Friday, December 26, 2008

குமரனின் குமரனா? நந்தகோபன் குமரனா?

"யப்பா. இவன் செய்ற குசும்பு தாங்க முடியலைங்க. இவங்க அக்கா செஞ்ச குசும்பெல்லாம் எந்த மூலைக்கு? இவன அடக்க என்னால முடியலை. நீங்க தான் பாத்துக்கணும். சும்மா தமிழ்மணம் பாத்துக்கிட்டு இருக்காதீங்க. இவனைக் கொஞ்சம் பாத்துக்குங்க"

"இப்ப என்ன பண்ணிட்டான் அவன்?"

"நான் பாத்திரம் கழுவி டிஷ் வாஷர்ல போட விடமாட்டேங்கறான். எல்லாத்தையும் எடுத்து வெளிய போட்டுக்கிட்டு இருக்கான்"

"அவங்க அக்காவோட விளையாடச் சொல்ல வேண்டியது தானே?"

"ஆமா. அப்புறம் அவங்க சண்டைய யாரு தீர்த்து வைக்கிறது?"

"சண்டையா? நல்லா தானா தம்பியைப் பாத்துக்கிறா பெரியவ? அப்புறம் ஏன் சண்டை போடறாங்க?"

"அவ நல்லாத் தான் பாத்துக்கறா. இவன் தான் எதை எடுத்தாலும் மைன் மைன்னு சொல்லி புடுங்கறான். தம்பி கேக்குறான்னு அவளும் குடுத்துர்றா. அப்புறம் அவ தலை முடியை புடிச்சு இழுக்குறான். அவ அழ ஆரம்பிச்சுர்றா"

"ம்ம்ம். தேஜும்மா. தம்பி உன் முடியைப் பிடிச்சு இழுத்தா நீயும் அவன் முடியை பிடிச்சு இழு"

"என்ன சொல்லித் தர்றீங்க நீங்க? தம்பி சின்னப்பையன்;அடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேன். அதனால தான் அவ அடிக்கிறதில்லை. நீங்க இப்படி சொல்லித் தரலாமா? சும்மா பேசிக்கிட்டு இருக்காம வந்து பையனைப் பாத்துக்கோங்க"

"சரி சரி இதோ வர்றேன். இந்த கமெண்டை மட்டும் படிச்சுட்டு வர்றேன்"

நான் பிடிக்கப் போக அவன் சிரித்துக் கொண்டே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடி ஒளிகிறான். அந்த விளையாட்டில் அவன் அக்காவும் கலந்து கொள்கிறாள். சமையலறையிலிருந்து எப்படியோ அவனை வெளியே ஓட்டிக் கொண்டு வந்தாயிற்று. எப்படி இவனை இங்கேயே கட்டிப் போடுவது? ஆமாம் யசோதை செஞ்சதைத் தான் செய்யணும். கண்ணனோட குறும்பு தாங்க முடியாம தாம்புக் கயித்தால கட்டிப் போடறதுக்கு முன்னாடி பால் குடுத்து தானே அவனை வஞ்சித்தாள். அதையே செய்ய வேண்டியது தான்.

"இவன் எப்ப பால் குடிச்சான்?"

"ரெண்டு மணி நேரம் ஆச்சு. அதோ அங்க பாட்டில் இருக்கு. ஹார்லிக்ஸ் கலந்து குடுங்க".

செஞ்சுட்டா போச்சு. :-)

பாலை ஹார்லிக்ஸுடன் கலந்து கையில் வைத்துக் கொண்டதும் அவனாகவே வந்து அதனைப் பிடுங்கிக் கொண்டான். அவனை அப்படியே தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் போட்டு பாடத் தொடங்கினேன். பாலைக் குடித்துக் கொண்டே பாட்டும் கேட்டுக் கொண்டுத் தூங்கிப் போனான். நான் எழுத வந்தேன்.

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே

Thursday, December 25, 2008

அனுமன் புகழ் பாடும் மந்திகள்!

கோகுலத்தின் நடுவில் நிமிர்ந்து நிற்கும் குன்றம் இது. மலர்கள் பூத்துக் குலுங்கவும் கனிகள் கனிந்து விளங்கவும் மிகச் செழிப்புடன் மரம் செடி கொடிகள் விளங்கும் குன்றம் இது. இனிய நீர்ச்சுனைகளும் இன்னிசை ஓடைகளும் நிறைந்த குன்றம் இது. யாராலும் ஏற முடியாத படி செங்குத்தாக இல்லாமல் ஆடு மாடுகளும் மற்ற விலங்குகளும் மனிதர்களும் எளிதாக ஏறிச் சென்று இயற்கை வளங்களை அனுபவிக்கும் படியாக அமைந்த குன்றம் இது. இறைவனே இக்குன்றின் வடிவில் நின்று இக்குன்றத்திற்கு ஆய்ப்பாடியினர் படைத்த படையல்களை எல்லாம் ஏற்றுக் கொண்டான் என்றால் இதன் பெருமையைச் சொல்லி முடியுமா?

இப்படிப்பட்ட இக்கோவர்த்தன குன்றத்தின் மீது மரங்களின் காய்களையும் கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும் (பெண்குரங்குகள்) கடுவன்களும் (ஆண்குரங்குகள்) நிறைய உண்டு. மற்ற இடங்களில் வாழும் குரங்குகள் ஐந்தறிவினவாக இருக்க இந்த கோவர்த்தன குன்றத்தில் வாழும் குரங்குகளுக்கு மட்டும் ஆறாவது அறிவும் இருக்கின்றது போலும். அதனால் தானே இந்த மந்திகள் தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்க வைக்கும் போது தங்கள் முன்னோனாகிய அனுமனின் வீர தீர கதைகளைச் சொல்லித் தூங்க வைக்கின்றன. இப்படி கதை சொல்லிக் குழந்தைகளைத் தூங்க வைப்பதை இவை எங்கே கற்றன? ஆதி சேஷன் தன் ஆயிரம் தலைகளால் இவ்வுலகைத் தாங்குவதைப் போல் தன் விரல்களால் இக்குன்றம் ஏந்திக் குளிர்மழையிலிருந்து ஆய்ப்பாடி ஆயர்களையும் அவர் தம் செல்வங்களையும் காத்தானே கோகுலன். அவர்கள் இம்மழையின் கீழ் பல நாட்கள் தங்கியிருந்த போது அவர்களிடம் இருந்து அனுமன் கதைகளையும் அவற்றைச் சொல்லி தம் குழந்தைகளை உறங்க வைக்கும் முறையையும் இந்த மந்திகள் கற்றுக் கொண்டன போலும்.


படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர்பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே

கருடனைப் புள்ளரையன் என்றாள் கோதை நாச்சியார். அவர் தம் திருத்தகப்பனார் பெரியாழ்வார் ஆதிசேஷனைப் பாம்பரையன் என்கிறார்.

பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் விரிந்த படங்கள் பலவும் உடையவன். அவன் பூமியைத் தாங்கிக் கிடக்கின்றான். அது போல் நீண்ட அழகிய கைகளின் விரல்கள் ஐந்தும் மலர விரித்து தாமோதரன் தாங்கும் கொற்றக் குடை எது தெரியுமா? இலங்கைக்குச் சென்று அதன் பெருமையை முழுக்க அழித்த அனுமனின் புகழினைப் பாடி தங்கள் குழந்தைகளை தங்களின் கைகளில் ஏந்தி பெண் குரங்குகள் தூங்க வைக்கும் கோவர்த்தனம் என்னும் குன்றமே.

மந்திகள் மட்டுமின்றி மாநிலத்தில் உதித்தவர் எல்லோரும் அனுமன் புகழ் பாடி அவன் தன் பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அனுமனின் திருவவதார நாளான இந்த இனிய நன்னாளில் சொல்லுவோம்.


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்று பெற்ற திருமகனானவன் அஞ்சிலே ஒன்றான நீர் நிறைந்த கடலை அஞ்சிலே ஒன்றான ஆகாயமே வழியாகக் கொண்டு தாவிச் சென்றான். சிறந்தவர்களான இராமனுக்காக அவ்வாறு தாவிச் சென்று அஞ்சிலே ஒன்றான நிலமகள் பெற்ற பெண்ணான சீதையைக் கண்டு அயலாரின் ஊரில் அஞ்சிலே ஒன்றான தீயை வைத்தான். அவன் நமக்கு வேண்டியதை எல்லாம் அளித்து நம்மைக் காப்பான்.

Sunday, December 21, 2008

காலங்களின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்கள்

தமிழ் பல்கலைக்கழக பட்டய படிப்பிற்கான பாட திட்டத்தில் இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தமிழ் இலக்கியங்களை அவை இயற்றப்பட்டக் கால அடிப்படையில் தொகுத்திருந்தார்கள். அதனை எடுத்து இங்கே இடுகிறேன்.

***

(1) சங்க கால இலக்கியங்கள் (கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)

தோன்றிய நூற்கள்: அகத்தியம், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

(2) சங்கம் மருவிய கால இலக்கியங்கள் (கி.பி. 200 முதல் கி.பி. 450 வரை)

பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் இக்காலத்தில் தோன்றின. சங்க காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கள் குடித்தலையும், பரத்தமைத் தொடர்பையும் இக்கால இலக்கியங்கள் கண்டித்தன. பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் வேரூன்றின. தனிப்பாடல் அமைப்பை இளங்கோ மாற்றி சிலப்பதிகாரம் எனும் காப்பியம் தந்தார். பசியைப் போக்குதலே உயர்ந்த அறம் எனும் நோக்கில் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை எனும் காப்பியம் படைத்தார். குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் இயற்றப்பட்ட பிருகத் கதை எனும் நூலின் அடிப்படையில் பெருங்கதை அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் கொங்கு வேளிர். இது சமண சமய நூல்.

(3) சோழர் காலக் காப்பியங்கள் (கி.பி. 900 முதல் கி.பி. 1300 வரை)

1. சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்

2. வளையாபதி - 72 பாடல்கள் தற்போது கிடைத்துள்ளன. ஆரிய வைசிய புராணத்தின் அடிப்படையில் அமைந்தது.

3. குண்டலகேசி - பௌத்தம் சார்ந்தது.

4. நீலகேசி - தமிழின் முதல் தர்க்க நூல். புத்த சமய நூலுக்கு (குண்டலகேசி) எதிர்ப்பாகத் தோன்றியது. சமண சமய நூல்.

5. சூளாமணி - வடமொழியில் ஜினசேனர் எழுதிய மகாபுராணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

6. உதயணகுமார காவியம் - 367 பாடல்கள் உடையது. உதயணன் வரலாறு கூறும் நூல் இது. சமண சமயம் சார்ந்த நூல்.

7. யசோதர காவியம் - நூலாசிரியர் சமணர்.

8. நாககுமார காவியம் - சென்னைப் பல்கலைக்கழகம் 1973ல் புலவர் சண்முகத்தைக் கொண்டு இந்நூலை வெளியிட்டது. நாகபஞ்சமி கதை என்ற பெயர் உண்டு. நாககுமாரனின் கதையைக் கூறும் காப்பியம் இது.

9. மேரு மந்தர புராணம் - சமண சமயத்தின் சமய சாரம் இந்நூல். ஆசிரியர் வாமனாசாரியர். 'நல்வினையோ தீவினையோ நம்மைத் தொடரும்' என்கிறது இந்நூல்.

10. பெரிய புராணம் - ஆசிரியர் சேக்கிழார். காலம். கி.பி. 12ஆம் நூற்றாண்டு. அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன் இரன்டாம் குலோத்துங்கன். சேக்கிழார் இந்நூலுக்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாறு கூறும் நூல்.

11. கம்பராமாயணம் - ஆசிரியர் கம்பர். தமிழில் தோன்றிய காப்பியங்களுள் அளவிற் பெரியது. இராமபிரானின் வரலாறு கூறும் நூல்.

12. நளவெண்பா - ஆசிரியர் புகழேந்தி. வியாசபாரதத்தில் வரும் நளன் பற்றிய கதையைக் கூறுவது. பெண்பா யாப்பில் அமைந்தது.

(4) நாயக்கர் காலம்

இதைச் சிற்றிலக்கிய காலமாக அழைக்கலாம். இக்காலத்தில் தான் கோவை, பரணி, பள்ளு, பிள்ளைத்தமிழ், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றின.

நன்றி: இணையத் தமிழ் பல்கலைக்கழகம்.

Saturday, December 20, 2008

மன்னு வடமதுரை மைந்தன்

தொல்காப்பியம் முதற்கொண்டு பழந்தமிழ் நூற்கள் பலவற்றிலும் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டும் தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. திருமுருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று இப்போது பெரும்பான்மையோரின் மனத்தில் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது; அப்படி நிலைநாட்ட எந்த விதமான தரவுகள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டனவோ அதே அளவிற்கு அதே தரத்தில் அதே போன்ற தரவுகள் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டுவதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்தத் தரவுகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டு வருகிறேன்; இனிமேலும் எழுதுவேன். இன்றைக்கு 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்ற திருப்பாவை வரிகளில் சொல்லப்படும் மதுரை வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுராவா தெற்கே வைகைக்கரையில் இருக்கும் மதுரையா என்று மட்டும் ஆராய்வோம்.

ஆன்மிகத்தையும் பக்தி இலக்கியங்களையும் முடிந்த வரையில் எளிமைப்படுத்தி அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் எழுதி வரும் நல்நண்பர் இரவிசங்கர் இந்த வரியில் சொல்லப்படும் வடமதுரை மைந்தன் தமிழக மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை வாழ் அழகனே என்று சொல்கிறார். ஆண்டாள் தென் தமிழகத்தில் இருக்கும் வில்லிபுத்தூரில் இருந்து பார்க்கும் போது தமிழக மதுரை அவளுக்கு வடக்கே அமைகிறது; அதனால் அந்த மதுரையைத் தான் அவள் வடமதுரை என்றாள் என்கிறார். அதற்கு வடபழனி, தென்பழனி போன்ற எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார். ஏரணத்திற்குப் பொருந்துவதைப் போல் தோன்றினாலும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காண்பதே சிறப்பு என்பதால் இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்று தோன்றியது.

வில்லிபுத்தூருக்கு வடக்கே தான் தமிழக மதுரை இருக்கிறது. அங்கு கூடல் அழகர் திருக்கோவில் இருக்கிறது. அதனால் வடமதுரை என்று திருப்பாவையில் குறிக்கப்பட்டது தமிழக மதுரை தான் என்றால் வடமதுரை மைந்தன் (வடமதுரைத் தலைவன்) என்பவன் கூடல் அழகராகவே எடுத்துக் கொள்ளலாம். மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகனாம் கள்ளழகரைத் தான் அந்தத் தொடர் குறிக்கிறது என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி குறிப்பாக கள்ளழகரைத் தான் சொன்னாள் கோதை என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

வடமதுரை என்பது தமிழக மதுரை தானா என்ற கேள்விக்குப் பதிலாக நாச்சியார் திருமொழியில் இருந்து சில வரிகளை எடுத்துத் தந்திருக்கிறார். அவற்றையும் ஆராய்வோம்.

பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்
யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்
சோலைமலைப்பெருமாள் துவராபதி எம்பெருமான்...

1. பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்; யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்

இந்த வரிகள் வருவது 'மற்றிருந்தீர்' என்று தொடங்கும் நாச்சியார் திருமொழியின் 12ம் திருமொழி. இந்தத் திருமொழியில் எல்லா பாசுரங்களிலும் 'என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று சொல்லும் விதமாக 'உய்த்திடுமின்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார் நாச்சியார்.

மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின், நந்தகோபன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின், யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், பத்தவிலோசனத்து என்னை உய்த்திடுமின், பாண்டிவடத்தென்னை உய்த்திடுமின், கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின், துவராபதிக்கென்னை உய்த்திடுமின் என்றெல்லாம் சொல்கிறாள். இவற்றில் 'பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்' என்பதை 'பாண்டிய நாட்டில் வடபகுதியில் இருக்கும் மதுரை நகருக்கு என்னை கொண்டு சேருங்கள்' என்று பொருள் கொள்கிறார் இரவிசங்கர். பொருத்தமான பொருள் தானா? மற்ற இடங்களில் எல்லாமே கண்ணனின் பிறப்பும் வாழ்வும் நடந்ததென சொல்லப்பட்ட இடங்களை நாச்சியார் பாடும் போது இங்கே திடீரென்று பாண்டிய நாட்டைச் சொல்வாரா? பொருந்துகிறதா?

இதற்கு முந்தைய வரியையும் சேர்த்துப் பார்த்தால் பொருள் இன்னும் தெளிவாகப் புரியும். 'பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்'. பாருங்கள் திருமாலிருஞ்சோலையில் பலதேவனின் கோவில் இருந்ததாக பரிபாடல் சொல்கிறது; இங்கும் நாச்சியார் பலதேவனைச் சொல்லியிருக்கிறார்; அதனால் இது பாண்டிய நாட்டின் வடப்புறத்தில் இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தான் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதே - என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? அவக்கரம் வேண்டாம்; இன்னும் பொருளை ஆய்வோம். பிலம்பன் தன்னை பண் அழிய பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்கிறாளே நாச்சியார். பிலம்பன் என்றால் யார்? எது? பண் அழிய பலதேவன் வென்றது யாரை? எதை? அது பாண்டிய நாட்டில் நடந்ததா? ஒன்றும் புரியவில்லையே. பாகவத புராணத்தைப் பார்த்தால் புரியும்.

ப்ரலம்பன் என்ற அசுரனை பலராமன் பாண்டிரமென்னும் ஆலமரத்தின் அருகில் வென்று கொன்றதாக பாகவத புராணம் சொல்கிறது. அந்த ஆலமரம் தமிழகத்தில் இல்லை; வடக்கே யமுனைக்கரையில் தான் இருக்கிறது. ஆலமரத்திற்கு வடவிருட்சம் என்ற பெயரும் உண்டு. ஆலிலைத் துயில்பவன் என்பதைத் தானே வடபத்ரசாயி என்று சொல்கிறோம்; வில்லிபுத்தூரில் இருக்கும் வடபெருங்கோவிலுடையான் திருக்கோவில் திருமாலின் திருப்பெயர் அது தானே. (நல்ல வேளை. அந்த வடபெருங்கோவிலும் ஆண்டாளின் வீட்டிற்கு வடக்கே இருந்ததால் தான் அந்தப் பெயர் என்று சொல்லாமல் விட்டோம்). வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் பாண்டிரம் என்னும் ஆலமரத்தின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்பதைத் தான் ஆண்டாள் இங்கே 'பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்' என்கிறாள். அதில் ஐயமே இல்லை.

2. சோலைமலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்:

இந்த இடத்தில் சோலைமலைப்பெருமான் தான் துவராபதி எம்பெருமான் என்று சொல்வது எந்த வகையில் 'வடமதுரை மைந்தன்' என்று குறித்தது தமிழக மதுரையைக் குறிக்கும் என்று புரியவில்லை. சோலைமலையிலும் மற்ற திருமால் கோவில்களிலும் இருப்பவன் துவராபதி இறைவன் தான்; ஆலின் இலைப் பெருமான் தான். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அந்தத் தரவு வடமதுரை மைந்தன் என்று குறித்தது கூடல் அழகரையோ மதுரைக்கு வடக்கே இருக்கும் சோலைமலை அழகரையோ தான் என்று காட்டுவதாகத் தெரியவில்லை. வேங்கடவன் விண்ணோர் தலைவன் என்றெல்லாம் பட்டியல் இட்டுவருவதைப் போல் சோலைமலைப் பெருமான், துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப்பெருமான் என்று அவன் பெயர்களையும் புகழ்களையும் பட்டியல் இடுகிறாள் கோதை. அது போன்ற பட்டியலை நாலாயிரத்தில் நிறைய பார்க்கலாம். அதனால் வடமதுரை என்றது தென்னக மதுரையைத் தான் என்றோ யமுனைத்துறைவன் என்றது வைகைக்கரையைத் தான் என்றோ காட்டுவதாக இந்தத் தரவின் மூலம் அறிய முடியவில்லை.

ஆய்ப்பாடியை வில்லிபுத்தூருக்கு மாற்றி தன்னையும் தன் தோழியர்களையும் ஆய்ப்பெண்களாக மாற்றி வடபெரும்கோவிலுடையானின் (வடபத்ரசாயியின்) திருக்கோவிலை நந்தகோபன் திருமாளிகையாக மாற்றி ஆண்டாள் திருப்பாவை பாடினாள் என்று சொன்னால் அதற்கு திருப்பாவையும் பெரியவர்கள் பலர் செய்த உரைகளும் துணையாக நிற்கின்றன. ஆனால் ஆய்ப்பாடியை மதுரைக்கும் யமுனையை வைகைக்கும் ஆண்டாள் மாற்றுகிறாள் என்பதற்கு வலுவான தரவு இருப்பதாகத் தோன்றவில்லை.

***

இன்னும் ஆழமாகச் சென்று ஆராய நாலாயிரத்தில் இருந்து இன்னும் சில தரவுகளைப் பார்க்கலாம்.

3. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்:

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம் இது,

இதுவோ பொருத்தம் மின்னாழிப்படையாய்
ஏறும் இருஞ்சிறைப்புள்
அதுவே கொடியாய் உயர்த்தானே
என்றென்று ஏங்கி அழுதக்கால்
எதுவே ஆகக் கருதும் கொல்
இம்மாஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே


ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.

4. திருமங்கை மன்னன்:

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சில இடங்களில் மதுரை என்று வருகிறது. அவற்றைப் பார்ப்போம்.

சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை...

பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே.

மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.

வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே

இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.

***

5. விப்ரநாராயணர்:

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மதுரையைப் பற்றி ஓரிடத்தில் குறித்துள்ளார்.

வளவெழும் தவள மாட
மதுரை மாநகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்கமாலை...

அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.

***

6. வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்:

சரி. மற்றவர் சொன்னதைப் பார்த்தோம். ஆண்டாளின் திருத்தந்தை சொன்னவற்றைப் பார்க்கலாமா?

'திருமதுரையுள் சிலை குனித்து' என்று திருப்பல்லாண்டில் பாடுகிறார் விட்டுசித்தர். வில்லை முறித்து என்று சொன்னதால் இங்கு சொல்லப்படும் திருமதுரை வடநாட்டு மதுரை தான் என்பது தெளிவு.

வானில் அரசு வைகுந்தக் குட்டன்
வாசுதேவன் மதுரைமன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன்....

இங்கே மதுரை மன்னன் என்றதால் எந்த மதுரையைச் சொன்னார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வாசுதேவன் (வசுதேவன் மகன்) என்றதாலும் நந்தகோன் இளவரசு என்றதாலும் கோவலர் குட்டன் என்றதாலும் இங்கே மன்னனாய் சொன்னது வடமதுரைக்கு மன்னன் என்று தான் என்பது தெளிவு.

இங்கே பெரியாழ்வார் 'மதுரை மன்னன்' என்றது போல் அவர்தம் திருமகளாரும் 'மதுரையார் மன்னன்' என்றும் 'வடமதுரையார் மன்னன்' என்றும் பாடுகிறாள். அங்கும் இதே பொருள் தான் என்பதில் ஐயமில்லை.

'என் மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறார் பெரியாழ்வார். கோதை 'உய்த்திடுமின்' என்று பாடிய பிறகு பாடியது போலும் இந்தப் பாசுரம். அதனால் தான் 'மல்லரை அட்டவன் பின் போய்' மதுரைப் புறம் புக்காள் கொலோ என்று கேட்கிறார். இங்கும் மல்லரை அட்ட நிகழ்ச்சி நடந்த வடநாட்டு மதுரை தான் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

இன்னொரு இடத்தில் பெருமாள் திருத்தலங்களைப் பட்டியல் இடுகிறார் பெரியாழ்வார். 'வடதிசை மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவரை, அயோத்தி, இடமுடை வதரி, இட வகையுடைய எம் புருடோத்தமன் இருக்கை' என்கிறார். இங்கு பெரும்பாலும் வடநாட்டில் இருக்கும் தலங்களைக் குறித்ததால் இந்தப் பட்டியலில் வரும் 'வடதிசை மதுரை' தென்னக மதுரை இல்லை வடநாட்டு மதுரையே என்பது தெளிவு.

***

இப்படி நாலாயிரத்தில் 'மதுரை' என்ற சொல் வரும் இடங்களை எல்லாம் பார்க்கும் போது அங்கெல்லாம் குறிக்கப்பட்டது வடநாட்டு மதுரையே என்பது தெளிவாகத் தெரிவதால் ஆண்டாளும் 'வடமதுரை மைந்தனை' என்ற போது வடநாட்டு மதுரையைத் தான் குறித்தாள் என்பது தெளிவு. வில்லிபுத்தூருக்கு வடக்கே இருக்கும் தென்னக மதுரையை வடமதுரை என்றாள் என்பது சுவையாக இருக்கிறது; ஆனால் வலிந்து கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது.

கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. இந்த 'வலிந்து கொள்ளப்பட்ட தரவுகள்' தேவையில்லை. எப்படி திருமுருகன் வடக்கே பிறந்து வடக்கே வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானே எப்படி சிவபெருமான் வடகயிலையில் வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானோ அதே போல் கண்ணனும் வடமதுரையில் பிறந்து வடமதுரையார் மன்னனாக இருந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறான். அதுவும் மிகத் தெளிவு.

புறநானூறு சொல்லும் உடன்கட்டை ஏற்றம்...

புறநானூறு 246ஆவது பாடல். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் அரசி பெருங்கோப்பெண்டு என்பவர் பாடியது. பூதப்பாண்டியன் இளம்வயதிலேயே மாண்டுவிட கணவனை இழந்து வாழேன் என்று கூறி உடன்கட்டை ஏற முடிவெடுத்தாள் பெருங்கோப்பெண்டு. அமைச்சர்களும் அரசவைப் பெரியோர்களும் அவளது முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் வேண்டுகோளை மறுத்து அரசி இயற்றிய பாடல் இது.

பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!


திணை: பொதுவியல் (பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத
பொதுவான செய்திகளைக் கூறும் திணை)
துறை: ஆனந்தப்பையுள் (கணவன் இறப்ப மனைவி மெலிந்து வருந்தும் அறத்துறை)

சான்றோர்களே! சான்றோர்களே! நீயும் இறந்துபட்ட கணவனுடன் சென்று விடு என்று என்னை அனுப்பாமல் அதனைத் தவிர்த்து உயிர் வாழச் சொல்லும் உங்கள் பொல்லாத பேரறிவினை உடையவராக இருக்கிறீர்களே.

அணிலின் முதுகில் உள்ள கோடுகளைப் போன்ற வரிகளை உடைய வெள்ளரிக்காயைப் பிளந்தால் அதிலிருக்கும் சிறு விதைகளைப் பார்க்கலாம்; அந்த விதைகளைப் போன்ற நுண்ணிய நெய்யைக் கையால் தொடாமல் இருக்க வேன்டும். இலையின் மேல் இடப்பட்ட கைப்பிடி அளவு பழைய சோற்றைப் பிழிந்து நீரை விலக்கி வெள்ளெருக்குத் துவையலைத் தொட்டுக் கொண்டு சிறிதே புளியைச் சேர்த்துக் கொண்டு வெந்தும் வேகாததுமாக உண்ண வேண்டும். பரல் கற்கள் (பருக்கைக் கற்கள்) நிறைந்த கட்டாந்தரையில் பாய் இன்றிப் படுக்க வேண்டும். இப்படி ஒரு கடின வாழ்க்கையை விரும்பி வாழும், கைம்மை நோன்பு நோற்றேனும் உயிர் வாழ விரும்பும் பெண்களில் ஒருத்தி இல்லை யான்.

ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் கருங்கட்டைகளால் உண்டான நெருப்பை உடைய இந்த ஈமப்படுக்கை உங்களுக்கு வேண்டுமானால் அரியதாகவும் கொடியதாகவும் இருக்கலாம்; எனக்கு அப்படி இல்லை.

பெரிய தோளினை உடைய என் கணவன் மாய்ந்த பின் நன்கு மலர்ந்த அழகான தாமரை மலர்கள் நிறைந்த நீர்ப்பொய்கையும் தீயும் ஒரே தன்மை உடையன.

***

உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தப் பாடல் எழுதப்பட்ட போது இருந்திருக்கிறது என்பது இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது; ஆனால் அது சான்றோர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இந்தப் பாடலின் மூலம் விதவைகள் படும் துயரமும் சொல்லப்பட்டிருக்கிறது. கைம்மை நோன்பெனும் துயரம் பலவகைகளில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலின் குறிப்பில் 'பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவள் இந்தப் பாடலைப் பாடிய பின்னர் தீப்பாய்ந்தாளா இல்லையா என்ற குறிப்பு இந்தப் பாடலில் இல்லை. ஆனால் அவள் தீப்பாய்ந்தாள் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.

பாண்டியன் மனைவி தீப்பாய்ந்தாள் என்றால் வேறு ஏதாவது புலவர் அதனைப் பாடியிருப்பார்; ஆனால் அப்படிப்பட்ட குறிப்பு வேறு எந்தப் பாடலிலும் இல்லை; அதனால் இவள் தீப்பாய்ந்தாள் எனக் கொள்ளத் தேவையில்லை என்றும் சிலர் கருதுகின்றனர். ஏரணப்படி சரி தான் என்று தோன்றத் தொடங்கினாலும் மேற்கேள்விகள் எழாமல் இல்லை. சங்க காலத்தில் இயற்றப்பட்ட எல்லா பாடல்களும் கிடைக்கவில்லை; பத்துப்பாட்டு எட்டுத்தொகை கீழ்க்கணக்கு என்று தொகுக்கப்பட்ட தொகைப்பாடல்களில் இருக்கும் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதனால் வேறு எந்தப் பாடலிலும் இந்தக் குறிப்பு இல்லை என்பது இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று காட்டுவதாக அமையாது.

இந்தப் பாடல் மட்டுமே கைம்மைக் கொடுமையையும் உடன்கட்டை ஏறுவதையும் கூறுகிறது; அதனால் இது சிறுபான்மையாகத் தான் நடந்திருக்கும்; பெரும்பான்மையாக நடந்திருந்தால் மற்ற பாடல்கள் கூறியிருக்கும் - என்றும் ஒரு கருத்து இருக்கலாம். அதற்கும் மறுப்பு உண்டு. உடன்கட்டை ஏறுவது வேண்டுமானால் சிறுபான்மையாக இருந்திருக்கலாம்; ஆனால் கைம்மை பெரும்பான்மையாகத் தான் இருந்தது என்பது இந்தப் பாடலின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறவில்லை; மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு பாடினாள். கபிலர் பெண்ணைப் போல் பல பாடல்கள் பாடியிருக்கிறார்; அதனால் அவர் பெண் என்று கூறிவிட இயலுமா? - என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு படர்க்கையில் பாடாமல் மரபுப்படி தன்மையில் பெருங்கோப்பெண்டு பாடியிருந்தாலும் இருந்ததைத் தான் பாடியிருக்கிறாள் என்பது கைம்மை நோன்பைப் பற்றி தெளிவாகப் பாடியிருப்பதன் மூலம் தெரிகிறது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாகத் தெரியும் செய்திகளையும் ஏற்க மறுத்து இப்படி வாதங்களை வைப்பது தான் ஏன் என்று புரிவதில்லை. வடமொழி இலக்கியங்களில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சொல்லைத் தவறாகப் பொருள் கொண்டு அதனை முடிந்த முடிபென்று பேச முடியும் போது (எடுத்துக்காட்டுகள்: இராமனுக்குப் பல மனைவிகள் என்று கூறுவது, திராவிட சிசு என்று சங்கரர் தன்னையோ சம்பந்தரையோ 'இழிவாக'ச் சொன்னார் என்று சாதிப்பது, இலிங்க வழிபாட்டை ஆரியர்கள் பழித்தார்கள் என்று கூறுவது) தெள்ளத் தெளிவாகத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் செய்திகளைத் தங்களின் கருத்தாக்கத்திற்கு ஒவ்வாத செய்திகள் என்பதால் வலிந்து புறந்தள்ள எடுக்கப்படும் முயற்சிகளாகத் தான் இந்த வகை மறுப்புகளைக் காண முடிகிறது.

Wednesday, December 17, 2008

சிவன் கோவில் தீர்த்த சடாரியும் பெருமாள் கோவில் திருநீறும்....

பெருமாள் கோவிலில் தீர்த்தம் தருவார்கள். சிவன் கோவிலில் திருநீறு தானே தருவார்கள்? தீர்த்தப் பிரசாதம் தருவதும் உண்டா? உண்டு என்று தான் கூகிளார் சொல்கிறார். இராமேஸ்வரம் இராமநாதப் பெருமான் சன்னிதியில் தீர்த்தப் பிரசாதம் தருவார்கள் என்ற குறிப்பைப் படித்தேன். சரி தானா என்று தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.

***

கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சிவத்தலம் திருநல்லூர். அப்பர், சம்பந்தர் இருவருடைய பதிகங்களையும் பெற்ற திருத்தலம். அப்பர் பெருமான் இறைவனுடைய திருவடிகளில் சரணடைந்தது இந்தத் திருத்தலத்தில் என்பதால் இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடிநிலைகளை இங்கு வணங்க வரும் பக்தர்களின் தலைகளில் வைத்து ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது.

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினதிருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனதுருவி மணிமகுடத் தேறத்துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே.

நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர் களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி, அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார். இஃது அவர் பேரருளின் தன்மையாம்.

பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை, பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திரு வடிகளை, என் தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.

தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு, தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக் கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு, கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.

வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார், வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக்கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினை யும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர். அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர். நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர். தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.

குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர். இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர். எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம், மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர். தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர். வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.

பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார், பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க, கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர். சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்ட வர். நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்ட வர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர்.

குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

நல்லூர் எம்பெருமானார், கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளை யும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர். இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர்.

பதிகத்தின் பொழிப்புரைக்கு நன்றி: http://www.thevaaram.org/

பெருமாள் கோவில்களில் பெருமாள் திருவடிநிலைகளை சடகோபன் நம்மாழ்வாரின் திருவுருவமாகக் கருதுவதால் சடாரி என்று அழைப்பார்கள். இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடி நிலைகளை எந்தப் பெயருடன் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை - அப்பர் என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.

***

பெருமாள் விபூதி அணிந்து கொள்வதும் விபூதி பிரசாதம் அந்த நேரத்தில் எல்லோருக்கும் தரப்படுவதும் பற்றி மிக அருமையாக மிகத் தெளிவாக கதை வசனத்துடன் அந்த நிகழ்வை இரவிசங்கர் எழுதியிருந்தார். அதனைப் படித்த பின்னர் தான் திருக்கண்ணங்குடி என்று கூகிளில் தேடினேன். இரவிசங்கர் சொன்ன நிகழ்வைப் பற்றி சொல்லும் குறிப்புகளையும் படித்தேன். பெருமாள் திருநீறு அணிவதற்கு இன்னொரு நிகழ்வையும் காட்டும் குறிப்பு ஒன்றைப் படித்தேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

உபரிசிரவஸு என்னும் மன்னன் சிவபக்தன். (இந்த உபரிசிரவஸு என்ற பெயர் ஏதோ ஒரு சோழ மன்னனின் தமிழ்ப்பெயரின் வடமொழி வடிவம் என்று நினைக்கிறேன்). தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை திருக்கண்ணங்குடி வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கோவில் சிவன் கோவில் என்று எண்ணி தரிசிக்க உள்ளே சென்றான். அவன் ஏமாறாமல் இருக்க மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) பெருமாள் திருநீறு அணிந்து சிவனாகக் காட்சியளித்தார்.

Friday, December 12, 2008

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை! நீருக்குள் மூழ்கிடும் தாமரை!

நிறைய கவிஞர்கள் அவர்களது முத்திரையாக தமது பெயரையோ தமது காதலர் பெயரையோ தமக்குப் பிடித்த ஒன்றின் பெயரையோ பாடலின் கடைசி வரியிலோ கடைசி வரியின் முந்தைய வரியிலோ வைப்பார்கள். கவிஞர் தாமரை தன் பெயரை இந்தப்பாடலின் இரண்டாவது வரியிலேயே வைத்திருக்கிறார். :-)

ஒரு பெண் கவிஞர் ஆணின் காதல் உணர்வுகளை அருமையாகக் கூறும் இந்தப் பாடல் வரிகளை எழுதியிருப்பது மிக அருமை. காதலின் வேகத்தால் தன் நிலை தலைகீழாகப் போவதை இந்தப் பாடலில் காதலன் மிக மிக நன்றாகச் சொல்கிறான். ஒவ்வொரு வரியும் அருமை. அதிலும் எடுப்பும் (முதல் நான்கு வரிகள்) தொடுப்பும் (அடுத்த நான்கு வரிகள்) மிக மிக அருமை.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!
நீருக்குள் மூழ்கிடும் தாமரை!
சட்டென்று மாறுது வானிலை!
பெண்ணே உன் மேல் பிழை!!!

நில்லாமல் வீசிடும் பேரலை!
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை!
பொன்வண்ணம் சூடிய காரிகை!
பெண்ணே நீ காஞ்சனை!!!

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா!

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ?!
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ?!
என்னோடு வா வீடு வரைக்கும்!
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்!

இவள் யாரோ யாரோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
இது பொய்யோ மெய்யோ தெரியாதே!
இவள் பின்னால் நெஞ்சே போகாதே!
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்!
ஏக்கங்களை தூவிச் சென்றாள்!
உன்னை தாண்டி போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு!
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே!
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே!
காதல் எனை கேட்கவில்லை!
கேட்டால் அது காதல் இல்லை!

என் ஜீவன் ஜீவன் நீதானே!
என தோன்றும் நேரம் இதுதானே!
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே!
(நெஞ்சுக்குள்..)

படம்: வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: கவிஞர் தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா


காதலனாக நடிக்கும் சூர்யா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாடலின் வரிகளுக்குப் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள். சொல்கிறேன்.

Thursday, December 11, 2008

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெரும்ஜோதி மந்திரத்தை அடியேனின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணபிரேம் ஓதி ஒலிப்பேழையாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டிருந்தார். எனக்கும் ஒரு ஒலிப்பேழையைத் தந்திருந்தார். இன்றைக்கு அதனை யூட்யூபில் வள்ளலார், அவரது ஜோதித் திருவுரு, அவருடன் தொடர்புடைய இடங்கள் போன்ற படங்களுடன் ஏற்றி எனக்குச் சுட்டி அனுப்பியிருந்தார். அவர் அதனை அனுப்பிப் பத்தே நிமிடங்கள் தான் ஆகின்றன. இன்றைக்கு திருக்கார்த்திகைக்கு அருட்பெருஞ்ஜோதி மந்திரம் கேட்கக் கிடைத்ததும் வள்ளலாரின் திருவுருவ அருவ தரிசனங்கள் கிடைத்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

Wednesday, December 03, 2008

சுடும் நிலவு சுடாத சூரியன்...

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

(சுடும் நிலவு)

இமை அடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதி இருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கடிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சை தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்

நாக்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

(சுடும் நிலவு)

மழைத் துளி நமக்கு சமுத்திரம் ஆகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய் போகும்

காதலித்துப் பார் காதலித்துப் பார்
காதலித்துப் பார் காதலித்துப் பார்

சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோட்சமாகும்
மத்த பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகம் ஆகும்
மிருகம் தூங்கி தெய்வம் ஆகும்

தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

(சுடும் நிலவு)

படம்: தம்பி
வெளிவந்த வருடம்: 2006
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்
இயற்றியவர்: வைரமுத்து

Monday, December 01, 2008

தயங்கித் தயங்கிக் கேட்டதால் தயங்கித் தயங்கிப் பதில் சொல்கிறேன்!

முன்பு 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன' என்று ஒரு இடுகை இட்டு நண்பர்கள் கேள்விகள் கேட்க பதில்கள் சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் கேட்காமல் மிக மிகத் தயங்கிப் பின்னர் கடைசியில் சில கேள்விகளைக் கேட்டார் இராகவ். 'சரி. குமரன் பதில் சொல்லப் போவதில்லை. மறந்துவிட்டார்' என்றே அவர் எண்ணியிருப்பார். அவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மறக்கவில்லை. ஆனால் அவர் தயங்கித் தயங்கிக் கேட்டதைப் போல் நானும் பதில் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தேன்.

தயக்கம் மட்டுமின்றி இன்னொரு வேலையும் இருந்தது. மே மாதத்திலிருந்து படிக்கவென்று சேர்த்து வைத்திருந்த நண்பர்களின் இடுகைகள் குவிந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து இப்போது தான் அக்டோபருக்கு வந்திருக்கிறேன். விரைவில் எல்லாவற்றையும் படித்து முடித்துவிடுவேன் என்று நம்புகிறேன். :-)

இதோ தயங்கித் தயங்கி இராகவன் கேட்ட கேள்விகள்!

குமரன், இதோ என்னுடைய கேள்விகள்.. முன்னரே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனாலும் தயக்கம் இருந்ததால் கேக்கவில்லை. கேள்விகளில் வார்த்தைகள் தவறாக இருப்பின் சரி செய்து விடையளிக்கவும்.

1. அன்னை பார்வதி, திருமாலின் தங்கை என்பது எந்த வகையில். எனக்கு தெரிந்து எந்த வைஷ்ணவரும் இதை ஒத்துக் கொண்டதாக தெரியவில்லை. நாராயணண், நான்முகனை படைத்தான், நான்முகன் சங்கரனை படைத்தான் என்ற பாசுர அளவில் மட்டும் எனக்கு தெரியும்.

2. பிராம்மணன் என்பவர் யார்? சற்று விரிவாக விளக்க வேண்டுகிறேன்.

3. என் தாய்மொழி தமிழாக இருந்தும், 23 வயது வரை பள்ளியில், நண்பர்கள் அனைவருடனும் செளராஷ்ட்ர மொழி பேசியே வளர்ந்ததால் தமிழ் சில நேரங்களில் தடுமாறும். நீங்க இப்புடி தமிழ்ல கலக்குறீங்களே எப்புடி (கொஞ்சம் காமெடியா சொல்லலாமே)

4. பலவிதமான பேச்சுத்தமிழ் புழக்கத்தில் உள்ளது போலவே, செளராஷ்ட்ரமும் உள்ளதே ஏன்?? உதாரணத்திற்கு எமனேஸ்வரம் செளராஷ்ட்ர பேச்சை மதுரை மக்கள் கேலி செய்வர். செந்தமிழ் என்பது போல் செம்மையான செளராஷ்ட்ரா மொழி உள்ளதா ?


ஒவ்வொன்றாகப் பதில் சொல்கிறேன். முடிந்த வரை சிரிச்சுவையுடன். நீங்களும் சிரிச்சு வையுங்கள். :-)

1. தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை இராகவ். இரவிசங்கரிடம் கேட்டால் அப்படி ஏற்றுக் கொண்டதற்குத் தரவுகள் தரலாம். ஆனால் தமிழக சைவ, சாக்த சமயங்களில் எல்லாம் அந்தக் கருத்து வலுவாக இருக்கிறது. இந்தக் கருத்து சமய ஒற்றுமைக்காக ஆதிசங்கரரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். ஸ்மார்த்தத்தின் வழியே தமிழகத்திலும் அந்தக் கருத்து வலுப்பெற்று சைவ சாக்த சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் வெறும் ஊகங்களே.

ஆழ்வார்கள் யாரும் பார்வதிக்கும் திருமாலுக்கும் உள்ள உடன்பிறந்தோர் உறவைப் பற்றி பேசவில்லை. ஆனால் பெருமாளின் உடலில் 'பிரம்மன், சிவன், திருமகள்' மூவருக்கும் இடமுண்டு என்று பாடியிருக்கிறார்கள். அப்போது பெருமாளின் வலப்புறமே சிவனுக்குரியது என்று பாடியிருக்கிறார்கள். அது சங்கரநாராயண உருவத்தில் சிவன் வலப்புறத்திலும் திருமால் இடப்புறத்திலும் இருப்பதை ஒத்திருப்பதைப் பார்க்கலாம். சங்கரநாராயண உருவத்தை அருத்தநாரீசுவர உருவத்திற்கு ஒப்பிட்டால் அதே இடப்பக்கத்தில் அம்மை இருப்பதைக் காணலாம். அதனால் நாயன்மாரில் ஒருவர் சொன்ன 'அரியலால் தேவியில்லை ஐயன் ஐயனாருக்கே' என்ற கருத்து வலுப்படுவதைக் காணலாம்.

இந்தக் கேள்விக்கு இன்னும் விரிவாக விடை தரலாம். அதனை நம் நண்பர் இரவிசங்கர் செய்தால் இன்னும் விரிவாகவும் சுவையாகவும் இருக்கும். நேரமும் தேவையும் அமைந்தால் அவர் எழுதலாம்.

2. இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்னர் பாரதியார் உபநிடதங்களின் கருத்தினை தொகுத்துத் தந்திருப்பதைத் தருகிறேன்.

'பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள். ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.

அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'

இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)

3. எழுதுறது வேற; பேசுறது வேற இராகவ். என்னுடன் தொலைபேசிய பதிவுலக நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். நானும் எப்படி தயங்கித் தயங்கி பேசுகிறேன் என்று. :-)

ஆமா. நீங்க 23 வயது வரை பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தீர்களா? சொல்லவே இல்லை? ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை வருடம் படித்தீர்கள்? :-)

என்னுடைய தமிழார்வத்திற்கு எனக்கு அமைந்த தமிழாசிரியர்கள் தான் காரணம் இராகவ். நானும் பள்ளி இறுதி வகுப்பு வரை பள்ளியில் நண்பர்களுடன் சௌராஷ்ட்ரம் பேசியே தான் வளர்ந்தேன். ஏதாவது ஒரு குறை இருந்தால் இன்னொன்றில் அதனை இட்டு நிரப்புவார்கள் என்று கேள்விபட்டிருப்பீர்களே. எனக்கு விளையாட்டுகளில் பள்ளிக் காலத்தில் ஈடுபாடு வரவில்லை. அதனால் சமயம், மொழி என்று ஈடுபாடு சென்றது. அதில் நான் தனித்தன்மை உடையவனாகக் 'காட்டி'க் கொள்ள முடிந்ததால் அதில் ஆர்வம் இன்னும் கூடியது. ஆசிரியர்களும் நன்றாகத் தூண்டிவிட்டார்கள். :-)

இப்போது கூட நீங்கள் யாரும் படிக்கவில்லை என்றால் நான் எழுத மாட்டேன். எல்லாம் வெளி வேடம் தான். பெயருக்கும் புகழுக்கும் தான் எல்லாம். :-)

4. செந்தமிழ், செங்கிருதம் போல் செந்தரப்பட்ட சௌராஷ்ட்ரம் இல்லை இராகவ். அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் எதற்கு? மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே' என்ற எண்ணம் சௌராஷ்ட்ரர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. அதனால் யாரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

வட்டார வழக்கு சௌராஷ்ட்ரத்தில் இருப்பது இயற்கை தானே. ஊர் மாற்றி ஊர் திருமணம் செய்து கொடுப்பதே இப்போது தான் கொஞ்சம் தொடங்கியிருக்கிறது. சென்ற தலைமுறை வரை அது மிக மிக அரிதாகவே நடந்தது. வெளியூரில் பெண் எடுத்தாலோ கொடுத்தாலோ கேவலமாக எண்ணப்பட்டது. அப்படி கொடுக்கல் வாங்கல் தொடர்பு கூட இல்லாத போது தனித்தனியான பேச்சு வழக்கு ஏற்படுவது இயற்கை தானே. இதனைப் பற்றி எழுதத் தொடங்கினால் நிறைய எழுத வேண்டும். இன்னொரு தருணத்தில் அதனைப் பார்க்கலாம். :-)

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி!

எத்தனை எத்தனை நாடகங்கள்! இறைவனிடமே! அத்தனை நாடகங்களையும் தொடர்ந்து நாம் நடத்த அவனும் நடித்துக் கொண்டிருக்கிறான். அருளாளர்கள் இருவர் சொல்வதைப் பாருங்கள்.


கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே

- திருநாவுக்கரசர்.

நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தைக் வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து / உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்


உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

- தொண்டரடிப்பொடியாழ்வார்.

உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.

Friday, November 28, 2008

திருக்குறளில் திருமகளின் தவ்வையும் நினைக்கப்படுவதும்

பல நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த இரு குறட்பாக்களைப் பற்றி இன்று தான் இங்கே எழுத இயன்றது. செல்வத்தை அருள்பவள் திருமகள், வறுமையைத் தருபவள் அவள் அக்கா மூதேவி என்ற தொன்மம் திருக்குறளில் இருப்பதைப் போல் தோற்றம் தரும் ஒரு குறட்பா இருக்கிறது. இன்னொரு குறட்பா நல்லவன் கடின வாழ்க்கை வாழ்வதும் கெட்டவன் எளிய வாழ்க்கை வாழ்வதும் 'நினைக்கப்படும்' என்று சொல்கிறது. இவ்விரு குறட்பாக்களுக்கும் உரையாசிரியர்கள் சொல்லும் விளக்கம் என்ன என்று படித்துப் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருந்தேன். இன்று அவற்றைப் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். இடையிடையே அவற்றைப் படித்த போது தோன்றும் / தோன்றிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

***

முதல் குறட்பா 167வது குறட்பா.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்


இதற்கு விளக்கம் தரவந்த பரிமேலழகர் 'அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள்.)' என்று சொல்கிறார். அதற்கு மேல் அவர் விளக்கம் தரவில்லை.

மணக்குடவரோ 'அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்' என்று சொல்லிவிட்டு அடுத்து இன்னொரு வரியை இடுகிறார். 'இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று'. நல்குரவு என்றால் வறுமை. இந்தக் குறள் செல்வத்திற்கு காரணமாக அழுக்காறின்மையையும் வறுமைக்குக் காரணமாக அழுக்காறுடைமையையும் கூறியதாக விளக்கம் தருகிறார்.

தேவநேயப் பாவாணர் 'அழுக்காறு உடையானை-பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்-செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும்' என்று பொருள் உரைத்துவிட்டு 'அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை; தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம்' என்று மேலும் விளக்குகிறார்.

கலைஞர் கருணாநிதி 'செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்' என்று சொல்கிறார்.

ஆக எந்த வித சார்பும் உடையவர் என்று எண்ணப்படாத மணக்குடவரும், வடவர்களின் கொள்கைகளை உரையில் இட்டு எழுதிவிட்டார் என்று சொல்லப்படும் பரிமேலழகரும், திராவிட கருத்தாக்கத்தின் முன்னோடியான தேவநேயப் பாவாணரும், தற்கால திராவிட கருத்தாக்க முன்னவரான கலைஞர் கருணாநிதியும் இந்தக் குறளுக்கு ஒரே பொருளைத் தான் தருகிறார்கள். ஆக எல்லோரும் இந்தத் தொன்மம் திருக்குறள் காலத்திலேயே தமிழரிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது என்று ஒத்துக் கொள்கிறார்கள்.

***

அடுத்த குறட்பா 169வது குறட்பா

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

இதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் 'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91௯3) என நினைக்கப்பட்டவாறு அறிக.)'.

அதாவது அழுக்காறு கொண்டவனுக்கு ஆக்கமும் நல்லவனுக்கு கேடும் உளவாகாது. அப்படி எப்போதாவது பார்த்தால் அதனை அறிஞர்கள் ஆராய்வார்கள் என்று விளக்கம் சொல்லி 'உளவாயின்' தொக்கி நின்றது என்று கூறுகிறார். அப்படி ஆராயும் அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் சொல்கிறார். அது 'பழவினை'. ஆரியக் கருத்து புகுந்துவிட்டது போல் தெரிகிறதே?! ஹும் பார்ப்போம் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்று.

மணக்குடவர் வழக்கம் போல் மிக எளிமையாக 'அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்' என்று சொல்லிப் போந்தார்.

தேவநேயர் கட்டாயம் பரிமேலழகரின் பித்தலாட்டத்தைக் காட்டி உண்மைப் பொருளைத் தந்திருப்பார் என்று எதிர்பார்ப்புடன் அவர் சொன்னதைப் படித்தேன். அவர் தான் வழக்கம் போல் மிக விரிவாகச் சொல்லியிருந்தார். அவர் சொல்லியிருந்தது:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும்-பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; நினைக்கப்படும்-எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும்.

இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால் அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்.

"இம்மைச் செய்தன யானறி நல்வினை
யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது"

என்னும் மாடலன் கூற்றும் (சிலப். 15;91௯3.)

"என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே".

என்னும் பட்டினத்தார் பாடலும், இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.

ஆகா இதென்ன கொடுமை. அப்படியே பரிமேலழகர் சொன்னதையே தமிழ் வழியில் உரையெழுதிய பாவாணரும் சொல்லியிருக்கிறாரே. ஆரிய மாயையில் இவரும் மயங்கிவிட்டாரா? பரிமேலழகர் சொன்ன பொருளை அப்படியே ஏற்று எழுதி மேலும் எடுத்துக்காட்டுகளும் தருகிறாரே.

சரி இவரை விடுவோம்; கலைஞர் கைவிடமாட்டார் என்றெண்ணி அவர் சொன்னதைப் படித்தேன்.

அவர் சுருக்கமாக 'பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்' என்று சொல்லி முடித்துவிட்டார்.

வியப்பு தான். :-)

Sunday, November 23, 2008

நானே சிவன்! நானே சிவம்! சிவோஹம்! சிவோஹம்!இது ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு). இன்று பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பிறந்த நாள். முன்பொரு முறை புட்டபர்த்தியில் அவர் திருமுன்பு பாடப்பட்ட இந்தப் பாடலை பல நாட்களாக விளக்கத்துடன் எழுத வேண்டும் என்று ஆவல். சுவாமியின் பிறந்த நாள் அன்று அந்த ஆவல் நிறைவேறுகிறது.

இந்தப் பாடலின் நடுவிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வருகிறது. அது சுவையான சுகமான மொழிபெயர்ப்பு. இருந்தாலும் சொல்லுக்குச் சொல் விளக்கம் இருந்தால் நல்லது என்று எண்ணி தமிழில் இங்கே மொழிபெயர்த்து இடுகிறேன்.

ஓம் ஓம் ஓம்

சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் .....

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மனோ புத்தி அஹங்கார சித்தா நின அஹம் - நான் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவுமில்லை.

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே - நான் காதுகளும் இல்லை; நாவும் இல்லை

ந ச க்ராண நேர்த்ரே - நான் நாக்கும் இல்லை; கண்களும் இல்லை

ந ச வ்யோம பூமி: - நான் வானமும் இல்லை; பூமியும் இல்லை

ந தேஜோ ந வாயு: - நான் ஒளியும் இல்லை; காற்றும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ச ப்ராண சங்க்யோ ந வை பஞ்ச வாயு: - நான் மூச்சால் கட்டுப்பட்டவன் இல்லை; நான் ஐந்துவிதமான காற்றுகளும் இல்லை (ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று)

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோச: - நான் ஏழுவிதமான உடற்பொருட்களும் இல்லை (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை); நான் ஐந்துவிதமான போர்வைகளும் இல்லை (அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந வா பாணி பாதம் ந ச உபஸ்த பாயு: - நான் கைகால்களும் இல்லை; நான் மற்ற உறுப்புகளும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந மே த்வேஷ ராகௌ - எனக்கு வெறுப்பும் விருப்பும் இல்லை

ந மே லோப மோஹௌ - எனக்கு பற்றுதலும் மயங்குதலும் இல்லை

மதோ ந ஏவ மே ந ஏவ மாத்ஸர்ய பாவ: - எனக்கு கருவமும் இல்லை; பொறாமையும் இல்லை

ந தர்ம: - நான் அறமும் இல்லை

ந ச அர்த்த: - நான் பொருளும் இல்லை

ந காம: - நான் இன்பமும் இல்லை

ந மோக்ஷ: - நான் வீட்டுப்பேறும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந புண்யம் ந பாபம் - நான் புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை

ந சௌக்யம் ந துக்கம் - நான் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை

ந மந்த்ரோ ந தீர்த்தம் - நான் மந்திரமும் இல்லை புண்ணிய தீர்த்தமும் இல்லை

ந வேதா ந யக்ஞ: - நான் வேதமும் இல்லை யாகங்களும் இல்லை

அஹம் போஜனம் ந ஏவ போஜ்யம் ந போக்தா - நான் உணவும் இல்லை உண்ணும் காரியமும் இல்லை உண்டு அனுபவிப்பவனும் இல்லை (நான் புலனுக்குட்படும் பொருட்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிக்கும் செயல்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிப்பவனும் இல்லை)

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ம்ருத்யுர் ந சங்கா - எனக்கு மரணம் இல்லை; எனக்கு பற்றுதல் இல்லை

ந மே சாதி பேத: - எனக்கு சாதி பேதங்கள் இல்லை

பிதா ந ஏவ மே ந ஏவ மாதா ச ஜன்மா - எனக்கு தாய் தந்தையர் இல்லை; எனக்கு பிறப்பும் இல்லை

ந பந்துர் ந மித்ரம் - எனக்கு உறவுகள் இல்லை; நட்புகள் இல்லை

குருர் ந ஏவ சிஷ்யா - நான் குருவும் இல்லை சிஷ்யனும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


அஹம் நிர்விகல்ப - நான் மாற்றம் இல்லாதவன்

நிராகாரரூப: - உருவம் இல்லாதவன்

விபுத்வா ச - எங்கும் நிறைந்தவன்

சர்வத்ர - எல்லாம் ஆனவன்

சர்வேந்த்ரியானாம் - எல்லா உடல்களிலும் வசிப்பவன்

ந ச சங்கடம் - எனக்கு கட்டுப்பாடுகள் இல்லை

ந ஏவ முக்தி: ந மே யா - அதனால் எப்போதும் எனக்கு விடுதலை என்பதும் தேவையில்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

Friday, November 21, 2008

'ஐ'யும் 'அய்'யும்..... - திரு. நாக. இளங்கோவன்

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)

"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்
அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது
என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.
ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்.

"ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.
சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்.

"அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்
வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது
தவறில்லை என்பதே அறிஞர்களின்
கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்
"அய்" என்றே எழுதவேண்டும்
என்று வலியுறுத்துவதில்லை.

ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம்
இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப்
படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று
போய்விட்ட அந்த எதிர்வாதுகளை நான் சட்டை
செய்யவில்லை.

ஆயினும் இந்த "அய்" விதயத்தில் என்னிடம்
காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும்
"ஐ" எனவே புழங்குகிறேன். ஐ என்று
எழுதவேண்டும் என்று சில பெரியவர்களும்
எனக்கு சொன்னபோது இதனை நுணுகிப் பார்க்கத்
தோன்றியது. "அய்" என்று நிறைய
புழங்கியவன் என்ற முறையில் என் கருத்துக்களை
நான் விளக்க வேண்டும்.

1) "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல.
ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான
சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம்
என்று சொற்களை இழக்கக் கூடாது.

ஐ என்பதற்கு உள்ள பொருள்களில் மிக முக்கியமானவை
நுண்மை, மெல்ல, வியப்பு மற்றும் ஐந்தின் குறுக்கம்.

ஐந்தின் குறுக்கமாக "ஐ" பயன்படுவதைக் காண்க:

"ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை"
................சிலப்பதிகாரம்:27:174-175

வியப்பு:

"பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
'ஐ!' என்றாள், ஆயர் மகள்,"
..................சிலப்பதிகாரம்:ஆய்ச்சியர் குரவை

மெல்ல/பைய:

பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு "ஐ"யெனக் கழிய......
...................அகநானூறு:305


இந்த மூன்று பொருள்களில் இவ்வெழுத்து இலக்கியங்களில்
விரவிக் கிடக்கிறது. இதை மாற்றினால் அதன் தன்மை
எப்படி யிருக்கும் என்று பார்த்தால் ஐயம் வருகிறது.

மேற்சொன்னக் காட்டுகளில், "ஐ" வரும் இடங்களில் "அய்" என்று
போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால்
ஒவ்வொரு "அய்" யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக்
காணமுடிகிறது.

இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில்
சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரை
பெறும் (ஐகாரக் குறுக்கம்).

ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில்
அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை "அய்" என்று எழுதிக்
கெடுத்து விடுகிறோம் என்று என்னால் உணரமுடிந்தது.

குறிப்பாக மேற்சொன்ன அகப்பாடலை முழுதுமாகப்
படித்துப் பார்த்தால்தால் அந்த "ஐ" யின் வலிமையை
உணரமுடியும்.

அந்த அகப்பாட்டு எடுத்து வீசுகின்ற துயருக்கும் சூழலுக்கும்
இந்த ஐ என்ற ஒரு சொல் பெரும்பங்கு வகிப்பதை அதை
ஆழ்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

ஆதலின் "ஐ" யின் இழப்பு, ஒரு எழுத்து, ஒரு சொல்,
அதன் அகமான ஒலிப்பு என்ற மூன்றையும் இழக்க வைக்கிறது.

ஆகவே, "அய்" என்று எழுதக் கூடாது.
உரையிலும் சரி கவிதையிலும் சரி.

2) தமிழில் பிறமொழிகளை விட ஓரெழுத்து, ஈரெழுத்து மற்றும்
மூவெழுத்துச் சொற்கள் அதிகம் என்று அறிஞர் கூறுவர்.
ஆ, ஈ, ஓ, மா, மீ, கூ, கோ,சீ, தீ, தா, தூ, நீ,
ஐ, நை, மை, கை, வை, தை
போன்று பல ஓரெழுத்துச் சொற்கள் தனித்தோ, சொல்
விகாரமடைந்தோ பொருள் கொடுப்பவை இருக்கின்றன.
அதோடு பிற எழுத்துக்களோடு இவை புணர்ந்து
கொடுக்கும் சொற்கள் ஏராளம். அதில் "ஐ" மிக
முக்கியமானது. இதைச் சார்ந்து இருக்கும்
சொற்கள் மிக அதிகம். ஆகவே தமிழில்
இருக்கும் ஓரெழுத்துச் சொற்களை

இழக்கக் கூடாது. இது ஒளகாரத்திற்கும் பொருந்தும்.

3) இது வெறும் வரி வடிவம்தானே இதனை
மாற்றினால் என்ன என்று கருத இடம் இருக்கிறது
(சொல், ஒலிப்பு என்ற நிலையைத் தாண்டி)

ஆனால், இதை மாற்றுவதால் என்ன பயன்? என்று பார்த்தால்
ஒன்றுமேயில்லை. எனது சிற்றறிவினால் நிச்சயமாக எந்தப்
பயனையும் காணமுடியவில்லை.

"ஐ" என்று விரல்களால் எழுதும்போது வளவு நெளிவுகள் நிறைய
இருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். இதனை நீக்கி "அய்"
என்று எழுதினால் இதை விட அதிக சுழிப்புகளைத்தான்
போடவேண்டி உள்ளது.

4) ஐ என்று எழுதாமல் அய் என்று எழுதினால்
இரண்டு எழுத்துக்களின் இடத்தை எடுத்துக் கொள்கிறது.
இலக்கணக் கட்டில் மெய்யெழுத்துக்கள்
கணக்கிடப் படுவதில்லை. ஆனால் எழுதினால் அது ஒரு இடத்தை
அடைத்துக் கொள்ளவே செய்கிறது. காகிதத்தில் எழுதினாலும்,
கணியில் எழுதினாலும் தேவையில்லாமல் அதிக எழுத்துக்களை
நாம் பெருக்குகிறோம்.

ஐஐந்து (4 எழுத்துக்கள்) = அய்அய்ந்து = அய்யய்ந்து (6 எழுத்துக்கள்)

5) "ஐ" என்பது ஒரு சொல் என்று அறிவோம். அந்தச் சொல்
எப்படி வந்தது என்று பார்க்குங்கால் மனிதனின்
இயல்பான ஒலிப்பில் இருந்தே வந்திருக்கின்றது.

"ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது
சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு.
இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை.
ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக்
குறிக்கும் சொல்லை விட்டுத்தர என் மனம் ஒப்பவில்லை.

"ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும்.

மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.
அமைதிப்படுத்தும்போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய
ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்.
(மாடுகளுக்கு முகமன் கூறும் சொல்லே இந்த "ஐ" தான் :-).
நாமெல்லாம் ஆங்கிலத்தில் hi (ஐ) சொல்வது போலே :-) )

இந்த இயல்பான ஒலிப்பை உள்ளடக்கிய ஐ நிலைக்க வேண்டும்.

6) கீழ்க்கண்ட தேவாரத்தைப் படிக்க:

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
....அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
.....எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
.....பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
.....எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
.............. ஆறாம் திருமுறை: பாடல் 95: அப்பர் பெருமான்

இங்கே ஐய, ஐயோ என்ற இடங்களில் இருக்கும் ஐகளை
அய் என்று மாற்றிப் படிக்க மனம் ஒப்புதில்லை. தேவார திருவாசக
நூல்களில் ஐ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் பயன் படுத்தப்
படும் இடங்கள் மிக நுண்ணியமானவை. அவற்றை இழந்தால்
அந்த இடத்தின் இதம் கெடுகிறது போன்றொரு உணர்வு இருக்கிறது.
இதை வேறு ஆதரவில் என்னால் நிறுவ முடியாது. எனினும் இதை
விட்டு விட முடியவே முடியாது.

7) "புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி" என்பது
பெரியபுராணத்தில் வருகின்ற அடி.

இதில் ஐயடிகள் என்ற சொல்லினைக் காண்க.
"ஐ அடிகள்" என்பதில் ஐ என்பது சொல். அது வியக்கத்தக்க,
போற்றத்தக்க, அல்லது நுண்திறன் வாய்ந்த அடிகள் என்ற
பொருளைக் கொடுக்கிறது. இந்த ஐ என்ற சொல்லைத்
தூக்கினால் இம்மாதிரியானப்
பயன்பாடுகள் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
(ஐந்து அடிகள் என்று பொருள் கொண்டாலும்
ஐ யின் தனிச்சிறப்பு இருக்க வேண்டிய
அவசியத்தை நோக்குக.)

8) செய்யுளில் அளபெடுக்கும் இடங்களில் குழப்பமேற்படுத்தும்.

"யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!...."
............................சிலப்பதிகாரம்:கட்டுரைகாதை:19-21

அணி-இழாஅய் என்ற சீர் இன்னிசை அளபெடையாக வருகிறது.
இது அணியிழையாள் என்ற சொல் விகாரம் பெற்று அணி-இழாய்
ஆகி, மேலும் அளபு எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு பேச்சுக்கு, ஒரு செய்யுள்/கவிதை வரி இப்படி
அமைகிறது என்று வைத்துக் கொள்வோம்.
"அணி-இலாஅய் அடிகள் காண்குவம்... " என்று வருமானால்

இது அளபெடையா, அல்லது ஐயடிகளைச் சொல்கிறதா என்ற குழப்பம்
வரும். இந்தக் கருத்தின் இலக்கணச் சுத்தியை நான் நன்கு
ஆய்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டுக்காக
ழகரத்தை லகரமாக மாற்றி எழுதியிருக்கிறேன்; பிழையிருப்பின் அறிஞர் பொறுக்க.

9) ஐ, ஐய, ஐயன், ஐயள், ஐயை, ஐயர், ஐயா, ஐயோ போன்ற
சொற்கள் மிகத் தனித்தன்மை வாய்ந்தன. அதை அப்படியே
போற்ற வேண்டும். (சொல்லோடு ஐ சேர்ந்து வரும்போது
இலக்கணப் படி சரியேயாயினும்).

10) இந்த "அய்" போக்கு சொல்லில் முன்னால் வருவதால்,
நடுவிலும் பின்னாலும் இப்படிச் செய்கிறார்கள். மலை
என்பதை மலய் என்று எழுதுகிறார்கள். சிலை = சிலய்,
கலை = கலய் என்று பயில்கிறார்கள்.
பழமலை என்பவர் பழமலய் என்றே எழுதுகிறார் இதழ்களில்.
இது ஆபத்தான போக்கு என்றே படுகிறது. இதை நுணுகி ஆராய்ந்தால்
இதன் சரவல்கள் வெளிவரக்கூடும். இது மிக சிக்கலான சிக்கல்
தரும் விதயமாகவே படுகிறது. எழுத்து, சொல், யாப்பு இலக்கனங்களை
நுணுகிப் பார்க்கவேண்டும். குறிப்பாக இப்பயன்பாடு மலய் என்று பழகி,
அது செய்யுளில் மருவி அல்லது விகாரமடைந்து பயன்படுத்தினால்
எப்படி இருக்கும் என்று எண்ணினால் ஐயமாக இருக்கிறது.

இக்காரணங்களால், நான் "அய்" என்ற பயன்பாட்டை அறவே தவிர்த்து
விட்டேன். சொல்லோடு சேர்ந்து வரும்போது அது பிழையில்லை
என்பதால் அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த
ஏற்பு, தனித்த ஐ என்ற சொல்லையும் பலரின் பயன்பாட்டால்
பாதிக்கிறது. ஆகவே "அய்" என்ற பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து.

(தொடர்புடைய திரு.குமரனின் கருத்துக்கள்:
http://koodal1.blogspot.com/2008/05/blog-post.html )

அன்புடன்
நாக.இளங்கோவன்

***

இங்கும் சேமித்து வைக்க அனுமதி தந்த திரு. இளங்கோவன் ஐயாவிற்கு மிக்க நன்றி.

Thursday, November 20, 2008

புன்கவிஞர் பலவகை (இலக்கிய மரபு) - பசவய்யா

நாம் எல்லாம்
டமில் எழுத்தாளர்
நமக்கோ
பிளேஜியரிஸம்
பசுவய்யா

"பிளேஜியரிஸம்' என்பதைத் தமிழில் இலக்கியத் திருட்டு என்று சொல்வர். பிறர் ஒருவரின் கருத்தையோ சிந்தனையையோ அவர் பெயரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வது, பிறருடைய சிந்தனைகளைத் தன்னுடையதேபோலக் கையாள்வது முதலிய நடவடிக்கைகள் "பிளேஜியரிஸம்' ஆகும் என்பது ஆங்கில நூல் வரையறை.2

தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர் மு. அருணாசலம், "பிளேஜியரிசம்' பற்றிக் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.

""ஒருவர் உழைத்துச் செய்த காரியத்தை மற்றொருவர் அப்படியே பயன்படுத்திக் கொண்டால், அதைக் கருத்துலகில் திருட்டு என்று சொல்வோம். இலக்கியத் துறையில் ஒருவர் கூறியதை மற்றொருவர் இடம் குறிப்பிடாமலும் நன்றி தெரிவிக்காமலும் அப்படியே எடுத்து ஒரு பக்கமோ ஒரு பத்தியோ வைத்துக்கொண்டாலும்கூட ஆங்கிலத்தில் அதைப் "பிளேஜியரிசம்'(இலக்கியத் திருட்டு) என்று சொல்வார்கள்.''3

இந்தப் பிளேஜியரிசம் எனப்படும் "இலக்கியத் திருட்டு' தமிழில் இருக்கிறதா? தமிழில் எல்லாம் இருக்கிறது; தமிழில் இல்லாததே இல்லை என்னும் கருத்தில் தீவிரப் பற்றுடையோர் தமிழர். அப்படியெனில் இலக்கியத் திருட்டு சமாச்சாரம் மட்டும் தமிழில் இல்லாமல் போகுமா?

"முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றி' வருவது தமிழர்தம் மரபாகும். மரபிலே தமிழருக்கு உள்ள ஈடுபாடு அளவிடற்கரியது. தமிழ் மரபுகளுக்கு உரிய தனித் தன்மைகளைப் பேணிக் காக்கிறோமோ இல்லையோ சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவற்றை எடுத்து மொழிந்து பெருமை பேசிக்கொள்வது நமக்குக் கைவந்த கலையாகும். இலக்கியத்தை அகம், புறம் என்று பகுத்துக் காணும் மரபு தமிழைத் தவிர உலக மொழிகள் எவற்றிலும் கிடையாது. அகப் பொருள் மரபு, புறப்பொருள் மரபு ஆகியவை சார்ந்த விசயங்கள் தனித்தனி நூல்களாக எழுதப்பட்டுத் தொடர்ந்துவருகின்றன. நவீன விமர்சகர்கள் பலரும் இக்கோட்பாட்டை விரிவாகப் பயன்படுத்த முயல்கின்றனர் என்பனவெல்லாம் நாம் பேசும் பெருமைகள்.

பலராலும் விதந்தோதிக் குறிப்பிடப்படும் அகம், புறம் என்னும் மரபுகள் மட்டுமல்ல, இன்னும் பெருமை மிகு மரபுகள் பலவும் நம்மிடம் உள்ளன. அவற்றுள் சில:

க. மிகவும் பிரபலமான இலக்கியம் ஒன்றின் இடையிடையே பொருத்தமான இடங்களில் அந்த இலக்கிய நடையிலேயே சில பாடல்களை எழுதிச் சேர்த்துவிடும் மரபு. இதனை இடைச் செருகல் என்பர். ஓரிலக்கியத்தைப் பயின்றுவரும் போது உணர்ச்சிவசப்பட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். கவிஞன் இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் விரித்துப் பாடியிருக்கலாம் என்னும் கருத்துத் தோன்றியதால் தன் சரக்கை உள்ளே நுழைத்திருக்கலாம். தன் பயிற்சிக்காகக்கூட இத்தகைய வேலையைச் செய்திருக்கலாம்.

நீண்ட கதையாகப் போகும் காப்பிய இலக்கியத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். தசரதன் இறந்த செய்தி கேட்டதும் இராமன் புலம்புகிறான். அப்புலம்பலைப் பத்துப் பாடல்களில் கம்பர் பாடுவதாகக் கொள்வோம். படிக்கும் புலவர், " அடடா இராமனை இன்னும் கொஞ்சம் புலம்ப விட்டிருக்கலாமே' என்று நினைக்கிறார். உடனே தன் விருப்பத்தைத் தானே செயல்படுத்தி விடுகிறார். இப்படி ஏராளமான இடைச்செருகல் வேலை தமிழில் நடந்திருக்கிறது.

வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் புலவர், பல பாடல்களை எழுதிப் பெரியபுராணத்தில் செருகியிருக்கிறார். அப்பாடல்களை இனம் கண்டு பிரித்து "வெள்ளி பாடல்கள்' என்று தனிப்படுத்திக் காட்டு வதுண்டு. அதேபோல, சீவக சிந்தாமணி காப்பியத்துள் கந்தியார் என்னும் புலவர் எழுதிச் சேர்த்த பல பாடல்கள் இருப்பதாகக் கூறுவர்.

உ. புலவர் ஒருவர் தான் எழுதிய நூல் ஒன்றைத் தன் பெயரில் வெளியிடாமல், ஏற்கெனவே பெரும் புகழ் பெற்று நிலைகொண்டுவிட்ட புலவர் ஒருவரின் பெயரில் வெளியிடும் மரபு. தான் எழுதியதிலேயே தன் பெயரைப் போட்டுக்கொள்ளாத இச்செயல் "தியாகம்' என்று தோன்றும். உண்மை அதுவல்ல. தன் பெயரைப் போட்டுக்கொண்டால் "போணி'யாகாது என்பதால் இந்த வேலை. தான் எழுதிய நூலின் தரத்தில் நம்பிக்கையில்லாத புலவர் அந்த நூலை ஏதாவதொரு விதத்தில் அடையாளப்படுத்த விரும்பியதின் விளைவு இது.

"ஞான வெட்டியான்' என்னும் நூல் திருவள்ளுவர் பெயரில் இருக்கிறது. காலத்தால் மிகவும் பிற்பட்ட இந்த நூலை எழுதியவர் யாரோ தெரியவில்லை. புகழேந்திப் புலவர் பெயரில் உள்ள நூல்கள் பல. குறிப்பாக நாட்டுப்புறக் கதைப் பாடல் வடிவில் எழுதப்பட்ட அல்லியரசாணி மாலை, புலந்திரன் களவு போன்ற புராணக் கதைகள் பல அவருடைய பெயரில் உலவுகின்றன.

ங. பழங்காலத்தில் வழங்கியதாகத் தகவல் மட்டும் தெரியும் நூலின் பெயரில் புதிய நூல் எழுதிப் பரப்பிவிடும் போலிநூல் மரபு. பொருளீட்டுவதற்காக அல்லது பழைய நூலைக் கண்டு பதிப்பித்தவர் என்னும் புகழைப் பெறுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம். தனிமனிதர் மட்டுமல்ல; சிலபேர் சேர்ந்து குழுவாகக்கூட இத்தகைய வேலைகளைச் செய்திருக்கின்றனர்.

இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் செங்கோன் தரைச்செலவு, மூவடி முப்பது ஆகிய பழைய நூல்களைக் கண்டுபிடித்துவிட்டதாகப் புலவர் ஒருவர் அச்சிட்டுள்ளார். " ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் தொடர் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. "ஐந்திரம்' என்பது வடமொழி இலக்கண நூல் என்பர் சிலர். அது தமிழ் இலக்கண நூல்தான் என்பவரும் உண்டு. ஐந்திரம் என்பது நூலே அல்ல; அது ஒரு சிந்தனைக் குழு என்ற கருத்துக் கொண்டோரும் உள்ளனர். உலகத்தமிழ் மாநாடு ஒன்றின்போது "ஐந்திரம்' என்னும் பெயரில் தமிழ் இலக்கண நூல் ஒன்று வெளியிடப்பட்டது. பின்பு அது போலிநூல் என்று புறக்கணிக்கப்பட்டது. இத்தகைய "வளமான' மரபுகளைக் கொண்ட நம்மிடம் இலக்கியத் திருட்டு மரபு மட்டும் எப்படி இல்லாமல் போகும்? அதற்கு நேர் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எதிர்மறையான சான்று ஒன்றுண்டு. பிரபலமான திருவிளையாடல் கதையில் தருமி என்னும் புலவரின் செயலை நாம் அறிவோம். பிறிதொருவரின் பாடலைத் தன் பாடல் என்று சொல்லிப் பரிசில் பெறச் செல்கிறார் அவர். பாடியவரே கொடுத்தார் என்பது இங்கு விசயமல்ல. பிறர் பாடலைத் தன் பாடல் என்று சொல்வது இலக்கியத் திருட்டு அல்லாமல் வேறென்ன?

இலக்கியத் திருட்டு பற்றிய கருத்துகள் நம் மரபில் உள்ளன. "வச்சணந்தி மாலை' என்னும் இலக்கண நூல் புன்கவிஞர் நான்கு வகை என்று கூறுகிறது.

ஆரொருவன் பாக் களை ஆங்கொருவனுக்களிப்போன்
சோரகவி, சார்த் தொலியிற் சொல்லு மவன் - சீரிலாப்
பிள்ளைக் கவி சிறந்த பின்மொழிக் காம், புன்மொழிக் காம்
வெள்ளைக் கவிய தனின் வேறு.4
இதில் கூறப்படும் கவிஞர் வகையும் விளக்கமும் வருமாறு:

அ. சோரகவி: ஒருவன் பாடிய பாக்களை வேறொருவனுக்குக் கொடுப்போன் கள்ளக்கவி ஆவான். யாரோ ஒருவன் பாடிய பாடல்களைத் தன் பாடல்கள் எனக் கூறி (புரவலன்) ஒருவனிடம் வழங்குவோன் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஆ. சார்த்துகவி: ஏற்கெனவே ஒருவன் பாடியுள்ள பாடலின் சந்தத்தில் வேறொரு பாடல் புனைவோன் சார்த்துகவியாவான். இது "இடைச் செருகல்' புலவர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இ. பிள்ளைக்கவி: சொந்தச் சிந்தனை ஏதுமின்றி முன்னோரை அப்படியே பின்பற்றுபவன் பிள்ளைக்கவி ஆவான்.

ஈ. வெள்ளைக்கவி: பொருத்தமற்ற சொற்களைக் கொண்டு கவி புனைவோன் வெள்ளைக்கவி ஆவான்.

சார்த்துகவி, பிள்ளைக்கவி, வெள்ளைக்கவி ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இங்கு வேண்டாம். சோரகவி எனப்படும் கள்ளக்கவி மரபை மட்டும் எடுத்துக்கொள்வோம். கள்ளக்கவி, சோரகவி ஆகிய சொற்களுக்குப் பிறர் பாடிய பாடல்களைத் தனதென்று கூறுபவன், ஒருவனுக்குப் பாடியுள்ளதை வேறொருவனுக்குக் கொடுப்போன், திருட்டுப் பாடல் என அகராதிகள் பொருள் தருகின்றன.5

பிறிதொருவன் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவனுக்குத் தருமி உதாரணம் என்றால், தான் பாடிய பாடலைப் பிறிதொருவன் பெயரில் வழங்க அனுமதித்ததற்கு இறையனார் (சிவபெருமான்) உதாரணமாகிறார். தமிழ் மரபிலக்கண வரையறைப்படி தருமி, சிவன் ஆகிய இருவருமே கள்ளக்கவிகள் தான். தமிழ் நெடுமரபில் வேறு சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சம்பவங்கள் சிலவற்றை இம்மரபில் பொருத்திப் பார்க்கலாம்.

உ. வே. சாமிநாதையர் எழுதிய "என் சரித்திரம்', "ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' ஆகிய நூல்களைப் படித்தவர்களுக்கு அவற்றில் வரும் சில சம்பவங்கள் நினைவிருக்கலாம். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாடல்கள் எழுதிப் பிறருக்குக் கொடுத்துவிடும் தாராள மனம் கொண்டவர். திருவாவடுதுறை மடத்துத் தலைவர் சுப்ரமணிய தேசிகரிடம் பரிசில் பெறவேண்டி வருவோர் பலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம்தான் முதலில் வருவர். அவர் சுப்ரமணிய தேசிகரைப் புகழ்ந்து பாடல் இயற்றித் தருவார். வருவோர் அப்பாடலைத் தம் பாடலாகக்கொண்டுசென்று தேசிகர்முன் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வர்.

அவருடைய மாணவனாக இருந்தபோது சாமிநாதையருக்கே நெருக்கடியான நேரங்களில் இவ்விதமாக அவர் உதவிய சம்பவங்களும் உண்டு. இவை மட்டுமல்ல, தாம் இயற்றிய "குசேலோபாக்கியானம்' என்னும் நயம் மிகுந்த நூல் ஒன்றையே தம் மாணவரும் செல்வருமான "தேவராசப் பிள்ளை' பெயரில் போட்டுக்கொள்ளக் கொடுத்துள்ளார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

அதைப் பற்றி அவர் கூறும்போது, "தமிழ் சமஸ் கிருதம், தெலுங்கு முதலிய பாஷைகளில் கவிகள் தாம் செய்த நூல்களை இவ்வாறு தங்களை ஆதரித்த பிரபுக்களின் பெயராலேயே வெளியிடுவது பழைய வழக்கந்தான்' என்கிறார்.6 இன்றும் "குசேலோபாக்கியானம்' தேவராசப் பிள்ளை பெயரில்தான் வழங்கி வருகிறது.

மாதை திருவேங்கடநாதர் என்னும் பார்ப்பன அமைச்சர் ஒருவர் பெயரில் "பிரபோத சந்திரோதயம்' என்றொரு நூல் உள்ளது. இந்நூல், திருவாரூர் வைத்தியநாத தேசிகர் ("இலக் கண விளக்கம்' இயற்றிய ஆசிரியர்) இயற்றிக் கொடுத்தது என்றொரு செய்தியும் கூறப்படுவதுண்டு.

எழுதியவர் சம்மதத்தோடு பிறருக்குக் கொடுக்கப்பட்டாலும்கூட இவையும் கள்ளக்கவி என்றுதான் தமிழ் மரபு கூறுகிறது. இவையே திருட்டு என்றால், எழுதியவருக்கே தெரியாமல் அவருடைய உழைப்பை, சிந்தனையைத் தம்முடையதாக்கிக் கொள்ளுவதை என்னவென்று கூறுவது? "திருட்டு' என்பதற்கும் மேலான சொல் ஒன்றைத்தான் தேடவேண்டும். இவ்வழக்கத்திற்குப் பழைய சான்றுகள் எதுவுமில்லை. எனினும் இம்மரபின் தொடர்ச்சி என்று கருதத்தக்க வகையில் இருபதாம் நூற்றாண்டுச் சான்றுகள் ஏராளமாய் உள்ளன.

குறிப்புகள்:
1. பசுவய்யா, 107 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 1996, ப. 28.

2. ஏஹய்க்க்ஷர்ர்ந் ஊர்ழ் ரழ்ண்ற்ங்ழ்ள் ர்ச் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் டஹல்ங்ழ்ள்ம் ஙகஅ, 1998, ட. 21

3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11ஆம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1971, ப. 401.

4. மேற்கோள்: மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1970, ப. 217.

5. காண்க:
அ. எஸ். வையாபுரிப் பிள்ளை(ப.ஆ), தமிழ் லெக்சிகன், தொகுதி ஐஐ, சென்னைப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு, 1982, ப.806 மற்றும் தொகுதி ஐஐஐ, ப. 1674.

ஆ. மு.சண்முகப் பிள்ளை (தொ. ஆ), தமிழ் - தமிழ், அகரமுதலி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1985, ப. 292 மற்றும் ப. 521.

6. உ. வே. சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு, 1986, ப. 129.
***

மின் தமிழ் குழுமத்தில் இந்தக் கட்டுரையை அனுப்பிய அன்பருக்கு நன்றி.

Monday, November 17, 2008

மருதைக்கு வந்த சோதனை!!!

எல்லாம் நேரம் தான் காரணம். ஒரு வேளை 'காலம்' தான் காரணமோ? ஏதோ ஒன்னு. தருமி ஐயா ரெண்டாவது தடவையா நட்சத்திரம் ஆன நேரம் பாத்து நான் இந்த தலைப்புல இடுகை போடறதுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை இல்லை இல்லவே இல்லைன்னு உறுதியா சொல்லிக்கிறேன். :-)

முந்தைய இடுகை தமிழ்மணத்துக்கு போக மாட்டேன்னு அடம்பிடிக்குது. கூட்டாளி இருந்தா போகுமோன்னு முயன்று பாக்கத் தான் இந்த இடுகை. :-)

இதைப் படிக்க வந்தீங்கன்னா ஒழுங்கு மரியாதையா முந்தைய இடுகையையும் படிச்சுருங்க. ;-)

Sunday, November 16, 2008

சங்க இலக்கியத்தில் இதிகாசச் செய்திகள் (இராமாயணமும் மகாபாரதமும்)

வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் இந்தியாவின் சிறப்பு மிக்க இதிகாசங்கள். இவ்விரண்டு இதிகாசங்களின் செல்வாக்கைப் பாரதத்தின் எல்லா மொழிகளிலும் காணலாம். புகழ்பூத்த மகாகவிகளால் காவியங்களாகப் பாடப் படுவதற்கு முன்னரே, காலத்தால் பழைமைமிக்க சங்கப் பாடல்களில், இவ்விதிகாசச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உவமைகளாகவே இதிகாச நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர் புலவர்கள்.


அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
ஆகிய சங்க நூல்களில் இராமாயணச் செய்திகள் காணப்படுகின்றன.

அகநானூற்றில் எழுபதாவது பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது; நெய்தல் திணையைச் சார்ந்தது. இப்பாடலில் இராமாயணச் செய்தி இடம் பெற்றுள்ளது. இராமன் இலங்கைக்குச் செல்லத் தமிழகத்தின் தென்திசைக்கு வந்து தனுஷ்கோடியில் ஆலமரம் ஒன்றின் கீழ் இருந்து, போர் தொடர்பாக வானர வீரர்களோடு ஆராயும்போது, அவ் ஆலமரத்தின்கண் இருந்த பறவைகள் சப்தமிட, அச்சப்தத்தைத் தன் கைகவித்து அடக்கினான் என்று புலவர் பாடியுள்ளார்.


"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பெளவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,"

என்பன புலவரின் பாடல் வரிகள்.

தனுஷ்கோடி பாண்டிய மன்னர்களின் பழைய துறையாகும். புறநானூற்றில் 378வது பாடலைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார் ஆவார். அவர், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனைப் பாடிப் பெற்ற பெருஞ்செல்வத்தைத் தம் குடும்பத்திடம் தந்தார். அணிகலன்களைக் குடும்பத்தார் அணிந்து மகிழ்ந்ததைப் பாடும் போது இராமாயணக் கதையைக் குறிப்பிட்டுள்ளார் புலவர்.

விரலில் அணிவதைச் செவியிலும், செவியில் அணிவதை விரலிலும்;
அரையில் அணிவதைக் கழுத்திலும், கழுத்தில் அணிவதை இடையிலுமாக மாற்றி மாற்றி அணிந்தனர்
என்று நகைச்சுவையோடு பாட வந்தவர்.

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு."
என்று இராமாயண நிகழ்ச்சியை உவமையாக்கிப் பாடியுள்ளார்.


இராவணன் கவர்ந்து சென்றபோது சீதை, தன் அணிகலன்களை ஒரு முடிப்பாகக் கட்டிக் கீழே போட்டுச் சென்றாள் என்றும், அம்முடிப்பு சுக்ரீவனிடம் இருந்தது என்றும் இராமாயணம் கூறும். இதனை நினைவிற் கொண்ட புறநானூற்றுப் புலவர், சீதை விட்டுச் சென்ற அணிகலன்களைக் குரங்குகள் முறைமாறி அணிந்து பார்த்ததைப் போலத் தம் சுற்றத்தார் அணிந்து பார்த்தனர் என்று நகைச்சுவையோடு பாடியுள்ளார்.

கலித்தொகையில் பாரதக் கதை நிகழ்ச்சிகள் உவமைகளாகக் காணப்படுகின்றன. கலித்தொகை ஐவர் பாடிய பாடல்களில் தொகுப்பாகும்.

பாலைக்கலியைப் பாடியவர் பெருங்கடுங்கோ என்பவர். இவர் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" என்று அழைக்கப்படுபவர். பாலை நிலத்தின் கொடுமையை வருணிக்கும்போது பாரதக் கதை நிகழ்ச்சியை உவமையாகக் கூறியுள்ளார்.

மதங்கொண்ட களிறுகள் மலையில் எரியும் தீயில் அகப்பட்டு கொள்ள, மூங்கில்களைக் கொண்ட அத்தீயை, தன் கால்களால் மிதித்து, வழி ஏற்படுத்திக் கொண்டு, தீக்குள் மாட்டிக் கொண்ட யானைகளைக் காத்து, அவற்றோடு வேழம் ஒன்று வெளியேறியது. இது எப்படி உள்ளதாம்?

"வயக்குறு மண்டலம் வடமொழிப் பெயர்பெற்
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக்
களிதிகழ் காடஅத்த கடுங்களிறு, அகத்தவா,

முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல,
எழு உறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம்
அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம்." (பாலைக்கலி - 24)

என்று பாடுகிறார் கவிஞர்.

துரியோதனன் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட அரக்கு மாளிகையில் தீப்பிடிக்க, அவ்வரக்கு மாளிகையை அழித்து, பீமன், தன் உடன்பிறந்தாரோடு பிழைத்து வெளியேறியது போல உள்ளதாம்.
பாரதக் கதையின் முக்கியமான நிகழ்ச்சி திரெளபதியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சினைப் பீமன் பிளந்தததாகும்.

இதனை ஓர் உவமையாக்கியுள்ளார் முல்லைக்கலியைப் பாடிய சோழன் நல்லுருத்திரனார். காளைகளை அடக்கும் வீரர்களின் வீரத்தைப் பேசுவது முல்லைக்கலி.

தன்னை அடக்க வந்த ஆயர்குலத்து இளைஞனைக் குத்திக் கொம்பில் கோத்துக் கொண்டு ஆடும் காளை. பாஞ்சாலியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சத்தைப் பிளந்து, கொன்று, வஞ்சத்தை முடித்துக் கொண்ட பீமன் போலக் காட்சியளிக்கின்றதாம். இதனை


"நோக்கு அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றம்காண்
அம்சீர் அசைஇயல் கூந்தல் கைநீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்." (முல்லைக்கலி - 1)

என்று பாடியுள்ளார் புலவர்.

பீமன் துரியோதனன் துடையை முறித்ததைக் குறிஞ்சிக்கலியில் (பா.16) கபிலர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரத நாட்டின் புகழ்மிக்க இதிகாச நிகழ்ச்சிகள் 1800 ஆண்டுகட்கு முந்தைய, நம் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுவதை, அவ்விதிகாசங்களின் செல்வாக்காகவும், அவற்றின் மீது தமிழர்கட்கு இருந்த ஈடுபாடாகவும் நோக்க வேண்டும்.

முனைவர். ந.முருகேசன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. கண்ணன் நடராஜன் ஐயா.

Wednesday, November 12, 2008

மனப்பதிவுகளும் கோவி.கண்ணன் ஆழ்வாரும் சிவத்தமிழோன் ஐயாவும்.....

பேசிப் பயனில்லை; பேசினாலும் புரியப் போவதில்லை; மீண்டும் மீண்டும் இதையே சொல்லுவார்கள்; நமக்குத் தான் நேரம் வீண் - இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு பேசப்படும் தவறான கருத்துகளுக்கு பெரும்பாலும் மாற்று கருத்து இருந்தாலும் அவற்றைச் சொல்லாமல் செல்வதே வழக்கம். இனி மேலும் அந்த வழக்கத்தைத் தொடரத் தான் போகிறேன். (எப்போது இந்த லாவணிக்கச்சேரியை நிறுத்திவிட்டு மீண்டும் குமரன் வழக்கமான பதிவுகளை இடப்போகிறான் என்று காத்திருக்கும்/மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்களுக்கு இது மகிழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். :-) ) ஆனால் ஒரே ஒரு முறையாவது கருத்துகளை பதித்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் அவற்றை முருகனருள் வலைப்பதிவில் இரவிசங்கர் இட்ட கந்த சஷ்டி முதல் சிறப்பு இடுகையின் பின்னூட்டங்களில் சொல்லிவிட்டேன். அந்தக் கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளித்த கோவி. கண்ணனுக்கும் சிவத்தமிழோன் ஐயாவிற்கும் இரவிசங்கருக்கும் பொறுமையாகப் படித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.

அங்கே பின்னூட்டங்களில் சொன்னவற்றைத் தொகுத்து இங்கும் ஒரு இடுகை இட்டு வைக்கலாம் என்ற எண்ணத்தில் அதனைச் செய்கிறேன். எல்லா பின்னூட்டங்களையும் இங்கே இடவில்லை. பேசிய பொருளுக்குத் தொடர்பில்லா தனிப்பட்ட கால் வாருதல்களை முயன்ற வரை இங்கே இடாமல் விடுகிறேன். முழுவதையும் படிக்க முருகருள் பதிவிற்குச் செல்லுங்கள். நன்றி.

***

கோவி.கண்ணன் said...
//* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார்.//

ஆக முருகன் வேத வடிவம் பெறாத காலம் அது ! காலம் எப்படியெல்லாம் எல்லாத்தையுமே மாற்றிவிட்டது.
:(
----

குமரன் (Kumaran) said...
குருதி கலந்த சோற்றைப் படைத்தால் அது வேத வடிவம் பெறாத காலம் என்று எப்படி சொல்ல முடியும்? வேதங்களிலும் இதிகாசங்களிலும் தான் வேத வழிபாடு ஊன் வழிபாடாக இருந்ததைக் காட்டும் தரவுகள் நிறைய இருக்கின்றனவே? சமண பவுத்தங்களின் தாக்கம் முருக வழிபாட்டில் ஏற்படுவதற்கு முந்தைய காலம் என்று சொல்வதற்கு வேண்டுமானால் ஏரணப்படி இடமுண்டு; ஆனால் தரவில்லை. குருதிச் சோறு வேதமுறை இல்லை என்று சொல்வதற்கு ஏரணமும் இல்லை; தரவும் இல்லை. :-)

தமிழர் வழிபாட்டில் வேதமுறைக்கு முன் வேதமுறைக்குப் பின் என்ற காலங்கள் இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு தரவுகளும் இருக்கலாம். ஆனால் இந்த ஊன் சோறு அதனைக் காட்டும் தரவு இல்லை என்றே குறிக்க விரும்புகிறேன். :-)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@கோவி அண்ணா
நாணயத்துக்கு எப்பமே இரு பக்கம் உண்டு!

இதே நக்கீரர், அதே திருமுருகாற்றுப்படையில், திருவேரகம் என்னும் சுவாமி மலையில் முருகனுக்கு எப்படியெல்லாம் வேத வழிபாடு நடக்குது-ன்னு அதையும் வர்ணிச்சித் தானே சொல்லுறாரு!

பழமுதிர் சோலையில் ஆலயமாக இல்லாது, வேல் நட்டு வழிபாடு! மலைக் குறிஞ்சி மக்களால்! அதனால் தான் இரத்தம் தூவிய தூ வெள்ளரிசி படைக்க முடிந்தது போலும்!
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@குமரன்
//வேதங்களிலும் இதிகாசங்களிலும் தான் வேத வழிபாடு ஊன் வழிபாடாக இருந்ததைக் காட்டும் தரவுகள் நிறைய இருக்கின்றனவே?//

அதானே!
அதைக் கோவி அண்ணாவே பல இடங்களில் காட்டி இருக்காரே!

சமயத்துக்கு ஏற்றாற் போல மறந்து போய் விடுவது ஏனோ? :)
பக்தியும் பகுத்தறிவும் இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் ரொம்பவே ஒத்துப் போகுது குமரன்! :))

//தமிழர் வழிபாட்டில் வேதமுறைக்கு முன் வேதமுறைக்குப் பின் என்ற காலங்கள் இல்லை என்று சொல்லவில்லை//

உண்மை!
தமிழ்முறை தனியாக இருந்தது. ஆனால் அந்தக் காலகட்டம் வேறு! தொல்காப்பியருக்குச் சற்றே முந்தைய காலகட்டம்! நக்கீரர் காலத்தில் முருகனும், மாலவனும் எப்போதோ வேத வடிவம் பெற்று விட்டார்கள்! அதை நக்கீரரும் போற்றிப் பாடி விட்டார் :))
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆனால் இந்த ஊன் சோறு அதனைக் காட்டும் தரவு இல்லை என்றே குறிக்க விரும்புகிறேன்//

ஊன் சோறு என்பது ஏதோ தனித் தமிழர் பண்பாடாகக் காட்டி விட வேண்டும் ஒரு ஆசை, சில ஆர்வலர்களுக்கு இருக்கு! அது ஏன்-னு தான் புரியலை!

பகுத்தறிந்து இதை முடிவு செய்ய வேண்டும் என்று பகுத்தறிவாளர் கூட நினைப்பதில்லை! :(

குறிஞ்சி நில மக்கள் ஊன் சோற்றைக் குறைவாகவே உண்டார்கள்! தேனும் தினையும் தான் அதிகம்!

முல்லையில் சுத்தம்! ஊன் சோறே கிடையாது! வெண்ணெய், நெய், தயிர், பால் மற்றும் சோறு!
அவ்வத் திணைக்குரிய கருப் பொருட்களைப் பார்த்தால் தெரியும்!

மருதம்=ஊன் சோறு! நெய்தல்=மீன் சோறு! பாலை = விதம் விதமான ஊன் சோறு!

இப்படி இயற்கை நிலத்தின் பாற்பட்டதாகத் தான் தமிழர் உணவும் அமைந்தது! ஆனால் மொத்த தமிழர் பண்பாட்டுக்கே ஏதோ ஊன் சோறு தான் அடையாளம்-ன்னு கெளப்பி விடறது தான் வருத்தம்!

இன்றைக்கு ஒரு சாராரை எதிர்க்கப் போய், அவர்கள் பழக்கத்துக்கு எதிர் பழக்கம் தான் தமிழர் பழக்கம்-ன்னு சொல்லுவது சரியே அல்ல!

அது அதே பழக்கமோ, எதிர் பழக்கமோ, தமிழருக்கு என்று தனியே ஒரு பழக்கம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு!

அவன் கலாச்சாரமா? அதுக்கு ஆப்போசிட் தான் என் கலாச்சாரம்! என்று எதிராளியை வைத்தா நம் பண்பாட்டை நிர்ணயம் செய்வது?

---
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
யார் தமிழ்க் கடவுள் பதிவிலும் இதே தான் சொன்னேன்.
இங்கிருந்து போன முருகனும், மாலோனும் அங்கு ஸ்கந்தன், விஷ்ணு என்று ஆகி விட்டார்கள்.

ஆனால் எதிர் பக்கத்தில் ஏனோ விஷ்ணு பேசப்பட்ட அளவுக்கு ஸ்கந்தன் அதிகமாகப் பேசப்படவில்லை!

உடனே முருகன் "மட்டுமே" தமிழ்க் குழந்தை! தமிழ்க் கடவுள்!
- ஏன்? ஏன்னா அங்க இருப்பவனுக்கு ஆப்போசிட்! அவன் எடக்குன்னா நான் மடக்கு!

அடப்பாவிங்களா, நீங்க பெத்த குழந்தைங்கடா முருகனும் மாலவனும்!
அங்க கொண்டாடறாங்க என்கிற காரணத்துக்காக, இங்க உங்க குழந்தையை நீங்களே தள்ளி வைப்பீங்களா?
அது தமிழ்க் குழந்தை, தமிழ்க் கடவுள் இல்லைன்னு ஆயிருமா?
இதுக்குப் பேரு தான் பகுத்தறிவா?

இப்படி எல்லாம் பல முறை கேட்டதுண்டு! வந்த பதில் ?
---
குமரன் (Kumaran) said...
திருமுருகாற்றுப்படையில் மட்டும் இல்லை. அதற்கு முன்னரே சங்க இலக்கியத்தில் முருகனுக்கு நடந்த வேத வழிபாடுகளைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. என்ன அதனை எல்லாம் எடுத்துக் காட்டினால் அந்த நால்வேதங்கள் வடமொழி வேதங்கள் இல்லை; தமிழில் முன்பொரு நால்வேதங்கள் இருந்தன; அவை அழிந்து போயின என்று தரவே இல்லாத ஒரு புதுக்கதையைச் சொல்லுவார்கள். :-)
---
குமரன் (Kumaran) said...
தமிழரில் ஐந்து நிலத்தவரும் ஊன் உணவை விரும்பியே உண்டனர் என்று தான் நினைக்கிறேன் இரவிசங்கர். தரவின் படி இல்லை; ஏரணத்தின் படி சொல்கிறேன்.

குறிஞ்சி நிலத்தவர் தேனும் தினைமாவும் உண்டிருந்தாலும் புரதம் வேண்டுவதால் ஊனும் உண்டிருப்பார்கள். அவர்கள் ஊன் உணவைக் குறைவாகவே உண்டார்கள் என்பதற்கு என்ன தரவு இருக்கிறது?

மருதத்தில் ஊன் சோற்றைத் தள்ளுவதற்கு வாய்ப்பு அதிகம். அங்கே தான் அரசு பீடங்களும் மத பீடங்களும் எழுந்து வளர்ந்தன. ஊன் சோற்றை புனிதமில்லாதது என்று தள்ளும் எண்ணமும் அங்கு தான் தோன்றி வளர்ந்திருக்கும். அதனால் ஊனைப் புறந்தள்ளும் குரல்களும் அங்கு தான் எழுந்திருக்கும். அந்தக் குரல் மீண்டும் மீண்டும் நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளிலும் மருதத்தில் கேட்பதே அங்கும் ஊன் உணவு முக்கியமானதாக இருந்ததைக் காட்டும்.

நெய்தலில் கடல் ஊன் உண்ணப்பட்டது என்று சொல்கிறீர்கள். அந்த மீன்கள் மருத நிலத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டது என்ற செய்திகளை இலக்கியங்களில் படித்திருப்பதாக எண்ணுகிறேன். அதுவும் மருத நிலத்தவர்களும் நெய்தல் நிலத்தவர்களும் ஊன் உண்டார்கள் என்பதை உறுதி செய்யும்.

பாலை என்று ஒரு நிலத்தைப் பற்றி தொல்காப்பியம் சொல்லவில்லை. ஆனால் வேறு இடத்தில் பாலை நிலம் என்பது குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம் என்கிறது. பாலையில் விதம் விதமான ஊன் உணவு என்றால் குறிஞ்சியில் மட்டும் குறைவாகவும் முல்லையில் முற்றிலும் இல்லாமலும் இருந்திருக்குமா என்று சொல்லுங்கள்.

வெண்ணெய், நெய், தயிர், பால் போன்றவற்றை முல்லை நிலத்தில் ஆயர்கள் உண்டார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்கள் ஊன் உண்ணவில்லை என்பதில் ஐயமுண்டு. ஏதேனும் தரவு இருக்கிறதா?

வடக்கேயும் பெரும்பாலானவர்கள் ஊன் உணவு கொள்பவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.

ஊன் சோறு உலகத்தின் எல்லா இன மக்களுக்கு உண்டு. அது தமிழருக்கு வடக்கருக்கோ மட்டும் உரிய அடையாளமன்று.

//இன்றைக்கு ஒரு சாராரை எதிர்க்கப் போய், அவர்கள் பழக்கத்துக்கு எதிர் பழக்கம் தான் தமிழர் பழக்கம்-ன்னு சொல்லுவது சரியே அல்ல!

அது அதே பழக்கமோ, எதிர் பழக்கமோ, தமிழருக்கு என்று தனியே ஒரு பழக்கம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு!

அவன் கலாச்சாரமா? அதுக்கு ஆப்போசிட் தான் என் கலாச்சாரம்! என்று எதிராளியை வைத்தா நம் பண்பாட்டை நிர்ணயம் செய்வது?

//

இந்தப் பகுதியை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
---
குமரன் (Kumaran) said...
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சியின் போது தமிழை வடமொழிக்கு எதிராகவும் சைவத்தை தமிழுடன் இணைத்தும் நிறுவவேண்டிய தேவை இருந்தது. அதற்கு ஒரு வகையில் சாதி அரசியலும் காரணம். அப்போது முருகனுக்கும் தமிழுக்கும் முன்னரே இருந்த நெருங்கிய தொடர்பு வலியுறுத்தப்பட்டு அவன் 'தமிழ்க் கடவுள்' என்று நிறுவப்பட்டான். வைணவருக்கு அந்தத் தேவை இல்லாமல் இருந்தது - அவர்கள் உபய வேதாந்திகள் என்று சொல்லிக் கொண்டு 'தமிழும் ஆரியமும் இரு கண்கள்' என்று இரு பக்கத்தையும் சமரசமாகப் பார்த்தார்கள். அதனால் அவர்களுக்கு வைணவத்தைத் தமிழுடன் மட்டுமே இணைக்க வேண்டிய தேவையும் ஏற்கனவே இருக்கும் மாலவனுக்கும் தமிழுக்கும் ஆன நெருங்கிய தொடர்பை வலியுறுத்த வேண்டிய தேவையும் இல்லாமல் போனது. அதனால் இப்போது பொது புத்தியில் முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள்; சைவம் மட்டுமே தமிழ்ச்சமயம்; மாலவன் வடக்கிலிருந்து வந்தான்; வைணவம் புறச்சமயம் என்றொரு கருத்து நிலை நிறுத்தப்பட்டு பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொள்பவர்களால் பரப்பப்பட்டு வருகின்றது. எல்லா வித அரசியலுக்கும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு தேவை. எல்லாம் காலத்தில் அடக்கம். அந்தத் தேவைகள் முடிந்த பின் அரசியல் மாறும். அரசியல் மாற கருத்துகளும் மாறும். :-)
---

கோவி.கண்ணன் said...
தமிழர்கள் சைவர்களாக இருந்திருக்க முடியாது, அப்படி இருந்திருந்தால் திருவள்ளுவருக்கு புலால் மறுத்தல் அதிகாரம் எழுத தேவைப்பட்டு இருக்காது. திருவள்ளுவரின் புலால் கொள்கையை வைத்துத்தான் வள்ளுவர் பவுத்தர் / சமணராக இருக்கக் கூடும் என்று நினைக்க முடிகிறது. வேளாளர்கள் சைவத்துக்கு மாறியதும், (தமிழ்நாட்டு) பார்பனர்கள் சைவத்திற்கு மாறியதும் சமகால நிகழ்வாக இருந்திருக்க வேண்டும்.
---
கோவி.கண்ணன் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@குமரன்
//வேதங்களிலும் இதிகாசங்களிலும் தான் வேத வழிபாடு ஊன் வழிபாடாக இருந்ததைக் காட்டும் தரவுகள் நிறைய இருக்கின்றனவே?//

அதானே!
அதைக் கோவி அண்ணாவே பல இடங்களில் காட்டி இருக்காரே!

சமயத்துக்கு ஏற்றாற் போல மறந்து போய் விடுவது ஏனோ? :)
பக்தியும் பகுத்தறிவும் இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் ரொம்பவே ஒத்துப் போகுது குமரன்! :))

//தமிழர் வழிபாட்டில் வேதமுறைக்கு முன் வேதமுறைக்குப் பின் என்ற காலங்கள் இல்லை என்று சொல்லவில்லை//

உண்மை!
தமிழ்முறை தனியாக இருந்தது. ஆனால் அந்தக் காலகட்டம் வேறு! தொல்காப்பியருக்குச் சற்றே முந்தைய காலகட்டம்! நக்கீரர் காலத்தில் முருகனும், மாலவனும் எப்போதோ வேத வடிவம் பெற்று விட்டார்கள்! அதை நக்கீரரும் போற்றிப் பாடி விட்டார் :))
//

குமரன் மற்றும் கே ஆர் எஸ்,

வேத வழிபாட்டில் படையல் போடுவதெல்லாம் பழக்கத்தில் இல்லை, ஓம குண்டங்கங்களில் தீயை வளர்த்து ஸ்வாக சொல்லி உயிர் பலி இடுவது தான் வழக்கம், பலி இடாமல் உயிருடன் தூக்கிப் போடுவதும் வழக்கமாம்,

அதைத்தான் பவுத்தர்கள் பழித்தார்கள், குதிரையை தீயில் தூக்கிப் போட்டு சொர்கம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களே, நீங்களே தீயில் குதித்து சொர்கம் சென்றுவிடலாமே என்று.

முருகன் வழிபாடு குறிஞ்சி நில வழிபாடு. வேடுவர்கள் புலால் தவிர்த்து வேறு எதை படைத்திருக்க முடியும்.

முருகனை வேதக் கடவுளாக மாற்றியது புனிதம் என்று சொல்லிக் கொண்டாலும் உரிமை உடையவர்களிடம் இருந்து தள்ளிச் சென்றது என்பது தானே உண்மை. இன்றும் கூட எட்டுக்குடியில் நரிக்குறவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி வெளியிலேயே நடைபெறுகிறது.

தமிழ் மரபு வடமொழி மரபு இரண்டையும் ஒட்ட வைத்துப் பார்ப்பது போலவே அவை தனித்தனியானது என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
:)

எனக்கு ஒன்றும் இல்லை, எனக்கும் உருவ வழிபாடு அல்லது பிற வழிபாட்டுக்கும் மிக மிக தொலைவு.
:)
---

சிவத்தமிழோன் said...
தங்களின் கந்தசட்டி விரதத்தினை சிறப்பித்து ஒவ்வொரு படைகளையும் பற்றி எழுதுகின்ற சமய இலக்கியப் பணியினால் மெய்சிலிர்த்து பரவசமடைந்தேன். தங்கள் எழுத்து இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட எழுத்து. வாழ்த்துகள். பல இலக்கிய சமய கருத்துகளை சுவைக்கும் பேறு அடியேன் பெற்றதில் பெருமகிழ்வு. அடியேன் இணையத்தில் கல்விச் சுமையால் போதிய நேரத்தை செலவழிக்கமுடியாது தவிப்பதால் பெருமளவான வலைப்பூக்களை சுவைக்கும் பலனைத் தவறவிட்டிவிடுகிறேன்.ஆனாலும் இறைவன் என்னை தங்களின் வலைப்பூக்களுக்கு இடக்கிட வந்துபோகும் வாய்ப்பை தருவது மகிழ்வளிக்கிறது. அப்படிவரும்போது இருக்கிற நேரத்தில் தங்கள் வலைப்பூவில் வடிகின்ற தெவிட்டாத தமிழ்த்தேனை ஆசைதீரப் பருகுவது வழக்கம். நன்றி.

இங்கு அடியேன் சில கருத்துகளை சுருக்கமாக விட்டுச் செல்லலாம் என நினைக்கிறேன். சைவம்-வைணவம் ஆகிய இரு நெறிகளினதும் முழுமுதற்கடவுள்காகிய சிவனும் திருமாலும் தமிழ்க்கடவுள்கள் என்பதில் மாற்றுக்கருத்துகள் யாரிடமும் இருப்பின் அவர்கள் வரலாற்றை அறியா மூடரே. சிவவழிபாடு தமிழரின் உயர்ந்த ஆதிக்கோற்பாடு எனபதையும் யாராலும் மறுக்கமுடியாது. சிந்துவெளி கரப்பா நாகரீக ஆய்வுகள் அதையே நமக்கு நவின்றுள்ளன. ஆரியர் ஆரம்ப காலத்தில் இந்திரனையே பெரிய சக்திவாய்ந்த கடவுளாக வழிபட்டனர். முதல் வேதத்தில் இந்திரனின் வழிபாடு உயர்த்தப்பட்டு காட்டப்படுவது கவனத்திற்குரியதொன்று. காலப்போக்கில் சிவவழிபாட்டை நிராகரிக்க முடியாது தவித்த ஆரியக்கூட்டம் தமிழரிடம் காணப்பட்ட திருமாலை கொள்ளையடித்து விஷ்ணு என்று பெயரிட்டு தமிழர் சமய நெறியான சைவத்திற்கு போட்டியாக வைணவம் எனும் நெறியை உருவாக்கினர். எனினும் விஷ்ணுவாய் இனமாற்றம் செய்யப்பட்ட திருமால்மீது பற்றுக்கொள்ள அவர்களுக்கு மனம் இடந்தர மறுக்கவே அவரின் அவதாரமாக இராமனையும் கிருஷ்ணனையும் உருவாக்கினர். இன்று ஓம் நமோ நாராயணா என்று சொல்லக் கூசும் இதே வைணவ வடக்கர் "கரே ராம் கரே கிருஷ்ணா" என்று சொல்வதோடு கிருஷ்ணனே முழுமுதற்கடவுள் என்று தந்திரமாக மாற்றியும் விட்டனர். விஷ்ணுவாய் இனம்மாறிய நாராயணனை தூக்கி தூரப்போட்டும்விட்டனர். இப்போது அவரைக்காப்பதும் ஆரியச் சதியில் அகப்பட்ட தமிழர்தான். ஆனால் அவர்கள் கிருஷ்ண மகிமையிலும் இராம மகிமையிலும் மயங்காமல் இருந்தால் நல்லது. வழிபடுவது தவறில்லை. திருமாலை வடக்கர் மறந்ததுபோல் மறக்காது இருந்தால் நல்லது.

சைவம் வேதத்தில் தங்கியில்லை. சிவனை தூற்றிய வேதப்பகுதிகள் கூடவுண்டு.(விஷ்ணுவை தூற்றியதாய் நானறியவில்லை.) இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு ஆரிய அத்திவாரத்தில் பகவத் கீதை எனும் தூண்களைக் கொண்டு கட்டப்பட்டது வைணவம். கம்பன் தனது தமிழை ஆரிய திராவிட யுத்தமே இராமாயணம் என்று அறியாது இராமன் திருமாலின் அவதாரம் என்று மயங்கி தமிழ் நாட்டுத் தமிழர் குரங்குகள் இலங்கைத் தமிழர் அரக்கர் எனும் ஆரிய வன்குரோதக் கருத்தை வால்மிகி மூலம் வெளிக்காட்டியதை உணராது தமிழில் உலாவவிட்டார். அதனை ஆழ்வார்கள் தமது பாசுரங்களின் மூலமாக வழிமொழிந்துவிட்டனர்.

திருமால் தமிழ்க் கடவுள்.

திருமால் முழுமுதற்பொருள் என்பதோ அன்றி வைணவக் கொள்கையோ தமிழர் கோட்பாடு அல்ல.பகவத் கீதை இல்லாவிட்டால் வைணவம் இல்லை. சைவ சித்தாந்தம் தமிழில் மட்டுமே தங்கியுள்ளது.

ஆரிய வைணவத்தை தமிழில் தமிழர்களாலும் வளர்க்கப்பட்டது எனபதுதான் உண்மை.

சைவ-வைணவ பிணக்கிற்காக இங்கு பின்னூட்டமிடவில்லை. வரலாற்றை உண்மையை மறக்கக்கூடாது என்பதை அறிவிக்கவே அடியேனின் பின்னூட்டம்.
---

கோவி.கண்ணன் said...
//ஆனால் எதிர் பக்கத்தில் ஏனோ விஷ்ணு பேசப்பட்ட அளவுக்கு ஸ்கந்தன் அதிகமாகப் பேசப்படவில்லை!

உடனே முருகன் "மட்டுமே" தமிழ்க் குழந்தை! தமிழ்க் கடவுள்!
- ஏன்? ஏன்னா அங்க இருப்பவனுக்கு ஆப்போசிட்! அவன் எடக்குன்னா நான் மடக்கு!

அடப்பாவிங்களா, நீங்க பெத்த குழந்தைங்கடா முருகனும் மாலவனும்!
அங்க கொண்டாடறாங்க என்கிற காரணத்துக்காக, இங்க உங்க குழந்தையை நீங்களே தள்ளி வைப்பீங்களா?
அது தமிழ்க் குழந்தை, தமிழ்க் கடவுள் இல்லைன்னு ஆயிருமா?
இதுக்குப் பேரு தான் பகுத்தறிவா?

இப்படி எல்லாம் பல முறை கேட்டதுண்டு! வந்த பதில் ?
//

கண்ணன் விசயத்தில் ஓவராக கட்டுக்கதைகள் அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருந்ததாலேயே புறக்கணிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். தசவதாரக் கதைகளில் எத்தனை அறிவுப் பூர்வமானவை என்று சொல்லுங்கள், வானத்தை ஒரு காலாலும் பூமியை ஒரு காலாலும் அளந்ததாக அளந்ததெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்கிறதா ? இல்லாத வானத்தை எந்த காலால் அளப்பது ? பூமி தான் பாதம் படியும் படி தட்டையாக இருக்கிறதா ?

இதையெல்லாம் இறை மறுப்பாளன் மட்டுமல்ல, எல்லோருமே சிந்தித்து பார்த்து நிராகரிப்பார்கள், கண்ணன் மீதான வெறுப்பு கதைகளினால் ஏற்பட்டவை என்று தான் நினைக்கிறேன்.

கண்ணனும் சரி, முருகனும் சரி தமிழ் கடவுள் என்று சொல்வதைவிட குமரன் குறிப்பிட்டது போல் ஐந்து நிலக் கடவுள், பின்னர் திராவிடக் கடவுள், அதன் பிறகு தமிழ் கடவுள் என்றாகியது, கண்ணனுக்கு எண்ணற்ற கதைகள் புனையப்பட்டதால் தமிழில் இருந்து தள்ளிச் சென்றதாக தோன்றுகிறது
---

சிவத்தமிழோன் said...
ஆரியக் கடவுள் என்று நவின்று பிள்ளையாரை ஒதுக்குபவனும் நானில்லை. தமிழ்க் கடவுள் திருமாலை ஆரியர் உயர்த்தி தூக்கிப்பிடித்ததற்காக திருமாலை வணங்காதவனும் நானில்லை. வரலாற்றை தெளிவுற அறிதல் தவறும் இல்லை.

என் வீட்டு மாமரத்தின் மாங்காயின் வித்துமூலம் முளைத்த பக்கத்துவீட்டு மாமரம் என் வீட்டு எல்லையுள் கிளைவிட்டு கனிதரும்போது வேண்டாம் என்று நவில எப்படி மனம் இடந்தரும்? ஆனால் என் வீட்டு மாங்கனியை நான் சுவைக்க பக்கத்து வீட்டுக்காரன் விரும்பாவிடின் அவன் மாமரத்தை தண்டிப்பது நியாயமாக. அவனை தண்டிக்காமல் விட்டால் தர்மமாக. என் வீடு தமிழ்.அயல்வீடு ஆரியம்.

தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துகிறேன்.
---

கோவி.கண்ணன் said...
//குமரன் (Kumaran) said...
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சியின் போது தமிழை வடமொழிக்கு எதிராகவும் சைவத்தை தமிழுடன் இணைத்தும் நிறுவவேண்டிய தேவை இருந்தது. அதற்கு ஒரு வகையில் சாதி அரசியலும் காரணம்.
//

நீங்கள் மறை மலை அடிகளாரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மைதான் சைவ சமயத்தில் பார்பனர் ஆதிக்கத்தை விட வேளாள சமூகத்தின் ஆதிக்கம் மிகுதி. ஆனால் மறைமலை அடிகளாரும் கண்ணனும் சக்தியும் சிவவழிபாட்டின் நீட்சி என்றும் சொல்லி இருக்கிறார். சிவ ஒளியில் பச்சை நிற ஒளி அம்மையாகவும் நீல நிற ஒளி கண்ணனாகவும் குறியிடாக மாறியது என்று குறிப்பிட்டு இருந்ததைப் படித்து இருக்கிறேன். ஆறாம் நூற்றாண்டு சைவ - வைணவ சண்டைகளின் முன்னின்றவர்கள் வேளாளர்கள் மட்டுமே என்று கருத்தினால் பார்பனர்கள் அனைவருமே வைணவம் ஆகி இருப்பார்கள். ஆனால் அப்படி இல்லையே.
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தசவதாரக் கதைகளில் எத்தனை அறிவுப் பூர்வமானவை என்று சொல்லுங்கள், வானத்தை ஒரு காலாலும் பூமியை ஒரு காலாலும் அளந்ததாக அளந்ததெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்கிறதா ?//

ஹா ஹா ஹா! நக்கல்-ன்னு ஆரம்பிச்சிட்டா அளவே இல்லை!
கீழ்க் கண்டவையும் அறிவுப் பூர்வமா, ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்கா? சொல்லுங்க பார்ப்போம்! :)

* கண்ணகி எரிபொருளே இல்லாமல் மதுரையை எரித்தது = இன்னிக்கி கண்ணகி இருந்தா, பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு புடிச்சி, அவிங்கள என்ரான் சி.இ.ஓ ஆக்கியிருக்கலாம்! :)

* மணிமேகலை சிறு பாத்திரத்தில் இருந்து பெரும் உணவு எடுத்தது = உணவுப் பற்றாக் குறை உலகமெங்கும்! தமிழறிஞர்களே, மணிமேகலைப் பாத்திரம் பெற்ற வித்தை உங்களுக்குத் தெரியும் தானே? மக்கள் நன்மைக்கு அதே போல வாங்கியாருங்களேன்! :))

* வாமனன் "வெறும் காலால்" உலகம் அளந்தது = உலகத்துல க்ளோபல் வார்மிங் பெருத்துப் போச்சி! வாமனன் காலை வச்சி ஓசோன் ஓட்டையை அடைக்கக் கூடாதா? பதின்மூன்றாம் ஆழ்வார்-னு ஒரு மாங்காப் பயலைச் சொல்லுறாங்களே! அவன் இதுக்கு ஒரு பாசுரம் பாடினா என்னா? :))

* முருகன் ஒற்றை வேலால், கடலையே வற்றிப் போகச் செய்தது = ஜார்ஜ் புஷ் கூட இப்பிடி ஒரு மிசைல் கண்டு புடிக்கல! இது மட்டும் கிடைச்சிச்சி, உலகத்தில் ஒளிஞ்சிக்கிட்டு இருக்குற அத்தனை தீவிரவாதிகளையும் புடிச்சிறலாம்! உலக நன்மைக்கு வேலைக் கேட்டா, முருகன் குடுக்க மாட்டானா என்னா? ஜிரா, விஸ்கே ஐயா, ஏதாச்சும் முருகன் கிட்ட பேசி அந்த வேலைப் பெற முடியாதா? :))

இப்படி எல்லாம் காமெடி பண்ண எனக்கும் ரொம்ப ஆசை தான்! பண்ணியும் இருக்கேன்! ஆனா கோவி அண்ணா லெவலுக்கு எல்லாம் என்னால பண்ண முடியாது-ன்னு பகிரங்கமா ஒத்துக்கறேன்! :))

என் தம்பி பாலாஜி இருந்தா, இந்நேரம் இன்னும் களை கட்டி இருக்கும்! :))
---

கோவி.கண்ணன் said...
கண்ணகி, மணிமேகலை இவையெல்லாம் புணையப்பட்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். கோலங்கள் பார்த்துவிட்டு அபிக்கு கஷ்டம் என்று கண்ணீர் சிந்துபவர்கள் இருக்கிறார்கள் இல்லையா ?

கண்ணகியை ஒரு முன்னோர் தெய்வம் என்ற அளவுக்கு மட்டுமே போற்றுகின்றனர். மதுரையை எரித்தது உண்மை என்று யாரும் போற்றவில்லை. சிலப்பதிகார கற்பு கட்டமைப்பு பெண்களுக்கு எதிரான ஒன்று கடுமையாக பகுத்தறிவாளர்களால் பலமுறை தாக்கப்பட்டு இருக்கிறது.

சிலப்பதிகாரம் மணிமேகலை இவற்றையெல்லாம் உண்மை என்று போற்றுபவர் எவரும் இல்லை, இலக்கியச் சுவைக்காகவும், பண்பாட்டின் கூறுகளாக மட்டுமே பார்கின்றனர்.

முருகன் 'சுப்ரமணியன்' ஆனவுடன் தானே வேல் வாங்கி சூரனை அழித்தான். :)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கோவி அண்ணா & மக்கள்ஸ்!

ஒன்னை மட்டும் கட்டம் கட்டினா, அதே அளவு கோலை, எல்லாத்துக்கும் வைக்க வேண்டி இருக்கும்! அப்போ தான் அது பகுத்தறிவு! :)

இலக்கியங்களில் சொல்லப்படும் சில கதைகள், மனதில் அறம் பதிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக, அறிவுக்கு மட்டுமன்றி, உணர்ச்சிக்கும் சிறிது சேர்த்தே சொல்லப்படுவன!

ஆனால் அதை வியாபாரம் ஆக்கி, எளியோரை வதைக்கத் துவங்கும் போது தான் வருகுது வினை! அதைப் பகுத்தறிந்து கொண்டால் ஆத்திகமாவது? நாத்திகமாவது?

மழித்தலும், நீட்டலும் வேண்டா!
ஆத்திகம், நாத்திகம் வேண்டா - உலகம் பழித்தது ஒழித்து விடின்!

இங்கு நோக்கம் தான் முக்கியம்!
மாலவன் கதைகளும், முருகன் கதைகளும் வியாபாரத்துக்கு உருவானவை அல்ல! உள்ளத்துக்கு உருவானவையே அவை!
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சிலப்பதிகாரம் மணிமேகலை இவற்றையெல்லாம் உண்மை என்று போற்றுபவர் எவரும் இல்லை, இலக்கியச் சுவைக்காகவும், பண்பாட்டின் கூறுகளாக மட்டுமே பார்கின்றனர்//

அதே போல் மாலவனையும் முருகனையும் மனத்தின் சுவைக்காகவும், மனத்தின் பண்படுதலுக்காகவுமே தான் பார்க்கின்றனர்!

ஆத்திகர்கள் கோயிலுக்குப் போகும் போது, அவர்களுக்கே நல்லாத் தெரியும் - கல்லில் இருக்கும் முருகனோ/மாலவனோ, வேல்/சக்கரம் எல்லாம் விட்டுத் தங்கள் உதவிக்கு வருவாங்க-ன்னு! இதைப் பெருசா கண்டுபுடிச்சி நீங்க தான் சொல்லணும்-னு ஒன்னும் இல்லை! :)))

//முருகன் 'சுப்ரமணியன்' ஆனவுடன் தானே வேல் வாங்கி சூரனை அழித்தான். :)//

மாயோன் விஷ்ணு ஆனவுடன் தான் கால் வாங்கி வானத்தை அளந்தான்!
அதே லாஜிக் (?) தான் கோவி அண்ணா! :))
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//குமரன் (Kumaran) said...
தமிழரில் ஐந்து நிலத்தவரும் ஊன் உணவை விரும்பியே உண்டனர் என்று தான் நினைக்கிறேன் இரவிசங்கர். தரவின் படி இல்லை; ஏரணத்தின் படி சொல்கிறேன்//

நானும் மறுக்கவில்லை குமரன்! நிலத்திற்கு ஏற்றவாறு ஊனைக் குறைவாகவே/மிகுதியாகவே உண்டார்கள் என்று தான் சொன்னேன்!

//குறிஞ்சி நிலத்தவர் தேனும் தினைமாவும் உண்டிருந்தாலும் புரதம் வேண்டுவதால் ஊனும் உண்டிருப்பார்கள்//

உண்மை!
ஆனால் ஊன் தான் முக்கிய உணவு என்பதற்கு என்ன தரவு?

திணைகளுக்கு உரிய கருப்பொருட்களைப் பாருங்கள்! முக்கியமான உணவுப் பொருள் குறிக்கப்பட்டிருக்கும்!

நெய்தலுக்கு மீன் என்றும், குறிஞ்சிக்குத் தினை அரிசி என்றும், முல்லைக்கு வரகும் பாலும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கும்!

//அந்த மீன்கள் மருத நிலத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டது என்ற செய்திகளை இலக்கியங்களில் படித்திருப்பதாக எண்ணுகிறேன்//

ஆமாம்! சிலப்பதிகார அங்காடிகளில் வருகிறதே!

முல்லை நில மக்கள் உண்ணவே இல்லை என்று சொல்ல வரவில்லை! ஆனால் அவர்கள் தான் அதிகம் ஊன் உண்ணாதவர்கள் என்றே சொல்ல வந்தேன்!
இன்றும் ஆயர்கள்/கோனார்கள் அதிகம் புலால் உண்ணாதவர்கள்! கண்ட புலாலையும் உண்ணாதவர்கள்!

சொல்ல வந்தது இது தான்:
//மொத்த தமிழர் பண்பாட்டுக்கே ஏதோ ஊன் சோறு தான் அடையாளம்-ன்னு கெளப்பி விடறது தான் வருத்தம்!//


//
//அவன் கலாச்சாரமா? அதுக்கு ஆப்போசிட் தான் என் கலாச்சாரம்! என்று எதிராளியை வைத்தா நம் பண்பாட்டை நிர்ணயம் செய்வது?//

இந்தப் பகுதியை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்//

ஹா ஹா ஹா! நன்றி குமரன்! ஆனா இதுக்குக் கோவி அண்ணா, இன்னும் ஒன்னியும் சொல்லலையே! :)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கோவி.கண்ணன் said...
தமிழர்கள் சைவர்களாக இருந்திருக்க முடியாது, அப்படி இருந்திருந்தால் திருவள்ளுவருக்கு புலால் மறுத்தல் அதிகாரம் எழுத தேவைப்பட்டு இருக்காது//

ஐயோ! அந்தச் சைவம் வேற! சாப்பாட்டுச் சைவம் வேற!

தமிழர்கள் சைவர்களாக இருந்து, புலாலும் உண்டிருக்கின்றனர்!
வள்ளுவரும் புலாலை மறுத்து எழுதினார்!

புலால் மறுத்தல் என்பது சமணம்/பெளத்தம் இவற்றின் கொள்கை மட்டுமே அன்று!
சைவ சித்தாந்தத்திலும் சில இடங்களில் புலால் மறுத்தல் உண்டு! திருமூலரும் சொல்கிறார்! வைணவத்திலும் புலால் மறுத்தல் உண்டு! ஆயர்களும் கோனார்களும் மறுத்துள்ளனர்!

சமணம்/பெளத்தம் இவற்றின் ஒட்டுமொத்தக் கொள்கை போல் இல்லாமல், சைவ/வைணவத்தில் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு புலால் மறுத்தல் இருந்துள்ளது! அதான் வித்தியாசம்!
---

குமரன் (Kumaran) said...
//நக்கீரர் காலத்தில் முருகனும், மாலவனும் எப்போதோ வேத வடிவம் பெற்று விட்டார்கள்! //

இந்தக் கருத்தில் எனக்கு இன்னும் குழப்பம் உண்டு இரவிசங்கர். இந்தக் கருத்தை முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளவோ முழுக்க முழுக்க மறுக்கவோ என்னால் இயலவில்லை. இன்னும் இலக்கியங்களைப் படிக்க படிக்க தெளிவு உண்டாகும் என்று நினைக்கிறேன்.

//இங்கிருந்து போன முருகனும், மாலோனும் அங்கு ஸ்கந்தன், விஷ்ணு என்று ஆகி விட்டார்கள்.
//

இதுவும் அப்படித் தான். :-)
---

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன்,

//தமிழர்கள் சைவர்களாக இருந்திருக்க முடியாது//

சைவர் என்ற சொல்லுக்கு இரு பொருள் இருக்கிறது. நாம் ஏதேனும் ஒரு பொருளை மட்டும் இங்கே பயன்படுத்துவோம். இல்லை எனில் 'ஊன் உணவை மறுத்தவரை'ப் பற்றி பேசுகின்றோமா 'சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பவரை'ப் பற்றி பேசுகின்றோமா என்ற குழப்பம் ஏற்படுகிறது.

இதுவரை இந்த இடுகையில் நானும் மற்றவரும் சைவர் என்ற சொல்லை 'சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பவர்' என்ற பொருளில் தான் புழங்கியிருக்கிறோம்.

தமிழர்கள் ஊனை மறுத்தவர்களாக இருந்திருக்க முடியாது என்பதில் நாம் எல்லோரும் ஒத்துப் போகிறோம் என்பதைத் தான் இந்த வாக்கியத்தில் இருந்து புரிந்து கொள்கிறேன். சரி தானா?

திருவள்ளுவர் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் எழுதியதும் மற்ற நீதி நூற்களிலும் ஊன் மறுத்தலைப் பற்றி இருப்பதுமே ஊன் உணவு அந்த காலகட்டத்தில் பெரும்பான்மையானோர் விரும்பி உண்டார்கள் என்பதைக் காட்டுகின்றது என்பதை முந்தைய பின்னூட்டங்கள் ஒன்றிலும் சொன்னேன். ஊன் உணவிற்குப் புலால் (புன்மையான உணவு) என்ற பெயர் வந்ததே ஊன் உண்ணாமை புனிதம் என்ற கருத்தாக்கம் தொடங்கிவிட்டதைக் காட்டுகின்றது.

மற்றபடி புலால் மறுத்ததாலே திருவள்ளுவர் சமணராகவோ பவுத்தராகவோ இருக்க வேண்டும் என்ற கருத்தினை ஏற்க இயலவில்லை. தத்துவ அடிப்படையில் ஊன் மறுத்தல் சமண ஆசிவக சமயங்களில் எழுந்தது போல் தோன்றினாலும் சைவ வைணவ சமயங்களிலும் வடமொழி வேதங்களிலும் அதற்கான கூற்றுகள் இருக்கின்றன. அதனால் ஊன் மறுத்தலை முழுக்க முழுக்க சமண பௌத்த சமயங்களுக்கே உரிய ஒன்றாக ஏற்க இயலவில்லை.

//வேளாளர்கள் சைவத்துக்கு மாறியதும், (தமிழ்நாட்டு) பார்பனர்கள் சைவத்திற்கு மாறியதும் சமகால நிகழ்வாக இருந்திருக்க வேண்டும்.
//

இங்கும் சைவர் என்ற சொல்லை ஊனை மறுத்தவர் என்ற பொருளில் புழங்கியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா?

வேளாளர்களும் பார்ப்பனர்களும் ஊனை மறுத்தவர்களாக ஒரே காலகட்டத்தில் மாறியிருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? தரவின் அடிப்படையோ ஏரணத்தின் அடிப்படையோ எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள்?

என்னைக் கேட்டால் வேளாளர்கள் முதன்மையாக மருத நிலத்தவர்களாக இருக்கலாம். முன்பே சொன்னதைப் போல் மருத நிலத்தில் தான் அரசு பீடமும் மத பீடமும் அமையத் தொடங்கின. இது உலக வரலாற்றில் எங்கும் பார்க்கலாம். அந்த பீடங்கள் அமைய முதலில் நடப்பது நிலவுடைமைச் சமுதாயம். அந்த நில உடைமைச் சமுதாயத்தில் முதல் படியில் நின்றவர்கள் வேளாளர். வேளிர்கள் என்ற பெயரில் குறுநில மன்னர்களாக மூவேந்தர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டும் மறுத்தும் வாழ்ந்த குறு நில மன்னர்களாக அறியப்படுபவர்கள் பெரு நில உடைமையாளர்களே என்றும் அவர்கள் வழி வந்தவர்கள் வேளாளர்கள் என்றும் இதுவரை படித்த சங்க இலக்கியங்களில் இருந்தும் மயிலை சீனிச்சாமியார் போன்றவர்களின் நூற்களில் இருந்தும் உய்த்துணர்கிறேன். தமிழகத்தில் இந்த நிலவுடைமை சமுதாயமும் அரச பீடமும் மத பீடமும் எழத் தொடங்கிய போது தான் ஊன் உணவு புலாலாகவும் ஊன் உணவை மறுத்தது புனிதமாகவும் எண்ணப்படத் தொடங்கியது. பெரும்பான்மை மக்களிடம் இருந்து தம்மை வேறுபடித்திக் கொள்ள உணவு ஒரு சிறந்த ஆயுதம். அந்த வகையில் ஊன் உணவை மறுப்பது தங்கள் மேலாண்மையை நிலை நாட்ட விரும்பும் எந்த குழுவினருக்கு ஏற்றதாக இருந்தது. இப்போதும் அப்படியே தான் இருக்கிறது.

பார்ப்பனர்கள் புலால் மறுப்பாளர்களாக ஆனது தமிழகத்திலேயே நிகழ்ந்தது என்று எண்ண இயலவில்லை. அது மகதத்திலே நடந்திருக்க பெரும் வாய்ப்பு உண்டு. அது வேளாளர்கள் ஊன் மறுப்பாளர்களாகத் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட கால கட்டத்திலா அதற்கு முன்னரா பின்னரா என்றெல்லாம் இப்போதைக்குத் தெளிவில்லை. ஆனால் இரு குழுக்களும் ஒரே நேரத்தில் ஒரே காரணத்திற்காக ஒரே கருத்தாக்கத்தின் படி ஊன் மறுப்பாளர்களாக ஆனார்கள் என்பதை ஏற்க இயலவில்லை. இரு குழுக்களுக்கும் ஊன் மறுப்பினை ஏற்க வெவ்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.

இங்கே இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும். வேளாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் எல்லோருமே புலால் மறுத்தவர் இல்லை. அதிலும் பாதிக்குப் பாதி ஊன் உண்பவர்களைக் காண இயலுகின்றது. அதே போல் பார்ப்பனர்களிலும். நாம் நன்கு அறிந்த எடுத்துக்காட்டு வங்காளப் பார்ப்பனர்கள். அவர்கள் ஊனை மறுப்பதில்லை.
---

குமரன் (Kumaran) said...
கோவி. கண்ணன்.

வேத வழிபாட்டில் முதன்மையாக இருந்தது தீயை வளர்ந்து ஊனை அதில் இட்டு வழிபடுவது தான் என்பதில் எனக்கு முழுக்க முழுக்க ஒப்புதல் உண்டு. ஆனால் அது முதன்மையான வழிபாட்டு முறையே ஒழிய அது மட்டுமே தான் அவர்கள் வழிபாட்டு முறை என்று நினைக்கவில்லை. ஓமத்தீ இன்றியே உணவுப்பொருளைப் பரப்பி வழிபடுதலை வேதங்களில் காணலாம். அதனால் வேத மரபில் ஓமத்தீயில் ஆகுதியாக ஊனை இடுவதும் இருந்திருக்கிறது; உணவுப்பொருளைப் படைத்து வழிபடுவதும் இருந்திருக்கிறது.

//

அதைத்தான் பவுத்தர்கள் பழித்தார்கள், குதிரையை தீயில் தூக்கிப் போட்டு சொர்கம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களே, நீங்களே தீயில் குதித்து சொர்கம் சென்றுவிடலாமே என்று.
//

இது நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் புலனத்திற்குத் தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறேன். ஆனாலும் பவுத்தர்கள் உயிர்ப்பலியை மறுத்தார்கள் என்பதையும் அவர்கள் கேட்ட கேள்வியையும் படித்த தரவுகளின் படி ஏற்றுக் கொள்கிறேன்.

//முருகன் வழிபாடு குறிஞ்சி நில வழிபாடு. வேடுவர்கள் புலால் தவிர்த்து வேறு எதை படைத்திருக்க முடியும்.
//

இதனை இங்கே யாரும் மறுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

//முருகனை வேதக் கடவுளாக மாற்றியது புனிதம் என்று சொல்லிக் கொண்டாலும் உரிமை உடையவர்களிடம் இருந்து தள்ளிச் சென்றது என்பது தானே உண்மை. //

இந்த மாதிரியான மாற்றங்கள் முருகனிடம் மட்டும் இல்லை மற்ற கடவுளர்களிடமும் ஏன் வெறும் கருத்தாக்கங்களிலும் காணலாம். அவையெல்லாம் நாம் பேசும் புலனத்திற்கு அப்பாற்பட்டவை என்பதால் வேறொரு நாளில் பேசிக் கொள்வோம். முருகனை வேதக் கடவுளாக 'மாற்றியது' என்பதில் எனக்கு முழுக்க முழுக்க ஏற்பு இல்லை - முன்னரே இரவிசங்கருக்குச் சொன்னது போல். :-)

//தமிழ் மரபு வடமொழி மரபு இரண்டையும் ஒட்ட வைத்துப் பார்ப்பது போலவே அவை தனித்தனியானது என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
:)//

இந்திய மரபுகள் என்று பார்க்கும் போது இரு மொழி மரபுகளிலும் ஏன் எந்த மொழி மரபினை எடுத்துக் கொண்டாலும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் விதயங்களும் ஒத்துப்போகாத விதயங்களும் நிறைய இருக்கின்றன. அந்த வகையில் ஒத்துப்போகும் விதயங்களை மட்டுமே பேசி ஒத்துப்போகாதவைகளை மறந்து முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு தான் என்று நிறுவலாம்; அப்படியின்றி ஒத்துபோகாதவற்றை மட்டுமே பேசி ஒத்துப்போகும் பற்றியங்களை முழுக்க முழுக்க மறந்து ஒவ்வொரு மரபும் இன்னொரு மரபிலிருந்து முழுக்க முழுக்க வேறுபட்டது என்றும் நிறுவலாம். இரண்டுமே முழுமையான பார்வை இல்லை; அரசியல் நோக்கமும் அறிவின்மையுமே அவற்றைச் செய்யும்.

//எனக்கு ஒன்றும் இல்லை, எனக்கும் உருவ வழிபாடு அல்லது பிற வழிபாட்டுக்கும் மிக மிக தொலைவு.
:)//

ஆகா. இங்கே உங்களுக்காக மட்டும் தான் பேசுகிறோம் என்று நினைத்தீர்களா? இல்லையே. நீங்கள் சொன்ன ஒன்றை வைத்து, உங்களை முன்னிலையாகக் கொண்டு எங்கள் கருத்துகளைச் சொல்லக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவே. :-)
---

கோவி.கண்ணன் said...
குமரன்,

//பார்ப்பனர்கள் புலால் மறுப்பாளர்களாக ஆனது தமிழகத்திலேயே நிகழ்ந்தது என்று எண்ண இயலவில்லை. //

சைவம் என்ற சொல் சிவனிலிருந்து வந்தது என்று முன்பே குறிப்பிட்டு இருக்கிறீர்கள், நானும் எங்கோ படித்திருக்கிறேன். தென்னிந்திய பார்பனர்கள் தான் சைவம், வட இந்தியாவில் நம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட யாரும் அப்படி இல்லை. கர்நாடகாவில் வீரசைவர்கள் இருக்கிறார்கள், தமிழகத்தில் சைவர்கள் இருக்கிறார்கள் அதையெல்லாம் வைத்துத்தான் தென்னிந்திய சைவர்களும், பார்பனர்களின் இருபிரிவான அய்யர், அய்யாங்கார் பிரிவுகளும் புலால் உணவை விட்டு இருக்கிறார்கள் என்று நினைக்க முடிகிறது.

சைவம் என்கிற பிரிவே திருவள்ளுவர் காலத்தில் இருந்தது போல் எந்த சங்க இலக்கியத்திலும் சான்றுகள் இல்லை என்றே நினைக்கிறேன். அதனால் அவர் பெளத்தராகவோ, சமணராக இருப்பார் என்று ஊகம் செய்ய முடிகிறது. திருவள்ளுவரே வந்து சொன்னால் தான் உண்டு. வேளாளர்கள் அனைவருமே சைவம் கிடையாது என்பது தெரியும்.

//விதயங்களை மட்டுமே பேசி ஒத்துப்போகாதவைகளை மறந்து முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு தான் என்று நிறுவலாம்; //

இது கிட்ட தட்ட ஒருகை ஓசை போன்றது தான். முருகனுக்கு இரத்தம் கலந்த சோறு வைத்தால் அப்பறம் அபச்சாரம் செய்வதாகச் சொல்லிவிடுவார்கள், ஆக ஒத்துப் போவது என்பது அவர்கள் சொல்வது மட்டுமே என்றுதானே இருக்கும் :) அட்லீஸ்ட் வள்ளிக்காவது அதை வைக்கிறோம் என்றாலாவது ஒப்புக்கொள்வார்களா ?
வட இந்திய முருகனுக்கு வள்ளி இருக்கிறதா என்பதே ஆராய்ச்சிக் குறிய ஒன்று. :)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன் (Kumaran) said...
//எல்லா வித அரசியலுக்கும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு தேவை. எல்லாம் காலத்தில் அடக்கம்//

ஹா ஹா ஹா
புரிஞ்சிடுச்சே! புரிஞ்சிடுச்சே!
எல்லாம் காலத்தில் அடக்கம்!
எல்லாம் காலத்தில் அடக்கம்!
கோவியே போற்றி! ஆவியே போற்றி!

//பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சைவ மறுமலர்ச்சியின் போது தமிழை வடமொழிக்கு எதிராகவும் சைவத்தை தமிழுடன் இணைத்தும் நிறுவவேண்டிய தேவை இருந்தது. அதற்கு ஒரு வகையில் சாதி அரசியலும் காரணம்//

:)

//அப்போது முருகனுக்கும் தமிழுக்கும் முன்னரே இருந்த நெருங்கிய தொடர்பு வலியுறுத்தப்பட்டு அவன் 'தமிழ்க் கடவுள்' என்று நிறுவப்பட்டான்//

நிறுவப்படவே இல்லை! அப்படிச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க! அம்புட்டு தான்!

தமிழ்க் கடவுள் என்ற சொற்றொடர் சங்கத் தமிழில் எங்கே வருது? ஒரு வரி காட்டுங்க-ன்னு நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன்! அவிங்களும் சொல்லிக்கிட்டே இருக்காங்க! :)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//முருகன் வழிபாடு குறிஞ்சி நில வழிபாடு. வேடுவர்கள் புலால் தவிர்த்து வேறு எதை படைத்திருக்க முடியும்.//

புலாலும் படைத்திருக்க முடியும்! தினையும் தேனும் கூடப் படைத்திருக்க முடியும்! :)

//இன்றும் கூட எட்டுக்குடியில் நரிக்குறவர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி வெளியிலேயே நடைபெறுகிறது//

இன்றும் கூட திருமலையில் கோனார்/ஆயன் தான் கருவறைக் கதவைத் திறந்து முதலில் சேவிக்கிறான்! அப்பறம் தான் ஆல் ஸ்லோகம்ஸ் & ஐயங்கார்ஸ் கோயிங் உள்ளே! :)

முனியோதரையன் பொங்கல் என்று எட்டுக்குடி போலவே இன்றும் பொங்கல் வைக்கிறார்கள்! உங்க ஊரு தான் கோவி அண்ணா! நாகை-திருக்கண்ணபுரம்!
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சிவத்தமிழோன் said...
ஆனால் என் வீட்டு மாங்கனியை நான் சுவைக்க பக்கத்து வீட்டுக்காரன் விரும்பாவிடின் அவன் மாமரத்தை தண்டிப்பது நியாயமாக. அவனை தண்டிக்காமல் விட்டால் தர்மமாக. என் வீடு தமிழ்.அயல்வீடு ஆரியம்//

சிவத்தமிழோன் ஐயா!
அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!
மிகவும் சரி!

இறைவன் அனைவர்க்கும் பொதுவானவன்! அவனைத் தமிழ்க் கடவுள், ஆங்கிலக் கடவுள் என்று மொழிக்குள் குறுக்குவது நம் நோக்கமன்று!

ஆனால் அதே சமயம், நம் பண்பாட்டில், இறையும் அதன் தொன்மமும் அறிதலும் முக்கியம். நம் வேர்களிலான தேடல் என்பது தான் இங்கு நோக்கம்! வேறு பேதங்கள் இல்லை!

உங்கள் ஒரே ஒரு கருத்தை மட்டும் நான் மிகக் கடுமையாக மறுக்கிறேன்!
//தமிழர் சமய நெறியான சைவத்திற்கு போட்டியாக வைணவம் எனும் நெறியை உருவாக்கினர்//

இது முற்றிலும் தரவுகள் அற்ற கருத்து! வரலாற்றுப் பூர்வமானது அன்று!

மாலவனும், விண்ணவமும் (வைணவம்) தமிழ்ப் பண்பாட்டின் வேர்கள்.
சங்க இலக்கியம் முழுதும் விரவி உள்ளது. பூவை நிலை என்ற துறை திருமாலுக்கே தனியாக வைத்துச் சிறப்பித்தனர். வேறு எவர்க்கும் வைத்தாரில்லை!

தொல்காப்பியர் நால்வகை நிலங்கள் பற்றிச் சொல்லும் போது
மாயோன் மேய காடுறை உலகம் என்று சொல்லிவிட்டுத் தான்
சேயோன் மேய மைவரை உலகம் என்கிறார்.

சொல்லப் போனால் தொல்காப்பியர் தமிழரின் தெய்வங்களாக மாயோன், சேயோனைச் சொல்கிறாரே தவிர சிவபெருமானைச் சொல்லவே இல்லையே! ஏன்?

இராம.கி ஐயாவின் விண்ணவம் குறித்த பதிவுகளை வாசியுங்கள்!
இதோ, அடியேன் முன்பு இட்ட, யார் தமிழ்க் கடவுள் பதிவு!
http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html
---

குமரன் (Kumaran) said...
சிவத்தமிழோன் ஐயா.

//வரலாற்றை உண்மையை மறக்கக்கூடாது என்பதை அறிவிக்கவே அடியேனின் பின்னூட்டம்.
//

வரலாறும் உண்மையும் ஒரே வகையினதாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால் நடைமுறையில் அப்படி இருக்கிறதா? நம் பார்வைக்குச் சரி என்று எது 'தோன்றுகிறதோ' அதனையே உண்மை வரலாறு என்று நாம் கூறுகிறோம். அப்படி சொல்லும் போது சிலவற்றை முக்கியமான தரவாகவும் சிலவற்றை முக்கியமில்லாத தரவாகவும் கொள்கிறோம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று உண்மை வரலாறு. தாங்கள் சொல்லியவற்றில் உண்மை வரலாற்றை விட தங்கள் புரிதல்கள் தான் மிகுதியாக இருக்கின்றதென்பது அடியேன் அவதானம். எங்கு என் பார்வைக்கு ஒத்துப் போகிறது; எங்கு ஒத்துப் போகவில்லை என்று சொல்கிறேன். ஆனால் நான் சொல்வதே 'உண்மை வரலாறு' என்று அறுதியிட்டுக் கூறும் அளவிற்கு அனைத்தும் அறிந்த இறைவன் இல்லை நான். அதனை நினைவில் கொண்டு மேலே படித்துப் பாருங்கள்.

//சைவம்-வைணவம் ஆகிய இரு நெறிகளினதும் முழுமுதற்கடவுள்காகிய சிவனும் திருமாலும் தமிழ்க்கடவுள்கள் என்பதில் மாற்றுக்கருத்துகள் யாரிடமும் இருப்பின் அவர்கள் வரலாற்றை அறியா மூடரே.//

இப்படி அறுதியிட்டுக் கூறியதை அப்படியே நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

//சிவவழிபாடு தமிழரின் உயர்ந்த ஆதிக்கோற்பாடு எனபதையும் யாராலும் மறுக்கமுடியாது.//

நான் மறுக்கவில்லை. ஆனால் என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது. காஷ்மீரத்திலும் சிவ வழிபாடு ஆதிகாலத்தில் இருந்து தொடர்ந்து இருப்பதாகவே தெரிகிறது.

//சிந்துவெளி கரப்பா நாகரீக ஆய்வுகள் அதையே நமக்கு நவின்றுள்ளன//

இந்த ஆய்வுகள் இன்னும் முழுக்க முழுக்க மறுக்க இயலா உண்மைகளைச் சொல்லியிருக்கின்றன என்று நான் நினைக்கவில்லை. சிந்து வெளி நாகரிகத்தின் எழுத்துகள் திராவிட வகைப்பட்டனவாக இருக்கலாம் என்று அறிஞர்கள் சொன்னதைப் படித்திருக்கிறேனே ஒழிய அவை திராவிட எழுத்துகள் தான்; தமிழ் எழுத்துகள் தான்; சிந்து சமவெளியினர் தமிழர்கள் தான் என்று உறுதியுடன் மறுக்கவே இயலா வகையில் சொன்னதைப் படித்த நினைவில்லை. இப்போது அண்மைக்காலமாக சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்வதை விட சரஸ்வதி நதிக்கரை நாகரிகம் என்று சொல்லும் ஆய்வாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். இரு பக்க ஆய்வாளர்களும் அவரவர் கருத்துகளை வைக்கிறார்களே ஒழிய ஒருவர் மறுப்பை இன்னொருவர் தகுந்த தரவு காட்டி நிறுத்தியதாகத் தெரியவில்லை. அவர்கள் பேசி முடியட்டும். :-)

//ஆரியர் ஆரம்ப காலத்தில் இந்திரனையே பெரிய சக்திவாய்ந்த கடவுளாக வழிபட்டனர். //

ஆரியர் வணங்கிய பெருந்தெய்வங்களில் இந்திரன் ஒருவன். அவ்வளவே. அவன் தான் ஆரம்ப காலத்தில் வணங்கப்பட்டவன் என்று நான் படித்தவரையில் தெரியவில்லை. வேதங்களில் இந்திரனுக்கு மேலாகவே வருணனும் (ஆமாம் நெய்தல் நிலத்துக் கடவுள் வருணன் தான்) அக்கினியும் கொண்டாடப்படுகின்றனர். இன்றைக்கு சிவனை, திருமாலை, அம்பிகையை, கணபதியை என்று வழிபடும் நூற்களில் அந்த அந்த கடவுளர்கள் பெரிய சக்தி வாய்ந்த கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். அதைப் போல் வேதம் என்னும் தொகுப்பு நூலிலும் அந்த அந்தக் கடவுளர்களை வணங்கும் நூற்கள் தொகுக்கப்பட்ட போது அந்த அந்தக் கடவுளர்களை பெரிய சக்தி வாய்ந்த கடவுளாகக் கூறும் பகுதிகள் தொகுக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி நூலாக இருந்திருந்தால் ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு கடவுளை எல்லாம் வல்லவராக வணங்குவதைக் காணலாம்.

//காலப்போக்கில் சிவவழிபாட்டை நிராகரிக்க முடியாது தவித்த ஆரியக்கூட்டம் தமிழரிடம் காணப்பட்ட திருமாலை கொள்ளையடித்து விஷ்ணு என்று பெயரிட்டு தமிழர் சமய நெறியான சைவத்திற்கு போட்டியாக வைணவம் எனும் நெறியை உருவாக்கினர்.//

முதல் பகுதியை முதலில் பார்ப்போம். சிவ வழிபாட்டை நிராகரித்தார்கள்; நிராகரிக்க முடியாமல் தவித்தார்கள் ஆரியக்கூட்டத்தினர் என்பதற்கு என்ன தரவு? நேரடியாக வேதங்களிலோ வடமொழி வழிபாட்டு நூற்களிலிருந்தோ தரவுகளைத் தர வேண்டுகிறேன். வேதம் இப்படித் தானையா சொல்கிறது என்று கற்பனையாகவும் ஊகித்தும் சொன்ன பெரியவர்களின் வார்த்தைகளைத் தரவாகக் காட்டாதீர்கள். அப்பெரியவர்கள் எல்லோருக்குமே ஏதோ ஒரு அரசியல் நெருக்கடியும் தேவையும் இருந்திருக்கிறது. அதனால் அப்பெரியவர்களின் வார்த்தைகளைத் தாண்டியும் நாம் சென்று பார்க்க வேண்டும்.

இரண்டாவது பகுதி: ஆரியக்கூட்டம் திருமாலைக் கொள்ளையடித்து விஷ்ணு என்று பெயரிட்டார்கள் என்பதற்கும் சைவத்திற்குப் போட்டியாக வைணவத்தை உருவாக்கினர் என்பதற்கும் என்ன நேரடியான தரவுகள் இருக்கின்றன? தமிழர் சமய நெறி சைவம் மட்டும் தானா? வைணவம் தமிழர் நெறி இல்லையா?

விஷ்ணு என்னும் வடமொழிப் பெயருடையவனை வணங்கும் நெறி வைணவம் என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் விஷ்ணு என்ற பெயரின் மூலத்தை நீங்கள் அறியவில்லை என்று எண்ணுகிறேன். சிவன் என்பது எப்படி முழுமையான தமிழ்ப்பெயரோ அது போல விண்ணவன் என்பதும் முழுமையான தமிழ்ப்பெயர். விண்ணவன் --> விண்ணு --> விஷ்ணு. சிவ வழிபாடான சிவம் சைவம் ஆனது போல் விண்ணவன் வழிபாடான விண்ணவம் வைணவம் ஆனது. வைணவமும் தமிழ் நெறி தான். ஆரியக்கூட்டம் இங்கே எங்கும் நுழையவும் இல்லை. திருமாலை விஷ்ணு என்று வடமொழிப்படுத்தவும் இல்லை. அப்படி எண்ணிக் கொள்வதெல்லாம் கற்பனையே.

//எனினும் விஷ்ணுவாய் இனமாற்றம் செய்யப்பட்ட திருமால்மீது பற்றுக்கொள்ள அவர்களுக்கு மனம் இடந்தர மறுக்கவே அவரின் அவதாரமாக இராமனையும் கிருஷ்ணனையும் உருவாக்கினர்.//

அப்படி இனமாற்றம் செய்தவர்களால் ஏன் அவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது? அதனையும் சொல்கிறீர்களா?

விண்ணவ நெறியைப் பாடும் சங்க இலக்கியங்களில் இராமனும் கிருஷ்ணனும் பலராமனும் மீண்டும் மீண்டும் வணங்கப்பட்டிருக்கிறார்களே. அதுவும் விண்ணவனின் அவதாரமாகவே. அப்படியென்றால் ஆரியக்கூட்டம் செய்த பித்தலாட்டமா சங்க இலக்கியங்கள் எழுதியவர் செய்த பித்தலாட்டமா அவதார 'உருவாக்கம்'?

//இன்று ஓம் நமோ நாராயணா என்று சொல்லக் கூசும் இதே வைணவ வடக்கர் "கரே ராம் கரே கிருஷ்ணா" என்று சொல்வதோடு கிருஷ்ணனே முழுமுதற்கடவுள் என்று தந்திரமாக மாற்றியும் விட்டனர்.//

அப்படியா? ஓம் நமோ நாராயணா என்று சொல்லக் கூசும் வடக்கர்கள் எத்தனை பேரை பார்த்தீர்கள் நீங்கள்? ஹரே ராம ஹரே கிருஷ்ண என்று சொல்வது எந்த வகையில் எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லுவதற்கு எதிராகும்? நாராயணனின், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனே முழுமுதற்கடவுள் என்று சொல்வது எந்த வகையில் தவறாகும்? அப்படி சொல்வது எந்த வகையில் தந்திரமாக மாற்றப்பட்டதாகும்?

வைணவ வடக்கர் என்று சொல்லியிருக்கிறீர்களே. வைணவ தெற்கரைக் கண்டதில்லையா நீங்கள்? அவர்களைப் பற்றி பேசவில்லையே? அவர்களும் ஹரே கிருஷ்ண மந்திரத்தைச் சொல்கின்றார்களே?

//விஷ்ணுவாய் இனம்மாறிய நாராயணனை தூக்கி தூரப்போட்டும்விட்டனர்.//

இதற்கு ஏற்கனவே மறுப்பு சொல்லிவிட்டேன். விஷ்ணு தமிழ்ப்பெயரின் மருவலே. அதில் ஐயமே இல்லை. அதனால் விஷ்ணு இனம் மாறிய நாராயணம் என்ற கருத்து தள்ளத்தக்கது. அதனால் வடக்கர்கள் நாராயணனைத் தூரப் போட்டுவிட்டார்கள் என்பதும் தள்ளத்தக்கது.

//இப்போது அவரைக்காப்பதும் ஆரியச் சதியில் அகப்பட்ட தமிழர்தான். ஆனால் அவர்கள் கிருஷ்ண மகிமையிலும் இராம மகிமையிலும் மயங்காமல் இருந்தால் நல்லது. வழிபடுவது தவறில்லை. திருமாலை வடக்கர் மறந்ததுபோல் மறக்காது இருந்தால் நல்லது.
//

இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏற்கனவே வார்த்தைக்கு வார்த்தை கருத்து சொல்லிவிட்டேன் என்பதால் இதனை புறம் ஒதுக்கி அடுத்த வார்த்தைக்குச் செல்கிறேன்.

//சைவம் வேதத்தில் தங்கியில்லை.//

ருத்ரம், சமகம் என்ற பகுதிகளைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? அவை சிவலிங்கத்தை திரும்பத் திரும்பப் போற்றும். அவற்றை நெருங்கிப் படித்தீர்கள் என்றால் சைவம் வேதத்திலும் உண்டு என்று சொல்வீர்கள்.

//சிவனை தூற்றிய வேதப்பகுதிகள் கூடவுண்டு.(விஷ்ணுவை தூற்றியதாய் நானறியவில்லை.) //

எந்தப் பகுதி என்று காட்டுங்கள். அந்த சொற்கள் எப்படி தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது என்று சொல்லுக்குச் சொல் விளக்குகிறேன். நீங்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் முயலவேண்டிய கடமை எனக்கு உண்டு.

//இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு ஆரிய அத்திவாரத்தில் பகவத் கீதை எனும் தூண்களைக் கொண்டு கட்டப்பட்டது வைணவம்.//

அப்படியென்றால் பரிபாடலிலும் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் இன்னும் பல சங்க இலக்கியங்களிலும் வரும் விண்ணவன் துதிகள் வைணவத்திற்கு அத்திவாரங்கள் இல்லையா? தூண்கள் இல்லையா? அவற்றை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா?
---

குமரன் (Kumaran) said...
//கம்பன் தனது தமிழை ஆரிய திராவிட யுத்தமே இராமாயணம் என்று அறியாது இராமன் திருமாலின் அவதாரம் என்று மயங்கி தமிழ் நாட்டுத் தமிழர் குரங்குகள் இலங்கைத் தமிழர் அரக்கர் எனும் ஆரிய வன்குரோதக் கருத்தை வால்மிகி மூலம் வெளிக்காட்டியதை உணராது தமிழில் உலாவவிட்டார். அதனை ஆழ்வார்கள் தமது பாசுரங்களின் மூலமாக வழிமொழிந்துவிட்டனர்.
//

இங்கே இரண்டாவது வாக்கியத்தை முதலிலும் முதல் வாக்கியத்தை இரண்டாவதாகவும் பார்க்கலாம். ஆழ்வார்கள் கம்பரின் அறியாமையால் எழுந்த இராமாவதார காவியத்தை வழிமொழிந்தனர் என்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் ஆழ்வார்கள் யார் என்று எனக்கு புரியவில்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடிய ஆழ்வார்களாக அவர்கள் இருக்க இயலாது. ஏனெனில் அப்பன்னிருவரும் கம்பரின் காலத்திற்குப் பல நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்தவர்கள். நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தாலும் சரி; எந்த நூலைப் புரட்டிப் பார்த்தாலும் சரி; கம்பரின் காலம் ஆழ்வார்களின் காலத்திற்கு பின்னால் தான் என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.
---

குமரன் (Kumaran) said...
//கம்பன் தனது தமிழை ஆரிய திராவிட யுத்தமே இராமாயணம் என்று அறியாது இராமன் திருமாலின் அவதாரம் என்று மயங்கி தமிழ் நாட்டுத் தமிழர் குரங்குகள் இலங்கைத் தமிழர் அரக்கர் எனும் ஆரிய வன்குரோதக் கருத்தை வால்மிகி மூலம் வெளிக்காட்டியதை உணராது தமிழில் உலாவவிட்டார். அதனை ஆழ்வார்கள் தமது பாசுரங்களின் மூலமாக வழிமொழிந்துவிட்டனர்.
//

இராமாயணம் ஆரிய திராவிட யுத்தமா இல்லையா என்பதைப் பற்றியும், இராமன் திருமாலின் அவதாரமா இல்லையா என்பதை பற்றியும், தமிழ் நாட்டுத் தமிழரைக் குரங்குகள் என்றும் இலங்கைத் தமிழர் அரக்கர் என்றும் ஆரிய வன்குரோதக் கருத்தை வால்மீகி வெளிகாட்டினாரா இல்லையா என்பதைப் பற்றியும், அதனை உணராது கம்பர் தமிழில் உலவவிட்டாரா என்பதைப் பற்றியும் பேசத் தொடங்கினால் இன்னொரு புலனத்திற்குச் சென்று நீண்ட உரை நிகழ்த்த வேண்டும். அதனை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு சில வாக்கியங்களை மட்டும் சொல்லி விடுக்கிறேன்.

புறநானூற்றில் இராமாயணத்தைப் பற்றி வரும் பகுதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இராவணனை அரக்கன் என்றும் சீதையின் நகைகளை குரங்குகள் கைகளில் எடுத்து எந்த நகையை எங்கே அணிவது என்று புரியாமல் மாற்றி மாற்றி அணிந்தன என்று சொல்வதைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்? இராமனின் பெயர் பல முறை சங்க இலக்கியங்களில் வருகின்றதே - அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உண்மை வரலாறு அறிய வேண்டும் என்றால் தமிழ் இலக்கியங்களையும் கொஞ்சம் தோண்டித் துருவிப் படித்துப் பாருங்கள். இந்த சங்க இலக்கியங்கள் எல்லாமுமே கம்பரின் ஆழ்வார்களின் காலத்திற்குப் பின்னர் வந்தவைகளா? இங்கே அரக்கனைப் பற்றியும் குரங்களைப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறதே. இவை சொல்வது என்ன? குரங்குகள் என்று தமிழகத் தமிழரை தமிழ் இலக்கியமே பேசுகிறதா? அதுவும் கம்பருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்? அரக்கன் என்று இலங்கை வேந்தனை தமிழ் இலக்கியமே சொல்கிறதே? அது ஆரிய வன்குரோத கருத்தா? அப்படியென்றால் அது பழந்தமிழ் இலக்கியத்தில் எப்படி வந்தது? கம்பர் கால இயந்திரத்தில் ஏறிச் சென்று வால்மீகியின் ஆரிய வன்குரோதக் கருத்தை அந்தத் தமிழ்ப்புலவர்களின் காதில் ஓதி வந்தாரா?
---

குமரன் (Kumaran) said...
//திருமால் தமிழ்க் கடவுள்.

திருமால் முழுமுதற்பொருள் என்பதோ அன்றி வைணவக் கொள்கையோ தமிழர் கோட்பாடு அல்ல.பகவத் கீதை இல்லாவிட்டால் வைணவம் இல்லை. சைவ சித்தாந்தம் தமிழில் மட்டுமே தங்கியுள்ளது.

ஆரிய வைணவத்தை தமிழில் தமிழர்களாலும் வளர்க்கப்பட்டது எனபதுதான் உண்மை.

சைவ-வைணவ பிணக்கிற்காக இங்கு பின்னூட்டமிடவில்லை. வரலாற்றை உண்மையை மறக்கக்கூடாது என்பதை அறிவிக்கவே அடியேனின் பின்னூட்டம்.
//

திருமால் தமிழ்க்கடவுள் என்று சொல்கிறீர்கள். ஆனால் திருமால் முழுமுதற்கடவுள் என்பதோ வைணவக் கொள்கையோ தமிழர் கோட்பாடு இல்லை என்கிறீர்கள். மீண்டும் முன்பு சொன்னதைச் சொல்கிறேன். திருமால், விண்ணவன், விண்ணு, விஷ்ணு முழுமுதற்கடவுள் என்று சொல்லும் வைணவமும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று சொல்லும் சைவத்தைப் போல் தமிழர் கோட்பாடே.

பகவத் கீதை இல்லாவிட்டாலும் பரிபாடலும் புறநானூரும் தொல்காப்பியமும் ஆழ்வார்களின் திவ்விய பிரபந்தங்களும் வைணவத்தின் இருப்பைக் காட்டும்.

சைவம் தமிழில் மட்டுமின்றி வடமொழியிலும் தமிழரிடம் மட்டுமின்றி தென்னவரிடம் மட்டுமின்றி வடக்கே காஷ்மீரத்திலும் தொன்று தொட்டு இருக்கின்றது.

வைணவம் ஆரியம் மட்டுமே என்பதோ சைவம் தமிழ் மட்டுமே என்பதோ உண்மையை அறியாதவர்களும் அறிய இயலாதவர்களும் அறிய முயலாதவர்களும் அறிய மறுப்பவர்களும் சொல்பவை.

இரவிசங்கரும் நானும் சைவ வைணவ பிணக்கிற்காக இங்கும் எங்கும் எதையுமே பேசவில்லை. உண்மை வரலாறு என்று எண்ணிக் கொண்டு அரைகுறை தகவல்கள் தரப்படும் போது அதனை வலுவாக மறுத்து உண்மையிலும் உண்மையான வரலாற்றை எடுத்துக் காட்ட 'முயல்கிறோம்'. எங்களின் பதிவுகளுக்கு நீங்கள் பல முறை வந்து எங்களின் சைவ பதிகங்களுக்கான இடுகைகளைப் பாராட்டியிருக்கிறீர்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

இறைவன் திருவருள் முன்னிற்கட்டும்.
---

குமரன் (Kumaran) said...
//கண்ணன் மீதான வெறுப்பு கதைகளினால் ஏற்பட்டவை என்று தான் நினைக்கிறேன்.
//

//கண்ணனுக்கு எண்ணற்ற கதைகள் புனையப்பட்டதால் தமிழில் இருந்து தள்ளிச் சென்றதாக தோன்றுகிறது
//

கோவி.கண்ணன். இந்த ஏரணம் சரியாகத் தோன்றவில்லை. இந்த ஏரணத்தின் படி பார்த்தால் எந்தக் கடவுளும் தமிழில் இருந்து தள்ளிச் சென்றிருக்க வேண்டும். உங்கள் பார்வையில் கண்ணன் கதைகளில் கட்டுகதைகள் அதிகம் என்று சொல்கிறீர்கள். இன்னொருவர் இன்னொரு கடவுளையோ கடவுள் அற்றவர்களையோ சொல்லுவார். ஆனால் அவர்களெல்லாம் தமிழ் பண்பாட்டின் அங்கமாகத் தான் இப்போதும் சொல்லப்படுகிறார்கள். கண்ணனின் மீது மட்டும் சிவத்தமிழோன் போன்றவர்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏற்பட்டதற்குக் காரணங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்கின்றன. அப்போது வைக்கப்பட்ட 'வரலாற்று உண்மை'களையே இப்போதும் சிவத்தமிழோன் என்ற பெயருடன் பேசிக் கொண்டிருக்கும் நண்பரும் சொல்கிறார். சிவத்தையும் தமிழையும் மட்டுமே ஒட்ட வைத்து விண்ணவனையும் தமிழையும் பிரிக்கும் அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டு அரசியலை அவரது புனைப்பெயரான 'சிவத்தமிழோன்' என்பதே நன்கு காட்டுகிறது. அந்த அரசியலில் இறை நம்பிக்கை என்ற பகுதியை மட்டுமே நீக்கிவிட்டு மற்ற பகுதிகளை எல்லாம் எற்றுக் கொண்டு பேசவேண்டிய தேவை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு ஏற்பட்டது; அந்த தேவை இன்னும் இருக்கிறது என்பது இன்னும் அந்த அரசியல் செல்வாக்கோடு இருப்பதிலேயே தெரியும்.

சிவத்தமிழோன் ஐயா. தங்கள் இயற்பெயர் வேறொன்றாக இருந்து தங்கள் கொள்கையைக் காட்டும் விதமாக சிவத்தமிழோன் என்ற பெயரில் பதிவுகள் இடுகிறீர்கள் என்று எண்ணி இப்படி சொல்கிறேன். சிவத்தமிழோன் என்பது தங்கள் இயற்பெயராகவே இருக்கும் பட்சத்தில் நான் அவக்கரப்பட்டு கூறிய இவற்றைப் புறம் தள்ளி என்னை மன்னிக்க வேண்டும்.
---

குமரன் (Kumaran) said...
//நீங்கள் மறை மலை அடிகளாரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். //

இல்லை கோவி.கண்ணன். நான் அவரை மட்டும் இங்கே குறிப்பிடவில்லை. ஒரே ஒருவரது எழுத்தால் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா? பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான சைவ எழுத்தாளர்கள் தோன்றினார்கள். அவர்களின் செல்வாக்கும் மிகுந்து இருந்தது. அதனால் பெற்ற நன்மைகள் ஏராளம் ஏராளம். அதே நேரத்தில் சிவத்தமிழை நிலைநாட்டும் அவர்களின் அரசியலால் நாம் புரிந்து கொண்ட வரலாறும் தப்பும் தவறுமாக இருப்பதும் உண்மை.

//மறைமலை அடிகளாரும் கண்ணனும் சக்தியும் சிவவழிபாட்டின் நீட்சி என்றும் சொல்லி இருக்கிறார்//

இதனை நான் ஏற்கவில்லை என்பதை முன்னரே சொன்னதாக நினைவு.

//ஆறாம் நூற்றாண்டு சைவ - வைணவ சண்டைகளின் முன்னின்றவர்கள் வேளாளர்கள் மட்டுமே என்று கருத்தினால் பார்பனர்கள் அனைவருமே வைணவம் ஆகி இருப்பார்கள். ஆனால் அப்படி இல்லையே.
//

இப்படி மட்டையடியாக நினைப்பதும் தவறு. ஏரணத்திற்கு ஒத்துவரவில்லை. ஒரு குழுவினர் சைவத்திற்கு உரிமை பாராட்டுகிறார்கள். இன்னொரு குழுவினர் அவர்களுக்கு சைவத்தின் மீது உரிமையே இல்லை என்கிறார்கள். இரண்டாம் குழுவினர் அப்படி அடித்துச் சொன்னதால் முதல் குழுவினர் விட்டுக் கொடுத்துவிட்டு இரண்டாம் குழுவினர் எதிர்க்குழு என்று அடையாளம் காட்டும் ஒன்றிற்கு உரிமை பாராட்ட முதல் குழுவினர் எல்லோரும் சென்றுவிடுவார்களா? சொத்து விவகாரத்திலேயே இப்படி நடப்பதில்லையே. சமயத்தில் அப்படி நடக்குமா? இரண்டாம் குழுவினர் தாங்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவார்கள். முதல் குழுவினர் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுவார்கள். சிவத்தமிழோன் என்று ஒருவர் இங்கு வந்து பேசும் செய்திகளிலும் தில்லையில் நடைபெறும் கூத்துகளிலும் என்று பல இடங்களில் இந்தப் போராட்டத்தைக் காணலாம்.

சிந்தித்துப் பாருங்கள். சைவ வைணவ சண்டைகள் என்று இங்கே சொல்லவில்லை. இரண்டு நிலைகளில் சண்டைகள் நடந்தன; நடக்கின்றன. சைவர்களில் இடையே சாதிச்சண்டை - யாருடைய ஆதிக்கம் சைவத்தில் இருக்க வேண்டும் என்பதில். ஈழத்தில் இரு சாதிகளும் ஆதிக்க சாதிகளாக அறியப்படுகின்றன. இங்கே பார்ப்பனர்களை எந்த அளவிற்கு திட்டுகிறார்களோ அந்த அளவிற்கு ஈழத்தில் வேளாளர்கள் திட்டப்படுகிறார்கள்; அது அவரவர்கள் ஆதிக்கத்திற்கான எதிர்வினையாகக் கூடக் கொள்ளலாம். அதைப் பற்றி பேசுவது இன்னொரு புலனம். நாம் பேசும் புலனத்தில் இரு குழுக்களிடையே சண்டை சைவம் யாருக்குரியது என்பது; அது நடந்தது; நடக்கிறது; இன்னும் பல காலம் நடக்கும். இன்னொரு நிலையில் அந்தச் சாதிச்சண்டை நீளுவது சைவ வைணவ சண்டையாக. வைணவத்தைத் தமிழுக்குப் புறச்சமயமாகக் கட்டமைப்பதில் வேளாளர்கள் முன்னின்றார்கள். அதனைக் கண்ட சைவப் பார்ப்பனர்களும் சைவ சமய சின்னங்களை அணியும் அத்வைத பார்ப்பனர்களும் எடுத்துக் கொண்டு அவற்றை வைணவத்திற்கு எதிராகப் பரப்பினார்கள். வைணவம் என்று வரும் போது இரு பக்கங்களும் சேர்ந்து கொள்ளும். சைவம் என்று வரும் போது ஆதிக்கச் சண்டை செய்யும். இந்த மாதிரியான முரணியக்கம் எல்லா அரசியலிலும் நடப்பது உண்டு தானே. இந்த முரணியக்கத்தை இங்கே வலைப்பதிவுகளிலும் காணலாம். தமிழ்க்கடவுள் முருகன் என்றும் கோபுரத்தில் ஏறி மந்திரத்தை எல்லோருக்கும் சொன்னவர் சொன்ன மந்திரம் இந்தப் பிறவியை மட்டுமே கடைத்தேற்றும்; மீண்டும் பிறவா நிலை தராது என்று சொல்லுவதும் பார்ப்பனர் என்று பலரும் அறிந்த ஒருவர் வாயிலிருந்து வருவதையும் காணலாம். இதே கருத்துகளை வலுவாகப் பேசுபவர்கள் பார்ப்பனர்கள் இல்லையென்றால் அவர்கள் வேளாளர்களாகவே இருப்பார்கள் என்பதும் கவனித்துப் பார்த்தால் தெரியும். நம் வலையுலக நண்பர்களும் அதில் அடக்கம். அவர்கள் தங்களை வேளாளர்களாக வெளிப்படையாகச் சொன்னதில்லை; அதனால் நான் தவறாக அவர்கள் மீது முத்திரை குத்துவதாகவும் இருக்கலாம் - அப்படியென்றால் அவர்கள் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.

முரணியக்கத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு நான். தமிழ் என்று வரும் போது உங்களுடன் ஒரே தளத்தில் நின்று மற்றவர்களுடன் வாதாடுவேன். சமயம் என்று வரும் போது உங்களுக்கு எதிர்த்தளத்தில் நின்று வாதாடுவேன். இப்படி ஒட்டிச் செல்லும் அரசியலும் வெட்டிச் செல்லும் அரசியலும் நமக்கிடையே நடந்து கொண்டு தானே இருக்கிறது.
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மறைமலை அடிகளாரும் கண்ணனும் சக்தியும் சிவவழிபாட்டின் நீட்சி என்றும் சொல்லி இருக்கிறார்//

//சிவ ஒளியில் பச்சை நிற ஒளி அம்மையாகவும் நீல நிற ஒளி கண்ணனாகவும் குறியிடாக மாறியது என்று குறிப்பிட்டு இருந்ததைப் படித்து இருக்கிறேன்//


கோவி அண்ணா,
மறைமலை அடிகளாரை அடியேனோடு கருத்துரையாடச் சொல்லுங்கள்! பிறகு பார்க்கலாம்! :)

கலரை வச்சி நீட்சி-ன்னு சொன்னாக் கூட அறிவியல் பூர்வமா ஒட்டலைங்கோ! :)

சிவன் சேயோன்
அன்னையும், மாலவனும் = பச்சை நீலம்!

In the color spectrum=VIBGYOR!
சிவப்பு ஒரு மூலை, நீலம் ஒரு மூலை! நீட்சி என்பதே இல்லை!
சிவப்பில் இருந்து நீலம் வரவோ, நீலத்தில் இருந்து சிவப்பு வரவோ, படிப்படியா, ஒவ்வொரு அலைவரிசையா இறங்கணும்! நீட்சி (Remainder/Residual) நிறங்கள் கிடையாது!

sin ø = nmƛ என்ற விதிப்படி விளக்குக்கிறேன்! :)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சிவத்தமிழோன் said...
தங்கள் எழுத்து இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட எழுத்து. வாழ்த்துகள்//

அன்பான ஆசிக்கு நன்றி சிவத்தமிழோன் ஐயா!

குமரன் உங்களின் பல கருத்துக்களுக்கு நேரம் எடுத்துக் கொண்டு விடை சொல்லியுள்ளார் பாருங்கள்!

நம் சிந்தனைகளும் கருத்துக்களும் ஏதாவதொரு பிடிமானம் இல்லாமல் இருப்பது கடினம். ஆனால் அந்தப் பிடிமானத்தின் உண்மைத் தன்மை என்பது மிகவும் முக்கியம்.

நாம் அறிவால் மட்டும் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதில்லை!
நம் அடிமன விருப்பு வெறுப்புகளைப் பொறுத்தும் சில கருத்துக்களை நம்மை அறியாமல் கூட உருவாக்கிக் கொள்கிறோம்!

ஆனால் இது போன்ற கலந்துரையாடல்களில், உண்மைத் தன்மைகளை அறிந்து கொண்டு செவ்வி செய்து கொள்வது தான் எத்தனை நன்மை! எத்தனை சுகம்! பெரியாரைத் துணைக்கோடல் / சத் சங்கம் என்பது இது தான்!

இறையியலில் நம் தமிழரின் வேர்கள் அறியும் முயற்சி சிறக்க, இறைவனே துணை நிற்கட்டும்!

நிற்க...
ஆழ்வார்கள் காலம், கம்பரின் காலத்துக்கு முற்பட்டது. கம்பர் நம்மாழ்வாரைப் பற்றிச் சடகோபர் அந்தாதியும் செய்துள்ளார். நீங்கள் சொல்வது போல், கம்ப இராமாயணத்தை ஆழ்வார்கள் அவசரம் அவசரமாக வழிமொழியவில்லை! ஆழ்வார்கள் காலத்தால் முந்தையவர்கள்! கம்பர் பிந்தியவர்!
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திருமால் தமிழ்க் கடவுள்//

மிகவும் நன்றி!
ஜிரா, அம்பி - ரெண்டு பேரும் கேட்டுக்குங்க! :))

//பகவத் கீதை இல்லாவிட்டால் வைணவம் இல்லை. சைவ சித்தாந்தம் தமிழில் மட்டுமே தங்கியுள்ளது//

பகவத் கீதை என்று இன்றைக்குக் காணப்படும் ஒருங்கிணைந்த வைணவத்தின் ஒரு பகுதியாக வேண்டுமானால் இருக்கலாம்! ஆனால் வைணவத்தின் கருத்தாக்கங்கள் சங்க இலக்கியத்தில் பரிபாடல், கலித்தொகை, அகம், புறம் என்று பல இடங்களில் பேசப்படுகின்றனவே!

மணிமேகலை சமய விளக்கம் கொடுக்கும் போது, வைணவக் கருத்துக்கள்/கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் புட்டு புட்டு வைக்கிறாளே!

சைவ சித்தாந்தத்தில் ஆதி நூல் திருமூலரின் திருமந்திரம்.
அதில் வடமொழித் தத்துவங்கள், லிங்க அமைப்பான பிரம்ம பாகம்-விஷ்ணு பாகம்-தேவி பாகம்-சிவ பாகம், நம-சிவாய என்னும் பஞ்சாட்சர விளக்கம் எல்லாம் விரவி உள்ளதே!

அதற்காக சைவ சிந்தாந்தம் தமிழ் இல்லை என்று தள்ளி விடுகிறோமா? இல்லையே! அதே போலத் தான் தமிழ் வைணவத்திலும், வேத-கீதை கருத்துக்களும் விரவி உள்ளன. தமிழ் இல்லை என்று விண்ணவத்தைத் தள்ள முடியாது!

பகவத் கீதை இல்லாவிட்டால் வைணவம் இல்லை என்பதெல்லாம் சும்மா! இராமாயண காலத்தில் ஏது பகவத் கீதை?

ஆழ்வார்களின் (மாறன்-நம்மாழ்வார்) அருளிச் செயல் ஒன்றினாலேயே வைணவம் நிற்கும்!
திருமூலர் திருமந்திரம் ஒன்றினாலேயே சைவ சித்தாந்தமும் நிற்கும்!
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@கோவி
//வட இந்திய முருகனுக்கு வள்ளி இருக்கிறதா என்பதே ஆராய்ச்சிக் குறிய ஒன்று. :)//

வட இந்திய முருகனுக்கு தேவானை இருக்கிறதா என்பதே ஆராய்ச்சிக் குறிய ஒன்று. :)

Jokes apart,
வட முருகனுக்கு வள்ளியும் சொல்லப்பட்டிருக்கும் சுலோகங்கள் உண்டு கோவி அண்ணா! ஸ்கந்த புராணத்திலும் வருகிறது!
இதோ இன்னொரு தோத்திரம்/தரவு:

யோகா அனுக்ரக "வள்ளீச", கஜநாயகி ஸ்ரீபதிம்
பஞ்ச பிரம்ம சொரூபாய சுப்ரமண்யாய மங்களம்!
--

கோவி.கண்ணன் said...
//Jokes apart,
வட முருகனுக்கு வள்ளியும் சொல்லப்பட்டிருக்கும் சுலோகங்கள் உண்டு கோவி அண்ணா! ஸ்கந்த புராணத்திலும் வருகிறது!
இதோ இன்னொரு தோத்திரம்/தரவு://

கந்தப்புராணம் தென்னகத்தில் எழுதப்பட்டது, அதை வடபுலத்து சிந்தனை என்று சொல்ல முடியாது, அது ஒரு கட்டுமானம் தான். :) கந்தபுராணத்தை தென் இந்தியாதவிர்த்து வேறு எவரும் அறிந்திலர் அல்லர்.

*****

குமரன் பின்னூட்டம் சுவையார்வமாக இருந்தது. அடுத்த அடுத்த பதிவுகளில் மேலும் பேசுவோம்.
--

சிவத்தமிழோன் said...
அடியேன் கிட்டத்தட்ட இரவிசங்கர் அவர்களின் புகைப்படத்தை ஒத்த வயதெல்லைதான். "ஐயா" தேவையற்ற அன்னியமானது.

கொற்றவை கூட தமிழ்க்கடவுள்தான். ஆனால் சாக்தம் தமிழ்ச் சமயமாகுமா? சாக்தம் சக்தியை முழுமுதற்கடவுளாகக் கொண்டது. கொற்றவையை சக்தியின் ஓர் அம்சம் என்பர். அதற்காக சாக்தம் தமிழரால் உருவாக்கப்பட்ட நெறியல்ல.
மாயோன் திருமால் என்பதிலேயோ திருமால் தமிழ்க்கடவுள் என்பதிலேயோ அடியேனுக்கு எந்த மாறுபாடாக கருத்துமில்லை. ஆனால் மாயோன் என்று தொல்காப்பியம் சொல்லுவது கண்ணனைதான் என்பது வலிந்து வழங்கப்பட்டுள்ள விளக்கம். முல்லை நில மக்களின் பண்பாடு முல்லை நில மக்களின் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையதாக கண்ணனின் வாழ்வியல் காட்டப்பட்டதற்காக கண்ணன் தான் மாயோன் என்பது சரியல்ல. திருமாலின் அவதாரமாகக் கூறப்படும் கண்ணன் பிறந்தது வளர்ந்தது மகாபாரதப்போர் நடந்தது எல்லாம் வட இந்தியா என்பதை மறக்கலாகாது. கண்ணன் வரலாற்றுக்கு மூல ஆதாரம் மகாபாரதம். மகாபாரதத்தை இயற்றியது வடக்கே ஒழிய தெற்கு அல்ல.மாயோன் எனும் திருமாலின் அவதாரமாக கிருஷ்ணனைப் படைக்கும்போது முல்லை நில மக்களின் பழக்க வழக்கங்களை ஏன் ஆரியர் சூட்டியிருக்கக்கூடாது கிருஷ்ணனுக்கு(கண்ணனுக்கு)?

இராமன் ஆரியன் எனபதற்கும் இராமாயணம் ஆரிய தமிழ் யுத்தம் சைவ-வைணவ போர் என்பதற்கும் விளக்கம் அடியேன் வழங்கத் தேவையில்லை.

வைணவத்தின் சிறப்புநூற்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டுமே தமிழருடையதல்ல. பகவத் கீதைக்கும் தமிழுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் திராவிடர் என்பது அகழ்வாராச்சியின் துணிபு. சிந்து வெளி திராவிட நாகரீகமாக இருக்கவேண்டும் என்பது தமிழனின் கூற்றல்ல. வெள்ளையர்களின் துணிபு. எனவே காசுமீரத்தில் சைவம் உள்ளதென்பதற்காக திராவிட சமயம் சைவம் என்பதில் ஐயம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

உலகம் பூராகவும் பரந்து சமயம் வளர்க்கும் கரே கிருசுணா கரே ராமா இயக்கம் திருப்பதியைப் பற்றியோ பெருமாளைப்பற்றியோ வாய்திறப்பதில்லை. அவர்கள் வைணவத்தின் முழுமுதற்கடவுள் கிருஷ்ணன் என்றே சொல்கின்றனர். பிந்தி வந்த கொம்பு முந்திவந்த காதை மறைப்பதுபோல்த்தான் கிருஷ்ணன்/கண்ணன் முழுமுதற்கடவுள் என்று வைணவத்திற்கு கொடுக்கப்படும் வரைவிலக்கணம்.

முனைவர் நன்னன் வேதனையோடு மக்கள் தொலைக்காட்சியில் பரிமாறிய கருத்துகளில் ஒன்று அருவி- நீர்வீழ்ச்சி. இரண்டும் ஒன்றுதான். ஆனால் அருவி என்பது தொன்று தொட்டு விளங்கிவந்த தமிழ். இன் மொழிமாற்றுத்தான் நீர்வீழ்ச்சி. இன்று அருவி என்றால் குழம்பிதவிக்கும் மாணவர்கூட்டம் உருவாகியிருப்பது நீர்வீழ்ச்சி என்ற மொழிமாற்றை புழகவிட்டதனாலாகும். இதுபோல்த்தான் நாளை மாயோன் என்ற கிருஷ்ணன் மாயோன் எனும் திருமால் இருந்தார் என்பதையே இல்லாமல் செய்துவிடலாம்.

சைவம் வேதத்தில் தங்கியில்லை என்றுதான் எழுதினேன். சைவத்தைப் பற்றி வேதத்தில் இல்லை என்று எழுதவில்லை.

//பரிபாடலும் புறநானூரும்........//

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை என்று தொடங்கி சங்கத் தமிழ் மூன்றுந் தா என்ற ஔவையார் பாடிய பாடல் காணபத்தியத்தை ( அப்படி ஒன்று இருந்ததாகச் சொல்வது சைவத்தின் ஆளுமையைக் குறைக்க செய்த சதி என்பர்') தமிழ்ச் சமயமாக்கிடுமா? கவனம் கருப்புச் சட்டைக்காரர் கண்களுக்கு தெரிந்துவிட்டால் வீண் வாதங்கள் எழுந்திவிடும்.

//ஆழ்வார்கள் கம்பரின் அறியாமையால் எழுந்த இராமாவதார காவியத்தை வழிமொழிந்தனர் என்று சொல்லியிருக்கிறீர்கள்.//

மன்னிக்க வேண்டும், காலப்பிறழ்வை கருத்தில் கொள்ளாது எழுதியமைக்கு.

//புறநானூற்றில் இராமாயணத்தைப் பற்றி வரும் பகுதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

இராமனைப் பற்றியும் கிருஷ்ணனைப் பற்றியும் இந்தோனேசியாவிலும் இன்னும் பல்வேறுபட்ட தெற்காசிய நாடுகளிலும் உள்ள புராதன கதைகள் சிற்பங்கள் ஓவியங்கள் மூலமாய் அறியக்கூடியதாகவுள்ளது. இதன்காரணமாக அவர்கள் இராமனையும் கிருஷ்ணனையும் தமது இனத்தவர் என்று வகுப்பதில்லையே?

இங்கு எனது எழுத்துகள் சிலவேளைகளில் அடியேனை திருமால் துவேசியாகக் கூட சிலரை எண்ணச் செய்திடலாம். எனவே மேலதிகமாக ஒரு சிறு குறிப்பு எளியேனைப்பற்றி. ஈழத்தில் இரண்டு பெரும் திருமால் ஆலயங்கள் திருப்பதிக்கும் திருவரக்கத்துக்கும் இணையாக வைத்துப் போற்றப்படுவன. ஒன்று பொன்னாலை வரதராசாப் பெருமாள் ஆலயம். மற்றையது வல்லிபுர ஆழ்வார் ஆலயம். அடியேன் பொன்னாலை வரதராசப் பெருமாளைக் குலதெய்வமாகக் கொண்டவன். ஈழத்தில் சைவத்தை சிறப்பாக பேணும் மக்கள், திருமாலை காத்தற் கடவுளாக(ஈழத்தை காக்க வாவேன் என்ற ஏக்கத்துடன்) சிவனின் சக்திகளில் ஒருவராக வழிபடுவர்.

திருமால் சுத்த தமிழன். இராமாயணம், மகாபாரதம்,பகவத் கீதை வாயிலாய் ஆரியர் உருவாக்கியது வைணவம்.( தாங்கள் நவின்ற விண்ணவம் தான் வைணவம் ஆனது என்ற உண்மையை அறிந்ததால்த்தானோ ஆரியர் வைணவத்தின் முழுமுதற்கடவுளை மறந்து கிருஷ்ண பக்தியிலும் இராம பக்தியிலும் மூழ்கியிருக்கின்றனர்.) வைணவத்தை வளர்த்தது தமிழர் என்பதில் அடியேனுக்கு மாற்றுக் கருத்துயில்லை.

வைணவ சைவ பிரச்சினையை எழுப்பி குளிர்காய்வது சில நடிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம். அடியேனுக்கு உடன்பாடில்லை.
//எங்களின் பதிவுகளுக்கு நீங்கள் பல முறை வந்து எங்களின் சைவ பதிகங்களுக்கான இடுகைகளைப் பாராட்டியிருக்கிறீர்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.//

சைவம் பற்றி எழுதியபோது வாழ்த்திய அதே மனநிலைதான் இன்றும் தங்கள் மீதும் இரவிசங்கர் மீதும்.. தங்கள் எழுத்து இனிக்கையில் எழுதிய விடயம் எப்படிக் கசக்கும்?
வைணவம் பற்றி பிரசுரம் எழுதினால்கூட வந்து வாழ்த்துவேன். ஏனெனில் வைணவ வெறுப்பாளன் அல்ல அடியேன். வைணவத்தின் தோற்றத்தை வாதிடும்போது சமயம் கடந்த பார்வை தேவைப்பட்டது. எனவே இராமனும் கிருஷ்ணனும் ஆரியராக தெரிந்தனர்.அவ்வளவே.இதுபோல்த் தான் சைவத்தை சமயங்கடந்து இனரீதியில் பார்க்கும்போது பிள்ளையார் எனக்கு ஆரியர்தான். ஆனால் கோயில் என்று வரும்போது தோப்புக்கரணம் போடத்தவறுவதில்லை. சமயம் வேறு. சமய ஆய்வு வேறு. ஆதலால் வைணவ வெறுப்பாளன் என்று சிறுவட்டத்துக்குள் என்னை அடைத்துவிடாதீர்கள்.

தங்கள் சமய இலக்கியப் பணி தொடர வாழ்த்துகள்
---

குமரன் (Kumaran) said...
//கண்ணனுக்கு எண்ணற்ற கதைகள் புனையப்பட்டதால் தமிழில் இருந்து தள்ளிச் சென்றதாக தோன்றுகிறது
//

கோவி.கண்ணனின் இந்தக் கூற்றில் தொக்கி நிற்கும் இன்னொரு கருத்தைப் பற்றியும் பேச நினைக்கிறேன்.

கூடலில் 'தோமா கிறிஸ்தவர்களை'ப் பற்றி எழுதிய போது முழுமுதல் உண்மையாக ஒன்று வலியுறுத்தப்படுகிறது என்று கீழ்கண்ட வார்த்தைகளைச் சொல்லியிருந்தென்.

"உலகத்தில் இருக்கும் தீமைகளுக்கெல்லாம் காரணம் வடமொழி நூற்கள் தான்; எல்லா தீமைகளும் ஆரியர்களிடமிருந்தே வந்தன. உலகத்தில் இருக்கும் எல்லா நல்லவைகளுக்கும் காரணம் தமிழ் நூற்கள் தான்; எல்லா நல்லவைகளுக்கும் அடிப்படை திராவிடர்கள் தான். இப்படி ஒரு 'உண்மை'யும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதைப் படித்திருக்கிறேன். "

தருமி ஐயாவும் யார் எங்கே அப்படி சொன்னார்கள்; படித்துத் தெரிந்து கொள்கிறேன் என்று கேட்டார். அவர் இங்கே கோவி.கண்ணன் சொன்னதைப் போன்ற கருத்துகளைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இனி மேலாவது படித்துப் பார்க்கட்டும்.

//கண்ணனுக்கு எண்ணற்ற கதைகள் புனையப்பட்டதால் தமிழில் இருந்து தள்ளிச் சென்றதாக தோன்றுகிறது
//

கோவி.கண்ணனின் இந்தக் கூற்றினால் அவர் சொல்ல வருவன யாவை என்றால்

- கட்டுக் கதைகளுக்கும் தமிழுக்கும் வெகு தூரம்
- கட்டுக் கதைகள் யார் மீது இருக்கிறதோ அவர்களை தமிழ் தள்ளிவைக்கும்
- தொடக்கமுதலே தமிழர்கள் இக்காலத்தைப் போல் கட்டுக் கதைகளைத் தள்ளியே வந்திருக்கிறார்கள்.
- கட்டுக் கதைகள் எல்லாம் புனையப்பட்டது வடமொழியின் ஆதிக்கத்தினால்
- கட்டுக் கதைகளைப் புனைபவர்கள் எல்லோரும் வடக்கத்தவர்கள்.

இப்படியே எழுதிக் கொண்டு போகலாம். இப்படி பலவற்றை பலரும் பல இடங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏரணத்திற்கு ஏற்றது தானா என்று அவரவர்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
---

கோவி.கண்ணன் said...
// கட்டுக் கதைகள் எல்லாம் புனையப்பட்டது வடமொழியின் ஆதிக்கத்தினால்
- கட்டுக் கதைகளைப் புனைபவர்கள் எல்லோரும் வடக்கத்தவர்கள். //

நோ...நோ :)

தமிழகத்திலும், தமிழர்களும் கூட மிகுதியாகவே புனைந்தார்கள், சேக்கிழார் பெருமகனார் அதை நன்றாகச் செய்தார். அவருடைய திருவிளையாடல்கள் புகழ்பெற்றவை !
சிலையாகவே மாறியவை, மற்றவர்களின் கதைகளைவிட சேக்கிழாரின் கதைக்கு அந்த சக்தி இருந்தது. :)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தத்துங்களில் உருவ வழிபாட்டை என்ன தான் ஒட்ட வைத்தாலும் ஒட்டுகிறதா ? நூலாக எழுதி வைத்து அற்புதம் என்று சொல்லிக் கொள்ள மட்டுமே முடியும்.//

ஒட்டுகிறதே!
வள்ளுவர் உருவ வழிபாட்டாக, திருவடி என்று பேசுகிறாரே!
உருவம் இல்லாதவனுக்கு ஏது திருவடி?

குறியீடு-ன்னு சொல்லாதீங்க! குறியீடு-ன்னாலே உருவம் கொடுக்கறது தானே! அப்படி உருவம் கொடுத்து வள்ளூவரால் சூப்பரா தத்துவம் பேச முடிந்ததே! ஐயன் பக்தியா பேசினாரு?

---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@சிவத்தமிழோன் ஐயா!
வைணவ வெறுப்பாளன் என்று சிறுவட்டத்துக்குள் உங்களை அடியேன் அடைக்கவே மாட்டேன்! அப்படி அடைப்பது வைணவ-தமிழர் நெறிக்கும் புறம்பானது! அஞ்சற்க! இதோ மேலதிக விவாதங்கள்!

//கொற்றவை கூட தமிழ்க்கடவுள்தான். ஆனால் சாக்தம் தமிழ்ச் சமயமாகுமா?//

பெயர்களுக்குள் மட்டுமே அடைபட்டு நிற்கிறீர்கள்!
கொற்றவை தமிழ்க் கடவுள் தான்! அவள் வழிபாடும் தமிழ் வழிபாடு தான்!

அதுக்கு வடவர்கள் சாக்தம்-ன்னு பேரு கொடுத்து கலந்தும் விட்டதால், சக்தி வழிபாடு, தமிழர் வழிபாடு இல்லை-ன்னு ஆகாது!

மேலும் சாக்தம் என்பது சில பேரால் மட்டும் தான் கடைபிடிக்கப்படுகிற தத்துவம்! ஆனால் அம்மனை வணங்குதல் என்று வரும் போது, மக்கள் சாக்த கோட்பாடுகள் படி எல்லாம் வணங்குவதில்லை!

அப்படிப் பார்த்தால் சைவம் மட்டும் 100% தூய தமிழ்க் கோட்பாடா என்ன?
இதுக்குப் பதில் சொல்லுங்களேன்!
சைவ சித்தாந்த மூலமாகக் கருதுப்படும் திருமூலரின் திருமந்திரம் முழுக்க முழுக்க ஆரியம் இல்லாமலா இருக்கு?

எதை வைத்து, சைவம் மட்டும் முழுக்க முழுக்க தமிழர் நெறி, மற்றெல்லாம் கலந்து விட்ட நெறி என்கிறீர்கள்?

இராமாயணம், கீதை மட்டும் தான் வைணவ நூல்களில் தலையாயவை என்று சொல்கிறீர்கள்!
சைவ நூற்களில் தலையாயது எது? சொல்லுங்களேன் பார்ப்போம்!

திருமந்திரமா? எத்தனை தமிழ் நாட்டுச் சைவருக்குத் தெரியும்?
அதே போலத் தான் ஆழ்வார் அருளிச் செயல்களும்!

பிரபலமான என்ற கண்ணோட்டத்தில் மட்டும் வைத்து வைணவம் கலந்து விட்ட நெறி என்று எண்ணலாகாது!
சைவர்களுக்கு இராமேஸ்வரம் தான் பிரதான தலம்.
இராமன் வணங்கிய ஈசன் என்று அதே போல் முடிவு கட்டி, நானும் சைவம் கலந்து விட்ட நெறி எனலாமே! :)

அடுத்து கண்ணன்.
கண்ணன் குலம் வேளிர் குலம் என்றும் அகழ்வாராய்ச்சி கருத்து ஒன்று இருக்கின்றது!
கண்ணனின் ஊர் துவரைப் பதி என்றும் வழங்கலாகிறது!
கண்ணன் ஆரியன் தான் அறுதியிட்டுச் சொல்ல முடியாது! கண்ணன் கிருஷ்ணன் ஆனது தனிக் கதை!

மாயோனுக்கும் கண்ணனுக்கும் ஆன ஒற்றுமைகள் தான் அதிகம்! வேறுபாடுகள் மிகவும் குறைவு! முல்லை நிலக் கருப்பொருள் உரிப்பொருள் பார்த்தால் தெரியும்!

அடுத்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா!
முன்பே சொன்னது போல், இந்த மார்க்கம் ஒன்று மட்டுமே வைணவம் அல்ல!
திகம்பரச் சைவம், அத்வைதம் சைவம் என்றெல்லாம் சைவத்திலும் உள்ளதே! அது போல், வைணவத்தில் பலவும் இருக்கு!

ஆனால் சைவ சித்தாந்தம் எப்படித் தமிழ்ச் சார்புடையதோ,
அதே போல் ஆழ்வார்கள் நெறியான வைணவம் தமிழ்ச் சார்புடையது!

கேள்வி:
சைவ சித்தாந்தம் = சித்தாந்தம் தமிழ்ச் சொல்லா?

//புறநானூற்றில் இராமாயணத்தைப் பற்றி வரும் பகுதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

//இராமனைப் பற்றியும் கிருஷ்ணனைப் பற்றியும் இந்தோனேசியாவிலும் இன்னும் பல்வேறுபட்ட தெற்காசிய நாடுகளிலும்.... இதன்காரணமாக அவர்கள் இராமனையும் கிருஷ்ணனையும் தமது இனத்தவர் என்று வகுப்பதில்லையே//

அதே தான் நானும் கேட்கிறேன்.
முருகனைப் பற்றியும் ஜாவா, சுமத்ரா, பர்மா போன்றவற்றில் எல்லாம் கூடப் பரவி இருக்கு! அவரவர் கதைகள்/வெர்ஷன் வேறு!

அங்கே பரவியிருப்பதால், இங்கு முருகனைத் தள்ளுகிறோமா என்ன?
அதே போல் கண்ணனைத் தள்ள வேண்டிய அவசியமும் இல்லை!
கண்ணன்-நப்பின்னை தமிழர் சொத்து! மாயோனே கண்ணன்!
(அவன் கிருஷ்ணனா என்பது தனிக் கதை!)
சேயோனே முருகன்!
(அவன் ஸ்கந்தனா, Lord Kataragama-வா என்பது தனிக்கதி)

ஆக உங்களிடம் வேண்டிக் கொள்வது எல்லாம்,
சைவம் "மட்டுமே" எதுவும் கலவாத தமிழரின் தனிப் பெருஞ் சொத்து என்று கொள்ள வேண்டாம் என்பதே!
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@சிவத்தமிழோன் ஐயா
//இங்கு எனது எழுத்துகள் சிலவேளைகளில் அடியேனை திருமால் துவேசியாகக் கூட சிலரை எண்ணச் செய்திடலாம்//

நான் அப்படி எண்ணவில்லை ஐயா!
உங்கள் அடிப்படை சிந்தனை எனக்குப் புரிகிறது!

இறைமை தனி! இறைமையில் தமிழரின் வேர்கள் என்பது தனி!
I fully understand your view point!
What I am trying to say is:
இறைமையில் தமிழரின் வேர்கள், சைவம், வைணவம் இரண்டிலுமே உள்ளன!

தற்காலத்தைய பேர்களை/நிலைமையை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால், சைவம்-வைணவம் இரண்டுமே கலந்து விட்ட நெறிகள் தான்!

// ஈழத்தில் இரண்டு பெரும் திருமால் ஆலயங்கள் திருப்பதிக்கும் திருவரக்கத்துக்கும் இணையாக வைத்துப் போற்றப்படுவன. ஒன்று பொன்னாலை வரதராசாப் பெருமாள் ஆலயம். மற்றையது வல்லிபுர ஆழ்வார் ஆலயம்.//

//அடியேன் பொன்னாலை வரதராசப் பெருமாளைக் குலதெய்வமாகக் கொண்டவன்//

அருமை!
பொன்னாலைப் பெருமாளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்! மேலதிக தகவல்கள், சுட்டிகள், கிடைத்தால் எனக்கு மின்னஞ்சலில் அறியத் தாருங்களேன்! ஆழ்வார்கள் பாசுரத்தில் சில மறைமுகக் குறிப்புகள் ஈழம் பற்றி வருகிறது! அதற்கு ஒப்பிட்டுப் பார்க்க உதவியாய் இருக்கும்!

//வைணவம் பற்றி பிரசுரம் எழுதினால்கூட வந்து வாழ்த்துவேன்//

http://madhavipanthal.blogspot.com
இது அடியேனின் தனித்த வலைப்பூ! இதில் சில சமயம் வைணவக் கதைகளும், ஆழ்வார் குறிப்புகளும் வரும்! வாசித்து வாழ்த்துங்கள்! :)

//சைவம் பற்றி எழுதியபோது வாழ்த்திய அதே மனநிலைதான் இன்றும் தங்கள் மீதும் இரவிசங்கர் மீதும்..தங்கள் எழுத்து இனிக்கையில் எழுதிய விடயம் எப்படிக் கசக்கும்?//
//தங்கள் சமய இலக்கியப் பணி தொடர வாழ்த்துகள்//

புரிதலுக்கும் வாழ்த்துக்கும் ஆசிக்கும் மிக நன்றி ஐயா!
---

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன்,

இதே இடுகையில் 'கண்ணனுக்கு எண்ணற்ற கதைகள் புனையப்பட்டதால் தமிழில் இருந்து தள்ளிச் சென்றதாக தோன்றுகிறது' என்றும் 'கண்ணன் மீதான வெறுப்பு கதைகளினால் ஏற்பட்டவை' என்றும் சொன்னீர்கள்.

இரவிசங்கர் ஒரு பட்டியல் இட்டார். கண்ணகி, மணிமேகலை, முருகன் என்று தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கூறப்படுபவர்களிடம் நீங்கள் - நான் இல்லை - நீங்கள் கட்டுக்கதைகள் என்று எண்ணும் படியான கதைகள் இல்லையா? அவர்கள் மட்டும் எப்படி தமிழுக்கு நெருங்கினவர்களாக இருக்கிறார்கள்? என்றார்.

நீங்கள் கண்ணகியும் மணிமேகலையும் புனையப்பட்டவை என்றீர்கள். அப்படியா? சிலம்பை தமிழ் வரலாற்று ஆய்விற்கு எத்தனையோ தமிழறிஞர்கள் பயன்படுத்துகிறார்களே?! சிலம்பும் மணிமேகலையும் புனைவு என்றால் அதில் கூறப்பட்ட செய்திகளைக் கொண்டு வரலாறு வரையலாமா? முட்டாள்தனமில்லையா அது? தேவநேயப்பாவாணர் முதல் இராம.கி. ஐயா வரையில் நாம் மதிக்கும் பலரையும் அப்படி சொல்லிவிடலாமா? அப்படி சொல்ல இயலாதல்லவா?

கண்ணகி முன்னோர் தெய்வம் என்ற வகையில் வணங்கப்படுகிறாள் என்கிறீர்கள். அப்படி நான் படித்ததாக நினைவில்லையே. அவளைப் பத்தினி தெய்வம் என்று தானே ஈழத்திலும் தென்னாட்டிலும் வணங்குகிறார்கள். பத்தினி என்று அவள் போற்றப்படுவதற்கே மதுரையை எரித்த நிகழ்ச்சி தானே அடிப்படை. அப்படியிருக்க நீங்கள் புதுக்கதை சொல்கிறீர்கள்?

சிலம்பின் கற்பு கட்டமைப்பு பெண்களுக்கெதிரான ஒன்று என்று பகுத்தறிவாளர்களால் தாக்கப்படுகிறதா? கற்பு என்ற கட்டுப்பாட்டைப் பற்றி கருத்து சொன்ன ஒரு நடிகை தான் பகுத்தறிவாளர்களால் தாக்கப்பட்டாள்.

பெண்ணின் கற்பு என்ற அடிப்படையில் தான் கண்ணகி பத்தினித் தெய்வமாகப் போற்றப்படுகிறாள் என்பதை எந்தத் தமிழனிடம் கேட்டாலும் சொல்லுவான்; எந்தத் தமிழச்சியும் சொல்லுவாள். நீங்களோ முன்னோர் தெய்வம் என்ற வகையில் மட்டுமே வணங்கப்படுகிறாள் என்று புதுக்கதை சொல்கிறீர்கள்.

உங்களைப் பொறுத்தவரை 'கட்டுக்கதை'யான சிலம்பின் அடிப்படையில் இருக்கும் கண்ணகி மட்டும் ஏன் தமிழிலிருந்து விலக்கப்படவில்லை?

அடுத்து முருகன் 'சுப்ரமணியன்' ஆனவுடனே தான் வேல் வாங்கி சூரனை அழித்தான் என்றீர்கள். அதாவது இந்தக் கட்டுக்கதை தமிழில் இல்லை; அவன் வடமொழி வயப்பட்ட பின்னர் தான் இந்தக் கட்டுக்கதை என்றீர்கள். முருகன் 'சுப்ரமணியன்' ஆன காலகட்டம் எது? திருமுருகாற்றுப்படை, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டக் காலத்திற்கு முன்பா பின்பா? பின்பு என்றால் இந்த நூற்கள் எல்லாம் முருகன் வேலெடுத்து சூர் தடிந்ததையும் மாமரத்தைத் தடிந்ததையும் பாடுகின்றனவே? முன்பு என்றால் எந்தத் தரவின் அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள்? இந்த சங்க நூற்களுக்கு எல்லாம் முந்தைய நூலோ கல்வெட்டோ வேறு ஏதாவது தரவோ மறைவாக உங்களிடம் மட்டுமே இருக்கிறதோ? :-)

இப்படி 'தமிழிலுக்கும் கட்டுக்கதைக்கும் ரொம்ப தூரம்' என்பது போல் ஒரு 'கட்டுக்கதை'யை வரிசையாக அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தீர்கள். கடைசியில் என்னடா என்றால் சேக்கிழார் பெருமான் மிகப்பெரும் கட்டுக்கதையைப் புனைந்தார் என்று சொல்கிறீர்கள். இப்போது எதை எடுத்துக் கொள்வது? தமிழுக்கும் கட்டுக்கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கடைசியில் சொன்னதையா? கண்ணன் மட்டும் தமிழுக்கு புறம்பானதற்கு நீங்கள் சொன்ன காரணமான கட்டுக்கதைகள் சிவன், முருகன், கண்ணகி போன்றவர்களுக்கும் இருக்கிறதே; அவர்கள் ஏன் புறம்பாகவில்லை என்று உங்களைக் கேட்பதா?

முன்னரே சொன்னது போல் ஒரு புலனத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்தப் புலனத்திற்கு நகர்வதும் அதற்குப் பதில் வந்தவுடன் அடுத்தப் புலனத்திற்கு நகர்வதும் இப்படியே சுற்றி மீண்டும் முதல் புலனத்திற்கு வருவதும் என்று தான் உங்கள் பேச்சுகள் எல்லாம் பெரும்பான்மையாக இருக்கின்றன. உங்களுக்கென்று தெளிவான கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. இங்கொன்று படித்தும் அங்கொன்று படித்தும் தரவுகளின்றிப் பேசுவதிலேயே நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

தரவுகள் என்றால் என்ன என்பதிலேயே உங்களுக்குக் குழப்பம் இருக்கும் போல் இருக்கிறது. அதைப் பற்றி அடுத்த வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவோம்.
--

குமரன் (Kumaran) said...
// கோவி.கண்ணன் said...
குமரன்,

//பார்ப்பனர்கள் புலால் மறுப்பாளர்களாக ஆனது தமிழகத்திலேயே நிகழ்ந்தது என்று எண்ண இயலவில்லை. //

சைவம் என்ற சொல் சிவனிலிருந்து வந்தது என்று முன்பே குறிப்பிட்டு இருக்கிறீர்கள், நானும் எங்கோ படித்திருக்கிறேன். தென்னிந்திய பார்பனர்கள் தான் சைவம், வட இந்தியாவில் நம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட யாரும் அப்படி இல்லை. கர்நாடகாவில் வீரசைவர்கள் இருக்கிறார்கள், தமிழகத்தில் சைவர்கள் இருக்கிறார்கள் அதையெல்லாம் வைத்துத்தான் தென்னிந்திய சைவர்களும், பார்பனர்களின் இருபிரிவான அய்யர், அய்யாங்கார் பிரிவுகளும் புலால் உணவை விட்டு இருக்கிறார்கள் என்று நினைக்க முடிகிறது.

சைவம் என்கிற பிரிவே திருவள்ளுவர் காலத்தில் இருந்தது போல் எந்த சங்க இலக்கியத்திலும் சான்றுகள் இல்லை என்றே நினைக்கிறேன். அதனால் அவர் பெளத்தராகவோ, சமணராக இருப்பார் என்று ஊகம் செய்ய முடிகிறது. திருவள்ளுவரே வந்து சொன்னால் தான் உண்டு. வேளாளர்கள் அனைவருமே சைவம் கிடையாது என்பது தெரியும்.

//விதயங்களை மட்டுமே பேசி ஒத்துப்போகாதவைகளை மறந்து முழுக்க முழுக்க இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு தான் என்று நிறுவலாம்; //

இது கிட்ட தட்ட ஒருகை ஓசை போன்றது தான். முருகனுக்கு இரத்தம் கலந்த சோறு வைத்தால் அப்பறம் அபச்சாரம் செய்வதாகச் சொல்லிவிடுவார்கள், ஆக ஒத்துப் போவது என்பது அவர்கள் சொல்வது மட்டுமே என்றுதானே இருக்கும் :) அட்லீஸ்ட் வள்ளிக்காவது அதை வைக்கிறோம் என்றாலாவது ஒப்புக்கொள்வார்களா ?
வட இந்திய முருகனுக்கு வள்ளி இருக்கிறதா என்பதே ஆராய்ச்சிக் குறிய ஒன்று. :)

//

சைவம் என்ற சொல்லை புலால் மறுத்தவர்கள், சிவனை வழிபடும் சமயத்தினர் என்று இரு பிரிவினருக்குமே புழங்கும் வழக்கம் இருக்கிறது. நீங்கள் ஒரு இடத்தில் சிவனை வழிபடும் சமயத்தினர் என்ற பொருளில் சொல்கிறீர்கள்; இன்னொரு இடத்தில் புலால் மறுத்தவர்கள் என்ற பொருளில் சொல்கிறீர்கள். இந்த பின்னூட்டத்தில் எங்கே எந்தப் பொருளைக் கொள்கிறீர்கள் என்று புரியாத படி எழுதியிருக்கிறீர்கள்.

தென்னிந்திய பார்ப்பனர்கள் தான் சைவம்; வட இந்தியாவில் வாஜ்பாய் உட்பட யாரும் சைவம் இல்லை - இங்கே ஊன் மறுத்தவர்கள் என்ற பொருளில் சொல்கிறீர்களா? வட இந்தியாவில் ஊன் மறுத்த பார்ப்பனர்களை நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே 'சங்க்வாலா' என்ற உணவகம் இருக்கிறது. நிர்வாகிகள் ஊன் உண்ணா வட இந்திய பார்ப்பனர்கள் தான். இன்னும் வடக்கே சென்று பார்த்தால் ஊன் உண்ணாத பார்ப்பனர்களையும், பார்ப்பனர் அல்லாதவர்களையும் பார்க்கலாம்.

இங்கே சைவம் என்றதை சிவ சமயத்தினர் என்ற பொருள் கொண்டால் வாஜ்பாய் சிவ சமயத்தினராக இல்லாதிருக்கலாம். ஆனால் சிவ சமயத்தினர் லட்சக்கணக்கானோர் வட இந்தியாவில் இருக்கிறார். கருநாடகத்தின் வீர சைவம் போல் காஷ்மீரத்திலும் ஒரு வீர சைவம் உண்டு.

கருநாடகத்தில் இருக்கும் வீர சைவம் என்பது சமயப் பிரிவு; உணவுப் பிரிவு இல்லை.

சைவம் என்ற பிரிவு திருவள்ளுவர் காலத்தில் இருந்தது என்று சங்க இலக்கிய சான்றுகள் இல்லை என்றீர்கள் - இந்த இடத்தில் சைவம் என்பதை ஊன் மறுத்தவர் என்று பொருள் கொண்டால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சிவ சமயம் என்று பொருள் கொண்டால் மறுக்கிறேன் - சங்க இலக்கியத்தில் சிவ வழிபாட்டைப் பற்றி நிறைய சான்றுகள் உண்டு.

சைவம் என்ற பிரிவு இருந்ததற்கு சங்க இலக்கிய சான்றுகள் இல்லாததால் திருவள்ளுவர் சமண பௌத்தராக இருக்கலாம் என்றீர்கள். இங்கே சைவம் என்ற சொல்லை ஊன் மறுத்தவர் என்று பொருள் கொண்டால் ஊன் மறுத்தவர்கள் சமண பௌத்தர்கள் மட்டுமே என்று நீங்கள் சொல்லவருவது போல் தோன்றுகிறது. ஊன் மறுத்தவர்கள் சமண பௌத்தர்கள் மட்டுமே என்று எந்த சங்க இலக்கிய சான்று உங்களுக்குக் கிடைத்தது? ஊன் மறுத்தவர்கள் சைவ சமயிகளில் இல்லை என்றும் எந்த சங்க இலக்கிய சான்று உங்களுக்குக் கிடைத்தது? இந்த வரியில் சைவத்திற்கு இருக்கும் 'ஊன் மறுத்தவர்' என்ற பொருளை முதல் பாகத்தில் கொண்டுவிட்டு அடுத்த பாகத்தில் சமணம், பௌத்தம் என்ற சமயங்களைச் சொல்லித் தெளிவாகக் குழப்புகிறீர்கள்.

//வட இந்திய முருகனுக்கு வள்ளி இருக்கிறதா என்பதே ஆராய்ச்சிக் குறிய ஒன்று. :)//

இந்த குறும்பான கேள்விக்கு இரவிசங்கர் பதில் சொல்லியிருக்கிறார். கந்த புராணத்தில் இருக்கும் சுலோகத்தைக் காட்டி. அதற்கு நீங்கள் பதில் சொல்லும் போது கந்த புராணம் தென்னகத்தில் எழுதப்பட்டது; அதனைத் தென்னகம் தவிர்த்து வேறெங்கும் அறிந்திலர் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இரவிசங்கர் காட்டியது வடமொழி சுலோகத்தை - அது வரும் புராணம் குப்தர் காலத்தில் நூல் வடிவில் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில். வட இந்தியா மட்டுமின்றி எங்கெங்கு இந்து மதத்தின் புராணங்களைப் பற்றி பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்கந்த புராணமும் பேசப்படுகிறது.

தென்னகத்தில் எழுதப்பட்டது கந்த புராணம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதியது. அது தமிழ்ச் செய்யுட்களால் ஆனது. இரவிசங்கர் காட்டியது இந்த கந்தபுராணத்தில் வரும் செய்யுளை இல்லை. வட இந்தியாவில் எழுதப்பட்ட அங்கே எல்லோருக்கும் தெரிந்த பதினெண் புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் வரும் சுலோகம்.

இனி மேலாவது எங்கும் சென்று வட இந்தியர்களுக்கு வள்ளி தெரியாது; வடமொழி நூற்களில் வள்ளி கிடையாது என்று சொல்லாமல் இருப்பீர்களா?
---

குமரன் (Kumaran) said...
//ஆழ்வார்களின் (மாறன்-நம்மாழ்வார்) அருளிச் செயல் ஒன்றினாலேயே வைணவம் நிற்கும்!
திருமூலர் திருமந்திரம் ஒன்றினாலேயே சைவ சித்தாந்தமும் நிற்கும்!//

மாறன் சடகோபன் வேளாளர் குல திலகம் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். வேளாளர்களில் வைணவர்களும் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். திருமூல நாயனார் சித்த புருடர்; ஆனால் திருவுடலோ தேகமோ இடையனுடைய உடல்.

இன்றைக்கு வேளாளர்களில் பெரும்பாலோனோர் சைவராக இருக்கிறார்கள்; கோனார்களில் பெரும்பாலானோர் வைணவராக இருக்கின்றனர். :-)
---


கோவி.கண்ணன் said...
//குமரன் (Kumaran) said...

சைவம் என்ற சொல்லை புலால் மறுத்தவர்கள், சிவனை வழிபடும் சமயத்தினர் என்று இரு பிரிவினருக்குமே புழங்கும் வழக்கம் இருக்கிறது. நீங்கள் ஒரு இடத்தில் சிவனை வழிபடும் சமயத்தினர் என்ற பொருளில் சொல்கிறீர்கள்; இன்னொரு இடத்தில் புலால் மறுத்தவர்கள் என்ற பொருளில் சொல்கிறீர்கள். இந்த பின்னூட்டத்தில் எங்கே எந்தப் பொருளைக் கொள்கிறீர்கள் என்று புரியாத படி எழுதியிருக்கிறீர்கள்.

தென்னிந்திய பார்ப்பனர்கள் தான் சைவம்; வட இந்தியாவில் வாஜ்பாய் உட்பட யாரும் சைவம் இல்லை - இங்கே ஊன் மறுத்தவர்கள் என்ற பொருளில் சொல்கிறீர்களா? வட இந்தியாவில் ஊன் மறுத்த பார்ப்பனர்களை நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே 'சங்க்வாலா' என்ற உணவகம் இருக்கிறது. நிர்வாகிகள் ஊன் உண்ணா வட இந்திய பார்ப்பனர்கள் தான். இன்னும் வடக்கே சென்று பார்த்தால் ஊன் உண்ணாத பார்ப்பனர்களையும், பார்ப்பனர் அல்லாதவர்களையும் பார்க்கலாம். இங்கே சைவம் என்றதை சிவ சமயத்தினர் என்ற பொருள் கொண்டால் வாஜ்பாய் சிவ சமயத்தினராக இல்லாதிருக்கலாம். ஆனால் சிவ சமயத்தினர் லட்சக்கணக்கானோர் வட இந்தியாவில் இருக்கிறார். கருநாடகத்தின் வீர சைவம் போல் காஷ்மீரத்திலும் ஒரு வீர சைவம் உண்டு.
//

பார்பனர்கள் எப்பொழுதிலிருந்து சைவமாக இருக்கிறார்கள் என்று தாங்கள் சொன்னால் அறிந்து கொள்கிறேன். நான் படித்த பவுத்த வரலாற்று நூல்களில் (மயிலை சீனி வெங்கடசாமி) பார்பனர்கள் சைவமாக இருந்தற்கு குறிப்புகள் கிடையாது. பவுத்தம் கொல்லாமையை வலியுறுத்தி இருந்தாலும், 'உங்கள் உணவுக்காக கொல்வதை செய்யாதீர்கள் 'என்றே சொன்னார்கள், புத்தரும் கூட பன்றி இறைச்சியைத் தான் கடைசியாக உண்டார். கொல்லாமை மற்றும் சூனியவாதம் இவற்றை பவுத்தம் வழியுறுத்தியது, அதனையே வேறு பெயரில் மாற்றி இந்திய சமயங்கள் உள்வாங்கிக் கொண்டதால் இந்தியர்களுக்கு பவுத்தம் தேவையற்றதாகிவிட்டது. பார்பனர்களோ, வீர சைவர்களோ புலால் மறுப்பில் சென்றதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? வேதவழிபாடு வழி வேள்வி செய்யும் பார்பனர்கள் இன்றும் அதில் பன்றியை பழியிட்டு உண்ணும் பழக்கம் கர்நாடக மாநிலத்தில் இருந்தே வருகிறது. கிட்டதட்ட இஸ்லாமியர்கள் வெட்டுவதற்கு முன்பு வேண்டிக் கொள்வது போன்றே.

வாஜ்பாய் சிவ சமயத்தினராக இல்லாதிருந்தாலும் பார்பனர் தானே, சிவ சைவமாக இல்லாவிட்டால் விஷ்னு சமயத்தினராக இருக்க வேண்டுமே, பார்பனர்களுடையது உணவு பழக்கம் புலால் மறுத்தல் என்றால் எது எந்த வகைப் பார்பனராக இருந்தாலும் அப்படித்தானே, வாஜ்பாய் சிவ சமயத்தினராக இல்லாதிருப்பதற்கும் அதற்கும் என்ன தொடர்பு ?

//கருநாடகத்தில் இருக்கும் வீர சைவம் என்பது சமயப் பிரிவு; உணவுப் பிரிவு இல்லை.//

கர்நாடக வீர சைவத்தினரும், தமிழக சைவ பிள்ளைமார்களும் ஒரே பிரிவினர்தான் பலர் ஊன் உண்ணுபவர்களே. சைவம் என்றால் இன்றைய தேதியில் வழங்கப்படும் பொருள் ஊன் உண்ணாதவர்கள் என்று உங்களுக்கே தெரியும். வீர சைவம் என்பது சாதி பிரிவு, உணவு பிரிவு அல்ல என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

//சைவம் என்ற பிரிவு திருவள்ளுவர் காலத்தில் இருந்தது என்று சங்க இலக்கிய சான்றுகள் இல்லை என்றீர்கள் - இந்த இடத்தில் சைவம் என்பதை ஊன் மறுத்தவர் என்று பொருள் கொண்டால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சிவ சமயம் என்று பொருள் கொண்டால் மறுக்கிறேன் - சங்க இலக்கியத்தில் சிவ வழிபாட்டைப் பற்றி நிறைய சான்றுகள் உண்டு. //

ஊன் உண்ணாதிருக்கும் சாதிப் பிரிவு இல்லை என்று தான் சொன்னேன். அதைத்தான் சைவம் என்று குறிப்பிட்டேன். சிவவழிபாடு இடையில் தோன்றியது, சங்கலாத்திற்கு பிற்பட்டது என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை.


//சைவம் என்ற பிரிவு இருந்ததற்கு சங்க இலக்கிய சான்றுகள் இல்லாததால் திருவள்ளுவர் சமண பௌத்தராக இருக்கலாம் என்றீர்கள். இங்கே சைவம் என்ற சொல்லை ஊன் மறுத்தவர் என்று பொருள் கொண்டால் ஊன் மறுத்தவர்கள் சமண பௌத்தர்கள் மட்டுமே என்று நீங்கள் சொல்லவருவது போல் தோன்றுகிறது.

ஊன் மறுத்தவர்கள் சமண பௌத்தர்கள் மட்டுமே என்று எந்த சங்க இலக்கிய சான்று உங்களுக்குக் கிடைத்தது? ஊன் மறுத்தவர்கள் சைவ சமயிகளில் இல்லை என்றும் எந்த சங்க இலக்கிய சான்று உங்களுக்குக் கிடைத்தது? இந்த வரியில் சைவத்திற்கு இருக்கும் 'ஊன் மறுத்தவர்' என்ற பொருளை முதல் பாகத்தில் கொண்டுவிட்டு அடுத்த பாகத்தில் சமணம், பௌத்தம் என்ற சமயங்களைச் சொல்லித் தெளிவாகக் குழப்புகிறீர்கள்.
//

திருவள்ளுவர் சமணாராக / பவுத்தராக இருந்தால் என்ன தவறு ? ஆதாரம் காட்டி சொன்னால் திருவள்ளுவரின் திருக்குறளை மறுத்துவிடப் போகிறீர்களா ? அப்படி இருக்குமோ என்ற நினைப்புக் கூட உங்களுக்கு கசப்பாக இருக்குமோ என்றே உங்கள் எழுத்துக்கள் நினைக்கவைக்கிறது, எனது நினைப்புக் கூட தவறாக இருக்கலாம், தவறென்றால் மன்னியுங்கள். எல்லாம் ஊகம் தான். நீங்கள் திருவள்ளுவர் இந்து என்று சொன்னாலும் எந்தப் பிரிவு என்று கேட்டால் உங்களால் ஒன்றுமே சொல்ல முடியாது அல்லவா ? சமண பவுத்தர்களின் முதன்மை கொள்கையே ஊன் மறுத்தல் தான். திருவள்ளுவர்காலத்தில் அதை வலியுறுத்தலாக வைக்க வேண்டிய அவசியம் சமணம் / பவுத்தம் தவிர்த்து வேறு சமயத்தினருக்கு தேவை ஏற்பட்டு இருக்குமா என்பதே ஆராய்ச்சிக்குரியது. திருவள்ளுவர் வைத்தது போலவே அப்போதைய சங்க இலக்கியங்களில் அந்த வலியுறுத்தல்கள் இருந்திருந்தால் நீங்கள் சொல்வது போல் சமணர் பவுத்தர் தவிர்த்து மற்றோரும் ஊன் மறுத்தலை வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்ல ஏதுவாக இருக்கும்.


//இரவிசங்கர் காட்டியது வடமொழி சுலோகத்தை - அது வரும் புராணம் குப்தர் காலத்தில் நூல் வடிவில் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில். வட இந்தியா மட்டுமின்றி எங்கெங்கு இந்து மதத்தின் புராணங்களைப் பற்றி பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்கந்த புராணமும் பேசப்படுகிறது.

தென்னகத்தில் எழுதப்பட்டது கந்த புராணம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதியது. அது தமிழ்ச் செய்யுட்களால் ஆனது. இரவிசங்கர் காட்டியது இந்த கந்தபுராணத்தில் வரும் செய்யுளை இல்லை. வட இந்தியாவில் எழுதப்பட்ட அங்கே எல்லோருக்கும் தெரிந்த பதினெண் புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் வரும் சுலோகம்.
//

இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது, இந்திய சமயங்களின் பொதுப்பெயராக வெள்ளைக்காரன் வைத்தப் பெயர் அவ்வளவுதான். இந்துமதத்தின் புராணங்கள் என்னும் போது அவை எந்த சமயத்தின் புராணங்கள் என்று பார்பதும் தேவையான ஒன்று (பேசும் போதே வேறு ஒன்றை பேசுகிறேன் என்பது இவைதானே) நீங்கள் இந்து இந்து என்று வலிந்து குறிப்பிடுவதால், இதில் சைவம், வைணவம், வடகலை தென்கலை எல்லாம் எங்கிருந்து வந்தது என்றே எனக்கு இப்ப குழப்பமாகப் போய்விட்டது. ஆகவே இந்து மதத்தில் (புராணங்களைப் பற்றி பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்கந்த புராணமும் பேசப்படுகிறது) என்று பொதுவில் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டீர்கள் என்றால் வைணவர்கள் பேசினார்களா ? என்று நான் கேட்கவேண்டி இருக்கும் :) குறிஞ்சி சேயோனுக்கும் வடநாட்டு சுப்ரமணியனுக்கும் போடப் பட்ட முடிச்சிதான் கந்தபுராணம் என்று நினைக்க வைத்துவீட்டீர்கள்

//இனி மேலாவது எங்கும் சென்று வட இந்தியர்களுக்கு வள்ளி தெரியாது; வடமொழி நூற்களில் வள்ளி கிடையாது என்று சொல்லாமல் இருப்பீர்களா?//

வட இந்தியாவைப் பொறுத்த அளவில் சுப்ரமணியன் பிரம்மச்சாரி, தென்னிந்தியாவில் பிள்ளையார் பிரம்மச்சாரி என்ற கூற்றெல்லாம் பொய்யா ? :)
---

கோவி.கண்ணன் said...
//
இதே இடுகையில் 'கண்ணனுக்கு எண்ணற்ற கதைகள் புனையப்பட்டதால் தமிழில் இருந்து தள்ளிச் சென்றதாக தோன்றுகிறது' என்றும் 'கண்ணன் மீதான வெறுப்பு கதைகளினால் ஏற்பட்டவை' என்றும் சொன்னீர்கள்.

இப்படி 'தமிழிலுக்கும் கட்டுக்கதைக்கும் ரொம்ப தூரம்' என்பது போல் ஒரு 'கட்டுக்கதை'யை வரிசையாக அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தீர்கள். கடைசியில் என்னடா என்றால் சேக்கிழார் பெருமான் மிகப்பெரும் கட்டுக்கதையைப் புனைந்தார் என்று சொல்கிறீர்கள். இப்போது எதை எடுத்துக் கொள்வது? தமிழுக்கும் கட்டுக்கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கடைசியில் சொன்னதையா? கண்ணன் மட்டும் தமிழுக்கு புறம்பானதற்கு நீங்கள் சொன்ன காரணமான கட்டுக்கதைகள் சிவன், முருகன், கண்ணகி போன்றவர்களுக்கும் இருக்கிறதே; அவர்கள் ஏன் புறம்பாகவில்லை என்று உங்களைக் கேட்பதா?
//

கண்ணன் மீதான வெறுப்பு ஏன் என்ற கேள்வியைக் கேட்டது கேஆர்எஸ், நான் அவ்வாறு கேட்கவில்லை. அதற்கான காரணம் திருஞான சம்பந்தர் காலத்த சைவம் மற்றும் தமிழ் மறுமலர்ச்சி அல்லது கண்ணன் பெயரில் புனையப்பட்ட எண்ணற்ற ஒவ்வாத கதைகளாக இருக்கலாம் என்ற காரணத்தை ஊகமாகச் சொன்னேன். வேறு காரணம் இருந்தால் சொல்லுங்கள் அறிந்து கொள்கிறேன். கண்ணன் மீது தமிழர்களுக்கு வெறுப்பு, தமிழ் கடவுள் அல்ல என்கிறார்கள் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. அப்படி சொல்கிறவர்கள் தான் அந்த காரணத்தைச் சொல்ல வேண்டும். நான் சொன்னது ஊகமாகவே இருந்துவிட்டுப் போகட்டம், விவாதம் அதில் எனது கருத்து மட்டுமே, எந்த வலியுறுத்தலும் இல்லை.

//இரவிசங்கர் ஒரு பட்டியல் இட்டார். கண்ணகி, மணிமேகலை, முருகன் என்று தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கூறப்படுபவர்களிடம் நீங்கள் - நான் இல்லை - நீங்கள் கட்டுக்கதைகள் என்று எண்ணும் படியான கதைகள் இல்லையா? அவர்கள் மட்டும் எப்படி தமிழுக்கு நெருங்கினவர்களாக இருக்கிறார்கள்? என்றார். //

அவை கட்டுகதையே ஆனாலும் அவற்றைப் பற்றிய இலக்கியங்கள் தமிழ் நிலம், தமிழர் பழக்கம் சார்ந்தே அமைக்கப்பட்டு இருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறது (தமிழர் பழக்கம் என்றால் சிலப்பதிகாரத்தில் மாமுது பார்பன் எங்கிருந்து வந்தான் என்று கேட்காதீர்கள், அது வேறு விடயம்) ஆனால் இவற்றை நெருக்கமானது என்று கருதுவது உண்மையா இல்லையா ?

//நீங்கள் கண்ணகியும் மணிமேகலையும் புனையப்பட்டவை என்றீர்கள். அப்படியா? சிலம்பை தமிழ் வரலாற்று ஆய்விற்கு எத்தனையோ தமிழறிஞர்கள் பயன்படுத்துகிறார்களே?! சிலம்பும் மணிமேகலையும் புனைவு என்றால் அதில் கூறப்பட்ட செய்திகளைக் கொண்டு வரலாறு வரையலாமா? முட்டாள்தனமில்லையா அது? தேவநேயப்பாவாணர் முதல் இராம.கி. ஐயா வரையில் நாம் மதிக்கும் பலரையும் அப்படி சொல்லிவிடலாமா? அப்படி சொல்ல இயலாதல்லவா? //

கற்பின் தனலால் மதுரை எரிந்ததாகச் சொல்லப்படுவது கட்டுக்கதை இன்றி வேறென்ன ? புனைவுக்கான ,மிகைப்படுத்தல் என்றே புரிந்து கொள்ளப்படவேண்டும்.

//கண்ணகி முன்னோர் தெய்வம் என்ற வகையில் வணங்கப்படுகிறாள் என்கிறீர்கள். அப்படி நான் படித்ததாக நினைவில்லையே. அவளைப் பத்தினி தெய்வம் என்று தானே ஈழத்திலும் தென்னாட்டிலும் வணங்குகிறார்கள். பத்தினி என்று அவள் போற்றப்படுவதற்கே மதுரையை எரித்த நிகழ்ச்சி தானே அடிப்படை. அப்படியிருக்க நீங்கள் புதுக்கதை சொல்கிறீர்கள்? //

கண்ணகி மீது வெறுப்பு வருவதற்கும் முட்டாள் தனமாக பலர் உண்மையிலேயே மதுரையை எரித்ததாக நம்புவதால் அப்படி நினைக்கிறார்களோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது. தற்பொழுது அறிவாளிகள் கேட்பது இல்லையா ? ஒரு மன்னன் செய்த தவறுக்கு மதுரைக்கே தண்டனை கொடுமையான ஒன்று அல்லவா ? நான் புதுக்கதை எதையும் சொல்லவில்லை. கண்ணகி மதுரையை எரித்தாகச் சொல்வது அனுமான் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து பறந்தாகச் சொல்வதெல்லாம் இலக்கிய மிகைப்படுத்தல் தற்பொழுது பைடர் மேன்கள் கேரக்கர் இன்றைய விஞ்ஞான உலகிலேயே விரும்பிப் பார்க்கப்படும் போது இலக்கியதில் அற்புதங்கள், சாகசங்கள் மிகையாக சேர்த்திருப்பதை நான் தவறு என்றும் சொல்லவில்லை. ஆனால் அவை உண்மை அல்ல என்றே நம்புகிறேன்.

//சிலம்பின் கற்பு கட்டமைப்பு பெண்களுக்கெதிரான ஒன்று என்று பகுத்தறிவாளர்களால் தாக்கப்படுகிறதா? கற்பு என்ற கட்டுப்பாட்டைப் பற்றி கருத்து சொன்ன ஒரு நடிகை தான் பகுத்தறிவாளர்களால் தாக்கப்பட்டாள்.

பெண்ணின் கற்பு என்ற அடிப்படையில் தான் கண்ணகி பத்தினித் தெய்வமாகப் போற்றப்படுகிறாள் என்பதை எந்தத் தமிழனிடம் கேட்டாலும் சொல்லுவான்; எந்தத் தமிழச்சியும் சொல்லுவாள். நீங்களோ முன்னோர் தெய்வம் என்ற வகையில் மட்டுமே வணங்கப்படுகிறாள் என்று புதுக்கதை சொல்கிறீர்கள். //

குஷ்பு பேசியதே வேறு, பிற ஆண்களிடம் விரும்பத்தின் பேரில் பெண்கள் உணர்ச்சி வசப்படும் போது, கர்பம் தரிக்காமல் இருக்க பாதுகாப்பாக இருங்கள் என்றே சொன்னார். பெண் கெட்டுப் போனால் சமூகமே தூற்றும் என்பது உண்மைதானே. குஷ்புவின் கருத்தைக் கேட்ட பெற்றோர்களுக்கு தங்கள் வயது வந்த மகள்களுக்கான சரியான அறிவுரை என்று மகிழ்ச்சி இருந்திருக்குமா ? ஒரு நடிகையாக அவர் பல ஆண்களுடன் பழக வேண்டி இருக்கும், அவர் பொருட்டு செய்து கொண்டதையெல்லாம் சமுக மாற்றத்திற்கான கருத்தாகச் சொல்ல முடியுமா ? கணவன் நான்கு பெண்களிடம் சென்று வந்தால் மனைவியும் அவனை பழிவாங்க நான்கு ஆண்களிடம் பாதுகாப்பாக சென்றுவரவேண்டும் என்பதே குஷ்பு செய்தியின் சாரம். பெரியார் சொன்னதே வேறு கற்பு என்ற இல்லாத ஒன்றை பெண்கள் மீது ஏன் திணித்து அவளை அவமானப்படுத்துகிறார்கள், பாலியல் வன்கொடுமையை ஏன் கற்பழிப்பு என்கிறீர்கள், என்று கேட்டார். நளாயினி நல்லத்தங்காள் போன்ற வரிசையில் தான் கண்ணகியும் முன்னோர் தெய்வமாகவும், கற்பு என்ற சொல்லின் விபரீதம் தெரியாமல் கற்புக் கரசி என்றும் சொன்னார்கள்.

//உங்களைப் பொறுத்தவரை 'கட்டுக்கதை'யான சிலம்பின் அடிப்படையில் இருக்கும் கண்ணகி மட்டும் ஏன் தமிழிலிருந்து விலக்கப்படவில்லை?//

அது இலக்கியம் என்பது தவிர்த்தும், கடற்கரையில் சிலையாக இருப்பது தவிர்த்தும், சில ஊர்களில் கண்ணகிக்கு பொங்கல் இடுவதைத் தவிர்த்தும் எந்த தமிழர்களின் இல்லத்திலாவது கண்ணகியை வணங்குவது போற்றுவதும் இருக்கிறதா ?

//அடுத்து முருகன் 'சுப்ரமணியன்' ஆனவுடனே தான் வேல் வாங்கி சூரனை அழித்தான் என்றீர்கள். அதாவது இந்தக் கட்டுக்கதை தமிழில் இல்லை; அவன் வடமொழி வயப்பட்ட பின்னர் தான் இந்தக் கட்டுக்கதை என்றீர்கள். முருகன் 'சுப்ரமணியன்' ஆன காலகட்டம் எது? திருமுருகாற்றுப்படை, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்டக் காலத்திற்கு முன்பா பின்பா? பின்பு என்றால் இந்த நூற்கள் எல்லாம் முருகன் வேலெடுத்து சூர் தடிந்ததையும் மாமரத்தைத் தடிந்ததையும் பாடுகின்றனவே? முன்பு என்றால் எந்தத் தரவின் அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள்? இந்த சங்க நூற்களுக்கு எல்லாம் முந்தைய நூலோ கல்வெட்டோ வேறு ஏதாவது தரவோ மறைவாக உங்களிடம் மட்டுமே இருக்கிறதோ? :-) //

இவை காலம் கடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? உருவ வழிபாடு எல்லாமே காலத்தில் பரிணாமம் பெற்றது தானே. இதற்கு சான்றுகள் வேறு வேண்டுமோ ? சங்க இலக்கியத்தில் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் நான் முடிவு செய்து கொள்வது இல்லை.
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கண்ணன் மீதான வெறுப்பு ஏன் என்ற கேள்வியைக் கேட்டது கேஆர்எஸ், நான் அவ்வாறு கேட்கவில்லை//

நான் கண்ணனை வெறுத்தார்கள்-ன்னு சொல்லவே இல்லையே!
//அங்க கொண்டாடறாங்க என்கிற காரணத்துக்காக, இங்க உங்க குழந்தையை நீங்களே தள்ளி வைப்பீங்களா? அது தமிழ்க் குழந்தை, தமிழ்க் கடவுள் இல்லைன்னு ஆயிருமா?// என்று தானே கேட்டேன்!

//கணவன் நான்கு பெண்களிடம் சென்று வந்தால் மனைவியும் அவனை பழிவாங்க நான்கு ஆண்களிடம் பாதுகாப்பாக சென்றுவரவேண்டும் என்பதே குஷ்பு செய்தியின் சாரம். //

அப்படி நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள், அல்லது திரித்து விட்டீர்கள்! அவர் சொன்னது பாதுகாப்பு தேவை என்பது மட்டுமே!

அப்படிப் "பழிவாங்க" என்று அவர் சொல்லால் சொன்னாரா?
* அவர் சொற்களின் சாரம் இது தான் என்று முடிவு கட்ட நீங்க யார்?
* சமய இலக்கியத்திலும் இதே தானே பண்ணுறீங்க!

ஆசிரியர் சொல்ல வருவதை விடுத்து, "இது தான் சாரம்" என்று நீங்களா முடிவு கட்டுறீங்க!
கருத்து எதேச்சாதிகாரம் என்பது இது தான்!

ஒரு நல்ல பகுத்தறிவாளர் இதைச் செய்ய மாட்டார்! ஐயா பெரியார் இதைச் செய்யவே மாட்டார்! ஏன்னா அவருக்கு ஆசை கிடையாது!

அந்தச் சேக்கிழாரே வேண்டவே வேண்டாம்-னு சொல்லுவாரே தவிர, படைப்பிலக்கிய கர்தாக்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாகச் சொல்லி திரிக்கும் பழக்கம் ஐயாவுக்குக் கிடையவே கிடையாது!

பிழைப்பு நடத்த வந்த பகுத்தறிவாளர்கள் தான் கம்ப ரசம், சேக்கிழார் சாம்பார், அருணகிரி ஆப்பம், சம்பந்தர் மோரு-ன்னு ஊறுகாய் போட்டது! :)))
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சில ஊர்களில் கண்ணகிக்கு பொங்கல் இடுவதைத் தவிர்த்தும் எந்த தமிழர்களின் இல்லத்திலாவது கண்ணகியை வணங்குவது போற்றுவதும் இருக்கிறதா ?//

கண்ணாத்தா தெரியும்-ல?
கிராமத்துக்கு வந்தீங்க-ன்னா தெரியும்! ஊருக்கு ஊரு திரோபதி அம்மன் இருக்கா! ஊருக்கு ஊரு கண்ணாத்தா இருக்கா! அவ தான் சிலப்பதிகாரக் கண்ணகி-ன்னு தெரியாம, மருத எரிச்ச மகராசி-ன்னு கும்பிடுவது என்ன? பொங்க வைப்பது என்ன? வட மாவட்டங்கள்-ல ஒரு ரவுண்டு வாங்க! குறிப்பா வீரப்பன் சந்தனக் காட்டுக்குள்ள! :))

--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//திருவள்ளுவர் சமணாராக / பவுத்தராக இருந்தால் என்ன தவறு?//

தவறே இல்லை கோவி அண்ணா!

//ஆதாரம் காட்டி சொன்னால் திருவள்ளுவரின் திருக்குறளை மறுத்துவிடப் போகிறீர்களா ?//

""ஆதாரம் காட்டி"" - காட்டுங்கள் என்று தான் வேண்டுகோள். காட்டாமலேயே, காட்டி காட்டி என்பதில் ஒரு பயனும் இல்லை! தரம் வாய்ந்த ஆதாரங்கள் (வெறும் தகவற் குப்பைகள் அல்ல) தான் பயனுள்ள கருத்துரையாடலுக்கு வழி வகுக்கும்!

//திருக்குறளை மறுத்துவிடப் போகிறீர்களா ?//

நூலாசிரியரை வைத்து நூலை எடை போடுவது பக்தியும் அன்று! பகுத்தறிவும் அன்று! நூற் கருத்துக்கள் மட்டுமே முக்கியம்!

ஓ அவனா? அவன் பதிவு வைணவம்...ஓ இவனா? இவன் பதிவு சமணம் என்றெல்லாம் எனக்கு யோசிக்கக் கூட வராது!
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது, இந்திய சமயங்களின் பொதுப்பெயராக வெள்ளைக்காரன் வைத்தப் பெயர் அவ்வளவுதான்//

குமரன் உங்களிடம் கேட்ட கேள்வி என்ன?
தமிழில் வள்ளி இருக்காள்! ஆனா அவளை எல்லாம் வடமொழியில் சொல்லறாங்களா-ன்னு கேட்டீங்க!

அதுக்கு சொல்லப்படறா-ன்னு சுலோகம் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டது! அதுக்கு ஒன்னுமே சொல்லலை நீங்க! தொபுக்கடீர்-ன்னு வெள்ளைக்காரன் வைத்தப் பெயர் தான் இந்து-ன்னு தாவி குதிச்சிட்டீங்க!

இப்ப புரியுதா என்ன பண்றீங்க-ன்னு? :))


//இந்து மதத்தில் (புராணங்களைப் பற்றி பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்கந்த புராணமும் பேசப்படுகிறது) என்று பொதுவில் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டீர்கள் என்றால் வைணவர்கள் பேசினார்களா ? என்று நான் கேட்கவேண்டி இருக்கும் :)//

வியாசர் தொகுத்த பதினெட்டு புராணங்களில் ஸ்கந்த புராணம் ஒன்று. பதினெட்டில் மிகப் பெரிதும், முக்கியமானதும் கூட! அதை தான் குமரன் குறிப்பிட்டார். அனைத்து தரப்பினரும் ஸ்கந்த புராணத்தில் இருந்து மேற்கோள் காட்டுவார்கள்!

வைணவர்கள் பேசினார்களா? என்று நீங்கள் கேட்டால்...
பேசினார்கள் என்பதற்கு ஆதாரம் எடுத்து வைப்பேன்! ஸ்கந்த புராணத்தில் நாராயணன் பற்றி வரும் குறிப்புகள், பாகவத புராணம்/விஷ்ணு புராணம் இவற்றில் ஸ்கந்தனைப் பற்றி வரும் குறிப்புகள்-ன்னு வைப்பேன்!

ஆனால் இங்கு கேட்கப்பட்டது என்ன?
வள்ளியைத் தென்னவர் மட்டும் அறிகிறார்கள்! வடமொழிப் புராணங்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று சொன்னீர்கள்!

அப்படி அல்ல என்று ஆதாரம் காட்டப்பட்டது!
இப்போது உங்க நிலை என்ன?
அதைச் சொல்லிட்டு, அதுக்கு மேலப் பேசுங்க! இப்படி டபார் டபார்-ன்னு தாவாதீங்க! ஆஞ்சநேயர் தான் உங்களுக்குப் புடிச்ச தெய்வமா? இந்தத் தாவு தாவறீங்க? :))
---

கோவி.கண்ணன் said...
//உங்களைப் போல ஒருவர் கிளப்பி விட்ட பொய்! :)
ஆதாரமே இல்லாமல்,
வெவ்வேறு புலனத்தில் பேசி,
தான் சொன்னதையும் நிரூபிக்காது,
எதிர் வாதங்களையும் மறுக்காது,
ஆனால் எதிர் வாதங்களையும் மறந்து விட்டு,
சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை!
அப்படி விளைந்த பதிவுகள் அவை அனைத்தும்! :))

ஆனால் இங்கு கேட்கப்பட்டது என்ன?
வள்ளியைத் தென்னவர் மட்டும் அறிகிறார்கள்! வடமொழிப் புராணங்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று சொன்னீர்கள்!
//

அப்படியா ?

ஸ்கந்தனுக்கு வடநாட்டில் கிருஷ்ணனுக்கு இருப்பது போல் அறியப்பட்ட கோவில்கள் இருந்தால் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன்.
---

கோவி.கண்ணன் said...
//ஆனால் இங்கு கேட்கப்பட்டது என்ன?
வள்ளியைத் தென்னவர் மட்டும் அறிகிறார்கள்! வடமொழிப் புராணங்கள் அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்று சொன்னீர்கள்!//

அண்ணே,

களவு மணம் கற்பு மணம் எல்லாம் பேசி இருக்கோம், களவு மணம் இங்கே குறிப்பாக தமிழர்களிடம் இருந்த வழக்கம். வள்ளியை களவு மணம் புரிந்ததாகத் தானே பல்வேறு இடுகையில் குமரனும் எழுதி இருக்கிறார். இவைபற்றி ஒன்றும் அறியாத வடநாட்டினர் (வியாசர் கந்த புராணத்தைத் தொகுத்திருக்கிறார் என்ற தகவலை வைத்து) அறிந்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். :(
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அப்படியா ?

ஸ்கந்தனுக்கு வடநாட்டில் கிருஷ்ணனுக்கு இருப்பது போல் அறியப்பட்ட கோவில்கள் இருந்தால் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன்.//

மொதல்ல வள்ளி வடமொழியில் சொல்லப்பட்டிருக்காளா-ன்னு கேட்டீங்க! சொன்னேன்! அதுக்கு என்ன சொல்றீங்க என்பதைச் சொல்லுங்க! அதற்கு அப்புறம் ஸ்கந்தனுக்கு வடநாட்டில் இருக்கும் கோவில்களின் லிஸ்ட்டைக் கொடுக்கிறேன்! :)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கோவி.கண்ணன் said...
அண்ணே//

அச்சோ, நான் தம்பீ!
இதுக்கு எல்லாம் கூடவா தரவு தர முடியும்? :)))

//வள்ளியை களவு மணம் புரிந்ததாகத் தானே பல்வேறு இடுகையில் குமரனும் எழுதி இருக்கிறார்//

ஆமாம்! மறுக்கலையே! நானும் சொல்லி உள்ளேனே!

//களவு மணம் இங்கே குறிப்பாக தமிழர்களிடம் இருந்த வழக்கம்//

ஆமாம். தமிழரின் பல பண்பாட்டு நிகழ்வு/சிறப்புகளில் அதுவும் ஒன்று!

//இவை பற்றி ஒன்றும் அறியாத வடநாட்டினர் (வியாசர் கந்த புராணத்தைத் தொகுத்திருக்கிறார் என்ற தகவலை வைத்து)//

என்னாது? களவு மணம் என்பது தமிழரின் சொத்து மட்டுமே-வா? வேறெந்த பண்பாட்டுக்கும் களவு மணம்-ன்னாலே என்னான்னு தெரியாதா?

என்னண்ணே பேசறீங்க? காந்தர்வ விவாகம் தெரியும் தானே? காந்தர்வ விவாகம் கட்டிக்கிட்டவங்க கடைசி வரை பிரியாம வாழ்ந்த கதைகள்-லாம் கூட இருக்கே! சாகுந்தலம் படிங்க! Helen of Troy படிங்க!

களவு மணம் எங்கும் உண்டு! நம் இலக்கியங்களில் பலரால் போற்றப்பட்டது. அங்கு சிலரால் போற்றப்பட்டது! அம்புட்டு தான்!

//அறிந்திருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். :(//

நான் சொன்னதால் ஏற்றுக் கொள்ளக் கூடாது! அது தவறு!
மெய்ப்பொருள் காண்பது அறிவு!
ஆனால் அந்த மெய்ப்பொருளைக் காய்தல் உவத்தல் இன்றி நுணுக்கி நோக்க வேண்டும்!

அப்படி நோக்கிய பின், அங்கு களவு மணம் இல்லை என்று தெளிந்தால், அப்போ அது இல்லை தான்! நான் உங்கள் கருத்துக்கு நிச்சயம் வலு சேர்ப்பேன்!
---

குமரன் (Kumaran) said...
//கந்தப்புராணம் தென்னகத்தில் எழுதப்பட்டது, அதை வடபுலத்து சிந்தனை என்று சொல்ல முடியாது, அது ஒரு கட்டுமானம் தான். :) கந்தபுராணத்தை தென் இந்தியாதவிர்த்து வேறு எவரும் அறிந்திலர் அல்லர்.
//

கோவி.கண்ணன்.

"கந்தபுராணம் தென்னகத்தில் எழுதப்பட்டது. அதை வடபுலத்துச் சிந்தனை என்று சொல்ல முடியாது" - இந்த கருத்திற்குத் தகுந்த தரவு/சான்று தரப்பட்டுவிட்டது. நீங்கள் நேர்மையாளர் என்றால் இந்தக் கருத்தை இனி மேல் எங்கும் சொல்லாதீர்கள். இந்த மாதிரி கருத்துகள் சொன்னால் தரவுகள் கேட்கப்படும்/தரவுகள் வைக்கப்படும்; ஊகத்தின் அடிப்படையாக இந்த மாதிரி கருத்துகள் சொல்வது நியாயமில்லை.

"அது ஒரு கட்டுமானம் தான்" - இந்தக் கருத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இதற்குத் தரவு/சான்று தர இயலாது. ஏனெனில் இந்தக் கருத்து தனிப்பட்ட அனுபவங்கள்/நம்பிக்கைகள் சார்ந்தது. இந்த மாதிரி கருத்து சொன்னால் தரவுகள் கேட்கப்படமாட்டா. :-)

"கந்த புராணத்தைத் தென் இந்தியா தவிர்த்து வேறு எவரும் அறிந்திலர் அல்லர்" - இங்கே என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை - அறிந்திலரா? அறிந்திலர் அல்லரா? அறிந்திலர் என்று சொன்னீர்கள் என்றால் அதனை மறுத்துத் தரவுகள் தந்தோம். அறிந்திலர் அல்லர் என்றால் அதையே தான் நாங்களும் சொல்கிறோம். :-)

//குமரன் பின்னூட்டம் சுவையார்வமாக இருந்தது. அடுத்த அடுத்த பதிவுகளில் மேலும் பேசுவோம்.
//

சுவையார்வமாக இருந்தது என்றால் சுவை மட்டும் தான் இருந்தது; பொருள் இல்லை என்று அருத்தமா? :-) ஏற்றுக் கொண்டேன் என்று பொருளா ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருளா? தெளிவாகச் சொன்னால் மகிழ்வேன். :-)
---

கோவி.கண்ணன் said...
//நீங்கள் நேர்மையாளர் என்றால் இந்தக் கருத்தை இனி மேல் எங்கும் சொல்லாதீர்கள். //

இதுதான் பழிக்கு 'பலி'யா ? :) புரிகிறது !

தரவுகளின் படி நான் நேர்மையாளன் இல்லை என்றே நினைக்கிறேன்.
:)
---


கோவி.கண்ணன் said...
//சுவையார்வமாக இருந்தது என்றால் சுவை மட்டும் தான் இருந்தது; பொருள் இல்லை என்று அருத்தமா? :-) ஏற்றுக் கொண்டேன் என்று பொருளா ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருளா? தெளிவாகச் சொன்னால் மகிழ்வேன். :-)//

வாதத்திறமையைத் தான் குறிப்பிட்டேன். :)

ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாதது எல்லாவற்றையும் தாண்டிய விவாத திறமை. பொருளற்ற விவாதங்களிலும் சுவை உண்டு, எனவே பொருள் குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்வது இல்லை.

:)
---

குமரன் (Kumaran) said...
சிவத்தமிழோன் ஐயா,

கொற்றவை வழிபாடு ஏன் தமிழ் வழிபாடாகவே கொள்ள வேண்டும் என்பதற்கு இரவிசங்கர் நல்ல விளக்கம் தந்திருக்கிறார். அதனால் அந்தப் புலனத்திற்குள் செல்லாமல் மற்றவற்றிற்குக் கருத்து சொல்கிறேன்.

மாயோன் என்று தொல்காப்பியமும் மற்ற சங்க நூற்களும் சொல்வது கண்ணனைத் தான் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படிக்காமல் கண் மூடி இருக்க விரும்பினால் தொடர்ந்து மாயோனைக் கண்ணன் என்றது வலிந்து கொடுக்கப்பட்ட விளக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். :-)

திருமாலின் அவதாரமான கண்ணன் பிறந்தது, வளர்ந்தது, போர் செய்தது எல்லாம் வட இந்தியாவில் என்பதால் - மாயோன் கண்ணன் இல்லை என்று சொல்கிறீர்கள். கீழ் கண்ட கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

1. மாயோனைப் பற்றி பேசும் போது அந்தக் கண்ணனின் வரலாற்றில் வருபவைகளே சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றனவே? அப்படியிருக்க கண்ணனும் மாயோனும் ஒரே ஆளாகத் தானே இருக்க வேண்டும்?

2. சிவபெருமானின் இருப்பிடமாக சைவ சமயம் எந்த இடத்தைச் சொல்கிறது? திருக்கயிலாய மலை தமிழகத்திலா இருக்கிறது? அன்றி ஈழத்திலா இருக்கிறது? தென் திருக்கயிலாயம் என்ற பெயரில் திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இருப்பதை அறிவேன். ஆனால் திருக்கயிலாயம் என்றவுடன் எந்த வித மறுப்பும் இன்றி எல்லோரும் ஒத்துக் கொள்வது வடக்கே பனிமலையில் இருக்கும் இடத்தைத் தானே?! அப்படியென்றால் சிவபெருமானை வடக்கே அனுப்பிவிடலாமா?

3. திருமுருகனின் பிறப்பு நிகழ்ந்ததாக எந்த இடம் சொல்லப்படுகிறது? வடக்கே இருக்கும் கங்கையின் பொய்கையான சரவணப் பொய்கை தானே! அவன் பிறப்பு வடக்கே நிகழ்ந்ததால் அவனைத் தமிழ்க்கடவுள் என்று சொல்ல மறுக்கிறோமா என்ன? ஏன் கண்ணன் மேல் மட்டும் இந்த ஓரவஞ்சனை?

4. திருமுருகன் போர் செய்த இடம் தென்னகத்தில் இருப்பதாகத் தான் புராணங்கள் சொல்கின்றன. திருமாலின் அவதாரமான இராமன் போர் செய்த இடமும் தென்னகத்தில் தான் என்று இதிகாசம் கூறுகின்றது. போர் செய்த இடம் என்ற வரையறையை வைத்தால் முருகனை ஏற்றுக் கொள்வதைப் போல் இராமனையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே?

//கண்ணன் வரலாற்றுக்கு மூல ஆதாரம் மகாபாரதம். //

இல்லை. கண்ணன் வரலாற்றுக்கு மூத்த ஆதாரம் பாகவத புராணம். எழுதப்பட்டது சேர நாட்டில். அதற்கும் முன்னர் கண்ணனின் கதைகள் பற்பல தமிழர்களிடையே வழங்கப்பட்டன என்பதற்குச் சான்றுகள் சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் கூறும் கண்ணனின் வரலாற்றுச் செய்திகள் பல வடமொழி நூற்களிலும் இல்லை. கண்ணனின் வரலாற்றிற்கு ஆதாரம் வடமொழி நூற்கள் என்றால் வடமொழி நூற்கள் எங்கிலும் சொல்லப்படாத நப்பின்னைப் பிராட்டி தமிழ் இலக்கியங்களில் மட்டும் எப்படி வந்தாள்?

//மாயோன் எனும் திருமாலின் அவதாரமாக கிருஷ்ணனைப் படைக்கும்போது முல்லை நில மக்களின் பழக்க வழக்கங்களை ஏன் ஆரியர் சூட்டியிருக்கக்கூடாது கிருஷ்ணனுக்கு(கண்ணனுக்கு)?
//

இது வெறும் ஊகம். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தரவுகள்/சான்றுகள் தாருங்கள். தரவுகள் இல்லையேல் இது தள்ளத் தக்கது.

//இராமன் ஆரியன் எனபதற்கும் இராமாயணம் ஆரிய தமிழ் யுத்தம் சைவ-வைணவ போர் என்பதற்கும் விளக்கம் அடியேன் வழங்கத் தேவையில்லை.
//

முருகன் எப்படி? முருகனுக்கும் சூரனுக்கும் நடந்த போர்? அது ஆரிய தமிழ் போரா இல்லையா? முருகனும் வடக்கே பிறந்தவன் தானே? அவனும் ஆரியனாகத் தானே இருக்க வேண்டும்? இராமனைப் போல் முருகனும் தெற்கே வந்து போர் புரிந்ததால் அதுவும் ஆரிய தமிழ்ப் போராகத் தானே இருக்க வேண்டும்? ஏற்றுக் கொள்வீர்களா? இந்தக் கேள்விகள் மடத்தனம் என்று தோன்றினால் மடத்தனம் இராம-இராவணப் போரை ஆரியத்தமிழ்ப் போராகப் பார்ப்பதும் தான் என்பது புரியும்.

இராம இராவண யுத்தம் சைவ வைணவப் போரா? கற்பனையின் உச்சக்கட்டம் இது! அது சைவ வைணவப் போரென்றால் தமிழ் மறைகளான தேவாரத் திருவாசகங்களைப் பாடிய சமயக் குரவர் நால்வர் இராவணனை பல பதிகங்களில் அவன் சிவபக்தன் என்பதைக் கூறும் போதே குறைவாகக் கூறுகிறார்களே. ஒரு வேளை அவர்களும் ஆழ்வார்களைப் போல் கம்பன் செய்த புரட்டை அறியாமல் அவன் காப்பியத்தை வழிமொழிந்து பாடிவிட்டார்களோ? ஹாஹாஹாஹா. நல்ல சிரிப்பை மூட்டுகிறீர்கள்.

இராவணன் சிவபக்தன் என்று மீண்டும் மீண்டும் பாடிய சமயக்குரவர்களும் இராமனைப் பழித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அதிலிருந்தே தெரியவில்லையா இராம இராவணப் போரை சைவ வைணவப் போராகக் காட்டியது பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியல் என்று?!

//வைணவத்தின் சிறப்புநூற்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டுமே தமிழருடையதல்ல. பகவத் கீதைக்கும் தமிழுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.//

இதற்கு இரவிசங்கரும் பதில் சொல்லியிருக்கிறார். பரிபாடலில் முழுக்க முழுக்க விண்ணவனைப் போற்றும் முழுப்பாடல்கள் இருக்கின்றனவே. அவை என்ன ஆயின? அவை வடக்கே தெரியாது என்கிறீர்களா? போகட்டும் - வடக்கேயும் தெரிந்த சைவ முதன்மை நூற்கள் யாவை? அந்த நூற்கள் சைவம் மட்டுமே தமிழில் நிலை நின்றது என்று எப்படி காட்டும்? நீங்கள் தேவார திருவாசகங்களைக் காட்டினால் வைணவர்கள் நாலாயிர திவ்விய பிரபந்தங்களைக் காட்டுவார்களே!

பகவத்கீதைக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லையென்றால் தமிழில் நிலை நின்ற ஒரே சமயம் என்று உங்களால் சொல்லப்படும் சைவ சிந்தாந்த சமயாசாரியர்கள் ஏன் பகவத்கீதைக்கும் உரை எழுதினார்கள்? தொடர்பு இருப்பதால் தானே.

//இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் திராவிடர் என்பது அகழ்வாராச்சியின் துணிபு. சிந்து வெளி திராவிட நாகரீகமாக இருக்கவேண்டும் என்பது தமிழனின் கூற்றல்ல. வெள்ளையர்களின் துணிபு. எனவே காசுமீரத்தில் சைவம் உள்ளதென்பதற்காக திராவிட சமயம் சைவம் என்பதில் ஐயம் கொள்ளவேண்டிய அவசியமில்லை.//

இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் என்பதில் எந்த வித ஐயமும் எனக்கு இல்லை. ஆனால் திராவிடர்கள் மட்டுமே என்று அறுதியான அகழ்வாராய்ச்சி முடிவுகள் வந்ததாகத் தெரியவில்லை. அப்படி வந்ததாக கற்பனை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

வெள்ளையர் கூற்றை இங்கே காட்டும் நீங்கள் வெள்ளையர்களின் இன்னொரு கூற்றை ஏற்றுக் கொள்வீர்களா? வெள்ளையர்கள் சொன்னவை: இந்தியாவின் ஆன்மிக முழுக்க முழுக்க வடமொழி வேதங்களிலேயே நிலைகொண்டிருக்கிறது. இந்தியாவின் 'அனைத்து' மொழிகளும் வடமொழியாம் செங்கிருதத்திலிருந்தே வந்தவை.

இந்தக் கூற்றுகளை நீங்கள் ஏற்கிறீர்களா? நான் இந்த இரு கூற்றுகளையும் ஏற்பதில்லை. அதே போல் தெள்ளத் தெளிவாக சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற முடிவு வரும் வரை ஏற்கப் போவதில்லை.

சைவம் திராவிட சமயம் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அதில் ஐயமும் எங்களுக்கு எள்ளளவும் இல்லை. ஆனால் சைவம் மட்டுமே திராவிட சமயம் என்றால் ஏற்றுக் கொள்ள இயலாது என்கிறோம். நீங்கள் வைணவம் ஏன் தமிழர் சமயம் இல்லை என்று காட்டிய காரணங்களை மறுக்க காசுமீரத்துச் சைவத்தைச் சொன்னேன். வைணவம் வடக்கேயும் இருப்பதால் அது தமிழர் சமயம் இல்லையென்றால் அதே அளவுகோலைச் சைவத்திற்கும் தரலாமே என்றேன். மற்றபடி சைவமும் தமிழர் சமயம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை.

//உலகம் பூராகவும் பரந்து சமயம் வளர்க்கும் கரே கிருசுணா கரே ராமா இயக்கம் திருப்பதியைப் பற்றியோ பெருமாளைப்பற்றியோ வாய்திறப்பதில்லை. அவர்கள் வைணவத்தின் முழுமுதற்கடவுள் கிருஷ்ணன் என்றே சொல்கின்றனர். பிந்தி வந்த கொம்பு முந்திவந்த காதை மறைப்பதுபோல்த்தான் கிருஷ்ணன்/கண்ணன் முழுமுதற்கடவுள் என்று வைணவத்திற்கு கொடுக்கப்படும் வரைவிலக்கணம்.//

ஹரே கிருஷ்ணா இயக்கம் திருப்பதியைப் பற்றியும் பெருமாளைப் பற்றியும் மீண்டும் மீண்டும் பேசுகின்றது. திருப்பதியிலும் அவர்கள் கிளை இருக்கின்றது. திருவரங்கத்திலும் இருக்கின்றது. பெங்களூருவில் அந்த இயக்கத்தினரால் நடத்தப்படும் பெரும் ஆலயம் இருக்கிறது. இயன்றால் சென்று பாருங்கள். இல்லையேல் இணையத்தில் தேடிப் பாருங்கள். அங்கே இருக்கும் திருப்பதி ஏழுமலையானின் திருச்சன்னிதியின் படங்கள் கிடைக்கும். எப்படித் தான் இந்த மாதிரி பொய்கள் சொல்ல இயலுகின்றதோ?! மறுப்பார் இல்லை என்று நினைத்த துணிவு போலும்.

வைணவத்தின் முழுமுதற்கடவுள் திருமாலின் அவதாரமான கண்ணன்/கிருஷ்ணன் என்று அந்த இயக்கத்தார் சொன்னால் அதில் என்ன தவறு? திருமாலும் அவன் அவதாரமும் ஒன்று தானே! இதில் பிந்தி வந்த கொம்பு முந்தி வந்த காதை எப்படி மறைக்கிறது என்று புரியவில்லை. அப்படியே இப்படி கண்ணனை முழுமுதற்கடவுளாகச் சொல்வது இந்த இயக்கத்தாரின் தவறு என்றால் அந்தத் தவறு இப்போது தான் நடக்கின்றது என்று சொல்ல இயலாது; சங்க காலத்திலேயே நடந்திருப்பதாகத் தான் சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. மாயோனை/திருமாலைப் பேசும் போது கண்ணனை திருமாலாகவே முழுமுதற்கடவுளாகவே பேசுகின்றன. இன்னும் சொல்லப் போனால் பலராமனையும் முழுமுதற்கடவுளான திருமாலாகவே பேசுகின்றன. இயன்றால் படித்துப் பார்த்து பின்னர் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் மீது பழி போடலாமா வேண்டாமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிந்தி வந்த கொம்பு முந்தி வந்த காது - என்று நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் 'கம்பனை வழியொற்றி ஆழ்வார்கள் எழுதினார்கள்' என்று சொன்ன கூற்று நினைவிற்கு மீண்டும் வருகிறது. :)

//முனைவர் நன்னன் வேதனையோடு மக்கள் தொலைக்காட்சியில் பரிமாறிய கருத்துகளில் ஒன்று அருவி- நீர்வீழ்ச்சி. இரண்டும் ஒன்றுதான். ஆனால் அருவி என்பது தொன்று தொட்டு விளங்கிவந்த தமிழ். இன் மொழிமாற்றுத்தான் நீர்வீழ்ச்சி. இன்று அருவி என்றால் குழம்பிதவிக்கும் மாணவர்கூட்டம் உருவாகியிருப்பது நீர்வீழ்ச்சி என்ற மொழிமாற்றை புழகவிட்டதனாலாகும். இதுபோல்த்தான் நாளை மாயோன் என்ற கிருஷ்ணன் மாயோன் எனும் திருமால் இருந்தார் என்பதையே இல்லாமல் செய்துவிடலாம்.//

அருவி/நீர்வீழ்ச்சி என்ற எடுத்துக்காட்டின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. இரண்டுமே ஒன்று தானே. அப்படியென்றால் மாயோனும் கிருஷ்ணனும் ஒன்று தானே. மாயோனும் திருமாலும் ஒன்று தானே. அருவி பழந்தமிழ் சொல் என்பதால் அதன் மேல் உங்களுக்கும் எனக்கும் பற்றுதல் இருக்கிறது. அதே போல் மாயோன் என்ற பெயரில் மட்டுமே பற்றுதல் இருக்க வேண்டும் என்கிறீர்களா? நீர்வீழ்ச்சி என்பது மொழிமாற்றுச் சொல் தான் - அதனால் அதனைக் குறைவாகப் புழங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஒத்துக் கொள்ள வேண்டியது தான். அருவி என்ற நம் சொல் இருக்க எதற்கு வலிந்து நீர் வீழ்ச்சி என்ற மொழி மாற்றச் சொல்? ஆனால் நீர்வீழ்ச்சியைப் போல் கண்ணன் என்ற சொல்லோ மாயோன் என்ற சொல்லோ அவர்களைப் பற்றி சங்க இலக்கியங்கள் சொல்லும் செய்திகளோ மொழிபெயர்ப்பாகத் தோன்றவில்லையே. பின் ஏன் அவற்றைத் தள்ள வேண்டும்? ஏன் வருந்தவும் வேண்டும்?

//பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை என்று தொடங்கி சங்கத் தமிழ் மூன்றுந் தா என்ற ஔவையார் பாடிய பாடல் காணபத்தியத்தை ( அப்படி ஒன்று இருந்ததாகச் சொல்வது சைவத்தின் ஆளுமையைக் குறைக்க செய்த சதி என்பர்') தமிழ்ச் சமயமாக்கிடுமா? கவனம் கருப்புச் சட்டைக்காரர் கண்களுக்கு தெரிந்துவிட்டால் வீண் வாதங்கள் எழுந்திவிடும். //

இந்தப் புலனத்தில் இன்னொரு நாள் பேச வேண்டும். கருப்புச் சட்டைக்காரர்கள் என்றால் நீங்கள் பயப்படலாம். நாங்கள் பயப்படுவதில்லை. அளவுக்கு மீறிய உளரல்களை புறந்தள்ளுவோம். அறிவார்ந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளுவோம். அது கருப்புச் சட்டைக்காரர்கள் ஆனாலும் சரி; சட்டையே போடாதவர்கள் ஆனாலும் சரி.

பரிபாடலையும் புறநானூற்றையும் நான் தரவாகக் காட்டியதற்கு நீங்கள் ஒளவையின் பாடலைக் காட்டியிருக்கிறீர்களே? அதன் உட்பொருள் என்ன? மீண்டும் காலக் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்களோ? பரிபாடலும் புறநானூறும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலோ 'பாலும் தெளிதேனும்' பாடல் இயற்றப்பட்டப் பிற்காலத்திலோ எழுதப்பட்டது என்று உங்களுக்கு எண்ணமா? அப்படித் தான் என்றால் பேசிப் பயனில்லை. :-)

////புறநானூற்றில் இராமாயணத்தைப் பற்றி வரும் பகுதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?//

இராமனைப் பற்றியும் கிருஷ்ணனைப் பற்றியும் இந்தோனேசியாவிலும் இன்னும் பல்வேறுபட்ட தெற்காசிய நாடுகளிலும் உள்ள புராதன கதைகள் சிற்பங்கள் ஓவியங்கள் மூலமாய் அறியக்கூடியதாகவுள்ளது. இதன்காரணமாக அவர்கள் இராமனையும் கிருஷ்ணனையும் தமது இனத்தவர் என்று வகுப்பதில்லையே?

இங்கு எனது எழுத்துகள் சிலவேளைகளில் அடியேனை திருமால் துவேசியாகக் கூட சிலரை எண்ணச் செய்திடலாம். எனவே மேலதிகமாக ஒரு சிறு குறிப்பு எளியேனைப்பற்றி. ஈழத்தில் இரண்டு பெரும் திருமால் ஆலயங்கள் திருப்பதிக்கும் திருவரக்கத்துக்கும் இணையாக வைத்துப் போற்றப்படுவன. ஒன்று பொன்னாலை வரதராசாப் பெருமாள் ஆலயம். மற்றையது வல்லிபுர ஆழ்வார் ஆலயம். அடியேன் பொன்னாலை வரதராசப் பெருமாளைக் குலதெய்வமாகக் கொண்டவன். ஈழத்தில் சைவத்தை சிறப்பாக பேணும் மக்கள், திருமாலை காத்தற் கடவுளாக(ஈழத்தை காக்க வாவேன் என்ற ஏக்கத்துடன்) சிவனின் சக்திகளில் ஒருவராக வழிபடுவர்.

திருமால் சுத்த தமிழன். இராமாயணம், மகாபாரதம்,பகவத் கீதை வாயிலாய் ஆரியர் உருவாக்கியது வைணவம்.( தாங்கள் நவின்ற விண்ணவம் தான் வைணவம் ஆனது என்ற உண்மையை அறிந்ததால்த்தானோ ஆரியர் வைணவத்தின் முழுமுதற்கடவுளை மறந்து கிருஷ்ண பக்தியிலும் இராம பக்தியிலும் மூழ்கியிருக்கின்றனர்.) வைணவத்தை வளர்த்தது தமிழர் என்பதில் அடியேனுக்கு மாற்றுக் கருத்துயில்லை.

வைணவ சைவ பிரச்சினையை எழுப்பி குளிர்காய்வது சில நடிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம். அடியேனுக்கு உடன்பாடில்லை.
//எங்களின் பதிவுகளுக்கு நீங்கள் பல முறை வந்து எங்களின் சைவ பதிகங்களுக்கான இடுகைகளைப் பாராட்டியிருக்கிறீர்கள் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.//
//

இவை பற்றி ஏற்கனவே பேசிவிட்டோம். தங்கள் கருத்துகளை மீண்டும் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றிற்கு ஏற்ற பதில்களைத் தந்துவிட்டாகிவிட்டது என்றே நினைக்கிறேன். மேலும் சேர்க்க எதுவும் இல்லை.

//வைணவத்தின் தோற்றத்தை வாதிடும்போது சமயம் கடந்த பார்வை தேவைப்பட்டது. எனவே இராமனும் கிருஷ்ணனும் ஆரியராக தெரிந்தனர்.அவ்வளவே.இதுபோல்த் தான் சைவத்தை சமயங்கடந்து இனரீதியில் பார்க்கும்போது பிள்ளையார் எனக்கு ஆரியர்தான். ஆனால் கோயில் என்று வரும்போது தோப்புக்கரணம் போடத்தவறுவதில்லை. சமயம் வேறு. சமய ஆய்வு வேறு. ஆதலால் வைணவ வெறுப்பாளன் என்று சிறுவட்டத்துக்குள் என்னை அடைத்துவிடாதீர்கள்.
//

சிவபெருமானின் இருப்பிடம், முருகப்பெருமானின் பிறப்பு போன்றவற்றைப் பற்றி இங்கே சொல்லியிருக்கிறேன். உங்களின் அளவுகோலின் படி அவர்களும் ஆரியர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். நான் அப்படி சொல்வதால் என்னை 'சைவ வெறுப்பாளன்' என்றோ 'முருக வெறுப்பாளன்' என்றோ எண்ண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இது சமயங்களைக் கடந்த வரலாற்று விவாதம் மட்டுமே. :-)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கோவி.கண்ணன் said...
வாதத்திறமையைத் தான் குறிப்பிட்டேன். :)//

இது நான் அடிக்கடி கேட்கும் வாசகம்! உண்மை கொஞ்சம் போல வெளிய வரும் போது,
தொபுக்கடீர்-ன்னு வாதத் திறமை-ன்னு சொல்லீருவாங்க! :)))

//பொருளற்ற விவாதங்களிலும் சுவை உண்டு, எனவே பொருள் குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்வது இல்லை :)//

பொருள் அல்லவரைப் பொருள் ஆகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்! :))

சிங்கை வேல் முருகனுக்கு அரோகரா!
---

கோவி.கண்ணன் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இது நான் அடிக்கடி கேட்கும் வாசகம்! உண்மை கொஞ்சம் போல வெளிய வரும் போது,
தொபுக்கடீர்-ன்னு வாதத் திறமை-ன்னு சொல்லீருவாங்க! :)))//

மறுபடியும் தவறு. தரவுகள், ஆதாரங்கள் இவை உண்மையைச் சொல்லிவிடுவதில்லை. வாதத்திற்கு வலுசேர்ப்பவை மட்டுமே, உண்மைகளுக்கு தரவுகளோ ஆதாரங்களோ தேவைப்படாது ஏனென்றால் அவை உணர்வாக இருப்பது. நீங்கள் ஆதரங்கள் தரவுகள் என்று பேசுவதால், அதனை வாதத்திறமை என்ற வகையில் தான் சேர்க்க முடியுமே.

நான் உண்மையில் மழைப்பது என்னவென்றால் ஆதாரங்கள், தரவுகளும் உண்மைகளின் திரையாக இருக்கிறதே என்பதை நினைத்துத்தான்.

உங்களுடைய 'தொபுக்கடீர்' அளவுகள் எனக்கு முற்றிலும் பொருந்தாது, ஏனென்றால் நான் தெளிந்தவன். நான் எனது கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கெஞ்சவில்லை. :)

உங்களைவிட சிவனையும், கிருஷ்ணனையும் நன்கு 'அறிந்தவன்' என்பது எனக்கு உணர்வாக உறுதியான ஒன்று.
---

குமரன் (Kumaran) said...
எல்லாம் அறிந்த கோவி.கண்ணன் ஐயா. உங்களுக்குத் தெரிந்ததும் நீங்கள் அறிந்ததும் இந்த உலகத்தில் 'நீதி' 'நியாயம்' போன்றவற்றை வழங்குவதற்காக இருக்கும் நீதிபதிகள் யாரும் அறியாமல் புரியாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் தயை செய்து 'உண்மைகளுக்கு தரவுகளோ ஆதாரங்களோ தேவைப்படாது' என்று சொல்லி அவர்களின் அறியாமையை அகற்றும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படியே உண்மைக்குத் தடயம் தேடி அலையும் காவல்துறையினரின் கண்களையும் திறக்க வேண்டும். நீதி வழங்குகிறேன் பேர்வழி என்று எல்லோரும் எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.

கடைசி வரியில் 'பனங்காட்டு நரி நான்; இந்தச் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சமாட்டேன்' என்று நெஞ்சு நிமிர்த்துவதைப் போல் தோன்றினாலும் 'உண்மைகளுக்கு தரவுகளோ ஆதாரங்களோ தேவைப்படாது' என்று சொல்வதைப் படிக்கும் போது 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்று ஓடிய நரி தான் நினைவிற்கு வருகிறது. :-)
---

கோவி.கண்ணன் said...
//குமரன் (Kumaran) said...
எல்லாம் அறிந்த கோவி.கண்ணன் ஐயா.
//

முதலில் கோவி.கண்ணன், பிறகு கோவி.கண்ணன் அண்ணன், இப்போது கோவி.கண்ணன் ஐயா, இவை எதுவுமே நான் கேட்காமல் நீங்கள் கொடுக்கும் புரோமசன், பதவி இறக்கினாலும் அதுபற்றிய வருத்தம் எனக்கு இருக்காது கேட்காமல் கிடைப்பது கேட்காமல் போகும் போது ஒப்புக் கொள்ளவேண்டும் அல்லவா. :) காலம் செய்யும் கோலமின்றி வேறு என்ன ?

//உலகத்தில் 'நீதி' 'நியாயம்' போன்றவற்றை வழங்குவதற்காக இருக்கும் நீதிபதிகள் யாரும் அறியாமல் புரியாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் தயை செய்து 'உண்மைகளுக்கு தரவுகளோ ஆதாரங்களோ தேவைப்படாது' என்று சொல்லி அவர்களின் அறியாமையை அகற்றும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படியே உண்மைக்குத் தடயம் தேடி அலையும் காவல்துறையினரின் கண்களையும் திறக்க வேண்டும்.//

இவையெல்லாம் மனித நீயதிகள் தானே. வகுத்தவர்கள் தானே அவற்றிற்கான தீர்விற்கான வழிமுறைகளையும் வைக்க முடியும், இதில் பிறருடைய தலையீடுகள் எவ்வகையுலும் பயன் தராது.

//கடைசி வரியில் 'பனங்காட்டு நரி நான்; இந்தச் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சமாட்டேன்' என்று நெஞ்சு நிமிர்த்துவதைப் போல் தோன்றினாலும் //

அப்படி உங்களுக்கு தோன்றினால் மன்னிக்க வேண்டுகிறேன். என்னைப் பற்றி உயர்த்திச் சொல்வதற்காக சொல்லவில்லை. ஒரு சில உண்மைகளையாவது சொல்ல வேண்டும் என்பதற்க்காவே சொன்னேன்.

//'உண்மைகளுக்கு தரவுகளோ ஆதாரங்களோ தேவைப்படாது' என்று சொல்வதைப் படிக்கும் போது 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்' என்று ஓடிய நரி தான் நினைவிற்கு வருகிறது. :-)//

இதில் உறுதியாகவே இருக்கிறேன். உண்மையும் உணர்வும் ஒன்றானவை இவற்றிற்கு தரவுகள் தேவைப்படாது. அதில் குழப்பம் உடையவர்கள் மட்டும் தான் ஆதாரம் தேடுவார்கள், நாடுவார்கள்.

என்னிடம் ஒரு நண்பர் மிகவும் நட்பாக இருக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொன்னால், அதுபற்றிய நம்பிக்கை மட்டுமே மனதில் ஏற்படும், நாளடைவில் அவர் நடந்து கொள்ளும் விதமே தரவுகள் அதைவைத்து நட்பு நேர்மையானது என்று முடிவு செய்ய முடியும். ஆனால் என் பெற்றோர்கள் என்னைப்பற்றி சொல்லும் ஒவ்வொன்றுமே, அல்லது எதையுமே வெளிப்படத்தாமல் அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கு ஆதாரமே தேவைப்படாது அவை உணர்வுகள், வெறும் நம்பிக்கை அல்ல.

உங்கள் நேரத்தை வீனடித்தாதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டீர்கள். அதற்காக மன்னிப்புக் கோறுகிறேன்.
----

குமரன் (Kumaran) said...
உங்களை முன்னிலையாக வைத்துச் சொன்ன கருத்துகள் எல்லாம், அதற்கு எடுத்துக் கொண்ட நேரம் எல்லாம் வீண் என்று எண்ணவில்லை கோவி.கண்ணன். பல மாதங்களாகப் பொதுவில் சொல்ல நினைத்த கருத்துகளுக்கு ஒரு வெளிப்பாடாக அமைந்தது அது.

நீங்கள் முடிக்கும் விதமாகச் சொல்லும் கருத்துகளையும் பேசலாம். அதில் எனக்கு ஒப்புதல் இருக்கலாம். உண்மையை உணர்வால் உணர முடியலாம். ஆனால் நாங்கள் எல்லாவற்றிற்கும் தரவுகள் கேட்கவில்லை; எந்த விதயங்களுக்கு/கருத்துகளுக்குத் தரவுகள் கேட்கிறோம் என்பது படிக்கும் எல்லோருக்கும் இப்போது புரிந்திருக்கும். உங்களுக்கும் புரிந்திருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஞான நிலையைப் போன்ற தத்துவ நிலையைப் போன்ற கருத்துகளைச் சொல்லத் தொடங்கி எதற்கெல்லாம் நாங்கள் தரவுகள் கொடுத்தோம்/கேட்டோம் என்பதை மறக்கவைக்கும் உங்கள் திறமை இருக்கிறதே - அதனை மெச்ச வேண்டும். சிறந்த வாதத் திறமை இது. மீசையில் மண் ஒட்டவே ஒட்டாது.

இது புரிந்து தான் இத்தனை காலமும் பேசாமல் இருந்தேன். தீபாவளிக்குப் பின் என்ன ஆனதோ?! :-)

நல்ல விவாதம் செய்த திருப்தி இருக்கிறது. கருத்துகளை வெளியிடத் தந்த வாய்ப்பிற்கு நன்றி.

இன்னும் சில கருத்துகள் இந்த இடுகையில் இருக்கும் பின்னூட்டங்களுக்குச் சொல்ல வேன்டும். அவற்றைச் சொன்ன பின்னர் கூடலில் இங்கே பேசியவற்றைத் தொகுத்து இட இருக்கிறேன். உங்கள் பெயர் தலைப்பில் இருக்கும். :-)
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@கோவி அண்ணா
//உண்மைகளுக்கு தரவுகளோ ஆதாரங்களோ தேவைப்படாது-ஏனென்றால் அவை உணர்வாக இருப்பது//

உண்மை என்பது உணர்வாக இருக்கும் பட்சத்தில், பகுத்தறிவு என்பதும் உணர்வு தானே? எதற்கு பகுத்தறிவுப் பாசறைக்கு இத்தனை நூல்கள்? இத்தனை பதிப்பகங்கள்? இத்தனை கருத்தரங்குகள்?

தரவு என்பது நூலாதாரம் மட்டுமே என்று நினைப்பதால் வந்த வினை இது! வாழ்வும், சமூக அமைப்பும் கூட ஒரு தரவு தான்!
பெரியார் அசைக்க முடியாத தரவுகளை முன் வைத்தார்!

சமூக அவலம் ஒரு தரவு! அந்த அவலத்தைக் கொடி தூக்கிப் பிடிக்கும் கட்டமைப்பு நூல்கள் ஒரு தரவு! இரண்டையும் காட்டித் தான் பெரியார் சரியாக எதிர்த்தார்! சும்மா மேம்போக்காக உணர்வு சொல்லிருச்சுன்னு எதிர்க்கவில்லை!

தரவு என்பது திரை அல்ல! அது ஒரு சின்ன அகல் விளக்கு!

தரவினால் மொத்த பிரபஞ்சமும் தெரிந்து விடாது! ஆனால் இருட்டில் இருந்து எழுந்து பிரபஞ்ச வெளியில் நடக்கப் போதுமான வெளிச்சத்தைக் காட்டும்!
அதுக்கு அப்பறம் நடக்க நடக்க, நீங்க சொல்லுற அந்த "உணர்வு"-"உண்மை" எல்லாம் கெட்டிப்படும்!

இவ்வளவு தான் "தெளியாச்" சிறுவனான அடியேன் சொல்லிக் கொள்ளும் மேட்டர்!
----

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஏனென்றால் நான் தெளிந்தவன். நான் எனது கருத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கெஞ்சவில்லை. :)//

கருத்துரையாடல்களில் வாதங்கள் வைப்பதும், சான்று (தரவு) காட்டுவதும் - இதெல்லாம் "ஐயகோ, கோவி.அண்ணா, கேஆரெஸ் சொல்லுறத ஏத்துக்குங்களேன் ப்ளீஸ்" என்று கெஞ்சுவதற்காக இல்லை! :)

ஒரு கருத்தோடு இன்னொரு கருத்தை "நேர்மையான" முறையில் ஒப்பிட்டுப் பார்த்து, தெரிந்து, தெளியத் தான்!

யாருக்குத் தெளியணும்? உரையாடுபவர்கள் நாம மூனு பேருக்கு மட்டுமே அல்ல! இன்று வருவோரும், நாளை வருவோரும், நீங்களும் நாங்களும்-ன்னு, தேடுவோர் அனைவருமே தெரிந்து தெளியத் தான்!

தெரிந்து தெளிதல் என்ற ஐயனின் அதிகாரத்தை ஒரு முறை சும்மா வாசித்துப் பாருங்கள்! தரவுக்காக இல்லை; சும்மா ஐயன் என்ன தான் பேத்தியிருக்காரு-ன்னு பாக்கவாச்சும் வாசியுங்கள்! உண்மை என்பது உணர்வுப் பூர்வமானது! அதை எதுக்குத் தெரிந்து தெளியணும்-ன்னு ஐயன் கிட்ட கேட்டா, உங்களுக்கு விடை கிடைக்கலாம்! இல்லை விடையுள்ள நீங்க ஐயனுக்கே விடையும் சொல்லலாம்! :)

//உங்களைவிட சிவனையும், கிருஷ்ணனையும் நன்கு 'அறிந்தவன்' என்பது எனக்கு உணர்வாக உறுதியான ஒன்று//

இதை விடப் பெரிய பாக்கியம் வேறென்ன?
அரியை-அரனை அலற்றி வீடு புகுந்தேன் என்னும் நம்மாழ்வார் நிலையில் நீங்க இருக்கீங்க!

"அறிந்தவரான" உங்கள் "காலத்தில்" அடியேனும் வாழ்கிறேன் என்பதே எவ்ளோ பெரிய மகிழ்ச்சி! எம்புட்டு பாக்கியம்!

சிவனையும், கிருஷ்ணனையும் நன்கு 'அறிந்த" நீங்கள்...
அறிந்ததோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாது,
அந்த நல்லறிவை இந்த மானுடம் பயன் பெறவும் ஏதாச்சும் செய்ய வேண்டும் என்று மட்டும் "கெஞ்சிக்" கொள்கிறேன்!

வல்லமை தாராயோ, இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே!
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கோவி அண்ணன் திருவடிகளே சரணம்-ன்னு நானும் முருகனருளில் அமைந்து கொள்கிறேன்! :))

சூப்பர் டிஷ்கஷனுக்கு நன்றிண்ணா!
இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, தரவு பற்றிப் நாளை பேசுவோர்க்குத் தரவாகட்டும்! :)

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
முருகா, முருகா, முருகா!
---

கோவி.கண்ணன் said...
//சிவனையும், கிருஷ்ணனையும் நன்கு 'அறிந்த" நீங்கள்...
அறிந்ததோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாது,
அந்த நல்லறிவை இந்த மானுடம் பயன் பெறவும் ஏதாச்சும் செய்ய வேண்டும் என்று மட்டும் "கெஞ்சிக்" கொள்கிறேன்//

கிறித்துவ சமயத்தில் 'ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்' என்று சொல்லுவார்கள். அவை எல்லோருக்கும் கிடைக்குமா ? தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிலருக்குத்தானே, எத்தனையோ பேர் சிவனையும், கண்ணனையும் பாடினாலும் நாயன்மார்களாக, ஆழ்வார்களாக போற்றப்படும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் மிகச் சிலர் தானே.

யார் யார்க்கு எவை கிடைக்குமோ அதை யாராலும் தடுக்கவே, தட்டிப் பறிக்கவோ முடியாது, அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். எனக்கெல்லாம் அதில் தலையீடு கிடையாது.

:)
---

கோவி.கண்ணன் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கோவி அண்ணன் திருவடிகளே சரணம்-ன்னு நானும் முருகனருளில் அமைந்து கொள்கிறேன்! :))
//

தனிமனித புகழ்ச்சிதான் ஆன்மிக முன்னேற்றத்திற்கே தடை. அது அவர்களின் 'நிலை'யையும் பாதிப்படைய வைக்கும். புத்தர் என்ன சொன்னார் என்பதைவிடுத்து புத்தரைக் கடவுளாக்கியது தான் புத்தமதத்தின் தவறு. வெறும் போற்றுதலுக்கும், துதிக்குமான நம்பிக்கை என்பதைவிட ஒரு ஆழ்வாராகவோ, நாயன்மாராகவோ ஆகும் தகுதி எனக்கு இல்லையா ? என்று கேட்டுக் கொண்டீர்கள் என்றால் பிறரின் அங்கீகாரம் எதுவுமே தேவைப்படாமல் நீங்கள் அப்படியே ஆகி இருப்பீர்கள்.
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இதற்கு மேலும் வேண்டாம் என்று தான் அமைந்தேன்! முத்தாய்ப்பாக....

//தனிமனித புகழ்ச்சிதான் ஆன்மிக முன்னேற்றத்திற்கே தடை//

திருவடிகளே சரணம்-ன்னா அது தனி மனிதப் புகழ்ச்சியா?
அதுவும் உங்களுக்குச் சொன்னது புகழ்ச்சி-ன்னா நினைச்சிக்கிட்டீங்க? ஹா ஹா ஹா :)

//புத்தர் என்ன சொன்னார் என்பதைவிடுத்து புத்தரைக் கடவுளாக்கியது தான் புத்தமதத்தின் தவறு//

இந்த தவறு ஆசீர்வதிக்கப்பட்ட உங்களுக்கே தெரிஞ்சிருக்கு! பாவம், புத்தருக்குப் பின் வந்த ஹர்ஷ வர்த்தனருக்கு எல்லாம் தெரியாமப் போனது! அடா அடா அடா :)

புத்தரைக் கடவுளாக்கியது தவறே அல்ல! புத்தரைக் கடவுளாக்கித் தனி மனித புத்த பிட்சுக்கள் அதிகார போதையில் குளிர் காய்ந்தார்கள்! கேட்டால் புத்தரை உங்களை விட நான் நன்கு அறிந்தவன் என்றார்கள்!

இன்றைக்கு எப்படி மேல்ஜாதி ஆதிக்கம் பெரியாரால் ஒடுக்கப்பட்டதோ, அதே போல் பெளத்த அதிகார ஆதிக்கம் அன்று பக்தி இயக்கத்தால் ஒடுக்கப்பட்டது!

//ஒரு ஆழ்வாராகவோ, நாயன்மாராகவோ ஆகும் தகுதி எனக்கு இல்லையா ? என்று கேட்டுக் கொண்டீர்கள் என்றால் பிறரின் அங்கீகாரம் எதுவுமே தேவைப்படாமல் நீங்கள் அப்படியே ஆகி இருப்பீர்கள்//

இறைவனை நினைத்து ஒரு கணமாவது கண்ணீர் விட்டு ஆழ்ந்தவர்கள் உலகில் பலர்! அத்தனை பேரும் ஆழ்வார்கள் தான்! மொத்தம் 660 கோடி ஆழ்வார்கள்-ன்னு முன்பே சொல்லி இருக்கேன்! அதில் எல்லாரும் தொடர்ந்து நிலைத்து இருப்பதில்லை, அதனால் தான் பன்னிருவர் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறார்கள்!

இங்கே நல்ல ஆன்மீகத்தில் யாருக்கும் யாரின் அங்கீகாரமும் தேவை இல்லை!
ஆழ்வாராக ஆவது என்பது தனியான ஒரு தகுதியும் இல்லை! ஆழ்வாருக்கு கடைக்கோடி மனிதனை விடத் தான் வெறும் "நாயேன்" தான்! அதனால் அவர்கள் உங்களைப் போல் தகுதி பேசுவதில்லை!
---


கோவி.கண்ணன் said...
//ஆழ்வாராக ஆவது என்பது தனியான ஒரு தகுதியும் இல்லை! //

புரிபவற்றைத்தான் உதாரணமாகக் காட்ட முடியும், ஏன் ஆழ்வார்களோ, நாயன்மார்களோ என்று சொல்கிறீர்கள், இதை விடுத்து, அல்லது சேர்த்து ஏன் ஆகக் கூடாது என்று கூட நீங்கள் என்னிடம் கேட்டு இருக்கலாமே. :)

ரொம்ப யோசிக்கிறிங்க,


//இந்த தவறு ஆசீர்வதிக்கப்பட்ட உங்களுக்கே தெரிஞ்சிருக்கு! பாவம், புத்தருக்குப் பின் வந்த ஹர்ஷ வர்த்தனருக்கு எல்லாம் தெரியாமப் போனது! அடா அடா அடா :)//

முன்னோர்களை அளவுகோலாக வைத்து ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வள்ளலாரை கிருபானந்தவாரியாருடன் ஒப்பிட முடியுமா ? அவர்கள் சேவை, வழிபாடு அனைத்தும் தனித்தனியாது. முன்னதைவிட தற்பொழுது இருப்பவர்கள் உயர்வானவர்களாக, புதிய சிந்தனைகள் கொண்டவர்களாக ஏன் இருக்க முடியாது ?

ஒருவரின் எழுத்தை மட்டுமே வைத்து அவரைப் பற்றி முழுதாக எடைபோட்டுவிடுவீர்களா ? மனிதர்கள் தவறு செய்யும் இடமே ஒருவரின் தகுதியை ஒப்பீடுகளுடன் எடை போடுவதுதான். நான் 'அறிந்தவன்' என்று சொன்னது கூட என்னைப் பற்றி உயர்த்திச் சொல்வதற்க்கோ, பிறரைத் தாழ்த்துவதற்கோ அல்ல. அப்படி நினைத்தீர்கள் என்றால் மன்னிப்புக் கோறுகிறேன். நான் உளரலாக எதையும் எழுதவில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால் அப்படிச் சொன்னேன்.

நாம் ஒருவர் மீது கொண்ட சிந்தனைகள் அவர்களைக் குறித்த சரியான அளவீடாக இருக்கவே முடியாது. மனைவி என்ன நினைக்கிறாள் என்று கணவனுக்கே தெரியாத போது, மற்றவர்களின் செயல்களை எடைபோடுவது எளிதா ?

ஆம், என்றீர்கள் என்றால் நீங்கள் அனைத்தும் அறிந்தவர். நான் அனைத்தும் அறிந்து கொள்ள விருப்பப்படுவதில்லை, எது அறிய வேண்டுமோ அதைமட்டும் தான் அறிய முயற்சிப்பேன். குறிப்பாக மற்றவர்கள் மனங்களைப் படிக்க முயல்வதே இல்லை. அது தேவையற்றதும் கூட
---

கோவி.கண்ணன் said...
//திருவடிகளே சரணம்-ன்னா அது தனி மனிதப் புகழ்ச்சியா?
அதுவும் உங்களுக்குச் சொன்னது புகழ்ச்சி-ன்னா நினைச்சிக்கிட்டீங்க? ஹா ஹா ஹா :)//

என்னைச் சொன்னதாக நானே (மிகையாக) நினைத்தாலும் அதை நான் வரவேற்கவில்லை என்பதையும் புரிந்து கொண்டால் சரி.
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//முன்னோர்களை அளவுகோலாக வைத்து ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வள்ளலாரை கிருபானந்தவாரியாருடன் ஒப்பிட முடியுமா ?//

அப்படி யாரையும் ஒப்பிடவில்லையே!
எதுக்கு நீங்களா கண்டதையும் விவாதற்குள் இழுத்து இழுத்து வருகிறீர்கள்?

//முன்னதைவிட தற்பொழுது இருப்பவர்கள் உயர்வானவர்களாக, புதிய சிந்தனைகள் கொண்டவர்களாக ஏன் இருக்க முடியாது ?//

இக்காலத்தவர்கள் புதிய சிந்தனையாளர்கள் தான்! ஆனால் எல்லாக் காலத்துக்கும் பொது உண்மை-ன்னு ஒன்னு இருக்கு! அம்மா-வைத் துன்புறுத்தக் கூடாது என்பது அன்னிக்கும் இன்னிக்கும் என்னிக்கும் அதே தர்மம் தான்!

அதே போல் புத்தர் தனி மனித வழிபாட்டை எதிர்த்தார் என்பது அவர் காலத்திலேயும் உண்மை! இப்போதும் உண்மை!
புத்தரைக் கடவுளாக்கியது தவறு என்று உங்களுக்கே தெரியும் போது, அந்த அடிப்படைக் கொள்கையை ஹர்ஷரும் நிச்சயம் அறிந்திருப்பார்! அதை மட்டுமே சொன்னேன்!

//ரொம்ப யோசிக்கிறிங்க//

தவறே இல்லை!
ஆனால் மையத்தை விட்டு, மீண்டும் மீண்டும் வேறெங்கோ போய் யோசிப்பது நீங்க தான் அண்ணா! :)

வடமொழியில் வள்ளி இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டை, தரமுள்ள ஆதாரம் காட்டி மறுத்தாகி விட்டது! சிந்தனையில் நேர்மையாளர்கள், இனி இந்தப் பொய்யைப் பல இடங்களில் கூறித் திரிய மாட்டார்கள் என்று நம்புகிறேன்!

வரிக்கு வரி பேசி, இந்த வள்ளியின் மையத்தை விட்டு ஒரேயடியாக நகர்வதால், இந்த இழையை இத்தோடு பூட்டுகிறேன்!

(குமரன் இன்னும் சில சொல்லி, பதித்து வைக்க வேண்டி இருப்பதால், அவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறேன்)
---


குமரன் (Kumaran) said...
//பார்பனர்களுடையது உணவு பழக்கம் புலால் மறுத்தல் என்றால் எது எந்த வகைப் பார்பனராக இருந்தாலும் அப்படித்தானே//

இப்படி நான் எங்கும் சொல்லவில்லை. எல்லா பார்ப்பனர்களும் புலால் மறுக்கிறார்கள் என்றோ பார்ப்பனர்கள் மட்டுமே புலால் மறுக்கிறார்கள் என்றோ சொல்லவில்லை. வங்காள பார்ப்பனர்களைப் பற்றி சொன்னதை மறந்துவிடாதீர்கள். அதனால் எந்த வகைப் பார்ப்பனர்களும் புலால் மறுப்பவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொடங்கினால் மீண்டும் சொன்னதையே சொல்ல வேண்டும். உண்மையை உணர்வில் உணர்ந்தவர்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தேவையில்லை. சுத்தி சுத்தி வந்தீங்கன்னு பாட வேண்டுமானாலும் செய்யலாம். இல்லாட்டி செக்கு மாடு சுத்தி வரலாம் ஊர் போய் சேராதுன்னு பாடலாம். :-)

// வீர சைவம் என்பது சாதி பிரிவு, உணவு பிரிவு அல்ல என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
//

ஒப்புக்கொள்கிறேன் என்று முதன்முதலில் படித்தவுடன் புல்லரித்துப் போய்விட்டது. உங்கள் பாணியில் 'பாராட்டுகள்' என்று சொல்லிக் கொள்கிறேன். :-)

நான் சொன்னது வீர சைவம் சமயப் பிரிவு என்று; நீங்கள் சொல்வதோ அது சாதிப்பிரிவு என்று. அதெப்படி சமயப்பிரிவு என்பது சாதிப்பிரிவு என்று உங்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது என்று தெரியவில்லை.

எல்லா சமயங்களிலும் பல சாதிகள் இருப்பது போல் வீரசைவத்திலும் பல சாதிகள் இருக்கின்றன.

//திருவள்ளுவர் சமணாராக / பவுத்தராக இருந்தால் என்ன தவறு ? ஆதாரம் காட்டி சொன்னால் திருவள்ளுவரின் திருக்குறளை மறுத்துவிடப் போகிறீர்களா ? அப்படி இருக்குமோ என்ற நினைப்புக் கூட உங்களுக்கு கசப்பாக இருக்குமோ என்றே உங்கள் எழுத்துக்கள் நினைக்கவைக்கிறது, எனது நினைப்புக் கூட தவறாக இருக்கலாம், தவறென்றால் மன்னியுங்கள். எல்லாம் ஊகம் தான்.//

என் எழுத்துகளைக் கண்டு நீங்கள் நினைப்பது தவறு. அதனால் மன்னிக்கிறேன். :-)

திருவள்ளுவரைத் தங்கள் சமயமாகக் காட்டும் எந்த முயற்சியும் முழுமையாக இல்லை என்பதே இப்போது என்னுடைய கருத்து. இன்னும் நிறைய தரவுகளைக் காணும் போது இந்தக் கருத்து மாறி உணர்வால் உண்மையை அறிந்தவர்களின் ஞானம் எனக்கும் கிட்டலாம். :-)

//இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது, இந்திய சமயங்களின் பொதுப்பெயராக வெள்ளைக்காரன் வைத்தப் பெயர் அவ்வளவுதான். இந்துமதத்தின் புராணங்கள் என்னும் போது அவை எந்த சமயத்தின் புராணங்கள் என்று பார்பதும் தேவையான ஒன்று (பேசும் போதே வேறு ஒன்றை பேசுகிறேன் என்பது இவைதானே) நீங்கள் இந்து இந்து என்று வலிந்து குறிப்பிடுவதால், இதில் சைவம், வைணவம், வடகலை தென்கலை எல்லாம் எங்கிருந்து வந்தது என்றே எனக்கு இப்ப குழப்பமாகப் போய்விட்டது. ஆகவே இந்து மதத்தில் (புராணங்களைப் பற்றி பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஸ்கந்த புராணமும் பேசப்படுகிறது) என்று பொதுவில் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டீர்கள் என்றால் வைணவர்கள் பேசினார்களா ? என்று நான் கேட்கவேண்டி இருக்கும் :) குறிஞ்சி சேயோனுக்கும் வடநாட்டு சுப்ரமணியனுக்கும் போடப் பட்ட முடிச்சிதான் கந்தபுராணம் என்று நினைக்க வைத்துவீட்டீர்கள்//

நான் அறிந்தவரையில் பெயரில்லாமல் இருந்த இந்திய சமய தத்துவங்களுக்கு 'ஹிந்து' என்ற பெயர் சொல்லி அழைத்தது பாரசீகர்கள். 'இவர்கள் எல்லாம் இந்துக்கள். இவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள்' என்று கணக்கெடுப்பின் போது பிரித்தவர்கள் வெள்ளையர்கள். அந்த வேறுபாடு தங்களுக்குத் தெரிந்திருக்கும்; ஆனால் இங்கே அப்படி சொல்லவில்லை நீங்கள். அதனால் எடுத்துக் காட்டுகிறேன். ஏனெனில் 'இன்றைக்கு இந்து மதம் என்று அறியப்படும் மதத்தின் புராணங்கள்' என்று நான் குறிப்பிட எண்ணி அப்படி சொல்லாமல் 'இந்து மதத்தின் புராணங்கள்' என்று சொன்னதை வைத்து அடுத்த புலனத்திற்குள் நீங்கள் நகர்கிறீர்களே அப்படி யாருமே நீங்கள் சொன்னதை வைத்து நகரவேண்டாமே என்று தான். :-)

மற்றபடி இங்கே சொன்னவற்றிற்கு இரவிசங்கர் சொன்ன பதில்களே போதும் என்று நினைக்கிறேன்.
---

குமரன் (Kumaran) said...
//வட இந்தியாவைப் பொறுத்த அளவில் சுப்ரமணியன் பிரம்மச்சாரி, தென்னிந்தியாவில் பிள்ளையார் பிரம்மச்சாரி என்ற கூற்றெல்லாம் பொய்யா ? :)//

கோவி.கண்ணன் ஆழ்வார்.

வட இந்தியா என்பது மிகப்பெரிய நிலப்பகுதி. இங்கே ஒரு சில பகுதிகளில் 'சுப்ரமணியனான குமார ஸ்வாமி' பிரம்மச்சாரியாக அறியப்படலாம். அதற்காக வட இந்தியா முழுமைக்கும் அப்படித் தான் என்று சொல்வது பொய் தான். இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது விளக்குகிறேன்.

தென்னிந்தியாவில் பிள்ளையார் பிரம்மச்சாரி என்று சொல்வதும் அதே போல் தான். தமிழகத்திலேயே இரு மனைவியருடன் 'சித்தி புத்தி விநாயகர்' கோவில்களை நீங்கள் பார்த்ததில்லையா? ஏற்கனவே ஒரு முறை உங்கள் இடுகையில் வடக்கே இரு மனைவிகள் பிள்ளையாருக்கு என்று நீங்கள் சொல்ல அதற்கேன் வடக்கே செல்லவேண்டும்? திருவையாற்றிலேயே பார்க்கலாமே என்று துளசியக்கா சொன்னது நினைவிருக்கிறதா? அதனால் இந்தக் கூற்று முழுக்க முழுக்க பொய்யும் இல்லை; முழுக்க முழுக்க உண்மையும் இல்லை.

உங்கள் பதிவிலிருந்து இதோ நான் குறிப்பிடும் பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் 12:30 PM, April 23, 2008
//துளசி கோபால் said...
பிள்ளையார் கோவிலில் Auntyயா?

எங்கே? :-)
//

துளசி அம்மா,

இருக்கக் கூடாதா ? வடநாட்டு பிள்ளையார் கோவிலில் சித்தி, புத்தி என இரண்டு aunty கள் பிள்ளையாருக்கு வல, இடபுறமாக இருக்கிறார்களாமே !
:)

துளசி கோபால் 12:36 PM, April 23, 2008
அடடே....இந்த auntyகளா? இதுக்கு எதுக்கு வடநாடு?

தென்னாட்டுலேயே திருவையாறு கோயிலில் இருக்காங்களே:-))))

http://govikannan.blogspot.com/2008/04/blog-post_6974.html
---

குமரன் (Kumaran) said...
//அவை கட்டுகதையே ஆனாலும் அவற்றைப் பற்றிய இலக்கியங்கள் தமிழ் நிலம், தமிழர் பழக்கம் சார்ந்தே அமைக்கப்பட்டு இருக்கிறது என்றே கருதவேண்டி இருக்கிறது//

சிவத்தமிழோனுக்குச் சொன்ன பதிலில் இதனைப் பற்றி விலாவாரியாகப் பேசியிருக்கிறேன். இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

//சங்க இலக்கியத்தில் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் நான் முடிவு செய்து கொள்வது இல்லை.//

இது நழுவல். எங்காவது அப்படி சொல்லியிருக்கிறோமா? ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள சங்க நூற்களின் தரவு போதுமானதாக இருக்கும் போது மற்ற பகுதிகளையும் ஏற்றுக் கொள்ள அதே நூற்களில் தரவுகள் இருக்கின்றனவே என்கிறோம். கட்டுக்கதை என்றால் இரண்டையும் தள்ள வேண்டுமே என்றோம். அவ்வளவே. சங்க இலக்கியத்தில் இருப்பதால் அவற்றை கட்டுக்கதை இல்லை; முழு உண்மை என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை.

இந்த மாதிரி இடத்தில் தான் நீங்கள் 'தரவுகள்' 'தரவுகளைத் தாண்டியது' என்ற வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். 'தமிழர்களிடம் இந்த நம்பிக்கை இருந்ததே இல்லை' என்னும் போது அதனை மறுத்து 'இதோ தரவுகள்' என்றோ 'அப்படி இருந்ததே இல்லை என்பதற்கு என்ன தரவுகள்' என்றோ சொல்கிறோம். 'எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை' என்னும் போது தரவுகள் கொடுப்பதும் இல்லை; கேட்பதும் இல்லை. இப்படியே ஒவ்வொரு இடமாக இந்த வேறுபாட்டைப் பற்றி சொல்லலாம்.
---

குமரன் (Kumaran) said...
//ஸ்கந்தனுக்கு வடநாட்டில் கிருஷ்ணனுக்கு இருப்பது போல் அறியப்பட்ட கோவில்கள் இருந்தால் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன்.//

இந்தக் கேள்வியின் பயன் என்ன என்று தெரியவில்லை. பலராமனுக்குத் தென்னாட்டில் கோவிலே இருந்ததில்லை என்று ஒருவர் சொன்னால், அதனை மறுத்து சங்க இலக்கியங்களில் இருந்து தரவுகள் காட்டுவோம்; உடனே அவர் இப்போது எங்கே பலராமன் கோவில்கள் என்று கேட்டால்? எங்கே செல்வது? இப்போது தமிழகத்தில் பலராமன் கோவில்கள் என்று அறியப்படுபவை இல்லாததால் சங்க இலக்கிய தரவுகள் பொய்யாகிவிடுமா? சங்க காலத்தில் தமிழகத்தில் பலராமன் வழிபாடு இருந்தது பொய்யாகிவிடுமா? பலராமனுக்குத் தென்னாட்டில் கோவிலே இருந்ததில்லை என்ற உளரல் தான் மெய்யாகிவிடுமா? புரிந்து கொள்ள மனமிருந்தால் புரியும்.

நீங்கள் கேட்ட கேள்விகளில் இரு நிலைகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். முதல் நிலை 'வட இந்தியாவில் முருகனுக்கு/சுப்ரமணியனுக்கு/ஸ்கந்தனுக்கு கோவில்களே இல்லை. இருந்தால் பட்டியல் இடுங்கள்' என்ற சவால். இரண்டாவது நிலை மேலே சொன்னது போல் 'வட இந்தியாவில் முருகனுக்குக் கோவில்களே இல்லாததால் எந்தக் காலத்திலும் முருக வழிபாடு வடக்கே இருந்ததில்லை. அது தமிழகத்திற்கு/தென்னாட்டிற்கு மட்டுமே உரியது' என்று சொல்லவருவது. வாலியோன் வழிபாட்டைப் பற்றி மேலே சொன்ன பதிலையே இங்கே சொல்லிவிட்டுச் செல்லலாம். ஆனால் கொஞ்சம் பேச வேண்டும் என்று ஆசை. :-)

வட இந்திய முருகன் கோவில்களின் பட்டியல் (முழுமையானது இல்லை. எடுத்துக்காட்டாகத் தரும் அரைகுறைப்பட்டியல் தான்):

ஹரியானாவில் பெஹோவா
பஞ்சாபில் பாடலா அருகில் இருக்கும் அசலேஸ்வரம்
மஹாராஷ்ட்ராவில் புனேவில் இருக்கும் பார்வதி குன்று
வங்காளத்தில் பல இடங்களில்

-------

வட இந்தியாவில்/வடமொழியில் முருகனை/சுப்ரமணியனை/ஸ்கந்தனைப் பற்றிய குறிப்புகள்:

ஸ்கந்த புராணம்
பகவத் கீதையில் கிருஷ்ணன் தன்னை 'சேனாபதிகளில் ஸ்கந்தன்' என்று சொல்வது
குமார குப்தன், ஸ்கந்த குப்தன் என்ற குப்த மன்னர்கள்
காளிதாசனின் குமாரசம்பவம்

உடனே நினைவிற்கு வருபவை இவை மட்டுமே.
---

குமரன் (Kumaran) said...
களவு மணம் என்பது தமிழர் பண்பாட்டில் மட்டுமே உள்ளது என்பது தவறு. இரவிசங்கரும் சொல்லியிருக்கிறார். காந்தர்வ விவாகம் செய்து கொண்டவர்கள் பற்றி வடமொழி நூற்களில் நிறைய தரவுகள் உண்டு.