Thursday, January 31, 2008

உடுக்கை இழந்தவன் கை - 2 (பாரி வள்ளலின் கதை)

பாண்டிய நாட்டின் வடக்கே இருக்கும் இந்த சிறிய நாடு மிகவும் புகழ் வாய்ந்தது. குன்றிலிட்ட விளக்காக இந்த நாட்டின் பெருமையும் இந்த நாட்டு மன்னனின் புகழும் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவியிருக்கிறது. தமிழகம் முழுவதையும் தொன்று தொட்டு ஆண்டு வரும் வேளிர் குலத்தில் பெருமை வாய்ந்த ஒரு வேளிர் குலம் ஆட்சி செய்யும் நாடு இது. பறம்பு மலையின் சுற்றி அமைந்திருக்கும் நாடு என்பதால் இதற்குப் பறம்பு நாடு என்று பெயர். தேனும் தினைமாவும் கொள்ளும் எள்ளும் சந்தனமும் வேங்கைமரமும் என்று பார்க்கும் திசையிலெல்லாம் குறிஞ்சி நிலத்தின் வளமெல்லாம் இந்தப் பறம்பு நாட்டில் மிகுதியாக இருக்கிறது.

இங்கே தான் என் நண்பன் வாழ்கிறான். வள்ளல்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவன். வள்ளல் என்று சொன்னவுடனே எல்லோருக்கும் நினைவில் தோன்றுபவன். இந்த நாட்டின் புகழை தமிழகம் என்று பரப்பி நிற்பவன். பறம்பு மலையிலிருந்து ஆட்சி செய்யும் பாரி வேள் தான் அவன். சர்க்கரை இருக்குமிடம் நோக்கி எறும்புகளின் கூட்டம் வருவதைப் போல் எல்லாத் திசைகளிலிருந்தும் பரிசிலர்கள் இவனை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

தென்மதுரையில் பாண்டினால் அமைக்கப்பட்டுப் புரக்கப்படும் தமிழ்ச் சங்கத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதனை ஏற்று மதுரைக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறேன். பாரியின் புகழ் சங்கப்புலவர்கள் இடையே நன்கு பரவியிருக்கிறது. நான் பாரியின் நண்பன் என்பதால் புலவர்கள் நடுவே எனக்கு ஒரு தனி மரியாதை. என் கல்விக்குத் தரும் மரியாதை என்று அவரக்ள் சொன்னாலும் அவர்கள் யாரும் கல்வியில் எனக்கு இளைத்தவர்கள் இல்லை என்பதால் பாரியின் நண்பன் என்பதால் தான் எனக்கு அந்த மரியாதை என்று எனக்குத் தெரியும். புலவர்கள் மற்ற மன்னரைப் புகழ்வதற்காகச் சொல்லும் உயர்வுநவிற்சியைப் போலின்றி பாரியைப் பற்றிச் சொல்லப்படுபவை எல்லாம் உண்மையே என்பதை உணர்ந்ததால் வந்த மரியாதை அது. பொய்களுக்கு நடுவில் உண்மைக்கு என்றுமே தனி மரியாதை உண்டு தானே.

மதுரையில் கிடைத்த ஏற்றத்தைப் பற்றி பாரியிடம் சொல்லவேண்டும். பாண்டியனே பொறாமையால் புழுங்கும் அளவிற்குத் தமிழ்ப்புலவர்கள் எல்லாம் பாரியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ வள்ளல்கள் தமிழகம் எங்கும் இருந்தாலும் பாரிக்கு நிகர் பாரியே என்று அவர்கள் சொல்லும் போது என் நண்பன் அவன் என்று என் நெஞ்சு பெருமிதத்தால் விம்முகிறது.

நடுப்பகல் நேரமாகிவிட்டது. ஏதேனும் ஊர் தென்பட்டால் அங்கு உணவு அருந்திவிட்டு வெயில் சாயும் வரை கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். இந்தக் காட்டுவழியில் செல்லும் போது வெயில் அவ்வளவாகத் தெரிவதில்லை தான். ஆனால் பழக்கம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? நடுப்பகலை ஒட்டி உணவருந்திவிட்டுக் கொஞ்சம் ஓய்வெடுக்கும் வழக்கம் சிறு வயதில் இருந்தே அமைந்துவிட்டது. ஓரிரு நாழிகை அப்படி ஓய்வெடுத்துவிட்டால் பின்னர் அந்தி சாயும் வரை நடக்க உடலில் தெம்பிருக்கும். இந்த வழியில் இதுவரை வந்ததில்லை. இது அணுக்கமான வழி என்று சொன்னார்கள் என்பதால் இந்த வழியில் வந்தேன். கடந்த நான்கு நாழிகைகளாக எந்த ஊரும் வரவில்லை. இன்னும் ஒரு நாழிகைக்குள் ஏதாவது ஒரு ஊர் தென்பட்டால் நன்றாக இருக்கும்.

அதோ சில வீடுகள் தெரிகின்றன. சிறிய வீடுகள் தான். ஆனால் எந்தக் குறையும் இன்றி மக்கள் வாழும் வீடுகள் என்பது நன்கு தெரிகிறது. முதலில் தெரியும் வீட்டில் உணவு அருந்த முடியுமா என்று பார்க்கவேண்டும்.

***

இந்த ஊரில் எந்தக் குறையும் இல்லை. வேண்டியது எல்லாம் கிடைக்கிறது. அஞ்சியத்தை மகள் நாகையாரும் அண்டர் மகன் குறுவழுதியாரும் இந்த ஊரில் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாணர் குலத்தில் பிறந்த பாணரும் விறலியும் ஆனாலும் இது வரை எந்த மன்னரிடமும் சென்று பாடல் பாடி பரிசில் பெறவில்லை. இசையாலும் பாடல்களாலும் ஊராரை மகிழ்வித்து அவர்கள் தரும் பொருளைக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். சில நாட்களாக நாகையாருக்கு ஒரு பெரிய பொன்னால் ஆன கழுத்தணி வேண்டும் என்று ஆசை. ஊர்ப் பெரியவரின் மகள் அப்படி ஒரு நகையை அணிந்து ஊர்த்திருவிழாவிற்கு வந்திருந்தாள். அன்று முதல் அந்த நகை பல இரவுகள் நாகையாரின் கனவில் வந்து அவளைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. எந்த மன்னரிடம் சென்று கேட்டால் அப்படிப்பட்ட பரிசில் கிடைக்கும் என்று தெரியவில்லை. குறுவழுதியோ எந்த மன்னரைத் தேடியும் செல்லும் மனநிலையில் இல்லை. அதனால் தனக்குள்ளேயே அந்த ஆசையை வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளி வருகிறாள் நாகையார்.

"அன்பர்களே. அன்பர்களே"

அழைக்கும் குரலைக் கேட்டு நாகையார் வெளியே வந்து பார்த்தாள்.

"ஐயா. தாங்கள் யார்? என்ன வேண்டும்?"

"அம்மையே. நான் ஒரு தமிழ்ப்புலவன். மதுரையிலிருந்து பாரி வேளின் மாளிகைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். என் பெயர் கபிலன். இன்று பகற்பொழுதை இங்கே கழிக்கலாமா என்று கேட்கவே அழைத்தேன்"

"ஐயா. தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்குப் பெரும்பெருமை. இந்தப் பகற்பொழுதிற்கு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். உணவு அருந்திவிட்டீர்களா?"

"இல்லை அம்மா. இனிமேல் தான்"

"தேனும் தினைமாவும் இருக்கின்றன ஐயா. உண்கிறீர்களா?"

"ஆகட்டும் தாயே"

நாகையார் கொண்டு வந்து கொடுத்த தேனையும் தினைமாவையும் வயிறார உண்டு விட்டு நிழலாக இருக்கும் ஒரு திண்ணைக்கு வந்து அமர்ந்தார் கபிலர். சரியாக அதே நேரத்தில் . குறுவழுதியார் திரும்பி வந்தார்.

"ஐயா. இது என் வீடு தான். தங்களைப் பார்த்தால் புலவர் போல் தெரிகிறது. உணவு உண்டீர்களா?"

"ஆம் ஐயா. அம்மை உணவு தந்தாள். சுவையான உணவை இப்போது தான் உண்டு முடித்தேன். சற்று இளைப்பாறவே இங்கு அமர்ந்திருக்கிறேன்"

"மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் எழுதித் தரும் பாடல்களைப் பண்ணில் இசைத்துப் பாடுபவர்கள் நாங்கள்."

"ஓ. பாணரோ?"

"ஆம் ஐயா. என் மனைவியும் நன்கு பண்ணிசைத்துப் பாடுவாள்"

"அம்மையின் குரலும் நன்கு இனிமையாக இருக்கிறது"

"ஆம் ஐயா. எங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான புலவர் பெருமக்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்"

ஒரு செம்பில் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து கபிலர் அருகில் வைத்துவிட்டு சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த தன் கணவர் அருகில் அமர்ந்தாள் நாகையார்.

"பாணரே. நீங்கள் பரிசில் வேண்டி எந்த ஊர்களுக்குச் சென்றுள்ளீர்கள்? அந்த ஊர்களின் சிறப்புகளைச் சொல்லுங்கள்."

"புலவர் பெருமானே. பரிசில் வேண்டிப் பலவூர் செல்லும் தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. இவ்வூர்ப் பெருமக்களே எங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் நாங்கள் இதுவரை இந்த ஊரை விட்டு வேறு ஊர்களுக்குப் பரிசில் வேண்டிச் சென்றதில்லை"

"வியப்பிலும் வியப்பு பாணரே. பாணர்களும் புலவர்களும் பரிசில்களை வேண்டிப் புரவலர்களை நோக்கிச் செல்லுதல் தானே முறை. நம் மன்னர் பாரியை நோக்கிப் பல திசைகளில் இருந்தும் பரிசிலர்கள் வந்து கொண்டே இருக்க இந்த நாட்டில் வாழும் நீங்கள் அவனிடம் கூடவா பரிசில் வேண்டிப் பெற்றதில்லை?"

"ஐயா. அப்படியே பரிசில் வேண்டிச் செல்ல வேண்டும் என்றாலும் யார் யாரிடம் சென்றால் பரிசில் கிடைக்கும் என்று தெரியாது ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் சொன்னால் அதனைக் கேட்டு அதன் படி நடப்போம்"

"அம்மையே. நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் எழுதிய சிறுபாணாற்றுப்படையில் வள்ளல்கள் ஏழு பேரைப் பற்றி சொல்லியிருக்கிறார். பாணர்களை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்துவதே இந்த சிறுபாணாற்றுப்படையின் நோக்கம். அந்த நூலில் இருக்கும் செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நத்தத்தனார் சொன்ன ஏழு வள்ளல்கள் பாரி, காரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்போர்.

சுரும்புகள் (வண்டுகள்) விரும்பி உண்ணும் படி தேனைத் துளிக்கும் பூக்களை உடைய மரங்கள் நிறைந்த காட்டு வழியில் சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடிக்கு அது தழுவி வளர்ந்து தழைப்பதற்குப் பெரிய அழகிய தேரினைக் கொடுத்த எல்லாத் திசைகளிலும் வெள்ளிய அருவிகள் விழும் பறம்பு மலைக்கு அதிபதியான வள்ளல் பாரி.

சுரும்புண நறுவீ யுறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி


வாலாலேயே உலகத்தையெல்லாம் மருளச் செய்யும் புரவியுடைய, அன்புடன் கூடிய நல்ல சொற்களை இரவலர்களுக்குத் தந்த, நெருப்பு திகழ்ந்து விளங்கும் அச்சம் தரும் நெடிய வேலினையுடைய வீரக்கழலினையும் தொடியையும் அணிந்த நீண்ட கைகளையுடைய காரி

வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்
கழல் தொடித் தடக்கை காரி


மழை தவறாமல் பெய்வதால் உண்டான வளத்தை உடைய மலைப்பகுதிக் காட்டிடையே திரிந்து கொண்டிருந்த மயில் கூவியதை அது குளிரால் நடுங்கிக் கூவியது என்று கருதி அருள் மிகுதியால் போர்வையைக் கொடுத்த, அருமையான வலிமையையுடைய அழகிய வடிவினையுடைய ஆவியர் குடியில் பிறந்த பெருமகன், பெரிய மலைநாட்டையுடைய பேகன்

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்


குளிர்ச்சி தரும் வகையில் கருநிற நாகம் கொடுத்த உடையை மனம் உவந்து ஆல மரத்தின் கீழ் அமர்ந்த இறைவற்குத் தந்த, வில்லைத் தாங்கிச் சந்தனம் பூசித் திகழும் வலிமையனா தோள்களைக் கொண்ட, அன்புடைய நன்மொழிகளை உடைய ஆய்.

நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவன் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன்மொழி ஆய்


பெருமையுடைய மலையில் கமழும் பூக்களையுடைய சாரலில் உள்ள நெல்லி மரத்தில் விளைந்த நீண்ட வாழ்நாளைத் தரும் அருமையான நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு ஈந்த, சினம், நெருப்பு, ஒளி இவை மூன்றும் திகழும் நெடிய வேலினை உடைய, பெரும் அரவத்தை உண்டாக்கும் கடலினைப் போன்ற படையை உடைய அதியமான்

மால்வரைக் கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்
அரவம் கடல் தானை அதிகன்


தம் மனத்தில் உள்ளதை மறைக்காது கூறி நட்பு செய்தவர்கள் மகிழும் படி அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பொருட்களை நாள் தோறும் தவறாது கொடுத்த, போர் முனையில் வெற்றி பெற்று விளங்கும் நீண்ட கைகளை உடைய, மழை தவறாது பொழியும் உயர்ச்சியால் காற்று செல்லும் இடம் வேறின்றித் தங்கும் பெரிய சிகரங்களை உடைய மலைநாட்டையுடைய நள்ளி

கரவாது நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளி


தேன் நிரம்பிய மணம் கமழும் பூக்களை உடைய நாக மரங்கள் நிரம்பிய நல்ல நிலத்தை கோடியர்க்குத் தந்த, கரிய நிறக் குதிரையில் வலம் வரும் ஓரி

நளிசினை நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரி


இந்த ஏழு வள்ளல்களும் வருகின்ற பரிசிலர்களுக்கு எல்லாம் வேண்டியதெல்லாம் வேண்டிய அளவிற்குத் தருகிறார்கள். நீங்களும் இவர்களை நோக்கிச் சென்றால் வேண்டியதெல்லாம் பெறலாம்"

"ஐயா. ஏழு வள்ளல்களைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. எனக்குப் பல நாட்களாக ஒரு பொன்னாலான நீண்ட கழுத்தணியை அடைய வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுவதற்கு யாரிடம் சென்று இரக்கலாம்?"

"என்ன கேள்வி இது அம்மையே. நம் மன்னவன் பாரியிடமே சென்று பெறலாமே"

"இசையில் கொஞ்சமே எனக்குத் தேர்ச்சி உண்டு. பாடல் புனையும் திறமையும் கிடையாது. எதனை வைத்துக் கொண்டு நான் பாரி மன்னரிடம் சென்று பொன்னிழை வேண்டுவேன் புலவர் பெருமானே"

"இது தான் உங்கள் குறையா? கவலையே வேண்டாம். அதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது"

Saturday, January 26, 2008

சித்திரையா தையா? தமிழ் புத்தாண்டு தொடங்குவது என்று?

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்ற கருத்து தமிழறிஞர்களால் சொல்லப்பட்டு அது தமிழார்வம் கொண்டவர்களால் பல ஆண்டுகளாக ஏற்கப்பட்டு வந்திருக்கிறது. பொங்கல் தினத்தன்று கடந்த இரு வருடங்களாக என்னுடன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட வலைப்பதிவர்கள் உண்டு.

நேற்று தமிழாயம் என்ற கூகுள் குழுமத்தில் இருக்கும் அஞ்சல்களைப் படித்துக் கொண்டிருந்த போது தினமணியிலும் நக்கீரனிலும் வந்த இந்த இரு கட்டுரைகளையும் படித்தேன். அரசு ஆணை வெளியான பின்பு தமிழ்ப்புத்தாண்டு சித்திரையிலா தையிலா தொடக்கம் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் நண்பர்களும் இக்கட்டுரைகளைப் படிக்க விரும்பலாம் என்று எண்ணியதால் இங்கே இடுகிறேன்.

***

சித்திரையில்தான் புத்தாண்டு
எஸ். ராமச்சந்திரன்
(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)


இக்கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்" எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத்
தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது.
தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும்,தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் (Spring) எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு
மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட "ஏரீஸ்" வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய
(லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம்
(பிர்தெளஸ்)
என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ
(சித்திரை)
மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது "மீன மேஷம் பார்த்தல்'' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது *தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?
*

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். ("நாஞ்சிற்பனைக் கொடியோன்'' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை "புஜங்கம புரஸ்ஸர போகி" எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது.
எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.
பூம்புகாரில் இந்திர விழாவின்போது "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 - 69களில் குறிப்பிடப்படுகிறது.

*பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா?
*

இவை இரண்டிற்குமே தெளிவான விடை "அல்ல'' என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் "இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்'' என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி - பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்''
என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 -
161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும்.
ரோமானிய
நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்" என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 - 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, "தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் "பிரபவ'' தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்''
எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும்.
எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த", இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற''
காலகட்டத்தில், "நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் "தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர"மாக ஆராய்ந்தால் கிடைக்கும்
விடை:
"சித்திரையில்தான் புத்தாண்டு''.
நன்றி: தினமணி

***

*தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா? - நக்கீரன், **11 January
2007*


சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை.
சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து
10-03-1940)

60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக்
(60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது.
ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)

மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது.
மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்" என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா.
சுப்பிரமணியப்
பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி.
புத்தாண்டுத்
தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.

தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு.
அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.

எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு - (புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன்)

Friday, January 25, 2008

ஜன கன மன - குடியரசு தினத்தை முன்னிட்டு...

இன்றைக்குக் குடியரசுத் தினம். குடியரசு முறை நம் நாட்டிற்குப் புதியதன்று. தமிழகத்தில் மன்னர் ஆட்சியே இருந்திருந்தாலும் குடவோலை முறையில் ஊர்ச்சபையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்ததாகவும், வட நாட்டில் மௌரியர் காலத்திற்கு முன் 'கண ராஜ்யம்' என்னும் சிறு சிறு குழு குடியரசுகள் இருந்ததாகவும் படித்திருக்கிறேன்.

நம் தேசிய கீதம் எந்தத் தருணத்தில் இயற்றப்பட்டது என்பது ஒரு விவாதமாகவே இருக்கிறது. கவிகுரு இரவீந்திர நாத் தாகூர் அதனை ஆங்கில (வேல்ஸ்?) இளவரசர் பாரதத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்கும் முகமாக எழுதியது என்ற ஒரு கருத்து வலுவுடன் வலம் வருகிறது . இருக்கலாம். அதனை மறுத்துக் கூறவோ ஆதரித்துக் கூறவோ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது அரசியல்வாதிகளின் வெறும் கூச்சலாக இருக்கலாம். இல்லை அதில் உண்மையும் இருக்கலாம்.

ஆனால் நம் தேசிய கீதத்தின் பொருளைப் பார்க்கும் போது அது நம் நாட்டின் பெருமையை மிக நன்றாகப் பாடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் இந்தப் பாடலைப் புறக்கணித்து விட்டு இன்னொரு பாடலை நாம் நம் நாட்டுப் பண்ணாகக் கொண்டுவரத் தேவையில்லை என்று தான் சொல்வேன். நீங்களே படித்துப் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் - சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் - குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் - மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் - திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் - உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் - பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்த்ய ஹிமாசல

யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் - விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் - இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் - கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா - மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே - உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே - உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா - உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே - இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! - வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!

***
நண்பர் சந்தோஷ் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் மிக நல்ல முறையில் நம் நாட்டுப் பண் பல இசைவாணர்களால் இசைத்துப் பாடப்பட்டு எடுக்கப் பட்டப் படத்தை இட்டிருந்தார். அதனை இந்தப் பதிவிலும் இடவேண்டும் என்று எண்ணி அவரிடம் கேட்டேன். அவர் சொன்ன முறையில் கூகிள் கொடுத்த இந்தப் படத்தை இங்கே தருகிறேன். பார்த்துக் கேட்டு மகிழுங்கள். முடிந்தால் எழுந்து நின்று நாட்டுப் பண்ணுக்கு மரியாதை செய்யுங்கள்.


இது ஒரு மீள்பதிவு - நான் தமிழ்மண நட்சத்திரமாக இருந்து இரு வருடங்கள் ஆகிவிட்டன. :-)

கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?

எழுத வந்த புதிதில் என்ன எழுதுவது என்று தெரியாமல் இதை எழுதலாமா அதை எழுதலாமா என்று சிலவற்றைப் பரிசோதித்துப் பார்த்தேன். அப்படி எழுதிய ஒரு இடுகை தான் இந்த இடுகை. உஷா மொக்கை போட அழைத்தவுடன் இதை மீள்பதிவு செய்துவிடலாம் என்று தோன்றியது. அப்படியே செய்கிறேன். இப்போது நால்வரை அழைக்க நேரம் இல்லை. நாளைக்கும் நால்வரை அழைத்து இந்த இடுகையில் எழுதுகிறேன்.

***

சின்ன வயசிலெ இந்த மகாபாரதம் படிக்க ஆரம்பிச்சிட்டா போதும், சோறு தண்ணி வேணாம் எனக்கு. அவ்வளவு சுவாரசியமா போய்க்கிட்டு இருக்கும். நல்லவனா எப்படி வாழ்றதுன்னு கத்துக்கற அதே நேரத்துல ஊர எப்படி எப்படி எல்லாம் ஏமாத்தலாம்ங்கறதையும் அதுல கத்துக்கலாம். அப்பப்ப விடுகதை, கேள்வி பதில், துணுக்குகள், புதிர்கள், கதைக்குள் கதை அப்படின்னு வந்துக்கிட்டே இருக்கும். அதுல இருக்கிற எல்லா புதிர்களிலும் நான் இப்பொ எழுதப்போற புதிருக்குத் தான் எனக்கு இன்னும் பதில் தெரியல.

உங்ககிட்ட யாராவது வந்து 'கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு?'ன்னு கேட்டா என்ன சொல்வீங்க? டக்குன்னு 'அண்ணன் தம்பி'ன்னு தானே? நானும் அப்படித்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஒரு நாள் எங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிறப்ப, 'யமன் சூரியனோட மகன்'ன்னு சொன்னாங்க. உடனே எனக்கு கர்ணனும் தருமனும் தான் ஞாபகத்துக்கு வந்தாங்க.

மகாபாரத்தின் படி, கர்ணன் சூரிய தேவனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன்; தருமன் யம தரும ராஜனின் 'அருளால்' குந்தி தேவிக்குப் பிறந்தவன். அப்படின்னா கர்ணனுக்கும் தருமனுக்கும் என்ன உறவு? அண்ணன் தம்பியா? இல்லியே...கர்ணனும் யமனும் சூரிய தேவனின் மக்கள். அப்படின்னா, கர்ணனுக்கு அண்ணன் மகன் தானே தருமன்...தம்பி இல்லியே? சரியா?

இந்த கேள்விக்கும இன்னும் எனக்கு யாரும் சரியா பதிலே சொல்லல...உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களே!!!!

***

இதை முன்பு பதித்த போது வந்த பின்னூட்டங்களைப் படிக்க வேண்டும் என்றால் இங்கு செல்லவும்.

Thursday, January 24, 2008

உடுக்கை இழந்தவன் கை - அத்தியாயம் 1

உவகையுடன் கூடிய உள்ளத்தினராதல் மிகப் பெரிய சிறப்பு. எல்லோருக்கும் துன்பமும் இன்பமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. குளிரும் வெப்பமும் போல் மாறி மாறி வரும் இந்த இன்பதுன்பங்களில் எல்லாம் உவகை கொண்ட மனத்துடன் இருப்பதென்பது ஒரு சிலரால் தான் முடிகிறது. கடமை புரிவார் இன்புறுவார் என்றொரு பண்டைக்கதையும் உண்டு. கடமையைச் செய்வதாலேயே இன்பம் தோன்றிவிடுகிறதா? கடமையைச் செய்து முடித்தவுடன் ஒரு நிறைவும் அமைதியும் தோன்றினாலும் உள்ளத்தில் உவகை தோன்றி நிலை நிற்பதில்லை. இப்படி இருக்க எல்லா கடமைகளையும் செய்து கொண்டே எதுவும் செய்யாத நிலையில் நிற்க வேண்டுமென்று கற்றறிந்தவர்கள் சொல்கிறார்கள். உலகத்தில் அப்படி இருப்பவர்கள் யாரேனும் உண்டா என்ன?

எல்லாமும் செய்து கொண்டிருக்கும் போதே ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலையில் நிலைத்து நிற்கும் கரும யோகியைப் போல் கதிரவன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான். இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் தழைத்து வாழ்வதற்காக என்று அவன் தன்னை எரித்துக் கொண்டு ஒளிவீசவில்லை. தானாக ஏனோ எரிந்து கொண்டிருக்கிறான். அவனின் ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியால் உலகத்து உயிர்கள் எல்லாம் வாழ்கின்றன. அவனின் எரி தழலின் வீச்சினைப் பொறுத்துக் கொள்ளும் தூரத்தில் அவனை வலம் வந்து கொண்டிருக்கும் பூமி அன்னை அவனது ஒளி தரும் சக்தியால் தன்னில் பிறந்த உயிர்களுக்குத் தேவையான உணவுகளை எல்லாம் உருவாக்கித் தருகிறாள். அன்னையும் தந்தையுமாக இருவரும் உயிர்க்குலம் அனைத்தையும் உயிர்ப்பித்து வளர்த்து வருகிறார்கள்.

பன்னெடும் காலமாக இந்த உலகத்தில் உயிர்கள் எல்லாம் இப்படியே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்து அதனிலிருந்து இன்னொன்று பிறந்து என்று பல்கிப் பெருகி நிற்கின்றன. இந்தத் தென்பெண்ணையாற்றங்கரையோரப் பகுதியும் அப்படித் தான் இருக்கிறது. ஆற்று நீர்ப் பாசனத்தாலும் மாதம் மும்முறை தவறாது பெய்யும் மழையினாலும் இந்தப் பகுதி முழுவதும் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்திருக்கிறது. அந்தச் செழுமை இங்கு வாழும் மக்களிடமும் தெரிகிறது. வந்தவரை எல்லாம் வரவேற்று வாழவைக்கும் பெருமக்கள் இவர்கள். காடுகள் நிறைந்த இந்த முல்லை நில மக்கள் கரியவனைத் தொழுது வாழ்பவர்கள். ஆங்காங்கே காடுகளை வெட்டி சிறு ஊர்களும் நகரங்களும் அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். ஊருக்கு நடுவே மாயோனுக்குக் கோவிலும் அமைத்துப் பரவுகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக மக்கள் அனைவரும் தம் மன்னவனின் திருமண விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். பழம்பெருமை கொண்ட குடியில் பிறந்த தங்கள் மன்னவனுக்கு ஏற்ற வகையில் இன்னொரு பழம்பெருமை கொண்ட குடியில் பிறந்த மகளிர் மனைவியராக அமைந்ததை எண்ணி எண்ணி தம்முள் ஒருவருக்கொருவர் பேசிப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். மன்னவனும் வள்ளல் என்று பெயர் பெற்றவன்; அவன் மனைவியரும் பெரும்வள்ளல் ஒருவனின் மக்கள். என்ன பொருத்தம் என்ன பொருத்தம் என்று வியக்காதவர் இல்லை. தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் பலவிதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வண்ணப்பொடிகளை எண்ணெயுடன் கலந்து ஒருவர் மேல் ஒருவர் தடவியும் வண்ணப்பட்டாடைகளை உடுத்தியும் மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். போவோர் வருவோரை எல்லாம் வருந்தி அழைத்து விருந்து கொடுத்து மகிழ்கின்றனர்.

மகிழ்ச்சி ஒன்றைத் தவிர வேறு ஏதும் அறியாதவரைப் போல் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் ஒரு முதியவர் வந்து கொண்டிருக்கிறார். தம் மன்னவனின் திருமண விழாவைத் தங்கள் வீட்டு விழா போல் கொண்டாடும் இந்த மக்களின் அரச அன்பைக் கண்டு புன்னகை பூத்த முகத்துடன் வந்து கொண்டிருக்கிறார். அந்த முதியவரின் தோற்றம் அவர் கல்வி கேள்விகள் சிறந்தவர் என்று பறை சாற்றுகிறது. அறிவின் ஒளி முக மண்டலமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறது. அவர் தனது இடையில் அணிந்திருக்கும் வெண்ணிற பட்டாடை அவரது செல்வச் செழுமையைச் சொல்கிறது. அரசர் பெருமானிடம் செல்வாக்கு கொண்டவர் என்பதை அவரது கையில் அணிந்திருக்கும் பொன் வளை சொல்கிறது. காலில் அணிந்திருக்கும் தண்டை இந்நாட்டு மன்னவன் மட்டுமின்றி வேறு பல மன்னர்களிடமும் செல்வாக்கு பெற்றவர் என்பதைக் கூறுகிறது. கழுத்தில் காதிலும் அணிந்திருக்கும் பொன்னணிகள் பல மன்னர்களிடம் பெற்ற பரிசில்களைப் போல் தெரிகின்றன. அவரது தோற்றத்தைப் பார்த்தாலே ஒரு பெரும் புலவர் என்று தெரிகிறது. அந்தத் தோற்றத்தைக் கண்ட மக்கள் அவருக்கு முகமன் கூறி மரியாதையுடன் வழி விட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

பெண்ணையாற்றங்கரையில் வந்து நின்ற அவருக்கு அந்தச் சூழல் மிகவும் பிடித்திருக்கிறது. முதல் நாள் பெய்த மழை நீர் இன்னும் இந்த ஆற்றங்கரை புற்களின் மீது தேங்கி நிற்கிறது. அந்த நீர்த்துளிகள் கதிரவனின் ஒளியில் வைரக் கற்களைப் போல் மின்னுகின்றன. இன்று காலை பெய்த பனியோ என்று ஒரு நொடி தோன்றினாலும் பனி என்றால் கதிரவனைக் கண்டவுடன் விலகியிருக்கும்; இவை இன்னும் விலகாமல் நிற்பதால் இவை மழைத்துளிகளே என்று நினைத்துக் கொள்கிறார் அந்த முதியவர்.

கடமையைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மனத்தில் வருகின்றன. தனக்குரிய கடமைகள் எல்லாம் நிறைவேறிவிட்டது என்ற மன அமைதி இருந்தாலும் ஒரு பெரும் துயரம் அவரது மனத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

'ஆருயிர் நண்பனை விட்டு கடைசி வரை பிரியாதிருப்போம் என்றல்லவா நினைத்திருந்தோம். காலத்தின் கோலத்தால் இப்படி அவனை மரணத்தின் வாயிலில் தனியே விட்டுவிட்டு வர வேண்டியதாயிற்றே. வாழும் வரை வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வாரி வழங்கி அவனை விட்டால் மாரி ஒன்று மட்டும் தான் உலகத்தில் அவனளவு வள்ளற்தன்மை கொண்டது என்று போற்றும் படி வாழ்ந்தானே. அவனுக்கு இப்படி ஒரு கதி ஏற்பட்டதே. செய்த அறங்களை எல்லாம் பரிசிலர்க்கு வழங்கிவிட்டானோ? அவனை அவன் செய்த எந்த அறமும் காக்கவில்லையே? ஐயகோ ஐயகோ. இந்த மக்கள் எல்லோரும் மகிழ்வுடன் தங்கள் மன்னவன் திருமணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நானோ என் மன்னவன் வானுறையச் சென்றதை எண்ணி துயர் உறுகிறேனே'

பெண்ணையாற்றங்கரையில் அமர்ந்து தனிமையில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார் அந்த முதியவர். மனத்தை அரிக்கும் துயரங்கள் கண்களின் வழியே வெளி வந்து கன்னங்களையும் அரிக்கத் தொடங்கிவிட்டன. சிறு வயது முதல் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அவர் மனக்கண் முன் தோன்றி மறைகின்றன.

Tuesday, January 22, 2008

புல்லாகிப் பூண்டாகி - நினைத்ததும் நடந்ததும் - ஒரு சுய விமர்சனம்

மனத்தில் பல நாட்களாக பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த ஒரு விதை எஸ்.கே. எழுதிய சித்தர் குறுநாவலின் கடைசிப் பகுதிகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் நினைவிற்கு வந்தது. அதனைப் பற்றியே எண்ணிக் கொண்டு உறங்க கனவிலும் அந்த விதை மீண்டும் வந்தது. அந்தக் கனவைப் பற்றி சித்தர் குறுநாவலின் கடைசி இடுகையின் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு இறையருளை முன்னிட்டு 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையை எழுதத் தொடங்கினேன்.

எழுதும் முன் இதை நான்கு ஐந்து பகுதிகளாக உள்ள சிறிய தொடராக எழுதலாமா, பல பகுதிகளாகக் கொண்ட பெரிய தொடர்கதையாக எழுதலாமா, குறுநாவல் என்று சொல்லி நன்கு விரித்து எழுதலாமா என்றெல்லாம் கேள்விகள். குறுநாவலாக மிகவும் விரித்தால் எடுத்துக் கொண்ட பொருள் மிகவும் நீர்த்துப் போய்விடும் என்று தோன்றியது. சிறிய தொடராக எழுதினால் புகுந்து புறப்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் பெரிய தொடராகவே எழுதலாம் என்று எண்ணி அதனை அறிவித்து விட்டுத் தொடங்கினேன்.

என்ன எழுதுவது என்றும் எப்படி கதையை நகர்த்திச் செல்வது என்றும் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டு குறிப்பு எழுதி வைத்துக் கொண்டேன். எழுதிய குறிப்பினைப் பார்த்த போது கதையின் முக்கிய இடம் முதல் சில அத்தியாயங்களில் வராததைக் கண்டேன். அதனால் கதையின் முக்கிய செய்தியைத் தலைப்பில் மட்டும் சொல்லிச் செல்லலாம்; அது பலருக்கும் புரியும் என்று தோன்றியது.

இப்படி எழுதத் தொடங்கிய பின்னர் தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன என்ன எழுதுவது எந்த செய்தியைச் சொல்லுவது; எதனை விடுப்பது; எதனில் புகுந்து புறப்படுவது; எதனில் மேலோட்டமாகத் தொட்டுச் செல்வது என்பதெல்லாம் அந்த அந்த அத்தியாயம் எழுதும் போது அன்று இருந்த மனநிலையின் அடிப்படையிலேயே தான் சென்றது. அதனால் சில அத்தியாயங்கள் மிகவும் மேலோட்டமாகவும் சில கொஞ்சம் ஆழமாகவும் சென்றன.

முதலில் வந்த அத்தியாயங்களில் கந்தனின் குணநலன்களை வெறும் வார்த்தைகளால் சொல்லிச் செல்வதை விட சில நிகழ்ச்சிகளால் சொன்னால் நன்று என்று தோன்றியது. அதனால் நிகழ்ச்சிகளைச் சொல்லி வந்தேன். அதனால் தான் மலை வலமும் கோவில் தரிசனமும் என்று கதைக்குத் தொடர்பில்லாதது என்று கூட தோன்றும் அத்தியாயங்கள் இருந்தது. அவை இயற்கையாக அமைந்தன என்றே நம்புகிறேன். அவற்றில் மிகையாக எதனையும் சொல்லவில்லை. அங்கே என்னுடைய குறிக்கோள் கந்தனின், கேசவனின் குணங்களைக் கோடிட்டுக் காட்டுவதே. அப்படி நம்மைச் சுற்றி சாதாரணமாக சராசரியாகச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெளிப்பார்வைக்குச் சாதாரணமாகத் தென்படுபவர்கள் எல்லாம் சாதாரணமானவர்களாக இருக்க வேண்டியதில்லை. அவர்களின் பின்புலம் மிக ஆழமானதாக இருக்கலாம். இந்த செய்தியைக் கதையில் சொல்ல நினைத்தேன். எவ்வளவு தூரம் சொன்னேன் என்று தெரியவில்லை. ஒருவருக்காவது அந்த எண்ணத்தை இந்தக் கதை ஏற்படுத்தியிருந்தால் அதுவே வெற்றி என்று எண்ணிக் கொள்வேன். ஏதோ ஒரு கேள்விக்கு சீனா ஐயாவுக்குக் கொடுத்த விடையிலும் 'எல்லோருமே தெய்வீகப் பிறவிகள் தான் ஐயா' என்று பின்னூட்டத்தில் சொன்னேன். கதையில் சொல்லி விளக்க முடியாததைப் பின்னூட்டங்களில் சொல்ல விழைந்தேன். அதனால் இந்தத் தொடருக்கு பின்னூட்டங்களும் மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.

இந்தக் கதையில் கந்தனிடமும் கேசவனிடமும் கதையைப் படித்தவர்கள் சிலர் தங்களையே கண்டு கொண்டார்கள் என்பது அவர்களின் விமர்சனத்தால் தெரிகிறது. அதுவும் நான் எதிர்பார்த்த ஒன்று. அதனால் மகிழ்ச்சி.

படித்தவர்கள் தங்களைக் கதை மாந்தர்களிடம் கண்டது மட்டுமின்றி தங்கள் கருத்துகளையும் கதை மாந்தர்களிடம் ஏற்றி கதை மாந்தர்கள் செய்ததில் முரண்பாடுகளையும் கண்டிருக்கிறார்கள். அதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதையை எழுதிய நான் என் கருத்துகளைக் கதை மாந்தர்கள் மேல் ஏற்றிய அதே நேரத்தில் மற்றவர்களும் அவரவர் கருத்துகளைக் கதை மாந்தர்களிடம் ஏற்றும் வகையில் கதை அமைந்திருந்தது எழுதிய எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

பாராட்டுகளாகச் சில விமர்சனங்களும் மேற்சென்றிடிக்கும் கருத்துகளாகச் சில விமர்சனங்களும் என்று நகுதற் பொருட்டு மட்டுமில்லை நட்டல் என்று ஐயன் சொன்னதற்கேற்ப பலவிதமான விமர்சனங்களை என் மனம் நிறையும் படி தந்திருக்கிறார்கள் நண்பர்கள். அவர்கள் சொன்னவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டு விடை சொல்ல முயல்கிறேன். ஏதேனும் ஒன்றிற்கு நான் விடை சொல்ல வேண்டும்; ஆனால் சொல்ல மறந்துவிட்டேன் என்று தோன்றினால் தயங்காமல் கேளுங்கள். தெரிந்த வரை சொல்கிறேன்.

***

எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால் அதன் தொடர்பில் எழுதும் போது எழுத்தும் கருத்தும் இயல்பாக வெளிப்படும் என்று கோவி.கண்ணன் சொல்லியிருக்கிறார். அது உண்மை தான். ஆனால் இந்தக் கதையில் சொல்லப்பட்ட கருத்தில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக எண்ணவில்லை. நான் ஏறக்குறைய யோகன் ஐயா சொன்னது போல் தான் இவற்றை எடுத்துக் கொள்கிறேன்.

நம்பிக்கை ஆழமாக இருந்தால் மட்டும் இல்லை அனுபவங்களும் சில நேரங்களில் எழுத்தையும் கருத்தையும் இயல்பாக வெளிப்படுத்தும் என்பதும் உண்மை.

மலை வலமும் கோவில் தரிசனமும் வேக வேகமாக முடிந்தன என்று பாலாஜியும் அவை கதைக்குத் தேவையில்லாமல் இருந்தன என்று இரவிசங்கரும் இன்னொரு நண்பரும் (அவர் விமர்சனம் எழுதிக் கொடுக்காமல் ஜிமெயில் அரட்டையில் மட்டும் தன் கருத்துகளைக் கூறினார்) சொல்லியிருக்கின்றனர். முதல் சில அத்தியாயங்கள் கதைக்குத் தேவையில்லாதது போல் தோன்றினாலும் அங்கே கதை மாந்தர்களின் குண நலன்களை வெளிப்படுத்தவே அவற்றைச் சொன்னேன். அதனால் இப்படி இருவிதமான கருத்துகள் தோன்றியிருக்கின்றன என்று நினைக்கிறேன். ஆனால் கோவில்களைப் பற்றி சொல்வதற்கு இது ஒரு நல்லதொரு வழிமுறை என்று எழுதும் போது தோன்றத் தொடங்கியது. இந்த கதை சொல்லும் பாணியில் கோவில்களைப் பற்றி இனி மேல் ஒரு சிலவாவது சொல்வேன் என்று நினைக்கிறேன்.

புல்லாகிப் பூண்டாகி என்று தலைப்பிற்கு மட்டுமே மாணிக்கவாசகர் உதவியதால் அவர் சொன்ன எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தலை இந்தக் கதை சொல்லவில்லை. இன்னும் எத்தனை பிறவியப்பா என்று நண்பர்களுக்குத் தோன்றுவதற்கு முன் நான்கே பிறவிகளில் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் பின்னர் தாத்தா - கந்தன் உரையாடலில் மிச்சத்தைச் சொன்னது நல்லதாகப் போய்விட்டது. இதற்கே தகவல்களைச் சால மிகுத்துப் பெய்துவிட்டீர்கக்ள் என்று ஒரு நண்பர் சொன்னார். நல்ல வேளை இன்னும் விரிக்கவில்லை.

கதை பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது என்று பாலாஜி சொல்லியிருக்கிறார். அது கதையைப் படித்ததால் மட்டும் தோன்றிய எண்ணமா என்னை அறிந்ததால் தோன்றிய எண்ணமா தெரியவில்லை. என்னை அறியாதவர்களும் கதையைப் படித்துப் பார்த்தால் இந்த கதையில் பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று எண்ணுவார்களா தெரியவில்லை. என்னை அறியாமல் பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லிச் சென்றேனோ என்னவோ. அதே போல் தான் கோவி. கண்ணன் சொன்ன 'வைணவர் என்பதால் கண்ணனைப் பற்றி முடிந்த போதெல்லாம் நுழைத்திருக்கிறார்' என்ற கருத்திற்கும் தோன்றுகிறது. கண்ணனைப் பற்றிச் சொன்ன அளவிற்கு மற்றவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். ஆனால் என்னை அறிந்தவர் என்பதால் கோவி.கண்ணனுக்கு அப்படி ஒரு கருத்து தோன்றியதோ என்று எண்ணுகிறேன். ஒரு வேளை கண்ணனைப் பற்றி எழுதும் போது என்னை அறியாமல் ஒரு தனிப் பரவசம் தென்பட்டதோ என்னவோ.

பாலாஜி சொன்னது போல் அடுத்தமுறை கதையின் ஓட்டத்தை இன்னும் பல முறை சிந்தித்துவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.

மிக மிக அருமையாக விமர்சனம் எழுதிக் கொடுத்திருக்கிறார் கீதாம்மா. எல்லா அத்தியாயங்களையும் அழகாக உள்வாங்கி முக்கியமானவற்றை எடுத்துச் சொல்லி அவர் விமர்சனத்தை ஒரு முறை படித்தாலே முழுக்கதையையும் படித்த ஒரு வீச்சைத் தந்திருக்கிறார்.

நாயகி பாவத்தை ஏன் மாதுர்ய பக்தி என்று சொல்கிறார்கள் என்று விவரித்துக் கூறியிருக்கலாம் என்று மௌலி சொல்லியிருந்தார். விவரித்துச் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அதனை விவரிக்கும் திட்டம் இல்லாததால் மேலோட்டமாகச் சொல்லிச் சென்றேன்.

பஞ்ச கோசங்களைப் பற்றிய அறிவும் உணர்வும் உள்ள ஒரு ஞான மார்க்கிக்கு எப்படி வாசனையைப் பற்றியும் இராமகிருஷ்ணரின் நிலையைப் பற்றியும் தெரியாமல் போனது என்றும் மௌலி வியந்திருக்கிறார். பலவிதமான அறிவும் உணர்வும் இருந்தாலும் முந்தைய வாசனைகளின் ஈர்ப்பினால் தேவையானது தகுந்த நேரத்தில் மறந்து போவதில்லையா? அது அங்கே ஜகன்மோகனுக்கும் நடந்திருக்கலாம். அதனால் தான் அவரது குரு அவற்றைப் பற்றித் தொட்டுச் சென்றிருக்கிறார். அப்படித் தொட்டுச் சென்றவுடனேயே ஜகன்மோகனுக்குப் புரிந்தது; ஆனால் அந்த வாசனையும் அதன் ஈர்ப்பும் நீங்க அவர் இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது போலும்.

பக்தி மார்க்கத்தைக் கடந்த பின் வருவது ஞான மார்க்கமா, ஞான மார்க்கத்தைக் கடந்த பின் வருவது பக்தி மார்க்கமா என்ற விசாரணையில் நான் இறங்க விரும்பவில்லை. நரசிம்மதாசனுக்கு சைதன்யர் சொன்ன எச்சரிக்கையில் அவன் பக்தி மார்க்கத்தை விட்டு விலகி வேறு மார்க்கங்களுக்குச் செல்லும் வாய்ப்புண்டு என்பதைக் குறிப்பாகச் சொல்லியிருந்தேன்; அதிலேயே என் எண்ணமும் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தக் கேள்விகள் தவறாக ஞான மார்க்கிக்கு வந்திருக்கிறது என்று மௌலி நினைக்கிறார். ஆனால் சைதன்யர் வழி வந்தவர்களோ இராமானுஜர் வழி வந்தவர்களோ முதலில் பக்தி மார்க்கத்தில் இருந்தவன் எப்படி ஞான மார்க்கத்திற்குள் சென்றான்; முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே என்று கேட்கலாம். என்னிடம் விடை இல்லை.

ஏன் கீத கோவிந்தத்தையும் சைதன்யரையும் தோதாபுரியையும் எடுத்துக் கொண்டேன்; ஏன் நமக்கு இன்னும் நன்கு அறிமுகமான புரந்தர தாசரையோ ஊத்துக்காட்டாரையோ இரமணரையோ வள்ளலாரையோ எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மௌலி கேட்டிருக்கிறார். மிக அருமையான கேள்வி. படித்தவுடன் மனம் மிகவும் மகிழ்ந்தது.

இதற்கு பதில்கள்:

1. முதல் மூன்று பிறவிகளும் நமக்கு நன்கு அறிமுகமான சூழலில் நடக்கிறது. நான்கும் ஐந்தும் அவ்வளவாக அறிமுகமாகாத சூழலில் இருந்தால் என்ன?

2. இவையே கந்தனின் முற்பிறவிகள். தமிழ்நாட்டில் சைதன்யர் காலத்திலும் தோதாபுரி காலத்திலும் அவனுக்குப் பிறவிகள் ஏற்படவில்லை போலும். அப்படியே ஏற்பட்டிருந்தாலும் அவை இந்தப் பிறவிகளைப் போல் முக்கியமில்லாதவைகளாக இருந்தன போலும். அதனால் அவனுக்குக் கனவிலும் வரவில்லை. தாத்தாவும் சொல்லவில்லை.

எந்த பதில் பிடிக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள். :-)

கண்ணன் கால் பட்டால் பிறவிச் சூழலில் மாட்டிக் கொள்ள வேண்டுமா? இறைவன் திருவடிகளைப் பற்றினால் விடுதலை அல்லவா கிடைக்கும்? இங்கே சிறையில் மாட்டியதாக அல்லவா சொல்கிறார்? இவை இரவிசங்கரின் கேள்விகள். ஏற்கனவே ஒரு முறை பதிவின் பின்னூட்டத்தில் இதற்குப் பதில் சொல்லியிருந்தேன். அதனை மீண்டும் சொல்கிறேன். இறைவனின் கருணை எப்படிச் செயல்படும் என்று எப்படி சொல்வது? திருவடிகளைப் பற்றுதல் என்ற முயற்சியை அறிவுடைய பிறவிகள் செய்யலாம்; அதற்கு இரங்கி கண்ணன் காலடிகள் விடுதலை தரலாம். எந்த முயற்சியும் செய்ய இயலாத அறிவில்லாத பிறவியான கல்லிற்கு அறிவுடைய பிறவிகள் எடுக்கும் வகையில் கிக் ஸ்டார்ட் கொடுத்தது தானே கண்ணன் காலால் உதைபட்டது? உணர்வின்றிக் கிடந்தக் கல்லை உணர்வுடன் கூடிய பிறவிகளைப் பெறச் செய்து வீடுபேறு அடையும் வழியில் உதைத்து விட்டதால் இது முரண்பாடு இல்லை. கண்ணனின் திருவடிப் பெருமையே இது.

கதையில் இன்னும் நிறைய உரையாடல்கள் வேண்டும் என்று இரவிசங்கர் சொல்லியிருக்கிறார். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நிறைய உரையாடல்களை இட்டால் போரடிக்குமோ என்ற பயமும் இருந்தது. சுவையாக நிறைய உரையாடல்கள் எழுதினால் அந்தக் கவலை இல்லை. முயல்கிறேன்.

மகான்கள் நம்மிடம் பேச வேண்டிய தேவை இந்தக் கதையில் இல்லாதது போல் தோன்றியது. அதே நேரத்தில் ஓவர் டோஸ் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணமும் காரணம். அதனால் தான் அவர்கள் நம்மிடம் நேரடியாகப் பேசவில்லை.

தலைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு கதையின் ஓட்டம் புரிந்துவிடும் என்று தப்பாக எண்ணிவிட்டேன். பின்னூட்டங்களில் அதனை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியும் பலருக்குக் கதையின் ஓட்டம் புரியவில்லை தான். பதிமூன்றாம் அத்தியாயத்தில் எல்லாம் புரிந்த போது கதை நிறைவு பெற்றுவிட்டது. அதனால் மீண்டும் முழுக்கதையையும் படிக்க வேண்டிய தேவை இருந்தது. எத்தனை பேருக்கு அந்த பொறுமை இருக்கும்? இருக்காது தான். நானாக இருந்தால் மீண்டும் படித்திருக்க மாட்டேன். புரிந்த வரை போதும் என்று விட்டிருப்பேன். இரவிசங்கரும் பாலாஜியும் சொன்னது போல் நிகழ்காலத்தையும் முற்பிறவிகளையும் மாற்றி மாற்றியோ முற்பிறவிகளைப் பற்றி முதல் அத்தியாயங்களிலேயே குறிப்பாகவோ சொல்லியிருக்கலாம். வருங்காலத்தில் அப்படி ஒரு கதை அமைந்தால் அப்படி எழுத முயல்கிறேன்.

குறு நாவல் என்று தான் எழுதத் தொடங்கினேன். அப்புறம் பெரிய தொடர் என்று நிறுத்திக் கொண்டேன். அதனால் ஆலய வருணனைகள் பிரகார விளக்கங்கள் என்று எடுத்துக் கொண்டதைச் சுருக்கமாகச் சொல்லிச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு பக்கம் அது கதையை நீர்த்துப் போகச் செய்ததாகத் தோன்றும் போது மறு பக்கம் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் அவசர அவசரமாக முடிந்துக் கொண்டு வந்தது போல் தோன்றுகிறது.

காலடி பட்டதால் பிறவிச் சுழற்சி என்பது புதிய கருத்தாக இருக்கலாம். அதனால் அது குறை போல் தோன்றுகிறது. ஆனால் ஆன்மிகத்தில் அதற்கும் இடம் இருக்கிறது என்பதால் அதனை எதிர்த் தோற்றமாகப் பார்க்க வேண்டியதில்லை.

இந்தக் கதையில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் தீனி அமைந்திருக்கிறது என்று இரவிசங்கர் சொல்கிறார். அது உண்மையும் கூட. அதனை நோக்கமாக வைத்தும் இந்தக் கதையை எழுதினேன். தனிப்பட்ட முறையிலும் நாத்திகக் கருத்துகளில் ஆர்வம் உள்ளவன் நான். அது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். என் பதிவுகள் எல்லாம் நான் ஆத்திக நம்பிக்கை மிகுந்தவன் என்பதைப் பறைசாற்றினாலும் உண்மையில் நான் அக்னாஸ்டிக் வகையைச் சேர்ந்தவன் என்று தான் நினைக்கிறேன். அதனால் இரு சாராருக்கும் உள்ள கேள்விகள் எனக்கும் இருக்கின்றன. அவற்றை இந்தக் கதையிலும் சொல்லிவந்தேன்.

Personal Choice Vs. Destiny என்பது மிகப் பெரிய விவாதம். அதனை இந்தக் கதையில் மிக ஆழமாக விவாதிக்காமல் தொட்டுச் சென்றேன். தேடல் தொடரும்.

விமர்சனம் செய்யும் போதே கூடுதலாக ஒரு கதையையும் சொல்லி நம்மை எல்லாம் மகிழ்வித்திருக்கிறார் தி.ரா.ச. சுகப் பிரம்மத்தைப் பற்றிய கதை தான் அது. அவர் சொன்ன பிறகு தான் கவனித்தேன். தொடரின் பாதி தூரம் வரை கண்ணனைப் பற்றி ஒரு சொல் கூட வரவில்லை. அப்படியிருக்க "முடிந்த வரை கண்ணனைப் பற்றி 'நுழைத்தேன்'" என்று கோவியார் எப்படி சொன்னாரோ? :-)

கதையில் என் சொந்த அனுபவங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எந்த அளவிற்கு இவற்றில் உண்மை நிகழ்வுகள் எந்த அளவிற்கு கற்பனை என்பதை படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். :-)

என் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் ஒரு முறை முழுக்கதையையும் படித்து விமர்சனம் எழுதித் தந்த ஜீவி ஐயா, யோகன் ஐயா, கீதாம்மா, கோவி.கண்ணன், ஜீவா, இரவிசங்கர், பாலாஜி, தி.ரா.ச., மௌலி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.இந்தத் தொடர்கதையை குருஜி தாத்தா திரு. இராமன் ஐயப்பன் அவர்களின் திருவடிக்கமலங்களில் காணிக்கை ஆக்குகிறேன். திருமண நாளன்று நேரில் வந்து கந்தனை வாழ்த்தியது போல் என்றும் அவன் வாழ்க்கையில் துணையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.

Monday, January 21, 2008

புல்லாகிப் பூண்டாகி - மாதவிப் பந்தலார் & கௌசிகர் விமர்சனங்கள்

குமரனைப் போட்டுத் தாக்குவோம்! - புல்லாகிப் பூண்டாகி கதை விமர்சனம்!

கண்ணபிரான் காலடி பெற்ற "அந்தக்" கல்லு பேசறேன் மக்களே! எல்லாரும் நலமா? பொங்"கல்" எப்படிப் போச்சுது? நம்ம குமரன் தன்னோட புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டிருந்தாரு! நான் தானே கதையின் ஹீரோ! என்னையே இப்படிக் கேட்டாருன்னா, நான் எங்க போவேன்?

என் போன்ற கல்லுக்கு என்ன தெரியும் பெருசா? எண்ணும் எழுத்தும் அறியாத மண்ணு தானே கெட்டிப்பட்டு கல்லாக் கெடந்தது கெளரவர் சபையில்? ஏதோ கண்ணபிரான் கால் பட்டதால், அவர் அங்கே இடறி விழுந்தாரோ இல்லையோ, நான் இடறி விழுந்தேன்! எதுல-ன்னு கேக்கறீங்களா? அதாங்க பிறவிச் சுழலில்!

போச்சுடா, கண்ணன் கால்பட்டா, பிறவிச் சுழலில் மாட்டிக்கனும் போல இருக்கே! :-)
வள்ளுவர் முதற்கொண்டு வள்ளலார் வரை - எல்லாரும் என்னா சொல்றாங்க? இறைவன் திருவடிகளைப் பற்றினாத் தான் வீடுபேறு-ன்னு சொல்றாங்க!
இங்க என்னடான்னா, இறைவன் திருவடி பட்டதால் பிறவிச் சுழற்சி வந்துடிச்சி-ன்னு நம்ம குமரன் சொல்றாரு!
அப்ப வள்ளுவர் சொல்றது உண்மையா? இல்லை குமரன் சொல்றது உண்மையா? - என்னமோ போங்க! அவரையே கேளுங்க! :-)

சும்மா ஒரு மூலையில் சிவனே-ன்னு கிடந்த என்னை, இந்தக் குமரனும், கண்ணனும் இப்படிப் பிறவிச் சுழலுக்குள் மாட்டி வுட்டுட்டாங்களே! இது அடுக்குமா? இதைச் சும்மா விடப் போறதில்ல! அதான் மரபுப் படி விமர்சனமா இல்லாம, உங்க கிட்ட நேரடியாவே பேசிடலாம்-னு நினைச்சிட்டேன்!
கல்லு பேசுமான்னு கேக்கறீங்களா? நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமே! பழிக்குப் பழி! வாங்க விமர்சனத்துல குமரனைப் போட்டுத் தாக்கிருவோம்! :-)


--------------------------------------------------------------------------------

நினைத்தாலே முக்தி தரும்-னு சொல்லுவாய்ங்க! அந்தத் திருவண்ணாமலையில் தொடங்குது கதை!
இரண்டு நண்பர்கள், கல்லூரி கலாட்டா, பக்தி வேடங்கள், பிரிவு, மீண்டும் சந்திப்பு என்று இயல்பான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து தான் கதையை ஆரம்பிக்கிறார். நண்பர்களான கந்தன் (எ) மோகன், கேசவன் இருவரின் குணச் சித்திரங்களையும் இயல்பாகப் படைத்துள்ளார்.

//தாத்தாவிடம் 'தாத்தா. இந்த நூறு ரூபாயை உங்க மருந்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்றான். 'ஆகா பழி வாங்கிவிட்டானே. சொல்லியிருந்தால் நானும் ஏதாவது வாங்கி வந்திருப்பேனே' என்று நினைத்தான் கந்தன்//
- இது போல பலவற்றைச் சொல்லலாம்! அன்றாட வாழ்விலும் நண்பர்களுக்கிடையே இது மாதிரி சீன் போடறது என்பது சுவையான ஒன்று! ஆனால் கதை ஏதோ நண்பர்களைச் சுற்றித் தான் போகப் போகுது-ன்னு நினைக்கும் போது, வச்சாருங்க பாருங்க ஆப்பு!

கதை திடீரென்று களம் மாறுது!
திருவண்ணாமலை ஆலயம், லிங்கோத்பவர், கிரிவலம், கம்பத்து இளையனார்-னு வரிசையா ஒரு நாலு தொடர் முழுவதும் ஆலய தரிசனம், தல புராணம்-னு கொண்டு போயிட்டாரு! கதையுடன் அந்தப் பகுதிகள் எல்லாம் இயல்பா ஒட்டுச்சா?
அதை வாசகர்கள் தான் சொல்லனும்! என்னைக் கேட்டா ஒட்டலை-ன்னு தான் சொல்வேன்!

அப்போது கதைக்கு வந்த பின்னூட்டங்கள் பலவற்றில், மக்கள் எல்லாரும், "என்ன சொல்ல வரீங்க, என்ன சொல்ல வரீங்க"-ன்னு குமரனைக் கேள்விகளால் துளைச்சி எடுத்துட்டாங்க!

கதையின் பெயர் "புல்லாகிப் பூண்டாகி".
பொதுவாகக் கதையின் பெயர், ஓரளவுக்குக் கதை ஓட்டத்தைக் கோடிட்டுக் காட்டி விடும்! ஆனால் இந்தக் கதையில், இடைப்பட்ட சில அத்தியாயங்கள் மக்கள் பலருக்குக் குழப்பம் விளைவித்தது என்னவோ உண்மை தான்!
இது வேண்டுமென்றே குமரன் செய்த உத்தியா, இல்லை தானா அமைந்து விட்டதா-ன்னு தெரியலை!
ஏன் சொல்றேன்னா, நல்லாக் குழப்பிய பின் வரும் விசாரனையும் தெளிவும் தான், ரொம்ப நாள் நிக்கும்! :-)

இது மாதிரி பல தேடல்கள் திருவண்ணாமலையில் நடந்தேறியுள்ளன. ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார், சேஷாத்ரி சுவாமிகள், மறைந்த காஞ்சிப் பெரியவர்ன்னு பல மகான்களின் ஆன்ம வாழ்வு திருவண்ணாமலையைச் சுற்றித் தான் அமைந்தது! அதைக் கதாசிரியர் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்! பாராட்டுக்கள்!!

--------------------------------------------------------------------------------

சரி...ஒன்னுமே புரியாம, ஆலய தரிசனம் பண்ணிட்டு மலைக்கு மேல வந்தா... தாத்தாவின் அடுக்கடுக்கு கேள்விகள்! அதில் விறுவிறுப்பு கூடிப் போனது என்னவோ நிஜம்!
இங்கு தான் கதையின் ஓட்டம் எப்படி-ன்னு கொஞ்சம் பிடிபட ஆரம்பிச்சுது! அப்போது கூட சில பேர் "ஒன்னுமே புரியல உலகத்திலே"-ன்னு பாட்டு பாடிக்கிட்டுத் தான் இருந்தாங்க! :-)

ஆன்மீகத்தில் இக்காலத் தலைமுறையின் கேள்விகளை குமரன் நன்கு முன் வைத்துள்ளார், தாத்தாவின் கேள்விகள் மூலமாக! சாம்பிளுக்கு இதோ:
1. "அடியார்ன்னா யாரு?"
2. "பொண்பிள்ளைங்களுக்கு அடியார்கள் கணவராகணும். சரி. ஆண்பிள்ளைகளுக்கு எப்படி?"
3. "இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?" - மடக்கிவிட்டோம் என்று நினைத்தான்.
4. ஜாதகம் இன்டிகேட்டர் தான் கன்ட்ரோலர் இல்லை. It indicates what can happen due to past actions. It does not control what will happen.
The control is with you. You are the one who will decide the choice you want to make."

குமரன் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயமே, திடீர் திடீர்-னு பாட்டு பாட ஆரம்பிச்சிடுவாரு! :-)
இந்தக் கதையில் பல இடங்களில் திருவெம்பாவை, சிலப்பதிகாரம், அன்னமாச்சார்யர், ஜயதேவர் பாட்டை எல்லாம் இடையிடையே கொடுத்துள்ளாரு! தெலுங்குப் பாட்டுக்குப் பொருள் தெரியலைன்னாலும் பாட்டை அனுபவிச்சிக் கேட்டுக்கிட்டு இருந்தேனா?.....
திடீர்-னு பார்த்தா கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிட்டாரு! அதாங்க, ப்ளாஷ்பேக்!

அஸ்தினாபுரம் சபையில், கண்ணன் உள்ளே வரும் காட்சியை எழுதும் போது, கர்ணன் படம் பாத்துக்கிட்டே எழுதினாரான்னா தெரியாது! ஆனா ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் புட்டு புட்டு வச்சிருக்காரு! இருக்காதா பின்னே...என் கதையை இங்கிருந்து தானே ஆரம்பிக்கிறாரு!

--------------------------------------------------------------------------------

அடுத்த பதிவுல கடம்ப மரம்! பழனி மலை! போகர் சித்தர்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல பருந்து! கருடன்! தஞ்சைக் கோவில்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல நரசிம்ம தாசன்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல ஜகன்மோகன் - அப்ப நான் எங்கே போனேன்?
என்னய்யா கல்லு தானே ஹீரோ? சம்பந்தா சம்பந்தமே இல்லாம கதையில கண்ட பேரும் வராங்களே! -ன்னு மக்கள் புலம்புகிறார்கள்! "புல்லாகிப் பூண்டாகி" -ன்னு கதையின் தலைப்பை மறந்து போனார்கள்!

ஆனா அடுத்த பதிவுல தாத்தா வந்து அத்தனையும் கோர்த்து விட்டுட்டாரு! பல பேருக்கு அப்பத் தான் வெளங்குது! ஆகா அத்தனையும் முற்பிறவிகளா?
கதையில் கூட நம்மால ஒரு சாதாரண விஷயத்தைக் கோர்க்க முடியலையே!
நாம எப்படி நம்ம முற்பிறவிகளை எல்லாம் ஒன்னா கோர்க்கப் போகிறோம்?
- ஹிஹி! இந்தச் சிந்தனையைத் தான் கதை எனக்குத் தூண்டி விட்டது!

கதையை முடித்த விதமும் அருமை! முடிக்காமல் முடிப்பது-ன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி!
இறந்து போன தாத்தாவை முதலில் அவன் பார்க்க, பின்னர் இவனும் பார்க்கிறான்! இது என்ன மாயையா? இல்லை வாசகர்களைப் பயமுறுத்த குமரன் கையாண்ட டெக்னிக்கா?
இதுக்கு விளக்கம் எல்லாம் ஒன்னுமே கொடுக்காம...கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கணக்கா கதை படீரென்று முடிந்ததே சிறப்பு!

--------------------------------------------------------------------------------

பூக்கள்:
1. கதையில் படங்களும் பாடல்களும் தேர்வு செய்த விதம் நன்று!
2. அதே போல் மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடலில் - கல், மரம், பறவை, மனிதர் - இந்த நான்கு பிறவிகளை மட்டுமே தொட்டுச் சென்றதும் நல்லது தான்! பரிமாணத்துக்குப் பரிமாணமும் ஆச்சு! சுவை குன்றாமலும் ஆச்சு!

3. ஆங்காங்கே ஆன்மீகக் குறிப்புகள் - நிர்விகல்ப சமாதி, பஞ்சகோசம்-ன்னு சொல்லுவது, கொஞ்சம் அடிமட்ட வாசகனைப் பயமுறுத்துவது போல் தெரியும்! ஆனால் அதைத் தைரியமாகத் தான் தொட்டுச் சென்றுள்ளார் குமரன்!
4. புராணம் = புரா+நவம் = பழசு+புதுசு என்று சொல் ஆராய்ச்சிகளும் கதையில் நடுநடுவே சொல்லியது இன்னொரு சிறப்பு. அவர் வாசிப்பு அனுபவத்தை நமக்கும் கொட்டிக் கொடுத்துள்ளார்! நன்றி குமரன்!

கற்கள்: (அட, கல்லு விமர்சனம் செய்யுதுன்னா, கல்லும் வீசத் தானே செய்வாங்க! :-)
1. கதையில் இன்னும் உரையாடல்கள் வேண்டும் குமரன்! இல்லையென்றால் ஆன்மீகச் செய்திக்கோர்வை ஆகி விடும் அபாயம் உண்டு! தாத்தா-கந்தன் உரையாடல் தான் கதையின் முக்கிய கட்டம்! அங்கு உரையாடல்கள் இருந்தன! ஆனால் துவக்கத்தில் ஆலய தரிசனமாகப் போய்விட்ட படியால், உரையாடல்கள் குறைந்த துவக்கமாகத் தான் இருந்தது.

2. அதே போல் ஆங்காங்கு மகான்களைக் (சைதன்யர், இராமகிருஷ்ணர், கருவூரார்) காட்டிய நீங்கள், இவர்கள் நம்மிடம் பேசக் கூடிய வாய்ப்பை விட்டுட்டீங்க.

3. கதையின் இணைப்பைக் கொஞ்சம் முன்னரே பூடகமாகவாச்சும் சொல்லி இருக்கலாம்! இதனால் கதையின் ஓட்டம் பல பேருக்கு முதலிலேயே புரிந்திருக்கும்! தனித்தனிக் கதையா இருக்கேன்னு ஒன்னும் புரியாமல், (குமரனை அறியாத) சில வாசகர்கள், மீண்டும் வராமல் போகும் அபாயம் உண்டல்லவா? - ஒட்டு மொத்தத்தையும் பிளாஷ்பேக்காக கொடுத்ததால் தான் இப்படி ஆனது!

4. ஆலய வர்ணனைகள், பிரகார விளக்கங்கள் என்று கதையின் ஆழத்தை நீர்த்துப் போகச் செய்திருக்க வேண்டாம்! நாவல், புதினம் என்றால் ஓக்கே! ஆனால் இது சிறிய தொடர் அல்லவா?

5. காலடிபட்டதால் பிறவிச் சுழற்சி என்பது மிகவும் சிக்கலான உதாரணமாகப் போய்விட்டது! இறைவன் காலடி பட்டுச் சாபம் நீங்கியவர்கள் பல பேர் உள்ளார்கள். அதற்கு எதிர் தோற்றம் போல் உருவாகி விட்டது! - இதை வேறு மாதிரி கையாண்டு (காலாண்டு) இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து!
--------------------------------------------------------------------------------

பொதுவா ஆன்மீகத் தேடல்கள் பற்றிய விஷயங்களில் ஆத்திகர், நாத்திகர் ரெண்டு பேருக்குமே ஆர்வம் மிகுதியா இருக்கும்!
முன்னவருக்குத் தேடல் எப்படி அமையுமோன்னு ஒரு ஏக்கம்!
பின்னவருக்குச் சாடல் எப்படி அமைக்கலாம்னு ஒரு ஆர்வம்! :-)

இதைக் கதாசிரியர் (அட, நீங்க தான் குமரன்!) நன்கு புரிந்து கொண்டு தான் கதையை நகர்த்தி உள்ளார்! இரு சாராருக்கும் இந்தக் கதை தீனி போடுகிறது!

ஆழ்மனம் இல்லறத்தை விரும்பியதால், இன்னொரு பிறவி என்று சொல்லி இருந்தீர்கள்! It is your choice என்பது தான் சாரம் என்றால்...
கற்கள் தங்கள் Choiceகளைத் தாமே செய்து கொள்ள முடியுமா?
மனிதப் பிறவி தவிர மற்ற எல்லாப் பிறவிக்கும் இறைவன் தான் Choice செய்கிறானா? - என்பது மிகப் பெரும் கேள்வி! ஆனால் அதற்கு விடையைக் கதையில் தேட முடியாது! தேடவும் கூடாது!

ஆன்மீகப் பாதையைத் தேடுதல் பற்றிச் சொல்ல வந்த ஒரு கதை, அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்ய முடியாது தான்! அவரவர் நிலைகளில் இருந்து பார்வை மாறுபடும்!
ஆனாலும் இயன்ற வரை அனைத்து தரப்பினரையும், குமரன் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாகவே நான் கருதுகிறேன்!

பரந்து விரிந்த தத்துவங்களுக்குக் கதை மூலமாக நகாசு பூசுவது என்பது கொஞ்சம் கடினமான செயல் தான்!
அதைக் குமரன் முயன்று பார்த்துள்ளார்!
முயற்சி திருவினை ஆக்கும்! வாழ்த்துக்கள் குமரன்!
அடுத்த கதையில் புதிய நகாசு, புதுப் பொலிவுடன் மீண்டும் சந்திப்போம்!

இதோ "கல்"லாதான் சொல்லும் கவி!
புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழ்வாரே!

கல்லே, விமர்சனம் பண்ணிட்டு எங்க ஓடுற நீயி? அடுத்து நீ மரமாக வேண்டாமா?

வேண்டாம்! வேண்டாம்!!
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்!
கல்லானாலும் - வாசல் படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே! வர்ட்டா? :-)

***

என்னை பிளாக் உலகிற்கு அறிமுகபடுத்தியவரும், அதன்பின் எழுத ஆரம்பித்தபிறகு என்னை எழுத்தை நெறிமுகப் படுத்தியவரும் என்னால் குருஸ்தானத்தில் வைக்கப்பட்டவரும் என்னால் ஷண்மதச்செலவன் பட்டம் பெற்றவரும் திரு.குமரான்தான்இவ்வாறாகிய சூழலில் இணைய படிப்புகளில் மிக முக்கியமாக நான் கூகிள்ரீடரில் வைத்திருக்கும் சிலரில் குமரனும் ஒருவர். அவரது அபிராமி அந்தாதிபதிவுகளாகட்டும், கூடல் பதிவுகளாகட்டும், படித்து ஒரு பின்னூட்டம்இடாது செல்வதில்லை. இதன் காரணமாகவே அவர் என்னையும் 'புல்லாகி-பூண்டாகி' கதைக்கு விமர்சனம் எழுத அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கதைஆரம்பத்திலேயே அழைத்தாலும், என்னால் தொடர்ந்து படிக்க இயலாத சூழல்,சற்றேரக் குறைய 15 நாட்கள் இணைய தொடர்பில்லாத நிலை. எல்லாம் முடிந்துவந்து பார்த்தால் பல இணைய ஜாம்பவான்கள் தமது விமர்சனங்களை மிக தெளிவாக தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாக சொல்லிவிடப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும், குமரன் கேட்டுக் கொண்டபடி,அவருக்களித்த வாக்கின்படி இதனை எழுதுகிறேன்.(நன்றிமௌளி) இதையே என் முன்னுரையாக வைத்து இதோ என் விளக்கம்.புல்லாய் பிறவிதர வேனுமே கண்ணா புனிதாமான பல கோடி பிறவி தந்தாலும் பிருந்தாவனமதில் புல்லாய் பிறவிதர வேனுமே என்று பாடினார் ஊத்துக்காடு வேங்கடகவி.அந்தப் புல்லையே தலைப்பின் ஒரு பகுதியாக வைத்து கதையை 14 அத்தியாயங்களாய் பிரித்து அருமையாக ஒரு ஷேத்திராடனமாக நம் அனைவரையும் கூட்டிக்கொண்டு போகும் கதையாக எழுதினார்."ஆகா. ஆகா. இன்னும் ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். பின்னர் தான் கண்ணனை அடைவேன்"இப்படி ஒரு பைத்தியமா என்று எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்இதைப்படித்தவுடன் புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என் மனத்தே வழுவாதிருக்க வேண்டும் வரிகள் ஞாபகம் வந்ததுமுதல் அத்தியாயத்தில் கந்தானாக தன்னையே பாவித்து எழுதியதாக எனக்குப்பட்டது. க்ளு இங்கேதான்" வீட்டுச் சாப்பாடு கேசவன் வீட்டில் கிடைக்கவே அடிக்கடி கேசவன் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். சரியான சாப்பாட்டு ராமன்"

முதல் அத்தியாயம் தொடங்கி ஏழு அத்தியாயங்கள் வரை திருவண்ணமலை மகிமை கதையின் ஓட்டத்துடன் இணைந்து செல்கிறது. பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் என்னெவெல்லாம் பார்க்கமுடியுமோ பார்க்கவேண்டுமோ

அத்தனையும் வரிசையாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஏழு அத்தியாயங்கள் சிவனுக்காக ஒதுக்கியிருக்கிறார் திருவண்ணாமலைக்கு செல்லும் எண்ணத்தை வெளிக்கொணர்ந்த பதிவு. நானும் ரமண மகரிஷியை குறிப்பிட்டு பின்னுட்டமும் இட்டிருந்தேன் அம்போஜ சம்பவனும்ம்(பிரும்மாவும்) அன்பான மாயவனும் அடிமுடி காணா அண்ணாமலைவாசன் அருமையாண பதிவு.அடுத்த எட்டாவது அத்தியாயம் வைகுந்தவாசனை போற்றி எழுதியது. சுகரும் வருகிறார். சுக பிரும்மம்யார் தெரியுமா? வேதவியாசரின்

மகன் பராசரர் அவரின் மகன்தான் சுகபிரும்மம். அவருக்கு பிரும்மம் என்ற பட்டம் எப்படி வந்தது? சுகரை ஜனகமகாரிஷியிடம் பாடம் படிக்க(சீதையின் தந்தை) அவரின் தந்தை அனுப்புகிறார். வரும் சுகர் அரன்மனைக்கு வெள்ளியில் இருக்கும் மல்ர்தோட்டத்தை பார்க்கிறார், பின்பு அங்கு வாயிலில்இருக்கும் யாணையைப் பார்க்கிறார்,வாயில் காப்போனிடம்

வழிகேட்கிறார், வழியில் செல்லும் பெண்களைப் பார்க்கிறார், பின்பு படியின் மீது ஏறிச் சென்று ஜனகமகா ராஜனைப் பார்க்கிறார். சுகரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரை சோதிக்கும் வண்ணம் கேட்கிறார். இங்கு வந்தது முதல் நீ என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார். சுகர் சொன்னார்.

வரும்போது மலர்கள்பிரும்மத்தைப் பார்த்தேன்,காவலன்பிரும்மத்திடம் வழி கேட்டு யாணை பிரும்மத்தின் அழகை ரசித்து, பெண்கள் பிரும்மத்தை பார்த்துகொண்டே, படிகள்பிரும்மத்தின்ன்மீது ஏறி, ஜனக பிரும்மத்தை பார்த்தேன் என்றார்.உடனே ஜனகமகா ரிஷி சொன்னார் உனக்கு பாடம் சொல்ல எனக்குத் தகுதியில்லை அசையும் பொருள் அசையாப் பொருள் ஆண், பெண், மிருகம்,செடி, மலர், எல்லாவற்றையும் அந்த பிரும்மாகவே( கடவுளாகவே) பார்க்கும் எண்ணம் உள்ள நீங்கள் சுகப்பிரும்மம் என்று அழைக்கப்படிவீர்கள் என்றார். அப்பேற்பட்ட சுகரை கதையில் கொண்டுவந்தார். பின்னர் அடுத்த அத்தியாயத்தில் மால் மருகனை
பிறகு 9 10 வதில் பழனி முருகனையும் போகரின் வைபவத்தையும்,பருந்துகளின்
தன்மையையும் தஞ்சை கோவிலையும் விளக்கினார்.

11ஆம் 12ஆம் பகுதியில் நரசிம்ஹதாசனையும் ராமகிருஷ்ணபரம்ஹம்ஸரையும் காளி கோயிலையும்
நேராகவே பார்க்கும் வண்ணம் அளித்தார் கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்து எல்லா முடிச்சையும் அவிழ்த்து கதையை பூர்ணம் செய்தார்
போட்ட படங்களும் அருமை. நல்ல கதையையும் கருத்தையும் அளித்த கந்தன் சாரி குமரன் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Friday, January 18, 2008

புல்லாகிப் பூண்டாகி - மதுரையம்பதியின் விமர்சனம்

நான் சில வருடங்கள் முன்புவரை கிடைத்த எல்லா புத்தகங்களையும்
படித்துவந்தாலும், தற்போது ரொம்ப செலக்டிவாகவே படிக்கிறேன், அதிலும்
இணையத்தில் கேட்கவே வேண்டாம். திரட்டிகளில் எனக்கு பரிச்சயம் ரொம்பவே
கம்மி. இவ்வாறாகிய சூழலில் இணைய படிப்புகளில் மிக முக்கியமாக நான் கூகிள்
ரீடரில் வைத்திருக்கும் சிலரில் குமரனும் ஒருவர். அவரது அபிராமி அந்தாதி
பதிவுகளாகட்டும், கூடல் பதிவுகளாகட்டும், படித்த்து ஒரு பின்னூட்டம்
இடாது செல்வதில்லை. இதன் காரணமாகவே அவர் என்னையும் 'புல்லாகி-பூண்டாகி'
கதைக்கு விமர்சனம் எழுத அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கதை
ஆரம்பத்திலேயே அழைத்தாலும், என்னால் தொடர்ந்து படிக்க இயலாத சூழல்,
சற்றேரக் குறைய 15 நாட்கள் இணைய தொடர்பில்லாத நிலை. எல்லாம் முடிந்து
வந்து பார்த்தால் பல இணைய ஜாம்பவான்கள் தமது விமர்சனங்களை மிக தெளிவாக
தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாக சொல்லிவிடப்
போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும், குமரன் கேட்டுக் கொண்டபடி,
அவருக்களித்த வாக்கின்படி இதனை எழுதுகிறேன்.

மிகையான அலங்காரங்கள் இல்லாத பாத்திர அறிமுகம் முதல் பகுதியில். ஆனால்
அங்கேயே பெரியவர் கந்தனை மோகன் என்று பெயர் மாற்றம் செய்வதை கோடிட்டுக்
காட்டி அந்த குழப்பத்தை கந்தன் மனதிலும், வாசிப்பாளர் மனதிலும் விதைத்து
பின் கடைசிப் பகுதியில் அதன் காரணத்தை தெளிவாக்கியிருக்கிறார். இதனை கதை
சொல்லும் உத்தி என்றாலும், முதல் 3-4 அத்தியாங்களில் நான் குழம்பியது
என்னமோ உண்மை.
மற்றபடி குமரனின் மற்ற பதிவுகளை படிக்காத ஒருவர் இந்த கதையை மட்டும்
படித்தாலும் உணரும்படியாக முதல் அத்தியாயத்திலேயே இது ஒரு ஆன்மிக கதை
என்று கட்டியம் கூறும்படி அமைத்தது அழகே.

கோவிலைக் கண்டவுடன் உள்ளே நுழைய நினைக்கும் கந்தனது செயலை சொல்வதன்
முலமாக இரண்டாம் அத்தியாயத்திலேயே கந்தனது முந்தைய பிறவி எச்சங்களை
நமக்கு எடுத்துச் சொல்ல விழைகிறார் ஆசிரியர். ஆனாலும் நமக்கு கடைசி
அத்தியாயத்தை படித்தபின்பே அதனை உணர முடிகிறது. மூன்று மற்றும் ஐந்தாம்
அத்தியாயங்களில் கந்தன் உருவில் மனித மனத்தின் அலைபாயும் ஆசா-பாசங்களை
நன்றாக வார்த்தையாகளாக்கியுள்ளார். அதே சமயத்தில் பெரியவர் மூலமாக
தான-தரும செயல்களை ஊக்குவிக்கும் முகமாக சொல்லியிருப்பது இந்துமதக்
கோட்பாடுகளை அழகாக நடைமுறைப்படுத்த விழையும் செயல். நான்காவது அத்தியாயம்
முழுதும் கிரிவலத்திற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்வதாக
இருக்கிறது. பின்னூட்டத்தில் சிலர் கூறியது போல, இதுவரை திருவண்ணாமலை
செல்லாதவர்களுக்கு நான்கு மற்றும் ஐந்தாம் அத்தியாயம் ஒரு வரப்பிரசாதம்.
திருவண்ணாமலை செல்லும் சமயத்தில் அவர்கள் இந்த பதிவுகளை துணைக்கு
வைத்துக் கொள்ளலாம். ஐந்தாவது பதிவில் ரமணர் மற்றும் சேஷாத்திரி
ஸ்வாமிகளைப் பற்றியும் சொல்லி திருவண்ணாமலை தரிசனத்தை முழுதாக்குகிறார்.

8ஆம் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏதோ அருகிலிருந்து
பார்த்ததைப் போல் எழுதியிருந்தார் என்றால் மிகையாகாது. கல்லில்
ஆரம்பித்துவிட்டார் என்றால் அடுத்ததாகவே வந்துவிட்டது மரம். இச்சமயத்தில்
திரு. கே.ஆர்.எஸ் அவர்களும் நானும் சாட் செய்து, அடுத்து எப்படி
தொடருவார் என்று சிறு விவாதம் செய்தோம். பழனியப்பனும், போகரும் நன்றாகவே
கடம்ப மரத்தை வாழ்த்தினர். நவ பாஷாணத்தை பற்றிக் கூறி, கூட்டப்பட்ட அந்த
பாஷாணங்களின் சிறப்பினைச் சொல்லியிருப்பது ஆசிரியரின் பழனி பற்றிய
அறிவினை மட்டும் சொல்லாது, தற்காலத்தில் ஆங்கில மருத்துவத்தில்
நாகத்திடமிருந்து விஷமெடுத்து அதனை பாம்புக் கடிக்கு மருந்தாக்குவதை
நினைவில் கொண்டுவருகிறது.

புள்ளரசன் வடிவில் அழகாக எல்லோருக்குள்ளூம் இருக்கும் இறையருளை நன்கு
சொல்லியிருக்கிறார், நரசிம்மதாசன் வடிவில் எல்லா இறையடியார்களும் என்ன
பிரார்த்தனை செய்வார்களோ அதனை முத்தாய்ப்பாக சொல்லி பக்தி எதனை
நோக்கியதாக இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். கிருஷ்ண
பிரேமை என்பது எந்த அளவிற்கு இருக்கக் கூடும் என்பதற்கு நரசிம்மதாச
பாத்திரம் மிக அழகான படைப்பு. இந்த கதையினை படிக்கையில் எனக்கு கோபிகைகள்
கிருஷ்ணனின் தலைவலிக்கு மருந்து தந்ததை நினைவுபடுத்தியது. பக்தி
மார்க்கத்தின்
ஒன்பது விதங்களை அழகாக எடுத்தாண்டிருக்கிறார். நாயக-நாயகி பாவம் என்பதை
மாதுர்ய பக்தி என்று சொன்னாலும், மாதுர்ய பக்தி பற்றி இன்னும் கொஞ்சம்
விவரித்து சொல்லியிருக்கலாமோ?. அதெப்படி நாயக-நாயகி பாவம் மாதுர்யமாக
தெரிகிறது என்ற விளக்கம் சிறிது அதிகமாக இருந்திருக்கலாம். கதைமூலமாக
வாசகர்களுக்கு பல ஆன்மிக செய்திகளை தந்த ஆசிரியர் இதனை விளக்குவதன்
மூலமாக வாசகர்களுக்கு ஒரு அதிகப்படியான செய்தியினை கொண்டு
சேர்த்திருக்கும் என்று தொன்றுகிறது.

ஜகன்மோகனுக்குச் சொல்வதாக அமைந்த வாசனை பற்றிய உபதேசம், என் போன்ற
வாசகர்களுக்கு சற்றே சிந்தனையைத் தூண்டி எனது செயல்களை திரும்பிப்
பார்க்க வைத்தது என்றால் மிகையாகா. ஆனாலும், பஞ்ச கோசங்களை உணர்ந்த ஒரு
ஞானிக்கு இந்த வாசனை பற்றிய விளக்கமும், ராமகிருஷ்ணர் போன்றவர்களின்
நிலையும் எப்படி புரியாது போனது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக
இருக்கிறது. ஆசிரியர் நரசிம்ம தாசனுக்கு வரவேண்டிய கேள்விகளை இங்கு
கொண்டுவந்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அதாவது, முந்தைய நிலைக்
கேள்விகள், இவற்றைக் கடந்தபின்பே ஒரு ஞானி ஒருவாகிறான். இந்த கேள்விகள்
முழுதான பக்தி மார்க்கத்தவருக்குச் சரியே, ஆனால் பக்தி மார்க்கத்தை
கடந்து, ஞான மார்க்கத்தில் பஞ்ச கோசங்களை உணர்ந்து, முற்பிறப்பின் வாசனை
பற்றிய ஞானம் கைவரப் பெற்ற ஒரு ஆன்ம சாதனையாளனுக்கு இக் கேள்விகள்
தகுந்தவை அல்ல என்றே தோன்றுகிறது.

இன்டிகேட்டரும் கன்ட்ரோலரும் நன்றாக உபயோகம் ஆகியிருக்கிறது.
தெரிந்தவற்றை வைத்து தெரியாததை புரிய வைக்க முயல்வது இயல்புதான்
என்றாலும், இந்த எடுத்துக்காட்டு கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம்
பாராட்டும் விதமாகவே அமைந்துள்ளது. கீதையின் நான்காவது அத்தியாயம்
நன்றாகவே எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஜாதகம், கைரேகை போன்ற ஆன்மிகத்தின்
அடுத்தடுத்த பக்கங்களையும் மேலோட்டமாக தொட்டுச் சென்றது போல இருப்பினும்,
கதாசிரியர் தனது நிலைப்பாட்டினை உணர்த்தியே சென்றுள்ளதாக தெரிகிறது.

எல்லாவற்றையும் சொல்லி படங்களையும், எடுத்தாண்ட பாடல்களையும் சொல்லாது
விட்டால் இந்த விமர்சனம் முழுமையாகாது. எப்படித்தான் பொறுமையாக இவ்வளவு
படங்களை தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. அத்தனையும் தொடருக்கேற்ற அருமையான
படங்கள் மற்றும் பாடல்கள்.

எல்லாம் இருப்பினும் எனக்குள் ஒரு கேள்வி, ஆசிரியர் ஏன் கீத
கோவிந்தத்தையும், சைதன்யரையும் எடுத்துக் கொண்டார்?, ஏன் நமது புரந்தர
தாஸரையோ இல்லை ஊத்துக்காடு வெங்கட சுப்புவையோ எடுத்தாளவில்லை?. அதே போல
ரமணர் மற்றும் வள்ளலார் போன்றோரை விடுத்து ஏன் தோதபுரி?.

மதுரையம்பதி

Monday, January 14, 2008

புல்லாகிப் பூண்டாகி - கீதாம்மா (கீதா சாம்பசிவம்) அவர்களின் விமர்சனம்

//புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழியரே!//

//புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!
எம்பெருமான்! மெய்யே!
உன் பொன் அடிகள் கண்டு,
இன்று வீடு உற்றேன்!//

""மேற்கண்ட இரு பாடல்களும் மனிதப் பிறவி எடுப்பதன் தாத்பரியத்தை எடுத்து உரைக்கிறது. இந்தப் பூவுலகம் தோன்றியதும் முதலில் முளைத்ததும் புல் என்றே சொல்வதுண்டு. அந்தக் கோடானுகோடிப் புற்களின் ஒன்றான ஒரு சிறிய புல்லின் வாழ்க்கைச் சரிதமே இந்தக் கதை என்று சொல்லவேண்டும். கதையா அல்லது நிகழ்வுகளா? என்று அதிசயிக்கும் வண்ணம் சற்றும் மாறுபட்ட கருத்தைச் சொல்லாமல் எந்தக் கருத்து முக்கியமாய் எடுத்து ஆளவேண்டுமோ அதை ஒட்டியே கதையின் அனைத்து அத்தியாயங்களும் செல்கின்றன. கதையின் நாயகன் கந்தனை நமக்கு அறிமுகப் படுத்தும்போது சற்றே அவனைக் கருவம் படைத்தவனாய் அறிமுகப் படுத்துகிறார். தாத்தாவிடம் பணம் கொடுக்கும்போது தன்னை அறியாமல் அது வெளிப்படுவதும், பின் கந்தன் மனம் வருந்துவதும் எப்போதும் நம் மனத்தில் நடக்கும் இருமனப் போராட்டத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. கூடவே எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாய்க் கதையின் கடைசியில் அடையாளம் காட்டப் படும் கேசவனோ கந்தனை அடி ஒற்றி நடப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே! எனக் கந்தனைத் தொடர்ந்தே செல்கிறான்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது அனைத்துத் தெய்வங்களையும் தரிசிக்கும் கந்தனுக்குச் "சுடலை"யில் காவல் காக்கும் ஈசனை வணங்குவதில் தெரியும் தயக்கமும், மயானத்துக்குச் சென்றால் குளிக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவன் இன்னும் மாயை என்னும் அழுத்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் இந்த விமரிசனத்துக்குத் தேவையில்லாத குறிப்பு ஒன்று. குஜராத் "ஜாம்நகர்" என்னும் நகரத்தில் பார்க்கவேண்டிய முக்கிய சுற்றுலா இடங்களில் அந்த ஊரின் மயானமும் ஒன்று. அந்த மயானத்துக்குச் சிறு குழந்தையைக் கூட எடுத்துக் கொண்டு வருவார்கள் குஜராத்தியர்கள். அங்கே அது மிகவும் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறதோடு அல்லாமல், அங்கே சென்று வந்தால் குளிப்பது போன்ற ஆசாரங்களும் நடைமுறையில் இல்லை. சர்வ சாதாரணமாய்ப் புதுமணத் தம்பதிகள் முதல் அனைவரும் வந்து சுற்றிப் பார்த்துச் செல்வதுண்டு.) பின்னர் அவனுக்குப் பிடாரி அம்மன் சன்னதியில் மட்டுமே மன அமைதி வந்து சேருகிறது. திருவண்ணாமலைக்கு ஒருமுறை கூடச் செல்லாத என்போன்றோருக்கு மிகச் சிறந்த வழிகாட்டி போல் உதவும் குறிப்புக்களைக் கொடுத்துள்ளார் குமரன். பின்னர் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் கந்தனுக்கு வரும் கனவுகளே மற்ற அத்தியாயங்கள்.

கல்லாய்த் தோன்றிய தன்னை உயிர்ப்பித்து முக்தி கொடுக்கவே கண்ணன் காலால் உதைபட நேர்ந்தது எனத் தாத்தா சொல்லுவதைக் கேட்கும் கந்தன் மட்டுமில்லாமல் நாமும் ஆச்சரியப் படுகிறோம். கூடவே கற்கள், மலைகள் பற்றிய விஞ்ஞானபூர்வச் செய்திகளும் கதையின் போக்குடன் சேர்ந்தே வந்து செல்கிறது. கழுகுகள் பற்றிச் சொல்லும்போதும் அப்படியே! பழகின காக்கை கூடத் தினம் தினம் சாதம் வைக்கும்போது வந்துவிடுகிறது. சற்று நேரம் ஆனால் கத்தி ஊரைக் கூட்டுகிறது. கருடன்களும் அப்படியே பழக்கலாம் என்று தோன்றினாலும் எங்கேயோ காட்டில் இருக்கும் கருடன்கள் அவை! ஆன்மீகவாதிகளால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இந்தக் கருடன் வலம் வருவது என்று தோன்றினாலும் பலமுறை சில குறிப்பிட்ட கோயில்களை மட்டுமே கருடன் சுற்றி வருவதையும் காணலாம். அதுவும் கும்பாபிஷேகம் என்று எப்படித் தெரியும் எனத் தோன்றினாலும் ஏதோ ஓர் கண்ணுக்குப் புலன் ஆகாத சக்தி ஒன்று அனைவரையும் இயக்குகிறது என்றவரையில் புரிந்து கொள்ள முடிகிறது.

மரங்களும் அப்படியே! இறைவனுக்கு உருவம் இல்லை என்பது சனாதனா தர்மக் கோட்பாடு என்றாலும், நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்குப் புரியவைப்பதற்காக இறை உருவை நிர்மாணம் செய்தார்கள். அதை ஒரு மரத்தில் நிர்மாணம் செய்து அந்த மரத்தையும் சேர்த்து வழிபடச் சொன்னது நம் வாழ்வே இயற்கையோடு இயைந்தது என்பதைச் சுட்டிக் காட்டவே. ஆனாலும் காலப் போக்கில் அவை மாறித் தான் போய்விட்டது. கூடவே அநேக மரங்களும் அவற்றோடு போய்விட்டது! பின்னர் மனிதரில் தேவர் ஆன நரசிம்மதாசரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "உண்ணும் சோறும், பருகும் நீரும் கண்ணனே!" என்ற நிலையில் இருக்கும் நரசிம்மதாசன், குரு சைதன்யர் இன்னும் ஐநூறு பிறவிகள் இருக்கின்றன என்று சொல்லுவதைக் கேட்டு ஆனந்த நடனம் ஆடுகிறான். இதைக் கண்ட மற்றவர் வியந்தாலும் ஐநூறு பிறவிகளிலும் கண்ணனை மறவாமல் இருக்கவேண்டும் என்ற நரசிம்மதாசனின் பக்தியை நினைத்தால் உண்மையிலேயே "அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற தமிழ் மூதாட்டியின் சொல்லின் உண்மையில் மெய் சிலிர்க்கிறது.

அடுத்து ஜகன்மோகன் ஆனபோதோ இராமகிருஷ்ண பரமஹம்சரின் யோகநிலையைப் பார்த்து வியப்புறுவதும், திருமணம் என்ற பந்தத்தால் ஆன்மீகம் தடைப்படாது, மனையாள் துணை இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதும் உணர்ந்து கொள்வதோடு அல்லாமல் நம்மையும் உணர வைக்கிறார்.
//ஆனால் இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை சாத்தியப்பட்டது?"//
இந்தக் கேள்விக்குப் பதில் முழுமையாக ஜகன்மோகனுக்குக் கிடைக்கவில்லை. சிருஷ்டியின் ரகசியம் அறிய முடியுமா? என்றாலும் ஓரளவு சொல்கிறார் குருநாதர் தோதாபுரி:

//ஜகன்மோகன். அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும். உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவல்களும் உன் முந்தைய பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாசனையே. முழுமையடையாத அந்த அனுபவங்கள் தான் உன்னை மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆன்மிக வாழ்வில் நன்கு முன்னேற்றமடைந்த உனக்கு அந்த அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டாலும் வழி தவறிப் போக இயலாது. அதனால் கவலை வேண்டாம்"//
ஜகன்மோகனுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கொஞ்சம் கவலை நீங்குகிறது.

மறுநாள் தூங்கி எழுந்து அனைத்தையும் யோசித்துக் குழம்பும் கந்தனின் மனதை ஒருமைப் படுத்தும் தாத்தா அவன் முன்பிறவிகள் அனைத்தும் அவன் கனவில் வந்தவை எனத் தெளிவு படுத்துவதோடு அல்லாமல் இப்பிறவியிலும் அவனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும் என உறுதிபடவும் சொல்லுகிறார். ஜாதகம், கைரேகை என்பது பற்றியும் அவனிடம் கூறுகிறார். (இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.என்னோட பள்ளி நாட்களிலேயே என் ஜாதகம், பார்த்தும், கைரேகை பார்த்தும் பல வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கூறிய என் நண்பன் "சிவா" கூறிய அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது. ஆனால் சொல்பவர்களின் கணக்கு மிகத் துல்லியமாய் இருக்கவேண்டும்.) தாத்தா சொல்லுவதை ஏற்க முடியாத கந்தனோ, அறிவுபூர்வமாய் அவருடன் வாதாடுகிறான். ஆனாலும் தாத்தா சொல்லுவதும் ஏற்கக் கூடியதாயே உள்ளது. இந்த உலக அனுபவங்களை இன்ப, துன்பங்களை, இல்வாழ்வின் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் விதமாயே அவனின் இப்பிறப்பு அமைந்துள்ளது என்றும் கூறும் தாத்தா இப்பிறவியிலும் அவன் ஆன்மீகவாதியாகவே இருப்பான் எனவும் முன் பிறவித் தொடர்புகளும் தொடரும் என்றும் புதிய தொடர்புகள் உண்டாகும் எனவும் சொல்கின்றார். கேசவன் அவனை எல்லாப்பிறவியிலும் தொடர்ந்து வருவதாயும் சொல்கின்றார்.

என்றாலும் அமைதி அடையாத கந்தன் தான் ஏன் வெளிநாடுகளில் பிறக்கவில்லை என்று எண்ணியதோடல்லாமல் தாத்தாவையும் கேட்கின்றான். அவன் வெளிநாடுகளிலும் பிறந்திருப்பதாயும், பெண்ணாய்க் கூடப் பிறந்திருப்பதாயும் சொல்லும் அவர் பதிலில் அவ்வளவாய்த் திருப்தி அடையவில்லை கந்தன். என்றாலும் மேலும் அவரைக் குடைகின்றான். தாத்தா தான் அவதாரமா எனவும் கேட்கின்றான். இல்லை, என்று கூறும் அவர் அவனின் ஆன்மீகப் பயிற்சி பற்றி இப்பிறவியிலும் அவன் தொடரவேண்டும் என்பதை நினைவு படுத்த வந்த ஒருவர் எனவும், ஒவ்வொரு பிறவியிலும் ஒருத்தர் வருவார்கள் நினைவு படுத்த என்றும் சொல்கின்றார். ""

இத்தனையும் திருமணம் ஆகிப் பத்துவருடங்கள் ஆகும்போது நினைக்கும் கந்தனுக்குத் தன் திருமணத்துக்கு அழைக்கச் சென்ற போது தாத்தா இறந்து போனதும், ஆனாலும் அவர் தன் திருமணத்துக்கு வந்து வாழ்த்துவேன் என்று சொன்னமாதிரி வந்து வாழ்த்தியதைக் கண்டதும், தான் மட்டுமே கண்டோம் என நினைத்த ஒன்றை நண்பன் ஆன கேசவன் கண்டிருக்கிறான் என்று சொல்வதும் குழப்பத்தை அதிகப் படுத்துகிறது. இவை அனைத்தையும் நினைக்கும் கந்தனுக்கு ஏற்படும் குழப்பங்களும், கேள்விகளும் அதற்கான விடைகளும் இன்னும் கிடைக்கவில்லை. காலம் தான் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். கந்தன், அவன் மனைவி, இருகுழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நல்லாசிகளும். கூடிய சீக்கிரம் கந்தன் தன்னை அறிவான்.

பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாட்டுக்களும், அர்த்தங்களும், சுலோகங்களும், அதன் அர்த்தங்களும், படங்களும் என்று கண்ணை மட்டுமின்றி கருத்தையும் கவரக் கூடியதாய் உள்ளது இந்தப் பதிவு. அதுவும் திருவண்ணாமலை பற்றிய பதிவுகளில் வரும் படங்கள் அனைத்தும் அருமை. புதிதாய் முதல் முதல் எழுதுகிறார் என்று ஒரு இடத்தில் கூடத் தோன்றாத படிக்கு எழுதி இருப்பதும் குமரனின் எழுத்து வல்லமைக்குச் சான்று.

Sunday, January 13, 2008

புல்லாகிப் பூண்டாகி - விமர்சனங்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

'புல்லாகிப் பூண்டாகி' என்ற தலைப்பில் அடியேன் எழுதிய ஒரு தொடர்கதையைத் தொடர்ந்து படித்து ஊக்குவித்த எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையைப் படித்ததோடு நில்லாமல் அந்தக் கதையின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி அடுத்த முறை இப்படியொரு முயற்சி நானோ மற்றவர்களோ எடுக்கும் போது எனக்கும் அவர்களுக்கும் உதவியாக இருக்கும் வண்ணம் விமர்சனங்களை எழுதித் தரும் படி நண்பர்களிடம் கேட்டுக் கொண்டேன். வேண்டுகோளுக்கு இணங்கி சில நண்பர்கள் விமர்சனங்களை எழுதித் தருகிறார்கள். எல்லோருடைய விமர்சனங்களும் வந்த பின்னர் மொத்தமாக இடலாம் என்று எண்ணினேன். ஆனால் விடுமுறைக்காலமாக இருப்பதாலும் வேலைப்பளுவினாலும் சில நண்பர்களிடமிருந்து இன்னும் அவர்களின் விமர்சனம் வரவில்லை. இதுவரை விமர்சனம் எழுதித் தந்தவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களது கருத்துகளை இங்கே இடுகிறேன். இனிமேல் எழுதித் தரப்போகிறவர்களுக்கும் நன்றி சொல்லி அவர்களது கருத்துகளை அடுத்த இடுகையில் இடுகிறேன். இந்த விமர்சனங்களைப் படிக்கும் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கேயோ தனியாக உங்கள் விமர்சனங்களாகவோ எழுதித் தாருங்கள். நன்றிகள். வாழ்க வளமுடன்.

****

திரு ஜீவி ஐயா அவர்களின் விமர்சனம்:

அன்புள்ள குமரன்,

கதையை முடித்து விட்டீர்களே?.. நல்லதொரு முயற்சி நன்றாகவே அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள்.

சென்ற அத்தியாயதிற்கான பின்னூட்டத்தில் விமர்சனக்கட்டுரை ஒன்றை இந்தக் கதைக்கு எழுத வேண்டி நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன்.

முதலில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

நல்ல பல செய்திகளை ஒரு கதையின் மூலமாக வெளிப்படுத்த முயன்றிருக்கும் நண்பர் ஒருவருக்கு, அவரது செயல் நன்கு அமைய வேண்டி, கதைகள் எழுதுவதில் ஓரளவு பரிச்சயம் கொண்டிருந்ததினால், நம் பங்குக்கு நாமும் சில யோசனைகளைச் சொல்லலாம் என்கிற உரிமையில், கதை எழுதும் கலையில் உள்ள சில நெளிவு சுளிவுகளை உங்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவ்வளவு தான். நான் உங்களுக்குத் தெரிவித்தது கதையின் உள்ளடக்கம் சம்பந்தப்படாத, வெறும் 'எழுத்து' சம்பந்தப்பட்டதும், அதைச் சொல்லும் முறை சம்பந்தப்பட்டதும் தான். அடுத்த அத்தியாயத்திலேயே நீங்கள் அவற்றைக் கைக்கொண்டதைப் பார்த்தேன். சென்ற அத்தியாயத்தில் என்னை மீறி,'அந்த' வரிகளை சிலாகித்து ஒரு பின்னூட்டம் போட நேரிட்டது. அவ்வளவு தான் இந்தத் தொடரில் என் பங்களிப்பு. ஒரு பெரும் முயற்சியில், ஒரு துளி பங்கேற்ற என்னை, விமரிசனம் எழுதக் கேட்டுக் கொண்டது, உங்கள் பெருந்தன்மையையே காட்டுகிறது. நீங்கள் கேட்டுக்கொண்டபடி இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதப் புகின், இப்படிப்பட்ட சமாச்சாரங்களே எனது விமர்சனத்தில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ள நேரிடும். இருந்தும், இந்த கதை குறித்து ஆக்கபூர்வமான ஒரு விமரிசனம் தேவையா என்றால் நிச்சயம் தேவைதான். அடுத்த கதை எழுதுவதற்கு அது நிச்சயம் உங்களுக்கு உதவும் என்கிற அடிப்படையில் அது தேவைதான்.

தனது முதல் படைப்பைப் படைத்த ஒருவருக்கு, கறாரான விமரிசன பயமுறுத்தல்களைத் தவிர்த்து, ஊக்குவிக்கும் முறையில் சில பாராட்டுத் தட்டிக் கொடுத்தல்களே உடனடியான தேவை. அதுவும் நீங்கள் எடுத்துக் கொண்ட 'சப்ஜெக்ட்' மனம் போன போக்கில், நினைக்கும் எதையும் கற்பனையில் எழுதும் செய்தி இல்லை. சில ஆன்மீகச் செய்திகளைச் சுவைபடச் சொல்வதற்காக எடுத்துக் கொண்ட உருவம் கதையாக நேரிட்டதால், இயல்பாகவே அப்படிப்பட்ட கதைகள் எழுதுவதில் ஏற்படும் சில சங்கடங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டது. வெறும் விவரத் தொகுப்பாகப் போய்விடாமல், படிப்பவர்க்கு சலிப்பேற்படாமல் சொல்ல வேண்டிய அதிகபட்ச ஜாக்கிரதை உணர்வும் கொள்ள வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சில இக்கட்டுகள் இருந்தும், நீங்கள் வெற்றியடைந்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

திருவெம்பாவை பாடல்கள், கண்ணன் தூது, அருள்மிகு பழனியாண்டவர் -போகர் சமாச்சாரங்கள்,அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு- புள்ளரசன் பொற்காலன் வட்டமிடுதல், நரசிம்மதாசன்,ஜெயதேவர்,கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே வந்து ஜகன்மோகனில் நீங்கள் நின்று நிலைகொண்டபொழுது
கதை நன்கு களைகட்டி விட்டது. பின்பு கல்யாண காட்சியில் முடித்தும் சரிதான். பாக்கியை அடுத்துவரும் கதைகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அதற்குள்--- வேறு என்னன்ன நகாசு வேலைகள் கதைகளில் செய்யலாம்,என்னன்ன உத்திகளை கைக்கொள்ளலாம், எங்கெங்கு நீட்டி- எங்கெங்கு குறைத்துக் கொள்ளலாம்,
எழுதுபவன், எங்கெங்கு அடக்கி வாசிக்க வேண்டும், எங்கெங்கு 'தான்' நுழைந்து கொண்டு படிப்பவனை தன்னுடன் கைபிடித்து அழைத்துச்செல்லலாம்--என்கிற சமாச்சாரங்களெல்லாம் உங்களுக்கு அத்துபடி ஆகியிருக்கும்.

கதைகளுக்கு, 'இவைல்லாம் எங்கு இவருக்குக் கிடைத்தன' என்று நாங்கள் மலைக்கும் அளவுக்கு நீங்கள் இட்டிருந்த படங்களைக் குறிப்பிடவில்லையெனில், பெரிய தவறு செய்தவனாவேன்.

கதையை நீங்கள் முடித்த பாங்கும் மிகுந்த நிறைவேற்படுத்தியது.

மேற்குறிப்பிட்டவையெல்லாம், கதையைப் படித்த, ஒரு கதைசொல்லியின் வெறும் குறிப்புகளாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், நம்மிடையே சீனா சார் போன்ற 'ரசனை' வரம் பெற்ற அருமையான் ரசனையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனது எழுத்துக்கு 'போஷாக்கு' ஊட்டுவது, இன்னும் இன்னும் எழுதத்தூண்டுவது அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற ரசனையாளர்களின் ரசிப்பு தான்.

அவர் எழுதப் போவதை நாமெல்லாம் சேர்ந்து படிப்போம்.

குமரன், வாழ்க..வளர்க!

நிறைய எழுதுங்கள்..படிக்கக் காத்திருக்கிறோம்.

***

திரு. யோகன் ஐயா அவர்களின் விமர்சனம்:

புல்லாகிப் பூண்டாகி...குமரன் தொடராக எழுதி; நானும் வாசித்தேன்.

அவருக்குள்ள புராண;இதிகாச அறிவுடன் ஆத்மீகத் தேடலின் பிரதிபலிப்பே இக்கதையின் உள்ளீடு. புராண ;இதிகாசத்தில் ஆர்வமிருந்தாலும் ; போதிய ஞானமற்ற எனக்கு இவை புதிய செய்திகளாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆத்மீகத்தில் நம்பிக்கை முக்கியபங்கு...." உண்ணும் சோறும்; தின்னும் வெற்றிலையும்" அவனே என நம்புபவர்கள் ஆத்மீக வாதிகள்.

குமரனை ஒருவருடமாக எழுத்தில் தெரியும்; அவர் மிகுந்த நம்பிக்கை மிக்கவர்.
அதனால் அனுமானிச சக்தி என ஆத்மீகத் துறையில் உள்ளோர் கூறும்; நடைமுறைச் சம்பவக் கோர்வைகள்; இறைநம்பிக்கையுடன் கைகோர்த்து இவர் எழுத்தில் சென்றது.
இவற்றை அதிகம் நான் நம்பாவிடிலும்...(என் இறை நம்பிக்கையை-கோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் கும்பிட வழி தா!)..மற்றவர் கூறுவதைக் கேட்கப் பிரியப்படுவேன். அந்த வகையில் இக்கதையில் சில வேளை இவை ;எழுதுபவர் சொந்த அனுபவமோ எனும் ஆவலைத் தூண்டும் படி இருந்ததால் வாசித்து முடித்தேன்.

ஒரு இடத்தில் மலைகள் பற்றிக் குறிப்பிடும் போது; மலைகள் எரிமலையிலிருந்து தோன்றியவை...என்று கூறுகிறார். அதை வாசித்த போது ;நான் அறிந்ததற்கு எதிர் மாறாக இருக்கிறதே இவர் கூற்று என நினைக்க அடுத்த வரிகளில்....எல்லா மலைகளும் எரிமலையில் தோன்றவில்லை. இமயமலை அப்படி தோன்றவில்லை என விஞ்ஞான பூர்வ உண்மையையும் கூறிச் சென்றார். அவர் பல பக்க வாசிப்பின் பிரதிபலிப்பு இது.

அடுத்து கழுகு பற்றி...கூறும் போது....கோவில் கோபுரத்தை வட்டமிடும் நிகழ்வு...இதே போல் தென் அமெரிக்க பழங்குடி; அவுஸ்ரேலியப் பழங்குடி மக்கள் கூட கழுகு ;வட்ட மிடுவதை நற்சகுனமாகக் கொள்ளுவதை படித்துள்ளதால்; இவர் கூற்றைத் தள்ள முடியவில்லை.

கடம்பமரம் பற்றிய பகுதி...நமது ஆத்மீக வாதிகள் எவ்வளவு தொலைநோக்குடன் இந்த மரங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றியது பற்றி சிந்தித்துள்ளார்கள் என்பது; பல மரங்கள் தல விருட்சமாக நிர்ணயித்ததில் புலப்படுகிறது. இப்போதும் பல முதியவர்கள் வேம்பு,அரசு மரத்தை அம்மையாகவும் ஈசனாகவும் போற்றுகிறார்கள்.இந்த நம்பிக்கை குறைவு இன்று சுற்று சூழல் மாசாக மாறி நம்மை வதைப்பதையும் நோக்கவேண்டியுள்ளது.

இப்படி காலம் காலமாக ஆத்மீகத்துக்குள்ள ஐயம் கலந்த செய்திகள்; இக்கதையில் இழையோடிய போதும்....ஏன்??? இருக்கக் கூடாது.என்ற எண்ணமும் தலை தூக்கியது.
இதுதான் அவர் எழுத்தின் வெற்றி எனக் கொள்கிறேன்.

கந்தனும்;கேசவனும் உரையாடல் பகுதிகள்...இன்றைய கணனி இளைஞர்கள் இப்படியும் உரையாடுவார்களா?? என ஐயுற வைத்த போதும்...
குமரன்; ராகவன்; ரவிசங்கர் கண்ணபிரான் கூட கணனியுள் தானே காலம் கழிக்கிறார்கள் என்பது என் அந்த ஐயத்தைத் தீர வைத்தது.இன்றைய இளைஞர் சமுதாயத்தின் அங்கத்தவர்கள் இவர்களுமே...

இதைத் தொடராகப் படித்த போது..எனக்கு அப்பப்போ கல்கி;கலைமகள் தீபாவளி மலர் ஞாபகம் வந்தது. அவற்றில் தான் இப்படிக் ஓவியங்களும்;நிழல்படங்களும் கூடிய தெய்வீகக் கதைகள்,திவ்ய தேசக் கதைகள் படிக்கக் கிடைக்கும்.

மிகப் பொருத்தமான படங்கள்;ஓவியங்கள்...இதை வாசிக்கும் போது, மேலதிக செய்திகளைத் தந்தது.கடம்பப்பூ முதல் முதல் குமரன் மூலமே படத்திலாவது பார்த்தேன். நல்ல பொருத்தமான பாடல் தேர்வுகளுடன் ஒரு திருக்கோவில் நாமும் சுற்றி வந்ததுபோல் இருந்தது.

இக்கதை எனக்குப் பிடித்தது போல்; பலருக்குப் பிடித்துள்ளதைப் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிகிறது.

இவ்வளவு விடயங்களையும் தொகுத்து, யாத்திரையில் கண்ட காட்சியுடன் இணைத்து கதையாக்கிய விதம்; இந்த கதைகூறும் யுக்தி பாராட்டுக்குரியதே...

***

திரு. ஜீவா அவர்களின் விமர்சனம்:

புல்லாகி பூண்டாகி - நிறைவுற்று விட்டது இந்தத்தொடர்.
நிறைவுறாமல் இருப்பது நம்மவர் கந்தனின் பிறவிச்சுழல்.
அச்சுழலில் சிக்குண்டு புல்லாகி பூண்டாகி மானிடப்பிறப்புமாகி
முன்னால் நடந்ததை சொல்லக்கேட்ட கந்தனுமாகி
அவற்றையெல்லாம் கூடலில் படிக்கக்கிடைத்த வாசகனுமாகி
தொடர் தனை இன்னும் ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்.

தன்னை எப்போதும் பார்ப்பவன் யாரென திரும்பிப்
பார்ப்பவர்களின் அருகாமையில் சும்மா இருப்பதே சுகம்
என்றாலும், கந்தனுக்கு அண்ணாமலையாரின் தரிசனமும்,
முற்பிறவியெல்லாம் கனவில் அந்தக் குன்றிலிட்ட ஜோதிபோல
தெள்ளத்தெளிவாக தெரிந்ததற்கு காரணம் என்ன?
சத்சங்கம். ஆம் - சத்சங்கம் - தாத்தாவின் ஆசியுடன்
கேசவனும், குமரனும், மணிகண்டனும் இணைய -
இணைந்து நீந்திக் கடந்திட -
இன்னமும் இருக்குது மிச்சம் - பிறவிச் சாகரம்.

தினம் தினம் வாழ்க்கைச் சிக்கல்களின் அல்லல்களில்
இருந்து விடுதலை பெற்றாலே போதும் என்று
காலம்தனை பிறவி பிறவியாய் கழித்தொழிக்க,
தெரியாமலே போயிருக்கக் கூடும் - நல்லவேளை,
கேசவனும், தாத்தாவும் கந்தனுக்கு கிடைத்தார்கள்.
கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வானா
தெரியவில்லை. இல்லை தன்னை மறுபடியும்
கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படப் போகிறானா தெரியவில்லை.
அல்லல் எனும் மாசறுத்தாட்கொளும் தெய்வமும்
அருகிலேயே இருக்கிறானாமே, பார்க்கலாம் நம்முள்ளே!

***

புல்லாகி பூண்டாகி - காலத்தின் (கோவி.கண்ணனின்) கடைக்கண் பார்வை:

நான் பொதுவாக பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதப்படும் தற்கால கதைகளை அதிகம் படிப்பதில்லை. காரணம் அவற்றில் பல முழுக்க முழுக்க விளம்பர உத்தியில் எழுதப்பட்டிருக்கும், அதுபோல் நூல்கள் தற்பொழுது மிகக் குறைவுதான். இப்படியெல்லாம் நடக்குமா ? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு பயந்தே அத்தகைய நூல்கள் அதிகம் வருவதில்லை. கவியரசர் கண்ணதாசன் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் அர்த்தமுள்ள இந்துமதம் இன்னும் 50 பாகங்களாவது கிடைத்து இருக்கும். தற்பொழுதும் கூட சாமியார் மகிமைகள் குறித்து பக்தர்கள், அடியார்கள் அவர்களிடம் பயன்பெற்ற அனுபவம் என புல்லரிப்பாக எழுதப்பட்டு கடைவிரிக்கும் கதைகள் ஓரளவு குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. தான் பெற்ற அனுபவம் பிறர் பெற வேண்டுமென்பதற்காகவும், ஒரு பக்தனாக சாமியாருக்கு அதிகம் அடியார்களைப் பெற்றுத் தரவேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் அவை எழுதப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த காக்கையின் கால் சரியாக பனம் பழம் மேல் பட்டு இருக்கிறது என்பதாகத்தான் எனக்கு புரியும். கோ - இன்சிடெண்ட் நடப்பதும் சில சமயம் வியப்புதானே. அதை புரிந்துக்கொள்வதில் பக்தியாளர்கள் உணர்சி வசப்பட்டுவிடுகிறார்கள் என்றே நினைப்பேஎன்

நம்பிக்கை என்ற பெயரில் நம்புவர்களை கடவுள் கைவிடுவதில்லை என்பது போல் தான் ஏறக்குறைய எல்லா நம்பிக்கை சார் கதைகளுமே இருக்கிறது. இல்லை என்றால் கொஞ்சம் பயமுறுத்தல் அதாவது 100 பிட் நோட்டீஸ் அடித்து பலருக்கும் அனுப்பவில்லை என்றால் உன் வீட்டில் துக்கம் நடக்கும், நடந்தது என்ற ரீதியில் எழுதி இருப்பார்கள். 24 x 7 ஆண்டவனுக்கு இவர்களை கண்காணித்துக் கொண்டே நல்லது செய்வதுதான் தொழில் என்றும், தன்னை தூற்றுபவர்களுக்கு தண்டனைத் தருபவராகவும் தான் இறைவனின் திருவுளம் இருக்கிறது என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். இதுபோல் இறைசக்தியை திரித்து கூறுவது தவறு என்றெல்லாம் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. பக்தியின் பெயரால் எதைச் செய்தாலும் புனிதம் தான். இதனாலேயே பக்திசார் கதைகள், அனுபவங்கள் இதையெல்லாம் செவிமடுப்பதோ, கண்ணிடுவதோ இல்லை.

நண்பர் குமரன் 'புல்லாகி பூண்டாகி' என்ற தொடர் எழுதிவருவதாகவும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று முதல் அத்யாயம் முடிந்ததும் மின் அஞ்சல் வழி தகவல் அனுப்பினார். 'நான் இதுபோன்ற கதைகளை படிப்பதில்லை, அப்படி படித்தாலும் நான் செய்யும் விமர்சனம் உங்களை புண்படுத்துவதாக அமையும்', என்று சொன்னேன். பதிலுக்கு 'பரவாயில்லை. நீங்கள் சொல்வதும் சரிதான் உங்களுக்கு கிண்டுவதற்காக சிலவிசயங்கள் இருக்கும், முடிந்தால் கருத்து கூறுங்கள் வற்புறுத்தவில்லை' என்றார். ஒருவாரம் சென்று என்ன தான் எழுதி இருக்கிறார் என்று முதல் அத்யாயத்தை திறந்து பார்த்தேன். அண்ணாமலையாரின் கோவில் படம், நான் சிறுவயதில் அப்பா அம்மாவுடன் சென்றதாக நினைவு, தொடர்ந்து படித்தேன். மேல் பூச்சு இல்லாமல் இயல்பான எழுத்து நடையில் எழுதி இருந்தார். கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேரடியாக அவர்காட்டிய இடங்களுக்கெல்லாம் சென்று வருவது போன்று படிக்கும் போது உணர்வூட்டியது.

அவர் அங்கெல்லாம் சென்ற போது, பின்னாளில் எழுதவேண்டும் என்று அப்போது நினைத்தாரா தெரியவில்லை. நேற்று சென்று வந்த இடம் போல் மிகத் தெளிவாக, கோவில் அமைப்பு, அதில் உள்ள தெய்வங்கள், அதற்கான சிறப்புக்கள்,வழிபாடுகள் மற்றும் திருவண்ணாமலையில் மலை வலம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எழுதி இருந்தார். சொந்த கற்பனையில் எழுத்துக்கள் மட்டும் இருந்தது அதில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வருபவை என்பதால் இவராக எதையும் இடைச் சொருக வில்லை என்பது புரிந்தது.

வைணவராக இருப்பவர் ஒரு சிவ தலத்தைப் பற்றி சிறப்பாக எழுதுவது பாராட்டத்தக்கது, கூடவே எங்கெல்லாம் கண்ணன் புகழ் பாடமுடியுமோ அதையெல்லாம் சரியாக கையாண்டு இருக்கிறார் :). போகர், நவபாஷன பழனியாண்டவர் சிலை, பழனி மலை, இராமகிருஷ்ணர், தக்ஷிணேஷ்வரம், சாரதா தேவி, காளி மாதா, கருடன் கதை , மகாபாரததில் சில பகுதிகள், அருணகிரி நாதர் என்று சிறு சிறு கதைகளை சேர்ந்திருக்கிறார். இவருடைய தொடரில் பொருத்தமான படங்களை அங்கங்கே சேர்த்திருப்பது தொடருக்கு கூடுதல் சிறப்பு. ஸ்லோகங்களை தேவையான இடத்தில் இட்டு அதற்கான பொருளுரையும் எழுதி இருப்பதால் கதையோடு சேர்த்து படிக்கும் போது, ஸ்லோகங்களும் கவனம் பெறுகிறது.

முதல் முயற்சி என்பதாக தெரியவில்லை, வளமான கற்பனையும், அனுபவத்தை அதில் சேர்த்து எழுதுவது என்பதை சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் மையப்புள்ளி, மறுபிறவி பற்றிய சிந்தனைகள், அதன் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை விமர்சனம் செய்யவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால இதுபோன்ற மறுபிறவி கற்பனைகள் பலர் கொண்டிருப்பதால் அதை விமர்சனம் செய்வது, விவாதிப்பது வீண் என்றே நினைக்கிறேன். மற்ற விமர்சனங்களை அவருடைய பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால், அதன் தொடர்பில் எழுதும் போது எழு(த்)தும், கருத்தும் இயல்பாக வெளிப்படும், அது இவரது தொடரில் நிறையவே இருக்கிறது. அடுத்த தொடராக 'ஊனாகி உயிராகி' விரைவில் எழுத வாழ்த்துகள். :)

அன்புடன்,

கோவி.கண்ணன்

****

புல்லாகி பூண்டாகி - வெட்டிப்பயலின் எண்ணங்கள்:

புல்லாகி பூண்டாகி - நான் ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிற ஆன்மீக புனைவு!. இது இந்த கதைக்கான விமர்சனமல்ல. என் எண்ணங்கள். அவ்வளவே!!!

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்


என்ற மாணிக்கவாசகரின் பாடல் தான் கதையின் கரு.

கலியுகத்தில் திருவண்ணாமலையில் தொடங்கும் கதை நம்மை துவபரயுகத்து கண்ணனிடம் அழைத்து சென்று, அங்கிருந்து பழனி மலையில் குமரனின் நவபாஷான சிலை உருவாவதை அருகிலிருந்து பார்க்கும் பேற்றை கொடுத்து, பெரிய கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்து சென்று பிறகு கிருஷ்ண பஜனில் பங்கெடுக்க வைத்து அங்கிருந்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தரிசிக்கும் பேற்றை கொடுத்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்துவிடுகிறது.

புல்லாகி பூண்டாகி என்ற தலைப்பே கதையை ஓரளவு விளக்கிவிடுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதும் மலையே இறைவனின் திருமேனி என்று புகழ்பெற்றதுமான திருவண்ணாமலையின் சிறப்புகளை சொல்லி ஆரம்பிக்கிறது கதை.

பொதுவா எனக்கு கோவிலுக்கு போனா அவசரம் கூடாது. பொறுமையா நிதானமா பார்த்துட்டு வரணும். பத்து கோவிலுக்கு வேக வேகமாக செல்வதைவிட ஒரு கோவிலில் அமைதியாக சாமி கும்பிடலாம்னு நினைக்கிற ஆள். இந்த கதையை ஆரம்பிச்சப்ப எனக்கு அது தான் பிரச்சனை, வேகமா ப்ளைட் பிடிக்க போற மாதிரி கோவிலை விட்டு வந்த மாதிரி இருக்கு.

தல வரலாறு (தலயோட வரலாறு படம் இல்லைங்க) கதையா மாறிடுமோனு ஒரு பயத்துல கூட இதை செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. ஆனா இந்த மாதிரி கதைகள்ல வாசகர்களுக்கு ஆயிரம் கதை கேட்டாலும் அலுக்காது என்றே தோன்றுகிறது. கோவிலை இன்னும் பொறுமையாக சுற்றி காண்பித்திருக்கலாம். ப்ளாஷ் பேக் போகற வரைக்கும் ஒரு பதட்டம் தெரிஞ்சது. ஆனா ஃப்ளாஷ் பேக்ல அந்த பதட்டம் போய் நிதானம் வந்து அருமையாக பயணிக்க தொடங்கியது. அதை எப்படி இணைக்க போகிறார் என்று தெரிந்திருந்தாலும் எப்பொழுது இணைக்க போகிறார் என்ற ஒரு தவிப்புமிருந்தது உண்மையே (இன்னும் எத்தனை பிறவியப்பானு) .

கதை ஒரு விதத்துல பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது. எனக்கும் அது தான் பிடிச்சதுங்கறதால ஒட்டுதல் ஏற்பட்டுச்சு. அதே சமயம் ராம கிருஷ்ணரோட அருளுரை கேட்கலாம்னு ஆவலோட இருந்த எனக்கு அது கிடைக்காதது ஒரு விதத்துல ஏமாற்றமே :-( (ஆனா அவரை அருகிலிருந்து பார்க்கும் வண்ணம் எழுதியதற்கு என் பாராட்டுக்கள்)

என் மனதில் எழுந்த பல கேள்விகளில் முக்கியமானவற்றை கந்தன் அந்த தத்தாவிடம் கேட்டதும் ஒரு விதத்தில் என்னை திருப்தி படுத்தியது. அதில் முக்கியமானவை
"பாகவதத்தைச் சுகர் வாயாலேயே கேட்ட எனக்கு ஏன் தாத்தா அப்பவே முக்தி கிடைக்கலை?",

"தாத்தா. வந்த கனவு எல்லாம் இந்தியாவுல தான் நடந்ததா இருக்கு. இதெல்லாம் நான் படிச்ச கதைங்களை என் மனசு கனவுங்களா ஏன் காமிச்சிருக்கக் கூடாது? இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?"

"அப்ப ஏன் அதெல்லாம் என் கனவுல வரலை?"

"உனக்கு இந்தப் பிறவியில எது புரியுமோ அது மட்டும் தான் வந்திருக்கு. சவுத் அமெரிக்கா பிறவியும் கொஞ்சம் கனவுல வந்தது. ஆனா உனக்கு நினைவில்லை. ஏன்னா அது உனக்குப் புரியலை"


கதையை முடித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல் அவர் தேர்வு செய்த படங்களும் அருமை.

குமரன், அடுத்த கதைக்கு கதையோட ஓட்டத்தை ஒரு முறைக்கு இரு முறை யோசித்து ஆரம்பித்தால் கதை பட்டையை கிளப்பும் என்பது என் எண்ணம் (ஃப்ளாஷ் பேக்கும், நிகழ் காலமும் ஒன்றாக கொண்டு சென்று ஒரு புள்ளியில் இணைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்)... சரி சீக்கிரமே நெக்ஸ்ட் கதைல மீட் பண்ணலாம் ;)