Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Monday, April 03, 2023

எழுதாக் கற்பு

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ?! மயலோ இதுவே!

- குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பார்ப்பன மகனே! இளைய பார்ப்பனனே!
செந்நிறமான பூக்களை உடைய முருக்க மரத்தின் வலிமையான நாரை (பட்டையை) களைந்து மென்மையாக்கிய தண்டு (கைக்கோல்) பிடித்த
தாழ்வாகக் கமண்டலத்தை பிடித்த
படிவர்கள் (முனிவர்கள்) உணவை உண்ணும்
பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பு எனப்படும் வேதத்தைக் (எழுதப்படாமல் ஆனால் கற்கப்படும்; கற்பு = கல்வி) கற்ற
உன் சொல்லில்
பிரிந்தோரைச் சேர்த்துவைக்கும் திறமை உடைய மருந்து உள்ளதா? (இல்லையல்லவா?!)
(எனக்கு அறிவுரை கூறினால் அவள் மேல் நான் கொண்ட காதல் தீரும் என்று நீ நினைத்தது) ஒரு மயக்கமே! (மயலோ!)

பொருள் உரை: அன்பன் குமரன் மல்லி (ம. ந. குமரன்) 

Monday, August 22, 2011

நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!


நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)


பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.

கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.

குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.

Wednesday, September 08, 2010

ஆடிக்காற்றா ஆவணியில்....

கூரையை ஏதோ உரசும் ஓசை கேட்டு எழுந்தேன். விட்டு விட்டு உரசும் ஓசை. யாரோ நடப்பது போன்ற ஓசை. மனைவியும் குழந்தைகளும் பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில். ஓசை வரும் காரணம் தெரியவில்லை. மனதில் கொஞ்சம் திக்.

கள்வன் நுழைகின்றான் என்று தெரிந்தால் உடனே காவலரைக் கூப்பிட கையில் தொலைபேசி எடுத்துக் கொண்டு எழுந்து வந்தேன். வந்து பார்த்தால் உய் உய் என்று வீசும் காற்று. அந்தக் காற்றில் அசையும் மரங்கள். அந்த மரங்களின் கிளைகள் சுவற்றிலும் கூரையிலும் உரசுவதால் வந்த ஓசை. அவ்வளவு தான்.

மனத்தின் கற்பனைகளை எண்ணிப் புன்னகைத்துக் கொண்டு படுக்கைக்கு வந்தேன். தூங்க முடியவில்லை. தூக்கம் போய்விட்டது. ஏதேதோ நினைவுகள். மரங்களை அலைக்கழிக்கும் சுழல் காற்றின் வீச்சே மனத்தில் நிறைந்திருந்தது. 'காற்றடிக்குது கடல் குமுறுது கண்ணை விழிப்பாய் நாயகனே' என்ற பாரதியாரின் பாடல் வரிகள் நினைவிற்கு வந்தன. இந்த ஓங்கி வீசும் காற்றையே உள்ளுறைப் பொருளாக வைத்து சங்க கால ஒளவையார் பாடிய குறுந்தொகைப் பாடலும் நினைவிற்கு வந்தது.

முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்!
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்!
அலமர அசைவு வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அதுவும் ஒரு மழைக்காலம். பிரிவுத்துயரில் வாடும் ஓர் இளம்பெண். களவுக்காதலில் காலம் செலுத்திய காதலனிடம் 'விரைவில் இவளை மணந்து கொள்வாய்' என்று தோழி அறிவுறுத்தியதால் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட காதலன் காதலியைக் காணாமல் காலம் தாழ்த்துகிறான். இவளோ அந்த குறுகிய காலப் பிரிவினையும் தாங்க முடியாமல் புலம்புகிறாள்.

கடுமையாக வீசும் காற்று மரங்களை எல்லாம் அலைக்கழிப்பதைப் போல் என் பிரிவுத் துயர் என்னை அலைக்கழிக்கிறது! இதனை அறியாமல் அமைதியாகத் தூங்குகிறது இந்த ஊர்! முட்டுவேனா குத்துவேனா ஆஓ எனக் கூவுவேனா இந்த ஊரை என்ன செய்வது என்று தெரியவில்லை!

அந்தப் பெண் தன் காதலன் வரவை எதிர்நோக்கி விழித்திருந்தாள்! நான் யார் வரவை எதிர் நோக்கி விழித்திருக்கிறேன்?

Sunday, August 08, 2010

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! அந்தக் கண்ணனுக்கு மட்டும் இல்லை இந்தக் கண்ணபிரானுக்கும் இது பொருந்தும்! ஏறக்குறைய இவர் நண்பர்கள் அனைவருக்குமே இவரிடம் கொஞ்சம் குறைந்த பட்சம் லேசான மனத்தாங்கல் இருக்கிறது! ஆனால் இவரை விரும்பாதவரே இல்லை! எல்லாருமே நண்பர்கள் தான்! இந்த இனிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு இன்று பிறந்தநாள் (ஆகஸ்ட் 9)! எல்லா நலமும் பெற்று, விட்டுப் போனவை எல்லாம் மீண்டும் கிடைத்து, இறைத்தொண்டிலேயே கவனம் எல்லாம் நிலைத்து, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இரவிசங்கர் வாழ நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி அருள் புரிய வேண்டும்!

***

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!


பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும் திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவீசித் திகழ்கிறதோ? நீர் தேவ தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும் பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும் காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல் திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே! அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது திருமேனியில் ஒளிவீசும் திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம் என்னும் படி கலந்து ஒளிவீசுகிறதே! கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும் வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!



கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி!


உண்மையைச் சொன்னால் தாமரை உமது திருக்கண்கள், திருப்பாதங்கள், திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது! காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும் உமது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது! ஏதேதோ ஒப்பு வைத்து இந்த உலகத்தார் உம்மைப் புகழ்வனவெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாய்ப் பயனின்றிப் போகும்படி செய்யும் பேரொளி உடையவர் நீர்!

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையில் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே!


எளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக பேரழகுடனும் பேரொளியுடனும் நீர் திகழ, ஏகம் அத்விதீயம் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்றும் பேசும் படியாக உம்மை விட மற்றோர் பரஞ்சோதி இல்லாத வண்ணம் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது திருமேனியாகவே இந்த பிரபஞ்சத்தையெல்லாம் உம் எண்ணத்தாலேயே படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம் வெற்றுரையாய் ஆக்கும் பரஞ்சோதியாகவும் நீர்மைக்கு எல்லைநிலமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் உமது அளவில்லாத தெய்வீக குணங்களை எல்லாம் அடியேனாலும் பேச முடியாது!

மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலைமாஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மாஞாலம் வருத்தாதே?


மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா?

வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?


அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?



ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொல்லி யான் வாழ்த்துவனே?


ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை! மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்!

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகெல்லாம் படையென்று முதல் படைத்தாய்!
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதோ?


பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும் உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில் நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்! மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச் சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள் துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ? உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல் புகழ் மாசு பெற்றுவிடுமே!

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான்கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உனபாத மலர்ச்சோதி மழுங்காதே?


குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும் அடிப்படையானீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே!

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?


தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா?



மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இது வியப்பே!


மறையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாக நின்ற விரிந்த பேரொளியே! முறைப்படி இவ்வுலகங்களையெல்லாம் படைத்தீர்! வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின்னர் உலகத் தோற்றக்காலத்தில் அவற்றையெல்லாம் உமிழ்ந்தீர்! வாமன திரிவிக்கிரமனாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சடையை உடைய சிவபெருமானும் நான்முகனும் இந்திரனும் நீர் எல்லாவற்றையும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த சர்வஸ்வாமியாக இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? வியப்பில்லையே!

வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே


மற்றவர்களுக்கு வியப்பாக இருப்பவை எல்லாம் தன்னிடம் வியப்பில்லாமல் போகும் படியான பெருமையையுடைய, மெய்ஞானத்தை அருளும் வேதங்களாக இருப்பவனை, வெற்றியும் புகழும் உடையவர்கள் பலர் வாழ்கின்ற பெரிய ஊரான திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனாகிய நம்மாழ்வார் குற்றங்கள் ஏதும் இன்றி தொழுது உரைத்த ஆயிரம் பாடல்களுள் இந்தப் பத்துப் பாடல்கள் தம்மைப் பாடுபவர்களை ஒலி நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தில் முன்னேற்றி மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கும்.

Thursday, July 15, 2010

வரமா? சாபமா?

அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:! சொன்னானே ஒரு வார்த்தை! இவன் பெயர் தருமபுத்திரனாம்! பொய்யே சொல்லத் தெரியாதவனாம்! இவன் சொன்னது பொய் என்பதால் தானே எப்போதும் தரையிலிருந்து ஓர் அடி உயரே ஓடிய அவனது இரதம் அப்போது முதல் தரையில் ஓடத் தொடங்கியது! இவன் சொன்ன அந்த ஒரு பொய்யால் இதோ நான் நீங்காத துன்பத்தோடு பல்லாயிரம் வருடங்களாக இந்த பூமியில் அலைந்து கொண்டிருக்கிறேன்!

தந்தையே! என்றும் அழியாதவன் இந்த அசுவத்தாமன் என்பது உங்களுக்கு மறந்து போனதா? நான் ஒரு சிரஞ்சீவி என்பது மறந்து போனதா? எப்படி நீங்கள் அந்த பாண்டவனிடம் போய் நான் இறந்தேனா என்று கேட்டீர்கள்? அப்படி நீங்கள் கேட்ட ஒரு வார்த்தையால் தானே இன்று நான் இப்படி தாங்காத வலியுடன் இந்தத் தரணியில் அலைந்து கொண்டிருக்கிறேன்!

'என் மகன் அசுவத்தாமன் இறந்தானா?' என்று கேட்காமல் நீங்கள் தான் மொட்டையாக 'அசுவத்தாமன் இறந்தானா?' என்று கேட்டீர்களாம். அப்படி என்றாலும் நீங்கள் கேட்பது என்னைத் தான் என்று அந்த யுதிட்டிரனுக்குத் தெரியாதா என்ன? அதென்ன அந்த நேரத்தில் மொழி விளையாட்டு விளையாடுவது? மொழியின் இலக்கணத்தைக் காரணமாக வைத்து யானை என்பதை வார்த்தையின் பின்னால் சொன்னால் அவன் பொய்யன் இல்லை என்றாகிவிடுமா? குரு பிதாமஹர் வியாசர் முதற்கொண்டு அவன் பொய்யனே இல்லை என்று சாதிக்கிறார்கள்! பெயரால் மட்டும் பெரியவர்களான இவர்களின் இந்த ஓரவஞ்சனையால் தானே நான் நாற்றமெடுத்தப் புண்ணுடன் இப்படி நானிலம் எங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன்!



கௌரவர் பக்கம் தானே நீங்கள் நின்று போராடினீர்கள்? கௌரவர்கள் பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரிடம் போய் நான் இறந்தேனா என்று கேட்டிருக்கலாமே தந்தையே! மாமா கிருபரிடம் கேட்டிருக்கலாம்! கிருதவர்மனிடம் கேட்டிருக்கலாம்! ராதேயனிடம் கேட்டிருக்கலாம்! காந்தார இளவரசரிடம் கேட்டிருக்கலாம்! ஏன் ராஜா சுயோதனனிடமே கேட்டிருக்கலாமே தந்தையே! போயும் போயும் எதிரியைப் போய் நம்பி கேட்டீர்களே?! நம்ப வைத்துக் கழுத்தறுத்தார்கள் என்ற சொல்லுக்கு நீங்களே ஒரு உதாரணமாகிவிட்டீர்களே! உங்கள் சீடர்களில் ஒருவன் பொய் சொன்னான்; இன்னொருவன் உங்கள் கழுத்தை வெட்டினான்! அவர்கள் உங்கள் மேல் வைக்காத விசுவாசத்தை நீங்கள் அவர்கள் மேல் வைத்தீர்களே! அதனால் தானே நான் இன்று இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன்!

தந்தையே! நான் இப்படி ஆனதற்கு முதற்காரணம் உங்கள் சீடன் அருச்சுனன் மேல் நீங்கள் வைத்த பெரும்பாசம் தான்! அவனுக்கு எதிராக வரக்கூடாது என்று அந்த அப்பாவி ஏகலவ்யனின் கட்டை விரலைப் பறித்தீர்கள்! பிறப்பைக் காரணம் சொல்லி அந்த தானசூரன் கர்ணனை பரசுராமரிடம் விரட்டி அவன் உயிரைப் பறித்தீர்கள்! அதே காரணத்தால் தானோ என்னவோ அருச்சுனனுக்கு சொல்லித் தந்ததை எல்லாம் இந்த அசுவத்தாமனுக்குச் சொல்லித் தராமல் விட்டீர்கள்! அதனால் தானே தந்தையே நான் இப்போது இப்படி அலைந்து கொண்டிருக்கிறேன்!

அன்று அவனுக்கு பிரம்மாஸ்திரத்தை விடவும் சொல்லித் தந்தீர்கள்! திருப்பிக் கொள்ளவும் சொல்லித் தந்தீர்கள்! ஆனால் எனக்கோ விட மட்டுமே சொல்லித் தந்தீர்கள்! நீங்கள் மட்டும் அப்போது ஓரவஞ்சனையின்றி உங்கள் சீடன் மேல் உங்களுக்கு இருக்கும் பெரும்பாசத்தை மீறி உங்கள் அன்புப் புதல்வனான எனக்கும் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறச் சொல்லிக் கொடுத்திருந்தால் பரந்தாமனின் சாபம் எனக்கு ஏற்பட்டிருக்குமா? பெரும் வரமாக இருந்திருக்க வேண்டிய சிரஞ்சீவித்தன்மை தான் எனக்கு பெரும் சாபமாக மாறியிருக்குமா? இன்று இப்படி நான் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நாற்றமெடுத்து காட்டிலும் மேட்டிலும் குகையிலும் மரத்திலும் மறைந்து மறைந்து உறைந்து துன்பப்படவும் தான் வேண்டியிருக்குமா?

தந்தையே! உங்கள் அருச்சுன பாசம் உங்களை மட்டும் இல்லாது உங்கள் வமிசத்தையே அழித்தது என்பது உங்களுக்குப் புரிந்ததா?! என் புலம்பல் உங்கள் காதுகளில் விழுந்ததா? என் அழுகிய உடற்புண்களின் நாற்றம் உங்கள் மூக்கைத் துளைத்ததா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?! என்னை மீளா நரகத்தில் தள்ளி விட்டு நீங்கள் மட்டும் வீர சுவர்க்கம் சென்று விட்டீர்களா? ஐயோ!

Picture Courtesy: http://netra-creative-vision.blogspot.com/

Friday, July 09, 2010

ஆத்திசூடி சொல்லும் அரனை மறவேல்!

ஒளவையாரின் ஆத்திசூடியைப் பற்றி நம்மில் நிறைய பேர் கேள்விபட்டிருக்கிறோம். சிறு வயதில் அதில் வரும் சில சூத்திரங்களையும் படித்திருக்கிறோம். அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்று உயிரெழுத்துகளைக் கொண்டு வரிசையாக வரும் பன்னிரண்டு சூத்திரங்களையும் படித்திருக்கிறோம். ஆத்திசூடி என்றாலே அவ்வளவு தான் என்றொரு எண்ணம் இது நாள் வரை எனக்கு இருந்தது.

ஆத்திசூடி என்று இந்த நூல் தொடங்குவதால் இந்த நூல் இப்பெயரைப் பெற்றது என்று ஓரிடத்தில் படித்தேன். அறம் செய விரும்பு என்று தானே இந்த நூல் தொடங்கும் என்ற ஐயம் எழுந்ததால் இணையத்தில் தேடிய போது, இந்த நூலின் கடவுள் வாழ்த்து ஆத்திசூடி என்று தொடங்குவதைக் கண்டேன். அதனைப் பற்றி இங்கே இப்போது எழுதவில்லை.

இந்நூலின் இணையப் பதிப்புகள் பலவற்றிலும் காணப்படும் ஒரு தவறினைச் சுட்டிக்காட்டுவதே இந்த இடுகையின் நோக்கம்.

உயிர் எழுத்துகள், ஆய்தம் இரண்டு வகைகளையும் எழுதிய பின்னர் மெய்யெழுத்துகளின் வரிசையில் சில சூத்திரங்கள் இந்த நூலில் இருக்கின்றன. (மெய், உயிர்மெய் அடிப்படைகளிலும் ஆத்திசுடி சூத்திரங்களைச் சொல்கின்றது என்பதும் இன்று தான் தெரியும்). மெய்யெழுத்துகளின் வரிசையைப் படித்துக் கொண்டு வரும் போது தான் 'அரனை மறவேல்' என்ற வரியைப் படித்தேன். ரகரத்திற்கு ஏற்கனவே 'அரவம் ஆட்டேல்' என்று ஒரு வரியைப் படித்தோமே; மீண்டும் எதற்கு இன்னொரு தடவை ரகரத்திற்கு ஒரு வரி வருகிறது என்று ஒரு ஐயம். மெய்யெழுத்துகளின் வரிசையைப் பார்த்தால் அந்த இடத்தில் றகரத்திற்கான வரி வரவேண்டும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் என்ற மெய்யெழுத்துகளின் வரிசையில் ளகரத்திற்குப் பின்னரும்,னகரத்திற்கு முன்னரும் வருவது றகரம். அதனால் இந்த வரி 'அறனை மறவேல்' என்று இருந்திருக்க வேண்டும். யாரோ அறியாமலோ அறிந்தோ இதனை 'அரனை மறவேல்' என்று எழுதிவிட்டார்கள். அந்தத் தவறு இணையத்தில் அப்படியே பரவுகிறது.

Wednesday, June 23, 2010

சாகும் வரை எதிரியே!

'இப்படி ஒரு தருமசங்கடம் வரும் என்று வெகு நாட்களாகவே தெரியும். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் பதிமூன்று வருடங்களாகத் தெரியும்.

துரியோதனனின் குணம் தெரிந்தது தானே. பதிமூன்றாம் வருடத்தில் எப்படியாவது சிற்றப்பன் மக்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்; இல்லையேல் சண்டையிட்டு அவர்களைக் கொல்ல வேண்டும் என்பது தானே அவனது திட்டம்.

குருபிதாமஹர் ஏதாவது செய்து சமாதானம் செய்துவைப்பார் என்று ஓரத்தில் ஒரு நப்பாசை இருந்தது. விதி வாயை மூடி வைத்ததா தானே மூடினாரா தெரியவில்லை. பெரியவர் பேச வேண்டிய நேரங்களில் எல்லாம் பேசாமல் வாய் மூடி மௌனமாக இருந்துவிடுகிறார். செய்தக்க அல்லது செயக் கெடும் செய்தக்க செய்யாமையாலும் கெடும் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும். அவருக்கு என்ன தருமசங்கடமோ?


நம் மைத்துனர் என்ன முடிவு செய்தாரோ தெரியவில்லை. நம்மைப் போல் தானே அவரும். அவர் செய்யும் முடிவையே நாமும் பின்பற்றலாமோ? இந்தத் துரோணன் எல்லா நேரங்களிலும் மைத்துனனையே பின்பற்றுகிறான் என்ற கெட்டபெயர் வந்துவிடுமோ?

பச்சைக் குழந்தைக்குப் பால் வாங்கித் தர இயலாமல் துருபதனிடம் அவமானப்பட்டு கிருபர் கையைத் தானே எதிர்பார்த்து வந்தேன். வந்த இடத்தில் நல்ல வேளை கிருபரைப் பார்ப்பதற்கு முன்னரே இளவரசர்களின் பந்து கிணற்றில் விழுந்து என்னைக் காப்பாற்றியது. இளவரசர்கள் மூலம் செய்தி அறிந்து குருபிதாமஹரே நம்மை அழைத்து அவர்களுக்கு ஆசிரியர் ஆக்கினார். கிருபரின் கையை எதிர் நோக்காமல் அவருக்கு இணையான ஆசிரியராக ஆகி வரவிருந்த அவமானம் வராமல் போனது. அப்போதிலிருந்து ஏறு முகம் தான். குரு குல இளவல்களின் ஆசிரியர் என்றால் என் பெயரைத் தான் முதலில் சொல்கிறார்கள். அவர் பெயர் மறந்தே போய்விட்டது.

இந்த நிலையில் நாமாக ஒரு முடிவு எடுத்தால் தான் நல்லது. பீஷ்மரும் கிருபரும் என்ன முடிவு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நமக்கென்ன?

விதுரர் பாடு பாவம். அரசவையில் அவமானப்பட்டு வில்லை ஒடித்துவிட்டுச் சென்றுவிட்டார். அதுவும் ஒரு வகையில் நல்லதாக போனது அவருக்கு. எனக்கு இருக்கும் குழப்பம் இல்லையே அவருக்கு.

இதோ போர் மூண்டுவிட்டது. யார் பக்கம் நாம் நிற்பது? எனக்குப் பிரியமான அருச்சுனன் பக்கமா? நூற்றுவர் பக்கமா? அருச்சுனன் அந்தப் பக்கத்தில் இருப்பதால் ஐவர் படையில் தான் நாம் இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது. ஆனால் ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே? என்ன அது?

உண்மையில் துரியோதனனின் மேல் தான் எனக்கு அன்பு அதிகமோ? அதனால் தான் ஐவர் பக்கம் நிற்பதை அது தடுக்கிறதோ? இல்லையே! முக்குணங்களைப் போல் ஆடை அணிந்து வரும் கர்ண துரியோதன சகுனியரைக் கண்டாலே கண் எரிகிறதே! பின் எது தடுக்கிறது?

வீடுமரோ? அதுவும் இல்லை. மற்றவரைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை; அவருடைய கடமைகளும் சபதங்களுமே அவருக்கு முக்கியம். அவருக்காக மற்றவரும் கவலைப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. அதனால் தடுப்பது பீஷ்மரும் இல்லை.

பின் எது?

ஓ தெரிந்தது தெரிந்தது. துருபதன்!

நண்பன் பகையானால் எவ்வளவு பெரிய கொடுமை! அப்பப்பா! அது தான் நம்மைத் தடுக்கிறது!

என்ன தான் துருபதனை நாம் பழி தீர்த்தாலும் என்னைக் கொல்லவே அவன் பெற்ற மகனுக்கு வில் வித்தை சொல்லித் தந்தாலும் நம் மனத்திலும் அந்தப் பகை தீரவில்லை; துருபதன் மனத்திலும் தீரவில்லை.

மகளை பார்த்தனுக்கு மணமுடித்து ஐவரின் சம்பந்தி ஆகிவிட்டான் அவன். எப்படியும் பாண்டவர் பக்கம் நின்று அவன் போரிட முனைவான். நானும் பாண்டவர் பக்கம் சென்றால் அவனுக்குப் பெரிய தருமசங்கடம் ஆகிவிடும். தயங்குவான்.

அவன் தயங்கினால் அவன் மகன் தயங்குவான். அவன் மகன் தயங்கினால் என் விதி எப்படி முடிவது?

துருபதனும் திருட்டதுய்மனும் சம்பந்திகளை எதிர்த்து கௌரவர் பக்கமும் நின்று போரிட மாட்டார்கள்.

அது தான் சரி. நாம் நூற்றுவர் பக்கமே நிற்போம். அப்படி செய்தால் தான் துருபதனின் பெரும் உதவி பாண்டவர்களுக்குக் கிட்டும். நாம் எதிர்பக்கம் நின்றாலும் என்னைக் கொல்வதற்கே பிறந்தவன் அவர்கள் பக்கம் நிற்பான். என்னைக் கொல்வான். நான் நூற்றுவர் பக்கம் நிற்பதே பாண்டவர்களுக்கு உதவியாகும்! அப்படியே செய்கிறேன்!

அருச்சுனா! உன் பெயர் இருக்கும் வரை என் பெயரும் இருக்கும்! அதற்கு நீ வெற்றி பெற வேண்டும்! அதற்கு நான் உன் எதிரியாக நின்று அழிய வேண்டும்! இதுவே விதி!’

Pictures Courtesy: http://netra-creative-vision.blogspot.com/

Friday, June 05, 2009

உடுக்கை இழந்தவன் கை - 16 (பாரி வள்ளலின் கதை)

பெரியோர்கள் குறித்தபடி ஒரு நல்ல நாளில் மலையமான் திருமுடிக்காரிக்கும் பாரிமகளிருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தன் வழியே செல்ல விரும்பிய கபிலரைத் தடுத்து சில காலமேனும் தங்களுடன் தங்கியிருந்து நல்லறிவுரைகளைக் கூறி நல்வழிப்படுத்த வேண்டுமென்று மலையன் வேண்டிக் கொண்டதால் கபிலர் திருக்கோவலூரில் தங்கியிருக்கிறார்.

'நண்பா பாரி. நீ விரும்பியபடியே குலத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் உன் மக்களுக்கு ஒத்த ஒருவனுக்கே அவர்களை மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். இவர்கள் வாழும் வாழ்க்கையைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காமனும் இரதியும் போல, மாயோனும் நப்பின்னையும் போல, உமையும் உமையொருபாகனும் போல, வள்ளியும் முருகனும் போல, வசிட்டனும் அருந்ததியும் போல இவர்கள் வாழ்கிறார்கள். வள்ளல் என்று பெரும் புகழ் பெற்ற உன்னையும் மிஞ்சும் படியான வண்மை உன் மருகனுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு பெருமிதம் கொள்ள நீ உயிருடன் இல்லாமல் போய்விட்டாயே.

இவர்கள் வாழும் கற்பு வாழ்க்கையைப் பற்றி உன்னிடம் கூற விரைந்து வருகிறேன். உன் மக்களின் விருப்பப்படி சிறிது நாட்களே இங்கு தங்கியிருக்கப் போகிறேன். இனி மேலும் உன் பிரிவினை என்னால் தாங்க இயலாது'

"புலவர் பெருமானே. மன்னர் திருவோலக்கத்து வீற்றிருக்கப் புறப்பட்டுவிட்டார். தாங்களும் அரசவைக்கு எழுந்தருளி திருவோலக்கத்தைப் பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்பது மன்னரின் வேண்டுகோள்"

"அமைச்சரே. இன்னும் ஒரு நாழிகைக்குள் அரசவைக்கு வருகிறேன். மன்னரின் அரசவையை நான் கண்டதுண்டு. இப்போது என் மருகனாய் என் மக்கள் இருவரையும் இருபுறமும் அமர்த்திக் கொண்டு அவன் அரசுக்கட்டிலில் வீற்றிருக்கும் அழகைக் காண்பதற்காக விரைந்தோடி வருகிறேன்"

***

'இதென்ன. என்றுமில்லா திருநாளாக எங்குமில்லா வழக்கமாக மூவேந்தர்களின் அமைச்சர்களின் கூட்டம் அலைமோதுகின்றதே. புலவர்களும் இரவலர்களும் மட்டுமே வந்திருப்பார்கள் என்றல்லவோ நினைத்தேன். மன்னன் மணம் புரிந்த பின்னர் முதன்முதலில் அரசவைக்கு வருவதால் அவனை வாழ்த்துவதற்காக அந்தணர்களும் வந்திருக்கிறார்கள். அதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மூவேந்தர்களின் தூதுக்குழுக்களும் இங்கே வந்த காரணமென்ன? ஒருவேளை பாரி மகளிரை மலையன் மணந்ததால் அவன் மீது மூவரும் போர் தொடுக்கின்றார்களோ?'

"வாருங்கள் கபிலரே. இங்கே வலப்புறத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து அருளுங்கள்" அங்கவை சங்கவை இருவருடன் மலையமான் எழுந்து கை கூப்பி கபிலரை வரவேற்றான்.

"வாழ்க மன்னவா" என்று வாழ்த்திவிட்டு கபிலர் அவன் காட்டிய இருக்கையில் அமர்கிறார்.

மூவேந்தர்களின் விருதுகளையும் உரக்கச் சொல்லிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக மூவேந்தர்களின் அமைச்சர்களும் அரசனுக்கு முன்னர் வந்து மலையமானின் திருமணத்திற்கு வேந்தர்கள் அனுப்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பரிசுப் பொருட்களை வழங்குகிறார்கள். வந்தவர்கள் தேரும், பரியும், யானையும், அணிகளும் என பலவிதமான பரிசுகளை அறிவித்தார்கள். போரினை அறிவிக்க வந்தவர்களோ என்ற ஐயத்தில் இருந்த கபிலருக்கு இக்காட்சி மிக வியப்பாக இருந்தது. மலையமானின் வீரச்சிறப்பைக் கேள்விப்பட்டிருந்த கபிலர் இன்று அதனை நேரிலேயே கண்டார். மற்றவர் வியக்கும் படைசிறப்பினை உடைய வேந்தர்களும் வியக்கும் வெற்றிச் சிறப்பு இவனிடம் இருப்பதால் இவனது துணை வேண்டி இப்படி மூவேந்தர்களும் தனித்தனியே பரிசுகள் அனுப்பியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.

மூவேந்தர்களிடமிருந்தும் வந்த பரிசுப் பொருட்களை ஏற்றுக் கொண்டு திருமுடிக்காரி அவரவர்களுக்குத் தகுதியான இருக்கைகளைத் தந்து அமரச் செய்தான். பின்னர் அங்கிருந்த அந்தணர்கள் முன் வந்து வாழ்த்து மொழிகளைக் கூறினர். அவர்கள் முன் அரசன் வணங்கி தன் நாடு முழுவதுமே அவர்களுக்கே உரியது என்று மரியாதைச் சொல் சொல்லி அவர்களை விடுத்தான்.

பின்னர் புலவர்களும் இரவலர்களும் ஒவ்வொருவராக வந்து வாழ்த்துகளையும் பாடல்களையும் கூறி மன்னனைச் சிறப்பித்தார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியறிந்து அவரவர் வேண்டி வந்ததை வரையாது வழங்கினான் மன்னன். மூவேந்தர்களிடம் இருந்து வந்த பரிசுப் பொருட்கள் எல்லாம் இப்படி வந்தவர்களுக்கெல்லாம் தந்தான் அரசன். சில மன்னர்கள் அதிகாலையில் எழுந்து கள்ளருந்தி அந்த மகிழ்வினால் தேரும் பரியும் என பரிசுகள் வழங்குவதை கபிலர் கண்டதுண்டு. ஆனால் அப்படி இன்றி எந்த வித மயக்கமும் இல்லாத நிலையிலும் தேரினையும் பரியினையும் அணிகளையும் வாரி வாரி வழங்கும் மலையமானைப் பாட வேண்டும் என்ற ஆவலுடன் எழுந்தார் கபிலர்.

"நாள் கள் உண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த விழை அணி நெடுந்தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே
"


"புலவர் பெருமானே".

"சொல்லுங்கள் அரசியாரே"

"பெரியப்பா. இதென்ன கொடுமை? என்னை எப்போதும் போல் சங்கவை என்றே அழைக்கலாமே. ஏன் அரசியார் என்று அழைக்கிறீர்கள்"

"அம்மா சங்கவை. நீ என்னை புலவர் பெருமானே என்று விளித்தாய். நான் அதற்குத் தகுந்த மரியாதையாக அரசியாரே என்றேன். இப்போது பெரியப்பா என்றாய்; நானும் உன் பெயரைச் சொன்னேன்"

"சரி தான். போட்டிக்குப் போட்டியா? அது போகட்டும். மன்னவரைப் புகழ்வது போல் வேறு யாரையோ இகழ்வது போல் தோன்றுகிறதே. நம் மன்னவர் கள்ளருந்தும் வழக்கம் இல்லாதவர். அதனால் அவரைப் பற்றி பாடிய பாடல் அடிகள் பொருத்தமானவை. ஆனால் கள்ளுண்டு அந்த மகிழ்ச்சியில் தேரினை வழங்கியவர் என்று யாரைக் குறிக்கிறீர்கள்? உங்கள் அருமை நண்பரையா?"

"அடடா. என் அருமை நண்பன் பாரியைப் பற்றி அப்படி பேசுவேனா அம்மா? என்ன வார்த்தை சொன்னாய்? அவனும் பல இரவலர்களுக்குத் தேரினை ஈந்தவன் தான். ஆனால் அவனுடைய புகழ் அதனால் கிட்டியதில்லையே! உன் தந்தைக்கு வான் புகழ் கிட்டியது வாடிக்கிடந்த முல்லைக்கொடிக்குத் தேரினை அவன் ஈந்ததால் தான் அம்மா. ஆறறிவு கொண்ட மக்களுக்கு இரங்குபவரே இங்கு அரிதாக இருக்கும் போது ஓரறிவு கொண்ட முல்லைக் கொடிக்கு இரங்கியதால் தான் அம்மா உன் தந்தையார் வள்ளல்களில் முதன்மையிடத்தைப் பெற்றான். அந்த நேரத்தில் அவன் கள்ளும் உண்ணவில்லை. அதனால் நான் பாடிய பாடலின் அடிகள் அவனைக் குறிக்கவும் இல்லை"

"எனக்கு தெரியும் பெரியப்பா. ஆனால் பாடலைக் கேட்டவர் யாரேனும் நீங்கள் பறம்புக் கோமானைப் புறம்பாகப் பேசிவிட்டீர்களோ என்று எண்ணலாம் என்பதால் தான் விளக்கம் கேட்டேன்"

"அங்கவை. சங்கவை. நீங்கள் பட்ட துன்பங்களுக்கு எல்லாம் சேர்த்து கிடைத்த நற்பயனாக உங்களுக்கு இந்த மலையமான் கணவனாக அமைந்திருக்கிறான். பாரியின் மக்களாகப் பிறந்த பயனை இவனை மணந்து பெற்றீர்கள். நீங்கள் எந்தக் குறையும் இல்லாதவர்கள். ஆனால் உங்கள் கணவனான இம்மன்னன் அப்படியில்லை. அவனிடம் இருக்கும் செல்வமோ குறைவு. ஆனால் அவனுக்கு இருக்கும் பெருமிதமோ மிகுதி"

"பெரியப்பா. இதென்ன விந்தை. எங்கள் தந்தையாரைக் குறையாகப் பேசவில்லை என்று மகிழ்ந்து ஒரு நொடியே ஆகிறது. அதற்குள் எங்கள் மணாளனைக் குறைவாகப் பேசுகிறீர்களே. இது என்ன விந்தை? முறை தானா இது?"

"அங்கவை. பார் மலையனும் சங்கவையும் உன் சினம் கண்டு தமக்குள் நகைக்கிறார்கள். பாட்டு பாடினால் தான் நான் சொல்ல வந்தது புரியும் போலும்.

கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடிக் காரி நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் உறுப்பாகியர் என
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே

இப்போது புரிகிறதா அம்மா நான் சொல்ல வந்தது?"

"புரிகிறது பெரியப்பா. இகழ்வது போல் புகழ்ந்திருக்கிறீர்கள்".

"இல்லாததைச் சொல்லிப் புகழவில்லை அம்மா. நான் என் கண்களால் கண்டவற்றைக் கொண்டே புகழ்கிறேன். கோழி கூவ துயில் எழும் மக்கள் உள்ள ஊர் உறையூரும் வஞ்சியும்; அழலை ஓம்பும் அந்தணர் மறை மொழி முழங்க துயில் எழும் மக்கள் உள்ள ஊர் எங்கள் ஊராம் மதுரை என்று பெருமை கொண்டிருந்தேன். ஆனால் தழலைப் போற்றும் அந்தணர் பெற்ற பெருமையை இங்கே கண்டேன். அவர்களுக்குத் தன் நாட்டையே தருவதாக மன்னவன் சொன்ன மொழியையும் கேட்டேன். அப்படி ஒவ்வொன்றும் இயல்பாக நடந்தவற்றைக் கொண்டே இந்தப் பாடல் பாடப்பட்டது அம்மா"

"உண்மை தான் பெரியப்பா. இன்று மாலையிலும் சில பாடல்களைப் பாடி எங்களை மகிழ்விக்க வேண்டும்"

"ஆமாம் புலவர் பெருமானே. இப்போது சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு இன்று மாலை தாங்கள் அரண்மனை நந்தவனத்திற்கு வந்து அருள வேண்டும்"

"ஆகட்டும் திருமுடிக்காரி. அப்படியே செய்கிறேன்".

***
பாடற்குறிப்புகள்:

1. 'நாள் கள் உண்டு' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 123-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: அதிகாலையில் கள்ளினை உண்டு நண்பர்களுடன் கூடி மகிழும் மகிழ்ச்சியுடன் இருந்தால் தேரினைத் தருவது யாருக்கும் எளிது. என்றும் குறையாத நல்ல புகழுடன் விளங்கும் மலையமான் அப்படி மது நுகர்ந்து மகிழாது ஈத்த பொற்படைக்கலன்களுடன் கூடிய உயர்ந்த தேர்கள், பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சியின் மீது பெய்த மழையின் துளிகளிலும் பல. ஏனையோர் வழங்குவது செயற்கை. இவன் கொடை இயற்கை.

2. 'கடல் கொளப்படாஅது' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 122-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: கடலாலும் கொள்ளப்படாது (இயற்கையால் அழிவில்லை); பகைவர்களும் அதனைக் கொள்ள வேண்டும் என்று எண்ண மாட்டார்கள் (செயற்கையாகவும் அழிவில்லை). உடலமைப்பு இலக்கணங்களின் படி திருத்தமாக அமைந்த கால்களை உடைய காரி! உனது நாடே அப்படிப்பட்டது. அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் அந்தணர்கள் உடையது. அழியாத செல்வத்தினையும் வெற்றி பொருந்திய படைகளையும் உடைய மூவேந்தர்களுக்குள் ஒருவருக்குத் துணையாக வேண்டுமென்று வேண்டி அவர்களிடம் இருந்து வந்தவர்கள் தனித் தனியே புகழ்ந்து உனக்குத் தரும் கூழாகிய பரிசுகள் உனது குடியின் பெருமையை வாழ்த்தியவர்களாக வரும் பரிசிலர்களுக்கு உரியது. வடமீனாம் அருந்ததியைப் போல் கற்பு நெறியில் சிறந்த இந்தப் பெண்களின் தோள் அளவல்லது வேறு எதையும் உனது என்று கூறிக் கொள்ள இயலாது. ஆனாலும் நீ பெருமிதம் கொண்டிருக்கிறாயே!

Tuesday, May 12, 2009

கவியோகியாரின் தமிழ்த்தாய் வாழ்த்து!


கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடிய இத்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களை அண்மையில் சுப்புரத்தினம் ஐயா அவர்களுடைய வலைப்பதிவில் படித்தேன். அன்னை தமிழ் பெற்றிருக்கும் பெருமையெல்லாம் அவனியெங்கும் எடுத்துரைக்கும் வகையில் இப்பாடல்கள் அமைந்திருப்பதைப் படித்துப் பாடி மகிழ்ந்தேன்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி என்னும் ஐம்பெரும் காப்பியங்களும் சூளாம்ணி முதலிய ஐஞ்சிறு காப்பியங்களும் அவனியெல்லாம் புகழும் திருக்குறளும் அன்னைக்கு அணிகலன்களாக அமைந்திருப்பதை முதல் பாடல் சொல்கிறது.

குண்டலம் என்பது காதில் அணியும் அணிகலன் என்பதால் குண்டலகேசி என்னும் நூல் அன்னைக்குக் காதணியாக அமைகின்றது. வளையல் என்பது கைகளில் அணியும் அணிகலன் என்பதால் வளையாபதி என்னும் நூல் அன்னைக்குக் கையணியாக அமைகின்றது. மாணிக்க பதக்கங்கள் மணி மாலைகளுடன் மார்பில் அணியப்பட வேண்டியவை என்பதால் சீவக சிந்தாமணி என்னும் நூல் அன்னையின் மார்பில் ஒளி வீசி நிற்கின்றது. மேகலை என்பது முத்துகளால் செய்யப்பட்டு இடையில் அணியப்படுவதால் மணிமேகலை இடையணியாக விளங்குகின்றது. சிலம்பு என்பது கால்களில் அணியும் அணிகலன் என்பதால் சிலப்பதிகாரம் அன்னையின் பூந்தாமரைப் பாதங்களில் ஒலி செய்து விளங்குகின்றது.

சூளாமணி என்னும் அணிகலன் தலையணியாக அமைவதால் சூளாமணி முதலிய ஐஞ்சிறுகாப்பியங்கள் அன்னையின் தலையில் அணிந்த அணிகலன்களாக அமைகின்றன. இப்படி மேனியெங்கும் ஒளி வீசும் பெருமை கொண்ட அணிகளை அணிந்த பேரரசியாம் தமிழன்னை திருக்குறள் என்னும் செங்கோலினைத் தாங்கி சீராட்சி செய்கின்றாள்.

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!

காது ஒளிரும் குண்டலமும்
கைக்கு வளையாபதியும்
கருணை மார்பின் மீது ஒளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும்
சிலம்பு ஆர் இன்பப் போது ஒளிர் பூந்தாமரையும்
பொன்முடிச் சூளாமணியும்
பொலியச் சூடி
நீதி ஒளிர் செங்கோலாய் திருக்குறளைத்
தாங்கும் தமிழ் நீடு வாழ்க!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்னும் சைவ சமயக் குரவர்கள் நால்வர் இயற்றிய இசை அமுதம் இருக்கின்றது. வைணவ குரவராம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் அவரே வெளிப்படுத்திய மற்ற ஆழ்வார்களின் நாலாயிர பாசுரங்களும் இருக்கின்றன. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதால் திருத்தொண்டர் புராணம் என்றும் பெரிய புராணம் என்றும் சொல்லப்படும் சேக்கிழார் பெருமான் இயற்றிய பால் வடி செந்தமிழ் நூலும் இருக்கின்றது. கல்வியில் சிறந்த கம்பன் இயற்றிய இராமவதாரச் சித்திரமும் இருக்கின்றது. இந்நூல் இல்லாத இடம் எல்லாம் இருள் சூழ்ந்து இரவு போல் இருக்க இங்கு மட்டும் பகல் என்று சொல்லலாம் படி செய்திருக்கும் நாயனாராம் திருவள்ளுவரின் திருக்குறளும் இருக்கின்றது. இப்பெரும் நூல்கள் எல்லாம் இருக்கும் போது நமது தமிழன்னை காலத்தை வென்று ஓங்கும் கற்பக மரத்தைப் போல் வேண்டியவற்றை எல்லாம் அருளி என்றும் நிலைத்திருப்பதில் ஏதேனும் ஐயம் உண்டா?

நால்வர் இசை அமுதிருக்க நம்மாழ்வார் மொழியிருக்கச் சேக்கிழாரின்
பால்வடி செந்தமிழ் இருக்கக் கம்பச்சித்திரம் இருக்கப் பகலே போன்று
ஞாலத்தில் அறம் விளங்கும் நாயனார் குறளிருக்க நமது நற்றாய்
காலத்தை வென்றோங்கும் கற்பகம் போல் கனி பெருகக் கண்டிலோமோ


நால்வர் இசை அமுது இருக்க
நம்மாழ்வார் மொழி இருக்க
சேக்கிழாரின் பால் வடி செந்தமிழ் இருக்க
கம்பச் சித்திரம் இருக்க
பகலே போன்று ஞாலத்தில் அறம் விளங்கும் நாயனார் குறள் இருக்க
நமது நற்றாய்
காலத்தை வென்று
ஓங்கும் கற்பகம் போல்
கனி பெருகக் கண்டிலோமோ?!

Friday, January 09, 2009

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....

உலகில் அறிவுக் குறையின்றி வளர்ந்து நிறைவு பெற்று வாழ விரும்புவோர் எந்த ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும், யார் எழுதக் கண்ணுற்றாலும் அந்தப் பொருளின்கண் உண்மையுள்ளதா என்று ஆராய்ந்து தெளிதல் வேண்டும். இவ்வாறு ஆய்வதன் மூலமே செம்பொருள் - மெய்ப்பொருள் கிடைக்கும்.
நூல்வல்லார் எழுதிய அகராதி, நிகண்டுகளாயினும் அவை கூறும் சொற்பொருள் சரிதானா என்று சிந்தித்தல் நலம் பயக்கும். ஆராயாது ஏற்றுக் கொள்வது அறிவுடைமைக்கு அழகன்று. ஏனெனில் இயற்கை அறிவும் நூலறிவும் ஒருங்கே அமையப்பெற்ற சான்றோர்களும் சிலபோது முறை மறந்து எழுதுதல் - பேசுதல் உண்டு என்பதனை மறத்தல் கூடாது.

நூலா சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொராசிரியர்
ஒவ்வொரு மதமா யுரையுரைக் குவரே
யவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு
அவர்கருத் தறியாது அவரவர் கருத்தினுள்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே
ஒருவிதி தனக்கே பலபெயர் வருமே
ஒருபெயர் தனக்கே பலவிதி வருமே
நூலுரை பேதகா சிரியர் மூவரும்
முக்குண வசத்தான் முறைமறந் தறைவரே.


என்று இலக்கணக் கொத்து ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் பாயிரத்துள் கூறிய கருத்துப் புறக்கணிக்கக் கூடியதன்று.

நிகண்டு இயற்றிய பெருமக்கள் இலக்கிய, இலக்கணப் பயிற்சிமிக்குடையர் என்பதை அறிவோம். அதனால் அவர்களின் நூல்களில் குறைகள் இருக்க இடமில்லை என்று துணிதல் கூடாது. அவர்கள் தவறு செய்த இடங்களும் உண்டு.

யானைக் கன்றின் பெயர்களைக் கூறும்போது "கயந்தலை போதகங்கள் துடியடி களபமோடு கயமுனி யானைக் கன்றாம்," என்கிறது சூடாமணி நிகண்டு.

பிங்கல நிகண்டும் (2416),

"கயந்தலை போதகம் துடியடி களபம்
கயமுனி யானைக் கன்றா கும்மே."


என்று கூறுகிறது. திவாகர நிகண்டும் இவ்வாறே கூறுகிறது.

இவை யானைக் கன்றின் வேறு பெயர்களைக்

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி


என்று ஐந்தனையும் குறிப்பிடுகின்றன.

கயந்தலை - யானைக்கன்றைக் குறிக்குமா?

இலக்கிய இலக்கணச் சான்று உண்டா?

என்ற வினாக்களை எழுப்பிச் செம்பொருள் காணல் வேண்டும்.

"தடவும் கயவும் நளியும் பெருமை." - தொல்.உரி: 24
"கயவென் கிளவி மென்மையும் ஆகும்." - தொல்.உரி: 26

என்று ஆசிரியர் தொல்காப்பியனாரே கூறுவதால் "கய" என்ற சொல்லானது பெருமை, மென்மை என்ற பொருள்களையே தரும். சங்கப் புலவர்களும் இவ்விரு பொருள்களிலேயே "கய" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

பரிபாடலில் (8:15) வருகின்ற "கயமுகை" என்பதற்குப் பரிமேலழகர் "பெரியமுகை" என்றே பொருள் எழுதுகிறார்.

கயம்பட்ட உருவின்மேல் - கலித் 72:19, கயம் - மென்மை என்றார் நச்சினார்க்கினியர். இவ்வாறு உரையாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பிய நெறி நின்றே "கய" என்பதற்கு மென்மை, பெருமை என்று பொருள் கொண்டனர்.

ஆகையால் "கயந்தலை" என்று செய்யுட்களில் வருமிடந்தோறும் பெருமை பொருந்திய தலை, அல்லது மென்மையான தலை என்றுதான் பொருள் கொளல் வேண்டும். முன்னொட்டு எதுவுமின்றிக் "கயந்தலை" என்று மட்டும் வந்தால் யானைக்கன்று எனப்பொருள் கொள்ளல் பொருந்தாது.

"கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி."
- அகநா.165:1 - 3

"மெல்லிய தலையினை உடைய மடப்பத்தினையுடைய பெண் யானை, படுகுழியில் வீழ்ந்து அகப்பட்டதென்று களிற்றி யானை விளித்தல் பொருந்திய முழக்கத்தினை யஞ்சி மெல்லென எழுந்த செய்ய வாயையுடைய யானைக்கன்று," என்பது பொருள். ஈண்டு "கயந்தலை மடப்பிடி" என்று பெண் யானை குறிப்பிடப்படுவதையும், இம்மடப்பிடியின் கன்று "செவ்வாய்க் குழவி" எனக் குறிப்பிடப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

"கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி." - மலைபடு - 307

இங்கே கன்று வேறாகவும் "கயந்தலை மடப்பிடி" வேறாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "கன்று வயிற்றிலே உண்டான மெல்லிய தலையினை உடைய மடப்பிடி," என்பது நச்சினார்க்கினியர் உரை. மடப்பிடி - இளம் பெண்யானை.

பிடிக்குக் "கயந்தலை" அடைமொழியாக வந்தாற்போல, களிற்றுக்கும் "கயந்தலை" அடைமொழியாக வருவதுண்டு. "கயந்தலைக் களிற்றின்" - சூளாமணி -106. ஆண் யானையின் தலை "கயந்தலை" எனப்பட்டது. கயந்தலை -பெரியதலை என்ற பொருளில் இங்கு வந்துள்ளது. இவை போல் யானைக்கன்றின் தலையும் கயந்தலை எனக்குறிப்பிடப்படும் பாடலும் உண்டு. "கயந்தலைக் குழவி கவியுகிர் மடப்பிடி" - அகநா.229:4. மடப்பிடிக்கு முன் குழவியும் சேர்ந்து "கயந்தலைக் குழவி" என வந்ததால் யானைக் கன்றினைக் குறித்தது.

கயந்தலை உயர்திணையிலும் அடைமொழியாய் வருவதுண்டு.

புதல்வருடைய மென்மையான தலையைப் "புதல்வர் கயந்தலை" என்று பரிபாடல் (16:8) குறிப்பிடக் காணலாம். இப்பரிபாடலிலேயே வேறொரு இடத்தில் (5:10) "மூவிரு கயந்தலை" என வருகிறது. இங்கு பரிமேலழகர் "ஆறுதிருமுடிகளை உடையோய்" எனப்பொருள் எழுதியதுடன், "கயந்தலை என்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; அஃது ஈண்டு ஆகுபெயராய் அண்மை விளியேற்றது" என்று எழுதினார். முருகன் தலைகள் ஆறும் "மூவிரு கயந்தலை" எனப்பட்டன.

உரல் போன்ற அடியினை உடையது பெரிய யானை. அதனால் "கறையடியானை" - (அகநா - 142:9) எனப்பட்டது. யானைக் கன்றின் கால்கள் துடிபோன்று இருப்பதால் "துடியடிக் கயந்தலை" (கலித் -10:8) என்றார் பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோன் (துடி - உடுக்கையென்னும் பறைவகை). இவ்விடத்தில் "துடியடி"யின்றி, "கயந்தலை" மட்டும் வந்திருந்தால் யானைக் கன்றைக் குறிக்காது. கயந்தலை என்று மட்டும் வந்து யானைக் கன்றைக் குறித்த இடம் பழந்தமிழ்ச் செய்யுட்களில் யாண்டும் இல்லை. அதனால்தான் 1936ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வையாபுரிப் பிள்ளை தலைமையில் தொகுக்கப்பட்டு வெளிவந்த தமிழ் லெக்சிகனில், எங்கும் கயந்தலை -யானைக்கன்று என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் நிகண்டுகளைப் பின்பற்றிப் பல அகராதிகளில் கயந்தலை -யானைக்கன்று என்று எழுதிவிட்டனர். இது முன்னோர் கொள்கைக்கு முரணாகும்.

மா.சின்னு

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. ஒளவை. ந. கண்ணன்.

***

இந்தக் கட்டுரை மிக நல்ல கட்டுரை. ஒரு அருமையான கருத்தைச் சொல்லியிருக்கிறது. ஆனால் கொஞ்சம் புலமைத்தமிழில் அமைந்திருக்கிறதோ என்ற ஐயம் இருக்கிறது. இன்னும் எளிமையாக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் சொல்லுங்கள்; இக்கட்டுரைக் கருத்தைத் தழுவி இன்னொரு கட்டுரை எழுதி இடுகிறேன். நன்றி.

Sunday, December 21, 2008

காலங்களின் அடிப்படையில் தமிழ் இலக்கியங்கள்

தமிழ் பல்கலைக்கழக பட்டய படிப்பிற்கான பாட திட்டத்தில் இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தமிழ் இலக்கியங்களை அவை இயற்றப்பட்டக் கால அடிப்படையில் தொகுத்திருந்தார்கள். அதனை எடுத்து இங்கே இடுகிறேன்.

***

(1) சங்க கால இலக்கியங்கள் (கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை)

தோன்றிய நூற்கள்: அகத்தியம், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

(2) சங்கம் மருவிய கால இலக்கியங்கள் (கி.பி. 200 முதல் கி.பி. 450 வரை)

பதினெண் கீழ்க்கணக்கு நூற்கள் இக்காலத்தில் தோன்றின. சங்க காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கள் குடித்தலையும், பரத்தமைத் தொடர்பையும் இக்கால இலக்கியங்கள் கண்டித்தன. பௌத்தமும் சமணமும் தமிழகத்தில் வேரூன்றின. தனிப்பாடல் அமைப்பை இளங்கோ மாற்றி சிலப்பதிகாரம் எனும் காப்பியம் தந்தார். பசியைப் போக்குதலே உயர்ந்த அறம் எனும் நோக்கில் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை எனும் காப்பியம் படைத்தார். குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் இயற்றப்பட்ட பிருகத் கதை எனும் நூலின் அடிப்படையில் பெருங்கதை அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் கொங்கு வேளிர். இது சமண சமய நூல்.

(3) சோழர் காலக் காப்பியங்கள் (கி.பி. 900 முதல் கி.பி. 1300 வரை)

1. சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்

2. வளையாபதி - 72 பாடல்கள் தற்போது கிடைத்துள்ளன. ஆரிய வைசிய புராணத்தின் அடிப்படையில் அமைந்தது.

3. குண்டலகேசி - பௌத்தம் சார்ந்தது.

4. நீலகேசி - தமிழின் முதல் தர்க்க நூல். புத்த சமய நூலுக்கு (குண்டலகேசி) எதிர்ப்பாகத் தோன்றியது. சமண சமய நூல்.

5. சூளாமணி - வடமொழியில் ஜினசேனர் எழுதிய மகாபுராணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.

6. உதயணகுமார காவியம் - 367 பாடல்கள் உடையது. உதயணன் வரலாறு கூறும் நூல் இது. சமண சமயம் சார்ந்த நூல்.

7. யசோதர காவியம் - நூலாசிரியர் சமணர்.

8. நாககுமார காவியம் - சென்னைப் பல்கலைக்கழகம் 1973ல் புலவர் சண்முகத்தைக் கொண்டு இந்நூலை வெளியிட்டது. நாகபஞ்சமி கதை என்ற பெயர் உண்டு. நாககுமாரனின் கதையைக் கூறும் காப்பியம் இது.

9. மேரு மந்தர புராணம் - சமண சமயத்தின் சமய சாரம் இந்நூல். ஆசிரியர் வாமனாசாரியர். 'நல்வினையோ தீவினையோ நம்மைத் தொடரும்' என்கிறது இந்நூல்.

10. பெரிய புராணம் - ஆசிரியர் சேக்கிழார். காலம். கி.பி. 12ஆம் நூற்றாண்டு. அப்போது சோழ நாட்டை ஆண்ட மன்னன் இரன்டாம் குலோத்துங்கன். சேக்கிழார் இந்நூலுக்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாறு கூறும் நூல்.

11. கம்பராமாயணம் - ஆசிரியர் கம்பர். தமிழில் தோன்றிய காப்பியங்களுள் அளவிற் பெரியது. இராமபிரானின் வரலாறு கூறும் நூல்.

12. நளவெண்பா - ஆசிரியர் புகழேந்தி. வியாசபாரதத்தில் வரும் நளன் பற்றிய கதையைக் கூறுவது. பெண்பா யாப்பில் அமைந்தது.

(4) நாயக்கர் காலம்

இதைச் சிற்றிலக்கிய காலமாக அழைக்கலாம். இக்காலத்தில் தான் கோவை, பரணி, பள்ளு, பிள்ளைத்தமிழ், குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்கள் தோன்றின.

நன்றி: இணையத் தமிழ் பல்கலைக்கழகம்.

Saturday, December 20, 2008

மன்னு வடமதுரை மைந்தன்

தொல்காப்பியம் முதற்கொண்டு பழந்தமிழ் நூற்கள் பலவற்றிலும் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டும் தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. திருமுருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று இப்போது பெரும்பான்மையோரின் மனத்தில் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது; அப்படி நிலைநாட்ட எந்த விதமான தரவுகள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டனவோ அதே அளவிற்கு அதே தரத்தில் அதே போன்ற தரவுகள் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டுவதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்தத் தரவுகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டு வருகிறேன்; இனிமேலும் எழுதுவேன். இன்றைக்கு 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்ற திருப்பாவை வரிகளில் சொல்லப்படும் மதுரை வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுராவா தெற்கே வைகைக்கரையில் இருக்கும் மதுரையா என்று மட்டும் ஆராய்வோம்.

ஆன்மிகத்தையும் பக்தி இலக்கியங்களையும் முடிந்த வரையில் எளிமைப்படுத்தி அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் எழுதி வரும் நல்நண்பர் இரவிசங்கர் இந்த வரியில் சொல்லப்படும் வடமதுரை மைந்தன் தமிழக மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை வாழ் அழகனே என்று சொல்கிறார். ஆண்டாள் தென் தமிழகத்தில் இருக்கும் வில்லிபுத்தூரில் இருந்து பார்க்கும் போது தமிழக மதுரை அவளுக்கு வடக்கே அமைகிறது; அதனால் அந்த மதுரையைத் தான் அவள் வடமதுரை என்றாள் என்கிறார். அதற்கு வடபழனி, தென்பழனி போன்ற எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார். ஏரணத்திற்குப் பொருந்துவதைப் போல் தோன்றினாலும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காண்பதே சிறப்பு என்பதால் இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்று தோன்றியது.

வில்லிபுத்தூருக்கு வடக்கே தான் தமிழக மதுரை இருக்கிறது. அங்கு கூடல் அழகர் திருக்கோவில் இருக்கிறது. அதனால் வடமதுரை என்று திருப்பாவையில் குறிக்கப்பட்டது தமிழக மதுரை தான் என்றால் வடமதுரை மைந்தன் (வடமதுரைத் தலைவன்) என்பவன் கூடல் அழகராகவே எடுத்துக் கொள்ளலாம். மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகனாம் கள்ளழகரைத் தான் அந்தத் தொடர் குறிக்கிறது என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி குறிப்பாக கள்ளழகரைத் தான் சொன்னாள் கோதை என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

வடமதுரை என்பது தமிழக மதுரை தானா என்ற கேள்விக்குப் பதிலாக நாச்சியார் திருமொழியில் இருந்து சில வரிகளை எடுத்துத் தந்திருக்கிறார். அவற்றையும் ஆராய்வோம்.

பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்
யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்
சோலைமலைப்பெருமாள் துவராபதி எம்பெருமான்...

1. பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்; யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்

இந்த வரிகள் வருவது 'மற்றிருந்தீர்' என்று தொடங்கும் நாச்சியார் திருமொழியின் 12ம் திருமொழி. இந்தத் திருமொழியில் எல்லா பாசுரங்களிலும் 'என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று சொல்லும் விதமாக 'உய்த்திடுமின்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார் நாச்சியார்.

மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின், நந்தகோபன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின், யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், பத்தவிலோசனத்து என்னை உய்த்திடுமின், பாண்டிவடத்தென்னை உய்த்திடுமின், கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின், துவராபதிக்கென்னை உய்த்திடுமின் என்றெல்லாம் சொல்கிறாள். இவற்றில் 'பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்' என்பதை 'பாண்டிய நாட்டில் வடபகுதியில் இருக்கும் மதுரை நகருக்கு என்னை கொண்டு சேருங்கள்' என்று பொருள் கொள்கிறார் இரவிசங்கர். பொருத்தமான பொருள் தானா? மற்ற இடங்களில் எல்லாமே கண்ணனின் பிறப்பும் வாழ்வும் நடந்ததென சொல்லப்பட்ட இடங்களை நாச்சியார் பாடும் போது இங்கே திடீரென்று பாண்டிய நாட்டைச் சொல்வாரா? பொருந்துகிறதா?

இதற்கு முந்தைய வரியையும் சேர்த்துப் பார்த்தால் பொருள் இன்னும் தெளிவாகப் புரியும். 'பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்'. பாருங்கள் திருமாலிருஞ்சோலையில் பலதேவனின் கோவில் இருந்ததாக பரிபாடல் சொல்கிறது; இங்கும் நாச்சியார் பலதேவனைச் சொல்லியிருக்கிறார்; அதனால் இது பாண்டிய நாட்டின் வடப்புறத்தில் இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தான் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதே - என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? அவக்கரம் வேண்டாம்; இன்னும் பொருளை ஆய்வோம். பிலம்பன் தன்னை பண் அழிய பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்கிறாளே நாச்சியார். பிலம்பன் என்றால் யார்? எது? பண் அழிய பலதேவன் வென்றது யாரை? எதை? அது பாண்டிய நாட்டில் நடந்ததா? ஒன்றும் புரியவில்லையே. பாகவத புராணத்தைப் பார்த்தால் புரியும்.

ப்ரலம்பன் என்ற அசுரனை பலராமன் பாண்டிரமென்னும் ஆலமரத்தின் அருகில் வென்று கொன்றதாக பாகவத புராணம் சொல்கிறது. அந்த ஆலமரம் தமிழகத்தில் இல்லை; வடக்கே யமுனைக்கரையில் தான் இருக்கிறது. ஆலமரத்திற்கு வடவிருட்சம் என்ற பெயரும் உண்டு. ஆலிலைத் துயில்பவன் என்பதைத் தானே வடபத்ரசாயி என்று சொல்கிறோம்; வில்லிபுத்தூரில் இருக்கும் வடபெருங்கோவிலுடையான் திருக்கோவில் திருமாலின் திருப்பெயர் அது தானே. (நல்ல வேளை. அந்த வடபெருங்கோவிலும் ஆண்டாளின் வீட்டிற்கு வடக்கே இருந்ததால் தான் அந்தப் பெயர் என்று சொல்லாமல் விட்டோம்). வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் பாண்டிரம் என்னும் ஆலமரத்தின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்பதைத் தான் ஆண்டாள் இங்கே 'பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்' என்கிறாள். அதில் ஐயமே இல்லை.

2. சோலைமலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்:

இந்த இடத்தில் சோலைமலைப்பெருமான் தான் துவராபதி எம்பெருமான் என்று சொல்வது எந்த வகையில் 'வடமதுரை மைந்தன்' என்று குறித்தது தமிழக மதுரையைக் குறிக்கும் என்று புரியவில்லை. சோலைமலையிலும் மற்ற திருமால் கோவில்களிலும் இருப்பவன் துவராபதி இறைவன் தான்; ஆலின் இலைப் பெருமான் தான். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அந்தத் தரவு வடமதுரை மைந்தன் என்று குறித்தது கூடல் அழகரையோ மதுரைக்கு வடக்கே இருக்கும் சோலைமலை அழகரையோ தான் என்று காட்டுவதாகத் தெரியவில்லை. வேங்கடவன் விண்ணோர் தலைவன் என்றெல்லாம் பட்டியல் இட்டுவருவதைப் போல் சோலைமலைப் பெருமான், துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப்பெருமான் என்று அவன் பெயர்களையும் புகழ்களையும் பட்டியல் இடுகிறாள் கோதை. அது போன்ற பட்டியலை நாலாயிரத்தில் நிறைய பார்க்கலாம். அதனால் வடமதுரை என்றது தென்னக மதுரையைத் தான் என்றோ யமுனைத்துறைவன் என்றது வைகைக்கரையைத் தான் என்றோ காட்டுவதாக இந்தத் தரவின் மூலம் அறிய முடியவில்லை.

ஆய்ப்பாடியை வில்லிபுத்தூருக்கு மாற்றி தன்னையும் தன் தோழியர்களையும் ஆய்ப்பெண்களாக மாற்றி வடபெரும்கோவிலுடையானின் (வடபத்ரசாயியின்) திருக்கோவிலை நந்தகோபன் திருமாளிகையாக மாற்றி ஆண்டாள் திருப்பாவை பாடினாள் என்று சொன்னால் அதற்கு திருப்பாவையும் பெரியவர்கள் பலர் செய்த உரைகளும் துணையாக நிற்கின்றன. ஆனால் ஆய்ப்பாடியை மதுரைக்கும் யமுனையை வைகைக்கும் ஆண்டாள் மாற்றுகிறாள் என்பதற்கு வலுவான தரவு இருப்பதாகத் தோன்றவில்லை.

***

இன்னும் ஆழமாகச் சென்று ஆராய நாலாயிரத்தில் இருந்து இன்னும் சில தரவுகளைப் பார்க்கலாம்.

3. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்:

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம் இது,

இதுவோ பொருத்தம் மின்னாழிப்படையாய்
ஏறும் இருஞ்சிறைப்புள்
அதுவே கொடியாய் உயர்த்தானே
என்றென்று ஏங்கி அழுதக்கால்
எதுவே ஆகக் கருதும் கொல்
இம்மாஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே


ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.

4. திருமங்கை மன்னன்:

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சில இடங்களில் மதுரை என்று வருகிறது. அவற்றைப் பார்ப்போம்.

சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை...

பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே.

மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.

வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே

இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.

***

5. விப்ரநாராயணர்:

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மதுரையைப் பற்றி ஓரிடத்தில் குறித்துள்ளார்.

வளவெழும் தவள மாட
மதுரை மாநகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்கமாலை...

அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.

***

6. வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்:

சரி. மற்றவர் சொன்னதைப் பார்த்தோம். ஆண்டாளின் திருத்தந்தை சொன்னவற்றைப் பார்க்கலாமா?

'திருமதுரையுள் சிலை குனித்து' என்று திருப்பல்லாண்டில் பாடுகிறார் விட்டுசித்தர். வில்லை முறித்து என்று சொன்னதால் இங்கு சொல்லப்படும் திருமதுரை வடநாட்டு மதுரை தான் என்பது தெளிவு.

வானில் அரசு வைகுந்தக் குட்டன்
வாசுதேவன் மதுரைமன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன்....

இங்கே மதுரை மன்னன் என்றதால் எந்த மதுரையைச் சொன்னார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வாசுதேவன் (வசுதேவன் மகன்) என்றதாலும் நந்தகோன் இளவரசு என்றதாலும் கோவலர் குட்டன் என்றதாலும் இங்கே மன்னனாய் சொன்னது வடமதுரைக்கு மன்னன் என்று தான் என்பது தெளிவு.

இங்கே பெரியாழ்வார் 'மதுரை மன்னன்' என்றது போல் அவர்தம் திருமகளாரும் 'மதுரையார் மன்னன்' என்றும் 'வடமதுரையார் மன்னன்' என்றும் பாடுகிறாள். அங்கும் இதே பொருள் தான் என்பதில் ஐயமில்லை.

'என் மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறார் பெரியாழ்வார். கோதை 'உய்த்திடுமின்' என்று பாடிய பிறகு பாடியது போலும் இந்தப் பாசுரம். அதனால் தான் 'மல்லரை அட்டவன் பின் போய்' மதுரைப் புறம் புக்காள் கொலோ என்று கேட்கிறார். இங்கும் மல்லரை அட்ட நிகழ்ச்சி நடந்த வடநாட்டு மதுரை தான் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

இன்னொரு இடத்தில் பெருமாள் திருத்தலங்களைப் பட்டியல் இடுகிறார் பெரியாழ்வார். 'வடதிசை மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவரை, அயோத்தி, இடமுடை வதரி, இட வகையுடைய எம் புருடோத்தமன் இருக்கை' என்கிறார். இங்கு பெரும்பாலும் வடநாட்டில் இருக்கும் தலங்களைக் குறித்ததால் இந்தப் பட்டியலில் வரும் 'வடதிசை மதுரை' தென்னக மதுரை இல்லை வடநாட்டு மதுரையே என்பது தெளிவு.

***

இப்படி நாலாயிரத்தில் 'மதுரை' என்ற சொல் வரும் இடங்களை எல்லாம் பார்க்கும் போது அங்கெல்லாம் குறிக்கப்பட்டது வடநாட்டு மதுரையே என்பது தெளிவாகத் தெரிவதால் ஆண்டாளும் 'வடமதுரை மைந்தனை' என்ற போது வடநாட்டு மதுரையைத் தான் குறித்தாள் என்பது தெளிவு. வில்லிபுத்தூருக்கு வடக்கே இருக்கும் தென்னக மதுரையை வடமதுரை என்றாள் என்பது சுவையாக இருக்கிறது; ஆனால் வலிந்து கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது.

கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. இந்த 'வலிந்து கொள்ளப்பட்ட தரவுகள்' தேவையில்லை. எப்படி திருமுருகன் வடக்கே பிறந்து வடக்கே வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானே எப்படி சிவபெருமான் வடகயிலையில் வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானோ அதே போல் கண்ணனும் வடமதுரையில் பிறந்து வடமதுரையார் மன்னனாக இருந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறான். அதுவும் மிகத் தெளிவு.

புறநானூறு சொல்லும் உடன்கட்டை ஏற்றம்...

புறநானூறு 246ஆவது பாடல். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் அரசி பெருங்கோப்பெண்டு என்பவர் பாடியது. பூதப்பாண்டியன் இளம்வயதிலேயே மாண்டுவிட கணவனை இழந்து வாழேன் என்று கூறி உடன்கட்டை ஏற முடிவெடுத்தாள் பெருங்கோப்பெண்டு. அமைச்சர்களும் அரசவைப் பெரியோர்களும் அவளது முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் வேண்டுகோளை மறுத்து அரசி இயற்றிய பாடல் இது.

பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!


திணை: பொதுவியல் (பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத
பொதுவான செய்திகளைக் கூறும் திணை)
துறை: ஆனந்தப்பையுள் (கணவன் இறப்ப மனைவி மெலிந்து வருந்தும் அறத்துறை)

சான்றோர்களே! சான்றோர்களே! நீயும் இறந்துபட்ட கணவனுடன் சென்று விடு என்று என்னை அனுப்பாமல் அதனைத் தவிர்த்து உயிர் வாழச் சொல்லும் உங்கள் பொல்லாத பேரறிவினை உடையவராக இருக்கிறீர்களே.

அணிலின் முதுகில் உள்ள கோடுகளைப் போன்ற வரிகளை உடைய வெள்ளரிக்காயைப் பிளந்தால் அதிலிருக்கும் சிறு விதைகளைப் பார்க்கலாம்; அந்த விதைகளைப் போன்ற நுண்ணிய நெய்யைக் கையால் தொடாமல் இருக்க வேன்டும். இலையின் மேல் இடப்பட்ட கைப்பிடி அளவு பழைய சோற்றைப் பிழிந்து நீரை விலக்கி வெள்ளெருக்குத் துவையலைத் தொட்டுக் கொண்டு சிறிதே புளியைச் சேர்த்துக் கொண்டு வெந்தும் வேகாததுமாக உண்ண வேண்டும். பரல் கற்கள் (பருக்கைக் கற்கள்) நிறைந்த கட்டாந்தரையில் பாய் இன்றிப் படுக்க வேண்டும். இப்படி ஒரு கடின வாழ்க்கையை விரும்பி வாழும், கைம்மை நோன்பு நோற்றேனும் உயிர் வாழ விரும்பும் பெண்களில் ஒருத்தி இல்லை யான்.

ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் கருங்கட்டைகளால் உண்டான நெருப்பை உடைய இந்த ஈமப்படுக்கை உங்களுக்கு வேண்டுமானால் அரியதாகவும் கொடியதாகவும் இருக்கலாம்; எனக்கு அப்படி இல்லை.

பெரிய தோளினை உடைய என் கணவன் மாய்ந்த பின் நன்கு மலர்ந்த அழகான தாமரை மலர்கள் நிறைந்த நீர்ப்பொய்கையும் தீயும் ஒரே தன்மை உடையன.

***

உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தப் பாடல் எழுதப்பட்ட போது இருந்திருக்கிறது என்பது இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது; ஆனால் அது சான்றோர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இந்தப் பாடலின் மூலம் விதவைகள் படும் துயரமும் சொல்லப்பட்டிருக்கிறது. கைம்மை நோன்பெனும் துயரம் பலவகைகளில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலின் குறிப்பில் 'பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவள் இந்தப் பாடலைப் பாடிய பின்னர் தீப்பாய்ந்தாளா இல்லையா என்ற குறிப்பு இந்தப் பாடலில் இல்லை. ஆனால் அவள் தீப்பாய்ந்தாள் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது.

பாண்டியன் மனைவி தீப்பாய்ந்தாள் என்றால் வேறு ஏதாவது புலவர் அதனைப் பாடியிருப்பார்; ஆனால் அப்படிப்பட்ட குறிப்பு வேறு எந்தப் பாடலிலும் இல்லை; அதனால் இவள் தீப்பாய்ந்தாள் எனக் கொள்ளத் தேவையில்லை என்றும் சிலர் கருதுகின்றனர். ஏரணப்படி சரி தான் என்று தோன்றத் தொடங்கினாலும் மேற்கேள்விகள் எழாமல் இல்லை. சங்க காலத்தில் இயற்றப்பட்ட எல்லா பாடல்களும் கிடைக்கவில்லை; பத்துப்பாட்டு எட்டுத்தொகை கீழ்க்கணக்கு என்று தொகுக்கப்பட்ட தொகைப்பாடல்களில் இருக்கும் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதனால் வேறு எந்தப் பாடலிலும் இந்தக் குறிப்பு இல்லை என்பது இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை என்று காட்டுவதாக அமையாது.

இந்தப் பாடல் மட்டுமே கைம்மைக் கொடுமையையும் உடன்கட்டை ஏறுவதையும் கூறுகிறது; அதனால் இது சிறுபான்மையாகத் தான் நடந்திருக்கும்; பெரும்பான்மையாக நடந்திருந்தால் மற்ற பாடல்கள் கூறியிருக்கும் - என்றும் ஒரு கருத்து இருக்கலாம். அதற்கும் மறுப்பு உண்டு. உடன்கட்டை ஏறுவது வேண்டுமானால் சிறுபான்மையாக இருந்திருக்கலாம்; ஆனால் கைம்மை பெரும்பான்மையாகத் தான் இருந்தது என்பது இந்தப் பாடலின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறவில்லை; மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு பாடினாள். கபிலர் பெண்ணைப் போல் பல பாடல்கள் பாடியிருக்கிறார்; அதனால் அவர் பெண் என்று கூறிவிட இயலுமா? - என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. மற்றவர் செய்ததைத் தன் மேல் ஏறிட்டுக் கொண்டு படர்க்கையில் பாடாமல் மரபுப்படி தன்மையில் பெருங்கோப்பெண்டு பாடியிருந்தாலும் இருந்ததைத் தான் பாடியிருக்கிறாள் என்பது கைம்மை நோன்பைப் பற்றி தெளிவாகப் பாடியிருப்பதன் மூலம் தெரிகிறது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாகத் தெரியும் செய்திகளையும் ஏற்க மறுத்து இப்படி வாதங்களை வைப்பது தான் ஏன் என்று புரிவதில்லை. வடமொழி இலக்கியங்களில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சொல்லைத் தவறாகப் பொருள் கொண்டு அதனை முடிந்த முடிபென்று பேச முடியும் போது (எடுத்துக்காட்டுகள்: இராமனுக்குப் பல மனைவிகள் என்று கூறுவது, திராவிட சிசு என்று சங்கரர் தன்னையோ சம்பந்தரையோ 'இழிவாக'ச் சொன்னார் என்று சாதிப்பது, இலிங்க வழிபாட்டை ஆரியர்கள் பழித்தார்கள் என்று கூறுவது) தெள்ளத் தெளிவாகத் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் செய்திகளைத் தங்களின் கருத்தாக்கத்திற்கு ஒவ்வாத செய்திகள் என்பதால் வலிந்து புறந்தள்ள எடுக்கப்படும் முயற்சிகளாகத் தான் இந்த வகை மறுப்புகளைக் காண முடிகிறது.

Friday, November 28, 2008

திருக்குறளில் திருமகளின் தவ்வையும் நினைக்கப்படுவதும்

பல நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்த இரு குறட்பாக்களைப் பற்றி இன்று தான் இங்கே எழுத இயன்றது. செல்வத்தை அருள்பவள் திருமகள், வறுமையைத் தருபவள் அவள் அக்கா மூதேவி என்ற தொன்மம் திருக்குறளில் இருப்பதைப் போல் தோற்றம் தரும் ஒரு குறட்பா இருக்கிறது. இன்னொரு குறட்பா நல்லவன் கடின வாழ்க்கை வாழ்வதும் கெட்டவன் எளிய வாழ்க்கை வாழ்வதும் 'நினைக்கப்படும்' என்று சொல்கிறது. இவ்விரு குறட்பாக்களுக்கும் உரையாசிரியர்கள் சொல்லும் விளக்கம் என்ன என்று படித்துப் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டிருந்தேன். இன்று அவற்றைப் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன். இடையிடையே அவற்றைப் படித்த போது தோன்றும் / தோன்றிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

***

முதல் குறட்பா 167வது குறட்பா.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்


இதற்கு விளக்கம் தரவந்த பரிமேலழகர் 'அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள்.)' என்று சொல்கிறார். அதற்கு மேல் அவர் விளக்கம் தரவில்லை.

மணக்குடவரோ 'அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்' என்று சொல்லிவிட்டு அடுத்து இன்னொரு வரியை இடுகிறார். 'இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று'. நல்குரவு என்றால் வறுமை. இந்தக் குறள் செல்வத்திற்கு காரணமாக அழுக்காறின்மையையும் வறுமைக்குக் காரணமாக அழுக்காறுடைமையையும் கூறியதாக விளக்கம் தருகிறார்.

தேவநேயப் பாவாணர் 'அழுக்காறு உடையானை-பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்-செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும்' என்று பொருள் உரைத்துவிட்டு 'அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை; தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம்' என்று மேலும் விளக்குகிறார்.

கலைஞர் கருணாநிதி 'செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்' என்று சொல்கிறார்.

ஆக எந்த வித சார்பும் உடையவர் என்று எண்ணப்படாத மணக்குடவரும், வடவர்களின் கொள்கைகளை உரையில் இட்டு எழுதிவிட்டார் என்று சொல்லப்படும் பரிமேலழகரும், திராவிட கருத்தாக்கத்தின் முன்னோடியான தேவநேயப் பாவாணரும், தற்கால திராவிட கருத்தாக்க முன்னவரான கலைஞர் கருணாநிதியும் இந்தக் குறளுக்கு ஒரே பொருளைத் தான் தருகிறார்கள். ஆக எல்லோரும் இந்தத் தொன்மம் திருக்குறள் காலத்திலேயே தமிழரிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது என்று ஒத்துக் கொள்கிறார்கள்.

***

அடுத்த குறட்பா 169வது குறட்பா

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

இதற்குப் பரிமேலழகர் தரும் விளக்கம் 'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91௯3) என நினைக்கப்பட்டவாறு அறிக.)'.

அதாவது அழுக்காறு கொண்டவனுக்கு ஆக்கமும் நல்லவனுக்கு கேடும் உளவாகாது. அப்படி எப்போதாவது பார்த்தால் அதனை அறிஞர்கள் ஆராய்வார்கள் என்று விளக்கம் சொல்லி 'உளவாயின்' தொக்கி நின்றது என்று கூறுகிறார். அப்படி ஆராயும் அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் சொல்கிறார். அது 'பழவினை'. ஆரியக் கருத்து புகுந்துவிட்டது போல் தெரிகிறதே?! ஹும் பார்ப்போம் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்று.

மணக்குடவர் வழக்கம் போல் மிக எளிமையாக 'அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்' என்று சொல்லிப் போந்தார்.

தேவநேயர் கட்டாயம் பரிமேலழகரின் பித்தலாட்டத்தைக் காட்டி உண்மைப் பொருளைத் தந்திருப்பார் என்று எதிர்பார்ப்புடன் அவர் சொன்னதைப் படித்தேன். அவர் தான் வழக்கம் போல் மிக விரிவாகச் சொல்லியிருந்தார். அவர் சொல்லியிருந்தது:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும்-பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; நினைக்கப்படும்-எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும்.

இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால் அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்.

"இம்மைச் செய்தன யானறி நல்வினை
யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது"

என்னும் மாடலன் கூற்றும் (சிலப். 15;91௯3.)

"என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே".

என்னும் பட்டினத்தார் பாடலும், இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.

ஆகா இதென்ன கொடுமை. அப்படியே பரிமேலழகர் சொன்னதையே தமிழ் வழியில் உரையெழுதிய பாவாணரும் சொல்லியிருக்கிறாரே. ஆரிய மாயையில் இவரும் மயங்கிவிட்டாரா? பரிமேலழகர் சொன்ன பொருளை அப்படியே ஏற்று எழுதி மேலும் எடுத்துக்காட்டுகளும் தருகிறாரே.

சரி இவரை விடுவோம்; கலைஞர் கைவிடமாட்டார் என்றெண்ணி அவர் சொன்னதைப் படித்தேன்.

அவர் சுருக்கமாக 'பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்' என்று சொல்லி முடித்துவிட்டார்.

வியப்பு தான். :-)

Thursday, November 20, 2008

புன்கவிஞர் பலவகை (இலக்கிய மரபு) - பசவய்யா

நாம் எல்லாம்
டமில் எழுத்தாளர்
நமக்கோ
பிளேஜியரிஸம்
பசுவய்யா

"பிளேஜியரிஸம்' என்பதைத் தமிழில் இலக்கியத் திருட்டு என்று சொல்வர். பிறர் ஒருவரின் கருத்தையோ சிந்தனையையோ அவர் பெயரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வது, பிறருடைய சிந்தனைகளைத் தன்னுடையதேபோலக் கையாள்வது முதலிய நடவடிக்கைகள் "பிளேஜியரிஸம்' ஆகும் என்பது ஆங்கில நூல் வரையறை.2

தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர் மு. அருணாசலம், "பிளேஜியரிசம்' பற்றிக் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.

""ஒருவர் உழைத்துச் செய்த காரியத்தை மற்றொருவர் அப்படியே பயன்படுத்திக் கொண்டால், அதைக் கருத்துலகில் திருட்டு என்று சொல்வோம். இலக்கியத் துறையில் ஒருவர் கூறியதை மற்றொருவர் இடம் குறிப்பிடாமலும் நன்றி தெரிவிக்காமலும் அப்படியே எடுத்து ஒரு பக்கமோ ஒரு பத்தியோ வைத்துக்கொண்டாலும்கூட ஆங்கிலத்தில் அதைப் "பிளேஜியரிசம்'(இலக்கியத் திருட்டு) என்று சொல்வார்கள்.''3

இந்தப் பிளேஜியரிசம் எனப்படும் "இலக்கியத் திருட்டு' தமிழில் இருக்கிறதா? தமிழில் எல்லாம் இருக்கிறது; தமிழில் இல்லாததே இல்லை என்னும் கருத்தில் தீவிரப் பற்றுடையோர் தமிழர். அப்படியெனில் இலக்கியத் திருட்டு சமாச்சாரம் மட்டும் தமிழில் இல்லாமல் போகுமா?

"முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றி' வருவது தமிழர்தம் மரபாகும். மரபிலே தமிழருக்கு உள்ள ஈடுபாடு அளவிடற்கரியது. தமிழ் மரபுகளுக்கு உரிய தனித் தன்மைகளைப் பேணிக் காக்கிறோமோ இல்லையோ சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவற்றை எடுத்து மொழிந்து பெருமை பேசிக்கொள்வது நமக்குக் கைவந்த கலையாகும். இலக்கியத்தை அகம், புறம் என்று பகுத்துக் காணும் மரபு தமிழைத் தவிர உலக மொழிகள் எவற்றிலும் கிடையாது. அகப் பொருள் மரபு, புறப்பொருள் மரபு ஆகியவை சார்ந்த விசயங்கள் தனித்தனி நூல்களாக எழுதப்பட்டுத் தொடர்ந்துவருகின்றன. நவீன விமர்சகர்கள் பலரும் இக்கோட்பாட்டை விரிவாகப் பயன்படுத்த முயல்கின்றனர் என்பனவெல்லாம் நாம் பேசும் பெருமைகள்.

பலராலும் விதந்தோதிக் குறிப்பிடப்படும் அகம், புறம் என்னும் மரபுகள் மட்டுமல்ல, இன்னும் பெருமை மிகு மரபுகள் பலவும் நம்மிடம் உள்ளன. அவற்றுள் சில:

க. மிகவும் பிரபலமான இலக்கியம் ஒன்றின் இடையிடையே பொருத்தமான இடங்களில் அந்த இலக்கிய நடையிலேயே சில பாடல்களை எழுதிச் சேர்த்துவிடும் மரபு. இதனை இடைச் செருகல் என்பர். ஓரிலக்கியத்தைப் பயின்றுவரும் போது உணர்ச்சிவசப்பட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். கவிஞன் இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் விரித்துப் பாடியிருக்கலாம் என்னும் கருத்துத் தோன்றியதால் தன் சரக்கை உள்ளே நுழைத்திருக்கலாம். தன் பயிற்சிக்காகக்கூட இத்தகைய வேலையைச் செய்திருக்கலாம்.

நீண்ட கதையாகப் போகும் காப்பிய இலக்கியத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். தசரதன் இறந்த செய்தி கேட்டதும் இராமன் புலம்புகிறான். அப்புலம்பலைப் பத்துப் பாடல்களில் கம்பர் பாடுவதாகக் கொள்வோம். படிக்கும் புலவர், " அடடா இராமனை இன்னும் கொஞ்சம் புலம்ப விட்டிருக்கலாமே' என்று நினைக்கிறார். உடனே தன் விருப்பத்தைத் தானே செயல்படுத்தி விடுகிறார். இப்படி ஏராளமான இடைச்செருகல் வேலை தமிழில் நடந்திருக்கிறது.

வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் புலவர், பல பாடல்களை எழுதிப் பெரியபுராணத்தில் செருகியிருக்கிறார். அப்பாடல்களை இனம் கண்டு பிரித்து "வெள்ளி பாடல்கள்' என்று தனிப்படுத்திக் காட்டு வதுண்டு. அதேபோல, சீவக சிந்தாமணி காப்பியத்துள் கந்தியார் என்னும் புலவர் எழுதிச் சேர்த்த பல பாடல்கள் இருப்பதாகக் கூறுவர்.

உ. புலவர் ஒருவர் தான் எழுதிய நூல் ஒன்றைத் தன் பெயரில் வெளியிடாமல், ஏற்கெனவே பெரும் புகழ் பெற்று நிலைகொண்டுவிட்ட புலவர் ஒருவரின் பெயரில் வெளியிடும் மரபு. தான் எழுதியதிலேயே தன் பெயரைப் போட்டுக்கொள்ளாத இச்செயல் "தியாகம்' என்று தோன்றும். உண்மை அதுவல்ல. தன் பெயரைப் போட்டுக்கொண்டால் "போணி'யாகாது என்பதால் இந்த வேலை. தான் எழுதிய நூலின் தரத்தில் நம்பிக்கையில்லாத புலவர் அந்த நூலை ஏதாவதொரு விதத்தில் அடையாளப்படுத்த விரும்பியதின் விளைவு இது.

"ஞான வெட்டியான்' என்னும் நூல் திருவள்ளுவர் பெயரில் இருக்கிறது. காலத்தால் மிகவும் பிற்பட்ட இந்த நூலை எழுதியவர் யாரோ தெரியவில்லை. புகழேந்திப் புலவர் பெயரில் உள்ள நூல்கள் பல. குறிப்பாக நாட்டுப்புறக் கதைப் பாடல் வடிவில் எழுதப்பட்ட அல்லியரசாணி மாலை, புலந்திரன் களவு போன்ற புராணக் கதைகள் பல அவருடைய பெயரில் உலவுகின்றன.

ங. பழங்காலத்தில் வழங்கியதாகத் தகவல் மட்டும் தெரியும் நூலின் பெயரில் புதிய நூல் எழுதிப் பரப்பிவிடும் போலிநூல் மரபு. பொருளீட்டுவதற்காக அல்லது பழைய நூலைக் கண்டு பதிப்பித்தவர் என்னும் புகழைப் பெறுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம். தனிமனிதர் மட்டுமல்ல; சிலபேர் சேர்ந்து குழுவாகக்கூட இத்தகைய வேலைகளைச் செய்திருக்கின்றனர்.

இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் செங்கோன் தரைச்செலவு, மூவடி முப்பது ஆகிய பழைய நூல்களைக் கண்டுபிடித்துவிட்டதாகப் புலவர் ஒருவர் அச்சிட்டுள்ளார். " ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் தொடர் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. "ஐந்திரம்' என்பது வடமொழி இலக்கண நூல் என்பர் சிலர். அது தமிழ் இலக்கண நூல்தான் என்பவரும் உண்டு. ஐந்திரம் என்பது நூலே அல்ல; அது ஒரு சிந்தனைக் குழு என்ற கருத்துக் கொண்டோரும் உள்ளனர். உலகத்தமிழ் மாநாடு ஒன்றின்போது "ஐந்திரம்' என்னும் பெயரில் தமிழ் இலக்கண நூல் ஒன்று வெளியிடப்பட்டது. பின்பு அது போலிநூல் என்று புறக்கணிக்கப்பட்டது. இத்தகைய "வளமான' மரபுகளைக் கொண்ட நம்மிடம் இலக்கியத் திருட்டு மரபு மட்டும் எப்படி இல்லாமல் போகும்? அதற்கு நேர் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எதிர்மறையான சான்று ஒன்றுண்டு. பிரபலமான திருவிளையாடல் கதையில் தருமி என்னும் புலவரின் செயலை நாம் அறிவோம். பிறிதொருவரின் பாடலைத் தன் பாடல் என்று சொல்லிப் பரிசில் பெறச் செல்கிறார் அவர். பாடியவரே கொடுத்தார் என்பது இங்கு விசயமல்ல. பிறர் பாடலைத் தன் பாடல் என்று சொல்வது இலக்கியத் திருட்டு அல்லாமல் வேறென்ன?

இலக்கியத் திருட்டு பற்றிய கருத்துகள் நம் மரபில் உள்ளன. "வச்சணந்தி மாலை' என்னும் இலக்கண நூல் புன்கவிஞர் நான்கு வகை என்று கூறுகிறது.

ஆரொருவன் பாக் களை ஆங்கொருவனுக்களிப்போன்
சோரகவி, சார்த் தொலியிற் சொல்லு மவன் - சீரிலாப்
பிள்ளைக் கவி சிறந்த பின்மொழிக் காம், புன்மொழிக் காம்
வெள்ளைக் கவிய தனின் வேறு.4
இதில் கூறப்படும் கவிஞர் வகையும் விளக்கமும் வருமாறு:

அ. சோரகவி: ஒருவன் பாடிய பாக்களை வேறொருவனுக்குக் கொடுப்போன் கள்ளக்கவி ஆவான். யாரோ ஒருவன் பாடிய பாடல்களைத் தன் பாடல்கள் எனக் கூறி (புரவலன்) ஒருவனிடம் வழங்குவோன் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஆ. சார்த்துகவி: ஏற்கெனவே ஒருவன் பாடியுள்ள பாடலின் சந்தத்தில் வேறொரு பாடல் புனைவோன் சார்த்துகவியாவான். இது "இடைச் செருகல்' புலவர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இ. பிள்ளைக்கவி: சொந்தச் சிந்தனை ஏதுமின்றி முன்னோரை அப்படியே பின்பற்றுபவன் பிள்ளைக்கவி ஆவான்.

ஈ. வெள்ளைக்கவி: பொருத்தமற்ற சொற்களைக் கொண்டு கவி புனைவோன் வெள்ளைக்கவி ஆவான்.

சார்த்துகவி, பிள்ளைக்கவி, வெள்ளைக்கவி ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இங்கு வேண்டாம். சோரகவி எனப்படும் கள்ளக்கவி மரபை மட்டும் எடுத்துக்கொள்வோம். கள்ளக்கவி, சோரகவி ஆகிய சொற்களுக்குப் பிறர் பாடிய பாடல்களைத் தனதென்று கூறுபவன், ஒருவனுக்குப் பாடியுள்ளதை வேறொருவனுக்குக் கொடுப்போன், திருட்டுப் பாடல் என அகராதிகள் பொருள் தருகின்றன.5

பிறிதொருவன் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவனுக்குத் தருமி உதாரணம் என்றால், தான் பாடிய பாடலைப் பிறிதொருவன் பெயரில் வழங்க அனுமதித்ததற்கு இறையனார் (சிவபெருமான்) உதாரணமாகிறார். தமிழ் மரபிலக்கண வரையறைப்படி தருமி, சிவன் ஆகிய இருவருமே கள்ளக்கவிகள் தான். தமிழ் நெடுமரபில் வேறு சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சம்பவங்கள் சிலவற்றை இம்மரபில் பொருத்திப் பார்க்கலாம்.

உ. வே. சாமிநாதையர் எழுதிய "என் சரித்திரம்', "ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' ஆகிய நூல்களைப் படித்தவர்களுக்கு அவற்றில் வரும் சில சம்பவங்கள் நினைவிருக்கலாம். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாடல்கள் எழுதிப் பிறருக்குக் கொடுத்துவிடும் தாராள மனம் கொண்டவர். திருவாவடுதுறை மடத்துத் தலைவர் சுப்ரமணிய தேசிகரிடம் பரிசில் பெறவேண்டி வருவோர் பலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம்தான் முதலில் வருவர். அவர் சுப்ரமணிய தேசிகரைப் புகழ்ந்து பாடல் இயற்றித் தருவார். வருவோர் அப்பாடலைத் தம் பாடலாகக்கொண்டுசென்று தேசிகர்முன் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வர்.

அவருடைய மாணவனாக இருந்தபோது சாமிநாதையருக்கே நெருக்கடியான நேரங்களில் இவ்விதமாக அவர் உதவிய சம்பவங்களும் உண்டு. இவை மட்டுமல்ல, தாம் இயற்றிய "குசேலோபாக்கியானம்' என்னும் நயம் மிகுந்த நூல் ஒன்றையே தம் மாணவரும் செல்வருமான "தேவராசப் பிள்ளை' பெயரில் போட்டுக்கொள்ளக் கொடுத்துள்ளார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

அதைப் பற்றி அவர் கூறும்போது, "தமிழ் சமஸ் கிருதம், தெலுங்கு முதலிய பாஷைகளில் கவிகள் தாம் செய்த நூல்களை இவ்வாறு தங்களை ஆதரித்த பிரபுக்களின் பெயராலேயே வெளியிடுவது பழைய வழக்கந்தான்' என்கிறார்.6 இன்றும் "குசேலோபாக்கியானம்' தேவராசப் பிள்ளை பெயரில்தான் வழங்கி வருகிறது.

மாதை திருவேங்கடநாதர் என்னும் பார்ப்பன அமைச்சர் ஒருவர் பெயரில் "பிரபோத சந்திரோதயம்' என்றொரு நூல் உள்ளது. இந்நூல், திருவாரூர் வைத்தியநாத தேசிகர் ("இலக் கண விளக்கம்' இயற்றிய ஆசிரியர்) இயற்றிக் கொடுத்தது என்றொரு செய்தியும் கூறப்படுவதுண்டு.

எழுதியவர் சம்மதத்தோடு பிறருக்குக் கொடுக்கப்பட்டாலும்கூட இவையும் கள்ளக்கவி என்றுதான் தமிழ் மரபு கூறுகிறது. இவையே திருட்டு என்றால், எழுதியவருக்கே தெரியாமல் அவருடைய உழைப்பை, சிந்தனையைத் தம்முடையதாக்கிக் கொள்ளுவதை என்னவென்று கூறுவது? "திருட்டு' என்பதற்கும் மேலான சொல் ஒன்றைத்தான் தேடவேண்டும். இவ்வழக்கத்திற்குப் பழைய சான்றுகள் எதுவுமில்லை. எனினும் இம்மரபின் தொடர்ச்சி என்று கருதத்தக்க வகையில் இருபதாம் நூற்றாண்டுச் சான்றுகள் ஏராளமாய் உள்ளன.

குறிப்புகள்:
1. பசுவய்யா, 107 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 1996, ப. 28.

2. ஏஹய்க்க்ஷர்ர்ந் ஊர்ழ் ரழ்ண்ற்ங்ழ்ள் ர்ச் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் டஹல்ங்ழ்ள்ம் ஙகஅ, 1998, ட. 21

3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11ஆம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1971, ப. 401.

4. மேற்கோள்: மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1970, ப. 217.

5. காண்க:
அ. எஸ். வையாபுரிப் பிள்ளை(ப.ஆ), தமிழ் லெக்சிகன், தொகுதி ஐஐ, சென்னைப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு, 1982, ப.806 மற்றும் தொகுதி ஐஐஐ, ப. 1674.

ஆ. மு.சண்முகப் பிள்ளை (தொ. ஆ), தமிழ் - தமிழ், அகரமுதலி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1985, ப. 292 மற்றும் ப. 521.

6. உ. வே. சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு, 1986, ப. 129.
***

மின் தமிழ் குழுமத்தில் இந்தக் கட்டுரையை அனுப்பிய அன்பருக்கு நன்றி.

Sunday, November 16, 2008

சங்க இலக்கியத்தில் இதிகாசச் செய்திகள் (இராமாயணமும் மகாபாரதமும்)

வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் இந்தியாவின் சிறப்பு மிக்க இதிகாசங்கள். இவ்விரண்டு இதிகாசங்களின் செல்வாக்கைப் பாரதத்தின் எல்லா மொழிகளிலும் காணலாம். புகழ்பூத்த மகாகவிகளால் காவியங்களாகப் பாடப் படுவதற்கு முன்னரே, காலத்தால் பழைமைமிக்க சங்கப் பாடல்களில், இவ்விதிகாசச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உவமைகளாகவே இதிகாச நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர் புலவர்கள்.


அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
ஆகிய சங்க நூல்களில் இராமாயணச் செய்திகள் காணப்படுகின்றன.

அகநானூற்றில் எழுபதாவது பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது; நெய்தல் திணையைச் சார்ந்தது. இப்பாடலில் இராமாயணச் செய்தி இடம் பெற்றுள்ளது. இராமன் இலங்கைக்குச் செல்லத் தமிழகத்தின் தென்திசைக்கு வந்து தனுஷ்கோடியில் ஆலமரம் ஒன்றின் கீழ் இருந்து, போர் தொடர்பாக வானர வீரர்களோடு ஆராயும்போது, அவ் ஆலமரத்தின்கண் இருந்த பறவைகள் சப்தமிட, அச்சப்தத்தைத் தன் கைகவித்து அடக்கினான் என்று புலவர் பாடியுள்ளார்.


"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பெளவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,"

என்பன புலவரின் பாடல் வரிகள்.

தனுஷ்கோடி பாண்டிய மன்னர்களின் பழைய துறையாகும். புறநானூற்றில் 378வது பாடலைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார் ஆவார். அவர், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனைப் பாடிப் பெற்ற பெருஞ்செல்வத்தைத் தம் குடும்பத்திடம் தந்தார். அணிகலன்களைக் குடும்பத்தார் அணிந்து மகிழ்ந்ததைப் பாடும் போது இராமாயணக் கதையைக் குறிப்பிட்டுள்ளார் புலவர்.

விரலில் அணிவதைச் செவியிலும், செவியில் அணிவதை விரலிலும்;
அரையில் அணிவதைக் கழுத்திலும், கழுத்தில் அணிவதை இடையிலுமாக மாற்றி மாற்றி அணிந்தனர்
என்று நகைச்சுவையோடு பாட வந்தவர்.

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு."
என்று இராமாயண நிகழ்ச்சியை உவமையாக்கிப் பாடியுள்ளார்.


இராவணன் கவர்ந்து சென்றபோது சீதை, தன் அணிகலன்களை ஒரு முடிப்பாகக் கட்டிக் கீழே போட்டுச் சென்றாள் என்றும், அம்முடிப்பு சுக்ரீவனிடம் இருந்தது என்றும் இராமாயணம் கூறும். இதனை நினைவிற் கொண்ட புறநானூற்றுப் புலவர், சீதை விட்டுச் சென்ற அணிகலன்களைக் குரங்குகள் முறைமாறி அணிந்து பார்த்ததைப் போலத் தம் சுற்றத்தார் அணிந்து பார்த்தனர் என்று நகைச்சுவையோடு பாடியுள்ளார்.

கலித்தொகையில் பாரதக் கதை நிகழ்ச்சிகள் உவமைகளாகக் காணப்படுகின்றன. கலித்தொகை ஐவர் பாடிய பாடல்களில் தொகுப்பாகும்.

பாலைக்கலியைப் பாடியவர் பெருங்கடுங்கோ என்பவர். இவர் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" என்று அழைக்கப்படுபவர். பாலை நிலத்தின் கொடுமையை வருணிக்கும்போது பாரதக் கதை நிகழ்ச்சியை உவமையாகக் கூறியுள்ளார்.

மதங்கொண்ட களிறுகள் மலையில் எரியும் தீயில் அகப்பட்டு கொள்ள, மூங்கில்களைக் கொண்ட அத்தீயை, தன் கால்களால் மிதித்து, வழி ஏற்படுத்திக் கொண்டு, தீக்குள் மாட்டிக் கொண்ட யானைகளைக் காத்து, அவற்றோடு வேழம் ஒன்று வெளியேறியது. இது எப்படி உள்ளதாம்?

"வயக்குறு மண்டலம் வடமொழிப் பெயர்பெற்
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக்
களிதிகழ் காடஅத்த கடுங்களிறு, அகத்தவா,

முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல,
எழு உறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம்
அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம்." (பாலைக்கலி - 24)

என்று பாடுகிறார் கவிஞர்.

துரியோதனன் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட அரக்கு மாளிகையில் தீப்பிடிக்க, அவ்வரக்கு மாளிகையை அழித்து, பீமன், தன் உடன்பிறந்தாரோடு பிழைத்து வெளியேறியது போல உள்ளதாம்.
பாரதக் கதையின் முக்கியமான நிகழ்ச்சி திரெளபதியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சினைப் பீமன் பிளந்தததாகும்.

இதனை ஓர் உவமையாக்கியுள்ளார் முல்லைக்கலியைப் பாடிய சோழன் நல்லுருத்திரனார். காளைகளை அடக்கும் வீரர்களின் வீரத்தைப் பேசுவது முல்லைக்கலி.

தன்னை அடக்க வந்த ஆயர்குலத்து இளைஞனைக் குத்திக் கொம்பில் கோத்துக் கொண்டு ஆடும் காளை. பாஞ்சாலியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சத்தைப் பிளந்து, கொன்று, வஞ்சத்தை முடித்துக் கொண்ட பீமன் போலக் காட்சியளிக்கின்றதாம். இதனை


"நோக்கு அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றம்காண்
அம்சீர் அசைஇயல் கூந்தல் கைநீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்." (முல்லைக்கலி - 1)

என்று பாடியுள்ளார் புலவர்.

பீமன் துரியோதனன் துடையை முறித்ததைக் குறிஞ்சிக்கலியில் (பா.16) கபிலர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரத நாட்டின் புகழ்மிக்க இதிகாச நிகழ்ச்சிகள் 1800 ஆண்டுகட்கு முந்தைய, நம் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுவதை, அவ்விதிகாசங்களின் செல்வாக்காகவும், அவற்றின் மீது தமிழர்கட்கு இருந்த ஈடுபாடாகவும் நோக்க வேண்டும்.

முனைவர். ந.முருகேசன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. கண்ணன் நடராஜன் ஐயா.

Wednesday, September 03, 2008

சங்ககால மக்கள் வாழ்க்கை - மயிலை சீனி.வேங்கடசாமி

சங்க காலத்து வாணிகத்தைப் பற்றிப் பேசும் போது அக்காலத்து மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதையும் அறிய வேண்டும்.
சங்க காலம் என்பது கடைச் சங்க காலம். அது கி.பி. 250-க்கு முற்பட்ட காலம். இக்காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அக் காலத்துத் தமிழர் வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடு உண்டு.

இப்போதுள்ள நாகரிகம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் எல்லா நாடுகளிலும் மனித வாழ்க்கையும் நாகரிகமும், மட்டமாகவும் தாழ்ந்த நிலையிலும் இருந்தன. வாழ்ந்த இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தக்கபடி அவர்களுடைய நாகரிகமும், வாழ்க்கையும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்தன.

அவர்கள் வாழ்ந்த இடங்களும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையாக இருந்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை வெவ்வேறு விதமாகத் துன்பமாக அல்லது எளிதாக இருந்தது.

அந்தக் காலத்தில் மனிதர் எந்தெந்த இடங்களில் எவ்வெப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன. நிலத்தினுடைய இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்கள் வாழ்க்கை ஐந்து விதமாக அமைந்திருந்தது.

குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம், பாலை நிலம் என்னும் நிலப் பிரிவுப்படி அவர்களுடைய வாழ்க்கையும் ஐந்து வகையாக இருந்தது.

மலையும் குன்றுகளும் உள்ள இடங்கள் குறிஞ்சி நிலம் என்று பெயர் பெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழ் நாட்டில் அமைந்துள்ளன. மலைகளின் மேலும் மலைச்சாரல்களி லும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மலைகளுக்குக் கீழே இருந்த காடுகளும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் என்று பெயர் பெற்றன. இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மலைகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைவிட வேறுவிதமாக இருந்தது. ஆறுகள் பாய்கிறதும் அல்லது ஏரி குளங்கள் உள்ளதுமான சமவெளிகள் மருதம் என்று பெயர் பெற்றன.

இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, மற்றவர்களுடைய வாழ்க்கையைவிட மேலானதாக இருந்தது. கடற்கரையோரமாக இருந்த நிலங்கள் நெய்தல் நிலம் என்று பெயர் பெற்றன.

சங்க காலத்தில் மிக நீண்ட கடற்கரை தமிழகத்துக்கு இருந்தது. அக்காலத்தில், மேற்குக் கடற்கரையையடுத்திருந்த சேரநாடும் (இப்போதைய மலையாள நாடு) துளு நாடும் (இப்போதைய தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தமிழ் நாடாக இருந்த படியால், பழந்தமிழகத்துக்கு மிக நீண்ட கடற்கரை இருந்தது.

கடற்கரையான நெய்தல் நிலத்தில் வசித்தவர் வாழ்க்கை துன்பகரமான வாழ்க்கை. அவர்கள் நாள் தோறும் கடலில் வெகு தூரம் சென்று மீன்பிடித்து வந்து வாழ்க்கையை நடத்தினார்கள்.

இந்த நால்வகையான இயற்கை நிலம் அல்லாத வரண்ட பிரதேசம் பாலை நிலம் என்று பெயர் பெற்றது. இங்கு இயற்கையாக மக்கள் வாழவில்லை. யாரேனும் இங்கு வசித்தார்கள் என்றால் அவர்களுடைய வாழ்க்கை மிருக வாழ்க்கை போல இருந்தது.

இவ்வாறு இயற்கையாக அமைந்த வெவ்வேறு சூழ்நிலைகளில் வசித்த அக்காலத்துத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வெவ்வேறு வகையாக இருந்தது. அவர்களுடைய தொழிலும் உணவும் உடையும் பண்பாடும் வெவ்வேறு விதமாக இருந்தன. அவற்றைச் சுருக்கமாக கூறுவோம்.

குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை

மலைகளும் குன்றுகளும் அவற்றைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி நிலம் என்று கூறினோம். இங்கு இருந்த ஊர்களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர்.

இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இறவுளர் என்றும் அழைக்கப்பட்டார்கள். இறவுளர் என்பவர் இக்காலத்தில் இருளர் என்று கூறப்படுகின்றனர்.

இங்குச் சுனை நீர் உண்டு. மலையருவிகளும் உண்டு. பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டு விடும். எக்காலமும் ஓடிக் கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே. மலைப்பாறைகளுக்கிடையே செடி கொடி மரங்கள் உண்டு.

குறிஞ்சிச் செடிகளும் காந்தள் செடிகளும் குறிப்பிடத்தக்கவை. மூங்கிற் புதர்கள் உண்டு. வேங்கை, திமிசு, தேக்கு, சந்தனம், அகில், கடம்பு, கருங்காலி முதலான மரங்கள் வளர்ந்தன. பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை. புலி, யானை, சிறுத்தைப் புலி, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.

மலைகளிலும் மலைச் சாரல்களிலும் ஐவன நெல்லையும், தினையையும் அரிசியையும் பயிர் செய்தார்கள்; மரம் செடி கொடி களை வெட்டி அப்புறப் படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலத்தைப் பண்படுத்தினார்கள்.

பண்படுத்திய நிலத்தை ஏரினால் உழாமல் மண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பயிர் செய்தார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள். பெரும்பாலும் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.

மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைத்தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று. பலா மரங்களிலே பலாப்பழங்கள் கிடைத்தன. யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடினார்கள்.

தேனை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவகை மதுவை உண்டாக்கினார்கள். தினையரிசியிலிருந்தும் மதுபானம் உண்டாக்கினார்கள். மிகத் தாழ்வான சிறிய குடில் களைக் கட்டி அதன் மேல் தினைத்தாளையும் ஐவன நெல்லின் தாளையும் கூரையாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது. இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று, பற்றாக்குறையாகவே இருந்தது. மலைத்தேன், யானைத் தந்தம், புலித்தோல், அகில், கட்டை, சந்தனக் கட்டை ஆகியவற்றை விற்றார்கள். இவர்களுடைய வாணிகம் பண்டமாற்றாக இருந்தது. இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.


முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக் கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன.
இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், எயினர் (எயினர் - வேடர்), இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள். அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஓட்டி மேய்த்தார்கள்.

வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள். அவரை, துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள். குளங்களிலிருந்து நீர் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள், மழையை, எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால் தயிர் நெய்களையும் உணவாக உண்டார்கள்.

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத் தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள்.

இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன. பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்ட மாற்றாகவே விற்றார்கள். முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை, குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது. இவர் கள் அவர்களை விட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

மருத நிலத்து மக்கள் வாழ்க்கை

ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நிலவளமும் நீர் வளமும் உள்ள மருத நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும், எருமைகளையும் பூட்டிய ஏர்களி னால் நிலத்தை உழுது, பண்படுத்தி எருவிட்டு விதை விதைத்து நீர்பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள். கரும்பையும் பயிரிட்டார்கள்.

காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். நெல்லைப் பயிரிட்டு உணவுக்கு கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தபடியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்ற நிலத்து மக்கள் வாழ்க்கையைவிட பலமடங்கு உயர்ந்திருந்தது. வாழ்க்கையில் அதிகம் கவலைப்படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது. ஆகவே இவர்கள் நாகரிகம் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது.

உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே.

ஆகவே மருத நிலத்திலே தான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம் பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும் மாளிகை களையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை

கடலைச் சார்ந்த நிலம் நெய்தல் நிலம் என்று கூறினோம். கடற்கரைக் குப்பங்களிலும் பாக்கங்களிலும் வசித்த நெய்தல் நிலத்து மக்கள் பரதவர் என்றும் பட்டினவர் என்றும் பெயர் பெற்றனர். மணல் நிலம் ஆகையினால் இங்கே நெல், கேழ்வரகு முதலான தானியங்கள் விளையவில்லை.
ஆகவே நெய்தல் நிலத்து மக்கள் கட்டுமரங்களிலும் படகுகளிலும் கடலில் வெகு தூரம் போய் வலைவீசி மீன் பிடித்துவந்து விற்று வாழ்ந்தார்கள். கடலில் சுறா, இறால், திருக்கை முதலான மீன் வகைகள் கிடைத்தன. அவற்றைப் பிடித்துவந்து அயல் ஊர்களில் விற்று (பண்டமாற்று செய்து) தானியங்களைப் பெற்று வாழ்ந்தார்கள். விற்று மிகுந்த மீன்களை உப்பிட்டுப் பதப்படுத்தி உலர்த்திக் கருவாடு செய்து விற்றார்கள்.

சில இடங்களில் கடற்கரை யோரங்களில் உப்பளங்கள் இருந்தன. அந்த அளங்களில் கடல்நீரைப் பாய்ச்சி உப்பு உண்டாக்கினார்கள். உப்பை நெல்லுக்கு மாற்றினார்கள்.

நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை கடினமான வாழ்க்கையே. குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை ஒரு வகையில் கடினமானது என்றால் நெய்தல் நிலத்து மக்கள் வாழ்க்கை வேறு வகையில் கடினமானது.

கடற்கரையோரங்களில் சில இடங்களிலே துறை முகங்கள் இருந்தன. துறை முகங்களிலே வாணிகக் கப்பல்கள் வந்து இறக்குமதி, ஏற்றுமதி செய்தபடியால் துறைமுகப் பட்டினங்களில் வாணிகமும் செல்வமும் பெருகின.

ஆகவே துறைமுகப் பட்டினங்கள் நாகரிகமும் செல்வமும் பெற்று விளங்கின. பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை என்று கூறினோம். வாழ்வதற்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லாத பாலை நிலத்தில் மக்கள் வாழவில்லை. வாழ்ந்தவர்களும் மனிதராக வாழவில்லை. மாக்களைப் போல வாழ்ந்தார்கள்.

இவ்வாறு வெவ்வேறு இயற்கையான சூழ்நிலைகள் அமைந்த இடங்களில் வசித்த அக்காலத்துத் தமிழர் வெவ்வேறு வகையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

விரைவான போக்கு வரத்துச் சாதனங்களும் தந்தி தபால் வசதிகளும், மற்றும் இக்காலத்து வசதிகள் பலவும் அக்காலத்தில் இல்லாத படியால் கல்வி, பொரு ளாதாரம், நாகரிகம் முதலியவை வளர்ச்சியடைய இயலாமற் போயின. இக் காலத்தில் மிக எளிய மக்கள் பெறுகிற வசதியைக்கூடச் செல்வம் பெற்றவர் பெற முடியாத சூழ்நிலை அக்காலத்தில் இருந்தது. இத்தகைய சூழ்நிலை தமிழருக்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லா நாட்டிலும் இப்படிப் பட்ட நிலைதான் இருந்தது.

அந்தக் காலத்தில் தமிழருடைய நாகரிகம் மருத நிலத்திலும் துறைமுகப்பட்டினங்களிலும் வளர்ந்தன என்று கூறினோம். ஆம், பட்டணங்களிலும் பட்டி னங்களிலும் தான் அக்காலத்து தமிழரின் நாகரிகம், பண்பாடு, கலைகள் எல்லாம் வளர்ந்தன.

தமிழரின் வாணிகம் அக் காலத்தில் எவ்வாறு நடந்தது என்பதைப் பார்ப்போம். இக்காலத்தில் சிறு விலையுள்ள பொருளுக்கும் அதிக விலையுள்ள பொருளுக்கும் காசு பயன்படுகிறது.

ஆனால் காசு (நாணயம்) ஆதிகாலத்தில் ஏற்படவில்லை. ஆதிகாலத்தில் பண்டமாற்று - ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக மற்றொரு பொருளைப் பெறுவது - நடந்தது. பிறகு பையப்பைய நாணயம் (காசு) வழங்கத் தலைப்பட்டது. நமது ஆராய்ச்சிக்குரிய சங்க காலத்துத் தமிழகத்திலே பண்ட மாற்றும் நாணயச் செலாவணியும் நடைபெற்றன.

கட்டுரை: கீற்று வலைத்தளம்

Wednesday, August 27, 2008

நிற்க அதற்குத் தக!

அதிகாலை நேரம். திருவள்ளுவர் தன் குடிலில் அமர்ந்திருக்கிறார். புதிதாய் ஒரு மாணவன் நேற்று தான் சேர்ந்தான்.

புதிய மாணவன்: ஐயனே. நான் என்ன செய்ய வேண்டும்?

திருவள்ளுவர்: கற்க

மாணவன் (மனதில்): 'கற்க' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டாரே. நம்மையும் அதற்காகத்தான் நம் பெற்றோர் அனுப்பியுள்ளனர். ஆனால் ஏன் கற்கவேண்டும் என்று நம் பெற்றோர் சொல்லவில்லை. ஆசானைக் கேட்போம்.

மாணவன்: ஐயா. ஏன் கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் ஒரு சொல்லில் பதில். ஆனால் தெளிவான பதில். நம் புத்தி, மனம், சொல், மெய் இவற்றில் உள்ள கசடுகள், குற்றங்கள், அழுக்குகள் நீங்க கற்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி. அடுத்து ஒரு கேள்வி வருகிறதே.

மாணவன்: ஐயனே, நம் கசடு அற கற்கவேண்டும் என்று அருளினீர். எப்படி கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் கசடற என்கிறாரே. நம் குற்றங்கள் நீங்க, படிப்பதைக் குற்றமின்றி படிக்கவேண்டும் என்கிறார் போலும். மிக்க சரி. படிப்பதை தவறான பொருள் கொண்டு எத்தனைப் பேர் படிப்பதாய் கேட்டுள்ளோம். அதைத்தான் ஐயன் குறிப்பிட்டு, குற்றமின்றி கற்க என்கிறார்.

மாணவன்: ஐயா, எதைக் கற்கவேண்டும்.

திருவள்ளுவர்: கற்பவை கற்க

மாணவன் (மனதில்) : கற்பவை கற்க. மூத்தோர் எதனைக் கற்கிறார்களோ அதனைக் கற்க. மூத்தோர் கற்பவை கற்க. மூத்தோர் எதனை கற்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அதனைக் கற்க. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அது 'கற்பவை'யில் அடங்காது. எனவே மூத்தோர் வழி நடந்து அதனையும் அது போன்றவற்றையும் கற்க கூடாது.

மாணவன்: ஐயனே. கற்பவைகளைக் குற்றமின்றி நம் குறைகள் நீங்கக் கற்கவேண்டும் என்று அருளினீர். அப்படி கற்றவுடன் நம் குறைகள் எல்லாம் நீங்கிவிடுமா? இல்லை வேறு எதுவும் செய்ய வேண்டுமா?

திருவள்ளுவர்: கற்றபின் நிற்க அதற்குத் தக.

-------------------------------------------------------------

என் மனதில்: இந்த கடைசியில் சொன்னது தான் நமக்குப் பிரச்சனையே. எத்தனையோ படிக்கிறோம். படிப்பது எளிதாய் இருக்கிறது. அதனை மற்றவர்க்கும் சொல்கிறோம். சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய?