட்கார்ந்தால் குளிருகிறது. உறங்கினால் குளிருகிறது. அதனால் நானே என் மனைவியின் சேலையைப் போர்த்திக் கொண்டு நின்று கொண்டே இருக்கிறேன். இங்கே விசிறுவதற்கா வந்தீர்?

தொண்டை நாட்டிலே என்னைப் போல் ஒருவன் நின்று கொண்டே இருக்கிறான். ஆனால் குளிரினால் அன்று; வெம்மை தாங்க முடியாமல். அங்கே சென்று உம் பணியைச் செய்வீர். மிகப் பொருத்தமாக இருக்கும்"

"அப்படியே செய்கிறேன் ஐயனே".

***

'பெரிய மலை மேல் இருந்தால் குளிரும் என்பதால் இந்த ஐயன் சிறிய மலை மேல் நிற்கிறார் போலும். யானை மேல் அம்பாரியில் நிற்பது போல் தான் இவர் நிற்கிறார். இவராவது நம் பணியை ஏற்கிறாரா இல்லையோ?'

"ஐயனே. உங்களை நம்பி இந்த நம்பி வந்திருக்கிறேன். உங்கள் அடிமை. என் பணி ஏற்றுக் கொள்ள வேண்டும்"

"உம்மை அனுப்பியது யார் நம்பி?"

"ஆற்றங்கரை ஐயன் மலை குனிய நின்ற ஐயனிடம் அனுப்ப அவர் இங்கே என்னை அனுப்பினார் ஐயா"

"ஓ. நின்றானும் கிடந்தானும் அனுப்பினார்களோ? என்ன பணி செய்வீர் நீர்?"

"எப்பணியும் செய்வேன் ஐயனே. ஆலவட்டம் வீசுவது என் சிறப்பு"

"ஆகா. பொருத்தமான ஆளைத் தான் அனுப்பியிருக்கிறார்கள் இருவரும். இங்கே யாக குண்டத்தின் வெம்மை தாங்க முடியவில்லை. இப்போதே உம் ஆலவட்டப் பணியைத் தொடங்குங்கள்"

"அப்படியே ஐயனே. இதோ தொடங்கினேன்"

இப்படி திருவாலவட்டத் திருப்பணியெனும் விசிறி வீசும் பணியைச் செய்து செய்து இந்த அருளாளனிடம் எப்போதும் பேசிக் கொண்டே இருந்தார் இந்த நம்பி. இவரை நம்பி இவர் அடி பணிந்த இளையாழ்வாரின் ஆறு கேள்விகளுக்கு அருளாளனிடம் பதில் வாங்கியும் தந்தார். உலகம் உய்ய அந்த உடையவருக்கு இவர் காட்டிய வழி நம் எல்லோருக்கும் காட்டிய வழி.

திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்.

Tuesday, September 22, 2009

பத்துப்பாட்டை மீட்டுத் தந்த நம்மாழ்வார்

என்னடா பந்தல்ல இருந்து டகால்டி வேலையெல்லாம் கூடலுக்கு வந்துடுச்சு போலிருக்கேன்னு இந்த இடுகையோட தலைப்பைப் படிச்சுட்டு நினைக்கிறீங்களா? :-) நான் டகால்டி எல்லாம் பண்ணலைங்க. தமிழ் தாத்தாவுக்கு எப்படி பத்துப்பாட்டு ஓலைச்சுவடியெல்லாம் கிடைச்சதுன்னு அவரே சொல்றதைப் படிச்சுப் பாருங்க. அப்புறம் நான் சொல்றது சரியா தப்பான்னு சொல்லலாம். :-)

***

சீவகசிந்தாமணியை நான் முதன் முதலில் ஆராய்ந்து பதிப்பித்து வருகையில் (1887-இல்)அதில் உள்ள மேற்கோள்கள் இன்ன இன்ன நூலிலுள்ளனவென்று கவனித்தேன்.அப்பொழுது பல பழைய தமிழ் நூல்களைப் பற்றி அறிந்தேன்.பத்துப்பாட்டென்று ஒரு தொகை நூல் உண்டென்பதும் அது திருமுருகாற்றுப்படை முதலிய பத்துத் தனி நூல்களை உடையதெனபதும் நாளடைவில் தெரிய வந்தன.அதனால் பத்துப்பாட்டைத் தேடிப் பெற்று ஆராயவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று.பல நண்பர்களுடைய உதவியினால் பத்துப்பாட்டின் பிரதிகள் சில கிடைத்தன.ஆனாலும் அவற்றில் பத்துப்பாட்டுகளும் இல்லை.இருந்த பாடல்களுக்கும் தனியே மூலம் இல்லாமல் உரை மட்டும் உள்ளனவாகவும் ,இடையிடையே இறைந்தனவாகவும் இருந்தன. உள்ள பகுதிகள் திருத்தமாக இல்லை ஆகையால் மேலும் மேலும் பத்துப்பாட்டுப் பிரதிகளைத் தேடிவந்தேன்.

யான் கும்பகோணம் காலேஜில் வேலைபார்த்து வந்த அக்காலத்தில் விடுமுறைகளில் வெளியூருக்கு இதன் பொருட்டுப் பிரயாணம் செய்து வருவதுண்டு.

ஒரு சமயம் ஆவணியவிட்டத்தோடு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை கிடைத்தது.திருநெல்வேலிப் பக்கத்தில் பரம்பரை வித்துவான்களுடைய வீடுகளில் தேடினால் சுத்தமான பிரதிகள் கிடைக்குமென்று எண்ணியிருந்தேன்.ஆதலில் அவ்விடுமுறையில் திருநெல்வேலிக்கும் ஆழ்வார் திருநகரி முதலிய ஊர்களுக்கும் சென்றுவர நிச்சயித்து அங்கேயுள்ள சில அன்பர்களுக்கு நான் வருவதை எழுதியிருந்தேன்.இதனை என தந்தையாரிடம் தெரிவித்த போது அவர்,சிராவணத்திற்கு இங்கே இராமல் வெளியூருக்குப் போக வேண்டாம் .அடுத்த விடுமுறையில் பார்த்துக் கொள்ளலாம் என்று எனது எண்ணத்திற்குத் தடையை உண்டாக்கினார்.நான் போகவேண்டிய அவசியத்தைச் சொன்னேன்.அவர் சிறிதேனும் இணங்காமல் போகக்கூடாதென்று தடுத்தனர்.சிராவணத்தைக் காட்டிலும் பத்துப்பாட்டு எனக்குப் பெரிதாக இருந்தமையால் மிகவும் சிரமப்பட்டு அவரிடம் தக்க சமாதானம் கூறி விடைபெற்றுப் புறப்பட்டேன்.

இரவு எட்டு மணி,ரெயில்வே ஸ்டேசனுக்கு ஒற்றை மாட்டுவண்டியொன்று பேசிக்கொண்டு ஏறினேன்.என் தந்தையார் அரைமனத்தோடு விடைகொடுத்து அனுப்பினார்.ஒரு தகரப்பெட்டி மட்டும் உடன் வந்த்து.வண்டி வாணாதுறை என்னும் இடத்துக்குத் தென்பாற் செல்லும் போது
எதன்மேலோ மோதிக் குடைசாய்ந்து விட்டது.நான் கீழே விழுந்தேன்;மேலே என் பெட்டி விழுந்தது.இந்த நிலையிலும் எனக்கு ஊக்க குறைவு உண்டாகவில்லை .என் மனம் முழுதும் திருநெல்வேலியில் இருந்த்து.ஏதாவது ககன குளிகையை ஒரு மகான் கொடுத்து,இதை மிகவும் அவசரமான சமயத்தில் அதை உபயோகித்திருப்பேன்.என் மனவேகத்துக்கு நேர்மாறாக வண்டியின் வேகம் இருந்ததோடு இடையில் வழியில் கீழேயும் வீழ்த்திவிட்டது.

திரும்பி வீட்டுக்குப் போய் இருந்து மறுநாள் புறப்படலாமென்னு முதலில் எண்ணினேன்;முன்பே எனது பிரயாணத்தைத் தடுத்த என் தந்தையாருக்கு வண்டி குடைசாய்ந்த அபசகுணமும் துணைசெய்து பின்னும் என் பிரயாணத்தைத் தடுக்க ஏதுவாகுமென்று நினைத்து அங்கனம் செய்வது தக்கதன்றென்று பின்பு துணிந்தேன்.ஆதலால் உடனே வண்டிக்காரனுக்குரிய சத்தம் முழுவதையும் கொடுத்துவிட்டுப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனை நோக்கி நடந்தேன்.நல்லவேளையாக நான் உத்தேசித்துச் சென்ற புகைவண்டி கிடைத்தது ஏறிச்சென்றேன.
தஞ்சாவூருக்கு அப்பால் வரும்போது நடுவழியில் ஒரு காட்டில் வந்து வண்டி திடீரென்று நின்றது.ரெயில்வே அதிகாரிகள் பலர் வந்து நான் இருந்த வண்டியைக் கீழும் மேலும் பார்த்தார்கள்.தூக்க மயக்கத்தோடு இருந்த என்னைக் கீழே இறங்கி வேறு வண்டிக்குப் போகும்படி அதட்டிச் சொன்னார்கள்.நான் இருந்த வண்டிக்கு முன்னே இருந்த வண்டியில் தீப்பிடித்து விட்டதாம்.அதனால் இரண்டு வண்டிகளையும் கழற்றி விட அவர்கள் எண்ணினார்கள்.நான் ஈசுவரத்தியானம் செய்துகொண்டு வேறு வண்டியிற் போய் ஏறினேன்.புறப்பட்டது முதல் உண்டான இந்த இடையூறுகளால் மனதுக்குள் சிறிது சஞ்சலம் உண்டாயிற்று.எனக்கு இருந்த ஊக்கமிகுதியாற் பிறகு அது நீங்கிற்று.

மறுநாட் காலையில் சௌக்கியமாக நான் திருநெல்வேலியை அடைந்தேன்.அங்கே அக்காலத்தில் கனகசபை முதலியாரென்று கனவான் ஒருவர் ஸப்ஜட்ஜாக இருந்து பிறகு அங்கிருந்து திருநெல்வேலிக்குப் போனார்.தஞ்சாவூரில் இருந்த காரலத்தில் அவர் எனக்குப் பழக்கமானார்.அப்பொழுது ஒருமுறை என்னுடைய நண்பர் கே.சுந்தர்ராமையரவர்கள் மூலம்,தாம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும்,அங்கே வடுகள் தேடும் விஷயத்தில் தம்மால் இயன்ற உபகாரம் செய்வதாகவும் சொல்லியனுப்பியதுண்டு.அது நினைவில் இருந்தமையாலும் நான் புறப்படுவதற்கு முன் அவருக்கு எழுதியிருந்தமையாலும்,திருநெல்வேலியில் அவர இருப்பிடத்தை விசாரித்துக் கொண்டு அவரிடம் சென்றேன்.என்னை அவர் கண்டவுடன் எனது க்ஷேம சமாசாரத்தைக் கூட விசாரிக்காமல் உங்களுக்கு இப்போதுதான் ஒரு கடிதம் எழுதித் தபாலுக்கு அனுப்ப இருந்தேன் ; உங்களிடம் சொல்லவேண்டியவற்றை இந்தக் கடித்தத்தில் எழுதியிருக்கின்றேன் என்று சொல்லி ஒரு கடிதத்தை நீட்டினார்.அது விலாச மெழுதித் தபால் தலையும் ஒட்டப்பெற்று அனுப்பத் தக்க நிலையில் இருந்தது.அதனை நான் பிரித்துப் பார்த்தேன்.அதிலிருந்து செய்திகளின் கருத்து வருமாறு.

நான் தங்களுக்கு வாக்களித்தபடி ஏட்டுச் சுவடிகள் விஷயத்தில் உதவி செய்ய இயலாதவனாக இருக்கின்றேன்.இளமை முதற்கொண்டு என்னுடைய நண்பராயுள்ள ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சில ஏட்டுச் சுவடிக்ள வேண்டுமென்று எழுதியிருந்தார்கள்.நான் தேடித் தருவதாக அவர்களுக்கு வாக்களித்திருக்கிறேன்.தங்களுக்கு வேண்டியனவாகச் சொன்ன புஸ்தகத்தையே அவர்களும் கேட்டிருக்கிறார்கள்.அதனால் தங்களுக்கு உதவி செய்ய இயலாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இப்பக்கங்களில் வந்து தேடிச் சிரமப் படவேண்டாம்.

இதைப் படித்துப் பார்த்தேன் ;முதலியாரை நோக்கி மெத்த ஸந்தோஷம்.நீங்கள் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தமையால் உங்களைத் தேடி வந்தேன்.தங்களுக்கு என்னைப் பற்றி கவலை வேண்டாம்,இந்தப் பக்கங்களில் எனக்குப் பழக்கமுள்ள பிரபுக்களும்,வித்துவான்களும் இருக்கின்றார்கள்.அவர்கள் மிக்க அன்போடு எனக்கு உதவி செய்வார்கள்.ஆதலால் நான் போய் வருகிறேன் என்றேன்.

நான் மிக வருத்தப்படுவேனென்று முதலியார் நினைத்திருப்பார் போலும் எனக்கு விடை அவருடைய முகத்தில் ஒரு வியப்புக்குறிப்பை உண்டாக்கிற்று;அப்படியா உங்களுக்கு யார் யார் நண்பருகள்? எந்த எந்த ஊருக்குப் போகப் போகின்றீர்கள்? என்று அவர் கேட்டார்.

நான் இந்த பக்கத்திலே பெரிய கனவான்கள் பலருடைய ஆதரவு எனக்குக் கிடைக்கும்.பல ஜமீன்தார்களுடைய பழக்கம் என்க்கு உண்டு.ஆழ்வார் திருநகரி ஸ்ரீ வைகுண்டம்,தென்திருப்போரை முதலிய இடங்களுக்கெல்லாம் போய்த் தேட எண்ணியிருக்கின்றேன். என்று சொல்லிவிட்டு மெய்யன்பர்களாகிய பல உத்தியோகஸ்தர்கள் பெயர்களையும் கனவான்கள் பெயர்களையும் சொன்னேன்.நான் குறிப்பிட்டவர்களெல்லாம் முதலியார் அதிகாரத்திற்குப் புறம்பானவர்கள்.

கேட்ட முதலியார் அப்படியானால் கிடைக்கும் புஸ்தகங்களில் எனக்கும் ஏதாவது கொடுத்தால் தாமோதரம் பிள்ளையவர்களுக்கு அனுப்புவேன் என்றார்.

நான் நகைத்துக் கொண்டே நானே பறந்து கொண்டு இருக்கின்றேன்.இந்த நிலைநில் உங்களுக்கு வேறு கொடுக்க வேண்டுமா? நீங்கள் பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்க்ள .உங்களுடைய செல்வாக்குக்கு எவ்வளவோ சுவடிகள் கிடைக்கலாம்.என்று சொல்லி விடைபெற்றுவிட்டு வந்துவிட்டேன்.

பிறகு கைலாசபுரத்தில் இருந்த வக்கீலும் ஜனோபகாரியுமாகிய அன்பர் ஸ்ரீ.ஏ.கிருஷ்ணசாமி ஐயரென்பவரது வீடு சென்றேன்.அவர் மிக அன்போடு எப்போது வந்தீர்கள் நீங்கள் வருவதை முன்பே தெரிவித்திருக்க கூடாதா? என்று சொல்லி உபசரித்து உணவு முதலிய சௌரியங்களைச் செய்வித்தார்.ஆழ்வார் திருநகரிக்குப் போய் அங்கேயுள்ள கவிராயர்கள் வீடுகளில் ஏடு தேடுவதற்கு வந்த என் கருத்தை அவரிடம் தெரிவித்தேன்.அவர் நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம்.என்னுடைய நண்பரும் வக்கீலுமாகிய சுப்பராய முதலியாரென்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கின்றார்.அவருக்கு ஒரு கடிதம் எழுதி தருகின்றேன்.உங்களுக்கு வேண்டிய அனுகூலங்கள் யெல்லாம் அவர் செய்து கொடுப்பார் என்று கூறினார்.பிறகு ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஒரு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து என்னை அனுப்பினார்.

அங்ஙனமே ஸ்ரீ வைகுண்டம் போய்ச் சேர்ந்து வக்கீல் சுப்புராய முதலியாரைக் கண்டேன்.அவர் மிக்க அன்போடு உபசரித்துப் பேசினார்.தம்மால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்வதாக வாக்களித்தார்.பிறகு அவருடன் அங்கிருந்து அருகிலுள்ள ஆழ்வார்கள் திருநகரிக்குச் சென்றேன்.நான் கடிதம் அனுப்பியிருந்த ஆழ்வார் திருநகரி அன்பர்கள் என் வரவை எதிர்பார்த்திருந்தனர்.அப்போது திருவாடுதுறை மடத்து அதிபர்களாக இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகவர்கள் அவ்வூர் மடத்திலுள்ள காரியஸ்தருக்கு என்னைக் கவனித்துக் கொள்ளும் படி உத்தரவு செய்திருந்தார்கள்.அவர்கள் யாவரும் முயன்று கவிராயர்கள் வீட்டிலுள்ள சுவடிகளையெல்லாம் தேடி எடுத்து நான் வந்தவுடன் பார்க்கத்தக்க சிலையில் வைத்திருந்தனர்.
நான் முதலில் லஷ்மண கவிராயரென்று ஒருவருடைய வீட்டிற்குப் போனேன். அவர் மிகவும் சிறந்த வித்துவானாகிய தீராத வினைதீர்த்த திருமேனி கவிராரென்பவருடைய பரம்ம்பரையினர்.அவர் வீட்டில் ஆயிரக்கனக்கான் சுவடிகள் இருந்தன. பல பழைய நூல்களும் ,இலக்கணங்களும் ,பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்த்து வந்தேன். நான் தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை.ஒரு சுவடியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஜாப்தா இருந்தது.அதிற் கண்டவற்றுள் பத்துப்பாட்டின் முதல் ஏழுபாடல்களுள்ள பிரதியின் பெயர் ஒன்று.ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் அனுகூலமான செய்தியொன்றையும் பெறாமல் தளர்ச்சியடைந்திருந்த என் மனத்தில் அப்பொழுது சிறிது ஊக்கம் பிறந்தது.அந்தச் சுவடிக் குவியல்களிலே பத்துப்பாட்டு அகப்படக் கூடுமென்றே நம்பினேன்.

மூன்று நாள்கள் ஆழ்வார் திருநகரியில் இருந்தேன் .வந்த முதல்நாள் ஆவணியவிட்டம்.ஸ்ரீ வைகுடண்டத்தில் இருந்த பள்ளிக்கூடப் பரிசோதகரும் என் நண்பருமாகிய சிவராமையரென்பவருடைய வீட்டில் தங்கியிருந்தேன்.ஒவ்வொருநாளும் லஷ்மண கவிராயர் வீட்டில் ஏடு பார்ப்பதும் இடையிலே சில சமயங்களில் தாயவலந்தீர்த்த கவிராயர் ,அமிர்த கவிராயர் முதலிய வேறு கவிராயர்கள் வீடிகளிலுள்ளவற்றைப் பார்ப்பதும் என்னுடைய வேலைகளாக இருந்தன. முப்பது கவிராயர்கள் வீட்டிலுள்ள ஏடுகள் எல்லாஃவற்றையும் பார்த்தேன்.பத்துப்பாட்டு அகப்படவில்லை இது நான் புறப்பட்ட காலத்து ஏற்றபட்ட சக்னங்களின் பயன் என்றெண்ணி வருந்தினேன்;என் உள்ளம் சோர்ந்தது.

அப்பொழுது லஷ்மண கவிராயர் எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன.எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்;அவர்களில் ஒருவர் இறந்து விட்டார்.அவருடைய மனைவியாரின் பிறந்தகம் தச்சநல்லூர்.தம் புருஷர் இறந்தவுடன் அவர்கள் தச்சநல்லூர் சென்றுவிட்டார்கள்.போகும் போது இங்கிருந்து சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்களாம் என்றார்.பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு தச்சநல்லூருக்குப் போயிருக்க வேண்டும் ,சரி இவ்வளவு சிரம்பஃபட்டும் பயனில்லாமல் போயிற்றே என்று வருந்தி நான் கூறினேன்.

அவர் திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு ,ஒரு விஷயம் மறந்துவிட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார்.தேவபிரான்பிள்ளை யென்பது அவர் பெயர்.அவருக்கு எனக்கும் இப்பொழுது மனக்கலப்பில்லை.என்னுடைய வீட்டிலிருந்து வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டுபோய் அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம்.ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்திவிட்டேன் என்றார்.
அவற்றையும் பார்ப்போம் தாங்கள் மட்டும் தயை செய்யவேண்டும் தாங்கள் அவர் வீட்டில் இருப்பவற்றை வாங்கித் தரவேண்டும் ; என்னை வரச்சொன்னாலும் உடன் வருவேன் என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்;அருகிலுள்ளவர்களும் சொன்னார்கள்.கவிராயர் அங்ஙனமே செய்வதாக ஒப்புக்கொண்டார்.
ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கையும் மனமும் சோர்ந்து,அவ்வூரில் ஸப்ரிஜிஸ்தாராராக இருந்த இராமசாமி ஐயரென்பவர் வீட்டுக்குப் போனேன்.இரவு அவர் வீட்டிற் போஜனம் செய்துவிட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன்.அவ்வூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் சிலர் நான் விரும்பியபடி திவ்யப் பிரபந்தந்நிலுள்ள சில பாசுரங்களின் பழைய வியாக்கியானங்களைக் கேட்டு அடையும் முழுமகிழ்ச்சியும் எனக்கு அப்பொழுது உண்டாகவில்லை.அதற்குக் காரணம் அவற்றைச் சொன்னவர்களது குறையன்றுநென் உள்ளத்துக்குள்ளேயிருந்து,பத்துப்பாட்டு அகப்படவில்லை என்ற கவலையே.

இப்படி இருக்கையில் அன்று ஏதோ விசேஷமாதலின் திருவீதியில் பெருமாளும் சடகோராழ்வாரும் எழுந்தருளினார்கள்;ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசம் அவ்வூரென்று நான் சொல்வது மிகை; நானும் பிறரும் எழுந்து தரிசனம் செய்தோம்.நான் வணங்கினேன்.பட்டர்கள் சந்தனம் புஷ்ப மாலை முதலியவற்றை அளித்தார்கள்.எல்லோருடைய அன்பும் ஒருமுகப்பட்டு அத்தகைய மரியாதைகளை நான் பெறும்படி செய்தது.அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து ஸ்வாமி தமிழ் வேதம் செய்தவரென்றுதேவரிரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூலொன்றுறைத் தேடி வந்திருக்கின்றேன்.தமிழுக்குப் பெருமை யருளும் தேவரீருக்கு நான் சிரமம் தெரியாத தன்றே.நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா என்று சொல்லிப் பிரார்த்தித்தேன்.உள்ளம் அயர்ந்து போய்,இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை என்ற முடிவிற்கு வந்தமையினால் இங்கனம் பிராத்தனை செய்தேன்.

பெருமாளும் ஆழ்வாரும் அவ்விடத்தைக் கடந்து அப்பால் எழுந்தருளினார்கள் .உடனே நாங்கள் திண்ணையில் வந்து அமர்ந்தோம் .நிலா ஒளி நன்றாக வீசியது.அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார்.திருக்கோயில் பிரசாதங்களைப் பெற்று அவற்றை மறைத்துக்கொண்டு வருகிறாரென்று நான் நினைத்தேன்.வந்தவர் இந்த புஸ்தகத்தைப் பாருங்கள் இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது;பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்லி வாங்கிவந்தேன் என்று கூறி மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.அவர் என்னிடம் கொடுப்பதற்கு முன்பே ஆத்திரத்தால் நான் அதனைப் பிடுங்கினேன்.மேலே கட்டிருந்த கயிற்றை அவிழ்த்து அந்த நிலாவின் ஒளியிலேயே பிரித்தேன்.சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் என் கண்ணில் பட்டது.நிலவில் மலர்ந்த அம் முல்லையினால் என் உள்ளம் மலர்ந்தது.எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையில்லை.மிகவும் விரைவாக முதலிலிருந்து திருப்பித் திருப்புப் பார்த்தேன்.ஆரம்பத்தில் திருமுருகாற்றுப்படை அப்பால் பொருநராற்றப்படை,அதன் பின் சிறுபணாற்றுப்படை இப்படி நெடுநல்வாடை முடிய ஏழுபாட்டுக்கள் இருந்தன.ஒவ்வோர் ஏட்டையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கையில் என்னையே மறந்து விட்டேன்.சந்தோஷ மிகுதியினால் அப்பொழுது என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருகிலிருந்தவர்களுக்குப் பொருள் பட்டிரா.அந்தச் சமயத்தில் மட்டும் என்னை யாரேனும் புதிதாகப் பார்த்திருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகவே கருதியிருப்பார்.என்னுடைய மன உணர்ச்சி அவ்வளவு தீவிரமாக இருந்தது.

ஆழ்வாரைப் பிராத்தித்தது வீண்போகவில்லை.அவர் கண்கண்ட தெய்வம் என்பதில் ஐயமேயில்லை எனுற அருகில் இருந்தவர்களிடம் கூறினேன். அன்று இரவு முழுதும் சந்தோஷ மிகுதியினால் எனக்குத் தூக்கமே வரவில்லை.மறுநாட் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அர்ச்சனை செய்வித்து இப்படியே நான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலமாக செய்தருள வேண்டும் என்று பிராத்தித்துவிட்டு வந்தேன்.

***

நன்றி: முனைவர் கல்பனா சேக்கிழார்

Friday, September 18, 2009

நவராத்திரித் திருவிழா

அன்னையைப் போற்றிப் பாடுவதற்கு எல்லா நாட்களும் ஏற்ற நாட்களே. அந்த வகையில் தொடர்ந்து வருடம் முழுக்க அன்னையின் புகழினைப் பாடல்களாக எழுதி வருகிறார் கவிநயா அக்கா. அதே போல் அன்னையின் புகழினைப் போற்றும் ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய சௌந்தர்யலஹரி சுலோகங்களுக்கு வருடம் முழுக்கவும் பொருள் எழுதிக் கொண்டிருக்கிறார் மதுரையம்பதி சந்திரமௌலி அண்ணா.

வருடம் முழுக்க அவர்கள் செய்யும் நற்பணியில் நாமும் கொஞ்சம் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதனால் இந்த நவராத்திரி நேரத்தில் ஒவ்வொரு நாளும் 'அம்மன் பாட்டு' வலைப்பதிவில் ஒவ்வொரு பாடலாக இட்டு அன்னையை வணங்க வேண்டி அழைத்திருக்கிறார் கவிநயா அக்கா. அவருடைய வழிகாட்டுதலின் படி அங்கே வரும் பாடல்களைப் படித்து அன்னையின் அருளைப் பெற வேண்டுகிறேன்.

இதே நேரத்தில் தொடர்ந்து மௌலி அண்ணா எழுதி வந்த சௌந்தர்யலஹரி பொருளுரை நிறைவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து நவராத்திரிச் சிறப்பு இடுகைகளாக அன்னைக்கு 64 உபசாரங்கள் என்னும் தலைப்பில் கவிநயா அக்கா மொழிபெயர்த்துத் தந்தவற்றை இட எண்ணியிருக்கிறார். அந்த இடுகைகளை சௌந்தர்யலஹரி பதிவில் படித்து அன்னையை வணங்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

சென்ற வருடம் மதுரையம்பதி பதிவில் மௌலி அண்ணா எழுதிய நவராத்திரி சிறப்பு இடுகைகளை மீண்டும் ஒரு முறை அதே பதிவில் மறுபதிவு செய்யவும் எண்ணியிருக்கிறார். அவற்றையும் படிக்க வேண்டுகிறேன்.

Thursday, August 20, 2009

ஆண்டாள்

கோயில் கந்தாடை நாயன் என்னும் அடியவர் அருளிச் செய்த பெரிய திருமுடியடைவு என்னும் நூலில் இருக்கும் ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகளை நேற்று இட்டிருந்தேன். அதே நூலில் ஆண்டாளின் வாழ்க்கைக் குறிப்புகளும் இருக்கின்றன. அவற்றை இன்று இடுகிறேன். இதுவும் மணிப்பிரவாள நடையில் இருந்தாலும் வடமொழிச் சொற்கள் சிறிதளவே இருக்கின்றன. ஆனாலும் இது கடினம் என்று நினைப்பவர்களுக்காக தற்காலத் தமிழிலும் அந்த குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

***

ஸ்ரீபூமிப்பிராட்டியார் திருவவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியாருக்குத் திருவவதாரஸ்தலம் பாண்டியமண்டலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர். திருவவதரித்தது பெரியாழ்வாருடைய திருநந்தவனத்தில் திருத்துழாயடியிலே. திருநக்ஷத்ரம் ஆடி மாஸம் பூர்வபக்ஷத்தில் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் வரீயாந்நாமயோகம் பத்ரகரணம் துலாலக்னம் மத்யாஹ்ந ஸமயத்தில். பூமியிலே இருந்து பெரியாழ்வார் திருமாளிகையிலே வளர்ந்தருளினார். திருநாமங்கள் சூடிக்கொடுத்தாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவள் எழுந்தருளியிருக்கிறது நூற்றெட்டுத் திருப்பதிகளிலும். அதிலும் ப்ரதானம் ஸ்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்து மூன்று பாட்டும். இவள் பாடின திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில், திருமலை. இவளுக்குத் திருவாராதனம் நம்பெருமாள். ஆசார்யர் பெரியபெருமாள்.

இவளுக்குத் தனியன் (பராசரபட்டர் அருளிச் செய்தது)

நீளாதுங்க ஸ்தநகிரிதட ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவ அஸ்து பூய:

இதன் பொருள் - நப்பின்னை பிராட்டியின் ஸ்தனங்கள் என்னும் மலைகளின் சாரலில் கண்வளர்பவனும், இவளது மாலையை தனக்கு விலங்காகக் கொண்டு கட்டுப்பட்டு உள்ளவனும் ஆகிய க்ருஷ்ணனை திருப்பள்ளி உணர்த்தினாள். வேதங்களின் தலைப்பாகமாக உள்ள வேதாந்தங்கள் கூறும் தனது அடிமைத்தனத்தை கண்ணனிடம் அறிவித்தாள். தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள். இப்படிப்பட்ட ஆண்டாளின் விஷயமாகக் கூறப்படும் இந்த நமஸ்காரங்கள், காலம் என்ற தத்வம் உள்ளவரை விளங்க வேண்டும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஆகஸ்ட் 1 - 2007 மின்னிதழ்

***

பெருமாளின் தேவியர்களில் ஒருவரான பூமிப்பிராட்டியாரின் திரு அவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாளின் பிறந்த இடம் பாண்டிய நாட்டில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் பிறந்தது பெரியாழ்வாரின் திருநந்தவனத்தில் துளசிச்செடியின் கீழே. இவருடைய பிறந்த நாள் ஆடி மாதம் வளர்பிறை நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் என்னும் நட்சத்திரத்தில் துலா லக்னத்தில் மதிய நேரத்தில். பூமியிலே பிறந்து பெரியாழ்வாரின் வீட்டில் வளர்ந்தார். இவருடைய திருப்பெயர்கள் சூடிக் கொண்டாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவர் நூற்றியெட்டு திவ்விய தேசங்கள் என்னும் திருப்பதிகளிலும் பெருமாளுக்கு இடப்பக்கம் எழுந்தருளியிருக்கிறார். அவற்றில் முதன்மையான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் இயற்றிய நூல்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்தி மூன்று பாட்டும் ஆகும். இவர் பாடிய திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில் எனப்படும் திருவரங்கம், திருமலை (அழகர் கோவில் எனப்படும் திருமாலிருஞ்சோலையையும் பாடியிருக்கிறார். ஆனால் எப்படியோ அந்தத் திருப்பதியின் பெயர் இங்கே விடுபட்டிருக்கிறது). இவர் வணங்கியது நம்பெருமாள் என்னும் திருவரங்க நகர் வளர் அழகிய மணவாளன். இவருக்கு ஆசாரியர் பெரியபெருமாள் என்னும் திருவரங்கத்து மூலவர். (ஆண்டாளே பட்டர்பிரான் கோதை என்று தன்னை அழைத்துக் கொள்வதால் பெரியாழ்வாரே ஆண்டாளின் ஆசாரியர் என்று சொல்லுவதுண்டு. இங்கே பெரியபெருமாள் இவருக்கு ஆசாரியர் என்று சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது.)

தனியனுக்குத் தரப்பட்டுள்ள பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் மீண்டும் தரவில்லை.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஆளவந்தார்

இராமானுஜரின் ஆசாரியரான ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாக 'கோயில் கந்தாடைநாயன்' என்னும் அடியவர் அருளிச்செய்த பெரியதிருமுடியடைவு என்ற நூலில் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே முதலில் தந்திருக்கிறேன். மணிபிரவாளம் என்னும் தமிழும் வடமொழியும் கலந்த நடையில் இந்த குறிப்புகள் இருந்தாலும் வடமொழி அதிகம் கலக்காமல் கொஞ்சம் எளிய தமிழிலேயே இருக்கின்றன. ஆனாலும் இந்த நடை புரியவில்லை என்பவர்களுக்காக இக்குறிப்புகளைத் தற்காலத் தமிழிலும் எழுதியிருக்கிறேன்.

***

ஸிம்ஹாநநாம்ச பூதரான ஆளவந்தாருக்குத் திருவவதாரஸ்தலம் சோழ தேசத்திலே திருக்காவேரிதீரத்தில் வீரநாராயணபுரம். திருநக்ஷத்ர கலியுகம் மூவாயிரத்து எழுபதேழுக்குமேல் தாது வருஷம் ஆடி மாஸம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை உத்தராடம் விஷ்கம்பம் பவகரணம். திருத்தகப்பனார் ஈச்வரமுனிகள். திருப்பாட்டனார் நாதமுனிகள். திருத்தாயார் ஸ்ரீரங்கநாயகி. குமாரர் திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துகரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி. திருநாமங்கள் யாமுனாசார்யார், யமுனைத்துறைவர், வாதிமத்தேபஸிம்ஹேந்த்ரர், ஆளவந்தார், பெரியமுதலியார், குடி சொட்டை. திருவாராதனம் நம்பெருமாள். இருப்பிடம் கோயில். இவருக்கு நாதமுனிகள் யாமுனாசார்யரென்கிற திருநாமமும், பகவத் ஸம்பந்தமும், மந்த்ரோபதேசமும் ஸாதித்தருளி, தத்வஹித புருஷார்த்தங்களை ப்ரஸாதிக்க உய்யக்கொண்டாருக்கு நியமித்து, யோகரஹஸ்யம் ப்ரஸாதிக்கக் குருகைக்காவலப்பனுக்கு நியமித்தார். அந்த உய்யக்கொண்டார் மணக்கால்நம்பிக்கு நியமித்தார். ஆகையாலே இவருக்குப் புருஷார்த்தங்களும் பகவத் விஷயமும் நாலாயிரமும் சதுர்த்தாச்ரம ஸ்வீகாரமும் முதலான அர்த்த விசேஷங்களெல்லாம் ப்ரஸாதித்தருளினவர் ஸ்ரீராமமிச்ரர். ஆக இவர்க்காசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும், புருஷகாரர் மணக்கால் நம்பியுமாம். குருபரம்பரை வரிசைக்கு இவர்க்கு ஆசார்யர் மணக்கால்நம்பி. சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக்கோட்டியூர்நம்பி, திருமாலையாண்டான், தெய்வவாரியாண்டான், வானமாமலையாண்டான், ஈச்வராண்டான், ஜீயராண்டான், ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சிநம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருக்குருகூர்தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாஸர், ராஜபுரோஹிதரான நாதமுனி தாஸர், ரங்கசோழாவின் ராஜபத்னியான திருவரங்கத்தம்மான் ஆக சிஷ்யர் ப்ரதானரானவர் இருபத்திருவர். இவரருளிச் செய்தருளின ப்ரபந்தங்கள் ஸ்தோத்ரரத்னம், ஸித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ச்லோகி. இவர் சதுர்வேத ஷட்சாஸ்த்ராதி ஸகலவித்யா பாடங்களும் அருளிச் செய்து நூற்றிருபத்தஞ்சு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்தார். இவர் நம்பெருமாள் அனுஜ்ஞையினாலே திருநாட்டுக்கெழுந்தருளின ஸ்தலம் கோயில். நிக்ஷேபம் பண்ணப்பட்ட ஸ்தலம் திருப்பார்த்துறையிலே.

இவருடைய தனியன்

யத் பதாம்போருஹ த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ:
வஸ்துதாம் உபயாத: யாமுனேயம் நமாமி தம்

பொருள் - எந்த ஒருவரின் தாமரை போன்ற திருவடிகளைத் த்யானிப்பதன் மூலம் எனது அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெற்றனவோ, எதனால் நான் இந்த உலகில் ஒரு மதிக்கத்தக்க பொருளாக உள்ளேனோ, அப்படிப்பட்ட பெருமை உடைய யாமுனாசார்யரை வணங்குகிறேன்.

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஜூலை 2 - 2007 மின்னிதழ்

***

சிம்மானனரின் (இவர் பரமபதத்தில் என்றைக்கும் நிலையாக வாழும் நித்யசூரிகள் என்னும் அடியவர்களில் ஒருவர். சிங்க முகம் கொண்டவர். அதனால் ஸிம்ஹாநநர் என்ற பெயர் பெற்றவர்) அம்சத்தில் பிறந்த ஆளவந்தார் பிறந்த இடம் சோழ நாட்டில் காவேரிக்கரையில் இருக்கும் வீரநாராயணபுரம். இவர் பிறந்த நாள் கலியுக வருடம் மூவாயிரத்து எழுபத்தேழு, தாது வருடம் ஆடி மாதம் முழுநிலவு நாள் வெள்ளிக்கிழமை உத்திராட நட்சத்திரம் சேர்ந்து வந்த நாள். இவர் தந்தையார் ஈச்வரமுனிகள். இவர் பாட்டனார் நாதமுனிகள். இவர் தாயார் ஸ்ரீரங்கநாயகி. இவருடைய மகன்கள் திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வந்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி என்னும் நால்வர். இவருடைய மற்ற திருப்பெயர்கள் யாமுனாசாரியர், யமுனைத்துறைவர், வாதிமத்தேபசிம்மேந்திரர், ஆளவந்தார், பெரியமுதலியார். இவருடைய குலத்தின் பெயர் சொட்டை. இவர் தினமும் வணங்கி வந்த பெருமாள் நம்பெருமாள். இவருடைய இருப்பிடம் கோயில் எனப்படும் திருவரங்கம். இவருடைய பாட்டனார் நாதமுனிகள் இவருக்கு யாமுனாசாரியர் என்ற திருப்பெயரும், இறை தொடர்பும், மந்திர உபதேசமும் தந்து அருளி, தத்துவம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் மூன்றையும் அருளிச் செய்ய தன்னுடைய சீடரான உய்யக்கொண்டாரை நியமித்து, இவருக்கு யோகரகசியம் அருளிச்செய்ய குருகைக்காவலப்பனை நியமித்தார். உய்யக்கொண்டார் மணக்கால்நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். ஆகையாலே இவருக்கு வாழ்க்கையின் குறிக்கோள்கள் எனப்படும் புருஷார்த்தங்களும் பகவத் விஷயம் எனப்படும் வேத வேதாந்தங்களும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும் நான்காவது ஆசிரமம் எனப்படும் துறவறம் முதலான எல்லாவற்றையும் அருளிச்செய்தவர் ஸ்ரீராமமிச்ரர் எனப்படும் மணக்கால்நம்பியாவார். ஆக இவருக்கு ஆசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும் அவர் அருளிசெய்தவற்றைக் கொணர்ந்து கொடுத்தவர் மணக்கால் நம்பியும் ஆவார்கள். குருபரம்பரை வரிசையில் இவருக்கு ஆசாரியர் மணக்கால்நம்பியாவார். இவருடைய சீடர்கள் பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெய்வ்வாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈச்வர ஆண்டான், ஜீயர் ஆண்டான், ஆளவந்தார் ஆழ்வான், திருமோகூர் அப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்குருகூர் தாஸர், வகுளாபரண சோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாசர், அரசகுருவான நாதமுனி தாசர், ரங்க சோழன் என்னும் அரசனின் பட்டத்து ராணி திருவரங்கத்தம்மான் ஆக சீடர்களில் முதன்மையானவர்கள் இருபத்தி இருவர். இவர் அருளிச் செய்த நூல்கள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள். இவர் நான்குவேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அனைத்து அறிவு நூல்களையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து நூற்றி இருபத்தைந்து வருடம் வாழ்ந்திருந்தார். இவர் நம்பெருமாளின் அனுமதியினால் திருநாடு எனப்படும் பரமபதத்திற்கு எழுந்தருளின (இறந்த) இடம் திருவரங்கம். இறுதிக் காரியங்கள் பண்ணப்பட்ட இடம் திருப்பார்த்துறை.

(தனியனின் பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் அதனை மீண்டும் சொல்லவில்லை.)

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

Sunday, August 09, 2009

வாழ்க இரவிசங்கரன் படி! பல்லாண்டு வாழ்க வாழ்க!

பேசும் பேச்செல்லாம் ஈசன் திருநாமம்
வாசம் கொள்வதுவோ கேசன் திருவாசல்
நேசம் மிகு நெஞ்சில் தேசும் மிக ஒளிரும்
நேசன் இரவி சங்க ரேசன் வாழியவே!

வாழி கேயாரெஸ் வாழி புதுயார்க்கன்
வாழி புதுஜெர்சி வாழ் வேந்தன் வாழியவே
மாயோனை சேயோனை தாயோனை மறவாத
மாயவன் இரவிசங்கரன்!


***


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

கொக்காய்ப் பிறப்பேன் என்றேன். ஆனால் கொக்காய்ப் பிறந்தால் ஏதோ ஒரு நேரத்தில் திருவேங்கடத்தை விட்டுப் பறந்து போக வாய்ப்புண்டு. அதனால் கொக்காய் பிறப்பதைக் காட்டிலும் மீனாய்ப் பிறப்பது மேல்.

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன்வட்டில் பிடித்(து) உடனே புகப் பெறுவேன் ஆவேனே

மீனாய்ப் பிறந்தாலும் வேங்கடவன் அருகாமை கிடைக்காது. அது மட்டுமின்றி என்றாவது அந்த நீர்ச்சுனை வற்றிப் போனால் மீனாய் எடுத்தப் பிறவியும் வீணே போகும்.

பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே

நீ உமிழும் பொன்வட்டிலைத் தாங்கும் அடிமையாய் இருப்பேன் என்றேன். ஆனால் அதனால் உன் திருமுகத்தைக் காணும் பேறு மட்டுமே கிடைக்கும். திருவடிகள் அல்லவா அடியவர்க்குப் பெரும்பேறு.

அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே

செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.

வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு ஆடலவை ஆதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தன் ஆவேனே


முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).

மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.

வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.

மலைச்சிகரமாய் நின்றாலும் யாருக்கும் பயனின்றிப் போகலாம். எத்தனையோ சிகரங்கள் இருக்கின்றன; அதனால் அடியார்களுக்கும் பயனின்றிப் போகலாம். ஆனால் திருவேங்கட மலையில் ஒரு காட்டாறாய் நான் இருந்தால் உன் திருமுழுக்குக்கும் ஆவேன்; அடியார்களின் தாகத்திற்கும் ஆவேன்.

வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே

பொற்சிகரமாய் நின்றாலும் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்களால் உன் கோயிலை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் உன் கோயிலை அடையும் வழியாக நான் ஆவேன்.

பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.

பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்
அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே.

நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.

தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.


மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.

Wednesday, July 01, 2009

உடுக்கை இழந்தவன் கை (பாரி வள்ளலின் கதை) - நிறைவு

தென்பெண்ணை ஆற்றின் நடுவில் இருக்கும் சிறு குன்றில் கபிலரை வடக்கிருக்க விட்டு விட்டு அவர் நினைவின் வழியே சென்று பாரிமகளிருடன் அவர் ஊர் ஊராக அலைந்து திரிந்ததைக் கண்டோம். பாரியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அவன் பெண்மக்களை வேளிர் குலத்தில் உதித்த ஒருவனுக்கே மணம் முடித்துக் கொடுத்து, உடுத்திய ஆடை நழுவிய போது பாய்ந்து சென்று மானம் காக்கும் கையைப் போன்ற நட்பின் கடமையினை நிறைவாகச் செய்தார் கபிலர் என்பதனையும் அவர் நினைவு வழியே கண்டோம். உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற ஆன்றோர்களின் வாய்மொழியினை நன்கு நிறைவேற்றியவர் கபிலப் பெருந்தகை என்பதையும் கண்டோம். நண்பனைப் பிரிந்த துன்பத்தை இவ்வளவு நாட்கள் நட்பின் கடமைக்காகப் பொறுத்திருந்த புலவர் வடக்கிருந்து உயிர் துறக்கும் தருவாயில் இருக்கும் போது அவரருகே இருக்க வேண்டாமா நாம்?! திருக்கோவலூரார் அறியாமல் தனித்திருக்கும் கபிலரைக் காண நாமும் செல்வோம் கபிலர் கல்லிற்கு.

***

'வள்ளல் தன்மையிலே மிகச்சிறந்த மாவண் பாரி! உன் நாட்டில் பெரும் வளம் மிகுதியாக இருந்தது. உன் மலையில் பெரிய பெரிய பலாப்பழங்கள் பழுத்துக் கிடந்தன. அவற்றின் சுளையை உண்பதற்காக குரங்குகள் கீறியதில் அப்பெரிய பலாப்பழங்கள் இரு பிளவாக உடைந்து ஒவ்வொன்றும் ஒரு பெரிய முழவு போல் காணப்படுகிறது. அந்த பழங்களை வில்லையேந்திய குறவர்கள் சில நாட்களுக்கு ஆன உணவாகக் கொண்டு செல்வார்கள். அப்படிப்பட்ட வளம் மிக்க மலையை உடைய நாட்டை ஆண்டவனே. உனக்கும் எனக்கும் நடுவே இருந்த நட்பிற்கு ஏற்ப நீ நடந்து கொள்ளவில்லையே. இடுக்கண் வரும் போது உடுக்கை இழந்தவன் கை போல் அந்த இடுக்கணைக் களைவது தானே நட்பின் பெருமை; இவன் மூவேந்தர்களிடம் தூது சென்றும் போரினைத் தடுக்காது ஒழுந்தனனே என்று என்னை வெறுத்தாய் போலும். ஆனாலும் நீ என்னை புரந்த பற்பல் ஆண்டுகளில் நமக்குள் ஏற்பட்ட நட்பிற்கு ஏற்ற படி என்னையும் உன்னோடு உடன் வர விட்டிருக்க வேண்டுமே. அவ்வாறு நீ செய்யவில்லை. நீ இங்கேயே இரு என்று என்னை தவிர்த்தாய். ஆதலால் நானும் உன்னோடு வர இயலாதவன் ஆனேன். ஆயினும் இப்போது உன் விருப்பத்தை நிறைவேற்றினேன். அதனால் இந்தப் பிறப்பில் நீயும் நானும் நட்பு கொண்டு மகிழ்வுற்று இருந்ததைப் போல் மறுபிறப்பிலும் இடைவிடாத இன்பத்தை அருளும் உன் நட்பைப் பெற்று உன்னுடன் வாழ்வதற்கு உயர்ந்த விதியானது வழி செய்யட்டும்'

அடடா. நண்பன் பாரியின் நினைவிலேயே தன் கடைசி மூச்சினை விட்டுவிட்டாரே கபிலர். நல்லவேளை சரியான நேரத்தில் நாம் இங்கு வந்தோம். இதென்ன அவருக்கு அருகில் ஒரு ஓலையும் ஆணியும் கிடக்கின்றனவே. இறக்கும் தருவாயிலும் தமிழில் எழுதிக் கொண்டே இறந்தாரா? ஒரு பாடலைப் போல் தோன்றுகிறது. அந்தப் பாடலைப் படிப்போம்.

கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்குமிசைவாகும்
மலை கெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்கு வரல் விடாஅது ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானேன் ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே


அடடா. என்ன அற்புதமான எண்ணங்கள். நட்பின் பெருமையை உணர்த்தும் பாடல். ஐயன் கபிலன் வேண்டியதைப் போலவே உயர்ந்த பாலான விதி இவ்விருவரையும் எல்லாப் பிறவிகளிலும் கூட்டி வைக்கட்டும். கபிலரைப் பல நாள் காணாது மனம் வருந்தி அவரைத் தேடி மலையமான் அனுப்பிய வீரர்கள் இதோ கபிலக்கல்லிற்கு வந்துவிட்டார்கள். அவர்கள் புலவரின் திருமேனியையும் இந்தத் திருவோலையையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பார்கள். உயர்ந்த நட்பிற்கு அடையாளமாக விளங்கிய வள்ளல் பாரியையும் புலவர் கபிலரையும் மனமார வணங்கி அவர் தம் திருக்கதையை அறிந்த மன நிறைவுடன் இங்கிருந்து விடை பெறுவோம்.

இத்தொடரினை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.

Saturday, June 27, 2009

செல்வத்துப் பயனே ஈதல்!

சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூற்றுப் புலவர்கள் பெரும்பாலும் அரசர்களின்
வீரம்
கொடை
புகழ்
போன்றவைகளைப் பற்றிப் பாடியுள்ளனர்.

ஒரு சிலர் அரசர்களையே இடித்துரைக்கும் பாடல்களை யாத்துள்ளனர். சிலரோ, மக்கள் எல்லார்க்கும் பொதுவான நீதிகளை விளக்கியுள்ளனர்.

மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனாரின் பொது நீதி தொடர்பான பாடல் ஒன்றை ஈண்டு காண்போம்.

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' (புறம் - 189)

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்" திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும் - உயிர்க்கு உறுதி தரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பகுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அனைவருக்கும் பொதுவானது அன்று; என் ஒருவனின் தனி உரிமையாகும் என்று பலர் தவறாக நினைப்பதாகப் புலவர் கூறுகிறார்.

இக்கூற்று, வள்ளுவரின் பின்வரும் குறட்பாவை நினைக்க வைக்கிறது.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள் - 72)

பெருநிலத்தை ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்யும் அரசர்க்கும், இரவும் பகலும் தூங்காது விலங்குகளை வேட்டையாடக் காத்திருக்கும் கல்லாத ஏழைக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவு தானியம்; உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே. இவைபோலப் பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றே என்று புலவர் சுட்டிக் காட்டுகிறார்.

பிற்கால ஒளவையாரின் பின்வரும் பாடலையும் ஈண்டு காண்பது நன்று.

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைத்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்'' (நல்வழி - 28)

அதனால், செல்வத்துப் பயனே, செல்வமற்றவர்க்கு உவந்து கொடுத்தல் என்று புறநானூற்றுப் புலவர் கூறுவதையும் காணலாம்.

அப்படி உவந்து அளிக்காதவர்களை வள்ளுவர்,

"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்; தாம் உடைமை
வைத்திழக்கும் வன்கண் அவர்'' (குறள் - 228)

என்று சாடுகிறார்.

மேலும் ஈகையின் புகழை,

"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'' (குறள் - 231)

என்றும் கூறுகிறார்.

செல்வத்தைப் பிறர்க்கு உவந்து கொடுக்காமல் யாமே துய்ப்போம் என்று எண்ணித் தாமும் துய்க்கத் தவறியவர் வாழ்நாளே இவ்வுலகில் பலவாகும் என்கிறார் நக்கீரனார்.

புலவரின் இக்கூற்றுக்குப் பொருந்துவதாய் பின்வரும் குறட்பா அமைகிறது.

"ஒருபொழுதும் வாழ்வது அறியார்; கருதுப
கோடியும் அல்ல பல'' (குறள் - 337)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புறநானூற்றுப் புலவரும், திருவள்ளுவரும் மற்றும் பிற்கால ஒளவையாரும் கூறியுள்ள அறிவுரைகள், இன்றுள்ள மக்களுக்கும் பொருந்துவதாய் உள்ளன. ஆனாலும், பலர் இதுபோன்ற அறிவுரைகளைப் படிக்காததாலும், படித்தவர்களில் பலபேர் அவ்வறிவுரைகளின் படி நடக்காததாலும் இன்று நம் நாட்டில் செல்வம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறது. இதுபோன்ற பாடல்களைப் படித்து அதன்படி வாழ முன்வந்தால் தாமும் இன்பம் துய்த்து, மற்றவர்களையும் இன்பம் துய்க்கச் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, தாம் எடுத்துள்ள கிடைத்தற்கரிய மானுடப் பிறப்பின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும்.

இரா.பரஞ்சோதி

நன்றி:- தினமணி

நன்றி: மின் தமிழ் குழுமம்; அக்குழுமத்தில் இக்கட்டுரையை இட்ட திரு. கண்ணன் நடராஜன்.

Wednesday, June 17, 2009

திருக்குறளும் ஊழியலும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

கால வரையறை செய்வதிலும் கருத்து வரையறை செய்வதிலும் ஆய்வாளர்களுக்குத் திருக்குறள் ஒரு பெரும் புதிராகவே உள்ளது. திருக்குறளை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கோட் பாடுகளோடு அணுகியுள்ள காரணத்தாலும், திருக்குறளின் சமூகப் பின்புலம் பற்றியோ அதன் மெய்யியல் பின்புலம் பற்றியோ கவலைப்படாத நிலையில் அதுபற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந் துள்ளதாலுமே திருக்குறளை முற்றாக அறியவும், அதன் கோட்பாடுகளை வகைப்படுத்தவும் முடியாத ஒருநிலை ஏற்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் காணப்படும் மெய்யியல் கூறுகள் யாவும் திருக்குறளிலும் அப்படியே அமைந்துள்ளன. தொல்காப்பியம் இலக்கண நூலாதலால், அதில் செய்திகள் சுருக்கமாகச் சொல்லப் பட்டுள்ளன. ஆனால் திருக்குறளோ செய்திகளை விளக்கமாகவும் செறிவாகவும் தொகுத்தும் வகுத்தும் விளக்கியுள்ளது. மேலும் திருக்குறள் வழங்கும் செய்திகள் அனைத்தும் பொருள்முதல் கோட்பாடு களுக்கு உரியனவாகவே உள்ளன.
திருக்குறளில் ஆய்வில் விடுவிக்க வேண்டிய பல புதிர்களுள் ஊழியலும் அடங்கும். அறத்துப்பாலை இல்லறவியல், துறவறவியல் எனப் பகுத்த வள்ளுவர் அதன் மூன்றாவது கூறாக ‘ஊழியல்’ என ஒன்றையும் அமைத்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இவ்வியலில் ஓர் அதிகாரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இவ்வியலின் அமைப்பைக் குறித்துப் பரிமேலழகர்,

“இவ்வாற்றான் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தற் சிறப்புடைத்தாய அறம் கூறினார்; இனிப் பொருளும் இன்பமும் கூறுவார் அவற்றின் முதற் காரணமாகிய ஊழின்வலி கூறு கின்றார்” என்பார்.
பரிமேலழகர் கருத்துப்படி ஊழியல் பொருட்பாலுக்கும், காமத்துப்பாலுக்கும் முன்னுரையாக வைக்கப்பட்டது என்பதாகின்றது. அப்படியாயின் இல்லறத்தானுக்கும் துறவிக்கும் ஊழ் தேவை யில்லையோ என்ற ஐயம் தோன்றுகின்றது.

ஆனால் வள்ளுவர் இவ்வியலை மூன்று பால்களுக்கும் பொருந்தும் வண்ணம் ‘மத்திம தீபமாக’ வைத்துள்ளாரா? அல்லது தன் கோட்பாட்டை நிலைநாட்டப் பிறர்மதம் கூறலாக அமைத் துள்ளாரா? என்பதும் ஆய்விற்கு உரியது.

ஊழியல் அதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகளைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

ஆகூழ் : செல்வப் பெருக்கிற்கும் ஆக்கத்திற்கும் காரணமாவது, அறிவு வளர்ச்சிக்கும் இது அடிப்படை.
போகூழ் : இழவூழ் என்றும் குறிக்கப்படும். சோம்பலுக்கும் பொருள் இழப்பிற்கும் காரணமாவது. அறிவையும் பேதமைப் படுத்தும். (குறள் 1-2)

அறிவு மிகுதிக்கு ஊழே காரணம். (3)

செல்வம் உடையராய் இருத்தல், அறிவுடையோராய் இருத்தல் ஆகிய இருவேறு நிலைமைகட்கும் ஊழே அடிப்படை. (4)

நல்லனவெல்லாம் தீயனவாக மாறுவதற்கும், தீயனவெல்லாம் நல்லனவாக மாறுவதற்கும்-மாற்றுவதற்கும் உள்ள ஆற்றல் ஊழிற்கு உண்டு. (5)

பொருள் ஒருவரிடம் நிலைத்துத் தங்குவதற்குக் காரணம் ஊழே. தமக்குரிய ஊழ் அல்லாத போது பொருள்களை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாக்க முற்பட்டாலும் அது தாங்காது. (6)

கோடி கோடியாகப் பொருளைத் திரட்டினாலும் தங்களுக்கென்று ஊழ் வகுத்துள்ளது எதுவோ அதைத் தவிர வேறு எதையும் துய்த்துவிட முடியாது. (7)

எட்டாவது குறள் சற்றுச் சிக்கலானது. உரையாசிரியர்களான பரிமேலழகர், பரிப்பெருமாள் ஆகியோரின் உரையும் பொருள் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.

துறப்பார்மன் துப்புரவு இல்லார்; உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

ஊழினால் வரும் இன்பங்கள் தமக்குக் கிட்டாதபோது துய்ப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களும் துறவை மேற்கொள்வார்கள் என்பது குறளின் பொருள்.
மெய்ப்பொருளை நாடும் பேரறிவாளர்களின் துறவு சமூகப் பயன் கருதியது. உலக நோக்கம் கொண்டது. வரன்முறைகளும், தூய ஒழுக்கங்களும் நிறைந்தது. ஆனால் வறுமையாளர்களின் துறவு வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவுவது, வயிற்றுப் பசியை அடிப்படையாகக் கொண்டது. எனவே மேற்காட்டிய குறள் சமூகச் சிக்கலை ஒட்டி அமைந்துள்ளது என்பது புலனாகிறது. ஆனால் பரிமேலழகர்,
‘ஊழ்வினைகள் துன்பங்களைச் சேர்க்காமல் நீக்கினால் வறுமையால் அனுபவிக்கப்படும் பொருள் இல்லாதவர் துறவு கொள்வர்’ என உரை கூறுகின்றார்.

வறுமையால் வரும் துன்பம் கொடியது எனில் ஊழ்வினையினால் வரும் துன்பமும் கூட கொடியதாகத்தான் இருக்க முடியும். ஊழ்வினையின் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள ஒருவனால் முடியுமாயின் வறுமையினால் வரும் துன்பத்தையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியும். எனவே, ‘உறற்பால ஊட்டா கழியும்’ என்பதற்கு ஆகூழால் தோன்றும் செல்வ நுகர்ச்சி இல்லாத போது எனப் பொருள் கொள்வது குறளை அறியத் துணை புரிகின்றது. ‘துறவும் கூட ஊழின் பயனே’ எனக் கூறும் காலிங்கரின் கருத்து பொருத்தமாக உள்ளது. (8)

நல்வினை இன்பங்களைக் கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன் நுகர்பவர், தீவினை துன்பந் தரும்போது அதை எதிர்கொள்ளாமல் கலங்குவது ஏன்? (9)

ஊழ் மிகுந்த வலிமையுடையது; அதை விலக்க நினைத்தாலும் முந்திக் கொண்டு வந்து நிற்கும். (10)

இப்பத்துக் குறள்களிலும் அமைந்த கருத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. ஊழ் இரண்டு வகைப்படும். ஒன்று நன்மைக்குக் காரணமாவது; மற்றொன்று தீமைக்குக் காரணமாவது.
2. செல்வத்தின் செழிப்பிற்கு ஆகூழும் செல்வத்தின் தேய்விற்குப் போகூழும் காரணங்களாகின்றன.
3. கற்ற கல்வியும் ஒருவனுக்குத் தன் ஊழின் காரணமாகவே பயன் தரும்.
4. ஊழினால் வரும் நுகர்ச்சி இல்லையெனில் வறுமையால் மனிதர்கள் துறவை நாடலாம். (பஞ்சத்திற்கு ஆண்டி என்ற மக்கள் வழக்கும் ஒப்பு நோக்கத்தக்கது.)
5. ஊழ் மிகுந்த வலிமையுடையது.

மேற்காட்டிய வகையில் ஊழின் இயல்புகளைச் சொல்லிச் செல்கிறார் வள்ளுவர்.

வள்ளுவரும் கோசாலரும்

வள்ளுவரின் ஊழ் பற்றிய கருத்து, மற்கலி கோசாலர் ஊழ் (நியதி) பற்றிச் சொல்லும் கருத்திலிருந்து முற்றாக மாறுபட்டு நிற்பதை இரண்டையும் ஒப்பிட்டுக் காணும்போது உணர முடிகின்றது.

கோசாலரின் கருத்துப்படி ஊழ் அனைத்து ஆற்றலும் கொண்டது. பிறவிக்குக் காரணமாக இருப்பது. பிறவிகள் தோறும் எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும் ஊழ்வினையின் துணை இல்லாது போனால் பிறவித் தளையை அறுக்க முடியாது. சுருங்கக் கூறினால், கணியன் பூங்குன்றனார் கூறுவது போல், உயிர் ஊழின் இயக்கத்திற்கு ஏற்பவே இயங்கும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

என்ற குறளிலும் கூட தீயவன் வளத்தோடு வாழ்வதும், நல்லவன் வறுமையோடு உழல்வதும் நினைக்கப்படும் என்றே சொல்லுகின்றார். இக்குறளில் ஊழ்வினையின் தாக்கம் இருப்பதை பரிமேலழகர்,

இம்மை செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து

என்ற சிலப்பதிகார அடிகளை மேற்கோளாகக் காட்டி உணர வைக்கின்றார்.
வள்ளுவர் ஊழ்வினையைப் பற்றித் தனி ஓர் இயல் அமைத்துப் பத்துக் குறட்பாக்களாகத் தொகுத்துக் கூறினாலும் கூட மற்கலி கோசாலர் வரையறுத்த ஊழ்வினை பற்றிய கோட்பாட்டைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு.

வள்ளுவர் கோசாலருக்குப் பிற்பட்ட காலத்தவராக இருந் திருப்பின், ஊழியலுள் வரும் கருத்துக்கள் ஆசீவகத்தின் தாக்கத்தோடு அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கோப்பெருஞ்சோழன் கணியன் பூங்குன்றனார் இருவரும் கோசாலரின் நியதிக் கோட்பாட்டைப் பின்பற்றியதைப் போல வள்ளுவரும் பின்பற்றி இருக்கலாம். ஆனால் ஊழின் முழு வல்லமையை-அதாவது இன்ப துன்பம், ஆக்கம் இழப்பு, பிறப்பு இறப்பு ஆகிய அனைத்திற்கும் காரணமாக அமைந்த ஊழின் தலைமையை வள்ளுவர் குறிக்காததுடன் ஊழ்வினையின் ஆற்றலை மறுக்கும் கருத்துக்களையும் பல அதிகாரங்களுள் கூறியுள்ளார்.

கோசாலர் ஊழின் ஆற்றலை மக்கள் நடுவே பரப்பத் தொடங்கிப் பேரளவில் வெற்றியும் கண்டவர். இந்நிலையில் மகாவீரரும், புத்தரும் ‘இக்கோட்பாடு செல்வாக்குப் பெறுமானால் மனித வாழ்வில் முயற்சிக்கே இடமில்லாது போய்விடும்’ என்று பெரிதும் கவலைப்பட்டனர்.

வள்ளுவர் முயற்சி பற்றிக் கூறும் கருத்துக்களைத் தொகுக்கும் போது, அவர் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமைவது மனித முயற்சிதான் என்ற கோட்பாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் புரிந்து கொள்ளலாம்.

‘ஊக்கமுடைமை’ அதிகாரத்துள்,

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை

என்று அசைவிலா ஊக்கத்தை வலியுறுத்துவார். ‘ஆள்வினை உடைமை’ அதிகாரத்திலோ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்

என்று இடைவிடா முயற்சியின் ஆற்றலை எடுத்துக் காட்டுவார்.
ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை என்ற இரண்டு அதிகாரங்களிலும் முயற்சியின் வெற்றியை உடன்பாடாகச் சொல்லுவார். ‘மடியின்மை’, ‘இடுக்கண் அழியாமை’ என்ற அதிகாரங்களுள் எதிர்மறையாக மனித முயற்சியைப் போற்றுகின்றார். குடியியலிலும் ‘குடிசெயல்வகை’ என்ற அதிகாரத்துள்,

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி

என்று முயற்சியையும் அதற்குத் துணையாகிய ஆன்ற அறிவையும் எடுத்துக் காட்டுவார். வள்ளுவரின் கருத்தில் ‘முயற்சியின் இடத்தைக்’ காணும்போது பொருட்பால் முழுமையுமே மனித முயற்சியின் அடித்தளத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

இவ்வாறு பொருட்பால் முழுமையிலும் முயற்சியின் ஆற்றலை, அது நல்கும் பயனை விளக்குவதால், ஊழின் ஆற்றலைக் கோசாலரைப் போல வள்ளுவர் பெரிதாகக் கருதவில்லை என்பது தெளிவு.

துறவறவியலிலும் பல குறள்கள் ஊழ்வினைக்கு மாறாக அதாவது நியதிக் கோட்பாட்டிற்கு உடன்பாடில்லாத வகையில் அமைந்துள்ளன.

‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்துள்,

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

என்ற குறள் பிறப்பிற்குக் காரணம் ‘அவாவே’ என வற்புறுத்துகின்றது.
துறவு என்ற அதிகாரத்துள்ளும்,

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்

என்ற குறள்வழி பிறப்பினை அறுப்பது பற்றற்ற நிலைதான் என்பதை வற்புறுத்துவார்.

இவ்வாறு அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் பல அதிகாரங்களுள் ஊழின் ஆற்றலை வள்ளுவர் மறுப்பதுடன் ஊழ்வினையின் இலக்கணமாகச் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் எதிர்மறையான கருத்துக்களையே விளக்கிச் செல்கின்றார். எனவே, ஊழ் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றிருந்தாலும் அவை நியதிக் கோட்பாட்டை ஒட்டி அமையவில்லை. ஆதலால் வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஊழ் பற்றிய சிந்தனையின் வளர்ச்சியே ‘ஆசீவகமாக’ உருப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு.

நன்றி: முனைவர் நெடுஞ்செழியன்; தமிழாயம் குழுமம்; முனைவர் இரவா.

Tuesday, June 16, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 3 (நாதமுனிகள்)

ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம். முதல் மூவர் விண்ணுலகத்தவர். நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும் வேதங்களில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றையும் வேதங்களில் குழப்பம் தரும் பகுதிகளைத் தெளிவுறுத்துபவற்றையும் தன்னுடைய திருவாய்மொழி முதலான பாசுரங்களில் பாடி 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று பெயர் பெற்றவர். இப்பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியர் நாதமுனிகள். அவர் முதற்கொண்டு தொடர்ந்து ஆசார்ய பரம்பரை தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. முதல் மூவர் விண்ணுலகத்தவர்; நான்காமவர் அவதாரமாகிய ஆழ்வார் என்பதால் மானுட ஆசாரியர்களில் இவரே முதல்வராக அமைகிறார். அதனால் இவரிடமிருந்தே வைணவ ஆசாரிய பரம்பரை தொடங்குவதாகக் கூறும் மரபும் உண்டு.

காட்டுமன்னார்குடி என்ற திருத்தலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் நாதமுனிகள். அவர் பிறந்த காலத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாசுரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடப்பெற்று வந்தன. எல்லோரும் முறையாகப் பயின்று பாடும்படியாக அவை தொகுக்கப் பெறவில்லை. அனைத்து பாசுரங்களையும் அறிந்தவர் என்று ஒருவரும் காணப்படவில்லை. அப்படியிருக்கும் போது இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இறைவனை வணங்கவந்த அடியவர்கள் சிலர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திருவாய்மொழியின் பத்து பாசுரங்களைப் பாடினார்கள். அப்பாசுரங்களின் அழகிலும் இனிமையிலும் பொருளாழத்திலும் கவரப்பட்ட இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும் அவை திருக்குடந்தைப் பெருமாளைப் பாடும் பாசுரங்கள் என்றும் அதனால் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துத் தங்களுக்குப் பாடமாயின என்றும் தெரிவித்தனர். அப்பாசுரங்களின் முடிவில் 'ஆயிரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்கள்' என்ற குறிப்பு வந்ததைக் கேட்டு அந்த ஆயிரம் பாசுரங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்று நாதமுனிகள் கேட்க, 'தெரியாது. ஆழ்வாரின் பிறந்த ஊரான திருக்குருகூர் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் கிடைக்கலாம்' என்று அவர்கள் கூறினார்கள்.

அதன்படியே நாதமுனிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு வந்து விசாரிக்க அங்கும் அவருக்கு அப்பாசுரங்கள் கிடைக்கவில்லை. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரின் மேல் எழுதிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மட்டுமே கிடைத்தன. அந்தப் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளியின் கீழ் அமர்ந்து அப்பாடல்களைப் பல்லாயிரம் முறை ஓதினார் நாதமுனிகள். அப்படி ஓதும் போது யோகதசையில் நம்மாழ்வார் நாதமுனிகளின் முன்பு தோன்றி தன்னுடைய திருவாய்மொழி மட்டும் இல்லாமல் மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் தந்தருளினார். அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி இசையமைத்து தன் மருமகன்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலமாக இசையுடன் கூடிய ஆழ்வார் பாசுரங்களை தமிழகம் எங்கும் பரவச் செய்தார் நாதமுனிகள்.

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

ஆனி மாதத்தில் அனுஷ நட்சத்திரத்தில் இந்த பூமியில் அவதரித்த நாதமுனிகள் வாழ்க. ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே.

ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யாமுனமுனிகள் /யமுனைத்துறைவர் . அவருக்கு ஆளவந்தார் என்றும் ஒரு பெயர் உண்டு. தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள். உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார். அப்படி ஆளவந்தாருக்காக உபதேசத்தை அவருக்குத் தகுந்த காலம் வருவதற்கு முன்னரே உபதேசித்து வைத்த நாதமுனிகள் வாழ்க. ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே.

அயோத்தி நகரில் வாழ்ந்து வரும் போது தென் திசையில் தோன்றிய பேரொளியைக் கண்டு தெற்கே வந்து நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் தரிசித்து அவருடைய சீடரானார் மதுரகவியாழ்வார். அவர் அருளிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பாசுரங்களை பல முறை ஓதி நம்மாழ்வாரிடம் இருந்து நாலாயிரப் பனுவல்களைப் பெற்றார் நாதமுனிகள். நம்மாழ்வார் என்னும் பகலவனைத் தெற்கில் கண்ட மதுரகவியாழ்வாரின் பாசுரங்களைப் பல முறை உரைத்தவன் வாழ்க. பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே.

மதம் பிடித்துத் திரியும் யானையை அங்குசம் கொண்டு அடக்கி நல்வழியில் அழைத்துச் செல்வார்கள். அது போல் தீயவழியில் செல்லுபவர்களைத் திருத்தி நல்வழியில் சேர்க்கும் திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் அங்குசத்தைப் போன்றவர். அதனால் அவர் திருப்பெயர் பராங்குசர். அவர் யோகதசையில் அருளிச் செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களையும் மிகவும் பரிவுடன் கற்றுக் கொண்டவர் நாதமுனிகள். பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே.

பாடல்களை ஓதினால் அவ்வளவு எளிதாக மனதில் நிற்காது. அதே பாடல்களை இசையுடன் பாடினால் மிகவும் எளிதாக மனதில் நிற்கும். இசையுடன் பாடும் படி அமைந்த நாலாயிரம் பனுவல்களுக்கும் தகுந்த இசைமுறைகளை அமைத்து கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் என்னும் தன்னுடைய இரு மருமகன்களுக்கும் கற்றுக் கொடுத்து அதன் மூலம் நாலாயிரம் பாசுரங்களும் உலகத்தில் பரவும் படி செய்தார் நாதமுனிகள். இசையுடன் பாடும் படி தாளம் அமைத்து நாலாயிரம் பனுவல்களையும் இசைத்தவர் வாழ்க. கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே.

மக்கள் மீது இருக்கும் கருணையினால் நம்மாழ்வாரிடமிருந்து தான் கற்ற யோக இரகசியங்களையும் மறைப்பொருட்களையும் அனைவரும் அறியும் படி ஒரு உபதேச வழிமுறையைத் தோற்றுவித்தார் நாதமுனிகள். கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே.

அந்த உபதேச வழிமுறையை உலகமெங்கும் பரப்பிட ஒரு ஆசாரிய பரம்பரையை நிலைநாட்டினார் நாதமுனிகள். எதற்கும் அசையாத மலையைப் போல் அரைகுறைத் தத்துவவாதிகளின் மிடுக்கினை எல்லாம் ஒடுக்கி தான் எப்போதும் போல் இருக்கும் ஆசாரிய பரம்பரை என்பதால் அதனை குருவரை (குரு மலை) என்று சொல்கிறது இந்த வாழித்திருநாமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகையான நிலங்களை உடைய உலகத்தில் குரு பரம்பரை என்னும் மலையை நாட்டியவன் வாழ்க. நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே.

உயர்வற உயர்நலம் உடையவன் என்று இறைவனைச் சொல்வார் நம்மாழ்வார். எல்லாவிதமான கல்யாண குணங்களும் உடையவன் இறைவன். அவனைப் போன்ற கல்யாண குணங்கள் நிரம்பியவர் நாதமுனிகள். அவருடைய திருவடிகள் வாழ்க. நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே.

நாதமுனிகள் திருவடிகளே தஞ்சம்.