Monday, November 21, 2005

58: நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்...

அதிகாலை நேரம். நேற்று இரவு ஒரு நல்ல பாலகுமாரன் நாவல் படித்ததால் இரவு தூங்குவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால் என்ன? வழக்கம் போல் அதிகாலையில் எழுந்தால் தானே வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலகம் செல்ல முடிகிறது. இன்றும் காலை எழுந்ததில் இருந்து ஒரே வேலை. இன்று அவசியம் காய்கறி வாங்க சந்தைக்குப் போகவேண்டும். காலையில் போனால் தான் புத்தம் புதிதாய் வந்த காய்கனிகள் கிடைக்கும். அதனால் எத்தனை வேலை இருந்தாலும் மற்றவர் போல் மாலையில் சந்தைக்குப் போகாமல் முடிந்தவரை காலையிலேயே போவதை வழக்கமாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதோ சந்தைக்கு வந்தாயிற்று. நல்லவேளை. இன்றைக்குச் சந்தையில் அவ்வளவாய் கூட்டம் இல்லை. சனி ஞாயிறு என்றால் ஆற அமர காய்கனிகளைத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கலாம். ஆனால் இன்றோ அலுவலகம் செல்லவேண்டும். அதனால் அவசர அவசரமாய் எங்கெங்கு நல்ல காய்கறி தென்படுகிறதோ அங்கெல்லாம் அவ்வளவாய் பேரம் பேசாமல் வாங்கிவிட்டு போகவேண்டியது தான்.

அது யார்? புதிதாய் ஒரு பாட்டி தெருவோரம் எதையோ விற்றுக்கொண்டிருக்கிறாளே? இதுவரை அவரை இங்கு பார்த்ததில்லை. முள்ளங்கி மட்டும் தான் வைத்துக்கொண்டிருக்கிறார். நன்றாய் வெள்ளையாய் நீளமாய் ஒல்லியாய் இளசாய் இருக்கிறது. சாம்பாரோ குழம்போ வைத்தால் நன்றாய் இருக்கும்.

என்னைப் பார்த்தவுடன் பாட்டி 'ஒன்னு ஒரு ரூபாதான். எடுத்துக்கோ சேட்டு' என்றாள். குரல் மிகவும் நடுங்கியது. ஒரு 80, 90 வயதாவது இருக்கும். நான் ஒன்றும் சொல்லவில்லை. இந்த தள்ளாத வயதில் காய்கறி விற்கும் படி என்ன கஷ்டமோ?

'சேட்டு. நீ தான் போணி பண்ணி வைக்கணும். மூனு ரெண்டு ரூபாக்கு குடுக்கறேன். வாங்கிக்கோ' . இன்னும் நான் முள்ளங்கிகளையும் அந்த பாட்டியையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தேன்.

ஒரு ஆறு முள்ளங்கிகளை எடுத்துக் கொண்டு 'இத எல்லாமே எடுத்துக்கோ சேட்டு. அஞ்சு ரூவா குடு போதும். எல்லாத்தையும் அப்படியே சாப்புடலாம். அவ்வளவு எளசு' என்றாள். இதற்கு மேல் பாவம் ஒன்றும் சொல்லாமல் இருக்கக்கூடாது. அவருக்கு ஏதோ அவசரம். சீக்கிரம் விற்றுவிட்டுப் போக விலையை குறைத்துக்கொண்டே போகிறார். என்னை சேட்டு என்று வேறே நினைத்துவிட்டார் போல. அது தான் முள்ளங்கியை அப்படியே தின்னலாம் என்கிறார்.

'பாட்டி. நான் சேட்டு இல்ல. தமிழ் தான். அந்த ஆறு முள்ளங்கிய குடுங்க' என்றேன்.

'அப்படியா தம்பி. செவப்பா குண்டா பாத்தவுடனே சேட்டுன்னு நெனச்சேன்' என்றார். நான் சிரித்து விட்டு 5 ரூபாய் கொடுத்துவிட்டு அந்த முள்ளங்கிகளை வாங்கிக்கொண்டேன்.

'உங்கள இதுவரைப் பார்த்ததே இல்லையே. புதுசா வந்திருக்கீங்களா?'

'இல்லியேப்பா. நான் எப்பவும் இங்கயே தான் உக்காந்திருப்பேன். நீதான் இந்தப் பக்கமே பாக்கறதில்ல.'

'அப்படியா பாட்டி' என்று சிறிது வழிந்துவிட்டு வந்துவிட்டேன். அவருக்கு என்ன கஷ்டம் என்று கேட்க நினைத்தும் ஏதோ ஒன்று கேட்கவிடாமல் தடுத்தது. நீதான் இதுவரை என்னை பார்க்கவில்லை என்று சொன்னாரே அதுவாய் இருக்குமோ? இருக்கலாம். எனக்கு கண் தெரியவில்லை என்றல்லவா சொல்லிவிட்டார். அவர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. நாமுண்டு நம் வேலை உண்டு என்று இருக்கவேண்டியது தான்.

-----------------------------------------

கடந்த மூன்று வாரங்களாக சந்தை பக்கமே போகவில்லை. சரியான வேலை. இருக்கும் காய்கறிகளை வைத்து காலம் தள்ளியாச்சு. ஆனால் அந்த பாட்டியை பற்றிய கேள்வி மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. நாம் அப்பொழுதே அந்த பாட்டிக்கு என்ன கஷ்டம் என்று கேட்டு ஏதாவது முடிந்த அளவு உதவி செய்திருக்க வேண்டும். ஏன் தான் இப்படி இருக்கிறோமோ? இந்த நான் என்ற எண்ணத்தை அந்த ஏழைக்கிழவியிடம் கூடக் காண்பிக்கவேண்டுமா? நாமெல்லாம் என்ன மனித ஜென்மமோ? சுற்றி எத்தனையோ பேர் கஷ்டப்படும்போது முடிந்த உதவி செய்யாமல் நமக்கென்ன என்று வந்துவிடுகிறோம்.
இன்றைக்கு அவசியம் சந்தைக்குப் போகவேண்டும். போகும்போது நிச்சயமாய் அந்தப் பாட்டியைப் பற்றி விசாரித்து ஏதாவது உதவி செய்யவேண்டும்.

எங்கே அந்தப் பாட்டியைக் காணோமே? தினமும் இங்கு தான் உட்கார்ந்திருக்கிறேன் என்று பொய் தான் சொன்னார் போல. வாரத்திற்கு ஏதோ ஒரு நாள் வருவார் என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் வரும் போதெல்லாம் அவர் வந்ததில்லை போலும்; அதனால் தான் நான் பார்க்கவில்லை.

அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த பாதை ஓரம் இருந்த கடைக்காரரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன்.

'இங்க ஒரு பாட்டி உக்காந்திருந்துச்சே. எங்க அந்தப் பாட்டி?'

'அந்தப் பாட்டிக்கு என்ன சார். சந்தோசமா போய் சேந்துருச்சு'.

ஓ....அந்தப் பாட்டிக்கு எந்த கஷ்டமும் இல்லையோ; நாம் தான் தேவையில்லாமல் கற்பனை செய்து கொண்டோமோ? யாரோ மகனோ மகளோ இல்லை வேறு உறவுக் காரர்களோ அவரை சந்தோசமா வைத்திருக்கிறார்கள் போல. அந்த கடைக்காரர் என் பதிலை எதிர்பார்க்காமல் மேலும் தொடர்ந்தார்.

'அந்த பாட்டி தினமும் இங்கன உக்காந்து தான் வித்துகிட்டு இருக்கும். அது போயி மூனு வாரம் போல ஆச்சே. என்னைக்கு சார் நீங்க பாத்தீங்க'

'நானும் ஒரு மூனு வாரத்துக்கு முன்னால பாத்தேன். அவங்க தினமும் வர்றவங்க தானா?'

'ஆமாம் சார். சின்ன வயசிலயே புருசங்காரன் செத்துபோயிட்டான். ரெண்டு பொண்ணுங்க. கஷ்டப்பட்டு அவங்களை வளத்து கல்யாணமும் பண்ணி குடுத்தாச்சு. அதுக்கப்பறமும் கஷ்டப்பட்டு இந்த காய்கறி வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. செத்து போற கடைசி நா வரைக்கும் கஷ்டப்பட்டு எப்படியோ இப்ப சந்தோசமா போய் சேந்துட்டாங்க'.

ஓ...அந்த சந்தோசமா போய்ச் சேர்வதைத் தான் அந்த கடைக்காரர் சொன்னாரா? மனம் பாரமாய் இருந்தது. வேறு ஒன்றும் சொல்லாமல் நடையைக் கட்டினேன்.

Tuesday, November 15, 2005

55: நாளும் கோளும் குமரேசர் இரு தாளும்

கார்த்திகையில் கார்த்திகை நாளாம் இன்று கார்த்திகேயனின் புகழ்பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. இந்த வருடம் கார்த்திகை மாத முதல் நாளே பௌர்ணமி திதியாகவும் கார்த்திகை நட்சத்திரமாகவும் அமைந்துள்ளது மிகச்சிறப்பு.

நண்பர் இராகவன் தன் 'இனியது கேட்கின்' வலைப்பதிவில் இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். அந்த பாடலுக்கு மேலும் விளக்கம் கூறலாம் என்றவுடன் நீங்களே கூறுங்கள் என்று சொல்லிவிட்டார். கரும்பு தின்ன கூலியா? இதோ அவன் அருளை முன்னிட்டு அவன் புகழைப் பேசலாம் என்று கிளம்பிவிட்டேன்.

நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!!!


இந்த உலகத்தில் எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும் நல்ல நேரம் பார்த்துச் செய்வது தான் வழக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது போன்ற பழமொழிகள் இந்த வழக்கத்திலிருந்து வந்தவைதான். இந்த மாதிரி ஒவ்வொரு வார நாட்களுக்கும், சந்திரனின் சுற்றில் வரும் 15 திதிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் தங்கள் அனுபவத்தில் கண்ட பலன்களைச் சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியோர். நல்ல நாளில் நல்ல நேரத்தில் நல்ல காரியத்தைத் துவக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால் நாளடைவில் இந்த நல்ல பழக்கம் ஒரு மூட நம்பிக்கை அளவு வளர்ந்து நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் பல நேரம் அமைந்துவிடுகிறது. நல்ல காரியம் எப்போதுமே நன்மையிலேயே முடியும். அதை நல்ல நேரத்தில் துவங்கினால் நன்மை மிகுதியாய்க் கிடைக்கும் என்பதே நாள் பார்க்கும் வழக்கத்தின் பொருள். ஆனால் அது நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் வந்தால் அந்த வழக்கத்தையே தூர எறிய வேண்டியது தான்.

நாளுக்கு பிறகு, ஒருவனுடைய முயற்சி வெற்றியடைவது அவனவன் முன்னர் செய்துள்ள நல்வினைத் தீவினைப் பயனை ஒட்டியே உள்ளது. அவன் நல்வினை அதிகம் செய்திருப்பின் அவன் முயற்சி சீக்கிரம் பலன் தருகிறது. தீவினை அதிகம் என்றால் சிறிது தாமதம் ஏற்படுகிறது. ஆனால் தெய்வப்புலவர் சொன்னது போல் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப நவகோள்கள் பலன் தருகிறார்கள் என்பது நம் நாட்டவரின் நம்பிக்கை. நல்வினைகளின் பலன் பெருகவும் தீவினைகளின் பலன் குறையவும் நவகோள்களை வழிபட்டால் நல்லது என்றும் நம் நாட்டவர் நம்புகின்றனர்.

போகும் நேரம் வந்தால் கூற்றுவன் வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான். என்னை விட்டுவிடு; அதோ அவன் என்னை விட வயதில் மூத்தவன்; நான் இன்னும் நிறைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பலவாறாகக் கெஞ்சினாலும் எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் அந்த கொடுங்கூற்றுவன் தன் கடமையை நிறைவேற்றிவிடுவான்.

ஆனால் முருகப் பெருமான் அருள் இருந்தால் இவை அனைத்தின் பாதிப்பிலிருந்தும் நாம் தப்பலாம் என்கிறார் அருணகிரிநாதர்.

குமரேசரின் இரண்டு திருவடிகளும், அந்த திருவடிகளில் விளங்கும் சிலம்பும், சதங்கையும், தண்டையும், அவனுடைய ஆறு திருமுகங்களும், திரண்ட பன்னிரு தோள்களும், அந்த தோள்களின் மேல் அணிந்த கடம்ப மாலையும், எனக்கு முன் வந்து தோன்றினால் நாள் என்னை என்ன செய்யும்? என்னுடைய நல்வினை தீவினைகள் தான் என்ன செய்யும்? என்னைத் தேடி வந்து என் வினைகளுக்கு ஏற்ப பலன் கொடுக்கும் நவகோள்கள் தான் என்ன செய்யும்? கொடிய யமன் தான் என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது - என்கிறார் அருணகிரிநாதர்.

அதென்ன குமரனின் அழகை வர்ணிக்கும் போது காலுக்கும், முகத்துக்கும், தோளுக்கும் தாவுகிறாரே என்றால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாம் நாளையும், வினையையும், கோளையும், கொடும் கூற்றையும் எண்ணி நடுங்கும் போது 'யாமிருக்கப் பயமேன்' என்று அவன் வருவதை நமக்கு முதன்முதலில் சொல்வது அவன் இரண்டு தாள்களும் அதில் அவன் அணிந்துள்ள ஓசை மிகுந்த சிலம்பும், சதங்கையும், தண்டையும் தானே. அதனால் அவற்றை முதலில் பாடுகிறார்.

அப்படி அவன் நம் முன்னே வந்தவுடன் நமக்குத் தெரிவது அவனது ஆறு முகங்களும் தான். அதனால் அதனை அடுத்துப் பாடுகிறார். பின்னர் தான் அவனது அழகிய பன்னிரு தோள்களும் அவற்றின் மேல் அவன் அணிந்துள்ள மணம் மிகுந்த கடம்ப மாலையும் தெரிகிறது.

சரி எப்போது இது நடக்கும்? நாம் எப்போது நம் நினைவில் அவனை எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோமோ அப்போது நடக்கும். அப்படி நாம் அவனை எப்போதும் நினைத்தால் நமக்கு அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்.

சரி எப்படி நாம் அவனை எப்போதும் நம் நினைவில் வைத்துக்கொள்வது? அவன் தாளை நாம் வணங்கினால் அது நடக்கும்.

சரி நான் நினைத்தால் அவன் தாளை வணங்கிவிட முடியுமா? எத்தனையோ மயக்கங்கள் இருக்கின்றனவே எனைத் தடுக்க? உண்மைதான். அவன் அருளாலேயே அவன் தாள் வணங்க முடியும். அதனால் தான் அருணகிரியும் 'தோன்றிடினே' என்கிறார். நான் அவனைத் தோன்றவைக்கவில்லை. அவன் தனது அருளாலே தானாய்த் தோன்றினால் நாள் என் செயும்.... என்கிறார்.

அப்படி என்றால் நாம் என்ன தான் செய்வது? அவன் தாள் வணங்க அவன் அருளை வேண்டுவதே நாம் இப்போது செய்யக்கூடியது. அதுவே நாம் அவனை அடைய முதற்படி.

Thursday, November 10, 2005

தமிழ்மணக்கும் 50!!!

திக்கெட்டும் பரவி செந்தமிழ் முழங்கும் நம் தமிழ்மண அன்பர்களின் ஆதரவால் இதோ எனது ஐம்பதாவது வலைப்பூ தமிழ் மணத்துடன் தமிழ்மணத்தில் மலர்கிறது. நண்பர் சிவா (சிவபுராணம்) இந்த வருடம் காந்தி ஜெயந்தி அன்று 'ஏன் குமரன்...நீங்களும் ஏன் வலைப்பதிக்கக் கூடாது' என்று கேட்ட அந்த நேரம் நல்ல நேரம் போலிருக்கிறது. மறுநாள் (Oct 3, 2005) ஆரம்பித்தப் பயணம் இதோ இந்த ஆறாவது வாரத்தில் ஐம்பதாவது வலைப்பூவில் வந்து நிற்கிறது.

தமிழ்மணத்தில் எனக்கு எந்த எந்த வலைப்பதிஞர்களின் பதிவுகள் பிடிக்கும் என்று பட்டியலிட ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால் அது இந்தப் பதிவை எல்லையில்லாமல் நீட்டிவிடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன். நான் எந்த வலைப்பூக்களை விரும்பிப் படிக்கிறேன் என்பதை என்னிடம் பின்னூட்டம் பெற்றவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்படி ஒரு திரட்டியை உருவாக்கி தமிழன்பர்கள் எங்கிருந்தாலும் தமிழை ஆசை தீரப் பருக வழிவகை செய்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் அன்பான நன்றிகலந்த வணக்கங்கள். எல்லோரும் சொல்வது தான் என்றாலும் 'நன்றி மறப்பது நன்றன்று' அல்லவா?

இந்த வாரம் ஒரு நல்ல வாரமாய் எனக்கு அமைந்தது. முதலில் நம் பட்டங்களின் நாயகி அக்கா மதுமிதா தமிழ் மணத்தில் எழுதும் பலருக்கு பட்டங்களை வாரி வழங்க ஆரம்பித்தார். எனக்கு 'சகலகலா சமரச சத்வ பாரதி' என்ற பட்டம் கொடுத்தார். இந்தப் பட்டத்திற்கு என்ன பொருள் என்று அக்காவுக்கு மட்டுமே புரியும் என்று எண்ணுகிறேன். :-) உங்களில் யாருக்காவது புரிந்தால் தயை செய்து சொல்லுங்களேன்.

நண்பர் சிவா 'ஏன் குமரன். நீங்கள் தான் எல்லா செய்யுளுக்கும் விளக்கம் கொடுக்கிறீர்களே. இந்தப் பட்டத்திற்கும் விளக்கம் கொடுத்தால் என்ன?' என்கிறார். அப்படித்தான் செய்ய வேண்டும் போல என்றவுடன் அவர் தன் பங்குக்கு 'விளக்கத் திலகம்' என்ற பட்டம் கொடுத்துவிட்டார். இப்போது எனக்கு ஒரே குழப்பம். எந்தப் பட்டத்தை ஏற்றுக் கொள்வது என்று. நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எனக்குச் சொல்கிறீர்களா? ஆனால் நண்பர் ராம்கியிடம் சொல்லவேண்டாம். பட்டத்திற்கு அலைகிறேன் என்று திட்டப் போகிறார். :-)

இன்னொரு விஷயத்தையும் இந்த வாரம் கவனித்தேன். என் எல்லாப் பதிவுகளும் தமிழ்மண அன்பர்களில் ஆதரவால் 'வாசகர் பரிந்துரைத்த 25'ல் வருவதைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. பின்னூட்டம் இடாவிட்டாலும் வாக்களித்து ஆதரவு காட்டும் எல்லா தமிழன்பர்களுக்கும் நன்றிகள்.

இரண்டு நாட்களுக்கு முன் அலுவலக வேலையில் மூழ்கியிருக்கும் போது மதுரையில் இருந்து தம்பி தொலைப்பேசினான். தினமலரில் என் வலைப்பதிவு ஒன்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னான். எனக்கு ஆன்மிகத்திலும் தமிழிலும் சம்ஸ்கிருத்திலும் ஆவலை சிறு வயதிலேயே ஏற்படுத்திய என் தாயைப் பெற்ற தாய் அந்த செய்தியை தினமலரில் கண்டு தம்பியிடம் சொல்லியிருக்கிறார். என் பாட்டியின் குரலில் தெரிந்தப் பெருமையும் சந்தோசமும் பார்க்க (கேட்க?) மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
இப்படி இந்த வாரம் முழுவதும் நல்ல செய்திகளாகவே வந்து கொண்டு இருக்கிறது. இதோ இப்போது ஐம்பதாவது வலைப்பூவும் மலர்கிறது.

ஒரே வலைப்பதிவால் தமிழ்மண அன்பர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற அக்கா பட்டங்களின் நாயகி, பட்ட வள்ளல் மதுமிதா அவர்கள் கொடுத்த பட்டங்கள் வீணாய்ப் போகக்கூடாது அல்லவா? அதனால் பட்டம் பெற்ற எனக்குத் தெரிந்த எல்லாருக்கும் அவர்களின் பட்டத்தைச் சொல்லி ஒரு முறை நன்றி கூறிக்கொள்கிறேன்.

பொறுமையின் சிகரம் காசி அவர்களே, ந்டத்துனர் திலகம் மதி கந்தசாமி அவர்களே, நடுநிலை நாயகன் ராம்கி அவர்களே, சிந்தனைச் செல்வி ரம்யா அவர்களே, வெற்றி விழா நாயகி எங்கள் அன்பு ஆசிரியை துளசி கோபால் அவர்களே, உரை வேந்தன் Sam ஐயா (அதாங்க தருமி ஐயா) அவர்களே, நட்பின் நாயகன் இந்த வார நட்சத்திரம் கணேஷ் அவர்களே, நாகரிக நேசன் இராமநாதன் அவர்களே, எரி தழல் (??) அன்பு நண்பர் சிவா அவர்களே, சிறுவர் நீதிக்கதை அரசு பரஞ்சோதி அவர்களே, செஞ்சொல் பொற்கொல்லன் ராகவன் அவர்களே, சர்வ குரு ஹரி கிருஷ்ணன் அவர்களே, பொறுமையின் சிகரம் என் மனதிற்கினிய என் துணைவியார் ச்ரீலேகா அவர்களே, என் மனைவியைத் தவிர வேறு எல்லோருக்கும் பட்டம் தந்த அக்கா மதுமிதா அவர்களே - உங்கள் அனைவருக்கும் முதற்கண் (கடைசிக்கண்?) என் நன்றி கலந்த வணக்கங்கள்.

என்ன ராகவன்...ஏன் வலைப்பதிவுகளை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வருத்தப்படுகிறீர்களா? என்ன செய்வது? ஐயன் வள்ளுவன் 'எண்ணித் துணிக கருமம்' என்று சொல்லியிருக்கிறாரே? :-)