Showing posts with label கூரத்தாழ்வான். Show all posts
Showing posts with label கூரத்தாழ்வான். Show all posts

Wednesday, April 21, 2010

சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!


"எம்பெருமானாரே. தண்டமும் பவித்ரமும் அல்லவோ ஒரு முக்கோல் பகவரான துறவியின் அடையாளங்கள். அவற்றை எங்கும் எப்போதும் தரித்துக் கொள்வது தானே துறவியரின் கடமை. தங்களின் தண்டமும் பவித்திரமும் என்று தேவரீரால் சொல்லப்பட்டவர்கள் தங்களின் முதன்மைச் சீடர்களான முதலியாண்டானும் கூரத்தாழ்வானும். அடியோங்கள் கூரத்தாழ்வானின் வைபவத்தைக் கொஞ்சமேனும் பேசியிருக்கிறோம். முதலியாண்டானின் வைபவங்களையும் பேசும் பாக்கியத்தை அடியோங்களுக்கு தேவரீர் அருள வேண்டும்!"

"சித்திரையில் புனர்பூசம் சிறக்க வந்த முதலியாண்டானின் வைபவத்தை நீர் பேசுவதற்கு எம்பெருமானின் திருவருள் கூடி வந்திருக்கிறது. இன்றே சித்திரை புனர்பூசம்! முதலியாண்டானின் பெருமைகளைப் பரக்க பேசும்!"

"ஆகா. தேவரீர் கருணையே கருணை.

அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே!

காரேய் கருணை இராமானுச இக்கடலிடத்தில் யாரே அறிபவர் நின் அருளாம் தன்மை?!"

***

இறைவனுடன் கூடவே இருந்து எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பது ஒரு வகை. அதனை இராமவதாரத்தில் இலக்குவனிடம் கண்டோம். அதுவே இராமானுச முனியின் வாழ்க்கையில் கூரத்தாழ்வானிடம் கண்டோம்.

இறைவனின் திருவுள்ள உகப்பை முன்னிட்டு இறைவனின் அருகாமையைக் கூடத் துறந்து இறை பணி செய்வது இன்னொரு வகை. அதனை இராமாவதாரத்தில் பரதனிடம் கண்டோம். இராமானுச முனியின் வாழ்க்கையில் அதனை முதலியாண்டானிடம் கண்டோம். ஆசாரியனின் திருவுள்ள உகப்பிற்காக தன்னுடைய கல்விப்பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு இராமானுசரின் ஆசாரியர் பெரிய நம்பிகளின் திருமகளார் அத்துழாயின் புகுந்த வீட்டிற்கு முதலியாண்டான் வேலைக்காரனாக சென்று வேலை செய்ததை நமது கண்ணபிரான் இரவிசங்கர் முன்பே இங்கு பேசியிருக்கிறார். அதனை முதலியாண்டானின் பிறந்த நாளான இன்று மீண்டும் ஒரு முறை படிப்போம்!

***

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே!
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தோன் வாழியே!
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே!
சீபாடியம் ஈடு முதல் சீர் பெறுவோன் வாழியே!
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே!
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே!
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே!
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதோறும் வாழியே!


திருவத்திகிரி எனப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் பேரருளாளன் வரதராசப் பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க! திருவருள் கூடிய பச்சைவாரணம் என்ற ஊரில் அவதரித்தவன் வாழ்க! சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சிறப்பு பெறும் படி அதில் பிறந்தவன் வாழ்க! ஸ்ரீபாஷ்யம் நூலை உடையவரிடமிருந்து முதல் ஆளாக சிறப்புடன் பெற்றவன் வாழ்க! உத்தமமான வாதூல குலம் உயர வந்தவன் வாழ்க! திருவரங்கத் திருநகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கைங்கர்யம் என்னும் நல்வழியில் திரும்பும்படி அழகிய மணவாளனை ஊரெல்லாம் தாங்கிச் செல்லும் சீர்பாதம் என்னும் கொத்தினை எம்பெருமானாரின் கட்டளைப்படி நிலைநாட்டியவன் வாழ்க! முதலியாண்டான் பொற்பதங்கள் எக்காலத்திலும் வாழ்க!

***

எம்பெருமானார் இராமானுசர் அவதரித்து பத்து வருடங்களுக்குப் பின்னர் பிரபவ வருடத்தில் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கும் இடையில் இருக்கும் 'பச்சைபெருமாள் கோயில்' என்னும் ஊரில் பிறந்தவர் தாசரதி என்ற இயற்பெயர் கொண்ட முதலியாண்டான். இவர் பிறந்த ஊருக்கு 'புருஷமங்கலம்', 'வரதராஜபுரம்', 'பச்சைமங்கலம்' என்ற பெயர்களும் உண்டு. இவருடைய திருத்தகப்பனார் பெயர் அனந்த நாராயண தீட்சிதர். இவருடைய திருத்தாயார் பெயர் நாச்சியார் அம்மன் என்னும் கோதாம்பிகை. இவருடைய தாய்மாமன் எம்பெருமானார். இவருடைய கோத்திரம் வாதூல கோத்ரம். எம்பெருமானாருடைய சீடர்கள் அனைவருக்கும் தலைவராக இருந்ததால் இவருக்கு முதலியாண்டான் என்ற திருப்பெயர் அமைந்தது.

நம்மாழ்வாரான சடகோபன்/சடாரி எம்பெருமானின் திருவடிநிலைகளாக இருந்து அருள்பாலிக்கிறார். அதே போல் எம்பெருமானாரின் திருவடிநிலைகளாக அவரது அந்தரங்க அடியாராக இருந்த முதலியாண்டான் கருதப்படுகிறார். இனி மேல் இதனை நினைவில் நிறுத்தி இராமானுசரின் சன்னிதிக்குச் செல்லும் போது 'சடாரி சாதிக்க வேண்டும்' என்று கேட்காமல் 'முதலியாண்டான் சாதிக்க வேண்டும்' என்று வேண்டுவோம்!

***

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்


யாருடைய திருப்பெயரால் எதிராசரான இராமானுசரின் திருவடிநிலைகள் அழைக்கப்படுகின்றனவோ அந்த தாசரதியின் திருவடிகளை நான் என் தலையில் அணிகிறேன்.

ஸ்ரீமத் தாசரதிம் வந்தே ராமானுஜ பதாஹ்வயம்
வாதூலாநாம் அலங்காரம் த்ரிதண்டாஹ்வய தேசிகம்


ஸ்ரீ ராமானுசரின் திருவடிகள் என்ற திருப்பெயரை உடையவரும், வாதூல கோத்திரத்தவர்களுக்கு அணிகலனைப் போன்றவரும், ஸ்ரீ ராமானுசரின் முக்கோலாகச் சொல்லப்படுபவரும் ஆன ஸ்ரீமத் தாசரதி என்னும் குருவை வணங்குகிறேன்.

அநந்த நாராயண கோதாம்பிகா கர்ப்ப ஸம்பவம்
பாகிநேயம் யதீந்த்ரஸ்ய பஜே தாசரதிம் குரும்


அநந்த நாராயண தீட்சிதருக்கும் கோதாம்பிகைக்கும் திருமகனாகப் பிறந்தவரும், எதிராசருக்கு மருமகனும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!

மேஷே புநர்வஸு திநே தாசரத்யம்ஸ ஸம்பவம்
யதீந்த்ர பாதுகாபிக்யம் வந்தே தாசரதிம் குரும்


மேஷ மாதமான சித்திரையில் புனர்பூச நாளில் தசரத குமாரனின் அம்சமாகப் பிறந்தவரும், எதிராசருடைய திருப்பாதுகைகள் எனப்படுபவரும் ஆன தாசரதி எனும் குருவை வணங்குகிறேன்!

ய: பூர்வம் பரதார்த்தித: ப்ரதிநிதிம் ஸ்ரீபாதுகாம் ஆத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாசரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ச்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹதி நோ தைவம் குலஸ்யோத்தமம்


யார் முற்காலத்தில் பரதனால் வேண்டிக்கொள்ளப்பட்டு அரசாளுவதற்கு தன் பிரதிநிதியாகத் தன் திருப்பாதுகைகளைத் தந்து அருளினானோ, அந்த ராமனே தாசரதி என்னும் பெயருள்ள ஆசாரியனாய் மீண்டும் வந்து நம்முடைய குலத்திற்கு மிகவும் உயர்ந்த தெய்வமான ச்ரி ராமானுச பாதுகைகளாக ஆகி எல்லா உயிர்களும் உய்யும்படி திருவருட் பேரரசை இங்கே தானே ஆண்டு கொண்டிருக்கிறான்!

தனது பாதுகைகள் கோசல சாம்ராஜ்யத்தை ஆண்டது போல் தானே இராமானுச பாதுகைகளாகி பக்தி சாம்ராஜ்யத்தை ஆளுகிறான் தாசரதி!

ஸ்ரீவைஷ்ணவ சிரோபூஷா ஸ்ரீராமானுஜ பாதுகா
ஸ்ரீவாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீதாசரதிரேததாம்


ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமுடிகளுக்கு அணிகலனாக இருக்கும் ஸ்ரீ ராமானுச திருவடிநிலைகளாக ஆகி, ஸ்ரீவாதூல குலத்திற்கு அணிகலனாக விளங்கும் ஸ்ரீதாசரதி என்னும் முதலியாண்டான் எங்கும் வெற்றி பெறுவாராக!

முதலியாண்டான் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடி நிலைகளே சரணம்!

Tuesday, February 02, 2010

மொழியைக் கடந்த பெரும்புகழான் கூரத்தாழ்வான்!

"இராகவ். எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் குமரன். எம்பெருமானார் வாழித் திருநாமத்தை எழுதி இரண்டு வாரத்திற்கு மேலாகிறதே. கூரத்தாழ்வானுடைய ஆயிரமாவது ஆண்டு நிறைவும் வந்துவிட்டது. இன்னும் அடுத்த பகுதி எழுதவில்லையே. ஏன்?"

"எம்பெருமானார் திவ்ய சரிதத்தைப் போல் கூரத்தாழ்வான் திவ்ய சரிதமும் எழுதிக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது இராகவ். எதை எழுதுவது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கிறது. அதனால் தான் தாமதம்".

"இதற்கு ஒரு வழி இருக்கிறது குமரன். வாழித் திருநாமத்தில் எந்த நிகழ்ச்சிகளைக் குறித்திருக்கிறார்களோ அதனை மட்டும் சொல்லுங்கள்".

"என் குழப்பத்தை நீக்க அது ஒரு நல்ல வழி தான் இராகவ். அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் என்ன என்று தொடர்ச்சியாக நீங்களே சொல்லுங்கள்".

"கூரத்தாழ்வான் பெருமையைப் பேசக் கசக்குமா? கட்டாயம் சொல்கிறேன் குமரன்."

***

இன்றையிலிருந்து (3-Feb-2010)சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன். சௌம்ய வருடம் (1010 CE), தை மாதம், ஹஸ்த நட்சத்திரம். காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில் வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் இராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர் என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான் என்ற திருப்பெயரே இக்குழந்தைக்கு நின்றது.


காஞ்சியில் இராமானுசர் தனது முப்பத்திரண்டாவது வயதில் வரதராசப் பெருமாளிடம் 'எதிராசர்' என்ற திருநாமத்துடன் கூடிய துறவினைப் பெற்றுத் திருக்கச்சி நம்பிகளால் ஒரு திருமடம் ஏற்படுத்தப்பட்டு அங்கே வாழ்ந்து வரும் போது கூரத்தில் வாழ்ந்த கூரத்தாழ்வான் அச்செய்தியை அறிந்து காஞ்சிபுரம் வந்து எதிராசரின் சீடரானார். வரதராசப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு இராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர். எப்போதும் இராமானுசரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். இராமானுசரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். பிறிதொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக்கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், இராமானுசரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.



***

ஒரு முறை இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் இராமானுசரின் திருமடத்திற்கு வந்தார்.

"இளையாழ்வாரே. எனக்கு ஒரு உதவி வேண்டும்".

"சுவாமி. தேவரீர் கட்டளை எதுவோ அதனைத் தெரிவித்து அருள வேண்டும்".

"எம்பெருமானாரே. திவ்ய தேசங்களில் இருக்கும் பெருமாள் திருமேனிகளை எல்லாம் அகற்றிவிட்டால் வைணவ சமயம் அழிந்துவிடும் என்று எண்ணி அதற்கு முன்னர் அப்பெருமாள் திருமேனிகளில் இருக்கும் தெய்வ சாந்நித்யத்தை அழிக்க வேண்டும் என்று சில தீயவர்கள் முனைந்திருக்கிறார்கள். அதற்கு அரசனின் துணையும் இருக்கிறது. அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மந்திர பூர்வமாக சில கிரமங்களைச் செய்யவேண்டும். அதனைச் செய்ய நான் செல்கிறேன். அப்போது என் பின்னே ஒரு வித்வான் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அக்காரியங்கள் முழுப்பலனையும் தரும். அப்படி வருபவர் அனைத்துக் கல்வியும் பெற்றிருந்தாலும் இன்னொருவர் பின் செல்வதா என்று சிறிதும் எண்ணாதவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நீர் என்னுடன் அனுப்ப வேண்டும்".

"சுவாமி. நம் குழாத்தில் அப்படிப்பட்டவர் யார் இருந்தாலும் அவரை நீங்களே தேர்ந்தெடுத்து அழைத்துக் கொள்ள வேண்டும்".

"உடையவரே. கூரத்தாழ்வானே அக்குணங்கள் எல்லாம் நிறைந்தவர். அவரைத் தர வேண்டும்".

குலப்பெருமை, செல்வப்பெருமை, கல்விப்பெருமை என்ற மூன்று குற்றங்களையும் கடந்த பெரும்புகழான் என்று கூரத்தாழ்வானை எல்லோரும் போற்றுவது உண்மை என்பது பெரிய நம்பிகள் கூரத்தாழ்வானைத் தேர்ந்தெடுத்ததில் நன்கு தெரிந்தது. குலப்பெருமையும் செல்வப்பெருமையும் கடத்தலே மிக அரிது. ஆனால் அவற்றைக் கடந்தவரும் உள்ளார்கள். அவற்றிலும் மிக அரிது கல்விப்பெருமையைக் கடப்பது. ஊரார் அறியாமல் அவரிடம் கல்வி கற்க வேண்டும் என்று வந்த கல்விப்பெருமை கூடிய ஒருவருக்கு ஒரு நூலைப் பயிற்றுவிக்கும் போது யாரோ அந்தப் பக்கம் வர, கற்க வந்தவரிடம் இருந்து நூலை வாங்கி வைத்துக் கொண்டு தான் அவரிடம் இருந்து கற்பதைப் போல் காட்டிக் கொண்ட கொஞ்சமும் கல்விப்பெருமை இல்லாத பணிவுக் குணம் மிக்கவர் கூரத்தாழ்வான்.

***

"கூரத்தாழ்வாரே. ஆளவந்தாரின் மனத்தில் இருந்த கடைசி ஆசைகளில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்குப் போதாயன ரிஷியின் குறிப்பு நூலான போதாயன விருத்தியின் அடிப்படையிலும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் அடிப்படையிலும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது. ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் நாதமுனிகளின் கருணையினால் நம்மிடம் இருக்கிறது. போதாயன விருத்தியோ காஷ்மீரத்தில் மட்டுமே தான் இருக்கிறது. அதனைப் பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு பாஷ்யம் எழுதலாம் என்று தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம். அரசனின் அனுமதியையும் பெற்று நேற்று போதாயன விருத்தியைப் பெற்றோம். ஆனால் அதனை யாருக்கும் காட்டாமல் வைத்திருந்த வித்வான்கள் அரசனின் மனத்தை மாற்றி இன்று அதனை மீண்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்களே? தெரிந்திருந்தால் முழு நூலையையும் நேற்றே படித்திருப்பேனே. இப்போது என்ன செய்வது?"

"சுவாமி. தேவரீர் வருந்த வேண்டாம். நேற்றிரவு அந்நூல் முழுவதையும் படித்துவிட்டேன்".

"ஆகா. அருமை அருமை. கூரத்தாழ்வாரே. நீர் ஏகசந்தகிராகியாயிற்றே. ஒரு முறை படித்தாலே முழுவதும் மனத்தில் நிறுத்திக் கொள்வீர். இனி கவலையில்லை. நாம் திருவரங்கம் சென்று அடைந்த பின்னர் பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதத் தொடங்குகிறேன். ஏதேனும் ஐயம் வந்தால் உம்மிடம் கேட்கிறேன். போதாயன விருத்தி என்ன சொல்கிறது என்பதை அப்போது சொல்லும்".

"சுவாமி. தேவரீர் என் ஆசாரியன். உங்களுக்குத் தோன்றும் ஐயங்களைத் தீர்க்கும் அளவிற்கு அடியேன் அறிவுடையேன் இல்லை. அப்படி நினைத்தாலும் செய்ய முயன்றாலும் அது பெரும் தவறு".

"சரி. இப்படி செய்யலாம். நான் உரையைச் சொல்லச் சொல்ல நீர் எழுதும். எங்காவது நான் சொல்லும் பொருள் போதாயன விருத்திக்கு மாறுபாடாக இருந்தால் எழுதுவதை நிறுத்திவிடும். அதனை நான் புரிந்து கொள்கிறேன். போதாயன விருத்திக்கு ஏற்ற பொருளை நான் சொல்லும் வரை நீர் மீண்டும் எழுத வேண்டாம்"

"தங்கள் கட்டளை சுவாமி".

எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் பிரம்மசூத்திரத்தின் உரையான ஸ்ரீபாஷ்யத்தை இந்த வகையில் எழுதி மீண்டும் காஷ்மீரத்திற்குச் சென்று அங்கிருக்கும் சரஸ்வதி பீடத்தில் அதனை அரங்கேற்றினர். சரஸ்வதி தேவியே அந்த உரையைப் பாராட்டி எம்பெருமானார்க்கு 'ஸ்ரீபாஷ்யக்காரர்' என்ற திருப்பெயரை அருளினாள்.



பிற்காலத்தில் தனது மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் உட்பட தன்னிடம் சீடர்களாக இருந்தவர்களுக்கு ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருளை மிக நன்றாகப் போதித்தார் கூரத்தாழ்வான்.

ஆளவந்தாரின் இறுதி ஆசைகளான - 1. வேதங்களைத் தொகுத்த வேதவியாசரின் பெயர் விளங்கச் செய்வது, 2. பராசர ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் இயற்றிய பராசரரின் பெயர் விளங்கச் செய்வது, 3. பிரம்மசூத்திரத்திற்கு உரை நூல் செய்வது என்ற மூன்று விருப்பங்களையும் இராமானுசர் நிறைவேற்ற கூரத்தாழ்வான் உறுதுணையாக இருந்ததை அவரது திருக்குமாரர்களின் திருப்பெயர்களிலிருந்தும் ஸ்ரீபாஷ்யம் இயற்றுவதிலும் பரப்புவதிலும் அவர் செய்த அருந்துணையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

***

கூரத்தாழ்வானுக்கு ஏறக்குறைய எண்பத்தி எட்டு வயது ஆகிவிட்டது. எம்பெருமானாருக்கோ ஏறக்குறைய எண்பது வயது. எட்டு ஆண்டுகளாக சோழ தேசத்தை விட்டு மேல் நாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் இராமானுசர். கூரத்தாழ்வான் எம்பெருமானார் தரிசனத்திற்காக (வைணவ சமயத்திற்காக) தன் தரிசனத்தை (கண்ணை) இழந்து நிற்கிறார். வயதில் மிகவும் முதிர்ந்த, இராமானுசரின் ஆசாரியரான பெரிய நம்பிகள் சமயக் குழப்பங்களினால் வந்த கொடுமைகளைத் தாங்க இயலாமல் கூரத்தாழ்வானோடு அரசவைக்குச் சென்ற போது கண்கள் பிடுங்கப்பட்டத் துன்பம் தாங்காது அரசவையிலிருந்து வரும் வழியிலேயே தனது இன்னுயிரை விட்டுவிட்டார். இப்படி வைணவ சமயத்திற்கு திருவரங்கத்தில் ஒரு தாழ் நிலை ஏற்பட்ட காலம் இது.

ஒரு நாள் தட்டுத் தடுமாறி எம்பெருமானாரது திருவடிகளே தனது கண்களாகக் கொண்டு திருவரங்கன் திருக்கோவிலுக்கு வருகிறார் கூரத்தாழ்வான்.

"இது அரசகட்டளை. இராமானுசனைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் கோவிலில் நுழைய அனுமதியில்லை"

"ஆகா. இது என்ன கொடுமை? வாயில் காப்போரே. இவர் கூரத்தாழ்வான். யாருக்கும் எதிரி இல்லை இவர். எல்லாருக்கும் நல்லவர். இவரைத் தடுப்பது தகாது"

"ஐயா. நீங்கள் மிகவும் நல்லவர்; யாருக்கும் எதிரி இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கும் அது நன்கு தெரியும். உங்களுக்கு இராமானுச சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்கள் ஆயின் கோவிலுக்குள் நுழைய அனுமதி தரப்படும்"

"ஐயோ இது என்ன இப்படி ஒரு நிலை அடியேனுக்கு வந்ததே. அனைவருக்கும் நல்லவனாக இருத்தல் மிகப்பெரிய ஆத்ம குணம். அப்படிப் பட்ட ஆத்ம குணம் ஆசாரியருடன் சம்பந்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இங்கே ஆசார்ய சம்பந்தத்தை விலக்குவதற்குப் பயனாகிறதே! ஐயா வாயில் காப்போரே! நம்பெருமாள் சம்பந்தம் போனாலும் போகட்டும்! எமக்கு எம்பெருமானார் சம்பந்தமே அமையும்!"

மிகுந்த வருத்தத்தோடு திருக்கோவிலை விட்டு வந்த கூரத்தாழ்வான் மேலும் அங்கே வசிக்க மனமின்றி திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அங்கே வசிக்கலானார்.

***

எம்பெருமானாருக்கு ஏறக்குறைய நூறு வயது. கூரத்தாழ்வானுக்கு நூற்றி எட்டு வயது. திருவரங்கத்திலும் சுற்று வட்டாரங்களிலும் வைணவ சமயத்திற்கு ஏற்பட்டிருந்த தாழ்வுகள் அகன்றுவிட்டன. அதனால் எம்பெருமானாரும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் திரும்பிவிட்டார்கள். திருமாலிருஞ்சோலையான அழகர்மலையில் வாழும் போது காஞ்சிபுரம் வரதராசப்பெருமாள் மேல் கூரத்தாழ்வான் வரதராஜ ஸ்தவம் என்ற ஒரு துதி நூலை இயற்றியிருந்தார். திருவரங்கத்தில் அதனைக் கண்ணுற்றார் இராமானுசர்.

"ஆகா. மிகவும் அருமையாக இருக்கிறதே. இதனைத் திருக்கச்சியில் வரதன் திருமுன் உரைத்தால் அவன் மிகவும் மகிழ்வானே. ஆழ்வானே. நீர் உடனே காஞ்சிக்குச் சென்று தேவராசப் பெருமாளின் திருமுன் இந்தத் துதியை விண்ணப்பம் செய்யும்"

"அப்படியே செய்கிறேன் சுவாமி"

"ஆழ்வான். அப்படி செய்தால் வரதன் மிகவும் மகிழ்வான். அப்போது என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். நீர் கண் பார்வையை வேண்டிப் பெற்றுக் கொள்ளும்"

***

திருக்கச்சி. வரதன் சன்னிதி. அர்ச்சகரின் மூலம் வரதனின் அருளப்பாடு கூரத்தாழ்வானுக்குக் கிடைக்கிறது.

"மிகவும் மகிழ்ந்தோம். உமக்கு என்ன வேண்டும்?"

"தங்கள் கிருபையே வேண்டும். அடியேனுக்கு வேறென்ன வேண்டும்?!"

"என் கிருபை என்றுமே உண்டு. வேறு என்ன வேண்டும்? ஏதேனும் நீர் கேட்டே ஆக வேண்டும்".

"அப்படியென்றால் அடியேன் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும். பகவானிடம் அபசாரப்பட்டால் பக்தனிடம் சரணடைந்து உய்ந்து போகலாம். ஆனால் பக்தனிடம் அபசாரப்பட்டால் அந்த பகவானாலேயே காக்க இயலாது. இப்படித் தான் தேவரீர் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறீர். அறிந்தோ அறியாமலோ அரசனைத் தூண்டிவிட்டு இராமானுசர் முதலிய பல பக்தர்களுக்குத் துன்பத்தைத் தந்துவிட்டான் நாலூரான். அவனை நீர் கைவிடாது அவனுக்கு நல்லகதியை அருள வேண்டும்"

"அப்படியே தந்தோம்"

இராமானுசரும் பல அடியார்களும் திருவரங்கத்தை விட்டு செல்லவும், பெரிய நம்பிகளின் உயிர் வேதனையுடன் விலகவும், தான் கண்களை இழக்கவும் காரணமான நாலூரானுக்கும் நல்ல கதி வேண்டிப் பெறும் கூரத்தாழ்வானின் கருணை, 'தான் ஒருவன் நரகம் சென்றாலும் தகும். மற்றவர் எல்லோரும் நற்கதி பெறவேண்டும்' என்று அனைவருக்கும் திருமந்திரப் பொருளைச் சொன்ன எம்பெருமானாரின் கருணைக்கு ஈடாக இருக்கிறது. ஆசாரியனுக்குத் தகுந்த சீடன். சீடனுக்குத் தகுந்த ஆசாரியன்.

***

"என்ன? உமது கண்களை வேண்டிப் பெறவில்லையா? நாலூரானுக்கு முக்தி வேண்டினீரா? உமது இயல்புக்குத் தகுந்ததைச் செய்தீர் ஆழ்வான். திருவரங்கனிடமாவது கண்களை வேண்டிப் பெறும். நீர் கண் பார்வையின்றி வருந்துவது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது"

இராமானுசரின் வாக்கின் படி திருக்கோவிலுக்குச் செல்கிறார் கூரத்தாழ்வான்.

"கூரத்தாழ்வான். அருளிச்செயல்களால் எம்மைத் துதித்ததில் மிகவும் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும்?"

"தேவரீர் கருணையே போதும் சுவாமி. வேறொன்றும் வேண்டாம்".

"ஆழ்வான். உமக்கும் உம் சம்பந்தம் உடையாருக்கும் வைகுந்தம் நிச்சயம் தந்தோம்"

"ஆகா. ஆகா. ஆகா. நம் ஆசாரியனான திருக்கோட்டியூர் நம்பிகளின் ஆணையை மீறி அனைவருக்கும் வரம்பறுத்துத் திருமந்திரப் பொருளை உரைத்ததால் நம் கதி என்னவோ என்று இருந்தோம். இன்று ஆழ்வானுக்கு அரங்கன் உம் சம்பந்தம் உடையோருக்கு வைகுந்தம் நிச்சயம் என்றான். கூரத்தாழ்வான் சம்பந்தம் பெற்றதால் நமக்கும் வைகுந்தம் உண்டு. வைகுந்தம் உண்டு"

மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது காவி மேலாடையை மேலெறிந்து ஆனந்தக் கூத்தாடினார் எம்பெருமானார். இராமானுச சம்பந்தம் எந்த வழியிலேனும் கிடைக்காதா என்று பல்லாயிரக்கணக்கானோர் வேண்டியிருக்க, கூரத்தாழ்வான் சம்பந்தத்தை இராமானுசர் கொண்டாடினார்.

***

"மிக நன்று இராகவ். கூரத்தாழ்வான் திருக்கதையில் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாக வாழித் திருநாமம் சொல்லும் பகுதிகளை மிக நன்றாகக் கூறினீர்கள். நம் இணைய எழுத்தாள நண்பர்கள் இரவிசங்கர், சுந்தர் அண்ணா, மௌலி, கைலாஷி ஐயா, ஷைலஜா அக்கா போன்றவர்கள் கூரத்தாழ்வானின் வைபவத்தை நிறைய இடுகைகளில் எழுதியிருக்கிறார்கள். நாமும் வருங்காலத்தில் எம்பெருமானாரின் ஆசாரியர்களைப் பற்றியும் சீடர்களைப் பற்றியும் நிறைய பேசலாம். இப்போது இருவரும் சேர்ந்து, கூரேசரது ஆயிரமாவது ஆண்டு நிறைவான இன்று (3-Feb-2010), அவரது வாழித் திருநாமத்தைப் பொருளுடன் சொல்லுவோம்"

சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!
ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே!!


சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே - சிறப்புகள் பொங்கும் திருமால் திருப்பதிகள் அனைத்தும் இன்னும் சிறப்பாக விளங்க பெரிய நம்பிகளுடன் பின் தொடர்ந்து வந்தவன் வாழ்க!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே - 'உமக்கும் உம்மைச் சேர்ந்தவர்களுக்கும் வைகுந்தம் தந்தோம்' என்று தென்னரங்கரின் உறுதியைப் பெற்று அவரது சிறந்த திருவருளைச் சேர்கின்றவன் வாழ்க!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே - உலகெலாம் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமனுசரின் திருவடி சம்பந்தமே வேண்டும்; திருவரங்கன் சம்பந்தமும் வேண்டாம் என்று ஆசாரியன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே - வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுசர் உரைநூல் (பாஷ்யம் - பாடியம்) எழுதும் போது அதன் உட்பொருளை அவர் உணரும் படி அவருக்கு உதவி, அந்த உரை நூல் காலமெல்லாம் நிலைக்கும் படி தன் மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் முதலியவர்களுக்கு பாடியத்தின் உட்பொருளைச் சொல்லுகின்றவன் வாழ்க!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே - அரசவையில் தன் கண்ணே போனாலும் வேத வேதாந்தங்களை எல்லாம் எடுத்துக் கூறி நாராயணன் சமயத்தை நிலை நாட்டியவன் வாழ்க!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே - தனக்கும் பல அடியார்களுக்கும் தீங்கு ஏற்படுவதற்குக் காரணமாக நின்ற வைணவன் நாலூரானும் முக்தி அடைய பேரருளாளனை வேண்டி நாலூரானுக்கும் முக்தி தந்தவன் வாழ்க!

ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே - ஏரின் பெருமை விளங்கும் தை மாதத்தில் அத்த (ஹஸ்த) நட்சத்திரத்தன்று உலகில் அவதரித்தவன் வாழ்க!

எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே - எழில் மிகுந்த கூரத்தாழ்வானின் திருவடிகள் வாழ்க வாழ்க!"

***

கூரத்தாழ்வானது ஆயிரமாவது ஆண்டு விழா நடப்பதைப் பற்றி சொல்லி கடந்த ஒரு வருடமாக கூரத்தாழ்வானின் ஆசாரிய பரம்பரையைப் போற்றும் இடுகைகளை இடும் வாய்ப்பை நல்கிய எம்பெருமானுக்கும் எம்பெருமானாருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இவர்கள் அனைவரின் இன்னருளையும் என்னிடம் கொண்டு வரும் இரவிசங்கருக்கும் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

கூரத்தாழ்வான் பிறந்த நாளை முன்னிட்டு இரவிசங்கர் தரும் பிறந்த நாள் பரிசு!



இரவிசங்கர் அனுப்பிய சில படங்கள் இங்கே, இங்கே, இங்கே பார்க்கலாம்.



நன்றி: திரு. ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

Friday, January 15, 2010

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 8 (எண் திசையும் புகழும் எதிராசராம் எம்பெருமானார் இராமானுசர்)




கூரத்தாழ்வானின் குருபரம்பரை என்ற தலைப்பில் வைணவ குருபரம்பரையின் முதல் ஆசாரியனான திருமால், அதற்கு பின் திருமகள், சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள் என்று ஆசாரிய பரம்பரையில் வந்த ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைத் தொடர் இடுகைகளாக இதுவரை பார்த்தோம்; இப்போது கூரத்தாழ்வானின் ஆசாரியரான எம்பெருமானார், இளையாழ்வார், உடையவர் முதலிய திருப்பெயர்களைக் கொண்ட இராமானுசரின் வாழித் திருநாமத்தைப் பார்க்கப் போகிறோம். கருணையே வடிவான இராமானுசர் தம் வாழ்நாளில் செய்த திருச்செயல்கள் எல்லாம் ஓர்இடுகையில் சொல்லி நிறைவு செய்ய இயலாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருடைய திவ்ய சரிதத்திலிருந்து பேசிக் கொண்டே இருக்கலாம்; இருக்கிறேன். அவரது வரலாற்றைச் சுருக்கமாக 'உடையவர்' என்னும் பதிவில் படிக்கலாம். இந்த இடுகையில் இராமானுசரின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில சித்திரங்களுடன் அவருடைய வாழித் திருநாமங்களைப் பொருளுடன் சொல்லிச் செல்லலாம் என்று எண்ணியிருக்கிறேன். அடியேன் இராமானுச தாசன்.

அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே




அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே – காஞ்சிபுரம் அத்திகிரி அருளாளப் பெருமாளின் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க.

அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே - கருணையே வடிவான திருக்கச்சி நம்பிகளிடம் இருந்து அத்திகிரி வரதன் சொன்ன ஆறு வார்த்தைகளைப் பெற்றவன் வாழ்க.

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே - மிகுந்த பக்தியுடன் வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கவுரையான ஸ்ரீபாஷ்யத்தை இயற்றியவன் வாழ்க.

பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே – பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் என்ற பத்து ஆழ்வார்களின் பாசுரங்களின் உட்பொருளை மிகவும் உணர்வு கலந்து கற்றவன் வாழ்க.

சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே - இறைவனாலேயே மயக்கம் இல்லாத அறிவு அருளப்பெற்றதால் தாமசம், ராஜசம் முதலிய குணங்கள் இல்லாமல் சுத்த சத்துவ குணமே கொண்டிருந்த மகிழ மாலை அணிந்த நம்மாழ்வாரின் திருவடிகளைத் தொழுது உய்ந்தவன் வாழ்க.

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே - தொன்மையான அறிவினைத் தந்த பெரிய நம்பிகளின் திருவடிகளைச் சரணடைந்தவன் வாழ்க.

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே - சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க.

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே - எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.



எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே


எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே - எட்டு திசைகளில் உள்ளவர்களும் எண்ணி வணங்கும் இளையாழ்வார் என்ற திருப்பெயர் பெற்ற துறவிகளின் அரசனான எதிராசன் வாழ்க.

எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே - எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் சீடர்களுக்கு எண்ணான்கு முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்ட ஈரடி மந்திரத்தை (த்வயம்) அதன் பொருளுடன் சொல்லி வைணவ சமயம் நிலை கொள்ளும் படி செய்தவன் வாழ்க.

பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே - கால வெள்ளத்தில் இல்லாத பொருள் எல்லாம் சொல்லப்பட்ட வேதத்தை அந்தக் குறைகள் எல்லாம் நீங்கும் படி உண்மைப் பொருள் அறிந்து அதனைக் கொண்டு பிரம்ம சூத்திர உரையான ஸ்ரீபாஷ்யத்தைச் செய்த பாஷ்யக்காரர் வாழ்க.

பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே - எதிர்த்து வந்தவர்களுக்கு எல்லாம் காலனைப் போன்ற திருமங்கையாழ்வாரின் திருவடிகள் இரண்டினையும் போற்றும் இராமானுசன் வாழ்க.

தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே - எம்பெருமானின் திருவடி நிலைகளான சடாரியான, குளிர்ந்த தமிழ் மறையைத் தந்த வள்ளல் நம்மாழ்வாரின் திருவடி நிலைகள் ஆனவன் வாழ்க.

தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே - மண்ணுலகையும் விண்ணுலகையும் திருவரங்கனும் திருவரங்கநாயகியும் தரப் பெற்று அவர்களின் சொத்துகள் அனைத்தையும் 'உடையவர்' என்ற திருப்பெயர் பெற்றவன் வாழ்க.

தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே - அலைகடல் சூழ்ந்த திருப்பெரும்பூதூரில் பிறந்த, எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் விருப்பம் உடையவர்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைத்து, தன் ஆசாரியன் சொல்லை மீறித் தான் நரகம் புகுந்தாலும் மற்ற எல்லோரும் உய்வடைவார்கள் என்று எண்ணி அனைவருக்கும் மந்திரத்தின் உட்பொருளைச் சொன்ன, எம்பெருமானையும் மிஞ்சும் கருணையே வடிவான எம்பெருமானார் வாழ்க.

சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே - சித்திரையில் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவன் வாழ்க வாழ்க.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே



சிறப்புகள் நிறைந்த எதிராசரின் திருவடிகள் வாழ்க. அவர் தனது இடுப்பில் அணிந்திருக்கும் சிவந்த காவி ஆடை வாழ்க. அழகு நிறைந்த சிவந்த உடல் எப்பொழுதும் வாழ்க. மார்பில் விளங்கும் முப்புரிநூல் வாழ்க. இணையாக இருக்கும் தோள்கள் வாழ்க. என்றும் சோர்வு கொள்ளாத தூய்மையான சிவந்த திருமுகச் சோதி வாழ்க. அந்த திருமுகத்தில் விளங்கும் தூய்மையான புன்முறுவல் வாழ்க. ஒன்றுக்கொன்று துணையான அவருடைய தாமரை மலர்க்கண்கள் வாழ்க. ஈராறு பன்னிரண்டு திருநாமம் (திருமண் காப்பு) அணிந்த அவருடைய எழில் மிகுந்த திருமேனி வாழ்க. அவர் இனிதாக அமர்ந்திருக்கும் இருப்போடு அவர் காட்டும் அழகிய ஞான முத்திரை வாழ்க.


அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே


அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே - மாயாவாதம் என்னும் அறுசமயச் செடியை அதன் அடியோடு மறுத்தவன் வாழ்க.

அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே - வேதங்களையும் வேதாந்தங்களையும் தவறாக பொருள் கொள்ளும் குதிருட்டிகள் எல்லா இடங்களிலும் அடர்ந்து வந்த காலத்தில் அவர்கள் அறவே இல்லாத படி செய்தவன் வாழ்க.

செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே - 'கலியும் கெடும் கண்டு கொண்மின்' என்று இவர் வருகையை முன்கூட்டியே நம்மாழ்வார் பாடிய படி வந்து எங்கும் நிறைந்திருந்த கலி புருடனின் கொடுமையைச் சிறிதும் இல்லாமல் தீர்த்துவிட்டவன் வாழ்க.

தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே - திருவரங்கநாதனுடைய செல்வம் முழுவதையும் வருங்காலம் முழுவதும் தடையின்றி எல்லா விழாக்களும் முறைப்படி நடக்கும் வகையில் திருத்தி வைத்தவன் வாழ்க.


மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே - வேத வேதாந்தங்கள் அனைத்திற்கும் தகுந்த பொருள் உரைத்தவன் வாழ்க.


மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே - நம்மாழ்வார் உரைத்த தமிழ் மறையாம் திருவாய்மொழி முதலிய பாசுரங்களை வளர்ந்தவன் வாழ்க.


அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே - அறத்தில் சிறந்தவர் வாழும் திருப்பெரும்பூதூரில் அவதரித்தவன் வாழ்க.


அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே - அழகில் சிறந்த துறவிகளின் அரசன் எதிராசர் திருவடி இணைகள் வாழ்க வாழ்க!

சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே!


சங்கரர், யாதவபிரகாசர், பாஸ்கரர், பிரபாகரர் முதலியவர்களின் மதங்களான மாயாவாதம் முதலியவை சாய்வுற, வாதம் செய்ய வருபவர்கள் யாரும் இல்லாமல் போவார்கள் என்று நான்கு வேதங்களும் மகிழ்ந்து 'இனி தவறான பொருள்கள் இன்றி வாழ்ந்தோம்' என்று மகிழ்ந்திடும் நாள்; வெம்மை தரும் கலிபுருடன் இனி இங்கே நம் வலிமை இல்லாமல் போய்விடும் என்று மிகவும் தளர்ந்திடும் நாள்; பூவுலகம் இனி தீயவர்களின் கூட்டம் குறைந்து நம் சுமை குறையும் என்று துயரின்றி விளங்கிடும் நாள்; திருமங்கை மன்னன், நம்மாழ்வார் முதலிய முன்னோர்களான ஆழ்வார்களின் பாசுரங்கள் நிலைபெறும் நாள்; என்றும் அழியாத திருவரங்கத் திருநகர், திருமலை திருப்பதி முதலிய திவ்ய தேசங்கள் உவகை கொள்ளும் நாள்; கயல் மீன்கள் நிறைந்த குளங்களும் கிணறுகளும் சூழ்ந்த வயலை உடைய சிறப்புடைய திருப்பெரும்பூதூரில் வந்த திருவுடையோன் இளையாழ்வார் என்னும் இராமானுசர் வந்து உதித்த நாள் (சித்திரை மாதத்) திருவாதிரைத் திருநாளே!

Wednesday, January 13, 2010

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 7 (பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள்)

"வா குமரன். எத்தனை நாளாயிற்று உன்னைப் பார்த்து. முன்பு வாரமொரு முறை வந்து கொண்டிருந்தாய். இப்போது பெரும் சம்சாரியாகிவிட்டாய் போலும். இந்த வாசுதேவனை மறந்தே விட்டாய். வருடமொரு முறை பார்ப்பதே அரிதாக இருக்கிறது."

"மன்னிக்க வேண்டும் ஐயா. உண்மை தான். கல்லூரி காலத்தில் வார இறுதியில் தவறாமல் வந்து உங்களிடம் கீதையும் பாசுரங்களும் கற்ற காலம் மிகவும் மகிழ்வான காலம். இப்போது வெளிநாட்டில் சென்று வசிப்பதால் மதுரைக்கு எப்போதோ ஒரு முறை தான் வருகிறேன். வரும் போது தான் உங்களை வந்து காண இயலுகிறது. மன்னிக்க வேண்டும்"

"பரவாயில்லை குமரா. மதுரை வரும் போதெல்லாம் வந்து பார்க்கிறாயே. அதுவே மகிழ்ச்சி"

"ஐயா. வழக்கம் போல் சில ஐயங்களுடன் தான் உங்களைக் காண இந்த முறையும் வந்திருக்கிறேன்"

"ஐயங்களா? சரி தான். கேள். கேள்"

"இராமானுசருக்கு ஆளவந்தார் குருவா? பெரிய நம்பிகள் குருவா?"

"பெரிய நம்பிகள் தான் எம்பெருமானாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தவர். அதனால் அவரைத் தான் குருவாகக் கொள்ள வேண்டும். ஆனால் பெரிய நம்பிகள் இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் போது ஆளவந்தாரே செய்வதாக எண்ணிக் கொள்ளும் படி கூறியதால் ஆளவந்தாரை எம்பெருமானாரின் குரு என்றும் சொல்லுவார்கள். (பஞ்ச சம்ஸ்காரம் - ஓர் உயிர், இறைவனுக்கே அடிமை என்பதை உறுதி செய்யும் ஐந்து பகுதிகளைக் கொண்ட ஒரு சடங்கு)

அது மட்டுமில்லை குமரன். ஆளவந்தாரின் ஐந்து சீடர்களிடம் எம்பெருமானார் வைணவ சமயத்தின் பல கூறுகளைக் கற்றார். அதனால் அந்த ஐந்து ஆசாரியர்களும் இராமானுசரின் ஆசாரியர்களே. சமயம் என்னும் நதி ஆளவந்தார் என்னும் ஒற்றை உருவில் இருந்து அவரின் ஐந்து சீடர்கள் என்னும் கிளை நதிகளாக மாறி பின்னர் இராமானுசரிடம் மீண்டும் ஒன்றாகக் கலந்தது என்று இதனைச் சுவையுடன் கூறுவார்கள்".

"இராமானுசரின் ஆசாரியர்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள் ஐயா".

"முதலில் இராமானுசரின் இரு ஆசாரியர்களைப் பற்றி சொல்கிறேன். கேள். அவ்விருவர்கள் பெரிய நம்பிகளும் திருக்கச்சி நம்பிகளும்".

"திருக்கச்சி நம்பிகளா? அவர் காஞ்சி வரதனுக்கு திருவாலவட்டக் கைங்கரியம் (விசிறும் பணி) செய்யும் போது வரதன் அவருடன் நேரில் பேசுவார் என்று படித்திருக்கிறேன். சரி தானா?"

"ஆமாம் குமரன். அவரே தான்"

***

இராமானுசர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தீர்த்த கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். பெருமாளின் அபிசேகத்திற்கும் மற்ற கோவில் பயன்பாடுகளுக்கும் பக்கத்தில் இருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதே அந்தப் பணி. அப்படி தொண்டு செய்து வரும் போது ஒரு முறை திருக்கோவிலில் திருக்கச்சி நம்பிகளைக் காணுகிறார்.

"வாரும் இளையாழ்வாரே. நலம் தானே?!"

"தேவரீர் ஆசிகளினால் அடியேன் நலமுடன் இருக்கிறேன் சுவாமி".

"ஆனால் உங்கள் முகம் ஏதோ குழப்பத்தால் வாடியிருக்கிறதே. அது ஏன்?"

"சுவாமி. அடியேன் மனத்தில் சில கேள்விகள் இருக்கின்றன. தேவரீர் திருவுளம் இரங்கி வரதனிடம் அக்கேள்விகளுக்கு விடை பெற்றுத் தரவேண்டும்".

"வருந்த வேண்டாம். உம் கேள்விகளுக்கு வரதனின் விடை என்ன என்று இன்றைய திருவாலவட்டப் பணியின் போது கேட்டுச் சொல்கிறேன்".

**

"காஞ்சிபூர்ணரே. ஏதோ எம்மைக் கேட்க எண்ணியிருந்தீர் போலிருக்கிறதே. ஏன் கேட்காமல் இருக்கின்றீர்?"

"சுவாமி. தேவரீர் திருக்கட்டளையை எதிர்நோக்கியே காத்திருந்தேன். இளையாழ்வார் ஏதோ கேள்விகளைத் தன் மனத்தில் கொண்டிருக்கிறாராம். அவற்றிற்கான விடைகளை உங்களிடம் கேட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறார். தேவரீர் திருவுளம் இரங்கிச் சொல்லியருள வேண்டும்"

"ஓ. இராமானுசனின் கேள்விகளா? அவை மிகப் பெரியவை. அந்த ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகள் விடைகளாகச் சொல்கிறேன். சென்று அவனிடம் சொல்லும்".

"ஆகட்டும் சுவாமி. அந்த ஆறு வார்த்தைகளைச் சொல்லியருள வேண்டும்".

"பரதத்துவம் நாமே.

பேதமே தரிசனம்.

உபாயமும் பிரபத்தியே.

அந்திமஸ்மிருதியும் வேண்டாம்.

பிறப்பின் இறுதியில் மோட்சம்.

பெரியநம்பிகளைக் குருவாக அடையட்டும்.


இவையே அந்த ஆறு வார்த்தைகள் கஜேந்திர தாசரே."

***


"இளையாழ்வாரே. வரதன் அருளிய ஆறு வார்த்தைகள் இவை. உமது திருவுள்ளத்தில் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இவை சரியான விடைகள் தானா என்று பாரும்".

வரதன் சொன்ன ஆறு வார்த்தைகளைச் சொல்கிறார்.

"ஆகா. அடியேன் தங்களுக்குப் பெரும் நன்றியுடையவன் ஆனேன் சுவாமி. பெருமாளின் பதில்கள் என் மனத்தில் இருக்கும் குழப்பங்களை எல்லாம் நீக்கின".

"அவ்வாறு நீர் நினைத்ததும் என்ன? வரதன் சொன்னதும் என்ன?"

"வேதங்களும் சாத்திரங்களும் பரதெய்வம் என்று பல தெய்வங்களைக் குறிக்கின்றன. எல்லா சம்பிரதாயத்தாரும் நாராயணனே பரம்பொருள் என்று அறுதியிட்டாலும் வேதங்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் மற்ற தேவதைகளையும் பரம்பொருள் என்று வேதம் சொல்வதைப் பார்க்க முடிகிறது. அதனால் குழப்பம் கொண்டிருந்தேன். மாயாவாதத்தார், பரசமயத்தார் முதற்கொண்டு முன்னோர் பலரும் சாதித்த படியே பரதத்துவம் தாமே என்று வரதன் பறை சாற்றினான்.

முத்தத்துவங்களான இறை, உயிர், இயற்கை என்னும் இவை ஒரே பொருள் தான் என்றும் வெவ்வேறு என்றும் கூறும் வேத வாக்கியங்கள் இருக்கின்றன. இவற்றுள் எதனை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. இயல்பில் உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகளாக இருப்பதால் அவை ஒன்றே என்று சொல்லலாம் என்றாலும் அவற்றின் இடையே இருக்கும் வேறுபாடுகளும் உண்மை என்பதால் அவை வெவ்வேறானவை என்று கொள்வதே சமயக் கொள்கை என்று பொருள்படும்படி பேதமே தரிசனம் என்று சொன்னான் வரதன்.

வேத வேதாந்தங்களில் இறைவனை அடையும் வழிகளாகப் பல வழிகளும் சொல்லியிருக்க எந்த நிலையிலும் இறைவனுக்கே அடிமையான உயிர் அந்த வழிகளைக் கடைபிடிப்பது எங்ஙனம் என்று வருந்தியிருந்தேன். உயிருக்கும் இறைக்கும் இயற்கையாக அமையும் அந்த தொடர்பிற்குத் தகுந்த வழியான - அவனே கதி என்று இருக்கும் - பிரபத்தியே வழி என்று சொன்னான் பேரருளாளன்.

அப்படி இயற்கை தொடர்பினாலே நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இருக்கும் பிரபத்தி வழியில் நின்றால் கீதையில் கண்ணன் சொன்னது போன்ற மரண காலத்தில் அவனை நினைப்பது என்ற அந்திம ஸ்மிருதி இயல்பின் வழியில் தானே அமையலாம்; அமையாமலும் போகலாம். அவ்வாறு அமையாமல் போனால் அவ்வுயிரின் கதி என்ன என்று கலங்கியிருந்தேன். அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தால் போதும்; அந்திமஸ்மிருதியும் வேண்டாம் என்று அருளினான் அத்திகிரி காளமேகம்.

அந்திமஸ்மிருதி இல்லையேல் அவ்வுயிருக்கு விடுதலை உண்டா என்ற கேள்விக்கு அப்பிறப்பின் இறுதியில் மோட்சம் என்று அருளினான் அச்சுதன்.

தேவரீரைக் குருவாக வரித்தேன்; தேவரீர் சாத்திர மரியாதையைச் சொல்லி தவிர்த்துவிட்டீர்கள். அதனால் நற்கதிக்கு வழியேது என்று கலங்கியிருந்தேன். பெரிய நம்பிகளை குருவாக அடைய வழி காட்டினான் வரதன்."

"ஆகா. அருமை அருமை இளையாழ்வாரே. ஆளவந்தார் 'ஆமுதல்வன் இவன்' என்று உம்மை குளிர கண் பார்வை செய்தது மிகப் பொருத்தமே. வரதன் காட்டிய வழியில் பெரிய நம்பிகளை சென்று அடையுங்கள்".

***

வரதன் காட்டிய வழியிலே பெரிய நம்பிகளை ஆசாரியராக அடைந்து அவர் காட்டிய வழியில் ஆளவந்தாருக்குப் பின்னர் வைணவ தலைமைப் பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் இளையாழ்வார் எம்பெருமானார் இராமானுசர். ஆளவந்தாருக்கு வந்த இராசபிளவை என்ற நோயை தான் அடைந்து அதனால் நோயுற்று வருந்திக் கொண்டிருக்கிறார் ஆளவந்தாரின் சீடர் மாறனேரி நம்பிகள். இவர் தாழ்ந்த குலம் என்று அக்காலத்தில் கருதப்பட்ட குலத்தில் பிறந்தவர். அந்தணரான பெரிய நம்பிகள் தன்னுடைய ஆத்ம சகோதரரான மாறனேரி நம்பிகள் ஆசாரிய பிரசாதமாக இந்த நோயை அடைந்து வருந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்து வருகிறார். மாறனேரி நம்பிகள் தம் காலம் முடிந்து ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) அவருடைய திருவுடலுக்கு அந்தணர்களுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்து எரியூட்டுகிறார் பெரிய நம்பிகள்.

"கேட்டீர்களா இந்த அநியாயத்தை. பிராமண குலத்தில் பிறந்து சாத்திர மரியாதையையே கெடுத்துவிட்டார் பெரிய நம்பி".

"ஆமாம் ஆமாம். இது பெரிய துரோகம் தான். காலம் சென்றவர் என்ன தான் தன் ஆசாரியரின் இன்னொரு சீடர் என்றாலும் சாத்திரம் சொன்ன வழி நடப்பது தானே அவருக்கும் அழகு; அவருடைய ஆசாரியருக்கும் அழகு. இப்படி ஒரு காரியத்தை அவர் செய்யலாமா?"

"இப்படி சாத்திரம் காட்டிய வழியிலிருந்து தவறிய பெரிய நம்பியை நாம் அனைவரும் ஒதுக்கி வைக்க வேண்டும். இனி மேல் நாம் யாருமே அவருடன் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது. இது நம் அனைவரையும் கட்டுப்படுத்தும். ஒத்துக் கொள்கிறீர்களா?"

"சரி தான். ஒத்துக் கொள்கிறோம். ஒத்துக் கொள்கிறோம்"

நாட்கள் செல்கின்றன. சாதிக்கட்டுப்பாட்டின் படி திருவரங்கத்து அந்தணர்கள் எல்லோரும், ஆளவந்தாரின் தொடர்பு கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அந்தணர்கள் எல்லோரும், பெரிய நம்பிகளுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். இது இராமானுசரின் திருவுள்ளத்தை நோகடிக்கிறது. இதற்குத் திருவரங்கனே வழி செய்ய வேண்டுமென்று வருந்தியிருக்கிறார்.

அப்போது திருவிழாக்காலம். அரங்கன் தனது திருத்தேரில் ஏறி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறான்.

"அடடா. இதென்ன தேர் நகர மாட்டேன் என்கிறதே. அனைவரும் கூடி இன்னும் நன்கு வலித்து இழுங்கள்".

"ஐயா. அனைத்து முயற்சிகளும் செய்தாயிற்று. என்ன முயன்றாலும் தேர் நகரவே மாட்டேன் என்கிறது".

"திருத்தலத்தாரே. இப்போது என்ன செய்வது?"

"அதைத் தான் நாமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னர் இப்படி நிகழ்ந்ததுண்டா?"

"இல்லை. இதுவே முதன்முறை."

"அப்படியென்றால் அரங்கனைத் தான் வேண்டிக் கொள்ள வேண்டும்."

"அரங்கா. இந்த சோதனையிலிருந்து எங்களை விடுவிக்க நீயே வழி காட்டியருள வேண்டும்".

அருச்சகர் மேல் அரங்கனின் ஆவேசம் ஏற்படுகிறது.

"திருத்தலத்தாரே. என் அடியவன் ஒருவனுக்கு இவ்வூர் மக்கள் தீங்கு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவனை ஒதுக்கிவைத்து இவர்கள் துன்புறுத்துவதால் வருந்தி இப்போது தன் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான் என் அடியவன். அவனிடம் இவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவனை வெளியே அழைத்து வந்து தீர்த்தம் சடாரி முதலிய மரியாதைகளைச் செய்தால் தான் தேர் நகரும்".

"ஆகா. அப்படிப்பட்ட அடியவர் யார்? யார் வீட்டின் முன் தேர் இப்போது நிற்கிறது? ஓ இது பெரிய நம்பிகளின் வீடு அல்லவா? அவரைத் தான் அரங்கன் சொல்கிறான்.

ஊரார்களே. அரங்கனின் கட்டளையை நீங்கள் கேட்டீர்கள். அதன் படியே நாம் செய்ய வேண்டும். வாருங்கள் சென்று பெரிய நம்பிகளைப் பணிந்து அழைத்து வருவோம்"

அரங்கனின் கட்டளைப்படி பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த சடாரி மரியாதைகளைச் செய்த பின்னர் தேர் நகர்கிறது. அன்று முதல் முன் போலவே ஊரார்கள் பெரிய நம்பிகளுடன் அனைத்து தொடர்புகளையும் கொள்கின்றனர். இளையாழ்வாரின் திருவுள்ளமும் மகிழ்ந்திருக்கிறது.

**

"ஆசாரியர்களின் திருக்கதைகளைச் சொன்னதற்கு நன்றி ஐயா. அவர்களது வாழித் திருநாமத்தின் பொருள் இப்போது நன்கு புரிகிறது."

"வாழித் திருநாமமா? சொல் குமரா. மீண்டும் ஒரு முறை கேட்டால் ஆனந்தமாக இருக்கும்"

"பெரிய நம்பிகளின் வாழித் திருநாமம்:



அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே


அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே. அழகிய இந்த உலகத்தில் பத்து ஆழ்வார்களது பாசுரங்களை ஆய்ந்து உரைப்பவன் வாழ்க.

ஆளவந்தார் தாளிணையை அடைந்து உய்ந்தோன் வாழியே. ஆளவந்தாரது திருவடிகள் இரண்டினையும் அடைந்து உய்வு அடைந்தவன் வாழ்க.

உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே. ஊரெல்லாம் ஒதுக்கி வைத்தாலும், தேவர்களும் தொழும் திருவரங்கநாதன் அவன் திருத்தேரை இவர் திருமாளிகை முன்பு நிறுத்தி அதன் மூலம் இவர் மேல் அவனுக்கு இருக்கும் உகப்பை ஊரெல்லாம் அறியும் படி செய்தான். அப்படி அரங்கேசனின் உகப்பை உடையவன் வாழ்க.

ஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியே. பெருமையில் சிறந்த மார்கழி மாதக் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைவன் வாழ்க.

வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே. மணம் மிகுந்த தாரை (மலர் மாலையை) அணிந்த வரதரின் ஆறு வார்த்தைகள் உண்மை ஆகும் படி இராமானுசருக்கு குருவாக அமைந்தவன் வாழ்க.

மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே. நம்மாழ்வாருக்கு நேரான மாறனேர் நம்பிகளின் இறுதிச் சடங்குகளைச் செய்து அவர் நல்கதி அடையவைத்தவன் வாழ்க.

எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே. எம்பெருமானாராம் இராமானுசமுனிவருக்கு நன்மையான சமயக்கருத்துக்களைச் சொன்னவன் வாழ்க.

எழில் பெரியநம்பி சரண் இனிது ஊழி வாழியே. அழகுடைய பெரிய நம்பிகளின் திருவடிகள் இனிது எல்லா காலங்களிலும் வாழ்க வாழ்க.

திருக்கச்சி நம்பிகளின் வாழித் திருநாமம்:



மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே
திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே


மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே - மலர்களின் மகரந்தங்கள் எங்கும் விளங்கும் பூந்தண்மல்லி (பூவிருந்தவல்லி, பூந்தமல்லி) என்றும் பெயர் பெற்று விளங்குமாறு அந்த ஊரில் பிறந்தவன் வாழ்க.

மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே - மாசி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் வந்து உதித்தவன் வாழ்க.

அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே - பேரருளாளனாம் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாளுடன் நேரடியாகப் பேசும் அதிசயம் செய்தவன் வாழ்க.

ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே - ஆறு வார்த்தைகளை திருப்பெரும்பூதூரில் பிறந்த பூதூரராம் இராமானுசருக்காக வரதராசப் பெருமாளிடம் கேட்டுச் சொன்ன தலைவன் வாழ்க.

திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே - பேரருளாளப் பெருமாளுக்கு விசிறி வீசும் சேவையைச் செய்தவன் வாழ்க.

தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே - அந்தப் பெருமாளின் மேல் தேவராச அட்டகம் என்ற துதி நூலைச் செய்தவன் வாழ்க.

தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே - மயக்கம் தீர்ந்த/தீர்க்கும் ஆளவந்தாரின் திருவடிகளை அடைந்தவன் வாழ்க.

திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே - திருக்கச்சி நம்பிகளின் இரு திருவடிகளும் வாழ்க வாழ்க."

***

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

Thursday, January 07, 2010

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 6 (ஆளவந்தார் யமுனைத்துறைவன்)

"வணக்கம் தேவராஜன் ஐயா. அடியேன்"

"வா குமரா. நலமாக இருக்கிறாயா?"

"உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகளினால் நலமாக இருக்கிறேன் ஐயா"

"இன்றைக்கு இங்கு வந்த நோக்கம் என்ன?"

"ஆளவந்தாரின் வாழித்திருநாமத்தைப் படித்துக் கொண்டிருந்தேன் ஐயா. அதில் சில ஐயங்கள். கேட்டுத் தெளிவு பெறலாம் என்றே வந்தேன்"

"அப்படியா! என்ன ஐயங்கள்?"

"அதற்கு முன் ஆளவந்தாரின் திருக்கதையைக் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா"

"சரி. சொல்கிறேன் கேள்"

***

இடம்: நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகளின் திருமாளிகை (சான்றோர்களின் சிறு வீட்டையும் திருமாளிகை என்பது வைணவ வழக்கு).
காலம்: ஈஸ்வரமுனிகளின் திருக்குமாரரான யமுனைத்துறைவன் சிறுவயதில் வேதங்களைக் கற்றுக் கொள்ளும் காலம்.

வேதங்களைக் கற்றுக் கொள்ளும் போது ஆசிரியர் ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதனை இரு முறை திருப்பித் திருப்பிச் சொல்லி மனப்பாடம் செய்வது வழக்கம். அதனைச் சந்தை சொல்லுதல் என்பார்கள். அப்படியே யமுனைத்துறைவனுடன் பயிலும் மாணவர்கள் அனைவரும் இரு முறை திருப்பித் திருப்பிச் சொல்லி பயின்று கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் முந்தைய நாள் படித்த பாடத்தையே மறு நாளும் படித்து வருவதும் உண்டு.

"யமுனைத்துறைவா. நீயும் மற்ற மாணவர்களைப் போல் வேதங்களைக் கற்றுக் கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாயே?"

"ஐயா. அவர்கள் ஓதினவிடத்தையே ஓதிக் கொண்டிருக்கிறார்கள்"

"ஓ. சந்தை சொல்கிறார்களா? அப்படி செய்தால் தானே வேத பாடம் மனதில் நிலைக்கும். நீயும் சென்று அவர்களுடன் ஓதுவாய்"

"ஐயா. அடியேனுக்கு இந்தப் பகுதி பாடம் ஆகிவிட்டது"

"அப்படியா? எங்கே சொல்!"

அந்தப் பகுதியை ஓரெழுத்தும் பிசகாமல் ஓரொலியும் பிசகாமல் யமுனைத்துறைவன் சொல்லுவதைக் கேட்டு அனைவரும் இவரின் மேதைமையைக் கண்டு வியக்கின்றனர். ஒரே ஒரு முறை ஆசிரியர் சொன்னதை உருப் போட்டு மனப்பாடம் செய்யும் திறன் யாருக்கு அமைந்திருக்கிறது? நான்கு வேதங்களையும் இப்படியே பல முறை உருப்போட்டு கற்காமல் ஒரே உருவில் கற்று மகிழும் இந்த சிறுவனை அனைவரும் வாழ்த்தினர்.

***

இடம்: சோழன் அரசவை
காலம்: அரசபுரோகிதன் ஆக்கியாழ்வான் செருக்கழியும் காலம்

பெரும்பண்டிதனான ஆக்கியாழ்வான் நாட்டில் இருக்கும் எல்லா புலவர்களையும் வென்று தனக்கு நிகர் யாருமில்லை என்றும் இன்னும் வாதப் போர் புரிந்து தன்னிடம் தோற்க யார் இருக்கிறார்கள் என்றும் அப்படியே யாராவது இருந்தால் அவர்களைத் தானாகவே வாதப்போருக்கு அழைப்பதும் என்று இருக்கிறார். யமுனைத்துறைவனின் ஆசிரியர் மஹாபாஷ்ய பட்டருக்கும் அப்படியே வாதப்போர் அழைப்பு வர அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு சிறுவனான யமுனைத்துறைவன் அரசன் அனுப்பிய பல்லக்கில் ஏறி சோழன் அரசவைக்கு வந்திருக்கிறார்.

"ஆகா. இந்தச் சிறுவனின் மேதைமை முகத்திலேயே தெரிகிறது. இவன் நிச்சயம் நம் ஆக்கியாழ்வாரை வாதத்தில் தோற்கடிப்பான்"

"தேவி. நம் ஆக்கியாழ்வார் எத்துணைப் பெரும்புலவர் என்று அறிந்துமா இப்படி சொல்கிறாய்? இவரோ கல்விக்கடலுக்குக் கரை கண்ட வயோதிகர். அவனோ சிறுவன். இவரை அவன் வெல்லுவது எங்ஙனம்?"

"அரசே. இந்தச் சிறுவன் தோலான் (தோல்வியடையமாட்டான்). அதில் எனக்கு உறுதியுண்டு. அப்படி அவன் தோற்றால் என்னை முரட்டு நாய்களுக்கு இரையாக இடலாம்"

"தேவி. அவன் தோற்பான் என்பதில் எனக்கு உறுதியுண்டு. அவன் வென்றானாகில் என் அரசில் பாதியை அவனுக்குத் தருகிறேன்"

"அரசே. வாதத்தைத் தொடங்கலாமா?"

"தொடங்குங்கள்"

"சிறுவா! உன் ஆசிரியரை அழைத்தால் நீ வந்ததென்ன?"

"ஐயா. தங்களை வாதப்போரில் வெல்ல அடியேனே போதும் என்பதால்"

"ஹாஹாஹா. சரியான வேடிக்கை. சரி தான். உன் பெயர் என்ன?"

"அடியேன் பெயர் யமுனைத்துறைவன்"

"யமுனைத்துறைவா. இந்த வாதத்தை விரைவில் முடிக்கும் வகையில் ஒரு உத்தி செய்யலாம். நீ உண்டு என்று சொல்வதை நான் இல்லை என்று சொல்வேன். நீ இல்லை என்று சொல்வதை நான் உண்டு என்று சொல்வேன். அப்படி சொல்ல இயலாவிட்டால் தோற்றவனாவேன். வென்றவர் தோற்றவர் தலையில் குட்டலாம்"

"அப்படியே ஐயா. இதோ மூன்று வாக்கியங்களைச் சொல்கிறேன். அவற்றை இல்லை என்று நிறுவுங்கள்.

உங்கள் அன்னை மலடியில்லை.

இந்த அரசன் சார்வபௌமன் (அனைத்துலகுக்கும் அரசன்; தூய்மையில் சிறந்தவன்).

இந்த அரசி கற்புக்கரசி"

'ஆகா. என்ன விபரீதம் இது?! சிறுவன் என்று அலட்சியமாக இருந்துவிட்டேனே. என் தாய் மலடி தான் என்று எப்படி என்னால் வாதிடமுடியும்?! அவள் மகன் நான் தான் இங்கே இவர்கள் முன் நிற்கிறேனே?! அரசன் சார்வபௌமன் இல்லை என்றோ அரசி பதிவிரதை இல்லை என்றோ இந்த அவையிலேயே நான் சொல்லத் தான் இயலுமா? சொல்லி உயிர் பிழைக்கவும் கூடுமா? நல்ல சங்கடம் வந்ததடா நமக்கு'

"யமுனைத்துறைவா. நான் தோற்றேன். இந்த வாக்கியங்களுக்கு மறுப்பாக என்னால் ஒன்றும் சொல்ல இயலாது".

"ஆகா. இது என்ன விந்தை?! நம் ஆக்கியாழ்வார் தோற்பதா? யமுனைத்துறைவரே! நீர் வென்றீர் என்று உறுதிபடுத்த வேண்டுமெனில் இந்த வாக்கியங்களை நீரே மறுத்துக் கூறும்! அப்படி கூற இயலவில்லை எனில் யாரும் இங்கே வென்றதாக ஆகாது"

"அப்படியே அரசே.

உலக வழக்கிலும் உண்மையிலும் இந்த வாக்கியங்களை மறுக்க இயலாது. ஆனால் வாதத்தில் சாத்திரப் பிரமாணம் என்று ஒன்று உண்டு. அதனைக் கொண்டு இந்த வாக்கியங்களை மறுக்க இயலும். இது வெறும் வாதத்திற்குத் தானே ஒழிய உண்மையில் இல்லை. இதனை ஏற்றுக் கொண்டால் மேலும் விளக்குகிறேன்"

"எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். விளக்குங்கள் யமுனைத்துறைவரே!"

"ஒரு மரம் தோப்பாகாது. ஒரு பிள்ளையைப் பெற்றவள் அந்தப் பிள்ளைக்கு என்ன ஆகுமோ என்று எப்போதும் பயந்து கொண்டே இருப்பதால் பெற்றும் பெறாதவள் ஆகிறாள். ஆக்கியாழ்வார் அவர் தாய்க்கு ஒரே பிள்ளை. அதனால் ஒரே பிள்ளை பெற்ற அவர் தாயாரை மலடி என்றும் சொல்வதில் தவறில்லை.

நீர் உமது நாட்டிற்கு மட்டுமே அரசன். உம் நாட்டை விட்டுச் சென்றால் உமக்கு மரியாதை இல்லை. அதனால் உம்மை சார்வபௌமன் (எல்லா பூமியையும் உடையவன்) என்று சொல்ல முடியாது என்னில் அதுவும் தவறில்லை. அது மட்டும் இன்றி குடிமக்கள் செய்யும் பாவங்களில் அரசனுக்கும் பங்கு உண்டு என்று சாத்திரங்கள் சொல்வதால் நீங்கள் பாவமே இல்லாத தூய்மையானவர் என்றும் சொல்ல இயலாது.

திருமணத்தின் போது தெய்வங்களான சோமன், கந்தர்வன், அக்னி என்னும் மூன்று பேரை ஒரு பெண் குறியீட்டு முகமாக மணந்து கொண்ட பின்னரே ஒரு மனிதனை மணக்கிறாள். அதனால் நடப்பில் கற்புக்கரசியாக அரசியார் இருந்தாலும் ஒரு வாதத்திற்காக அரசியார் நான்கு பேரை மணந்தவர் என்று சொல்லலாம்."

"ஆகா. ஆகா. ஆகா. அருமையான விளக்கங்கள். யமுனைத்துறைவா. நீ வென்றாய் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாம் முன்பே சொன்னது போல் தோற்ற என் தலையில் குட்டுவாய்"

"ஐயா. நீங்கள் வயதில் மூத்தவர். நானோ சிறுவன். நான் தங்கள் தலையில் குட்டுவது தகாது. என்னை வற்புறுத்தாதீர்கள்"

"அடடா. என்னே இந்த சிறுவனின் பணிவு. தேவி. நீ சொன்னது போல் இந்தச் சிறுவன் வென்று விட்டான். நானும் சொன்னதைப் போல் என் அரசில் பாதியை இவனுக்குத் தருகிறேன். இனி நீ நாய்களுக்கு இரையாக வேண்டாம்.

இந்த சிறுவனை அருகில் அழைத்துக் கொண்டு வாருங்கள்"

யமுனைத்துறைவர் வெற்றி பெற்றதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரத்துடன் அவரைத் தங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டு அரசனுக்கும் அரசிக்கும் அருகில் கூட்டி வந்தார்கள். அருகில் வந்ததும் அரசி மிகவும் அன்புடன் சிறுவனான யமுனைத்துறைவனை 'ஆளவந்தீரே' என்று சொல்லி உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டாள். ஆளவந்தாரும் அரசன் தந்த பாதி நாட்டை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

***

'நம் ஆசாரியர் அவரது ஆசாரியரின் ஆசையை நம்மிடம் தெரிவித்துவிட்டு திருநாட்டுக்கு எழுந்தருளி (காலமாகி) வெகு நாட்கள் ஆகின்றன. நம்மால் இன்னும் யமுனைத்துறைவனைச் சென்று காண இயலவில்லையே. எப்போது அவர் மாளிகைக்குச் சென்றாலும் கடுங்காவல் இருக்கிறது. உள்ளே சென்று அரசனைக் காண இயலவில்லை. என்ன செய்வது?'

நாதமுனிகள் தன் சீடரான உய்யக்கொண்டாரிடமும், உய்யக்கொண்டார் தன் சீடரான மணக்கால் நம்பியிடமும் தந்திருந்த கட்டளையைப் பற்றி மணக்கால் நம்பி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தன் பேரன் யமுனைத்துறைவன் தக்க வயது வந்த பின்னர் அவனிடம் வைணவ சமயத் தலைமைப் பொறுப்பை தர வேண்டும் என்பது நாதமுனிகளின் கட்டளை. அதனை நிறைவேற்றத் தான் தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் வயோதிகரான மணக்கால் நம்பிகள்.

'இன்றைக்கும் ஒரு முறை யமுனைத்துறைவன் மாளிகைக்குச் சென்று பார்ப்போம்".

ஆளவந்தாரின் மாளிகைக்குச் சென்று பார்த்தால் வழக்கம் போல் கடுங்காவல் இருக்கிறது. உள்ளே செல்ல இயலவில்லை. அந்த நேரத்தில் மாளிகையில் சமையல் செய்யும் அந்தணர் ஒருவர் அங்கே வருகிறார்.

"அந்தணரே. அரசருக்கு மிகவும் பிடித்த உணவு எது?"

"பெரியவரே. அவருக்குத் தூதுவளைக்கீரை என்றால் மிகவும் பிடிக்கும். நானும் மாதம் ஒரு முறையாவது அக்கீரையைச் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அக்கீரை கிடைப்பதில்லை"

'இதனை முயன்று பார்த்தால் என்ன? நம் வீட்டிற்கு அருகில் தூதுவளைக் கீரை தழைத்து வளர்கிறது. அதனைக் கொண்டு வந்து கொடுத்தால் யமுனைத்துறைவன் எங்கிருந்து கிடைத்தது இந்தக் கீரை என்று கேட்பான். இந்த சமையல்காரரும் நம்மைப் பற்றி சொல்ல அவன் நம்மைப் பார்க்க விரும்பலாம். அப்படியே செய்து பார்ப்போம்'

"அந்தணரே. இனி வருந்த வேண்டாம். நாளை முதல் தினந்தோறும் தூதுளைக்கீரையை நான் கொணர்ந்து தருகிறேன்"

"ஆகா. அப்படியே செய்யுங்கள் பெரியவரே. அரசர் மிகவும் மகிழ்வார்"

தொடர்ந்து ஆறு மாதங்கள் தினந்தோறும் மணக்கால் நம்பிகள் யமுனைத்துறைவரின் சமையல்காரரிடம் தூதுவளைக் கீரையைத் தந்து வருகிறார். ஆனால் யமுனைத்துறைவரைப் பார்க்கும் வாய்ப்பு தான் இன்னும் கிடைக்கவில்லை. மிகவும் வருந்திய மணக்கால் நம்பிகள் சில நாட்கள் கீரையைத் தராமல் விடுகிறார்.

"பரிசாரகரே. சில நாட்களாக தூதுவளைக் கீரையைக் காணவில்லையே. ஏன்?"

"அரசே. ஆறு மாதங்களாக ஒரு அந்தணப் பெரியவர் அக்கீரையைத் தந்து வந்தார். சில நாட்களாக அவர் வரவில்லை. அதனால் தான் சாப்பாட்டில் கீரை இல்லை"

"ஆறு மாதங்களாக வருகிறாரா அந்தப் பெரியவர். அடடா. அவருக்கு என்ன தேவையோ? கவனிக்காமல் விட்டுவிட்டோமே. பரிசாரகரே. அடுத்த முறை அவர் வந்தால் எனக்குச் சொல்லுங்கள்"

மறுநாளே மணக்கால் நம்பிகள் கீரையுடன் வர சமையல்காரர் யமுனைத்துறைவரிடம் சொல்லி அவர் உத்தரவு பெற்று மணக்கால் நம்பிகளை யமுனைத்துறைவரிடம் அழைத்துச் சென்றார்.

"ஐயா. வாருங்கள். இந்த இருக்கையில் அமருங்கள். நீங்கள் ஆறு மாதங்களாக அடியேனுக்காக கீரை தந்து வருகிறீர்களாமே. அது எதற்காக? உங்களுக்கு ஏதேனும் செல்வம் வேண்டுமா? நிலம் வேண்டுமா?"

"ஆளவந்தாரே. எனக்கு அதெல்லாம் வேண்டாம். உங்கள் முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் என்னிடம் இருக்கிறது. அது இருக்கும் இடம் நான் அறிவேன். உமக்கு அந்த செல்வத்தைத் தரவே உம்மைக் காண விரும்பினேன். அந்த செல்வத்தை நீர் அடையும் காலம் வரும் வரையில் நான் இங்கே தடையின்றி வந்து செல்லும்படி ஆணையிட வேண்டும்"

"அப்படியே ஐயா"

அரசரின் ஆணை இருந்ததால் மணக்கால் நம்பி எந்த தடையும் இன்றி ஆளவந்தாரைத் தினந்தோறும் காண இயன்றது. பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் ஆளவந்தாருக்கு கற்பித்தார் மணக்கால் நம்பி. பயிர் முதிர்ந்து வர வர தலைசாய்வதைப் போல கீதையைக் கற்க கற்க ஆளவந்தாருக்கு அவரது முன்னோர் செல்வத்தை அடையும் மனநிலை முழுதும் தோன்றியது. இதுவே தக்க தருணம் என்று எண்ணி மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைத் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று 'இதுவே உம் முன்னோர் சொத்து' என்று திருவரங்க நாதனைக் காட்டியருளினார்.

அன்று முதல் நிலையாக திருவரங்கத்திலேயே இருந்து வைணவத் தலைமையை ஏற்றுக் கொண்டார் ஆளவந்தார்.

***

"மிக்க நன்றி ஐயா. யமுனைத்துறைவரின் திருக்கதையைக் கேட்ட பின்னர் அவரது வாழித்திருநாமத்தின் வரிகள் மிக நன்றாகப் புரிகின்றன. அந்தப் புரிதலைச் சொல்கிறேன். அவை சரி தானா என்று சொல்லுங்கள்"

"ஆகட்டும் குமரா. சொல்"

"மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சை இட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே
கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்திராடத்துக் கால் உதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

மச்சு அணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே! மாடங்கள் நிறைந்த, ஏழு மதில்களால் சூழப்பட்ட திருவரங்கத்தை வைணவ தலைமைத் தலமாக ஆக்கி வாழ்வித்தவன் வாழ்க! ஆளவந்தார் காலத்தில் தான் திருவரங்கத்தில் நிலையாக வைணவத் தலைமைப் பீடம் அமைந்தது. அதற்கு முன்னர் நாதமுனிகள் காலத்திலும் மற்ற ஆசாரியர்கள் காலத்திலும் திருவரங்கத்திற்கு முதன்மை இருந்தாலும் வைணவத் தலைமைப் பீடம் அங்கே நிலையாக அமையவில்லை. ஆளவந்தாரே அப்படி அமைத்து திருவரங்கத்தை வாழ்வித்தவர்.

மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே! நான்கு வேதங்களையும் ஒரே தடவை சொல்லி மகிழ்ச்சியுடன் கற்றவன் வாழ்க! மற்றவர் போல் பல முறை சொல்லி வேதங்களைக் கற்காமல் ஒரே தடவையிலேயே வேதங்களைக் கற்கும் மேதைமை கொண்டவர் ஆளவந்தார்.

பச்சை இட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே! பச்சை என்னும் தூதுவளைக் கீரையைத் தந்து, திருத்தி ஆட்கொண்ட ராமமிச்ரரான மணக்கால் நம்பிகளின் சீடராக ஆகி அவரது திருவடிகளை என்றும் போற்றுபவன் வாழ்க!

பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே! பாஷ்யக்காரர் என்று பெயர் பெற்ற இராமானுசர் உய்யும்படி அவரைக் குளிரக் கண் பார்வை செய்தவன் வாழ்க! இராமானுசர் காஞ்சிபுரத்தில் அத்திகிரி வரதன் சன்னிதியில் திருப்பணி செய்து வரும் போது அங்கு வந்து தூரத்தில் இருந்து இராமானுசரைக் கண்டு 'ஆமுதல்வன் இவனே. நம் சமயத்தை நிலை நிறுத்தப் போகிறவன் இவனே' என்று சொல்லி இராமானுசரைக் குளிரக் கண் பார்வை செய்தவர் ஆளவந்தார்.

கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே! காஞ்சிபுரம் அத்திகிரி வரதனான பேரருளாளனிடம் இராமானுச முனியை வைணவ சமயம் விளங்கத் தந்தருளுமாறு பேரருளாளன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!

கடக உத்திராடத்துக் கால் உதித்தான் வாழியே! ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவன் வாழ்க! சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் நடை பயிலுவதால் எந்த மாதத்தில் எந்த ராசியில் இருக்கிறானோ அந்த மாதத்திற்கு அந்த ராசியைப் பெயராகக் கூறும் வழக்கம் உண்டு. அதன் படி கடகராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம்.

அச்சம் அற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே! வைணவ சமயம் தழைக்க வேண்டுமே என்ற தனது அச்சம் இராமானுசரால் தீர அதனால் மன மகிழ்ச்சி அணைந்தவன் வாழ்க!

ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே! ஆளவந்தாரின் திருவடிகள் இரண்டும் எப்போதும் வாழ்க வாழ்க!

பொருள் சரி தானா ஐயா?"

"சரி தான் குமரா"

"அன்று இராமானுசரைத் தர வேண்டி அத்திநகர் தேவராஜனிடம் பணிந்தார் ஆளவந்தார். அவருடைய வாழித் திருநாமத்தின் பொருள் வேண்டி இன்று அடியேனும் தேவராஜனிடம் பணிந்தேன்.

மிக்க நன்றி ஐயா!"

Monday, December 21, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 5 (மணக்கால் நம்பி)

தமிழக வைணவ குருபரம்பரையில் திருமால், திருமகள், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார் ஆகியோரின் வாழித் திருநாமங்களை இதுவரைப் பார்த்திருக்கிறோம். இன்று உய்யக்கொண்டாரின் சீடரான மணக்கால் நம்பியின் வாழித் திருநாமத்தைப் பார்க்கப் போகிறோம்.

"இராதா மோகன். இரவி உய்யக்கொண்டாரைப் பற்றி சொல்லும் போது அவருடைய சீடரான மணக்கால் நம்பியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னார். அவரைப் பற்றி சொல்லுங்களேன்".

"என்ன குமரன் விளையாடுகிறீர்களா? உங்களுக்கு மணக்கால் நம்பியைப் பற்றி தெரியாதா என்ன?"

"கொஞ்சம் தெரியும் இராதா. அவர் உய்யக்கொண்டாருடைய சீடர் என்றும் நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாருடைய ஆசாரியர் என்று தெரியும். மற்ற படி ஒன்றும் தெரியாது".

"சரி. எனக்கு அவரைப் பற்றித் தெரிந்த சிலவற்றைச் சொல்கிறேன்.

மணக்கால் நம்பியின் இன்னொரு பெயர் இராமமிச்ரர். பரசுராமன், இராமன், பலராமன் இம்மூவரையும் முதல் மூன்று இராமர்கள் என்றும் இவரை நான்காவது இராமர் என்றும் சொல்வார்கள். திருச்சிக்கு அருகில் இருக்கும் அன்பில் என்ற கிராமத்தில் பிறந்தவர்."

"கூரத்தில் பிறந்தவர் கூரத்தாழ்வான் என்று பெயர் பெற்றதைப் போல் மணக்கால் என்ற ஊரில் பிறந்ததால் இவருக்கு மணக்கால் நம்பி என்று பெயர் வந்ததாக நினைத்தேனே. அது தவறா?"

"அதுவும் ஒரு வகையில் சரி தான் குமரன். அன்பில் என்ற ஊரில் இருந்த ஒரு பகுதிக்கு மணக்கால் என்ற பெயர் இருந்தது என்று சொல்லக் கேள்வி. ஆனால் மணக்கால் நம்பியின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் அவருக்கு இந்தத் திருப்பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்".

"எந்த நிகழ்ச்சி அது இராதா?"

"உய்யக்கொண்டாரின் மனைவியார் மறைந்த பின்னர் உய்யக்கொண்டாரின் வீட்டு மேற்பார்வையையும் சமையல் வேலைகளையும் இராமமிச்ரரே ஏற்றுக் கொண்டார். உய்யக்கொண்டாருக்கு சிறுமியர்களான இரு மகள்கள் இருந்தனர். அவர்களை தாயைப் போல் வளர்த்தார் இராமமிச்ரர். ஒரு முறை அச்சிறுமியர் ஆற்றுக்குச் சென்று நீராடி வரும் போது வழியில் இருந்த சேற்றில் கால் வைக்கத் தயங்கினார்கள். அதனைக் கண்ட இராமமிச்ரர் அச்சேற்றில் தானே விழுந்து தன் உடலின் மேல் அச்சிறுமியர் ஏறிச் செல்லுமாறு சொன்னார். அதே போல் அவர்கள் செய்ய அவர்களின் காலடித் தடங்கள் அவர் உடலில் விழுந்தன. மணற்கால் தடங்கள் பெற்றதால் அவருக்கு மணக்கால் நம்பி என்ற பெயர் வந்தது".

"அடடா. அவருடைய ஆசாரிய பக்தியை என்றென்றும் எல்லோரும் நினைத்து நல்வழி காணும்படியாக அவருக்கு இந்தத் திருப்பெயரே நிலைத்துவிட்டது போலும்".

"ஆமாம் குமரன். ஆசாரியன் மட்டுமின்றி அவருக்குத் தொடர்புடைய எல்லோரும் நம்மை ஆளும் உரிமையுடையவர்கள் என்று எண்ணுவதும் அதே போல் நடந்து கொள்வதும் தான் சீடனுக்கு இலக்கணம் என்று சொல்வார்கள். அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்தவர் இந்த நான்காம் இராமர்".

"இராதா. வெகு நாட்களாக எனக்கு ஒரு ஐயம் உண்டு. நாதமுனிகளின் பேரர் தானே யமுனைத்துறைவனான ஆளவந்தார். அப்படியிருக்க நேரடியாகத் தன் பேரனுக்குத் தானே உபதேசம் செய்யாமல் ஏன் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்?"

"குமரன். நாதமுனிகள் மறைந்த போது ஆளவந்தார் சிறுவர். அதனால் தான் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்".

"ம்ம். அது சரி. ஆனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடுவில் இரு ஆசாரியர்கள் வந்துவிடுகிறார்களே. ஏன் அப்படி?"

"உய்யக்கொண்டார் நாதமுனிகளை விட சில வருடங்களே இளையவர். மணக்கால் நம்பிகள் உய்யக்கொண்டாரை விட சில வருடங்களே இளையவர். ஒருவருக்கு அடுத்து ஒருவர் மறையும் காலம் வந்ததால் ஆளவந்தாருக்குக் குருவாய் இருக்கும் பொறுப்பை ஒருவர் அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டி வந்தது. நாதமுனிகள் நேரடியாகத் தன் பேரனுக்கு உபதேசம் தர விரும்பினார். ஆனால் காலம் வந்துவிட்டதால் அந்தப் பொறுப்பை உய்யக்கொண்டாருக்குத் தந்தார். அவரும் ஆளவந்தாரைச் சீடராய் அடையும் நேரத்திற்கு முன்னரே மறைய வேண்டி வந்ததால் மணக்கால் நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். அதனாலேயே நாதமுனிகளை ஆளவந்தாரின் நேரடி ஆசாரியராகச் சொல்லும் வழக்கமும் உண்டு".

"இப்போது புரிகிறது இராதா. நன்றி".

"இன்னொன்றும் சொல்ல வேண்டும் குமரன். சேனை முதலியாரின் அம்சம் நம்மாழ்வார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். சேனை முதல்வரான விஷ்வக்சேனரின் சேனைத்தலைவர்கள் கஜானனர், குமுதர், குமுதாட்சர், ஹரிவக்த்ரர் என்பவர்கள். கஜானனர் நாதமுனிகளாகவும், குமுதர் உய்யக்கொண்டாராகவும், குமுதாட்சர் மணக்கால் நம்பியாகவும், ஹரிவக்த்ரர் ஆளவந்தாராகவும் அவதரித்தார்கள் என்றும் சொல்லுவார்கள்".

"ஆகா. அருமை அருமை. மிக்க நன்றி இராதா. இப்போது மணக்கால் நம்பிகளுடைய வாழித் திருநாமத்தைப் படித்தால் நன்கு புரியும் என்று நினைக்கிறேன்".

***

தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசி மகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே


உலகம் உய்யும் வகையில் தமிழ் மறைகளை நிலை நாட்டியவரான உய்யக்கொண்டாரின் திருவடிகளைத் தன் தலையில் ஏந்திக் கொள்ளும் மணக்கால் நம்பி வாழ்க!

தென்னரங்கரின் சிறந்த அருளை என்றும் நினைத்திருப்பவர் வாழ்க!

தசரதன் மகனான இராமனின் திருநாமம் உலகில் தழைக்கும் வகையில் நான்காவது இராமனாக வந்தவர் வாழ்க!

தமிழ் மறைகளை மீட்டுத் தந்த நாதமுனிகளின் மகிழ்ச்சியை நிலைநாட்டியவர் வாழ்க!

அன்புடன் உயர்ந்தவரான ஆளவந்தாரை நல்வழியில் செலுத்தியவர் வாழ்க!

நீள் நிலத்தில் பத்து ஆழ்வார்களின் பாசுரங்களை நிலை நிறுத்தியவர் வாழ்க!

மாசி மகம் தன்னில் உலகம் விளங்க வந்து உதித்தவர் வாழ்க!

திருமாலே என்னும் படியான மணக்கால் நம்பி திருவடிகள் உலகத்தில் வாழ்க வாழ்க!

Friday, October 16, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 4 (உய்யக்கொண்டார்)

கூரத்தாழ்வானின் ஆசாரிய பரம்பரையில் திருமால், திருமகள், சேனைமுதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள் ஆகியோரின் வாழித் திருநாமங்களை இதுவரை பார்த்திருக்கிறோம். இன்று நாதமுனிகளின் சீடரான உய்யக்கொண்டாரின் திருநாமத்தைப் பார்க்கிறோம்.

"இரவி. உய்யக்கொண்டாரைப் பற்றி எழுதலாம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர் பெயர் மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது. அவரைப் பற்றி சொல்லுங்களேன்"

"குமரன். இது அறிவினா தானே? என்னைச் சோதித்துப் பார்க்கிறீர்களா?"

"இல்லை இரவி. உண்மையாகவே தான் சொல்கிறேன். உய்யக்கொண்டார் நாதமுனிகளின் சீடர் என்று மட்டுமே தெரியும். வேறொன்றும் தெரியாது"

"சரி. நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் என்று நம்பி அவரைப் பற்றி சொல்கிறேன்.

உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர். திருவெள்ளறையில் பிறந்தவர். இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886.

சிறுவயதில் தந்தையாரிடம் வேத வேதாந்தங்களைக் கற்றவர். திருவெள்ளறையில் இருக்கும் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் தொண்டு புரிந்தவர்கள் இவர் குடும்பத்தவர்கள். தகுந்த வயதில் இவரை மேலும் கல்வி கற்க நாதமுனிகளிடம் அனுப்பினார்கள் இவரின் பெற்றோர்கள்"

"இவர் இயற்பெயர் புண்டரீகாக்ஷர் என்றால் உய்யக்கொண்டார் என்ற பெயர் எப்படி வந்தது?"

"அதுவா? உலகத்து மக்களின் மேல் இவருக்கு இருக்கும் அன்பைக் கண்டு நாதமுனிகள் வைத்த பெயர் அது!"

**

"அடியேன்".

"வாரும் பிள்ளாய். நலமாய் உள்ளீரா?"

"தேவரீரின் திருவருட் பெருமையால் அடியேன் அன்பனாய் உள்ளேன்".

"தாமரைக்கண்ணரே. நீரும் குருகைக்காவலப்பனும் எனது முதன்மைச் சீடர்கள். என்னிடம் இரண்டு செல்வங்கள் இருக்கின்றன. பக்தியோகத்தால் ஒருவர் தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்; ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரப் பனுவலால் ஒருவர் தன்னையும் மற்றவரையும் கடைத்தேற்றிக் கொள்ளலாம். உமக்கு யோக இரகசியம் வேண்டுமா? நாலாயிரப் பனுவல் வேண்டுமா?"

"ஐயனே. பிணம் கிடப்பார் வீட்டில் மணம் உண்டோ? உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவன் திருவடி நினையாமல் செத்துக் கொண்டிருக்கும் போது ஒற்றை உயிர் இறைவன் திருவடிகளை அடைவதில் என்ன பயன்? அடியேனுக்கு தேவரீர் அருளிச் செயல்களையே அருளிச்செய்ய வேண்டும்"

"ஆகா. புண்டரீகாட்சரே! உலகம் உய்யக்கொண்டீரே! உம் விருப்பம் போலவே நாலாயிரப் பனுவல்களையும் சொல்லித் தருகிறேன்"

**
"இரவி. இவருடைய வாழித் திருநாமத்தைப் படித்துப் பார்த்தேன். அதில் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு என்று வருகிறது. திருப்பாவையை ஐயைந்தும் ஐந்தும் என்றும் நாச்சியார் திருமொழியை ஒரு நூற்று நாற்பத்தி மூன்று என்றும் சொல்வது போல் இவர் இயற்றிய பாடல்களைச் சொல்கிறார்களா?"

"குமரன். இவர் நூலெதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. திருப்பாவைக்குத் தனியன் எழுதியவர் இவர்."

"எந்த தனியன் இரவி?"

"அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


படிச்சிருப்பீங்களே! இந்தத் தனியனும்

சூடிக் கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு


இந்தத் தனியனும் இவர் எழுதியது."

"ஆமாம். இந்தத் தனியன்கள் தெரியும். ரொம்ப எளிமையான தனியன்கள். இவர் இந்தத் தனியன்கள் மட்டுமே எழுதினார் என்றால் வாழித் திருநாமத்தில் வரும் நாலிரண்டு ஐயைந்து நாலெட்டு எல்லாம் என்ன?"

"ரொம்ப விளக்கமாக சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் குமரன். மூன்று மறைப்பொருட்களான ரகஸ்ய த்ரயம் தான் அவை"

"இரகசியத் திரயமா? ஓஓ. இரகசியத் திரயமா? சரி தான். இப்போது புரிகிறது.

நாலிரண்டு எட்டு - எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாய. நான் உன்னையன்றி இலேன். நீ என்னையன்றி இலாய். சரி தான்.

ஐயைந்து இருபத்தியைந்து - இரு வரிகளில் இருபத்தியைந்து எழுத்துகளில் வரும் துவய மந்திரம்.

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:


திருமகள் நாதன் திருவடிகளை சரணாக நான் அடைகிறேன். திருமகள் கேள்வனுக்கே உரியவன் எனக்குரியேன் அல்லன்.

நாலெட்டு முப்பத்தியெட்டு - முப்பத்தியெட்டு எழுத்துகளில் வரும் கீதைச் சுலோகமான சரம சுலோகம்.

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:


எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்.

அருமை. இம்மூன்றையும் அடுத்த தலைமுறைக்குப் பொருளுடன் கொண்டு சென்றவர் என்பதால் இவரை இப்படி போற்றுகின்றதா வாழித்திருநாமம்"

**
வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையத்தில் வாழியே


இளஞ்சூரியன் அழகு மிகுந்தவன். இருளை நீக்கி வண்ண ஓவியங்களை வானமெங்கும் பூமியெங்கும் அவன் ஒளி எழுதும். அவன் ஒளி கண்களைக் கூசாது. அப்படிப் பட்ட இளம்பரிதியின் வடிவழகை வெல்லும் அழகைப் பெற்றுள்ளவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!

பரசுராமன், இராமன், பலராமன் என்று முன்பு திருமாலின் வடிவாய் வந்த மூன்று இராமர்களைப் போல் நான்காவது இராமனாய் வந்த இராமமிச்ரரான மணக்கால் நம்பி தன் குருவாகக் கொண்டு தொண்டு செய்யும் மலர்களைப் போன்ற திருப்பாதங்களை உடையவர் உய்யக்கொண்டார். அவர் வாழ்க வாழ்க!

நற்குணங்களும் நன்னடத்தையும் நல்லெண்ணங்களும் உடைய நாதமுனிகள் என்னும் ஆசாரியரின் பெருமைகளை எப்போதும் உரைத்துக் கொண்டிருப்பவர் வாழ்க வாழ்க!

சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரப் பெருநாளில் உலகம் சிறக்க பிறந்தவர் வாழ்க வாழ்க!

நாலிரண்டான எட்டெழுத்து மந்திரத்தின் பொருளையும் ஐயைந்தான துவய மந்திரத்தின் பொருளையும் நமக்கு உரைத்தவர் வாழ்க வாழ்க!

நாலெட்டான சரம சுலோகத்தின் உட்பொருளை தன் வாழ்க்கையில் நடத்திக் காண்பித்தவர் வாழ்க வாழ்க!

திருமாலவன் திருவரங்கன் அழகிய மணவாளன் திருப்பெயர்களையும் திருப்புகழ்களையும் எப்போதும் சொல்லுபவர் வாழ்க வாழ்க!

உலகம் உய்யக் கொண்டவரின் திருவடிகள் இந்த வையகத்தில் என்றென்றும் வாழ்க வாழ்க வாழ்க!

Thursday, August 20, 2009

ஆண்டாள்

கோயில் கந்தாடை நாயன் என்னும் அடியவர் அருளிச் செய்த பெரிய திருமுடியடைவு என்னும் நூலில் இருக்கும் ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகளை நேற்று இட்டிருந்தேன். அதே நூலில் ஆண்டாளின் வாழ்க்கைக் குறிப்புகளும் இருக்கின்றன. அவற்றை இன்று இடுகிறேன். இதுவும் மணிப்பிரவாள நடையில் இருந்தாலும் வடமொழிச் சொற்கள் சிறிதளவே இருக்கின்றன. ஆனாலும் இது கடினம் என்று நினைப்பவர்களுக்காக தற்காலத் தமிழிலும் அந்த குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

***

ஸ்ரீபூமிப்பிராட்டியார் திருவவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியாருக்குத் திருவவதாரஸ்தலம் பாண்டியமண்டலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர். திருவவதரித்தது பெரியாழ்வாருடைய திருநந்தவனத்தில் திருத்துழாயடியிலே. திருநக்ஷத்ரம் ஆடி மாஸம் பூர்வபக்ஷத்தில் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் வரீயாந்நாமயோகம் பத்ரகரணம் துலாலக்னம் மத்யாஹ்ந ஸமயத்தில். பூமியிலே இருந்து பெரியாழ்வார் திருமாளிகையிலே வளர்ந்தருளினார். திருநாமங்கள் சூடிக்கொடுத்தாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவள் எழுந்தருளியிருக்கிறது நூற்றெட்டுத் திருப்பதிகளிலும். அதிலும் ப்ரதானம் ஸ்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்து மூன்று பாட்டும். இவள் பாடின திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில், திருமலை. இவளுக்குத் திருவாராதனம் நம்பெருமாள். ஆசார்யர் பெரியபெருமாள்.

இவளுக்குத் தனியன் (பராசரபட்டர் அருளிச் செய்தது)

நீளாதுங்க ஸ்தநகிரிதட ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவ அஸ்து பூய:

இதன் பொருள் - நப்பின்னை பிராட்டியின் ஸ்தனங்கள் என்னும் மலைகளின் சாரலில் கண்வளர்பவனும், இவளது மாலையை தனக்கு விலங்காகக் கொண்டு கட்டுப்பட்டு உள்ளவனும் ஆகிய க்ருஷ்ணனை திருப்பள்ளி உணர்த்தினாள். வேதங்களின் தலைப்பாகமாக உள்ள வேதாந்தங்கள் கூறும் தனது அடிமைத்தனத்தை கண்ணனிடம் அறிவித்தாள். தானாக வலியச் சென்று அவனை அனுபவித்தபடி இருந்தாள். இப்படிப்பட்ட ஆண்டாளின் விஷயமாகக் கூறப்படும் இந்த நமஸ்காரங்கள், காலம் என்ற தத்வம் உள்ளவரை விளங்க வேண்டும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஆகஸ்ட் 1 - 2007 மின்னிதழ்

***

பெருமாளின் தேவியர்களில் ஒருவரான பூமிப்பிராட்டியாரின் திரு அவதாரமான சூடிக்கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாளின் பிறந்த இடம் பாண்டிய நாட்டில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் பிறந்தது பெரியாழ்வாரின் திருநந்தவனத்தில் துளசிச்செடியின் கீழே. இவருடைய பிறந்த நாள் ஆடி மாதம் வளர்பிறை நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரம் என்னும் நட்சத்திரத்தில் துலா லக்னத்தில் மதிய நேரத்தில். பூமியிலே பிறந்து பெரியாழ்வாரின் வீட்டில் வளர்ந்தார். இவருடைய திருப்பெயர்கள் சூடிக் கொண்டாள், கோதை, ஆண்டாள், ஆழ்வார் திருமகள். இவர் நூற்றியெட்டு திவ்விய தேசங்கள் என்னும் திருப்பதிகளிலும் பெருமாளுக்கு இடப்பக்கம் எழுந்தருளியிருக்கிறார். அவற்றில் முதன்மையான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். இவர் இயற்றிய நூல்கள் திருப்பாவை முப்பது பாட்டும், நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்தி மூன்று பாட்டும் ஆகும். இவர் பாடிய திருப்பதிகள் திருவாய்ப்பாடி, திருப்பாற்கடல், வடமதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கோயில் எனப்படும் திருவரங்கம், திருமலை (அழகர் கோவில் எனப்படும் திருமாலிருஞ்சோலையையும் பாடியிருக்கிறார். ஆனால் எப்படியோ அந்தத் திருப்பதியின் பெயர் இங்கே விடுபட்டிருக்கிறது). இவர் வணங்கியது நம்பெருமாள் என்னும் திருவரங்க நகர் வளர் அழகிய மணவாளன். இவருக்கு ஆசாரியர் பெரியபெருமாள் என்னும் திருவரங்கத்து மூலவர். (ஆண்டாளே பட்டர்பிரான் கோதை என்று தன்னை அழைத்துக் கொள்வதால் பெரியாழ்வாரே ஆண்டாளின் ஆசாரியர் என்று சொல்லுவதுண்டு. இங்கே பெரியபெருமாள் இவருக்கு ஆசாரியர் என்று சொல்லியிருப்பது வியப்பளிக்கிறது.)

தனியனுக்குத் தரப்பட்டுள்ள பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் மீண்டும் தரவில்லை.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஆளவந்தார்

இராமானுஜரின் ஆசாரியரான ஆளவந்தாரின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாக 'கோயில் கந்தாடைநாயன்' என்னும் அடியவர் அருளிச்செய்த பெரியதிருமுடியடைவு என்ற நூலில் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே முதலில் தந்திருக்கிறேன். மணிபிரவாளம் என்னும் தமிழும் வடமொழியும் கலந்த நடையில் இந்த குறிப்புகள் இருந்தாலும் வடமொழி அதிகம் கலக்காமல் கொஞ்சம் எளிய தமிழிலேயே இருக்கின்றன. ஆனாலும் இந்த நடை புரியவில்லை என்பவர்களுக்காக இக்குறிப்புகளைத் தற்காலத் தமிழிலும் எழுதியிருக்கிறேன்.

***

ஸிம்ஹாநநாம்ச பூதரான ஆளவந்தாருக்குத் திருவவதாரஸ்தலம் சோழ தேசத்திலே திருக்காவேரிதீரத்தில் வீரநாராயணபுரம். திருநக்ஷத்ர கலியுகம் மூவாயிரத்து எழுபதேழுக்குமேல் தாது வருஷம் ஆடி மாஸம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை உத்தராடம் விஷ்கம்பம் பவகரணம். திருத்தகப்பனார் ஈச்வரமுனிகள். திருப்பாட்டனார் நாதமுனிகள். திருத்தாயார் ஸ்ரீரங்கநாயகி. குமாரர் திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துகரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி. திருநாமங்கள் யாமுனாசார்யார், யமுனைத்துறைவர், வாதிமத்தேபஸிம்ஹேந்த்ரர், ஆளவந்தார், பெரியமுதலியார், குடி சொட்டை. திருவாராதனம் நம்பெருமாள். இருப்பிடம் கோயில். இவருக்கு நாதமுனிகள் யாமுனாசார்யரென்கிற திருநாமமும், பகவத் ஸம்பந்தமும், மந்த்ரோபதேசமும் ஸாதித்தருளி, தத்வஹித புருஷார்த்தங்களை ப்ரஸாதிக்க உய்யக்கொண்டாருக்கு நியமித்து, யோகரஹஸ்யம் ப்ரஸாதிக்கக் குருகைக்காவலப்பனுக்கு நியமித்தார். அந்த உய்யக்கொண்டார் மணக்கால்நம்பிக்கு நியமித்தார். ஆகையாலே இவருக்குப் புருஷார்த்தங்களும் பகவத் விஷயமும் நாலாயிரமும் சதுர்த்தாச்ரம ஸ்வீகாரமும் முதலான அர்த்த விசேஷங்களெல்லாம் ப்ரஸாதித்தருளினவர் ஸ்ரீராமமிச்ரர். ஆக இவர்க்காசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும், புருஷகாரர் மணக்கால் நம்பியுமாம். குருபரம்பரை வரிசைக்கு இவர்க்கு ஆசார்யர் மணக்கால்நம்பி. சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக்கோட்டியூர்நம்பி, திருமாலையாண்டான், தெய்வவாரியாண்டான், வானமாமலையாண்டான், ஈச்வராண்டான், ஜீயராண்டான், ஆளவந்தாராழ்வான், திருமோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சிநம்பி, திருவரங்கப்பெருமாளரையர், திருக்குருகூர்தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாஸர், ராஜபுரோஹிதரான நாதமுனி தாஸர், ரங்கசோழாவின் ராஜபத்னியான திருவரங்கத்தம்மான் ஆக சிஷ்யர் ப்ரதானரானவர் இருபத்திருவர். இவரருளிச் செய்தருளின ப்ரபந்தங்கள் ஸ்தோத்ரரத்னம், ஸித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ச்லோகி. இவர் சதுர்வேத ஷட்சாஸ்த்ராதி ஸகலவித்யா பாடங்களும் அருளிச் செய்து நூற்றிருபத்தஞ்சு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்தார். இவர் நம்பெருமாள் அனுஜ்ஞையினாலே திருநாட்டுக்கெழுந்தருளின ஸ்தலம் கோயில். நிக்ஷேபம் பண்ணப்பட்ட ஸ்தலம் திருப்பார்த்துறையிலே.

இவருடைய தனியன்

யத் பதாம்போருஹ த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ:
வஸ்துதாம் உபயாத: யாமுனேயம் நமாமி தம்

பொருள் - எந்த ஒருவரின் தாமரை போன்ற திருவடிகளைத் த்யானிப்பதன் மூலம் எனது அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெற்றனவோ, எதனால் நான் இந்த உலகில் ஒரு மதிக்கத்தக்க பொருளாக உள்ளேனோ, அப்படிப்பட்ட பெருமை உடைய யாமுனாசார்யரை வணங்குகிறேன்.

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

நன்றி: நம்பெருமாள் விஜயம் ஜூலை 2 - 2007 மின்னிதழ்

***

சிம்மானனரின் (இவர் பரமபதத்தில் என்றைக்கும் நிலையாக வாழும் நித்யசூரிகள் என்னும் அடியவர்களில் ஒருவர். சிங்க முகம் கொண்டவர். அதனால் ஸிம்ஹாநநர் என்ற பெயர் பெற்றவர்) அம்சத்தில் பிறந்த ஆளவந்தார் பிறந்த இடம் சோழ நாட்டில் காவேரிக்கரையில் இருக்கும் வீரநாராயணபுரம். இவர் பிறந்த நாள் கலியுக வருடம் மூவாயிரத்து எழுபத்தேழு, தாது வருடம் ஆடி மாதம் முழுநிலவு நாள் வெள்ளிக்கிழமை உத்திராட நட்சத்திரம் சேர்ந்து வந்த நாள். இவர் தந்தையார் ஈச்வரமுனிகள். இவர் பாட்டனார் நாதமுனிகள். இவர் தாயார் ஸ்ரீரங்கநாயகி. இவருடைய மகன்கள் திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வந்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி என்னும் நால்வர். இவருடைய மற்ற திருப்பெயர்கள் யாமுனாசாரியர், யமுனைத்துறைவர், வாதிமத்தேபசிம்மேந்திரர், ஆளவந்தார், பெரியமுதலியார். இவருடைய குலத்தின் பெயர் சொட்டை. இவர் தினமும் வணங்கி வந்த பெருமாள் நம்பெருமாள். இவருடைய இருப்பிடம் கோயில் எனப்படும் திருவரங்கம். இவருடைய பாட்டனார் நாதமுனிகள் இவருக்கு யாமுனாசாரியர் என்ற திருப்பெயரும், இறை தொடர்பும், மந்திர உபதேசமும் தந்து அருளி, தத்துவம் ஹிதம் புருஷார்த்தம் என்னும் மூன்றையும் அருளிச் செய்ய தன்னுடைய சீடரான உய்யக்கொண்டாரை நியமித்து, இவருக்கு யோகரகசியம் அருளிச்செய்ய குருகைக்காவலப்பனை நியமித்தார். உய்யக்கொண்டார் மணக்கால்நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். ஆகையாலே இவருக்கு வாழ்க்கையின் குறிக்கோள்கள் எனப்படும் புருஷார்த்தங்களும் பகவத் விஷயம் எனப்படும் வேத வேதாந்தங்களும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும் நான்காவது ஆசிரமம் எனப்படும் துறவறம் முதலான எல்லாவற்றையும் அருளிச்செய்தவர் ஸ்ரீராமமிச்ரர் எனப்படும் மணக்கால்நம்பியாவார். ஆக இவருக்கு ஆசாரியர் ஸ்ரீமத் நாதமுனிகளும் அவர் அருளிசெய்தவற்றைக் கொணர்ந்து கொடுத்தவர் மணக்கால் நம்பியும் ஆவார்கள். குருபரம்பரை வரிசையில் இவருக்கு ஆசாரியர் மணக்கால்நம்பியாவார். இவருடைய சீடர்கள் பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், தெய்வ்வாரி ஆண்டான், வானமாமலை ஆண்டான், ஈச்வர ஆண்டான், ஜீயர் ஆண்டான், ஆளவந்தார் ஆழ்வான், திருமோகூர் அப்பன், திருமோகூர் நின்றார், தேவப்பெருமாள், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்குருகூர் தாஸர், வகுளாபரண சோமயாஜியார், அம்மங்கி, ஆள்கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாசர், அரசகுருவான நாதமுனி தாசர், ரங்க சோழன் என்னும் அரசனின் பட்டத்து ராணி திருவரங்கத்தம்மான் ஆக சீடர்களில் முதன்மையானவர்கள் இருபத்தி இருவர். இவர் அருளிச் செய்த நூல்கள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சது:ஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள். இவர் நான்குவேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் அனைத்து அறிவு நூல்களையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுத்து நூற்றி இருபத்தைந்து வருடம் வாழ்ந்திருந்தார். இவர் நம்பெருமாளின் அனுமதியினால் திருநாடு எனப்படும் பரமபதத்திற்கு எழுந்தருளின (இறந்த) இடம் திருவரங்கம். இறுதிக் காரியங்கள் பண்ணப்பட்ட இடம் திருப்பார்த்துறை.

(தனியனின் பொருள் தற்காலத் தமிழிலேயே இருப்பதால் அதனை மீண்டும் சொல்லவில்லை.)

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

Tuesday, June 16, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 3 (நாதமுனிகள்)

ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம். முதல் மூவர் விண்ணுலகத்தவர். நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும் வேதங்களில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றையும் வேதங்களில் குழப்பம் தரும் பகுதிகளைத் தெளிவுறுத்துபவற்றையும் தன்னுடைய திருவாய்மொழி முதலான பாசுரங்களில் பாடி 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று பெயர் பெற்றவர். இப்பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியர் நாதமுனிகள். அவர் முதற்கொண்டு தொடர்ந்து ஆசார்ய பரம்பரை தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. முதல் மூவர் விண்ணுலகத்தவர்; நான்காமவர் அவதாரமாகிய ஆழ்வார் என்பதால் மானுட ஆசாரியர்களில் இவரே முதல்வராக அமைகிறார். அதனால் இவரிடமிருந்தே வைணவ ஆசாரிய பரம்பரை தொடங்குவதாகக் கூறும் மரபும் உண்டு.

காட்டுமன்னார்குடி என்ற திருத்தலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் நாதமுனிகள். அவர் பிறந்த காலத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாசுரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடப்பெற்று வந்தன. எல்லோரும் முறையாகப் பயின்று பாடும்படியாக அவை தொகுக்கப் பெறவில்லை. அனைத்து பாசுரங்களையும் அறிந்தவர் என்று ஒருவரும் காணப்படவில்லை. அப்படியிருக்கும் போது இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இறைவனை வணங்கவந்த அடியவர்கள் சிலர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திருவாய்மொழியின் பத்து பாசுரங்களைப் பாடினார்கள். அப்பாசுரங்களின் அழகிலும் இனிமையிலும் பொருளாழத்திலும் கவரப்பட்ட இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும் அவை திருக்குடந்தைப் பெருமாளைப் பாடும் பாசுரங்கள் என்றும் அதனால் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துத் தங்களுக்குப் பாடமாயின என்றும் தெரிவித்தனர். அப்பாசுரங்களின் முடிவில் 'ஆயிரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்கள்' என்ற குறிப்பு வந்ததைக் கேட்டு அந்த ஆயிரம் பாசுரங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்று நாதமுனிகள் கேட்க, 'தெரியாது. ஆழ்வாரின் பிறந்த ஊரான திருக்குருகூர் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் கிடைக்கலாம்' என்று அவர்கள் கூறினார்கள்.

அதன்படியே நாதமுனிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு வந்து விசாரிக்க அங்கும் அவருக்கு அப்பாசுரங்கள் கிடைக்கவில்லை. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரின் மேல் எழுதிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மட்டுமே கிடைத்தன. அந்தப் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளியின் கீழ் அமர்ந்து அப்பாடல்களைப் பல்லாயிரம் முறை ஓதினார் நாதமுனிகள். அப்படி ஓதும் போது யோகதசையில் நம்மாழ்வார் நாதமுனிகளின் முன்பு தோன்றி தன்னுடைய திருவாய்மொழி மட்டும் இல்லாமல் மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் தந்தருளினார். அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி இசையமைத்து தன் மருமகன்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலமாக இசையுடன் கூடிய ஆழ்வார் பாசுரங்களை தமிழகம் எங்கும் பரவச் செய்தார் நாதமுனிகள்.

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

ஆனி மாதத்தில் அனுஷ நட்சத்திரத்தில் இந்த பூமியில் அவதரித்த நாதமுனிகள் வாழ்க. ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே.

ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யாமுனமுனிகள் /யமுனைத்துறைவர் . அவருக்கு ஆளவந்தார் என்றும் ஒரு பெயர் உண்டு. தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள். உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார். அப்படி ஆளவந்தாருக்காக உபதேசத்தை அவருக்குத் தகுந்த காலம் வருவதற்கு முன்னரே உபதேசித்து வைத்த நாதமுனிகள் வாழ்க. ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே.

அயோத்தி நகரில் வாழ்ந்து வரும் போது தென் திசையில் தோன்றிய பேரொளியைக் கண்டு தெற்கே வந்து நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் தரிசித்து அவருடைய சீடரானார் மதுரகவியாழ்வார். அவர் அருளிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பாசுரங்களை பல முறை ஓதி நம்மாழ்வாரிடம் இருந்து நாலாயிரப் பனுவல்களைப் பெற்றார் நாதமுனிகள். நம்மாழ்வார் என்னும் பகலவனைத் தெற்கில் கண்ட மதுரகவியாழ்வாரின் பாசுரங்களைப் பல முறை உரைத்தவன் வாழ்க. பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே.

மதம் பிடித்துத் திரியும் யானையை அங்குசம் கொண்டு அடக்கி நல்வழியில் அழைத்துச் செல்வார்கள். அது போல் தீயவழியில் செல்லுபவர்களைத் திருத்தி நல்வழியில் சேர்க்கும் திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் அங்குசத்தைப் போன்றவர். அதனால் அவர் திருப்பெயர் பராங்குசர். அவர் யோகதசையில் அருளிச் செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களையும் மிகவும் பரிவுடன் கற்றுக் கொண்டவர் நாதமுனிகள். பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே.

பாடல்களை ஓதினால் அவ்வளவு எளிதாக மனதில் நிற்காது. அதே பாடல்களை இசையுடன் பாடினால் மிகவும் எளிதாக மனதில் நிற்கும். இசையுடன் பாடும் படி அமைந்த நாலாயிரம் பனுவல்களுக்கும் தகுந்த இசைமுறைகளை அமைத்து கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் என்னும் தன்னுடைய இரு மருமகன்களுக்கும் கற்றுக் கொடுத்து அதன் மூலம் நாலாயிரம் பாசுரங்களும் உலகத்தில் பரவும் படி செய்தார் நாதமுனிகள். இசையுடன் பாடும் படி தாளம் அமைத்து நாலாயிரம் பனுவல்களையும் இசைத்தவர் வாழ்க. கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே.

மக்கள் மீது இருக்கும் கருணையினால் நம்மாழ்வாரிடமிருந்து தான் கற்ற யோக இரகசியங்களையும் மறைப்பொருட்களையும் அனைவரும் அறியும் படி ஒரு உபதேச வழிமுறையைத் தோற்றுவித்தார் நாதமுனிகள். கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே.

அந்த உபதேச வழிமுறையை உலகமெங்கும் பரப்பிட ஒரு ஆசாரிய பரம்பரையை நிலைநாட்டினார் நாதமுனிகள். எதற்கும் அசையாத மலையைப் போல் அரைகுறைத் தத்துவவாதிகளின் மிடுக்கினை எல்லாம் ஒடுக்கி தான் எப்போதும் போல் இருக்கும் ஆசாரிய பரம்பரை என்பதால் அதனை குருவரை (குரு மலை) என்று சொல்கிறது இந்த வாழித்திருநாமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகையான நிலங்களை உடைய உலகத்தில் குரு பரம்பரை என்னும் மலையை நாட்டியவன் வாழ்க. நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே.

உயர்வற உயர்நலம் உடையவன் என்று இறைவனைச் சொல்வார் நம்மாழ்வார். எல்லாவிதமான கல்யாண குணங்களும் உடையவன் இறைவன். அவனைப் போன்ற கல்யாண குணங்கள் நிரம்பியவர் நாதமுனிகள். அவருடைய திருவடிகள் வாழ்க. நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே.

நாதமுனிகள் திருவடிகளே தஞ்சம்.