Showing posts with label ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால். Show all posts
Showing posts with label ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால். Show all posts

Wednesday, October 27, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 2





'நாணமும் இல்லை. ஆண்மையும் இல்லை. இரண்டுமே காதல் என்னும் கடும்புனலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. என் காதல் நிறைவேற மடல் ஏறியே தீருவேன்' என்று சொல்லிக் கொண்டே வரும் காதலன் வாய்மொழியாக இன்னும் சில குறள்கள் இந்த அதிகாரத்தில் இருக்கின்றன.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண்.


என் காதலியை நினைத்து நினைத்து எல்லோரும் உறங்கும் இரவிலும் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் மடல் ஊர்தலைப் பற்றி நடு இரவிலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் - மடல் ஏறுவதைப் பற்றி நடு இரவிலும் நினைப்பேன்

மன்ற - உறுதியாக

படல் ஒல்லா பேதைக்கு என் கண் - பேதையான என் காதலியை எண்ணி என் கண்கள் மூடாது.

'மடல் ஏறுவேன் மடல் ஏறுவேன் என்கிறீர்களே. இதோ பொழுது கழிந்துவிட்டது. இனி மேல் எப்படி மடல் ஏறப் போகிறீர்?' என்று வினவிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'பொழுது சாய்ந்துவிட்டது; இரவு வந்துவிட்டது என்று ஊரார் வேண்டுமானால் உறங்கலாம். ஆனால் என் காதலியின் நினைவால் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் நள்ளிரவானாலும் மடல் ஏறுதல் பற்றி நான் நினைக்கிறேன். அதனை செயல்படுத்தவும் செய்வேன்' என்றான்.

இன்றைக்குப் போய் நாளை வாரும்; தலைவியைக் காணலாம் என்று தோழி சொல்லாமல் இப்போதே இருவரையும் கூட்டி வைக்க வேண்டும் என்பது காதலன் நோக்கம். அதனால் நடு இரவானாலும் நீ எங்களைச் சேர்த்து வைக்கவில்லை என்றால் மடலேறுவேன் என்கிறான்.

***

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


கடல் போலக் கரையற்ற காதல் நோயால் வருந்தினாலும் அதை நீக்குவதற்காக மடல் ஏறத் துணியாத பெண்ணினத்தைப் போல் பெருமையுடையது எதுவுமே இல்லை.

கடல் அன்ன காமம் உழந்தும் - கடலைப் போல் கரையில்லாத காதல் நோய் உற்று வருந்தினாலும்

மடல் ஏறாப் - மடல் ஏறுவதைப் பற்றி எண்ணாத

பெண்ணில் பெருந்தக்கது இல் - பெண்ணைப் போல் பெருமையுடைய ஒன்று இல்லை.

'பேதை என்று எங்கள் தலைவியைச் சொன்னீரே. பேதையர் அன்றோ காம நோயால் வருந்தி மடல் ஏறத் துணிவார்கள். பேரறிவினராகிய நீர் அப்படி மடல் ஏறத் துணியலாமா? அது உம் அறிவுண்மைக்குப் பொருந்துமா?' என்று தோழி கேட்க, 'பெண்களைப் போல் பெருமையுடைய இனம் இல்லை. கடல் போல் காதல் நோய் இருந்தாலும் அதனை நீக்க பெண்கள் மடலேறுவதில்லை. நான் பெருமை மிக்க பெண்ணினத்தைச் சேர்ந்தவன் இல்லை. அதனாலே தான் என்னால் இத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை' என்றான் காதலன்.

***



தன் காதல் எப்படி எல்லாம் தன்னையும் தன் நாணத்தையும் மீறி வெளிப்படுகின்றது என்று தலைவி சொல்வதாக அமைகின்றன அடுத்து வரும் குறட்பாக்கள்.

நிறை அரியர் மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும்.


எனது காதல் பெருக்கு, நற்குணங்கள் உள்ளவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் நினைக்காது; எளியவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று நினைக்காது. என்னையும் என் நாணத்தையும் மீறி என் காதல் மறைவாக இருந்த நிலை நீங்கி ஊரறிய மன்றத்தில் ஏறும்.

நிறை அரியர் மன் - குணங்களால் சிறந்தவர் அதனால் அரியவர் (என்றோ)

அளியர் - எளியவர் (என்றோ)

என்னாது - என்று நினைக்காது

காமம் - என் காதல்

மறை இறந்து - மறைவிலிருந்து நீங்கி

மன்று படும் - எல்லோரும் அறிய வெளிப்படும்

நற்குணங்கள், நல்ல பண்புகள் உடையவரைக் காம நோய் 'இவர்கள் அரியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இல்லையேல் 'எளியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இவ்விரண்டும் இங்கே நடக்கவில்லை. இவளது நிறை எல்லாம் நீங்கும் படி ஊரார் அறிய இவள் காதல் தானே வெளிப்படுகிறது.

***

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.


இப்படியே மறைந்து இருந்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணியோ என்னவோ என் காம நோய் இவ்வூரின் நடுவே வெளிப்பட்டு அம்பலும் அலரும் ஆயிற்று.

அறிகிலார் எல்லாரும் என்றே - எல்லோரும் அறியவில்லை என்று எண்ணிக் கொண்டு

என் காமம் - என் காதல்

மறுகின் மறுகும் மருண்டு - என்னையும் மீறி மிகவும் வேகவேகமாக வெளிப்பட்டுவிட்டது

காதல் நோய் எத்தனை தான் மீறினாலும் என் நாணத்தால் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தேன். இப்படியே மறைவாகவே இருந்தால் யாரும் என் காதலை அறியமாட்டார்கள் என்று நினைத்ததோ என்னவோ என் காதல். ஊரார் அறிய மன்றுபட்டது.

***


யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாதவாறு.


என் கண்ணெதிரேயே என் காதலைக் குறித்து நான் பட்ட பாடு தான் படாத அறிவில்லாதவர் நகைக்கின்றார்கள்.

யாம் கண்ணின் காண நகுப - நான் கண்ணால் காணும் படி நகைக்கிறார்கள்

அறிவில்லார் - அறிவில்லாதவர்கள்

யாம் பட்ட தாம் படாதவாறு - நான் படுவதை அவர்கள் படாததால்

'அலர் தூற்றுவது மட்டும் இல்லை. நான் காணவே என் கண் எதிரேயே சிலர் நகுகின்றார்கள். நான் பட்ட பாடு அவர்கள் பட்டிருந்தால் காதல் நோயின் கடுமை பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கும். அந்த அறிவு இல்லாததால் தான் இப்படி நகைக்கிறார்கள்' என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள் தலைவி.

'என் உணர்வுகளை நீ அறிய மாட்டாய். ஏனென்றால் நானல்ல நீ' என்று சொல்வது போல் ஏதோ ஒரு அண்மைக்கால பாட்டும் வருமே? பாடல் வரிகள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா?

Saturday, October 23, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 1




வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாலோ ஊரார் பழிச்சொற்களை அஞ்சியோ தலைவியைக் காண முடியாமல் தவிக்கும் தலைவன், தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்று கூறுவது 'நாணுத்துறவுரைத்தல்' என்னும் இந்த அதிகாரம்.

***

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி.

காதல் மிகுந்ததால் வருந்தி காதலியைக் காண முயன்றும் இயலாதவருக்கு தமது உயிரைக் காக்கும் காப்பாக அமைகின்றவற்றில் மடல் ஏறுதலே மிகுந்த வலிமையுடையதாகும்.

காமம் உழந்து வருந்தினார்க்கு - காதல் மிகுந்து முயன்று வருந்தியவர்களுக்கு

ஏமம் - காப்பாக அமைவதில்

மடல் அல்லது இல்லை வலி - மடலை விட வலிமையானது இல்லை.

காதலன் கூற்றாக அமைகிறது முதல் குறள். காதலியைக் கண்டு இயற்கைப் புணர்ச்சியில் மகிழ்ந்து காலம் கழிக்க உதவியாக இருந்த தோழி இப்போது அந்த உதவியைச் செய்ய மறுத்த போது காதல் நோயால் மிகுந்த துன்பம் கொண்ட தலைவன் மடல் ஏறுவதை விட வேறு வழி தனக்கு இல்லை என்று கூறுகிறான்.

தலைவி காவலில் இருந்தாலும் தோழியின் உதவி இருந்தால் காவலைக் கடந்து தனது காதலியைக் காண்பான் தலைவன். பெற்றோரும் உற்றோரும் அறியாமல் தலைவனும் தலைவியும் சேர்ந்து வீட்டை விட்டுச் செல்வதற்கும் (உடன்போக்கு) தோழியின் உதவி வேண்டும். இப்படி காதல் மிகுந்து வாடுபவர்களுக்கு காப்பாக அமையும் சில வழிகள் உண்டு. இங்கே அவை பயன் தராமையால் மடல் ஏறுவதே சிறந்த காப்பு. அதனால் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்கிறான் காதலன்.

***

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.


காதலியின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்காத உடம்பும் உயிரும் நாணத்தை நீக்கி வேறிடத்தே நிறுத்திவிட்டு மடல் ஏறும்.

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - பொறுக்க முடியாத உடம்பும் உயிரும் மடல் ஏறும்

நாணினை நீக்கி நிறுத்து - நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு.

'ஊராரின் மதிப்பில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர். அந்த மதிப்பை இழக்கும் படி உமது நாணத்தை விட்டுவிட்டு உம்மால் மடல் ஏற இயலாது' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'காதல் மிகுதியால் பிரிவுத்துன்பம் மேலிட்டு என் உடலுடன் உயிர் நிற்காது போலிருக்கிறது. அதனால் எனது நாணத்தை தனியே நீக்கி நிறுத்திவிட்டு உயிரும் தூண்ட உயிரும் உடலும் இரண்டுமே சேர்ந்து மடல் ஏறும். இது உறுதி' என்றான் காதலன்.

நாணம் உடலைக் கூனிக் குறுகச் செய்யும். ஆனால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே மடல் ஏறத் துணிந்துவிட்டன என்கிறான் காதலன்.

***



நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

நாணமும் நல்ல ஆண்மைக்குணமும் முன்பு உடையவனாக இருந்தேன். ஆனால் இன்றோ காதலில் துன்பப்படுபவர்கள் ஏறும் மடல் என்பதை மட்டுமே உடையவனாக ஆனேன்.

நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணத்தொடு நல்லாண்மையும் முன்னர் உடையவனாக இருந்தேன்.

இன்று உடையேன் காமுற்றார் ஏறும் மடல் - இன்றோ காதல் கொண்டவர்கள் ஏறும் மடலை உடையவனாக இருக்கிறேன்.

'இழிவிற்கு அஞ்சும் நாணத்தை மட்டுமே உம்மால் விட இயலும். ஒன்றிற்கும் தளராத ஆண்மைக் குணம் உம்மிடம் இருக்கிறது. அதனால் காதல் துன்பத்தால் தளர மாட்டீர். மடலும் ஏற மாட்டீர்' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறும் மறுமொழி இது.

'நாணத்தையும் எதற்கும் தளராத ஆண்மையையும் உடையவனாக முன்னர் இருந்தேன். ஆனால் இப்போதோ காதலியின் பிரிவால் நாணத்தையும் ஆண்மைக் குணத்தையும் இழந்து காதலர்களின் ஒரே கதியான மடல் ஏறுதல் மட்டுமே உடையவனாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் காதலன்.

***



காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாண், நல்லாண்மை என்னும் படகுகளை காதல் என்னும் காட்டுவெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே.

காமக் கடும்புனல் - காதல் என்னும் கடுமையான வெள்ளம்

உய்க்குமே - அடித்துக் கொண்டு செல்லுமே

நாணொடு நல்லாண்மை என்னும் புணை - நாணத்தொடு ஆண்மை என்னும் மிதவைகளை.


'எல்லா துன்பங்களையும் உமது நாணம், எதற்கும் தளராத ஆண்மை என்னும் குணங்களால் தாண்டுவீர்களே' என்ற தோழியிடம் 'நாணம், நல்ல ஆண்மை என்னும் மிதவைகள் வேறு ஆறுகளைக் கடப்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். இந்த காதல் என்னும் காட்டு வெள்ளத்தைக் கடப்பதற்கு உதவவில்லை. இந்தக் கடும்புனல் அவற்றை அடித்துக் கொண்டு செல்கிறது' என்று கூறினான் காதலன்.

***

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய என் காதலி தான் மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயரத்தையும் அந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல் ஏறும் மடலையும் தந்தாள்.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் - மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய தலைவி தந்தாள்

மடலொடு - மடல் ஏறுதலுடன்

மாலை உழக்கும் துயர் - மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயர்.

'நாணத்தையும் ஆண்மையையும் விடும்படியான இந்த நிலைமையை நீர் எப்படி அடைந்தீர்?' என்று வியந்த தோழியிடம் 'இந்தத் துன்பத்தையும் மடலேறும் துணிவையும் தந்தவள் உன் தலைவி தான்' என்று சொல்கிறான் தலைவன்.

காதல் நோய் எல்லா நேரத்திலும் துன்பத்தைக் கொடுத்தாலும் மாலை நேரத்தில் மிகுதியான துன்பத்தைக் கொடுக்கும் என்பதால் அதனை 'மாலை உழக்கும் துயர்' என்றான் தலைவன்.

தலைவி மிகவும் மென்மையானவள் என்றும், அவள் தானே ஒன்றைச் செய்யும் வயதினள் இல்லை; தோழியின் காவலில் இருக்கும் இளவயதினள் என்றும் கூறுவதற்காக மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையலை அணிந்தவள் என்று தலைவியைக் குறித்தான். அவள் தந்த நோயை அவளே போக்க வேண்டும். அவள் தோழியின் காவலில் இருப்பதால் தோழியே அதற்கு உதவ வேண்டும் என்று குறிப்பால் வேண்டினான்.

(தொடரும்)

Friday, October 15, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - முன்னுரை

தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் அளவில்லாத காதல் கொண்டு, தாய் தந்தையர் உற்றார் உறவினர் ஊரார் என யாரும் அறியாமல், சில நேரங்களில் நெருங்கிய தோழியர்களும் அறியாமல், திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழ்வது சங்க காலத்தில் ஏற்கப்பட்ட இலக்கிய மரபாக இருந்தது. அதனைக் களவியல் என்றார்கள். அனைவரும் அறிய மணம் செய்து கொண்டு வாழ்ந்ததை கற்பியல் என்றார்கள்.

தமிழ்ப்பெருந்தெய்வங்களான கண்ணனும் முருகனும் இரு வகைகளிலும் திருமணம் செய்திருப்பதாகச் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தொழுனைக் கரையில் அண்டர் மகளிரை கண்ணன் களவு மணம் செய்ததையும் ஏறுகள் ஏழினைத் தழுவி நப்பின்னையைக் கற்பு மணம் செய்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதே போல் முருகன் வள்ளியை களவு மணம் புரிந்ததையும் கற்பின் வாணுதலான தேவசேனையை கற்பு மணம் புரிந்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ்க்கடவுளர்கள் இருவரும் இவ்விரு வகை மணங்களும் செய்திருக்கும் செய்தி இவ்விரு வகை மணங்களும் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தன என்பதை காட்டுகிறது.

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வகைகளில் பாக்களை உடைய வள்ளுவத்தை இயல்களாகவும் முன்னோர் பகுத்து வைத்திருக்கிறார்கள். இன்பத்துப்பாலில் அப்படி அமைந்த இயல்கள் இரண்டு - களவியல், கற்பியல்.

இது வரை இந்தத் தொடரில் களவியலில் அமைந்த 'காதற்சிறப்பு உரைத்தல்' என்ற அதிகாரம் வரை பொருள் கண்டோம். அந்த அதிகாரத்தில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே உள்ள அளவில்லாத அன்பைக் காதலை உரைக்கும் அவர்களின் வாய்சொற்களைக் கண்டோம்.

களவியலில் நாட்கள் மகிழ்வுடன் சென்றன அவ்விருவருக்கும். அரசல் புரசலாக ஊராருக்கு இவர்களின் களவொழுக்கம் தெரிய வந்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் அலர் பேசத் தொடங்கினர்; அதாவது சாடைமாடையாகக் கேலி பேசத் தொடங்கினர். அதுவரையில் இவ்விருவரும் இணைந்து இன்பம் துய்ப்பதற்கு உதவியாக இருந்த தோழியும் இவர்கள் சந்திப்பைத் தடுக்கத் தொடங்கினாள். பிரிவினால் காதலர்களின் காதல் பெருகியதே ஒழிய குறையவில்லை.

சங்க காலத்தில் இப்படி பிரிவினால் வருந்திய காதலன் தனது காதல் நோய் தீர மடலேறுதல் என்றொரு வழியைப் பின்பற்றியதாக இலக்கிய மரபு கூறுகிறது. ஊரார் கேலி பேசுவார்களே என்று எண்ணி நாணாமல் அந்த நாணத்தைத் துறந்து மடலேறுவேன் என்று கூறிய வாய்மொழிகளைக் கூறும் அதிகாரம் என்பதால் இந்த அதிகாரத்திற்கு 'நாணுத்துறவுரைத்தல்' என்ற பெயர் அமைந்தது.

மடல் என்றால் என்ன? அதில் ஏறுதல் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

பனை மரத்தின் மட்டையைத் தான் மடல் என்றார்கள். அது இரண்டு பக்கமும் கூராக இருக்கும். குதிரையின் உருவத்தை அந்த கூரான பனை மட்டைகளால் செய்து, கீழே உருளை வைத்து, அதனை உருட்டிக் கொண்டு ஒரு நாற்சந்தியில் நிறுத்தி, அதன் மேல் ஏறி அமர்ந்து கொள்வான் காதலன். அப்போது அவன் மானத்தை மறைக்கும் அளவிற்கு ஆன உடையை மட்டுமே அணிந்திருப்பான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்பான். கையில் காதலியின் உருவத்தை வரைந்த ஓவியத்தை வைத்துக் கொண்டு அதனையே பார்த்துக் கொண்டிருப்பான். சில நேரம் காதலன் ஏறி அமர்ந்திருக்கும் அந்த மடற்குதிரையைச் சிறுவர்கள் தெருத் தெருவாக இழுத்துச் செல்வார்கள்.

இப்படி நாணத்தை விட்டு தன் காதலை ஊரறிய வெளிப்படுத்தி மடலேறிய காதலனைக் கண்ட ஊரார்கள் அவனது அடக்க இயலா காதலை உணர்ந்து காதலியின் வீட்டாருடன் பேசி இருவரையும் இணைத்து வைப்பார்கள்.

மடலேறுவேன் என்று காதலன் கூறுவதும் மடலேறாதே என்று தோழி மறுத்துரைப்பதும் என்றே தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலான இடங்களில் வந்துள்ளது. அதனால் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் இந்த மரபு உண்மையில் இருந்திருக்கலாம்; ஆனால் சங்க காலத்தில் அதனைப் பேசுவது மட்டுமே மரபாக இருந்திருக்கும் என்று தேவநேயப் பாவாணர் எண்ணுகிறார்.

இருக்கலாம். ஆனால் 'காதலன் சும்மா பயமுறுத்துகிறான். உண்மையிலேயே மடல் ஏறும் மரபு இப்போது இல்லை' என்று தோழிக்குத் தெரிந்திருந்தால் அவள் மீண்டும் மீண்டும் காதலனிடம் மடலேறாதே என்று மறுத்துரைத்திருக்க மாட்டாள். இலக்கியங்களில் அப்படி மறுத்துக் கூறுதல் மீண்டும் மீண்டும் வருவதால் அப்படி ஏறிய காதலர்கள் சில பேராவது இருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். பேதையர் என்று பெண்களைச் சொன்னாலும் வெற்றுப் பயமுறுத்தலுக்கெல்லாம் பயப்படும் அளவிற்குச் சங்க கால மகளிர் பேதையர்களாக இருந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.

நாணுத்துறவுரைத்தல் என்ற இந்த அதிகாரத்தில் சில குறட்பாக்கள் காதலன் கூறுவதாகவும் சில குறட்பாக்கள் காதலி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதிகளில் அந்த குறட்பாக்களையும் அவற்றின் பொருட்களையும் பார்ப்போம்.

அன்பன்,
குமரன்.

குறிப்பு: இந்த முன்னுரை பிடித்திருக்கிறதா? இது போல் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன் முன்னுரை வேண்டுமா? இன்பத்துப்பால் அதிகாரங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை பார்க்க இயலும் என்று நினைக்கிறேன். அந்த இடைவெளி சரியான இடைவெளி தானா? இடைவெளியைக் குறைக்க வேண்டுமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Thursday, July 01, 2010

இன்பத்துப் பால் : காதற் சிறப்பு உரைத்தல் - 2

காதலன் தன் காதலின் சிறப்பை உரைத்த குறட்பாக்களைச் சென்ற இடுகையில் பார்த்தோம். காதலி தன் காதலின் சிறப்பைக் கூறும் குறட்பாக்களை இங்கே பார்க்கப் போகிறோம்.
***

கண் உள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர்.

எனது கண்களில் இருந்து போகமாட்டார். நான் இமைத்தாலும் வருந்தமாட்டார். அவ்வளவு நுண்ணியவர் எனது காதலர்.

கண் உள்ளின் போகார் - எனது கண்களிலிருந்து நீங்க மாட்டார்

இமைப்பின் பருவரார் - நான் எப்போதாவது இமைத்தேன் என்றாலும் கண்ணில் இருக்கும் அவர் எந்த வருத்தமும்/துன்பமும் அடைய மாட்டார்.

நுண்ணியர் எம் காதலவர் - அப்படிப்பட்ட என்னைத் தவிர மற்றவர் கண்களுக்குப் புலப்படாத நுண்ணியவர் எம் காதலர்.

அலர் எழுந்ததை ஒட்டி அது தணியும் வரை தலைவியைப் பார்க்கத் தலைவன் வரவில்லை. அதனால் தலைவி தன் இயல்பு நிலை மாறி வருந்துவாளோ என்று தோழி நினைத்தாள். அதனை உணர்ந்து தலைவி சொல்வது இந்தக் குறள்.

உங்கள் கண்களுக்கு எல்லாம் அவர் தெரியாத நுண்மையுடையவராக இருப்பதால் அவர் இங்கே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவர் என்றும் என் கண்ணை விட்டு நீங்காதவர். என்றுமே இங்கேயே என் கண்ணிலேயே இருப்பவர். நான் எப்போதாவது இமைத்தாலும் அவர் நீங்குவதில்லை.

உங்களுக்கெல்லாம் அவர் இங்கே இருப்பதே தெரியாமல் அவர் இங்கே இருப்பதைப் பார்த்தால் என் காதலர் மிகவும் நுண்ணிய அறிவினை உடையவர் என்றும் தெரிகிறது!

***

கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கறிந்து.

எனது கண்களிலேயே என் காதலர் இருப்பதால் தான் நான் கண்ணில் மை தீட்டி அழகுபடுத்துவதும் இல்லை. அப்படியிருக்க அவர் இங்கே வராமல் மறைந்தார் என்பது எப்படி?

கண்ணுள்ளார் காதலவராக - என் காதலர் என் கண்ணில் இருக்க

கண்ணும் எழுதேம் - கண்களுக்கு மையிடவும் மாட்டேன்

கரப்பாக்கறிந்து - அதனால் அவர் மறைதலும் இல்லை என்று அறிவேன்

அவர் மறைந்துவிடுவாரோ என்று கண்ணெழுதவில்லை என்றும் சொல்லலாம்.

காதலர் கண்களுக்குள்ளேயே இருப்பதால் எனக்கு மையிடவும் நேரமில்லை என்றும் சொல்லலாம்.

***

நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கறிந்து.

என் காதலர் எனது நெஞ்சில் இருப்பதால் அவருக்குச் சுடும் என்று சூடான உணவுகளை நான் உண்பதில்லை.

நெஞ்சத்தார் காதலவராக - என் காதலர் என் நெஞ்சில் இருக்க

வெய்துண்டல் - சூடான உணவு உண்பதை

அஞ்சுதும் - அஞ்சுவேன்

வேபாக்கறிந்து - அவரை வெந்துவிடுமோ என்று.

எப்போதும் என் நெஞ்சில் இருப்பவரை அலரால் பிரிந்து சென்றார் என்று சொல்வது எப்படி என்று கேட்கிறாள் காதலி.

காதலனின் பிரிவால் காதலி உணவுண்ணவில்லை என்று எண்ணிய தோழிக்கு மறுத்துக் கூறி அவர் எப்போதும் என் நெஞ்சில் இருக்கிறார்; அதனால் சூடான உணவை உண்ணவில்லை என்று கூறினாள் காதலி.

***

இமைப்பில் கரப்பாக்கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ்வூர்.

இமைத்தால் மறைந்துவிடுவார் என் காதலர் என்றெண்ணி நான் இமைக்காமல் இருக்கிறேன்; ஆனால் அவர் பிரிவினால் எனக்கு தூங்காநோய் தந்தார் அன்பில்லாதவர் என்று அவரைக் குறை கூறுகிறார்கள் ஊரார்.

இமைப்பில் கரப்பாக்கறிவல் - இமைத்தால் மறைவார் என்று அறிந்து (இமைக்கமாட்டேன்)

அனைத்திற்கே - அதற்கே

ஏதிலர் என்னும் இவ்வூர் - (அவர் என் மேல்) அன்பில்லாதவர் என்று சொல்கிறது இவ்வூர்.

எப்போதும் தலைவனைக் கண்ணிலும் நெஞ்சிலும் தாங்கும் தன் உணர்வினைப் புரிந்து கொள்ளாமல் அவன் அலரினால் வரவில்லை என்று சொல்லும் தோழியையும் பிறராக எண்ணி 'இவ்வூர்' என்று அவளையும் சேர்த்துச் சொல்கிறார் தலைவி.

***

உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இவ்வூர்.

என் காதலர் என்றும் என் உள்ளத்துள்ளே மகிழ்ந்து நிலையாக வாழ்வார். அதனை உணராது இவ்வூரார்கள் அவர் என்னைப் பிரிந்து வாழ்கிறார் என்றும் என் மேல் அன்பில்லாதவர் என்றும் சொல்கின்றனர்.

உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் - எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கிறார்

இகந்து உறைவர் - பிரிந்து வாழ்கிறார்

ஏதிலர் - எந்தவித அன்பும் (என் மேல்) இல்லாதவர்

என்னும் இவ்வூர் - என்கிறார்கள் இவ்வூர் மக்கள்.


***

இத்துடன் இந்த அதிகாரம் நிறைவு பெற்றது.

Tuesday, June 29, 2010

இன்பத்துப் பால்: காதற் சிறப்பு உரைத்தல் – 1

தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலின் சிறப்பைச் சொல்லும் அதிகாரம் இது. முதல் ஐந்து குறட்பாக்களும் காதலன் கூறுவதாகவும் அடுத்த ஐந்து குறட்பாக்களும் காதலி கூறுவதாகவும் அமைத்திருக்கிறார் வள்ளுவர் பெருமான்.

***

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்.

இந்த மென்மையாகப் பேசி மனத்திற்கு இனிமை சேர்க்கும் இந்தப் பெண்ணின் வெண்ணிறப் பற்களில் ஊறிய எச்சில் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது.

பாலொடு தேன் கலந்து அற்றே - பாலும் தேனும் கலந்தது போல் உள்ளதே

பணிமொழி - இனிமையும் மென்மையும் கூடிய சொற்களை உடைய பெண்

வால் - வெண்மையான

எயிறு - பற்களில்

ஊறிய நீர்.

இயல்பாக எச்சில் விலக்கத்தக்கது; வெறுக்கத்தக்கது. எச்சில்பண்டத்தை யாரும் உண்ண விரும்ப மாட்டார்கள். ஆனால் காதலர்கள் நடுவில் அதே எச்சிலே அமுதமாக ஆகிவிடுவதைக் காண்கிறோம். சொல்லும் மொழியும் தோன்றும் காலத்திற்கு முன்பிருந்தே இதே நிலை தான் போலும். வள்ளுவர் காலத்திலும் அப்படியே இருந்திருக்கிறது.


காதலியின் வாயில் ஊறிய நீர் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது அவள் வெண்மையான பற்களில் ஊறி ஊறி மிக்கச் சுவை பெற்றது போல் இருக்கிறது காதலனுக்கு.

பால் மட்டும் தனித்து உண்டால் அதில் உள்ள இனிமை குறைவாக இருப்பதால் நிறைய அருந்தத் தோன்றாது. தேன் மட்டும் தனியாக உண்டால் அதன் இனிமை மிகுதியாக இருப்பதால் அதிகம் அருந்த முடியாமல் திகட்டும். ஆனால் பாலும் தேனும் கலந்த போது இரு இனிமைகளும் ஒன்றுடன் ஒன்று கூடி அருந்தக் கூடிய இனிமை பெற்று அருந்த அருந்தத் திகட்டாதத் தித்திப்பைக் கொண்டிருக்கும்.

பாலை மட்டும் இவள் வால் எயிறு ஊறிய நீருக்கு ஒப்பாகக் கூறினாலோ தேனை மட்டும் கூறினாலோ இவள் வாய் அமுதம் உண்ணுவதில் காதலனுக்குச் சலிப்பு ஏற்படலாம் என்ற குறிப்பு கிடைக்கும். இங்கே பாலும் தேனும் கலந்தது போல் இருக்கிறது இவள் வால் எயிறு ஊறிய நீர் என்று சொன்னதால் இவள் வாய் அமுதம் உண்பதில் இவனுக்கு சலிப்பே ஏற்படுவதில்லை; தொடர்ந்து அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தருகின்றது என்ற குறிப்பு கிடைக்கிறது.

***

உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள காதல் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள காதல்.

உடம்பொடு உயிர் இடை என்ன - உடம்புக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் காதல் எப்படிப்பட்டதோ

அன்ன - அப்படிப்பட்டது

மடந்தையொடு எம்மிடை - கள்ளம் கபடமில்லாத இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் இடையில் உள்ள

நட்பு - காதல். நள்ளுதல் என்றால் அன்பு கொள்ளுதல். அந்த வகையில் நட்பு என்ற சொல் முதலில் காதலைக் குறித்துப் பின்னர் அதன் நீட்சியாக நண்பர்கள் இடையே ஆன நட்பினையும் குறித்தது. முக நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அக நக நட்பதே நட்பு - என்ற குறளில் நட்பு என்பதற்கு காதல் என்ற பொருள் கொண்டால் அந்தக் குறளின் சுவை கூடுவதை உணரலாம்.

இயற்கைப் புணர்ச்சியின் பின்னர் 'இவன் பிரிந்துவிடுவானோ?', 'சென்றால் திரும்பி வருவானோ?' என்று கவலை கொள்கிறாள் காதலி என்பதைக் குறிப்பால் உணர்ந்த காதலன் 'பிரியேன். அப்படிப் பிரிந்து சென்றால் உயிர் தரியேன்' என்று சொல்கிறான் இங்கே.

உயிருக்கும் உடலுக்கும் இடையில் உள்ள நட்பு தொன்று தொட்டு வருவது. தொடக்கம் முதல் பிரியாமல் வருவது. இன்ப துன்பங்களை ஒன்றாக நுகரக்கூடியது. ஒன்று இருப்பதற்கு மற்றொன்று இன்றியமையாததாக இருப்பது. அப்படியே நமது காதலும் பிரியாதது; இன்ப துன்பங்களை ஒன்றாக நுகரக்கூடியது; ஒருவரின்றி மற்றவர் வாழ இயலாதது என்று கூறி தலைமகளின் மனக்குழப்பத்தை நீக்குகிறான் தலைமகன்.

***

கருமணியில் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் இருக்கும் உருவமே! நீ வெளியே வருவாய். நீ அங்கேயே இருந்தால் நான் விரும்பும் அழகுள்ள நெற்றியை உடைய என் காதலிக்கு இடம் இருக்காது.

கருமணியில் பாவாய் - கண்ணின் கருமணியில் தெரியும் உருவமே!

நீ போதாய் - நீ வெளியே வா!

யாம் வீழும் - நான் விரும்பும்

திருநுதற்கு - அழகிய நுதலை உடைய பெண்ணுக்கு

இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியைப் போன்றவள் நீ; உன்னைக் காணாமல் என்னால் இருக்க இயலாது என்று தலைவன் தலைவிக்கு உணர்த்துவதைப் போல் கண்ணில் இருக்கும் பாவையிடம் சொல்கிறான்.

***


வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து.

மிகச் சிறப்பான அணிகலன்களை அணிந்த என் காதலி உயிருக்கு வாழ்தல் என்பது எப்படியோ எனக்கு அப்படிப்பட்டவள்; என்னை விட்டு அவள் நீங்கும் போது உயிருக்குச் சாதல் எப்படியோ எனக்கும் அப்படிப்பட்டவள்.

ஆயிழை - ஆய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவள்; ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளை உடையவள்

வாழ்தல் உயிர்க்கு அன்னள் - (கூடுமிடத்து) என் உயிர்க்கு வாழ்தலைப் போன்றவள்

நீங்கும் இடத்துச் சாதல் அதற்கு அன்னள் - பிரியும் போது என் உயிர்க்குச் சாதலைப் போன்றவள்.

அவளுடன் கூடுவதே உயிர் வாழ்தலைப் போன்றும் பிரிவதே சாதலைப் போன்றும் இருக்கிறது என்பதைச் சொல்லி, தான் என்றும் பிரியாமல் கூடியிருப்பேன் என உறுதி கூறுவதைப் போல் சொல்கிறான் அவன்.

வாழ்தலை விட இனியது இல்லை; அது போல் அவளுடன் கூடி இருப்பதை விட இனியது இல்லை. சாதலை விட இன்னாதது இல்லை; அது போல் அவளைப் பிரிவதை விட இன்னாதது இல்லை.

நீங்கும் இடத்து என்பதை மட்டும் சொல்லி கூடும் இடத்து என்பதை வருவித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இந்தக் குறள். இதனைத் தானே ஏகதேச உருவக அணி என்பார்கள்?!

***

உள்ளுவன் மன் யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

மறந்தால் அல்லவோ நான் நினைப்பது? ஒளி பொருந்திப் போர் செய்யும் கண்ணை உடையவளின் அழகையும் குணங்களையும் மறந்து அறியேன்.

உள்ளுவன் மன் யான் மறப்பின் - நினைப்பேன் நான் மறந்தால்

மறப்பு அறியேன் - மறப்பது என்பதை அறியேன்

ஒள்ளமர்க்கண்ணாள் - ஒளி பொருந்திய கண்ணினை உடையவளின்

குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, அன்பு, கற்பு, அழகு போன்ற குணங்கள்.

தலைவியும் தலைவனும் இரவிலும் பகலிலும் இயற்கைப் புணர்ச்சியில் திளைக்க அதனை ஒருவாறாக அறிந்த ஊரில் அலர் எழுந்தது. அதனால் தலைவனும் தலைவியும் சில நாட்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. ஒருவாறாக அலர் கொஞ்சம் தணிந்த பின் மீண்டும் வந்த தலைவனிடம் தோழி 'பிரிந்திருந்த போது தலைவியை நீர் நினைத்தீரா?' என்று வினவ அதற்குத் தலைவன் சொன்ன மறுமொழி இது.

மறந்தால் தானே நினைப்பது என்று தற்காலப் பாடலிலும் இந்தக் குறள் பயின்று வந்துள்ளது.

***

தலைவியின் வாய்மொழியான அடுத்த ஐந்து குறட்பாக்களையும் அடுத்த இடுகையில் பார்ப்போம்.

Sunday, March 21, 2010

இன்பத்துப் பால்: நலம் புனைந்துரைத்தல் - 2

தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுதல் இந்த அதிகாரத்தின் பொருள். இது சாதாரணமாக புணர்ச்சியின்பத்தின் பிறகு அளவில்லா மகிழ்ச்சியோடும் அடக்க முடியாத உணர்ச்சிகளோடும் நிகழ்வது இயற்கை. அதனால் இந்த அதிகாரத்தை 'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரத்தின் பின் வைத்தார் வள்ளுவர் பெருமான்.

***

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன்


தங்களின் தலைமைச் சுடராகிய நிலவுக்கும் இந்தப் பெண்ணின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாமல் எது நிலவு என்று குழம்பி நிலைதிரிந்து ஓரிடத்தில் நில்லாமல் கலங்குகின்றன விண்மீன்கள்.

மதியும் - நிலவையும்

மடந்தை முகனும் - பெண்ணின் முகத்தையும்

அறியா - அறியாது

பதியில் கலங்கிய மீன் - தம்மிடத்தில் நில்லாத விண்மீன்கள்

விண்மீன்கள் பதியில் கலங்கின என்பதை வானத்தில் அவை ஒரே இடத்தில் நிற்காமல் ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இடத்தில் தோன்றுவதையோ மினுக்கி மினுக்கிச் சுடர்விடுவதையோ கூறுவதாகக் கொள்ளலாம். '

கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே' என்று இன்னோரிடத்தில் ஒரு பெருந்தமிழ்ப்புலவன் கூறினான். அவ்வாறு கண்ணிமைக்காமல் காணும் அழகினைப் போலின்றி தயங்கித் தயங்கி இமைத்து இமைத்துப் பார்க்கும் படி இருக்கிறது போலும் இந்தப் பெண்ணின் முக அழகு.

பதியில் கலங்கிய என்பதற்கு ஓரிடத்தில் நிற்காமல் திரியும் என்று பொருள் கொண்டால் இவள் முகம் மதியா நம்மிடையே இருக்கும் பெருஞ்சுடர் மதியா என்று திகைத்து அவை மற்ற விண்மீன்களைக் கலந்து கொள்ளத் திரிவதாகச் சொல்லலாம். அவ்வாறின்றி மினுக்கி மினுக்கிச் சுடர்விடுவதைக் கூறுகின்றது என்று பொருள் கொண்டால் மதிக்கும் முகத்திற்கும் வேறுபாடு புரியாமல் திகைத்து இமைக்கின்றன என்று கூறலாம்.

பதியில் கலங்கிய மீன் என்பது உண்மை நிகழ்ச்சி ஆதலால் அதனை இங்கே கூறியதன் மூலம் மதியும் இவள் முகமும் ஒன்றே என்பதும் உண்மை என்று காட்டினான் காதலன் என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.

***

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறு உண்டோ மாதர் முகத்து.

தேய்ந்தும் பின்னர் அந்த தேய்ந்த இடத்தில் நிறைந்தும் கிடக்கும் மதிக்கு இருப்பது போல மறு இந்தப் பெண்ணின் முகத்தில் உண்டா? இல்லையே!

அறுவாய் நிறைந்த - குறைந்த இடத்தில் நிறைவுற்ற

அவிர்மதிக்கு - முழுமதிக்கு

போல - இருப்பதைப் போல்

மறு உண்டோ மாதர் முகத்து - இந்தப் பெண்ணின் முகத்தில் மறு உண்டோ?

இந்தப் பெண்ணின் முகத்தையும் நிலவையும் கண்டு குழம்பி நிலை தடுமாறுகின்றன இந்த விண்மீன்கள். ஏனென்று புரியவில்லை. இந்த நிலவு தேய்வதும் வளர்வதுமாக இருக்கிறது. இந்தப் பெண்ணின் முக அழகு அப்படியில்லையே! பின் ஏன் இந்த விண்மீன்களுக்கு இந்தத் தடுமாற்றம்? அது மட்டுமா அந்த நிலவில் இருக்கும் களங்கம் இந்தப் பெண்ணின் முகத்தில் இல்லையே! இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் இந்த விண்மீன்கள் தடுமாறுவது ஏன்?

***

மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

இந்தப் பெண்ணின் முகத்தைப் போல் என்றும் தேய்வின்றியும் மறுவின்றியும் ஒளிவிட உன்னால் முடியும் என்றால் நீ வாழ்க நிலவே! நீயும் என் காதலுக்கு உரியவள்.

மாதர் முகம் போல் - இந்தப் பெண்ணின் முகம் போல்

ஒளிவிட வல்லையேல் - ஒளி வீசும் திறமை கொண்டிருந்தால்

காதலை - என் காதலுக்கு உரியவள் (நீ)

வாழி மதி - நீ வாழ்க நிலவே!

இந்தப் பெண்ணின் முகத்தைப் போல் என்றும் ஒரே தன்மையுடையதாய் ஒளி வீசிக் கொண்டிருந்தால் நீயும் என் காதலுக்கும் வாழ்த்துக்கும் உரியவள் நிலவே. இல்லையென்றால் என் காதலையும் வாழ்த்தையும் நீ இழக்கிறாய்.

இந்தப் பெண்ணை காதலித்து விட்டு நிலவை நோக்கியும் இந்தக் காதலன் நீ என் காதலுக்கு உரியவள் என்று கூறுகிறானே என்றால் இவளைப் போல் குறைவின்றி அந்த நிலவு இல்லையே; அதனால் இவளன்றி வேறு எவரையும் இந்தக் காதலன் காதலிக்க இயலாது என்று குறிப்பாகச் சொன்னான்.

***

மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
பலர் காணத் தோன்றல் மதி.


மலர் போன்றக் கண்கள் உடைய இவள் முகத்திற்கு ஒப்பாக இருக்கும் ஆசை உனக்கு இருந்தால், நிலவே, பலரும் காணும் படி தோன்றாதே.

மலர் அன்ன கண்ணாள் - மலர் போன்ற கண்களையுடையவள்

முகம் ஒத்தியாயின் - முகத்தை ஒத்து இருக்க வேண்டுமெனில்

பலர் காணத் தோன்றல் - பலரும் காணும் படி தோன்றாதே

மதி - நிலவே

இங்கே மலர் என்றது குவளையாகவும் சொல்லலாம் தாமரையாகவும் சொல்லலாம். அழகாக செவ்வரி ஓடி இருக்கும் கண்ணைத் தாமரைக்கண் என்றும் கரிய பெரிய கண்களை குவளைக்கண் என்றும் சொல்வதுண்டு.

நிலவே நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்திருந்தாலும் தேய்தல், மறு என்னும் குறைகள் உன்னிடம் இருக்கின்றன. அதனால் இவள் முகத்தை ஒத்தவள் என்ற பெயர் உனக்கு நிலைக்க வேண்டும் என்றால் எல்லோரும் காணும் படி தோன்றாதே. அப்படித் தோன்றினால் நீ இவள் முகத்திற்கு ஈடாக முடியாமல் தோற்றுப் போவாய்.

நிலவே. நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்து இருக்கலாம். ஆனால் இவளுக்கு மலர் போன்ற கண்கள் இருக்கின்றன. உனக்கு அவை இல்லை. அதனால் இவள் முகத்தை ஒத்தவள் என்ற பெயர் உனக்கு வேண்டுமென்றால் எல்லோரும் காணும் படி தோன்றாதே. அப்படித் தோன்றி உன் குறையைக் காட்டாதே.

நிலவே நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்திருந்தாலும் இன்னொரு வகையில் இவள் முகத்திற்கு ஒப்பாக மாட்டாய். இவள் முகம் நான் மட்டுமே கண்டு இன்புற்றது. நீயோ பொது மகள் போல் எல்லோரும் காணத் தோன்றுகிறாய். அதனால் இவள் முகத்திற்கு ஒப்பாக மாட்டாய். அப்படி இவள் முகத்திற்கு ஒப்பாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் நான் மட்டுமே காணும் படி தோன்றுவாய்; பலரும் காணும் படி தோன்றாதே.

***

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

மிக மெல்லியதென்று புலவர்கள் கூறும் அனிச்சம்பூவும் அன்னத்தின் வெள்ளிய சிறகும் இந்தப் பெண்ணின் மென்மையான கால்களுக்கு நெருஞ்சிமுள்ளினைப் போன்றவை.

அனிச்சமும் - அனிச்சம்பூவும்

அன்னத்தின் தூவியும் - அன்னப்பறவையின் தூய்மையான சிறகும்

மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - இந்தப் பெண்ணின் கால்களுக்கு முற்றிய நெருஞ்சி முள்ளினைப் போன்றவை.

இவள் பாதங்கள் மிகவும் மென்மையானவை. மோந்தாலே குழையும் என்று சொல்லப்படும் அனிச்சம் பூவும் மிக மிக மென்மையான அன்னச்சிறகும் இவள் அடிகளை நோக வைக்கும். அப்படிப்பட்டவளை அழைத்துக் கொண்டு காட்டுவழியே செல்லச் சொல்கிறாயே தோழியே. அங்கே உண்மையாகவே நெருஞ்சி முற்கள் இருக்குமே.

***

இந்த இடுகையில் இருக்கும் விளக்கங்கள் எல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப்பாவாணர் என்ற மூவரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டவை. அவர்கள் சொல்லாத ஆனால் பொருத்தமெனத் தோன்றுகின்ற விளக்கங்களையும் சொல்லியிருக்கிறேன். அவற்றையும் கண்டுபிடித்துச் சுவைக்க வேண்டுகிறேன். :-)

Friday, March 19, 2010

இன்பத்துப் பால்: நலம் புனைந்துரைத்தல் - 1

தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுதல் இந்த அதிகாரத்தின் பொருள். இது சாதாரணமாக புணர்ச்சியின்பத்தின் பிறகு அளவில்லா மகிழ்ச்சியோடும் அடக்க முடியாத உணர்ச்சிகளோடும் நிகழ்வது இயற்கை. அதனால் இந்த அதிகாரத்தை 'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரத்தின் பின் வைத்தார் வள்ளுவர் பெருமான்.

***

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம் வீழ்பவள்

அனிச்ச மலரே! சிறிதே மோந்துப் பார்த்தாலும் குழைந்து போவாய் நீ! அவ்வளவு மெல்லியவள் நீ என்று உலகத்தவர் சொல்லுவார்கள். நீயே மென்மையில் சிறந்தவள் என்ற செருக்கினைக் கொள்ளாதே. உன்னைவிட மென்மையானவள் ஒருத்தி இருக்கிறாள். அவள் நான் விரும்பும் என் காதலி.

நன்னீரை வாழி அனிச்சமே - அனிச்சமே நீ நல்லதொரு மென்மைக்குணத்தைக் கொண்டவள்; நீ வாழ்க.

நின்னினும் - ஆனால் உன்னை விட

மெல் நீரள் யாம் வீழ்பவள் - மென்மைக் குணம் கொண்டவள் யாம் விரும்பும் பெண்.

இங்கே சொன்ன மென்மைக்குணம் அனிச்சத்திற்கு புற மென்மையாக இருக்க தலைவிக்கோ அகமும் புறமும் மென்மை என நின்றது. அவள் மென்மையான குணத்தைக் கொண்டவள். மென்மையான உடலையும் கொண்டவள். இங்கே புணர்ச்சிக்குப் பின்னர் கூறுவதால் உடல் மென்மையைப் பெரிதும் பேசினான் தலைவன் என்று கொள்ளுதலும் தகும்.

அஃறிணையான அனிச்சம் பூ இவன் சொல்வதைக் கேட்கப் போவது போலும், சொல்வதைக் கேட்டுப் பதில் சொல்லப் போவது போலும் தலைவன் பேசுவது புணர்ச்சிக்குப் பின்னர் எழுந்த உணர்ச்சி வேகத்தால் வந்த மயக்கமாம்.

***

மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்குமென்று


நெஞ்சமே! இவளை விலகி நின்று பார்த்து மகிழ்ந்திருந்த காலத்தில் எல்லாம் பலரும் கண்டு மகிழும் தாமரை, குவளை போன்ற பூக்களைக் காணும் போதெல்லாம் இவள் கண்களைப் போல் அம்மலர்கள் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தாய். இன்று அவளை மிக அருகில் பார்த்து மகிழ்ந்த பின்னர் தானே தெரிகிறது இவள் கண்களுக்கு அம்மலர்கள் ஒப்புமை ஆகாது என்று. இனி மேலாவது அப்படி ஒப்பு கூறி மயங்காதே.

மலர் காணின் மையாத்தி நெஞ்சே - நெஞ்சமே! மலரைக் காணும் போது மயங்கி விடாதே

இவள் கண் பலர் காணும் பூ ஒக்குமென்று - இவளுடைய கண் பலரும் கண்டு மகிழும் பூக்களை ஒக்குமென்று சொல்லி.

இது நெஞ்சோடு கிளத்தல் ஆகும். அம்மலர்கள் பலரும் நெருங்கிச் சென்றுக் கண்டு இன்புன்று மகிழலாம்; ஆனால் இவள் கண்களோ தலைவன் மட்டுமே நெருங்கிக் கண்டு இன்புற்றவை - என்ற குறிப்பும் இங்கே இருக்கின்றது. அந்த வகையாலும் அம்மலர்கள் இவள் கண்களுக்கு ஒப்புமை ஆகா.

***

முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோளவட்கு


பச்சை மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய என் காதலிக்கு உடம்பு மாந்தளிர் போன்று மிக மெல்லியது; மாந்தளிர் போன்ற நிறமும் கொண்டது. புன்னகையோ முத்தினை ஒத்தது. அவள் உடலில் எழும் இயற்கையான நாற்றமும் (வாசனையும்) நறுமணமாக இருக்கின்றது. அவள் மை தீட்டிய கண்களோ வேலினைப் போல் உள்ளன.

முறி மேனி - உடல் மாந்தளிர் போன்றது (நிறத்தாலும் குணத்தாலும்)

முத்தம் முறுவல் - பல்லோ (புன்னகையோ) வெண்மையான முத்தினைப் போன்றது.

வெறி நாற்றம் - அவள் உடலில் எழும் மணம் நறுமணம்

வேல் உண்கண் - மையினை உண்ட கரிய கண்கள் வேல் போல் கூர்மையானவை

வேய்த் தோளவட்கு - மூங்கிலைப் போன்ற தோள் அவளுக்கு.

***

காணில் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று


இந்தக் குவளைப் பூக்களுக்குக் காணும் கண்கள் மட்டும் இருந்தால் மாண்பு மிகுந்த அணிகலங்களை அணிந்த என் காதலியின் கண்களுக்குத் தாங்கள் ஒப்புமை ஆக மாட்டோம் என்று உணர்ந்து நாணி தலை கவிழ்ந்து நிலம் நோக்கியிருக்கும். அவற்றிற்குக் காணும் கண்களும் இல்லை; இவளைப் போன்ற நாணமும் இல்லை. அதனால் தான் அவை தலை நிமிர்ந்து நிற்கின்றன.

இயற்கையாகத் தலை நிமிர்ந்து நிற்கும் குவளை மலர்களைப் பார்த்து இப்படித் தன் கருத்தினை ஏற்றித் தலைவன் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

காணில் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் - கண்கள் இருந்து காணில் குவளைப் பூக்கள் தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கி நிற்கும்

மாணிழை - மாண் + இழை; மாண்புடைய, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த நகைகளை அணிந்து கொண்டிருக்கும் இந்தப் பெண்ணின்

கண் ஒவ்வேம் என்று - கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று.

***

அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு
நல்ல படாஅ பறை


ஆகா! இவள் என்ன காரியம் செய்தாள்? தன்னுடைய மென்மை இவள் அறியவில்லை போலிருக்கின்றதே! அனிச்சப்பூ என்ன தான் மென்மையான பூவாக இருந்தாலும் இப்படியா இவள் அதன் காம்பினை நீக்காமல் அணிந்து கொள்வாள். இந்தக் காம்புகளின் சுமையால் இவள் இடை இனி ஒடிந்து விடும். அந்த இடைக்கு இனி மங்கலப் பறை எதுவும் முழங்காது; அமங்கலப் படை தான் முழங்கும்.

அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - அனிச்சப்பூக்களின் காம்பினை எடுக்காமல் கூந்தலில் சூடிக் கொண்டாள்

நுசிப்பிற்கு - இவள் இடைக்கு

நல்ல படாஅ பறை - நல்ல பறை இனி மேல் முழங்காது

மக்கள் வாழும் போது மங்கலப் பறைகள் முழங்கும். அவர்கள் சாகும் போது அமங்கலப் பறை முழங்கும். இங்கே இடை இனி ஒடிந்து விடும் என்பதை நல்ல பறை இனி இந்த இடைக்கு ஒலிக்காது என்று சொல்வதன் மூலம் தலைவன் கூறுகிறான்.

தலைவியின் இடை இவ்வளவு மெல்லியது என்று சொல்ல விரும்பி அது ஒடிந்து விடும் என்று இடையின் மென்மையைப் பெரிது படுத்திக் கூறியதால் இது உயர்வு நவிற்சி அணி.

***

இந்த இடுகையில் இருக்கும் விளக்கங்கள் எல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப் பாவாணர் என்ற மூவரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டவை. இந்த ஐந்து குறட்பாக்களுக்கும் மூவர் உரையும் ஏறக்குறைய ஒன்றே போல் இருக்கின்றன. ஒருவர் சொன்னதை மற்றவர் மறுக்கவில்லை. வேறு பொருளும் கூறவில்லை.

Wednesday, March 17, 2010

இன்பத்துப் பால்: புணர்ச்சி மகிழ்தல் - 2


உறுதோறுயிர் தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் கிளர்ச்சியும் உரமும் பெறுமாறு தீண்டுகின்றாள். அதனால் இந்த இளம்பெண்ணின் தோள்கள் மென்மையும் குளிர்ச்சியும் இன்பமும் தரும் அமிழ்தினால் ஆனவை.

உயிர் என்றும் நிலைக்கும் படி செய்வது அமிழ்தம். அதனைப் போன்று இவள் தோள்களும் உயிரினை தழைக்கச் செய்வதால் அவையும் அமிழ்தம்.

அவளைத் தழுவாத நேரம் உயிர் உரமின்றிப் போய்விடுகிறது என்பது ஓர் உட்பொருள்.

உறுதோறும் - தழுவும் போதெல்லாம்


உயிர் தளிப்பத் தீண்டலால் - உயிர் தளிர்க்கும் படி தீண்டுவதால்


பேதைக்கு - இளம் பெண்ணிற்கு


அமிழ்தின் இயன்றன தோள் - தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டவை

***

தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

தமது இல்லத்தில் வீற்றிருந்து தன் முயற்சியால் பெற்ற பொருளை தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து விதமாக பகுத்து தனது பங்கினை உண்ணும் இன்பத்தைப் போல் உள்ளது இந்த மாநிறம் கொண்ட அழகியைத் தழுவிக் காணும் இன்பம்.

இங்கே களவின்பத்தைப் பேசும் போது இல்லறவொழுக்கத்தில் இருக்கும் இன்பத்தை இந்த இன்பத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறான் தலைவன். இல்லறவின்பம் பெரிய இன்பம் என்பதே உலக வழக்கு. அதனால் அந்த உயர்ந்த இல்லற இன்பம் தனக்கு இந்தத் தலைவியைத் தழுவும் போதே கிட்டுகிறது என்று சொல்கிறான்.

தான் தன் முயற்சியால் பெற்ற பொருளைத் தமது என்று சிறப்பாகச் சொல்கிறார். திருக்குறளில் வேறோரிடத்தில் இல்லறத்தின் இன்பமாகச் சொன்ன தன் பொருளை ஐந்து விதமாகப் பகுத்து தெய்வத்தை வணங்க ஒரு பங்கும், விருந்தினர்களை விருந்தோம்ப ஒரு பங்கும், சுற்றத்தாரைக் காக்க ஒரு பங்கும், முன்னோர்களை வழிபடவும் அவர் பெயர் விளங்கவும் செய்ய ஒரு பங்கும், தனக்கு ஒரு பங்கும் செலவழிக்கும் இன்பத்தை இங்கே பகுத்து - பாத்து என்று குறிப்பாகச் சொல்கிறார். இன்னொரு இடத்தில் இந்த ஐந்து பங்கு போக ஆறாவது பங்கையும் சொல்கிறார். அது அரசனுக்குரிய வரி. பழந்தமிழகத்தில் வருமானத்தில் / விளைச்சலில் ஆறு பங்கு அரசனுக்கு உரிய வரி என்றும் அப்படி பெறுவதே நியாயமான வரி என்றும் அதற்கு மேல் பெற்றால் அது அநியாய வரி என்றும் கருதப்பட்டது.

தம்மில் இருந்து - தமக்கு உரிமையான வீட்டில் வாழ்ந்து


தமது - தாம் தம் முயற்சியால் ஈட்டிய பொருளை


பாத்து - பகுத்து


உண்டு அற்றால் - உண்டு மகிழ்வது போல் தானே இருக்கிறது


அம்மா அரிவை முயக்கு - அந்த மாநிறம் கொண்ட அழகிய பெண்ணின் தழுவல்

***

வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழப் படாஅ முயக்கு

ஒருவரை ஒருவர் விரும்பும் இரு காதலர்களுக்கு இனியதாவது காற்று இடையில் அறுத்துக் கொண்டு செல்லாதபடி கட்டித் தழுவிக் கொள்வது.

வீழும் இருவர்க்கு - ஒருவரை ஒருவர் விரும்பும் இரு காதலருக்கு


இனிதே - இனிமையானது


வளி இடை போழப் படாஅ முயக்கு - காற்று இடையில் புகுந்து கிழிக்க முடியாத தழுவல்

***

ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன்

சிறு சிறு சண்டைகள் செய்து ஊடி நிற்பதும், பின்னர் தம் தவறுணர்ந்து ஊடல் மறப்பதும், அது மறந்த பின் மீண்டும் கூடுவதும் என இவை தான் காதல் உற்றவர் பெற்ற பயன்.

ஊடலிலும் இன்பம் உண்டு; அந்த இன்பம் போதும் என்று உணர்ந்து அந்த ஊடலை முடித்துக் கொண்டு பின்னர் புணர்ந்து மேன்மேலும் இன்பம் பெறுகின்றனர் காதலர் என்பது இன்னொரு உரையாசிரியரின் கருத்து.

ஊடல் - ஊடல் கொள்வதும்


உணர்தல் - பின் அதன் பயன் உணர்ந்து ஊடலை மறப்பதும்


புணர்தல் - அதன் பின் கூடுதலும்


இவை - என இந்த மூன்றே


காமம் கூடியார் பெற்ற பயன் - காதல் கொண்டவர்கள் பெற்ற பெரும்பேறு.
***


அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

பல வித அறிவு நூல்களைக் கற்கும் தோறும் அதில் அறிவு ஏற்பட்டு இது வரை அந்த அறிவு இல்லாமல் இருந்தது எப்படி தோன்றுகிறதோ அதே போல் இவளுடன் கூடும் போதெல்லாம் மேன்மேலும் இன்பம் விளங்கி இந்த சிவந்த ஆடை அணிகலன் அணிந்த பெண்ணின் மீது மேன்மேலும் காதல் தோன்றுகிறது.

ஒரே நூலையும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது புதிது புதிதாகப் பொருள் தோன்றுவதைப் போல் ஒரே பெண்ணான இவளுடன் மீண்டும் மீண்டும் கூடும் போது புதிது புதிதாக இன்பம் தோன்றி இவள் மேல் மேன்மேலும் காதல் தோன்றச் செய்கிறது. புதிய அறிவு பழைய அறிவை சிறியதாக்குவதைப் போல் புதிய காதல் பழைய காதலை சிறியதாகக் காணச்செய்கிறது. காலம் செல்ல செல்ல காதல் கூடும்; கூடுகிறது என்பது உட்பொருள்.

அறிதோறும் - புதிய அறிவினைப் பெறும் போதெல்லாம்

அறியாமை - இதுவரை இருந்த அறியாமை

கண்டற்றால் - தெரிய வருவது போல்


காமம் செறிதோறும் சேயிழை மாட்டு - சிவந்த ஆடைகளை அணிந்த இந்த அழகிய பெண்ணின் மேல் உள்ள காதல் மென் மேலும் வளர்கிறது.

Sunday, March 14, 2010

இன்பத்துப் பால்: புணர்ச்சி மகிழ்தல் - 1

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு - இந்தப் பெண்ணில் இருக்கு. இந்தத் திரைப்படப் பாடல் வரியை பலரும் கேட்டிருப்போம். இது ஐயன் வள்ளுவன் சொன்னதை அப்படியே சொன்னது.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள


கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு.

ஐம்புலன்களால் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் இன்பம் என்று வேறொன்றும் இல்லை. இசைத்துப் பாடப்படும் பாடல் போன்று சில ஒன்றிரண்டு புலன்களுக்கு ஒரே நேரத்தில் இன்பமூட்டுபவையாக இருக்கின்றன. ஆனால் எல்லாப் புலன்களுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் ஊட்டும் திறம் இந்தப் பெண்ணில் மட்டுமே உள்ளது என்பதைத் தான் ஒண்டொடி கண்ணே என்று ஏகாரத்தால் சொன்னான் காதலன்.

கண்டு - கண்ணால் கண்டு

கேட்டு - காதால் கேட்டு

உண்டு - நாவால் உண்டு

உயிர்த்து - மூக்கால் நுகர்ந்து

உற்று - உடலால் தீண்டி

அறியும் ஐம்புலனும் - அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும்

ஒண்டொடி - ஒண் + தொடி - ஒளி பொருந்திய வளையல்; இங்கே அந்த வளையலை அணிந்தப் பெண்ணைச் சுட்டியது

ஒண்டொடி கண்ணே உள - பெண்ணிடம் மட்டுமே இருக்கின்றன.

***

பிணிக்கு மருந்து பிற மன் அணியிழை
தன் நோய்க்குத் தானே மருந்து

உலகத்தில் எல்லா வித பிணிகளுக்கும் அந்த பிணிகளை ஏற்படுத்தியவை எதுவோ அதற்கு எதிர்மாறான குணங்கள் கொண்டவையே மருந்தாக அமையும். அழகிய அணிகலன்களை அணிந்த இந்தப் பெண்ணோ அவளால் உண்டான நோய்க்கு அவளே மருந்தாகிறாள். இது பெருவியப்பு அன்றோ?

பிணிக்கு மருந்து பிற மன் - பிணிகளுக்கு மருந்து அந்தப் பிணிகளை ஏற்படுத்தியவைகளை விட மாறான மற்றவை

அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து - அணிகலன்களை அணிந்த இந்தப் பெண்ணோ அவள் ஏற்படுத்திய காதல் நோய்க்கு அவளே மருந்தாகிறாள்.

***

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு.

தாம் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில் சாய்ந்து துயில்வதிலும் இன்பம் பயப்பதோ தாமரைக்கண்ணான் ஆகிய இறைவனின் உலகம்? இல்லவே இல்லை.

தாமரைக்கண்ணான் என்றது திருமாலை.

மென் தோள் துயில்தல் அதனை அடுத்த இன்பம் புணர்தலைக் குறித்து நின்றது.

தாம் வீழ்வார் மென்றோள் - தாம் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில்

துயிலின் - துயிலுவதை விட

இனிது கொல் - இனிமை பயப்பதோ? (இல்லை)

தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக்கண்ணனின் உலகம்.

***

நீங்கின் தெறூஉம் குறுகும் கால் தண்ணென்னும்
தீ யாண்டுப் பெற்றாள் இவள்

இவளைப் கூடும் முன்னரும் கூடிய பின்னரும் காதல் நோயால் சுடுகின்றாள்; இவளை நெருங்கும் போதும் கூடும் போதும் குளிர்ச்சியாக இருக்கிறாள். இப்படிப்பட்டப் புதுமையானத் தீ இந்த உலகில் இல்லை; எந்த உலகிலிருந்து இவள் பெற்றாள்?

நீங்கின் தெறூஉம் - விலகினால் சுடும்

குறுகும் கால் தண்ணென்னும் - நெருங்கும் போது தண்ணென்று குளிரும்

தீ யாண்டுப் பெற்றாள் இவள் - இப்படிப்பட்டத் தீயை எங்கே பெற்றாள் இவள்?

***

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்


விரும்பிய பொருள்களெல்லாம் விரும்பிய போதெல்லாம் வந்து இன்பம் தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பூவினைச் சூடிய தோளில் தாழ்ந்த கூந்தலையுடைய இவளின் தோள்.

தோள் தாழ் கதுப்பினாள் - தோளில் தாழும் கூந்தல் உடையவள் என்று ஒரு அறிஞர் உரை செய்கிறார். கலவியின் போது தோளில் தாழ்ந்ததாம் கூந்தல்.

தோடு தார் கதுப்பினாள் - தொடுத்த மலர் மாலை அணிந்த கூந்தல் உடையவள் என்று இன்னொரு அறிஞர் உரை செய்கிறார்.

தோள் தரும் இன்பம் என்றது அதற்கு பின்னர் வரும் இன்பத்தைப் பற்றி.

வேட்ட பொழுதின் - விரும்பிய உடனே அப்போதே

அவையவை போலுமே - விருப்பப்பட்ட பொருள்களால் ஏற்படும் இன்பத்தைப் போன்றதே

தோட்டார் கதுப்பினாள் தோள் - தோளில் சாயும், மலர்மாலை சூடிய, கூந்தலையுடையவளின் தோள்.

Saturday, March 13, 2010

இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 2

உறாஅ தவர் போல் சொலினும் செறா அர்சொல்
ஒல்லை உணரப் படும்

காதலர் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலை மறைத்துக் கொண்டு, காதல் இல்லாதவர் போல் நடித்து அயலார் போல் சினத்துடன் பேசினாலும் அவர்கள் கொண்டிருக்கும் காதல் விரைவில் மற்றவரால் உணரப்பட்டுவிடும்.

உறாஅதவர் போல் சொலினும் - காதல் கொள்ளாதவர் போல் பேசினாலும்

செறாஅர் சொல் - உண்மையில் சினமில்லாத அவர்களின் சொற்கள்

ஒல்லை உணரப்படும் - விரைவில் அவர்கள் மற்றவர் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்திவிடும்

***

செறாஅச் சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்றுற்றார் குறிப்பு

சினமில்லாமல் ஆனால் சினத்தவர் போல் பேசும் சொற்களும் சினத்துடன் நோக்கும் பார்வையும் காதல் கொண்டதை வெளியே சொல்ல விரும்பாமல் ஆனால் காதல் கொண்டவர்கள் தங்களை அறியாமல் காட்டும் குறிப்பு

செறாஅச் சிறுசொல்லும் - சினமில்லா சுடுசொற்களும்

செற்றார் போல் நோக்கும் - சினத்தவர் போல் பார்க்கும் பார்வையும்

உறாஅர் போல் உற்றார் குறிப்பு - காதல் உறவில்லை என்று எண்ணிக் கொண்டே காதல் உறுபவர்கள் காட்டும் குறிப்பு.

***

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

என் மேல் அன்பு கொண்டவள் நான் பார்க்கும் போது மெல்லச் சிரிக்கிறாள். அப்போது அந்த அழகிய மெல்லியலாள் இன்னும் அதிக அழகுடன் தோன்றுகிறாள்.

யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என் மேல் அன்பு கொண்டவள் நான் நோக்கும் போது மெல்ல சிரிக்கிறாள். (பசை - பாசம்; அன்பு)

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர் - அந்த அசையும் துடியிடை உடைய அந்த பெண்ணுக்கு அதிக அழகு உண்டு.

***

ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

காதலர்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு குணம்: அவர்கள் பொது இடத்தில் இருக்கும் போது தமக்குள் எந்த வித உறவும் இல்லாதவர் போல் நடந்து கொள்வார்கள்.

ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் - தமக்கு நடுவில் எந்த விதமான உறவும் இல்லாதவர் போல் பொதுவாக பார்த்துக் கொள்ளுதல்

காதலார் கண்ணே உள - காதலர்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு குணம்.

***

கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல


காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவர்கள் உள்ளங்கள் கலப்பது போல் கண்களும் கலந்து ஒன்றுபட்டுவிட்டால் வாய்ச்சொற்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடுகின்றது.

கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் - கண்ணுடன் கண் இணைந்து பார்வைகள் ஒன்று பட்டுவிட்டால்

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - வாய்ச்சொற்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடுகின்றது

Friday, March 12, 2010

இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 1

இன்பத்துப் பாலின் இரண்டாவது அதிகாரம்:

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒரு நோக்கு
நோய் நோக்(கு) ஒன்றந்நோய் மருந்து


என்னை உண்டு விடுவது போல் இருக்கும் இவள் கண்களில் இருவிதமான பார்வைகள் இருக்கின்றன. ஒரு பார்வை எனக்குக் காதல் நோயைத் தரும். இரண்டாவது பார்வை அந்த காதல் நோய்க்கு மருந்தாகும்.

இருநோக்(கு) இவள் உண்கண் உள்ளது - இரு விதமான பார்வைகள் இவளின் உண்ணும் கண்களில் உள்ளது.

ஒரு நோக்கு நோய் நோக்கு - ஒரு பார்வை காதல் நோய் தரும் பார்வை

ஒன்று அந்நோய் மருந்து - மற்றொன்று அந்த நோயைத் தீர்க்கும் மருந்து.

***

கண்களவு செய்யும் சிறு நோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

கள்ளத்தனமாக அவள் வீசும் கடைக்கண் பார்வையில் கிடைக்கும் இன்பம் காதல் இன்பத்தில் சிறந்த பகுதி இல்லை; அதனை விடப் பெரிது.

கண் களவு செய்யும் சிறு நோக்கம் - யாரும் அறியாமல் என் மீது கள்ளத்தனமாக அவள் வீசும் பார்வை

காமத்தில் செம்பாகம் அன்று - கலவியில் கிடைக்கும் இன்பத்தில் சிறந்த பகுதி இல்லை

பெரிது - அதனை விடப் பெரியது.

***

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

கடைக்கண்ணால் என்னை அவள் நோக்கினாள்; பின்னர் நாணத்தால் தலைகுனிந்தாள்; அவ்விதம் அவள் செய்தது அவள் எங்கள் காதல் இருவரையும் சேர்த்துக் கட்டும் காதல் என்னும் பயிருக்கு ஊற்றிய நீரானது.

நோக்கினாள் - அவள் என்னைப் பார்த்தாள்

நோக்கி இறைஞ்சினாள் - பின்னர் நாணத்தால் தலை குனிந்தாள்

அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் - அது அவள் எங்களைக் கட்டும் காதல்பயிருக்கு ஊற்றிய நீர்.

***

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்

நான் பார்க்கும் போது குனிந்து நிலத்தை நோக்குவாள். நான் பார்க்காத போது என்னைப் பார்த்து மகிழ்ந்து புன்னகை புரிவாள்.

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் - நான் பார்க்கும் போது நிலத்தை நோக்குவாள்.

நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - நான் பார்க்காத போது அவள் பார்த்து மென்மையாக புன்னகைப்பாள்.

***

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்


அவள் என்னைப் பார்ப்பதே குறிக்கோளாக என்னை உற்றுப் பார்க்கவில்லையே தவிர வேறு எங்கோ பார்ப்பது போல் ஒரு கண்ணால் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - என்னை உற்று நோக்கவில்லையே தவிர

ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணை வேறெங்கோ பார்ப்பது போல் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.

Monday, March 08, 2010

தகை அணங்குறுத்தல் - 2

முந்தையப் பதிவின் தொடர்ச்சியாக இன்பத்துப்பாலின் முதல் அதிகாரம்...

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன் இவள் கண்


வளைந்திருக்கும் இவள் புருவம் வளையாமல் நேராய் அமைந்திருந்து அவள் கண்களை மறைத்திருந்தால் இப்படி நான் காதலில் மூழ்கி நடுக்கமுறும் துன்பத்தை அவள் கண்கள் செய்திருக்க மாட்டா.

கொடும்புருவம் - வளைந்து நிற்கும் புருவம்

கோடா - அப்படி வளையாமல் நேராய் அமைந்து

மறைப்பின் - அவள் கண்களை மறைத்திருந்தால்

நடுங்கஞர் செய்யல மன் இவள் கண் - நடுக்கமுறும் படி செய்பவை அன்று இவள் கண்.

***

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்


மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேல் இட்ட முகபடாம் போல் தோன்றுகிறது இந்தப் பெண்ணின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடை.

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் - மதங்கொண்ட யானையின் மேல் உள்ள படாம் (போன்றது)

மாதர் படாஅ முலை மேல் துகில் - பெண்ணின் சாயாத முலையின் மேல் உள்ள துகில்.

***

ஒண்ணுதற்கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் என்னுடன் நட்பு பாராட்டாத பகைவரும் போற்றும் என் வீரம் இந்த ஒளி பொருந்திய நெற்றியை உடையவளின் முன்னால் வளைந்து கொடுத்து விட்டதே!

ஒண்ணுதற்கோஒ உடைந்தததே - ஒளி நிறைந்த நெற்றியையுடைய (ஒளி + நுதல் - ஒண்ணுதல்) இந்தப் பெண்ணின் முன் உடைந்ததே

ஞாட்பினுள் - களத்தில்

நண்ணாரும் - நட்பு பாராட்டாத பகைவரும்

உட்கும் என் பீடு - போற்றும் என் வீரம் (பெருமை).

***

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்(கு)
அணியெவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போல் இளமையான பார்வையும் நாணத்தையும் இயற்கையாக உடைய இவளுக்கு செயற்கையான அணிகலன்கள் எதற்காக? அவை இவள் பேரழகிற்கு முன் எம்மாத்திரம்?

பிணையேர் மட நோக்கும் - மானைப் போன்ற இளமையான பார்வையும்

நாணும் - நாணமும்

உடையாட்கு - உடையவளுக்கு

அணி எவனோ தந்து - செயற்கையான அணிகலன்களால் என்ன பயன்?

ஏதில - எதுவுமில்லை.

***

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று.

மது கூட உண்டவரைத் தான் மகிழ்விக்கும். ஆனால் கண்டவுடனே மகிழ்ச்சியைத் தருவது காதல் மட்டுமே.

உண்டார் கண் அல்லது அடு நறா - உண்டவர்களுக்கு மது (மகிழ்ச்சியூட்டும்)

காமம் போல் - காதலைப் போல்

கண்டார் மகிழ் செய்தல் இன்று - கண்டாலே மகிழ்ச்சியைத் தருவது (வேறொன்று) இல்லை.

Sunday, March 07, 2010

தகை அணங்குறுத்தல் - 1

இன்பத்துப் பாலில் முதல் அதிகாரத்துக்குப் பெயர் 'தகை அணங்குறுத்தல்'. காதலன் தன் காதலியைப் பற்றி வருணித்துப் பாடுவது போல் அமைந்துள்ளது இந்த அதிகாரம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறட்பாக்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.

என் காதலியின் அழகிய உருவம் வருணிக்க இயலாத ஒன்று. ஒரு முறை பார்த்தால் அவள் தேவதையோ என்று தோன்றுகிறது. மறுமுறை பார்க்கும் போது அழகிய தோகை மயிலோ என்று தோன்றுகிறது. இல்லை கனமான அழகிய குழையை காதில் அணிந்திருக்கும் மானிடப் பெண் தானோ என்று இன்னொரு முறை பார்க்கும் போது தோன்றுகிறது. அவளின் அழகைக் கண்டு என் மனம் மயங்குகிறதே.

அணங்கு கொல் - தேவதையோ? (அணங்கு என்னும் சொல் பயமூட்டும் தெய்வப் பெண்களுக்கு, மோகினிகளுக்கு தொடக்கத்தில் பயன்படுத்தப் பட்டு, பின் வள்ளுவர் காலத்தில் அழகிய அன்புள்ள மகிழ்ச்சியூட்டும் தேவதைகளைக் குறிக்க பயனாகத் தொடங்கியது என்று படித்திருக்கிறேன்).

ஆய் மயில் கொல்லோ - அழகிய தோகை மயிலோ?

கனங்குழை மாதர் கொல் - கனமான குழையை காதில் அணிந்திருக்கும் பெண்ணோ?

மாலும் என் நெஞ்சு - மயங்கும் என் மனம்.

*****

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்ன(து) உடைத்து.

அவள் என்னை நோக்கினாள். அவள் என்னைப் பார்க்கிறாளே என்று நான் அவளைத் திரும்பப் பார்க்கும் போது அவள் என்னை மீண்டும் நோக்கினாள். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் நோக்கியது என்னால் தாங்க முடியவில்லை. அவள் ஒருத்தி என்று தான் நினைத்தேன். ஆனால் அவள் விழி அம்புகளால் அவள் தாக்கியது அவள் ஒரு பெரிய படையுடன் வந்து தாக்கியது போல் இருந்தது.

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் - அவள் என்னை நோக்கி, நான் அவளை நோக்கும் போது அவள் உடனே என்னை எதிர் நோக்கினாள்; அது

தாக்கு அணங்கு தானைக் கொண்டு அன்னது உடைத்து - தேவதை போன்ற அப்பெண் தனியாக வராமல் ஒரு தானையுடன் (படையுடன்) வந்து தாக்குவது போல் உள்ளது.

'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்னும் போது இப்படித் தான் இருந்தது போலும். இன்றும் இளைஞர்களுக்கு இப்படித் தானே இருக்கிறது.

*****

பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

கூற்றுவன் எனப்படும் கொடிய எமனை எனக்கு முன்பெல்லாம் தெரியாது. அவனின் வலிய பாசக் கயிறு எவ்வளவு வலிமையை உடையது என்பதை இந்த பெண்களில் சிறந்தவளால் (பெண் தகையால்) இப்போது அறிந்து கொண்டேன்.

பண்டு அறியேன் கூற்று என்பதனை - கூற்றுவனை நான் முன்பெல்லாம் அறிய மாட்டேன்.

இனி அறிந்தேன் பெண் தகையால் பேரமர்க் கட்டு - இப்போது அறிந்து கொண்டேன் இந்த பெண்ணால் அவனின் வலிய கட்டினை.

*****

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.

பெண்மையின் சிறந்த உதாரணமாகத் தோன்றுகின்ற இந்தப் பேதைப் பெண்ணுக்கா கண்டவர்கள் உயிரை உண்ணும் கண்கள் அமைந்தன? என்ன முரண்பாடு?

கண்டார் உயிர் உண்ணும் - கண்டவர்கள் உயிரை உண்ணும்

தோற்றத்தால் பெண் தகைப் பேதைக்கு - பார்ப்பதற்கு பெண்மையின் உதாரணமாகத் தோன்றும் இந்தப் பேதைக்கு

அமர்த்தன கண் - அமைந்தன கண்கள்.

*****

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து.

நான் பார்க்கும் போது அவள் என்னைப் பார்த்தால் அவள் கண்கள் என் உயிரைப் பறிக்கும் கூற்றம் போல் உள்ளன. அவள் பார்ப்பதற்காக பயன்படுத்தும் உறுப்பாகவும் அவள் கண்கள் உள்ளன. மருண்டு நோக்கும் அவளது கண்கள் மானின் கண்கள் போலும் உள்ளன. இந்த இளம்பெண்ணின் பார்வை இந்த மூன்றையும் கொண்டிருக்கிறதே? ஆச்சரியம்.

கூற்றமோ - கூற்றுவனோ?

கண்ணோ - கண்களோ?

பிணையோ - மானின் கண்களோ?

மடவரல் நோக்கம் - இளம்பெண்ணின் பார்வை

இம்மூன்றும் உடைத்து - இந்த மூன்றையும் கொண்டிருக்கிறது.