Sunday, July 29, 2007

கடம்பம் 6: கடுஞ்சின விறல் வேள் - முருகனா சேரனா?பதிற்றுப்பத்தில் கடம்பினைக் கூறும் பாடல்களை எடுத்து இதற்கு முந்தைய கடம்பம் இடுகையில் சொல்லியிருந்தேன். அப்போது பாடல்களின் பொருள் முழுவதும் தெரியாததால் பொருள் சொல்லாமல் விடுத்திருந்தேன். அந்த இடுகையை இட்ட பின் நல்வினைப்பயனால் தமிழ் இணைய பல்கலைக்கழக நூலகத்தில் உரையுடன் கூடிய பதிற்றுப்பத்தினைக் கண்டேன். இங்கே கடம்பினைக்கூறும் பாடல்களில் முதல் பாடலைப் பொருளுடன் வழங்குகிறேன்.

இரண்டாம் பத்து:

பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

வரை மருள் புணர் வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே

வரை மருள் புணர் - மலையைப் போல் தோன்றும் அலைகளையும்

வான் பிசிர் உடைய - வானத்தைத் தொடும் நீர்த்துளிகளையும் உடைய

வளி பாய்ந்து அட்ட - அவ்வப்போது காற்று பாய்ந்து நீரைக் குறைக்க

துளங்கு இருங் கமஞ் சூல் - விளங்குகின்ற மிகுந்த நீரைத் தன் வயிற்றினில் உடைய

நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி - மிகுந்த பரப்பினையுடைய பெருங்கடலை அடைந்து

அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் - துன்பம் செய்யும் அரக்கர்கள் இரவு பகல் பாதுகாப்பாகக் காக்கும்

சூருடை முழுமுதல் தடிந்த - சூரனுடைய வீரத்தின் உருவான மாமரத்தை அறுத்த

பேர் இசை - பெரும் புகழையுடைய

கடுஞ் சின விறல் வேள் - கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப்பெருமான்

களிறு ஊர்ந்தாங்கு - தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல

செவ்வாய் எஃகம் - சிவந்த முகத்தை உடைய உன் வேல்

விலங்குநர் அறுப்ப - எதிர்ப்பவரை அறுக்க

அருநிறம் திறந்த - அவர்களின் வலிமை வாய்ந்த மார்பினைப் பிளந்த

புண் உமிழ் குருதியின் - புண்ணிலிருந்து பெருகும் குருதியால்

மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து - நீல மணி போல் நிறத்தை உடைய பெரும்பள்ளமாகிய கடல் நீர் தன் நிறம் மாறி

மனாலக் கலவை போல - குங்குமக் கலவை போல் ஆக

அரண் கொன்று - எதிரிகளின் பாதுகாவலை அழித்து

முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை - வீரம் மிகுகின்ற சிறப்பில் உயர்ந்த ஊக்கம் உடையவனே!

பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் - எதிரி வீரர்கள் பலர் சுற்றி நின்று பாதுகாத்த பெரிய கடம்ப மரமெனும்

கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் - பாதுகாவல் உடைய காவல் மரத்தை அழியும் படி உன் வீரர்களை ஏவி

வென்று - மரத்தை அழித்து

எறி முழங்கு பணை செய்த - அந்த மரத்தினைக் கொண்டு முழங்குகின்ற முரசினைச் செய்த

வெல் போர் - போரினை வெல்லுகின்ற

நார் அரி நறவின் - பல ஆடைகளால் வடித்து எடுக்கப் பட்ட கள்ளினைப் பெரிதும் உடைய

ஆர மார்பின் - சந்தன மாலைகள் அணிந்த மார்பினை உடைய

போர் அடு தானைச் சேரலாத! - போரினில் வரும் எதிரிகளை வெல்லும் படையினை உடைய சேரலாதனே!

மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும் - மார்பில் அணிந்திருக்கும் மாலைகள் கூட்டம் ஓடும் தேனுடன் விளங்கும்.

வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் - வலிமையில் உயர்ந்த, மலைகளைப் பழிக்கும் பெரிய யானைகளின்

பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த - பல அணிகலன்கள் அணிந்த முதுகின் மேல் கொண்டு பொலிந்த

நின் - உன்னுடைய

பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே - பலரும் புகழும் செல்வங்களை இனிமையுடன் கண்டோமே!

கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி - அழகிய மரத்தின் நிழலில் உறங்கும் கவரி மான்

பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் - பரந்து விளங்கும் அருவியையும் தேனையும் கனவில் காணும்

ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - ஆரியராகிய முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரிய புகழையுடைய இமயம் முதல்

தென் அம் குமரியொடு - தென்னாட்டின் அழகாகிய குமரி வரை

ஆயிடை - இடையில் உள்ள எல்லா இடங்களிலும்

மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே - மன்னர்களில் உயர்வாகக் கூறப்படுபவர்கள் எல்லோரிலும் பெருமை வாய்ந்தவனே!

***

'சூருடை முழுமுதல் தடிந்த' என்று கூறுகிறார் புலவர். மாமரம் என்று நேரடியாகக் கூறவில்லை. முழுமுதல் என்பதற்கு செல்வம், வீரம், உயிர் என்று பல பொருள் கூறலாம். ஆனால் பின்னால் இன்னொரு முறை முழுமுதல் என்று இந்தப் பாடலில் சொல்லும் போது அது 'காவல் மரம்' என்ற பொருளைத் தருகின்றது. அதனால் உரையாசிரியர்கள் இந்த இடத்திலும் 'மரம்' என்று பொருள் கொண்டு மாமரம் என்றனர் போலும். சூரனுடைய செல்வத்தை, வீரத்தை, உயிரை என்று எந்தப் பொருளைக் கூறினாலும் இந்த இடத்தில் பொருந்தும்.

சூரனை வதைக்கும் முன் யானை வாகனம் கொண்ட விறல் வேள் முருகவேள் சூரனை வதைத்தப் பின் மயில் வாகனம் கொண்டான் என்பது புராணம். அதற்கேற்ப இங்கே 'களிறு ஊர்ந்தாங்கு' என்றாரோ புலவர்? (வதைத்தார் என்றது பேச்சு வழக்கிற்காக. சூரனின் ஆணவத்தை மட்டுமே அழித்து அவனை மயிலும் சேவலுமாக ஏற்றுக் கொண்டார் என்பது புராணம்)

சங்ககாலத்தில் ஒவ்வொரு அரசனும் குறுநில மன்னனும் ஒரு மரத்தைப் புனிதமாகக் கொண்டு அதற்கு பலத்த காவல் இட்டுக் காத்து வந்தனர். அந்த மரத்திற்குக் காவல் மரம் என்று பெயர். ஒருவர் மேல் இன்னொருவர் படையெடுத்துப் போகும் போது அந்தக் காவல் மரத்தை அழித்து விட்டால் காவல் மரத்திற்கு உரியவர் தோற்றதாகக் கொண்டனர். அப்படி வெட்டப்பட்டக் காவல் மரத்தைக் கொண்டு முரசினை உருவாக்கி அதனை முழக்குதலும் வழக்கமாக இருந்திருக்கிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பகையரசரில் ஒருவன் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்திருக்கிறான். அந்த கடம்ப மரத்தை அழித்து அதனிலிருந்து முரசு உருவாக்கி முழங்கிய செயலை இங்கே புலவர் பாடுகிறார்.

சங்க கால அரசர்கள் புலவர்களுக்கு மதுவினை மிகுதியாகக் கொடுத்து தாமும் உண்டனர் என்ற செய்தியை 'நார் அரி நறவின்' என்ற தொடர் மூலமாகக் குறிக்கிறார் புலவர். நறவு என்றால் தேன் என்றும் பொருள் உண்டு. இங்கே நார் அரி - நாரினால் அரிந்த - நார் ஆடையினால் வடித்தெடுக்கப்பட்ட என்றதால் கள் போன்ற ஒரு வகை மதுவைக் குறிக்கிறது.

ஆரியர் என்பதற்கு முனிவர் என்று பொருள் தருகிறார்கள் உரையாசிரியர்கள். ஆரியர் என்பதற்கு ஆசிரியர் என்ற பொருளும் உரையாசிரியர்கள் காலத்தில் இருந்தது என்பதை அறிவேன். ஆனால் சங்க காலத்தில் இந்த 'ஆரியர்' என்ற சொல்லுக்கு நாம் இப்போது பொருள் கொள்ளும் 'ஆரிய இனத்தவர்' என்ற பொருளா இல்லை 'ஆசிரியர்' என்ற பொருளா எந்த பொருள் இருந்தது என்பதை அறியேன். இரண்டு பொருளும் இங்கே பொருந்தும். ஆரிய இனத்தவர் நெருக்கமாக நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்; இன்றைக்கும் முனிவர்கள் நிறைந்திருக்கும் இடமாதலின் முனிவர் நிறைந்திருக்கும் இமயம் என்றும் பொருள் கொள்ளலாம்.

இமயவரம்பன் என்ற பெயருக்கேற்ப 'இமயம் முதல் குமரி வரை' என்கிறார் புலவர்.

Friday, July 27, 2007

இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?

பிறவி எங்கிருந்து வந்தது ? இல்லாமையிலிருந்து தானே பிறவியும் அதன் கர்ம வினையான பிறவிகளும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன.

பிறவி இல்லாமை என்ற ஒரு நிலை இருந்தால் அது ஏன் முன்பு போலவே மீண்டும் பிறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

கேள்வி புரியவில்லையா ? முக்தியில் இருந்து தானே முதல் பிறவி ஏற்பட்டு இருக்க வேண்டும் ?

இல்லாதிலிருந்து பிறந்து இல்லாதது (முக்தி) அடைந்தால் மீண்டும் பிறவாமை என்பது சாத்தியமே இல்லை என்கிறீர்களா ?

நான் பலரையும் கேட்டுப் பார்த்தேன்...உதட்டை பிதுக்குகிறார்கள்.

எனக்கென்னமோ பிறவு அறுப்பது என்பது சாத்தியமே இல்லை ... அது ஒரு கோட்பாடு மட்டுமே எனத் தெரிகிறது...

***

இப்படி ஒரு கேள்வியைக் கோவி.கண்ணன் 'அபிராமி பட்டர்' பதிவில் கேட்டிருந்தார். இதற்குப் பதில் சொல்வதென்றால் நெடிய பின்னூட்டம் ஆகிவிடும் என்பதால் இடுகையாக இடுகிறேன்.

***

'தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடப்பா' என்று கந்த குரு கவசத்தில் ஒரு வரி வரும். இராமகிருஷ்ண பரமஹம்சரும் ஒரு முறை அவரிடம் வந்து உலகின் தோற்றத்தைப் பற்றிக் கேட்ட ஒரு பண்டிதரிடம் 'மரத்தின் பழத்தைப் பறித்துச் சுவைக்காமல் இந்த மரத்தில் எத்தனை இலைகள், எத்தனை காம்புகள், எத்தனை பிஞ்சுகள் என்று கணக்கெடுக்கும் வீண் வேலை எதற்கு?' என்று பதில் சொன்னார் என்றும் படித்திருக்கிறேன். ஆனாலும் தத்துவம் என்பது ஒரு போதை போல் தள்ளாட வைக்கிறது. புரிகிறதோ இல்லையோ படிக்கவும் பேசவும் எழுதவும் 'தத்துவம்' என்ற துறை ஒரு நல்ல ஊக்கத்தைத் தருகிறது. தத்துவத்தைப் பற்றி நீட்டி முழக்காமல் கோவி.கண்ணனின் கேள்விக்கு வேண்டிய அளவு மட்டும் பேசி முடிக்கலாம் என்று இருக்கிறேன். அதனால் புரிந்தும் புரியாமலும் இருப்பது போல் தோன்றலாம். பாற்கடலை நக்கிக் குடித்துத் தீர்க்க நினைத்தப் பூனையை நினைத்துக் கொள்ளவும் (இது கம்பனின் உவமை). அந்தப் பூனையே அடியேன்.

***

இல்லாமை என்ற ஒன்றை கோவி.கண்ணன் சொல்கிறார். முக்தி, மோக்ஷம், வீடுபேறு போன்றவை குறிக்கும் ஒரு நிலையை இங்கே இல்லாமை என்ற சொல்லால் சொல்கிறார். அந்த நிலை 'எதுவுமற்ற நிலை' என்பது பௌத்தமும் அத்வைதமும் சொல்லும் நிலை. மற்ற இந்தியத் தத்துவங்கள் அந்த நிலையை இல்லாமை என்று சொல்லவில்லை. கோவி.கண்ணனுக்கு பௌத்தத் தத்துவம் பிடிக்கும் என்று தெரியும்; அதனால் அவர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் என்று புரிந்து கொள்கிறேன்.

***

இந்தியத் தத்துவங்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு கோவி.கண்ணனின் கேள்விக்குப் பதில் தேடலாம். ஆனால் அவை நிறைய இருக்கின்றன. அதனால் பௌத்தம், அத்வைதம், சைவ சிந்தாந்தம், விசிஷ்டாத்வைதம் (தமிழக வைணவம்), த்வைதம் - இந்தத் தத்துவங்களை மட்டும் இங்கே எடுக்கிறேன் - எனக்கு இவற்றில் மட்டுமே கொஞ்சம் பழக்கம் உண்டு. சமணம், காஷ்மீரச் சைவம், லிங்காயதம் (வீர சைவம்), நிம்பார்க்கரின் வைணவம், துளசிதாசரின் வைணவம், சைதன்யரின் கௌட வைணவம் (அசிந்த்ய பேத-அபேதம்), பாஸ்கரம், சைவாத்வைதம், சார்வாகம் போன்ற பல தத்துவங்களைப் பற்றிப் பேசவில்லை.

***

பௌத்தம்:

முதலும் முடிவும் ஆன நிலை சூன்யம் - எதுவும் இல்லாதது - இல்லாமை. இங்கே நான், எனது, உலகம், இன்பம், துன்பம் என்று தோன்றி நிற்பவை எல்லாமே கணப்பொழுதில் தோன்றி மறைபவை. எதுவுமே உண்மையில்லை. இது பௌத்தத் தத்துவத்தின் சுருக்கம்.

இந்தத் தத்துவத்தின் படி - ஏற்படும் பிறவித்தொடரும் அந்தத் தொடரைத் பிணைத்து வைக்கும் வினைப்பயன்களும் இல்லாமையிலிருந்து ஏதோ ஒரு நொடியில் தோன்றியது. தோன்றிய காரணம் - தெரியாது; தெரிந்து கொள்ளவும் முடியாது. அந்த பிறவித் தொடரைப் பிணைக்கும் வினைப்பயன்களைத் தொலைத்தவுடன், பிணை அறுந்து, பிறவித் தொடர் முறிந்து இல்லாமையில் சேர்ந்துவிடுகிறோம். இது நிர்வாணம் என்றும் சொல்லப்படும்.

இதோடு பௌத்தம் நின்றுவிடுகிறது. இங்கே அடுத்த நிலையை எடுத்து, அப்படி இல்லாமையில் சேர்ந்த பின் மீண்டும் அந்த இல்லாமையிலிருந்து பிறவி ஏற்படலாம் அல்லவா என்ற கேள்வியைக் கேட்டால் இந்தத் தத்துவப்படி - ஆமாம் - என்பதே பதில்.

***

அத்வைதம்:

பெயர், உருவம், குணம் என்று ஒன்றுமே இல்லாத இறைச்சக்தி ஒன்று மட்டுமே உண்டு. இங்கே நான், எனது, உலகம், இன்பம், துன்பம் என்று தோன்றும் எல்லாமே அந்த இறைச்சக்தியே. வேறொன்றும் இல்லை. இரண்டாவதாக மற்றொன்று இல்லை என்றதால் இந்தத் தத்துவத்திற்கு அத்வைதம் - இரண்டில்லாதது என்று பெயர். உண்மையான அந்த இறைச்சக்தியைத் தவிர்த்து மற்றவை எல்லாம் பொய். பழுதையில் தோன்றும் பாம்பு போல், சிப்பியில் தோன்றும் வெள்ளியைப் போல், கானலில் தோன்றும் நீரைப் போல் இவை எல்லாம் இறைவனில் தோன்றும் பொய்த் தோற்றங்கள்.

இந்தப் பொய்த் தோற்றங்கள் ஏதோ ஒரு நொடியில் எழுந்தது - எழுந்த காரணம் தெரியாது; தெரிந்து கொள்ளவும் இயலாது. பொய்த் தோற்றங்கள் தோன்றியவுடன் பிறவியும் பிறவித்தொடரும் அந்தத் தொடரைப் பிணைக்கும் வினைப்பயன்களும் தோன்றின. உண்மையை உணர்ந்த ஞானத்தால் இந்தப் பொய்த் தோற்றங்கள் தொலையும்; அப்போது அந்த ஞானத்தீயில் கரும வினைப்பயன்கள் தூசாகும்; உண்மை நிலையான இறை நிலை தோன்றும்; அதற்கு ஜீவன் முக்தி, பிரம்ம நிர்வாணம் என்றும் பெயர்.

இங்கே இல்லாமை என்று சொல்லவில்லை. பௌத்தத்தில் 'ஒன்றுமே இல்லை' என்ற சூனிய வாதம் இருக்கும் போது இங்கே' இறைச்சக்தி ஒன்று உண்டு' என்ற ஏகத்துவ வாதம் இருக்கிறது. ஆனால் 'உருவம், பெயர், குணம் இல்லாமை' என்ற நிலையே இறை நிலை; அதுவே முக்தி என்று சொல்கிறது. அதனால் இங்கேயும் இல்லாமை பேசப்பட்டதாகச் சொல்லலாம்.

இந்த இல்லாமையை அடைந்த பின் மீண்டும் அந்த இல்லாமையிலிருந்து பிறவி தோன்றாமல் போகுமா? என்ற கேள்வி கேட்டால், இந்தத் தத்துவத்தில் அதற்கு விடை சொல்லவில்லை - பிறவி எப்படி தோன்றியது என்பதற்கு விடை இல்லாததால் 'ஆமாம்', 'இல்லை' என்ற பதில் சொல்ல முடியாது. உதட்டைப் பிதுக்கவேண்டியது தான்.

***

சைவ சிந்தாந்தம்:

பசு (உயிர்), பதி (இறைவன்), பாசம் (கருமவினை, உலகங்கள்) என்று மூன்றுமே உண்மை. பசுவும் பாசமும் பதிக்கு அடங்கியவை. பதியின்றிப் பசுவும் பாசமும் இருக்க இயலாது. பசு பதியுடன் சேர்ந்து இருக்கும் நிலை முக்தி. பசு பாசத்துடன் சேர்ந்து இருக்கும் நிலை பிறவிப் பெருங்கடல்.

பதியின் இச்சைப்படி பசு பாசத்துடன் இணைந்து பிறவி எடுத்தது. பதியை மறந்தது. கரும வினைப் பிணையினால் பிறவித் தொடர் ஏற்பட்டது. இறையருளால் அவனே குருவாக வந்து அருளும் போது பதியுடன் சேர்ந்து இருப்பதே பசுவின் இயற்கை என்று உணர்ந்த பசுவின் கருமவினைப்பயன்கள் பதியின் அருளால் கருகி பதியுடன் பசு சேர்கிறது.

இங்கே இல்லாமை என்ற நிலையே இல்லை. என்றும் உள்ளவன் ஈசன். அவனுடன் உயிர் சேர்ந்து இருப்பது மரணமிலாப் பெருநிலை. அந்த நிலையை அடைந்த பின் மீண்டும் பிறவி ஏற்படுமா என்றால் 'பதியின் இச்சைப்படி ஏற்படலாம்' என்பதே பதில்.

***

விசிஷ்டாத்வைதம்:

அறிவுள்ளது (உயிர்), அறிவில்லாதது (உலகம்), இறை என்று மூன்றுமே உண்மை. உயிரும் உலகமும் இறையின் உடலாக இருக்கின்றன. உயிர் இன்றி உடல் எப்படி இயங்க முடியாதோ அது போல் இறையின்றி உயிரும் உலகமும் இயங்காது. உயிருக்கு அடங்கியது உடல்; அது போல் இறைக்கு அடங்கியவை உயிரும் உலகமும். உயிரும் உலகமும் இறையிலே இருப்பதால் 'ஒன்றே உள்ளது' என்று சொல்லும் போது 'உயிரையும் உலகையும் உடலாகக் - விசிஷ்டமாகக் - கொண்ட இறை ஒன்றே உள்ளது' என்று பொருள். அதனால் இதற்கு 'விசிஷ்ட அத்வைதம்' என்று பெயர். உண்மைப் பொருள் ஒன்று என்றாலும் சரியே; மூன்று என்றாலும் சரியே.

இறையின் இச்சைப்படி உயிரும் உலகமும் இணைந்தது. பிறவியும் வினைப்பயன்களும் பிறவித் தொடரும் ஏற்பட்டது. இறையருளால் இறைவனுக்கு அடங்கி இருப்பதே தன் இயற்கை நிலை என்று உயிர் உணர்ந்து அவனை அன்புடன் தொழும் போது அவன் அருளால் பிறவித் தொடர் நீங்கி அவனுடன் இணைகிறது. இணைகிறது என்றால் உப்பு கடலுள் கரைந்து காணாமல் போவது போல் இல்லை. தனி உயிராக அந்த நிலையிலும் இறைவனுடன் இணைந்து இருக்கிறது (சைவ சிந்தாந்தத்திலும் அப்படியே).

இங்கேயும் இல்லாமை என்ற நிலையே இல்லை. இறைவனுடன் உயிர் இணைந்து நிற்பதே முக்தி. அந்நிலையை அடைந்த பின் பிறவி ஏற்படுமா என்றால் 'இறைவனின் திருவுள்ளத்தின் படி ஏற்படலாம்' என்பதே பதில்.

***

த்வைதம்:

அறிவுள்ளது, அறிவில்லாதது, இறைவன் என்ற மூன்றுமே உண்மை. அறிவுள்ளவைகளிலேயே பல வகை உண்டு. அறிவில்லாதவைகளிலேயே பல வகை உண்டு. இறைவன் ஒருவனே. இவற்றில் எந்த இரண்டை எடுத்துக் கொண்டாலும் அவை நடுவே பல வேறுபாடுகளைக் காணலாம். இறைவனுக்கும் உயிருக்கும் வேறுபாடுகள் உண்டு; இறைவன் - உலகம், உலகம் - உயிர், ஒரு உயிர் - மற்றொரு உயிர், ஒரு அறிவில்லாத பொருள் - மற்றொரு அறிவில்லாத பொருள் - இப்படி எந்த இரட்டையை எடுத்தாலும் அவை நடுவே வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகளைப் பேசுவதால் இந்தத் தத்துவத்திற்கு த்வைதம் - இரண்டைப் பேசுவது என்று பெயர்.

இறைவன் மேலானவன். எல்லாவற்றையும் உடையவன். எல்லாமே அவனுக்கு உடைமை; அவனுக்கு அடங்கியவை. என்றுமே அவை இறைவனுடன் கூடி நிற்க முடியாது. அவனுடைய இச்சைப்படி எல்லாம் நிகழ்கிறது. அவனுடைய இச்சைப்படி உயிரின் பிறப்பு, வினைப்பயன், பிறவித்தொடர் தோன்றுகின்றன. அவனின் இச்சைப்படி அவனிடம் பக்தி ஏற்படுகிறது. அவனுடைய இச்சைப்படி அந்தப் பக்தியின் பயனாக பிறவித்தொடர் அறுகிறது.

இங்கும் இல்லாமை இல்லை. அப்படி அறுந்த பிறவித்தொடர் மீண்டும் தோன்றுமா என்ற கேள்வி எழுந்தால் 'அவனுடைய இச்சை அதுவானால் தோன்றும்' என்பதே விடை.

***

பிறவி எப்படி முதலில் வந்தது, வினைப்பயன் எப்படி முதலில் வந்தது என்ற கேள்வியை நம் தத்துவங்கள் ஆராயவில்லை. பிறவியை எப்படி அறுப்பது, வினைப்பயனை எப்படி நீக்குவது, வினைப்பயனில் எத்தனை வகை, முக்தி நிலை என்றால் என்ன, போன்றவைகளையே அவை அதிகம் பேசுகின்றன. அதனால் கோவி.கண்ணன் கேட்டது போல் ஒரு கேள்வி எழும் போது முதலில் உதட்டைப் பிதுக்குவதே பதிலாக அமைகிறது. நானும் அதனையே செய்தேன். செய்யும் போதே தோன்றிய பதிலை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்தத் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவன் இல்லை அடியேன். அரைகுறை அறிவு அபாயம் என்பார்கள். என் அரைகுறை அறிவு இந்த இடுகையில் நன்கு தென்படும். குறை பொறுத்தருளுங்கள்.

Monday, July 23, 2007

மதுரையில் திருக்குறள் கிடைக்கவில்லை


நேற்று சன் தொலைக்காட்சியில் இந்தச் செய்தியைக் கேட்ட போது நம்பமுடியவில்லை. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையிலா இந்த நிலைமை? ஆனால் தொலைக்காட்சியில் சொன்னதைப் பார்த்தால் உண்மை என்று தான் தோன்றியது.

இரவு 8 மணி 'செய்திகளின்' நடுவில் 'திருப்பம்' என்றொரு பகுதியைக் காட்டுகிறார்கள். நேற்று வள்ளல் பாண்டித்துரை தேவர் அவர்கள் எந்தக் காரணத்தால் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார் என்று காட்டினார்கள். ஒரு முறை மதுரையில் பாண்டித்துரை தேவர் ஏதோ ஒரு இடத்தில் சொற்பொழிவு ஒன்று ஆற்ற வேண்டியிருந்தது. சொற்பொழிவிற்குக் குறிப்புகள் வேண்டி திருக்குறள் நூலையும் கம்பராமாயண நூலையும் நண்பர்களிடம் கேட்டார். மதுரை முழுவதும் தேடியும் அவ்விரண்டு நூற்களும் கிடைக்கவில்லை. அது பாண்டித்துரை அவர்களுக்கு மிக்க மன வருத்தத்தைக் கொடுத்தது. தமிழ் இலக்கியங்களில் மிக மிக முக்கியமான இந்த இரு நூற்களுமே கிடைக்கவில்லை என்றால் மற்ற இலக்கியங்கள் விரைவில் அழிந்துபட்டுப் போகுமே என்று மனம் வருந்தி தன்னுடைய மதுரை மாளிகையை நான்காம் தமிழ்ச்சங்கமாக மாற்றினார்.

அந்தத் தமிழ் சங்கத்தின் மூலம் பல தமிழ் இலக்கியங்களை அச்சேற்றினார். பல தமிழ்த் தொண்டுகளை அந்த நான்காம் தமிழ்ச்சங்கம் செய்தது.

இந்த நான்காம் தமிழ் சங்கம் இன்னும் இருக்கிறதா? எங்கே இருக்கிறது? இன்னும் இருக்கிறதென்றால் சங்கம் வைத்துத் தமிழ் 'வளர்த்த' மதுரை என்றே இன்னும் சொல்ல வேண்டுமா? சங்கம் வைத்துத் தமிழ் 'வளர்க்கும்' மதுரை என்னலாகாதா? :-)

Friday, July 20, 2007

கடம்பம் 5 : பதிற்றுப்பத்தில் கடம்பம்

சங்க கால இலக்கியங்கள் அகத்துறை இலக்கியங்கள் அல்லது புறத்துறை இலக்கியங்களாக இருக்கின்றன. காதல், அன்பு போன்ற உள்ள உணர்வுகளைப் பேசும் பகுதிகளை அகத்துறை என்றும் வீரம், கொடை போன்ற வெளியே தெரியும் குணங்களைப் பேசும் பகுதிகளை புறத்துறை என்றும் வகுத்திருக்கிறார்கள். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூற்களுள் சிலவற்றைத் தொகுத்து எட்டுத்தொகை என்ற நூற்றொகுதியை அமைத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில். அந்த எட்டுத்தொகை நூற்களுள் பதிற்றுப் பத்தும், புறநானூறும் புறத்துறையைப் பற்றிய பாடல்கள் கொண்டவை. பதிற்றுப் பத்து சேர மன்னர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பு. இது பத்து பத்து அகவற்பாக்களால் ஆன பத்து பகுதிகளைக் கொண்ட நூல் - அதனால் பத்து பத்து என்று பொருள் படும் பதிற்றுப்பத்து என்ற பெயர். நூலை தொகுத்தது யார்; தொகுப்பித்தது யார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

சங்க காலப் பாடல்களையும் சங்கம் மருவிய காலப் பாடல்களையும் உரையின் துணையின்றிப் புரிந்து கொள்வது கடினம். புரிந்து கொள்ள முயன்றேன். தவறான பொருள் சொல்லும் வாய்ப்பு நிறைய இருப்பதால் பாடல்களின் பொருளைச் சொல்லாமல் 'கடம்பு' தோன்றும் பாடல்களை அப்படியே இங்கே தருகிறேன். நம் நல்வினைப்பயனால் உரை கிட்டி நாம் இந்தப் பாடல்களின் பொருளினைப் புரிந்து கொள்ள வழி ஏற்படட்டும்.

இரண்டாம் பத்து:

பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

வரை மருள் புணர் வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே

வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிற மான்
தோடு கொள் இனை நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேட்டொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி
வாடாப் பைம் மயிர் இளைய ஆடு நடை
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஒப்பும்
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை
மை ஊன் பெய்த வெண்னெல் வெண்சோறு
நமை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே!

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய மாக் கடல் நீக்கி
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ்ஞிலம் வருக இந்நிழல் என
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின்
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடுங் கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப பாடினி வேந்தே!

நும் கோ யார் என வினவின் எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ
விரிஉளை மாவும் களிறும் தேரும்
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி
கடி மிளை குண்டு கிடங்கின்
நெடு மதில் நிலை ஞாயில்
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்
வயிறு பசி கூர ஈயலன்
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே!

Thursday, July 19, 2007

ஈசன் உவக்கும் இன்மலர்கள்

அருள்திரு. விபுலானந்த அடிகளாரைப் பற்றிய இனிய இடுகை ஒன்றை கானா பிரபா இட்டிருக்கிறார். அடிகளாரின் கட்டுரைகள் சிலவற்றை இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் படித்த நினைவு இருக்கிறது. அவரைப் பற்றி மேலும் அறிய கானா பிரபாவின் இடுகை மிக்கத் துணை செய்தது.

அந்த இடுகையின் தொடக்கத்தில் அடிகளாரின் பாடல்கள் மூன்றை கொடுத்திருந்தார். அவை சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் அருமையாக இருந்தன. அடியேன் பெற்ற இன்பம் நண்பர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்கே இடுகிறேன்.

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?
உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?
மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.


பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?
பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.

Wednesday, July 18, 2007

பூந்தியா லட்டா? தமிழா வடமொழியா?


நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு ஞானவெட்டியான் ஐயா அவர்களின் இடுகையொன்று தமிழ்மணத்தில் தெரிந்தது. ஆவலுடன் திறந்து பார்த்தால் அருமையான கருத்தொன்றைச் சொல்லியிருந்தார். மார்ச்சு மாதத்தில் எழுதிய அந்த இடுகையை அப்போதும் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்; ஆனால் அதனை மீண்டும் இப்போது படிக்கும் போது மனத்தில் பல எண்ணங்கள் ஓடின. ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கும் கட்டாயப்படுத்துவதற்கும் மொழியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முதற்கொண்டு பல எண்ணங்கள். என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது இந்த இடுகையின் நோக்கம் இல்லை. நண்பர்கள் எல்லோரையும் ஐயாவின் இடுகையைப் படித்துப் பார்க்கும் படி வேண்டிக்கொள்வதே நோக்கம்.

Friday, July 13, 2007

மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்


சிவபெருமான் சிவப்பா வெளுப்பா? சிவந்தவன் என்ற பொருளில் தான் சிவன் என்று பெயர் வந்தது என்று சொல்லுவார்கள். ஆனால் அவன் நிறத்தை வெள்ளை என்பாரும் உளர். நம் இராகவன் பாரதியாரின் ஆத்திச்சூடியில் வரும் கடவுள் வணக்கத்தை அவருடைய பதிவில் இட்டிருக்கிறார். அந்தக் கடவுள் வணக்கத்தில் விரிசடைக்கடவுளை முதலில் சொல்லும் போது 'மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்' என்கிறார். தென்னகத்தில் சிவபெருமானின் நிறம் சிவப்பு என்பார்கள்; வடக்கில் தான் அவருக்கு நிறம் வெண்மை. அதுவும் வெண்பளிங்கில் அவருடைய திருவுருவம் பல திருக்கோவில்களில் இருக்கும். பாரதியார் இங்கே முழுவெண்மேனியான் என்பதைப் பார்த்தால் இந்தப் பாடலை காசியில் அவர் வாழ்ந்தபோது எழுதியிருக்கவேண்டும் அல்லது காசியில் பார்த்ததின் தாக்கம் தமிழகம் வந்த பிறகும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒரு முறை வாரியார் சுவாமிகளிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நம்மவர் பெருமானின் நிறம் சிவப்பு என்னும் போது வடவர் அது வெளுப்பு என்கிறார்களே என்று. அதற்கு அடிகள் சொன்ன பதில்: நாம் நெருப்பின் உருவைக் காண்கிறோம்; அவர்கள் நீறு பூத்த நெருப்பாகக் காண்கிறார்கள். எப்படி? நல்ல விளக்கம் தானே?! :-) அவர்கள் வெளியிலேயே நின்று விட்டார்கள்; நாம் கொஞ்சம் ஊதி உள் நுழைந்து பார்த்திருக்கிறோம். :-)

நீறு பூத்த நெருப்பு என்பதிலும் ஒரு அழகு இருக்கிறது பாருங்கள். நீறு பூத்த நெருப்பு என்பது நேரடிப் பொருள்; திருநீறு பூசிய சிவந்த திருமேனி என்பது இன்னொரு பொருள்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

இன்று நல்ல நாளா கெட்ட நாளா?

என்ன எனக்கு திடீரென்று இந்த ஐயம் என்று பார்க்கிறீர்களா? காரணம் இருக்கிறது. நடப்பவைகளைப் பார்த்தாலும் அப்படித் தான் தோன்றுகிறது. 13ம் எண்ணைப் பார்த்தாலே பயப்படுபவர் இருக்கிறார்கள் இங்கே (மேற்குலகில்). அதுவும் 13ம் நாள் வெள்ளிக்கிழமையாக வந்துவிட்டால் இன்னும் அதிகம் பயப்படுகிறார்கள். சென்ற வாரத்திலிருந்து நிறைய பேர் பேசிவிட்டார்கள் அதனைப் பற்றி. இன்று ஜூலை 13 வெள்ளிக்கிழமையில் வந்திருக்கிறதே. அதனைப் பற்றித் தான் கேட்டேன். இன்று நல்ல நாளா கெட்ட நாளா?

இதன் வரலாற்றைத் தேடிய போது விக்கிபீடியா பதில் சொன்னது. நாம் புனித வெள்ளி என்று போற்றும் நாள் தான் இதன் தொடக்கம் என்கிறது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது வெள்ளிக்கிழமை; அவரும் அவருடைய சீடர்களும் சேர்ந்து 13 பேர் கடைசி உணவு அருந்தினார்கள். அதனால் இந்த இரண்டும் இணைந்தது கெட்ட சகுனம் என்ற நம்பிக்கை தோன்றியது.

மேலும் அறிந்து கொள்ள இங்கேயும் இங்கேயும் பாருங்கள்.

Thursday, July 12, 2007

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!


சிந்தாநதி அவர்கள் மனோன்மணீயம் காவியத்தில் திரு.சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பகுதியைத் தன் பதிவில் இட்டிருந்தார். அந்தப் பகுதியிருலிருந்து எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்றையும் கொடுத்திருந்தார். அந்தப் பகுதிக்குப் பொருள் உரைத்தால் நலமாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த சிறு முயற்சி.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டம் இதில்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே

நீர் ஆர்ப்பரிக்கும் கடலினை ஆடையாக உடுத்தியிருக்கும் நிலமடந்தைக்கு அழகு கொஞ்சும் பெருமைகள் எல்லால் ஆர்ப்பரிக்கும் வதனம் (முகம்) எனத் திகழ்கிறது பரத கண்டமாகிய இந்தியா. இதில் தக்காணம் (தென்னிந்தியா) அந்த முகத்தில் இருக்கும் அதன் அழகுற்கு ஏற்ற பிறை போல் வளைந்த நெற்றி. திராவிட நல் திருநாடு அந்த நெற்றியில் தரித்திருக்கும் நறுமணம் கமழும் பொட்டு (திலகம்). அந்த கஸ்தூரித் திலக வாசனை போல் அனைத்து உலகத்தாரும் இன்பம் அடைய எல்லாத் திசையும் புகழ் மணக்க என்றும் இருந்த, இருக்கும், இருக்கப் போகும் தமிழ்ப்பெண்ணே.

இந்தப் பகுதியில் உவமையணி நன்கு அமைந்திருக்கிறது.

உலகம் - கடலாடை சூட்டியிருக்கும் நிலமடந்தை
பரத கண்டம் - அந்த நிலமடந்தையின் வதனம்
தக்காணம் - அந்த வதனத்தில் இருக்கும் நெற்றி
திராவிட நாடு - அந்த நெற்றியில் சூட்டிய திலகம்
தமிழ் - அந்தத் திலகத்தின் நறுமணம்.

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும் அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சியாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்

இங்கும் உவமை அணி நன்கு அமைகிறது. எல்லா உயிர்களையும் உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் இறை எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது - அது போல் பல மொழிகளைத் தன்னுள் இருந்து படைத்தும் தமிழ் எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது. மற்ற மொழிகளைப் போல் அழிந்தொழியவில்லை.

கடல்குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே

கடலினைக் குடித்த குடமுனியாம் அகத்தியர் உன்னைப் படித்து உன் கரையைக் காண குருவினை நாடி உனக்கு வானத்தைத் தொடும் கடலை உவமையாகச் சொல்லுவது உனக்குப் புகழாகுமா? உன் புகழ் பெரும்புகழ். உப்புக்கடலைக் குடிக்கலாம்; ஆனால் தமிழ்க்கடலைக் குடிக்க முடியாது. அது வான் வரை உள்ளது என்கிறார்.

ஒரு பிழைக்கா அரனார் முன் உரை இழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

ஒரு சிறு பொருட்பிழைக்காக முன்பொரு நாள் சிவபெருமான் என்ன சொல்வது என்று தெரியாமல் நெற்றிக்கண்ணை விழிப்பார் என்றால் இறையான சிவனுக்கே அறிய அரியது உனது இலக்கணம் என்று சொல்லுவதும் அற்புதமா?

விழிப்பார் என்று உலக வழக்கில் இருக்கும் ஒரு சொல்லை சிலேடையாக இங்கே சொல்லியிருக்கிறார்; நெற்றிக்கண்ணை விழித்ததைக் குறிப்பால் உணர்த்தி.

சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே

என்றுமுள்ளன வேதங்கள் என்று சொல்கிறார்கள். அந்த நான்கு மறைகளை உடைய ஆரியம் தோன்றும் முன் உலகம் முழுதிலும் நீ இருந்தாய் என்றால் உன்னை முதுமொழி என்றும் அநாதி என்றும் சொல்லுவதும் வியப்போ?

வேகவதிக்கு எதிர் ஏற விட்டது ஒரு சிற்றேடு
காலநதி நினைக் கரவா காரணத்தின் அறிகுறியே

வேகவதியாம் வைகையில் வேற்று மொழியில் எழுதிய நூல்களையும் தமிழ்ப்பா எழுதிய ஒரு சிற்றேட்டையும் விட்ட போது நதியின் வேகத்திற்கு எதிராக கரை ஏறியது என்றால் அது காலம் எனும் நதி உன்னை மறைக்காமல் (காலவெள்ளத்தில் அழிக்காமல்) விட்ட காரணத்தின் ஒரு அறிகுறியே.

கடையூழி வரும் தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே

உலகங்கள் எல்லாம் அழிந்து யாருமே இல்லாத போது இறைவன் மட்டுமே தனிமையாக இருப்பான். அந்தத் தனிமையின் துணையாக இருக்க வேண்டியே திருச்சிற்றம்பலம் உடையாரான சிவபெருமான் உன் வாசகமாம் திருவாசகத்தில் ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்.

தக்க வழி விரிந்து இலகும் சங்கத்தார் சிறுபலகை
மிக்க நலம் சிறந்த உன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே

தக்க நூற்களுக்கு மட்டும் வழி தந்து விரிந்தும் சுருங்கியும் இருக்கும் மதுரைத் தமிழ்ச்சங்கப் பலகை மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம்.

வியஞ்சனம் - குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்

வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.

கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.

வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்

பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.

கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்

கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?

பத்துபாட்டு ஆதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம் இல் கற்பனையே

பத்துபாட்டு முதலிய நூற்களில் மனம் பற்றியவர்கள் எந்த வகையிலும் பொருள் இல்லாத இலக்கணம் இல்லாத கற்பனைகளைக் கூறும் நூற்களில் மனம் வைப்பார்களோ?

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி.

திருவள்ளுவர் செய்த திருக்குறளை குற்றம் இல்லாமல் நன்கு படித்து உணர்ந்து கொண்டவர்கள் மநு முதலிய ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் நூற்களை மனத்தில் கொள்ளுவார்களோ?

மனம் கரைத்து மலம் கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென்று உருவேற்றிக் கண் மூடிக் கதறுவரோ

மனத்தைக் கரைத்து நம் குற்றங்களை எல்லாம் நீக்கும் திருவாசகத்தில் ஆழ்ந்தவர்கள் கனபாடம் என்று சொல்லி வேதங்களையும் மந்திரங்களையும் உருவேற்றி கண் மூடிக் கதறுவார்களா?

கடம்பம் 4: அன்பே இலாதவர் செய்யும் கொடிய அவமதிப்பால்...

அன்பில்லாதவருடன் பழக வேண்டி வந்தால் எத்தனை துன்பம்? அன்பே இல்லாதவர் என்றால்? அவர் செய்யும் அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால்? அது பெருந்துன்பமே!

மதுரை நகராம் கடம்ப வனத்தில் வாழும் கடம்பவனவல்லி மீனாட்சி அம்மையைப் போற்றும் கடம்பவனவல்லி பதிகத்தில் வரும் பாடல்களில் ஒன்று இப்படி தொடங்குகின்றது.

அன்பே இலாதவர் செய்யும் கொடிய அவமதிப்பால்
துன்பே அடையும் மனத்தேனை ஆளத் தொடங்குவையோ
இன்பே செறி மதுராபுரி அன்பர் இதயமுற்றோய்
வன்பே சமை மணித்தீவக கடம்பவனவல்லியே (9ம் பாடல்)

அன்பு சிறிது கூட இல்லாதவர்கள் செய்யும் கொடிய அவமதிப்பால் துன்பங்களே அடையும் மனத்தை உடைய அடியேனை ஆளத் துவங்குவாயா? இன்பமே நிறைந்து நிற்கும் மதுரை வாழ் உன் அன்பராம் சொக்கரின் இதயத்தில் நின்றாய்! கடிய இதயமுள்ள மாணிக்க சிலையே! கடம்ப வன வல்லியே!

காணிக்கை வைத்து அமரேசர் வணங்கும் நின் கான்மலரை
பேணித் தொழுது நினைக்கவருள்செய் பெரியம்மையே
ஆணிப்பொன் வில்லி தனக்கு அமிழ்தே அகிலாண்டம் பெற்ற
மாணிக்கமே மணித்தீவக கடம்பவனவல்லியே (10ம் பாடல்)

காணிக்கை வைத்து தேவர் தலைவன் வணங்கும் உன் கால் மலரை என்றும் பற்றிப் பேணித் தொழுது நான் நினைக்க அருள் செய்வாய் பெரியம்மையே! ஆணிப்பொன்னால் செய்த வில்லையுடைய சொக்கர் தனக்கு அமிழ்தே! அகிலமெல்லாம் பெற்ற மாணிக்கமே! மாணிக்கத் திருமேனி கொண்டவளே! கடம்பவனவல்லியே!

கடம்பவனவல்லி பதிகத்தின் மற்ற பாடல்களை இந்தச் வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

***

பிரமனும் இந்திரனும் மாலும் அறியா அரசன் கல்லால் அடியில் அமர்ந்திருக்கிறான். அவனைப் போற்றிப் பாடுகிறது திருக்காளத்தி இட்டகாமிய மாலை காப்பு.தமரக் கடலைக் கடைந்த முகுந்தன் தனக்கும் மெய்க்கே
பமரக் கண்ணாயிரத்தாற்கும் எட்டாது பனிக்கதிர்வேல்
குமரக் கடம்பன் முன் அத்தியை ஈன்ற கொடியையும் கொண்டு
அமரர்க்கு அரசொரு கல்லால் அடியில் அமர்ந்ததுவே


பாற்கடலைக் கடைந்த முகுந்தன் தனக்கும், உடலெல்லாம் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திரனுக்கும் எட்டாமல், பனிக்கதிர் வேலையுடைய குமரக் கடம்பனையும் அவனுக்கு அண்ணனாம் யானைமுகனையும் ஈன்ற கொடி போன்ற அன்னையையும் கொண்டு, தேவர்களுக்கெல்லாம் அரசனான ஒருவன் கல்லால் அடியில் அமர்ந்தான்.

மாரக் கடம்பனைப் பெற்ற கண்ணா உனை வாழ்த்தும் என் மேல்
கோரப் பிணி கெடப் பார்த்தருள்வாய் நின் சொல் குற்றமென்ற
கீரற்கு நின் சொரூபம் காட்ட வேண்டிக் கிளைத்தெழுந்த
ஈரச் சடாமுடியாய் திருக்காளத்தி ஈச்சுரனே


மன்மதனைப் போன்ற கந்தக் கடம்பனை பெற்ற முக்கண்ணா! உன்னை வாழ்த்தும் என் மேல் கோரமான பிணிகள் எல்லாம் நீங்க கண் பார்த்து அருள்வாய். நின் பாடலைக் குற்றமென்று சொன்ன நக்கீரருக்கு உன் திருவுருவைக் காட்டவேண்டி கிளைத்து எழுந்த ஈரச் சடைமுடியாய்! திருக்காளத்தி ஈஸ்வரனே!

***

மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில் ...

Wednesday, July 11, 2007

அடியேன் சிறிய ஞானத்தன்

ஜெய்க்குமார் என்றொரு அன்பர் என் பதிவில் என்னைப் பற்றி இருக்கும் 'அடியேன் சிறிய ஞானத்தன்...' என்ற குறிப்பைக் கண்டு அதன் பொருள் கேட்டு நவம்பர் மாதத்தில் மின்னஞ்சல் எழுதியிருந்தார். கூடிய விரைவில் பொருள் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்புறம் வேலைப்பளுவில் அதனைச் செய்ய இயலவில்லை. மீண்டும் இன்று அவரிடமிருந்து பொருள் கேட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதனால் அவருடைய பொறுமைக்கு நன்றி கூறி, பொருளுடன் இந்த இடுகை.
இவை நம்மாழ்வார் பாசுர வரிகள்.

அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் யார்க்கும் அரியானை
கடிசேர் தண்ணந்துழாய்க்கண்ணி
புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை அடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே

அடியேனோ அறிவு சிறிதும் இல்லாதவன். குறை அறிவு கொண்டவன். அறிவு மயக்கம் கொண்டவன். அப்படி இருக்க பிரமன் முதலான தேவர்களுக்கும் யாருக்கும் அறிவதற்கு அரியவனை, மிகுந்த மணம் கொண்ட குளிர்ச்சியான துளசிமாலை அணிந்தவனை, கண்ணனை, குற்றம் குறை கொண்ட உடம்பு தன் அடியாரை மீண்டும் அடையா வண்ணம் எல்லா வினைகளையும் தீர்க்கும் திருமாலை, அடியவன் காண்பதற்கு புலம்பிக்கொண்டிருக்கிறேன். இதனை விட அயர்வு தரும் வேறொன்றுண்டோ?

இந்த பாசுரம் அடிக்கடி மனத்தில் ஓடும் பாசுரம். அதில் இருந்து முதல் அடியையும் கடைசி அடியையும் தான் அடியேனைப் பற்றி என்றிருக்கும் குறிப்பில் இட்டிருக்கிறேன்.

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!!!


பாரதி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களும் வடமொழி இலக்கியங்களும் இந்தக் கால எண்ணச்சூழலுக்கு ஏற்ப விமரிசனத்திற்கு உள்ளாகும் போது சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும் கருத்துகளும் விமரிசனத்திற்கு உள்ளாவதில் எந்த தவறும் இல்லை. பாரதி மேல் குறை காண்போர் அவன் பிறந்த சாதியை வைத்தோ, அவன் வாழ்க்கை முழுவதும் (அவன் கவிதைகளிலும் தெரியும்) தான் முன்பு சொன்னதையே பிற்காலத்தில் மறுக்கும் முரண்பாடுகளையோ, முன்னுக்குப் பின் முரண்பாடாகத் தெரியும் சொற்களையோ கவிதை வரிகளையோ வைத்துப் பேசலாம். அதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அவன் பொதுச் சொத்து. அவன் கவிதைகளும் கட்டுரைகளும் கருத்துகளும் பொதுச் சொத்து. அவனைப் பற்றியோ அவன் கருத்துகளைப் பற்றியோ வைக்கப்படும் வாதங்களில் சரி தவறு என்பது அவரவர் கருத்து நிலைப்பாட்டைக் கொண்டதே தவிர மற்றில்லை. ஒரு நல்ல இலக்கியம் என்றால் அதற்கு பல்வகைப்பட்ட விளக்கங்கள் வரவேண்டும் என்றே சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள் - அந்த விளக்கங்களில் சில ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகக் கூட இருக்கலாம். அது அந்த இலக்கியத்தைப் படித்தவர்களின் புரிதல். அந்தவகையில் அது சரியே.

அண்ணன் கோவி.கண்ணன் பாரதியின் வரிகளில் இரண்டினை எடுத்துக் கொண்டு அவற்றில் முன்னுக்குப் பின் முரணான செய்தியைக் காண்கிறார். கீதையைப் போற்றும் எல்லோருக்கும் எந்த வகையான எண்ணம் இருக்கும் என்று ஒரு வரையறையைக் கூறி அதனை மெய்ப்பிப்பதாக பாரதியின் வரிகளைக் காண்கிறார். அது சரி தவறு என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை. அது தேவையும் இல்லை. அது அவர் கருத்து.

அந்த இடுகையில் இரு நண்பர்கள் கேட்ட கேள்விக்கு இங்கே நான் சொல்வது விடையாக அமைகிறதா என்று பார்க்கலாம்.

சிபி சொன்னது 'குலம் இருந்தால் தானே தாழ்த்தி உயர்த்திச் சொல்ல முடியும். குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க'.

சிவபாலன் கேட்டது: 'இங்கே கேள்வி என்னவென்றால் சாதி இல்லை. குலம் உண்டா ? என்பது தான். ஒவ்வொருவரும் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கேள்விக்கு பதில் வரவில்லை என்பதே என் எண்ணம். பாரதியும் மனிதன் தான். அவர் படித்த கீதையின் தாக்கம் இருந்திருக்கலாம். இதை சரியான ஆதாரத்துடன் மறுக்கும் கருத்தை யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்.'

இந்த இருவருக்காகவும் இதில் ஆர்வமுடைய மற்றவர்களுக்காகவும் இந்த இடுகையை இடுகிறேன்.

'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'

என்றான் பாரதி. இதற்கு நான் சொல்லும் பொருள் 'சாதிகள் இல்லையடி பாப்பா. அதனால் இல்லாத சாதி/குல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு குலத்தாழ்ச்சியோ குல உயர்ச்சியோ சொல்வது பாவம்'. இப்படி பொருள் கொண்டால் அவன் சாதி இல்லை; ஆனால் குலம் உண்டு என்று முரண்பட்டதாகச் சொல்ல இயலாது. பலரும் படிக்கும் போது இப்படித் தான் பொருள் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

கீதையின் தாக்கத்தைப் பற்றிய என் கருத்து: திருக்குறளைப் போற்றுவோர் எல்லோரும் ஒவ்வொரு குறட்பாவினையும் ஏற்றுக் கொள்பவர் என்பது சரியான கருத்தென்றால் கீதையில் இருக்கும் ஒவ்வொரு வரியினையும் ஏற்றுக் கொள்பவராகத் தான் கீதையினைப் போற்றுபவர் இருக்க முடியும் என்ற கருத்தும் சரி. திருக்குறளைப் போற்றுபவர்களில் பலர் மனப்பாடச் செய்யுளில் வந்த குறட்பாக்களை மட்டுமே படித்தவர்கள் (என்னை உட்பட); சிலர் எல்லா குறட்பாக்களையும் படித்தவர் - ஆனால் சில குறட்பாக்களை அந்தக் கால எண்ணச் சூழலில் அது சரி இப்போதில்லை என்று அந்தக் குறட்பாவினை கண்டு கொள்ளாதவர்கள். அப்படியே தான் கீதையைப் போற்றுபவர்களும் - பலர் கீதையைப் படித்ததில்லை; சிலர் படித்து சில கருத்துகளை மறுத்தவர்கள். பாரதி இரண்டாம் வகை - அதனை அவனின் கீதையின் முன்னுரையிலும் பற்பல கவிதைகளிலும் காணலாம். காண மறுப்பது அவரவர் உரிமை.


Monday, July 09, 2007

கடம்பம் - 3

கொற்றவை சிறுவனாம் குமரன் மட்டுமே கடம்பன் இல்லை - கொற்றவை அம்மையும் கடம்பாடவியில் (கடம்பங்காட்டில்) விரும்பி உறைபவள்; கடம்பம்பூ மாலையை விரும்பி அணிபவள். அம்மையைப் போற்றிப் பாடும் பாடல்களிலேயே ஒரு உன்னத இடத்தைப் பெற்றிருக்கும் அபிராமி அந்தாதியில் கடம்பம் வரும் இடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பாடல் 26

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

அன்னையே. உன்னைப் போற்றிப் பணிபவர்கள் பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் முத்தொழில் புரியும் முப்பெரும்தேவர்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட, மணம் கமழும் கடம்ப மலரை குழலில் அணிந்திருக்கும் தெய்வப்பெண்ணே! நறுமணம் கமழும் உன் திருவடி இணைகளுக்கு என் நாவில் நீங்காது நிற்கும் புன்மொழிகள் புகழ்மொழிகளாக (கடம்ப மலர்களுக்கு இணையாக) அமைந்தது பெரும் வியப்பாக இருக்கிறது. (உன் எளிமையே எளிமை).

***

பாடல் 70

கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.

கடம்ப வனமாம் மதுரையில் பல பாடல்களைப் பாடிக் களிக்கும் வீணை போன்ற குரலையும், அழகிய திருக்கைகளையும், திருமார்பினையும், மண்ணில் வளத்தைக் காட்டி நிற்கும் பச்சை வண்ணத்தைப் போல் வண்ணம் கொண்ட திருமேனையையும் கொண்டு மதங்கர் குலப் பெண்களில் ஒருவளாகத் தோன்றிய எம் தலைவியின் பேரழகை என் கண் களிக்கும் படி கண்டு கொண்டேன்.

***

பாடல் 73

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றொடு இரண்டு நயனங்களே

அன்னையே! உன் மாலை கடம்பமாலை. உன்னுடைய படைகள் ஐந்து மலர்க்கணைகள். உன்னுடைய வில் கரும்பு வில். உன்னைத் தொழும் பொழுது வயிரவர்கள் தொழும் நள்ளிரவு. எமக்கு என்று இந்த உலகத்தில் இருக்கும் ஒரே பற்றுக்கோடு (வங்கியில் இருக்கும் பணம்) உன் திருவடிகள். உன்னுடைய நான்குத் திருக்கரங்கள் செம்மையானவை. உன்னைச் சுற்றி சிவந்த ஒளி. அம்மை உன் திருநாமமோ திரிபுரை. உனக்கு எல்லோருக்கும் இருக்கும் இரண்டு கண்களுடன் மூன்றாவதாக நெற்றிக் கண்ணும் உண்டு.

***

பாடல் 99:

குயிலாய் இருக்கும் கடம்பாடவியில் கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

கயிலாயநாதருக்கு அன்று இமயமலைக்கரசன் கொடுத்த அழகிய பார்வதி தேவி கடம்பவனத்தில் குயிலாய் இருப்பாள். இமய மலையில் அழகிய மயிலாய் இருப்பாள். வான வெளியில் வெயிலாய் இருப்பாள். தாமரையில் அன்னமாய் இருப்பாள்.

***

1. கடம்பாடவியில் வாழும் குயில்
2. கடம்ப மலர்கள்
3. கடம்ப மரம்

மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில்...

Saturday, July 07, 2007

கடம்பம் - 2

இந்தப் பாடல் மக்கள் நடுவே மிக நன்கு அறியப்பட்டது. பலரும் பாடியிருப்பார்கள்.

(கந்தர் அலங்காரம் - 38ம் பாடல்)

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


குமரேசரின் இரு திருவடிகளும் அவற்றில் அணிந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும், பன்னிரு தோள்களும் அவற்றில் அணிந்த கடம்பமாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிவிட்டால் - நல்ல நாள் கெட்ட நாள் தான் என்னை என்ன செய்யும்? நான் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் தான் என்னை என்ன செய்யும்? வினைப்பயன்களை அளிக்க எனை நாடி வந்த ஒன்பது கோள்களும் என்ன செய்யும்? என் உயிரை எடுக்க வரும் கொடிய கூற்றும் என்ன செய்யும்? அவன் அருளால் இவற்றை எல்லாம் வெல்லுவேன்.

முருகனின் திருவுருவத்தில் எவை எவை எடுப்பாகத் தெரியுமோ அவற்றை எல்லாம் பாடிக் கொண்டு வரும் போது கடம்பையும் பாடுகிறார்.

***


அடுத்தப் பாடலும் நன்கு அறியப்பட்டப் பாடல்.

(கந்தர் அலங்காரம் 40ம் பாடல்)

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.

திருச்செந்தூர் அருகில் இருக்கும் வயல்களில் நீர்வளம் மிகுந்து இருப்பதால் வயல்களில் நிறைய மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த மீன்கள் துள்ளித் துள்ளி விளையாடுவதால் செந்தூர் வயற்பொழில்கள் சேறாகிவிட்டன.

முருகனின் தோளில் இருக்கும் தேனைச் சொரியும் கடம்ப மாலையின் மயக்கத்தில் (அவன் தோளைத் தழுவி அந்த மாலைகளின் மணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்) பூங்கொடியார் மனம் துவண்டது.

மாமயில் ஊர்தியைக் கொண்டவன் வேலால் கடலும் கடல் நடுவே மாமரமாய் நின்ற சூரனும் கிரௌஞ்ச மலையும் அழிந்தார்கள்.

அவனுடைய திருவடிகள் பட்டதால் என் தலை மேல் பிரமன் எழுதிய தலையெழுத்து அழிந்தது.

***

அடுத்தப் பாடல் நம் இராகவனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்.

(கந்தர் அலங்காரம் - 62ம் பாடல்)

ஆலுக்கு அணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய் மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே.

ஆலமுண்ட சிவபெருமானுக்கு அணிகலம் வெண் தலை மாலை. உலகங்களை எல்லாம் உண்ட திருமாலுக்கு அணிகலம் குளிர்ந்த துளசி. மயில் ஏறும் எங்கள் ஐயனின் காலுக்கு அணிகலம் வானவர்கள் திருமுடியும் கடம்ப மாலையும். அவன் கையில் இருக்கும் வேலுக்கு அணிகலம் அந்த வேல் அழித்த கடலும் சூரனும் கிரௌஞ்ச மலையுமே.

***

இந்தப் பாடல் எனக்கும் மிகப் பிடித்தப் பாடல்

(கந்தர் அலங்காரம் - 72ம் பாடல்)

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

சிவந்தவனை, கந்தனை, திருச்செங்கோட்டு மலையை உடையவனை, சிவந்த சுடர் வேல் உடைய மன்னனை, செந்தமிழ் நூல் பல செய்தானை, புகழ் விளங்கும் வள்ளியின் மணவாளனை, கந்தனை, கடம்பமாலை அணிந்தவனை, கரிய மயிலை வாகனமாக உடையவனை, சாகும் வரையில் மறவாதவர்களுக்கு ஒரு தாழ்வும் இல்லையே.
***
படங்கள்:

1. திருமுருகன்
2. மலர்ந்த மலர் முகத்துடனும் கடம்ப மலர்க் கொத்துடனும் ஒரு சிறுமி
3. பழனி மலை அடிவாரத்தில் இருக்கும் கடம்பமரம்
4. சில மொட்டுக்களுடன் ஒரு கடம்ப மலர்க் கொத்து.
மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில்

Friday, July 06, 2007

கடம்பம் - 1

கடம்ப மரத்தைப் பற்றி இலக்கியத்தில் எங்கெங்கு வருகிறது என்று எடுத்துச் சொல்ல முடியுமா என்று வெற்றி முன்பு ஒரு முறை கேட்டிருந்தார். என்னால் முடியவில்லை, நேரம் கிடைக்கவில்லை என்று இராகவனிடம் உங்களால் முடியுமா என்று கேட்டேன். அதே நேரத்தில் இராகவன் பதிவிலும் வெற்றி அதே கோரிக்கையை வைத்தார். இராகவன் பேச்சோடு பேச்சாக அந்த வேலையை என்னிடம் தள்ளிவிட்டுவிட்டார். :-) சரி. இனி மேலும் வெற்றியைக் காக்க வைக்கக் கூடாது என்று கூகிளாண்டவரின் துணையோடு இந்தத் தொடரைத் தொடங்குகிறேன். கூகிளாண்டவர் யூனிகோடில் இருக்கும் எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறார். அவையே வெற்றியின் ஆவலைத் தணிக்கப் போதும் என்று நினைக்கிறேன்.

கடம்ப மரம் என்றதுமே முருகன் நினைவு தான் வரும். கடம்ப மாலை, கடப்ப மாலை அணிந்திருப்பவன் முருகன் என்பது பழைய இலக்கியங்களிலும் அண்மைக்கால இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. கடம்ப மரம் அம்பிகையோடும் தொடர்புடையது என்பது அபிராமி அந்தாதி படித்தவருக்குத் தெரியும். அதில் பல இடங்களில் அன்னை கடம்பு அணிந்தவளாகப் புகழப்படுகிறாள். நான்மாடக்கூடலாம் மதுரையம்பதிக்கு இருக்கும் பல பெயர்களில் கடம்பவனம் என்பதும் ஒரு பெயர். அந்தப் பெயர் கொண்டு மீனாட்சி அம்மையைப் போற்றும் பாடல்களும் இருக்கின்றன.

இவை எல்லாம் போக பழைய இலக்கியங்களில் வேறு சில இடங்களிலும் கடம்பு, கடம்ப மரம், கடப்ப மரம், கடப்ப மாலை போன்றவை மற்றவருடனும் தொடர்பு கொண்டு வருவது போல் தோன்றுகிறது. அவை பழந்தமிழ் இலக்கியம் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் அவற்றின் பொருளைப் பார்க்கவேண்டும். அதனால் அவற்றைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.

***

திரு. முத்துக் கறுப்பணன் எழுதிய 'பழனியாண்டவன் காவடிச் சிந்து' என்ற நூலினை இந்த வலைப்பக்கத்தில் பார்க்கலாம். இதில் கந்தனைக் கடம்பன் என்று அழைக்கிறார். கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று அவனை வணங்குவது பொது மக்கள் நடுவிலும் பெரும்பான்மையாக இருக்கிறதே.

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மானப் புகழ் குமரன்


பாடல் வரிகளுக்குப் பொருள் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக எளிதான வரிகள். மானப் புகழ் என்றால் பெரும் புகழ்.

***

ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரம், வேல் - மயில் - சேவல் விருத்தம் போன்ற நூற்களிலும் பல இடங்களில் கந்தனைக் கடம்பனைப் பாடியிருக்கிறார். அவற்றை இந்த வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

(கந்தர் அலங்காரம் - 19ம் பாடல்)

சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தையுற்று
நின்னை உணர்ந்து உணர எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்திருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே

பொன்னால் ஆகிய (சொர்ண - சொன்ன) கிரௌஞ்ச மலையை ஊடுருவித் துளைத்த சிறந்த வேல் மன்னவனே! கடம்ப மலர் மாலை அணிந்த மார்பனே! சொல், செயல், எண்ணம் என்ற மூன்று விதங்களிலும் மௌனத்தை உற்று உன்னை நன்கு உணர்ந்து கொண்டேன். அதனால் எல்லாம் ஒடுங்கி நிர்க்குண நிலை பூண்டு 'நான்' என்ற எண்ணம் மறந்திருந்தேன். அதனால் இந்த உடம்பு இறந்தது போல் ஆயிற்று - இனிப் பிறவா நிலை கிட்டிற்று.

அருணகிரிநாதர் கடம்பனைப் போற்றும் மற்ற பாடல்களை அடுத்த இடுகையில் பார்ப்போம்.

Tuesday, July 03, 2007

உருத்திராட்ச பூனைகள்

உருத்திராட்ச பூனைகளைப் பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருக்கிறோம்; பார்த்திருக்கிறோம். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலை என்று பலமுறை நொந்துக் கொண்டும் இருக்கிறோம். திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞர் சொன்னதும் சரி தான். காலம் காலமா உலகம் தோன்றிய நாள் தொடங்கி இப்படிப்பட்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். எதற்கு இவ்வளவு தூரம் பீடிகை போடுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஒன்றுமில்லை. காலம் காலமாய் அழியாமல் இருக்கும் படி மாமல்லன் காலத்தில் கல்லிலே உருத்திராட்ச பூனையைச் செதுக்கி வைத்திருக்கிறார்களே, சென்னை சென்ற போது அதனைப் பார்த்து வந்தேன், அதைப்பற்றிச் சொல்லத்தான். :-)

நாங்கள் மாமல்லபுரமாம் மகாபலிபுரம் சென்ற போது சரியான வெயில் காலம். வெயில் அதிகமாக வருவதற்குள் சென்று வந்துவிட வேண்டும் என்று எண்ணி காலை 8 மணிக்கெல்லாம் மாமல்லபுரத்தில் இருந்தோம். அப்படியிருந்தும் வெயில் வாட்டி எடுத்துவிட்டது.

முதலில் பாறைச் சரிவில் நிற்கும் உருண்டைப் பாறையைக் காட்டி கண்ணனின் வெண்ணெய் உருண்டை என்று சொன்னார்கள். அவ்வளவு தான் என் மகள் பார்க்கும் பாறையை எல்லாம் கண்ணனின் வெண்ணெய்; மண் எல்லாம் அவன் தின்ற மண் என்று கதை சொல்லத் தொடங்கிவிட்டாள். வீடு வந்து சேரும் வரை இது கண்ணன் தின்ற வெண்ணெயா; இது அவன் தின்ற மண்ணா; நானும் தின்று பார்க்கலாமா என்று ஒரே தொல்லை.

ஒரு கல் மண்டபத்தில் மும்மூர்த்திகளின் கோவில் இருந்தது. நன்றாக இருந்தது. ஒரு தனிக்கோவிலில் அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட தொந்தி கணபதி இருந்தார். ஒரு குடைவரை மண்டபத்தில் வராகமூர்த்தியும் கஜலக்ஷ்மியும் இருந்தார்கள். இன்னொரு குடைவரை மண்டபத்தில் கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கி நிற்கும் காட்சி அழகுறச் செதுக்கப்பட்டிருந்தது. பாம்பு, புலி முதல் எல்லா மிருகங்களும் மழைக்கு மலையின் கீழ் ஒதுங்கியதை அழகாக வடித்திருந்தார்கள். என் மகளுக்கு பலராமன் உருவம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. கதை கேட்டு கதை கேட்டு அவள் கற்பனையில் வடித்திருந்த பலராமன் உருவத்துடன் இந்த உருவம் நன்கு ஒத்துப் போனது போல.

அடுத்து அருச்சுனன் தவத்தைக் காட்டும் ஒரே கல்லில் செதுக்கிய நெடிய தொடர் சிற்பங்களைப் பார்த்தோம். (படத்தை அழுத்திப் பெரிதாக்கிப் பாருங்கள்). பாறையில் மேல்பகுதி எல்லாம் தேவர்கள். நடுவே இருக்கும் பிளவு பாதாள உலகத்தில் இருந்து நாகர்கள் வருவதற்காக இருக்கும் பிலம் (பிளவு). அதிலிருந்து நாகர்கள் வெளிப்படுகிறார்கள். ரிஷிகளும் முனிவர்களும் பிளவின் இருபுறமும் காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே வன விலங்குகள். ஒரு பெருமாள் கோவிலும் உண்டு. பெருமாள் கோவிலின் மேல் பகுதியில் எலும்பும் தோலுமாக ஒற்றைக்காலில் நின்று இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி நிற்கும் உருவம் தான் அருச்சுனன். அவன் தவத்தை மெச்சி பாசுபத அஸ்திரம் தருவதற்காக அதனை ஏந்திக் கொண்டு சிவபெருமான் அவனது வலப்புறத்தில் நிற்கிறார்.

சரி. இதெல்லாம் சொல்லிவிட்டீர்களே; உருத்திராட்ச பூனை எங்கே என்று கேட்கிறீர்களா? வலப்பக்கம் பெரிய யானை ஒன்று நிற்கிறதே. அதன் தந்தத்தின் கீழே பாருங்கள். அருச்சுனன் நிற்பது போலவே ஒரு பூனை நிற்பதைப் பார்க்கலாம். அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த உருத்திராட்ச பூனையைச் சுற்றி கைகளைக் கூப்பிக் கொண்டு பல எலிகளும் நிற்கின்றன. நகைச்சுவை உணர்வு மிகுந்த சிற்பி போலும். நன்கு வடித்திருக்கிறார். நீங்கள் மாமல்லபுரம் சென்றால் தவறாமல் இந்தப் பூனையையும் எலிகளையும் பார்த்துவிட்டு வாருங்கள்.அடுத்து கடற்கரை கோவிலுக்குச் சென்றோம். அது கடற்கரையில் இருப்பதால் கடற்காற்றின் அரிப்பை கல்லில் நன்கு காண முடிந்தது. அந்த நேரத்தில் வெயிலின் கடுமை அதிகமாக இருந்ததால் கோவிலை அனுபவித்துப் பார்க்க முடியவில்லை. விரைவில் வீட்டிற்குப் போனால் போதும் என்று திரும்பி வந்துவிட்டோம்.

Monday, July 02, 2007

வலைப்பதிவு நண்பர்கள் மன்னிக்கவும்!

ஒரு மாத காலம் இந்தியாவிற்குச் சென்று வந்தேன். சென்னையில் நான்கு நாட்கள், மதுரையில் பத்து நாட்கள், கோவையில் ஒரு நாள், ஊட்டியில் மூன்று நாட்கள், பெங்களூருவில் பத்து நாட்கள், ஹைதராபாத்தில் மூன்று நாட்கள் என்று பொழுதைக் கழித்து விட்டு வந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரிடம் தொலைபேசி எண்கள் பெற்றுச் சென்றிருந்தாலும் யாருக்கும் தொலைபேச இயலவில்லை. யாரையும் சந்திக்க இயலவில்லை. நண்பர்கள் அனைவரிடமும் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கோவித்துக் கொள்ளவேண்டாம்.

Sunday, July 01, 2007

தங்கம் - வாங்கினால் குறைந்த விலை; விற்றால் அதிக விலை


அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது ஒரு விந்தையைக் கண்டேன். நாங்கள் நகைக்கடைக்குச் சென்றிருந்த நேரம் ஒரு கிராம் தங்கம் 809 ரூபாய்க்கு விற்றது. கஜானா நகைக்கடையினர் ஒரு கிராம் தங்கம் 784 ரூபாய்க்கு விற்றனர் (சந்தை விலையை விட 25 ரூபாய் குறைவு). இதனை வேண்டுமானால் புரிந்து கொள்ள இயன்றது. சேதாரம், செய்கூலி என்று நகையின் விலையை ஏற்றி இறக்கும் போது இப்படி சந்தை விலையை விடக் குறைவாகக் கொடுக்க முடியும். இன்னொன்று தான் புரிந்து கொள்ள இயலவில்லை. நாங்கள் முன்பு வாங்கியிருந்த ஒரு நகையை விற்று புது நகையை வாங்கினோம். அப்படி பழைய நகையை விற்கும் போது ஒரு கிராமிற்கு 840 ரூபாய் போட்டு வாங்கிக் கொண்டனர். சேதாரமும் மிகுதியாகப் போடவில்லை. இப்படி பழைய நகையை கூடுதல் விலைக்கு வாங்குவதால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று புரியவில்லை. இதனைப் பற்றி அறிந்தவர்கள் சொன்னால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.