Wednesday, July 01, 2009

உடுக்கை இழந்தவன் கை (பாரி வள்ளலின் கதை) - நிறைவு

தென்பெண்ணை ஆற்றின் நடுவில் இருக்கும் சிறு குன்றில் கபிலரை வடக்கிருக்க விட்டு விட்டு அவர் நினைவின் வழியே சென்று பாரிமகளிருடன் அவர் ஊர் ஊராக அலைந்து திரிந்ததைக் கண்டோம். பாரியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அவன் பெண்மக்களை வேளிர் குலத்தில் உதித்த ஒருவனுக்கே மணம் முடித்துக் கொடுத்து, உடுத்திய ஆடை நழுவிய போது பாய்ந்து சென்று மானம் காக்கும் கையைப் போன்ற நட்பின் கடமையினை நிறைவாகச் செய்தார் கபிலர் என்பதனையும் அவர் நினைவு வழியே கண்டோம். உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற ஆன்றோர்களின் வாய்மொழியினை நன்கு நிறைவேற்றியவர் கபிலப் பெருந்தகை என்பதையும் கண்டோம். நண்பனைப் பிரிந்த துன்பத்தை இவ்வளவு நாட்கள் நட்பின் கடமைக்காகப் பொறுத்திருந்த புலவர் வடக்கிருந்து உயிர் துறக்கும் தருவாயில் இருக்கும் போது அவரருகே இருக்க வேண்டாமா நாம்?! திருக்கோவலூரார் அறியாமல் தனித்திருக்கும் கபிலரைக் காண நாமும் செல்வோம் கபிலர் கல்லிற்கு.

***

'வள்ளல் தன்மையிலே மிகச்சிறந்த மாவண் பாரி! உன் நாட்டில் பெரும் வளம் மிகுதியாக இருந்தது. உன் மலையில் பெரிய பெரிய பலாப்பழங்கள் பழுத்துக் கிடந்தன. அவற்றின் சுளையை உண்பதற்காக குரங்குகள் கீறியதில் அப்பெரிய பலாப்பழங்கள் இரு பிளவாக உடைந்து ஒவ்வொன்றும் ஒரு பெரிய முழவு போல் காணப்படுகிறது. அந்த பழங்களை வில்லையேந்திய குறவர்கள் சில நாட்களுக்கு ஆன உணவாகக் கொண்டு செல்வார்கள். அப்படிப்பட்ட வளம் மிக்க மலையை உடைய நாட்டை ஆண்டவனே. உனக்கும் எனக்கும் நடுவே இருந்த நட்பிற்கு ஏற்ப நீ நடந்து கொள்ளவில்லையே. இடுக்கண் வரும் போது உடுக்கை இழந்தவன் கை போல் அந்த இடுக்கணைக் களைவது தானே நட்பின் பெருமை; இவன் மூவேந்தர்களிடம் தூது சென்றும் போரினைத் தடுக்காது ஒழுந்தனனே என்று என்னை வெறுத்தாய் போலும். ஆனாலும் நீ என்னை புரந்த பற்பல் ஆண்டுகளில் நமக்குள் ஏற்பட்ட நட்பிற்கு ஏற்ற படி என்னையும் உன்னோடு உடன் வர விட்டிருக்க வேண்டுமே. அவ்வாறு நீ செய்யவில்லை. நீ இங்கேயே இரு என்று என்னை தவிர்த்தாய். ஆதலால் நானும் உன்னோடு வர இயலாதவன் ஆனேன். ஆயினும் இப்போது உன் விருப்பத்தை நிறைவேற்றினேன். அதனால் இந்தப் பிறப்பில் நீயும் நானும் நட்பு கொண்டு மகிழ்வுற்று இருந்ததைப் போல் மறுபிறப்பிலும் இடைவிடாத இன்பத்தை அருளும் உன் நட்பைப் பெற்று உன்னுடன் வாழ்வதற்கு உயர்ந்த விதியானது வழி செய்யட்டும்'

அடடா. நண்பன் பாரியின் நினைவிலேயே தன் கடைசி மூச்சினை விட்டுவிட்டாரே கபிலர். நல்லவேளை சரியான நேரத்தில் நாம் இங்கு வந்தோம். இதென்ன அவருக்கு அருகில் ஒரு ஓலையும் ஆணியும் கிடக்கின்றனவே. இறக்கும் தருவாயிலும் தமிழில் எழுதிக் கொண்டே இறந்தாரா? ஒரு பாடலைப் போல் தோன்றுகிறது. அந்தப் பாடலைப் படிப்போம்.

கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்குமிசைவாகும்
மலை கெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்கு வரல் விடாஅது ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானேன் ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே


அடடா. என்ன அற்புதமான எண்ணங்கள். நட்பின் பெருமையை உணர்த்தும் பாடல். ஐயன் கபிலன் வேண்டியதைப் போலவே உயர்ந்த பாலான விதி இவ்விருவரையும் எல்லாப் பிறவிகளிலும் கூட்டி வைக்கட்டும். கபிலரைப் பல நாள் காணாது மனம் வருந்தி அவரைத் தேடி மலையமான் அனுப்பிய வீரர்கள் இதோ கபிலக்கல்லிற்கு வந்துவிட்டார்கள். அவர்கள் புலவரின் திருமேனியையும் இந்தத் திருவோலையையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பார்கள். உயர்ந்த நட்பிற்கு அடையாளமாக விளங்கிய வள்ளல் பாரியையும் புலவர் கபிலரையும் மனமார வணங்கி அவர் தம் திருக்கதையை அறிந்த மன நிறைவுடன் இங்கிருந்து விடை பெறுவோம்.

இத்தொடரினை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.