Showing posts with label சொல் ஒரு சொல். Show all posts
Showing posts with label சொல் ஒரு சொல். Show all posts

Thursday, May 05, 2011

சிம்கார்ட் - பேசியட்டை

எழுத்தாளர், ஆசிரியர் திரு. பெருமாள் முருகன் தரும் சொல்லாக்கம் இது.

Friday, November 21, 2008

'ஐ'யும் 'அய்'யும்..... - திரு. நாக. இளங்கோவன்

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)

"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்
அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது
என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.
ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்.

"ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.
சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்.

"அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்
வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது
தவறில்லை என்பதே அறிஞர்களின்
கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்
"அய்" என்றே எழுதவேண்டும்
என்று வலியுறுத்துவதில்லை.

ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம்
இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப்
படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று
போய்விட்ட அந்த எதிர்வாதுகளை நான் சட்டை
செய்யவில்லை.

ஆயினும் இந்த "அய்" விதயத்தில் என்னிடம்
காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும்
"ஐ" எனவே புழங்குகிறேன். ஐ என்று
எழுதவேண்டும் என்று சில பெரியவர்களும்
எனக்கு சொன்னபோது இதனை நுணுகிப் பார்க்கத்
தோன்றியது. "அய்" என்று நிறைய
புழங்கியவன் என்ற முறையில் என் கருத்துக்களை
நான் விளக்க வேண்டும்.

1) "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல.
ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான
சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம்
என்று சொற்களை இழக்கக் கூடாது.

ஐ என்பதற்கு உள்ள பொருள்களில் மிக முக்கியமானவை
நுண்மை, மெல்ல, வியப்பு மற்றும் ஐந்தின் குறுக்கம்.

ஐந்தின் குறுக்கமாக "ஐ" பயன்படுவதைக் காண்க:

"ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை"
................சிலப்பதிகாரம்:27:174-175

வியப்பு:

"பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
'ஐ!' என்றாள், ஆயர் மகள்,"
..................சிலப்பதிகாரம்:ஆய்ச்சியர் குரவை

மெல்ல/பைய:

பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு "ஐ"யெனக் கழிய......
...................அகநானூறு:305


இந்த மூன்று பொருள்களில் இவ்வெழுத்து இலக்கியங்களில்
விரவிக் கிடக்கிறது. இதை மாற்றினால் அதன் தன்மை
எப்படி யிருக்கும் என்று பார்த்தால் ஐயம் வருகிறது.

மேற்சொன்னக் காட்டுகளில், "ஐ" வரும் இடங்களில் "அய்" என்று
போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால்
ஒவ்வொரு "அய்" யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக்
காணமுடிகிறது.

இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில்
சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரை
பெறும் (ஐகாரக் குறுக்கம்).

ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில்
அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை "அய்" என்று எழுதிக்
கெடுத்து விடுகிறோம் என்று என்னால் உணரமுடிந்தது.

குறிப்பாக மேற்சொன்ன அகப்பாடலை முழுதுமாகப்
படித்துப் பார்த்தால்தால் அந்த "ஐ" யின் வலிமையை
உணரமுடியும்.

அந்த அகப்பாட்டு எடுத்து வீசுகின்ற துயருக்கும் சூழலுக்கும்
இந்த ஐ என்ற ஒரு சொல் பெரும்பங்கு வகிப்பதை அதை
ஆழ்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

ஆதலின் "ஐ" யின் இழப்பு, ஒரு எழுத்து, ஒரு சொல்,
அதன் அகமான ஒலிப்பு என்ற மூன்றையும் இழக்க வைக்கிறது.

ஆகவே, "அய்" என்று எழுதக் கூடாது.
உரையிலும் சரி கவிதையிலும் சரி.

2) தமிழில் பிறமொழிகளை விட ஓரெழுத்து, ஈரெழுத்து மற்றும்
மூவெழுத்துச் சொற்கள் அதிகம் என்று அறிஞர் கூறுவர்.
ஆ, ஈ, ஓ, மா, மீ, கூ, கோ,சீ, தீ, தா, தூ, நீ,
ஐ, நை, மை, கை, வை, தை
போன்று பல ஓரெழுத்துச் சொற்கள் தனித்தோ, சொல்
விகாரமடைந்தோ பொருள் கொடுப்பவை இருக்கின்றன.
அதோடு பிற எழுத்துக்களோடு இவை புணர்ந்து
கொடுக்கும் சொற்கள் ஏராளம். அதில் "ஐ" மிக
முக்கியமானது. இதைச் சார்ந்து இருக்கும்
சொற்கள் மிக அதிகம். ஆகவே தமிழில்
இருக்கும் ஓரெழுத்துச் சொற்களை

இழக்கக் கூடாது. இது ஒளகாரத்திற்கும் பொருந்தும்.

3) இது வெறும் வரி வடிவம்தானே இதனை
மாற்றினால் என்ன என்று கருத இடம் இருக்கிறது
(சொல், ஒலிப்பு என்ற நிலையைத் தாண்டி)

ஆனால், இதை மாற்றுவதால் என்ன பயன்? என்று பார்த்தால்
ஒன்றுமேயில்லை. எனது சிற்றறிவினால் நிச்சயமாக எந்தப்
பயனையும் காணமுடியவில்லை.

"ஐ" என்று விரல்களால் எழுதும்போது வளவு நெளிவுகள் நிறைய
இருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். இதனை நீக்கி "அய்"
என்று எழுதினால் இதை விட அதிக சுழிப்புகளைத்தான்
போடவேண்டி உள்ளது.

4) ஐ என்று எழுதாமல் அய் என்று எழுதினால்
இரண்டு எழுத்துக்களின் இடத்தை எடுத்துக் கொள்கிறது.
இலக்கணக் கட்டில் மெய்யெழுத்துக்கள்
கணக்கிடப் படுவதில்லை. ஆனால் எழுதினால் அது ஒரு இடத்தை
அடைத்துக் கொள்ளவே செய்கிறது. காகிதத்தில் எழுதினாலும்,
கணியில் எழுதினாலும் தேவையில்லாமல் அதிக எழுத்துக்களை
நாம் பெருக்குகிறோம்.

ஐஐந்து (4 எழுத்துக்கள்) = அய்அய்ந்து = அய்யய்ந்து (6 எழுத்துக்கள்)

5) "ஐ" என்பது ஒரு சொல் என்று அறிவோம். அந்தச் சொல்
எப்படி வந்தது என்று பார்க்குங்கால் மனிதனின்
இயல்பான ஒலிப்பில் இருந்தே வந்திருக்கின்றது.

"ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது
சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு.
இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை.
ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக்
குறிக்கும் சொல்லை விட்டுத்தர என் மனம் ஒப்பவில்லை.

"ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும்.

மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.
அமைதிப்படுத்தும்போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய
ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்.
(மாடுகளுக்கு முகமன் கூறும் சொல்லே இந்த "ஐ" தான் :-).
நாமெல்லாம் ஆங்கிலத்தில் hi (ஐ) சொல்வது போலே :-) )

இந்த இயல்பான ஒலிப்பை உள்ளடக்கிய ஐ நிலைக்க வேண்டும்.

6) கீழ்க்கண்ட தேவாரத்தைப் படிக்க:

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
....அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
.....எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
.....பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
.....எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
.............. ஆறாம் திருமுறை: பாடல் 95: அப்பர் பெருமான்

இங்கே ஐய, ஐயோ என்ற இடங்களில் இருக்கும் ஐகளை
அய் என்று மாற்றிப் படிக்க மனம் ஒப்புதில்லை. தேவார திருவாசக
நூல்களில் ஐ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் பயன் படுத்தப்
படும் இடங்கள் மிக நுண்ணியமானவை. அவற்றை இழந்தால்
அந்த இடத்தின் இதம் கெடுகிறது போன்றொரு உணர்வு இருக்கிறது.
இதை வேறு ஆதரவில் என்னால் நிறுவ முடியாது. எனினும் இதை
விட்டு விட முடியவே முடியாது.

7) "புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி" என்பது
பெரியபுராணத்தில் வருகின்ற அடி.

இதில் ஐயடிகள் என்ற சொல்லினைக் காண்க.
"ஐ அடிகள்" என்பதில் ஐ என்பது சொல். அது வியக்கத்தக்க,
போற்றத்தக்க, அல்லது நுண்திறன் வாய்ந்த அடிகள் என்ற
பொருளைக் கொடுக்கிறது. இந்த ஐ என்ற சொல்லைத்
தூக்கினால் இம்மாதிரியானப்
பயன்பாடுகள் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
(ஐந்து அடிகள் என்று பொருள் கொண்டாலும்
ஐ யின் தனிச்சிறப்பு இருக்க வேண்டிய
அவசியத்தை நோக்குக.)

8) செய்யுளில் அளபெடுக்கும் இடங்களில் குழப்பமேற்படுத்தும்.

"யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!...."
............................சிலப்பதிகாரம்:கட்டுரைகாதை:19-21

அணி-இழாஅய் என்ற சீர் இன்னிசை அளபெடையாக வருகிறது.
இது அணியிழையாள் என்ற சொல் விகாரம் பெற்று அணி-இழாய்
ஆகி, மேலும் அளபு எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு பேச்சுக்கு, ஒரு செய்யுள்/கவிதை வரி இப்படி
அமைகிறது என்று வைத்துக் கொள்வோம்.
"அணி-இலாஅய் அடிகள் காண்குவம்... " என்று வருமானால்

இது அளபெடையா, அல்லது ஐயடிகளைச் சொல்கிறதா என்ற குழப்பம்
வரும். இந்தக் கருத்தின் இலக்கணச் சுத்தியை நான் நன்கு
ஆய்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டுக்காக
ழகரத்தை லகரமாக மாற்றி எழுதியிருக்கிறேன்; பிழையிருப்பின் அறிஞர் பொறுக்க.

9) ஐ, ஐய, ஐயன், ஐயள், ஐயை, ஐயர், ஐயா, ஐயோ போன்ற
சொற்கள் மிகத் தனித்தன்மை வாய்ந்தன. அதை அப்படியே
போற்ற வேண்டும். (சொல்லோடு ஐ சேர்ந்து வரும்போது
இலக்கணப் படி சரியேயாயினும்).

10) இந்த "அய்" போக்கு சொல்லில் முன்னால் வருவதால்,
நடுவிலும் பின்னாலும் இப்படிச் செய்கிறார்கள். மலை
என்பதை மலய் என்று எழுதுகிறார்கள். சிலை = சிலய்,
கலை = கலய் என்று பயில்கிறார்கள்.
பழமலை என்பவர் பழமலய் என்றே எழுதுகிறார் இதழ்களில்.
இது ஆபத்தான போக்கு என்றே படுகிறது. இதை நுணுகி ஆராய்ந்தால்
இதன் சரவல்கள் வெளிவரக்கூடும். இது மிக சிக்கலான சிக்கல்
தரும் விதயமாகவே படுகிறது. எழுத்து, சொல், யாப்பு இலக்கனங்களை
நுணுகிப் பார்க்கவேண்டும். குறிப்பாக இப்பயன்பாடு மலய் என்று பழகி,
அது செய்யுளில் மருவி அல்லது விகாரமடைந்து பயன்படுத்தினால்
எப்படி இருக்கும் என்று எண்ணினால் ஐயமாக இருக்கிறது.

இக்காரணங்களால், நான் "அய்" என்ற பயன்பாட்டை அறவே தவிர்த்து
விட்டேன். சொல்லோடு சேர்ந்து வரும்போது அது பிழையில்லை
என்பதால் அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த
ஏற்பு, தனித்த ஐ என்ற சொல்லையும் பலரின் பயன்பாட்டால்
பாதிக்கிறது. ஆகவே "அய்" என்ற பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து.

(தொடர்புடைய திரு.குமரனின் கருத்துக்கள்:
http://koodal1.blogspot.com/2008/05/blog-post.html )

அன்புடன்
நாக.இளங்கோவன்

***

இங்கும் சேமித்து வைக்க அனுமதி தந்த திரு. இளங்கோவன் ஐயாவிற்கு மிக்க நன்றி.

Wednesday, June 11, 2008

அதிருஷ்டம் = நல்லூழ்?

நண்பர் 1: 'நீங்க நல்ல அதிர்ஷ்டக்காரருங்க. பல இலக்கியங்கள் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கே'.

நண்பர் 2: 'நீங்களும் என்ன குறைவு? உங்களுக்குத் தெரிஞ்ச அளவு எனக்கு இலக்கியங்கள் தெரியாதே'

'ஹ. எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க.

உங்களை ஒன்று கேட்கணும்ன்னு நினைச்சேன். அதிர்ஷ்டத்தை எப்படி தமிழ்ல சொல்றது?'

'நான் வழக்கமா நல்வினைப்பயன்னு எழுதுறேன்'

'நல்வினைப்பயனா? ஓரளவு பொருந்தி வருது. ஆனால் அதுவும் முழுக்கப் பொருந்துற மாதிரி தோணலையே'

'நாம் செய்த நல்லது, தீயது இவற்றின் படி தானே பயன்களும் ஏற்படுகின்றன. அதிருஷ்டம் என்பது நாம் செய்த நல்வினைகளின் பயன் தானே. அப்ப நல்வினைப்பயன் என்று சொன்னால் தவறில்லையே'

'இல்லை நண்பரே. இதனைவிட நல்ல சொல் இருக்கும். தேடிப்பார்க்க வேண்டும்'

***

சில நாட்கள் கழித்து...

'நண்பரே. அன்று அதிர்ஷ்டத்தைப் பற்றி கேட்டீர்களே. நல்லூழ் என்ற சொல் பொருந்துமா?'

'நல்லூழ்... ம்ம்ம். கொஞ்சம் நெருங்கி வருகிறது. ஆனால் ஊழ் என்றால் என்ன என்று தெரியுமா?'

'ஊழ் என்றால் ஊழ்வினை தானே'

'அப்படி நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஊழ் என்றால் நியதி என்றும் 'முன்பே கட்டப்பட்ட ஒரு ஒழுங்கு' என்றும் பொருள் உண்டு'

'ஆமாம் ஆமாம். மரத்தடியிலும் வளவிலும் படித்திருக்கிறேன்'

'அப்படி பார்க்கும் போது நல்வினைப்பயன் என்று அதிர்ஷ்டத்தைச் சொல்வதா நல்லூழ் என்று சொல்வதா என்பது கேள்வியே'

'ம்ம்ம். நான் வளவுல போய் கேட்டுப் பாக்குறேன். அவரும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வர்றாராம். அதனால் நான் கேக்காமலேயே அவர் நாம பேசறத வச்சே தெளிவா சொல்லிடுவாரு. நம்ம வள்ளுவரும் ஊழ் பத்தி ஒரு அதிகாரமே சொல்லியிருக்காராமே. நீங்களும் உங்க நண்பர்கிட்ட கேட்டு அந்த அதிகாரத்தைப் பத்தி எழுதுங்களேன். அப்படியே கபாலியை நான் கேட்டதாவும் சொல்லிடுங்க'

Tuesday, June 10, 2008

ஜிரா கோரா இராகவன் வழங்கும் 'செரு'

கவுண்டமணி அன்று பள்ளிக்கூடத்திற்கு ஆய்வாளராக வந்திருக்கிறார். தலைமை ஆசிரியர் உசிலைமணி அவரை வரவேற்று ஒவ்வொரு வகுப்பாக அழைத்துச் செல்கையில் செந்தில் தமிழ்ப்பாடம் எடுக்கும் வகுப்பிற்குள் நுழைகிறார்கள்.

"ஆய்வாளர் ஐயா! இவர்தான் தமிழாசிரியர் கொண்டல்நாதர். இவர் தமிழ்ப் பாடம் எடுத்தார்னா நூத்துக்கு நூறுதான். இதுவரைக்கும் ஒருத்தர் கூட பெயில் ஆனதில்லை. ஹிஹ்ஹிஹ்ஹி"

கவுண்டர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். "ஓ! தமிழ் ஆசிரியர்! (செந்திலோடு கை குலுக்குகிறார்.) கொண்டல்! பேரே நல்ல தமிழ்ப் பேர். ஒங்களப் பத்தி தலைமை ஆசிரியர் ரொம்ப நல்லபடி சொல்லீருக்காரு. அதுனால......ஒங்கள நான் பாராட்டுறேன்."

செந்தில் முகமெல்லாம் புன்னகையுடன். "நன்றி ஐயா! நான் உ.வே.சா கிட்ட தமிழ் படிச்சவன். அதுனாலதான் இப்பிடி. என்னோட பெருமைய நானே சொல்லக் கூடாது. இருந்தாலும்....."

கவுண்டர் இன்னும் வியக்கிறார். "உ.வே.சா? You mean தமிழ்த் தாத்தா? நீங்க ரொம்பப் பெரியவர். சரி.இன்னைக்கு என்ன பாடம்? எதுவும் கேள்வி கேக்கலாமா?"

"நீங்க கேளுங்க ஐயா. பசங்க நல்லா பதில் சொல்வாங்க. இன்னைக்குக் காளமேகப் பாடல்தான் பாடம்." பெருமையோடு சொல்கிறார்.

"ஓ! காளமேகம்!" கவுண்டமணி ஒரு மாணவரை எழுப்பி, "தம்பி! இன்னைக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டு ஒனக்குத் தெரியுமா? எங்க ஒரு வரி சொல்லு."

"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்-னு தொடங்குற பாடல் ஐயா."

"செருப்பு? என்ன செய்யுள் இது?" செந்திலை நோக்கி. "ஐயா, தமிழ்க் கடலே. இந்த வரி சரிதானா? என்ன பொருள்னு சொல்லுங்களேன். பையன் எதோ செருப்பு பருப்புன்னு சொல்றானே?"

செந்தில் மிகப் பெருமையுடன். "சொல்றேன் ஐயா. சொல்றேன். செருப்புக்கு வீரரைன்னா கல்யாண வீட்டுல செருப்பு திருடுற வீரன் ஒழக்கு மாதிரி இருந்தாலும்னு பொருள்."

வியப்படைகிறார் கவுண்டர். "என்ன கொடுமை சரவணன் இது? காளமேகப் புலவர் காலத்துலயே கல்யாண வீட்டுல செருப்பு திருடீருக்காங்களா? சேச்சே! நம்ப முடியலையே. நீங்க உ.வே.சா கிட்டயெல்லாம் படிச்சிருக்கீங்க. சரியாத்தான் சொல்வீங்க.." தலையை ஆட்டி அலுத்துக் கொள்கிறார்.

"இல்லை ஐயா. அந்தப் பாட்டுக்குப் பொருள் வேற." பாடலைச் சொன்ன மாணவன் படக்கென்று சொல்கிறான்.

கவுண்டமணி பொங்கி எழுகிறார். "என்னது பொருள் வேறயா? இவர யாருன்னு நெனச்ச? தமிழ்ப் பெரியதாத்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை கிட்ட பாடம் படிச்ச தமிழ்த்தாத்தா உ.வே.சா கிட்ட பாடம் படிச்சவரு. பாரதியார் பாரதிதானோட விவாதம் செஞ்சு தமிழ் இலக்கணத்துக்கெல்லாம் சிக்கெடுத்தவரு. ஆத்திச்சூடி எழுதும் போது...கால நீட்டி உக்கார்ரதால ஔவையாருக்கு விழுந்த சுளுக்கத் தமிழ்ப் பாட்டுப் பாடியே சரி செஞ்சவரு. நீ எட்டாப்பு படிக்கிற சின்னப் பையன். ஒனக்கென்ன தெரியும். எங்க? தெரிஞ்சதச் சொல்லு பாக்கலாம்?"

"அதாவதுங்க..செருன்னா போர்க்களம். செருப்புக்கு அப்படீன்னா செருவுக்குள்ள புகுகின்றன்னு பொருள். செருப்புக்கு வீரரைன்னு சொன்னா போர்க்களத்துக்குள்ள புகுகின்ற வீரன்னு பொருள். அப்படிப்பட்ட வீரனைச் சென்று உழக்கும் வேலன். அதாவது முருகப் பெருமானோட போருக்குப் போகிற வீரர்களை வெல்லும் முருகன் அப்படீன்னு பொருள். அதுவுமில்லாம முழுப்பாட்டையும் சொல்றேன் கேளுங்க.

செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல
மருப்புக்குத் தண்டேன் பொழிந்த
திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே

காளமேகத்திடம் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்குமாறு முருகனைப் பற்றிப் பாடச் சொன்ன பொழுது பாடிய பாடல்."

யோசிக்கிறார் கவுண்டமணி. "சரி. ஆனா விளக்குமாறுன்னு வருதே? அதுக்கு என்ன பொருள்?"

"அதாவது திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டை விளக்குமாறு கேட்கிறார்."

"வண்டு கிட்ட விளக்குமாறு ஏன் கேக்குறாரு? கடைல கிடைல வாங்குறது."

"விளக்குமாறுன்னா விளக்கிச் சொல்லுமாறு கேட்பது. இதுதாங்க இந்தப் பாட்டுக்கு உண்மையான பொருள்"

செந்தில் சிரித்துக்கொண்டே, "பாத்தீங்களா ஐயா. பையன் எப்படி பதில் சொன்னான்னு. அவன் வாயால வரனும்னுதான் நான் வேணுக்குன்னே தப்பாச் சொன்னேன். ஹி ஹி ஹி."

கவுண்டமணிக்குப் புரிந்து போகிறது. கிண்டலோடு "ஓ அப்படீங்களா ஐயா? நீங்க சொன்னா சரிதாங்க ஐயா. நீங்க எப்பேர்ப்பட்டவர். நல்லவர். வல்லவர். தமிழ் மொழியையே செம்புத் தண்ணீல கல்ல்ல்லக்கிக் குடிச்சவர். இப்பப் பாருங்க. இந்தப் பையன நான் எப்படி மாட்டுறேன்னு." அந்த மாணவனைப் பார்த்து, "தம்பி. இந்தப் பாட்டுக்கு நல்லா விளக்கம் சொல்லீட்ட. அது சரீன்னு ஒங்க தமிழ் ஆசிரியரே ஒத்துக்கிட்டாரு. அதுவுமில்லாம இவரு பாடம் எடுத்தா வகுப்புல (ஒவ்வொரு மாணவனாகக் காட்டி) நீதான் பாரதியாரு. அவந்தான் பாரதிதாசன். இந்தப் பையந்தான் இளங்கோவடிகள். அந்தப் பொண்ணுதான் கோதை ஆண்டாள். இந்தப் பொண்ணுதான் சௌந்தரா கைலாசம். ஆகையால இன்னொரு கேள்வி. செருன்னா போர்க்களம்னு சொன்ன. சரி. இந்தச் செரு வர்ர வேறொரு செய்யுள் சொல்லு பாக்கலாம்."

"சொல்றேன் ஐயா. முருகனைப் பத்திச் சொல்லும் போது செருவில் ஒருவன்னு நக்கீரர் சொல்லீருக்காரு ஐயா."

"ஓ! நக்கீரர். அதாவது திருவிளையாடல் படத்துல நடிகர் திலகம் கூட நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றமேன்னு சண்டை போட்டவரு." செந்திலை நோக்கி, "தமிழ் ஐயா, இந்த வரியைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?"

செந்தில் லேசாகக் கனைத்துக் கொண்டு, "ஐயா, இந்தப் பாட்டில் பிழை இருக்கிறது."

கவுண்டர் வியப்பது போல நடித்து ஒரு கையைத் தூக்கிக் கொண்டு சொல்கிறார். "ஓ! பரமசிவம் பாட்டுல பிழை இருக்குன்னு சொன்ன நக்கீரர் பாட்டுலயே நீங்க பிழை கண்டு பிடிச்சிருக்கீங்க. நீங்க ரொம்பப் பெரியவராத்தான் இருக்கனும். உ.வே.சா கிட்ட படிச்சிருக்கீங்களே. அப்ப ஒங்களுக்கு கி.வா.ஜா, வாரியார் எல்லாரையும்...."

"ஓ! நல்லாத் தெரியுமே? வாரியாருக்கு வெண்பா எழுதக் கத்துக்குடுத்ததே நாந்தான். கி.வா.ஜாவுக்குச் சிலேடையா பேசச் சொல்லிக் குடுத்ததே நாந்தான். அது மட்டுமில்ல.....கவிமணி, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுன மனோண்மணீயம் சுந்தரம் பிள்ளை, உவமைக் கவிஞர் சுரதா....ஏன் இப்ப இருக்குற அப்துல்ரகுமான் வரைக்கும் என் கிட்ட படிச்சவங்கதான். இன்னொன்னு சொல்றேன். மெல்லிசை மன்னர் கிட்டப் பேசி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட டி.எம்.சௌந்தரராஜனுக்கும் பி.சுசீலாவுக்கும் வாய்ப்பு வாங்கிக் குடுத்ததே நாந்தான்."

செந்திலின் தோளில் கை வைக்கிறார் கவுண்டமணி. "ஆமாமா! நீங்க கத்துக்குடுத்துதான் அவங்க ரொம்ப முன்னேறிட்டாங்க. ஆனா பாருங்க. நீங்க மட்டும் ஆசிரியராவே இன்னமும் இருக்கீங்க. சரி...அதென்னவோ பிழைன்னு சொன்னீங்களே. அது என்ன?"

"செருவில் ஒருவ அப்படீன்னு பையன் சொன்னான். அது தப்பு. செருகு வில் உருவன்னு வந்திருக்கனும். நக்கீரர் ஓலைல எழுதும் போது தப்பா எழுதீட்டாரு."

"ஓ! நக்கீரர் கோழி கிறுக்குறாப்புல கிறுக்கி தப்பா எழுதீட்டாருன்னு சொல்றீங்க. சரி. இருக்கட்டும்." மாணவனை நோக்கி, "தம்பி,இந்த வரிக்கு நீ விளக்கம் சொல்லு."

"செருவில் ஒருவ அப்படீன்னா போர்க்களத்தில் தனியாக நிற்பவன்னு பொருள். அதாவது இறைவனை எதிர்த்து யாரும் போரிட முடியாதுங்குறதுதான் உட்பொருள். தமிழ் ஐயா சொல்றது போல செருகிய வில் உருவறது கிடையாது."

செந்திலின் கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுக்கிறார். "ஐயா. தமிழ் ஆசிரியரே. உ.வே.சா இருந்தது எப்ப? நீங்க பொறந்தது எப்ப? எங்கிட்டயே காது குத்துறீங்களே. செருன்னு ஒரு சொல். அதுக்குப் பொருள் தெரியலை. ஒங்களப் பத்தித் தலைமை ஆசிரியர் ரொம்ம்ம்ம்பப் புகழ்றாரு. அதெப்படி ஒங்க வகுப்புல மட்டும் எல்லாரும் நல்ல மதிப்பெண் வாங்குறாங்க?"

மாணவன் குட்டை உடைக்கிறான். "ஐயா. இவரு எப்பவும் ஒழுங்காவே பாடம் சொல்லித்தர மாட்டாரு. பாதி நேரம் வகுப்புல தூக்கம்தான். இன்னைக்கு நீங்க இருக்கிறதால தூங்காம இருக்காரு. இவரு சொல்லித்தர மாட்டாருன்னு தெரிஞ்சதால நாங்களே படிச்சிக்கிறோம். அதனாலதான் எல்லாருக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்குது."

"அப்படிச் சொல்லுடா தம்பி." செந்திலைப் பார்த்து, "இனிமே இந்த வகுப்புல நீதான் மாணவன். (மேசையைக் காட்டி) இனிமே இங்க நிக்கக் கூடாது. (மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் காட்டி) அங்கதான் உக்காரனும். புரிஞ்சதா?"

போலியான பணிவோடு, "புரிஞ்சது ஐயா."

"ரொம்ப நல்லது. எங்க செருன்னா என்னன்னு சொல்லு பாக்கலாம்."

"செருன்னா போர்க்களம் ஐயா."

கிண்டல் சிரிப்போடு. "இது..இது...இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். இப்பிடிப் பொருள் சொல்றத விட்டுட்டு செருப்புக்கு அலையக் கூடாது.புரிஞ்சதா?"

"புரிஞ்சது ஐயா."

"நல்லது." மாணவர்களை நோக்கி, "எங்க ஒவ்வொருத்தரும் வேறெந்த நூல்ல செருவைப் பத்திப் படிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்."

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, June 09, 2008

உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி

பொழுதுகளை குறிப்பிட்டுச் சொல்ல இன்னும் பேச்சு வழக்கிலும், எழுத்து நடையிலும் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆங்கிலத்தில் 'குட்மார்னிங் சார்', 'குட் ஈவினிங் சார்' என படித்த தமிழர்களிடையே (மத்தியில்) வணங்க (WISH) பயன்படுத்தும் சொற்கள் மிகுந்து வழக்கில் இருக்கிறது .

புலம்பெயரும் போது தமிழர் மட்டுமல்ல பிற இந்திய மொழிக்காரர்களும் தத்தம் அடையாளத்தை கட்டிக் காக்கவும் சிலர் அதைவிட முதன்மையாக நாம் பேசுவது வெளிநாட்டுக்காரர்களுக்கு புரியக் கூடாது என்ற சூழ்நிலையில் அவரவர் மொழிகளை தூய்மையாகப் (சுத்தம்) பேச ஆரம்பிக்கின்றனர். இதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிந்த அளவில் செந்தமிழில் பேசுவதற்கு காரணம். வெளிநாட்டில் தமிழருக்கிடையே அழைக்கும் போது அங்கு வாழும் தமிழர்கள் இயல்பாகவே 'வணக்கம்' , 'காலை வணக்கம்' என்று புழக்கத்திற்கு வந்து ஹலோவுக்கு விடை செல்லிவிட்டார்கள்

இத்தகைய பயிற்சி தமிழகத்து தமிழர்களுக்கு குறைவாக இருப்பதாலும் பலுக்குவதில் அதிக ஈடுபாடு, அக்கறை காட்டாததால் திரித்தும், தமிழகம் வணிக (வியாபார) காரணங்கள் மற்றும் அலுவல் தொடர்புடன் மற்ற மாநிலங்களுடன் இருப்பதால் மற்ற மாநில மொழிகளின் சொற்கள் தமிழகத்தில் பேச்சு வழக்கில் மிகுந்து இருக்கிறது.

எந்த ஒரு மொழியும் அது வேற்று மொழிச் சொற்களைக் ஏற்றுக் கொள்ளும் நிலை எவ்வாறு என்று ஆராய்ந்தால் அந்த மொழியில் புதிய பெயர் சொல்லையோ, வினைச்சொல்லையோ பொருள் மாறாமல் சொல்ல
சொற்களோ, கலைச் சொற்கள் அமைக்க வேர் சொற்கள் முற்றிலும் இல்லை என்ற ஒரு தீர்மான நிலையில் இயல்பாகவே அது பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்கிறது. இது உலக மொழிகள் அனைத்திற்கும் பொருந்தும். நாம் இருப்பதை மறந்து கடினமான எழுத்துக்கள் அமைந்த சொற்களை ஏற்றுக் கொண்டு தமிழின் தொன்மை மற்றும் மென்மையை மறந்துவிட்டோம்.

பொழுதுகளைப் பற்றி சொல்லும் போது காலை வேளைகளை குறிப்பிட அதிகாலை (உதயம்), காலை என்றும் பகல் வேளைகளை குறிப்பிட மதியம் (மத்ய + சமயம் = மதியம் ?) என்ற சொல்கிறோம். அதையே முற்பகல், நடுப்பகல், பிற்பகல் என்று கால வேறுபாடுகளைக் குறித்து முறையாகக் குறிப்பிட்டால் மொழிக்கும் பொருளுக்கும் அழகு.

அதுபோல் மாலை நேரத்தை குறிக்க 'அந்தி வரும் நேரம்' என்றும் அந்தி என்றும் பாடல் ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் மிகுந்து பயன்படுத்துவதில்லை. சாயும் + காலம் = சாயங்காலம் (அஸ்தமனம்) எனவும் எளிதாக பிற்பகலின் பகுதியாக இருப்பதால் மாலை வேளை என்று குறிக்கலாம்.

இரவு பொழுதின் பல்வேறு வேளைகளைக் குறிக்க முன்னிரவு, நடு இரவு, பின்னிரவு என மூன்று கால அளவுகளில் குறியிடலாம். வெறும் இரவு என்றால் இரவு பொழுது முழுவதும் என்று பொருள் படுகிறது, அவ்வாறு சொல்ல வேண்டிய இடத்தில் மட்டும் இரவு என்பது சரி. ராத்திரி (ராத்ரி) என்று சொல்வதைவிட இரவு என்று சொல்வதால் இரவின் கருமைக்கு குறைபாடு இல்லை. இரவு என்பது தனித்தமிழ்ச் சொல். பொதுவாக முன் ராத்திரி, பின் ராத்திரி என சொல்வதில்லை, அங்கெல்லாம் சரியாகவே முன்னிரவு, பின்னிரவு என குறிப்பிடுகிறோம். நடு இரவு-க்கு பதில் நடு ராத்திரி என்று சொல்கிறோம் அப்படிச் சொல்வதும் தற்போது குறைவாகவே வழக்கில் இருந்து வருகிறது.

கடந்த மாதம் நான் சென்னை சென்றிருந்த போது பி.எஸ்.என்.எலின் செல்பேசி குறித்த தமிழக விளம்பரத்தில் 'ஒரு வருட வேலிடிட்டியுடன்' என்று தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிழெழுத்துகளில் விளம்பரப் படுத்தி இருந்தார்கள். அதாவது அந்த குறிப்பிட்ட சலுகை உடைய தொடர்பு திட்டத்தை (wireless plan) ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்க அவ்வாறு எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். எளிமையாக 'ஓர் ஆண்டு பயனுடன் அல்லது ஓர் ஆண்டு பயன்படுத்த' என்றும் குறிக்க முடியும் என்ற போதிலும் அரசாங்க அமைப்பே இத்தகைய கலப்புக்கு துணை போவது வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

உதயம், மதியம்,அஸ்தமம், இராத்திரி என்று சொல்வது பற்றியும் காலை, பகல், மாலை, இரவு என்பது பற்றியம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday, June 08, 2008

உபயோகத்தை பயன்படுத்தலாமா ?

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்ற சொல்லாடல் எதற்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ தமிழுக்கு பொருந்தி போய் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம் நாம். சொற்களஞ்சிய குவியல் தமிழில் மலைபோல் இருக்கும் இருப்பு அறியாமலேயே இன்றைக்கு தமிழில் ஆங்கிலம் நுழைத்து நாகரீக பேச்சு என்ற பெயரில் தமிங்கிலம் பேசுவது போல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கிய காப்பியங்களை மொழிப் பெயர்க்கும் காலத்திலும் அது பரவலாக புழங்க ஆரம்பித்த போதும் நம்மவர்கள் வடமொழி சொற்களை முதன்மையாகவும் பிற மொழிச் சொற்களை தேவை (அவசியம்) இல்லாமலேயே பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர் என்ற பேருண்மையை 'தமிழினி மெல்லச் சாகும்' என்ற வசை எச்சரிக்கைகுப் பிறகு ஒருவாறு தெரிந்து கொண்டு எழமுயற்சித்து காலூன்றி விட்டோம்.

இனி நாம் நட(ன)மாடவே முடியும் என்ற நிலைக்கு உறுதி பெற்றுள்ளோம் என்றால் அது தனித் தமிழ் ஆர்வலர்கள் பரிதிமார் கலைஞர், மறைமலை அடிகளார், அண்மையில் (சமீபத்தில்) வாழ்ந்து கலைச் சொற்களுக்கும், வேர்சொல் ஆராய்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய தேவநேய பாவானர் போன்றோர்களால் தான். தற்பொழுது வலைப்பக்கம் வழியாக நம் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா இராம.கி அவர்கள் அத்தகைய சீரிய பணியை செவ்வனே செய்து வருகிறார்கள்.

இந்த களையெடுப்பை கொச்சைப்படுத்த பல்வேறு உத்திகளில் அவ்வப்போது ஏற்படும் எதிர்ப்புகளை தமிழர்கள் நேர்கொண்டும் (சந்தித்தும்) , பொறுத்துக் (சகித்துக்) கொண்டும் தமிழன்னைக்கு பணிவிடை செய்தே வந்திருக்கிறார்கள். தாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சில வலைப்பதிவர்கள் தமிழார்வளர்களை குறி(வை)த்து தூற்றல், ஏச்சு, கிண்டல் என தொடர்ந்து ஒரு தொண்டாகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்மழை வேண்டுமென வேண்டுபவர்கள் சிறு மழைத்துளிக்குக் கூட தவளைகளின் இரைச்சல் ஆரம்பமாகிவிடுமோ என்றெல்லாம் நினைப்பது இல்லை. எனவே தவளைகள் அவைகளின் இயல்பை வெளிப்படுத்துகின்றன என்று புறம்தள்ளி மழையால் பெரும் பயனை மட்டுமே நினைத்துப் பார்ப்போம்.

கொள்கைபிடிப்பு என்ற பெயரில் பழமை வாதம் பேசுபவர்கள் எப்போதும் மாறப் போவதில்லை. தமிழறிஞர்கள் எழுதுவது எல்லாம் மேற்படி பேசுபவர்களை மாற்றவேண்டும் என்பதற்கு அல்ல என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். எது உண்மை என்று அறியாமல் மயக்கத்தில் இருந்து கொண்டு இது சரியாக இருக்குமா ? என்று கூட ஆராயாமல் இருக்கும் மற்ற தமிழர்களுக்கு இவைகள் கண்ணில் படும் போது தமிழரிஞர்களின் கருத்துக்களும் கட்டுரைகளும் சென்றடைந்து நல்ல தாக்கத்தைத் தரும். சரி கட்டுரையின் தலைப்பைத் தொடவேண்டும்...

'பயன்படுத்துதல்' என்ற பதம் எங்கு புழக்கத்தில் மிகுந்து (அதிகம்) இருந்தால் சமூகத்துக்கு பெரிதும் நலம் என்று எடுத்துக் கொண்டால் அது 'மொழியை சரியாக பயன்படுத்துதல்' என்ற இடத்தில் பயன்படு(த்து)ம் போது பண்பாடும், பழமை வாதம் தவிர்த்து கலாச்சாரமும் மென்மேலும் வளரவும், கட்டிக் காக்கவும் பயன்படுகிறது.

பயன் என்ற சொல்லின் இனிமை எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதை திருக்குறளில் அந்த சொல்லை பல குறள்களில் திருவள்ளுவர் பயன்படுத்தி இருப்பதிலிருந்து நன்கு அறிய முடிகிறது.

பயன் என்ற சொல்லில் இருந்து பயனீட்டாளர், பயனாளர், பயன்படுத்துபவர், பயனளிப்பு போன்று பயன் தொடர்புடடைய மேலும் பல பெயர் சொற்களுடன் சேர்த்து 'பயன்' கலைச் சொற்கள் அமைக்க பெரிதும் பயன்படுகிறது. இவ்வளவு பெருமையும், பயனும், சொல்லினிமையும் உள்ள சொல்லை வைத்துக் கொண்டு 'உபயோகம்' என்ற சொல்லை பெருவாரியாக நாம் பயன்படுத்துகிறோம்.

பயன் என்ற தமிழ் சொல்லும் உபயோகம் என்ற வடசொல்லும் ஒரே பொருள்தான். உபயோகத்தின் பயன் தமிழுக்கு தேவையற்றது. எளிதான பயன் இருக்கையில் உபரியான உபயோகத்தை பயன்படுத்துவதை தவிர்கலாம். குறையொன்றுமில்லை. தமிழைப் பொறுத்தவரை பயனென்ற பைந்தமிழ் நற்பயன் சொல்லைப் பயன்படுத்துவதால் பெரும்பயனே !

Saturday, June 07, 2008

துணிவே துணை !

என்ன தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியம் (செயல்) செய்திருப்பாய் ? இதைச் செய்ய தைரியம் வேண்டும்... பொதுவாக பயன்பாட்டில் உள்ள சொல் ... வீரம் அல்லது துணிவு குறித்துச் சொல்ல பயன்படுத்தும் ஒரு சொல்.

முதன் முதலில் வீட்டுக்கு தெரியாமல் திரைப்படம் ... தைரியம் வந்து சென்றோமா ? ம் அந்த தைரியத்தில் பெற்றோர்களை ஏமாற்றும் துணிவும் கூடவே வந்திருக்கும். பின்பு தைரியமாக இரவு காட்சி பார்த்துவிட்டு ஒலியின்றி(சத்தமில்லாது) பூனைப் போல் படுத்து உறங்கி இருப்போம். இருட்டை குறித்த அச்சத்தை(பயம்) வென்ற துணிவு அது.

தன்னுடைய (சொந்த) வியாபாரம் தைரியாமாக ஆரம்பிப்பது, பெற்றோர்கள் உதவி இல்லாமல் தன் (சொந்த) காலில் நிற்கும் தைரியம் எல்லாமே ஒரு துணிவுதான்.

துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை, துணிந்தவனுக்கு துக்கமில்லை, துணிந்து நில் தொடர்ந்து சொல் என துணிவு என்பது அன்றாடம் பயன்படுத்தும் ஒரு தமிழ்ச் சொல். இருந்தாலும் துணிந்தோ, துணியாமலோ அன்றாடம் பேச்சுவழக்கிலும், எழுத்திலும் சரளமாக 'தைரியத்தை' தான் பயன்படுத்திக் (உபயோகம்) கொண்டு இருக்கிறோம்.

துணிவுடன் முடிவெடுத்து தைரியத்துக்கு பதில் அந்த இடங்களிலெல்லாம் துணிவின் துணை நாடலாம்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு ( குறள் 688 )


துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானது.


உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

Friday, June 06, 2008

பைய பைய

'என்ன சொல்ற குமரன்? பைய பையன்னா என்ன அருத்தம்?'

'அதுவா? மெதுவா மெதுவான்னு சொன்னேன்.'

'அப்படி சொல்லு. அப்படி சொல்லியிருந்தா தெளிவா புரியும்ல. உங்க ஊரு பேச்சுவழக்கா அது?'

'அப்பிடியும் சொல்லலாம். எங்க ஊருல மட்டும் இல்லை. தெக்கால எல்லா ஊருலயும் அப்படி சொல்லுவாய்ங்க.'

'இப்படி வட்டார மொழியில பேசுனா எனக்கெல்லாம் புரியறதில்லை.'

'இது வட்டார மொழின்னு சொல்ல முடியாது கண்ணா. உனக்குத் தெரியலைன்னு சொல்லு. இது சங்ககாலத்துல இருந்து இருக்கிறத் தமிழ்ச் சொல் தான்.'

'இதான கூடாது. நானும் பொறந்ததுல இருந்து தமிழ்நாட்டுல தான் இருக்கேன். தமிழ்ச் சொல்ன்னா நான் கேள்விபடாமலா இருப்பேன்? நீ வீட்டுலயே தமிழ் பேசறதில்லை. நீ எல்லாம் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வந்துட்ட.'

'யப்பா. அந்த விவகாரத்துக்கே போவேணாம். வீட்டுல வேற மொழி பேசினாலும் எனக்குத் தமிழ் தெரியுமா தெரியாதாங்கற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் செஞ்சுக்கலாம். 'பைய'ங்கற சொல் பழைய தமிழ்ச்சொல்ங்கறத மட்டும் சொல்லிக்கிறேன்.'

'சரி. சொல்லேன் கேட்டுக்கறேன்.'

'குறுந்தொகைன்னு ஒரு பழைய சங்ககால இலக்கியம் இருக்கு. இதுல ஒவ்வொரு திணையிலையும் ஒரு தொடர் பாடலா பாடியிருக்காங்க. அதுல பாலைத்திணையில பாலைக்கலி பாடிய பெருங்கொடுங்கோன்ங்கறவர் சொல்றதக் கேளு

செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று...

நல்லதும் தீயதும் சொல்லி அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே மெதுவாக, இளைப்பாறுதலாக, மென்மையாக அணைத்து மகிழ்ந்திருந்த அந்தப் பொழுதில்...'

'ம்ம்ம். நல்லா தான் சொல்லியிருக்காரு. பைய முயங்கியன்னா மென்மையா அணைத்துன்னு பொருளா? அருமை. அருமை.'

'ஆமாம் கண்ணா. பையங்கற சொல் அருமையாத் தான் தென்படுது. சிறப்பான சொல். பார்ப்பதற்கும் அரிய சொல்.'

'ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொன்னா போதுமா? இன்னும் ரெண்டு மூனு எடுத்துவுடு.'

'சரி. ஒவ்வொன்னா சொல்றேன் கேளு.

அசையியற்கு உண்டு ஆண்டோர் எ ஏர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

யாரு இவ்வளவு அழகா பாடியிருப்பாரு சொல்லு? நம்ம ஐயன் தான். இன்பத்துப்பால்ல குறிப்பறிதல் அதிகாரத்துல வரும். பொருளை நம்ம திருக்குறள் வாத்தியார் மயிலை மன்னாருக்கிட்ட கேட்டுக்கிட்டு எஸ்.கே. வந்து சொல்றேன்னு சொல்லியிருக்காரு.'

'மயிலை மன்னாரா? படா குஜாலான பேர்வழியாச்சே அவரு.'

'கண்ணா. இப்ப நீ பேசின பாரு. அது தான் வட்டார வழக்கு. நான் சொன்னதை வட்டார வழக்குன்னு சொல்லிட்டு நீயே வட்டார மொழியில பேசறியே?'

'ஹிஹி. மயிலை மன்னாருன்னவுடனே அந்த பாசை தானா வந்துருதுப்பா. என்ன பண்றது?'.

'சரி. சரி. அடுத்த எடுத்துக்காட்டுக்கு போவோம். எனக்கு நேரமாவுது.

நாம படிச்சோமே கிருஷ்ணன்கோவில்; அது பக்கத்துல இருக்கிற வில்லிபுத்தூருல பொறந்த நம்ம அக்கா கோதை சொன்னது தான் உனக்கும் தெரியுமே.

பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி

இதுக்குப் பொருளை இராகவன் பதிவுல போயி பாத்துக்க வேண்டியது தான்.

அடுத்து நம்ம பேயாழ்வார் சொல்லுறதைக் கேளு.

பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.

வெண்பா தான். பதம் பிரிச்சுப் போட்டதால இலக்கணம் சரியில்லாதது போல நம்ம கொத்தனாருக்குத் தோணலாம்.'

'நீ பதம் பிரிச்சுச் சொன்னதுனால பாதி புரிஞ்சிப் போச்சு. இன்னொரு தடவை நிறுத்தி நிதானமா சொன்னேன்னு வையி. முழுசாப் புரிஞ்சிரும்'.

'சரி. இன்னொரு தடவை சொல்றேன். பொருள் என்னன்னு சொல்லு.

பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.'

'பொருள் சொல்றேன் கேட்டுக்க.

சின்னப் பையனைப் போல ஆலமரத்து இலையில மெதுவா, இளைப்பாறுதலா, தூங்கிக்கிட்டே உலகமெல்லாம் அன்னைக்கி ஒரு நாள் உண்டவனே! உண்மையானவனே! மகாலக்ஷ்மியோட புருஷனே! மந்தர மலையை மத்தா வச்சுக்கிட்டு பாற்கடலைக் கடைஞ்சு வான் அமுதத்தை தேவர்களுக்கு அன்று நீ தந்தாய். பொருள் சரியா இருக்கா?'

'கண்ணபிரான் சொன்னா சரியா இல்லாம எப்படி? பாலன்னா சின்ன பையன் தான். ஆனா இங்கே குழந்தைன்னு சொன்னா பொருந்தி வரும். மத்தபடி கலக்கலா பொருள் சொல்லிட்ட'

'சரி. அடுத்த எடுத்துக்காட்டு எங்கே?'

'இதோ இன்னொரு பாசுரம். இது நம்ம திருட்டுப்பயலே ஆழ்வார் பாடுனது'.

'திருட்டுப் பயலே ஆழ்வாரா? யாருப்பா அது?'

'நம்மை திருமங்கையாழ்வார் தான்'.

'ஓ. அவரா? அவர் திருட்டுப்பயலே தான். பாசுரத்தைச் சொல்லு'

'கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே'.

'நில்லு நில்லு நில்லு. இந்தப் பாசுரத்தையும் பதம் பிரிச்சுத் தானே சொன்ன?'

'ஆமாம்'.

'ஆனா எனக்குப் புரியலையே'.

'எப்படி புரியும்? புரியாதுல்ல. நாம எப்பவும் பேசிக்கிட்டு இருப்போமே அதைப் பத்தி தான் ஆழ்வாரும் சொல்றார். நான் சொல்றதுக்கு சாதகமா அவர் சொல்றதால உனக்குப் புரிய மாட்டேங்குது.'

'அப்படியா? அப்படி என்ன சொல்றாரு ஆழ்வார்?'

'சாமியைச் சின்ன வயசுல இருந்தே கும்புட்டுக்கோங்க. வயசான பின்னாடி உடல் உபத்திரவம் தாங்க முடியாம சாமி கும்புட முடியாதுன்னு சொல்றாரு'.
'அதானா? கடைசி காலத்துல சாமியைக் கும்புட்டுக்கலாம். இப்ப எதுக்குன்னு நான் கேட்டுக்கிட்டு இருப்பேனே. அதைச் சொல்றியா?'

'ஆமாம். ஆழ்வார் என்ன சொல்றார் பாத்தியா?

கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.

'நல்ல பாட்டு தான்பூ. இன்னிக்கே நானும் கோவிலுக்குப் போவேன் போலிருக்கே.'

'கோவிலுக்குத் தான் போகணும்ன்னு இல்லை கண்ணன். இங்கன இருந்தே சாமி கும்புடலாம்'.

'ஆமாமா.'

'அம்புட்டுத் தான் எடுத்துக்காட்டுகள் எல்லாம்'.

'நல்ல எடுத்துக்காட்டுகள்.

அப்புறம்... தொடக்கத்துல திணைன்னு ஒன்னு சொன்னீயே. அப்படின்னா என்ன?'

'அதுவா? அது வந்து... எனக்கு ஓரளவு தெரியும். ஆனா தெளிவா தெரியாது. கொஞ்சம் இரு. இராம.கி ஐயாகிட்ட போயி கேட்டுக்கிட்டு வந்து சொல்றேன்'.

'அப்படி சொல்லு. என்னமோ பெரிய தமிழ் அறிவாளி மாதிரி பேசுன? அப்பப்ப இப்படி தட்டி வச்சாத் தான் சரிப்படும்'.

'ஹிஹி'.

Thursday, June 05, 2008

ப்ரத்யேகம், ப்ரதானம், நிதானம், நிதர்சனம்

சன் செய்திகளில் மிகுந்து அடிபடும் சொற்களில் இந்த ப்ரத்யேகம் 'தனித்தன்மை'க்காக செய்திகளில் அடிக்கடி வாசித்தலின் போது வருகிறது. இந்த சொல்லுக்கு மாற்றுச் சொல்லே இல்லையா ? என்று சிந்தனை செய்து பார்த்தேன். ப்ரத்யேக ஆடை, ப்ரத்யேக தயாரிப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய ஆடைகள், தயாரிப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாம்.

சிறப்பு என்ற சொல்லிற்கு பதில் ப்ரத்யேகம் என்ற சொல் வழங்கப்படுகிறது. சிறப்பில் 'சிறப்பு' இல்லை என்று சன் செய்தியாளர்களுக்கு மட்டும் தெரிகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன். சிறப்பை சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தனிச்சிறப்பு என்று மிகச்சிறப்பாக சொல்லலாம். ஒற்றைச் சொல்லாக (vocabulary) செல்லவேண்டுமென்றால் 'தனிப்பட்ட' அல்லது 'தனித்துவ' என்றும் ப்ரத்தியோகத்திற்கு மாற்றாக சொல்லமுடியும்.

சிங்கையில் ப்ரதானவிழா என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் சென்டரலில் நடத்துகிறார்கள். முதன்மைக்கு முதன்மைத்துவம் கொடுக்காமல் போனது முதன்மையின் பொருள் புரியாததாலா என்று மிகவும் வியப்பாக இருந்தது. முதன்மையென்றால் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பானது என்ற பொருளில் தான் செங்கிருதச் சொல்லான ப்ரதானமும் வழங்கப்படுகிறது. ப்ரதானம் என்று தமிழில் ஒற்றெழுத்துக்களை (மெய்யெழுத்து) முன் வைத்து எழுதுவதில்லை 'பிரதானம்' பிரத்தியேகம் என்று தான் எழுதுகிறோம். பயன்படுத்த பொருள் பொதிந்த சொற்கள் தமிழ் குவியலில் இருக்கிறது. அதுவும் கண்ணில் அகப்படும் வகையில் இருக்கிறது. ஒப்புமைத்துப் பார்த்து சரியான சொல்லை பயன்படுத்துவதில் சற்று சோம்பலாக ... பிறமொழிச் சொற்களை தமிழ்'படுத்தி' அந்த இடத்தில் பொருத்தி வருகிறோம்.

'நிதானமே ப்ரதானம்' என்று தெலுங்கில் பழமொழி சொல்லுவார்கள். இதற்கு பொருள் தமிழர்களுக்கும் நன்கு தெரியும். 'நிதானம்' இழக்கக் கூடாது என்று நினைத்து பொறுமை குறித்து சொல்லும் போது 'பொறுமை' இல்லாது, 'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' என்று அதை எதோ ஒரு எல்லைக்குள் எங்கேயோ நிறுத்திவிட்டு அறிவுரை சொல்லும் போது எல்லையற்று நிதானமே ப்ரதானமாக வருகிறது.

பொறுமையின் சிகரம் என அடைமொழிச் சொற்களும், பொறுமையுடையோர் பெருமை அடைவர் என்ற பழமொழி பத்தி (வாக்கியம்) பொறுமைக்கு பெருமை சேர்க்கின்றன. பொறுமைக்கு முதன்மைதரலாம் பொருளில் தொய்வு இல்லை, சுவையிலும் குறைவில்லை.

'நிதர்சனமான உண்மை' என்று உண்மையை அறுதியிட்டுச் சொல்ல அவ்வப்போது 'நிதர்சனம்' 'அப்பட்டமி'ன்றி அப்பட்டமாக பயன்படுகிறது. நிதர்சனமும் அப்பட்டமும் ஒரே பொருள் என்பது அப்பட்டமான உண்மை.

அருணாக்கொடி

மதியம் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து டொண்டக்க டொண்டக்க என்று கொட்டடித்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி. அந்தப் பக்கமாக அவசரமாக ஓடி வந்த செந்திலை நிறுத்தினார்.

"டேய் நாதஸ். எங்கடா வேகாத வெயில்ல வெந்த வெந்தயமா ஓடுற? இங்க வந்து நான் நலந்தானா வாசிக்கிறதக் கேளுடா...."

படக்கென நின்று மூச்சு விட்டபடியே பேசுகிறார் செந்தில். "அண்ணே, முக்கியமான வேலையாப் போறேன். தடுக்காதீங்கண்ணே!"

"(சத்தமாக) ஆமா.....இவரு புருனே சுல்தானு. தங்கத்தக் கொட்டி வெக்க எடமில்லாம தேனிக்குப் பக்கத்துல இருவது ஏக்கரா நெலம் வாங்கப் போறாரு. நில்றா....கிட்டக்க வா மகனே மொதல்ல."

பக்கத்தில் போகிறார். "வந்துட்ட்ட்டெண்ணே"

"(மெதுவாக) ஆமா..இவரு பெரிய அப்துல் கலாம். வந்ததும் வரவேற்கனுமாக்கும். (சாதாரணமாக) இப்பிடி வேர்க்க விறுவிறுக்க எங்க ஓடுற?"

தபதபவென இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டே..."அது வந்துண்ணே...அருணா....கொடி..."

"என்னதுதுதுதுதுது! அருணாவா? யாரு வெள்ளாவிக்குத் துணியெடுக்க வருவாளே அந்தக் கொடியிடை அருணாவா?" கவுண்டரின் பேச்சிலும் முகத்திலும் மலர்ச்சி தெரிகிறது.

"ஐயோ...ஏந்தா இப்பிடி இருக்கீங்களோ" தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். "அருணாக்கொடிண்ணே அருணாக்கொடி. இடுப்புல கட்டுற கருப்புக் கயிறுண்ணே."

கவுண்டரின் மூஞ்சி மாறுகிறது. நா தழதழத்துக் கொண்டே "ஏண்டா! இடுப்புல கட்டுற கயித்துக்குப் பேரு அருணாக்கொடியாடா? போன வாரம் இப்பிடித்தான் அந்த நோஞ்சா மூஞ்சி முருகேசு வந்து அண்ணாக் கயிறு வாங்கப் போறேன்னு சொன்னான். கட்சியில எதுவும் சேந்துட்டியா கண்ணான்னு கேட்டா ஒரு மாதிரி பாத்துட்டுப் போறான். வேண்டாம்டா...விட்டுருங்கடா!"

மிடுக்காக விரலை உயர்த்திச் சொல்கிறார் செந்தில். "அண்ணே நீங்க ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கனும். அருணாக்கொடியும் அண்ணாக்கயிறும் ஒன்னுதாண்ணே. இந்த அடிப்படை அறிவு கூட இல்லையேண்ணே. எப்படிப் பொழைக்கப் போறீங்களோ?"

"என்னது அடிப்படையா? அதெல்லாம் ஒனக்குத்தானடா பூந்தி வாயா! எனக்கேதுடா அடிப்படையும் சொறிப்படையும்! ஏதோ இந்த மேளம் இருக்கக்கண்டு பொழச்சுக்கிறேன்."

"சரிண்ணே...நீங்க இதையே டொக்கு டொக்குன்னு தட்டுங்க. நான் போய் அருணாக்கொடி வாங்கீயாரேன்."

சற்று ஆத்திரத்தோடு. "டேய் நில்லு. திரும்ப இன்னொருவாட்டி அருணாக்கொடி அண்ணாக்கயிறுன்னு ஒளறுன நாக்க அறுத்து எலிக்குப் போட்டுருவேன். அது அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிறு. புரிஞ்சதா?"

"அண்ணே. அதை அருணாக்கொடின்னும் சொல்லலாம். அண்ணாக்கயிறுன்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே." சொல்லி விட்டுக் கெக்கே பெக்கே எனச் சிரிக்கிறார் செந்தில். கவுண்டர் கடுகடுப்பாகிறார். செந்தில் தோளில் கை வைத்து உட்கார வைக்கிறார்.

"நாதஸ். இந்த அண்ணாக் கயிறு, தங்கச்சிக் கயிறு, தம்பிக் கயிறு எல்லாத்தையும் விட்டுரு. நான் நல்லாச் சொல்றேன் கேட்டுக்க. அரைனா இடுப்பு. எங்க சொல்லு."

"ஐயோ அண்ணே. அரைன்னா இடுப்பா..ஹெக்ஹெக்ஹெக். அரைன்னா அரையறுதுன்னே. அதுல நீங்க எஸ்பேட்டாச்சே. அரைன்னா அரையறுது. அறையின்னா ரூம்புன்னே."

"அடேஏஏஏஏஏஏய். வாய மூடு. இதுக்கு மேல ஏதாவது பேசுன.......(கோவத்தைக் கட்டுப்படுத்துகிறார்.) இங்க பாருப்பா. சுந்தரரு என்ன சொல்லீருக்காரு?"

"என்ன சொல்லீருக்காரு?"

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்துன்னு சிவபெருமானைப் பத்திப் பாடியிருக்காரு."

"அண்ணே ஒரு சந்தேகம்னே. சிவபெருமான் புலித்தொலியக் கொண்டு யாரண்ணே அரஞ்சாரு?"

"இப்ப நாந்தான் ஒன்ன அரையப் போறேன். முழுசாக் கேளுடா முள்ளங்கி மூக்கா. பொன்னார் மேனியன்னா....தங்கம் போல பளபளன்னு இருந்தாராம் சிவன். புலித்தோலை அரைக்கிசைத்துன்னா...இடுப்புல புலித்தோலைக் கட்டியிருந்தாராம். இசைத்துன்னா கட்டிக்கிறதுன்னும் சொல்லலாம். அதுல வர்ர அரைக்கு இடுப்புன்னு பொருள். அப்படி இருப்புல கட்டுற கயித்துக்குத்தான் அரைஞாண்னு பேரு. பின்னூட்டங்கள மொதல்ல படி. அதுல ஜெயஸ்ரீ ஞாண்னா கயிறுன்னு அழகா எடுத்துச் சொல்லீருக்காங்க பாரு. இடுப்புக்கான கயிறு அரைஞாண். புரிஞ்சதா?"

தலையை ஆட்டுகிறார் செந்தில். "புரிஞ்சிருச்சின்னே. நீங்க தெய்வம்னே. இந்தத் தமிழு எங்கிருந்துண்ணே வந்துச்சு."

கவுண்டரின் முகம் பெருமிதப்படுகிறது. "டேய். அதெல்லாம் மதுரைல இருந்து நேரா டாக்சி வச்சிக்கிட்டு வர்ரது. நான் என்ன மெயில்ல ஜிரா சொல்றதக் கேட்டா தெரிஞ்சிக்கிறேன். தானா வர்ரது. போறது. ஹெ ஹெ ஹெஹ்ஹஹே."

"சரின்னே நான் கடைக்குப் போயி அரைஞாண் வாங்கியாந்துர்ரெண்ணே." கையசைத்து விடை கொடுக்கிறார் கவுண்டமணி.

சிறிது நேரம் கழித்து செந்திலை ஒரு கூட்டமே துரத்திக் கொண்டு வருகிறது. தலை தெறிக்க ஓடுகிறார் செந்தில். துரத்தியோடும் ஒருவனை நிறுத்திக் கேட்கிறார். "ஏம்ப்பா இப்பிடி அவனத் தொரத்துறீங்க?"

"அந்தக் கொடுமைய....இவன் கடைக்குப் போயி அரைஞாண்னு என்னவோ ஒரு கயிறக் கேட்டிருக்கான். கடையில இருந்த பெருசு...இவன் ஏதோ சூனியம் வெக்க கயிறு கேக்குறான்னு ஊரக் கூட்டீட்டாரு. அப்புறந்தான் தெரிஞ்சது அவன் கேட்டது அருணாக்கொடின்னு. அத ஏன்டா அரைஞான் கயிறுன்னு சொல்றன்னு கேட்டா.....தெனாவெட்டா அது தமிழு. மதுரைல இருந்து டாக்சி வெச்சிக்கிட்டு வந்ததுன்னு சொல்றான். அதான்ன தொரத்துறோம்." சொல்லி விட்டு ஓடுகிறார் துரத்துகிறார். கவுண்டமணி முகத்தை ஒரு பக்கமாக இழுத்தாற்போல வைத்துக் கொள்கிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, June 04, 2008

சுவாரசியம்

அடுத்தவர்களின் செயல்பாடுகளை (சங்கதி) அறிந்து கொள்வது என்பதில் ஆண் என்ன ? பெண் என்ன ? அவை எல்லோருக்குமே சுவாரசியாமன ஒன்று தான். நம் வலைப்பதிவுகளில் 'சாம்பு' என்ன எழுதி இருக்கிறார், 'கழுகார்' என்ன எழுதி இருக்கிறார் ? எவர், எவர் பற்றிய தகவல்கள் கசிகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் இருக்கும்.

உங்க வாழ்க்கையில் மிக சுவாரசியமாக நடந்த ஒன்றை சொல்கிறீர்களா ? என்று கேட்போம். 'கடிதம் கொடுத்து அசடுவழிந்தது, விடுப்பு எடுத்து திரைப்படம் பார்க்கச் சென்று தற்காலிகமாக பாட்டி தாத்தாவை சாகடித்தது' என்பது போன்ற இளமையின் குறும்புகள் பற்றிய நினைவுகள் சிலருக்கு உடனே நினைவு வந்துவிடும்.

இது போல் கேட்பதற்கு, சொல்வதற்கு மிக விரும்பிய செய்திகளில் சுவாரசியத்தை நுழைத்துப் பேசுவோம். சிலருக்கு திரை நடிகர், நடிகைகளின் கிசு கிசுக்களைப் படிப்பதில் என்ன ஒரு சுவாரிசியம் ! என்ன ஒரு சுவாரிசியமான செய்தியாக அவைகள் இருக்கின்றன!.

மிகவும் வியப்பான செய்திகளைக் கேட்கும் போது தெரிந்தவர்களுக்கெல்லாம் இதைச் சொன்னால் என்ன ? என 'சுவாரிசியம்' உணர்வுகளில் சேர்ந்து கொள்கிறது, அதனடிப்படையில் வதந்திகள் விரைவாக பரவுகின்றன. சுவாரசியம் என்பது ஒரு மகிழ்வுடன் தொடர்புடைய ஒரு உணர்வுச் சொல்.

ஆங்கிலத்தில் சில சொற்களுக்கு பல பொருள்கள் உள்ளது போல... தமிழிலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் இடத்துக்கு ஏற்றவாறு உண்டு. அவற்றை தனியாக சொல்லிப் பார்த்தால் ஒரு பொருளாகவும், சொற்றொடர்களில் (வாக்கியம்) அமைத்துப் பயன்படுத்தும் போது மெல்லிய வேறுபாடு அல்லது முற்றிலும் மாறுபட்ட பொருளைத் தரும் சொற்கள் உள்ளன. இனிமை, சுவை என்பவை அது போன்ற சொற்கள் தான். 'கரும்பின் சுவை இனிமை என்னும் போது இனிமை என்பது இனிப்பு என்னும் சுவை தொடர்பில் சொல்லப்படுகிறது. 'இளையராஜாவின் இசை கேட்பதற்கு இனிமை' என்று சொல்லும் போது செவிக்கு / மனத்துக்கு இதமான ஒரு உணர்வு என்று சொல்வதற்கு 'இனிமை'பயன்படுகிறது.

இது போன்றே 'சுவையான சமையல்' என்னும் போது உணவின் சுவையைக் குறிக்க 'சுவை' யை பயன்படுத்துகிறோம். அதே சுவையை செய்திகளில் சேர்த்துச் சொல்லும் போது ஒரு 'சுவையான தகவல் இருக்கிறது சொல்லட்டுமா ? 'அல்லது 'எதாவது ஒரு சுவையான நிகழ்வை (சம்பவம்) சொல்லமுடியுமா ?' என்று கேட்கிறோம்.

தமிழ் சுவையின் சுவையை மேலும் கூட்ட எங்கெல்லாம் சுவாரசியம் பயன்படுத்துகிறோமோ, அங்கெல்லாம் 'சுவை'யைக் கூட்டிக் கொள்வதால் சுவாரசியத்தின் பயன்பாட்டை குறைத்து தமிழை மேலும் 'சுவை'படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினாலும் சொற்றொடரில் பொருள் வேறுபடாது.

பின்குறிப்பு : எழுத்துப் பிழை எதாவது இருந்தால், சுவாரசியத்துக்கு மாற்றான வேறு கலைச் சொற்கள் இருந்தால் தெரிவியுங்கள். சுவையான உங்கள் பின்னூட்டங்களை சுவைக்க காத்திருக்கிறேன்.

Tuesday, June 03, 2008

சொல் ஒரு சொல் - ஏன்?

சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

இது தான் எஸ்.கே. 'சுடர்' தொடர்ப்பதிவிற்காக என்னிடம் கேட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லி விட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியில் இருக்கும் கருத்தை ஒட்டியும் வெட்டியும் கடந்த சில நாட்களாக வலைப்பதிவுகளில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கும் என் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். அதனால் இதனைத் தனிப்பதிவாக இடுகின்றேன். 'சொல் ஒரு சொல்' பதிவில் என்னுடன் இராகவனும், கோவி.கண்ணன் அண்ணாவும் இணைந்து இடுகைகள் இட்டுவருகின்றனர். அவர்களுக்கும் நான் இந்தப் பதிவில் சொல்லப்போகும் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றில் ஒப்புதல் இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கெல்லாம் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதோ அவற்றை அவர்கள் தயங்காமல் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் தங்கள் கருத்துகளைத் தயங்காமல் சொல்லுங்கள்.

***

முதலில் மேலே கேள்வியில் இருக்கும் கருத்தினை ஒட்டியும் வெட்டியும் வரும் கருத்துகளைச் சுருக்கமாகப் பட்டியல் இடலாம்.

ஒட்டி வரும் கருத்துகள்:

1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?

2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.

3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.
4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.


கேள்வியில் இருக்கும் கருத்துக்கு மாற்றாக வரும் கருத்துகள்:

1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.

2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.

***

எனக்கு இரண்டு தாய்மொழிகள். இரண்டாவது தாய்மொழி தமிழ். சௌராஷ்ட்ரனாய் இருப்பது இந்தப் பிரச்சனையில் எனக்கு ஒரு ஆழ்ந்த பார்வையைக் கொடுத்திருக்கிறது. இரு தலைமுறைக்கு முன்னர் சௌராஷ்ட்ரர்கள் பல நல்ல சௌராஷ்ட்ரச் சொற்களை எளிதாகப் பேசிக் கொண்டிருந்தனர். என் பெற்றோர்களின் தலைமுறை சௌராஷ்ட்ரத்தில் பேசும் போது நிறைய தமிழ்ச்சொற்களைப் புழங்கத் தொடங்கியது. என் தலைமுறையினர் தமிழ்ச்சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் கலந்து தான் சௌராஷ்ட்ரம் பேசுகின்றனர் (பேசுகிறோம்). அவர்கள் பெற்றோர்கள் பேசிய சொற்களை என் பெற்றோர்களின் தலைமுறையினர் புரிந்து கொண்டனர் - ஆனால் அவற்றை எங்களிடம் தரவில்லை. அதனால் எங்களிடம் சௌராஷ்ட்ரம் பேச தேவையான எல்லா சொற்களும் இல்லை; அதனால் எங்கள் எண்ணங்களை நன்கு வெளிப்படுத்த வேற்று மொழிச் சொற்களைப் புழங்க வேண்டிய கட்டாயம்.

இன்னொன்றையும் சொல்கிறேன். 19ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் வாழ்ந்த நடனகோபால நாயகி சுவாமிகள் இயற்றிய சௌராஷ்ட்ர மொழிப் பாடல்கள் எதுவுமே என் தலைமுறையினருக்குப் புரியாது. ஆங்காங்கே ஒரு சில சொற்கள் புரியும். அவ்வளவு தான். அவ்வளவு ஏன்? என் தந்தையாரிடமும் என் மாமனாரிடமும் ஒரு முறை டி.எம்.எஸ். பாடிய இந்தச் சௌராஷ்ட்ர பாடல்களைப் போட்டுக் காண்பித்தேன். அவர்களுக்கும் அதே நிலை தான். 'நம் மொழி என்று தெரிகிறது. ஆனால் எல்லா சொற்களும் புரியவில்லை' என்கிறார்கள். பாடலை எழுத்து வடிவில் பார்த்தால் புரியாமல் போகலாம். பாட்டாகப் பாடும் போது கூடப் புரியவில்லை என்றால்? அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எழுதியவற்றை. அப்படி என்றால் எத்தனை இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்?

என் நல்வினைப்பயன் இந்தப் பாடல்களில் இருக்கும் பெரும்பான்மையான சொற்கள் எனக்குப் புரிகின்றன. செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே. அது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். மொழி ஆர்வத்தால் சௌராஷ்ட்ர மொழியின் சொற்களும் புரிகின்றன. சிவமுருகனைத் தவிர்த்து இந்த பாடல்களை முழுதாகப் புரிந்து கொள்ளும் எங்கள் தலைமுறையினரை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தக் காரணத்தால் தான் சிவமுருகனும் நானும் நாயகி சுவாமிகளின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிக் கொண்டிருக்கிறோம் - அப்போதாவது சௌராஷ்ட்ர இளைஞர்களுக்கு தங்கள் மொழியில் உள்ள பாடல்கள் புரியுமே என்று.

கால்கரி சிவா அண்ணாவுடனும், அவருடைய அண்ணனுடனும் பேசும் போது அவர்கள் என் சொற்தொகையில் (Vocabulary) இல்லாத சில சொற்களைப் புழங்கக் கண்டேன். அவர்கள் என்னை விட மூத்தவர்கள்; எனக்கும் முன்னாலேயே மதுரையை விட்டுக் கிளம்பியவர்கள் என்பதை அதன் மூலமே சொல்லிவிடலாம். என்னுடைய மொழி ஆர்வத்தையும் மீறி அவர்கள் புழங்கிய அந்த சௌராஷ்ட்ர சொற்கள் ஏன் என் சொற்தொகையில் இல்லை? இப்படியே இருந்தால் யாருக்கு நட்டம்? எனக்கும் சௌராஷ்ட்ரத்திற்கும் தானே.

இந்த நிலைக்கு என் முன்னோர்களை மட்டுமே குறை கூற விரும்பவில்லை. இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு பல சமூக, வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசுவது இந்தப் பதிவின் நோக்கத்திற்குத் தேவையில்லாதது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

***

என் பின்புலத்தைச் சொன்னது என் கருத்துகள் எந்த இடத்திலிருந்து வருகின்றன என்று காட்டுவதற்காகத் தான். அது மட்டுமின்றி கற்பது இரண்டு வகை - தானே பட்டு கற்றுக் கொள்வது; மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வது. தமிழ் இங்கே சௌராஷ்ட்ரத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். (சௌராஷ்ட்ரத்தை எந்த வகையிலும் நான் தாழ்த்தி எழுதவில்லை என்றே நினைக்கிறேன். அப்படி யாருக்காவது தோன்றினால் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்).

மேலே ஒட்டியும் வெட்டியும் வருகின்ற கருத்துகளின் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அறிவேன். நான் சொல்வதும் என் புரிதல், நம்பிக்கை, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையிலேயே இருப்பதால் ஏதோ ஒரு அரசியல் சார்பாகத் தோன்றலாம். நான் சொல்வதே உண்மை. மற்ற கருத்துகள் எல்லாம் பொய் என்று எண்ணவில்லை.

***

இப்போது கருத்துகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பேசலாம். முதலில் எஸ்.கே.யின் கேள்வியை ஒட்டி வரும் கருத்துகளைப் பார்ப்போம்.

1. ஆங்கிலம் எந்த வித தயக்கங்களும் இன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டதால் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது. தமிழில் இருக்கும் வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதின் மூலம் அப்படிப் பரிந்துரைப்பவர்கள் தமிழை ஒரு தேக்க நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். அது தமிழுக்கு ஒரு பின்னடைவு. அப்படி தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைக்கும் போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத படி எழுதுகிறார்கள். அப்படி எல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் தமிழில் எழுதுவதற்கே சாதாரண மக்களுக்கு ஆர்வம் போய்விடும். அப்படி நடந்தால் அது தமிழுக்கு வளர்ச்சியைத் தருமா?

ஆங்கிலத்தில் வேற்று மொழிச் சொற்களைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். உண்மை. சொற்களின் குறை இருக்கும் போது வேற்று மொழிச் சொற்களை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை. அதனைத் தான் ஆங்கிலம் செய்கிறது. ஆனால் அது தான் ஆங்கிலத்தின் வளர்ச்சிக்குக் காரணம் என்பது சரியில்லை. ஆங்கிலம் வளர்வதற்கு வேறு காரணிகள் இருக்கின்றன. முன்னாள் உலக வல்லரசும் இன்னாள் உலக வல்லரசும் ஆங்கிலம் பேசியதாலும் பேசுவதாலும் மற்றவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. அந்த வலுவில் தான் ஆங்கிலம் வளர்கிறதே அன்றி வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வதால் இல்லை. மேலே சொன்னது போல் வேற்று மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வது அந்த மொழியில் அந்தச் சொற்கள் இல்லாததால்.

ஆங்கிலத்தில் ஏற்கனவே சொற்கள் இருந்து அந்தச் சொற்களுக்குப் பதிலாக வேற்று மொழிச் சொற்களைப் புழங்கினால் அது தவறு. அது மொழி அழிவதற்குத் தான் வழி வகுக்கும். ஆங்கிலத்திற்கு இருக்கும் மற்ற காரணிகள் இல்லாத மொழிகளுக்கு இது இன்னும் அதிகமான உண்மை என்பதை உணரவேண்டும். சௌராஷ்ட்ரம் ஒரு எடுத்துக்காட்டு.

இன்று நாம் தமிழில் மற்ற மொழிச் சொற்களைக் கலந்து பேசுகிறோம். அதனால் மிக எளிதான பாரதியார் பாடல்களுக்குக் கூட விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இது நல்லதில்லை.

பல நூற்றாண்டு கால இலக்கியங்கள் இருக்கும் தமிழ் போன்ற செம்மொழிகளில் மனிதனின் கருத்துகளில் பெரும்பான்மையானவற்றைச் சொல்வதற்குச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவது அந்த மொழி அழியாமல் காப்பாற்றும். அதனை விட்டு வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவது தான் மொழி வளர்வதற்கு வழி என்ற தவறான எண்ணத்தால் வேற்று மொழிச் சொற்களைப் புழங்கத் தொடங்கினால் தமிழை மறந்துவிட்டு வேற்று மொழியையே பேசும் காலம் வர நெடுங்காலம் செல்லாது.

எல்லா கருத்துகளையும் கூற தமிழில் சொற்கள் இருக்கின்றன என்று சொல்ல இயலாது. புதிதாக வந்த அறிவியல் சொற்களுக்கு நேரான சொற்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அவற்றிற்கு ஏற்ற கலைச்சொற்களைத் தமிழில் பரிந்துரைத்துப் புழங்கச் செய்வது தமிழை வளர்க்குமா? வேற்று மொழிச் சொற்களை அந்த நேரத்தில் புழங்குவது தமிழை வளர்க்குமா?

அப்படி பரிந்துரைக்கப்படும் சொற்களில் எது கடினம் எது எளிது என்பது அவரவர் மொழி அறிவைப் பொறுத்தது. கொஞ்சம் இலக்கிய பழக்கம் இருப்பவர்களுக்கு எளிதாகத் தோன்றும் சொற்கள் இலக்கிய பழக்கம் இல்லாதவர்களுக்கு கடினமாகத் தோன்றலாம். ஆனால் அதே சொற்கள் பழக்கத்தினால் எளிதாகத் தோன்றத் தொடங்கும். சில காலத்திற்கு முன்னால் பரிந்துரைக்கப்பட்ட பேருந்து, சட்டப்பேரவை, பேரவைத் தலைவர் போன்ற சொற்கள் இப்போது கடினமாக இருக்கின்றனவா? பெரும்பான்மையானவர்களுக்குப் புரிகின்றதல்லவா? அதே போல் இப்போது கடினமாகத் தோன்றும் பல பழைய சொற்களும் புதிய சொற்களும் மீண்டும் புழக்கத்தில் வரும் போது அவை எளிதாகத் தோன்றும்.

பரிந்துரைக்கப்பட்ட எல்லாச் சொற்களும் புழக்கத்தில் வருவதில்லை. அதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. யார் அந்தச் சொற்களைப் புழங்குகிறார்கள், எந்த பொருளில் புழங்குகிறார்கள், அந்த சொற்களின் வீச்சு என்ன என்று பல காரணிகள் இருக்கின்றன. அதனால் பழைய சொற்களை எடுத்துக் கொடுப்பதும் புதிய சொற்களை உருவாக்குதலும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். 100 சொற்கள் பரிந்துரைக்கப் பட்டால் அதில் 50 சொற்கள் புழக்கத்தில் வந்தாலே அது பெரும் நன்மையை விளைக்கும். அதுவே மொழி அழியாமல் இருப்பதற்கும் வளர்வதற்கும் வழி.

பின்னூட்டம், உள்குத்து, வெளிக்குத்து போன்ற சொற்களை பதிவுலகம் தவிர்த்து மற்ற இடங்களில் பேசினால் அவை மற்றவர்களுக்கு கடினமான சொற்களாகத் தோன்றும். அப்படி துறை சார்ந்த சொற்களும் இருக்கின்றன. அந்த பரிபாஷையை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது அந்தத் துறையின் வீச்சைப் பொறுத்து அமையும்.

2. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கின்றது. தமிழ் மட்டும் விதிவிலக்கு இல்லை. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தமிழால் இருக்க முடியாது.

இரு வேறு மொழி பேசுபவர்கள் பழகும் போதும் ஒருவர் மொழியை மற்றவர் கற்கும் போது மொழிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் நடப்பது இயற்கை. அப்படி பார்க்கும் போது பண்பாட்டு அளவிலும் பல வித வரலாற்று, அரசியல் காரணிகளாலும் தமிழும் வடமொழியான சமஸ்கிருதமும் நெருங்கிப் பழகியது. வேண்டுமென்றோ இல்லை இயற்கையாகவோ வடமொழியில் தமிழ்ச்சொற்களும் தமிழில் வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. அப்படி வேறு இடங்களில் இருந்து வரும் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழ்ச்சொற்களுக்கு இணையாகப் புழங்குவதற்கு இலக்கணத்திலேயே திசைச்சொற்கள் என்று ஒரு பிரிவை வைத்து வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள் தமிழ் ஆன்றோர்கள். இயற்கையாக இப்படி ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்வது அந்த இன்னொரு மொழியின் தேவைக்கேற்ப அமையும். அவ்வாறின்றி வேண்டுமென்றே ஒரு மொழியின் சொற்களைப் புழங்காமல் வேற்று மொழிச் சொற்களையே புழங்குவது முதல் மொழியின் சொற்கள் அழிவதற்கே வழி வகுக்கும்.

சங்க இலக்கியங்களைத் தவிர்த்து மற்ற தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஓரளவு பழக்கம் இருக்கிறது. அப்படி இலக்கியங்கள் படிக்கும் போது இப்போது தமிழில் புழங்கும் பல வடமொழிச்சொற்களுக்கு (திசைச் சொற்களுக்கு) இணையான தமிழ்ச்சொற்கள் இருப்பதைக் காண்கிறேன். அவற்றை மீண்டும் புழக்கத்தில் கொண்டுவந்தால் அந்த சொற்கள் அழியாமல் இருக்கும். அந்தச் சொற்களை புழக்கத்தில் கொண்டு வருதல் திசைச்சொற்களை (வேற்று மொழிச் சொற்களை) முழுவதுமாக தமிழ் அகராதிகளில் இருந்து எடுப்பதற்காக இல்லை. பழந்தமிழ்ச் சொற்கள் தமிழ் அகராதிகளில் இல்லாமல் போகும் நிலையைத் தவிர்க்க. அந்த பழந்தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பதாலும் மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவதாலும் திசைச் சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களும் - இரண்டுமே புழக்கத்தில் இருக்கும். எது எளிதாக இருக்கிறதோ அது மக்கள் நடுவில் புழக்கத்தில் நிற்கும்.

வடமொழியின் தாக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் பல மொழிகளிலும் இருக்கிறது என்பது உண்மை. அதே நேரத்தில் தமிழின் தாக்கம் வடமொழி முதற்கொண்டு பல மொழிகளில் இருக்கிறது என்பதும் உண்மை. வடமொழியின் துணையின்றி தமிழால் இருக்க முடியாது என்று எண்ணுபவர்கள் தமிழிலிருந்து தான் வடமொழிச் சொற்கள் பிறந்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டும் போது பதறுதல் கூடாது.

நான் அறிந்த வரையில் தமிழால் தனித்து இயங்க முடியும். எந்த விதமான கருத்துகளையும் எடுத்துக் கூறும் வகையில் தமிழில் அடிச்சொற்கள் இருக்கின்றன. அந்த அடிச்சொற்களை வைத்து புது அறிவியல் கருத்துகளைக் கூறும் சொற்களையும் தமிழால் சொல்ல முடியும். அப்படியே சில சொற்கள் தமிழில் ஏற்படுத்த முடியாவிட்டால் அப்போது மற்ற மொழிச் சொற்களை எடுத்தாள தமிழில் திசைச்சொல் என்ற வகை இருக்கிறது. ஆனால் அப்படி செய்வது தமிழில் அந்தக் கருத்தைச் சொல்ல முடியாது என்பது நன்கு நிறுவப்பட வேண்டும். அதற்கு முன்னரே வேற்று மொழிச் சொற்களைப் புழங்கிவிட்டு தமிழில் அதற்குச் சொல் இல்லை; தமிழில் அந்தக் கருத்துகளைச் சொல்ல இயலாது; தமிழால் தனித்து இயங்க இயலாது என்று சொல்வது சரியன்று.

3. ஸ்டாலின், இஸ்லாம், சரஸ்வதி, சுரேஷ், சமஸ்கிருதம் போன்ற வேற்று மொழிச் சொற்களை இசுடாலின், இசுலாம், சரசுவதி, சுரேசு, சமசுகிருதம் என்று எழுதுவதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. இப்படி எழுதுவது கொடுந்தமிழ்.

ம்ம்ம். முதன்முதலில் இசுடாலின், இசுலாம், சரசுவதி போன்றவற்றைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பாகத் தான் இருக்கும். கன்னன், கருணன், துருபதை, இலக்குவன், சானகி, தயரதன், கோசலை, சுமித்திரை, சனகன், விசுவாமித்திரன், வசிட்டன், விட்டுசித்தன், வீடணன், கும்பகருணன், அயோத்தி, மிதிலை, யுதிட்டிரன், வீடுமன் போன்ற சொற்களைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கிறதா? இயல்பாக இருப்பது போல் தோன்றுகிறதா? இயல்பாக இருப்பது போல் தான் தோன்றுகிறது. ஏன்? ஏனெனில் இவை இலக்கியத்தில் படித்திருக்கிறோம். படித்துப் பழக்கம் இருக்கிறது. இப்படி வேற்று மொழிப் பெயர்ச் சொற்களைத் தமிழ்படுத்திச் சொல்வது தமிழ் மரபு. அப்படித் தான் இலக்கியங்களில் செய்திருக்கிறார்கள். அதன் படி இலக்கணமும் அமைத்திருக்கிறார்கள். இசுடாலின், இராசீவ் போன்ற சொற்களை முதலில் பார்க்கும் போது அவை சிரிப்பாக இருக்கலாம். ஆனால் பழக தொடங்கிய பின் அவை இயற்கையாக இருக்கும். அதனை விட்டுவிட்டு அப்படி எழுதுவது கொடுந்தமிழ் என்றால் இலக்கியங்கள் எல்லாவற்றையுமே கொடுந்தமிழ் என்றே சொல்ல வேண்டும். அவற்றில் சமய இலக்கியங்களும் அடங்கும்.

4. மொழி என்பது ஒருவர் எண்ணத்தை மற்றவருக்குச் சொல்வதற்கு ஏற்பட்ட வழி. அவ்வளவு தான். நான் சொல்வதை யாரிடம் நான் சொல்கிறேனோ அவர்களுக்குப் புரிந்தால் போதும். அது எந்த மொழிச் சொற்களைக் கொண்டு சொல்லியிருந்தாலும் சரி. காலம் மாறுகையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நடந்தே தீரும்; இவற்றைத் தடுக்க நினைப்பது பிற்போக்குத்தனம்.

கால மாற்றத்தால் பல மாறுதல்கள் வரும் என்பது உண்மை. கால மாறுதலால் தான் சௌராஷ்ட்ரமும் இந்த நிலையில் இருக்கிறது. தருமி ஐயா சொன்னது போல் மூன்று தலைமுறைக்கு முன் தமிழே சரியாகத் தெரியாத பெண்கள் மதுரையில் இருந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் அடுத்த தலைமுறை தங்களைத் தனிப்படுத்திக் கொள்வதைக் குறைத்தது. தமிழருடன் கலந்து பழகத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழைக் கலந்து பேசத் தொடங்கியது. அடுத்தத் தலைமுறை தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுகிறது. இப்போது மிஞ்சியது முன்னேறிய சௌராஷ்ட்ரமா? சௌராஷ்ட்ரர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னர் இருந்ததை விட இப்போது முன்னேறியிருக்கலாம். ஆனால் அவர்கள் இழந்தது அவர்களின் மொழியில் இருந்த சொற்கள்.

இந்தப் போராட்டம் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. கால மாற்றத்தால் நடக்கும் செயல்கள் எல்லாமே நல்ல செயல்கள் இல்லை. சில நேரங்களில் ஈடு செய்ய முடியாத இழப்புகளும் நேர்கின்றன. இன்று நான் சௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்கிறேன். இன்னும் இரண்டு தலைமுறை இதே போல் சென்றால் இந்திய வம்சாவளியினர் என்று மேலை நாடுகளில் இப்போது சொல்கிறோமே அதே போல் சௌராஷ்ட்ர வம்சாவளியினர் மட்டுமே மிஞ்சுவார்கள்.

தமிழனின் நல்வினைப்பயன் (அதிருஷ்டம்) நிறைய தமிழ் இலக்கியங்கள் இருக்கிறது. நீண்ட நெடிய இலக்கிய பாரம்பரியம் இருக்கிறது. அவற்றின் மூலம் பழைய தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து வரலாம். அதனால் முன்னேற்றம் தடைபடாது. வேற்று மொழியினருடன் அவர்கள் மொழியில் பேசுவோம். நம்மவர்களுடன் நம் மொழியில் பேசுவோம். அப்படி நம் மொழியில் பேசும் போது நம் சொற்களைக் கொண்டு பேசுவோம். அதனால் நாம் முன்னேற்றமும் அடையலாம்; நம் மொழியும் தொலையாது.

(இவ்வளவு பேசுகிற நீ சௌராஷ்ட்ரத்தில் அது நடக்க ஏதாவது செய்யலாமே. தமிழைத் தமிழர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - என்று யாராவது சொன்னால் - அவர்களுக்கு என் பதில் இது - சௌராஷ்ட்ரத்திலும் இந்த விவாதம் நடக்கிறது. சௌராஷ்ட்ரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது வேற்று மொழியினர் இருக்கும் போதும் சௌராஷ்ட்ரத்தில் பேசிக் கொள்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டு இது நடப்பதைக் காட்டுகிறது. வேறு தளங்களில் சௌராஷ்ட்ரத்திற்காகவும் இந்த முயற்சிகளில் பலர் ஈடுபட்டுள்ளோம். மதுரையில் பிறந்து வளர்ந்த நாங்கள் தமிழாலும் தமிழராலும் அடைந்த நன்மைகள் ஏராளம். அந்த உணர்வில் இயற்கையாகத் தமிழ், தமிழர் என்றால் எங்களுக்கும் பதறுகிறது. மேலே சொன்னது போல் தமிழ் எனது இரண்டாவது தாய்மொழி. வேறு யார் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ எனக்கு தமிழும் தாய்மொழி தான்; நான் தமிழனும் தான். ஆக சொல் ஒரு சொல் பதிவு ஒரு தமிழனால் தான் தொடங்கப்பட்டிருக்கிறது).

இப்போது எஸ்.கே.யின் கேள்வியில் இருக்கும் கருத்திற்கு மாற்றுக் கருத்துகளைப் பார்ப்போம்.

1. வேற்று மொழிச் சொற்கள் தமிழ்ச் சொற்களை வழக்கிழக்கச் செய்கின்றன. ஒரு மொழியை அழிக்க அதன் சொற்களை வழக்கிழக்கச் செய்வதே எளிய வழி.

மேலே உள்ள கருத்துகளைப் பற்றி பேசும் போதே இந்தக் கருத்திற்கு ஆதரவாகப் பேசிவிட்டேன்.

2. வேற்று மொழிச் சொற்களைப் புழங்குவதால் வேற்று மொழியினர் / ஆதிக்க வகுப்பினர் தமிழ் மக்களை / அடக்கப்பட்ட வகுப்பினரை மேன்மேலும் அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர். வேற்று மொழிச் சொற்களைப் புழங்கி அவர்கள் ஏதோ மேதாவிகளைப் போல் தோற்றமளித்து வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தத் தெரியாத அப்பாவிகளை எளிதாக மன அளவில் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள்.

இது நடக்கவில்லை என்று மறுக்க முடியாது. நடக்கிறது. ஆனால் இது ஒரு பகுதி மட்டுமே. எந்த வித ஆதிக்க மனப்பான்மை இல்லாமலும் எந்த வித உள்நோக்கங்கள் இல்லாமலும் பழக்கத்தின் காரணமாக மட்டுமே பலர் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்கள். அவை வேற்று மொழிச் சொற்கள் என்று கூட அறியாமலேயே.

வேற்று மொழிச் சொற்களை புழங்கி மேதாவிகளைப் போல் தோற்றமளிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேற்று மொழிச் சொற்களைப் புழங்குபவர்கள் எல்லாருக்குமே மேதாவிகளைப் போல் தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களின் மேல் நாம் அந்தப் பழியைப் போடும் போது, நம்மைப் பார்த்து அவர்கள் 'சரி. நீங்கள் தமிழில் தானே எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவது யாருக்குமே புரியவில்லையே. பலருக்கும் புரியாத பழைய சொற்களையும் நீங்களே உருவாக்கிய புதிய சொற்களையும் கலந்து தானே நீங்கள் எழுதுகிறீர்கள்?! அது உங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஆள்வதற்கா?' என்ற கேள்வியைக் கேட்பதற்கு வழி செய்கிறோம். நாம் பழந்தமிழ் சொற்களையும் புதிதாக நாமே உருவாக்கியச் சொற்களையும் வைத்து எழுதுவது நம் மேதாவித் தனத்தைக் காட்டுவதற்கு இல்லை. தனித் தமிழில் எழுதி தமிழ் வளர்க்கவே. தமிழ்ப் பணி செய்யவே என்பது நமக்குத் தெரியும். ஆனால் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றவர்கள் நம் கருத்துகளுடன் ஒத்துப் போகாதவர்களை அவர்கள் நினைக்காத ஒன்றை வைத்துத் தாக்கும் போது அதே தாக்குதல் நம் மீதும் எழுகிறது.

நம் நோக்கம் அவர்களைத் தாக்குவதைத் தவிர்த்துவிட்டு அறியாமல் வேற்று மொழிச் சொற்களைப் புழங்குகிறார்களே - எந்த அரசியல் நோக்கமும் இல்லாத சாதாரணத் தமிழர்கள் - அவர்களுக்கு தமிழ் மொழிச் சொற்களை எடுத்துக் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தாக்குவது தேவையில்லாத ஒன்று. நம்மைத் தாக்கும் போது தகுந்த பதில் சொல்லலாம். நாமே சென்று தேவையில்லாமல் தாக்குதல் கூடாது. அதற்கு பதில் இராம.கி. ஐயாவைப் போலவும், தமிழ் விக்சனரி நண்பர்களைப் போலவும் ஆக்க பூர்வமான வேலையில் ஈடுபடவேண்டும். அதுவே நமக்கும், நம் மொழிக்கும் நல்லது.

***

சொல் ஒரு சொல் பதிவில் எழுதுபவர்கள் யாருமே தமிழ் அறிஞர்கள் இல்லை. இராம.கி. ஐயா போன்ற அறிஞர்கள் செய்யும் மொழி ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு தமிழ் அறிந்தவர்கள் இல்லை. இராம. கி. ஐயா போன்றவர்கள் பழந்தமிழ் சொற்களை மீட்டுக் கொடுக்கட்டும்; புதிய சொற்களை ஆக்கிக் கொடுக்கட்டும். புதிய சொல்லாக்கத்தில் 'தமிழ் விக்சனரி' நண்பர்களின் ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது. சொல் ஒரு சொல் பதிவில் நாங்கள் இந்த இரண்டையுமே செய்யவில்லை. இரண்டு பேர்களும் செய்வதிலிருந்து எடுத்துக் கொண்டு அதனை முடிந்த வரையில் பொதுமக்கள் விரும்பும் வகையில் கதை வடிவாகவோ, கட்டுரை வடிவாகவோ நகைச்சுவை வடிவாகவோ கொடுத்து பழைய சொற்களையும் புதிய சொற்களையும் புழக்கத்தில் கொண்டு வர முயல்கிறோம்.

அந்த வகையில் பார்த்தால் சொல் ஒரு சொல் முயற்சி பின்னோக்கு கருத்து இல்லை. புதுச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சிக்குப் பின்னடைவு இல்லை.

***
தொடர்ந்து சொல் ஒரு சொல் பதிவில் ஆக்கபூர்வமாகப் பங்கேற்று வரும் ஜெயஸ்ரீ அவர்கள் மிக அழகாக மேலே நான் நீட்டி முழக்கிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னது இதோ.

புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதோடு இருக்கும் பல நல்ல, அழகான சொற்களும் வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதற்கான நல்ல் முயற்சிதான் 'சொல் ஒரு சொல்' பக்கம் .

தமிழ்ச் சுடர்


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது பொய்யாமொழி. பலரின் மதிப்பினைப் பெற்றவர்கள் மறைந்தால் அவர்கள் நினைவாக திருக்கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றுவார்கள். எம்.ஜி.ஆர். இறந்த போதும் காஞ்சிப் பெரியவர் மறைந்த போதும் இந்திரா அம்மையார் கொலையுண்ட போதும் அண்மையில் தமிழக முன்னாள் பேரவைத்தலைவர் பழனிவேல்ராசன் மறைந்த போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கோபுரங்களில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளிலும் மறைந்தவர் நினைவாக சுடர்த்தீபம் ஏற்றுவது நம் பண்பாடு. வலையுலகில் பல்லோராலும் பண்பாளர் என்று போற்றப்படும் திரு. சாகரன் அவர்களின் மறைவிற்கு சுடர் ஏற்றி என் அஞ்சலியைச் செலுத்தி நண்பரும் அகவையில் மூத்தவரும் ஆன திரு. எஸ்.கே. அவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்க முயல்கிறேன்.

(இந்த சுடர் எனும் தொடர்ப்பதிவுகள் திரு.சாகரன் அவர்களின் நினைவாக என்று யாருமே எனக்குச் சொல்லவில்லை. எங்கும் படித்ததாகவும் நினைவில்லை. அதனால் நான் அப்படி குறிப்பிட்டது தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள்)

எஸ்.கே. கொஞ்சம் விவகாரமான கேள்விகளாகத் தான் கேட்டிருக்கிறார். எளிதாகப் பூசி மெழுகி பதில் சொல்லலாம். அப்படி சொல்லாமல் நேர்மையாக மனத்தில் தோன்றும் பதில்களைத் தந்திருக்கிறேன். ஏதேனும் அவையடக்கம் இன்றிப் பேசினால் குட்ட வேண்டிய அளவிற்குக் குட்டுங்கள். சரியான பதில்கள் என்று தோன்றினால் தர வேண்டியதைத் தாருங்கள்.

1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?

நான் சௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்ளும் போது அதனை ஒரு தமிழர் தான் தமிழன் என்றுச் சொல்லிக் கொள்வதைப் போல் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அது ஒரு தனி சாதியாக குறிக்கப்படுவதால் அதனை சாதியாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சௌராஷ்ட்ரர்களில் சாதிப்பிரிவினை இல்லை. புரோகிதர்களும் இருக்கிறார்கள்; எல்லா விதமான தொழிலை பரம்பரையாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள்; புரோகிதமும் தொழிலில் ஒன்றாக இருக்கிறது. பரம்பரையாக மட்டுமில்லாமல் மற்றவர்களும் புரோகிதம் கற்றுக் கொண்டு புரோகிதம் செய்கிறார்கள். அனைவரும் சௌராஷ்ட்ரர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள். (பெரும்பான்மையாக நெசவுத் தொழில் செய்பவர்களாக இருப்பதாலும் பட்டு நெசவில் தேர்ந்தவர்களாக இருந்ததாலும் - இருப்பதாலும் என்று சொல்லலாமா தெரியவில்லை - பட்டுநூல்காரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.) கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் சௌராஷ்ட்ரர்களும் சடங்குகளில் புரோகிதர்களாக இருக்கும் சௌராஷ்ட்ரர்களும் எந்த வித வேறுபாடுகளும் இன்றி எல்லாரிடமும் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். மொழி என்னும் கட்டுப்பாட்டால் சௌராஷ்ட்ரர்களுக்குள்ளேயே நடந்து வந்த கொடுக்கல் வாங்கல் இப்போது வேற்று மொழியினருடனும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.

உங்கள் கேள்வியின் அடுத்தப் பகுதி ஏன் சௌராஷ்ட்ரர்களைப் பார்ப்பனர்களுடன் வைத்துச் சதிராடுகிறார்கள் என்பது. அப்படி ஒரே ஒரு வலைப்பதிவர் மட்டுமே செய்கிறார். அவர் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்கள் மட்டுமே அப்படி சொல்கின்றன. அவர்(கள்) கருத்தினை சில நேரங்களில் தவறென்று நானும் இன்னொரு சௌராஷ்ட்ரப் பதிவரும் சொன்னதால் எங்கள் கருத்துகளை நேராக எதிர்க்காமல் எல்லா சௌராஷ்ட்ரர்களையும் திட்டுகிறார்(கள்). அவ்வளவு தான். அவர்கள் சொல்லும் கருத்திற்கு யார் எதிர் கருத்து சொன்னாலும் அவர் ஒன்று பார்ப்பனராக இருக்க வேண்டும்; இல்லை பார்ப்பன அடிவருடியாக இருக்க வேண்டும் என்ற தீவிரவாத எண்ணத்தின் வெளிப்பாடு தான் அந்த மாதிரிப் பேசுவது. You are with us or against us என்று புஷ் சொன்னதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை.

இந்த இந்தியத் திருநாட்டில் இருக்கும் மொழிகள் பலவற்றிற்கும் வடமொழிக்கும் என்ன தொடர்போ அந்த தொடர்பு தான் சௌராஷ்ட்ரத்திற்கும் வடமொழிக்கும் இருக்கும் தொடர்பு.

2. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!

மன்றங்கள் நிறைந்திருக்கும் மதுரை மாநகரிலே
என்றைக்கும் எழிலார்ந்த இன்ப பூங்காவிலே
கன்றுக்கு இரங்கும் கவின்பசுவாம் மீனாட்சிக்
கன்றான குமரனைப் போற்றினோம் போற்றினோம்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்
குன்றாத அருள் வீசி குவலயத்தைக் காக்கும் இடம்
குன்றங்கள் எத்தனை தான் இருந்தாலும் திருப்பரங்
குன்றத்தை ஒக்குமோ போற்றினோம் போற்றினோம்

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
இன்று அவன் மருகன் இனியனவன் பெற்றியை
என்றும் மனம் விரும்பிப் போற்றினோம் போற்றினோம்

3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?


நீங்கள் என்னக் கேட்க நினைத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. கேள்வியில் தவறுள்ளது. கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதுகிறேன். என்னுடைய தனி வலைப்பதிவுகளிலும் எழுதுகிறேன். வாரத்திற்கு குறைந்தது நான்கு ஐந்து பதிவுகளாவது எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். உங்களுக்கும் மின்னஞ்சலில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் பார்ப்பதில்லையோ என்னவோ?

நீங்கள் கேட்க நினைத்தது - கூட்டு வலைப்பதிவுகளைத் தவிர உங்களின் தனி வலைப்பதிவுகளை தமிழ்மணத்தில் தொடுப்பதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? - இது தான் உங்கள் கேள்வி. சரியா?

நல்ல கேள்வி. அண்மைக்காலமாக சில நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி. தமிழ்மணத்தில் இருந்து விலகுவதாக இரு மாதத்திற்கு முன் சொன்ன போது இருந்த சூழலுக்கும் இப்போதிருக்கும் தமிழ்மணச் சூழலுக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. அப்போதிருக்கும் நிலையே இப்போதும் இருக்கிறது. அதனால் எந்தக் காரணத்தைக் கூறி நான் விலகினேனோ அந்தக் காரணம் சரியாகிவிட்டது என்று நான் மீண்டும் தமிழ்மணத்தில் சேர முடியாது. அப்போதும் நீங்கள் கேட்டக் கேள்வியை பலர் கேட்டார்கள். நீங்கள் விலகுவதால் தமிழ்மணத்தில் இருக்கும் சூழல் மாறிவிடப்போவதில்லை; ஆனால் உங்களை விரும்பிப் படிக்கும் நண்பர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியாமல் போகும் - என்று சொன்னார்கள். அப்போது நான் சொன்ன பதில் - என் பதிவுகளை விரும்பிப் படிக்கும் நண்பர்களுக்கு நான் மின்னஞ்சலில் சொல்கிறேன்; அவர்கள் அதன் மூலம் பதிவுகளுக்கு வந்து படித்துக் கொள்வார்கள்; அப்படி படிக்க முடியவில்லை; நீங்கள் தமிழ்மணத்தில் இருந்தால் நாங்கள் உங்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வசதியாக இருக்கும்; என்று அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது நான் மீண்டும் வந்துவிடுவேன் - என்பது தான். தனிமடல்களிலும் மின்னரட்டைகளிலும் (Chat) சில நண்பர்கள் இதனைச் சொல்லியிருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் கருத்து அது தான் என்றால் நான் என் முடிவை மாற்றிக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது. நண்பர்கள் சொன்னால் நாராயணன் சொன்ன மாதிரி.

4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

இந்தக் குற்றச்சாட்டு உங்கள் குற்றச்சாட்டு இல்லை என்று நம்புகிறேன். இதற்கான பதிலை ஒரு தனிப்பதிவாகவே இடவேண்டும். சென்ற சில நாட்களாகத் தமிழ்மணத்தில் இந்த கருத்தினை ஒட்டியும் வெட்டியும் வரும் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது என் கருத்தைச் சொல் ஒரு சொல் பதிவில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதே நேரத்தில் இது அரசியல் பாற்பட்டது. தேவையில்லாமல், யாரும் என் கருத்தைக் கேட்காத போது என் மூக்கை நுழைக்க வேண்டுமா என்றெண்ணித் தயங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் கேட்டுவிட்டீர்கள். பதிலைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.

5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதும் உணர்ந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகவே அமைதியான மனம் உடையவன் நான். ஆட்டிவைக்கும் மிருகங்கள் எதுவும் இன்னும் அடங்கவில்லை. அதற்குரிய நேரம் வந்தால் தானே அடங்கும்.

முருகனருள் முன்னிற்கும்.

***

சுடர் பதிவுகளுக்கான விதிமுறைகள்

ஆத்திகச் சுடராய் என்னிடம் கொடுத்தார் எஸ்.கே. ஆத்திரச் சுடர் அடங்க வேண்டும் என்றும் விரும்பினார். ஆத்திரச் சுடரை அடங்கவைக்க ஆத்திகச் சுடரால் சில நேரம் முடிவதில்லை. ஆனால் விசுப்பாற்றிச் சுடரால் (நகைச்சுவைச் சுடரால்) கட்டாயம் முடியும். அதனால் இந்தச் சுடரை நம் நண்பர் நாமக்கல் சிபி அவர்களின் கரங்களில் தருகிறேன். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.

நகைச்சுவை நாயகர் நாமக்கல்லாருக்கு நான்கு கேள்விகள்(சே. இந்த கேள்விகள் என்ற சொல் வந்து மோனைச்சுவையைக் கெடுத்துவிட்டது):

1. நீங்கள் நடுநிலை நாயகர் என்று தெரியும். எல்லோரிடமும் நட்புடன் இருப்பதையே விரும்புபவர். உங்கள் கருத்துகளை நேர்மையாகச் சொல்பவர். ஆனாலும் எப்போதெல்லாம் புதிதாக பெயர் மறைத்து வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தில் தோன்றுகிறார்களோ அப்போதெல்லாம் அந்த வலைப்பதிவர் நீங்கள் தான் என்று ஒரு வதந்தி கிளம்புகிறதே? அது ஏன்? நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். நெருப்பு இருக்கிறதா?

2. உங்களிடம் கவிதை எழுதுங்கள் என்று மட்டுமே கேட்க நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதுவதோ புதுக்கவிதைகளாகவே இருக்கின்றன. அதனால் ஒரு மரபுக்கவிதை எழுதுங்கள். நாமக்கல்லையும் மதுரையையும் பாடலின் கருத்தாக வைத்து.

3. கலாய்த்தல் திணை என்ற பெயரில் பதிவெழுதுகிறீர்களே. திணை என்றால் என்ன என்று தெரியுமா? விளக்கமாக விளக்குங்கள். (சொல் ஒரு சொல் பதிவில் சேர விரும்புபவர்களுக்கு இது தான் முதல் கேள்வி).

4. அமெரிக்கா என்றவுடன் உங்களுக்கு எந்த நகரம் நினைவிற்கு வருகிறது? அந்த நகரத்தைப் பற்றி நகைச்சுவையாக எழுதுங்கள்.


ஆத்திரச் சுடர் அடங்கி ஆத்திகச் சுடர் விளங்கி விசுப்பாற்றி நிற்கட்டும்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

Monday, June 02, 2008

தீக்குறளை சென்றோதோம்!

'என்ன? என்ன சொல்றீங்கப்பூ? குறளை ஓத மாட்டீங்களா? உணர்ந்து தான் சொல்றீங்களா? இல்லை உளர்றீங்களா? திருக்குறள் உலகப் பொதுமறைங்கோ. எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டுக்கும் பொதுவான பொத்தகமுங்கோ. அத ஓதாட்டி உங்களுக்குத் தான் நட்டமுங்கோ. அம்புட்டுதான் சொல்லமுடியும்.'

'ஐயா. நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. தீக்குறளை சென்று ஓதோம்ன்னு தானே சொன்னேன். திருக்குறளை ஓதமாட்டேன்னா சொன்னேன்?'.

'என்னப்பூ இது? சொல்றதையும் சொல்லிப்புட்டு அப்புறம் இல்லைங்கறீங்க. அதென்ன திருக்குறளை தீக்குறள்ன்னு சொல்றது? இது நல்லதுக்கில்லைப்பூ. சொல்லிப்புட்டேன்'

'ஐயா. தீக்குறளைன்னா திருக்குறளைன்னு பொருள் கிடையாதுங்கையா. குறள்ன்னா குறுகியது; சின்னதுன்னு பொருளுங்கையா. சின்னதா இருக்கும் எல்லாத்தையுமே குறள்ன்னு சொல்லலாமையா. வாமன அவதாரத்தையும் குறள்ன்னு சொல்லுவாங்கையா தமிழ்ல. புள்ளையாரப்பனையும் அப்படி சொல்றது உண்டுங்கையா. திருக்குறள் முழுக்க சின்ன சின்ன குறள் வெண்பா வகையில பாக்கள் இருக்கிறதால அதுக்கு திருக்குறள்ன்னு பெயருங்கையா. இதெல்லாம் உங்களுக்கே தெரியுமையா'

'ஆமாம். தெரியுந்தான்'

'நான் சொன்னது குறளைங்கறதுங்க ஐயா. குறளை சொல்றதுன்னா புறம் பேசறதுங்கையா. குறளை சென்று ஓதோம்ன்னா எங்கேயும் போய் கோள் சொல்ல மாட்டொம்; புறம் பேசமாட்டோம்ன்னு பொருளுங்கையா. அதை நீங்க தப்பா திருக்குறளைன்னு புரிஞ்சிக்கிட்டிங்கையா. இலக்கண முறைப்படி சொன்னா தீக்குறளைச் சென்றோதோம் அப்படின்னு இருந்தா நீங்க சொன்ன பொருளை எடுத்துக்கலாமுங்கையா. ஆனா ச் மிகாம தீக்குறளை சென்றோதோம்ன்னு இருக்குங்கையா. தீக்குறளையைச் சென்றோதோம்ங்கறதுல யை அப்படிங்கற இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி வந்த (மறைந்து வந்த) இரண்டாம் வேற்றுமைத் தொகைங்கையா இது. இப்ப சொல்லுங்க நான் தப்பா ஏதாவது சொன்னேனா?'

'இல்லைப்பூ. சரியாத் தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்'.

'ஐயா. இது கூட நான் சொல்லலைங்கையா. நம்ம காமராஜர் மாவட்டத்து பொண்ணு கோதை சொன்னது தாங்கையா'.

'கோதை சொன்னதா? என்ன சொல்லியிருக்கு அந்தப் புள்ளை?'

'ஐயா. அதை இங்கன விளக்கக் கூடாதுங்கையா. அது திருப்பாவை விளக்கமெல்லாம் 'கோதை தமிழ்' வலைப்பதிவுல வர்றப்ப படிச்சுக்கலாம்'

'ஆமாம். நீங்க எழுதுற வேகத்துக்கு அதுக்கு ரொம்ப... நாளாயிடுமே.'

Friday, May 30, 2008

முக்கியம், பிரபலம்

பிரபல மருத்துவர் சென்னை விஜயம் என்று நக்கீரன், துக்ளக் அட்டைப் படங்களில் பார்த்திருப்போம். 7 தலைமுறைகளாக வைத்தியம் செய்துவருவதாக சொல்லி, ஆண்மை குறைபாட்டு சிகிச்சைக்கு உடனடி தீர்வுக்கு நாட விரும்புபவர்கள் நாடலாம் என்று ஒரு பக்கத்திற்கு விளம்பர தகவல் இருக்கும். பிரபல நடிகர் வரி ஏய்ப்பு, பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். நகரில் முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது என்ற அறிவுப்பு இது போல 'நன்கு அறியப்பட்ட' இரண்டு சொற்களைப் பார்ப்போம்.

செல்வாக்குடையவர், கைராசிக்காரர், சிறப்புடையவர், நன்கு அறியப்பட்டவர், நன்கு அறிமுகமானவர்கள் என்ற பொருள் இருக்கும் இடங்களில் எல்லாம் பிரபலம் என்று எழுதிவருகிறோம். அதற்கு பதிலாக எல்லோருக்கும் தெரிந்த அரசியல் வாதி என்ற இடத்தில் பிரபல அரசியல்வாதி என்று சொல்லாமல் செல்வாக்குள்ள அரசியல்வாதி அல்லது அரசியல் செல்வாக்குடையவர் என்று சொல்லலாம். பிரபல மருத்துவர் என்று சொல்வதற்கு பதில் நன்கு அறியப்பட்ட மருத்துவர் அல்லது அனைவரும் அறிந்த அல்லது புகழ்பெற்ற மருத்துவர் அல்லது பெயர்பெற்ற மருத்துவர் என்று சொல்லாம். பிரபல நடிகர் என்பதற்குப் பதில் புகழ்பெற்ற நடிகர் என்று சொல்லலாம். பிரபல கொள்ளைக்காரன் பிடிபட்டான் என்பதற்கு பதில் அனைவராலும் தேடப்படும் கொள்ளைக்காரான், நன்கு அறியப்பட்ட (கொள்ளைக்காரனெல்லாம் பிரபலப்படுத்த வேண்டாம்) கொள்ளைக்காரன், சமூக எதிரி பிடிபட்டான் என்று எழுதலாம். பிரபல கிரிக்கெட் வீரர் என்பதற்கு பதில் முன்னனி கிரிக்கெட் விரர் என்று சொல்லலாம்.

முக்கிய என்ற சொல்லுக்கு முதன்மையான, இன்றியமையாத என்ற சொல்லை இடத்துக்கு ஏற்றார்போல் பயன்படுத்தலாம். முக்கிய சாலைகளில் என்பதற்கு பதில் முதன்மைச் சாலைகளில் என்று சொல்லலாம். முக்கியஸ்தர், முக்கிய விருந்தினர், முக்கியமானவர் என்பதற்கு பதில் சிறப்புடையோர், சிறப்புவிருந்தினர், இன்றியமையதவர் என்ற வழக்கில் வருவது தனித்தமிழுக்கு மேலும் மெருக்கூட்டும்.

தனித்தமிழுக்கு தனிச்சிறப்புச் (மிக முக்கியமாக) சேர்க்க நாம் இன்றியமையாது என்பது போல் பயன்படுத்தும், 'பிரபலமடைந்த, முக்கியமான' மேற்கண்ட இரு சொற்களை முறையே நன்கு அறிந்த, முதன்மையான என்ற பொருளில் பயன்படுத்தலாம். எல்லா இடத்திலும் பிரபலம் என்று எளிதாக சொல்வதைவிட இடத்துக்கு ஏற்றார் போல் தமிழ் செற்களைப் பயன்படுத்துவது பொருள் நிறைந்ததாக இருக்கும். விஜயம் என்பது வருகை என்று நன்கு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

இது பற்றி உங்களின் முதன்மையான கருத்துக்கள் என்ன, வேறு பொருத்தமான தமிழ் சொற்கள் இருந்தால் பரிந்துரையுங்கள்.

ஜிரா கோரா இராகவன் அளிக்கும் - கவுண்டமணி செந்தில் நடிக்கும் 'உடுக்கை'

பட்டிக்காட்டு பெஞ்சுக்கடையில் உக்காந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. அந்த வழியாக கையில் உடுக்கையோடு செந்தில் வருகிறார்.

"டேய்! கரியடுப்புத் தலையா! இங்க வாடா. உச்சி வெயில்ல எங்கடா போயிட்டு வார?"

"அது வந்துண்ணே.....ஜிரா இருக்கார்ல ஜிரா..."

"என்னது ஜிரா இருக்காரா? ஜிரா இருக்குன்னு சொல்லுடா இலக்கோண வாயா. ஜிராங்குறது திரவப் பொருள். அதுல குலாப்ஜான் ஜலஜலஜலஜலன்னு மெதக்கும். (கையால் உருட்டிக் காட்டுகிறார்) பாத்ததில்லையா? நீ எங்க பாத்துருக்கப் போற? அதெல்லாம் என்னப் போல வெவரமான அழகான அம்சமான இளமையான (செந்தில் கெக்கெக்கென சிரிக்கிறார்) ஆட்கள் சாப்புடுறது"

"ஹெ ஹெ ஹெ அண்ணே...அது குலோப்ஜான் இல்லண்ணே...குலோப்ஜாமூன். ஐயோ...ஜானுக்கும் ஜாமூனுக்குமே ஒங்களுக்கு வித்தியாசம் தெரியலையே...இதுல ஒங்களுக்குக் கலியாணம் வேற ஆகி...ஹெ ஹெ ஹே"

கடுப்பாகிறார் கவுண்டமணி. பெஞ்சை விட்டு படக்கென எழுந்து, 'அடேய். அடடேய்..அடடடடேய்! வந்துட்டான் ஜானுக்கும் மொழத்துக்கும் வித்தியாசம் சொல்ல. திருக்குறள நூறு வாட்டி திருப்பி எழுதுனவன் மாதிரி. எங்கடா போனேன்னு கேட்டா...."

"கோவிச்சிக்கிறாதீங்கண்ணே. ஜிராதான் கூப்புட்டு உடுக்கைன்னா என்னன்னு சொல்லிக் குடுத்தாருண்ணே."

"அதான் உடுக்கையோட குடுக்கை மாதிரி போனியாக்கும்?" அமைதியாகி உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குகிறார். "(சத்தமாக)ஆமாமாமா...அதென்ன உடுக்கையப் பத்திப் பாடம்? கோடாங்கி கிட்ட கேட்டா நாலு தட்டு தட்டப் போறான். இதுக்குப் போய் ஜிராகிட்ட எதுக்குக் கேட்ட? அந்த ஜிரா என்ன தாளிச்ச மோரா?"

செந்தில் குனிந்து கவுண்டமணி காதில் மெதுவாகச் சொல்கிறார். "அண்ணே....அவரு கூட ஒரு மயிலார் இருக்காரு. அவரு காதுல விழாமப் பேசுங்க. கொத்தீரப் போறாரு. அப்புறம் நீங்க குத்தம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பதேது எம்.ஆர்.ராதா மாதிரி ஆயிருவீங்க." (செந்திலின் கனவில் கவுண்டமணி ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி வந்து பாடுகிறார்.)

"டேய்..ஒம் மண்டைக்குள்ள இருக்குற அந்த டீவிய ஆப் பண்ணு. இல்லைன்னா ஆண்டெனாவைப் பிடுங்கிப் போட்டுருவேன். மகனே! நீ எப்பப்ப எங்கெங்க எப்படியெப்படி நெனச்சாலும் சிக்னலு எங்களுக்கு வந்துருதுப்பு."

செந்தில் முகத்தை அப்பாவி மாதிரி வைத்துக் கொள்கிறார். கவுண்டமணி, "சரி சரி....தோச வாயா...ரொம்ப நாடகம் போடாத. ராம நாராயணன் படத்துல நடிக்கக் கூட்டுறப் போறாங்க. போகட்டும்...அந்த உடுக்கையைப் பத்திச் சொல்லு. (கடைக்குள் பார்த்து கத்துகிறார்) யாருப்பா இது....சாம்பார் எங்கப்பா....இதுவரைக்கும் அஞ்சே அஞ்சு வாட்டிதான் சாம்பர ஊத்தீருக்க. சாம்பார்ல கேரட்டே இல்லை. கத்திரிக்காயா வந்து விழுது என்ன கடையோ....இங்க மனுசன் திம்பானா?"

"அண்ணே...உடுக்கைன்னா தட்டுற உடுக்கை மட்டுமில்லையாம். போட்டுக்குற துணிக்கும் உடுக்கைன்னுதான் பேரு."

ஆச்சரியப் பட்டு வாயைப் பிளக்கிறார் கவுண்டர். "என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது. உடுக்கைன்னா போட்டுக்குற துணியா? எம்.ஜி.ஆர் படத்துல ஜோதிலட்சுமி ஒடம்பு முழுக்க உடுக்கையக் கட்டிக்கிட்டு ஆடுறாங்களே...அதச் சொல்றாங்களா?"

முகத்தைச் சுளித்து தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். "ஐயோ அண்ணே..இப்பிடி கிட்னி இல்லாம இருக்கீங்களே...."

"அதென்ன கிட்னியோப்பா...நான் என்னத்தக் கண்டேன். இட்டிலிக்குத் தொட்டுக்கிட கெட்டிச் சட்டினி கூட இந்தக் கடையில குடுக்குறதில்லையே...."

"சரி...முழுக்கக் கேளுங்க. வள்ளுவரு என்ன சொல்லீருக்காரு?"

"அவரு எங்கிட்ட ஒன்னும் சொல்லையே ராசா! ஒங்கிட்ட என்ன சொன்னாரு?"

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு"

"என்னது கடுக்கண் களையனுமா? டேய்! இந்தக் கடுக்கண் எங்க தாத்தாவோட தாத்தாவோட தாத்தாவோட தாத்தா மைசூர் மகாராஜாகிட்ட வாங்குனது. இதுக்கு முன்னாடி இது சந்திரமுகி படத்துல வர்ர வேட்டைராஜா கிட்ட இருந்தது. அதுக்கு முன்னாடி அவரு வெச்சிருந்த சந்திரமுகி கிட்ட இருந்தது. இப்ப்ப்ப்ப்ப்ப்ப...எங்கிட்ட இருக்கு"

செந்தில் முகமெல்லாம் பிரகாசமாக எதையோ கேட்கப் போகிறார். கவுண்டர் அதைத் தடுத்து, "நீ என்ன கேக்கப் போறன்னு தெரியும். எலய எடுத்து விசிர்ரதுக்கு முன்னாடி வள்ளுவர் என்ன சொன்னார்னு சொல்லீட்டு..அப்படியே திரும்பிப் பாக்காம ஓடிப் போ!"

"உடுக்கைன்னா ட்டிரஸ்சு. அந்த ட்டிரஸ்சு அவுந்துச்சுன்னா கை எப்பிடி தானாப் பிடிக்குதோ...அதுமாதிரி துன்பம் வர்ரப்ப நண்பர்கள் உதவுவாங்கன்னு வள்ளுவர் சொல்லீருக்காருண்ணே!"

சலித்துக் கொள்கிறார் கவுண்டர். "என்ன நண்பர்களோடா! ஒரு ஆயிரம் ரூவா திருப்பித் தரலைன்னு தெருவுல நின்னு கத்துற நாயெல்லாம் நண்பனா? கொஞ்ச நாள் பொறுத்தா திருப்பிக் குடுக்க மாட்டேனா? பத்து வருசம் பொறுத்தவனுக்கு இன்னங் கொஞ்சம் பொறுக்க என்ன கேடு வந்தது. நண்பனாம் நண்பன்." முறுக்கிக் கொண்டு மூஞ்சியை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

"டென்சன் ஆகாதீங்கண்ணே. டென்சன் ரொம்ப வந்தா பிரசர் வரும். பிரசர் வந்தா தலைவலி வரும். ரெண்டும் சேந்து வந்தா மாரடைப்பு வரும்...மாரடைப்பு வந்தா...."

"டேய் டேய் டேய் நிறுத்துடா.....இதெல்லாம் தானா வரலைன்னாலும் நீ போய் கூட்டீட்டு வந்துரவ போல. ரொம்பப் பேசாத கண்ணா....உடுக்கைக்கு வாடா" சோற்றையும் சாம்பாரையும் பிசைகிறார்.

"உடுத்தப் படுவது உடுக்கையாம். இதத்தான் குறுந்தொகைல சொல்லீருக்காங்களாம். முருகன் போட்டுருக்குற ட்டிரஸ்சு ஜொஜ்ஜொஜ்ஜொஜ்ஜொஜ்ஜொன்னு இருந்துச்சாம். அதச் சொல்ல திகழ் ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைன்னு எழுதீருக்காங்கண்ணே."

யோசிக்கிறார் கவுண்டமணி. "பனம்பழத் தலையா...முருகன் என்னைக்கு ஜொஜ்ஜொஜோ ஜொஜ்ஜொஜோன்னு டிரஸ் போட்டிருந்தான்? அவங்கிட்ட இருக்குறது ரெண்டு கோமணம். அதுல ஒன்னு திருடு போயிருச்சு. (மனசுக்குள்...நம்மதான் எடுத்தம்னு யார் கிட்டயும் சொல்லக் கூடாது.) இப்பக் கூட நாந்தான் அவனுக்கு பத்து ரூவா குடுத்து வேட்டி சட்டை வாங்கச் சொன்னேன்."

தலையிலடித்துக் கொள்கிறார் செந்தில். "ஐயோ ஐயோ...இப்பிடி சுப்பிடிட்டியா இருக்கீங்களேன்னே. நீங்க சொல்ற முருகன்....நம்மூரு முருகன். நாஞ் சொல்ற முருகன்...சாமி முருகன். இப்படி ஏதாவது நீங்க ஓளறி வெச்சு சாமி குத்தமாயி கைகாலுக்கு ஏதாவது....."

கவுண்டமணி பம்முகிறார். "ஏண்டா...ஒனக்கு நான் என்னடா செஞ்சேன்? இப்பிடி எதையாவது சொல்லிப் பயமுறுத்தாதடா! அஞ்சு காசுக்குத் தேன்மிட்டாய் வாங்கித்தாரேன்." முகத்தில் பொய்யாக சிரிப்பை வைத்துக் கொண்டு..."நீ மேல ஸொல்லு"

"உடுக்கப் பயன்படுவது எப்படி உடுக்கையோ..அதே மாதிரி படுக்கப் பயன்படுவது படுக்கை."

"எல்லாம் வக்கனையாத்தான் கேட்டுக்கிட்டு வந்திருக்க. அது சரி....இந்தச் சோத்துக்கு ஏண்டா பருக்கைன்னு பேரு வந்தது?"

சிரிக்கிறார் செந்தில். விழுந்து விழுந்து சிரிக்கிறார். "நிறுத்துடா...டேய்...நிறுத்துடா...என்ன கேட்டுட்டேன்னு இப்பிடி விழுந்து விழுந்து சிரிக்கிற?"

"அது ஒன்னுமில்ல....சரி. நீங்களே கேட்டுட்டீங்க. உடுக்கப் பயன்படுவது உடுக்கை. படுக்கப் பயன்படுவது படுக்கை....அது மாதிரி...நீங்க இப்பிடி பருக்கப் பயன்படுவது பருக்கை. எப்படிண்ணே நம்ம தமிழறிவு?" சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு ஓடுகிறார் செந்தில்.

கோவத்தில் கவுண்டமணி எழுந்திருக்கிறார். பெஞ்சுகள் கீழே விழுகின்றன. "பிடிங்கடா அந்த டைனோசார? அடிச்சா ஒரு நாடே ஒரு வருசத்துக்கு உப்புக் கண்டம் போட்டுச் சாப்புடலாம். உடுக்கையாம் உடுக்கை. இனிமே எவனாவது உடுக்கைன்னு சொன்னா...அவனுக்கு உடுக்கையடிதான். ஒழுங்கா அழகா நிறுத்தி நிதானமா எழுத்துக் கூட்டி தமிழ்ல டிரஸ்சுன்னு சொல்லனும்."

(என்னடா சொல் ஒரு சொல் இப்படி இருக்கேன்னு பாக்குறீங்களா? இப்படி எழுதுனா சரியா வருமான்னு முயற்சி செஞ்சி பாத்தேன். பதினைஞ்சு நிமிசத்துல பதிவு தயார். அதுகாக இப்படியே தொடர மாட்டேன். இது ஒரு பரிசோதனைதான்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, May 28, 2008

கொடையா தானமா?

சொல் ஒரு சொல்லிற்காக நம் கோவி.கண்ணன் அண்ணா எழுதி அனுப்பிய இந்தக் கட்டுரை சிற்சில மாற்றங்களுடன்...

***

மழை கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம் என்ற அருமையான கவியரசர் பாடல் கர்ணன் படத்தில் இடம்பெற்றது. நாம் வடமொழியை உள்வாங்கி தமிழின் கையிருப்பைத் தானம் செய்த பலவற்றில் ஒன்று தமிழில் இருக்கும் 'கொடை' என்ற சொல். கடையேழு வள்ளல்களைச் சிறப்பிக்கும் போது மறக்காமல் கொடை வள்ளல்கள் என்கிறோம். கோவில்களில் ஒரு குழல் விளக்கைக் கொடையாகக் கொடுத்து மறக்காமல் தன் பெயரை கொட்டை எழுத்தில் எழுதி வைப்பவரையும் கொடை வள்ளல் என்கிறோம்.

எங்கள் ஊரில் ஆடிமாதம் மாரி ஆத்தாவுக்கு கஞ்சி காய்சி ஊற்ற தண்டோரா போட்டுச் சொல்லிச் செல்வார்கள். மறுநாள் நன்'கொடை' கேட்டு விழா அமைப்பாளர்கள் வந்து பெருள் வாங்கிச் (வசூல் வேட்டைக்கு) செல்வார்கள். பொருட்கள் பணமாகவோ, படிக்கணக்கில் பச்சை அரிசி, பச்சை பயிறு, தேங்காய் போன்றைவைகளாகவோ கொடுக்கப்படும். விழாவில் நன்பகலில் கோவிலுக்கு அருகில் விறகு அடுப்பு மூட்டப் பட்டு பெரிய பானையில் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். அந்த பச்சரிசிக் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும். கூடவே முருங்கைக் கீரை துவட்டல், மாவிளக்கு மாவு ஆகியவை கிடைக்கும். மாலை அலங்காரக் காவடி அம்மன் கோவிலுக்குச் செல்வதுடன் விழா முடியும்.

ஈகை, கொடை, தானம் எல்லாம் தமிழர் மற்றும் இந்தியர்களின் பண்பு நலன்கள். விபத்து கால அவசரத்திற்கு என்ன என்ன தேவைப்படுகிறது ? இரத்தம் தானே. அதனை இரத்ததானம் என்கிறோம். குருதி என்றால் இரத்தம் என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அதிகமாக இரத்தம் என்றே சொல்கிறோம்.

இரத்த தானம் என்பதை அழகாக குருதிக் கொடை என்று சொல்லலாம். கண் தானம் என்பதை கண் கொடை என்று சொல்லலாம். இதுவே வடமொழியில் நேத்ர தானம் என்கிறார்கள். உடல் உறுப்புகள் தானங்களை உறுப்புக் கொடை என்று சொல்ல முடியும் அந்த வகையில் சிறுநீரகக் கொடை, கல்லீரல் கொடை என்று சொல்லலாம்.

ஈதல், ஈகை, கொடை என்று திருவள்ளுவர் கொடைகளுக்கு குடை பிடித்து நிழல் கொடுத்திருக்கிறார் நாம் நிழலை விட்டு ஒதுங்கியே காய்கிறோம். தமிழ் மழையில் நினையும் போது தானத்தை தானம் செய்துவிட்டு கொடை வைத்துக் கொள்வோமா? எளிதான சொல்தானே !

Sunday, May 25, 2008

அசைகலையும் வரைகலையும்

அசைகலை என்பதும் வரைகலை என்பதும் அண்மையில் நான் படித்த புதிய கலைச்சொற்கள். இவை எந்த ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற சொற்கள் என்று தெரிகிறதா?

விக்சனரி (tamil_wiktionary@googlegroups.com) என்றொரு கூகுள் குழுமத்தை அறிமுகப்படுத்தி அண்மையில் பதிவர் இரவிசங்கர் ஒரு பதிவு இட்டிருந்தார். அதனைப் படித்து விட்டு அந்தக் குழுமத்தில் இணைந்தேன். பல புதிய சொற்களை அங்கே அறிமுகப்படுத்துகிறார்கள். புதிய கலைச்சொற்களைக் கற்கும் ஆர்வமுள்ளவர்கள் அந்தக் குழுமத்தில் இணையுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அந்தக் குழுமத்தில் அன்பர் மணிமாறன் அவர்கள் அனுப்பிய சொற்கள் தான் இவை. Graphics என்பதை வரைகலை என்றும் Animation என்பதை அசைகலை என்றும் மொழிபெயர்த்துத் தந்திருந்தார். வேறு ஏதேனும் சொற்கள் இவற்றிற்காக பரிந்துரை செய்யலாமா? அப்படி எண்ணினால் சொல்லுங்கள். இல்லை இவை நல்ல சொற்கள் என்றால் இனிமேல் நாம் புழங்கத் தொடங்கலாம்.

Wednesday, May 21, 2008

போதுதல்

திருப்பாவை திருவெம்பாவை மாதமான இந்த மார்கழியில் 'சொல் ஒரு சொல்' பதிவில் இந்தச் சொல் வருவது மிகப் பொருத்தமானது தான்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (பாசுரம் 1)

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரா போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் (பாசுரம் 15)

இந்தத் திருப்பாவைப் பாசுரங்களுக்கு இங்கே பொருள் சொல்லப் போவதில்லை. பாசுரப் பொருள் தேவையென்றால் தேசிகன், இராகவன் பதிவுகளைப் பாருங்கள். இல்லை இனிமேல் கோதை தமிழில் அவை வரும்போது பாருங்கள். இப்போது எடுத்துக் கொண்ட சொல்லான 'போதுதல்' & அதன் மற்ற உருவங்களை மட்டுமே இங்கே பார்க்கப் போகிறோம்.

போதுதல் என்றவுடன் என்ன பொருள் தோன்றுகிறது? போ என்ற வினைச்சொல்லின் அடிப்படையான போதல் என்ற பொருள் தானே தோன்றுகிறது? எனக்கும் முதன்முதலில் இந்தச் சொல்லைப் பார்த்ததும் அப்படித் தான் தோன்றியது. அண்மையிலும் ஏதோ ஒரு பெரிய கவிஞர் இந்தச் சொல்லை போதல் என்ற பொருளிலேயே எடுத்தாண்டிருப்பதையும் பார்த்தேன். ஆனால் இந்தத் திருப்பாவைப் பாசுரங்களுக்குப் பொருள் சொல்லும் போது போதல் என்பதற்கு நேர் எதிரான பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பாசுரத்தில் வரும் சொற்களான 'நீராடப் போதுவீர்' 'போதுமினோ' என்ற சொற்களுக்கு 'நீராட வாருங்கள்', 'வாருங்களே' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

பதினைந்தாம் பாசுரத்தில் வரும் சொற்களான 'போதருகின்றேன்', 'போதாய்', 'போந்தாரா', 'போந்தார்', 'போந்து எண்ணிக் கொள்', என்ற சொற்களுக்கு 'வருகின்றேன்', 'வருவாய்', 'வந்தாரா', 'வந்தார்', 'வந்து எண்ணிக்கொள்' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சொல்லாட்சியை வேறு எந்த இலக்கியத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? எதன் அடிப்படையில் இந்தச் சொல்லுக்கு இந்த பொருள்?

Sunday, May 18, 2008

சால உறு தவ நனி கூர் கழி

என்ன தலைப்பைப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லையே என்று நினைக்கிறீர்களா? சாலச் சிறந்தது என்று சிலர் சொல்வார்கள் கேட்டிருக்கிறீர்களா? அது மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தக் காலத்திலும் மிகுதியாகப் பயன்படுகிறது. ஆனால் தலைப்பிலுள்ள ஆறு சொற்களும் சில சொற்களின் முன்னால் நின்று 'மிகுதி', 'பெருக்கம்' போன்ற பொருட்களைத் தந்து நிற்கும்.

1. இலக்கண நூலான நன்னூல் சொல்வது:

சால உறு தவ நனி கூர் கழி மிகல்

இந்த ஆறு சொற்களும் 'மிகல்' என்ற பொருளைத் தரும்.

2. பாரதியாரின் சுயசரிதையில் வருவது:

வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும் முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்து ஓர் ஆயிரம் ஆண்டு தவம் செய்து
பார்க்கினும் பெறல் சாலவரிது காண்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதைத் தான் இங்கே சொல்கிறார். மிக அரிது என்ற பொருளில் சாலவரிது என்கிறார்.

3. திருவாவடுதுறைப் பெருமானைப் பாடும் திருநாவுக்கரசப் பெருமான் சொல்வது:

உற்ற நோய் தீர்ப்பர் போலும்
உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும்
தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்தக்
கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும்
ஆவடு துறையினாரே.

இந்தப் பாடலில் 'நெருங்கிய துணை', 'மிகத் துணை' என்ற பொருளில் உறுதுணை வருகிறது.

4. தவப்பெரியோன் என்று மிகவும் பெரியவரைக் கூறுதல் மரபு.

5. நனி என்ற சொல்லை பல என்ற சொல்லிற்கு இணையாகப் புழங்க வேண்டும் என்று இராம.கி. ஐயா கருதுகிறார். அதற்கேற்ப நனி என்ற சொல் பல இடங்களிலும் நனிவகையில் (பலவகையில்) புழங்கியிருக்கிறது என்பதை கூகுளாண்டவர் சொல்கிறார். எல்லோரும் கேட்டிருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்ற பாரதியாரின் அழகு வரி. இங்கே மிகச் சிறந்தவை என்ற பொருளில் நனி சிறந்தனவே என்கிறார்.

6. கூர் என்பது மிகுதி என்ற பொருளிலும் கூர்மை என்ற பொருளிலும் பல இடங்களில் சேர்ந்தே வருகிறது. கூர்மதி, கூரொலி, கூரொளி, கூர்கடல், கூர்குழல், கூர்குழலி, கூர்கூந்தல், கூர்சுடர், கூர்சோலை, கூர்பொறை என்று எடுத்துக்காட்டுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

7. கழி என்ற சொல்லைத் தேடி எங்கேயும் அலையவேண்டாம். கழிநெடிலடி என்று பல பாவகைகளைக் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். கழி நெடில் அடி என்றது மிக நீண்ட அடிகளைக் கொண்ட பாவகைகளை.

பழமொழி நானூறில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு:

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார் முன்
சொல்லும் கால் சோர்வு படுததால் - நல்லாய்
'வினா முந்துறாத உரையில்லை; இல்லை
கனா முந்துறாத வினை'

நம் முதல் குடிம்கனார் சொல்வதைத் தான் இந்தப் பழமொழி சொல்கிறது. கனவு காணுங்கள்; கனவே செயலில் இறக்கும் என்பதைச் சொல்கிறது. அப்போது கல்வி இல்லாதவனின் மிகுதியான அறிவு கற்றவர் முன் நில்லாது என்றும் சொல்கிறார். ஏனென்றால் கல்வியில்லாதவன் கழிநுட்பம் கேள்வியில்லாமல் பிறந்த பதிலையும் கனவின்றிப் பிறந்தச் செயலையும் ஒத்தது என்பதால்.