Sunday, December 30, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 12


எந்த ஒரு இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்காத விரதத்தை மேற்கொண்ட தனது குரு தோதா புரி தக்ஷிணேஷ்வரத்தில் பதினோரு மாதங்கள் தங்கியிருந்தார் என்று கேள்விபட்ட போது மிகுந்த வியப்பாக இருந்தது ஜகன்மோகனுக்கு. அவருடைய வயது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருமுறை குருநாதரே 150 வருடங்களுக்கு மேலாக வாழ்வதாகக் கூறினார். ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழ்வது பெரிய காரியமே இல்லை என்பதையும் கூறினார். ஆன்மிகப் பயிற்சிகள் கடுமையாக இருப்பதாலும் வெகு நீண்ட நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய தேவை இருப்பதாலும் ஏற்படும் தடங்கல்கள் எண்ணற்றவையாக இருப்பதாலும் இந்த மாதிரி நீண்ட ஆயுள் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது என்பதையும் கூறி அருளினார்.

அவருடைய அருளினால் அத்வைத சித்தாந்தம் நன்கு ஜகன்மோகனின் ஆழ்மனத்திற்கும் புரிந்தது. கடந்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து அத்வைத அனுபவத்தைப் பெறுவதற்காக ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். குருநாதரின் கருணையால் அவரது ஆன்மிகப் பயிற்சியில் ஏற்பட்ட தடங்கல்கள் எல்லாம் அவை ஏற்பட்ட சில நாட்களிலேயே நீங்கி நல்ல முன்னேற்றம் அடைந்தது வந்திருக்கிறார்.அப்படி தனது ஆன்மிகப் பயிற்சிகளில் உறுதுணையாக இருந்து வரும் குருநாதர் தனது விரதத்திற்கு மாறாக பதினோரு மாதங்கள் தக்ஷிணேஸ்வரத்தில் தங்கியிருந்தார் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ஏதாவது இருக்க வேண்டும் என்று எண்ணினார் ஜகன்மோகன். இந்தக் கேள்வியுடன் குருநாதரை வணங்கித் தியானித்த போது அவரது திருவுருவம் தியானத்தில் எதிரே தோன்றியது.

"ஜகன்மோகன். தக்ஷிணேஸ்வரத்தில் என்ன இருக்கிறது என்பதை நீயே சென்று பார்"

இந்தக் கட்டளை கிடைத்தவுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் தக்ஷிணேஸ்வரத்திற்குக் கிளம்பிவிட்டார் ஜகன்மோகன். தக்ஷிணேஸ்வரம் சென்று அடைந்த போது காளி மாதாவிற்கு மாலை நேர பூஜை நடந்து கொண்டிருந்தது. காளிகட்டத்தில் நீராடிவிட்டு ஜகன்மோகன் கோவிலுக்குச் சென்று அடைந்த போது பூஜையின் நடுவில் இருந்த இராமகிருஷ்ணரைக் கண்டார்.


'இந்தச் சிலையின் முன்னால் இப்படி உணர்ச்சிகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் படி உட்கார்ந்திருக்கும் இந்த மனிதனா நம் குருநாதரை இந்த இடத்தில் பதினோரு மாதங்கள் கட்டிப் போட்டது? இந்த சிலைக்கு செய்திருக்கும் அலங்காரமும் இந்த கூட்டத்தின் ஆரவாரமும் ஆன்மிகப் பயிற்சிக்குத் தடைகளாக அல்லவா இருக்கும்? இவருக்கா நம் குருநாதர் அத்வைத சித்தாந்தத்தைப் போதித்து நிர்விகல்ப சமாதிநிலையைக் காட்டுவித்தார்?'

காலம் முழுக்க உருவ வழிபாடு ஆன்மிகப் பயணத்தில் கீழ்படியில் இருப்பவர்களுக்கானது; உருவமும் குணமும் பெயரும் அற்ற எங்கும் நிறைந்த பிரம்மத்தையே தியானிப்பது தான் ஆன்மிகப் பயிற்சிக்கு உகந்தது என்று எண்ணி வரும் ஜகன்மோகனுக்கு இவையெல்லாம் குழப்பமாக இருந்ததில் வியப்பில்லை. அவரது குருநாதர் ஈஸ்வர தோதா புரியும் பலமுறை உருவ வழிபாட்டையும் அதில் மயங்கிப் போகும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்படும் தடைகளையும் பற்றி சொல்லியிருக்கிறார். அதனால் தக்ஷிணேஸ்வரத்தில் கண்ட காட்சி பெரும்குழப்பமாக இருந்தது அவருக்கு.இப்படி எல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த ஜகன்மோகன் கூட்டத்தோடு கூட்டமாக இராமகிருஷ்ணரின் அருகில் சென்றார். இன்னும் இராமகிருஷ்ணர் அன்னை பவதாரிணியின் திருவுருவத்திலேயே லயித்துப் போய் மெய்மறந்து கண்களில் நீர் சோர உடலெல்லாம் தொய்வுற்று உட்கார்ந்திருக்கிறார். அருகில் செல்ல செல்ல ஒரு பெரிய அதிர்வு தன்னைத் தாக்குவதை உணர்ந்தார் ஜகன்மோகன். பாதி தூரம் சென்ற போதே பல வருடங்களாகச் செய்து வந்த ஆன்மிகப் பயிற்சிகளினால் ஏற்பட்ட ஒழுங்குகளையும் மீறி அவருக்கு அங்கேயே தியானம் கைகூடியது. அப்படியே அந்த இடத்திலேயே அவர் தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

"ஜகன்மோகன். நான் பதினொரு மாதங்கள் இங்கே இருந்ததைப் பற்றித் தானே உனக்கு கேள்விகள். இங்கு என்ன நடந்தது என்பதை நீயே பார்"

குருநாதரின் குரல் இதனைச் சொன்ன பிறகு ஜகன்மோகனுக்கு தன் குருநாதருக்கும் இராமகிருஷ்ணருக்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தெரியத் தொடங்கின. சாரதா தேவியாரை மணந்து இல்லறத்தில் இருக்கும் ஒருவர், உருவ வழிபாட்டின் உச்சிக்குச் சென்ற ஒருவர், தான் ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக அடைய முயன்றுவரும் நிலையை, குருநாதர் தோதாபுரி நாற்பது ஆண்டுகள் முயன்று அடைந்த நிலையை ஒரே நாளில் அடைந்து அந்த நிலையிலேயே மூன்று நாட்கள் தங்கியிருந்தார் என்பதை அறிந்த ஜகன்மோகனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. இப்படி ஒரே நாளில் நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனக்குச் சீடனாக இருந்த நிலையிலிருந்து தனக்குக் குருவாக இருந்து சொல்லித் தர நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்த தோதாபுரி தன் விரதத்திற்கு எதிராக அந்த இடத்திலேயே பதினொரு மாதங்கள் தங்கியிருந்தார் என்பதை உணர்ந்த ஜகன்மோகனுக்கு வியப்பு எல்லையை மீறியது.

கண் விழித்துப் பார்த்த ஜகன்மோகனின் எதிரில் காளி மாதா கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தாள். தியானத்தில் ஆழும் முன் வெறும் மனிதனாகத் தோன்றிய இராமகிருஷ்ணர் அன்னையின் ஒளிக்கு ஈடான ஒளியுடனும் பொன்னிற மேனியுடனும் விளங்கிக் கொண்டிருந்தார். தானாக ஜகன்மோகனின் கரங்கள் இருவரையும் நோக்கி கூப்பின. அந்த நொடியில் தன் பஞ்ச கோசங்களிலும் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தார் ஜகன்மோகன். கை கூப்பிய படியே கோவிலை விட்டு வெளியே வந்து தனிமையான ஒரு இடத்தில் குருநாதரை வணங்கி தியானத்தில் அமர்ந்தார்.

அத்வைத வேதாந்தத்தில் கரை கண்டவரும் அனுபூதிமானும் ஜீவன் முக்தருமான தோதாபுரி தன் முக்கிய சீடர்களுள் ஒருவரான ஜகன்மோகனிடம் தியான நிலையில் பேசத் தொடங்கினார்.

"ஜகன்மோகன். நீ காண்பது கனவல்ல. உண்மையே."

"சுவாமி. அடியேனுக்கு அது புரிகிறது. ஆனால் இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை சாத்தியப்பட்டது?"

"இல்லறமோ துறவறமோ ஆன்மிகப் பயிற்சி செய்வதற்கு இரண்டுமே ஏற்றது தானே?"

"ஆமாம் சுவாமி. இரண்டுமே ஏற்றது தான். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு ஆன்மிகப் பயிற்சி செய்வதில் எண்ணற்ற தடைகள் ஏற்படுமே?"

"அது உண்மை தான் ஜகன்மோகன்"

"அப்படி இருக்க இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை ஒரே நாளில் சாத்தியமானது?"

"அது தான் உனது உண்மையான கேள்வியா ஜகன்மோகன்?"

"இல்லை சுவாமி. என் மனத்தில் உள்ள குழப்பம் அது இல்லை தான். திருமணம் செய்வது ஆன்மிகப் பயிற்சிகளுக்குத் தடையானது என்ற எண்ணத்தில் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன். இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன். அது தான் குழப்பத்திற்குக் காரணம்"

"அதனை அறிகிறேன் ஜகன்மோகன். உனக்கு இன்னொரு ஆவலும் இருக்கிறது. அதையும் சொல்."

"ஆமாம் சுவாமி. உருவ வழிபாட்டில் ஈடுபட்டு அந்தச் சுவையையும் அறிய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது"

"ஜகன்மோகன். இரண்டு ஆவல்களாலும் ஒரு குறையும் இல்லை. நீ விரும்பும் இந்த இரண்டு அனுபவங்களும் உனக்குக் கிடைக்கும். அவற்றால் குழப்பம் அடையாதே"

"அதெப்படி சுவாமி? இந்த அனுபவங்களை நான் அடைய வேண்டும் என்றால் நிர்விகல்ப சமாதியும் முக்தியும் எனக்கு இந்தப் பிறவியிலேயே கிடைக்குமா? இல்லை என்றால் நான் வழி தவறிப் போவதாக ஆகாதா?"

"ஜகன்மோகன். அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும். உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவல்களும் உன் முந்தைய பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாசனையே. முழுமையடையாத அந்த அனுபவங்கள் தான் உன்னை மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆன்மிக வாழ்வில் நன்கு முன்னேற்றமடைந்த உனக்கு அந்த அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டாலும் வழி தவறிப் போக இயலாது. அதனால் கவலை வேண்டாம்"

"உண்மையாகத் தானா சுவாமி?"

"நிச்சயமாக. கவலை வேண்டாம். இந்தப் பிறவியில் தொடர்ந்து உன் ஆன்மிக முயற்சிகளைச் செய்து வா. அடுத்த பிறவியிலிருந்து உனக்கு நீ விரும்பும் அனுபவங்கள் ஏற்படும்"

***

நிர்விகல்ப சமாதி: மனம், மொழி, மெய் என்று மூன்று கரணங்களும் அவற்றின் உணர்வுகளும் நீங்கி எங்கும் நிறைந்து எல்லாமும் ஆகி நிற்கும் - பெயர், உருவம், இடம், காலம் என்று எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் - உண்மை, அறிவு, இன்பம் (சத் சித் ஆனந்தம்) இவற்றின் வடிவமாக நிற்கும் பரம்பொருளைக் காணும் நிலை; பரம்பொருளாகவே ஆகி நிற்கும் நிலை. விகல்பம் என்றால் வேறுபாடு; நிர்விகல்பம் என்றால் வேறுபாடு இல்லாத நிலை; சமாதி என்றால் ஆதிக்குச் சமமான நிலை. Nirvikalpa samadhi என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.

பஞ்ச கோசங்கள்: ஒவ்வொருவரையும் ஐந்து விதமான போர்வைகள் போர்த்தியிருக்கின்றன என்பது இந்திய தத்துவங்களின் கருத்து. உடல் என்னும் உணவால் ஆன அன்னமயகோசம்; உணர்ச்சிகளால் ஆன பிராணமய கோசம்; எண்ணங்களால் ஆன மனம் என்னும் மனோமய கோசம்; பெற்ற அனுபவங்களின் அறிவினால் ஆன விஞ்ஞான மய கோசம்; இன்பமே உருவான ஆனந்த மய கோசம். இந்த ஐந்து போர்வைகளும் ஒரு ஆத்மாவைச் சூழ்ந்திருக்கிறது என்பது இந்தியத் தத்துவங்களின் கருத்து. பஞ்ச கோசங்களைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்க்கலாம். Pancha kosha என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.

வாசனைகள்: முற்பிறவிகளிலும் இந்தப் பிறவியிலும் அடைந்த அனுபவங்களின் எச்சங்கள்; தொகுப்புகள். Vasana என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.

Thursday, December 27, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 11

ஏஹி முராரே குஞ்ச விஹாரே - ஜயதேவரின் கீதகோவிந்தத்தில் அவனுக்குப் பிடித்த இந்த அஷ்டபதியைப் பாடிக் கொண்டிருந்தான் நரசிம்மதாசன். ஏதோ ஒரு பூர்வஜென்ம பந்தம் என்பது போல் தோன்றுகிறது அவனுக்கு. கண்ணனின் பெயரைக் கேட்டாலே போதும். கண்களில் நீர் பெருகுகிறது. புலன்கள் எல்லாம் சோர்கின்றன. உடலெங்கும் புல்லரிக்கிறது. அங்கங்கள் எல்லாம் தங்கமாக ஒளிவீசுகிறது. கீத கோவிந்தத்தையே எப்போதும் பாடிக் கொண்டிருக்கிறான். நேரம் காலம் இல்லாமல் எப்போதும் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

நரசிம்மதாசன் இப்படி கிருஷ்ண பக்தியில் என்றும் எப்போதும் மூழ்கி இருப்பதற்கு அவன் வங்காளத்தில் பிறந்த இந்தக் காலம் காரணமா அல்லது அவனது பல பிறப்புகளில் செய்த தவங்கள் காரணமா தெரியவில்லை. இவனைப் போன்ற பக்தனைப் பார்ப்பதற்கு கடினம் என்று இவனைப் பார்ப்பவர்கள் எல்லாம் சொல்கின்றார்கள். சில நேரங்களில் தன்னையே இராதையாக எண்ணிக் கொண்டு கண்ணனின் வரவிற்காக காத்திருக்கிறான். சில நேரங்களில் தன்னைக் கண்ணனாகவும் கண்ணனை இராதையாகவும் எண்ணிக் கொண்டு இராதைக்குக் கண்ணன் செய்யும் பணிவிடைகளை எல்லாம் செய்கிறான். பார்க்கும் திசையிலெல்லாம் ஏதோவொன்று கண்ணனை நினைவுபடுத்துவதாக இருக்கிறது அவனுக்கு.

முப்பந்தைந்து வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தாய் தந்தையர் இருந்திருந்தால் எப்போதோ வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். வற்புறுத்த யாரும் இல்லாமல் இவனும் எப்போதும் கிருஷ்ணனை நினைத்தே தன் காலத்தை ஓட்டிவிட்டான். அழகும் இளமையும் இருக்கும் போதும் இவனது கிருஷ்ணபிரேமையைப் பார்த்து இந்தப் பைத்தியத்திற்குப் பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.

இவன் பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நவத்வீபத்தில் ஒரு பெரும் ஜோதி தோன்றியது. பிறந்த நாள் முதல் இன்று வரை அந்த மகானுபாவரால் கிருஷ்ண பக்தி மென்மேலும் பெருகிக் கொண்டிருக்கிறது. வங்காளமும் கலிங்கமும் அந்தப் பெரும் ஒளியின் பெருமையால் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணனையே என்றும் சித்தத்தில் வைத்திருப்பதால் அந்த மகானை கிருஷ்ண சைதன்யர் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த மகாபிரபுவின் கருணையால் உய்ந்து போனவர்கள் பலர். இராதா கிருஷ்ணன் இருவரின் அவதாரமாகவே அவரை அவரது பக்தர்கள் கொண்டாடுகின்றனர். பல தீயவர்களுக்கு நல்வழி காட்டிய கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவைத் தரிசிக்க வேண்டுமென்ற பெரும் ஆவல் பல நாட்களாக நரசிம்மதாசனுக்கு இருக்கிறது. அதற்கான வாய்ப்பு தான் இது வரை கிட்டாமல் இருந்தது.

இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் கீத கோவிந்தத்தில் தனக்குப் பிடித்த இந்த அஷ்டபதியைப் பாடிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவனுக்கு நேற்று கிடைத்த செய்தி தான். கிருஷ்ண சைதன்யர் இன்று மாலை இவன் வாழும் கிராமத்திற்கு வருகை தருகிறார். இதனை விட பெரும்பேறு வேறு என்ன இருக்க முடியும். அது தான் மிக மிக ஆனந்தமாக இருக்கிறான் நரசிம்மதாசன்.

அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணமும் வந்தது. நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டு கிருஷ்ண சைதன்ய மகாபிரபுவும் அவரது சகோதரர் நித்யானந்தரும் பல நூறு பக்தர்களுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் இருக்கும் மக்கள் எல்லோரும் அவரது தரிசனம் பெற்று கண்களில் நீர் நிறைய விழுந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். நரசிம்மதாசனும் ஓடிப் போய் பார்த்தான். கண்ணனே நேரில் வந்து நிற்பது போல் இருந்தது அவனுக்கு. தன்னை அறியாமல் நாமசங்கீர்த்தனத்திற்கு ஏற்ப நடனமாடத் தொடங்கிவிட்டான். நடுநடுவே சைதன்யரைப் பார்க்கும் போது சில நொடிகள் பிரமித்து நின்று விட்டு பின்னர் யாரோ அவனைத் தொட்டவுடன் மீண்டும் பாட்டைக் கவனிக்கத் தொடங்குகிறான். அந்த ஊர்வலம் அப்படியே நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே நரசிம்மகாவிற்கு வந்து சேர்ந்தது. நாமசங்கீர்த்தனத்தை நிறைவு செய்துவிட்டு அங்கிருக்கும் கோவிலில் பக்தர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் சைதன்ய மகாபிரபு.

பக்திவழியா, ஞானவழியா, கர்மவழியா, யோகவழியா எந்த வழி கண்ணனை அடைவதற்கு எளிதான வழி என்ற உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமும் ஒரே ஊருக்குச் செல்லும் பல வழிகள் என்ற விளக்கம் தரும் போதே பக்திவழி மிகச் சிறந்த வழி; மிக எளிதான வழி என்று விளக்கிக் கொண்டிருக்கிறார் அத்வைதாசாரியார் என்னும் ஒரு சீடர். அங்கு இருப்பவர்களிலேயே வயதில் மிக மூத்த கிழவர் அவர். அவர் சொல்வதை எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பக்திவழியிலேயே பல வகைகள் உண்டு. அந்தப் பல வகைகளில் ஒன்பது வகைகளைப் பற்றி பாகவதம் கூறுகிறது. அவை சிரவணம் (கண்ணனின் கதைகளை லீலைகளைக் கேட்பது), கீர்த்தனம் (கண்ணனின் புகழைப் பாடுவது), ஸ்மரணம் (கண்ணனின் புகழை நினைப்பது), பாதஸேவனம் (கண்ணனின் பாதத்தில் சேவை செய்வது), அர்ச்சனம் (கண்ணனை வழிபடுவது), வந்த்யம் (கண்ணனைப் வணங்குவது), தாஸ்யம் (கண்ணனுக்கு அடிமையாக இருப்பது), சக்யம் (கண்ணனிடம் நட்புடன் இருப்பது), ஆத்ம நிவேதனம் (கண்ணனிடம் தன் ஆத்மாவையே ஒப்படைப்பது). இந்த ஒன்பது வகை பக்திகளைப் பற்றியும் அவற்றைப் பின்பற்றி கண்ணனை அடைந்த பாகவதர்களைப் பற்றியும் அத்வைதாசாரியர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சக்யமும் (நட்பும்), தாஸ்யமும் (அடிமைத்தனமும்) பற்றி பேச்சு வரும் போது நாயக நாயகி பாவத்தைப் பற்றியும் பேசினார். அதற்கு மாதுர்ய பக்தி என்றொரு பெயரும் சொன்னார். அந்த மாதுர்ய பக்தியே இருக்கும் எல்லா பக்தி முறைகளிலும் மிக மிகச் சிறந்தது என்று சொன்னார்.

இப்படியெல்லாம் பக்தியின் முறைகளைப் பற்றி அத்வைதாசாரியர் சொல்லி வரும் போது மகாபிரபு அங்கிருப்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

"அன்பர்களே. எல்லா வழிகளிலும் மிக உயர்வான வழியாக அத்வைதாசாரியர் சொன்ன மாதுர்ய பக்தியைப் பின்பற்றினால் கண்ணனை அடைய எவ்வளவு நாளாகும் என்று தெரியுமா?"

"பிரபு. கர்ம ஞான யோக வழிகளைப் பின்பற்றினால் பல்லாயிரம் பிறவிகளுக்குப் பின்னரே முக்தி கிடைக்கும். பக்தி வழியைப் பின்பற்றினால் எளிதாகக் கண்ணனின் திருவடியை அடையலாம் என்று தெரியும். ஆனால் எவ்வளவு நாட்களாகும் என்று தெரியாது. தேவரீரே சொல்லியருள வேண்டும்"

அந்தப் பதிலைக் கேட்டுச் சிரித்துக் கொண்டார் சைதன்யர்.

"நீர் சொன்னது சரி தான். பக்தி வழியில் செல்பவர்களுக்கும் பல பிறவிகளுக்குப் பின்னரே கண்ணனை அடைய முடியும். அதனால் தான் கண்ணன் 'வாஸுதேவ சர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப' என்று கீதையில் சொன்னான். அப்படி பல பிறவிகள் கிருஷ்ண பக்தி செய்த பின்னர் தான் உண்ணும் நீரும் தின்னும் சோறும் எல்லாமும் கண்ணன் என்ற நிலை அடைந்த மகாத்மா ஆகிறான் ஒருவன்."

"மகாபிரபு. அடியேன் இன்னும் எத்தனை பிறவிகள் பக்தி செய்ய வேண்டும்"

"அத்வைதாசாரியரே. உங்களுக்கு இன்னும் மூன்றே பிறவிகள் போதும்" இன்னும் மூன்று பிறவிகளா என்று வருந்தினார் அத்வைதாசாரியர்.

"சுவாமி. அடியேனுக்கு?"

"விந்த்யாசலா. உனக்கு இன்னும் ஐம்பது பிறவிகள் வேண்டும்" ஐம்பது பிறவிகளா என்று மலைத்துப் போனார் விந்த்யாசலர்.

"பிரபு. அடியேனுக்கு"

"குமாரதாசரே. உங்களுக்கு பத்து பிறவிகள் போதும்"

இப்படியே ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டு வரும் போது நரசிம்மதாசனும் கேட்டான்.

"நரசிம்மதாசரே. உங்களுக்கு இன்னும் ஐநூறு பிறவிகள் வேண்டும்" அதனைக் கேட்டவுடன் ஆனந்த நடனமாடத் தொடங்கிவிட்டான் நரசிம்மதாசன்.

"ஆகா. ஆகா. இன்னும் ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். பின்னர் தான் கண்ணனை அடைவேன்"

இப்படி ஒரு பைத்தியமா என்று எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிறவியிலேயே இறைவனை அடைந்துவிட வேண்டும் என்று எண்ணாமல் ஐநூறு பிறவிகள் சென்ற பின்னர் தான் அடையலாம் என்று சொன்னால் கூத்தாடுகிறானே இந்த பைத்தியக்காரன் என்று நினைத்தார்கள்.

"நரசிம்மதாசரே. ஐநூறு பிறவிகள் காத்திருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?"

"இல்லை பிரபு. நீங்கள் விரும்பினால் அடியேனை இந்தப் பிறவியிலேயே கடைத்தேற்றிவிடுவீர்கள் என்று அறிவேன். ஆனால் தங்களின் பெருமைகளைப் பாடிப் பரவி அனுபவித்து வாழ அடியேனுக்கு ஒரு வாய்ப்பாகத் தான் இந்த ஐநூறு பிறவிகளைத் தந்திருக்கிறீர்கள். அந்த ஐநூறு பிறவிகளிலும் தங்கள் பெருமையைப் பாடிப் பரவி மகிழ்ந்து வாழ்வேனே. ஒன்றா இரண்டா ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். போதும் என்ற அளவிற்குக் கிருஷ்ணலீலாம்ருதத்தை அருந்தி மகிழ கிடைத்த வாய்ப்பல்லவா இது. அதனால் தான் ஆனந்தம் சுவாமி"

அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் மலைத்துப் போய்விட்டனர்.
"நரசிம்மதாசரே. நீர் சொன்னது சரி தான். ஆனால் நீங்கள் நேரடியாக பக்தி மார்க்கத்திலேயே இருக்கப் போவதில்லை. மற்ற வழிகளிலும் சென்று பார்த்து கொஞ்ச காலம் அலைபாய்ந்து பின்னர் தான் மீண்டும் பக்தி வழிக்கு வருவீர்கள். அதனையும் மனத்தில் வைத்திருங்கள். ஒவ்வொரு பிறவியும் தவறிப் போவதற்கு ஒரு வாய்ப்பு என்பதையும் நினைவில் வைத்திருங்கள்"

"சுவாமி. நீங்கள் எந்த வழியில் விரும்புகிறீர்களோ அப்படியே நடக்கட்டும். அடியேன் அலைபாய்ந்து பின்னர் தான் உங்கள் திருவடிகளை அடைய வேண்டும் என்பது தங்கள் சித்தம் என்றால் அதுவே அடியேனின் பெரும்பாக்கியம்.

திவி வா புவி வா மமாஸ்து வாசோ
நரகே வா நரகாந்தக ப்ரகாமம்
அவதீரித சாரதாரவிந்தௌ
சரணௌ தே மரணேபி சிந்தயாமி


சொர்க்கத்திலோ பூமியிலோ நரகத்திலோ எனக்கு எங்கு வாசம் என்பது நரகாசுரனைக் கொன்றவனே உன் விருப்பப்படி நடக்கட்டும். ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் உண்டு. எந்த நிலையிலும் மரணம் அடையும் போதும் உன்னுடைய மழைக்காலத் தாமரை போன்ற திருவடிகளை சிந்திக்கும் நினைவை மட்டும் அருள்வாய்"

(நர்சிஹ்ம்தாஸ் என்ற வடசொல்லை நரசிம்மதாசன் என்று இங்கே எழுதியிருக்கிறேன்)

Tuesday, December 25, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 10

தஞ்சை நகரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு காட்டில் ஒரு பருந்துக் குடும்பம் வாழ்ந்து வருகிறது. தாயும் தந்தையும் இரு குழந்தைகளும் என்று அழகான அளவான மகிழ்ச்சியானதொரு குடும்பம். வேண்டிய அளவிற்கு உணவு கிடைத்துவிடுவதால் காட்டிலேயே பறந்து திரிந்து வாழ்ந்து வருகின்றன இந்த வெண்கழுத்துடைய பருந்துகள். நாள் முழுக்க வானத்தில் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் இந்தப் பருந்துகள் அந்தி சாயும் முன்னர் தான் தாம் வாழும் பொந்திற்கு வருகின்றன. பொந்திற்கு வந்தவுடன் சிறிது நேரம் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பேசிக் கொஞ்சி சிறிது நேரம் கழிந்த பின் இருட்டியவுடனே பொந்தில் தூங்கிவிடுகின்றன. இப்படி வாழ்க்கை மிக்க மகிழ்வுடன் சென்று கொண்டிருக்கிறது.

அன்றைய பொழுது விடிந்த போது வானம் மேக மூட்டமாக இருந்தது. காலை நேரப் பனி இன்னும் முழுதுமாக விலகவில்லை. கதிரவன் மேகங்களின் பின்னால் மறைந்து இருப்பதால் பனி விலகியும் விலகாமலும் இருக்கின்றது. இளைய பருந்து புள்ளரசனுக்கு அதிகாலையிலிருந்தே இருப்பு கொள்ளவில்லை. தன் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான நாள் இன்று என்றொரு தவிப்பு. இருட்டு விலகாத பொழுதே விழிப்பு ஏற்பட்டுவிட்டது. இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் தாய், தந்தை, அண்ணன் மூவரும் எப்போது எழுவார்கள்; எப்போது விடியும் என்று ஆவலுடன் காத்திருந்தது. மேகமூட்டமானதால் அவர்கள் வழக்கத்தை விட தாமதமாகத் தான் எழுந்தார்கள். சரியான நேரத்திற்கு விழிப்பு வந்தாலும் எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் திரும்பிப் படுத்துவிட்டார்கள். பொறுமையாகக் காத்திருந்த புள்ளரசன் நேரம் செல்லச் செல்லப் பொறுமை இழந்து அண்ணன் பொற்காலனை மெதுவாக எழுப்பினான்.

"என்ன புள்ளரசா? ஏன் எழுப்புகிறாய்? இன்னும் விடியவில்லையே?"

"இல்லை அண்ணா. நன்கு விடிந்துவிட்டது. மேகமூட்டமாக இருப்பதால் தான் தெரியவில்லை. எழுந்திரு அண்ணா"

மெதுவாகக் கண் விழித்துப் பார்த்த பொற்காலன் தாயும் தந்தையும் இன்னும் உறங்குவதைக் கண்டு மீண்டும் தூங்கத் தொடங்கினான். தம்பி விடவில்லை. தம்பியின் தொந்தரவால் எழுந்த அண்ணன் விடிந்துவிட்டதைப் பார்த்து மீண்டும் தூங்கச் செல்லவில்லை. இருவரும் செய்த அரவத்தால் தாயும் தந்தையும் எழுந்துவிட்டனர்.

"அப்பா. அம்மா. விரைவில் வாருங்கள். கீழ்த்திசையில் நமக்கு இன்று ஏதோ வேலை இருக்கிறது. விரைவில் குளித்துவிட்டுப் போகலாம் வாருங்கள்"

"கீழ்த்திசையிலா? நாம் வழக்கமாக மற்ற மூன்று திசைகளில் தானே செல்வோம் கண்ணா? நாம் வசிப்பது இந்தக் காட்டின் கீழ்க்கோடியில் தான். அதனால் கீழ்த்திசையில் பறந்தால் காட்டை விட்டு வெளியே நாட்டிற்குச் சென்றுவிடுவோம்"

"நமக்கு வேலை நாட்டில் தான் அப்பா. இன்று அதிகாலையிலிருந்து அந்த திசையிலிருந்து ஏதோ ஒரு அழைப்பு எனக்கு வந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். அதிகம் கேள்விகள் கேட்காமல் கிளம்புங்கள் அப்பா"

"என்ன இன்று இந்தச் சின்னவன் ரொம்பத் துள்ளுகிறானே. பருந்துகளான நமக்கு உள்ளுணர்வுகள் இருப்பதுண்டு தான். ஆனால் ஒரு திசையிலிருந்து அழைப்பு எல்லாம் வருவதில்லையே. இவன் சொல்வது விசித்திரமாக இருக்கிறதே. அன்பே. நீ என்ன சொல்கிறாய்?"

"சின்னவன் கொஞ்சம் சூட்டிகையானவன் தானே. நாம் அந்தத் திசையில் சென்று உணவு தேடாமல் இருப்பதால் அந்தத் திசையைக் காண வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கும். அதனை நேரடியாகச் சொன்னால் செல்ல விடமாட்டோம் என்று இப்படி உள்ளுணர்வைக் காரணம் காட்டுகிறான்"

"அப்பா. எனக்கும் அப்படி ஒரு அழைப்பு வருகிறது. இன்று நம் குடும்பத்திற்கே ஒரு நன்னாள் என்பதான ஒரு உள்ளுணர்வு தோன்றுகிறது. அதனால் தம்பியைச் சந்தேகப் பட வேண்டாம். வாருங்கள். உடனே கிளம்புவோம்"

"இருவருக்கும் அப்படி ஒரு உள்ளுணர்வு ஏற்படுகின்றதென்றால் கிளம்ப வேண்டியது தான். சிறுவர்களான உங்களுக்கு பல நேரங்களில் அந்த உள்ளுணர்வு நன்கு செயல்படும். வயது ஆக ஆக அந்த உள்ளுணர்வை உணரும் சக்தி குறைந்துவிடுகின்றது போலும்"

நால்வரும் உடனே கிளம்பினார்கள். செல்லும் வழியில் ஒரு சின்ன குட்டை இருந்தது. அதில் இருந்த தெளிந்த நீரில் விரைவாக முழுக்காடிவிட்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அரை மணி நேரம் பறந்த பின் தூரத்தில் ஒரு புதிய மலை ஒன்று தெரிந்தது.

"அது என்ன மலை. ஒரு கூம்பு வடிவத்தில் இருக்கிறதே. ஒரே ஒரு சிகரத்தைக் கொண்ட மலையை நான் இதுவரை பார்த்ததில்லை. அன்பே. நீ பார்த்திருக்கிறாயா?"

"இல்லை. நானும் பார்த்ததில்லை. அது மலையைப் போல் இல்லை. யாரோ புதிதாகக் கட்டியதைப் போல் இருக்கிறது"

"அப்பா. அந்த கூம்பு வடிவ கட்டிடத்தில் இருந்து தான் அழைப்பு வருகிறது. அங்கே ஏதோ ஒரு பெரும் சக்தி குடி கொள்கிறது. இன்று தான் அது குடி புகும் நாள் போலும். பக்கத்தில் பார்த்தீர்களா? புகை சூழ்ந்து இருக்கிறது. அந்தப் புகையும் அதே அழைப்பை விடுக்கிறது. அண்ணா. உனக்கும் அப்படி தோன்றுகிறதா?"

"ஆமாம் தம்பி. நீ சொல்லும் அந்தச் சக்தி பொன்னிறத்தில் அந்த புதிய கட்டிடத்தில் மேலும் கீழும் உள்ளும் புறமும் ஒளி வீசி நிற்கிறது. அது தான் நம்மை அழைக்கிறது"

"சிறுவர்களே. என் தந்தையார் முன்பொரு முறை சொல்லியிருக்கிறார். சுற்றுவட்டாரத்தில் யாராவது தெய்வத்திற்குக் கோவில் கட்டி குடமுழுக்கு செய்தால் அந்த நேரத்தில் நமக்கு இப்படி ஒரு அழைப்பு வருமாம். குடமுழுக்கின் போது நாம் வந்து அந்த இடத்தைச் சுற்றினால் தான் தெய்வ சக்தி அந்த இடத்தில் குடிபுகுந்ததாகப் பொருள் என்பது இந்த மனிதர்களின் நம்பிக்கை. இந்தப் புதிய கட்டிடமும் ஒரு கோவில் என்று தான் நினைக்கிறேன். அதில் குடி புகும் சக்தி தான் இன்று நம்மை அழைத்திருக்கிறது"

"ஆமாம் அப்பா. அந்த சக்தி நீங்கள், அம்மா, நான், அண்ணன் என்று எல்லோருள்ளும் நின்று இயங்கும் சக்தி என்பதாக எனக்குத் தோன்றுகிறது. என்னையும் அறியாமல் என் உடல் சிலிர்க்கிறது. மனம் குழைகிறது. இன்று இந்த கோபுரத்தை வட்டமிட்டுத் தொண்டாற்றவே நாம் பிறந்தோம் என்று தோன்றுகிறது. நாம் பிறவி எடுத்ததன் பயன் இன்று நிறைவேறப் போகிறதப்பா"

"புள்ளரசா. நீ சொல்வது மிகவும் சரி. நல்ல வேளையாக உன் பேச்சைக் கேட்டு கிளம்பினோம். இன்றைய நாள் நமக்கு ஒரு நல்ல நாளாக அமைந்தது"

நால்வரும் அந்த கோபுரத்தை நோக்கிப் பறந்தார்கள். அருகில் செல்லச் செல்ல அந்த கோபுரத்தின் பிரம்மாண்டம் தெரியத் தொடங்கியது. தூரத்திலிருந்து பார்க்கும் போது மலையைப் போல் தெரிந்தது வெறும் பிரமை இல்லை என்பது புரிந்தது. கோவிலைச் சுற்றி எந்தப்பக்கம் பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்திருந்தனர். ஹர ஹர சிவ சிவ என்ற கோஷம் எங்கும் கேட்டது. விண்ணைத் தொடும் அந்த பேரொலியைக் கேட்க கேட்க பருந்துகளின் உடலும் உள்ளமும் மென்மேலும் சிலிர்த்தன. மெலிதாகத் தூறல் விழத் தொடங்கியது. கோபுரத்தின் அருகில் சென்ற பருந்துகள் அந்த கோபுரத்தை மும்முறை வலம் வந்து பின் வந்த வழியே திரும்பிச் சென்றன.

கீழே இருக்கும் மாமனிதர் ஒருவர் அந்தக் கோவிலைக் கட்டிய பேரரசரிடம் 'இராஜராஜா. இறைவன் தன் முழு மனத்துடன் இந்தத் திருக்கோவிலில் குடி புகுந்தான் என்பதற்கு பல நற்சகுனங்கள் தெரிகின்றன. இதோ பார் இதுவரை மேகம் சூழ்ந்து இருந்தது. நீ புனித நீருடன் மகா மேருவாம் இந்த பெரிய கோபுரத்தின் உச்சிக்குச் சென்றவுடன் மேகங்களில் ஒரு பிளவு தோன்றி கதிரவன் கோபுர சிகரத்தில் தன் பொன்னொளியை வீசினான். நீ குடமுழுக்கு ஆட்டிய பின் கீழ் இறங்கி வந்தாய். பின்னர் இப்போது சிறு தூறல் விழுகின்றது. எங்கிருந்தோ நான்கு கருடப் பறவைகள் வந்து கோபுரத்தை வலம் செய்து செல்கின்றன. எல்லா சகுனங்களுக்கும் மேலான உயர்ந்த சகுனம் கருடப் பறவைகள் வந்து வலம் செய்வது. இதுவே இங்கே இறைவனின் வெளிப்பாடு நிறைவாக இருக்கிறது என்பதற்கு பெரும் அடையாளம்" என்றெல்லாம் சொல்லுவதைக் கேட்க வேண்டிய தேவை அந்தப் பருந்துகளுக்கு இல்லை. எதற்காகத் தங்களின் பிறவி ஏற்பட்டதோ அதற்குரிய கடமையைச் செய்து அந்தப் பருந்துகள் மிக்க மகிழ்வுடன் தங்கள் பொந்தினை நோக்கிச் சென்றுவிட்டன.

Sunday, December 23, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 9

கள்ளம் கபடம் இல்லாத இந்த மக்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் குதூகலிக்கிறது. என் மனமகிழ்ச்சியை மணம் வீசும் என் மலர்களின் மூலம் வெளிப்படுத்துகிறேன். எப்போதெல்லாம் இந்த மக்கள் இந்தக் குன்றின் மேல் கூடி இங்கு நட்டு வைத்திருக்கும் வேலின் முன்னால் திருவிழா கொண்டாடுகிறார்களோ அப்போதெல்லாம் நான் பூத்துக் குலுங்குகின்றேன்.

குண்டு குண்டாக இருக்கும் என் மலர்களைத் தொடுத்து மாலையாக்கி அவர்கள் வேலுக்குச் சூடி விழா கொண்டாடுகின்றனர். வேலுக்குச் சூடிய மாலையை எடுத்து வேலன் என்ற ஒருவன் சூடி வெறியாட்டம் ஆடுகின்றான். மக்கள் எல்லோரும் தங்கள் குறைகளைக் கூறி அவனிடம் நல்வாக்கு பெறுகின்றனர். அவ்வப்போது 'கடம்பம் கடம்பம்' என்று வேலன் கூவுகின்றான். அப்போது சிலர் என்னைக் காட்டி 'அது தான் கடம்ப மரம்' என்று சொல்கிறார்கள். என் பெயர் அது தான் போலும். என்னைச் சுற்றி பல மரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சில தான் பூக்கள் பூக்கின்றன. அந்தப் பூக்கள் எதையுமே இவர்கள் வேலுக்கோ வேலனுக்கோ சூட்டுவதில்லை. என் மலர்களை மட்டுமே சூட்டுகிறார்கள். அதில் எனக்குப் பெருமை தான். என்னால் இவர்களின் கொண்டாட்டத்திற்கு உதவ முடிகிறதே என்ற மகிழ்ச்சியில் இன்னும் அதிக மணத்துடன் நிறைய பூக்களைப் பூக்கிறேன்.

அடடா. இதென்ன அதிசயம். இந்த மக்களைப் போன்ற உருவம் கொண்டவர் தானே அவரும்? அவர் மட்டும் எப்படி ஆகாயத்தில் பறந்து வருகிறார். அவர் அருகில் வர வர நறுமணம் வீசுகிறதே. என் மலர்களின் மணம் எல்லாம் இந்த நறுமணத்திற்கு முன் என்னாகும்? அழகும் இளமையும் உடைய உருவம். மக்கள் எல்லோரும் அவரை வணங்குகிறார்கள். நானும் வணங்கிக் கொள்கிறேன். 'போகர் போகர்' என்று இந்த மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதைப் பார்த்தால் இவர் பெயர் போகர் போலும். போகரே. உம்மை நானும் வணங்குகிறேன். இந்த மக்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள். நானும் கேட்கிறேன். நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

"மகாஜனங்களே. இந்த குன்றத்தின் சிறப்பு உங்களுக்குத் தெரியுமா? இங்கே ஏன் வேலை நிறுவி வழிபட்டு வருகிறீர்கள் என்று தெரியுமா?"

"சித்தர் பெருமானே. வழி வழியாக இந்தக் குன்றத்தின் மேல் இந்த வேல் இருப்பதை அறிவோம். குன்றத்தைச் சுற்றி வாழும் நாங்கள் நெடுங்காலமாக இந்த வேலை வணங்கி வருகிறோம். இந்த இடத்தில் வேலனின் வெளிப்பாடு அதிகம் இருப்பதையும் காண்கிறோம். மற்றபடி வேறொன்றும் அறியோம்"

"மக்கள் தலைவரே. நீங்கள் சொன்னது போல் இந்த இடத்தில் கந்தனின் வெளிப்பாடு நிறைந்து தான் இருக்கிறது. இந்த வேல் இருக்கும் இடத்தில் முருகனுக்கு ஒரு திருவுருவம் சமைத்து நிறுவ எண்ணியிருக்கிறேன். அந்தத் திருவுருவதைத் தொழுதால் உங்கள் பிறவிப்பிணி நீங்கும்; திருவுருவத்திற்கு முழுக்காட்டி அந்த நன்னீரை உட்கொண்டால் உடற்பிணி நீங்கும். உறுதியான உடல் தானே இறைவன் வாழும் ஆலயம். அதனால் உடலுக்கும் உயிருக்கும் நன்மையை அருளி என்றும் இங்கே நிலையாக நிற்பான் திருக்குமரன்"

"ஆகா. அப்படியே ஆகட்டும் பெருமானே. எங்களால் ஆகும் எல்லா விதமான உதவிகளையும் செய்கிறோம். கட்டளை இடுங்கள்"
"ஒன்பது விதமான நச்சு மூலிகைகளாலும் பொருட்களாலும் முருகனின் திருவுருவத்தை உருவாக்கப் போகிறேன். அந்தப் பொருட்களைத் தனித் தனியாகத் தொட்டாலோ உட்கொண்டாலோ உடனே உயிரிழக்க நேரிடும். ஆனால் அவற்றையே தகுந்த முறைப்படி ஒன்று சேர்த்தால் அது உடற்பிணியை நீக்கும் பெருமருந்தாக மாறிடும். அதனையே நான் செய்ய விழைகிறேன். அப்படி செய்யும் போது வீசும் வெப்பத்தால் இங்கிருக்கும் செடி கொடிகள் வாடலாம். உங்களுக்கும் கெடுதல் நேரிடலாம். அதனால் எல்லோரும் குன்றத்தை விட்டு கீழிறங்கி அங்கேயே தங்க வேண்டும். திருவுருவம் நிறுவப்பட்டவுடன் நான் வந்து உங்களை அழைத்து வருகிறேன்"

"ஆகா. அப்படியே ஆக்ட்டும் பெருமானே"

எல்லோரும் அங்கிருந்து நீங்கிவிட்டனர். போகர் சொன்னதைக் கேட்டால் எனக்கு பயமாகத் தான் இருக்கிறது. ஆனால் என்னால் இந்த இடத்தை விட்டு நகர முடியாதே. என்ன செய்வது? போகர் பெருமானே. செடி கொடிகள் வாடும் என்று சொன்னீர்களே; மரங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. நானும் வாடுவேனா?
இந்தப் பக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பறந்து சென்றுவிட்டாரே. இதோ திரும்பி வந்துவிட்டார். கைகளில் சில மூலிகைகளும் உலோகங்களும் கற்களைப் போன்ற பொருட்களும் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இதோ சேர்க்கத் தொடங்கிவிட்டார். அடடா அடடா என்ன வெப்பம் என்ன வெப்பம். என்னால் முடிந்த உதவி இந்த வெப்பம் நீங்க என் கிளைகளைக் கொண்டு வீசுகிறேன். கொஞ்சம் குளிர்ந்த காற்று வருவதைப் பார்த்து பெருமானும் இந்தப் பக்கம் பார்த்து புன்னகைக்கிறார். ஆகா. தொடர்ந்து இதையே செய்வோம். இதை விட பெரும்பாக்கியம் வேறு என்ன இருக்கிறது?

அழகான திருவுருவத்தை உருவாக்கிவிட்டார். இதோ இன்னும் சில மூலிகைகளைக் குழைத்து ஒரு சிறு குழிக்குள் இட்டு அந்தத் திருவுருவத்தை அங்கே நிறுத்துகிறார். இது தான் திருமுருகனின் திருவுருவம் போலும். கையில் கோலுடன் கோவணாண்டியாக நிற்கும் அந்தத் திருவுருவத்தின் தலையிலும் தோள்களிலும் வயிற்றிலும் முழங்கால்களிலும் கால்களிலும் கையை வைத்து கண்ணை மூடிக் கொண்டு ஏதோ முணுமுணுக்கிறாரே. அட இது என்ன அதிசயம். முருகன் திருவுருவம் பொன்னால் செய்ததைப் போல் பெரும் ஒளி வீசுகிறதே. போகர் கை கூப்புவதைப் பார்த்தால் சிலையில் கந்தனின் வெளிப்பாடு ஏற்பட்டு விட்டது போலிருக்கிறதே. கந்தா கடம்பா நானும் வணங்குகிறேன்.

இப்போது தான் கவனிக்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் செடி கொடிகள் பொலிவிழந்து போய்விட்டனவே. மரங்களும் கொஞ்சம் வாடித் தான் இருக்கின்றன. நான் மட்டும் தான் வாடவில்லை போலும். ஏன் தெரியவில்லையே? கந்தனின் அருளா? போகர் பெருமானின் அருளா?

போகர் பெருமான் தன் கருணைப் பார்வையை அந்த வாடிய செடி கொடிகள் மரங்கள் மீது வீசியதும் அவை மீண்டும் பழைய படி பொலிவு பெற்று விட்டன. ஆகா. என் அருகில் வருகிறாரே போகர் பெருமான்.

"கடம்ப மரமே. நீ நினைப்பதைப் போல் கொற்றவை சிறுவனின் திருவுருவம் சமைக்கப்பட்டுவிட்டது. ஒரு மண்டல காலம் நான் பூசனை செய்துவிட்டு பின்னர் போய் இந்தப் பகுதியில் வாழும் மக்களை அழைத்து வருவேன். திருவுருவத்தைச் சமைக்கும் போது வெப்பம் தீர நீ கிளைகளால் வீசி திருப்பணி செய்ததால் வெந்து போகாமல் நின்றாய். அந்தத் திருப்பணி செய்ததால் இன்னும் அதிக திருப்பணி செய்யும் வாய்ப்பு உனக்குக் கிடைக்கும். கடம்ப மரமாகிய நீ உன் வாழ்நாள் முழுதும் இந்த முருகனுக்கு உன் மலர்களால் தொண்டு செய். உன் வாழ்நாள் முடியும் போது நானும் நீ நிற்கும் இந்த இடத்திற்கு வந்து ஜீவசமாதி அடைவேன். அடுத்தவர்க்குப் பணி செய்ய விழையும் நீ நின்றதாலும் நான் ஜீவசமாதி அடைவதாலும் இந்த இடம் பெரும் புனிதமடைந்து பல நூற்றாண்டுகள் நிலைத்து நின்று தன்னை நாடி வரும் அனைவருக்கும் அருள் கொடுத்துக் கொண்டிருக்கும்."
ஆகா. ஆகா. என்ன பாக்கியம் என்ன பாக்கியம். மகிழ்ச்சியால் என் கிளைகளை விசிறி குளிர்ந்த காற்று வரச் செய்தேன். என் கிளைகளில் இருக்கும் மலர்களைத் தூவினேன். அந்த மலர்கள் போகர் பெருமான் மேலும் பழனியாண்டவன் மேலும் சொரிந்தன.


Thursday, December 20, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 8

அஸ்தினாபுரத்துவாசிகள் அனைவரும் மிக்க ஆவலுடன் இருக்கிறார்கள். பாண்டவர்களுக்காகப் பரிந்து பேசி பாண்டவர், கௌரவர் இருவருக்கும் உறவான கிருஷ்ணன் வந்திருக்கிறானாம்.

பாண்டவர்கள் வனவாசமும் முடித்துவிட்டு மறைந்து வாழும் ஒரு வருட அஞ்ஞாதவாசத்தையும் முடித்துவிட்டார்கள். பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்து வைத்த ஒப்பந்தப்படி பாண்டவர்களின் நாட்டை அவர்களுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும். ஆனால் துரியோதனனோ மறுக்கிறான். தோற்றது தோற்றது தான்; தோற்ற பின்னர் பெரியவர்கள் செய்து வைத்த ஒப்பந்தத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று துரியோதனன் உறுதியாக இருக்கிறான். ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்த போது மாமனும் நண்பனும் தம்பியும் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்கள். மூத்தவர்களின் வற்புறுத்தலால் ஒத்துக் கொண்டான். பின்னர் மாமனிடமும் நண்பனிடமும் தம்பியுடனும் பேசிய பின்னர் தானே தான் ஒத்துக் கொண்டது முட்டாள்தனம் என்று தெரியவந்தது. 'சூதாட்டத்தில் தோற்றவர்கள், அடிமைகள் ஆனவர்கள், தோற்ற பின்னர் தங்கள் மனைவியையும் வைத்துத் தோற்றுப் போனவர்கள், சிற்றப்பன் மக்கள் என்ற காரணத்தாலும் குரு வம்சத்தவர்கள் என்ற காரணத்தாலும் நாட்டை ஆண்டவனின் மக்கள் என்ற காரணத்தாலும் இப்படி நியாயத்திற்குப் புறம்பாகப் பேசி பெரியவர்கள் எல்லாம் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அந்த ஒப்பந்தப்படி அவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்துவிட்டு வந்தால் தான் என்ன? நான் சூதாட்டத்தில் வென்ற நாட்டைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன்' என்று உறுதியாகக் கூறிவிட்டான். அந்த செய்தியை திருதராஷ்ட்ரன் தன் தேர்ப்பாகனான சஞ்சயன் மூலமாக பாண்டவர்களுக்கும் சொல்லி அனுப்பி விட்டான்.


சிந்தித்துப் பார்த்த தருமன் இந்த நேரத்தில் தூது சென்று கௌரவர்களிடம் பேசி வரத் தகுந்த ஆள் கண்ணன் தான் என்று முடிவு செய்து கண்ணனிடமும் அதனை வேண்டிக் கொண்டான். அதன் படி இன்று கண்ணன் தன் பக்தர்களும் தோழர்களும் உறவினர்களும் ஆன பாண்டவர்களுக்காகத் தூதுவனாக வந்திருக்கிறான். அவன் வந்த நோக்கம் நிறைவேறுமா? நிறைவேறாத ஒன்றிற்காக அவன் வருவானா? யாருக்குத் தெரியும் அவன் எந்த நோக்கத்திற்காக அஸ்தினாபுரம் வந்திருக்கிறான் என்று?

சகாதேவனுக்குக் கண்ணனின் தூது பயனளிக்காது என்று நன்கு தெரியும். கிரக நிலைகளை வைத்துக் கணித்துப் பார்த்ததில் இந்தப் பெரும்போரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மாதவன் என்ன நினைக்கிறான் என்று யாருக்குத் தெரியும். அவனே தூது செல்லக் கிளம்பிவிட்டானே; யார் போய் அதைத் தடுக்க முடியும்?

ஒரு சாராருக்குத் தூதுவனாக வந்த தான் மறு சாரார் தரும் உபசாரங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறிவிட்டு துரியோதனன் அரண்மனைக்கு வராமல் தன் பக்தனான விதுரரின் சிறுமாளிகைக்குச் சென்று விட்டான் கண்ணன். அது தனக்கு நேர்ந்த அவமானம் என்று கருதுகிறான் துரியன். தன்னை அவமானப்படுத்திய இடையனைத் தானும் அவமதிக்க வேண்டும் என்று துடிக்கிறான். மறுநாள் அவைக்கு தூது செய்தியுடன் கண்ணன் வரும் போது அவனுக்குரிய மரியாதையாக யாரும் எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை இட்டுவிட்டான். 'எல்லோருடைய மதிப்பையும் பெற்ற கண்ணனைப் போன்றவர்கள் சபைக்கு வரும் போது அரசனைத் தவிர்த்து மற்ற அனைவரும் எழுந்து நின்று வரவேற்பது தான் மரபு. இங்கிருக்கும் கிழவர்கள் கண்ணன் ஒரு அவதாரம் என்று வேறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவன் வரும் போது யாரும் எழுந்து வரவேற்காமல் இருந்தாலே அது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்' என்று கருதிவிட்டான் கௌரவ இளவரசன். தன் கட்டளையை மீறி யாராவது எழுந்து நின்று விடுவார்களோ என்ற அச்சத்தில் அப்படி யாராவது எழுந்து நின்றால் அவர்களுக்கு 12 பொன் அபராதம் என்று சொல்லிவிட்டான். அபராதம் கட்டும் அவமானத்திற்குப் பயந்தாவது எழுந்து நிற்காமல் இருப்பார்கள் அல்லவா?

இரவு வெகு நேரம் தன் பக்தனின் இல்லத்தில் அவன் தந்த உபசாரங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு கண்ணன் மகிழ்ந்திருந்தான். கண்ணன் தன் முன் இருக்கிறான் என்ற அன்பின் மயக்கத்தில் இருந்த விதுரனோ உணவிற்குப் பின்னர் வாழைப்பழத்தைத் தரும் போது பழத்தை உரித்து வீசி விட்டு தோலைத் தந்தான். கண்ணனும் அவன் பக்தியின் பொருட்டு எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதால் தோலையும் தின்றான். இராமனாக இருக்கும் போது அவன் அடியார்கள் பழத்தோடு தோலைத் தின்றார்கள். அவர்கள் நினைவாக இன்று இவன் தோலைத் தின்றான் போலும்.

அதிகாலை துயில் நீங்கும் முன்னர் மதுரமான இன்னிசையின் மூலம் கண்ணனைத் தொழுது அவனது துயிலுணர்த்தினான் விதுரன். 'கண்ணனை அழைத்துச் செல்ல அரசவையிலிருந்து மரியாதைகளுடன் மந்திரி பிரதானிகள் இரண்டு நாழிகைக்குள் வந்துவிடுவார்கள். முக்கிய அமைச்சனான தான் அரசவை கூடும் நேரத்தில் அங்கிருக்க வேண்டும்' என்று எண்ணி விரைவிலேயே கிளம்பி விட்டான் விதுரன்.

விதுரன் சென்ற சிறிது நேரத்திற்குப் பின் கண்ணனும் கிளம்பிவிட்டான். தன்னை அழைத்துச் செல்ல யாரும் அரசவையிலிருந்து வரமாட்டார்கள் என்று அறிந்தவனைப் போல் தானே துவாரகையிலிருந்து வந்த தேரில் ஏறிக் கிளம்பிவிட்டான்.

அரச மாளிகைக்கு வந்து சேர்ந்த பின்னரும் யாரும் வரவேற்க முன் வாசலுக்கு வரவில்லை. மாயவன் சிரித்துக் கொண்டே தனியாகப் படிகளில் ஏறி வருகிறான். மாளிகைக்காவலர்கள் யாரும் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை.

மாளிகை வாசலிலிருந்து அரசவைக்குச் செல்லும் நீண்ட தாழ்வாரத்தில் மோகனப் புன்னகையுடன் நடந்து செல்கிறான் கேசவன். அரசவை வாயிலுக்கு வந்துவிட்டான். அவன் அரசவைக்குள் நுழைய வலக்காலை எடுத்து வைத்தான். ஐயோ கண்ணன் தடுமாறுகிறானே? ஏன் ஏன்? என்ன ஆயிற்று கண்ணனுக்கு?

***

ஆகா. நான் எங்கிருக்கிறேன்? இது ஏதோ ஒரு பெரிய மாளிகையில் இருக்கும் பெரிய அறை போல் இருக்கிறதே. இதோ உருண்டு உருண்டு இந்தப் பெரியவரின் காலடியில் வந்து சேர்ந்துவிட்டேன். இதுவரை நான் எங்கிருந்தேன்? தெரியவில்லையே? இப்போது திடீரென்று எல்லாமும் தெரிகிறது; எல்லாமும் புரிகிறது. உருண்டையாக இருப்பதால் வாசலில் இருந்து இந்தப் பெரியவரின் ஆசனம் வரை எளிதாக உருண்டு வந்து விட்டேன். யார் என்னை உதைத்தது? அங்கே பெரும் சோதி உருவமாக நிற்பவர் தான் என்னை உதைத்தாரா? ஆகா அவர் காலடி பட்டதால் தான் உணர்வின்றி இருந்த நான் இன்று உணர்வு பெற்றேனா? பரம்பொருளே அடியேனின் வணக்கம்.

என் வணக்கத்தை ஏற்றுக் கொள்வது போல் இந்தப் பக்கம் ஒரு பார்வை பார்க்கிறாரே அவர். கண்ணா. உன் எண்ணப்படியே இங்கு நடப்பதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் கருணைப் பார்வை பட்டதால் நான் உய்ந்தேன். உன் கமலப் பாதங்களுக்கு என்னால் எந்த நோவும் ஏற்படவில்லையே?! கடியன் என்னை மன்னித்து அருள்வாய்.


இதென்ன யாருமே எழுந்து நிற்கவில்லையே. ஓ அங்கே கடூரமாக விழித்துப் பார்க்கும் அந்த மாவீரனுக்குப் பயந்து தானோ? புன்னகையுடன் கண்ணன் அரசவைக்குள்ளே நுழைகிறான். அரசர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தொண்டுக் கிழவர் எழுந்து நின்று காயாவண்ணனை நோக்கிக் கை கூப்புகிறார். ஸ்வாகதம் கிருஷ்ணா என்று சொல்கிறார். அட இதென்ன அவர் எழுந்து நின்றதும் ஒவ்வொருவராக எழுந்து நிற்கின்றனரே. கை கூப்புகின்றனரே. நால்வர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. இல்லை இல்லை. மூவர் மட்டுமே. கவச குண்டலங்களுடன் இருக்கும் அந்த மாவீரன் எழுந்து நின்றுவிட்டான். கை கூப்ப இன்னும் மனம் வரவில்லை போலும். கரிய ஆடை அணிந்த அந்த பெரியவர் இன்னும் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எல்லோரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு இதோ மாயவன் அரசரிருக்கையின் அருகில் வந்துவிட்டான். கடூரமாக விழித்த மாவீரன் ஏன் துள்ளிக் குதிக்கிறான்? என்ன இது ஏன் அவனது மகுடம் தலையிலிருந்து தாவி விழுந்து உருண்டு செல்கிறது? ஆகா. அது சென்று சேர்ந்த இடம் அருமையான இடம். கண்ணனின் மலர்க்காலடியில் அல்லவா சென்று சேர்ந்தது? கண்ணா. உனக்குரிய மரியாதையை வலிய பெற்றுக் கொண்டாயா? மாயனய்யா நீர்.

இதோ இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் இனி மேல் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன். உங்களுக்கு வேறு வேலை இருக்கும். அதனால் அப்புறம் பேசலாம். இப்போது சென்று வாருங்கள்.

***

வாருங்கள். பார்த்து எவ்வளவு நாளாயிற்று. கண்ணன் தூது வந்த அன்று பார்த்தது. அப்புறம் பெரும் போர் நடந்து அரசாட்சி மாறி இதோ பரிக்ஷித்து காலம் வந்தாயிற்று. கண்ணன் தூது வந்து சென்ற பின் அரசவையை சுத்தம் செய்தவருக்கு என்ன தோன்றியதோ என்னைத் தூக்கி எறியாமல் இங்கிருக்கும் மாடத்தில் வைத்துவிட்டார். அதனால் அந்த நாள் முதல் இந்த நாள் வரை நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேற்றிலிருந்து எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள். மன்னன் பரிக்ஷித்துவிற்கு ஏதோ சாபமாம். இன்னும் ஏழே நாட்களில் அரவு தீண்டி இறந்துவிடுவாராம். அதனால் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள்.

திடீரென்று ஒரு பரபரப்பு ஏற்படுகிறதே?! ஏன்? அங்கே வருவது யார்? பெரும் ஒளியுடனும் எல்லோர் மனத்தையும் கவர்ந்து இழுக்கும் இளமையும் அழகும் அருமையான அமைதியும் கொண்டு வரும் இவர் யார்? சுகப்ரம்மம் சுகப்ரம்மம் என்கிறார்கள் எல்லோரும். சுவாமி. அடியேனுக்கு கை இல்லை; அதனால் கை கூப்பி வணங்க முடியாது. என் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் இங்கே நோக்குகிறாரே. ஆகா. என் அருகில் வந்து அல்லவா அமர்ந்து கொள்கிறார்?! கண்ணனின் கதையை மன்னனுக்குச் சொல்லப் போகிறாராம். ஆகா பெரும் பாக்கியம். பெரும் பாக்கியம்.

***

மகரிஷி சுகரின் கருணையால் பகவான் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றி கேட்டு ஆனந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த ஆனந்தம் என்றுமே நிலைக்க வேண்டும். என்றுமே நிலைக்க வேண்டும். கண்ணா. உன் கதைகளைக் கேட்ட நான் வேறு எதையுமே இனி மேல் கேட்க விரும்பவில்லை. மகரிஷி கதையினைச் சொல்லி முடித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இனியும் இங்கிருக்க எனக்கு விருப்பமில்லை. இறைவா. என் வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாய்.

Tuesday, December 18, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 7

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.மலை மேல் ஏறிப்போகும் கற்படிகளால் ஆன பாதையில் நூறு அடிக்கு ஒரு மின்விளக்கு இருந்தது. ஒரு விளக்கின் ஒளி மங்கிப் போகும் இடத்தில் அடுத்த விளக்கின் ஒளி மங்கலாகத் தொடங்கிவிட்டது. அதனால் பாதையைப் பிடித்துச் செல்லுவது கடினமாக இல்லை. இருட்டின் அமைதியில் சுற்றிலும் சிறு பூச்சிகள் செய்யும் ஓசைகள் பெரிதாகக் கேட்டன. பத்து பதினோரு விளக்குகளைத் தாண்டியவுடன் அடிமுடி கோவில் வந்துவிட்டது. தாத்தா வெளியே உட்கார்ந்து இன்னும் நாலைந்து தாத்தாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். மூன்று பேரும் வருவதைப் பார்த்து உள்ளே செல்லும் படி சைகை காட்டிவிட்டு மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தார்.

பகலில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அந்த அறை அவ்வளவு ஒன்றும் வித்தியாசமாக இல்லை. அதே அறை தான். இப்போது மஞ்சள் குமிழ் மின்விளக்கின் 60 வாட்ஸ் ஒளியில் கொஞ்சம் மங்கலாக இருந்தது. முழு அறைக்கும் ஒரே விளக்கு தான்.

மூன்று பேரும் உள்ளே வந்து உட்கார்ந்த சிறிது நேரத்தில் தாத்தாவும் உள்ளே வந்தார்.

"தரிசனமெல்லாம் எப்படி இருந்தது?"

"நல்லா இருந்தது தாத்தா" சொன்னான் கேசவன்.

"கிரிவலமும் போயிட்டு வந்தாச்சு போல"

"ஆமாம் தாத்தா"

"என்ன என்ன பாத்தீங்க?"

"அர்த்தநாரீஸ்வரர் கோவில், இடுக்குப் பிள்ளையார், எட்டு திக்கு லிங்கம்"

"எது உனக்கு ரொம்ப பிடிச்சது மோகன்?"

"இடுக்குப் பிள்ளையார் தாத்தா"

"ஈசான்ய லிங்கம் பிடிக்கலையா?" என்று கேட்டுவிட்டு சத்தமில்லாமல் சிரித்தார்.

"பிடிச்சுது தாத்தா" பொய் சொன்னான் கந்தன்.

"அப்புறம் வேற என்ன பாத்தீங்க?"

"கோவிலுக்குப் போனோம் தாத்தா" தொடர்ந்தான் கேச்வன்.

"அங்கே என்ன பிடிச்சது"

"பிடாரி அம்மன்" தன்னை அறியாமல் முந்திக் கொண்டு சொன்னான் கந்தன்.

இதற்கும் ஒரு புன்னகை தான் பதில். இதுவரை பொதுவாக மூவரிடமும் பேசிக் கொண்டிருந்த தாத்தாவின் கவனம் இப்போது கந்தனிடம் வந்த மாதிரி இருந்தது.

"மோகன். நீ நல்லா பாட்டு பாடுவ இல்லை. ஒரு பாட்டு பாடு"

வழக்கம் போல் தயங்கினான் கந்தன். திடீரென்று பாட்டு பாடச் சொன்னால் என்ன பாடுவது என்று தெரியவில்லை. கூச்சமும் இருந்தது.

"என்ன பாட்டு பாடறது தாத்தா?"

"இந்த ஊரைப் பத்தி ஒரு பாட்டு பாடு"கொஞ்ச நேரம் யோசித்தான் கந்தன். திருவண்ணாமலையில் தான் திருவெம்பாவை பாடப்பட்டது என்பது நினைவிற்கு வந்தவுடன் திருவெம்பாவை முதல் பாட்டு பாடத் தொடங்கினான்.

ஆதியும் அந்தமும்
இல்லா அருட்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும்
வாட்தடங்கண் மாதே வளருதியோ
வன்செவியோ நின் செவி தான்?
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே
விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல்
நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்
கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி
பரிசேலோர் எம்பாவாய்

(பாடலின் பொருள்)

சரியான இடத்தில் பிரித்துப் பிரித்துப் பாடியதால் பாடலுக்குப் பொருள் எளிதாக விளங்கியது மணிகண்டனுக்கும் கேசவனுக்கும். பாடிவிட்டு கந்தன் தாத்தாவைப் பார்த்தான்.

"இந்த பாட்டு யாரு பாடுனது?"

"மாணிக்கவாசகர் பாடுனது தாத்தா. திருவண்ணாமலையில நடந்த பாவை நோன்புக்காக பாடுன திருவெம்பாவை"

"இது திருவண்ணாமலைல பாடுனதுங்கறதுக்கு ஏதாவது குறிப்பு பாட்டுல இருக்கா?"

"இருக்கு தாத்தா. மொதோ வரியிலயே இருக்கு. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதின்னு திருவண்ணாமலை தலபுராணத்தைச் சொல்லியிருக்காரு"

"ம்ம்ம்" சிரித்துக் கொண்டார் தாத்தா. "இன்னும் பாடு"

அவனுக்குப் பிடித்த இன்னொரு திருவெம்பாவைப் பாட்டைப் பாடத் தொடங்கினான் கந்தன்.
முன்னைப் பழம்பொருட்கும்
முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும்
பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப்
பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம்
ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர்
ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே
தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே
எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்
ஏலோர் எம்பாவாய்

(பாடலின் பொருள்)

பாட்டு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது இரு இளைஞர்களுக்கும்.

"இந்தப் பாட்டு என்ன சொல்லுது மோகன்?"

"சிவனடியாரை தான் கணவனா வரணும்ன்னு பொண்ணுங்க வேண்டிக்கிறாங்க தாத்தா"

"அவ்வளவு தானா?"

கொஞ்ச நேரம் யோசித்தான் கந்தன்.

"கடவுள் புராணமயமானவன்"

"அப்படின்னா?"

தாத்தா தெரிந்து கொண்டே மற்றவர்களுக்காகக் கேட்கிறார் என்று புரிந்தது.

"புராணம்ன்னா ஒரே நேரத்தில பழமையாவும் புதுமையாவும் இருக்கிறது. புரான்னா பழசு. நவன்னா புதுசு. கடவுள் எல்லாத்துக்கும் பழசா இருக்காரு. அதே நேரத்துல எல்லாத்துக்கும் புதுசாவும் இருக்காரு"

தலையாட்டி ஆமோதித்தார் தாத்தா. கேசவன் 'பாட்டுல எளிமையா சொல்லியிருக்காங்க. புராணமயமானவன் அப்படி இப்படின்னு இந்த கந்தன் தான் கொஞ்சம் குழப்புறான்' என்று எண்ணிக் கொண்டான்.

"அப்புறம்"

"அவ்வளவு தான் தாத்தா"

"பொண்பிள்ளைங்களுக்கு அடியார்கள் கணவராகணும். சரி. ஆண்பிள்ளைகளுக்கு எப்படி?"

'ஆகா. மாட்டிவிட்டுட்டாரே. இது வரைக்கும் பொண்ணுங்க இந்தப் பாட்டைப் பாடற மாதிரி தானே பொருள் புரிஞ்சு வச்சிருந்தேன். இப்ப ஆம்பளைகளுக்கு எப்படின்னு கேக்குறாரே'

சிந்தித்தான் கந்தன். அந்த இடத்தின் ஆளுமையா தாத்தாவின் ஆளுமையா தெரியவில்லை. விடை தெரிந்தது கந்தனுக்கு.

"ஆம்பளைங்களுக்கும் அதே அர்த்தம் தான் தாத்தா. அடியார்க்கு அடியாரா இருக்கணும்ன்னு வேண்டிக்கணும் இந்தப் பாட்டைப் பாடறப்ப"

ஆமோதித்துத் தலையாட்டினார் தாத்தா. "அடியாருக்கு அடியாரா இருக்கிறதுன்னா என்ன?"

"அவங்க மனசு கோணாம இருக்கிறது"

"அப்புறம்"

"அவங்களுக்குத் தோழரா இருக்கிறது. அவங்க சொல்படி நடக்கிறது. அவங்களோட சந்தோசமே நமக்கு சந்தோசமா இருக்கிறது"

"அடியார்ன்னா யாரு?"

சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை கந்தனுக்கு.

"அடியார்ன்னு சொல்லிக்கிறவங்க எல்லாம் அடியாரா?" அடுத்த கேள்வியை வீசினார் தாத்தா.

"அப்படி சொல்ல முடியாது தாத்தா"

"அப்புறம்?"

"அவங்க முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும். அவங்களைப் பாத்தாலே தெரியும் தாத்தா"

"உண்மையாவா? உனக்கு அப்படி யாரையாவது தெரிஞ்சிருக்கா?"

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை கந்தனுக்கு. கேசவனைப் பார்த்தார் தாத்தா.

"அடியார்ன்னு யாரை கடவுள் ஏத்துக்கிறாரோ அவங்க தான் அடியார் தாத்தா"
"சரியா சொன்ன கேசவா. கடவுள் ஏத்துக்கிட்டாருன்னு எப்படி தெரியும்?"

கேசவனுக்கும் பதில் தெரியவில்லை.

தாத்தா சிரித்துக் கொண்டே "ம்ம். சரியாத் தான் சொல்றீங்க. ஆனா இன்னும் கொஞ்சம் அனுபவம் வேணும். அந்த அனுபவம் வந்தா தானா கடவுளைப் பார்க்கலாம். அடியாரையும் பார்க்கலாம். சரி அடுத்த பாட்டு பாடு"காத்துக் கொண்டிருந்தது போல் கொஞ்சம் கூட தயங்காமல் அடுத்தப் பாட்டைத் தொடங்கினான் கந்தன்.

போற்றி அருளுக நின்
ஆதியாம் பாத மலர்
போற்றி அருளுக நின்
அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும்
தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும்
போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும்
ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும்
காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய
ஆட்
கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீர்
ஆடேலோர் எம்பாவாய்

(பாடலின் பொருள்)

"பொருத்தமான பாட்டு"

தாத்தா அப்படி சொன்ன பிறகு தான் திருவண்ணாமலைக்கும் அடி முடி கோவிலுக்கும் பொருத்தமான வரிகள் இந்தப் பாட்டில் வந்தது புரிந்தது கந்தனுக்கு. அவனை அறியாமலேயே 'போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்' என்ற வரியை இரு முறை பாடியிருந்தான்.

இந்த பாட்டு பாடி முடிப்பதற்குள் கேசவன் கண்களில் நீர் நிறைந்திருந்தது. பாடலில் நன்கு லயித்துவிட்டான் என்று தெரிந்தது. கந்தனின் மனமும் நன்கு பண்பட்ட நிலம் போல் மாறியிருந்தது. இறுகியிருக்கும் நெஞ்சம் இளகியிருந்தது.

"உனக்குப் பிடிச்ச இன்னொரு பாட்டு பாடு" மீண்டும் கட்டளை வந்தது தாத்தாவிடமிருந்து. கொஞ்சம் சிந்தித்துவிட்டு அடுத்தப் பாடலைத் தொடங்கினான் கந்தன்.

நாராயண தே நமோ நமோ பவ
நாரத சன்னுத நமோ நமோ (நாராயண)

முரஹர நகதர முகுந்த மாதவ
கருட கமன பங்கஜ நாபா
பரம புருஷ பவ பஞ்ஜன தே நமோ
நரம்ருக சரீர நமோ நமோ (நாராயண)இப்போது மணிகண்டனும் பாடுவதில் சேர்ந்து கொண்டான்.

ஜலதி சயன ரவி சந்த்ர விலோசன
ஜலருஹ பவனுத சரணயுக
பலி பந்தன கோவர்த்தன வல்லப
நளினோதர தே நமோ நமோ (நாராயண)

இப்போது தாத்தாவும் சேர்ந்து கொண்டார்

ஆதி தேவ சகலாகம பூஜித
யாதவ குல மோஹன ரூபா
வேதோத்தர திருவேங்கட நாயக
ராதா ப்ரிய தே நமோ நமோ (நாராயண)

(பாடலைக் கேட்க)

திருவேங்கட நாயக என்று பாடும் போது கந்தனின் கண்களிலும் நீர் ஆறாகப் பெருகியது.

பாடல் முடிந்த பின் பத்து நிமிடம் அங்கே அமைதி நிலவியது. எதுவும் சொல்லாமல் படுக்கையைக் கை காட்டி விட்டு தாத்தா கயிற்றுக் கட்டிலை நோக்கிச் சென்றார். மூவரும் பாயை விரித்துப் படுக்கத் தயாராகும் போது டேப் ரிகார்டரில் பாட்டை ஓடவிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார் தாத்தா. மிக இனிமையான குரலில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடத் தொடங்கினார்.

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல் வண்ணன் பண்டொரு நாள்
கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார்
கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

அரும்பொருள் இவனென்றே அமரர்களும் தொழுதேத்த
உறுபசி ஒன்றின்றியே உலகடைய உண்டனையே
உண்ட வாய் களவினால் உறி வெண்ணெய் உண்ட வாய்
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தேதிரண்டு அமரர் தொழுது ஏத்தும்
திருமால் நின் செங்கமல
இரண்டடியால் மூவுலகும்
இருள் தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே

பெரியவனை மாயவனை பேருலகம் எல்லாம்
விரி கமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே

மடம் தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்ற
தொடர்ந்து ஆரணம் முழங்க பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவேபாடலின் பொருள்
பாடலைக் கேட்க

பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே என்ற வரிகள் வரும் போது கந்தனை உறக்கம் தழுவியது.

Sunday, December 16, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 6

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.


மணிகண்டன் சொன்னதைக் கேட்டதும் கந்தனுக்கு உடலும் உள்ளமும் ஒரு தடவை சிலிர்த்தது. திருப்புகழ் எனும் அமுதத்தைத் தந்த அருணகிரிநாதர் தொடக்கம் முதல் முடிவு வரை வாழ்ந்த இடங்களை எல்லாம் பார்க்கிறோம் என்ற சிலிர்ப்பு. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டல்லவா அவரின் வாழ்க்கை. இளமையில் சென்ற சிற்றின்ப வழியென்ன, அதனால் பெற்ற பெருநோய் தான் என்ன அவை எல்லாம் முருகனின் திருவருள் பெற்று 'சும்மா இரு சொல்லற' என்ற உபதேசம் பெற்று உய்யும் வழியைத் தானே காட்டியது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட உயர்வு தாழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை நடக்கும் போது தாழ்வாகத் தோன்றினாலும் பின்னர் திரும்பிப் பார்க்கையில் அதுவும் நன்மைக்கே என்று புரிகிறதல்லவா? வேண்டிய அளவிற்குத் திருப்புகழையும் கந்தரலங்காரத்தையும் தான் பெற்ற அனுபூதியையும் பாடிய பின்னர் கிளி வடிவாக மாறி சிறிது காலம் அருணகிரிநாதர் வசித்த கோபுரத்தின் அடியில் நிற்கிறோம் என்ற பொழுது கந்தனுக்கு நொடியில் இந்த எண்ணங்கள் எல்லாம் வந்து சென்றன.

கந்தன் கேசவனைப் பார்த்தான். "கேசவா. இந்தக் கிளி கோபுரம் பத்தி தெரியுமா?"

"தெரியும். அருணகிரிநாதர் படத்துல பாத்திருக்கேன்"

"அப்ப சரி. வாங்க. உள்ள போயி அண்ணாமலையாரைப் பாக்கலாம்"

கோபுர வாயிலில் நுழைந்து உள்ளே செல்லும் போது கந்தனின் பார்வையில் பட்டது ஒரு மின்னல் கொடி. அழகென்றால் அப்படி ஒரு அழகு. எந்த வகையில் கவர்ச்சி என்று புரியவில்லை. ஒரு நொடியில் அவளின் உருவம் மனத்தில் முழுக்க நிறைந்துவிட்டது. அவள் கடந்து சென்ற பின்னரும் கந்தனால் அவள் உருவத்தை மறக்க முடியவில்லை. அவன் திரும்பிப் பார்த்ததைக் கண்டு கேசவன் ஒரு குறுநகை செய்தான். அவன் சிரிப்பதைப் பார்த்து கந்தனும் சிரித்துக் கொண்டான். மணிகண்டனுக்கோ இவை எதுவும் தெரியவில்லை. அவன் இவர்கள் முன்னால் சென்று கொண்டிருந்தான்.

அந்தப் பெண்ணைப் பார்த்த பின்னர் தனது கல்லூரிக் காலம் கந்தனுக்கு நினைவிற்கு வந்தது.

'எத்தனை பொண்ணுங்ககிட்ட மனசைப் பறி கொடுத்திருக்கேன்?! காலேஜ் நாட்களை நினைச்சாலே ஒரு கிக் தானா வந்துருது. சின்ன வயசுல இருந்து பாத்த பூங்கோதை பன்னெண்டாப்பு படிக்கிறப்ப தேவதை மாதிரி தெரிஞ்சாளே. அவகிட்ட காதலைச் சொல்லிரணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்பவே செகண்ட் இயர்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுக்கிட்டு இருந்த ஷ்யாமளா கண்ணுல பட்டா. இப்ப மனசு இவகிட்ட போயிருச்சு. அந்த நேரம் பாத்து பர்ஸ்ட் இயர்ல நல்லா செகப்பா துறுதுறுன்னு வருஷம் 16 குஷ்பு மாதிரி ரமா வந்து சேர்ந்தா. பசங்க கண்ணு எல்லாம் அவ பக்கம் தான். ரெண்டு மூணு தடவை காலேஜ் பஸ்ல அவ வந்து சந்தேகம் கேட்டாளும் கேட்டா பசங்க பொறாமையில வெந்து சுண்ணாம்பாயிட்டாங்க. எவனோ ஒருத்தன் ஷ்யாமளாகிட்ட போயி அதை போட்டுக்குடுத்துட்டான். அவ்வளவு தான். அவ என்னை திரும்பிக் கூடப் பாக்கலை. அவளை எப்படியாவது கவர்ந்துரணும்னு எத்தனை கவிதை எழுதுனேன். எக்ஸாம் ஹாலுல எத்தனை டெஸ்குல கவிதையெல்லாம் கிறுக்கி வச்சேன். அவ்வளவும் வேஸ்ட். அவ கண்டுக்கவே இல்லை. ஆனா தேன்மொழி கண்டுக்கிட்டா. பதில் கவிதை எழுதிவச்சா. அதைப் படிச்சதும் நாடி நரம்பெல்லாம் அடங்கிப் போச்சு. இப்பக்கூட அதை நெனைச்சா படபடன்னு இருக்கு. ஓடிப் போயி அம்மா தாயே; நான் ஏற்கனவே இன்னொரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன். ஆனா அவ கடைசி வரைக்கும் எனக்கு ரூட் போட்டுக்கிட்டு தான் இருந்தான்னு சிவில் குரூப் இந்துமதி சொன்னா.

நாலு வருஷமும் இப்படியே போச்சு. கடைசியில ஷ்யாமளாவை மறந்துட்டு பூங்கோதைகிட்டயே போய் லவ்வைச் சொன்னா டூ லேட். எங்க வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டா. ஹும். அவ கல்யாணத்துக்குப் போயி பக்கத்துலயே இருந்து வாழ்த்திட்டு வந்தேன். இப்ப ஏதோ வெளிநாட்டுல போயி செட்டில் ஆயிட்டாளாம்.'

இந்த எண்ணங்களுடன் கூடவே எத்தனையோ பெண்கள் கல்லூரிக் காலத்தில் அண்ணா அண்ணா என்று சொல்லிப் பழகியதையும் அதையெல்லாம் கண்டு நண்பர்கள் டேய் நீ கந்தனா கண்ணனான்னு ஓட்டியதும் நினைவிற்கு வந்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் கந்தன். கேசவனுக்கு இதெல்லாம் தெரியும். அதனால தான் இப்ப இந்தப் பெண்ணை கந்தன் பார்ப்பதைக் கண்டு இவனைத் திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டு சிரித்தான்.
மூவரும் அண்ணாமலையார் சன்னிதிக்குள் நுழைந்தார்கள். மின்விளக்கு வெளிச்சத்தில் அண்ணாமலையாரைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய பணக்காரர் சுற்றம் சூழ உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது கந்தனுக்கு. நிறைய நகையெல்லாம் போட்டு நன்கு அலங்காரம் செய்திருப்பதால் அப்படி தோன்றியதோ என்னவோ?கேசவன் தன்னை மறந்து அண்ணாமலையாரை வணங்கிக் கொண்டிருந்தான். அண்ணாமலையாரின் அலங்காரம் மிக அழகாக மனத்தில் பரவியது. கண்ணை மூடி வணங்கும் போதும் அது மனத்தின் முன்னால் நின்றது. கந்தனுக்கு அந்த அளவிற்கு மனம் ஒருப்பட்டது போல் தெரியவில்லை.

மூவரும் அண்ணாமலையாரை வணங்கிவிட்டு உட்பிரகாரத்தை வலம் வந்தார்கள். வேணுகோபால சுவாமி சன்னிதிக்கு வந்த போது கந்தனின் மனம் கொஞ்சம் அடங்கத் தொடங்கியிருந்தது. வேணுகோபால சுவாமியை வணங்கிவிட்டு வைகுண்ட வாசல் வழியாக உண்ணாமுலையம்மன் சன்னிதிக்கு வந்தார்கள்.
உண்ணாமுலையம்மன் சன்னிதியில் நிற்கும் போதும் கந்தனின் மனம் அம்மனின் திருவுருவத்தில் லயிக்காமல் கொஞ்சம் அலை பாய்ந்தது.
'பிள்ளையாரும் முருகனும் அம்மனோட குழந்தைங்க தானே. அவங்களுமா அம்மனிடம் பால் குடிக்கவில்லை? ஞானசம்பந்தருக்கு அம்மன் பால் கொடுத்ததா சொல்றாங்களே. அவருக்கு முலைப்பால் தானே கொடுத்ததா சொல்வாங்க. அதுவும் கிண்ணத்துல வச்சு தான் கொடுத்தாங்களோ? உண்ணாமுலையம்மன்னு பேரு வச்சிருக்காங்களே'மூவரும் அமைதியாக அம்மனை வணங்கிவிட்டு வெளியே வந்த போது நன்கு இருட்டியிருந்தது. அப்படியே அந்தப் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது கல்லினால் செய்த திரிசூலம் ஒன்று இருந்தது. பக்கத்தில் வந்தவுடன் கந்தனின் மனம் கோவிலில் நுழைந்ததிலிருந்து உணராத ஒரு அருமையான உணர்வை பெற்றது. மனம் குவிவதை உணர்ந்த கந்தன் வியப்புடன் சுற்றிப் பார்க்க பக்கத்தில் பிடாரி அம்மன் சன்னிதி இருந்தது. அவன் மனத்தைக் காந்தம் போல் இழுத்தது அந்த சன்னிதி. சன்னிதிக்குள் நுழைந்து அங்கிருந்த பிடாரி அம்மனை வணங்கினான். மாரியம்மனைப் போல் இருந்த அந்த அம்மனை வணங்கிக் கொண்டே மணிகண்டனைப் பார்த்தான்.


"மணிகண்டா. இந்த அம்மன் யாரு?"

"பிடாரி அம்மன்னு சொல்லுவாங்க அண்ணா. அவ்வளவு தான் எனக்குத் தெரியும்"

கோவிலில் எங்குமே உணராத மன அமைதி ஏன் இங்கே கிடைத்தது என்று கந்தனுக்குப் புரியவில்லை. குவிந்த மனத்துடன் பிடாரி அம்மனை மீண்டும் மீண்டும் வணங்கினான். வணங்க வணங்க மனம் இன்னும் நன்றாகக் குவிந்தது. மனம் நிறைந்தது.

"இப்ப வீட்டுக்குப் போனா தான் சாப்பாடு முடிச்சு மேல போயி தூங்கலாம்"

மணிகண்டன் சொல்ல மூவரும் அதிகம் பேசாமல் வீட்டிற்கு நடந்தார்கள். இரவு உணவு முடித்துவிட்டு மீண்டும் மலை ஏறும் போது தான் இரவை மலையில் கழிக்கப் போகிறோம் என்பது கந்தனுக்கு உறைத்தது. அது வரை மணிகண்டன் வீட்டில் தான் தங்கப் போகிறோம் என்று நினைத்திருந்தான்.

"மலை மேல குளிருமா மணிகண்டா?"

"இந்த வெயில் காலத்துல குளிர எல்லாம் செய்யாது அண்ணா. நல்லா இதமா இருக்கும்"

"கொசுத் தொல்லை இருக்குமா?"

"கொசுவெல்லாம் இருக்காது அண்ணா. அப்படியே இருந்தாலும் உங்களுக்குத் தெரியாது. இன்னைக்குச் சுத்துன சுத்துல நல்லா அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கப் போறீங்க"

உண்ட மயக்கமும் கொஞ்சம் இருப்பதை அப்போது தான் உணர்ந்தான் கந்தன். அரைகுறை மனத்துடனேயே மலை மேல் ஏறினான்.

Thursday, December 13, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 5

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.

ஈசான்ய திசைக்கதிபதியான ஈசான்ய லிங்கக் கோவிலுக்கு அருகில் மயானம் இருந்தது. சுடலையில் திரிபவன் சிவன் என்றாலும் ஒரு கோவில் சுடுகாட்டின் நடுவில் இருக்கும் என்று கந்தன் எதிர்பார்க்கவில்லை. கேசவனுக்கு சுடுகாட்டின் நடுவில் கோவில் இருப்பதே பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. அவன் வழக்கம் போல் கோவிலுக்குள் சென்று கும்பிடத் தொடங்கினான். சுடுகாட்டில் நுழைந்தால் அப்புறம் அண்ணாமலையார் கோவிலுக்குப் போகும் முன் குளிக்க வேண்டுமே என்று தயங்கினான் கந்தன். அவன் தயங்குவதைப் பார்த்து மணிகண்டன் கேட்க தன் தயக்கத்தைப் பற்றி சொன்னான். குளிக்கத் தேவையில்லை என்று மணிகண்டன் என்ன தான் சொன்னாலும் கந்தனுக்கு மனம் ஒப்பவில்லை. தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து ஈசான லிங்க தேவரை வணங்கி வெளியே வந்தான்.

மணி ஏறக்குறைய ஆறுமணி ஆகிவிட்டது. 'இனி நேரா கோவிலுக்குத் தானே?' என்று கந்தன் ஆவலுடன் கேட்க, 'வேணும்னா வீட்டுக்குப் போய் காப்பி குடித்துவிட்டுப் போகலாம்' என்றான் மணிகண்டன். கந்தன் வெறுத்துப் போகும் நிலைக்கு வந்துவிட்டான். அவன் நிலையைக் கண்ட கேசவன் சிரித்துக் கொண்டே 'கோவிலுக்குப் போயிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகலாம்' என்று சொன்னவுடன் தான் கந்தனிடம் புன்னகை திரும்ப வந்தது.
பேசிக் கொண்டே கோவில் வாசலுக்கு வந்துவிட்டார்கள். இன்று மட்டுமே இரண்டு முறை அந்தக் கோவில் வாசலுக்கு வந்திருந்தாலும் இப்போது தான் உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்தது என்று எண்ணிக் கொண்டே கந்தன் உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய வெட்ட வெளி வந்தது. இருட்டுவதற்குள் பாதாள லிங்கத்தைப் பார்த்துவிடலாம் என்று மணிகண்டன் சொன்னதால் வலப்புறம் இருந்த ஆயிரம் கால் மண்டபத்தில் நுழைந்து நாலைந்து படிகள் கீழே இறங்கி பாதாள லிங்கேஸ்வரரை தரிசித்தார்கள்.


'இந்த இடத்துக்கு என்ன விசேஷம் தெரியுமா?' என்று மணிகண்டன் கேட்க இருவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். மதுரையில் இருந்து கிளம்பிய சிறுவன் வெங்கடரமணன் இங்கே தான் முதலில் தவம் செய்ததாகச் சொல்லி வரும் போது கந்தனுக்கு நினைவிற்கு வந்துவிட்டது. அந்தக் காலத்தில் இந்த லிங்கத்தை யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ளாததால் இரமண மகரிஷி (வெங்கடரமணன்) இந்தத் தனிமையை விரும்பி இங்கே தவம் செய்யத் தொடங்கினார். பத்து பன்னிரண்டு வயது சிறுவன். கரையான் புற்று சுற்றிலும் எழுந்து கரையான் உடலை அரிக்கத் தொடங்கியும் அவனுக்குத் தெரியவில்லை. பல நாட்கள் உணவு உண்ணாமல் அங்கேயே கிடந்த இரமணரை சேஷாத்ரி சுவாமிகள் கண்டு வெளியே எடுத்து வந்து குளிப்பாட்டி உணவு அளித்துக் காப்பாற்றினார். இந்த விவரங்களை எல்லாம் கந்தன் சொல்ல மணிகண்டன் சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றிச் சொல்லுமாறு கேட்டான். கந்தனுக்கு அப்போது பேச மனமில்லை. அதனால் 'நேரமாச்சு மணிகண்டா. கோவில் பெரிய கோவிலில்லையா? அப்புறமா நிதானமா சொல்றேன்' என்று சொல்லிவிட்டான்.


பாதாள லிங்கேஸ்வரரை வணங்கிவிட்டு ஆயிரம் கால் மண்டபத்திலிருந்து வெளியே வந்தார்கள். எதிரே ஒரு பதினாறு கால் மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தின் மூலையில் இருந்து இன்னொரு நீள்சதுரமான மண்டபம் இருந்தது பார்க்க வினோதமாக இருந்தது. அதனைப் பார்த்து கந்தன் அது என்ன என்று கேட்க, மணிகண்டன் 'அது கம்பத்திளையனார் சன்னிதி' என்று சொன்னான். எங்கேயோ கேட்ட பெயர் போல் கந்தனுக்குத் தோன்றியது. 'கந்தன் அண்ணா. உங்களுக்குக் கட்டாயம் இந்த சன்னிதியைப் பற்றித் தெரிந்திருக்கும். நான் க்ளூ தர்றேன். பிரபுட தேவ மாராஜன், சம்பந்தாண்டான் - ஏதாவது நினைவுக்கு வருதா?' என்று மணிகண்டன் கேட்டவுடன் ஒரு இளநகை புரிந்து 'ஓ. அந்தக் கம்பத்திளையனாரா?' என்றான் கந்தன்.

இருவரும் பேசுவதைக் கேட்ட கேசவனுக்கு 'இன்னொரு சுவையான கதை வருகிறது' என்று புரிந்து விட்டது. ஆவலுடன் கந்தனைப் பார்க்க அவனும் 'கேசவா. அருணகிரிநாதர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கே தான்னு உனக்குத் தெரியும் தானே. அந்தக் காலத்துல இந்தப் பகுதியை பிரபுட தேவ மாராயன்ங்கற சிற்றரசர் ஆண்டுக்கிட்டு இருந்தார். தேவி உபாசகரான சம்பந்தாண்டான் என்பவருக்கு அரசரிடம் நல்ல மரியாதை' என்று சொல்லிக் கொண்டே வர, 'அருணகிரிநாதர் படத்துல கூட எம்.ஆர். இராதா அந்த வேஷத்துல வருவாரே' என்றான் கேசவன். 'கரெக்ட். அவரே தான். அப்ப கதை உனக்குத் தெரியும் தானே' என்ற கந்தனிடம் 'கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவுல இருக்கு. ஆனாலும் நீ நல்லா சொல்லுவ. இப்ப சொல்லு' என்றான் கேசவன். கந்தனும் 'சரி சொல்றேன். அந்த சம்பந்தாண்டாருக்கு அருணகிரிநாதர் ஃபேமஸாகிக்கிட்டு வர்றது பிடிக்கலை. எங்கே அரசர் தனக்கு மரியாதை குடுக்காம அருணகிரிநாதருக்குக் குடுக்க ஆரம்பிச்சிருவாரோன்னு கவலை. அதனால அரசர் கிட்ட அருணகிரிநாதரைப் பற்றி அடிக்கடி கோள் மூட்டிக்கிட்டு இருந்தாராம். ஒரு தடவை அருணகிரிநாதர் கிட்ட சவால் விட்ட போது அருணகிரிநாதர் பாட்டு பாடி எல்லாரும் பாக்கிற மாதிரி முருகனை இந்த மண்டபத்துல வரவச்சாரு. அந்த இடம் தான் இந்த கம்பத்து இளையனார் சன்னிதி' என்றான். 'அண்ணா. என்ன சுருக்கமா முடிச்சிட்டீங்க?! மயில் விருத்தம் பாடுனது எல்லாம் சொல்லலையே' என்று மணிகண்டன் கேட்க, 'ஆமாம் மணிகண்டா. அதெல்லாம் இன்னொரு நாள் கேசவனுக்குச் சொல்றேன்' என்று சொல்லிவிட்டு கேசவனிடம் 'கேசவா. அப்ப முருகன் எல்லாருக்கும் முன்னால காட்சி தந்தப்ப இந்த மண்டபத்துல இருக்குற தூணுல தான் காட்சி தந்தாராம். அதனால தான் இந்த முருகனுக்கு கம்பத்து இளையனார்ன்னு பேரு' என்று சொன்னான்.

பேசிக் கொண்டே மூவரும் கம்பத்திளையனார் சன்னிதிக்குள் நுழைந்தார்கள். பகுதி பகுதியாக இருந்த சன்னிதியில் நடுவில் ஒரு பகுதியில் திருப்புகழ் எல்லாம் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் இருந்த படத்தில் இருந்தவரைக் காட்டி 'இவர் தான் சேஷாத்ரி சுவாமிகள்' என்று சொன்னான் கந்தன். கம்பத்து இளைய பெருமாள் நல்ல அலங்காரத்தோடு மிக அழகாக இருந்தார். மூவரும் அவரைத் தரிசித்து விட்டு வெளியே வந்தார்கள்.

இருட்டத் தொடங்கிவிட்டதால் சிவகங்கை திருக்குளத்தை எட்டிப் பார்த்துவிட்டு அருகிலிருந்த சிவகங்கை விநாயகரையும் வணங்கிக் கொண்டார்கள்.


பெரிய நந்தியை வணங்கி விட்டு இன்னொரு கோபுர வாசலுக்கு வந்தார்கள். கோபுரத்தின் வலப்பக்கம் ஒரு பெரிய மண்டபம் இருந்தது. 'இது தான் கோபுரத்து இளையனார் சன்னிதி' என்று மணிகண்டன் சொன்னான். 'இங்கே தான் கோபுரத்து மேலே இருந்து கீழே விழுந்த அருணகிரிநாதரைத் தாங்கிப் பிடிச்சு முருகன் காப்பாத்துனார்' என்று கந்தன் சொல்ல மூவரும் மண்டபத்தின் உள்ளே நுழைந்து அங்கிருந்த கோபுரத்து இளைய பெருமாளாகிய முருகனையும் அருகில் கை கூப்பி நிற்கும் அருணகிரிநாதரையும் தரிசித்து வெளியே வந்தார்கள்.


பின்னர் கோபுரத்துக்குள் நுழைந்து அடுத்த உள் பிரகாரத்திற்கு வந்தார்கள். அங்கே இருந்த சின்ன நந்தி தேவரை வணங்கிவிட்டு இன்னொரு கோபுர வாயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். 'இந்த கோபுரத்திற்கு இருக்கும் பெருமையைச் சொல்லுங்கள்' என்று மணிகண்டன் கேட்க கந்தனும் 'இது என்ன கோபுரம்?' திருப்பிக் கேட்டான். மணிகண்டன் சொன்னதைக் கேட்டு கந்தன் முகம் மலர்ந்தது.


அடுத்த அத்தியாயம் இங்கே

Sunday, December 09, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 4


முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.

'இப்ப கோவில் திறந்திருக்குமா தாத்தா?' என்று கேசவன் கேட்டான். அதற்கு மணிகண்டன் 'இப்ப நடை சாத்தியிருக்கும். நாலு மணிக்குத் திறப்பாங்க' என்று சொல்லிவிட்டு 'அண்ணா. நீங்க கிரிவலம் போகணும்ன்னு சொன்னீங்கள்ல. மூன்றரை மணி போல கிளம்பி கிரிவலம் போயிட்டு வந்து அப்புறம் கோவிலுக்குப் போகலாம். அப்பத் தான் இருட்டுறதுக்கு முன்னாடி கிரிவலம் போயிட்டு வர முடியும்.' என்றான். தாத்தாவும் 'அப்படியே செய்யுங்க' என்று சொல்ல கேசவனும் சரி என்று தலையாட்டினான். கந்தனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான். 'தனியா வந்திருந்தா இன்னேரம் கோவிலுக்குப் போயிட்டு வந்திருக்கலாம். கேசவனோட வந்ததால அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போக வேண்டியிருக்கு. அவன் என்னடான்னா இந்த தாத்தா சொல்றதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறான்' என்று எண்ணிக் கொண்டான்.

மணிகண்டன் மீண்டும் 'இப்ப மணி ரெண்டரை ஆச்சு. இப்ப கிளம்புனாத் தான் வீட்டுக்குப் போய் சாப்புட்டுட்டு கிரிவலம் கிளம்ப முடியும்' என்று சொல்ல, கேசவன் 'சாப்புட்டுட்டு அப்புறம் கிரிவலம் போகலாமா?' என்று தயங்கினான். 'சரியான ஆளா இருக்கான் இவன். சாப்புடாம கிரிவலம் போனா மயங்கி விழவா?' என்று கந்தன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே 'அதெல்லாம் ஒன்னும் தப்பில்லை' என்று தாத்தா சொன்னார். கந்தனுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி ஒரு பக்கம் வியப்பு.

மூவரும் தாத்தாவிடம் சொல்லிவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்கள். வீட்டில் சாப்பாடு தயாராக இருந்தது. நன்றாக வயிறார உண்டு விட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்றரை மூன்றேமுக்கால் போல் கிளம்பி மலையைச் சுற்றி வரக் கிளம்பினார்கள்.

கோவில் வாசலில் வந்து வாசலில் இருந்த படியே கைகூப்பி வணங்கிவிட்டு சுற்றி வரத் தொடங்கினார்கள். வெயிலின் கடுமை குறையத் தொடங்கியிருந்தது. கொஞ்ச தூரம் வரை நகரத்தின் சலசலப்பு தொடர்ந்து வந்தது. மூலைக்கு ஒரு சிவலிங்கம் என்று இருக்கும் எட்டு திசை சிவலிங்கங்களைப் பற்றி மணிகண்டன் சொல்லிக் கொண்டே வந்தான்.


மலையைச் சுற்றி வரும் வழியில் இருக்கும் இரமணாசிரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், யோகி இராம்சுரத்குமார் ஆசிரமம் எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு வந்தான். இப்பவே இரமணாசிரமம் பார்த்துவிட்டுப் போய்விடலாமே என்று கந்தன் சொல்ல மறுநாள் வரலாம் என்று மணிகண்டன் சொல்லிவிட்டான்.

நகர எல்லை முடிந்த பின் மலைக்காட்சி மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தான் மணிகண்டன். இந்த இடத்தில் தான் முதன் முதலில் தாத்தாவை பார்த்தோம்; இந்த இடத்தில் தான் தாத்தா தனியே கிரிவலம் வந்துக் கொண்டிருந்த தன் அண்ணனைப் பார்த்துப் பேசினார், குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்த தன் அண்ணன் முன் திடீரென்று எங்கிருந்தோ வந்து 'என்னைத் தேடி அலைகிறாயா?' என்று கேட்டதும் அதே இடத்தில் தான் என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

அவ்வப்போது கந்தனிடம் திருவண்ணாமலையைப் பற்றிய திருப்புகழ், திருவாசகம், திருவெம்பாவை என்று சாமி பாட்டுகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு வந்தான். அப்படி அவன் கேட்கும் போதெல்லாம் ரொம்பப் பெருமையாகத் தனக்குத் தெரிந்ததைக் காட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று கந்தனும் சொல்லி வந்தான். நடுநடுவே பாட்டுகளையும் பாடிக் காண்பித்தான். மணிகண்டனை கந்தனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. வீட்டில் மணிகண்டனின் அம்மா திருப்புகழ் பாடச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்த கந்தன் மணிகண்டன் கேட்ட போது தயங்காமல் பாடினான். அதற்குக் காரணம் சுற்றிலும் இருந்த இயற்கைச் சூழ்நிலையா மணிகண்டனைக் கந்தனுக்குப் பிடித்துப் போய்விட்டதா என்று தெரியவில்லை. பல முறை தனியாக மொட்டை மாடிக்குச் சென்று இயற்கையை இரசித்தபடியே பாடுவது கந்தனின் வழக்கம் என்பதால் இயற்கை சூழ்நிலை தான் கந்தனை இங்கேயும் உற்சாகமாகப் பாடவைத்தது என்று நாம் நம்புவோம்.

கேசவன் நிலையைப் பற்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை. மற்ற இருவர் சொல்வதைக் கேட்பதே தான் பிறவி பெற்றதன் பயன் என்பதைப் போல் நடந்து கொண்டான். கந்தனின் சில கிறுக்குத்தனங்கள் பிடிக்காவிட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேசவன் அவனுடன் நட்புடன் இருப்பதே இந்த மாதிரி நேரங்களில் கிடைக்கும் சத்சங்கத்திற்காகத் தானே. மூன்று நண்பர்களும் இப்படி தலத்தைப் பற்றியும் கோவிலைப் பற்றியும் தெய்வீகப் பாடல்கள் பற்றியும் பேசிக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் மிக்க மகிழ்ச்சியும் நட்பும் கொண்டு ஆனந்தமாக நடந்து கொண்டிருந்தனர்.

அப்படியே சுற்றி மலைக்குப் பின்னால் வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்குள் சென்று மாதொருபாகனை (அர்த்தநாரீஸ்வரர்) வணங்கிக் கொண்டார்கள். அந்தக் கோவிலைப் பற்றியும் ஒரு நல்ல கதையை மணிகண்டன் சொன்னான். இதற்குள் கந்தனுக்கு நடந்த களைப்பு தெரியத் தொடங்கிவிட்டது. தொடர்ந்து பேசிக் கொண்டே வந்ததும் காரணம். இன்னும் பாதி தூரம் போக வேண்டுமே என்ற கவலை இருந்ததால் கதையைக் கவனிக்கவில்லை. ஏற்கனவே நமக்குத் தெரிந்த கதையாய் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் காரணம்.

இன்னும் கொஞ்ச தூரம் நடந்து மலையின் இடப்பக்கம் வந்த போது ஒரு இடத்தில் ஒரு சிறிய கூட்டம் இருந்தது. ஒரு சின்ன சதுரக் குகை போன்ற ஒன்று இருந்தது. இயற்கையாக ஏற்பட்டதில்லை. சிமிண்டு மேடையின் மேல் அண்மையில் கட்டியது போல் இருந்தது. இடுக்குப் பிள்ளையார் என்று பெயர் சொன்னான் மணிகண்டன். அங்கிருந்தவர்களில் சிலர் மட்டும் அந்த சின்ன குகைக்குள் ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு பக்கத்தில் இருந்து நுழைந்து மறுபக்கம் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி ஒவ்வொரு முறை செய்யும் போதும் அவர்கள் கணக்கில் இருந்து ஒரு பிறவி குறைகிறது என்று சொன்னான் மணிகண்டன். இந்த நம்பிக்கையைக் கேட்டு உள்ளூரச் சிரித்துக் கொண்டாலும் நாமும் நுழைந்து வந்தால் என்ன என்று பக்கத்தில் சென்று ஆராய்ந்தான் கந்தன். 'அண்ணா. நீங்க நுழைஞ்சு வர்றீங்களா?' என்று கேசவனிடம் மணிகண்டன் கேட்க அவன் புன்சிரிப்புடன் வேகமாகப் போய் நுழைந்து வெளியே வந்துவிட்டான். கேசவன் செய்ததைப் பார்த்தவுடன் தனக்கும் ஒரு பிறவி குறையட்டும் என்று கந்தனும் உள்ளே நுழைந்தான். கேசவனை விட கொஞ்சம் குண்டாக இருக்கும் கந்தனால் அவ்வளவு எளிதாக உள் நுழைந்து வெளி வர முடியவில்லை. கஷ்டப்பட்டு வயிறு பிதுங்கி கைகால் வலிக்க வெளியே வந்து சேர்ந்தான்.

அப்போது தான் அவனுக்கு ஏன் இதில் நுழைந்து வந்தால் ஒரு பிறவி குறையும் என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது. ஒரு குழந்தை தாய் வயிற்றில் இருந்து வருவது போன்று கடினமாக இது இருப்பதால் அப்படி சொல்கிறார்கள் என்று கேசவனிடம் சொன்னான். 'ஆமாம் அண்ணா. தாத்தாவும் அப்படித் தான் சொன்னாரு' என்றான் மணிகண்டன். தாத்தாவும் அவன் சொன்னதைத் தான் சொல்லியிருக்கிறார் என்றவுடன் கந்தனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. கந்தன் சொன்னதைக் கேட்டதும் கேசவன் இன்னொரு முறையும் மணிகண்டன் ஒரு முறையும் நுழைந்து வெளியே வந்தார்கள். கந்தன் 'என்னால் இன்னொரு முறை முடியாது' என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

அப்படியே சுற்றி ஈசான்ய மூலைக்கு வந்தார்கள். அங்கிருக்கும் ஈசான்ய லிங்கம் தான் எட்டுத் திசை லிங்கங்களில் கடைசி லிங்கம். இந்த லிங்கத்தை வணங்கியதும் கிரிவலம் நிறைவு பெறுகிறது என்று சொல்லியிருந்தான் மணிகண்டன். கோவில் கொஞ்சம் தூரத்தில் வரும் போதே தெரிந்தது. மற்ற திசைக் கோவில்கள் எல்லாம் ஒரு சின்ன மண்டபமாக இருக்க இந்தக் கோவில் மட்டும் கொஞ்சம் பெரிதாக இருந்தது.
ஈசானன் என்பதே சிவபெருமானின் பெயர் என்பதாலும் எண்திசைக்காவலர்களில் ஈசானன் வடகிழக்குத் திசைக்கு அதிகாரி என்பதாலும் இந்த ஈசான்ய லிங்கத்திற்கு மட்டும் கோவில் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது போலும் என்று கந்தன் சொல்ல மணிகண்டனும் கேசவனும் கேட்டுக் கொண்டு வந்தார்கள். கோவில் அருகில் வந்தவுடன் அங்கிருந்த காட்சியைக் கண்டு கந்தன் அதிர்ந்து நின்றுவிட்டான்.
அடுத்த அத்தியாயம் இங்கே