Monday, April 03, 2023

எழுதாக் கற்பு

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ?! மயலோ இதுவே!

- குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பார்ப்பன மகனே! இளைய பார்ப்பனனே!
செந்நிறமான பூக்களை உடைய முருக்க மரத்தின் வலிமையான நாரை (பட்டையை) களைந்து மென்மையாக்கிய தண்டு (கைக்கோல்) பிடித்த
தாழ்வாகக் கமண்டலத்தை பிடித்த
படிவர்கள் (முனிவர்கள்) உணவை உண்ணும்
பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பு எனப்படும் வேதத்தைக் (எழுதப்படாமல் ஆனால் கற்கப்படும்; கற்பு = கல்வி) கற்ற
உன் சொல்லில்
பிரிந்தோரைச் சேர்த்துவைக்கும் திறமை உடைய மருந்து உள்ளதா? (இல்லையல்லவா?!)
(எனக்கு அறிவுரை கூறினால் அவள் மேல் நான் கொண்ட காதல் தீரும் என்று நீ நினைத்தது) ஒரு மயக்கமே! (மயலோ!)

பொருள் உரை: அன்பன் குமரன் மல்லி (ம. ந. குமரன்) 

Thursday, September 15, 2022

அலர்மேல் மங்கை உறை மார்பா!

 அகலகில்லேன் இறையும் என்று 

அலர்மேல் மங்கை உறை மார்பா! 

நிகர் இல் புகழாய்! உலகம் மூன்று 

உடையாய்! என்னை ஆள்வானே! 

நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் 

விரும்பும் திருவேங்கடத்தானே!

புகல் ஒன்று இல்லா அடியேன் உன் 

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!


- நம்மாழ்வார், திருவாய்மொழி 


'ஒரு நொடியும் பிரிய மாட்டேன்' என்று அலர்மேல்மங்கை தாயார் என்றும் உறையும் திருமார்பா! 


நிகரில்லாத புகழை உடையவனே! 


மூன்று உலகங்களையும் உடையவனே! 


என்னை ஆளும் இறைவனே! 


நிகர் இல்லாத தேவர்கள் கூட்டங்களும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்பித் தொழும் திருவேங்கடத்தானே!


வேறு கதி இல்லாத (வேறு புகலிடம் இல்லாத) அடியேன் உன் திருவடிகளின் கீழே என்றென்றும் சரணடைந்தேனே!


Tuesday, November 09, 2021

கந்தர் சஷ்டி 2021


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே
- அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலைக்கு உரியவனை, சிவந்த சுடரும் வேலுக்கு அரசனை, (தமிழ் சங்கத்தில் அமர்ந்து) செந்தமிழ் நூல்களை வளர்த்தவனை,
புகழுடன் விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவனை, மணம் மிகுந்த கடம்ப மலரை அணிந்தவனை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவனை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லையே!

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
- அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்
நல்ல நாள் தீய நாள் என்பதெல்லாம் என்ன செய்யும்? நான் முன்பு செய்த நல்வினை தீவினை தான் என்ன செய்யும்? என் வினைகளுக்கு ஏற்ப பயன் தர என்னை தேடி வரும் நவகோள்களும் (நவகிரகங்களும்) என்ன செய்யும்? கொடிய கூற்றுவன் (யமன்) தான் என்ன செய்ய முடியும்? குமரேசனுடைய இரண்டு திருவடிகளும் அவற்றில் உள்ள சிலம்புகளும் சதங்கைகளும் தண்டைகளும், ஆறு திருமுகங்களும், பன்னிரு திருத்தோள்களும், அவற்றில் அணிந்த கடம்ப மாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிடுமே!

ஆறிரு தடந்தோள் வாழ்க! ஆறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க! ஆனை தன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியார் எல்லாம்!
- ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
முருகப்பெருமானின் மலைகளைப் போல் உயர்ந்த (தட) பன்னிரு (ஆறு * இரு) திருத்தோள்கள் வாழ்க!
ஆறு திருமுகங்களும் வாழ்க!
க்ரௌஞ்சம் என்னும் மாய மலையைப் பிளந்த (வெற்பைக் கூறு செய்) ஒப்பில்லாத (தனி) திருவேல் வாழ்க!
சேவல் (குக்குடம்) கொடி வாழ்க!
சிவந்த தலைவனாம் (செவ்வேள்) சேந்தன் ஏறும் மயில் (மஞ்ஞை) வாழ்க!
ஐராவதம் என்னும் தெய்வ யானை வளர்த்த (ஆனை தன்) திருமகளார் (அணங்கு) தெய்வயானை அம்மை வாழ்க!
ஒப்பில்லாத (மாறு இலா) வள்ளியம்மை வாழ்க!
சிறப்புடைய முருகன் அடியவர்கள் எல்லாரும் வாழ்க!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி
ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் கொண்ட திருவுருவாகவும்,
உருவம் பெயர் குணங்களற்ற அருவான பிரம்மமாகவும்,
உண்டு என்று சொல்பவர்களுக்கு என்றும் உள்ள இறையாகவும்,
இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லாதவனாகவும்,
மலரின் மணம் மிகுந்த மொட்டாகவும்,
மலர்ந்த மலராகவும்,
நவமணிகளாகவும்,
அவற்றின் ஒளியாகவும்,
எல்லா உயிர்களையும் தோற்றுவிக்கும் கருவாகவும்,
அவற்றின் உள்ளே நின்று அவற்றை நடத்துவிக்கும் உயிராகவும்,
அவை எல்லாம் இறுதியில் சென்று அடையும் கதியாகவும்,
அந்த நற்கதி அடைவதுவே அவற்றின் இயல்பு நிலை என்னும் படி விதியாகவும்,
அமைந்து
எனக்கு குருவாக வந்து அருள்வாய் குகக்கடவுளே!

Saturday, December 16, 2017

வந்தது மார்கழி!

வந்தது மார்கழி! வங்கக் கடல் கடைந்து 
சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த 
சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால்! 
சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை!
வந்தாள் சுடர்கொடியாய் சூடிக் கொடுத்திடவே!
தந்தாள் திருப்பாவை பாடி நாம் பரவ! 
முந்தை வினை அகல முகிலோன் திருவடியில் 
சிந்தை தனை வைத்துப் பாடி மகிழ்வோமே!

மார்கழி மாதம் வந்தது!

கப்பல்கள் (வங்கம்) நிறைந்த கடலைப் போல், பெரிய தத்துவங்கள் நிறைந்த தமிழ்க் கவிதை உருவாகி, அதனைக் கடைந்து நல்லோர் எல்லோரும் தமிழ் அமுதம் உண்ண வழி  என்ன என்று திருமகள் கேள்வன் செல்வத் திருமால் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கவலையைத் தீர்த்தாள் பெரியாழ்வார் திருமகளான கோதை!

பாமாலையோடு பூமாலையும் திருமாலுக்குச் சூடிக் கொடுக்க, சுடர்கொடியாய் வந்தாள்!

நாம் பாடி மகிழும்படி திருப்பாவை தந்தாள்!

முன்பு செய்த வினைப்பயன்கள் அகல, முகில்வண்ணன் திருவடிகளில் நம் சிந்தனையை வைத்து, திருப்பாவையைப் பாடி மகிழ்வோம்!

Saturday, September 23, 2017

இராமானுச நூற்றந்தாதி 2கள் ஆர் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே

பொருள்: தேன் நிறைந்த மலர்களால் நிரம்பிய சோலைகளை உடைய தென் திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் திருவரங்கப் பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை தமது நெஞ்சிலே என்றும் நினைக்காத மக்களை நீங்கி, திருக்குறையலூர் தலைவர் ஆன திருமங்கையாழ்வார் திருவடிகளிலே என்றும் நீங்காத அன்பு கொண்ட இராமானுசரின் சிறந்த குணநலன்களைத் தவிர வேறு ஒன்றையும் என் நெஞ்சம் நினைக்காது. இப்படிப்பட்ட பெருநிலை எனக்கு எப்படி ஏற்பட்டது என்று அறியேன்.

விரிவுரை: இவ்வளவு நாளும் தென்னரங்கன் திருவடிகளை நினைக்காத சிறு மனிசரோடு உறவு கொண்டிருந்தேன். இன்று அதைத் தொலைத்தேன். திருமங்கை ஆழ்வாரின் திருவடிகளையே என்றும் மனத்தில் கொண்டிருக்கும் எம்பெருமானாருடைய சிறந்த சீலங்களே என் நெஞ்சில் நிலை நின்றது. இப்படிப்பட்ட நிலைமை என் முயற்சியால் ஆவது இல்லை. எம்பெருமானாரது காரணமே இல்லாத பெரும் கருணையே இதனை நிகழ்த்தி உள்ளது. 

Tuesday, September 19, 2017

இராமானுச நூற்றந்தாதி - 1

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே!

பொருள்: நெஞ்சே! தாமரைப் பூவில் என்றும் நிலையாகத் தங்கியிருக்கும் திருமகள் நிலையாக வாழும் திருமார்பை உடையவன் திருமால். அவனது புகழ் நிறைந்த பாசுரங்களில் நிலையாக இருப்பவர் மாறனாகிய நம்மாழ்வார். அவரது திருவடிகளைப் பணிந்து உய்ந்தவர் இராமானுசர். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள் நிலையான அறிவில் நிலைத்து வாழ வந்தவர் இராமானுசர். அவரது திருவடித்தாமரைகளில் நாம் நிலையாக வாழ வேண்டும் என்றால் அவரது திருநாமங்களைத் தொடர்ந்து சொல்லுவோம்!

விரிவுரை:

தாயாரை முன்னிட்டே பெருமாளை சரணடைய வேண்டும் என்ற சம்பிரதாயத்தின் படி இங்கே முதல் பாசுரத்திலேயே 'பூ மன்னு மாது பொருந்திய மார்பன்' என்று தொடங்குகிறார்.

திருமகள் தாமரை மலரில் பிறந்து அங்கேயே நித்ய வாசம் செய்பவர். அந்த தாமரையை விட்டு விட்டு 'அகலகில்லேன் இறையும்' (சிறிது காலமும் பிரிந்து இருக்க மாட்டேன்) என்று மிக விருப்பத்துடன் திருமகள் வந்து வசிக்கும் படியான பெருமை கொண்டது திருமாலின் திருமார்பு.

அப்படிப்பட்ட பெருமையை உடைய திருமாலின் தெய்வீக குணங்களையும் பெருமைகளையும் பொங்கிப் பெருகும் படி நிறைந்துள்ள திருவாய்மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களைப் பாடி அவற்றிலே நிலையாக வாழ்பவர் நம்மாழ்வார். அப்படிப்பட்ட மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவடிகளில் நிலையான பக்தி செய்து அவரது திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் மூலம் உண்மைப் பொருளை அறிந்து உய்ந்தவர் இராமானுசர்.

பல கலைகள் கற்று அவற்றில் தேர்ந்தவர்களான கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் முதலிய பெரியோர்கள் பலரும் நிலையான ஞானத்தை அறிந்து அதில் நிலைத்து நிற்கும் படி வந்தவர் எம்பெருமானார்.

பல கலைகள் கற்றும், உய்யும் வழி எது என்று அறியாமல், பல வழிகளையும் ஆராய்ந்து, சந்தேகம் மயக்கம் முதலியவற்றால் தடுமாறுகிறவர்களை, நிச்சயமான ஞானத்தை அருளி நிலையான வாழ்வை அருள வந்தவர் இராமானுசர் என்று சொன்னாலும் பொருத்தமே.


அப்படிப்பட்ட இராமாநுசருடைய திருவடிகளை நாம் அடைந்து உய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அவரது திருநாமங்களைச் சொல்லுவது ஒன்றே. நெஞ்சே! இராமானுசரின் திருநாமங்களைச் சொல்லுவோம்.

Wednesday, February 08, 2017

கேள்வன்!!!

சொல் ஒரு சொல் என்று முன்பொரு முறை எழுதிக் கொண்டிருந்தேன். ஏதாவது ஒரு புதிய () பழைய தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொண்டு அதனை அலசி ஆராய்வது வழக்கம். அந்த வழக்கத்தை மீண்டும் தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இயலும் போதெல்லாம் எழுதுகிறேன். இயன்றவரையில் படித்து ஆதரியுங்கள்.

நாலாயிரப் பனுவல்களில் (திவ்ய ப்ரபந்தம்) ஈடுபாடு உடைவர்களுக்கு 'கேள்வன்' என்ற சொல் தெரிந்திருக்கும். தாமரையாள் கேள்வன், திருமகள் கேள்வன், பூமகள் கேள்வன், அலராள் கேள்வன் என்றெல்லாம் திருமகளின் தலைவனான திருமாலைப் போற்றி வரும் பாசுர வரிகள்.

கேள்வன் என்றால் என்ன? அதன் அடிப்படைச் சொல் எது? அதனுடன் தொடர்புடைய சொற்கள் எவை?

தேடினேன் இன்று.

'கேண்மை' என்பது தான் இதன் அடிப்படைச் சொல் என்று தோன்றுகிறது.

நட்பு என்று பொருள். உறவு என்றும் சொல்லலாம்.

அதில் இருந்து வந்த இன்னொரு சொல் 'கேள்'. வினைச் சொல்லாய் வரும் போது 'கேட்பாய்' என்று பொருள் தரும் இச்சொல் பெயர்ச் சொல்லாய் அமையும் போது நட்பு, உறவு என்ற பொருள் கொள்கிறது.

அடுத்து வரும் சொற்கள் கேளன், கேளி. ஆமாம். தோழன் தோழி தான்.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

கேள்விப்பட்டிருப்பீர்களே...

கணியன் பூங்குன்றனாரின் சங்கப் பாடல்.

பலரும் சொற்பிழையாய் கேளீர் என்று எழுதுவார்கள். கேளிர் என்பது தான் சரி.

உறவினர் என்று பொருள்.

அப்படியென்றால் கேள்வன் என்றால் என்ன பொருள்?

உறவுகளில் நெருங்கிய உறவு! நட்பில் ஊறிய உறவு! கணவன்!

கேள்வன் என்றால் கணவன், தலைவன் என்ற பொருளை மட்டும் சொல்லிச் சென்றுவிடுகிறார்கள்.


ஆனால் அதை விட நண்பன் என்ற பொருள் இன்னும் நெருக்கத்தைத் தருகிறது போல் தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?