Showing posts with label நாலாயிரம் கற்போம். Show all posts
Showing posts with label நாலாயிரம் கற்போம். Show all posts

Thursday, December 22, 2011

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி - பெரியாழ்வார் திருமொழி 1.3

'நாலாயிரம் கற்போம்' பத்தித் தொடரில் நான்காவது பகுதி இது. பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் மூன்றாம் திருமொழி இந்த 'மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனை யசோதை தாலாட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.
 
பாசுரம் 1 (22 Dec 2011)

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்

பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே தாலேலோ!

வையம் அளந்தானே தாலேலோ!


மாணிக்கங்களை இருபுறமும் கட்டி இடையில் வயிரங்களைக் கட்டி மாற்றில்லாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறிய தொட்டிலை மிகவும் விருப்பமுடன் பிரமன் உனக்காகத் தந்தான்! உன்னுடைய உடைமைகளை இரந்து பெறுவதற்காக குள்ள மாணவனாக வந்த கண்ணனே தாலேலோ! உன்னுடைமைகளான மூவுலகங்களையும் பெற்ற மகிழ்ச்சியில் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகங்களை எல்லாம் அளந்தவனே தாலேலோ!


---

பாசுரம் 2 (23 Dec 2011)


உடையார் கனமணியோடு ஒண்மாதளம்பூ

இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கினோடு

விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்

உடையாய் அழேல் அழேல் தாலேலோ!

உலகம் அளந்தானே தாலேலோ!

உன் இடுப்பின் அழகிற்கு ஏற்ற அழகிய ஒலி எழுப்பும் பொன்மணிகளோடு அழகிய பொன் மாதுளம்பூ இடையிடையே விரவிக் கோத்த அரைஞானை, காளை வாகனம் ஏறும் மண்டையோடு ஏந்தியதால் காபாலி என்று பெயர் உடைய ஈசன் அனுப்பிவைத்தான். எம்மை உடைய தலைவனே அழாதே அழாதே தாலேலோ! உலகம் அளந்தவனே தாலேலோ!

கனகம் = பொன்; கனகமணி என்பது இங்கே கனமணியென்று வந்தது.

--- பாசுரம் 3 (23 Jan 2012)
என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துவனாய் நின்றான் தாலேலோ
தாமரைக்கண்ணனே தாலேலோ


என் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ! தாமரைக்கண்ணனே தாலேலோ!

அவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.

Saturday, March 05, 2011

ஆராவமுதே! - 3



"நெடுமால் ஆழ்வார் மேல் கொண்டுள்ள அன்பால் ஆழ்வாரின் உடலமும் அன்பாகி நீர்பண்டம் போல் உருகி நிற்கச் செய்தான். ஆனால் அவனது அந்த அன்பின் வெளிப்பாடாக குளிர நோக்குதல், வாவென்று அழைத்தல், நலம் வினவுதல், ஆரத் தழுவுதல் என்று ஒன்றுமே செய்யவில்லை. குளிர்ந்த காற்று வீசவும் அதில் மயங்கி உறங்குபவன் போல் தன் திருமேனியின் அழகெல்லாம் நன்கு திகழும்படி கிடந்தான். நீ கிடந்ததை மட்டும் தான் காண்கிறேன் என் தலைவனே; உன் அன்பின் வெளிப்பாடுகளைக் காணவில்லை என்கிறார் ஆழ்வார்"

"ஆழ்வார் இதனை எல்லாம் பாசுரத்தில் சொல்லியிருக்கிறாரா? ஆகா அருமை. எப்படி என்று விளக்குங்கள்".

"சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

என்பவை இந்த பாசுரத்தின் அடுத்த அடிகள்.

தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்று உடல், மொழி, மனம் என்ற மூன்றாலும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே உயிர்களின் இயல்பு என்று சான்றோர் சொல்வார்கள் அல்லவா? பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவுள்ள உயிர்கள் மட்டுமின்றி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களுக்கும் அது தானே இயல்பு. அந்த இயல்பையே செந்நெல்லின் சீர் என்று ஆழ்வார் இங்கே குறிக்கிறார்.

காற்றில் இயல்பாக ஆடி அசையும் செந்நெல்லைக் கண்டு அது இறைவனுக்குக் கவரி வீசுவதாகச் சொல்லலாமே என்று ஒரு மறுப்பு எழலாம். அப்படி சொல்லலாம் தான். ஆனால் இந்த ஆழ்வாரும் ஆழ்வாரை அடிமை கொண்டுள்ள இறைவனும், உயிர்களுக்கும் இறைவனுக்கும் இயல்பாக அமைந்துள்ள உடைமை உடையவன் என்ற தொடர்பை நன்கு உணர்ந்தவர்கள் என்பதால் அவ்விருவர் பார்வைக்கும் காற்றில் அசையும் செந்நெல் இறைவனுக்குத் தொண்டு செய்வது போன்றே தோன்றுகிறது.

ஆழ்வார் என்றும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே தன் இயல்பு என்பதை உணர்ந்தவர் என்பதாலும் அதுவே எல்லா உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்று அறிந்ததாலும் செந்நெலும் இறைவன் உறங்க கவரி வீசித் தொண்டு செய்வதாக நினைக்கிறார்.

இயல்பாக உயிர்களிடத்தில் தனக்குத் தோன்றும் கருணையை வாரி வழங்க தற்செயலாக ஏதேனும் ஒன்றை உயிர் செய்யாதா என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவனும் தற்செயலாக ஆடும் செந்நெல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எண்ணிக் கொண்டு அதற்கு தன் கருணை என்னும் செழுநீரை வாரி வழங்குகிறான்".

"ஆகா. ஆகா. அடுத்த முறை திவ்ய தேசங்களில் தற்செயலாக ஆடும் மரம் செடி கொடிகளைக் கண்டால் இந்த நினைவு வந்து தானே நம் கைகள் வணங்காதா?! அதனைக் கண்டு இறைவனும் ஆஆ என்று ஆராய்ந்து அருளானா?! அவன் திருவுள்ளம் தான் உகக்காதா?! ஆழ்வாரின் அமுத மொழிகள் நம் நினைவில் என்றும் நின்று அவன் உள்ளம் உகக்கும்படி செய்யட்டும்!"

"உண்மை தான் பகவரே. ஆழ்வார் பாசுரங்களில் ஒரு சொல் போதுமே உலகைக் கடைத்தேற்ற.

இப்படி தொண்டு என்னும் சீர் நிறைந்த செந்நெல் இறைவனின் அருள் என்று சொல்லலாம்படியான செழுமையான நீர் நிலைகளில் நின்று ஆடி அசைந்து கவரி வீசும் ஊர் திருக்குடந்தை. அந்த திருப்பதியில் தனது அழகெல்லாம் திகழும் படியாக இறைவன் உறங்குகின்றான்.

சிலரை நிற்கும் போது பார்த்தால் அழகாக இருப்பார்கள். சிலர் அமரும் போது அவர்களது அழகு வெளிப்படும். ஆனால் இவனுக்கோ இவனது ஒப்பில்லாத அழகு எல்லாம் கிடக்கும் போது தான் திகழ்ந்து விளங்குகிறது. அப்படி அழகெல்லாம் திகழும் படியாக இவன் திருக்குடந்தையிலே கிடக்கிறான். அதனைக் கண்டேன் என்கிறார் ஆழ்வார்".

"கண்டேன் எம்மானே என்று தானே சொன்னார். வருத்தப்படுவதாக தேவரீர் சொன்னீர்களே"

"ஆமாம் பகவரே. திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே என்று சொல்லும் போது என் உயிரையும் உடலையும் உருக்கும் திருக்கோலத்தைக் கண்டது மட்டும் தான் உண்டு; ஆனால் நான் எதிர்பார்த்து வந்தவை நடக்கவில்லை என்று சொல்வதாகத் தானே பொருள். வந்தாயா என்று அன்புடன் வினவுதல், தாமரைக்கண் திறந்து குளிரக் காணுதல், ஆரத்தழுவுதல் போன்றவை தானே இவர் விரும்பி வந்தவை. அவற்றை எல்லாம் காணேன். கிடந்ததை மட்டுமே கண்டேன் என்கிறார்.

வாரும் பிள்ளாய். அருகில் அமருக".

வந்த இளைஞன் இருவரையும் பணிந்து அமர்கிறான்.




"இவன் பெயர் கண்ணபிரான். எம்பெருமானார் திருவுள்ளம் எதையெல்லாம் விரும்பியதோ அவற்றை பற்றியே என்றும் சிந்திக்கும் உள்ளத்தவன்.

பிள்ளாய். ஆழ்வாரின் ஆராவமுதே பாசுரத்தின் பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்".

"ஐயா. அடியேன் தேவரீர் திருமாளிகைப் புறத்திலே நின்று தேவரீர் அருளியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் புக வேண்டாம் என்று தயங்கி நின்றிருந்தேன்".

"பெரியோரை மதிக்கும் உன் பணிவைத் தான் இந்த ஊரே நன்கு அறியுமே. இடையில் புக வேண்டாம் என்று தயங்கிய நீ இப்போது வந்தது ஏனோ?"

"சீரார் செந்நெல் கவரி வீசும் என்ற ஆழ்வார் அருளிச்செயலின் இருக்கும் இன்னொரு அருத்த விசேஷமும் மனத்தில் தோன்றியதால் அதனை தங்களிடம் விண்ணப்பிக்க உள்ளே நுழைந்தேன். அடியேனை மன்னிக்கவேண்டும்"

"ஆகா. இன்னொரு அருத்த விஷேசமா? எம்பெருமானார் திருவுள்ளம் போன்ற உள்ளம் அல்லவா உன்னது. அந்தப் பொருளையும் சொல். கேட்போம்!"

"எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது தான் உயிர்களின் இயல்பு என்பதை லக்ஷ்மி சம்பன்னான இளைய பெருமாளும் பரதாழ்வானும் காட்டி நின்ற போது எம்பெருமான் தொண்டு என்பதோ நம் இயல்புக்கு சத்ரு எம்பெருமான் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே நம் இயல்பு என்று நின்றானே சத்ருக்கனாழ்வான். அவனைப் போன்றது இந்த சீரார் செந்நெல்".

"ஆகா. ஆகா. ஆழ்ந்த பொருள் சொன்னாய் கண்ணபிரான். இன்னும் எளிமையாக விளக்கமாகச் சொல்".

"இறைவனுக்குத் தொண்டு செய்வது உயிர்களின் இயல்பு. பெருமாள் காட்டில் வாழ்ந்த காலம் எல்லாம் இளைய பெருமாள் தொண்டே வடிவாக இருந்து உயிர்களின் இயல்பினை விளக்கும் ஓர் அரிய எடுத்துக் காட்டாக இருந்தான்".

"ஆமாம்".

"ஆனால் அவனும் காட்டுக்கு என்னுடன் வராதே என்ற காகுத்தனின் சொல்லை மறுத்து அடம் பிடித்து அவனுடன் காட்டுக்கு ஏகி நிலையான தொண்டினைச் செய்தான். தொண்டிலே அவனுக்கு ஊக்கம்".

"ஆமாம்".

"பரதனோ சுவர்க்கமோ நரகமோ நாடோ காடோ எங்கே நீ என்னை இருத்துகிறாயோ அங்கேயே இருக்கிறேன் என்று பரமன் சொல்படி பாதுகா ராஜ்யம் என்னும் மகா பாரத்தைச் சுமந்தான். அவன் இளையபெருமாளை விட ஒரு படி ஏற்றம்".

"ஆமாம்".

"இவ்விரு வகையில் இறைவனுக்குத் தொண்டு செய்வது இதனை விட உயர்ந்ததான அடியவருக்குத் தொண்டு செய்யும் பேற்றினை அடையாமல் செய்துவிடும். அதனால் பகவத் கைங்கர்யம் என்பதே மகாவிரோதி! சத்ரு! இப்படி எண்ணிக் கொண்டு இராகவனுக்கு மட்டுமே தொண்டு செய்யாமல் அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே சிறப்பு என்று பரதனுக்குத் தொண்டு செய்தான் சத்ருக்னன். பகவத் கைங்கர்யம் என்னும் மகாசத்ருவை வென்று பாகவத கைங்கர்யம் என்னும் அடியவர் தொண்டில் ஆட்பட்டதால் அன்றோ அவன் சத்ருக்களை வென்றவன் சத்ருக்னன் என்று புகழ் பெற்றான்"

"ஆகா. உண்மை. உண்மை. சீரார் செந்நெல் எந்த வகையில் சத்ருக்னனைப் போன்றது என்றும் விளக்கமாகச் சொல்".

"ஆடி அசையும் செந்நெல் இலக்குவனைப் போல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எம்பெருமான் நினைத்துக் கொள்கிறான். அருகில் இருந்து தொண்டு செய்ய இயலாமல் செழுநீர்க் குளத்தில் இருந்து கவரி வீசுவதால் பரதனைப் போல் என்று ஆழ்வார் எண்ணிக் கொள்கிறார். ஆனால் இவ்விரண்டையும் இந்த சீர் பெறும் செந்நெல் செய்யவில்லை. அடியவர்களின் தலைவரான ஆழ்வார் திருக்குடந்தையில் நுழைவதைக் கண்டு அவருக்குத் தானே கவரி வீசி வரவேற்கிறது இந்த செந்நெல்! அதனைத் தான் சொன்னேன்!"

"ஆகா. ஆகா. என்ன அற்புதமான விளக்கம். ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே!"

Monday, January 24, 2011

ஆராவமுதே! - 2

"பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் இறைவனின் ஐந்து நிலைகளிலும் அவன் ஆராவமுதன் என்று அழகாகச் சொன்னீர்கள். இந்தப் பாசுரத்தின் அடுத்த சொல்லைக் கேட்க ஆவலாக இருக்கிறது".

"அடுத்த சொல் இன்னும் மிகவும் அழகானது உலகரே! எளிமையாக எல்லோரும் கூடியிருந்து குளிர்ந்து அனுபவிக்கும்படி ஆராவமுதமாக இருக்கும் நிலையைக் கண்டு நான் அடிமையானேன் என்று சொல்வது போல் தன்னை அடியேன் என்று ஆழ்வார் சொல்கிறார்"

"ஆகா ஆகா. அடியேன் என்று தன்னை அழைத்துக் கொள்வதற்கும் ஒரு அருமையான இடம் பார்த்தாரே! ஆராவமுதே அடியேன் என்று இரண்டையும் சேர்த்துச் சொல்லும் போது ஆராவமுதமாக இருக்கும் அந்த அனுபவிக்க உகந்த தன்மைக்கு அடிமையானேன் என்று சொல்லாமல் சொன்னாரே!"

"அது மட்டும் இல்லை உலகசாரங்கரே. ஆத்ம வஸ்து சத் சித் ஆனந்த மயம் என்று வேதங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க அதனை எல்லாம் தனக்கு அடையாளமாக வைக்காது ஆத்ம வஸ்துவுக்கு அடையாளமாக அமைவது என்றென்றும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் நிலையே என்று சொல்வது போல் இங்கே அடியேன் என்ற் சொல்லைப் புழங்குகிறார் ஆழ்வார்"



"அடடா. மிக ஆழ்ந்த பொருளைச் சொல்கிறீர்கள் போலிருக்கிறதே. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்".

"சாதாரண மனிதர்கள் 'நான்' என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் போது ஆத்மவஸ்துவைக் குறிக்காமல் பெயர் உருவம் குணம் கொண்ட தனது உடலையும் மனத்தையும் சேர்த்தே தானே சொல்கிறார்கள்"

"ஆமாம்"

"இறைவனாலேயே மயக்கம் இல்லாத தெளிவு நிலை என்னும் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆழ்வார். அவர் 'நான்' என்று சொல்ல நினைக்கும் போது தனது உடலையும் மனத்தையும் குறிக்காமல் ஆத்மவஸ்துவையே குறிக்கிறார்"

"அப்படி சொல்வது எதனை வைத்து?"

"அடுத்த சொல்லை வைத்து. அடியேன் உடலம் என்று சொல்கிறாரே. எனது சட்டை என்றால் நானும் சட்டையும் வெவ்வேறு என்று ஆகிறதே. அதே போல் அடியேன் உடலம் என்னும் போது தானும் உடலும் வெவ்வேறு என்று சொல்லாமல் சொல்கிறார். அதனால் இங்கே தன்னை உடல் என்று எண்ணும் மயக்கம் இல்லாதவர் ஆழ்வார் என்பது தெளிவு"

"ஆமாம்"

"அப்படி தன் ஆத்மவஸ்துவைக் குறிக்கும் போது அதன் குணங்களாக வேதங்கள் விரித்துரைக்கும் என்றும் அழியாமல் இருத்தல் (சத்), அறிவே வடிவாகவும் குணமாகவும் இருத்தல் (சித்), என்றும் மகிழ்ச்சியும் இருத்தல் (ஆனந்தம்) என்ற குணங்களை விட இறைவனுக்குத் தொண்டு செய்வதே ஆத்மனுக்கு இயற்கை குணம் என்பதால் அதனை முதன்மைப்படுத்தி அடியேன் என்று சொல்கிறார்"

"ஆகா ஆகா. நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள். அடியேன் என்ற சொல் தான் எத்தனை ஆழமான பொருளைத் தருகிறது. அடியேன் என்று வாயாரச் சொல்லும் எல்லோரும் இனி மேல் இந்த ஆழ்ந்த பொருளை நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் சொன்னால் அது அவர்களுக்கு பெரும்பதத்தைத் தந்துவிடுமே!"




"உண்மை. நாராயண நாமம் தராததையும் இந்த அடியேன் என்ற சொல் தந்துவிடும்!"

"அடுத்து வரும் சொற்களையும் சொல்லியருள வேண்டும்"

"அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே"

"என்ன விந்தை இது? ஆராவமுதமாய் இருக்கும் அனுபவ நிலையைக் கண்டு அதில் மயங்கிவிழுந்து புற்கவ்வி மண்கவ்வி அடியேன் என்று அடிமை புகுதல் ஆத்மவஸ்துவிற்கு இயல்பு. அந்த நெகிழ்ச்சியில் ஆத்மாவிற்கு அருகாமையில் இருக்கும் மனமும் புத்தியும் நெகிழ்வதுவும் உண்டு. அறிவே இல்லாத ஊனுடல் உருகுவதும் உண்டோ?!"

"நன்கு கேட்டீர்! உணவால் பிறந்து உணவால் வளர்ந்து உணவாகி மடியும் உடல் என்பதால் அதனை அன்னமயம் என்றார்கள் பெரியோர்கள். அந்த அன்னமயமான உடலும் இந்த ஆராவமுதனின் மேல் அன்பே உருவாகியது. அன்னமயம் என்பது போய் அன்புமயம் ஆனது. அதனால் அறிவில்லாத ஊன் உடலும் உருகுகின்றது"

"எப்படி அதனைச் சொல்கிறீர்கள்?"

"ஆழ்வார் சொல்வதைக் கவனித்துப் பாருங்கள். அடியேன் உடலம் நின் பால் அன்பாயே என்கிறார். நின் பால் என் உயிரும் மனமும் புத்தியும் மட்டும் இல்லை என் உடலமும் அன்பே ஆக ஆகி நின்றது என்கிறார். அப்படி உடலும் அன்பே உருவாக ஆனதால் தான் நீராய் அலைந்து கரைந்துவிட்டது"

"அடடா. ஆழ்வாரின் நிலை தான் என்னே! அவரது உடலும் ஆராவமுதன் மேல் அன்பாகி உருகுகின்றதே!"

"நாம் அப்படி நினைக்கிறோம். ஆனால் அடியேன் என்று ஆத்மாவின் முதன்மைக் குணத்தைச் சொன்ன ஆழ்வார் அப்படி சொல்லவில்லை. அவரது உடல் தானே உருகவில்லை. அதனைச் செய்தததும் அவனே என்று சொல்கிறார். நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற என்று சொல்வதை பாருங்கள். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை என்று பெரியோர் விரித்துச் சொன்னதை இங்கே சுருங்கச் சொன்னார் ஆழ்வார்!"

"அடடா அடடா. மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கு தேவன் ஆராவமுதன் என்பதால் அடுத்து நெடுமாலே என்றார் போலும். அந்த பெருமையும் இவர் உடல் நீராய் கரைய உருக்கும் தன்மை கொண்டதன்றோ?"

"உண்மை தான். இறைவன் மிகப்பெரியவன். மனிதர்களுக்கு தேவர்கள் எப்படியோ அப்படி தேவர்களுக்கு எல்லாம் தேவனான தேவதேவன். சர்வேஸ்வரன். ஆனால் இங்கே அதனைச் சொல்லவில்லை ஆழ்வார்."

"அப்படியா? என்னில் எந்த பொருளில் சொல்கிறார்?"

"உமக்கு எப்போது ஒருவர் மேல் அன்பு பிறக்கும்? அந்த ஒருவருக்கு உம்மேல் அன்பு இருக்கும் போது தானே? நின் பால் அன்பாயே என்று இவர் சொல்லும் போதே அதனை விட பலமடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருக்கின்றதையும் அறிந்து சொல்கிறார். மால் என்றால் மயக்கம். இவர் மேல் அவனுக்கு ஆழ்ந்த மயக்கமும் அன்பும் உண்டு. அந்த பன்மடங்கு அன்பு அவனுக்கு இவர் மேல் இருப்பதால் அது இவரது உடலையும் அன்பு மயமாக்கி உருக்கும் தன்மை கொண்டது. அப்படி ஆழ்ந்த மயக்கம் இவர் மேல் அவன் கொண்டதால் அவனை 'நெடுமாலே' என்கிறார்"

"நன்கு சொன்னீர்கள். நன்கு சொன்னீர்கள்"

"அப்படி இவரையும் இவர் உடலையும் உருக்கும் அளவிற்கு ஆழமான அன்பை இவர் மேல் உடையவன் இவரைப் பார்த்தவுடன் என்ன செய்வான்?"

"இவர் வரும் திசை நோக்கி வருவான். நலமா என்று விசாரிப்பான். கட்டி அணைப்பான்"

"அதனை எல்லாம் அவன் செய்தானா? இல்லையே! அதனைத் தான் அடுத்த இரு வரிகளில் கூறுகிறார் ஆழ்வார்!"

(தொடரும்)

Friday, January 14, 2011

ஆராவமுதே! - 1


எனது உயிருக்கும் மேலான அன்பை உடைய அண்ணனைப் பிரிந்தேன். அதனாலே துன்பம் வந்தது!

அப்படிப் பிரிந்ததால் அவனுடைய திருவடிகளில் பணிந்துத் தொண்டு செய்யும் வாய்ப்பும் கிட்டாமல் போனது. அதனாலே மேலும் துன்பம் வந்தது!

இப்படி அண்ணன் காட்டிற்குச் செல்ல நேர்ந்ததற்கு நானே காரணம் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளானேன். அதனால் மேன்மேலும் துன்பம் வந்தது!

இப்படி ஒன்றிற்கு மேல் ஒன்றாக வந்த துன்பங்களெல்லாம் வனம் சென்ற பெருமாள் திருவடிகளைக் கண்டு சரணடைந்தால் தீரும்! நிச்சயம் தீரும்!

இப்படி பரதாழ்வான் எண்ணிக் கொண்டு வனம் சென்ற சக்ரவர்த்தித் திருமகன் திருவடிகளிலே சரண் புகுந்தான்.

அது போல தாமும் திருக்குடந்தைக்குச் சென்று ஆராவமுதன் திருவடிகளைச் சேர்ந்தால் தமது மனத்தில் இருக்கும ஆசைகள் எல்லாம் அமையும் என்று எண்ணினார் நம்மாழ்வார். எல்லாவிதங்களிலும் குறைவில்லாத பெரும்பதமான பரமபதம் இருக்க அதனை விட்டு திருக்குடந்தையிலே வந்து கண் வளர்ந்தருளுவது குறைகளை உடையவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவே அன்றோ?! அதனால் நம் ஆசைகளையும் குறைகளையும் ஆராவமுதன் கட்டாயம் தீர்ப்பான் என்று எண்ணி இங்கே வருகிறார்.

அப்படியே திருக்குடந்தைப் பெருமாளைக் காண வந்தால், பரதனிடம் பெருமாள் 'ஆட்சியை குறையில்லாமல் நடத்துகிறாயா? மந்திரிகளிடம் கலந்து கொண்டு அனைத்தையும் செய்கிறாயா?' என்று வார்த்தை சொன்னதைப் போல் இல்லாமல், இவருடைய துன்பம் தீர தனது திருவாயைத் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. பரதனைக் கண்குளிரப் பார்த்தத் தன் திருக்கண்களாலே இவர் நிற்கும் திசையையும் நோக்கவில்லை. எதிரியான கம்சனிடம் பணிசெய்து அவன் சோறு உண்டு வாழ்ந்த அக்ரூரை அவர் தனது பக்தன் என்றதை மட்டுமே கொண்டு எதிர் கொண்டு சென்று தழுவியதைப் போல இவரையும் தழுவுவார் என்று இவர் இருக்க அதுவும் செய்யவில்லை. உலக இன்பங்களையே பெரிதென்று இருப்பவர்களை எப்படி நடத்துவானோ அப்படியே இவரையும் நடத்தியதால் மிகவும் மனத்துன்பம் கொண்டு புலம்புகிறார்!



சொந்தப் பிள்ளை தாய்ப்பாலை வேண்டிக் காலடியே வந்து தழுவும் போது பெற்ற தாய் அக்குழந்தையைக் கண்டு கொள்ளாமல் தள்ளினால் அக்குழந்தை கதறி அழுமே அது போல் அவனுடன் கலந்து பரிமாறும் தமது ஆசை நிறைவேறாமையாலே கதறி அழைக்கிறார்!

***

(நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓர் ஆயிரத்தில் ஐந்தாம் பத்தில் வரும் எட்டாம் திருவாய்மொழியான திருக்குடந்தைத் திருவாய்மொழிக்குப் பொருள் எழுதலாம் என்று சடாரிதேவரின் திருவடி நிலைகளைச் சரண் புகுந்து தொடங்குகிறேன். எத்தனை இடுகைகள் செல்லுமோ அத்தனை இடுகைகளும் அவரே அடியேன் மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்! )

***



சுவாமி! அடியேன்! தேவரீர் திருவடிகளுக்கு தண்டன்!

பிள்ளாய்! உன் பெயர் என்ன? எங்கிருந்து வருகிறாய்?

அடியேன் சுந்தரராம இராமானுச தாசன். தென்னாட்டில் இருந்து வருகிறேன். தேவரீர் திருப்பெயரை இங்கே வடநாட்டில் அனைவரும் பேசக் கேட்டு தண்டனிட வந்தேன்.

தென்னாட்டில் என்ன விஷேசம்?

திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் பிறந்திருக்கிறது. அதனை அடியவர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

அப்படியா? அந்தப் பிரபந்தத்தில் ஒரு பாசுரம் சொல். கேட்போம்.

அடியவர்கள் அப்பிரபந்தத்தை ஓத தொலைவிலிருந்து கேட்டிருக்கிறேன். அதில் எனக்கு நினைவிருப்பது ஒரே ஒரு சொல் தான்.

எங்கே அச்சொல்லையாவது சொல்.

ஆராவமுதே.

அடடா. என்ன சுவையான திருப்பெயர். நாராயண வாசுதேவ விஷ்ணு போன்ற திருநாமங்கள் எல்லாம் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் பரக்கப் பேசப்பட்டிருக்க அந்த நாமங்களில் இல்லாத சுவையைக் காட்டும் இந்த திருநாமம் நடையாடுகின்ற நாட்டில் அல்லவா வாழவேண்டும்! சிறுபேர் நடையாடும் நாட்டில் இவ்வளவு நாள் வாழ்ந்தோமே! இப்போதே தென் திசைக்குச் சென்று இத்திருவாய்மொழியை நன்கு கற்போம்!

***



வாரும் லோகசாரங்கமுனிகளே! வடநாட்டில் வெகுநாட்கள் வாழ்ந்த நீங்கள் தென்னாட்டிற்கு எழுந்தருளியது எதற்காக?

திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் இங்கே பிறந்திருக்கிறதாமே! அதில் ஒரு சொல் கேட்டேன்! ஓடோடி வந்தேன்!

அப்படியா? நல்லது தான். அப்பிரபந்தத்தில் என்ன சொல் கேட்டீர்?

ஆராவமுதே என்ற சொல். அருமையாக இருக்கிறது. தேவரீரிடத்தில் அத்திருவாய்மொழியைப் பொருளுடன் கற்றுக் கொள்ள வந்தேன்.

அடியேன் செய்த நல்வினை. உடனே தொடங்குவோம்.

***

ஆகால தத்வம் அச்ராந்தம் ஆத்மனாம் அநுபச்யதாம் அத்ருப்த் அம்ருத ரூபாய என்று பின் வந்தவர்கள் பாடியது இந்த ஒரு சொல்லைக் கொண்டு தானே! காலம் என்னும் ஒன்று இருக்கும் வரையில் பதட்டமே இல்லாமல் ஆற அமர அனுபவித்தாலும் திகட்டாத அமுதம் போன்ற உருவம் உடையவன் அல்லவோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஒரு குடத்தில் இருக்கும் அமுதத்தை பத்து பேர் உண்ணலாம். பெரிய குடம் என்றால் இன்னும் சிலர் கூட உண்ணலாம். இப்பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து காலம் காலமாய் அனுபவித்தாலும் தீராத அமுதம் போல் இருப்பவனன்றோ எம்பெருமான்! அதனால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஒன்றை அனுபவிப்பதிலும் முறை என்று உண்டு. முதலில் பார்த்தல், பின்னர் நெருங்குதல், பின்னர் தொடுதல், இப்படித் தானே அனுபவிப்பதிலும் முறை என்று இருக்கிறது. ஆனால் அந்த முறைகளை எல்லாம் ஒவ்வொன்றாக காலக்கிரமத்தில் செய்யும் பொறுமை மற்ற விஷயத்தில் வேண்டுமானால் இருக்க முடியும். எம்பெருமான் விஷயத்தில் அது முடிவதில்லை. எந்த முறையையும் பார்க்க முடியாதபடி, முறைப்படி செய்வோம் என்று ஆறியிருக்க முடியாதபடி இருக்கும் அமுதமானவன் என்பதால் எம்பெருமானுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.

அமுதம் அமுதம் என்கிறோமே அந்த அமுதம் இவனுடன் ஒப்பிட்டால் கடலில் பிறந்த உப்புச்சாறு தானே! அந்த உப்புச்சாற்றான அமுதத்தை உண்ண வேண்டும் என்றால் தேவர்களாகப் பிறக்க வேண்டும்! அதற்கு கடுமையான தவங்கள் செய்ய வேண்டும்! அவ்வளவும் செய்தால் சில நேரம் பலிக்கலாம்; சில நேரம் பலிக்காது! எம்பெருமானோ அப்படியின்றி எல்லோரும் அனுபவிக்கக் கூடியவனாக, எல்லா காலத்திலும் அனுபவிக்கக் கூடியவனாக, சொர்க்கம், கைவல்யம், மோட்சம் போன்றவற்றையும் கொடுக்கக் கூடியவனாக இருப்பதால் அவனுக்கு ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று.



ஆழம் எவ்வளவு என்று தெரியாத குளத்தில் இறங்குபவர்கள் ஒரு கொம்பையோ கொடியையோ பிடித்துக் கொண்டு இறங்குவார்கள். அது போல தன்னைத் தானே அனுபவிக்க எம்பெருமான் நினைத்தால் தனக்குத் துணையாக வரும் கொம்பாகக் கொடியாகப் பிராட்டியை அழைத்துக் கொள்கிறான். அயோத்தியில் இராகவப் பெருமாள் பெரிய பெருமாளை அனுபவிக்கப் போகும் போது தனியாகவா சென்றான்?! ஸஹபத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத். பெரிய பெருமாள் என்னும் ஆராவமுதைக் காண கொழுகொம்பாக சீதாபிராட்டியை அழைத்துச் சென்றான் இராமன். பெருமாளுக்குப் பெரியபெருமாள் மேல் உண்டான அன்பின் ஆழத்தைக் கண்டு, தன்னை அணைக்கும் போதை விட இங்கே அன்பு அதிகமாக இருக்கிறதே என்று வியந்து விசாலமான கண்ணை உடையவள் ஆனாள் சீதை. அப்படிப்பட்ட எம்பெருமானுக்குத் தானே ஆராவமுதன் என்ற திருப்பெயர் ஆயிற்று!

ஆராவமுதே! ஆராவமுதே! ஆராவமுதே! அடடா! அடடா! அடடா! எப்படி பொருளை அடுக்கிக் கொண்டே போகிறீர்கள்! அருமை அருமை. ஆத்மனாம் அனுபச்யதாம் என்று ஆத்ம தத்துவத்தில் கொண்டு அவனை அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! கூடியிருந்து குளிர்வதைப் போல் எல்லோரும் ஒரே நேரத்தில் அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! முறையெல்லாம் பார்க்க முடியாதபடி ஆறியிருக்கமுடியாதபடி அனுபவித்தாலும் அவன் ஆராவமுதனே! எளிமையிலும் எளிமையாக எங்கும் கிடைப்பதாக இருக்கும் அவன் ஆராவமுதனே! அவனே அனுபவிக்க இறங்கினாலும் காலம் காலமாக ஆழங்காண முடியாதபடி இருப்பதால் துணை கொண்டு இறங்கும் வகையில் இருக்கும் அவன் ஆராவமுதனே!

இதில் ஒரு ஐயம் ஐயா. இறைவன் ஐந்து நிலைகளில் இருப்பதாகச் சொல்கிறார்களே. அவற்றில் எந்த நிலையில் அவன் ஆராவமுதன்?

அடடா! மிக அருமையான கேள்வியைக் கேட்டீர்.

ஸதா பச்யந்தி ஸூரய: என்றல்லவோ வேதம் முழங்குகிறது! வேண்டிய உருவெல்லாம் எடுத்து வேண்டிய வகையிலெல்லாம் அவனுக்குத் தொண்டு செய்யும் போது நித்யர்களும் முக்தர்களும் கண் கொட்டாமல் பார்க்கும் பரமபத நாதனும் ஆராவமுதனே! அதனால் அன்றோ சுரர்களான நித்யர்களும் முக்தர்களும் சதா அவனைக் கண்டு கொண்டே இருக்கிறார்கள் என்று வேதம் முழங்குகின்றது!

தேவர்களும் முனிவர்களும் அபயம் அபயம் என்று கூக்குரலிட்டு ஓடி வரும் திருப்பாற்கடலில் அறிதுயில் கொள்பவனும் அனந்தன், கருடன், தும்புரு, நாரதன், பிரம்மன் முதலானவர்கள் என்றும் அனுபவிக்கத்தக்கவனாக இருக்கும் ஆராவமுதனே!

ஆணாய் பிறந்ததால் இவன் வடிவழகென்னும் அமுதத்தை முழுமையாகப் பருக முடியவில்லையே என்று முனிவர்கள் வரம் வேண்டி கோபியர்களாகப் பிறந்து இவனை அனுபவிக்கும் வகையில் அமைந்த இராமன், கிருஷ்ணன் முதலான அவதார திருவுருவமும் ஆராவமுதனே!

கண் மூடி மனத்தை நிலை நிறுத்தி நீண்ட காலம் அசையாமல் அமர்ந்து யோகிகள் தங்கள் இதயத்தில் இருக்கும் தகராகாச சோதியாகக் கண்டு அனுபவிக்கும் அந்த அந்தர்யாமியான இறைவனும் ஆராவமுதனே!

நீரும் நானும் என எல்லோரும் கூடியிருந்து அனுபவிக்கலாம்படி நம் இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானும் ஆராவமுதனே!

(தொடரும்)

***

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

Saturday, November 20, 2010

கார்த்திகையில் கார்த்திகை நாள்

முழு நிலவு நாளில் எந்த நட்சத்திரம் அமைகிறதோ அதன் அடிப்படையில் மாதங்களின் பெயர்கள் அமைந்திருக்கின்றன. சித்திரை நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் (சித்திரா பௌர்ணமி) அமைந்தால் அந்த மாதம் [மதி (நிலவு) --> மாதம்] சித்திரை மாதம். விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு நாள் அமைந்தால் அந்த மாதம் வைகாசி (வைசாகி --> வைகாசி). அப்படியே ஒவ்வொரு மாதத்திற்கும் பார்த்துக் கொண்டு வந்தால் கார்த்திகை நட்சத்திரத்தில் முழு நிலவு அமையும் மாதம் கார்த்திகை மாதம். திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் தீபத்திருநாள் என்றும் கொண்டாடப்படும் இந்தத் திருநாள் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விளக்கீடு என்னும் இந்தத் தீபத்திருநாள் பெரும் கொண்டாட்டமாக இருந்தது என்பதற்கு நிறைய தரவுகள் இருக்கின்றன.

திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் இன்னும் பல திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா தற்காலத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால் கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் திருமுருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மிக உகந்த நட்சத்திரமாக அமைவதால் திருக்கார்த்திகைத் திருநாள் முருகப்பெருமானுக்கும் மிக உகந்த திருநாளாக அமைகிறது.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்னும் நாலாயிரம் பாசுரங்களின் தொகுப்பான வைணவ பக்தி இலக்கியத்தில் ஓர் ஆயிரத்தைப் பாடிய நம்மாழ்வாரும் இன்னோர் ஆயிரத்தைப் பாடிய திருமங்கையாழ்வாரும் திருமுருகனுக்கு உகந்த நாட்களில் பிறந்திருக்கிறார்கள். முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். முருகனுக்கு உகந்த கார்த்திகையில் கார்த்திகை நாளான இன்று பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்ன என்னில் - ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்.


பேதை நெஞ்சமே! இன்றைக்கு என்ன பெருமை என்று அறியமாட்டாயோ?

ஏது பெருமை? இன்றைக்கு என்ன?

சொல்கின்றேன் கேள். பெரும்புகழ் கொண்ட திருமங்கைமன்னன் இந்த மாபெரும் பூமியில் வந்து உதித்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் இந்த நாள்.



மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த - வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் என்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


ஆகா! இன்று திருமங்கைமன்னன் திருவவதாரத் திருநாளா?! அருமை! அவருடைய பெருமைகளை இன்னும் சொல்லுங்கள்.

நான்கு வேதங்களுக்கு ஒப்பான நான்கு தமிழ்ப் பனுவல்களை செய்தார் நம்மாழ்வார். வேதங்களுக்கு ஆறு பகுதிகள் என்னும் ஆறங்கம் உண்டு. அதே போல் நம்மாழ்வார் செய்த தமிழ் மறைக்கு ஆறங்கம் செய்தார் திருமங்கையாழ்வார். அப்படி ஆறங்கம் பாட அவர் அவதரித்த மிக்க பெருமையுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் என்று மனம் மகிழ்ந்து அதனைக் காதலிப்பவர்களின் திருவடி மலர்களை நமக்கு பாக்கியம் என்று சொல்லி வாழ்த்துவாய் நெஞ்சமே!

அப்படியே செய்கிறேன்! இதோ வாழ்த்துகிறேன்!



வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல்.



எதிரிகளுக்கு காலன் ஆகிய பரகாலன் வாழ்க! கலியின் கொடுமையைக் குறைக்கும் கலிகன்றி வாழ்க! திருக்குறையலூரில் வாழும் தலைவன் வாழ்க! மாயோனை தனது வாளால் மிரட்டி அவனிடமிருந்தே நேரடியாக நாராயண மந்திரத்தை உபதேசம் பெற்ற திருமங்கை மன்னனின் தூய்மையான சுடர் விடும் வேல் வாழ்க வாழ்க!

நெஞ்சுக்கு இருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம் பரசமய
பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன் பனுவல்களே


அது மட்டுமா?! பரகாலன் பாடிய செந்தமிழ்ப் பனுவல்கள் நெஞ்சில் இருக்கும் அறியாமை என்னும் இருளைக் கடிந்து நீக்கும் தீபம்! எது செய்தாலும் எளிதில் அடங்காத, என்றைக்குத் தொடங்கியது என்று அறியாத பிறப்பு இறப்புச் சுழல் என்னும் கொடிய நஞ்சினை நீக்கும் நல்லதொரு அமுதம்! பழந்தமிழ் இலக்கணம் பேசும் ஐந்து துறைகளுக்கு நல்ல விளக்கமாக அமைந்த இலக்கியம்! வேதங்களில் சாரம்! வேற்று சமயங்கள் என்னும் பஞ்சுக்குவியல்களை அழிக்கும் அனலின் பொறி!


எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்கும் மனம் நீ எனக்கு தா!


இவ்வளவு பெருமை வாய்ந்த திருமங்கையாழ்வாரின் பனுவல்கள் என் நெஞ்சத்தில் எப்படி தங்கும்? எங்கள் கதியான இராமானுசமுனியே! எங்களது ஐயங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆண்ட தவத்தோர் தலைவனே! புகழ் பொங்கும் திருமங்கைமன்னன் தந்த ஆயிரம் மறைகளும் தங்கும் மனத்தை நீயே எனக்குத் தரவேண்டும்!

**

திருமங்கை ஆழ்வாருக்கு இன்னும் சில சிறப்புகள் உண்டு. எந்த ஆழ்வாருக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த ஆழ்வாருக்கு உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்). முருகனுக்கும் இவருக்கும் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அது என்ன? (படங்களைப் பாருங்கள்).

Tuesday, August 31, 2010

இரவு! இரவில் இரவு! அந்த இரவில் இரவு! அதில் இருள் சூழ்ந்த சிறை!

இரவு! அந்த இரவில் இரவு! அந்த இரவில் இரவு! அந்த இரவில் இருள் சூழ்ந்த சிறைச்சாலை! அங்கே தோன்றியது ஒரு அணிவிளக்கு!

நமது ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள். அந்த நாளின் பகல் பொழுது பகலவனின் வடசெலவு எனப்படும் உத்தராயணம் - தை முதல் ஆனி வரை. அந்த நாளின் இரவுப் பொழுது பகலவனின் தென்செலவு எனப்படும் தட்சிணாயணம் - ஆடி முதல் மார்கழி வரை. இப்போது நடக்கும் திங்கள் ஆவணித் திங்கள் - தேவர்களின் இரவில் ஒரு பகுதி!

மதி ஒரு முறை தேய்ந்து வளரும் முப்பது நாட்கள் முன்னோர்கள் எனப்படும் பிதுர்களின் ஒரு நாள். மதியின் வளர்பிறை அவர்களின் பகல். மதியின் தேய்பிறை அவர்களின் இரவு. ஆவணி எனும் தேவர்களின் இரவில் வந்த தேய்பிறை காலம் இப்போது. இரவில் இரவு! தேய்பிறை காலத்தின் நடுவில் வருவது எட்டாம் நாளாகிய அஷ்டமி திதி. ஆக இது முன்னோர்களின் நடு இரவான நாள்!

இந்த தேய்பிறை எட்டாம் நாளின் இரவு - மனிதர்களின் இரவில் ஒரு கொடியவனின் சிறையில் - இருள் சூழ்ந்த சிறையில் தோன்றியது இந்த இருளையெல்லாம் நீக்கும் - புறம் போல் உள்ளும் கரியான் ஆன மாயோன் எனும் அணிவிளக்கு!










பெரியாழ்வார் திருமொழி 1.1:

பாசுரம் 1

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே


அழகு பொருந்திய மாடங்கள் நிறைந்த திருக்கோட்டியூரில் வாழும் கண்ணன் கேசவன் நம்பி திருவாய்ப்பாடியிலே நந்தகோபரின் இனிய இல்லத்திலே பிறந்த போது, அவன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகத்தால் ஆயர்கள் ஒருவர் மீது பூசிய நறுமண எண்ணெயாலும் ஒருவர் மீது ஒருவர் தூவிய வண்ண வண்ணச் சுண்ணப் பொடிகளாலும் கண்ணனின் வீட்டுத் திருமுற்றம் எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறானது.

இந்தப் பாசுரத்தில் கண்ணனை அறிமுகம் செய்யும் போது கண்ணன், கேசவன், நம்பி என்ற மூன்று பெயர்களைச் சொல்கிறார். அழகிய கண்களை உடையவன், கண்ணைப் போன்றவன், கண்களுக்கு விருந்தானவன், அழகிய திருமுடிக்கற்றைகளை உடையவன், கேசியை அழித்தவன், நற்குணங்களால் நிறைந்தவன், அழகன் போன்ற எல்லா பொருளையும் ஒரே நேரத்தில் அழகுபடச் சொல்லிச் செல்கிறார். கண்ணன் அவதரித்ததால் நந்தகோபருடைய இல்லம் இனிய இல்லமானது. கண்ணன் பிறந்த பின்னர் நந்தகோபர் தன் இல்லத்தின் தலைவனாக கண்ணனைக் கொண்டான் என்பதால் நந்தகோபர் திருமாளிகையின் திருமுற்றத்தை கண்ணன் முற்றம் என்றார். செம்புலப்பெயல்நீர் என்பார் தமிழ்ப்புலவர். அதே போல் இங்கே எண்ணெயும் சுண்ணமும் கலந்து சேறாகிக் கிடக்கிறது. ஆழ்வாருடைய காலத்திலும் கண்ணனுடைய காலத்திலும் மகிழ்ச்சியைத் தெரிவிக்க எண்ணையை ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொண்டும் வண்ணச் சுண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவிக்கொண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப்பொடிகளைத் தூவியும் நீரில் கரைத்துத் தெளித்தும் மகிழ்கிறார்களே.


பாசுரம் 2.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே


திருவாய்ப்பாடியிலிருக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபருக்குத் திருக்குமரன் பிறந்ததைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி.

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் திருவவதாரத்தை ஆய்ப்பாடியில் வாழ்ந்த ஐந்து லட்சம் ஆயர்கள் எப்படி குதூகலமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினார்கள் என்பதைச் சொல்கிறார் பட்டர்பிரான். கிருஷ்ண ஜனனத்தால் மகிழ்ச்சியுறாதவர்கள் எவருமில்லை திருவாய்ப்பாடியிலே. ஆலிப்பார் என்பதற்கு உரக்கக் கூவுதல், ஆலிங்கனம் (கட்டித் தழுவுதல்) என்று இரு பொருளைச் சொல்கின்றனர் பெரியோர்.


பாசுரம் 3.

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே


எல்லா சீர்களையும் உடைய இந்த சிறு பிள்ளை கம்சனைப் போன்றவர்களிடம் இருந்து மறைந்து வளர்வதற்காக அந்தப் பெருமைகளை எல்லாம் பேணி/மறைத்து நந்தகோபர் இல்லத்தில் பிறந்தான். அப்போது அவனைக் காண்பதற்காக எல்லா ஆயர்களும் ஆய்ச்சியர்களும் திருமாளிகைக்குள் புகுவார்கள்களும் உள்ளே புகுந்து அவனைக் கண்டு வெளியே வருபவர்களுமாக இருக்கிறார்கள். புகுபவர்களும் புக்குப் போதுபவர்களும் ஒருவருக்கொருவர் கண்ணனின் பெருமைகளைப் பேசிக் கொள்கிறார்கள். 'இவனைப் போன்ற அழகுடைய ஆண்மகன் வேறு யாரும் இல்லை. இவன் திருவோணத்தானாகிய திருமாலால் அளக்கப்பட்ட மூவுலகங்களையும் ஆள்வான்' என்று சொல்கிறார்கள்.

இந்தப் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளை திருவாய்ப்பாடி வாழ் மக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டதைச் சொல்கிறார். பேணிச் சீருடை என்ற சொற்றொடருக்கு 'பேணுவதற்கு உரிய சீர்களை உடைய' என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. திருவோணத்தான் உலகாளும் என்ற சொற்றொடருக்கு 'திருவோணத்தானாகிய திருமாலின் உலகங்களை ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரி தான்; 'இவன் திருவோணத்தானாகிய திருமாலே. இவன் உலகங்களை எல்லாம் ஆளுவான்' என்று பொருள் கொண்டாலும் சரியே.


பாசுரம் 4.

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே


பால் தயிர் நெய் முதலானவை வைத்திருந்த உறிகளை எடுத்து வந்து கண்ணனின் திருமாளிகை முற்றத்தில் உருட்டி உருட்டி தங்கள் மனம் போன படி ஆடுகின்றார்கள் சிலர். நறுமணம் மிக்க நெய், பால், தயிர் மூன்றையும் எல்லா இடங்களிலும் தூவுகின்றார்கள் சிலர். நெருக்கமாக வளர்ந்து மென்மையாக இருக்கும் கூந்தல் அவிழ்ந்ததும் தெரியாமல் மனம் ஆழ்ந்து திளைத்து ஆடுகின்றார்கள் சிலர். இப்படி நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவினை கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் இழந்து திருவாய்ப்பாடி முழுவதும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஆயர்கள்.

நெய், பால், தயிர் போன்றவற்றை மகிழ்ச்சியின் மிகுதியால் முற்றமெங்கும் தூவினார்கள் என்பதொரு பொருள். கண்ணனுக்கு நன்மை உண்டாகும் பொருட்டு (நன்று ஆக) எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானமாகக் கொடுத்தார்கள் என்று இன்னொரு பொருளைச் சொல்கிறார்கள் பெரியவர்கள்.

பாசுரம் 5.

கொண்ட தாள் உறி கோலக் கொடு மழு
தண்டினர் பறி ஓலைச் சயனத்தர்
விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்


இந்த இடையர்கள் தாங்கி வந்த உறிகள் அவர்கள் கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. அவர்களது ஆயுதங்களான அழகிய கூர்மையான மழுவையும் மாடு மேய்க்கும் கோல்களையும் ஏந்தி வந்திருக்கின்றனர். பனைமரத்திலிருந்து பறித்து எடுத்த ஓலையால் செய்த பாயை இரவில் படுக்கப் பயன்படுத்திவிட்டு அதனையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றனர். பறித்தெடுத்த முல்லை அரும்பு போன்ற வெண்மையான பற்களைக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இடையர்கள் நெருக்கமாகக் கூடி கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக நெய்யால் ஆடினார்கள்.

மாடு மேய்க்கப் போன இடத்தில் பால் கறக்க நேர்ந்ததால் அந்த பாலை இட்டு வைத்த உறியையும் தாங்கி வந்திருக்கின்றனர். அந்த உறிகளைக் காவடி போல் ஏந்தி வந்தார்கள் போலும். அப்படி ஏந்தி வந்த உறிக்காவடி அவர்களது தாள்களை/கால்களைத் தொடுமளவிற்கு இருக்கின்றன. இலை தழைகளைப் பறித்து மாடுகளுக்கு இடுவதற்காக சிறிய மழுவாயுதத்தைத் தாங்கி வருகிறார்கள். மாடுகளை மேய்க்கும் கோல்களையும் தாங்கி வருகின்றார்கள். எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாததால் அவர்களது பற்கள் வெண்மையான முல்லை அரும்புகளைப் போல் இருக்கின்றன. கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் எண்ணெய் தேய்த்து நீராடியதை நெய்யாடினார் என்று சொல்வதாகக் கூறினாலும் பொருத்தமே.

இராக்காவல் முடிந்து வந்தார்கள் என்பது பெரியோர்கள் சொன்ன பொருள். அதிகாலையில் மாடு மேய்க்கச் செல்பவர்கள் கண்ணன் பிறந்த செய்தியைக் கேட்டு வந்து மகிழ்ந்து நெய்யாடினார்கள் என்றாலும் பொருத்தமே.

இங்கே அண்டர் என்று சொன்னது அண்டத்தில் வாழும் தேவர்களை என்றொரு கருத்தும் இருக்கிறது. ஆனால் இங்கே விளக்கியிருக்கும் செயல்களைச் செய்பவர்கள் இடையர்களாக இருக்கவே வாய்ப்புள்ளதாலும் முன்பின் வரும் பாசுரங்கள் இடைச்சேரியைப் பற்றியே பேசுவதாலும் அண்டர் என்றது ஆயர்களையே எனலாம்.

பாசுரம் 6.

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பையவாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே


கண்ணனாகிய குழந்தையின் கையையும் காலையும் நீட்டி நிமிர்த்து, பெரிய பானையிலே நறுமணப்பொருட்களுடன் காய்ச்சப்பட்ட வெந்நீரைக் கொண்டு மென்மையாக குழந்தையை நீராட்டி, மென்மையான சிறிய மஞ்சள் கிழங்காலே குழந்தையின் நாக்கை வழிக்கும் போது அப்போது அங்காந்த (திறந்த, ஆ காட்டிய) திருவாயின் உள்ளே வையம் ஏழும் கண்டாள் யசோதைப் பிராட்டியார். ஆகா. என்ன விந்தை!

இன்றைக்கும் சிறு குழந்தையைக் குளிப்பாட்டும் போது தாய்மார்கள் கால்களை நீட்டி அமர்ந்து குழந்தையை முழந்தாள் மூட்டின் மேல் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள். அப்போது குழந்தைக்கு சிறிதும் அதிர்ச்சி ஏற்படாத வண்ணம் சிறிதே வெம்மையான நீரை பையப் பைய ஊற்றி நீராட்டுகிறார்கள். அன்றைக்கும் அசோதைப் பிராட்டியார் தன் சிறு குழந்தையாம் இளஞ்சிங்கத்தை அப்படித் தான் நீராட்டியிருக்கிறாள். குழந்தையின் கையும் காலும் நன்கு செயல்படுவதற்காக அவற்றை நீட்டி நிமிர்த்துவதும் இன்றைக்கும் தாய்மார்கள் செய்வதே (சில இல்லங்களில் பாட்டிமார்கள் செய்கிறார்கள்). அப்படி கையும் காலும் நீட்டி நிமிர்த்திய பின் கடார நீரால் கண்ணக் குழந்தையை நீராட்டி அவனது நாக்கை வழிப்பதற்காக வாயை திறந்த போது அங்கே ஏழுலகையும் கண்டு வியந்து போனாள். ஐய என்ற சொல்லால் அந்த வியப்பைக் குறிக்கிறார் ஆழ்வார்.

மண்ணெடுத்து உண்டதால் அண்ணனால் தடுக்கப் பட்டு அன்னையால் ஆராயப்படும் போது வாயுள் ஏழுலகம் காட்டினான் என்றே இதுவரை படித்தும் கேட்டும் இருக்கிறோம். ஆழ்வார் அந்த நிகழ்வை இன்னும் விரைவாக்கி பிறந்த சில நாட்களிலேயே நடப்பதாகக் கூறுகிறார்.

பாசுரம் 7.

வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே


கண்ணனின் திருவாயுனுள் எல்லா உலகங்களையும் கண்ட யசோதைப் பிராட்டியும் மற்ற ஆய்ச்சியர்களும் மிகவும் வியந்து 'ஆயர்களின் பிள்ளை இல்லை இவன். பெறுதற்கரிய தெய்வமே இவன். பரந்த புகழையும் சிறந்த பண்புகளையும் உடைய இந்த பாலகன் எல்லா உலகங்களையும் மயக்கும் அந்த மாயனே' என்று ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.

கண்ணனுடைய திருவருளால் தெய்வீகக் கண் பெற்ற யசோதைப் பிராட்டியார் கண்ணனின் திருவாயுனுள் ஏழுகலங்களையும் கண்டு வியந்து மற்ற ஆய்ச்சியர்களையும் அழைத்துக் காண்பித்தாள். கண்ணன் அவர்களுக்கும் திருவருள் செய்து தெய்வீகக் கண்களைக் கொடுக்க அவர்களும் அவன் திருவாயுனுள் உலகங்களைக் கண்டு வியந்தனர். வியந்து 'இவன் இடைப்பிள்ளை இல்லை; ஏழுலகங்களையும் மயக்கும் மாயனே' என்று சொல்லி மகிழ்ந்தனர்.

பாசுரம் 8.

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
மத்தமாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே


கண்ணன் பிறந்து பன்னிரண்டாம் நாள் அந்தக் குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடக்கிறது. அந்தத் திருவிழாவிற்காக எல்லா திசைகளிலும் கொடிகளும் தோரணங்களும் தாங்கிய வெற்றித் தூண்கள் நடப்பட்டிருக்கின்றன. அந்தத் திருவிழாவில் யானைகள் நிறைந்த கோவர்ந்தன மலையைத் தாங்கிய மைந்தனாம் கோபாலனை கைத்தலங்களில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர் ஆயர்கள்.

குழந்தை பிறந்து பத்தாம் நாளிலோ பன்னிரண்டாம் நாளிலோ ஏதோ ஒரு நல்ல நாளில் பெயர் சூட வேண்டும் என்று சொல்கின்றன சாத்திரங்கள். அதனை ஒட்டி பன்னிரண்டாம் நாள் அன்று எல்லாத் திசைகளிலும் தோரணங்களையும் கொடிகளையும் நாட்டிக் கொண்டாடுகின்றனர் ஆயர்கள்.

இங்கே ஆயர்கள் என்றது ஆண் பெண் இருபாலரையும்.

தங்கள் கைகளில் வைத்துக் கொண்டாடினர் என்று சொன்னாலும் தகும். உத்தானம் என்று சொன்னதால் தலை மேல் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடினர் என்றாலும் சரியே.

கோவர்த்தன மலையைத் தூக்கிய நிகழ்ச்சி பிற்காலத்தில் நடந்திருந்தாலும் அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு பின்னர் வாழ்ந்தவர் ஆழ்வார் என்பதால் அதனை இங்கே நினைத்துக் கொண்டார் என்பதில் குறையில்லை. திருவாய்ப்பாடியில் நடந்ததை திருக்கோட்டியூருக்குக் கொண்டு வந்ததைப் போல் பின்னர் நடந்ததை முன்னரே நினைத்துக் கொண்டார் போலும்.

பாசுரம் 9.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்


'கண்ணனைத் தொட்டிலில் உறங்குவதற்காக இட்டால் அந்தத் தொட்டில் கிழிந்து போகும்படி உதைக்கிறான். கையில் எடுத்துக் கொண்டாலோ இடுப்பை முறிக்கும் அளவிற்கு ஆடுகிறான். இறுக்கி அணைத்துக் கொண்டால் வயிற்றின் மேல் பாய்கிறான். தேவையான வலிமை இல்லாததால் நான் மிகவும் மெலிந்தேன் பெண்ணே' என்று யசோதைப் பிராட்டியார் தோழியிடம் முறையிடுகிறார்.

இங்கே மிடுக்கிலாமையால் என்றது யசோதையாகிய தன்னை என்றும் கிருஷ்ணக் குழந்தையை என்றும் இருவிதமாகப் பெரியோர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். பிறந்து பன்னிரண்டே நாட்கள் பிஞ்சினைப் பற்றி கூறுவதால் குழந்தையின் மென்மையை மிடுக்கிலாமை என்றார். சிறிதே வளர்ந்த குழந்தையைப் பற்றி யசோதையார் கூறினார் என்றால் அது தன்னைக் கூறினார் என்னிலும் தகும். இன்றைக்கும் தமது குழவியரைப் பற்றி தாயர் இந்தக் குறையைக் கூறி மெச்சிக் கொள்வதைக் கேட்கிறோமே.

பாசுரம் 10.

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்தயிப்
பன்னுபாடவல்லார்க்கு இல்லை பாவமே


செந்நெல் ஆர்க்கும் வயல்கள் சூழ்ந்த திருக்கோட்டியூரில் நிலைத்து வாழும் எல்லா கல்யாண குணங்களும் நிரம்பிய நாரணன் திருவாய்ப்பாடியில் பிறந்த சரிதத்தை திருமார்பில் முப்புரி நூல் மின்னும்படியாகத் திகழும் விஷ்ணுசித்தர் விவரித்துச் சொன்ன இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடுபவர்களுக்கு இறைவனைச் சிந்திக்கவும் அடையவும் தடையாக நிற்கும் பாவங்கள் நீங்கும்.

செந்நெல் ஆர்க்கும் என்றதனால் இம்மைப்பயன்கள் குறைவின்றி விளங்குவதைக் காட்டினார். மன்னு என்று என்றும் நிலைத்து வாழ்வதைக் கூறியதால் அர்ச்சாவதாரத்தின் குறைவில்லாப் பெருங்குணத்தைக் காட்டினார். நாரணன் என்று சொன்னதால் எவ்விடத்தும் எவ்வுயிரிலும் வாழ்பவன் என்பதையும் எவ்விடமும் எவ்வுயிரும் தன்னுள் கொண்டவன் என்பதையும் கூறினார். நம்பி என்றதால் அர்ச்சாவதாரத்தில் மிக வெளிப்படையாக நிற்கும் பெருங்குணமான சௌலப்யத்தை / நீர்மையைக் காட்டினார். இல்லை பாவமே என்றதனால் கைங்கர்ய விரோதிகளான பாவங்கள் நீங்கினபடியைக் கூறினார்.

Sunday, August 08, 2010

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! அந்தக் கண்ணனுக்கு மட்டும் இல்லை இந்தக் கண்ணபிரானுக்கும் இது பொருந்தும்! ஏறக்குறைய இவர் நண்பர்கள் அனைவருக்குமே இவரிடம் கொஞ்சம் குறைந்த பட்சம் லேசான மனத்தாங்கல் இருக்கிறது! ஆனால் இவரை விரும்பாதவரே இல்லை! எல்லாருமே நண்பர்கள் தான்! இந்த இனிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு இன்று பிறந்தநாள் (ஆகஸ்ட் 9)! எல்லா நலமும் பெற்று, விட்டுப் போனவை எல்லாம் மீண்டும் கிடைத்து, இறைத்தொண்டிலேயே கவனம் எல்லாம் நிலைத்து, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இரவிசங்கர் வாழ நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி அருள் புரிய வேண்டும்!

***

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!


பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும் திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவீசித் திகழ்கிறதோ? நீர் தேவ தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும் பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும் காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல் திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே! அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது திருமேனியில் ஒளிவீசும் திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம் என்னும் படி கலந்து ஒளிவீசுகிறதே! கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும் வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!



கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி!


உண்மையைச் சொன்னால் தாமரை உமது திருக்கண்கள், திருப்பாதங்கள், திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது! காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும் உமது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது! ஏதேதோ ஒப்பு வைத்து இந்த உலகத்தார் உம்மைப் புகழ்வனவெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாய்ப் பயனின்றிப் போகும்படி செய்யும் பேரொளி உடையவர் நீர்!

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையில் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே!


எளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக பேரழகுடனும் பேரொளியுடனும் நீர் திகழ, ஏகம் அத்விதீயம் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்றும் பேசும் படியாக உம்மை விட மற்றோர் பரஞ்சோதி இல்லாத வண்ணம் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது திருமேனியாகவே இந்த பிரபஞ்சத்தையெல்லாம் உம் எண்ணத்தாலேயே படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம் வெற்றுரையாய் ஆக்கும் பரஞ்சோதியாகவும் நீர்மைக்கு எல்லைநிலமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் உமது அளவில்லாத தெய்வீக குணங்களை எல்லாம் அடியேனாலும் பேச முடியாது!

மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலைமாஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மாஞாலம் வருத்தாதே?


மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா?

வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?


அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?



ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொல்லி யான் வாழ்த்துவனே?


ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை! மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்!

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகெல்லாம் படையென்று முதல் படைத்தாய்!
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதோ?


பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும் உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில் நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்! மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச் சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள் துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ? உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல் புகழ் மாசு பெற்றுவிடுமே!

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான்கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உனபாத மலர்ச்சோதி மழுங்காதே?


குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும் அடிப்படையானீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே!

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?


தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா?



மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இது வியப்பே!


மறையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாக நின்ற விரிந்த பேரொளியே! முறைப்படி இவ்வுலகங்களையெல்லாம் படைத்தீர்! வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின்னர் உலகத் தோற்றக்காலத்தில் அவற்றையெல்லாம் உமிழ்ந்தீர்! வாமன திரிவிக்கிரமனாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சடையை உடைய சிவபெருமானும் நான்முகனும் இந்திரனும் நீர் எல்லாவற்றையும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த சர்வஸ்வாமியாக இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? வியப்பில்லையே!

வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே


மற்றவர்களுக்கு வியப்பாக இருப்பவை எல்லாம் தன்னிடம் வியப்பில்லாமல் போகும் படியான பெருமையையுடைய, மெய்ஞானத்தை அருளும் வேதங்களாக இருப்பவனை, வெற்றியும் புகழும் உடையவர்கள் பலர் வாழ்கின்ற பெரிய ஊரான திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனாகிய நம்மாழ்வார் குற்றங்கள் ஏதும் இன்றி தொழுது உரைத்த ஆயிரம் பாடல்களுள் இந்தப் பத்துப் பாடல்கள் தம்மைப் பாடுபவர்களை ஒலி நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தில் முன்னேற்றி மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கும்.

Wednesday, February 24, 2010

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!

தென் தமிழ் நாட்டின் புத்தூர் இந்த ஊர். ஆற்றங்கரையில் அரவணையில் துயின்று கொண்டே இருந்து அது அலுத்துப் போய், 'மானைத் தேடி மருகன் சென்றது போல்' இந்த மாமனும் கையில் சாட்டையுடன் அரச கோலம் கொண்டு அரங்க மன்னாராய் நிற்கும் ஊர். இவன் வந்து நின்ற நேரம் கோதை, இராதை, குமரி, சங்கரி, இராகவி என்று பல பெண்மான்கள் இந்த ஊரில் பிறந்தார்கள். இப்பெண்களில் கோதையே தலைவி; இவர்களின் நாச்சியார்! கூடல் இழைத்துப் பார்த்ததில் கோவிந்தன் வருவான் என்ற செய்தி கிடைக்க அந்த மயக்கத்திலேயே ஆழ்ந்து போய் அரங்கன் என்னும் மதயானையால் சுவைத்து எறியப்பட்ட கரும்புச்சக்கையாகக் கிடக்கிறாள் கோதை! வடமதுரைக்கு அவளை உய்த்திடும் நாள் இன்னும் வரவில்லையோ என்று வியந்து கொண்டு அவளைத் தனியே இருக்க விட்டு அவள் தோழியர் திண்ணைப்புறத்திற்கு வந்தனர். வந்தவர்கள் நடுவே அயோத்தியர்கோனைப் போற்றுவதும் ஆயர்கள் ஏற்றினைப் போற்றுவதும் என்று ஒரு போட்டி தோன்றியது.

குமரி: உங்கள் கோவிந்தன் தாய் தந்தைக்கு அடங்காதவன். உடன்பிறந்தவனோ கோள் சொல்லி. எங்கள் இராமன் அப்படியா? பெற்றோர் சொல்படி கானகம் ஏகினான் எங்கள் காகுத்தன். தன்னுடைய உடமைகள், உணவு, உறக்கம் அனைத்தையும் தொலைத்து கூடவே காவலாக நின்றான் உடன்பிறந்தானான இளையாழ்வான். இவனையும் மிஞ்சும் வகையில் 'என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்பே பெரிது' என்று முடி சூடாமல் அடி சூடி நின்றான் தம்பி பரதாழ்வான். 'உன்னைப் பேணுதற்கு உன் அடியார்கள் உண்டு; உன் அடியார்களைப் பேணுதலே உன் திருவுள்ளக் குறிப்பு' என்று சொல்லி அடியார்க்கு அடியானாய் நின்றான் சத்ருக்னன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயனாய் உங்கள் கண்ணன் இருக்கலாம். நற்குணங்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் இந்தச் சக்ரவர்த்தித் திருமகன்கள்!

***

"என் மனம் பெரிதும் மயங்குகின்றதே. பெருமாள் காடேறப் போனான். சக்ரவர்த்தியோ அப்பிரிவைத் தாங்காமல் வானேறப் போனார். இவ்விரு துன்பமே தாங்க முடியாத போது பழுத்த புண்ணிலே புளி பெய்ததைப் போல அரசனின்றி நாடு இருக்கக் கூடாது; முடி சூட்டிக் கொள் என்று சொல்கிறீர்களே! இது தகுமா? முறையா? நீதியா?

எம்பெருமானுக்கு உடைமையான நான் அவன் உடைமையான இந்த நாட்டை ஆளுவது எப்படி? நீங்கள் எல்லோரும் இப்படி ஒன்றாகக் கூடி வந்து என் இயல்பைத் துறக்க வேண்டுவது ஏன்? அவனுக்கே அடிமையாக இருப்பது தானே என் இயல்பு?!

குருதேவரே. நீங்கள் எங்கள் குலத்திற்கு புரோஹிதர். முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு ஹிதமானதை செய்வது தானே தங்கள் கடமை. தமையன் காடேறவும், தந்தை துஞ்சவும் நான் முடி சூட்டிக் கொள்வது தானா தாங்கள் முன்னோடிச் சென்று இக்குலத்திற்கு இதம் செய்வது?

ஒருவருக்கு உரிமையான இரு பொருட்கள் ஒன்றையொன்று ஆளுவது இயலுமோ? நானும் பெருமாளின் உடைமை; இந்நாடும் அவன் உடைமை. இந்நாட்டை நான் ஆளுவதும் நிகழுமோ?

தந்தை சொல்லே மிக்கது என்று எண்ணி இந்த நாட்டை அப்படியே விட்டுச் சென்றான் அண்ணன். அவனைப் பிரிந்த துயரம் தாங்காமல் உடனே உயிரைத் துறந்தார் தந்தை. இப்படி ஒருவருக்கொருவர் இளைக்காதவராய் இருக்க, நான் இந்த நாட்டை ஆளத் தொடங்கினால் இந்த அண்ணனுக்குத் தம்பியாக நான் ஆவது எப்படி? இந்தத் தந்தைக்கு நான் மகனாக ஆவதும் எப்படி?"

"பரதா. அப்படியென்றால் என்ன தான் செய்வது?"

"சுவாமி. நாம் எல்லோரும் சேர்ந்து போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து அவரை மீட்டுக் கொண்டு வந்து திருவபிஷேகம் செய்வோம். வாருங்கள்"

அனைவரையும் அழைத்துக் கொண்டு திருச்சித்திரக்கூடத்திலே போய் பெருமாள் திருவடிகளிலே தனது விருப்பத்தைச் சொல்கிறான் பரதாழ்வான்.

"அண்ணா. திருமுடியைத் துறந்து சடாமுடியைப் புனைந்தீர்கள். நாட்டை விட்டு காட்டிலே எழுந்தருளினீர்கள். இந்தக் காட்டையும் தவ வேடத்தையும் துறந்து திருவயோத்திக்கு வந்து திருமுடி சூடி (முடியொன்றி) மூன்று உலகங்களையும் என்றைக்கும் ஆண்டு (மூவுலகங்களும் ஆண்டு), உன்னுடைய இளையவனாய் பிறந்ததால் தம்பியாகவும், உன்னிடமே உலக வழக்குகள் அனைத்தையும் அறிந்து கொண்டதால் சீடனாகவும், உன்னால் விற்கவும் கொள்ளவும் படியான பொருளாக இருப்பதால் அடிமையாகவும் இருக்கிற எனக்கு அருள் செய்ய வேண்டும் (உன் அடியேற்கு அருள் என்று)"

***

இராகவி: இப்படி நாட்டை விட்டு காட்டுக்குப் போன அண்ணனின் பின் தொடர்ந்து சென்று (அவன் பின் தொடர்ந்த), மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடும் வழக்கம் இல்லை என்றும், தன்னுடைய இயல்பு பெருமாளுக்கு உடைமையாக இருக்கும்படி இருக்க அவன் உடைமையான இராச்சியத்தைத் தான் ஆள இயலாது என்றும் சொன்ன ஒப்பில்லாத நற்குணங்கள் நிரம்பிய பரத நம்பிக்கு (படி இல் குணத்துப் பரத நம்பிக்கு) தன் திருவடி நிலைகளைத் தந்தான் காகுத்தன்.

சங்கரி: இவ்வளவு தூரம் கெஞ்சியவனுடன் திரும்பி வராமல் தன் திருவடி நிலைகளைத் (பாதுகைகளைத்) தந்தானே கோமகன்! அது ஏன்?

குமரி: திருவடி நிலைகளைத் தந்ததால் தந்தையின் சொல்லையும் நிறைவேற்றினான்; தம்பியின் துயரத்தையும் தீர்த்தான்.

இராதை: அது எப்படி?

இராகவி: "பரதா. நீ அழைக்க நான் மீண்டும் வந்தால் நம் தந்தையார் சொன்னதைச் செய்யாமல் அரசாட்சியின் ஆசையினாலே மீண்டு வந்ததாக ஆகும். நீ என்னை மீட்டுக் கொண்டு போனால் உனக்கும் அபவாதம் உண்டாகும். தாயுடன் சேர்ந்து சதி செய்து நாட்டைப் பெற்றுக் கொண்டு தமையனைக் காடேற விட்டான்; இப்போது கெட்ட பெயர் உண்டான போது பின்னே தொடர்ந்து சென்று கண்ணைக் கசக்கி காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான்; இரண்டையும் செய்ய வல்லவனாக இருக்கிறான் பரதன் என்று உனக்கு மேலும் கெட்ட பெயர் உண்டாகும். அதனால் நான் மீண்டும் திருவயோத்திக்கு வருவது இயலாது" என்று சொன்னான் இராமன். மேலும் சுதந்திரனாக அவனே ஆள்வதைத் தானே பரதன் மறுத்தான். அவன் சுதந்திரன் இல்லை; தனக்கு பிரதிநிதியாக ஆள்கிறான் என்று சொல்வதைப் போலும், காட்டிற்குச் சென்றவன் தந்தை சொற்படி பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டிற்கு எழுந்தருளுவான் என்று உறுதி சொல்வதைப் போலும் தன் திருவடி நிலைகளைத் தந்து முடி சூட மறுத்தவனை அடிசூடும் அரசாக்கி விட்டான் இராமன் (அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற). இதனால் தந்தை சொல்லும் நிறைவேறியது; தம்பி துயரமும் நீங்கியது. அப்படிப்பட்ட அயோத்தியர் கோமானை நாம் பாடுவோம் (அயோத்தியர் கோமானைப் பாடிப் பற)!

இராதை: இது என்ன முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாய்?! மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்ததன் பின்னர் இராமனை அயோத்தியர்கோன் என்று சொல்லுதல் ஆகுமா?

குமரி: பரதாழ்வான் மரவடிகளைத் தான் கொண்டு போனான். அவன் ஆள்கிறான் இல்லை. அவன் முடி சூடவில்லை. பெருமாள் அடியையே சூடினான். அதனால் திருவயோத்திக்கு அரசன் இராமனே. அதனால் அயோத்தியர் கோமானைப் பாடுவோம் என்றதில் தவறில்லை.

சங்கரி: சரி தான். இப்போது எங்கள் கண்ணனைப் பற்றி நாங்கள் சொல்ல நீங்கள் கேளுங்கள்.

அருகில் இருக்கும் மரம் செடி கொடிகளும் அணுகி வரும் மாடு மனிதர் பறவைகளும் பொசுங்கிப் போகும்படி நஞ்சை உமிழும் காளியனின் பொய்கை கலங்கும்படி (காளியன் பொய்கை கலங்க) ஓடிச் சென்று குதித்து (பாய்ந்திட்டு), பொய்கையின் கலக்கத்தால் சினம் கொண்டு வானளவிற்கு விரித்து நின்ற காளியனின் ஐந்து தலைகளிலும் மாறி மாறி நின்று (அவன் நீள் முடி ஐந்திலும் நின்று) நடனம் செய்து (நடம் செய்து) அதனால் தலையும் கழுத்தும் உடலும் நெரிந்து குருதி உமிழ நலிந்து நின்று உயிர் பிழைக்க வேண்டி நின்ற காளியனின் அடைக்கலத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தான் எங்கள் வித்தகன் (மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்)! அவனுடைய தோள் வலிமையைப் பாடுவோம் (தோள் வலி வீரமே பாடிப் பற)! குற்றமற்ற நீல மணியைப் போன்ற வடிவழகை உடைய கண்ணனைப் பாடுவோம் (தூமணி வண்ணனைப் பாடிப் பற)!

குமரி: சரி தான்! கண்ணன் ஆடினான் என்றால் அவன் கால் வலிமையை அல்லவோ பாட வேண்டும்?! தோள் வலிமையைப் பாடச் சொல்கிறாயே?!

இராதை: காலால் ஆடினான் என்பது சரி தான். ஆனால் அந்த காளியன் தன் உடலாலும் வாலாலும் கண்ணனைப் பிணைத்தும் அடித்தும் கீழே விழும்படி செய்ய முயன்றானே. அப்போது அவன் உடலையும் வாலையும் விலக்கி நின்ற வீரம் கண்ணனின் தோள் வலிமை தானே?! அதனால் அவன் தோள் வலிமையைப் பாடுவோம்!

இராகவி: நன்கு சொன்னாய்! தூமணி வண்ணனைப் பாடச் சொன்னதற்கும் ஏதேனும் காரணம் உண்டா?

சங்கரி: உண்டு இராகவி! காளியனால் கருநிறம் கொண்டு கிடந்த பொய்கை கண்ணனால் காளியன் விரட்டப்பட்ட பின்னர் மீண்டும் தூய்மை கொண்டு தன் இயல்பான நிறமான நீல நிறத்தைக் கொண்டதே! அதனைச் செய்தவன் இந்த தூமணிவண்ணன் தானே! அதனால் தூமணிவண்ணனைப் பாடுவோம்!

இராதை: காளியன் தலையில் மட்டுமா ஆடினான் கோகுலன்?! அவன் இன்னும் நிறைய ஆச்சரியங்களைச் செய்திருக்கிறான்! மாயத்தால் வண்டிச் சக்கரமாக வந்த கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சினான் கோவிந்தன் (மாயச் சகடம் உதைத்து)! தாயார் கட்டி வைத்த உரலை இழுத்துக் கொண்டு சென்று, வழியிலே நின்ற இரு மருத மரங்களின் இடையே புகுந்து, தடை செய்த அம்மருத மரங்கள் முறியும் படி இழுத்துச் சென்றான் தாமோதரன் (மருது இறுத்து)! பசு மேய்க்கப் போன இடையர்களுடனே அவர்களுக்குத் தலைவனாகச் சென்று, பசுக்கூட்டத்தை மேய விட்டு ஆநிரையைக் காத்தான் கோபாலன் (ஆயர்களோடு போய் ஆநிரை காத்து)! மற்ற இடங்களில் இருக்கும் பசுக்கூட்டங்கள் புல்லும் தண்ணீருமே தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டிருக்க கோகுலத்தின் பசுக்களோ இவனது அழகிய வேய்ங்குழல் இசையினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாழும்படியான வித்தகம் கொண்டவன் வேணுகோபாலன் (அணி வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற)! இமையா நெடுங்கண் இமையவர்கள் போற்ற நிற்கும் விசும்பினை விட அறிவொன்றும் இல்லா ஆய்க்குலத்துப் பிறந்து ஆயர்களுக்குத் தலைவனாய் இருப்பதில் செருக்கு கொள்பவனைப் பாடுவோம் (ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற)! பரமபதத்தில் இருப்பதைக் காட்டிலும் மிக்க மகிழ்ச்சி கொண்டு பசு நிரை மேய்த்தவனைப் பாடுவோம் (ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற)!


இராகவி: சரி தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைச் சரணடை என்று நிபந்தனை இட்ட கோவிந்தனைப் போல் இல்லாமல் யாராயிருந்தாலும் சரணடைந்தவர்களுக்கு என் உயிரையும் தருவேன் என்றானே காகுத்தன், அவன் புகழைக் கேள்! மிகவும் ஆழமாக இருப்பதாலே தன் நீல நிறம் மாறி கரு நிறம் கொண்டிருந்தது தென் கடல் (கார் ஆர் கடலை). நீரில் இட்டாலோ கருங்கற்கள் ஆழ்வதையே இயல்பாகக் கொண்டவை. குரங்குகளோ ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கும் ஒரு கல்லிலிருந்து இன்னொரு கல்லிற்கும் தாவுவதையே இயல்பாகக் கொண்டவை. இவற்றின் இயல்பிற்கு மாறாக இந்த ஆழம் நிறைந்த கருங்கடலை குரங்குகள் கல்லினை இட்டு அடைத்து அணை கட்டும் படி இயல்புகளையே மாற்றும் திறன் கொண்டவன் இராமன் (அடைத்திட்டு)! அது மட்டுமா?! நுழைவதற்கு மிகவும் அரிதானது இலங்கை! பல அரண்களையும் காவல்களையும் கொண்டது! புகவரிய அந்த இலங்கையில் பல்லாயிரக்கணக்கான குரங்குகளின் படையுடன் புகுந்தவன் எங்கள் ஆஜானுபாகு (இலங்கை புக்கு)!

குமரி: இப்படி செய்வதற்கரிவற்றை எல்லாம் செய்து வந்திருக்கிறானே சீராமன் என்று அவன் பெருமையையும் வலிமையையும் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொண்டு பிராட்டியைத் திருப்பித் தராமல், தன்னுடைய வரத்தின் வலிமையையும் தோள் வலிமையையும் பெரிதாக எண்ணிக் கொண்டு போர் செய்ய வந்த இராவணனின் அழகிய பொன்முடி சூடிய தலைகள் பத்தினையும் துணித்தான் தசரதகுமாரன். ஒவ்வொரு தலையாக அறுத்தானா என்ன? இல்லை. ஒரே அம்பினால் ஒன்பதோடு ஒன்று என்னும்படி பத்துத் தலைகளையும் ஒரே நேரத்தில் துணித்தான் (ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா)! 'இராவணன் தம்பி நான்' என்று தன்னைப் பற்றிய உண்மையைக் கூறிக் கொண்டே வந்து நேர்மையுடன் சரண் புகுந்த வீடணனுக்கு பல நூறு காலம் அரசாளும் படி இலங்கை அரசை தந்தான் சரணாகத வத்ஸலன் (அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த)! இப்படி எதிரியானாலும் சரணென்று வந்தால் இகபர சுகங்களைத் தந்து ஆட்கொள்ளும் குணத்தால் ஒரு காலும் திருப்தி பிறவாமல் மேன்மேலும் அனுபவிக்க வேண்டும் என்னும் ஆவலை உண்டாக்கும் அமுதத்தைப் போன்றவனைப் பாடுவோம் (ஆரா அமுதனைப் பாடிப் பற)! இராவணனை அழித்து பின்னர் பிராட்டியோடே திருவயோத்திக்கு எழுந்தருளி திருவபிஷேகம் செய்து கொண்டு திருவயோத்யையில் உள்ளவர்களுக்கு அரசனாக ஆண்டவனைப் பாடுவோம் (அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற)!

நால்வரும்: அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற! அயோத்தியர் கோமானைப் பாடிப் பற! தோள்வலி வீரமே பாடிப் பற! தூமணிவண்ணனைப் பாடிப் பற! ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற! ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற! ஆரா அமுதனைப் பாடிப் பற! அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!

வியாக்கியான சக்ரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த உரையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப் பொருளுரை. இப்பாடலை கண்ணன் பாட்டில் கேட்கலாம்!

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்!

Friday, December 26, 2008

குமரனின் குமரனா? நந்தகோபன் குமரனா?

"யப்பா. இவன் செய்ற குசும்பு தாங்க முடியலைங்க. இவங்க அக்கா செஞ்ச குசும்பெல்லாம் எந்த மூலைக்கு? இவன அடக்க என்னால முடியலை. நீங்க தான் பாத்துக்கணும். சும்மா தமிழ்மணம் பாத்துக்கிட்டு இருக்காதீங்க. இவனைக் கொஞ்சம் பாத்துக்குங்க"

"இப்ப என்ன பண்ணிட்டான் அவன்?"

"நான் பாத்திரம் கழுவி டிஷ் வாஷர்ல போட விடமாட்டேங்கறான். எல்லாத்தையும் எடுத்து வெளிய போட்டுக்கிட்டு இருக்கான்"

"அவங்க அக்காவோட விளையாடச் சொல்ல வேண்டியது தானே?"

"ஆமா. அப்புறம் அவங்க சண்டைய யாரு தீர்த்து வைக்கிறது?"

"சண்டையா? நல்லா தானா தம்பியைப் பாத்துக்கிறா பெரியவ? அப்புறம் ஏன் சண்டை போடறாங்க?"

"அவ நல்லாத் தான் பாத்துக்கறா. இவன் தான் எதை எடுத்தாலும் மைன் மைன்னு சொல்லி புடுங்கறான். தம்பி கேக்குறான்னு அவளும் குடுத்துர்றா. அப்புறம் அவ தலை முடியை புடிச்சு இழுக்குறான். அவ அழ ஆரம்பிச்சுர்றா"

"ம்ம்ம். தேஜும்மா. தம்பி உன் முடியைப் பிடிச்சு இழுத்தா நீயும் அவன் முடியை பிடிச்சு இழு"

"என்ன சொல்லித் தர்றீங்க நீங்க? தம்பி சின்னப்பையன்;அடிக்கக் கூடாதுன்னு நான் சொல்லியிருக்கேன். அதனால தான் அவ அடிக்கிறதில்லை. நீங்க இப்படி சொல்லித் தரலாமா? சும்மா பேசிக்கிட்டு இருக்காம வந்து பையனைப் பாத்துக்கோங்க"

"சரி சரி இதோ வர்றேன். இந்த கமெண்டை மட்டும் படிச்சுட்டு வர்றேன்"

நான் பிடிக்கப் போக அவன் சிரித்துக் கொண்டே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடி ஒளிகிறான். அந்த விளையாட்டில் அவன் அக்காவும் கலந்து கொள்கிறாள். சமையலறையிலிருந்து எப்படியோ அவனை வெளியே ஓட்டிக் கொண்டு வந்தாயிற்று. எப்படி இவனை இங்கேயே கட்டிப் போடுவது? ஆமாம் யசோதை செஞ்சதைத் தான் செய்யணும். கண்ணனோட குறும்பு தாங்க முடியாம தாம்புக் கயித்தால கட்டிப் போடறதுக்கு முன்னாடி பால் குடுத்து தானே அவனை வஞ்சித்தாள். அதையே செய்ய வேண்டியது தான்.

"இவன் எப்ப பால் குடிச்சான்?"

"ரெண்டு மணி நேரம் ஆச்சு. அதோ அங்க பாட்டில் இருக்கு. ஹார்லிக்ஸ் கலந்து குடுங்க".

செஞ்சுட்டா போச்சு. :-)

பாலை ஹார்லிக்ஸுடன் கலந்து கையில் வைத்துக் கொண்டதும் அவனாகவே வந்து அதனைப் பிடுங்கிக் கொண்டான். அவனை அப்படியே தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் போட்டு பாடத் தொடங்கினேன். பாலைக் குடித்துக் கொண்டே பாட்டும் கேட்டுக் கொண்டுத் தூங்கிப் போனான். நான் எழுத வந்தேன்.

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே

Thursday, December 25, 2008

அனுமன் புகழ் பாடும் மந்திகள்!

கோகுலத்தின் நடுவில் நிமிர்ந்து நிற்கும் குன்றம் இது. மலர்கள் பூத்துக் குலுங்கவும் கனிகள் கனிந்து விளங்கவும் மிகச் செழிப்புடன் மரம் செடி கொடிகள் விளங்கும் குன்றம் இது. இனிய நீர்ச்சுனைகளும் இன்னிசை ஓடைகளும் நிறைந்த குன்றம் இது. யாராலும் ஏற முடியாத படி செங்குத்தாக இல்லாமல் ஆடு மாடுகளும் மற்ற விலங்குகளும் மனிதர்களும் எளிதாக ஏறிச் சென்று இயற்கை வளங்களை அனுபவிக்கும் படியாக அமைந்த குன்றம் இது. இறைவனே இக்குன்றின் வடிவில் நின்று இக்குன்றத்திற்கு ஆய்ப்பாடியினர் படைத்த படையல்களை எல்லாம் ஏற்றுக் கொண்டான் என்றால் இதன் பெருமையைச் சொல்லி முடியுமா?

இப்படிப்பட்ட இக்கோவர்த்தன குன்றத்தின் மீது மரங்களின் காய்களையும் கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும் (பெண்குரங்குகள்) கடுவன்களும் (ஆண்குரங்குகள்) நிறைய உண்டு. மற்ற இடங்களில் வாழும் குரங்குகள் ஐந்தறிவினவாக இருக்க இந்த கோவர்த்தன குன்றத்தில் வாழும் குரங்குகளுக்கு மட்டும் ஆறாவது அறிவும் இருக்கின்றது போலும். அதனால் தானே இந்த மந்திகள் தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்க வைக்கும் போது தங்கள் முன்னோனாகிய அனுமனின் வீர தீர கதைகளைச் சொல்லித் தூங்க வைக்கின்றன. இப்படி கதை சொல்லிக் குழந்தைகளைத் தூங்க வைப்பதை இவை எங்கே கற்றன? ஆதி சேஷன் தன் ஆயிரம் தலைகளால் இவ்வுலகைத் தாங்குவதைப் போல் தன் விரல்களால் இக்குன்றம் ஏந்திக் குளிர்மழையிலிருந்து ஆய்ப்பாடி ஆயர்களையும் அவர் தம் செல்வங்களையும் காத்தானே கோகுலன். அவர்கள் இம்மழையின் கீழ் பல நாட்கள் தங்கியிருந்த போது அவர்களிடம் இருந்து அனுமன் கதைகளையும் அவற்றைச் சொல்லி தம் குழந்தைகளை உறங்க வைக்கும் முறையையும் இந்த மந்திகள் கற்றுக் கொண்டன போலும்.


படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர்பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே

கருடனைப் புள்ளரையன் என்றாள் கோதை நாச்சியார். அவர் தம் திருத்தகப்பனார் பெரியாழ்வார் ஆதிசேஷனைப் பாம்பரையன் என்கிறார்.

பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் விரிந்த படங்கள் பலவும் உடையவன். அவன் பூமியைத் தாங்கிக் கிடக்கின்றான். அது போல் நீண்ட அழகிய கைகளின் விரல்கள் ஐந்தும் மலர விரித்து தாமோதரன் தாங்கும் கொற்றக் குடை எது தெரியுமா? இலங்கைக்குச் சென்று அதன் பெருமையை முழுக்க அழித்த அனுமனின் புகழினைப் பாடி தங்கள் குழந்தைகளை தங்களின் கைகளில் ஏந்தி பெண் குரங்குகள் தூங்க வைக்கும் கோவர்த்தனம் என்னும் குன்றமே.

மந்திகள் மட்டுமின்றி மாநிலத்தில் உதித்தவர் எல்லோரும் அனுமன் புகழ் பாடி அவன் தன் பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அனுமனின் திருவவதார நாளான இந்த இனிய நன்னாளில் சொல்லுவோம்.


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்று பெற்ற திருமகனானவன் அஞ்சிலே ஒன்றான நீர் நிறைந்த கடலை அஞ்சிலே ஒன்றான ஆகாயமே வழியாகக் கொண்டு தாவிச் சென்றான். சிறந்தவர்களான இராமனுக்காக அவ்வாறு தாவிச் சென்று அஞ்சிலே ஒன்றான நிலமகள் பெற்ற பெண்ணான சீதையைக் கண்டு அயலாரின் ஊரில் அஞ்சிலே ஒன்றான தீயை வைத்தான். அவன் நமக்கு வேண்டியதை எல்லாம் அளித்து நம்மைக் காப்பான்.

Saturday, December 20, 2008

மன்னு வடமதுரை மைந்தன்

தொல்காப்பியம் முதற்கொண்டு பழந்தமிழ் நூற்கள் பலவற்றிலும் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டும் தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. திருமுருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று இப்போது பெரும்பான்மையோரின் மனத்தில் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது; அப்படி நிலைநாட்ட எந்த விதமான தரவுகள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டனவோ அதே அளவிற்கு அதே தரத்தில் அதே போன்ற தரவுகள் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டுவதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்தத் தரவுகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டு வருகிறேன்; இனிமேலும் எழுதுவேன். இன்றைக்கு 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்ற திருப்பாவை வரிகளில் சொல்லப்படும் மதுரை வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுராவா தெற்கே வைகைக்கரையில் இருக்கும் மதுரையா என்று மட்டும் ஆராய்வோம்.

ஆன்மிகத்தையும் பக்தி இலக்கியங்களையும் முடிந்த வரையில் எளிமைப்படுத்தி அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் எழுதி வரும் நல்நண்பர் இரவிசங்கர் இந்த வரியில் சொல்லப்படும் வடமதுரை மைந்தன் தமிழக மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை வாழ் அழகனே என்று சொல்கிறார். ஆண்டாள் தென் தமிழகத்தில் இருக்கும் வில்லிபுத்தூரில் இருந்து பார்க்கும் போது தமிழக மதுரை அவளுக்கு வடக்கே அமைகிறது; அதனால் அந்த மதுரையைத் தான் அவள் வடமதுரை என்றாள் என்கிறார். அதற்கு வடபழனி, தென்பழனி போன்ற எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார். ஏரணத்திற்குப் பொருந்துவதைப் போல் தோன்றினாலும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காண்பதே சிறப்பு என்பதால் இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்று தோன்றியது.

வில்லிபுத்தூருக்கு வடக்கே தான் தமிழக மதுரை இருக்கிறது. அங்கு கூடல் அழகர் திருக்கோவில் இருக்கிறது. அதனால் வடமதுரை என்று திருப்பாவையில் குறிக்கப்பட்டது தமிழக மதுரை தான் என்றால் வடமதுரை மைந்தன் (வடமதுரைத் தலைவன்) என்பவன் கூடல் அழகராகவே எடுத்துக் கொள்ளலாம். மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகனாம் கள்ளழகரைத் தான் அந்தத் தொடர் குறிக்கிறது என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி குறிப்பாக கள்ளழகரைத் தான் சொன்னாள் கோதை என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

வடமதுரை என்பது தமிழக மதுரை தானா என்ற கேள்விக்குப் பதிலாக நாச்சியார் திருமொழியில் இருந்து சில வரிகளை எடுத்துத் தந்திருக்கிறார். அவற்றையும் ஆராய்வோம்.

பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்
யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்
சோலைமலைப்பெருமாள் துவராபதி எம்பெருமான்...

1. பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்; யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்

இந்த வரிகள் வருவது 'மற்றிருந்தீர்' என்று தொடங்கும் நாச்சியார் திருமொழியின் 12ம் திருமொழி. இந்தத் திருமொழியில் எல்லா பாசுரங்களிலும் 'என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று சொல்லும் விதமாக 'உய்த்திடுமின்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார் நாச்சியார்.

மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின், நந்தகோபன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின், யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், பத்தவிலோசனத்து என்னை உய்த்திடுமின், பாண்டிவடத்தென்னை உய்த்திடுமின், கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின், துவராபதிக்கென்னை உய்த்திடுமின் என்றெல்லாம் சொல்கிறாள். இவற்றில் 'பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்' என்பதை 'பாண்டிய நாட்டில் வடபகுதியில் இருக்கும் மதுரை நகருக்கு என்னை கொண்டு சேருங்கள்' என்று பொருள் கொள்கிறார் இரவிசங்கர். பொருத்தமான பொருள் தானா? மற்ற இடங்களில் எல்லாமே கண்ணனின் பிறப்பும் வாழ்வும் நடந்ததென சொல்லப்பட்ட இடங்களை நாச்சியார் பாடும் போது இங்கே திடீரென்று பாண்டிய நாட்டைச் சொல்வாரா? பொருந்துகிறதா?

இதற்கு முந்தைய வரியையும் சேர்த்துப் பார்த்தால் பொருள் இன்னும் தெளிவாகப் புரியும். 'பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்'. பாருங்கள் திருமாலிருஞ்சோலையில் பலதேவனின் கோவில் இருந்ததாக பரிபாடல் சொல்கிறது; இங்கும் நாச்சியார் பலதேவனைச் சொல்லியிருக்கிறார்; அதனால் இது பாண்டிய நாட்டின் வடப்புறத்தில் இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தான் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதே - என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? அவக்கரம் வேண்டாம்; இன்னும் பொருளை ஆய்வோம். பிலம்பன் தன்னை பண் அழிய பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்கிறாளே நாச்சியார். பிலம்பன் என்றால் யார்? எது? பண் அழிய பலதேவன் வென்றது யாரை? எதை? அது பாண்டிய நாட்டில் நடந்ததா? ஒன்றும் புரியவில்லையே. பாகவத புராணத்தைப் பார்த்தால் புரியும்.

ப்ரலம்பன் என்ற அசுரனை பலராமன் பாண்டிரமென்னும் ஆலமரத்தின் அருகில் வென்று கொன்றதாக பாகவத புராணம் சொல்கிறது. அந்த ஆலமரம் தமிழகத்தில் இல்லை; வடக்கே யமுனைக்கரையில் தான் இருக்கிறது. ஆலமரத்திற்கு வடவிருட்சம் என்ற பெயரும் உண்டு. ஆலிலைத் துயில்பவன் என்பதைத் தானே வடபத்ரசாயி என்று சொல்கிறோம்; வில்லிபுத்தூரில் இருக்கும் வடபெருங்கோவிலுடையான் திருக்கோவில் திருமாலின் திருப்பெயர் அது தானே. (நல்ல வேளை. அந்த வடபெருங்கோவிலும் ஆண்டாளின் வீட்டிற்கு வடக்கே இருந்ததால் தான் அந்தப் பெயர் என்று சொல்லாமல் விட்டோம்). வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் பாண்டிரம் என்னும் ஆலமரத்தின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்பதைத் தான் ஆண்டாள் இங்கே 'பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்' என்கிறாள். அதில் ஐயமே இல்லை.

2. சோலைமலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்:

இந்த இடத்தில் சோலைமலைப்பெருமான் தான் துவராபதி எம்பெருமான் என்று சொல்வது எந்த வகையில் 'வடமதுரை மைந்தன்' என்று குறித்தது தமிழக மதுரையைக் குறிக்கும் என்று புரியவில்லை. சோலைமலையிலும் மற்ற திருமால் கோவில்களிலும் இருப்பவன் துவராபதி இறைவன் தான்; ஆலின் இலைப் பெருமான் தான். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அந்தத் தரவு வடமதுரை மைந்தன் என்று குறித்தது கூடல் அழகரையோ மதுரைக்கு வடக்கே இருக்கும் சோலைமலை அழகரையோ தான் என்று காட்டுவதாகத் தெரியவில்லை. வேங்கடவன் விண்ணோர் தலைவன் என்றெல்லாம் பட்டியல் இட்டுவருவதைப் போல் சோலைமலைப் பெருமான், துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப்பெருமான் என்று அவன் பெயர்களையும் புகழ்களையும் பட்டியல் இடுகிறாள் கோதை. அது போன்ற பட்டியலை நாலாயிரத்தில் நிறைய பார்க்கலாம். அதனால் வடமதுரை என்றது தென்னக மதுரையைத் தான் என்றோ யமுனைத்துறைவன் என்றது வைகைக்கரையைத் தான் என்றோ காட்டுவதாக இந்தத் தரவின் மூலம் அறிய முடியவில்லை.

ஆய்ப்பாடியை வில்லிபுத்தூருக்கு மாற்றி தன்னையும் தன் தோழியர்களையும் ஆய்ப்பெண்களாக மாற்றி வடபெரும்கோவிலுடையானின் (வடபத்ரசாயியின்) திருக்கோவிலை நந்தகோபன் திருமாளிகையாக மாற்றி ஆண்டாள் திருப்பாவை பாடினாள் என்று சொன்னால் அதற்கு திருப்பாவையும் பெரியவர்கள் பலர் செய்த உரைகளும் துணையாக நிற்கின்றன. ஆனால் ஆய்ப்பாடியை மதுரைக்கும் யமுனையை வைகைக்கும் ஆண்டாள் மாற்றுகிறாள் என்பதற்கு வலுவான தரவு இருப்பதாகத் தோன்றவில்லை.

***

இன்னும் ஆழமாகச் சென்று ஆராய நாலாயிரத்தில் இருந்து இன்னும் சில தரவுகளைப் பார்க்கலாம்.

3. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்:

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம் இது,

இதுவோ பொருத்தம் மின்னாழிப்படையாய்
ஏறும் இருஞ்சிறைப்புள்
அதுவே கொடியாய் உயர்த்தானே
என்றென்று ஏங்கி அழுதக்கால்
எதுவே ஆகக் கருதும் கொல்
இம்மாஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே


ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.

4. திருமங்கை மன்னன்:

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சில இடங்களில் மதுரை என்று வருகிறது. அவற்றைப் பார்ப்போம்.

சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை...

பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே.

மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.

வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே

இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.

***

5. விப்ரநாராயணர்:

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மதுரையைப் பற்றி ஓரிடத்தில் குறித்துள்ளார்.

வளவெழும் தவள மாட
மதுரை மாநகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்கமாலை...

அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.

***

6. வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்:

சரி. மற்றவர் சொன்னதைப் பார்த்தோம். ஆண்டாளின் திருத்தந்தை சொன்னவற்றைப் பார்க்கலாமா?

'திருமதுரையுள் சிலை குனித்து' என்று திருப்பல்லாண்டில் பாடுகிறார் விட்டுசித்தர். வில்லை முறித்து என்று சொன்னதால் இங்கு சொல்லப்படும் திருமதுரை வடநாட்டு மதுரை தான் என்பது தெளிவு.

வானில் அரசு வைகுந்தக் குட்டன்
வாசுதேவன் மதுரைமன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன்....

இங்கே மதுரை மன்னன் என்றதால் எந்த மதுரையைச் சொன்னார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வாசுதேவன் (வசுதேவன் மகன்) என்றதாலும் நந்தகோன் இளவரசு என்றதாலும் கோவலர் குட்டன் என்றதாலும் இங்கே மன்னனாய் சொன்னது வடமதுரைக்கு மன்னன் என்று தான் என்பது தெளிவு.

இங்கே பெரியாழ்வார் 'மதுரை மன்னன்' என்றது போல் அவர்தம் திருமகளாரும் 'மதுரையார் மன்னன்' என்றும் 'வடமதுரையார் மன்னன்' என்றும் பாடுகிறாள். அங்கும் இதே பொருள் தான் என்பதில் ஐயமில்லை.

'என் மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறார் பெரியாழ்வார். கோதை 'உய்த்திடுமின்' என்று பாடிய பிறகு பாடியது போலும் இந்தப் பாசுரம். அதனால் தான் 'மல்லரை அட்டவன் பின் போய்' மதுரைப் புறம் புக்காள் கொலோ என்று கேட்கிறார். இங்கும் மல்லரை அட்ட நிகழ்ச்சி நடந்த வடநாட்டு மதுரை தான் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

இன்னொரு இடத்தில் பெருமாள் திருத்தலங்களைப் பட்டியல் இடுகிறார் பெரியாழ்வார். 'வடதிசை மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவரை, அயோத்தி, இடமுடை வதரி, இட வகையுடைய எம் புருடோத்தமன் இருக்கை' என்கிறார். இங்கு பெரும்பாலும் வடநாட்டில் இருக்கும் தலங்களைக் குறித்ததால் இந்தப் பட்டியலில் வரும் 'வடதிசை மதுரை' தென்னக மதுரை இல்லை வடநாட்டு மதுரையே என்பது தெளிவு.

***

இப்படி நாலாயிரத்தில் 'மதுரை' என்ற சொல் வரும் இடங்களை எல்லாம் பார்க்கும் போது அங்கெல்லாம் குறிக்கப்பட்டது வடநாட்டு மதுரையே என்பது தெளிவாகத் தெரிவதால் ஆண்டாளும் 'வடமதுரை மைந்தனை' என்ற போது வடநாட்டு மதுரையைத் தான் குறித்தாள் என்பது தெளிவு. வில்லிபுத்தூருக்கு வடக்கே இருக்கும் தென்னக மதுரையை வடமதுரை என்றாள் என்பது சுவையாக இருக்கிறது; ஆனால் வலிந்து கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது.

கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. இந்த 'வலிந்து கொள்ளப்பட்ட தரவுகள்' தேவையில்லை. எப்படி திருமுருகன் வடக்கே பிறந்து வடக்கே வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானே எப்படி சிவபெருமான் வடகயிலையில் வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானோ அதே போல் கண்ணனும் வடமதுரையில் பிறந்து வடமதுரையார் மன்னனாக இருந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறான். அதுவும் மிகத் தெளிவு.

Monday, August 04, 2008

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2


'நாலாயிரம் கற்போம்' பத்தித் தொடரில் மூன்றாவது பகுதி இது. பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 1 (04 Aug 2008)

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர் வந்து காணீரே


குளிர்ந்த திருப்பாற்கடலில் தோன்றிய அமுதினைப் போன்ற தேவகிப் பிராட்டியார் மலர்மாலைகளைச் சூடிய கூந்தலை உடைய யசோதையாகிய எனக்குப் பரிசாகத் தந்த பேதையாகிய இந்தக் குழந்தை தன் திருக்கைகளால் பிடித்து சுவைத்து உண்ணும் திருவடித் தாமரைகளைப் பாருங்கள். பவளம் போல் சிவந்த உதடுகளை உடைய பெண்களே வந்து பாருங்கள்.

***

திருப்பாற்கடலில் தோன்றிய அமுதங்கள் இரண்டு. ஒன்று வெளியமுதாகிய அமிர்தம். அது தேவர்களுக்காகத் தோன்றியது. இறைவனின் திருமேனியில் நின்று இலகும் உள்ளமுதாகத் தோன்றியவள் திருமகள். அவளைப் போன்றவள் தேவகிப் பிராட்டியார் என்பதை இன்னொரு இடத்தில் 'திருவின் வடிவொக்கும் தேவகி' என்பார் பெரியாழ்வார். அதையே இங்கே மறைப்பொருளாகக் குறிப்பதற்கு 'சீதக்கடல் அமுது' என்று சொல்லி நிறுத்தாமல் 'சீதக்கடல் உள்ளமுது' என்றார் போலும்.

எல்லோரும் திருவடிகளின் இனிமையைப் போற்றுகின்றாரே; ஆழ்வாரும் 'தேனே மலரும் திருப்பாதம்' என்கிறாரே - அப்படிப்பட்ட தன் திருவடிகளின் இனிமையைத் தானும் அனுபவிக்கத் துடித்தாற்போலே தன் திருவடிகளில் ஒன்றைப் பிடித்துச் சுவைத்து உண்கிறான் இந்தப் பேதைக்குழவி. தன்னடியார்களுக்காகத் தன்னைத் தாழவிட்டுக் கொள்பவன் அன்றோ அவன்? அப்படிப்பட்டவன் தன்னனுபவத்திற்காகவா தன் திருவடியைச் சுவைக்கிறான். இல்லை இல்லை. தன் திருவயிற்றில் இருக்கும் உலகங்களுக்கெல்லாம் உயர்வு ஏற்படும் படி தன் திருவடித் திருவமுதத்தைச் சுவைக்கிறான் இந்தக் கள்வன்.

***

பாசுரம் 2 (10 Sep 2008)

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்து காணீரே


முத்துக்கள், மாணிக்கங்கள், வயிரங்கள், பொன் என்று மாற்றி மாற்றி பதித்ததைப் போல் உடலெல்லாம் கருமாணிக்கம் போல் நிறம் கொண்ட மணிவண்ணனின் திருப்பாதங்களில் இருக்கும் பத்து விரல்களும் அவன் உடல் நிறத்தை ஒத்து இருப்பதையும் ஒவ்வொரு விரலும் மற்ற விரல்களுக்கு ஒத்து இருப்பதையும் காணுங்கள். ஒளி மிகுந்த நெற்றியை உடையவர்களே பாருங்கள்.

***

திருப்பாதங்களில் இருக்கும் பத்து விரல்களும் முத்துக்களே என்றும் இல்லை மாணிக்கங்களே என்றும் வயிரங்களே என்றும் பொன்னால் ஆனவை என்றும் சொல்லலாம் படி அழகுடன் விளங்குகின்றன என்றும் சொல்லலாம். தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற் போலே என்றதனால் சொல்லப்பட்ட எல்லா இரத்தினங்களையும் பொன்னில் பதித்ததைப் போல் விளங்குகின்றன மணிவண்ணன் கால் விரல்கள் என்றும் சொல்லலாம். பத்து விரல்கள் இருக்க மூன்று இரத்தினங்களை மட்டுமே ஆழ்வார் சொல்லியிருக்கிறாரே என்றால் இங்கே சொன்ன மூன்று இரத்தினங்களும் நவரத்தினங்கள் எல்லாவற்றையும் குறிக்கின்றன - நவரத்தினங்களான கோமேதகம், நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பவற்றில் முத்து, மாணிக்கம், வைரம் இம்மூன்றை மட்டும் சொல்லி எல்லா நவரத்தினங்களையும் சொன்னார் - அந்த எல்லா நவரத்தினங்களும் பத்துவிரல்களில் ஒன்பது விரல்களாக விளங்குகின்றன; கடைசி ஒரு விரலாக நன்பொன் விளங்குகின்றது என்றும் சொல்லலாம்.

எம்பெருமான் திருப்பாதங்களின் அழகை எப்படிப் போற்றினாலும் போற்றுவார் போற்றல் எல்லாம் அவன் திருப்பாதங்களின் பெருமைக்கு ஈடாகாது என்றே இருக்கும். ஆனாலும் உலக வழக்கில் சிறந்தவை என்று எண்ணப்படுபவற்றைக் கொண்டு உவமை கூறி அவன் திருப்பாத அழகை அனுபவிப்பது நன்று தானே.
***

பாசுரம் 3 (17 Sep 2008)

பணைத்தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆரவுண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே

மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இந்த இளைய ஆய்ச்சியின் பால் நிறைந்த கொங்கைகளை தன் திருக்கைகளால் அணைத்துக் கொண்டு தன் திருவயிறு நிறையும் படி பாலை உண்டு அந்த நிறைவிலும் மகிழ்விலும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சிறு பிள்ளையின் இணையான திருக்கால்களில் வெள்ளியணி விளங்கும் கணைக்கால் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்று பாருங்கள். அழகில் சிறந்த காரிகையர்களே வந்து பாருங்கள்.

***

மூங்கிலைப் போன்ற அழகுடைய தோள்கள் கொண்டவள், இளமையில் சிறந்தவள் என்றெல்லாம் இங்கே யசோதைப் பிராட்டியார் பேசப்படுவது அந்த அழகுக்கும் இளமைக்கும் இயற்கையான போகங்களில் ஆழாமல் அவள் தன் திருக்குமாரனை நேசித்துக் கிடந்ததைப் போல் அழகிலும் இளமையிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களும் இந்தக் கண்ணனின் நினைவில் ஆழ்ந்து கிடக்கவேண்டும் என்று காட்டுவதற்காக.

அப்படிப் பட்ட அன்பு இந்தக் கண்ணன் மேல் இருந்ததால் 'நின்று பால் சொரியும்' என்றாற் போல இவள் கொங்கைகளும் 'பால் பாய்ந்த கொங்கை'கள் ஆயிற்று.

காரிகை என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். அழகுடைய மங்கையருக்கும் அது பெயராக ஆகிவந்தது. அழகின் பெருமை அறிந்தவர்கள் என்பதாலும் கண்ணனின் திருமேனி அழகினைக் கண்டு அனுபவிப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதாலும் அப்பெண்களை அழைத்தாள் இந்த இளவாய்ச்சி.

----

பாசுரம் 4 (23 Sep 2008)

உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகில் முலையீர் வந்து காணீரே

உழந்து உழந்து (நிறைய வேலை செய்து) சேர்த்து வைத்த நறுமணம் மிக்க நெய்யை ஒரு பெரும் பானை நிறைய கண்ணன் உண்ண, பானை நெய்யையும் விழுங்கினானே இவன் என்னாவான் என்று பயந்து அவனை இழுத்து வைத்து அழகிய மத்தைக் கடையும் பெரிய தாம்புக்கயிற்றால் அவனை அடிப்பதற்காக ஓங்க அதைக் கண்டு பயத்தாலே தப்பிச் செல்வதற்காகத் தவழ்ந்த இந்தக் கண்ணனின் முழங்கால்களின் அழகைக் காணுங்கள்; முகிழ்த்த முலையுடைய பெண்களே வந்து காணுங்கள்.

***

பாலைக் கறந்து, காய்ச்சி, உறையிட்டு, தயிரான பின்பு கடைந்து வெண்ணெய் எடுத்து அதனை உருக்கி நறுநெய்யாக்கி பெரிய தடாவில் சேர்த்து வைத்த அவ்வளவு வேலைகளையும் சொல்வதற்காக 'உழந்தாள்' என்று சொல்கிறார் ஆழ்வார்.

பயத்தினால் தவழ்ந்தான் என்றால் அவனது முழங்காலை எப்படிப் பார்க்க முடியும்? அதில் தானே தவழ்ந்து சென்றிருப்பான்? இங்கும் யசோதைப்பிராட்டியின் தாயுள்ளத்தைக் குறிப்பாகச் சொன்னார் ஆழ்வார். அவன் பயத்தால் தவழ்ந்தவுடன் 'அடடா. அவன் தவழ்கிறானே. முழந்தாள் மென்மையானதாயிற்றே. அது வலிக்குமே' என்று பதறி அவன் முழந்தாளினை நோக்கினாள். அப்போது அந்த முழந்தாளின் அழகால் மயங்கி முகிழ்முலையார்களையும் அழைத்துக் காட்டினாள்.

---

பாசுரம் 5 (25 Oct 2008)

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
குவிமுலையீர் வந்து காணீரே


முன்னொரு காலத்தில் பெரும் வீரத்துடன் எதிர்த்து வந்த இரணியனின் மார்வினை சிங்கப்பிரானாகி வந்து கீண்டவன் இவன். இப்போதோ பெரும் ஒளியுடன் வந்த பேய்ச்சியாம் பூதனையின் விஷம் தோய்ந்த முலையை சுவைத்து உண்பவன் போல அவள் உயிரையும் பசையற உண்டான். அச்செயல்களை எல்லாம் செய்தவன் ஒன்றும் அறியாத சிறு பிள்ளை போல் இங்கே உறங்குகிறான். அவனுடைய திருத்தொடைகளின் அழகினை காணுங்கள். குவிந்த முலையை உடைய பெண்களே வந்து பாருங்கள்.

***

சென்ற பாட்டில் ஆய்ச்சியர் கண்ணனின் முழந்தாளைக் கண்டு அனுபவித்ததைப் பாடினார் ஆழ்வார். இந்த பாசுரத்தில் அவனது திருத்தொடைகளின் அழகினைப் பாடுகிறார். திருத்தொடைகளைக் கண்டவுடன் முன்னொரு நாள் இரணியனைக் கொல்லும் போது இதே தொடைகளின் மேல் கிடத்தித் தானே கொன்றான் என்று நினைவிற்கு வந்தது போலும்.

---
பாசுரம் 6 (27 Oct 2008)

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர் வந்து காணீரே


மதம் கொண்ட யானைகளையுடைய வசுதேவரின் எண்ணத்தில் என்றென்றும் பிரியாது இருக்கும் தேவகிப் பிராட்டியின் திருவயிற்றில் ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாவது நாளான ஒரு நாளில் உலகத்தில் தோன்றிய இந்த அச்சுதனின் முத்து போன்ற மறை அங்கத்தைக் காணுங்கள். புன்னகையுடைய பெண்களே பாருங்கள்.

***

திருத்தொடையின் அழகைக் கண்ட போது அங்கே தோன்றிய சிறு குழந்தையாம் கண்ணனின் ஆண் குறியைக் கண்டு அதனைப் போற்றுகிறாள் யசோதைப் பிராட்டி. முத்தம் என்றும், மொட்டு என்று சிறு குழந்தைகளின் ஆண்குறியை குறிப்பது மரபு.

இறைவனுக்கு கெட்டவர்களால் எந்த கெடுதலும் நேர்ந்துவிடலாகாது என்று பல்லாண்டு பாடியவர் இந்த ஆழ்வார் என்பதால் இவனுடைய திருநட்சத்திரம் எது என்று உடனே தெரிந்துவிடாத படி 'அத்தத்தின் பத்தாம் நாள்' என்கிறார். ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக சிராவண நட்சத்திரம் அமையும். ஹஸ்தத்தில் தொடங்கி பின்பக்கமாக எண்ணிக் கொண்டு வந்தால் பத்தாவது நட்சத்திரமாக ரோஹிணி அமையும். இவனுக்கு இரண்டு நட்சத்திரமும் அமையும் என்பதால் ஆழ்வார் சொன்னது இரண்டிற்கும் பொருத்தமாம்.

---

பாசுரம் 7 (17 Nov 2008)

இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
வாணுதலீர் வந்து காணீரே


நீண்ட துதிக்கையினை உடைய மதயானையான குவலயாபீடத்தைக் கண்ணனைக் கொல்லும் நோக்கத்துடன் செலுத்திக் கொண்டு வந்த யானைப்பாகனைக் கொன்று யானையின் தந்தங்களை முறித்துக் கொண்டு ஓடிய பரமனான கண்ணனின் இடையில் விளங்கும் நெருங்கிய பவள வடத்தையும் சிறந்த அரைநாணையும் முத்து வடத்தையும் பாருங்கள்; ஒளி மிகுந்த நெற்றியை உடைய பெண்களே பாருங்கள்.

***

முத்தத்தின் அழகைப் போற்றிய பின்னர் கண்ணனின் மருங்கு/இடையின் அழகைப் போற்றுகிறார் ஆழ்வார். மருங்கைக் காணும் போது அங்கிருக்கும் பவள வடமும் முத்து வடமும் அரைநாணும் தென்படுகின்றன. அவற்றால் மருங்கிற்கு அழகா மருங்கால் அவற்றிற்கு அழகா என்று கேட்கும்படியாக அமைந்திருக்கின்றன. அதனால் அவற்றையும் இங்கே பாடுகிறார் ஆழ்வார்.

குவலயாபீடத்தை நடத்திக் கொண்டு வந்தவனைக் கொன்று அதனை கொம்புகளைப் பறித்துக் கொண்டு ஓடினான் என்ற பொருளைப் போல் இன்னொரு பொருளையும் பெரியவர்கள் இந்தப் பாசுரத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். விளையாட்டுத் தோழர்களில் சிலரை மதயானையைப் போன்று முழந்தாளிடச் செய்து அவர் மேல் ஏறி வலம் வருகிறானாம் கண்ணன். இன்றைக்கும் நாமெல்லாம் இந்த விளையாட்டை ஆடுகின்றோமே. அப்படி மற்றவர்களை யானையாக்கி நடத்துவதோடு மட்டும் இன்றி அவர் தம் விளையாட்டுப் பொருட்களையும் பறித்துக் கொண்டு ஓடுகின்றானாம் இந்தக் குறும்பில் சிறந்த பரமன். அவனது மருங்கைக் காண வாருங்கள் என்று வாணுதல் கொண்ட பெண்களை அழைக்கிறாள் யசோதைப் பிராட்டியார்.

****

பாசுரம் 8 (12 Dec 2008)

வந்த மதலைக் குழாத்தை வலி செய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளி இழையீர் வந்து காணீரே


தன்னுடன் விளையாட வந்த பெரிய குழுவாகிய குழந்தைகளை எல்லாம் வென்று தான் மட்டும் நிலையாக நின்று விளையாடும் நந்தனின் குழந்தையின் மிகவும் அழகிய தொப்புளைக் காணுங்கள்; ஒளி மிகுந்த அணிகளை அணிந்த பெண்களே வந்து காணுங்கள்.

***

கண்ணனுடன் விளையாட என்றெண்ணி ஒரு பெரிய கூட்டமாக வந்த சிறுவர்களை 'வந்த மதலைக் குழாம்' என்கிறார் ஆழ்வார். இவனைப் போலவே அவர்களும் மதலைகளாக இருக்க இவனோ அவர்கள் எல்லாம் ஒரு புறமாகவும் இவன் மட்டுமே இன்னொரு புறமாகவும் தனியாக நின்று அவர்களுடன் விளையாடும் அளவிற்கு வலிமை உடையவனாக இருக்கின்றான். தந்தங்களுடன் கூடிய யானைக்குட்டியைப் போல் இருக்கிறது அந்த வலிமை. அதனை 'வலி செய்து தந்தக் களிறு போல் தானே விளையாடும்' என்று கூறுகிறார் ஆழ்வார்.

விளையாடும் இடத்தில் அப்படி தந்தக் களிறு போல் இருக்கும் இவன் தன் தந்தையான நந்தகோபரின் திருமுன் தந்தைக்கு அடங்கிய திருமகனாக இருப்பதைக் காட்ட 'நந்தன் மதலை' என்றார். அப்படிப்பட்டவனுடைய திருவுந்தி (தொப்புள்) இந்த உலகங்களுக்கு எல்லாம் நல்லது செய்வது. அந்த உந்தியிலிருந்து தானே உலகங்களைப் படைக்கும் படைப்புக்கடவுள் தோன்றினான் அதனால் தான் அந்தத் திருவுந்தியை 'நன்றும் அழகிய உந்தி' என்றார் போலும்.

---

பாசுரம் 9 (26 Dec 2008)

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதரப் படாமே பழந்தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே


அதிரும் கடல் போன்ற நிறத்தைக் கொண்ட கண்ணனை ஆய்ச்சியாகிய யசோதைப்பிராட்டியார் இனிமையான முலைப்பாலை ஊட்டி அந்தச் சுவையில் அவன் மயங்கிக் கிடக்குமாறு அவனை ஏமாற்றி தான் முன் எண்ணியபடி பழைய தாம்புக்கயிற்றால் கட்டினாள்; அப்படி அவள் கட்டிய தாம்புக்கயிற்றின் தழும்பு இருக்கும் வயிற்றின் அழகைக் காணுங்கள். ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்களே வந்து காணுங்கள்.

***

இவன் கடல்வண்ணன் என்பது உலகில் பிரசித்தம். அதனால் கடல்வண்ணன் என்று சொல்வதே போதுமாக இருக்க 'அதிரும் கடல் வண்ணன்' என்று ஆழ்வார் சொன்னது ஏனென்றால் இவனது குறும்புகளும் அடங்காமையும் அந்தக் கடல் அதிர்வது போல் இருக்கின்றன என்று காட்டுவதற்காக.

அப்படி அடங்காமல் இருப்பவனை அடக்கிக் கட்டிப் போட வேண்டுமென்றால் அதற்கு மதுர முலைப்பாலே வழி என்று ஆய்ந்து தேர்ந்த யசோதைபிராட்டியார் அவ்வண்ணமே அவனுக்கு முலைப்பால் ஊட்டி அவன் அப்படி மயங்கும்படி அவனை ஏமாற்றிப் பழந்தாம்பால் கட்டிப்போட்டாள். அந்தத் தாம்பின் தழும்பைத் தன் திருவயிற்றில் தாங்கியதால் இவனுக்குத் தாமோதரன் என்ற திருப்பெயரும் உண்டாயிற்று.

------------

பாசுரம் 10 (31 Dec 2008)

பெருமா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு
இருமாமருதம் இறுத்த இப்பிள்ளை
குருமாமணிப் பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே


மிகப்பெரிய உரலில் பிணிக்கப்பட்டிருந்த வேளையில் அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு அங்கு வளர்ந்திருந்த இரண்டு பெரிய மருத மரங்களின் இடையே சென்று அவ்விரு மரங்களையும் முறித்த இந்தப் பிள்ளையினுடைய மிகச்சிறந்த மாணிக்க நகைகள் விளங்கும் திருமார்வம் இருந்த படியைப் பாருங்கள். செம்மையுடைய நகைகளை அணிந்த பெண்களே காணுங்கள்.

***

பிணிப்புண்டிருந்த உரலும் மிகப்பெரியது; இடையே சென்று முறித்த மருத மரங்களும் பெரியவை; ஆனால் இவனோ சிறு குழந்தை என்று இந்நிகழ்ச்சியின் முரண்பாடுகள் தோன்ற பெருமாவுரல் என்றும் இருமாமரம் என்று சொன்னதோடு இப்பிள்ளை என்றும் சொல்கிறார் ஆழ்வார். உரலும் பெரியதாக இருக்க மரங்களும் பெரியவைகளாக இருக்க இச்சிறுபிள்ளை இவ்வுரலை இழுத்துச் சென்று அம்மரங்களை முறித்தது தான் என்னே என்று வியப்பது போல.

இவன் திருமார்பகத்தில் 'அகலகில்லேன் இறையும்' என்று வாழும் அலர்மேல் மங்கையுடன் திருமறுவும் கௌஸ்துப மணியும் திகழ்கின்றன. இவை மூன்றும் இவன் திருமார்பில் எந்த நிலையிலும் எந்த அவதாரத்திலும் இருப்பவை. இந்தப் பாசுரத்தில் ஜீவகோடிகளின் உருவமான மிகச்சிறந்த கௌஸ்துப மணியை மட்டும் சொல்லி மற்ற இரண்டையும் குறிப்பால் உணர்த்துகிறார் ஆழ்வார்.

------------
பாசுரம் 11 (4 Feb 2009)

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
சுரிகுழலீர் வந்து காணீரேருமா


பிறந்த பின்னர் ஒரு நாலு ஐந்து மாதங்கள் சென்ற பின்னர் தன்னுடைய திருவடியினை நிமிர்த்தி சகடாசுரனை உதைத்து அழித்து விட்டு ஒளி பொருந்திய வளைந்த கோரப்பற்களைக் கொண்ட பூதனையின் அரிய உயிரை அவள் முலைப்பாலுடன் எடுத்துக் கொண்டவனின் அழகான தோள்கள் இருந்தவாறைக் காணுங்கள். சுருண்ட தலைமுடியை உடைய பெண்களே வந்து பாருங்கள்.

***

நாலு ஐந்து என்று கூறியது நான்காம் மாதத்திலோ, ஐந்தாம் மாதத்திலோ, நாலு + ஐந்து = ஒன்பதாம் மாதத்திலோ, நாலு * ஐந்து = இருபதாம் மாதத்திலோ இந்த அதிசயங்களைச் செய்தான் என்று கூறும் படி உள்ளது. சின்னஞ்சிறு வயதில் இவ்வளவான அதிசயங்கள் செய்தான் என்று கூறினால் கண்ணெச்சில் (திருஷ்டி) பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர் 'பல்லாண்டு பாடிய இதத் தாயான இந்த ஆழ்வார்' என்பதால் இவ்வாறு கூறினார் என்னலாம். உயிரெழுத்துகளுக்கே 'ஓர்' என்ற சொல் பயன்படவேண்டும் என்ற இலக்கண விதியை கொண்டு இவர் சொல்ல வந்தது ஒன்பதாம் மாதம் என்றும் உய்த்து அறியலாம்.

திருவடிகளால் வாழ்விப்பது உண்டு; அழிப்பதும் உண்டோ என்றால் சகடன் தீய எண்ணம் கொண்டு வந்தான் ஆகையால் அதே திருவடிகள் அவனை அழித்து ஆட்கொண்டது என்பதில் குறையில்லை.

பூதனையை அழித்தது முதலாகவும் சகடத்தை இறுத்தது அடுத்ததாகவும் வர ஆழ்வார் மாற்றிப் பாடுகிறாரே என்றால் இங்கே சொல்ல வந்தது இவனது அதிசய சக்திகளையே; கால வரிசையை இல்லை என்பதால் குறையில்லை.

--------------

பாசுரம் 12 (20 Mar 2009)

மைத்தடங்கண்ணி அசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே
கனம் குழையீர் வந்து காணீரே


கரிய பெரிய திருக்கண்களை உடைய அசோதைப் பிராட்டியார் வளர்க்கின்ற சிறந்த நிலத்திலே மலர்ந்திருக்கும் நீலம் என்ற பெயர் கொண்ட கருநெய்தல் பூவைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிறு பிள்ளையாம் கண்ணனின் கூரிய முனைகளைக் கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் என்றும் வீற்றிருக்கும் திருக்கைத்தலங்களைக் காணுங்கள். கனமான காதணிகளையுடைய பெண்களே காணுங்கள்.

***

சென்ற பாசுரத்தில் திருத்தோளின் அழகை அனுபவித்த பின்னர் இந்தப் பாசுரத்தில் திருக்கைத்தலத்தின் அழகை அனுபவிக்கிறார்.

இயற்கையாகவே கருநிறம் கொண்ட திருக்கண்களையுடையவள் அசோதைப் பிராட்டியார் என்பதை மைத்தடங்கண்ணி என்று குறிக்கிறார்; மையணிந்து அழகு பெற்ற பெரிய கண்களை உடையவள் என்று சொன்னாலும் பொருந்தும். திருவாய்ப்பாடியில் கண்ணனை எடுத்து வளர்ப்பதற்கு நிறைய பேர் இருந்தாலும் யாரிடமும் கண்ணனைக் கொடுக்காமல் தானே அவனை இவள் வளர்ப்பதால் 'அசோதை வளர்க்கின்ற' என்று சொன்னார். அப்படி அவளே அவனைச் சீராட்டி வளர்க்கும் போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதால் அவள் திருக்கண்களின் கருநிறம் இவன் திருமேனி எங்கும் பரவியது என்று சொல்லலாம் படி இருக்கின்றது. அதனால் நீலநிறத்துச் சிறுப்பிள்ளை என்றார் கண்ணனை.

கூர்மையான முனைகளை கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் இவன் திருக்கைகளில் என்றும் நீங்காமல் இருந்தாலும் அவ்வப்போது அவற்றை அசோதைப்பிராட்டியாருக்குக் காட்டுகிறான் இவன். இவன் திருக்கைகளின் வெண்ணெயில் திளைத்ததால் நெய்த்தலை நேமி ஆனது என்றாலும் பொருந்தும். இவன் கருதிய இடத்திற்கு சென்று பகைவரை அழித்து மீண்டும் வரும் திருச்சக்கரத்தைப் போன்று இல்லாமல் இவன் திருக்கைத்தலத்தை விட்டு விலகாமல் தனது பெரும் ஓசையினாலேயே பகைவரை நடுநடுங்கச் செய்யும் திருச்சங்கமும் நிலையாகத் திருக்கைகளில் கொண்டவன் கண்ணன். அன்றி இவன் திருக்கைத்தலங்களில் மகாபுருஷ லட்சணமாகிய சங்கு சக்கர ரேகைகள் உள்ளன என்று சொன்னாலும் பொருந்தும்.

-----

பாசுரம் 13 (1 Apr 2009)

வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே


அழகிய பூக்களைச் சூடியதால் வண்டுகள் என்றும் நிலைத்து வாழும்படியான குழலை உடைய அசோதைப் பிராட்டியார் 'தன் மகன்' என்று மிகவும் அன்புடன் வளர்த்து வருகின்ற கோபாலச் சிறுவனுக்கு, அண்டங்களையும் நாடுகளையும் அவற்றுள் நிலைத்த அனைத்துப் பொருட்களையும் உயிர்களையும் எல்லாவற்றையும் விழுங்கிய திருக்கழுத்து இருக்கும் அழகைக் காணுங்கள். அழகிய பெண்களே வந்து காணுங்கள்.

***

சென்ற பாசுரத்தில் திருக்கைத்தலத்தின் அழகை அனுபவித்தப் பின்னர் இந்தப் பாசுரத்தில் திருக்கழுத்தின் அழகை அனுபவிக்கிறார் ஆழ்வார்.

கைக்குழந்தைகளுக்கு அனுக்கம் (மன வருத்தம்) ஏற்படாதிருக்க வேண்டி தாய்மார்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வார்களாம். அப்படியே யசோதைப்பிராட்டியும் அந்த அந்தக் காலங்களில் பூக்கும் மலர்களை தன் திருமுடியில் சூட்டிக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். அம்மலர்களைப் பூத்தவுடன் அணிந்து கொள்வதால் அம்மலர்களில் இருக்கும் மதுவினை உண்ண வரும் வண்டுகளுக்கு அவள் குழலே வசிக்கும் இடமாக ஆகிவிடுகிறது.

அந்த யசோதைப் பிராட்டி 'தன் மகன்' என்றே எண்ணிக் கொண்டு அன்பு செய்து வளர்த்துவருகின்ற பிள்ளை கோவலக் குட்டன். இவன் தேவகிபுத்திரன் என்பது ஆழ்வாருக்குத் தெரியும் ஆதலால் இப்படி சொல்கிறார்.

அந்த அழகிய கோவலக் குட்டன் சிறுவன் மட்டும் இல்லை. எல்லா அண்டங்களையும் அவற்றில் வாழ் உயிர்களையும் நிலைத்த பொருட்களையும் ஒக்க விழுங்கிய அழகிய திருக்கழுத்தை உடையவன். அந்தத் திருக்கழுத்தின் அழகைக் காண அவ்வழகிற்கு ஏற்ற அழகுடைய பெண்களை 'காரிகையீர்' என்று அழைத்துக் காணச் சொல்கிறார் ஆழ்வார்.

***

பாசுரம் 14 (22 May 2009)

என் தொண்டை வாய்ச் சிங்கம் வாவென்று எடுத்துக் கொண்டு
அந்தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச்
செந்தொண்டைவாய் வந்து காணீரே
சேயிழையீர் வந்து காணீரே


'கொவ்வைப் பழம் போன்ற சிவந்த உதடுகளை உடைய எங்கள் சிங்கக்குட்டியே' என்று அன்புடன் கூவி இந்தக் கண்ணக்குமரனை ஒக்கலையில் (இடுப்பில்) எடுத்துக் கொண்டு அந்த அழகிய கொவ்வைக்கனி அதரங்களில் ஊறும் அமுதத்தை விரும்பித் தமது கொவ்வைக்கனி அதரங்களில் ஏந்தி மிகப்பெருமையுடன் பருகுகின்றனர் ஆய்ச்சியர்கள். அப்படிப்பட்ட சிவந்த கொவ்வைக் கனிவாய் அதரங்களைக் காண வாருங்கள். சிவந்த அணிகலன்களை அணிந்த பெண்களே வாருங்கள்.

***

இவனுக்கும் கொவ்வைப்பழம் போன்ற உதடுகள். ஆய்ச்சியர்களுக்கும் கொவ்வைப்பழம் போன்ற உதடுகள். சிறு குழந்தையான இவனை தங்கள் ஒக்கலையில்/இடுப்பில் ஏந்திக் கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் நெருங்கி அவனது வாய் அமுதத்தைப் பருகினார்களாம். இப்போதல்லவா தெரிகிறது அந்தக் கோதைப் பெண் இவ்வளவு துடுக்காகப் பேச எங்கே கற்றுக் கொண்டாள் என்று. தந்தையாரே மாற்றி மாற்றி கொவ்வைக் கனி கொவ்வைக் கனி தொண்டை வாய் தொண்டை வாய் என்று பாடினால் பாவம் சிறு பெண் அவள் தான் என் செய்வாள்? அவளும் அதே தொண்டை வாய் ஊறும் அமுதத்தைப் பருக ஆசைப்பட்டாள். அவ்வமுதத்தைத் தருக்கி உண்ணும் சங்காழ்வானிடம் பொறாமையும் கொண்டாள்.

-----

பாசுரம் 15 (07 June 2009)

நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே
மொய்குழலீர் வந்து காணீரே


அசோதைப் பிராட்டியார் இந்த நம்பியில் மென்மையான நாக்கிற்குத் தகுந்த படி பார்த்து பார்த்து நுணுக்கிய மஞ்சள் காப்பினால் நாக்கினை வழித்து நீராட்டும் அழகுடைய இந்த நம்பிக்கு வாக்கும், கண்களும், வாயும், முறுவலும், மூக்கும் இருந்த அழகினைக் காணுங்கள். அடர்த்தியான தலைமுடியை உடைய பெண்களே வந்து காணுங்கள்.

***

மிகவும் மென்மையான அவையங்களைக் கொண்டவன் கண்ணன். அவனது மென்மையான நாக்கிற்கு ஏற்றபடி பார்த்துப் பார்த்து மஞ்சளை அரைத்துக் குழம்பாக்கிக் கொண்டு அதனைக் கொண்டு அவன் நாக்கினை வழித்து அவனை நீராட்டுகிறாள் அசோதைப்பிராட்டியார். அப்படிப்பட்ட அழகில் சிறந்த நம்பியான கண்ணன் தன் தாய் தந்தையரை அம்மா, அப்பா என்று தன் அழகிய மழலையால் அழைக்கிறான்; அந்த அழகைக் காணுங்கள். 'கண்ணா. என்னைப் பார். இங்கே பார்' என்று அழைப்பார்களுக்கு அவர்கள் மகிழும்படி குளிரக் காணும் அவனது திருக்கண்களின் அழகைக் காணுங்கள். அதோடு அவர்களைப் பார்த்து புன்முறுவல் புரியும் அந்த அதரங்களையும் முறுவலையும் பாருங்கள். கற்பகப் பூவின் மொட்டு போல் இருக்கும் அவனது மூக்கின் அழகைக் காணுங்கள். நன்கு அடர்த்தியாக வளர்ந்திருக்கும் குழலைக் கொண்டிருக்கும் பெண்களே காணுங்கள்.

----


பாசுரம் 16 (03 Oct 2009)

விண் கொள் அமரர்கள் வேதனை தீர
முன் மண் கொள் வசுதேவர் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே
கனவளையீர் வந்து காணீரே


வானுலகத்தில் வாழும் தேவர்களின் வேதனை தீர மண்ணுலகத்தில் வாழும் வசுதேவரின் திருமகனாகப் பிறந்து வலிமையுடைய அசுரர்கள் தேயும் படி வளர்கின்றான் இந்தக் கண்ணன். இவனது கண்களின் அழகைக் காணுங்கள். பொன்னால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்த பெண்களே காணுங்கள்.

கண்ணன் நல்லவர்களைக் காப்பதற்கும் அல்லவர்களை அழிப்பதற்கும் அவதாரம் செய்கின்றான். அப்படி அவன் அவதாரம் செய்யும் போது சுவர்க்கம் முதலான வானுலகங்களில் வாழும் இந்திரன் முதனான தேவர்களின் துயரங்களை மட்டும் நீக்கவில்லை; மண்ணில் பிறந்து சிறையில் வாடும் தன் தந்தையான வசுதேவர் முதலான நல்லவர்களின் துயரங்களையும் நீக்குகின்றான். 'தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல்' என்று இவனைச் சொல்லுவார்கள்.

அதோடு மட்டுமின்றி உடல் பலத்திலும் மனோபலத்திலும் வலிமையுடைய அசுரர்கள் எல்லாம் இவன் வளர்ந்து வரும் போதே தேய்ந்து போகத் தொடங்கினார்கள். 'தேய வளர்கின்றான்' என்று முரண் தோன்ற அழகாக ஆழ்வார் கூறுகிறார்.

இவ்வாறு நல்லவர்களை காக்க அவர்கள் தழைக்கும்படியும் தீயவர்களை அழிக்க அவர்கள் தேயும்படியும் கதிர்மதியமாக ஒரே நேரத்தில் விளங்கும் திருக்கண்களின் திருவழகைக் காணுங்கள் என்று அனைவரையும் அழைக்கிறார் ஆழ்வார்.

**

பாசுரம் 17 (30 Oct 2009)

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணிவண்ணன்
புருவம் இருந்தவா காணீரே
பூண் முலையீர் வந்து காணீரே


இளமைப்பருவம் வருவதற்கு முன்னரே சிறு குழந்தையாக இருக்கும் போதே உலகத்து மக்களைக் காக்கும் பொருட்டு தீயவர்களை அழித்த, திருமகளை ஒத்த அழகுடைய தேவகி தவம் செய்து பெற்ற, கரிய நிறம் கொண்ட திருமேனியும் ஒளி மிகுந்த மணி வண்ணமும் கொண்ட கண்ணனின் திருப்புருவம் இருந்த அழகைக் காணுங்கள்; அணிகலன்கள் அணிந்த முலைகளை உடைய பெண்களே காணுங்கள்.


***

சக்ரவர்த்தித் திருமகன் ஆன இராமன் இளமைப்பருவம் வந்த பின்னரே விசுவாமித்திரரின் வேள்வி காக்கச் சென்று தீயவர்களை அழித்தான்; தேவகியின் இளஞ்சிங்கமான இந்தக் கண்ணனோ அப்படியின்றி இளமைப்பருவம் அடைவதற்கு முன்னரே சிறு குழந்தையாக இருக்கும் போதே சென்ற பாசுரத்தில் பெரியாழ்வார் சொன்னது போல் 'திண் கொள் அசுரர்கள் தேய' வளர்கின்றான். அந்த வேறுபாட்டை பாசுரத்தின் முதல் அடியில் சொல்கிறார் ஆழ்வார்.

பாற்கடல் உள் அமுது அன்ன தேவகி என்று முன்னொரு பாசுரத்தில் சொன்ன போது பாற்கடலில் பிறந்த அமுதினைத் தவிர அதே பாற்கடலில் பிறந்த உள் அமுது திருமகள் என்ற பொருள் வெளிப்படையாகத் தோன்றவில்லை; இங்கே மிகத் தெளிவாக அங்கே உள்ளமுது என்று சொன்னது திருமகளைத் தான் என்பதை 'திருவின் வடிவொக்கும் தேவகி' என்று சொல்லிவிடுகிறார் ஆழ்வார்.

அணிகலன்கள் பூண்டதாலே தான் உங்கள் முலைகள் அழகுடன் விளங்குகின்றன; கரிய திருமேனியும் ஒளி வீசும் மணிவண்ணமும் கொண்ட இந்தக் கண்ணனின் திருப்புருவங்கள் எந்த வித ஆபரணங்களும் இல்லாமல் அழகுடன் இருக்கின்றன என்று சொல்வதைப் போலும், உங்கள் பூண்முலைகளைத் துளைக்கும் மதனனின் கரும்பு வில்லைப் போன்றவை இவன் திருப்புருவங்கள் என்று சொல்வதைப் போலவும் 'புருவம் இருந்தவா காணீரே; பூண்முலையீர் வந்து காணீரே' என்கிறார் ஆழ்வார்.

---

பாசுரம் 18 (11 Nov 2009)


மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில் கொள் மகரக் குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே




மண்ணுலகையும் மலைகளையும் கடல்களையும் ஏழு உலகங்களையும் பிரளய காலத்தில் காப்பாற்ற வேண்டிய பொழுது மிகவும் மகிழ்வுடன் அவற்றை உண்ணும் இந்த பிள்ளையின் அழகிய நிறம் கொண்ட மகரக்குழைகளின் திண்மையைக் காணுங்கள்; சிறந்த அணிகலன்களைப் பூண்டவர்களே வந்து பாருங்கள்.


***


இவ்வுலகில் இருக்கும் அனைத்தையும் தாங்கும் பூமியையும், அந்த பூமிக்கு ஆதாரமாக இருக்கும் மலைகளையும், அந்த பூமியைச் சூழ்ந்து காக்கும் கடல்களையும், மற்றும் இருக்கும் ஏழு உலகங்களையும், பிரளய காலத்தில் அழிந்து போகாத படி காப்பதற்குக் கண்ணன் அவற்றை உண்டு தன் வயிற்றில் வைத்துக் கொள்கிறான். அப்படி அவற்றைக் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கிறதே என்பதில் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தோன்ற அவற்றை உண்கிறான்.

அப்படிப்பட்ட கண்ணனின் பெருமை தோன்றும் வகையில் அழகிய திருநிறம் கொண்ட மகரக் குழைகளின் திண்மையைக் காணுங்கள்; ஏழுலகும் உண்டவனின் திண்மைக்கேற்ற திண்மை இந்தக் குழைகளுக்கு இருக்கிறது. சிறந்த அணிகலன்களைப் பூண்ட பெண்களே! உங்கள் அணிகளைக் காட்டிலும் திண்மை உடையவை இந்த மகரக் குழைகள்.

----

பாசுரம் 19 (30 Dec 2009)


முற்றிலும் தூதையும் முன் கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப்
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் தன்
நெற்றி இருந்தவா காணீரே
நேரிழையீர் வந்து காணீரே



மண்ணால் சிறு வீடு கட்டி விளையாடும் சிறு பெண்களைப் பிடித்து அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் மணல் கொழிக்கும் சிறு முறத்தையும் (முற்றில்) மணல் சோறு ஆக்குகின்ற சிறு பானைகளையும் (தூதை) அவர்கள் கைகளில் கொஞ்சும் சிறு பறவைகளையும் (பூவை) பறித்துக் கொண்டு ஓடும் குறும்பில் தலைவனான கண்ணனின் நெற்றியின் அழகைக் காணுங்கள்! சிறந்த அணிகளை அணிந்த பெண்களே காணுங்கள்!


***


சிறு பெண்கள் மண்ணால் சிறு வீடு கட்டி விளையாடிப் பொழுது போக்குபவர்கள். அவர்கள் சிற்றில் இழைத்துத் திரிதருவோர்கள். அவர்களைப் பற்றி இழுத்து அவர்கள் வைத்திருக்கும் முற்றிலும் தூதையும் அவர்கள் முன் கை மேல் இருக்கும் பூவையும் பறித்துக் கொண்டு ஓடுகிறான் தீம்பில்/குறும்பில் தலைவனான/பரமனான கண்ணன். அப்படி அவன் பிடிக்க முடியாத படி ஓடும் போது அவன் திருநெற்றியில் சிறு வியர்வைத் துளிகள் தோன்றி அவன் திருநெற்றியின் அழகை மிகுதியாக்குகிறது. அந்த திருநெற்றியை வந்து பாருங்கள் என்று அழைக்கிறார் ஆழ்வார்.

---

பாசுரம் 20 (15 Dec 2011)




அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு


கழல்கள் சதங்கை கலந்தெங்கும் ஆர்ப்ப


மழகன்றினங்கள் மறித்துத் திரிவான்


குழல்கள் இருந்தவா காணீரே


குவிமுலையீர் வந்து காணீரே



அழகிய பசும் பொன்னால் செய்யப்பட்ட கோலை அழகிய திருக்கையிலே வைத்துக் கொண்டு, திருவடிகளில் அணிந்திருக்கும் வீரக்கழல்களும் சதங்கையும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒலிக்க, ஓடி ஓடி இளைய பசுங்கன்றுகளை ஓடவிடாமல் மறித்துத் திரிகின்றவனுடைய திருமுடிக்கற்றைகளின் அழகினைக் காணுங்கள். குவிந்த முலைகளை உடைய பெண்களே வந்து காணுங்கள்.



***

பசுங்கன்றுகள் காணாமல் போய்விடாமல் அவற்றை மறித்து மேய்த்துக் கொண்டு வருவதற்குப் பொன்னால் ஆன கோலை தனது அழகிய திருக்கைகளில் வைத்திருக்கிறான் கண்ணன். அந்த கோலினைக் கையில் வைத்துக் கொண்டு கன்றுகளை ஓட விடாமல் மறிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடுகிறான். அப்போது அவனது கால்களில் இருக்கும் கழல்களும் சதங்கையும் ஒலிக்கின்றன. ஓடும் வேகத்தில் அவனது குழல் கற்றைகள் முன்னும் பின்னும் அசைகின்றன. கேசவனது திருமுடிக்கற்றைகளின் அழகும் கண்டுகொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

---

பாசுரம் 21 (17 Dec 2011)




சுருப்பார் குழலி அசோதை முன் சொன்ன


திருப்பாத கேசத்தைத் தென்புதுவைப் பட்டன்


விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்


உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே

***



வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய குழலை உடைய அசோதைப் பிராட்டியார் கிருஷ்ணாவதார காலத்தில் அண்டை அயலில் உள்ள பெண்களை அழைத்து கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரையில் உள்ள அழகினைக் காட்டியதை தென்புதுவையாம் வில்லிப்புத்தூர் வாழ் பட்டர்பிரான் விரும்பி உரைத்த இந்த இருபத்தியொரு பாசுரங்களையும் உரைப்பவர்கள் வைகுந்தம் சென்று அவன் திருவழகை அனுபவித்து ஒன்றுவார்கள்.



***



கண்ணன் அவதரித்த காலத்தில் அவனது அழகை அசோதைப் பிராட்டியார் சொன்னார். அதனை ஆழ்வார் விரும்பி மீண்டும் உரைத்தார். அசோதைப் பிராட்டியார் புறக்கண்ணாலும் கண்டு அனுபவித்ததை ஆழ்வார் அகக்கண்ணால் கண்டு அனுபவித்தார். இருவர் நிலையும் உயர்வானது. அந்நிலை எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனாலும் அவ்விருவரும் சொன்ன இந்த இருபத்தியொரு பாசுரங்களையும் உரைத்து வருபவர்கள் அவன் அழகை நேரில் அனுபவிக்கும்படியாக வைகுந்தம் சென்று அங்கேயே நிலைத்திருப்பார்கள் என்று ஆழ்வார் இந்த பாசுரங்களின் பலனைச் சொல்லி நிறைவு செய்கிறார்.



***