Sunday, June 30, 2013

திருத்துழாயும் மலர்களும்

காலைக் கடன்களான வேத மந்திரங்களை ஓதி கதிரவன் உதிக்கும் திசையை நோக்கி சந்தியில் செய்யும் வந்தனங்களை எல்லாம் முடித்துக் கொண்டு இறைவனை வழுத்தி வாழ்த்தி இதோ மலர்களையும் கொய்து குடலையில் இட்டு கொண்டு வந்துவிட்டோம். இந்த அமைதியான சூழலில் இறைவனின் திருநாமங்களையும் அவன் திருவிளையாடல்களையும் எண்ணிக் கொண்டே அவனுக்காக மலர்மாலைகளைத் தொடுப்பது தான் எத்தனை இன்பம். நம்மைப் போல் மாலவனுக்கு மலர் மாலை தொடுப்பவர் எல்லோருக்கும் இது தானே பேரின்பம். இதனை விடுத்து இந்திர லோகம் சென்று அங்கே அரசாளும் இன்பம் பெற யார் தான் விழைவர்?எல்லா நிறத்திலும் பூக்கள் நம் நந்தவனத்தில் மலர்கின்றன. ஒவ்வொன்றும் மாலவன் திருமேனியை அலங்கரிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளுகின்றனவே. 'என்னை எடுக்க மாட்டாரா? மலர்மாலையில் வைத்துத் தொடுக்க மாட்டாரா? மாயவன் திருமேனியில் துலங்க மாட்டோமா? பிறவிப் பெரும்பயனை எய்த மாட்டோமா?' என்று ஒவ்வொரு மலரும் துள்ளித் துள்ளி நம் கைகளில் தானே வந்து விழுகின்றனவே?!இந்த நீல நிற மலரை பார்த்தால் நம் நீலமேக வண்ணனின் திருநிறத்திற்கு தான் ஏற்றதாக இருப்போம் என்ற மகிழ்வும் பெருமிதமும் தெரிகிறதே. வெண்ணிறப் பூக்கள் அவன் புன்சிரிப்பு பூக்கும் போது தெரியும் பற்களின் நிறத்திற்கு தாம் பொருத்தமாக இருப்போம் என்று சொல்கின்றனவே. சிவந்த மலர்கள் அவன் திருக்கண்களின் நிறத்திற்கும் கொவ்வைச் செவ்வாயின் நிறத்திற்கும் தாங்கள் போட்டி என்று சொல்கின்றனவே. மஞ்சள் நிறப் பூக்கள் அவன் இடையில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டிற்குத் தாங்கள் தான் பொருத்தம் என்று சொல்கின்றனவே.அட. இதென்ன இந்த பச்சை நிறத் திருத்துழாய் இலைகள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனவே. ஓ. இவற்றிற்கு தாங்கள் மலர்கள் இல்லையே; வெறும் இலைகள் தானே என்ற குறையோ? அடடா. திருமறுமார்பன் விரும்பி அணிபவை எந்த மலர்களும் இல்லையே; திருத்துழாய் மட்டும் தானே. அவற்றின் மணத்திற்கு மட்டும் தானே அவன் தன் மனத்தை இழப்பான். மற்ற மலர்களையாவது அவன் தோள்களிலும் கரங்களிலும் மட்டுமே சூடுவான். ஆனால் தன் திருமுடியில் வைத்துச் சூடிக் கொள்ளவும் தன் திருவடிகளை அழகு செய்யவும் முடி முதல் அடி வரை எங்கெல்லாம் முடிகிறதோ அங்கெல்லாம் சூடிக் கொள்ளவும் விரும்புவது திருத்துழாயை மட்டும் தானே?! ஆனால் அடியவர்கள் எப்போதும் அடக்கத்துடன் தான் இருப்பார்கள் போலும். புதியவர்கள் இறைவனுக்குத் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ந்துத் துள்ளுவதைப் போல இந்த மலர்கள் எல்லாம் செய்கின்றன. ஆனால் ஏழாட்காலும் இறைவனுக்கே பணிசெய்து கிடந்த பழவடியார்கள் அமைதியாக அவன் திருப்பணியைச் செம்மையாகச் செய்வது போல் கிடக்கின்றன இந்த திருத்துழாய் இலைகள்.இருக்கின்ற திருத்துழாய் எல்லாம் தொடுத்தாகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் வேண்டும் போல் இருக்கிறது. மலர்களே இல்லாமல் வெறும் திருத்துழாயை மட்டுமே வைத்து இன்னும் இரண்டு மாலைகள் தொடுக்க வேண்டும். தொடுத்த மாலைகளை எல்லாம் இந்தக் குடலையில் வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் திருத்துழாய் இலைகளைப் பறித்து வரலாம். திருக்கோயில் வழிபாட்டிற்கு நேரமாகிவிட்டது.

***

இது விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரின் நிலையிலிருந்து எழுதியது.

***

அருஞ்சொற்பொருள்:

திருத்துழாய் - துளசி
விழைதல் - விரும்புதல்
ஏழாட்கால் - ஏழு தலைமுறை
பழவடியார்கள் - பழம்பெரும் அடியார்கள்
குடலை - பூக்கூடை

இன்னும் ஏதாவது சொற்களுக்குப் பொருள் தெரியாவிட்டால் கேளுங்கள்.

Friday, June 28, 2013

அல்லல் விளைத்த பெருமான்

'ஏற்கனவே சரியான வழி, சரியான முறை என்பதெல்லாம் முறை தவறி நடக்கும் இந்த உலகத்தில், நந்தகோபன் மகன் என்று பெயரளவிலேயே இருக்கும் (ஆனால் செயலில் நந்தகோபனைப் போல் இரக்கம் கொள்ளாமல் இருக்கும்) கொடியவனும் கடியவனும் ஆன திருமகள் நாதன் என்னும் காளையின் (கார் ஏறின்) குளம்புகளால் மிதிபட்டு நார் நாராகக் கிழிபட்டு திரும்பிப் படுக்கவும் இயலாமல் கிடக்கிறேன் நான். தோழியர்களே. அவன் எங்காவது போகும் போது அவன் மிதித்த காலடி மண் தான் கொணர்ந்து வந்து பூசுங்கள். அப்படியாகிலும் என் உடம்பை விட்டு உயிர் போகாமல் இருக்கும்.

(அவன் வாடி வந்து கொள்ள வேண்டியிருக்க இவள் வாடுகிறாளே - அது முறை தவறியது என்கிறாள். யார் யார் மூலமெல்லாம் அவனை அடையலாம் என்று எண்ணினாளோ அவர்கள் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை; அதனால் அவர்களைக் குறை கூறுகிறாள் - 'நந்தகோபன் மகன் என்னும்' என்றும் 'திருமாலால்' என்றும் - திருமகளும் நந்தகோபனும் யசோதையும் கண்ணனை அடைய உதவுபவர்கள் அல்லவா? உயிர் போய்விடும் போல் இருக்கிறது. இப்போது இவளுக்குத் தேவையெல்லாம் அவன் காலடி மண்ணே. அது இருந்தால் போதும் திரும்பிப் படுக்கக் கூட முடியாத துன்பம் தீரும்)

நடையொன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே


'வெற்றியுடைய கருடக்கொடியோனின் ஆணையை மீறி ஒன்றும் நடக்காத இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லாத வகையில் பெற்ற தாயான யசோதை இவனை முழுக்க முழுக்க வேம்பே ஆக வளர்த்திருக்கிறாளே. தோழியர்களே. (அவனை அன்றி வேறெதையும் விரும்பாத அவன் பிரிவைத் தாங்க முடியாமல் விம்மி விம்மும் என்) குற்றமற்ற முலைகளை அழகிய திரண்ட அவன் தோள்களோடு இதுவரை பிரிந்திருந்த குறை தீர அவன் மறுத்தாலும் விடாது தோளில் என் முலைகளை அணையும் படி இறுக்கக் கட்டுங்கள்.

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீமீதாடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே'தோழியர்களே. உள்ளத்தின் உள்ளே உருகி நைந்து போகிறேன். நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று கூட கேட்காத, என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளைக் கொள்ளும் குறும்பனை மாடுகள் மேய்க்கும் இடையனைக் காணும் போது, இருப்பதால் ஒரு பயனும் இல்லாத என் கொங்கைகளை கிழங்கோடு அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து என் உடலிலும் மனத்திலும் எரியும் நெருப்பைத் தீர்ப்பேன்'

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலைத் தீர்வேனே

'வளர்ந்த குழந்தைகளைப் போன்ற இந்த முலைகளின் இடர் தீர கோவிந்தனுக்கு ஒரு குற்றேவல் இந்தப் பிறவியிலேயே செய்யாமல் மறுபிறவியில் வைகுந்தம் சென்று அவனுக்குக் குற்றேவல் செய்யும் தவம் செய்து என்ன பயன்? சிறந்த அவனுடைய திருமார்பகத்தில் என் முலைகளை அவன் சேர்க்காவிட்டாலும் ஒரே ஒரு முறையாவது 'நான் உன்னை காதலிக்கவில்லை' என்ற உண்மையாவது என் முகத்தை நோக்கிச் சொல்லிவிட்டான் என்றால் அது மிக நல்லதாக இருக்கும்'

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே

துன்பங்கள் எல்லாம் விளைத்த பெருமானை திருவாய்ப்பாடிக்கு அணிவிளக்கை, வில்லிபுத்தூர் நகரின் தலைவரான விஷ்ணுசித்தரின் திருமகளான கோதை - வில்லை பழிக்கும் புருவமுடையவள் - கண்ணன் மேல் மிகவும் வேட்கை உற்று மிக விரும்பிச் சொல்லும் இந்தச் சொற்களை துதிப்பவர்கள் துன்பக்கடலுள் விழ மாட்டார்கள்

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக்கடலுள் துவளாரே


***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

Thursday, June 27, 2013

கண்ணன் என்னும் கருந்தெய்வம்

'தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும் அவனுடன் கூடி மகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன். புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல் அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்த பெருமான் தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?'

கண்ணனென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய்தாற்போலப் புற நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே


'சிறு குழந்தையாய் ஆலிலையில் துயில் கொண்ட பரமனின் வலையில் நான் அகப்பட்டுக் கொண்டேன். வேலால் குத்துவதைப் போல் நீங்கள் விரும்பிய வண்ணமெல்லாம் பேசாதீர்கள். கோலினைக் கையில் கொண்டு பசுக்களை மேய்த்து ஆயனாகக் குடக்கூத்து ஆடியவன் திருக்குடந்தையில் பள்ளி கொண்டுள்ளான். அவன் அணிந்த குளிர்ந்த நீல நிற துளசியைக் கொண்டு என் வாசம் வீசும் கூந்தல் மேல் சூட்டுங்கள்'

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே


'கஞ்சனைக் கொன்ற கருநிற வில்லைப் போன்றவன் தன் கடைக்கண் என்னும் அம்பினால் என் நெஞ்சினை ஊடுருவ நான் அதன் வெம்மையால் வேவுண்டு என் நிலையும் தளர்ந்து வாடுகிறேன். அஞ்சேல் இதோ வந்து விட்டேன் என்று கூறாத அந்த ஒருவன் என்னை வஞ்சித்தது போல் உங்களையும் வஞ்சிக்காமல் அவன் தன் மார்பில் அணிந்த வனமாலையைத் தருவானாகில் அதனை கொண்டு வந்து என் மார்பில் புரட்டுங்கள்'

கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே


(சிறைக்கோல் - சிறகுகள் உடைய கோல்; அம்பு)
'உலகத்தவரில் யார் தான் என் துன்பத்தை ஆற்ற வல்லவர்? ஆயர்பாடியில் எல்லாரையும் தன் அன்பாலும் அழகாலும் கவர்ந்து உண்ணும் கரு நிறக் காளை போன்றவன் என்னை வாட்ட வாட்டமுற்று உடல் தளர்ந்தும் உறுப்புகள் முறிந்தும் கிடக்கின்றேன். உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால், தெவிட்டாத அமுதம் போன்றவனின் அமுத வாயில் ஊறிய நீர் தான் கொண்டு வந்து என் உடல் காய்ந்து போய் விடாமல் என் உடல் மேல் தெளித்தும் நான் உண்ணக் கொடுத்தும் என் இளைப்பை நீக்குங்கள்'

ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கு இளைப்பை நீக்கிரே


(யாராவது எச்சிலை ஏந்தி வர முடியுமா? கோதையின் உள்மன ஆசை அவர்கள் கோவிந்தனையே அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதே. அப்படி அழைத்க்டுக் கொண்டு வந்தால் அவன் அமுத வாய் ஊறிய நீரை இவள் ஆசை தீரப் பருகலாமே)

'சாதாரணமாக அவனை எண்ணத்தில் கொண்டு அழுதாலும் என்றுமே அவனை வேண்டித் தொழுதாலும் தன் உருவத்தை அவன் காட்ட மாட்டான். அஞ்சாதே இதோ வந்தேன் என்றும் சொல்ல மாட்டான். அப்படிப்பட்ட அவன் ஒருவன் என்னைத் தழுவி என்னுள் மூழ்கி என்னைச் சுற்றிச் சுழன்று என்னைவிட்டுப் போக மாட்டேன் என்று கிடந்தான். அவனை இப்போது காண முடியாமல் தவிக்கிறேன். இலைகளும் தழைகளும் சூழ்ந்த கானகத்தின் உள்ளே பசுக்களின் பின்னால் நெடிய மால் குழல் ஊதிக் கொண்டு வருவான். அந்தக் குழலில் துளைகளின் வழி அவன் வாய் நீர் வரும். அதனைக் கொண்டு வந்து என் முகம் குளிரத் தடவுங்கள்'

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொலைவாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே


***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

Saturday, June 22, 2013

யத் பாவம் தத் பவதி

சாந்தீபனி முனிவர் ஆசிரமத்தில் கண்ணனுடனும் பலராமனுடனும் கழித்த மாணவப் பருவத்தினை எண்ணிக் கொண்டு அவனைப் பார்த்து உதவி கேட்க வந்துவிட்டேன். அவனைப் பார்க்க முடியுமோ இல்லையோ? இருபத்தி நான்கு குழந்தைகளைப் பெற்று கடுமையான வறுமையில் இருப்பதால் என் இயற்பெயரான சுதாமன் என்பதே மறைந்து எல்லோரும் என்னை இப்போது குசேலன் என்று அழைக்கும் நிலையில் நான் இருக்கிறேன். எந்த முகத்தை வைத்துக் கொண்டு கண்ணனைப் பார்க்க வந்தேனோ தெரியவில்லை. சிறு வயதிலேயே செயற்கரிய செயல்களைச் செய்து தான் இறைவன் என்பதைப் பலமுறைக் காட்டிய என் அன்பு நண்பன் அப்போது என்னால் எளிதாக அணுகும் படி இருந்தான். இப்போதோ துவாரகைக்கு அதிபதியாக கட்டுக்காவல் மிகுந்த கோட்டைக்குள் வாழ்ந்து வருகிறான். என் தோற்றத்தைப் பார்த்தால் யார் தான் நான் துவாரகாதீசனின் நண்பன் என்று ஒத்துக் கொள்வார்கள். எல்லாம் கண்ணன் விட்ட வழி.

***

இதோ துவாரகையின் முதல் வாயில் வந்து விட்டது. காவலர்கள் என்னை உள்ளே அனுமதிப்பார்களோ இல்லையோ தெரியவில்லையே?! இதென்ன விந்தை. அடியேனைப் பார்த்தவுடன் தலை தாழ்த்தி வணங்கி மதிற்கதவைத் திறந்து விடுகிறார்களே. கண்ணன் பெயர்களைச் சொல்லி 'ஜய விஜயீ பவ' என்று கோஷங்களும் இடுகின்றனர். ஆகா. என்னே இவர்களின் கிருஷ்ண பக்தி. எப்போதும் கண்ணன் நாமம் சொல்கிறார்கள்.

***

ஏழாவது வாயிலும் வந்தாகிவிட்டது. இது வரை எந்த வாயிலிலும் காவலர்கள் என் தோற்றம் கண்டு என்னைத் தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டி அரசன் என்ற பிரிவுகளே துவாரகையில் இல்லை என்பதை எவ்வளவு நன்றாகத் தங்கள் செயல்களிலும் காட்டுகிறார்கள் துவாரகைவாசிகள். ஆண்டியான என்னை ஒவ்வொரு வாயிலிலும் தங்கள் அரசரை வரவேற்பது போல் அல்லவா வரவேற்று உள்ளே அனுமதித்தார்கள். இந்த வாயிலிலும் அனுமதி பெறுவது எளிதாகத் தான் இருக்கும். அதில் ஐயமே இல்லை. அதோ கண்ணனே தன் தேவியர்களுடன் வருகிறானே அடியேனை எதிர்கொண்டழைக்க. என்னே கண்ணனின் சௌலப்யம் (எளிவந்த தன்மை)!


***

முதல் வாயில். காவலர்களில் ஒருவரும் கோட்டைக் காவல் தலைவரும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

காவலர் 1: கோட்டைக் காவல் தலைவரே! நம் சுவாமி கோட்டையை விட்டு வெளியே சென்றதாகவே தெரியவில்லையே. இப்போது தனியாக எந்த வித பரிவாரமும் இன்றி தேர், புரவி என்ற எந்த வாகனமும் இன்றி நடந்து கோட்டைக்குள் நுழைகிறாரே? இது என்ன விந்தை?

கோட்டைக்காவல் தலைவர்: ஆமாம் காவலரே! எனக்கும் அது மிக விந்தையாகத் தான் இருக்கிறது. நான் அறிந்த வரை சுவாமி கோட்டைக்குள் தான் இருக்கிறார். அதனால் சுவாமியைக் கண்டவுடன் எனக்கும் மிக விந்தையாக இருந்தது. அதுவும் நீங்கள் சொன்னது போல் ஐயன் தனியாக வருவதைக் கண்டு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் நம் சுவாமி மாயைகளில் வல்லவராயிற்றே. அவரை நாம் என்ன கேட்பது? எந்தக் கேள்வியும் கேட்காமல் துவாரகாதீசனிடம் தகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வது தானே நம் கடமை.

அதோ ஒரு ரிஷி வருகிறார். அவரிடம் வேண்டுமானால் நம் ஐயத்தைக் கேட்டுக் கொள்ளலாம்.

வணக்கம் சுவாமி.

ரிஷி: வாழ்த்துகள்.

கோட்டைக் காவல் தலைவர்: சிறிது நேரத்திற்கு முன்பு நம் கண்ணன் இந்த வழியாகக் கோட்டைக்குள் சென்றார். அடியோங்கள் அறிந்த வரை அவர் கோட்டையிலேயே தான் இருக்கிறார். அதனால் அவர் வெளியிலிருந்து உள்ளே செல்வதைப் பார்த்து நாங்கள் திகைத்து நிற்கிறோம். தாங்கள் தான் தயை செய்து எங்கள் மயக்கத்தைத் தீர்க்க வேண்டும்.

ரிஷி: கோட்டைக் காவல் தலைவரே. நீங்கள் சொல்வது உண்மை தான். மாயக்கண்ணன் கோட்டைக்குள்ளேயே தான் இருந்தார். உள்ளே வந்தது கிருஷ்ணன் இல்லை. அவர் நம் அழகிய நம்பியின் நண்பர். சிறுவயதுத் தோழர். குசேலன் என்று பெயர் பெற்ற சுதாமன். என்றும் கிருஷ்ண தியானத்திலேயே இருப்பதால் அவர் முழுவதும் கிருஷ்ண மயமாகவே ஆகிவிட்டார். அதனால் அவரைப் பார்ப்பவர்களுக்கு அவர் கண்ணனாகவே தோற்றம் அளிக்கிறார்.

கோட்டைக் காவல் தலைவர்: அப்படியா? ஆகா. சரியாக விசாரிக்காமல் கோட்டைக்குள் அனுமதித்துவிட்டோமே. உடனே உள் வாயில் அதிகாரிகளிடம் சொல்ல வேண்டும்.

ரிஷி: கோட்டைக் காவல் தலைவரே. பதட்டம் வேண்டாம். குசேலர் வரவைக் கண்ணன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அவரே குசேலரை எதிர் கொண்டழைத்து உள்ளே கூட்டிச் செல்கிறார். எந்த வித பதட்டமும் வேண்டாம். அவரது அருமை நண்பரை காலம் தாழ்த்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு அவர் மகிழ்ச்சியே அடைவார். நானும் இரு நண்பர்கள் அளவளாவுவதைக் காணவே ஓடோடி வந்தேன்.

கோட்டைக் காவல் தலைவர்: தங்கள் பெயரை அடியேன் தெரிந்து கொள்ளலாமா சுவாமி.

ரிஷி: அடியேன் கிருஷ்ண த்வைபாயனன் என்னும் வேத வியாசன்.

***

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

Wednesday, June 19, 2013

சிற்றஞ்சிறுகாலை

மனம் மிக மிக அமைதியாக இருக்கிறது. துயில் கொள்ளச் சென்ற போது மனதில் ஆயிரம் எண்ணங்கள் இருந்தாலும் துயில் நீங்கி எழும் போது எந்த எண்ணங்களும் இல்லாமல் மனம் நிர்மலமாக இருக்கிறது. அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கும் வழக்கம் இருப்பதால் எழுந்தவுடன் 'ஹரி ஹரி' என்று தானாகவே வாய் முணுமுணுக்கிறது. அப்படி முணுமுணுத்ததே மனதில் மாயவனைப் பற்றிய எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. அதுவே நாளின் முதல் எண்ணமானதால் நாள் முழுதும் தங்கும் எண்ணமாகவும் ஆகிறது. ஆகா. என்னே மாதவனின் கருணை. என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி என் மனத்தில் தங்கி அவனை எப்போதும் நினைக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டானே.

இதோ அடுத்த தெருவில் இருக்கும் ஆயர்களின் பசுக்களும் எருமைகளும் மேய்ச்சலுக்குக் கிளம்பிவிட்டன. அந்த ஆவினங்கள் இந்தத் தெரு வழியாகத் தான் செல்லும். அப்படி செல்லும் போது கோதை பார்த்துவிட்டால் போதும். கண்ணா கண்ணா என்று முனகிக் கொண்டே செயலறியாது நின்று விடுகிறாள். சில நேரங்களில் அந்த ஆவினங்களின் பின்னால் போகும் இடைச்சிறுவனைக் கண்டு மயங்கிவிழுகிறாள். சில நேரங்களில் அந்த ஆவினங்களைத் துரத்திச் சென்றால் கண்ணனைக் காணலாம் என்று சொல்லிக் கொண்டு பின் தொடர முயல்கிறாள். அதனால் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கவேண்டும்.

இன்னும் சரியாகப் புலரவில்லையே. கதிரவனைக் காண முடியவில்லை. ஆனால் கிழக்கில் சிறிது வெளிச்சம் தெரிகிறது. இது போதுமே மேய்ச்சலுக்கு கிளம்ப. அப்படி மேய்ச்சலுக்குப் போகும் பசுக்களின் குளம்பினால் மேல் எழும்பிய தூசி உடலில் பட்டால் எல்லாப் பாவங்களும் தீர்ந்துவிடும் என்றல்லவா மேலோர் சொல்லியிருக்கின்றனர். அந்தக் கோதூளியையும் நம் உடம்பில் தாங்கிக் கொள்ளலாம். உடனே விரைந்து வாசலுக்குச் செல்லவேண்டும்.

***

நல்லவேளை. கோதை ஏதோ காரியமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறாள். இன்று வாசலுக்கு வரவில்லை. அதனால் அவளைக் கட்டி வைக்க வேண்டிய ஒரு வேலை குறைந்தது. ஒரே பெண் என்று கொஞ்சம் செல்லம் கொடுத்துத் தான் வளர்த்துவிட்டேன் போலும். சொற் பேச்சைக் கேட்பதே இல்லை. திருமணம் செய்து கொள் என்றால் 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் காண்' என்கிறாள். எல்லாம் கண்ணன் விட்ட வழி என்று அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இருக்கிறேன்.

இதோ பசுக்களும் எருமைகளும் கழுத்தில் மணிகள் ஒலிக்க நம் வீட்டைக் கடந்து சென்றுவிட்டன. தினமும் அதிகாலையில் இவற்றின் திருமுகத்தில் முழிக்க வழிவகை செய்யும் இந்த இடைச்சிறுவன் நன்றாக இருக்க வேண்டும். ஆயிரம் பொன் கொடுத்தாலும் கோ தரிசனம் கிடைப்பது எளிதல்லவே.

விரைவில் நித்ய கடமைகளை இயற்றிவிட்டு இறைவனுக்காக மலர் மாலை தொடுக்க வேண்டும். திருக்கோவிலைத் திறக்க இதோ கையில் கோவிற்சாவியுடன் அர்ச்சகரும் கிளம்பிவிட்டார். இப்போது தொடங்கினால் தான் அவர் நிர்மால்ய தரிசனத்தை நிறைவு செய்யும் போது மலர் மாலையுடன் நாம் மாலவன் திருமுன்பு நிற்க முடியும்.

***

கண்ணன் நினைவிலேயே காலங்கள் கழிகின்றன. அல்லும் பகலும் அவன் நினைவே. வந்தாய் போலே வாராதாய்; வாராதாய் போல் வருவோனே என்று நம் குலமுதல்வர் சரியாகத் தான் பாடியிருக்கிறார். திடீரென்று பக்கத்தில் அவனது வேணுகானம் கேட்கிறது; ஓடிப் போய் பார்த்தால் அவன் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறான்; அருகில் சென்றாலோ மறைந்துவிடுகிறான். எப்போதும் எதைப் பார்த்தாலும் அவன் நினைவாகவே இருக்கிறது. உடல் மெலிந்துவிட்டதாக தோழியர் கூறுகிறார்கள். உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாமே கண்ணன் என்று நான் இருக்க நான் மெலிவதாவது? அறியாப் பெண்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. தலை நோவும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்.

அவனுக்கு ஏற்றவளாக என்னை மாற்றிக் கொண்டால் அவன் வந்துவிடுவான். இப்படி எண்ணிக்கொண்டு கண்ணில் மையிடலாம் என்று எடுத்துவைத்துக் கொண்டு பல நாழிகை சென்றுவிட்டது. கருநிற மையைக் கண்டவுடன் மைவண்ணன் முகம் எதிரில் வந்து நிற்கிறதே. கருநிறம் கொண்ட எதனையும் இனிமேல் காணக்கூடாது. குவளை மலரை நம் நந்த வனத்தில் வெகு தூரத்தில் வளர்க்க ஏற்பாடு செய்தாகிவிட்டது. இந்த காக்கைகளையும் குயில்களையும் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. அடிக்கடி முன்னால் வந்து தங்கள் அழகு நிறத்தைக் காட்டி என்னை வாட்டுகின்றன.

காக்கைகளையும் குயில்களையும் கூட விரட்டிவிடலாம். ஆனால் இந்த பச்சை நிற மரங்களையும் நீல நிற வானத்தையும் கருநிற கார்மேகங்களையும் என்ன செய்வது? எந்த திசை நோக்கினாலும் எதாவது ஒன்று அவன் நினைவைக் கொண்டு வருகிறதே. ஆ.ஆ. காதல் நோய் மிகக் கொடிது. இந்த வளையல்களின் தொல்லை வேறு. கைகளில் நிற்கவே மாட்டேன் என்கிறது. தோழியர் அதற்கும் நான் மெலிந்தது தான் காரணம் என்கின்றனர். எதாவது ஒரு காரணம் போதும் இவர்களுக்கு - உணவும் உறக்கமும் எவ்வளவு முக்கியம் என்று உபதேசம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். உண்ணும் உணவும், உடுக்கும் உடையும், இருக்கும் இடமும் எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நம் தந்தையும் என் நிலையை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்.

(2006ல் எழுதியதன் மறுபதிவு)

Sunday, June 16, 2013

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் (கோதையின் கதை)

அன்புத் தோழி. நீ சொன்னது போல் நேற்று மாலை நாம் கூடல் இழைத்துப் பார்த்தோம். கோவிந்தன் வரும் நாள் கூடி வரும் என்று நாம் இழைத்தக் கூடல்கள் எல்லாம் சொல்லின. நேற்று இரவு அந்த கோவிந்தனே வந்தானடி. கனவில் வந்து என்னைக் கைப்பிடித்தான்.

ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

தேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்னாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

எல்லாத் திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பல பேர் அதனை எடுத்து மந்திரங்களால் புகழ்ந்து, தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் புனிதனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

மத்தளம் கொட்ட வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பந்தலின் கீழ் என் தலைவன் அழகன் மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

நல்ல சொற்களையே பேசுபவர்கள் மேன்மையான மறைச் சொற்களைச் சொல்லி பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கதிரவன் முன் வைத்த பின், எரியும் நெருப்பைப் போல் கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி தீயை வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.

இந்தப் பிறவிக்கும் இனி வரும் ஏழேழ் பிறவிக்கும் நமக்குக் கதியானவன், நம்மைத் தன் செல்வமாக உடையவன், நாராயணனாகிய நம் தலைவன், தன் செம்மையுடையத் திருக்கையால் என் கால்களைப் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.

வில்லை கையில் ஏந்தியிருக்கும் ஒளிமிகுந்த முகம் கொண்ட என் உடன்பிறந்தோர் வந்து தீயினை வளர்த்து என்னை அதன் முன்னே நிறுத்தி சிங்கமுகம் கொண்ட (நரசிம்மன்) அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரியை அந்த தீயினில் இடக் கனாக் கண்டேன் தோழி நான்

வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

குங்குமம் அப்பிக் குளிர்ந்த சந்தனக்குழம்பை உடலெங்கும் பூசி எங்கள் இருவரையும் நீராட்டிய பின், அங்கு அவனோடு யானை மேல் ஏறி மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஆயனாரை அடைவதாகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழும் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் கோதை சொல்லும் இந்தத் தூய தமிழ் மாலை பத்துப் பாடல்களும் வல்லவர் பெறற்கரிய நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்திருப்பார்கள்.

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.
------------------------------------------------------------------------------

மாதவனுடன் மணம் நடந்த மகிழ்ச்சியில் கோதைக்கு சொற்கள் முன்னும் பின்னுமாய் வருகின்றன. குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மணநீர் மஞ்சனமாட்டி அங்கவனோடும் உடன் சென்று அங்கானை மேல் மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் என்று சொல்லாமல் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்துச் சொல்கிறாள்.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

Saturday, June 15, 2013

கூடிடு கூடலே (கோதையின் கதை)

'தோழியர்களே. தந்தையாரும் கண்ணன் வந்து என்னை மணப்பானோ இல்லையோ என்று மிகவும் கவலையுடன் இருக்கிறார். எனக்கோ கண்ணன் வந்து என் காதலை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை மிகுதியாய் இருக்கிறது. அப்பாவின் கவலை தீர்க்கவும் என் காதல் நோய் தீர்க்கவும் ஏதாவது வழியிருக்கிறதா?'

'கோதை. கூடல் இழைத்துப் பார்த்தால் என்ன? கை நிறைய மஞ்சள் கிழங்குகளை அள்ளி எடுத்து அவற்றை இரண்டிரண்டாகச் சேர்த்து இரட்டையாகச் சேர்ந்தே வருகின்றனவா கடைசியில் ஒற்றையாக ஒன்று தனித்து நிற்கிறதா என்றுப் பார்ப்பது தான் கூடல். இரட்டையாக வந்தால் உன் எண்ணம் கை கூடும்; நினைத்தது நடக்கும் என்று மனம் தேறலாம்'.

'நல்ல வழி சொன்னாய். இப்போதே கூடல் இழைத்துப் பார்த்துவிடலாம்'.

அறிவில் தெளிந்து ஞானம் பெற்றவர் பலர் தொழும் தேவனாம், கேட்டதெல்லாம் கொடுக்கும் வள்ளல், திருமாலிருஞ்சோலை வாழ் என் மணாளனார் பள்ளி கொள்ளும் போது அவர் கால்களை நான் வருடிடும் பேறு எனக்குக் கிட்டுமாகில் நீ கூடிடு கூடலே.

தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே

காடுகள் நிறைந்த திருவேங்கடத்திலும் திருக்கண்ணபுரத்திலும் எந்தக் குறையுமின்றி மகிழ்ந்து உறையும் வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னொடு சேர்த்துக்கொள்வான் ஆகில் நீ கூடிடு கூடலே.

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்தென் கைப்பற்றித் தன்னொடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே

பூவில் வாழ்பவன், புகழ்ந்து வானவர் போற்றுதற்கு உரிய அழகில் சிறந்தவன், அழகிய ஒளி மிகுந்த நெற்றியைக் கொண்ட தேவகிதேவியின் சிறந்த மகன், செல்வம் மிகுந்த வசுதேவரின் இளவரசன் வருவானென்றால் நீ கூடிடு கூடலே.

பூமகன் புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே

ஆய்ச்சியர்களும் ஆயர்களும் அஞ்சும்படி, பூக்கள் நிரம்பிய கடம்ப மரம் ஏறி, நீர்நிலையில் பாய்ந்து, அங்கு வாழ்ந்த காளியன் தலை மேல் நடமாடிய கூத்தனார் வருவானென்றால் நீ கூடிடு கூடலே

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடியக்
கூத்தனார் வரில் கூடிடு கூடலே

மாடமாளிகைகள் சூழ்ந்த வடமதுரைப்பதியில் வரும்போது கம்சனால் ஏவப்பட்டு நடுவீதியில் மறித்த, மத நீர் ஓடை போல் ஒழுகும் மதம் பிடித்த குவலயாபீடம் என்னும் யானையை உதைத்துக் கொன்றவன் என்னைக் கூடுமாகில் நீ கூடிடு கூடலே.

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மாமத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே

தீயவரை அறவே ஒழித்தவன், மருத மரம் முறிய நடந்தவன், கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே

அன்று தீயவைகளைச் செய்த சிசுபாலனையும், உயர்ந்து நின்ற மருதமரத்தையும், எருதையும், கொக்கையும், வெற்றி தரும் வேலைக் கொண்டிருந்த வீரனாம் கம்சனையும், கொன்றவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே

பக்தியுடையவர் தம் மனத்தன்றி வேறு ஒருவர் மனத்திலும் நில்லாதவன், நறுமணம் சூழ்ந்த துவாரகைப்பதியின் காவலன், கன்றுகள் மேய்த்து விளையாடும் கோபாலன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதி
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே

முன்னாளில் மாவலியின் பெரிய வேள்விக்கு அழகிய குறள் உருவுடன் சென்று நிலவுலகத்தையும் அண்டங்களையும் ஒவ்வொரு அடியால் அளந்து தன் உரிமையாய்க் கொண்டவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

கொண்ட கோலக் குறளுருவாய்ச் சென்று
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடியொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே

வேதியர் மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகும் நான்மறையின் பொருளானவன், மதம் ஒழுகும் கஜேந்திரன் என்னும் யானையின் துயர் தீர்த்து அதை உய்த்தவன், என் அழகன், ஆய்ச்சியர் சிந்தையில் ஆடும் குழகன் அவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே

பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகும் வாரணம் உய்யவளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே

'கோதை. பார்த்தாயா இந்த அழகை? நீ ஒவ்வொரு முறை கூடல் இழைக்கும் போதும் அது கூடலாகவே வருகிறது. ஒற்றையாய் நிற்கவில்லை. நீ நினைப்பது நிச்சயம் நிறைவேறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீ இனி துயர் தீர்ந்து மகிழ்ந்திருக்கலாம். நானே உன் தந்தையாரிடம் நாம் கூடல் இழைத்துப் பார்த்ததைக் கூறி அவர் துயரும் தீர்ந்து இருக்குமாறு கூறிவிடுகிறேன். வருந்தற்க'.

ஊடலையும் கூடலையும் உணர்தலையும் புணர்தலையும் நிலைத்து நின்ற புகழ் கொண்ட ஆய்ச்சியரின் கூடலையும் கூறிய அழகிய குழலைக் கொண்ட கோதையின் பாடல் பத்தையும் கூறுவார்க்கு இல்லை பாவமே

ஊடல் கூடல் உணர்தல் புணர்தல்
நீடு நின்ற நிறை புகழாய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கில்லை பாவமே.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

***


Friday, June 14, 2013

ஒரு மகள் தன்னைப் பெற்றேன் (கோதையின் கதை)

ஆஹா. ஊராரும் உற்றாரும் இப்படி பழிக்கும் படி ஆயிற்றே. மாமணிவண்ணனைத் தான் மணப்பேன் என்கிறாளே கோதை. அந்த நினைவாகவே எப்போதும் இருக்கிறாள். இறைவனை மணத்தல் மானிடப் பெண்ணுக்கு இயல்பாமோ? எத்தனைச் சொல்லியும் கேட்க மறுக்கிறாளே! நான் அவளுக்குச் சொன்ன மாதவன் கதைகளையேச் சொல்லி என்னை மடக்குகிறாள். மாயவா! என் செய்தாய் என் மகளை? ஒரு மகள் தன்னை உடையேன். உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன். செங்கண் மால் கொண்டு போவானோ?

எல்லாக் குழந்தைகளைப் போல் இவளும் மணல் வீடு கட்டி விளையாடுவாள் என்று பார்த்தால், சங்கு சக்கரம் தண்டு வில் வாள் என்று நாரணன் ஆயுதங்களையே மண்ணில் இழைத்து விளையாடுகிறாள். இவளுக்கு இன்னும் முற்றிய கன்னிப் பருவம் வரவில்லை. ஆனாலும் கோவிந்தனோடு இவள் மனம் ஈடுபட்டு என் உள்ளம் தடுமாறும் படி ஆகிவிட்டதே.

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறால்!
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடு இவளை
சங்கையாகி என்னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே!

நாட்டில் உள்ளவர்களும் ஊரார்களும் நன்கு அறியும் படி இவள் துழாய் மாலை அணிந்து கொண்டு, நாரணன் போகும் இடமெல்லாம் விசாரித்து விசாரித்து அங்கெல்லாம் செல்கின்றாள். நமக்கு கேடு நினைக்கின்றவர் பலர் இருக்கின்றார்கள். கேசவனோடு இவள் சேர முடியுமா என்று எள்ளுகிறார்கள். இவள் இவ்வாறு திரியாத படி காவலில் இடும் என்று பாரில் உள்ளோர் சொல்கிறார்கள். அதனைக் கேட்டு என் மனம் தடுமாறுகிறதே.

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கல்
சூடி நாரணன் போமிடமெல்லாம் சோதித்து உழிதருகின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலருளர் கேசவனோடு இவளை
பாடுகாவல் இடுமின் என்றென்று பார் தடுமாறினதே.

நீண்ட வாசகங்களைப் பேசவே இன்னும் கற்காதவள் இவள். பேதையேன் நான் பெற்ற பேதைப் பெண். ஆனால் எந்தவிதக் கூச்சமும் இன்றி எல்லார் எதிரிலும் மாதவன் பெயர்களைப் பிதற்றித் திரிகிறாள் என் கிளிபோன்ற மொழியுடையாள். வாசம் மிகுந்த குழல் உடைய மங்கையர்களே. என் மகள் இப்படி மயங்கி நிற்கின்றாளே.

பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோலகழிந்தான் மூழையாய்
கேசவாவென்றும் கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே.

எல்லாவிதமான நகைகளும் பூணுகிறாள். பின் கண்ணாடியில் பார்த்துக்கொள்கிறாள். தன் கையில் உள்ள வளையல்களைக் குலுக்கிப் பார்த்துக்கொள்கிறாள். புத்தாடை அணிந்து கொள்கிறாள். பின் பெருமூச்சு விடுகிறாள். தன் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயை அழகுறத் திருத்திக்கொள்கிறாள். மயங்கிப் பின் தேறி, மயங்கிப் பின் தேறி, ஆயிரம் பெயர்களை உடைய தேவனின் பெருமைகளைப் பிதற்றுகிறாள். எதிரிகள் இல்லாத மாமணிவண்ணன் மேல் இவள் இப்படி மயக்கம் கொண்டுள்ளாளே.

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணிவண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

Wednesday, June 12, 2013

வாதமா விவாதமா? (கோதையின் கதை)

'வாருங்கள் தோழியர்களே'.

'என்னடி இது? வாருங்கள் என்று சொல்லிவிட்டு கோதை வேறு எதுவும் சொல்லவில்லையே. அவள் முகத்தில் இன்பக்குறியும் துன்பக்குறியும் மாறி மாறி வருகிறதே?'

'உனக்குத் தெரியாதா மாதவி? அவள் கண்ணன் மேல் காதலுடன் இருக்கிறாள். அதனால் தான் இந்த அமைதி. மேலுக்குத்தான் அவள் அமைதியாய் இருக்கிறாள்; உள்ளத்தில் ஒரு பெரும்புயலே அடிக்கிறது'.

'ஆமாம் பூங்குழலி. காதல் என்றால் எப்போதுமே இப்படித்தான். வேட்கையும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மாறி மாறி வந்து வாட்டும். அது சரி. அவளுக்கு கண்ணன் மேல் காதல் என்றாயே? எந்த கண்ணனைச் சொல்கிறாய்? எனக்குத் தெரிந்து நம் ஊரில் இவள் வயதுக்கு ஒத்த கண்ணன் யாரும் இல்லையே?'

'மாதவி. மீண்டும் ஒன்றும் தெரியாதவள் போல் கேட்கிறாயே. அவள் தான் மானிடவர்க்குப் பேச்சுப்படேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு விண்ணவன் அந்த மாயவனை அல்லவா விரும்புகிறாள்?'

'என்ன மாயவனையா? நல்ல கதை. இவளோ மானிடப்பெண். அவனோ தேவாதிதேவன். முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதைப் போலத்தான் இதுவும்'.

பெரும் கூச்சல் எழுகிறது. வந்த தோழியர் இரு பிரிவாய் பிரிந்து வாதிடுகின்றனர். ஒரு பிரிவு கோதையின் காதலை ஆதரிக்கிறது. இன்னொரு பிரிவு அவள் காதலை ஆதரிக்க வேண்டும் என்று எண்ணினாலும் இது நடக்குமா என்று வியக்கிறது. இதையே ஒரு வாய்ப்பாக வைத்து கோதையைக் கொஞ்சம் வம்புக்கு இழுக்கலாம் என்று இரண்டாம் பிரிவில் சில தோழியர் நினைத்து கிண்டலை தொடங்குகின்றனர்.

2ம் பிரிவில் ஒரு தோழி: கண்ணன் ஒரு வெண்ணெய்த் திருடன். அது தெரியாதா? வெண்ணைத் திருடும் போது கரிய குழல் கொண்ட ஆய்ச்சியிடம் மாட்டிக்கொண்டு தயிர் கடையும் மத்தினால் மொத்துண்டான். அந்த ஆய்ச்சியர் இட்ட வழக்கினால் யசோதை அவனை ஒரு கயிற்றினால் கட்டி உரலுடன் இணைத்துப் போட்டுவிட்டாள். அந்தக் குறும்பனைப் போய் இவள் காதலிக்கிறாளே?'

1ம் பிரிவில் ஒரு தோழி: கண்ணன் வெண்ணெயா திருடினான்? நாம் அவனுக்கு உரிய நம் மனதை மறைத்து வைத்துவிடுகிறோம். அந்த மனதை அல்லவா கொள்ளை கொள்கிறான்? அவனைக் கட்டிப் போடுதல் அவ்வளவு எளிதன்று. அவன் விண்ணில் வாழும் தேவர்களுக்கும் எண்ணற்கரியவன். யசோதையின் அன்பில் கட்டுண்டான். அப்படி அன்பில் கட்டுண்டும் மொத்துண்டும் அவன் இருப்பதால் கோதையின் காதலிலும் கட்டுப்படுவான். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

2: அவன் விண்ணவர்க்கும் எண்ணற்கரியவனா? நன்றாய்ச் சொன்னாய். பாஞ்சாலியின் கணவர்மார் ஐவருக்காக தூதுவனாய் நடந்து மன்னவனாம் துரியோதனன் வாயில் ஏச்சுப்பட்டான். அப்போது என்ன செய்தான் கண்ணன்? மொத்துண்டு கட்டுண்ட அவன் இங்கு சொல்லுண்டு பேசாமல் வரவில்லையா? மன்னவனுக்கே மறுமொழி சொல்ல முடியவில்லை. இவன் விண்ணவர்க்கும் எண்ணற்கரியவனா?

1: தூதனாய் துரியோதனன் சொல்லுண்டான் ஆகிலும் இவன் முன்பு ஒலிவீசும் கடல் சூழ்ந்த இந்த வையகம் முழுதினையும் உண்டு உமிழ்ந்தான் தெரியுமா? துரியோதனன் சொல்லை அன்று அரசவையில் உண்டு பின்னர் பாரதப் போரில் அதனை உமிழ்ந்தான், உலகை உண்டு உமிழ்ந்ததைப் போல. அதுவே அவன் மிகப்பெரியவன் என்று காட்டவில்லையா?

2: அவனா மிகப் பெரியவன்? கண்டவர்கள் இரக்கம் கொள்ளும்படி ஒரு குறள் உருவைக்கொண்டு அன்று வாமனனாய் மாவலியிடம் மூவடி மண் இரந்தவன் தானே இவன்?

1: மாவலியின் வேள்வியில் மண் இரந்தது எதற்காக? இவன் மூன்று உலகிற்கும் தலைவன். மாவலியோ இவன் அருளால் அந்த உலகங்களையெல்லாம் ஆளுபவன். மாவலி நாரணனிடம் கொண்ட பக்தியை நீ அறியாயோ? கண்ணன் பக்தியுடை அடியவர்க்கு எளியவன். அதனால் தான் தேவர்களின் காரியமும் ஆகவேண்டும் அதே நேரத்தில் மாவலியின் பக்தியையும் உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்று குறள் உருக்கொண்டு மண்ணிரந்தான். பக்தியுடை அடியவர்க்கு எளியவன் நம் கோதைக்கும் எளியவன் தான்.

இப்படி தோழியர் கொள்ளும் பூசலை கண்டு கோதையின் மனத்தில் குதூகலமும் ஏக்கமும் மாறி மாறித் தோன்றுகின்றன.

2: இவள் காதலை பெற்றவன் பாம்பின் மேல் படுப்பவன். எப்போதும் அது புஸ் புஸ் என்று சீறிக்கொண்டிருக்கும். அவனை இவள் மணந்து கொண்டால் அந்த பாம்பின் மேல் தான் படுத்து உறங்க வேண்டும். ஐயோ பாவம்.

1: நீ சொல்லும் அந்தப் பாம்பு என்ன வெறும் பாம்பா? அதுதான் பஞ்ச சயனம். சிறந்தவர்களுக்கு மட்டுமே உரியது. வெறும் பஞ்ச சயனத்தில் உறங்கினாலே எவ்வளவு சுகமாய் தூக்கம் வருகிறது. இந்தப் பாம்பாகிய பஞ்ச சயனமோ புஸ் புஸ் என்று தன் மூச்சினை விடும் போது அது மெதுவாய் தாலாட்டுவதைப் போல் அசையும். மாதவனை மணந்தால் அதில் உறங்கும் பேறு அல்லவா இவளுக்குக் கிடைக்கும்.

2: திருமணம் முடிந்த பின் மாப்பிள்ளையும் பெண்ணும் நான்கு சக்கரம் கொண்ட வாகனத்தில் ஏறி உலாவருவார்கள். நாரணனுக்கோ பறவை தான் வாகனம். இவள் அவனை மணந்து கொண்டால் அந்தப் பறவையில் ஏறிக்கொண்டு வானில் தான் பறக்கவேண்டும். வீதி உலா வரமுடியாது. யாருக்குத் தெரியும், அந்தப் பருந்து வானில் உயரப் பறக்கும் போது இவளைக் கீழே தள்ளிவிட்டாலும் விட்டுவிடும்.

1: கருடன் வேதங்களின் வடிவம். அதனை வாகனமாகக் கொண்டவன் வேதங்களின் தலைவன். இவள் அவனை மணந்து கொண்டால் அந்த வேதங்களில் வடிவான கருடன் இருவரையும் சேர்த்துத்தான் புகழ்வான். அந்த வேதநாயகனை மணந்தால் இவளுக்குத் தான் பெருமை.

2: கண்ணன் புராண புருஷன். பெரும் வயது உடையவன். கிழவன். ஒரு பெண்ணுக்கு வரன் தேடும் போது ஜாதகம் பார்ப்பது வழக்கம். ஆனால் அவனுக்கோ ஜாதகமே கிடையாது. அவன் பிறப்பிலியாயிற்றே? உண்மையில் அவன் ஆணா பெண்ணா என்பதே சந்தேகம். மோகினி அவதாரம் எடுத்தவன் அல்லவா? இப்படிப் பட்ட ஆணை பெரியவர்கள் வற்புறுத்தலினால் மணந்து கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் இவள் என்னடாவென்றால் தானாகவே அவனை வரித்திருக்கிறாளே?

1: கண்ணன் ஆதி காரணன். அனைத்தையும் படைத்தவன். எங்கும் நிறைந்தவன். ஆணல்லன். பெண்ணல்லன். அல்லால் அலியும் அல்லன். அனைத்தும் ஆனவன். புருஷோத்தமன். ஆண்களில் சிறந்தவன். அப்படிப்பட்டவனை அல்லவா இவள் வரிக்கிறாள். இவள் எப்படிப்பட்ட பாக்கியசாலி.

கோதை: தோழியர்களே. நீங்கள் மணிவண்ணனைப் பற்றிப் பேசிப் பேசி எனக்கு அதிகமான துக்கத்தைக் கொடுக்கிறீர்கள். போதும் உங்கள் விளையாட்டுப் பேச்சு. என்னை கொஞ்சம் தனியாக விடுங்கள்.

***

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

Tuesday, June 04, 2013

கருப்பூரம் நாறுமோ?! (கோதையின் கதை)

சங்காழ்வான் பெற்ற பேறு தான் என்னே? மாயவன் திருப்பவள வாய்ச்சுவையை என்றும் அனுபவிக்கும் பேறு வேறு யாருக்குக் கிடைத்துள்ளது? பெரிய பிராட்டி, பூமிபிராட்டி, இளையபிராட்டி என்றிவர்க்குப் பொதுவாய் இருக்கும் இந்த அதரச்சுவையை அடையும் பேறு கடலில் பிறந்து பஞ்சசனன் என்னும் அரக்கன் உடலில் வளர்ந்த இந்த சங்குக்குக் கிடைக்கும் என்றால் இந்தக் கோதைக்கும் அது நிச்சயம் கிடைக்கும். ஏன் அப்பா இப்படி கலங்குகின்றாரோ? மாதவன், பக்தியுடைய அடியவர்க்கு எளியவன் அல்லவா? அதனால் அவனை அடைதல் கடினமன்று. கடிதின் நடக்கும்.

கடலில் பிறந்த வெண் சங்கே! குவலயாபீடம் என்னும் யானையை கம்சன் ஏவிவிட அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்ற திருமகளார் கேள்வன் மாதவன் தன் வாய்ச்சுவையையும் நறுமணத்தையும் விரும்பிக் கேட்கிறேன். அது கருப்பூரத்தின் நறுமணம் கொண்டிருக்குமோ? இல்லை தாமரைப்பூ மணமோ? அந்த பவளம் போன்ற சிவந்த திருவாய் தான் தித்தித்திருக்குமோ? நீ எனக்கு சொல்வாயா?

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே


நல்ல சங்கே. நீ கடலில் பிறந்தாய். பஞ்சசனன் உடலில் வளர்ந்தாய். அந்த இழிவைக் கருதாது, என்றும் இருக்கும் இறைவன் திருக்கரங்களில் சென்று குடியேறி தீய அசுரர்கள் நடுக்கம் கொள்ளும் படி முழுங்கும் தோற்றம் கொண்டு விளங்குகிறாய்.

கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

அழகிய பெரிய சங்கே. நீண்ட கரிய மலையின் மேலே இரண்டு சிகரங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் தோன்றும், மேகங்கள் மறைக்காத வைகாசி மாத நிலவைப் போல, நீயும் பச்சைமா மலை போல் மேனி கொண்ட வடமதுரை மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்றிருக்கிறாய்.

தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ்சங்கே

வலம்புரி சங்கே. வட்ட நிலவினைப் போல தாமோதரன் கையில் எந்தத் தடையுமின்றி குடியேறி அவன் காதில் ஏதோ மந்திரம் சொல்வது போல் வீற்றிருக்கிறாய். நீ அடைந்த இந்த செல்வம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் கிட்டாதது.

சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்
அந்தரமொன்றின்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே

பாஞ்சசன்னியமே. உன்னைப்போல் கடலில் பிறந்து வளரும் பலவிஷயங்களைப் பற்றி யாரும் எந்தவிதக் கவலையும் கொள்வதில்லை. நீயோ நிலைத்த செல்வமாகிய மதுசூதனன் வாயமுதத்தை பல நாள்களாக உண்கின்றாய். நீ பெற்ற பேறு தான் என்னே?

உன்னோடுடனே ஒருகடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே

வலம்புரியே. நீ எந்த புனித தீர்த்தங்களிலும் நீராடவில்லை. ஆனாலும் என்ன புண்ணியம் செய்தனையோ? வரிசையாய் நின்ற ஏழு மரங்களை ஒரே அம்பால் சாய்த்த சிவந்த கண்களுடைய திருமாலின் திருக்கரங்களில் குடிகொண்டு அவன் வாய்த்தீர்த்தம் என்றும் உன்னுள் பாய்த்தாடும் பேறு பெற்றாய்.

போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே

சங்குகளின் அரசனே (சங்கு அரையா). நீ பெற்ற பேறு தான் பெரும்பேறு. சிவந்த தாமரை மலர்மேல் அமர்ந்து அந்த மலரில் உள்ள தேனைப் பருகும் வெண்ணிற அன்னம் போல், செங்கண் கருமேனி கொண்ட வாசுதேவனுடைய அழகிய சிவந்த திருக்கரங்களில் ஏறி வெண்ணிறம் கொண்ட நீ வசிக்கிறாய்.

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம் போல்
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்
சங்கரையா உன்செல்வம் சாலவழகியதே

பாஞ்சசன்னியமே. நீ உண்பதோ உலகளந்தான் வாய் அமுதம். நீ உறங்குவதோ கடல்வண்ணன் கைத்தலத்தில். அந்த மகிழ்ச்சியில் நீ பலவிதமான இசைகளை எழுப்புகிறாய். பெரும் படைப் போன்ற பெண்கள் நீ பெற்ற பேறு கண்டு உன் மேல் கோபம் கொண்டுள்ளனர்.

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே

பெரும் பேறாகிய செல்வம் பெற்ற சங்கே. கண்ணனின் பதினாறாயிரம் திருத்தேவியர்களுக்குப் பொதுவான மாதவன் தன் வாய் அமுதத்தை அவர்கள் பார்த்திருக்கும் போதே, தேனினை உண்பது போல் நீ நடுவில் புகுந்து உண்டால், உன் மேல் அவர்கள் கோபமும் பொறாமையும் கொள்ளாரோ?

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு செல்வப் பெருஞ்சங்கே

இந்த வகையில் பாஞ்சசன்னியமாம் பெருஞ்சங்கின் பெருமையை, அது பத்மநாபனோடு கொண்ட நெருக்கத்தை விளக்கிய புதுவை நகராம் வில்லிபுத்தூரில் வாழும் பெரும் புகழ் கொண்ட பட்டர்பிரான் திருமகளாகிய கோதை சொன்ன இந்த பத்து பாடல்களும் பொருளோடு சொல்லி வணங்குபவர்கள் எல்லாரும் இறைவனுக்கு நெருக்கமான தொண்டராய் இருப்பர்.

பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதைத் தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

திருப்பாவை அறிமுகம் - 6 (கோதையின் கதை)

'ரங்கா. என்ன சற்று நேரமாய் ஏதோ என்னிடம் கேட்க விழைவதாய்த் தெரிகிறது. ஆனால் தயங்குகிறாய். என்ன விஷயம்?'

'ஒன்னுமில்லேங்க ஐயா. கொஞ்ச நாளா ஐயா கொஞ்சம் யோசனையாவே இருக்கீங்களே. என்னன்னு கேக்கலாம்னுதான்'.

'அதுவா ரங்கா. கோதைக்குத் திருமணவயது வந்துவிட்டதல்லவா. உறவினரும் ஊர்மக்களும் அவள் திருமணம் பற்றிக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். எனக்குக் கோதையைப் பிரிய மனம் இல்லையென்றாலும், பெண் என்று பிறந்துவிட்டால் என்றோ ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு தானே ஆகவேண்டும்.'

'கோதையம்மாவுக்கு கல்யாணங்களா? அது நல்ல விஷயம் ஆச்சுங்களே. அதுக்கு ஏனய்யா வருத்தப்படுறீங்க?'

'திருமணம் செய்விப்பதில் வருத்தம் இல்லை ரங்கா. நானே கோதையிடம் சென்று, அம்மா. உனக்கு திருமணம் செய்யும் பருவம் வந்துவிட்டது. உனக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும் என்று கேட்டேன்'.

'குழந்த என்ன சொல்லிச்சுங்கய்யா?'

'அவள் மாதவனாம் நாரணனையே திருமணம் செய்துகொள்வேன் என்கிறாள்'.

ரங்கன் மனதில் 'சரிதான். நாம குழந்தய அன்னைக்கு தொளசி செடிக்கு கீழப் பாத்தப்பவே நெனைச்சோமே இந்த அழகு கண்ணன் சாமிக்கேத்த அழகுன்னு'.

'அப்படிங்களா ஐயா. நம்ம கோதையம்மா அழகுக்கு அந்த கண்ணன் சாமிதான் பொருத்தமய்யா.'

'என்ன ரங்கா. நீயும் இப்படி சொல்கிறாய். இந்தப் ப்ரபஞ்சத்துக்கெல்லாம் முதல்வனும் தலைவனும் ஆன அந்த மாயவன் எங்கே? இந்த ஏழையின் மகள் எங்கே? அது நடக்கும் விஷயமா? கோதை மாதவனை மணப்பது என்பது நடக்காத விஷயம் என்று கோதையிடமும் சொன்னேன்'.

'குழந்த என்ன சொல்லுச்சுங்கய்யா?'

'அவள் தன் மறுமொழியை ஒரு பாடலாகவே பாடிவிட்டாள்.
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

சங்கும் சக்கரமும் ஏந்தும் தடக்கையனுக்காகவே தான் உயிர் வாழ்வதாகவும் தன்னை ஏதாவது மானிடனுக்குத் திருமணம் செய்ய நிச்சயம் செய்தால் தான் உயிரோடு இருக்கப்போவதில்லை என்றும் சொல்கிறாள். இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாளே என்று தான் எனக்குக் கவலை.'

'ஐயா. நீங்க கவலப்படுறதுல அர்த்தம் இருக்குங்கய்யா. இன்னொரு தடவ கோதையம்மாகிட்ட பேசிப்பாருங்கய்யா. திரும்பத்திரும்பச் சொன்னா ஒரு வேளை குழந்த ஒத்துக்க வாய்ப்பு இருக்கு'.

'ஆமாம் ரங்கா. அந்த அரங்கனின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இன்னொரு முறை கோதையிடம் பேசிப்பார்க்கவேண்டும்'.(2005ல் எழுதியதன் மறுபதிவு)

Monday, June 03, 2013

திருப்பாவை அறிமுகம் - 5 (கோதையின் கதை)

வாங்கய்யா. வாங்கம்மா. வணக்கம். என் பேரு ரங்கனுங்க. ஐயா வீட்டுல தோட்டக்காரனா இருக்கேனுங்க. ஐயாகிட்ட தோட்டம் எங்க இருக்குன்னு கேக்கிறீங்களா? அதாங்க பூத்தோட்டம். ஐயா தெனமும் பூ பறிச்சு சாமிக்கு மாலை கட்டி குடுப்பாருங்க. அது ஒரு 20 வருசமா நடக்குதுங்க. ராசா கேட்ட கேள்விக்கெல்லாம் ஐயா ரொம்ப நல்லா பதில் சொல்லி பாண்டிய ராசா அவருக்கு பட்டமெல்லாம் குடுத்து பட்டத்து யானை மேல உக்காரவச்சு ஊர்வலம் வந்தாருங்களே. அப்போ நானும் அங்க இருந்தேனுங்க. அப்ப எனக்கு சின்ன வயசு. ஐயா பெருமையப் பத்தி பெரிய பெரிய புலவருங்க எல்லாம் பாடுனாங்க. எனக்கு ஒன்னும் புரியலங்க. ஆனால் அவரப் பாக்குறதுக்காக கருடன்ல ஏறி சாமியே வந்துச்சு பாருங்க; அப்பத்தான் எனக்கு அவரோட மகிமை புரிஞ்சதுங்க. இருந்தா இவர் கூட இருக்கணும்ன்னு தோணிச்சுங்க.

பல்லக்குல ஊருக்கு ஐயா திரும்பி வர்ரப்ப நானும் ஒரு பல்லக்கு தூக்கியா சேந்துக்கிட்டேங்க. ஊருபக்கமா வந்த பொறகு ஐயாகிட்ட என் ஆசைய சொல்லி அவர்கிட்ட வேலைக்காரனா சேந்துக்கறேன்னு சொன்னேங்க. ஐயா எனக்கு வேலக்காரனெல்லாம் வேணாம்ன்னுட்டாருங்க. கெஞ்சி கூத்தாடி அவர்கிட்ட வேலைக்கு சேர்றது பெரும்பாடாப் போச்சுங்க. தோட்ட வேலை தெரியும்ன்னு சொன்ன பொறகு அரைமனசோட தோட்டக்காரன் வேலை குடுத்தாருங்க. தோட்டத்துலயே ஒரு ஓரமா ஒரு குடிசையப் போட்டுக்கிட்டு சந்தோஷமா ஐயாகிட்ட வேலைப்பாத்துகிட்டு இருக்கேங்க.

கோதையம்மாவை ஐயா தொளசி செடிக்குக்கீழ கண்டெடுக்கறப்ப நானும் கூட இருந்தேங்க. குழந்த என்னா அழகுங்கறீங்க. அன்னைக்கு ஐயாவைப் பாக்க கருடன்ல ஏறி சாமி வந்துச்சு பாருங்க. அந்த சாமி கண்ணன் சாமின்னு சொன்னாங்க. எனக்கு எங்கேங்க அதெல்லாம் புரியப்போகுது. ஆனா அந்த சாமி ரொம்ப அழகா இருந்துச்சுங்க. எப்பவும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருந்திச்சுங்க. கோதையம்மாவை குழந்தையா பாத்தவுடனே எனக்கு சாமி ஞாபகம் தான் வந்துச்சுங்க. அவ்வளவு அழகு. ஒரு பொம்பளை சாமியாட்டம் அவ்வளவு அழகு. கருடன்ல வந்துச்சே அந்த கண்ணன் சாமிக்கேத்த அழகு.

ஐயா அந்தக் குழந்தைய எடுத்துகிட்டு போயி பெத்த புள்ளைய விட நல்லா வளத்துக்கிட்டு வர்றது தான் உங்களுக்கு தெரியுங்களே. நீங்க கொஞ்ச நாளுக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதுங்களா? இப்ப போயி வந்திருக்கீங்க. ஐயா கொஞ்ச நாளா ஏதோ கவலையில இருக்கிற மாதிரி தெரியுதுங்க. இன்னைக்கு ஐயாக்கு என்ன கவலைன்னு கேக்கலாம்னு இருக்கேன். நீங்களும் கூட இருந்து ஐயா கவலையை கேட்டு அவருக்கு ஆறுதல் சொல்றீங்களா?

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

Saturday, June 01, 2013

திருப்பாவை அறிமுகம் - 4 (கோதையின் கதை)

'ஏனடி கோமளவல்லி. அங்கே போவது கோதை தானே.'

'ஆமாம் கமலவல்லி. அது கோதை தான். எவ்வளவு அழகு அவள்'

'உண்மைதான் கோமளவல்லி. இதுவரை இப்படிப்பட்ட அழகை நம் வில்லிபுத்தூரில் பார்த்ததில்லை'

'கோமளவல்லி. வில்லிபுத்தூரில் என்ன. நான் பாண்டிய தேசம் முழுவதிலுமே இப்படிப்பட்ட அழகைக் கண்டதில்லை. இந்த அழகு நிச்சயம் ஒரு மானிடப்பெண்ணுக்கான அழகு கிடையாது. இவள் வானிலிருந்து இறங்கி வந்த தேவதையோ?'

'ரங்கநாயகி. நீ ஒரு வார்த்தை சொன்னாலும் அதற்கு மறுவார்த்தை கொடுக்க முடியாததைப் போல் சொல்கிறாய். மிக்க நன்று'

'கமலவல்லி. கோதை அழகில் மட்டுமா சிறந்து இருக்கிறாள். அவள் நற்குணங்கள் நம் குழந்தைகள் யாருக்கும் கிடையாது. அன்று நான் கஷ்டப்பட்டு கிணற்றங்கரையிலிருந்து ஒரு பெரிய குடத்தில் நீர் கொண்டு வந்து கொண்டிருந்தேன். அன்று பார்த்து என் மணவாளர் எங்கோ வேலையாகச் சென்றுவிட்டார். நான் கஷ்டப்பட்டு அந்த நீர்குடத்தைக் கொண்டுவருவதைப் பார்த்து கோதை "அத்தை. நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள். நான் அந்த நீர்க்குடத்தைக் கொண்டுவருகிறேன். தாருங்கள்" என்று என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி வீடு வரை கொண்டுவந்து கொடுத்துச் சென்றாள். இதில் என்னை மிகவும் நெகிழச்செய்தது என்னவென்றால் என் சொந்த மகள் அப்போது திண்ணையில் தான் விளையாடிக்கொண்டிருந்தாள். உனக்குத்தான் தெரியுமே அவளும் கோதை வயதினள் தான் என்று. தாய் கஷ்டப்படுகிறாளே என்ற எண்ணமே இல்லாமல் அவள் விளையாடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் கோதையோ என் கஷ்டத்தைக் கண்டு சகிக்கமுடியாமல் எனக்கு உதவி செய்கிறாள்'

'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள். தாய்மார்கள் எளிதாக தன் பிள்ளைகளைத் தாழ்த்தி மற்றவர் பிள்ளைகளை உயர்த்த மாட்டார்கள். நாம் எல்லாரும் மாறி மாறி கோதையைப் புகழ்வதிலேயே தெரிகிறது அவள் குணங்கள் எவ்வளவு சிறந்ததென்று. முக்கிய காரணம் வளர்ப்பு அப்படி'.

'ஆமாம் ரங்கநாயகி. நீ சொன்னது மெத்தவும் சரி. பெரியாழ்வார் அவளுக்கு நல்ல குணங்களை மட்டும் அல்ல; இறைபக்தியையும், கவியியற்றும் திறமையையும், நல்ல தமிழறிவும் ஊட்டியிருக்கிறார். அன்று என் மகள் விளையாடச் சென்றவள் வெகு நேரம் வரை திரும்பவில்லை. அவளைத் தேடி நான் சென்றபோது கோதை என் மகளை ஒத்த வயதுடைய பெண்குழந்தைகளைச் சேர்த்துக்கொண்டு கண்ணனின் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள். கண்ணனின் கதைகள் இயற்கையிலேயே அமுதம் போன்றவை. அவற்றை கோதை சொல்லிக்கொண்டிருந்தது இன்னும் இனிமையாக இருந்தது. நானும் உட்கார்ந்து இரு கதைகள் கேட்டேன். நேரம் போவதே தெரியவில்லை. வளர்ந்த நாமே இப்படி அவள் சொல்லும் கதைகளை மயங்கி நின்று கேட்டால் நம் குழந்தைகளைச் சொல்லவேண்டுமா. அசையாமல் கோதை சொல்லும் மாயவன் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். '

'நானும் கோதை கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கதையும் இனிமை; அதை கோதை சொல்லும் முறையும் இனிமை; அது மட்டுமா - அவள் குரலும் இனிமை. அன்று கதைக்கு நடுவில் பெரியாழ்வார் பாடிய சில பாடல்களைப் பாடினாள். என்ன இனிமை தெரியுமா? அது தமிழின் இனிமையா? இல்லை பாடல்களின் இனிமையா? இல்லை கோதையின் குரலினிமையா? என்று திகைத்துப் போய்விட்டேன். எங்கே அம்மா இந்த கதைகளை அறிந்தாய் என்றால் தன் தந்தையார் சொன்ன கதைகள் என்றாள்.'

'என்ன பெண்களே. மூவரும் கூடி அமர்ந்து யாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.'

'வா சீதாலக்ஷ்மி. வேறு யாரைப்பற்றிப் பேசப் போகிறோம். எல்லாம் உங்கள் அண்ணன் மகள் கோதையைப் பற்றித்தான்.'

'என் அண்ணன் மகளா. ஆமாம். அப்படியும் சொல்லலாம். விஷ்ணுசித்தர் என் கூடப்பிறந்த அண்ணன் இல்லாவிடினும் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறைதான். கோதையைப் பற்றி என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்'

'எல்லாம் அவள் நல்ல குணங்களைப் பற்றியும், அவளின் அழகும், குரலினிமையும், கண்ணன் கதை சொல்லும் திறனும் தமிழறிவும் எவ்வளவு நன்றாய் இருக்கிறது என்றும் பேசிக்கொண்டிருந்தோம்'.

'எல்லாம் இருந்து என்ன செய்ய? அவள் திருமண வயது அடைந்து நெடுநாள் ஆகிறது. இந்த விஷ்ணுசித்தரோ மகளைப் பிரிய வேண்டுமே என்று அவளின் திருமணத்தைப் பற்றியே சிந்தனை செய்யாமல் இருக்கிறாள். அப்படி எவ்வளவு நாள் தான் இருக்க முடியும். சீக்கிரம் பெண் குழந்தைக்குத் திருமணம் செய்தால் தானே அவளுக்கும் நல்லது; அவளைப் பெற்றவர்க்கும் நல்லது; நமக்கும் நல்லது. சொன்னால் அவர் காதில் கூட வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறார்'.

'நீ சொல்வது மிக்க சரி சீதாலக்ஷ்மி. என் கணவர் பெரியாழ்வாரின் தோழர். அவரைச் சென்று பெரியாழ்வாரிடம் பேசச் சொல்கிறேன். நம் வீட்டுக்குழந்தை கோதை. அவளுக்கு ஒரு நல்லது கெட்டது நாம் தானே பார்த்துப் பார்த்துச் செய்யவேண்டும். '

'மகிழ்ச்சி கமலவல்லி. உன் கணவரும் சொல்லட்டும். நானும் வற்புறுத்துகிறேன். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். சீக்கிரம் கோதையின் திருமணத்திற்கு அவர் ஆவன செய்வார். நீங்கள் உங்கள் உரையாடலைத் தொடருங்கள். எனக்கு வேலை இருக்கிறது. நான் வருகிறேன்'.

'பார்த்தாயா கோமளவல்லி சீதாலக்ஷ்மி பேசிவிட்டுச் செல்வதை. என்னமோ நமக்கெல்லாம் வேலையே இல்லாத மாதிரியும் அவளுக்கு மட்டும் வேலை இருப்பதைப் போலவும் அல்லவா பேசிவிட்டுச் செல்கிறாள்'.

'நீ வருத்தப்படாதே கமலவல்லி. அவள் தான் எப்போதுமே அப்படிப் பேசுபவள் தானே. நமக்கும் நேரம் ஆகிவிட்டது. நாளை நம் உரையாடலைத் தொடரலாம். இப்போது அவரவர் வீட்டிற்குச் செல்வோம்'.

'ததாஸ்து'.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

திருப்பாவை அறிமுகம் - 3

ஆடி மாதம். நந்தவனத்தில் ஒரு சிறு குடிசை இருக்கிறது. ஆடி மாதக் காற்றில் அம்மியும் பறக்கும் என்னும் முதுமொழிக்கேற்ப அடிக்கும் காற்றில் நந்தவனத்தில் இருக்கும் பூச்செடிகளும் கொடிகளும் சிறு மரங்களும் தத்தளிக்கின்றன. இது நாள் முழுதும் நடக்கும் நிகழ்ச்சியாயினும் இந்த அதிகாலை நேரத்தில் சித்திரை மாதம் போல் அதிக வெப்பமும் இல்லாமல் மார்கழி மாதம் போல் குளிரும் இல்லாமல் காற்று மிதமான வெப்பத்தோடு வீசுகிறது. இந்த இனிமையான சூழலில் அந்த நந்தவனத்தின் நடுவில் இருக்கும் குடிலில் இருந்து நறுமணங்கள் வருகின்றன. இனிமையான குரலில் இறைவனை வழுத்தும் பாடல்களும் கேட்கின்றன. உள்ளே பார்த்தால் விஷ்ணுசித்தர் இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்.

ச்ரிவில்லிபுத்தூரில் இருக்கும் வடபெரும் கோயிலுடையானின் திருக்கோயிலுக்கு மலர்மாலை கட்டித் தரும் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் விஷ்ணுசித்தர். பூமாலையோடு பாமாலையும் தொடுத்து இறைவனை வழிபடுபவர். பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்த்து அவனால் பட்டர் பிரான் என்று அழைக்கப்பட்டவர். இறைவன் மேல் அவருக்கு இருக்கும் பரிவைப் பார்த்து இறைவனாலேயே பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்டவர்.

இன்று பூர நட்சத்திரம். இறைவன் திருப்பணிக்காக மலர்களை கொய்வதற்காக பெரியாழ்வார் நந்தவனத்திற்கு வருகிறார். மலர்களைக் கொய்யும் போது அழகிய தமிழ்ப்பாமாலைகளையும் பாடிக்கொண்டிருக்கிறார்.

எல்லா வகையான பூக்களும் அந்த நந்தவனத்தில் வளர்கின்றன. கறு நிற பூக்களைக் கண்டபோது கார்மேக வண்ணனின் உருவம் பெரியாழ்வார் எண்ணத்தில் தோன்றுகிறது. வெண்ணிறப் பூக்கள் அவன் திருமுறுவல் பூக்கும் போது தெரியும் வெண்ணிறப் பற்களை நினைவூட்டுகிறது. சிவந்த மலர்கள் அவன் கொவ்வைச் செவ்வாயைக் காட்டுகிறது. மஞ்சள் நிறப் பூக்கள் அவன் இடையில் அணிந்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டாடையை நினைவூட்டுகிறது. இப்படி எங்கும் எதிலும் இறைவனையே கண்டு மகிழ்ந்து பெரியாழ்வார் மலர்களைப் பறித்துக்கொண்டிருக்கிறார்.

திடீரென்று யாரா ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. அந்த அழுகுரல் இப்போதே பிறந்த குழந்தையின் குரல் போல மென்மையாக இனிமையாக ஒலிக்கிறது. பெரியாழ்வார் அந்த அழுகுரல் வந்த திசையை நோக்கி செல்கிறார். எங்கோ அருகில் இருந்து தான் கேட்கிறது; ஆனால் எங்கு என்று தெரியவில்லை. நன்றாய்த் தேடிப்பார்த்த போது அந்தக் குழந்தை திருத்துழாய் செடிகளின் கீழ் இருக்கிறது. பெரியாழ்வாரைக் கண்டதும் அழுகையை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்து கைகால்களை ஆட்டி சிரிக்கிறது.

அந்த குழந்தையை வார் எடுத்துக்கொண்ட பெரியாழ்வார் இது யாருடைய குழந்தை என்று வியந்து சுற்றிலும் சென்று பார்க்கிறார். யாரையும் காணவில்லை. சரி இந்த குழந்தையை இப்படியே இந்த நந்தவனத்தில் விட்டுச் செல்ல முடியாது; நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்வோம்; யாராவது தேடி வந்தால் கொடுப்போம்; இல்லை இது இறைவன் அருள் என்று கொண்டு நாமே இந்த குழந்தையை வளர்ப்போம் என்று எண்ணிக்கொண்டு பெரியாழ்வார் அந்த அழகிய பெண் குழந்தையை தன் சிறிய குடிலுக்குக் கொண்டுவந்தார்.

சிறிது நாட்கள் ஆகிவிட்டன. யாரும் குழந்தையைத் தேடி வரவில்லை. பெரியாழ்வாருக்கும் இந்த குழந்தை நமக்காக இறைவனே அருளிய குழந்தை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. இறைவனுக்காக மலர்மாலை கட்டிக் கொடுக்கும் தனக்கு இன்னொரு அழகிய மலர்மாலையைப் போல் கிடைத்த இந்தப் பெண் குழந்தைக்கு மலர்மாலை என்னும் பொருள் படும் 'கோதை' என்றப் பெயரை இட்டார்.

கோதை என்னும் அழகிய பெயருக்கு வேறு பல பொருள்களும் உண்டு. வடமொழியில் கோ என்றால் 'செல்வம், பூமி' என்ற பொருள்களும், தா என்றால் 'கொடுப்பவள், கொடுக்கப்பட்டவள்' என்ற பொருள்களும் உண்டு. அதனால் கோதை என்றால் 'அருட்செல்வத்தை, ஆன்மிகச் செல்வத்தை அருளுபவள்' என்ற பொருளும், 'பூமியால் கொடுக்கப்பட்டவள்' என்ற பொருளும் உண்டு.
கோதை பெரியாழ்வாரின் அரவணைப்பில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவருகிறாள்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே!


(2005ல் எழுதியதன் மறுபதிவு)