Sunday, October 04, 2009
புல்லாகிப் பூண்டாகி - இராதாமோகன் விமரிசனம்
***
குமரன்,
கதையைப் படிச்சோமா, ரசிச்சோமா, அடுத்தக் கதைக்கு போனோமான்னு இருக்கற
பேர்விழியிடம் விமர்சனம் எழுதச் சொன்னால்...நான் என்ன எழுதுவது என்று
புரிபடாமல் முன்பே பிறர் கொடுத்துள்ள விமர்சனங்களை படித்துப் பார்த்தேன்.
புதிதாக சொல்ல இனி என்ன இருக்க போகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும்
என் கிரிதாரியின் துணையுடன் முயற்சி செய்கிறேன். :)
முதலாவதாக, கதைக் கரு, பின்னர் எழுத்து நடை, பின்னர் கதையில்
ஆங்காங்கே தென்படும் தத்துவங்கள் என்ற வரிசையில் எனது கருத்துகளை தெரிவிக்கிறேன்.
**********
கதைக் கருவைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், "கண்ணன் காலடி பட்டு கல் உயிர்
பெற்றது; பிறவிச் சுழலில் அகப்பட்டது" என்பது ஒரு சுவாரஸ்யமான கற்பனை.
பிறவிச் சங்கிலியை அறுக்கும் திருவடி பிறவியைத் தந்தது... இறைவனின் லீலா
வினோதங்களில் எது தான் சாத்தியமில்லை என்ற நோக்கில் இந்தப் புதிய
சிந்தனை ரசிக்கும்படி உள்ளது. புதிது என்றாலும் யாரையும் புண்படுத்தும்
அபாயம் இல்லாத சிந்தனை என்றே நினைக்கிறேன். தொடரின் முடிவில் எனக்கு
புதுமைப் பித்தனின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது. "சாப விமோசனம்" என்ற
அந்தக் கதையில், இலங்கை யுத்தம் எல்லாம் முடிந்து சீதா-ராமர் அயோத்தி
நகர் திரும்பும் வழியில், கௌதம முனிவரின் ஆசிரமத்திற்கு வருகை புரிவர்.
அங்கே அகலிகை சீதையுடன் உரையாடுவதாக ஒரு காட்சி வரும்.
சீதையை ராமன் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான் என்பதை அகலிகையால்
தாங்கவே முடியாது. மன அதிர்ச்சியில் அகலிகை மீண்டும் கல்லாகச் சமைந்தாள்
என்று வரும். இக்கதை அந்த நாட்களில் நிறைய சர்ச்சையை எழுப்பியதாக
சொல்வர்.
(அந்தக் கல் தான் மீண்டும் இங்கு கண்ணன் காலடிப்பட்டு புனர்ஜென்மம்
எடுத்ததோ என்னவோ. :))
கதையின் ஆரம்பத்தில் எல்லா சராசரி மனிதர்களையும் போல அற்ப விஷயங்களுக்கு
பொறாமைப் படுதல், டம்பம் அடித்துக் கொள்ள விரும்புதல் போன்ற நல்ல
குணங்களுடன் கதாநாயகன் கந்தன் அறிமுகமாகிறான். அதே கந்தன் முந்தைய
பிறவிகளில் இறைவன் ஒருவனையே நினைத்துக் கொண்டிருக்கும் நரசிம்மதாசனாக
இருந்தான் என்று பின்னர் தெரிய வருகிறது. இதைப் படிக்கும் பொழுது, இன்றைய
சராசரிகள் அனைவரும் நமது தெய்வீகத் தன்மையை மறந்து விட்ட கந்தனை போலத்
தான் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. "நீ தெய்வீகமானவன் !" என்ற
விவேகானந்தரின் கூற்றை உங்கள் கதை நினைவூட்டுகிறது.
(நீங்க உடனே உங்களை விவேகானந்தராகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். :))
**********
அடுத்ததாக எழுத்து நடை பற்றி...சம்பாஷணை மூலம் கருத்துகளைத் தெரிவித்தல்,
மூன்றாம் நபராக இருந்து பாத்திரங்களை அறிமுகம் செய்வது, பாத்திரங்களின்
நினைவுகள் வாயிலாக பாத்திரத்தினுள் வாசகனை நுழைப்பது போன்ற கதை எழுதும்
யுக்திகள் எல்லாம் சிறப்பாகவே தென்படுவதால் இது உங்களது முதல் படைப்பு
என்பதை நம்பக் கடினமாக உள்ளது.
எல்லா பின்னூட்டங்களையும் படித்துப் பார்த்த பொழுது, தொடரின் ஆரம்பம்
மட்டும் சிலருக்கு ஒரு தொய்வினை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
உங்களுக்கு உரையாடல் மூலமாக கதை சொல்வது என்பது அருமையாக வருகிறது. இதனை
நீங்கள் ஆரம்ப அத்தியாயங்களில் இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்
என்று நினைக்கிறேன். திருவண்ணாமலை சம்பந்தமாக நிறைய உழைப்புடன், நிறையவே
பொறுமையுடன் நீங்கள் சொல்லிய கதைப் பாங்கில் ஆங்காங்கே வசனங்கள்
இருந்தாலும், அவை தொடர்ச்சியாக, பெரிய பெரிய பத்திகளில் வந்தது ஒரு
கட்டுரை படிக்கும் உணர்வினை ஏற்படுத்தி இருக்கலாம்.
அன்னமாசார்யர் கீர்த்தனை, முகுந்தமாலா ஸ்லோகம், திருவெம்பாவை
பாடல்கள்...என்று ஆங்காங்கே மஹான்களின் பனுவல்களை தூவியிருந்தது அருமை.
ஒரு குறுந்தொடர் கதையில் இது போல படித்தது இதுவே முதல் முறை.
இந்த நடை கல்கியின் நடையை நினைவூட்டியது. (பொன்னியின் செல்வனில்,
பதிகங்களையும் பாசுரங்களையும் கதாப் பாத்திரங்கள் வாயிலாக கதையினூடே
அழகாக கோர்த்திருப்பார்.)
பின்னூட்டங்களைப் படித்தபோது, "பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன
நாவே என்ற வரிகள் வரும் போது கந்தனை உறக்கம் தழுவியது." என்று முடித்தப்
பின்னர், அடுத்த அத்தியாயத்தில் பாண்டவ தூது ஒரு கனவு என்பதை வாசகர்கள்
யூகிக்க முடியாமல் போனது அதிசயமாக உள்ளது.
(இங்கே அதிசயம் சம்பந்தமாக ஒரு கேள்வி. நீங்கள் உங்கள் எழுத்துகளில்
ஆச்சர்யக் குறியை(!) எங்கும் பயன்படுத்துவதில்லை என்று விதி
வைத்திருக்கிறீர்களா?! :)) "இனியும் இங்கிருக்க எனக்கு விருப்பமில்லை.
இறைவா. என் வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாய்." என்று அடுத்த
அத்தியாயத்தில் முடித்து, அதற்குப் பின்னர் மரமாகப் பிறவி எடுத்தத்
தொடர்ச்சியை, புத்தக வடிவில் இருந்தால் எளிதாக யூகித்திருப்பார்கள் என
நினைக்கிறேன்.
என்றாலும் உங்கள் எழுத்து நடை ஆங்காங்கே சில குழப்பங்களையும்
ஏற்படுத்தியது என்பதையும் சொல்லிவிடுகிறேன். உதாரணமாக, நரசிம்மதாசனின்
அறிமுகம் முடிந்து, அடுத்தப் பத்தியில், "இவன் பிறந்து ஐந்து
வருடங்களுக்குப் பின்னர் நவத்வீபத்தில் ஒரு பெரும் ஜோதி தோன்றியது."
என்று படித்தபோது, இன்னமும் நரசிம்மதாசனைப் பற்றியே சொல்கிறீர்கள் என்று
தான் நினைத்திருந்தேன். இடையில் வந்தப் படம் "இது தான் நரசிம்மதாசனின்
படம் போல" என்று என்னை நினைக்கத் தூண்டியது. அடுத்த வரியைப் படித்தபோது
சுதாரித்துக் கொண்டேன். :)
படங்களைப் பற்றி எல்லோரும் சொல்லி விட்டனர். கண்ணன் துரியோதனன்
மாளிகைக்குச் செல்ல மறுத்து, விதுரர் வீட்டிற்குச் சென்றான் என்ற
இடத்தில், பக்தியை உயர்த்தும் தராசு படம், மாதுர்ய பக்தியே இருக்கும்
எல்லா பக்தி முறைகளிலும் மிக மிகச் சிறந்தது என்று சொல்லுமிடத்து
ராதா-கிருஷ்ணன் ஊஞ்சலாடும் படம், ஒன்பது கலவைகளுடன் போகர் படம் என்று
நிறைய இடங்களில் படங்களின் தேர்வுகள் அருமை.
**********
அடுத்ததாக தத்துவங்கள்..."மாதுர்ய பக்தியே இருக்கும் எல்லா பக்தி
முறைகளிலும் மிக மிகச் சிறந்தது" என்பதை படித்தபோது இவ்விடத்தில் இங்கு
சைதன்யருக்கு பதிலாக ஒரு பெரியாழ்வார் அல்லது ஒரு அப்பர் பெருமான்
இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. :)
பின்னர், அடுத்த அத்தியாயத்தில், ஜகன்மோகனுக்கு பஞ்ச கோசங்கள் பற்றிய
உணர்வு ஏற்பட்டது என்று மட்டுமே சொல்லி, அதற்கு அப்பால் உள்ளப் பொருளைப்
பற்றிய உணர்வு ஏற்பட்டதா இல்லையா என்பதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே
என்று எண்ணினேன். பின்னர் ஜகன்மோகன்,"இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த
பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன்." என்று படித்தபோது அதன்
காரணம் புரிந்தது. (இவ்விடத்தில், நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றவரும்
கூட அதனை நழுவ விடாமல் சஹஜ சமாதியில் நிலைக்க முயற்சிக்க வேண்டும் என்ற
ரமணர் வாக்கு நினைவிற்கு வந்தது. அது தொடர்பாக எல்லாம் மேலும் யோசியாமல்
கதையினை தொடர்ந்து படித்து முடித்தேன்.)
"அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை
முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும்
ஆவலும் நீங்கும்." என்பதை படித்தபோது, "ஆசை அனுபவித்தெல்லாம் தீருமா?"
என்ற எண்ணம் எழுந்ததையும், அதனைத் தொடர்ந்து, பாகவதத்தில் யயாதியின்
சரித்திரம், கீதை வாக்கியங்கள் என்று நிறைய எண்ணங்கள் எழுந்ததையும்
தவிர்க்க முடியவில்லை. "ஆசையை அனுபவித்து ஆவல் நீங்குவது என்பது எரிகிற
அக்னியை அணைக்க அதில் நெய்யை விடுவது போல" என்றபடியெல்லாம் எங்கோ படித்த
நினைவு....
அந்த வரியைத் தொடர்ந்து, "மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள்
நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து
பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும்."
என்பதையும் படித்தப் பொழுது மேலும் பல எண்ணங்கள் எழுந்தன...
நன்றாகக் கனிந்த பழம் தானே விடுபட்டு கீழே விழும் என்று பெரியோர்
சொல்கிறார்கள். இரண்டு வழிகளுமே "விட்டுவிடுதல்" என்ற ஒரு வழியில்
சேர்வது போன்ற ப்ரமை ஏற்படுகிறது. :)
"கள்ளம் கபடம் இல்லாத இந்த மக்களைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம்
குதூகலிக்கிறது." , "அடியார் முன்னாடி நின்னா மனசு தன்னால சாந்தமாகும்."
போன்ற வசனங்கள் அருமை.
இரண்டாவதைப் படித்தபோது, "There are two signs of a person who has
attained spiritual knowledge. First, he has no pride; second, he
develops a serene attitude." என்ற ராமகிருஷ்ண பரமஹம்சரின் மொழி
நினைவிற்கு வந்தது.
இது போன்ற நிறைய வசனங்கள்; கந்தன் மூலமாக நாத்திக வசனங்களும் ரசிக்கும்படி இருந்தன.
**********
கடைசியாக ஒரு (அடாவடித்தனமான) இலவச விமர்சனம்:
முதல் அத்தியாயம் தொடங்கி கடைசி அத்தியாயம் வரை கண்ணன் வாசம் வீசுகிறது.:)
முதலில் கேசவனாக கண்ணன் உள்ளே நுழைகிறான். நான் சொல்லலை குமரன்.
"கேசவன் மட்டும் ஒவ்வொரு பிறவியிலயும் உன்னோடவே வர்றவன்"னு தாத்தா
சொல்கிற இடத்தில் ஒரு படம் போட்டு உள்ளீர்களே...அது சொல்கிறது. :)
கடைசியில் கல்யாணப் பத்திரிக்கையில் கண்ணன். :)
எடுக்கின்ற பிறவிகள் எல்லாம் கண்ணனுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
குளிர்ச்சிக்கே பெயர் பெற்ற வேப்ப மரம், அல்லது ஒரு மாமரம், அல்லது ஒரு
பெரிய ஆலமரம் என்றெல்லாம் இல்லாமல் கண்ணன் கடம்பேறி காளிங்க மடுவில்
குதித்தான் என்பதனால் கடம்ப மரமாக பிறவி ஏற்பட்டதோ? :)
பறவை என்றால் ஒரு குயில், முருகனின் ஒரு மயில், இல்லை மீனாக்ஷி கையில்
உள்ள ஒரு பச்சைக் கிளி என்றெல்லாம் இல்லாமல், அது எப்படி கருடனாக ஒரு
பிறவி? (ஒ ! கண்ணன் பாரிஜாத மரத்தை துவாரகாவிற்கு கொண்டு வர கருடன்
மீதேறி தானே இந்தரலோகம் சென்றான் !! :))
அட! இதெல்லாம் போகட்டும். ஒன்பது வகை பக்தி பற்றி பாகவதம் சொல்கிறது
என்று சொல்லி, அடைப்புக் குறிக்குள் கண்ணனை அழகாக நுழைத்து விட்டீர்கள்.
:) பொதுவாக இறைவன், பகவான், பரம்பொருள் என்று சொல்லாமல்...எப்படி கண்ணன்
அங்கே வந்தான் என்றால்...சட்டியிலே இருக்கறது தானே அகப்பையில் வரும். :))
**********
விமர்சனம் முற்றும். ராதே கிருஷ்ணா !!
~
ராதா
Tuesday, January 22, 2008
புல்லாகிப் பூண்டாகி - நினைத்ததும் நடந்ததும் - ஒரு சுய விமர்சனம்
எழுதும் முன் இதை நான்கு ஐந்து பகுதிகளாக உள்ள சிறிய தொடராக எழுதலாமா, பல பகுதிகளாகக் கொண்ட பெரிய தொடர்கதையாக எழுதலாமா, குறுநாவல் என்று சொல்லி நன்கு விரித்து எழுதலாமா என்றெல்லாம் கேள்விகள். குறுநாவலாக மிகவும் விரித்தால் எடுத்துக் கொண்ட பொருள் மிகவும் நீர்த்துப் போய்விடும் என்று தோன்றியது. சிறிய தொடராக எழுதினால் புகுந்து புறப்பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் பெரிய தொடராகவே எழுதலாம் என்று எண்ணி அதனை அறிவித்து விட்டுத் தொடங்கினேன்.
என்ன எழுதுவது என்றும் எப்படி கதையை நகர்த்திச் செல்வது என்றும் ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டு குறிப்பு எழுதி வைத்துக் கொண்டேன். எழுதிய குறிப்பினைப் பார்த்த போது கதையின் முக்கிய இடம் முதல் சில அத்தியாயங்களில் வராததைக் கண்டேன். அதனால் கதையின் முக்கிய செய்தியைத் தலைப்பில் மட்டும் சொல்லிச் செல்லலாம்; அது பலருக்கும் புரியும் என்று தோன்றியது.
இப்படி எழுதத் தொடங்கிய பின்னர் தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்ன என்ன எழுதுவது எந்த செய்தியைச் சொல்லுவது; எதனை விடுப்பது; எதனில் புகுந்து புறப்படுவது; எதனில் மேலோட்டமாகத் தொட்டுச் செல்வது என்பதெல்லாம் அந்த அந்த அத்தியாயம் எழுதும் போது அன்று இருந்த மனநிலையின் அடிப்படையிலேயே தான் சென்றது. அதனால் சில அத்தியாயங்கள் மிகவும் மேலோட்டமாகவும் சில கொஞ்சம் ஆழமாகவும் சென்றன.
முதலில் வந்த அத்தியாயங்களில் கந்தனின் குணநலன்களை வெறும் வார்த்தைகளால் சொல்லிச் செல்வதை விட சில நிகழ்ச்சிகளால் சொன்னால் நன்று என்று தோன்றியது. அதனால் நிகழ்ச்சிகளைச் சொல்லி வந்தேன். அதனால் தான் மலை வலமும் கோவில் தரிசனமும் என்று கதைக்குத் தொடர்பில்லாதது என்று கூட தோன்றும் அத்தியாயங்கள் இருந்தது. அவை இயற்கையாக அமைந்தன என்றே நம்புகிறேன். அவற்றில் மிகையாக எதனையும் சொல்லவில்லை. அங்கே என்னுடைய குறிக்கோள் கந்தனின், கேசவனின் குணங்களைக் கோடிட்டுக் காட்டுவதே. அப்படி நம்மைச் சுற்றி சாதாரணமாக சராசரியாகச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெளிப்பார்வைக்குச் சாதாரணமாகத் தென்படுபவர்கள் எல்லாம் சாதாரணமானவர்களாக இருக்க வேண்டியதில்லை. அவர்களின் பின்புலம் மிக ஆழமானதாக இருக்கலாம். இந்த செய்தியைக் கதையில் சொல்ல நினைத்தேன். எவ்வளவு தூரம் சொன்னேன் என்று தெரியவில்லை. ஒருவருக்காவது அந்த எண்ணத்தை இந்தக் கதை ஏற்படுத்தியிருந்தால் அதுவே வெற்றி என்று எண்ணிக் கொள்வேன். ஏதோ ஒரு கேள்விக்கு சீனா ஐயாவுக்குக் கொடுத்த விடையிலும் 'எல்லோருமே தெய்வீகப் பிறவிகள் தான் ஐயா' என்று பின்னூட்டத்தில் சொன்னேன். கதையில் சொல்லி விளக்க முடியாததைப் பின்னூட்டங்களில் சொல்ல விழைந்தேன். அதனால் இந்தத் தொடருக்கு பின்னூட்டங்களும் மிக முக்கியம் என்று நினைக்கிறேன்.
இந்தக் கதையில் கந்தனிடமும் கேசவனிடமும் கதையைப் படித்தவர்கள் சிலர் தங்களையே கண்டு கொண்டார்கள் என்பது அவர்களின் விமர்சனத்தால் தெரிகிறது. அதுவும் நான் எதிர்பார்த்த ஒன்று. அதனால் மகிழ்ச்சி.
படித்தவர்கள் தங்களைக் கதை மாந்தர்களிடம் கண்டது மட்டுமின்றி தங்கள் கருத்துகளையும் கதை மாந்தர்களிடம் ஏற்றி கதை மாந்தர்கள் செய்ததில் முரண்பாடுகளையும் கண்டிருக்கிறார்கள். அதுவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதையை எழுதிய நான் என் கருத்துகளைக் கதை மாந்தர்கள் மேல் ஏற்றிய அதே நேரத்தில் மற்றவர்களும் அவரவர் கருத்துகளைக் கதை மாந்தர்களிடம் ஏற்றும் வகையில் கதை அமைந்திருந்தது எழுதிய எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
பாராட்டுகளாகச் சில விமர்சனங்களும் மேற்சென்றிடிக்கும் கருத்துகளாகச் சில விமர்சனங்களும் என்று நகுதற் பொருட்டு மட்டுமில்லை நட்டல் என்று ஐயன் சொன்னதற்கேற்ப பலவிதமான விமர்சனங்களை என் மனம் நிறையும் படி தந்திருக்கிறார்கள் நண்பர்கள். அவர்கள் சொன்னவற்றில் சிலவற்றை எடுத்துக் கொண்டு விடை சொல்ல முயல்கிறேன். ஏதேனும் ஒன்றிற்கு நான் விடை சொல்ல வேண்டும்; ஆனால் சொல்ல மறந்துவிட்டேன் என்று தோன்றினால் தயங்காமல் கேளுங்கள். தெரிந்த வரை சொல்கிறேன்.
***
எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால் அதன் தொடர்பில் எழுதும் போது எழுத்தும் கருத்தும் இயல்பாக வெளிப்படும் என்று கோவி.கண்ணன் சொல்லியிருக்கிறார். அது உண்மை தான். ஆனால் இந்தக் கதையில் சொல்லப்பட்ட கருத்தில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதாக எண்ணவில்லை. நான் ஏறக்குறைய யோகன் ஐயா சொன்னது போல் தான் இவற்றை எடுத்துக் கொள்கிறேன்.
நம்பிக்கை ஆழமாக இருந்தால் மட்டும் இல்லை அனுபவங்களும் சில நேரங்களில் எழுத்தையும் கருத்தையும் இயல்பாக வெளிப்படுத்தும் என்பதும் உண்மை.
மலை வலமும் கோவில் தரிசனமும் வேக வேகமாக முடிந்தன என்று பாலாஜியும் அவை கதைக்குத் தேவையில்லாமல் இருந்தன என்று இரவிசங்கரும் இன்னொரு நண்பரும் (அவர் விமர்சனம் எழுதிக் கொடுக்காமல் ஜிமெயில் அரட்டையில் மட்டும் தன் கருத்துகளைக் கூறினார்) சொல்லியிருக்கின்றனர். முதல் சில அத்தியாயங்கள் கதைக்குத் தேவையில்லாதது போல் தோன்றினாலும் அங்கே கதை மாந்தர்களின் குண நலன்களை வெளிப்படுத்தவே அவற்றைச் சொன்னேன். அதனால் இப்படி இருவிதமான கருத்துகள் தோன்றியிருக்கின்றன என்று நினைக்கிறேன். ஆனால் கோவில்களைப் பற்றி சொல்வதற்கு இது ஒரு நல்லதொரு வழிமுறை என்று எழுதும் போது தோன்றத் தொடங்கியது. இந்த கதை சொல்லும் பாணியில் கோவில்களைப் பற்றி இனி மேல் ஒரு சிலவாவது சொல்வேன் என்று நினைக்கிறேன்.
புல்லாகிப் பூண்டாகி என்று தலைப்பிற்கு மட்டுமே மாணிக்கவாசகர் உதவியதால் அவர் சொன்ன எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தலை இந்தக் கதை சொல்லவில்லை. இன்னும் எத்தனை பிறவியப்பா என்று நண்பர்களுக்குத் தோன்றுவதற்கு முன் நான்கே பிறவிகளில் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் பின்னர் தாத்தா - கந்தன் உரையாடலில் மிச்சத்தைச் சொன்னது நல்லதாகப் போய்விட்டது. இதற்கே தகவல்களைச் சால மிகுத்துப் பெய்துவிட்டீர்கக்ள் என்று ஒரு நண்பர் சொன்னார். நல்ல வேளை இன்னும் விரிக்கவில்லை.
கதை பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது என்று பாலாஜி சொல்லியிருக்கிறார். அது கதையைப் படித்ததால் மட்டும் தோன்றிய எண்ணமா என்னை அறிந்ததால் தோன்றிய எண்ணமா தெரியவில்லை. என்னை அறியாதவர்களும் கதையைப் படித்துப் பார்த்தால் இந்த கதையில் பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று எண்ணுவார்களா தெரியவில்லை. என்னை அறியாமல் பக்தி மார்க்கத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லிச் சென்றேனோ என்னவோ. அதே போல் தான் கோவி. கண்ணன் சொன்ன 'வைணவர் என்பதால் கண்ணனைப் பற்றி முடிந்த போதெல்லாம் நுழைத்திருக்கிறார்' என்ற கருத்திற்கும் தோன்றுகிறது. கண்ணனைப் பற்றிச் சொன்ன அளவிற்கு மற்றவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். ஆனால் என்னை அறிந்தவர் என்பதால் கோவி.கண்ணனுக்கு அப்படி ஒரு கருத்து தோன்றியதோ என்று எண்ணுகிறேன். ஒரு வேளை கண்ணனைப் பற்றி எழுதும் போது என்னை அறியாமல் ஒரு தனிப் பரவசம் தென்பட்டதோ என்னவோ.
பாலாஜி சொன்னது போல் அடுத்தமுறை கதையின் ஓட்டத்தை இன்னும் பல முறை சிந்தித்துவிட்டு எழுதத் தொடங்குகிறேன்.
மிக மிக அருமையாக விமர்சனம் எழுதிக் கொடுத்திருக்கிறார் கீதாம்மா. எல்லா அத்தியாயங்களையும் அழகாக உள்வாங்கி முக்கியமானவற்றை எடுத்துச் சொல்லி அவர் விமர்சனத்தை ஒரு முறை படித்தாலே முழுக்கதையையும் படித்த ஒரு வீச்சைத் தந்திருக்கிறார்.
நாயகி பாவத்தை ஏன் மாதுர்ய பக்தி என்று சொல்கிறார்கள் என்று விவரித்துக் கூறியிருக்கலாம் என்று மௌலி சொல்லியிருந்தார். விவரித்துச் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அதனை விவரிக்கும் திட்டம் இல்லாததால் மேலோட்டமாகச் சொல்லிச் சென்றேன்.
பஞ்ச கோசங்களைப் பற்றிய அறிவும் உணர்வும் உள்ள ஒரு ஞான மார்க்கிக்கு எப்படி வாசனையைப் பற்றியும் இராமகிருஷ்ணரின் நிலையைப் பற்றியும் தெரியாமல் போனது என்றும் மௌலி வியந்திருக்கிறார். பலவிதமான அறிவும் உணர்வும் இருந்தாலும் முந்தைய வாசனைகளின் ஈர்ப்பினால் தேவையானது தகுந்த நேரத்தில் மறந்து போவதில்லையா? அது அங்கே ஜகன்மோகனுக்கும் நடந்திருக்கலாம். அதனால் தான் அவரது குரு அவற்றைப் பற்றித் தொட்டுச் சென்றிருக்கிறார். அப்படித் தொட்டுச் சென்றவுடனேயே ஜகன்மோகனுக்குப் புரிந்தது; ஆனால் அந்த வாசனையும் அதன் ஈர்ப்பும் நீங்க அவர் இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது போலும்.
பக்தி மார்க்கத்தைக் கடந்த பின் வருவது ஞான மார்க்கமா, ஞான மார்க்கத்தைக் கடந்த பின் வருவது பக்தி மார்க்கமா என்ற விசாரணையில் நான் இறங்க விரும்பவில்லை. நரசிம்மதாசனுக்கு சைதன்யர் சொன்ன எச்சரிக்கையில் அவன் பக்தி மார்க்கத்தை விட்டு விலகி வேறு மார்க்கங்களுக்குச் செல்லும் வாய்ப்புண்டு என்பதைக் குறிப்பாகச் சொல்லியிருந்தேன்; அதிலேயே என் எண்ணமும் மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் கேள்விகள் தவறாக ஞான மார்க்கிக்கு வந்திருக்கிறது என்று மௌலி நினைக்கிறார். ஆனால் சைதன்யர் வழி வந்தவர்களோ இராமானுஜர் வழி வந்தவர்களோ முதலில் பக்தி மார்க்கத்தில் இருந்தவன் எப்படி ஞான மார்க்கத்திற்குள் சென்றான்; முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே என்று கேட்கலாம். என்னிடம் விடை இல்லை.
ஏன் கீத கோவிந்தத்தையும் சைதன்யரையும் தோதாபுரியையும் எடுத்துக் கொண்டேன்; ஏன் நமக்கு இன்னும் நன்கு அறிமுகமான புரந்தர தாசரையோ ஊத்துக்காட்டாரையோ இரமணரையோ வள்ளலாரையோ எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மௌலி கேட்டிருக்கிறார். மிக அருமையான கேள்வி. படித்தவுடன் மனம் மிகவும் மகிழ்ந்தது.
இதற்கு பதில்கள்:
1. முதல் மூன்று பிறவிகளும் நமக்கு நன்கு அறிமுகமான சூழலில் நடக்கிறது. நான்கும் ஐந்தும் அவ்வளவாக அறிமுகமாகாத சூழலில் இருந்தால் என்ன?
2. இவையே கந்தனின் முற்பிறவிகள். தமிழ்நாட்டில் சைதன்யர் காலத்திலும் தோதாபுரி காலத்திலும் அவனுக்குப் பிறவிகள் ஏற்படவில்லை போலும். அப்படியே ஏற்பட்டிருந்தாலும் அவை இந்தப் பிறவிகளைப் போல் முக்கியமில்லாதவைகளாக இருந்தன போலும். அதனால் அவனுக்குக் கனவிலும் வரவில்லை. தாத்தாவும் சொல்லவில்லை.
எந்த பதில் பிடிக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள். :-)
கண்ணன் கால் பட்டால் பிறவிச் சூழலில் மாட்டிக் கொள்ள வேண்டுமா? இறைவன் திருவடிகளைப் பற்றினால் விடுதலை அல்லவா கிடைக்கும்? இங்கே சிறையில் மாட்டியதாக அல்லவா சொல்கிறார்? இவை இரவிசங்கரின் கேள்விகள். ஏற்கனவே ஒரு முறை பதிவின் பின்னூட்டத்தில் இதற்குப் பதில் சொல்லியிருந்தேன். அதனை மீண்டும் சொல்கிறேன். இறைவனின் கருணை எப்படிச் செயல்படும் என்று எப்படி சொல்வது? திருவடிகளைப் பற்றுதல் என்ற முயற்சியை அறிவுடைய பிறவிகள் செய்யலாம்; அதற்கு இரங்கி கண்ணன் காலடிகள் விடுதலை தரலாம். எந்த முயற்சியும் செய்ய இயலாத அறிவில்லாத பிறவியான கல்லிற்கு அறிவுடைய பிறவிகள் எடுக்கும் வகையில் கிக் ஸ்டார்ட் கொடுத்தது தானே கண்ணன் காலால் உதைபட்டது? உணர்வின்றிக் கிடந்தக் கல்லை உணர்வுடன் கூடிய பிறவிகளைப் பெறச் செய்து வீடுபேறு அடையும் வழியில் உதைத்து விட்டதால் இது முரண்பாடு இல்லை. கண்ணனின் திருவடிப் பெருமையே இது.
கதையில் இன்னும் நிறைய உரையாடல்கள் வேண்டும் என்று இரவிசங்கர் சொல்லியிருக்கிறார். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் நிறைய உரையாடல்களை இட்டால் போரடிக்குமோ என்ற பயமும் இருந்தது. சுவையாக நிறைய உரையாடல்கள் எழுதினால் அந்தக் கவலை இல்லை. முயல்கிறேன்.
மகான்கள் நம்மிடம் பேச வேண்டிய தேவை இந்தக் கதையில் இல்லாதது போல் தோன்றியது. அதே நேரத்தில் ஓவர் டோஸ் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணமும் காரணம். அதனால் தான் அவர்கள் நம்மிடம் நேரடியாகப் பேசவில்லை.
தலைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு கதையின் ஓட்டம் புரிந்துவிடும் என்று தப்பாக எண்ணிவிட்டேன். பின்னூட்டங்களில் அதனை மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டியும் பலருக்குக் கதையின் ஓட்டம் புரியவில்லை தான். பதிமூன்றாம் அத்தியாயத்தில் எல்லாம் புரிந்த போது கதை நிறைவு பெற்றுவிட்டது. அதனால் மீண்டும் முழுக்கதையையும் படிக்க வேண்டிய தேவை இருந்தது. எத்தனை பேருக்கு அந்த பொறுமை இருக்கும்? இருக்காது தான். நானாக இருந்தால் மீண்டும் படித்திருக்க மாட்டேன். புரிந்த வரை போதும் என்று விட்டிருப்பேன். இரவிசங்கரும் பாலாஜியும் சொன்னது போல் நிகழ்காலத்தையும் முற்பிறவிகளையும் மாற்றி மாற்றியோ முற்பிறவிகளைப் பற்றி முதல் அத்தியாயங்களிலேயே குறிப்பாகவோ சொல்லியிருக்கலாம். வருங்காலத்தில் அப்படி ஒரு கதை அமைந்தால் அப்படி எழுத முயல்கிறேன்.
குறு நாவல் என்று தான் எழுதத் தொடங்கினேன். அப்புறம் பெரிய தொடர் என்று நிறுத்திக் கொண்டேன். அதனால் ஆலய வருணனைகள் பிரகார விளக்கங்கள் என்று எடுத்துக் கொண்டதைச் சுருக்கமாகச் சொல்லிச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு பக்கம் அது கதையை நீர்த்துப் போகச் செய்ததாகத் தோன்றும் போது மறு பக்கம் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லாமல் அவசர அவசரமாக முடிந்துக் கொண்டு வந்தது போல் தோன்றுகிறது.
காலடி பட்டதால் பிறவிச் சுழற்சி என்பது புதிய கருத்தாக இருக்கலாம். அதனால் அது குறை போல் தோன்றுகிறது. ஆனால் ஆன்மிகத்தில் அதற்கும் இடம் இருக்கிறது என்பதால் அதனை எதிர்த் தோற்றமாகப் பார்க்க வேண்டியதில்லை.
இந்தக் கதையில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் தீனி அமைந்திருக்கிறது என்று இரவிசங்கர் சொல்கிறார். அது உண்மையும் கூட. அதனை நோக்கமாக வைத்தும் இந்தக் கதையை எழுதினேன். தனிப்பட்ட முறையிலும் நாத்திகக் கருத்துகளில் ஆர்வம் உள்ளவன் நான். அது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். என் பதிவுகள் எல்லாம் நான் ஆத்திக நம்பிக்கை மிகுந்தவன் என்பதைப் பறைசாற்றினாலும் உண்மையில் நான் அக்னாஸ்டிக் வகையைச் சேர்ந்தவன் என்று தான் நினைக்கிறேன். அதனால் இரு சாராருக்கும் உள்ள கேள்விகள் எனக்கும் இருக்கின்றன. அவற்றை இந்தக் கதையிலும் சொல்லிவந்தேன்.
Personal Choice Vs. Destiny என்பது மிகப் பெரிய விவாதம். அதனை இந்தக் கதையில் மிக ஆழமாக விவாதிக்காமல் தொட்டுச் சென்றேன். தேடல் தொடரும்.
விமர்சனம் செய்யும் போதே கூடுதலாக ஒரு கதையையும் சொல்லி நம்மை எல்லாம் மகிழ்வித்திருக்கிறார் தி.ரா.ச. சுகப் பிரம்மத்தைப் பற்றிய கதை தான் அது. அவர் சொன்ன பிறகு தான் கவனித்தேன். தொடரின் பாதி தூரம் வரை கண்ணனைப் பற்றி ஒரு சொல் கூட வரவில்லை. அப்படியிருக்க "முடிந்த வரை கண்ணனைப் பற்றி 'நுழைத்தேன்'" என்று கோவியார் எப்படி சொன்னாரோ? :-)
கதையில் என் சொந்த அனுபவங்கள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எந்த அளவிற்கு இவற்றில் உண்மை நிகழ்வுகள் எந்த அளவிற்கு கற்பனை என்பதை படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். :-)
என் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் ஒரு முறை முழுக்கதையையும் படித்து விமர்சனம் எழுதித் தந்த ஜீவி ஐயா, யோகன் ஐயா, கீதாம்மா, கோவி.கண்ணன், ஜீவா, இரவிசங்கர், பாலாஜி, தி.ரா.ச., மௌலி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தத் தொடர்கதையை குருஜி தாத்தா திரு. இராமன் ஐயப்பன் அவர்களின் திருவடிக்கமலங்களில் காணிக்கை ஆக்குகிறேன். திருமண நாளன்று நேரில் வந்து கந்தனை வாழ்த்தியது போல் என்றும் அவன் வாழ்க்கையில் துணையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.
Monday, January 21, 2008
புல்லாகிப் பூண்டாகி - மாதவிப் பந்தலார் & கௌசிகர் விமர்சனங்கள்
கண்ணபிரான் காலடி பெற்ற "அந்தக்" கல்லு பேசறேன் மக்களே! எல்லாரும் நலமா? பொங்"கல்" எப்படிப் போச்சுது? நம்ம குமரன் தன்னோட புல்லாகிப் பூண்டாகி தொடர் கதைக்கு விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டிருந்தாரு! நான் தானே கதையின் ஹீரோ! என்னையே இப்படிக் கேட்டாருன்னா, நான் எங்க போவேன்?
என் போன்ற கல்லுக்கு என்ன தெரியும் பெருசா? எண்ணும் எழுத்தும் அறியாத மண்ணு தானே கெட்டிப்பட்டு கல்லாக் கெடந்தது கெளரவர் சபையில்? ஏதோ கண்ணபிரான் கால் பட்டதால், அவர் அங்கே இடறி விழுந்தாரோ இல்லையோ, நான் இடறி விழுந்தேன்! எதுல-ன்னு கேக்கறீங்களா? அதாங்க பிறவிச் சுழலில்!
போச்சுடா, கண்ணன் கால்பட்டா, பிறவிச் சுழலில் மாட்டிக்கனும் போல இருக்கே! :-)
வள்ளுவர் முதற்கொண்டு வள்ளலார் வரை - எல்லாரும் என்னா சொல்றாங்க? இறைவன் திருவடிகளைப் பற்றினாத் தான் வீடுபேறு-ன்னு சொல்றாங்க!
இங்க என்னடான்னா, இறைவன் திருவடி பட்டதால் பிறவிச் சுழற்சி வந்துடிச்சி-ன்னு நம்ம குமரன் சொல்றாரு!அப்ப வள்ளுவர் சொல்றது உண்மையா? இல்லை குமரன் சொல்றது உண்மையா? - என்னமோ போங்க! அவரையே கேளுங்க! :-)
சும்மா ஒரு மூலையில் சிவனே-ன்னு கிடந்த என்னை, இந்தக் குமரனும், கண்ணனும் இப்படிப் பிறவிச் சுழலுக்குள் மாட்டி வுட்டுட்டாங்களே! இது அடுக்குமா? இதைச் சும்மா விடப் போறதில்ல! அதான் மரபுப் படி விமர்சனமா இல்லாம, உங்க கிட்ட நேரடியாவே பேசிடலாம்-னு நினைச்சிட்டேன்!
கல்லு பேசுமான்னு கேக்கறீங்களா? நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமே! பழிக்குப் பழி! வாங்க விமர்சனத்துல குமரனைப் போட்டுத் தாக்கிருவோம்! :-)
--------------------------------------------------------------------------------
நினைத்தாலே முக்தி தரும்-னு சொல்லுவாய்ங்க! அந்தத் திருவண்ணாமலையில் தொடங்குது கதை!
இரண்டு நண்பர்கள், கல்லூரி கலாட்டா, பக்தி வேடங்கள், பிரிவு, மீண்டும் சந்திப்பு என்று இயல்பான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து தான் கதையை ஆரம்பிக்கிறார். நண்பர்களான கந்தன் (எ) மோகன், கேசவன் இருவரின் குணச் சித்திரங்களையும் இயல்பாகப் படைத்துள்ளார்.
//தாத்தாவிடம் 'தாத்தா. இந்த நூறு ரூபாயை உங்க மருந்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்' என்றான். 'ஆகா பழி வாங்கிவிட்டானே. சொல்லியிருந்தால் நானும் ஏதாவது வாங்கி வந்திருப்பேனே' என்று நினைத்தான் கந்தன்//
- இது போல பலவற்றைச் சொல்லலாம்! அன்றாட வாழ்விலும் நண்பர்களுக்கிடையே இது மாதிரி சீன் போடறது என்பது சுவையான ஒன்று! ஆனால் கதை ஏதோ நண்பர்களைச் சுற்றித் தான் போகப் போகுது-ன்னு நினைக்கும் போது, வச்சாருங்க பாருங்க ஆப்பு!
கதை திடீரென்று களம் மாறுது!
திருவண்ணாமலை ஆலயம், லிங்கோத்பவர், கிரிவலம், கம்பத்து இளையனார்-னு வரிசையா ஒரு நாலு தொடர் முழுவதும் ஆலய தரிசனம், தல புராணம்-னு கொண்டு போயிட்டாரு! கதையுடன் அந்தப் பகுதிகள் எல்லாம் இயல்பா ஒட்டுச்சா?
அதை வாசகர்கள் தான் சொல்லனும்! என்னைக் கேட்டா ஒட்டலை-ன்னு தான் சொல்வேன்!
அப்போது கதைக்கு வந்த பின்னூட்டங்கள் பலவற்றில், மக்கள் எல்லாரும், "என்ன சொல்ல வரீங்க, என்ன சொல்ல வரீங்க"-ன்னு குமரனைக் கேள்விகளால் துளைச்சி எடுத்துட்டாங்க!
கதையின் பெயர் "புல்லாகிப் பூண்டாகி".
பொதுவாகக் கதையின் பெயர், ஓரளவுக்குக் கதை ஓட்டத்தைக் கோடிட்டுக் காட்டி விடும்! ஆனால் இந்தக் கதையில், இடைப்பட்ட சில அத்தியாயங்கள் மக்கள் பலருக்குக் குழப்பம் விளைவித்தது என்னவோ உண்மை தான்!
இது வேண்டுமென்றே குமரன் செய்த உத்தியா, இல்லை தானா அமைந்து விட்டதா-ன்னு தெரியலை!
ஏன் சொல்றேன்னா, நல்லாக் குழப்பிய பின் வரும் விசாரனையும் தெளிவும் தான், ரொம்ப நாள் நிக்கும்! :-)
இது மாதிரி பல தேடல்கள் திருவண்ணாமலையில் நடந்தேறியுள்ளன. ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார், சேஷாத்ரி சுவாமிகள், மறைந்த காஞ்சிப் பெரியவர்ன்னு பல மகான்களின் ஆன்ம வாழ்வு திருவண்ணாமலையைச் சுற்றித் தான் அமைந்தது! அதைக் கதாசிரியர் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்! பாராட்டுக்கள்!!
--------------------------------------------------------------------------------
சரி...ஒன்னுமே புரியாம, ஆலய தரிசனம் பண்ணிட்டு மலைக்கு மேல வந்தா... தாத்தாவின் அடுக்கடுக்கு கேள்விகள்! அதில் விறுவிறுப்பு கூடிப் போனது என்னவோ நிஜம்!
இங்கு தான் கதையின் ஓட்டம் எப்படி-ன்னு கொஞ்சம் பிடிபட ஆரம்பிச்சுது! அப்போது கூட சில பேர் "ஒன்னுமே புரியல உலகத்திலே"-ன்னு பாட்டு பாடிக்கிட்டுத் தான் இருந்தாங்க! :-)
ஆன்மீகத்தில் இக்காலத் தலைமுறையின் கேள்விகளை குமரன் நன்கு முன் வைத்துள்ளார், தாத்தாவின் கேள்விகள் மூலமாக! சாம்பிளுக்கு இதோ:
1. "அடியார்ன்னா யாரு?"
2. "பொண்பிள்ளைங்களுக்கு அடியார்கள் கணவராகணும். சரி. ஆண்பிள்ளைகளுக்கு எப்படி?"
3. "இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?" - மடக்கிவிட்டோம் என்று நினைத்தான்.
4. ஜாதகம் இன்டிகேட்டர் தான் கன்ட்ரோலர் இல்லை. It indicates what can happen due to past actions. It does not control what will happen.
The control is with you. You are the one who will decide the choice you want to make."
குமரன் கிட்ட ரொம்ப புடிச்ச விஷயமே, திடீர் திடீர்-னு பாட்டு பாட ஆரம்பிச்சிடுவாரு! :-)
இந்தக் கதையில் பல இடங்களில் திருவெம்பாவை, சிலப்பதிகாரம், அன்னமாச்சார்யர், ஜயதேவர் பாட்டை எல்லாம் இடையிடையே கொடுத்துள்ளாரு! தெலுங்குப் பாட்டுக்குப் பொருள் தெரியலைன்னாலும் பாட்டை அனுபவிச்சிக் கேட்டுக்கிட்டு இருந்தேனா?.....
திடீர்-னு பார்த்தா கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிட்டாரு! அதாங்க, ப்ளாஷ்பேக்!
அஸ்தினாபுரம் சபையில், கண்ணன் உள்ளே வரும் காட்சியை எழுதும் போது, கர்ணன் படம் பாத்துக்கிட்டே எழுதினாரான்னா தெரியாது! ஆனா ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் புட்டு புட்டு வச்சிருக்காரு! இருக்காதா பின்னே...என் கதையை இங்கிருந்து தானே ஆரம்பிக்கிறாரு!
--------------------------------------------------------------------------------
அடுத்த பதிவுல கடம்ப மரம்! பழனி மலை! போகர் சித்தர்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல பருந்து! கருடன்! தஞ்சைக் கோவில்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல நரசிம்ம தாசன்! - அப்ப நான் எங்கே போனேன்?
அடுத்த பதிவுல ஜகன்மோகன் - அப்ப நான் எங்கே போனேன்?
என்னய்யா கல்லு தானே ஹீரோ? சம்பந்தா சம்பந்தமே இல்லாம கதையில கண்ட பேரும் வராங்களே! -ன்னு மக்கள் புலம்புகிறார்கள்! "புல்லாகிப் பூண்டாகி" -ன்னு கதையின் தலைப்பை மறந்து போனார்கள்!
ஆனா அடுத்த பதிவுல தாத்தா வந்து அத்தனையும் கோர்த்து விட்டுட்டாரு! பல பேருக்கு அப்பத் தான் வெளங்குது! ஆகா அத்தனையும் முற்பிறவிகளா?
கதையில் கூட நம்மால ஒரு சாதாரண விஷயத்தைக் கோர்க்க முடியலையே!
நாம எப்படி நம்ம முற்பிறவிகளை எல்லாம் ஒன்னா கோர்க்கப் போகிறோம்? - ஹிஹி! இந்தச் சிந்தனையைத் தான் கதை எனக்குத் தூண்டி விட்டது!
கதையை முடித்த விதமும் அருமை! முடிக்காமல் முடிப்பது-ன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி!
இறந்து போன தாத்தாவை முதலில் அவன் பார்க்க, பின்னர் இவனும் பார்க்கிறான்! இது என்ன மாயையா? இல்லை வாசகர்களைப் பயமுறுத்த குமரன் கையாண்ட டெக்னிக்கா?
இதுக்கு விளக்கம் எல்லாம் ஒன்னுமே கொடுக்காம...கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கணக்கா கதை படீரென்று முடிந்ததே சிறப்பு!
--------------------------------------------------------------------------------
பூக்கள்:
1. கதையில் படங்களும் பாடல்களும் தேர்வு செய்த விதம் நன்று!
2. அதே போல் மாணிக்கவாசகரின் சிவபுராணப் பாடலில் - கல், மரம், பறவை, மனிதர் - இந்த நான்கு பிறவிகளை மட்டுமே தொட்டுச் சென்றதும் நல்லது தான்! பரிமாணத்துக்குப் பரிமாணமும் ஆச்சு! சுவை குன்றாமலும் ஆச்சு!
3. ஆங்காங்கே ஆன்மீகக் குறிப்புகள் - நிர்விகல்ப சமாதி, பஞ்சகோசம்-ன்னு சொல்லுவது, கொஞ்சம் அடிமட்ட வாசகனைப் பயமுறுத்துவது போல் தெரியும்! ஆனால் அதைத் தைரியமாகத் தான் தொட்டுச் சென்றுள்ளார் குமரன்!
4. புராணம் = புரா+நவம் = பழசு+புதுசு என்று சொல் ஆராய்ச்சிகளும் கதையில் நடுநடுவே சொல்லியது இன்னொரு சிறப்பு. அவர் வாசிப்பு அனுபவத்தை நமக்கும் கொட்டிக் கொடுத்துள்ளார்! நன்றி குமரன்!
கற்கள்: (அட, கல்லு விமர்சனம் செய்யுதுன்னா, கல்லும் வீசத் தானே செய்வாங்க! :-)
1. கதையில் இன்னும் உரையாடல்கள் வேண்டும் குமரன்! இல்லையென்றால் ஆன்மீகச் செய்திக்கோர்வை ஆகி விடும் அபாயம் உண்டு! தாத்தா-கந்தன் உரையாடல் தான் கதையின் முக்கிய கட்டம்! அங்கு உரையாடல்கள் இருந்தன! ஆனால் துவக்கத்தில் ஆலய தரிசனமாகப் போய்விட்ட படியால், உரையாடல்கள் குறைந்த துவக்கமாகத் தான் இருந்தது.
2. அதே போல் ஆங்காங்கு மகான்களைக் (சைதன்யர், இராமகிருஷ்ணர், கருவூரார்) காட்டிய நீங்கள், இவர்கள் நம்மிடம் பேசக் கூடிய வாய்ப்பை விட்டுட்டீங்க.
3. கதையின் இணைப்பைக் கொஞ்சம் முன்னரே பூடகமாகவாச்சும் சொல்லி இருக்கலாம்! இதனால் கதையின் ஓட்டம் பல பேருக்கு முதலிலேயே புரிந்திருக்கும்! தனித்தனிக் கதையா இருக்கேன்னு ஒன்னும் புரியாமல், (குமரனை அறியாத) சில வாசகர்கள், மீண்டும் வராமல் போகும் அபாயம் உண்டல்லவா? - ஒட்டு மொத்தத்தையும் பிளாஷ்பேக்காக கொடுத்ததால் தான் இப்படி ஆனது!
4. ஆலய வர்ணனைகள், பிரகார விளக்கங்கள் என்று கதையின் ஆழத்தை நீர்த்துப் போகச் செய்திருக்க வேண்டாம்! நாவல், புதினம் என்றால் ஓக்கே! ஆனால் இது சிறிய தொடர் அல்லவா?
5. காலடிபட்டதால் பிறவிச் சுழற்சி என்பது மிகவும் சிக்கலான உதாரணமாகப் போய்விட்டது! இறைவன் காலடி பட்டுச் சாபம் நீங்கியவர்கள் பல பேர் உள்ளார்கள். அதற்கு எதிர் தோற்றம் போல் உருவாகி விட்டது! - இதை வேறு மாதிரி கையாண்டு (காலாண்டு) இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து!
--------------------------------------------------------------------------------
பொதுவா ஆன்மீகத் தேடல்கள் பற்றிய விஷயங்களில் ஆத்திகர், நாத்திகர் ரெண்டு பேருக்குமே ஆர்வம் மிகுதியா இருக்கும்!
முன்னவருக்குத் தேடல் எப்படி அமையுமோன்னு ஒரு ஏக்கம்!
பின்னவருக்குச் சாடல் எப்படி அமைக்கலாம்னு ஒரு ஆர்வம்! :-)
இதைக் கதாசிரியர் (அட, நீங்க தான் குமரன்!) நன்கு புரிந்து கொண்டு தான் கதையை நகர்த்தி உள்ளார்! இரு சாராருக்கும் இந்தக் கதை தீனி போடுகிறது!
ஆழ்மனம் இல்லறத்தை விரும்பியதால், இன்னொரு பிறவி என்று சொல்லி இருந்தீர்கள்! It is your choice என்பது தான் சாரம் என்றால்...
கற்கள் தங்கள் Choiceகளைத் தாமே செய்து கொள்ள முடியுமா?
மனிதப் பிறவி தவிர மற்ற எல்லாப் பிறவிக்கும் இறைவன் தான் Choice செய்கிறானா? - என்பது மிகப் பெரும் கேள்வி! ஆனால் அதற்கு விடையைக் கதையில் தேட முடியாது! தேடவும் கூடாது!
ஆன்மீகப் பாதையைத் தேடுதல் பற்றிச் சொல்ல வந்த ஒரு கதை, அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்ய முடியாது தான்! அவரவர் நிலைகளில் இருந்து பார்வை மாறுபடும்!
ஆனாலும் இயன்ற வரை அனைத்து தரப்பினரையும், குமரன் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாகவே நான் கருதுகிறேன்!
பரந்து விரிந்த தத்துவங்களுக்குக் கதை மூலமாக நகாசு பூசுவது என்பது கொஞ்சம் கடினமான செயல் தான்!
அதைக் குமரன் முயன்று பார்த்துள்ளார்!
முயற்சி திருவினை ஆக்கும்! வாழ்த்துக்கள் குமரன்!
அடுத்த கதையில் புதிய நகாசு, புதுப் பொலிவுடன் மீண்டும் சந்திப்போம்!
இதோ "கல்"லாதான் சொல்லும் கவி!
புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழ்வாரே!
கல்லே, விமர்சனம் பண்ணிட்டு எங்க ஓடுற நீயி? அடுத்து நீ மரமாக வேண்டாமா?
வேண்டாம்! வேண்டாம்!!
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்!
கல்லானாலும் - வாசல் படியாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே! வர்ட்டா? :-)
***
என்னை பிளாக் உலகிற்கு அறிமுகபடுத்தியவரும், அதன்பின் எழுத ஆரம்பித்தபிறகு என்னை எழுத்தை நெறிமுகப் படுத்தியவரும் என்னால் குருஸ்தானத்தில் வைக்கப்பட்டவரும் என்னால் ஷண்மதச்செலவன் பட்டம் பெற்றவரும் திரு.குமரான்தான்
இவ்வாறாகிய சூழலில் இணைய படிப்புகளில் மிக முக்கியமாக நான் கூகிள்ரீடரில் வைத்திருக்கும் சிலரில் குமரனும் ஒருவர். அவரது அபிராமி அந்தாதிபதிவுகளாகட்டும், கூடல் பதிவுகளாகட்டும், படித்து ஒரு பின்னூட்டம்இடாது செல்வதில்லை. இதன் காரணமாகவே அவர் என்னையும் 'புல்லாகி-பூண்டாகி' கதைக்கு விமர்சனம் எழுத அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கதைஆரம்பத்திலேயே அழைத்தாலும், என்னால் தொடர்ந்து படிக்க இயலாத சூழல்,சற்றேரக் குறைய 15 நாட்கள் இணைய தொடர்பில்லாத நிலை. எல்லாம் முடிந்துவந்து பார்த்தால் பல இணைய ஜாம்பவான்கள் தமது விமர்சனங்களை மிக தெளிவாக தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாக சொல்லிவிடப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும், குமரன் கேட்டுக் கொண்டபடி,அவருக்களித்த வாக்கின்படி இதனை எழுதுகிறேன்.(நன்றிமௌளி) இதையே என் முன்னுரையாக வைத்து இதோ என் விளக்கம்.
புல்லாய் பிறவிதர வேனுமே கண்ணா புனிதாமான பல கோடி பிறவி தந்தாலும் பிருந்தாவனமதில் புல்லாய் பிறவிதர வேனுமே என்று பாடினார் ஊத்துக்காடு வேங்கடகவி.அந்தப் புல்லையே தலைப்பின் ஒரு பகுதியாக வைத்து கதையை 14 அத்தியாயங்களாய் பிரித்து அருமையாக ஒரு ஷேத்திராடனமாக நம் அனைவரையும் கூட்டிக்கொண்டு போகும் கதையாக எழுதினார்."ஆகா. ஆகா. இன்னும் ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். பின்னர் தான் கண்ணனை அடைவேன்"இப்படி ஒரு பைத்தியமா என்று எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்இதைப்படித்தவுடன் புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என் மனத்தே வழுவாதிருக்க வேண்டும் வரிகள் ஞாபகம் வந்தது
முதல் அத்தியாயத்தில் கந்தானாக தன்னையே பாவித்து எழுதியதாக எனக்குப்பட்டது. க்ளு இங்கேதான்" வீட்டுச் சாப்பாடு கேசவன் வீட்டில் கிடைக்கவே அடிக்கடி கேசவன் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். சரியான சாப்பாட்டு ராமன்"
முதல் அத்தியாயம் தொடங்கி ஏழு அத்தியாயங்கள் வரை திருவண்ணமலை மகிமை கதையின் ஓட்டத்துடன் இணைந்து செல்கிறது. பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் என்னெவெல்லாம் பார்க்கமுடியுமோ பார்க்கவேண்டுமோ
அத்தனையும் வரிசையாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஏழு அத்தியாயங்கள் சிவனுக்காக ஒதுக்கியிருக்கிறார் திருவண்ணாமலைக்கு செல்லும் எண்ணத்தை வெளிக்கொணர்ந்த பதிவு. நானும் ரமண மகரிஷியை குறிப்பிட்டு பின்னுட்டமும் இட்டிருந்தேன் அம்போஜ சம்பவனும்ம்(பிரும்மாவும்) அன்பான மாயவனும் அடிமுடி காணா அண்ணாமலைவாசன் அருமையாண பதிவு.
அடுத்த எட்டாவது அத்தியாயம் வைகுந்தவாசனை போற்றி எழுதியது. சுகரும் வருகிறார். சுக பிரும்மம்யார் தெரியுமா? வேதவியாசரின்
மகன் பராசரர் அவரின் மகன்தான் சுகபிரும்மம். அவருக்கு பிரும்மம் என்ற பட்டம் எப்படி வந்தது? சுகரை ஜனகமகாரிஷியிடம் பாடம் படிக்க(சீதையின் தந்தை) அவரின் தந்தை அனுப்புகிறார். வரும் சுகர் அரன்மனைக்கு வெள்ளியில் இருக்கும் மல்ர்தோட்டத்தை பார்க்கிறார், பின்பு அங்கு வாயிலில்இருக்கும் யாணையைப் பார்க்கிறார்,வாயில் காப்போனிடம்
வழிகேட்கிறார், வழியில் செல்லும் பெண்களைப் பார்க்கிறார், பின்பு படியின் மீது ஏறிச் சென்று ஜனகமகா ராஜனைப் பார்க்கிறார். சுகரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரை சோதிக்கும் வண்ணம் கேட்கிறார். இங்கு வந்தது முதல் நீ என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார். சுகர் சொன்னார்.
வரும்போது மலர்கள்பிரும்மத்தைப் பார்த்தேன்,காவலன்பிரும்மத்திடம் வழி கேட்டு யாணை பிரும்மத்தின் அழகை ரசித்து, பெண்கள் பிரும்மத்தை பார்த்துகொண்டே, படிகள்பிரும்மத்தின்ன்மீது ஏறி, ஜனக பிரும்மத்தை பார்த்தேன் என்றார்.உடனே ஜனகமகா ரிஷி சொன்னார் உனக்கு பாடம் சொல்ல எனக்குத் தகுதியில்லை அசையும் பொருள் அசையாப் பொருள் ஆண், பெண், மிருகம்,செடி, மலர், எல்லாவற்றையும் அந்த பிரும்மாகவே( கடவுளாகவே) பார்க்கும் எண்ணம் உள்ள நீங்கள் சுகப்பிரும்மம் என்று அழைக்கப்படிவீர்கள் என்றார். அப்பேற்பட்ட சுகரை கதையில் கொண்டுவந்தார். பின்னர் அடுத்த அத்தியாயத்தில் மால் மருகனை
பிறகு 9 10 வதில் பழனி முருகனையும் போகரின் வைபவத்தையும்,பருந்துகளின்
தன்மையையும் தஞ்சை கோவிலையும் விளக்கினார்.
11ஆம் 12ஆம் பகுதியில் நரசிம்ஹதாசனையும் ராமகிருஷ்ணபரம்ஹம்ஸரையும் காளி கோயிலையும்
நேராகவே பார்க்கும் வண்ணம் அளித்தார் கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்து எல்லா முடிச்சையும் அவிழ்த்து கதையை பூர்ணம் செய்தார்
போட்ட படங்களும் அருமை. நல்ல கதையையும் கருத்தையும் அளித்த கந்தன் சாரி குமரன் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Friday, January 18, 2008
புல்லாகிப் பூண்டாகி - மதுரையம்பதியின் விமர்சனம்
படித்துவந்தாலும், தற்போது ரொம்ப செலக்டிவாகவே படிக்கிறேன், அதிலும்
இணையத்தில் கேட்கவே வேண்டாம். திரட்டிகளில் எனக்கு பரிச்சயம் ரொம்பவே
கம்மி. இவ்வாறாகிய சூழலில் இணைய படிப்புகளில் மிக முக்கியமாக நான் கூகிள்
ரீடரில் வைத்திருக்கும் சிலரில் குமரனும் ஒருவர். அவரது அபிராமி அந்தாதி
பதிவுகளாகட்டும், கூடல் பதிவுகளாகட்டும், படித்த்து ஒரு பின்னூட்டம்
இடாது செல்வதில்லை. இதன் காரணமாகவே அவர் என்னையும் 'புல்லாகி-பூண்டாகி'
கதைக்கு விமர்சனம் எழுத அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கதை
ஆரம்பத்திலேயே அழைத்தாலும், என்னால் தொடர்ந்து படிக்க இயலாத சூழல்,
சற்றேரக் குறைய 15 நாட்கள் இணைய தொடர்பில்லாத நிலை. எல்லாம் முடிந்து
வந்து பார்த்தால் பல இணைய ஜாம்பவான்கள் தமது விமர்சனங்களை மிக தெளிவாக
தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாக சொல்லிவிடப்
போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும், குமரன் கேட்டுக் கொண்டபடி,
அவருக்களித்த வாக்கின்படி இதனை எழுதுகிறேன்.
மிகையான அலங்காரங்கள் இல்லாத பாத்திர அறிமுகம் முதல் பகுதியில். ஆனால்
அங்கேயே பெரியவர் கந்தனை மோகன் என்று பெயர் மாற்றம் செய்வதை கோடிட்டுக்
காட்டி அந்த குழப்பத்தை கந்தன் மனதிலும், வாசிப்பாளர் மனதிலும் விதைத்து
பின் கடைசிப் பகுதியில் அதன் காரணத்தை தெளிவாக்கியிருக்கிறார். இதனை கதை
சொல்லும் உத்தி என்றாலும், முதல் 3-4 அத்தியாங்களில் நான் குழம்பியது
என்னமோ உண்மை.
மற்றபடி குமரனின் மற்ற பதிவுகளை படிக்காத ஒருவர் இந்த கதையை மட்டும்
படித்தாலும் உணரும்படியாக முதல் அத்தியாயத்திலேயே இது ஒரு ஆன்மிக கதை
என்று கட்டியம் கூறும்படி அமைத்தது அழகே.
கோவிலைக் கண்டவுடன் உள்ளே நுழைய நினைக்கும் கந்தனது செயலை சொல்வதன்
முலமாக இரண்டாம் அத்தியாயத்திலேயே கந்தனது முந்தைய பிறவி எச்சங்களை
நமக்கு எடுத்துச் சொல்ல விழைகிறார் ஆசிரியர். ஆனாலும் நமக்கு கடைசி
அத்தியாயத்தை படித்தபின்பே அதனை உணர முடிகிறது. மூன்று மற்றும் ஐந்தாம்
அத்தியாயங்களில் கந்தன் உருவில் மனித மனத்தின் அலைபாயும் ஆசா-பாசங்களை
நன்றாக வார்த்தையாகளாக்கியுள்ளார். அதே சமயத்தில் பெரியவர் மூலமாக
தான-தரும செயல்களை ஊக்குவிக்கும் முகமாக சொல்லியிருப்பது இந்துமதக்
கோட்பாடுகளை அழகாக நடைமுறைப்படுத்த விழையும் செயல். நான்காவது அத்தியாயம்
முழுதும் கிரிவலத்திற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்வதாக
இருக்கிறது. பின்னூட்டத்தில் சிலர் கூறியது போல, இதுவரை திருவண்ணாமலை
செல்லாதவர்களுக்கு நான்கு மற்றும் ஐந்தாம் அத்தியாயம் ஒரு வரப்பிரசாதம்.
திருவண்ணாமலை செல்லும் சமயத்தில் அவர்கள் இந்த பதிவுகளை துணைக்கு
வைத்துக் கொள்ளலாம். ஐந்தாவது பதிவில் ரமணர் மற்றும் சேஷாத்திரி
ஸ்வாமிகளைப் பற்றியும் சொல்லி திருவண்ணாமலை தரிசனத்தை முழுதாக்குகிறார்.
8ஆம் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏதோ அருகிலிருந்து
பார்த்ததைப் போல் எழுதியிருந்தார் என்றால் மிகையாகாது. கல்லில்
ஆரம்பித்துவிட்டார் என்றால் அடுத்ததாகவே வந்துவிட்டது மரம். இச்சமயத்தில்
திரு. கே.ஆர்.எஸ் அவர்களும் நானும் சாட் செய்து, அடுத்து எப்படி
தொடருவார் என்று சிறு விவாதம் செய்தோம். பழனியப்பனும், போகரும் நன்றாகவே
கடம்ப மரத்தை வாழ்த்தினர். நவ பாஷாணத்தை பற்றிக் கூறி, கூட்டப்பட்ட அந்த
பாஷாணங்களின் சிறப்பினைச் சொல்லியிருப்பது ஆசிரியரின் பழனி பற்றிய
அறிவினை மட்டும் சொல்லாது, தற்காலத்தில் ஆங்கில மருத்துவத்தில்
நாகத்திடமிருந்து விஷமெடுத்து அதனை பாம்புக் கடிக்கு மருந்தாக்குவதை
நினைவில் கொண்டுவருகிறது.
புள்ளரசன் வடிவில் அழகாக எல்லோருக்குள்ளூம் இருக்கும் இறையருளை நன்கு
சொல்லியிருக்கிறார், நரசிம்மதாசன் வடிவில் எல்லா இறையடியார்களும் என்ன
பிரார்த்தனை செய்வார்களோ அதனை முத்தாய்ப்பாக சொல்லி பக்தி எதனை
நோக்கியதாக இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். கிருஷ்ண
பிரேமை என்பது எந்த அளவிற்கு இருக்கக் கூடும் என்பதற்கு நரசிம்மதாச
பாத்திரம் மிக அழகான படைப்பு. இந்த கதையினை படிக்கையில் எனக்கு கோபிகைகள்
கிருஷ்ணனின் தலைவலிக்கு மருந்து தந்ததை நினைவுபடுத்தியது. பக்தி
மார்க்கத்தின்
ஒன்பது விதங்களை அழகாக எடுத்தாண்டிருக்கிறார். நாயக-நாயகி பாவம் என்பதை
மாதுர்ய பக்தி என்று சொன்னாலும், மாதுர்ய பக்தி பற்றி இன்னும் கொஞ்சம்
விவரித்து சொல்லியிருக்கலாமோ?. அதெப்படி நாயக-நாயகி பாவம் மாதுர்யமாக
தெரிகிறது என்ற விளக்கம் சிறிது அதிகமாக இருந்திருக்கலாம். கதைமூலமாக
வாசகர்களுக்கு பல ஆன்மிக செய்திகளை தந்த ஆசிரியர் இதனை விளக்குவதன்
மூலமாக வாசகர்களுக்கு ஒரு அதிகப்படியான செய்தியினை கொண்டு
சேர்த்திருக்கும் என்று தொன்றுகிறது.
ஜகன்மோகனுக்குச் சொல்வதாக அமைந்த வாசனை பற்றிய உபதேசம், என் போன்ற
வாசகர்களுக்கு சற்றே சிந்தனையைத் தூண்டி எனது செயல்களை திரும்பிப்
பார்க்க வைத்தது என்றால் மிகையாகா. ஆனாலும், பஞ்ச கோசங்களை உணர்ந்த ஒரு
ஞானிக்கு இந்த வாசனை பற்றிய விளக்கமும், ராமகிருஷ்ணர் போன்றவர்களின்
நிலையும் எப்படி புரியாது போனது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக
இருக்கிறது. ஆசிரியர் நரசிம்ம தாசனுக்கு வரவேண்டிய கேள்விகளை இங்கு
கொண்டுவந்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அதாவது, முந்தைய நிலைக்
கேள்விகள், இவற்றைக் கடந்தபின்பே ஒரு ஞானி ஒருவாகிறான். இந்த கேள்விகள்
முழுதான பக்தி மார்க்கத்தவருக்குச் சரியே, ஆனால் பக்தி மார்க்கத்தை
கடந்து, ஞான மார்க்கத்தில் பஞ்ச கோசங்களை உணர்ந்து, முற்பிறப்பின் வாசனை
பற்றிய ஞானம் கைவரப் பெற்ற ஒரு ஆன்ம சாதனையாளனுக்கு இக் கேள்விகள்
தகுந்தவை அல்ல என்றே தோன்றுகிறது.
இன்டிகேட்டரும் கன்ட்ரோலரும் நன்றாக உபயோகம் ஆகியிருக்கிறது.
தெரிந்தவற்றை வைத்து தெரியாததை புரிய வைக்க முயல்வது இயல்புதான்
என்றாலும், இந்த எடுத்துக்காட்டு கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம்
பாராட்டும் விதமாகவே அமைந்துள்ளது. கீதையின் நான்காவது அத்தியாயம்
நன்றாகவே எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஜாதகம், கைரேகை போன்ற ஆன்மிகத்தின்
அடுத்தடுத்த பக்கங்களையும் மேலோட்டமாக தொட்டுச் சென்றது போல இருப்பினும்,
கதாசிரியர் தனது நிலைப்பாட்டினை உணர்த்தியே சென்றுள்ளதாக தெரிகிறது.
எல்லாவற்றையும் சொல்லி படங்களையும், எடுத்தாண்ட பாடல்களையும் சொல்லாது
விட்டால் இந்த விமர்சனம் முழுமையாகாது. எப்படித்தான் பொறுமையாக இவ்வளவு
படங்களை தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. அத்தனையும் தொடருக்கேற்ற அருமையான
படங்கள் மற்றும் பாடல்கள்.
எல்லாம் இருப்பினும் எனக்குள் ஒரு கேள்வி, ஆசிரியர் ஏன் கீத
கோவிந்தத்தையும், சைதன்யரையும் எடுத்துக் கொண்டார்?, ஏன் நமது புரந்தர
தாஸரையோ இல்லை ஊத்துக்காடு வெங்கட சுப்புவையோ எடுத்தாளவில்லை?. அதே போல
ரமணர் மற்றும் வள்ளலார் போன்றோரை விடுத்து ஏன் தோதபுரி?.
மதுரையம்பதி
Monday, January 14, 2008
புல்லாகிப் பூண்டாகி - கீதாம்மா (கீதா சாம்பசிவம்) அவர்களின் விமர்சனம்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழியரே!//
//புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!
எம்பெருமான்! மெய்யே!
உன் பொன் அடிகள் கண்டு,
இன்று வீடு உற்றேன்!//
""மேற்கண்ட இரு பாடல்களும் மனிதப் பிறவி எடுப்பதன் தாத்பரியத்தை எடுத்து உரைக்கிறது. இந்தப் பூவுலகம் தோன்றியதும் முதலில் முளைத்ததும் புல் என்றே சொல்வதுண்டு. அந்தக் கோடானுகோடிப் புற்களின் ஒன்றான ஒரு சிறிய புல்லின் வாழ்க்கைச் சரிதமே இந்தக் கதை என்று சொல்லவேண்டும். கதையா அல்லது நிகழ்வுகளா? என்று அதிசயிக்கும் வண்ணம் சற்றும் மாறுபட்ட கருத்தைச் சொல்லாமல் எந்தக் கருத்து முக்கியமாய் எடுத்து ஆளவேண்டுமோ அதை ஒட்டியே கதையின் அனைத்து அத்தியாயங்களும் செல்கின்றன. கதையின் நாயகன் கந்தனை நமக்கு அறிமுகப் படுத்தும்போது சற்றே அவனைக் கருவம் படைத்தவனாய் அறிமுகப் படுத்துகிறார். தாத்தாவிடம் பணம் கொடுக்கும்போது தன்னை அறியாமல் அது வெளிப்படுவதும், பின் கந்தன் மனம் வருந்துவதும் எப்போதும் நம் மனத்தில் நடக்கும் இருமனப் போராட்டத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. கூடவே எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாய்க் கதையின் கடைசியில் அடையாளம் காட்டப் படும் கேசவனோ கந்தனை அடி ஒற்றி நடப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே! எனக் கந்தனைத் தொடர்ந்தே செல்கிறான்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது அனைத்துத் தெய்வங்களையும் தரிசிக்கும் கந்தனுக்குச் "சுடலை"யில் காவல் காக்கும் ஈசனை வணங்குவதில் தெரியும் தயக்கமும், மயானத்துக்குச் சென்றால் குளிக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவன் இன்னும் மாயை என்னும் அழுத்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் இந்த விமரிசனத்துக்குத் தேவையில்லாத குறிப்பு ஒன்று. குஜராத் "ஜாம்நகர்" என்னும் நகரத்தில் பார்க்கவேண்டிய முக்கிய சுற்றுலா இடங்களில் அந்த ஊரின் மயானமும் ஒன்று. அந்த மயானத்துக்குச் சிறு குழந்தையைக் கூட எடுத்துக் கொண்டு வருவார்கள் குஜராத்தியர்கள். அங்கே அது மிகவும் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறதோடு அல்லாமல், அங்கே சென்று வந்தால் குளிப்பது போன்ற ஆசாரங்களும் நடைமுறையில் இல்லை. சர்வ சாதாரணமாய்ப் புதுமணத் தம்பதிகள் முதல் அனைவரும் வந்து சுற்றிப் பார்த்துச் செல்வதுண்டு.) பின்னர் அவனுக்குப் பிடாரி அம்மன் சன்னதியில் மட்டுமே மன அமைதி வந்து சேருகிறது. திருவண்ணாமலைக்கு ஒருமுறை கூடச் செல்லாத என்போன்றோருக்கு மிகச் சிறந்த வழிகாட்டி போல் உதவும் குறிப்புக்களைக் கொடுத்துள்ளார் குமரன். பின்னர் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் கந்தனுக்கு வரும் கனவுகளே மற்ற அத்தியாயங்கள்.
கல்லாய்த் தோன்றிய தன்னை உயிர்ப்பித்து முக்தி கொடுக்கவே கண்ணன் காலால் உதைபட நேர்ந்தது எனத் தாத்தா சொல்லுவதைக் கேட்கும் கந்தன் மட்டுமில்லாமல் நாமும் ஆச்சரியப் படுகிறோம். கூடவே கற்கள், மலைகள் பற்றிய விஞ்ஞானபூர்வச் செய்திகளும் கதையின் போக்குடன் சேர்ந்தே வந்து செல்கிறது. கழுகுகள் பற்றிச் சொல்லும்போதும் அப்படியே! பழகின காக்கை கூடத் தினம் தினம் சாதம் வைக்கும்போது வந்துவிடுகிறது. சற்று நேரம் ஆனால் கத்தி ஊரைக் கூட்டுகிறது. கருடன்களும் அப்படியே பழக்கலாம் என்று தோன்றினாலும் எங்கேயோ காட்டில் இருக்கும் கருடன்கள் அவை! ஆன்மீகவாதிகளால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இந்தக் கருடன் வலம் வருவது என்று தோன்றினாலும் பலமுறை சில குறிப்பிட்ட கோயில்களை மட்டுமே கருடன் சுற்றி வருவதையும் காணலாம். அதுவும் கும்பாபிஷேகம் என்று எப்படித் தெரியும் எனத் தோன்றினாலும் ஏதோ ஓர் கண்ணுக்குப் புலன் ஆகாத சக்தி ஒன்று அனைவரையும் இயக்குகிறது என்றவரையில் புரிந்து கொள்ள முடிகிறது.
மரங்களும் அப்படியே! இறைவனுக்கு உருவம் இல்லை என்பது சனாதனா தர்மக் கோட்பாடு என்றாலும், நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்குப் புரியவைப்பதற்காக இறை உருவை நிர்மாணம் செய்தார்கள். அதை ஒரு மரத்தில் நிர்மாணம் செய்து அந்த மரத்தையும் சேர்த்து வழிபடச் சொன்னது நம் வாழ்வே இயற்கையோடு இயைந்தது என்பதைச் சுட்டிக் காட்டவே. ஆனாலும் காலப் போக்கில் அவை மாறித் தான் போய்விட்டது. கூடவே அநேக மரங்களும் அவற்றோடு போய்விட்டது! பின்னர் மனிதரில் தேவர் ஆன நரசிம்மதாசரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "உண்ணும் சோறும், பருகும் நீரும் கண்ணனே!" என்ற நிலையில் இருக்கும் நரசிம்மதாசன், குரு சைதன்யர் இன்னும் ஐநூறு பிறவிகள் இருக்கின்றன என்று சொல்லுவதைக் கேட்டு ஆனந்த நடனம் ஆடுகிறான். இதைக் கண்ட மற்றவர் வியந்தாலும் ஐநூறு பிறவிகளிலும் கண்ணனை மறவாமல் இருக்கவேண்டும் என்ற நரசிம்மதாசனின் பக்தியை நினைத்தால் உண்மையிலேயே "அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற தமிழ் மூதாட்டியின் சொல்லின் உண்மையில் மெய் சிலிர்க்கிறது.
அடுத்து ஜகன்மோகன் ஆனபோதோ இராமகிருஷ்ண பரமஹம்சரின் யோகநிலையைப் பார்த்து வியப்புறுவதும், திருமணம் என்ற பந்தத்தால் ஆன்மீகம் தடைப்படாது, மனையாள் துணை இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதும் உணர்ந்து கொள்வதோடு அல்லாமல் நம்மையும் உணர வைக்கிறார்.
//ஆனால் இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை சாத்தியப்பட்டது?"//
இந்தக் கேள்விக்குப் பதில் முழுமையாக ஜகன்மோகனுக்குக் கிடைக்கவில்லை. சிருஷ்டியின் ரகசியம் அறிய முடியுமா? என்றாலும் ஓரளவு சொல்கிறார் குருநாதர் தோதாபுரி:
//ஜகன்மோகன். அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும். உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவல்களும் உன் முந்தைய பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாசனையே. முழுமையடையாத அந்த அனுபவங்கள் தான் உன்னை மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆன்மிக வாழ்வில் நன்கு முன்னேற்றமடைந்த உனக்கு அந்த அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டாலும் வழி தவறிப் போக இயலாது. அதனால் கவலை வேண்டாம்"//
ஜகன்மோகனுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கொஞ்சம் கவலை நீங்குகிறது.
மறுநாள் தூங்கி எழுந்து அனைத்தையும் யோசித்துக் குழம்பும் கந்தனின் மனதை ஒருமைப் படுத்தும் தாத்தா அவன் முன்பிறவிகள் அனைத்தும் அவன் கனவில் வந்தவை எனத் தெளிவு படுத்துவதோடு அல்லாமல் இப்பிறவியிலும் அவனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும் என உறுதிபடவும் சொல்லுகிறார். ஜாதகம், கைரேகை என்பது பற்றியும் அவனிடம் கூறுகிறார். (இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.என்னோட பள்ளி நாட்களிலேயே என் ஜாதகம், பார்த்தும், கைரேகை பார்த்தும் பல வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கூறிய என் நண்பன் "சிவா" கூறிய அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது. ஆனால் சொல்பவர்களின் கணக்கு மிகத் துல்லியமாய் இருக்கவேண்டும்.) தாத்தா சொல்லுவதை ஏற்க முடியாத கந்தனோ, அறிவுபூர்வமாய் அவருடன் வாதாடுகிறான். ஆனாலும் தாத்தா சொல்லுவதும் ஏற்கக் கூடியதாயே உள்ளது. இந்த உலக அனுபவங்களை இன்ப, துன்பங்களை, இல்வாழ்வின் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் விதமாயே அவனின் இப்பிறப்பு அமைந்துள்ளது என்றும் கூறும் தாத்தா இப்பிறவியிலும் அவன் ஆன்மீகவாதியாகவே இருப்பான் எனவும் முன் பிறவித் தொடர்புகளும் தொடரும் என்றும் புதிய தொடர்புகள் உண்டாகும் எனவும் சொல்கின்றார். கேசவன் அவனை எல்லாப்பிறவியிலும் தொடர்ந்து வருவதாயும் சொல்கின்றார்.
என்றாலும் அமைதி அடையாத கந்தன் தான் ஏன் வெளிநாடுகளில் பிறக்கவில்லை என்று எண்ணியதோடல்லாமல் தாத்தாவையும் கேட்கின்றான். அவன் வெளிநாடுகளிலும் பிறந்திருப்பதாயும், பெண்ணாய்க் கூடப் பிறந்திருப்பதாயும் சொல்லும் அவர் பதிலில் அவ்வளவாய்த் திருப்தி அடையவில்லை கந்தன். என்றாலும் மேலும் அவரைக் குடைகின்றான். தாத்தா தான் அவதாரமா எனவும் கேட்கின்றான். இல்லை, என்று கூறும் அவர் அவனின் ஆன்மீகப் பயிற்சி பற்றி இப்பிறவியிலும் அவன் தொடரவேண்டும் என்பதை நினைவு படுத்த வந்த ஒருவர் எனவும், ஒவ்வொரு பிறவியிலும் ஒருத்தர் வருவார்கள் நினைவு படுத்த என்றும் சொல்கின்றார். ""
இத்தனையும் திருமணம் ஆகிப் பத்துவருடங்கள் ஆகும்போது நினைக்கும் கந்தனுக்குத் தன் திருமணத்துக்கு அழைக்கச் சென்ற போது தாத்தா இறந்து போனதும், ஆனாலும் அவர் தன் திருமணத்துக்கு வந்து வாழ்த்துவேன் என்று சொன்னமாதிரி வந்து வாழ்த்தியதைக் கண்டதும், தான் மட்டுமே கண்டோம் என நினைத்த ஒன்றை நண்பன் ஆன கேசவன் கண்டிருக்கிறான் என்று சொல்வதும் குழப்பத்தை அதிகப் படுத்துகிறது. இவை அனைத்தையும் நினைக்கும் கந்தனுக்கு ஏற்படும் குழப்பங்களும், கேள்விகளும் அதற்கான விடைகளும் இன்னும் கிடைக்கவில்லை. காலம் தான் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். கந்தன், அவன் மனைவி, இருகுழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நல்லாசிகளும். கூடிய சீக்கிரம் கந்தன் தன்னை அறிவான்.
பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாட்டுக்களும், அர்த்தங்களும், சுலோகங்களும், அதன் அர்த்தங்களும், படங்களும் என்று கண்ணை மட்டுமின்றி கருத்தையும் கவரக் கூடியதாய் உள்ளது இந்தப் பதிவு. அதுவும் திருவண்ணாமலை பற்றிய பதிவுகளில் வரும் படங்கள் அனைத்தும் அருமை. புதிதாய் முதல் முதல் எழுதுகிறார் என்று ஒரு இடத்தில் கூடத் தோன்றாத படிக்கு எழுதி இருப்பதும் குமரனின் எழுத்து வல்லமைக்குச் சான்று.
Sunday, January 13, 2008
புல்லாகிப் பூண்டாகி - விமர்சனங்கள்
'புல்லாகிப் பூண்டாகி' என்ற தலைப்பில் அடியேன் எழுதிய ஒரு தொடர்கதையைத் தொடர்ந்து படித்து ஊக்குவித்த எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையைப் படித்ததோடு நில்லாமல் அந்தக் கதையின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி அடுத்த முறை இப்படியொரு முயற்சி நானோ மற்றவர்களோ எடுக்கும் போது எனக்கும் அவர்களுக்கும் உதவியாக இருக்கும் வண்ணம் விமர்சனங்களை எழுதித் தரும் படி நண்பர்களிடம் கேட்டுக் கொண்டேன். வேண்டுகோளுக்கு இணங்கி சில நண்பர்கள் விமர்சனங்களை எழுதித் தருகிறார்கள். எல்லோருடைய விமர்சனங்களும் வந்த பின்னர் மொத்தமாக இடலாம் என்று எண்ணினேன். ஆனால் விடுமுறைக்காலமாக இருப்பதாலும் வேலைப்பளுவினாலும் சில நண்பர்களிடமிருந்து இன்னும் அவர்களின் விமர்சனம் வரவில்லை. இதுவரை விமர்சனம் எழுதித் தந்தவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களது கருத்துகளை இங்கே இடுகிறேன். இனிமேல் எழுதித் தரப்போகிறவர்களுக்கும் நன்றி சொல்லி அவர்களது கருத்துகளை அடுத்த இடுகையில் இடுகிறேன். இந்த விமர்சனங்களைப் படிக்கும் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கேயோ தனியாக உங்கள் விமர்சனங்களாகவோ எழுதித் தாருங்கள். நன்றிகள். வாழ்க வளமுடன்.
****
திரு ஜீவி ஐயா அவர்களின் விமர்சனம்:
அன்புள்ள குமரன்,
கதையை முடித்து விட்டீர்களே?.. நல்லதொரு முயற்சி நன்றாகவே அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள்.
சென்ற அத்தியாயதிற்கான பின்னூட்டத்தில் விமர்சனக்கட்டுரை ஒன்றை இந்தக் கதைக்கு எழுத வேண்டி நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன்.
முதலில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
நல்ல பல செய்திகளை ஒரு கதையின் மூலமாக வெளிப்படுத்த முயன்றிருக்கும் நண்பர் ஒருவருக்கு, அவரது செயல் நன்கு அமைய வேண்டி, கதைகள் எழுதுவதில் ஓரளவு பரிச்சயம் கொண்டிருந்ததினால், நம் பங்குக்கு நாமும் சில யோசனைகளைச் சொல்லலாம் என்கிற உரிமையில், கதை எழுதும் கலையில் உள்ள சில நெளிவு சுளிவுகளை உங்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவ்வளவு தான். நான் உங்களுக்குத் தெரிவித்தது கதையின் உள்ளடக்கம் சம்பந்தப்படாத, வெறும் 'எழுத்து' சம்பந்தப்பட்டதும், அதைச் சொல்லும் முறை சம்பந்தப்பட்டதும் தான். அடுத்த அத்தியாயத்திலேயே நீங்கள் அவற்றைக் கைக்கொண்டதைப் பார்த்தேன். சென்ற அத்தியாயத்தில் என்னை மீறி,'அந்த' வரிகளை சிலாகித்து ஒரு பின்னூட்டம் போட நேரிட்டது. அவ்வளவு தான் இந்தத் தொடரில் என் பங்களிப்பு. ஒரு பெரும் முயற்சியில், ஒரு துளி பங்கேற்ற என்னை, விமரிசனம் எழுதக் கேட்டுக் கொண்டது, உங்கள் பெருந்தன்மையையே காட்டுகிறது. நீங்கள் கேட்டுக்கொண்டபடி இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதப் புகின், இப்படிப்பட்ட சமாச்சாரங்களே எனது விமர்சனத்தில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ள நேரிடும். இருந்தும், இந்த கதை குறித்து ஆக்கபூர்வமான ஒரு விமரிசனம் தேவையா என்றால் நிச்சயம் தேவைதான். அடுத்த கதை எழுதுவதற்கு அது நிச்சயம் உங்களுக்கு உதவும் என்கிற அடிப்படையில் அது தேவைதான்.
தனது முதல் படைப்பைப் படைத்த ஒருவருக்கு, கறாரான விமரிசன பயமுறுத்தல்களைத் தவிர்த்து, ஊக்குவிக்கும் முறையில் சில பாராட்டுத் தட்டிக் கொடுத்தல்களே உடனடியான தேவை. அதுவும் நீங்கள் எடுத்துக் கொண்ட 'சப்ஜெக்ட்' மனம் போன போக்கில், நினைக்கும் எதையும் கற்பனையில் எழுதும் செய்தி இல்லை. சில ஆன்மீகச் செய்திகளைச் சுவைபடச் சொல்வதற்காக எடுத்துக் கொண்ட உருவம் கதையாக நேரிட்டதால், இயல்பாகவே அப்படிப்பட்ட கதைகள் எழுதுவதில் ஏற்படும் சில சங்கடங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டது. வெறும் விவரத் தொகுப்பாகப் போய்விடாமல், படிப்பவர்க்கு சலிப்பேற்படாமல் சொல்ல வேண்டிய அதிகபட்ச ஜாக்கிரதை உணர்வும் கொள்ள வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சில இக்கட்டுகள் இருந்தும், நீங்கள் வெற்றியடைந்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
திருவெம்பாவை பாடல்கள், கண்ணன் தூது, அருள்மிகு பழனியாண்டவர் -போகர் சமாச்சாரங்கள்,அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு- புள்ளரசன் பொற்காலன் வட்டமிடுதல், நரசிம்மதாசன்,ஜெயதேவர்,கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே வந்து ஜகன்மோகனில் நீங்கள் நின்று நிலைகொண்டபொழுது
கதை நன்கு களைகட்டி விட்டது. பின்பு கல்யாண காட்சியில் முடித்தும் சரிதான். பாக்கியை அடுத்துவரும் கதைகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
அதற்குள்--- வேறு என்னன்ன நகாசு வேலைகள் கதைகளில் செய்யலாம்,என்னன்ன உத்திகளை கைக்கொள்ளலாம், எங்கெங்கு நீட்டி- எங்கெங்கு குறைத்துக் கொள்ளலாம்,
எழுதுபவன், எங்கெங்கு அடக்கி வாசிக்க வேண்டும், எங்கெங்கு 'தான்' நுழைந்து கொண்டு படிப்பவனை தன்னுடன் கைபிடித்து அழைத்துச்செல்லலாம்--என்கிற சமாச்சாரங்களெல்லாம் உங்களுக்கு அத்துபடி ஆகியிருக்கும்.
கதைகளுக்கு, 'இவைல்லாம் எங்கு இவருக்குக் கிடைத்தன' என்று நாங்கள் மலைக்கும் அளவுக்கு நீங்கள் இட்டிருந்த படங்களைக் குறிப்பிடவில்லையெனில், பெரிய தவறு செய்தவனாவேன்.
கதையை நீங்கள் முடித்த பாங்கும் மிகுந்த நிறைவேற்படுத்தியது.
மேற்குறிப்பிட்டவையெல்லாம், கதையைப் படித்த, ஒரு கதைசொல்லியின் வெறும் குறிப்புகளாகத்தான் இருக்க முடியும்.
ஆனால், நம்மிடையே சீனா சார் போன்ற 'ரசனை' வரம் பெற்ற அருமையான் ரசனையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனது எழுத்துக்கு 'போஷாக்கு' ஊட்டுவது, இன்னும் இன்னும் எழுதத்தூண்டுவது அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற ரசனையாளர்களின் ரசிப்பு தான்.
அவர் எழுதப் போவதை நாமெல்லாம் சேர்ந்து படிப்போம்.
குமரன், வாழ்க..வளர்க!
நிறைய எழுதுங்கள்..படிக்கக் காத்திருக்கிறோம்.
***
திரு. யோகன் ஐயா அவர்களின் விமர்சனம்:
புல்லாகிப் பூண்டாகி...குமரன் தொடராக எழுதி; நானும் வாசித்தேன்.
அவருக்குள்ள புராண;இதிகாச அறிவுடன் ஆத்மீகத் தேடலின் பிரதிபலிப்பே இக்கதையின் உள்ளீடு. புராண ;இதிகாசத்தில் ஆர்வமிருந்தாலும் ; போதிய ஞானமற்ற எனக்கு இவை புதிய செய்திகளாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆத்மீகத்தில் நம்பிக்கை முக்கியபங்கு...." உண்ணும் சோறும்; தின்னும் வெற்றிலையும்" அவனே என நம்புபவர்கள் ஆத்மீக வாதிகள்.
குமரனை ஒருவருடமாக எழுத்தில் தெரியும்; அவர் மிகுந்த நம்பிக்கை மிக்கவர்.
அதனால் அனுமானிச சக்தி என ஆத்மீகத் துறையில் உள்ளோர் கூறும்; நடைமுறைச் சம்பவக் கோர்வைகள்; இறைநம்பிக்கையுடன் கைகோர்த்து இவர் எழுத்தில் சென்றது.
இவற்றை அதிகம் நான் நம்பாவிடிலும்...(என் இறை நம்பிக்கையை-கோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் கும்பிட வழி தா!)..மற்றவர் கூறுவதைக் கேட்கப் பிரியப்படுவேன். அந்த வகையில் இக்கதையில் சில வேளை இவை ;எழுதுபவர் சொந்த அனுபவமோ எனும் ஆவலைத் தூண்டும் படி இருந்ததால் வாசித்து முடித்தேன்.
ஒரு இடத்தில் மலைகள் பற்றிக் குறிப்பிடும் போது; மலைகள் எரிமலையிலிருந்து தோன்றியவை...என்று கூறுகிறார். அதை வாசித்த போது ;நான் அறிந்ததற்கு எதிர் மாறாக இருக்கிறதே இவர் கூற்று என நினைக்க அடுத்த வரிகளில்....எல்லா மலைகளும் எரிமலையில் தோன்றவில்லை. இமயமலை அப்படி தோன்றவில்லை என விஞ்ஞான பூர்வ உண்மையையும் கூறிச் சென்றார். அவர் பல பக்க வாசிப்பின் பிரதிபலிப்பு இது.
அடுத்து கழுகு பற்றி...கூறும் போது....கோவில் கோபுரத்தை வட்டமிடும் நிகழ்வு...இதே போல் தென் அமெரிக்க பழங்குடி; அவுஸ்ரேலியப் பழங்குடி மக்கள் கூட கழுகு ;வட்ட மிடுவதை நற்சகுனமாகக் கொள்ளுவதை படித்துள்ளதால்; இவர் கூற்றைத் தள்ள முடியவில்லை.
கடம்பமரம் பற்றிய பகுதி...நமது ஆத்மீக வாதிகள் எவ்வளவு தொலைநோக்குடன் இந்த மரங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றியது பற்றி சிந்தித்துள்ளார்கள் என்பது; பல மரங்கள் தல விருட்சமாக நிர்ணயித்ததில் புலப்படுகிறது. இப்போதும் பல முதியவர்கள் வேம்பு,அரசு மரத்தை அம்மையாகவும் ஈசனாகவும் போற்றுகிறார்கள்.இந்த நம்பிக்கை குறைவு இன்று சுற்று சூழல் மாசாக மாறி நம்மை வதைப்பதையும் நோக்கவேண்டியுள்ளது.
இப்படி காலம் காலமாக ஆத்மீகத்துக்குள்ள ஐயம் கலந்த செய்திகள்; இக்கதையில் இழையோடிய போதும்....ஏன்??? இருக்கக் கூடாது.என்ற எண்ணமும் தலை தூக்கியது.
இதுதான் அவர் எழுத்தின் வெற்றி எனக் கொள்கிறேன்.
கந்தனும்;கேசவனும் உரையாடல் பகுதிகள்...இன்றைய கணனி இளைஞர்கள் இப்படியும் உரையாடுவார்களா?? என ஐயுற வைத்த போதும்...
குமரன்; ராகவன்; ரவிசங்கர் கண்ணபிரான் கூட கணனியுள் தானே காலம் கழிக்கிறார்கள் என்பது என் அந்த ஐயத்தைத் தீர வைத்தது.இன்றைய இளைஞர் சமுதாயத்தின் அங்கத்தவர்கள் இவர்களுமே...
இதைத் தொடராகப் படித்த போது..எனக்கு அப்பப்போ கல்கி;கலைமகள் தீபாவளி மலர் ஞாபகம் வந்தது. அவற்றில் தான் இப்படிக் ஓவியங்களும்;நிழல்படங்களும் கூடிய தெய்வீகக் கதைகள்,திவ்ய தேசக் கதைகள் படிக்கக் கிடைக்கும்.
மிகப் பொருத்தமான படங்கள்;ஓவியங்கள்...இதை வாசிக்கும் போது, மேலதிக செய்திகளைத் தந்தது.கடம்பப்பூ முதல் முதல் குமரன் மூலமே படத்திலாவது பார்த்தேன். நல்ல பொருத்தமான பாடல் தேர்வுகளுடன் ஒரு திருக்கோவில் நாமும் சுற்றி வந்ததுபோல் இருந்தது.
இக்கதை எனக்குப் பிடித்தது போல்; பலருக்குப் பிடித்துள்ளதைப் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிகிறது.
இவ்வளவு விடயங்களையும் தொகுத்து, யாத்திரையில் கண்ட காட்சியுடன் இணைத்து கதையாக்கிய விதம்; இந்த கதைகூறும் யுக்தி பாராட்டுக்குரியதே...
***
திரு. ஜீவா அவர்களின் விமர்சனம்:
புல்லாகி பூண்டாகி - நிறைவுற்று விட்டது இந்தத்தொடர்.
நிறைவுறாமல் இருப்பது நம்மவர் கந்தனின் பிறவிச்சுழல்.
அச்சுழலில் சிக்குண்டு புல்லாகி பூண்டாகி மானிடப்பிறப்புமாகி
முன்னால் நடந்ததை சொல்லக்கேட்ட கந்தனுமாகி
அவற்றையெல்லாம் கூடலில் படிக்கக்கிடைத்த வாசகனுமாகி
தொடர் தனை இன்னும் ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்.
தன்னை எப்போதும் பார்ப்பவன் யாரென திரும்பிப்
பார்ப்பவர்களின் அருகாமையில் சும்மா இருப்பதே சுகம்
என்றாலும், கந்தனுக்கு அண்ணாமலையாரின் தரிசனமும்,
முற்பிறவியெல்லாம் கனவில் அந்தக் குன்றிலிட்ட ஜோதிபோல
தெள்ளத்தெளிவாக தெரிந்ததற்கு காரணம் என்ன?
சத்சங்கம். ஆம் - சத்சங்கம் - தாத்தாவின் ஆசியுடன்
கேசவனும், குமரனும், மணிகண்டனும் இணைய -
இணைந்து நீந்திக் கடந்திட -
இன்னமும் இருக்குது மிச்சம் - பிறவிச் சாகரம்.
தினம் தினம் வாழ்க்கைச் சிக்கல்களின் அல்லல்களில்
இருந்து விடுதலை பெற்றாலே போதும் என்று
காலம்தனை பிறவி பிறவியாய் கழித்தொழிக்க,
தெரியாமலே போயிருக்கக் கூடும் - நல்லவேளை,
கேசவனும், தாத்தாவும் கந்தனுக்கு கிடைத்தார்கள்.
கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வானா
தெரியவில்லை. இல்லை தன்னை மறுபடியும்
கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படப் போகிறானா தெரியவில்லை.
அல்லல் எனும் மாசறுத்தாட்கொளும் தெய்வமும்
அருகிலேயே இருக்கிறானாமே, பார்க்கலாம் நம்முள்ளே!
***
புல்லாகி பூண்டாகி - காலத்தின் (கோவி.கண்ணனின்) கடைக்கண் பார்வை:
நான் பொதுவாக பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதப்படும் தற்கால கதைகளை அதிகம் படிப்பதில்லை. காரணம் அவற்றில் பல முழுக்க முழுக்க விளம்பர உத்தியில் எழுதப்பட்டிருக்கும், அதுபோல் நூல்கள் தற்பொழுது மிகக் குறைவுதான். இப்படியெல்லாம் நடக்குமா ? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு பயந்தே அத்தகைய நூல்கள் அதிகம் வருவதில்லை. கவியரசர் கண்ணதாசன் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் அர்த்தமுள்ள இந்துமதம் இன்னும் 50 பாகங்களாவது கிடைத்து இருக்கும். தற்பொழுதும் கூட சாமியார் மகிமைகள் குறித்து பக்தர்கள், அடியார்கள் அவர்களிடம் பயன்பெற்ற அனுபவம் என புல்லரிப்பாக எழுதப்பட்டு கடைவிரிக்கும் கதைகள் ஓரளவு குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. தான் பெற்ற அனுபவம் பிறர் பெற வேண்டுமென்பதற்காகவும், ஒரு பக்தனாக சாமியாருக்கு அதிகம் அடியார்களைப் பெற்றுத் தரவேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் அவை எழுதப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த காக்கையின் கால் சரியாக பனம் பழம் மேல் பட்டு இருக்கிறது என்பதாகத்தான் எனக்கு புரியும். கோ - இன்சிடெண்ட் நடப்பதும் சில சமயம் வியப்புதானே. அதை புரிந்துக்கொள்வதில் பக்தியாளர்கள் உணர்சி வசப்பட்டுவிடுகிறார்கள் என்றே நினைப்பேஎன்
நம்பிக்கை என்ற பெயரில் நம்புவர்களை கடவுள் கைவிடுவதில்லை என்பது போல் தான் ஏறக்குறைய எல்லா நம்பிக்கை சார் கதைகளுமே இருக்கிறது. இல்லை என்றால் கொஞ்சம் பயமுறுத்தல் அதாவது 100 பிட் நோட்டீஸ் அடித்து பலருக்கும் அனுப்பவில்லை என்றால் உன் வீட்டில் துக்கம் நடக்கும், நடந்தது என்ற ரீதியில் எழுதி இருப்பார்கள். 24 x 7 ஆண்டவனுக்கு இவர்களை கண்காணித்துக் கொண்டே நல்லது செய்வதுதான் தொழில் என்றும், தன்னை தூற்றுபவர்களுக்கு தண்டனைத் தருபவராகவும் தான் இறைவனின் திருவுளம் இருக்கிறது என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். இதுபோல் இறைசக்தியை திரித்து கூறுவது தவறு என்றெல்லாம் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. பக்தியின் பெயரால் எதைச் செய்தாலும் புனிதம் தான். இதனாலேயே பக்திசார் கதைகள், அனுபவங்கள் இதையெல்லாம் செவிமடுப்பதோ, கண்ணிடுவதோ இல்லை.
நண்பர் குமரன் 'புல்லாகி பூண்டாகி' என்ற தொடர் எழுதிவருவதாகவும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று முதல் அத்யாயம் முடிந்ததும் மின் அஞ்சல் வழி தகவல் அனுப்பினார். 'நான் இதுபோன்ற கதைகளை படிப்பதில்லை, அப்படி படித்தாலும் நான் செய்யும் விமர்சனம் உங்களை புண்படுத்துவதாக அமையும்', என்று சொன்னேன். பதிலுக்கு 'பரவாயில்லை. நீங்கள் சொல்வதும் சரிதான் உங்களுக்கு கிண்டுவதற்காக சிலவிசயங்கள் இருக்கும், முடிந்தால் கருத்து கூறுங்கள் வற்புறுத்தவில்லை' என்றார். ஒருவாரம் சென்று என்ன தான் எழுதி இருக்கிறார் என்று முதல் அத்யாயத்தை திறந்து பார்த்தேன். அண்ணாமலையாரின் கோவில் படம், நான் சிறுவயதில் அப்பா அம்மாவுடன் சென்றதாக நினைவு, தொடர்ந்து படித்தேன். மேல் பூச்சு இல்லாமல் இயல்பான எழுத்து நடையில் எழுதி இருந்தார். கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேரடியாக அவர்காட்டிய இடங்களுக்கெல்லாம் சென்று வருவது போன்று படிக்கும் போது உணர்வூட்டியது.
அவர் அங்கெல்லாம் சென்ற போது, பின்னாளில் எழுதவேண்டும் என்று அப்போது நினைத்தாரா தெரியவில்லை. நேற்று சென்று வந்த இடம் போல் மிகத் தெளிவாக, கோவில் அமைப்பு, அதில் உள்ள தெய்வங்கள், அதற்கான சிறப்புக்கள்,வழிபாடுகள் மற்றும் திருவண்ணாமலையில் மலை வலம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எழுதி இருந்தார். சொந்த கற்பனையில் எழுத்துக்கள் மட்டும் இருந்தது அதில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வருபவை என்பதால் இவராக எதையும் இடைச் சொருக வில்லை என்பது புரிந்தது.
வைணவராக இருப்பவர் ஒரு சிவ தலத்தைப் பற்றி சிறப்பாக எழுதுவது பாராட்டத்தக்கது, கூடவே எங்கெல்லாம் கண்ணன் புகழ் பாடமுடியுமோ அதையெல்லாம் சரியாக கையாண்டு இருக்கிறார் :). போகர், நவபாஷன பழனியாண்டவர் சிலை, பழனி மலை, இராமகிருஷ்ணர், தக்ஷிணேஷ்வரம், சாரதா தேவி, காளி மாதா, கருடன் கதை , மகாபாரததில் சில பகுதிகள், அருணகிரி நாதர் என்று சிறு சிறு கதைகளை சேர்ந்திருக்கிறார். இவருடைய தொடரில் பொருத்தமான படங்களை அங்கங்கே சேர்த்திருப்பது தொடருக்கு கூடுதல் சிறப்பு. ஸ்லோகங்களை தேவையான இடத்தில் இட்டு அதற்கான பொருளுரையும் எழுதி இருப்பதால் கதையோடு சேர்த்து படிக்கும் போது, ஸ்லோகங்களும் கவனம் பெறுகிறது.
முதல் முயற்சி என்பதாக தெரியவில்லை, வளமான கற்பனையும், அனுபவத்தை அதில் சேர்த்து எழுதுவது என்பதை சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் மையப்புள்ளி, மறுபிறவி பற்றிய சிந்தனைகள், அதன் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை விமர்சனம் செய்யவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால இதுபோன்ற மறுபிறவி கற்பனைகள் பலர் கொண்டிருப்பதால் அதை விமர்சனம் செய்வது, விவாதிப்பது வீண் என்றே நினைக்கிறேன். மற்ற விமர்சனங்களை அவருடைய பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால், அதன் தொடர்பில் எழுதும் போது எழு(த்)தும், கருத்தும் இயல்பாக வெளிப்படும், அது இவரது தொடரில் நிறையவே இருக்கிறது. அடுத்த தொடராக 'ஊனாகி உயிராகி' விரைவில் எழுத வாழ்த்துகள். :)
அன்புடன்,
கோவி.கண்ணன்
****
புல்லாகி பூண்டாகி - வெட்டிப்பயலின் எண்ணங்கள்:
புல்லாகி பூண்டாகி - நான் ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிற ஆன்மீக புனைவு!. இது இந்த கதைக்கான விமர்சனமல்ல. என் எண்ணங்கள். அவ்வளவே!!!
புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
என்ற மாணிக்கவாசகரின் பாடல் தான் கதையின் கரு.
கலியுகத்தில் திருவண்ணாமலையில் தொடங்கும் கதை நம்மை துவபரயுகத்து கண்ணனிடம் அழைத்து சென்று, அங்கிருந்து பழனி மலையில் குமரனின் நவபாஷான சிலை உருவாவதை அருகிலிருந்து பார்க்கும் பேற்றை கொடுத்து, பெரிய கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்து சென்று பிறகு கிருஷ்ண பஜனில் பங்கெடுக்க வைத்து அங்கிருந்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தரிசிக்கும் பேற்றை கொடுத்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்துவிடுகிறது.
புல்லாகி பூண்டாகி என்ற தலைப்பே கதையை ஓரளவு விளக்கிவிடுகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதும் மலையே இறைவனின் திருமேனி என்று புகழ்பெற்றதுமான திருவண்ணாமலையின் சிறப்புகளை சொல்லி ஆரம்பிக்கிறது கதை.
பொதுவா எனக்கு கோவிலுக்கு போனா அவசரம் கூடாது. பொறுமையா நிதானமா பார்த்துட்டு வரணும். பத்து கோவிலுக்கு வேக வேகமாக செல்வதைவிட ஒரு கோவிலில் அமைதியாக சாமி கும்பிடலாம்னு நினைக்கிற ஆள். இந்த கதையை ஆரம்பிச்சப்ப எனக்கு அது தான் பிரச்சனை, வேகமா ப்ளைட் பிடிக்க போற மாதிரி கோவிலை விட்டு வந்த மாதிரி இருக்கு.
தல வரலாறு (தலயோட வரலாறு படம் இல்லைங்க) கதையா மாறிடுமோனு ஒரு பயத்துல கூட இதை செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. ஆனா இந்த மாதிரி கதைகள்ல வாசகர்களுக்கு ஆயிரம் கதை கேட்டாலும் அலுக்காது என்றே தோன்றுகிறது. கோவிலை இன்னும் பொறுமையாக சுற்றி காண்பித்திருக்கலாம். ப்ளாஷ் பேக் போகற வரைக்கும் ஒரு பதட்டம் தெரிஞ்சது. ஆனா ஃப்ளாஷ் பேக்ல அந்த பதட்டம் போய் நிதானம் வந்து அருமையாக பயணிக்க தொடங்கியது. அதை எப்படி இணைக்க போகிறார் என்று தெரிந்திருந்தாலும் எப்பொழுது இணைக்க போகிறார் என்ற ஒரு தவிப்புமிருந்தது உண்மையே (இன்னும் எத்தனை பிறவியப்பானு) .
கதை ஒரு விதத்துல பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது. எனக்கும் அது தான் பிடிச்சதுங்கறதால ஒட்டுதல் ஏற்பட்டுச்சு. அதே சமயம் ராம கிருஷ்ணரோட அருளுரை கேட்கலாம்னு ஆவலோட இருந்த எனக்கு அது கிடைக்காதது ஒரு விதத்துல ஏமாற்றமே :-( (ஆனா அவரை அருகிலிருந்து பார்க்கும் வண்ணம் எழுதியதற்கு என் பாராட்டுக்கள்)
என் மனதில் எழுந்த பல கேள்விகளில் முக்கியமானவற்றை கந்தன் அந்த தத்தாவிடம் கேட்டதும் ஒரு விதத்தில் என்னை திருப்தி படுத்தியது. அதில் முக்கியமானவை
"பாகவதத்தைச் சுகர் வாயாலேயே கேட்ட எனக்கு ஏன் தாத்தா அப்பவே முக்தி கிடைக்கலை?",
"தாத்தா. வந்த கனவு எல்லாம் இந்தியாவுல தான் நடந்ததா இருக்கு. இதெல்லாம் நான் படிச்ச கதைங்களை என் மனசு கனவுங்களா ஏன் காமிச்சிருக்கக் கூடாது? இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?"
"அப்ப ஏன் அதெல்லாம் என் கனவுல வரலை?"
"உனக்கு இந்தப் பிறவியில எது புரியுமோ அது மட்டும் தான் வந்திருக்கு. சவுத் அமெரிக்கா பிறவியும் கொஞ்சம் கனவுல வந்தது. ஆனா உனக்கு நினைவில்லை. ஏன்னா அது உனக்குப் புரியலை"
கதையை முடித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல் அவர் தேர்வு செய்த படங்களும் அருமை.
குமரன், அடுத்த கதைக்கு கதையோட ஓட்டத்தை ஒரு முறைக்கு இரு முறை யோசித்து ஆரம்பித்தால் கதை பட்டையை கிளப்பும் என்பது என் எண்ணம் (ஃப்ளாஷ் பேக்கும், நிகழ் காலமும் ஒன்றாக கொண்டு சென்று ஒரு புள்ளியில் இணைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்)... சரி சீக்கிரமே நெக்ஸ்ட் கதைல மீட் பண்ணலாம் ;)
Thursday, January 03, 2008
புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 14 (நிறைவு)
ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகிவிட்டது திருவண்ணாமலையில் தாத்தாவோடு பேசி. இன்றோடு கந்தனுக்கு முப்பத்தைந்து வயது நிரம்பிவிட்டது. அன்று தாத்தா சொன்னது எதையுமே இன்னும் நம்பமுடியாமல் தான் இருக்கிறது. கேசவனிடம் கூட அன்று தாத்தாவும் அவனும் பேசியதைப் பற்றிச் சொல்லவில்லை. இவனுக்குள்ளேயே இருக்கிறது அன்று கண்ட கனவுகளும் உரையாடல்களும். அந்தக் கனவுகளையும் உரையாடல்களையும் பற்றி நினைத்தால் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கும். ஆனால் அதிலிருந்து பத்து கேள்விகள் தோன்றும். அதனால் குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. அவனுடைய குணங்களிலும் எந்த வித நல்லதும் தெரியவில்லை. என்றும் போல் பெரிய ஈகோவோடு தான் இன்றும் இருக்கிறான். யாராவது இவனைப் புகழ்ந்தால் மிகவும் பிடிக்கிறது. குழந்தைகளிடம் அடிக்கடி கோவித்துக் கொள்கிறான்; அடிக்கிறான். மனைவியிடம் சண்டையென்றால் அந்தக் கோபமும் குழந்தைகளிடம் அடியாக இறங்குகிறது. இப்படி எத்தனையோ சொல்லலாம். தன்னைத் தானே இந்த நிலையில் எல்லாம் பார்க்கும் போது ஆன்மிக வளர்ச்சி உள்ளவன் மாதிரியே தோன்றுவதில்லை கந்தனுக்கு. ஆன்மிக வளர்ச்சி என்ன, ஒரு நல்ல மனிதன் என்று கூடச் சொல்ல முடியாது.
திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வந்த பிறகு 'இதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனை - பொய்' என்று உறுதியாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் கந்தன். ஆனால் பின்னர் தாத்தாவுடன் கிடைத்த அனுபவங்கள் அவனை மீண்டும் குழப்பிவிட்டன. இவற்றை எல்லாம் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
தாத்தாவுடன் பேசிய ஓரிரு வருடங்களிலேயே கந்தனுக்குத் திருமணம் நிச்சயமானது. பெண்ணும் சென்னையிலேயே பணி புரிந்து கொண்டிருந்தாள். அதனால் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் நடுவில் இருந்த ஆறு மாதங்கள் அருமையாகச் சென்றன. இருவரும் தினந்தோறும் சந்தித்துக் கொண்டார்கள். எங்கெல்லாம் காதலர்கள் சுற்றலாமோ அங்கெல்லாம் சென்றார்கள்.
அப்படி இருக்கும் போது கேசவன் ஒரு முறை தொலைபேசி தாத்தாவுக்கு உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னான். கேசவனும் கந்தனும் தாத்தாவைப் பார்க்க மயிலாப்பூரில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். போகும் போது சாயி பாபா கோவிலுக்குச் சென்று அங்கிருந்து உதி (சீரடி சாயிபாபா கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் அணையாத நெருப்பின் சாம்பல்) எடுத்துக் கொண்டு போய் கொடுக்கலாம் என்று கேசவன் சொன்னதால் அப்படியே செய்தார்கள்.
மருத்துவமனையில் இருவரையும் பார்த்த தாத்தா மிகவும் மகிழ்ச்சியாக இருவரையும் வரவேற்றார்.
"எப்ப முகூர்த்தம் மோகன்?"
கந்தனுக்கு முதலில் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. முதல் கேள்வியே திருமணத்தைப் பற்றி இருக்கும் என்று கந்தன் எதிர்பார்க்கவில்லை.
"எப்ப முகூர்த்தம்?"
"அக்டோபர் மாசம் தாத்தா"
"ஐப்பசியா?"
ஒரு நிமிடம் திகைத்துவிட்டு "ஆமாம் தாத்தா. ஐப்பசி தான்"
"நான் வர்றேன்"
"கட்டாயம் வாங்க தாத்தா. நான் அடுத்த தடவை வந்து பத்திரிக்கை வைக்கிறேன்"
கேசவன் உதியைத் தாத்தா நெற்றியில் இட்டுவிட்டான். பின்னர் அவர்கள் இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கூட இருந்து கவனித்துக் கொண்டிருந்தவர் சைகையில் 'போதும் பேசியது. அவர் கொஞ்ச நேரம் படுக்கட்டும்' என்று சொன்னதால் இருவரும் தாத்தாவிடம் விடை பெற்று கிளம்பினார்கள்.
நான்கு நாட்களுக்குப் பின்னர் கந்தன் கேசவனுக்குத் தொலைபேசினான்.
"கேசவா. தாத்தாவுக்கு பத்திரிக்கை வைக்க இன்னைக்குப் போகலாம்ன்னு இருக்கேன். நீயும் வர்றியா?"
"தாத்தா இன்னைக்கு காலையில போயிட்டாருடா. உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்கிறதால உன்கிட்ட சொல்ல வேணாம்ன்னு எங்க அப்பா சொல்லிட்டார். அதான் உனக்கு சொல்லலை"
கந்தனுக்குக் கொஞ்சம் சுருக்கென்றிருந்தது. திருமணத்திற்கு வருவேன் என்று சொன்னவர் அதற்குள் இறந்து போய்விட்டாரே என்று தோன்றியது. அவர் ஆசைப்பட்டார்; ஆனால் அதற்குள் அவர் நேரம் வந்துவிட்டது போல என்று எண்ணிக் கொண்டான்.
"நீ போய் பாத்துட்டு வந்தாச்சா?"
"ம். காலையிலயே போயிட்டு வந்துட்டேன்"
"எங்கேன்னு சொல்லு. நான் போயி பாக்குறேன்"
"டேய். உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிட்டதால நீ போகக்கூடாது"
"ஆமாம். அதுவும் சரி தான். ஆனா அவரை கடைசியா ஒரு தடவை பாக்கணுமேடா"
"அதான் நாலு நாளைக்கு முன்னாடி தானே பாத்தோம். பரவாயில்லை"
அரை மனத்துடன் சரி என்று சொல்லிவிட்டான் கந்தன்.
திருமண நாளும் வந்தது. கந்தன் முழுவதுமாகத் தாத்தாவை மறந்தே போய்விட்டான். கோலாகலமாக சொந்த ஊரில் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். கேசவனும் வந்திருக்கிறான்.
ஐயரிடம் முதலிலேயே சொல்லிவிட்டான். மந்திரங்களை எல்லாம் அவர் மட்டுமே சொல்லாமல் அவனையும் சொல்லவைக்க வேண்டுமென்று. இந்தக் காலத்தில் இப்படி ஒருவனா என்று ஐயர் நினைத்திருப்பார். ஆனால் கந்தன் கேட்டுக் கொண்டபடி எல்லா மந்திரங்களையும் அவனையும் சொல்லவைத்தார். மணமேடையில் பெண் வந்து அமர்ந்ததும் ஒவ்வொரு சடங்கையும் செய்யும் போது அதற்கு என்ன பொருள் என்று பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவளோ இவன் சொல்வதில் பாதியைக் காதில் வாங்கிக் கொண்டு மீதி நேரம் அவள் நண்பர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

கெட்டி மேளம் கொட்டி 'மாங்கல்யம் தந்துதானேன' மந்திரத்தோடு தாலியும் கட்டியாயிற்று. நண்பர்கள், நெருங்கிய சுற்றத்தார்கள் என்று நிறைய பேர் மணமேடைக்கே வந்து கைகுலுக்கி வாழ்த்துகள் சொன்னார்கள். அந்த சிறு கூட்டம் கலைந்து மேடையிலிருந்து சென்ற பின்னர் தற்செயலாக மேடைக்கு அருகில் பெரியவர்கள் அமர இடப்பட்டிருந்த இருக்கைகளின் மேல் கந்தனின் பார்வை விழுந்தது. அங்கே தாத்தா சிரித்த படியே உட்கார்ந்து கொண்டு கையைத் தூக்கி ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். ஒரு நொடி திகைத்து மறுபடியும் பார்க்கும் போது அவரைக் காணவில்லை. திகைப்பாக இருந்தாலும் ஏதோ பிரமை என்று கந்தன் நினைத்துக் கொண்டான்.
அன்று மாலை கேசவனும் கந்தனும் பேசிக் கொண்டிருந்தார்கள். நண்பர்களின் கேலிகளையும் கிண்டல்களையும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விடும் நிலைக்குக் கந்தன் வந்திருந்தான். இப்போது தான் கேசவனுடன் தனியாகப் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது அவன் சொன்னதைக் கேட்டு மீண்டும் ஒருமுறை திகைத்தான் கந்தன்.
"கந்தா. தாத்தா கல்யாணத்துக்கு வந்திருந்தார். பாத்தியா?"
Tuesday, January 01, 2008
புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 13
"தாத்தா. கேசவனும் மணிகண்டனும் எங்கே?"
"அவங்க ஆறு மணிக்கே எந்திருச்சு கீழே குளிக்கப் போயிட்டாங்க. நீ இங்கேயே குளிச்சிரலாம் மோகன். சுடு தண்ணி வைக்கிறேன். பல்லு விளக்கிட்டு வா"
சரி என்று தலையாட்டிவிட்டு அறையின் அந்தப் பக்கம் இருந்த வாசலின் வழியாக வெளியே வந்து பார்த்தான். ஒரு மரத்தடியின் கீழ் ஒரு சின்ன வாளியில் தண்ணீர் இருந்தது. பக்கத்திலேயே ஒரு சின்ன தொட்டியில் நீர் நிரம்பி இருந்தது. பாத்ரூம் போகவேண்டுமே என்று நினைத்துக் கொண்டே கந்தன் பார்வையை ஓட்ட பக்கத்திலேயே இன்னொரு கட்டிடத்தில் பாத்ரூம் இருப்பது தெரிந்தது. அங்கிருந்த இன்னொரு தாத்தா இவனது பார்வையைப் பார்த்துவிட்டு "இங்கே பாத்ரூம் போய்க்கோ தம்பி" என்றார்.
பல் விளக்கிவிட்டு பாத்ரூம் போய்விட்டு திரும்பித் தாத்தா இருந்த இடத்திற்கு வந்த போது அவர் இன்னும் செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். இவனும் அவர் பக்கத்திலேயே கொஞ்சம் இடம் விட்டு உட்கார்ந்து கொண்டான். அந்த அதிகாலை நேரத்தில் இளவெயிலில் அந்த இடத்திலிருந்து பார்க்க அண்ணாமலையார் கோவில் கோபுரங்களும் ஊரும் அழகாக இருந்தன. காகாவென்று கத்திக் கொண்டு கருநிறக்காக்கைகள் யாரையோ காப்பாற்றச் சொல்லி முறையிடுவது போல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. பசுமையான காட்சி எல்லாப்பக்கமும் விரிந்தது. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வரும் போதே கனவில் வந்தவற்றைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருந்தான் கந்தன்.

"மோகன். நல்லா தூங்குனியா?"
"ம்ம்"
"என்ன யோசனையா இருக்க மோகன்?"
பதில் சொல்லாமல் குழப்பமாக மனத்தில் ஓடிக் கொண்டிருந்த கனவுகளை எண்ணிக் கொண்டிருந்தான் கந்தன். முந்தைய இரவு சிலப்பதிகாரப் பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்கியது நினைவிற்கு வந்தது. பஞ்சவர்க்கு தூது ந்டந்தானைப் பற்றிய பாடலைக் கேட்டுக் கொண்டே தூங்கியதால் அந்த கனவு வந்ததோ என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் மற்ற கனவுகளைப் பற்றி ஒன்றும் புரியவில்லை.
"மோகன். என்ன யோசனை?"
'எத்தனை தடவை தான் சொல்றது என் பேரு கந்தன்னு. ஏன் தாத்தா மோகன் மோகன்னு கூப்புடறார்?' கொஞ்சம் எரிச்சலாக இருந்தது கந்தனுக்கு.
"தாத்தா. என் பேரு கந்தன். என்னை ஏன் எப்பவும் மோகன்னு கூப்புடறீங்க?"
சிரித்துக் கொண்டார் தாத்தா.
"உம் பேரு கந்தன்னு தெரியும். ஆனா உன்னை ஏன் மோகன்னு கூப்புடறேன்னு உனக்கு இந்நேரம் புரிஞ்சிருக்குமே"
"இல்லை தாத்தா. புரியலை"
"நீ தான் ஜகன்மோகன்"
பளீரென்று யாரோ கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது கந்தனுக்கு.
தாத்தா என்ன சொல்கிறார் என்பது புரிந்தும் புரியாதது போல் இருந்தது.
"என்ன தாத்தா சொல்றீங்க?" என்று கண்கள் விரியக் கேட்டான்.
"ஆமாம் மோகன். நீ தான் கிருஷ்ணர் உதைச்ச கல்லு. நீ நேத்து ராத்திரி கனவுல பாத்ததெல்லாம் உன்னோட முந்தையப் பிறவிங்க தான்"
அவர் சொன்னதை முழுவதும் புரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது கந்தனுக்கு. தாத்தாவும் ஒன்றும் பேசாமல் அவன் அதனை முழுதும் கிரகித்துக் கொள்ள நேரம் தந்தார்.
"கிருஷ்ணர் தூது வந்ததுல பல நோக்கங்கள் இருந்தது மோகன். அதுல ஒரு நோக்கம் கல்லா கிடந்த உன்னை தன்னோட கால் ஸ்பரிசத்தால உணர்வு கொள்ளச் செய்யுறது"
கந்தனுக்கு என்னவோ அகலிகைக் கதையைக் கேட்பது போல் தோன்றியது.
"அப்படின்னா நான் எதாவது சாபத்தால கல்லா கிடந்தேனா தாத்தா?"
"இல்லை. நீ அது நாள் வரைக்கும் உயிரில்லாத வஸ்து. அன்னைக்குத் தான் கிருஷ்ணர் கால் பட்டு உயிர் வந்தது உனக்கு. கிருஷ்ணர் காலடி பட்ட மகிமையால நீ அப்பவே பாகவதத்தை நேரடியா சுகப்பிரம்மம் வாயாலேயே கேட்ட"
தாத்தாவுக்கு மற்றவர்களின் மனதைப் படிக்கத் தெரிந்திருக்கிறது. அதை வைத்து ஏதோ கதை விடுகிறார் என்று நினைத்தான் கந்தன். அந்த எண்ணம் ஓடியவுடன் குறுக்குக் கேள்விகள் அவன் மனத்தில் தோன்றி அவற்றைக் கேட்கும் தைரியத்தையும் தந்தன.
"அப்ப கல்லா இருந்த என் மேல தடுக்கி விழுந்தது தான் அபசகுனமா ஆகி கண்ணன் தூது வெற்றி பெறாம போயிருச்சா?" அவன் குரலில் கிண்டல் தொனித்தது.
"ஹாஹாஹாஹா. நீ மகாபாரதம் படிச்சிருக்கே இல்லை?"
"படிச்சிருக்கேன் தாத்தா"
"கிருஷ்ணர் தூது போனது சண்டையை நிறுத்துறதுக்கா?"
"இல்லை தாத்தா. போன இடத்துல கர்ணன், விதுரர்ன்னு எல்லாரையும் ஒரு குழப்பு குழப்பிட்டுத் தான் வந்தார்"
"அப்படி செய்யுறது தான் அவரோட நோக்கமா இருந்திருக்கும். அதெல்லாம் நல்லா தானே நடந்தது?! அதுல ஒரு நோக்கம் தான் உனக்கு உயிர் கொடுக்குறது"
"அப்ப கிருஷ்ணன் கால் பட்ட எல்லா கல்லுங்களுக்கும் உயிர் வந்திருச்சா?"
"அப்படி இல்லை. சில கல்லுங்களுக்குத் தான் உயிர் வந்தது"
அடுத்த கேள்விக்குத் தாவினான்.
"பாகவதத்தைச் சுகர் வாயாலேயே கேட்ட எனக்கு ஏன் தாத்தா அப்பவே முக்தி கிடைக்கலை?"
"நீ இன்னும் கல்லாவே தானே இருந்த? அதனாலத் தான்" என்று சிரித்த படியே சொன்ன தாத்தா தொடர்ந்தார். "உனக்கு இந்த உலக அனுபவங்களையும் இன்ப துன்பங்களையும் கொடுக்கணும்ன்னு தானே கிருஷ்ணர் உன்னை உதைச்சு உயிர் கொடுத்தது. அப்படி இருக்க உடனே எப்படி முக்தி கிடைக்கும்?"
அவர் சொன்னதை முழுதும் கந்தன் ஏற்றுக் கொண்டானோ இல்லையோ தெரியவில்லை.
"அப்ப நான் மரமா இருந்த இடத்துல தான் போகரோட சமாதி இருக்கா?"
"ஆமாம்"
கந்தனால் நம்ப முடியவில்லை. எத்தனை தடவை தாய் தந்தையர் பழனிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். எத்தனையோ முறை பழனியாண்டவனையும் போகர் சமாதியையும் பக்தியோடு வணங்கியிருக்கிறான். அந்த இடத்தில் மரமாக இருந்ததாகச் சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது? கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். திடீரென்று இன்னொரு ஐயம் தோன்றியது.
"தாத்தா. வந்த கனவு எல்லாம் இந்தியாவுல தான் நடந்ததா இருக்கு. இதெல்லாம் நான் படிச்ச கதைங்களை என் மனசு கனவுங்களா ஏன் காமிச்சிருக்கக் கூடாது? இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?" மடக்கிவிட்டோம் என்று நினைத்தான்.
சிரித்துக் கொண்டே "நல்ல கேள்வி மோகன். நீ வெளிநாட்டுலயும் பொறந்த. வேற மதத்துலயும் பொறந்த. உன்னோட ஒரு பிறவி சவுத் அமெரிக்காவுல ஒரு கிறிஸ்டியனா இருந்தது. இன்னொன்னு சைனாவுல தாவோ மதத்துல இருந்தது. வடக்கே கோவிந்த சிங்குக்கு நெருங்கின சீக்கிய மதத் தலைவரா கூட இருந்திருக்க."
சிறிது இடைவெளி கிடைத்தவுடன் "அப்படின்னா நான் எல்லா நாட்டுலயும் எல்லா மதத்துலயும் பொறந்திருக்கேனா?"
"இல்லை மோகன். நீ பொறக்காத நாடுங்க நெறைய இருக்கு. சில மதங்கள்ல நீ இன்னும் பொறக்கலை. இனிமே உனக்கு அந்த மதங்கள்ல பிறவி வரலாம்"
"அப்ப ஏன் அதெல்லாம் என் கனவுல வரலை?"
"உனக்கு இந்தப் பிறவியில எது புரியுமோ அது மட்டும் தான் வந்திருக்கு. சவுத் அமெரிக்கா பிறவியும் கொஞ்சம் கனவுல வந்தது. ஆனா உனக்கு நினைவில்லை. ஏன்னா அது உனக்குப் புரியலை"
தாத்தா என்ன தான் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை கந்தனால். நரசிம்மதாசனையும் ஜகன்மோகனையும் நினைத்தால் தான் அவர்களைப் போல் வாழ்ந்திருப்போம் என்றே எண்ணிப் பார்க்க முடியவில்லை. நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
"தாத்தா. நரசிம்மதாசனும் ஜகன்மோகனும் நான் தான்னா நம்ப முடியலை தாத்தா. அவங்க ரெண்டு பேரும் ஆன்மிகத்துல ரொம்ப முன்னேற்றம் அடைஞ்சவங்களா இருக்காங்க. நான் அப்படி இல்லையே?"
"மோகன். நீ எதை விரும்பினீயோ அதுக்கு ஏத்த மாதிரியான பிறவி உனக்கு கிடைச்சிருக்கு. கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தீனா திருவாசகம், திவ்யப்பிரபந்தம், பகவத்கீதை, கோபிகா கீதம், மாதிரி நூல்களெல்லாம் எடுத்துப் படிச்சவுடனே உனக்கு புரிஞ்சிருக்கும். சரி தானே?"
தாத்தா சொல்வது சரி தான். எந்த மத நூலை எடுத்துக் கொண்டாலும் எந்த தத்துவ நூலை எடுத்துக் கொண்டாலும் படிக்கத் தொடங்கியவுடனேயே ஏற்கனவே படித்திருக்கிறோம் என்று தோன்றுவதும் அந்த நூல் அடுத்து சொல்லப் போகும் கருத்து படிப்பதற்கு முன்பே தோன்றுவதையும் கவனித்திருக்கிறான். ஆனால் அது ஏரணத்திற்கு ஏற்றபடி அமையும் கருத்துகள் என்பதால் அப்படி தோன்றுகின்றன என்றே நினைத்திருந்தான். இப்போது அவற்றை முற்பிறவியில் படித்திருந்ததால் தான் அவை அவனுக்குப் படிப்பதற்கு முன்பே தெரிந்தன என்பதை ஏற்றுக் கொள்ள கந்தனால் முடியவில்லை.
"யார் எந்தத் தத்துவத்தைப் பத்தி பேசினாலும் உன்னால ஒரு அதாரிட்டியோட அந்த தத்துவத்தைப் பேச முடியுதே. அது ஏன்னு யோசிச்சியா? அந்தத் தத்துவத்தை நல்லா ஆராய்ஞ்சு அனுபவிச்சதால தான் உன்னால அப்படி பேச முடியுது."
"தாத்தா. அப்படின்னா ஏன் இந்தப் பிறவியில நான் ஆன்மிகத்துல ஈடுபாடு இல்லாம இருக்கேன்?"
"இந்தப் பிறவியிலயும் ஆன்மிகத்துல ஈடுபாட்டோட தான் இருக்க. இல்லாட்டி எதுக்கு தத்துவங்களையும் பாசுரங்களையும் படிக்கிற? ஆனா இந்த பிறவியில நீ விரும்புன இல்லற அனுபவம் கிடைக்கிறதுக்காக நீ அவ்வளவு தீவிரமா ஆன்மிகத்துல இறங்கலை"
இல்லற அனுபவம் என்று சொன்னவுடன் கல்கத்தா காளிதேவி நினைவிற்கு வந்தாள்.
"தாத்தா. ஜகன்மோகனுக்குக் காளிதேவியை கும்புடணும்ன்னு தோணுனதால தான் நேத்து பிடாரி அம்மனைப் பாத்தவுடனே எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருந்ததா?"
சிரித்துக் கொண்டே "அப்படி எல்லாம் இல்லை மோகன். அண்ணாமலையார்கிட்டயும் உனக்கு ஈர்ப்பு உண்டு. அந்த நேரத்துல அலைபாயத் தொடங்குன உன் மனசு அங்கே இருந்த அதிர்வுகளை ஏத்துக்கலை. பிடாரி அம்மன்கிட்ட வர்றப்ப மனசு அடங்கத் தொடங்கிருச்சு. அதனால அங்க இருந்த அதிர்வுகளை உன் மனசு ஏத்துக்கிச்சு. அவ்வளவு தான்"
அடுத்த கேள்விக்குத் தாவினான்.
"தாத்தா. அப்ப இந்தப் பிறவியில நான் கல்யாணம் பண்ணிக்குவேனா இல்லையா?"
"கல்யாணம் பண்ணிக்குவ"
"அப்ப என் ஜாதகத்துல நான் நாப்பது வயசுல சன்யாசியா போயிருவேன்னு இருக்கே?"
"நீ நாப்பது வயசுல சன்னியாசியா போறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு தான் உன் ஜாதகம் சொல்லுது. கட்டாயம் ஆயிடுவேன்னு சொல்லலை"
"புரியலை தாத்தா. ஜாதகத்துல சொல்றதை நம்பக்கூடாதுன்னு சொல்றீங்களா?"
"நீ இன்ஸ்ட்ருமென்டேசன் கன்ரோல் இஞ்சினியரிங்க் தானே படிச்சிருக்க?"
ஆமாம் என்று தலையாட்டினான் கந்தன்.
"அப்ப இன்டிகேட்டருக்கும் கன்ட்ரோலருக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருக்குமே"
ஆமாம் என்று தலையாட்டினான் கந்தன்.
"ஜாதகம் இன்டிகேட்டர் தான் கன்ட்ரோலர் இல்லை. It indicates what can happen due to past actions. It does not control what will happen. The control is with you. It shows you what opportunities are in front of you. It shows you what choices are in front of you. You are the one who will decide the choice you want to make."
புரிந்த மாதிரி இருந்தது.
"அதனால நீ இந்தப் பிறவியில என்ன என்ன செய்றீயோ அதுக்குத் தகுந்த மாதிரி தான் உன் வாழ்க்கையும் போகும். அதனால நீ நாப்பது வயசுல சன்னியாசி ஆயிடுவன்னு உறுதியா சொல்ல முடியாது."
"தாத்தா. அது மட்டுமில்லாம என் ஜாதகத்துல கேது பன்னிரண்டாம் இடத்துல இருக்கிறதால எனக்கு இந்தப் பிறவியில முக்தின்னு சொல்லியிருக்கே. அதுவும் இன்டிகேட்டர் தானா?"
"ஆமாம். அதுவும் இன்டிகேட்டர் தான். உன்னோட போன பிறவிங்க சிலதுலயும் அப்படித் தான் ஜாதகம் இருந்தது. இந்தப் பிறவியிலயும் அப்படி இருக்கு. இனிமே வர்ற பிறவிங்கள்ல எல்லாம் அப்படி தான் இருக்கும். ஆனா எந்த பிறவியில நீ முக்தி அடைவன்னு சொல்ல முடியாது. That is your choice."
தொடர்ந்தார் தாத்தா.
"இந்த ரெண்டை மட்டும் தான் நீ கவனிச்சிருக்க. உனக்கு நல்ல பேரும் புகழும் நல்ல மனைவியும் மக்களும் அமைவாங்கன்னு கூட உன் ஜாதகத்துல சொல்லியிருக்கு. அதை கவனிக்கலையா?"
"கவனிச்சிருக்கேன் தாத்தா"
"அது மட்டுமில்லை. உன் கைரேகைகள்ல கூட நிறைய இன்டிகேசன் இருக்கே"
"ஆமாம் தாத்தா. எனக்கு சாலமன் ரேகை இருக்கு"
சிரித்தார் தாத்தா. "ஆமாம் சாலமன் ரேகை இருக்கு. அப்ப மத்தவங்க மனசைப் படிக்கிற சக்தி வந்திரணும். வரும்ன்னு நினைக்கிறியா?"
"தெரியலை தாத்தா. ஆனா திருச்செந்தூர்ல ஒரு சாமியார் சாலமன் ரேகையைப் பாத்துட்டு அதைத் தான் சொன்னார். நாப்பது வயசுல எனக்கு மத்தவங்க மனசைப் படிக்கிற சக்தி வந்துரும்ன்னு"
"வர்றதுக்கு வாய்ப்பு உண்டு மோகன். ஆனா கட்டாயம் வரும்ன்னு சொல்ல முடியாது"
"இப்ப எதுக்கு தாத்தா எனக்கு இந்த கனவுங்க எல்லாம் வந்தது? ஏன் எனக்கு என்னோட முந்தின பிறவியெல்லாம் தெரியணும்?"
"அடுத்த கேள்வியையும் கேக்காம விட்டுட்டியே. நேத்து வரைக்கும் ஒன்னும் சொல்லாத நான் ஏன் இன்னைக்கு இவ்வளவு நேரம் உன்னோட பேசணும்ன்னு இன்னொரு கேள்வி வந்ததே?"
வெட்கத்துடன் ஆமோதித்தான் கந்தன்.
"காரணம் இருக்கு மோகன். இனி வர்ற ஒவ்வொரு பிறவியிலயும் உனக்கு என்னை மாதிரி ஒருத்தர் வந்து இந்த முற்பிறவி கதையெல்லாம் சொல்லுவார். அப்படி ஒரு ஏற்பாடு இருக்கு. இதெல்லாம் தெரிஞ்ச பின்னாடியும் நீ என்ன சாய்ஸ் எடுத்துக்கறங்கறது உன் கையில. உனக்கு எப்ப இந்த உலக அனுபவங்கள் எல்லாம் போதும்ன்னு தோணுதோ அப்ப நீ மறுபடியும் விட்ட இடத்துல இருந்து தொடரலாம். அது வரைக்கும் என்னை மாதிரி யாராவது ஒருத்தர் வந்து நினைவுபடுத்திக்கிட்டே இருப்போம்"
"அப்ப நீங்க தான் எனக்கு குருவா?"
"இப்போதைக்கு இல்லை. நீ ஆன்மிகப் பயிற்சியைத் தொடரத் தொடங்கினா ஆகலாம்"
"அப்ப நீங்க யாரு?"
"நானும் உன்னை மாதிரி ஆன்மிகப் பயிற்சியில ஈடுபட்டவன் தான். நீ ஜகன்மோகனா இருக்கிறப்ப நான் சீரடி சாயிபாபாவோட சிஷ்யனா இருந்தேன். நீ சீரடி பக்கம் வந்தப்ப நீயும் நானும் நண்பர்களா இருந்தோம்"
திடீரென்று ஒரு கேள்வி தோன்றியது.
"தாத்தா. நான் எல்லா பிறவியிலயும் ஆம்பளையா தான் பொறந்தேனா?"
"இல்லை மோகன். பெண்ணாகவும் பிறந்திருக்கிறாய்."
"உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியுது. ஏன் எனக்குத் தெரியலை?"
சிரித்துக் கொண்டார் தாத்தா. "கீதையில நாலாவது அத்தியாயம் போல இருக்கு நீ கேக்குறது"
கீதையில் நாலாவது அத்தியாயத்தில் கண்ணன் சொன்னது நினைவிற்கு வந்தது கந்தனுக்கு. சூரியனுக்கு நான் இதனை உபதேசித்தேன் என்று கண்ணன் சொன்னவுடன், 'கிருஷ்ணா நீ என்னைவிட ஒரு நாள் மூத்தவன்; சூரியனோ வெகு நாட்களாக இருப்பவன். அவனுக்கு எப்படி நீ இதனை உபதேசித்தாய்' என்று அருச்சுனன் கேட்க 'பார்த்தா. உனக்கும் எனக்கும் பல பிறவிகள் உண்டு. அவற்றில் எல்லாவற்றையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்' என்று கண்ணன் சொல்வான்.
"அப்ப நீங்க கிருஷ்ணன் மாதிரி அவதாரமா தாத்தா?"
"இல்லை மோகன். நான் அவதாரமில்லை. ஆன்மிகப் பயிற்சி செய்யிற ஒரு ஜீவன் தான். நான் மட்டுமில்ல. இங்கெ ஏறக்குறைய எல்லாருமே ஏதோ ஒரு பிறவியில எந்த வகையிலயோ தொடர்பு ஏற்பட்டவங்க தான்"
"அப்ப புதுசாவே யாருக்கிட்டயும் பழகுறதில்லையா?"
"அப்படி சொல்ல முடியாது. புதுசாவும் தொடர்புகள் ஏற்படத் தான் செய்யும். இப்ப மணிகண்டனோட நீ பழகுற மாதிரி"
"அப்படின்னா கேசவன் எப்ப இருந்து என்னோட இருக்கான்?" வேகமாகக் கேட்டான் கந்தன்.
"பதினாறு பிறவியா வர்றான். அவன் மட்டும் தான் ஒவ்வொரு பிறவியிலயும் உன்னோடவே வர்றவன்"
தாத்தா சொல்வதை இன்னும் முழுவதுமாக நம்ப முடியவில்லை கந்தனால். அதற்கு மேல் கேட்பதற்கு ஒரு கேள்வியும் இல்லை என்பது போல் அமர்ந்திருந்தான்.
தூரத்தில் கேசவனும் மணிகண்டனும் காலை உணவு எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
(தொடரும்)
***
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Sunday, December 30, 2007
புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 12

எந்த ஒரு இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்காத விரதத்தை மேற்கொண்ட தனது குரு தோதா புரி தக்ஷிணேஷ்வரத்தில் பதினோரு மாதங்கள் தங்கியிருந்தார் என்று கேள்விபட்ட போது மிகுந்த வியப்பாக இருந்தது ஜகன்மோகனுக்கு. அவருடைய வயது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருமுறை குருநாதரே 150 வருடங்களுக்கு மேலாக வாழ்வதாகக் கூறினார். ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழ்வது பெரிய காரியமே இல்லை என்பதையும் கூறினார். ஆன்மிகப் பயிற்சிகள் கடுமையாக இருப்பதாலும் வெகு நீண்ட நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய தேவை இருப்பதாலும் ஏற்படும் தடங்கல்கள் எண்ணற்றவையாக இருப்பதாலும் இந்த மாதிரி நீண்ட ஆயுள் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது என்பதையும் கூறி அருளினார்.
அவருடைய அருளினால் அத்வைத சித்தாந்தம் நன்கு ஜகன்மோகனின் ஆழ்மனத்திற்கும் புரிந்தது. கடந்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து அத்வைத அனுபவத்தைப் பெறுவதற்காக ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். குருநாதரின் கருணையால் அவரது ஆன்மிகப் பயிற்சியில் ஏற்பட்ட தடங்கல்கள் எல்லாம் அவை ஏற்பட்ட சில நாட்களிலேயே நீங்கி நல்ல முன்னேற்றம் அடைந்தது வந்திருக்கிறார்.

அப்படி தனது ஆன்மிகப் பயிற்சிகளில் உறுதுணையாக இருந்து வரும் குருநாதர் தனது விரதத்திற்கு மாறாக பதினோரு மாதங்கள் தக்ஷிணேஸ்வரத்தில் தங்கியிருந்தார் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ஏதாவது இருக்க வேண்டும் என்று எண்ணினார் ஜகன்மோகன். இந்தக் கேள்வியுடன் குருநாதரை வணங்கித் தியானித்த போது அவரது திருவுருவம் தியானத்தில் எதிரே தோன்றியது.
"ஜகன்மோகன். தக்ஷிணேஸ்வரத்தில் என்ன இருக்கிறது என்பதை நீயே சென்று பார்"
இந்தக் கட்டளை கிடைத்தவுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் தக்ஷிணேஸ்வரத்திற்குக் கிளம்பிவிட்டார் ஜகன்மோகன். தக்ஷிணேஸ்வரம் சென்று அடைந்த போது காளி மாதாவிற்கு மாலை நேர பூஜை நடந்து கொண்டிருந்தது. காளிகட்டத்தில் நீராடிவிட்டு ஜகன்மோகன் கோவிலுக்குச் சென்று அடைந்த போது பூஜையின் நடுவில் இருந்த இராமகிருஷ்ணரைக் கண்டார்.
'இந்தச் சிலையின் முன்னால் இப்படி உணர்ச்சிகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் படி உட்கார்ந்திருக்கும் இந்த மனிதனா நம் குருநாதரை இந்த இடத்தில் பதினோரு மாதங்கள் கட்டிப் போட்டது? இந்த சிலைக்கு செய்திருக்கும் அலங்காரமும் இந்த கூட்டத்தின் ஆரவாரமும் ஆன்மிகப் பயிற்சிக்குத் தடைகளாக அல்லவா இருக்கும்? இவருக்கா நம் குருநாதர் அத்வைத சித்தாந்தத்தைப் போதித்து நிர்விகல்ப சமாதிநிலையைக் காட்டுவித்தார்?'
காலம் முழுக்க உருவ வழிபாடு ஆன்மிகப் பயணத்தில் கீழ்படியில் இருப்பவர்களுக்கானது; உருவமும் குணமும் பெயரும் அற்ற எங்கும் நிறைந்த பிரம்மத்தையே தியானிப்பது தான் ஆன்மிகப் பயிற்சிக்கு உகந்தது என்று எண்ணி வரும் ஜகன்மோகனுக்கு இவையெல்லாம் குழப்பமாக இருந்ததில் வியப்பில்லை. அவரது குருநாதர் ஈஸ்வர தோதா புரியும் பலமுறை உருவ வழிபாட்டையும் அதில் மயங்கிப் போகும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்படும் தடைகளையும் பற்றி சொல்லியிருக்கிறார். அதனால் தக்ஷிணேஸ்வரத்தில் கண்ட காட்சி பெரும்குழப்பமாக இருந்தது அவருக்கு.

இப்படி எல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த ஜகன்மோகன் கூட்டத்தோடு கூட்டமாக இராமகிருஷ்ணரின் அருகில் சென்றார். இன்னும் இராமகிருஷ்ணர் அன்னை பவதாரிணியின் திருவுருவத்திலேயே லயித்துப் போய் மெய்மறந்து கண்களில் நீர் சோர உடலெல்லாம் தொய்வுற்று உட்கார்ந்திருக்கிறார். அருகில் செல்ல செல்ல ஒரு பெரிய அதிர்வு தன்னைத் தாக்குவதை உணர்ந்தார் ஜகன்மோகன். பாதி தூரம் சென்ற போதே பல வருடங்களாகச் செய்து வந்த ஆன்மிகப் பயிற்சிகளினால் ஏற்பட்ட ஒழுங்குகளையும் மீறி அவருக்கு அங்கேயே தியானம் கைகூடியது. அப்படியே அந்த இடத்திலேயே அவர் தியானத்தில் அமர்ந்துவிட்டார்.
"ஜகன்மோகன். நான் பதினொரு மாதங்கள் இங்கே இருந்ததைப் பற்றித் தானே உனக்கு கேள்விகள். இங்கு என்ன நடந்தது என்பதை நீயே பார்"
குருநாதரின் குரல் இதனைச் சொன்ன பிறகு ஜகன்மோகனுக்கு தன் குருநாதருக்கும் இராமகிருஷ்ணருக்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தெரியத் தொடங்கின. சாரதா தேவியாரை மணந்து இல்லறத்தில் இருக்கும் ஒருவர், உருவ வழிபாட்டின் உச்சிக்குச் சென்ற ஒருவர், தான் ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக அடைய முயன்றுவரும் நிலையை, குருநாதர் தோதாபுரி நாற்பது ஆண்டுகள் முயன்று அடைந்த நிலையை ஒரே நாளில் அடைந்து அந்த நிலையிலேயே மூன்று நாட்கள் தங்கியிருந்தார் என்பதை அறிந்த ஜகன்மோகனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. இப்படி ஒரே நாளில் நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனக்குச் சீடனாக இருந்த நிலையிலிருந்து தனக்குக் குருவாக இருந்து சொல்லித் தர நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்த தோதாபுரி தன் விரதத்திற்கு எதிராக அந்த இடத்திலேயே பதினொரு மாதங்கள் தங்கியிருந்தார் என்பதை உணர்ந்த ஜகன்மோகனுக்கு வியப்பு எல்லையை மீறியது.
கண் விழித்துப் பார்த்த ஜகன்மோகனின் எதிரில் காளி மாதா கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தாள். தியானத்தில் ஆழும் முன் வெறும் மனிதனாகத் தோன்றிய இராமகிருஷ்ணர் அன்னையின் ஒளிக்கு ஈடான ஒளியுடனும் பொன்னிற மேனியுடனும் விளங்கிக் கொண்டிருந்தார். தானாக ஜகன்மோகனின் கரங்கள் இருவரையும் நோக்கி கூப்பின. அந்த நொடியில் தன் பஞ்ச கோசங்களிலும் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தார் ஜகன்மோகன். கை கூப்பிய படியே கோவிலை விட்டு வெளியே வந்து தனிமையான ஒரு இடத்தில் குருநாதரை வணங்கி தியானத்தில் அமர்ந்தார்.
அத்வைத வேதாந்தத்தில் கரை கண்டவரும் அனுபூதிமானும் ஜீவன் முக்தருமான தோதாபுரி தன் முக்கிய சீடர்களுள் ஒருவரான ஜகன்மோகனிடம் தியான நிலையில் பேசத் தொடங்கினார்.
"ஜகன்மோகன். நீ காண்பது கனவல்ல. உண்மையே."
"சுவாமி. அடியேனுக்கு அது புரிகிறது. ஆனால் இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை சாத்தியப்பட்டது?"
"இல்லறமோ துறவறமோ ஆன்மிகப் பயிற்சி செய்வதற்கு இரண்டுமே ஏற்றது தானே?"
"ஆமாம் சுவாமி. இரண்டுமே ஏற்றது தான். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு ஆன்மிகப் பயிற்சி செய்வதில் எண்ணற்ற தடைகள் ஏற்படுமே?"
"அது உண்மை தான் ஜகன்மோகன்"
"அப்படி இருக்க இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை ஒரே நாளில் சாத்தியமானது?"
"அது தான் உனது உண்மையான கேள்வியா ஜகன்மோகன்?"
"இல்லை சுவாமி. என் மனத்தில் உள்ள குழப்பம் அது இல்லை தான். திருமணம் செய்வது ஆன்மிகப் பயிற்சிகளுக்குத் தடையானது என்ற எண்ணத்தில் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன். இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன். அது தான் குழப்பத்திற்குக் காரணம்"
"அதனை அறிகிறேன் ஜகன்மோகன். உனக்கு இன்னொரு ஆவலும் இருக்கிறது. அதையும் சொல்."
"ஆமாம் சுவாமி. உருவ வழிபாட்டில் ஈடுபட்டு அந்தச் சுவையையும் அறிய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது"
"ஜகன்மோகன். இரண்டு ஆவல்களாலும் ஒரு குறையும் இல்லை. நீ விரும்பும் இந்த இரண்டு அனுபவங்களும் உனக்குக் கிடைக்கும். அவற்றால் குழப்பம் அடையாதே"
"அதெப்படி சுவாமி? இந்த அனுபவங்களை நான் அடைய வேண்டும் என்றால் நிர்விகல்ப சமாதியும் முக்தியும் எனக்கு இந்தப் பிறவியிலேயே கிடைக்குமா? இல்லை என்றால் நான் வழி தவறிப் போவதாக ஆகாதா?"
"ஜகன்மோகன். அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும். உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவல்களும் உன் முந்தைய பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாசனையே. முழுமையடையாத அந்த அனுபவங்கள் தான் உன்னை மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆன்மிக வாழ்வில் நன்கு முன்னேற்றமடைந்த உனக்கு அந்த அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டாலும் வழி தவறிப் போக இயலாது. அதனால் கவலை வேண்டாம்"
"உண்மையாகத் தானா சுவாமி?"
"நிச்சயமாக. கவலை வேண்டாம். இந்தப் பிறவியில் தொடர்ந்து உன் ஆன்மிக முயற்சிகளைச் செய்து வா. அடுத்த பிறவியிலிருந்து உனக்கு நீ விரும்பும் அனுபவங்கள் ஏற்படும்"
***
நிர்விகல்ப சமாதி: மனம், மொழி, மெய் என்று மூன்று கரணங்களும் அவற்றின் உணர்வுகளும் நீங்கி எங்கும் நிறைந்து எல்லாமும் ஆகி நிற்கும் - பெயர், உருவம், இடம், காலம் என்று எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் - உண்மை, அறிவு, இன்பம் (சத் சித் ஆனந்தம்) இவற்றின் வடிவமாக நிற்கும் பரம்பொருளைக் காணும் நிலை; பரம்பொருளாகவே ஆகி நிற்கும் நிலை. விகல்பம் என்றால் வேறுபாடு; நிர்விகல்பம் என்றால் வேறுபாடு இல்லாத நிலை; சமாதி என்றால் ஆதிக்குச் சமமான நிலை. Nirvikalpa samadhi என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.
பஞ்ச கோசங்கள்: ஒவ்வொருவரையும் ஐந்து விதமான போர்வைகள் போர்த்தியிருக்கின்றன என்பது இந்திய தத்துவங்களின் கருத்து. உடல் என்னும் உணவால் ஆன அன்னமயகோசம்; உணர்ச்சிகளால் ஆன பிராணமய கோசம்; எண்ணங்களால் ஆன மனம் என்னும் மனோமய கோசம்; பெற்ற அனுபவங்களின் அறிவினால் ஆன விஞ்ஞான மய கோசம்; இன்பமே உருவான ஆனந்த மய கோசம். இந்த ஐந்து போர்வைகளும் ஒரு ஆத்மாவைச் சூழ்ந்திருக்கிறது என்பது இந்தியத் தத்துவங்களின் கருத்து. பஞ்ச கோசங்களைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்க்கலாம். Pancha kosha என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.
வாசனைகள்: முற்பிறவிகளிலும் இந்தப் பிறவியிலும் அடைந்த அனுபவங்களின் எச்சங்கள்; தொகுப்புகள். Vasana என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.