Sunday, September 30, 2007

மதுரை சௌராஷ்ட்ர மேல் நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா

மொழிச்சிறுபான்மையினரான சௌராஷ்ட்ரர்களால் அரசு உதவி பெற்று நடத்தப்படும் மதுரை சௌராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா வருகின்ற அக்டோபர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. நான் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த பள்ளி இது. மதுரைக்காரர்கள் நிறைய பேர் இந்தப் பள்ளியில் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பள்ளியில் படித்த வலைப்பதிவர்கள் யாராவது இருக்கிறீர்களா?

இந்த நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழ் இன்று கிடைத்தது. அழைப்பிதழில் நிகழ்ச்சி நிரல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில அரசியலாளர்களும் பல அதிகாரிகளும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.Thursday, September 27, 2007

பூங்கா இதழும் தமிழ்மணத்தின் நெகிழ்வும்

பூங்கா வலைப்பதிவிதழ் ஆகஸ்ட் 27க்குப் பின்னர் வரவில்லை. ஏன் என்று அறிவிப்பு ஏதேனும் வந்ததா? பூங்காவை வாராவாரம் வேக வேகமாகப் புரட்டிப் பார்ப்பதோடு எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடும். என்னைக் கவரும் தலைப்புகளை ஏற்கனவே படித்திருப்பேன். அந்த இதழ் மூலம் புதிதாகப் படித்த வலைப்பதிவுகள் மிகச் சிலவே.

இரண்டு மூன்று வாரங்களாக புதிய இதழ் வராமல் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. தமிழ்மணத்தாருக்கு எழுதிக் கேட்கலாமே என்கிறீர்களா? செய்திருக்கலாம் தான். ஆனால் ஏற்கனவே ஒரு அறிவிப்பு வந்திருந்தால் நீங்களே அதனைச் சொல்லிவிடமாட்டீர்களா? அதான் இங்கே கேட்கிறேன். :-)

***

இந்த இடுகையின் தலைப்பு தமிழ்மணத்தின் நெகிழ்வினைப் பற்றியும் ஏதோ சொல்ல விழைகிறது. இல்லையா? வளர்ச்சியை விரும்பும் எதுவும் உறுதியோடும் நெகிழ்வுத்தன்மையோடும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்மணம் பயனர்களின் செயல்பாட்டை வைத்து நெகிழ்ந்து கொடுப்பதாக இரு பற்றியங்களால் (விதயங்களால்) புரிந்துகொள்கிறேன். இரண்டும் தொடர்புடையதே. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டியல் & சூடான இடுகைகள் பட்டியல்.

***

முதல் பட்டியலால் வலைப்பதிவர்கள் பெரும் பயன் பெறுகிறார்கள். நல்ல இடுகைகள் தகுந்த கவனத்தைப் பெறுகின்றன. கும்மிப்பதிவுகள் (அப்படிச் சொல்ல மனது வரவில்லை - வேடிக்கையும் விளையாட்டுமாகவோ வினையாகவோ அவரவர் பதிவுகளில் நண்பர்களுடன் பேசிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கும்மிப்பதிவுகள் என்று சொல்லும் போதே அது ஒரு தவறான ஒன்று என்றதொரு குறிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் எல்லோரும் சொல்வதால் அதனையே பயனுறுத்துகிறேன்) மிகுதியாக இந்தப் பட்டியலில் வந்து மற்ற பதிவுகள் பெற வேண்டிய கவனத்தைப் பெற முடியாமல் செய்துவிடுகின்றன என்றதொரு குறை இருந்தது. அதனால் 40 பின்னூட்டங்கள் வரை முதல் பக்கத்தில் தெரியும்; அதற்குப் பின்னர் 40+ இரண்டாவது பக்கத்திற்குச் சென்று விடும் என்று அமைத்தவுடன் இந்தக் குறை பெரும்பாலும் நீங்கியது என்று நினைக்கிறேன். அண்மைக்காலமாக அந்த 40+ இரண்டாவது பக்கத்தையும் பார்க்கிறேன். எந்த ஒரு 24 மணி நேரப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அந்தப் பக்கத்தில் ஆறோ ஏழோ இடுகைகளே பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இதிலிருந்து இரண்டு வகை முடிவுக்கு வரலாம். முதல்வகை முடிவு, இரண்டாவது பக்கத்தில் பிரித்து இட வேண்டிய அளவிற்கு 40+ பின்னூட்டங்கள் பெறும் இடுகைகள் அவ்வளவாக இல்லை. இரண்டாவது வகை முடிவு, இப்படி இரண்டாவது பக்கத்திற்குத் தள்ளியதால் கும்மிப்பதிவுகள் குறைந்து போய்விட்டன. நண்பர்களுடன் அடிக்கும் அரட்டையை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

இரண்டாவது வகை முடிவு சரி என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மொத்தமாக எல்லா இடுகைகளும் பெற வேண்டிய அளவிற்கு கவனத்தைப் பெறுகின்றன இப்போது என்று நினைக்கிறீர்களா?

***

இரண்டாவது பட்டியலான சூடான இடுகைகள் பட்டியல் வந்த போது நானெல்லாம் 'ஏன் இந்த தேவையில்லாத வகைப்படுத்தல்' என்று மனத்தில் நினைத்ததுண்டு. ஆனால் மக்கள் சூடான இடுகைகளில் வருபவற்றையே மீண்டும் மீண்டும் படித்து அவற்றிற்கு மேலும் சூடேற்றுவதைப் பார்க்கும் போது மக்களுக்கு சூடான பற்றியங்களைப் படிப்பதில் உள்ள ஆர்வம் புரிந்து 'சரி. இது சரியான வகைப்படுத்தல் தான்' என்று தோன்றியது. ஆனால் சிறிது நாட்களிலேயே தலைப்பையும் இடுகையின் முதல் சில வரிகளையும் சுடேற்றும் வகையில் அமைத்துக் கொண்டு வரும் இடுகைகளின் எண்ணிக்கை மிகுதியானது - நானும் அப்படி ஒரு இடுகை இட்டிருக்கிறேன். அதனால் உண்மையிலேயே சூடேற வேண்டிய இடுகைகளைத் தாண்டி தலைப்பில் மட்டும் சூடு இருக்கும் இடுகைகள் பட்டியலில் மேலேறத் தொடங்கின. தமிழ்மணத்தாரும் அந்தப் பட்டியலைத் தூக்கி இரண்டாம் பக்கத்தில் போட்டுவிட்டார்கள் இப்போது. இதனால் பதிவர்களின் செய்கை மாறியிருக்கிறதா? உண்மையிலேயே சுடேற வேண்டிய இடுகைகள் மட்டும் தான் சூடேறுகின்றனவா? பதிவர்கள் தலைப்பில் மட்டும் சூடேற்றுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்களா? தமிழ்மணத்தாரின் அடுத்தச் செயல்பாடு நடக்கும் வரை அது தெரியுமா என்று தெரியவில்லை.

Sunday, September 23, 2007

கண்ணனுக்குப் பிடித்த பக்தன் - இராமனுக்கும் அதே!


இராமபக்தியில் சிறந்தவர்களாக தங்களை இந்த அரசியல்வாதிகளும் குமுகவிரோதிகளும் காட்டிக்கொண்டு மக்களைத் தூண்டிவிட்டு அழிவினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இறை நம்பிக்கை இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்று எல்லோரும் பொறுப்பின்றிப் பேசியும் அழிவினை ஏற்படுத்தியும் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த இடுகை எழுதும் படி அமைந்தது தற்செயலானது இல்லை என்றே நினைக்கிறேன்.

கீதையில் கண்ணன் யார் தனக்குப் பிடித்த பக்தன் என்று சொல்லிக் கொண்டு வரும் போது சொல்லும் இந்த இரு சுலோகங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. அடிக்கடி பொருளுடன் எண்ணிக் கொள்ளும் சுலோகங்கள். இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று இதற்கு நேரம் வந்தது.

அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார சம துக்க சுக: க்ஷமி

சந்துஷ்ட சததம் யோகி யதாத்மா த்ருட நிச்சய:
மய்யர்ப்பித மனோ புத்திர் யோ மத் பக்த ச மே ப்ரிய:

அத்வேஷ்டா - (யாரிடமும்) வெறுப்பு (துவேஷம்) இல்லாமல்

சர்வ பூதானாம் - எல்லா உயிர்களிடமும்

மைத்ர: - நண்பனாகவும்

கருண ஏவ ச - கருணையுடனும்

நிர்மமோ - தன்னுடையது என்ற எண்ணம் இல்லாமலும்

நிரஹங்கார - தான் என்ற கருவம் இல்லாமலும்

சம துக்க சுக: - இன்ப துன்பங்களில் ஒரே மாதிரியாகவும்

க்ஷமி - பொறுமை கொண்டவனாகவும்

சந்துஷ்ட சததம் - எப்போதும் மகிழ்வுடனும்

யோகி - பிறர்க்குதவும் யோகத்தில் ஆழ்ந்தவனும்

யதாத்மா த்ருட நிச்சய: - மனத்தில் திட நம்பிக்கையுடனும்

மய்யர்ப்பித மனோ புத்திர் - என்னிடம் அர்ப்பணிக்கப்பட்ட மனமும் புத்தியும் கொண்டு


யோ மத் பக்த - யார் எனக்கு பக்தனாக இருக்கிறார்களோ

ச மே ப்ரிய: - அவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்.

கண்ணன் இங்கே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறான் யார் தனக்குப் பக்தர்கள்; யார் தனக்குப் பிரியமானவர்கள் என்று. எல்லோருக்கும் இந்த சுலோகங்களில் செய்தி இருக்கிறது. எனக்கான செய்தியை இந்த சுலோகங்கள் சொல்லும் போது மனத்தில் இருத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

Saturday, September 22, 2007

திருவள்ளுவர் போல் புலவருண்டோ? திருக்குறள் போல் நூலுமுண்டோ?


திருவள்ளுவமாலை என்றொரு நூல் இருக்கிறது. திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் பலவாறாக சங்கப் புலவர்கள் பலரும் பாடித் தொகுக்கப்பட்டத் தொகுப்பு நூல் இது. இந்த நூலிலிருந்து மூன்று பாடல்களை இங்கே பார்க்கலாம்.

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச் செப்பல் - நிலவு
பிறங்கொளி மாலைக்கும் பெயர் மாலை மற்றும்
கறங்கிருள் மாலைக்கும் பெயர்


பூமியில் மேல் புலவர் திருவள்ளுவரைத் தவிர்த்துப் பிறரைப் புலவர் என்று கூறுவது எப்படி இருக்கின்றது தெரியுமா? முழு நிலவு ஒளிவீசி நிற்கும் மாலை நேரத்திற்கும் 'மாலை' என்று பெயரிட்டுவிட்டு நிலவில்லாமல் இருள் கவிந்திருக்கும் மாலைக்கும் அதே பெயர் வைப்பது போன்றது. (இங்கே மாலை என்றது இரவினை).

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வாலறிவின்
வள்ளுவரும் தம் குறள்வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து


திருமாலும் குள்ளவுருவாய் முதலில் தோன்றிப் பின்னர் திரிவிக்கிரமனாய் வளர்ந்து இரண்டு பெரும் அடிகளால் உலகம் முழுவதையும் நன்றாக அளந்தான். கூரிய அறிவுடைய திருவள்ளுவரும் தம் குறள் வெண்பா அடிகளால் உலகத்தார் எண்ணும் எல்லாவற்றையும் ஆராய்ந்து அளர்ந்தார்.

இங்கே எடுத்துக் கொண்ட உவமை பல நிலைகளிலும் பொருந்துகின்றது. திருமாலை திருவள்ளுவருக்கு உவமையாகச் சொல்கிறார். குறள் வெண்பாக்களுக்கு திருமாலின் குறள் உருவம் (குள்ள வாமன உருவம்) உவமை. திருக்குறள் வெண்பாக்களின் பொருள் விரிவிற்கு திருமாலின் வளர்ந்த திரிவிக்கிரம உருவம் உவமை. குறள் வெண்பாவின் இரண்டு அடிகளுக்கு (சிலர் ஒன்றரை அடிகள் என்றும் ஒன்றே முக்கால் அடிகளென்றும் தவறாகக் கூறுவார்கள்) திருமாலின் இரண்டு பெரும் திருவடிகள் உவமை. உலகத்தார் எண்ணுவதெல்லாம் ஆராய்ந்து அளித்ததற்கு திருமால் உலகமெல்லாம் அளந்தது உவமை.

'திருமால் தாயதெல்லாம்' என்று திருக்குறள் சொல்லும் குறளப்பன் திருக்கதை (வாமன திரிவிக்கிரம அவதாரக் கதை) திருக்குறள் காலமாம் சங்கம் மருவிய காலத்திலும் அனைவரும் பெரிதும் அறிந்த ஒன்றாக இருந்தது என்பது இந்தக் கதையை திருவள்ளுவரும் திருக்குறளைப் புகழும் இந்தப் புலவரும் உவமையாகச் சொல்லியிருப்பதில் இருந்து தெரிகிறது.

தினையளவு போதாச் சிறு புன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படிமத்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி


தினையளவே இருக்கும் சிறிய நீர்த்துளியானது நீண்ட பனையின் அளவையும் படிமத்தால் காட்டும். வீட்டில் வாழும் கோழிகள் எல்லாம் பெண்கள் நெல்குத்தும் போது பாடும் வள்ளைப்பாட்டின் இசைக்கு உறங்கும் வளம் கொண்ட நாட்டை உடையவனே, திருவள்ளுவனாரின் வெண்பாவினால் செய்யப்பட்டத் திருக்குறளின் பொருள் விரிவு அது போல இருக்கிறது.

தினையளவு நீர்த்துளியில் பனையளவு தெரியும். எவ்வளவு நல்ல உவமை இது!! இதனை விட எளிதாக குறள் வெண்பாவின் பொருள் விரிவினைச் சொல்ல முடியாது.

சாகித்ய அகாடமி விருது பெறும் இரு சௌராஷ்ட்ர அறிஞர்கள்

சாகித்ய அகாடமியின் இந்த வருட சௌராஷ்ட்ர மொழிக்கான 'பாஷா சம்மான்' விருது ரூ. 50,000 திரு. கே.ஆர். சேதுராமன், திரு. தாடா. சுப்ரமணியன் இருவருக்கும் வழங்கப்படுவதாக் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருடம் தான் முதன்முறையாக சாகித்ய அகாடமி சௌராஷ்ட்ர மொழியை ஒரு தனி மொழியாக ஏற்றுக் கொண்டு இந்த விருதினை வழங்குகிறது. இது சௌராஷ்ட்ர மொழி அறிஞர்களுக்குப் பேருவகை தருகின்றதாக அறிகிறேன்.

திரு.தாடா சுப்ரமணியன் சௌராஷ்ட்ர கம்பன் என்று புகழப்படுபவர். சௌராஷ்ட்ர ராமாயணு, சௌராஷ்ட்ர திருக்குறள், மாய் பாஷா பக்தி (தாய் மொழி பக்தி), சௌராஷ்ட்ரி ரூபு லக்ஷன் (சௌராஷ்ட்ர இலக்கணம்) போன்ற நூல்களை இயற்றியவர்.

திரு. கே.ஆர். சேதுராமன் சௌராஷ்ட்ரம் - தமிழ் - ஆங்கிலம் அகராதி, சௌராஷ்ட்ரர் வரலாறு போன்ற நூல்களை எழுதியவர்.

எந்த நூல்களுக்காக இவர்கள் இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது என்ற செய்தி எனக்கு இன்னும் தெரியவில்லை.

Wednesday, September 19, 2007

புகை சூழ்ந்த நெருப்பு, தூசு படிந்த கண்ணாடி, கருப்பையில் குழந்தை


கீதை காட்டும் உவமைகள் இவை. இறைவன் எல்லார் உள்ளேயும் இருக்கிறான் என்று ஆன்மிகம் சொல்கிறதே. அது ஏன் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை? இந்தக் கேள்விக்குக் கண்ணன் சொல்லும் பதிலில் இந்த உவமைகள் வருகின்றன.

கருப்பையில் இருக்கும் குழந்தையை அவ்வளவு எளிதாகக் காண முடிவதில்லை. சிலருடைய நிலையும் இப்படித் தான் இருக்கிறது. அவர்களின் மனத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையும் இருளும் அவர்களால் இறைவனின் இருப்பைக் கொஞ்சம் கூட உணரவிடாமல் செய்கிறது. கருவிலிருந்து குழந்தை வெளிவர எவ்வளவு கஷ்டப்படுமோ அவ்வளவு முயற்சி எடுத்தால் தான் அவர்களால் இறைவனிருப்பை அறிய முடிகின்றது.

கண்ணாடியில் படிந்திருக்கும் தூசி கண்ணாடியின் இருப்பை மறைப்பதில்லை. ஆனால் கண்ணாடியின் பயன் தூசியால் காணாமல் போய்விடுகின்றது. சிலர் நிலை இது போலத் தான் இருக்கிறது. அவர்களின் மனத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமை கண்ணாடியின் மேல் உள்ள தூசியைப் போல் இறைவனின் இருப்பைச் சிறிதே காட்டினாலும் அதனால் பயன் இல்லாமல் செய்து விடுகிறது. சிறிதே முயற்சியுடைய ஆன்மிகச் சாதனைகளைச் செய்தவுடன் இந்த தூசி எளிதாகத் துடைக்கப்பட்டு கண்ணாடி மீண்டும் பயன்படுவது போல் இறைவனின் இருப்பும் தெளிவாகத் தென்பட்டு அதனால் பயனும் பெருகுகிறது.

நெருப்பைச் சூழ்ந்த புகை நெருப்பின் இருப்பை உறுதி செய்கிறது. சிறிதே விசிறியவுடன் அந்த புகை விலகி நெருப்பு மிக நன்றாகத் தெரிகிறது. அது போல் சிலருக்கு சற்றே முயற்சி செய்தவுடன் இறையுணர்வு பல்கிப் பெருகி நிற்கிறது.

பெரும்பான்மையான மக்கள் முதல் நிலையிலும், சில ஆன்மிகவாதிகள் இரண்டாம் நிலையையும், மிகச்சிலரே மூன்றாம் நிலையிலும் இருக்கிறார்கள் போலும். ஏனெனில் முதல் வகையினரை எல்லா இடங்களிலும் காண முடிகிறது. இரண்டாம் நிலையினரில் ஒன்றிரண்டு பேர்கள் எப்போதாவது கண்ணில் படுகின்றனர். மூன்றாம் நிலையினரைக் காண்பது அரிதிலும் அரிது என்று கண்ணனே சொல்கிறான் (வாஸுதேவ ஸர்வம் இதி ஸ் மஹாத்மா ஸுதுர்லப - இறைவனே இங்கு எல்லாம் என்று உணர்ந்து அதன் படி செயல்களைச் செய்யும் மஹாத்மா கிடைப்பதற்கு மிக மிக அரிதானவர்கள்); அது போல் நம் கண்களிலும் அப்படிப்பட்டவர் படுவதில்லை.

தூமேன வ்ரியதே அக்னிர் யதா தர்ஸோ மலேன ச
யதோல்பேனவ்ரிதோ கர்ப்ப: ததா தேனேதம் வ்ருதம் (கீதை 3:38)


தூமேன வ்ரியதே அக்னிர் - (எப்படி) நெருப்பு புகையால் சூழப்பட்டிருக்கிறதோ

யதா தர்ஸோ மலேன ச - எப்படி கண்ணாடி தூசியால் (மூடப்பட்டிருக்கிறதோ)


யதோல்பேனவ்ரிதோ கர்ப்ப: - எப்படி உயிர் கருப்பையால் மூடப்பட்டிருக்கிறதோ

ததா தேன இதம் வ்ருதம் - அது போல் அவனும் இங்கே மூடப்பட்டிருக்கிறான்.

Sunday, September 16, 2007

மகாபாரதப் போரில் இருந்து மேலாண்மைத் தத்துவங்களைக் காட்டமுடியுமா?

கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் எதிலிருந்தும் எந்தத் தத்துவத்தையும் எடுத்துக் காட்டமுடியும் போலிருக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த ppt கோப்பு எனக்கு வந்தது. மகாபாரதப் போரிலிருந்து மேலாண்மைத் தத்துவங்களைச் சொல்கிறார்கள் இந்தக் கோப்பில்.

மகாபாரத விநாடி வினா நடத்தியவர்கள் இங்கே இருக்கிறார்கள். மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்து கேள்வி கேட்டவர்களையே திருப்பிக் கேள்வி கேட்டவர்கள் இருக்கிறார்கள். சில கேள்விகளில் பிராடு செய்துவிட்டார்கள் என்று போர்க்கொடி தூக்கியவர்களும் இருக்கிறார்கள். போரின் நடுவே கீதையை எத்தனை நாட்கள் சொன்னார்கள் என்று கேள்விக்கணைகள் வீசியவர்கள் இருக்கிறார்கள். எல்லாம் மறந்துவிட்டதே என்று வருந்தியவர்களும் இருக்கிறார்கள். அவர்களும் மற்றவர்களும் இதில் சொல்லியிருப்பவைகளைப் பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

Wednesday, September 12, 2007

இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு

இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன்.

இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக்குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும்
அரைக்கமை மரபின மிடற்றுயாக்குநரும்
மிடற்றமை மரபின அரைக்குயாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

(புறநானூறு பாடல் 378 வரிகள் 13 - 21)

முதலில் இந்தப் பாடலுக்கு எனக்குத் தெரிந்த வரை பொருள் சொல்லிவிட்டுப் பின்னர் இதில் இருந்து தோன்றும் எண்ணங்களை/கருத்துகளைச் சொல்கிறேன்.

இலம் பாடு - வறுமை; இல்லை என்பதால் படும் பாடு. வறுமை என்பதற்கு மிக அழகான தமிழ்ச்சொல்.
இழந்த - நீங்கிய
என் இரும் பேர் ஒக்கல் - என் மிக மிகப் பெரிய சுற்றத்தவர்
விரல் செறி மரபின - விரலில் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன்களை (நகைகளை)
செவித்தொடக்குநரும் - காதில் தொடுத்துக் கொண்டவர்களும்
செவித்தொடர் மரபின - காதில் தொடுத்துக் கொள்ள வேண்டிய நகைகளை
விரற்செறிக்குநரும் - விரலில் அணிந்து கொண்டவர்களும்
அரைக்கமை மரபின - இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டியவைகளை
மிடற்று யாக்குநரும் - கழுத்தில் கட்டிக் கொண்டவர்களும்
மிடற்று அமை மரபின - கழுத்தில் அணிய வேண்டியவைகளை
அரைக்கு யாக்குநரும் - இடுப்பில் கட்டிக் கொண்டவர்களும்
(என நின்ற அவர்கள்)
கடுந்தெறல் - மிகக்கடுமையாகப் போர் புரிய கூடிய, மிக்க சினம் கொண்ட - முன்னர் 'மிக்க இன்பத்தை விளைவிக்கும் தேனை (நிறைய கொண்டிருக்கும், நிறைய உண்ட)'என்று எழுதியிருந்தேன். இந்த இடுகையை மின் தமிழ் குழுமத்தில் இட்ட போது திரு. வேந்தன் அரசு ஐயாவும் திரு. ஹரிகிருஷ்ணன் ஐயாவும் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டினார்கள். இப்போது மாற்றிவிட்டேன்.

இராமன்
உடன் புணர் - உடன் வாழும்
சீதையை
வலித்தகை - வலித்த கை என்று பிரித்தால் மிகுந்த வலிமை மிகுந்த கைகளை உடைய, வலித் தகை என்று பிரித்தால் வலிமையில் சிறந்த
அரக்கன் - இராவணன் என்று பெயர் சொல்லவில்லை. ஆனால் அரக்கன் என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்
வௌவிய ஞான்றை - கவர்ந்து சென்ற போது
நிலஞ்சேர் மதரணி - நிலத்தில் வீசப்பட்ட அணிகலன்களைக்
கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை - கண்ட குரங்கின் சிவந்த முகங்களைக் கொண்ட பெரிய கூட்டம்
இழைப்பொலிந்தாங்கு - அணிகலன்களை (இடம் மாற்றித் தம் உறுப்புகளில்) அணிந்து கொண்டதைப் போல (இருந்தது)
அறாஅ அருநகை - (அதனைக் கண்டு) நிறுத்த முடியாத அளவிற்குப் பெருஞ்சிரிப்பை
இனிது பெற்று இகுமே - இனிமையுடன் பெற்று சிரித்துக் கொண்டிருந்தேன்.

***
வறுமையில் இருந்த தம் சுற்றத்தார் ஒரு அரசன் தந்த பரிசில்களால் தம் வறுமை நீங்கிய போது அப்போது தான் முதன்முதலாகப் பார்க்கும் அணிகலன்களை இடம் மாற்றி அணிந்து கொண்டது குரங்குகள் நகைகளை இடம் மாற்றி அணிந்து கொண்டதைப் போல் மிக்க நகைச்சுவையாக இருந்தது என்கிறார் இந்தப் புலவர்.

இலம்பாடு இழந்த என்று சொல்லும் போது மிக்க சுவையுடன் இருக்கிறது. 'இல்லை என்னும் பாடு இனி ஒழிந்தது' என்ற மகிழ்ச்சி நன்கு தொனிக்கிறது.

என் இரும் பேர் ஒக்கல் என்ற போது தன் சுற்றத்தார் என்னும் பாச உணர்வும் சுற்றம் தழால் (சுற்றத்தைக் காப்பாற்றுதல்) என்னும் பெருங்குணமும் நன்கு காட்டப்படுகின்றன. பொருள் வந்த போது தானும் தன் குடும்பத்தாரும் மட்டுமே அனுபவிக்காமல் தன் மிகப்பெரிய சுற்றத்தவர்கள் எல்லாம் அதனை அனுபவிக்கக் கொடுத்து அதில் மகிழும் புலவரின் அருங்குணம் தெரிகிறது.

'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு' என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார். இந்தத் தொன்மம் ஆதிகாவியமாகிய வால்மீகியின் வடமொழி நூலில் தான் முதன் முதலில் வந்தது என்று சொல்வோம். அந்த ஆதிகாவியத்தில் வருவதற்கு முன்பே சங்ககாலப் புலவராகிய இவருக்கு இந்தத் தொன்மம் தெரிந்து இருந்திருக்கிறது.

உவமை அணியின் இலக்கணமே 'தெரியாத ஒன்றிற்கு தெரிந்த ஒன்றை உவமையாகச்' சொல்லுவதே. இங்கே சுற்றத்தவரின் நிலையைச் சொல்லும் போது குரங்குகளின் நிலையை உவமையாகக் காட்டுவது இந்தத் தொன்மம் புலவருக்கு மட்டும் இல்லாமல் இந்தப் பாடலை அரங்கேற்றும் அவையில் இருப்பவருக்கும் இந்தப் பாடலைப் படித்து அனுபவிக்கும் வாய்ப்பு உடையவருக்கும் இந்தத் தொன்மம் தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்படி பெரும்பாலாவருக்குத் தெரிந்த கதையாக இராமாயணக்கதை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. கம்பனின் காலத்தில் காவிய வடிவை அது பெற்றிருந்திருக்கலாம். அவ்வளவே.

இராமன் சீதை என்று கதையின் தலைவன் தலைவி பெயரைச் சொன்ன புலவர் வில்லனின் பெயரைச் சொல்லாமல் அரக்கன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சங்ககாலத்திலேயே சீதையைக் கவர்ந்தவன் அரக்கன் என்ற கருத்து நன்கு நிலை நாட்டப்பெற்றிருந்தது என்று காட்டுகிறது.

சீதையின் நகைகளைக் கண்டபடி அணிந்தவர்கள் குரங்குகூட்டத்தினர் என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது.

தமிழர்களை அரக்கர்கள் என்றும் குரங்குகள் என்று வடநூலார் இராமாயணத்தில் எழுதியிருக்கிறார்கள் என்ற கருத்து மிகுந்த வலிவுடன் நம்மிடையே இருக்கிறது. சீதையை வௌவியவன் அரக்கன் என்று இந்தத் தமிழ்ப்புலவர் சங்ககாலத்திலேயே சொல்லியிருக்கிறார். வௌவியவன் தமிழன் என்றால் அவனை அரக்கன் என்று குறிப்பாரா? அவனை அரக்கன் என்று குறித்துவிட்டு இராமனையும் சீதையையும் பெயருடன் குறிப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று தானே?

தமிழர்களைக் குரங்குகள் என்று சொன்னார்கள் என்ற கருத்தும் இந்தப் பாடலினால் அடிபட்டுப் போகிறது. சங்கத் தமிழ்ப் பாடலிலேயே குரங்குகள் என்று தெளிவாக இருக்கிறது.

வன நரர்களை (காட்டு மனிதர்களை) வானரர்கள் (குரங்குகள்) என்று வால்மீகி இராமாயணம் சொல்லிவிட்டது என்றதொரு கருத்தும் இருக்கிறது. அந்த க்ருத்தின் வலிமையும் இந்தப் பாடலுக்கு முன் அடிபட்டுப் போகிறது.

தமிழர்களையோ மற்ற இனத்தவர்களையோ குரங்குகள் என்று வடநூலார் சொல்லவில்லை. இந்த தொன்மத்தின் படி அவை குரங்குகளே; அப்படித் தான் சங்ககாலத்திலும் தொன்மம் சொல்லப்பட்டிருக்கிறது; பின்னர் மற்ற காவிய இராமாயணங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த ஒரு பாடல் எடுத்துக்காட்டால் இராமாயணம் ஆரிய திராவிட போரின் காவிய உருவம் என்றும் ஆரியர்கள் திராவிடர்களைக் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படும் கருத்துகள் தூள் தூளாகிவிட்டன என்று சொல்லமாட்டேன். அந்தக் கருத்துகளுக்கும் தரவுகள் இருக்கலாம். பலர் ஆராய்ந்து சொன்னவைகளை அப்படி எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் அவை சொல்லும் கருத்துகளுக்கு எதிராக இப்படி ஒரு புறநானூற்றுப்பாடல் இருக்கிறது. அந்தத் தரவினைக் கண்டு நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.

உசாத்துணை

Monday, September 10, 2007

திராவிட நாடும் தமிழ் நாடும்

'வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்' என்கிறது தொல்காப்பியம். வடக்கே திருவேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இருபுற எல்லைகள் என்று இதற்குப் பொருள் கூறுவார்கள். தென்குமரி என்றது குமரிக்கண்டத்தை என்றும் சிலர் பொருள் கொள்வார்கள்.

'நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு' என்கிறது சிலப்பதிகாரம். நெடியவனான திருமாலின் திருவேங்கட மலையும் குமரிப்பெண்ணின் கடலும் தமிழுக்கு வரம்பு என்று இதற்குப் பொருள் சொல்வார்கள்.

இப்படி தமிழ் இலக்கியங்கள் வட வேங்கடத்தையும் தென்குமரியையும் தமிழ் நாட்டிற்கு வரம்பாகக் கூறும் போது வடமொழியாளர்கள் பாரதத்தை இரு பிரிவாக 'பஞ்ச கௌடர்கள்', 'பஞ்ச திராவிடர்கள்' என்று பிரித்துச் சொல்கிறார்கள்.

பஞ்ச திராவிடர்களாக தமிழ்நாட்டவரும் கேரளத்தவரும் ஒரு பிரிவாகவும், தெலுங்கர் ஒரு பிரிவாகவும், கருநாடகர் ஒரு பிரிவாகவும், மராத்தியர் ஒரு பிரிவாகவும், குஜராத்தியர் ஒரு பிரிவாகவும் - ஆக ஐந்து பிரிவாக திராவிடர்களைச் சொல்கிறார்கள்.

பின்னர் மொழி ஆராய்ச்சி அடிப்படையில் கால்டுவெல் திராவிட மொழிகள் என்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகியவற்றை அடையாளம் காட்டினார். அதனால் தற்காலத்தில் திராவிட நாடு என்பதற்கு இந்த மொழிகள் வழங்கும் நாடு என்ற பொருள் சொல்லப்படுகின்றது.

இந்த முரண்பாடுகள் ஏன்? தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிட என்ற சொல் பிறந்தது என்ற தமிழறிஞர்கள் வாதமும் திராவிட என்ற சொல்லில் இருந்து தமிழ் என்ற சொல் பிறந்தது என்ற வடமொழியாளர்களின் வாதமும் இருக்க, மராத்தியரும் குஜராத்தியரும் திராவிடர்களாகப் பகுக்கப் பட்டது ஏன்? திராவிட நாடு என்பது வடமொழியாளர்கள் கூற்றுப்படி மராட்டிய கூர்ஜரங்களையும் உட்கொண்டதா? திராவிட மொழிகள் என்ற அடிப்படையில் கால்டுவெல் சொன்ன மொழிகள் பேசப்படும் இடங்கள் திராவிட நாடு என்று கொள்வது சரி தானா? வடவேங்கடம் தென்குமரி இவற்றிடையே உள்ள நிலம் தமிழ் நிலம் என்று சொன்ன 2ம், 3ம் நூற்றாண்டு கருத்துக்கும் வடமொழியாளர்களின் பாகுபாட்டிற்கும் இடையே என்ன நிகழ்ந்தது? மராத்தியர்களும் குஜராத்தியர்களும் உண்மையில் வடமொழி அடிப்படையிலான மொழிகளைப் பேசும் திராவிட இனத்தவர்களா? இன்னும் எத்தனையோ கேள்விகள். ஆராயப் பட வேன்டியவை.

Saturday, September 08, 2007

தேசிய நெடுஞ்சாலையா திராவிட நெடுஞ்சாலையா?

'வர வர நம்ம தலைவருக்கு எது எதுக்குத் தான் போராட்டம் நடத்தறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சு!'

'ஏன்...என்ன பண்றார்?'

'தேசிய நெடுஞ்சாலையை திராவிட நெடுஞ்சாலைன்னு மாத்தச் சொல்லி போராட்டம் நடத்தப் போறாராம்!'

***

இந்த வார விகடனில் வந்திருக்கும் நகைச்சுவைத் துணுக்கு. இது போல் நடக்காதா என்ன? விரைவில் நடக்க வாழ்த்துகள். :-))))

Thursday, September 06, 2007

வேளாளர் செய்த தமிழ் வேதம்! (அ) வைணவத்தின் குலமுதல்வன் ஒரு வேளாளர்!


வீட்டில் எல்லா விதமான செல்வங்களும் இருக்கின்றன. எந்தக் குறையும் இல்லை. மாடு மனை, வீடு வாசல், நன்செய் புன்செய் என்று எல்லாமே கொழிக்கின்றன. செய்யும் அறச்செயல்களுக்கோ அளவில்லை. வேண்டி நின்றார் வேண்டிற்றளவும் கொடுத்து வள்ளல் என்ற பெயரும் கிடைத்திருக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வேளாளர்த் தலைவர் காரிக்கும் அவர் தம் மனைவியார் உதயநங்கைக்கும் தம் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்பது தான் பெருங்குறை.

பொருநை நதிக் கரையில் திருக்குருகூரில் கோயில் கொண்ட ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று குழந்தை வரம் வேண்டினால் நிச்சயம் அருள் கிடைக்கும் என்று பெரியோர்கள் சொல்ல, இதோ ஆதிநாதப் பெருமாள் கோயிலுக்கு வந்து அவன் அருளை வேண்டி இறைஞ்சி நிற்கின்றனர் . கோயில் பிரகாரத்திலேயே அன்றிரவு தங்கிவிட்டனர்.

கனவில் வந்தான் மாயவன். அடியார் படும் துயரைக் காணச் சகிக்காதவன் அல்லவா அந்த அச்சுதன் . தன் அம்சமான சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனரே அவர்களுக்கு ஒரு மகனாய் பிறப்பார் என்று அருள் செய்கிறான். மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர் கணவனும் மனைவியும்.

***

இன்று பிரமாதி வருடம், வைகாசி மாதம், விசாக நட்சத்திரம். உதய நங்கை மிகுந்த ஒளியுடன் கூடிய ஒரு ஆண்மகவை ஈன்றிருக்கிறாள். கண்ணன் பிறந்த போது அன்று ஆய்ப்பாடி பட்ட பாடு காரியார் திருமாளிகை இன்று பட்டது. எங்கும் ஒரே கோலாகலம்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

ஆனந்தத்தால் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள் சிலர்; கீழே விழுகிறார்கள் சிலர்; விரும்பி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்கிறார்கள்; நம் தலைவன் எங்கு பிறந்துள்ளான்? எங்கே உள்ளான்? என்று அவனைக் காண விரும்பி நாடுவார்கள் சிலர்; பாடுவார்கள் சிலர்; பலவிதமான பறைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுகிறார்கள் சிலர்; இப்படிப் பட்ட கோலாகலம் கண்ணன் பிறந்த போது ஆய்ப்பாடியில் ஏற்பட்டது.

***

நாட்கள் சென்றன. குழந்தை பிறந்தது முதல் அழவேயில்லை. எந்த விதமான உணவும் உட்கொள்ளவில்லை. ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. எப்போதும் ஏதோ ஒரு மோன நிலையில் இருப்பது போல் ஆடாமல் அசையாமல் இருக்கிறது. வந்துப் பார்த்த வைத்தியர்கள் எல்லாம் எதுவும் செய்ய முடியவில்லை. உணவு உட்கொள்ளாமலேயே குழந்தை வளர்ந்து வருவதால் கொஞ்சம் நாள் சென்றால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர்.

ஆதிநாதப் பெருமாள் அருளால் பிறந்த இந்த குழந்தை இப்படி மற்ற குழந்தைகளை விட மாறுதலாய் இருப்பதால் ஊரார் 'மாறன்' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். குழந்தைகளை பிறந்தவுடனே 'சடம்' என்னும் ஒரு வாயு தாக்குவதால் தான் குழந்தைகள் அழ ஆரம்பிக்கின்றன. இந்தக் குழந்தை பிறந்தது முதல் அழாததால் அந்த சட வாயு இவனை அண்டவில்லை என்று தோன்றுகிறது. அதனால் இவனைச் 'சடகோபன்' என்று அழைக்கலாம் என்று பெரியவர்கள் சொல்ல அதுவும் அந்தக் குழந்தைக்குப் பெயராகியது.

***

வைத்தியர்கள் சொன்ன மாதிரி சிறிது நாட்கள் சென்றால் குழந்தை சரியாகிவிடும் என்று தான் பெற்றோர் நினைத்தனர். ஆனால் ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை அப்படியே தான் இருக்கிறது. எந்த இறைவனின் திருவருளால் குழந்தை பிறந்ததோ அந்த இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்றால் ஒரு வேளை குழந்தை மாற்றமடையலாம் என்று எண்ணி குழந்தையை ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு எடுத்து வந்தனர். குழந்தையை இறைவன் திருமுன்பு வைத்து அவனை இறைஞ்சி நின்றனர்.

ஆஹா. என்ன ஆச்சரியம்? இதுவரை ஆடாமல் அசையாமல் வெறும் பிண்டம் போல் கிடந்த குழந்தை தவழ்ந்து தவழ்ந்து அந்த புளிய மரம் நோக்கிச் செல்கிறதே. அந்தப் புளிய மரமும் சாதாரண மரமன்று. அது உறங்காப்புளி. எல்லாப் புளிய மரங்களும் இரவில் தம் இலைகளை மூடும் . இந்த புளியமரம் இரவிலும் தன் இலைகளை மூடுவதில்லை.

அந்த உறங்காப் புளியின் அருகில் சென்று அமர்ந்துவிட்டது குழந்தை. ஒரு வயதுக் குழந்தை தாமரை ஆசனம் இட்டு அமர்ந்திருப்பது ஏதோ தவத்தில் அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. எத்தனையோ முறை முயன்றும் மாறனை அம்மரத்தடியில் இருந்து நகர்த்த முடியவில்லை. அதனால் பெற்றோரும் ஆதிநாதர் திருக்கோயிலுக்கு அருகிலேயே வசித்து தினமும் தங்கள் திருமகனை வந்துப் பார்த்துப் போகிறார்கள்.

***

'ஹும். நமக்கும் வயதாகிவிட்டது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தத் தெய்வத் திருநாடாம் தென்பாண்டி நாட்டுத் திருக்கோளூரில் பிறந்து நம் குல ஆசாரத்திற்கு ஏற்ப தமிழ்மொழி இலக்கிய இலக்கணங்களையும் வடமொழி வேதங்களையும் கற்று பெரும்பண்டிதன் என்று புகழ் பெற்றோம். சிறு வயதிலிருந்தே இனிமையான கவிதைகள் பாடி வருவதால் மதுரகவி என்றும் அழைக்கப் படுகிறோம். பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமனைச் சேவித்து அவன் அருள் என்னும் அழியாச் செல்வத்தைப் பெற, இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து விடுதலைப் பெற, மோக்ஷபுரிகள் என்று சொல்லப் படும் அயோத்தி, மதுரா (வட மதுரை), மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), பூரி (புவனேஷ்வர்), துவாரகை என்று எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று அங்கேயே சிறிது காலம் தங்கிப் பார்த்தோம். அயோத்தி நம் மனதிற்கு உகந்ததாகவும் இராமபிரானையும் அன்னை சீதையையும் தினமும் தொழுவதற்கு ஏற்பதாகவும் இருந்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். ஆனால் அவன் அருள் வந்ததாகவும் தெரியவில்லை. முக்தி மார்க்கம் தென்படுவதாகவும் தெரியவில்லை. கற்ற கல்வி அனைத்தும் ஒரு சதாசாரியன் கிடைக்காவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் என்பது எவ்வளவு உண்மை. வயது கூடக் கூட ஒரு நல்ல ஆசாரியன் கிடைப்பான் என்னும் நம்பிக்கை தளர்ந்து வருகிறது. இறைவா. எனக்கு ஒரு நல்ல ஆசாரியனைக் காட்டக் கூடாதா?'

மதுரகவியார் இப்படி இறைவனை இறைஞ்சி அடிக்கடி பெருமூச்சு விடுவது வழக்கமாய் விட்டது. கருணைக் கடலான இறைவன் நல்ல வழி காட்டாமலா போய்விடுவான்.

***

'ஆஹா. அது என்ன பெருஞ்சோதி. ஆதவன் மறைந்த பின் சில நாட்களாக தென் திசையில் இந்த பெரும் ஒளி தோன்றுகிறதே. என்னவாக இருக்கும்?'

'நண்பரே. அங்கு பார்த்தீர்களா? தெற்கில் ஏதாவது விசேஷமா? ஒரு பெரும் ஒளி தோன்றுகிறதே?'

'மதுரகவியாரே. எந்த ஒளியைச் சொல்கிறீர்கள்? எனக்கு எதுவும் தெரியவில்லையே?'

'இதே தான் எல்லாருடைய பதிலாகவும் இருக்கிறது. நமக்கு மட்டும் இந்த ஒளி தினமும் இரவில் தோன்றுகிறதே. அது என்ன என்று அறிந்து கொள்ள மிக்க ஆவலாக இருக்கிறது. நாளை நாம் தெற்கு நோக்கிச் செல்வோம். அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிப்போம்'.

இப்படி எண்ணி அயோத்தியிலிருந்து கிளம்பினார் மதுரகவியார். தினமும் பகலில் ஓரிடத்தில் தங்கிப் பகலவன் மறைந்த பின் ஒளிக்கற்றையை நோக்கி நடந்து நடந்து மதுரகவியார் தென்னாட்டிற்கு வந்தார். பல நாட்கள் பயணித்தபின் திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் வந்த போது அந்த ஒளி மறைந்தது. பின்னர் தோன்றவே இல்லை.

ஆதிநாதர் திருக்கோயிலில் தான் ஏதோ அதிசயம் இருக்க வேண்டும் என்று எண்ணி அங்குள்ள மக்களிடம் கேட்டார். அவர்கள் காரிமாறன் சடகோபனைப் பற்றிச் சொல்லி மதுரகவியாரை உறங்காப்புளி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

'அடடா. இந்த 16 வயது பாலகன் எவ்வளவு காந்தியுடன் இருக்கிறான். இவன் பிறந்தது முதல் அசையவே இல்லை என்று சொல்கிறார்களே. எந்த உணவும் உட்கொள்ளவில்லை என்றும் கண் திறந்து பார்த்ததில்லை என்றும் வாய் திறந்து பேசியதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் இச்சிறுவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. உடலிலோ முகத்திலோ எந்த வித வாட்டமும் இல்லை. அவன் முகத்து ஒளியை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருக்கிறதே. இந்தப் பாலகனைப் பேசவைத்துப் பார்க்கலாம். இறைவன் நமக்கு ஒரு சதாசாரியனை இறுதியில் காட்டிவிட்டான் என்றே தோன்றுகிறது'.

மதுரகவியார் இப்படி எண்ணிக்கொண்டு ஒரு சிறு கல்லை எடுத்து அந்த சிறுவன் அருகில் போட்டார் . அந்த ஒலியைக் கேட்டு இதுவரை கண் திறக்காத மாறன் கண் திறந்து மதுரகவியாரைப் பார்த்தான்.

மதுரகவியார் உடனே 'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?' என்று வினவினார்.

சடகோபன் உடனே தன் திருவாய் மலர்ந்து 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார்.

அதனைக் கேட்டவுடன் முதியவரான மதுரகவியார் கீழே விழுந்து அந்தச் சிறுவனை வணங்கி தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றார். மாறன் சடகோபனும் ஏற்றுக் கொண்டார்.

***

'நடந்ததைக் கேட்டாயா? இந்த பிராமணக் கிழவர் மதுரகவியார் கோயிலில் ஆடாமல் அசையாமல் கிடந்த, நம் தலைவர் காரியாருடைய மகன் மாறன் ஒரு சிறுவன் என்று கூடப் பாராமல் அவன் காலில் விழுந்து தன்னைச் சீடனாக்கிக் கொள் என்று சொல்கிறாரே? இது தகுமா? அவர் வயது என்ன? இவன் வயது என்ன? அவர் குலம் என்ன? இவன் குலம் என்ன? அவர் கற்றது எவ்வளவு? இவன் கற்றது எவ்வளவு? எதற்கும் ஒரு அளவு உண்டு'.

'ஆம் நண்பா. நீ சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். வேளாளர்களாகிய நம் குலத்தில் பிறந்த இந்தச் சிறுவனை அந்தப் பார்ப்பனக் கிழவர் கீழே விழுந்து வணங்குவதும் என்னை சீடனாக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்பதும் அதற்கு அந்த பாலகன் ஒத்துக் கொள்வதும் மிக்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. உலகவழக்கிற்கு எதிராகவும் இருக்கிறது. மதுரகவியார் செய்வதில் ஏதேனும் பொருள் இருக்கும். அவர் ஏதோ கேட்க, சிறுவன் மாறன் சடகோபன் ஏதோ பதில் சொன்னானே. என்ன என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்'.

***

'சுவாமி. நீங்கள் கோயிலுக்கு வந்து சடகோபனைப் பார்த்தவுடன் ஏதோ கேட்டு அவனும் ஏதோ பதில் சொன்னானே. அது என்ன என்று எங்களுக்கு விளக்க முடியுமா?'

'அன்பர்களே. திருக்கோயிலில் இருக்கும் நம் ஆசார்யன் சாதாரணமானவர் இல்லை. எல்லா ஞானமும் உடையவர். நான் கேட்டது

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?

என்பது. இதன் பொருள் உயிரில்லாததாகிய இந்த உடலில் அணு உருவமாய் சிறியதாய் இருக்கும் ஜீவன் பிறந்தால் எதனை அனுபவித்துக் கொண்டு எந்த நிலையில் இருக்கும் என்பது.

அதற்கு நம் ஆசார்யன் சொன்ன பதில்

அத்தைத் தின்று அங்கே கிடக்கும்

என்பது. இதன் பொருள் அந்த உயிர் சாதாரணமான உயிராய் இருந்தால் அந்தப் பிறவி நேரக் காரணமான முன்வினைகளுக்கு ஏற்ப இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டு அந்த உடலிலேயே வினைப்பயன் முடியும் அளவும் கிடக்கும்; அதுவே இறையுணர்வு கொண்ட உயிராய் இருந்தால் எம்பெருமானிடம் எப்போதும் ஈடுபாடு கொண்டு அவனிடமே தோய்ந்து கிடக்கும் என்பது'.

'விளக்கத்திற்கு நன்றி. இது பெரும் விஷயமாகத் தான் இருக்கிறது. சடகோபன் ஞானமடைந்தவன் என்பது தெளிவாகிறது. ஆனால் வயதிலும் கல்வியிலும் உயர்ந்தவரான நீங்கள் எப்படி இந்தச் சிறுவன் காலில் விழுந்து அவனை ஆசாரியனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இது தகுமா?'

'அன்பர்களே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். மேலோன் கீழோன் என்பதெல்லாம் உலக வழக்கில் நமக்கு நாமே அமைத்துக் கொண்ட வழிமுறைகள். சிறியவர் பெரியவரை வணங்க வேண்டும் என்பதும் அந்த வழிமுறைகளில் ஒன்று. ஆனால் ஒருவர் ஞானமடைந்திருந்தால் அவர் எந்த வயதினராக இருந்தாலும், எந்த குலத்தினராக இருந்தாலும், எப்படிப் பட்டவராய் இருந்தாலும் நம்மால் வணங்கப்பட வேண்டியவர். ஞானிகளிடம் குலம் கோத்திரம் கல்வி கேள்வி வயது போன்றவைகளைப் பார்க்கக் கூடாது. அதனால் நான் நம் ஆசாரியன் சடகோபனிடம் அடைக்கலம் பெற்றது மிகவும் சரியே'.

***

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்.


(1) இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் மேலானவன் என்பதையும், (2) என்றும் நிலையான உயிர்களின் இயல்புகளையும், (3) அந்த உயிர்கள் மேலான இறைவனை அடையும் வழியையும், (4) அந்த வழிக்குத் தடையாக எப்போதும் தொடர்ந்துவரும் முன்வினைகளையும், (5) அவனருளாலே அவன் தாள் அடைந்து அனுபவிக்கும் பேரானந்தப் பெருவாழ்வையும், தன் பாடல்களில் கூறுகின்ற திருக்குருகூர் மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் வேதங்களை யாழின் இசையுடன் இசைத்தது போன்றுளது.

வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே சரண்.

எனக்கு வேறொன்றும் தெரியாது. வேதங்களைத் தமிழில் திருவாய்மொழியாக இசைத்த மாறன் சடகோபன் திருக்குருகூர் ஏறு - அவரே எங்கள் வாழ்வு' என்று ஏத்தும் மதுரகவியாழ்வார், எங்களை ஆள்பவர். அடியார்க்கு அடியாரான அவரே அடியோங்களுக்கு அடைக்கலம்.

***

இது ஒரு மீள்பதிவு. வைணவர்கள் தங்கள் குலமுதல்வனாக நம்மாழ்வாரான மாறன் சடகோபனைத் தான் கருதுகிறார்கள். அடியவர்களின் குலத்தை ஆய்வதும் அதனைப்பற்றிக் கேட்பதும் பேசுவதும் பெரும்பாவம் என்று வைணவத்தில் சொல்வார்கள். வைணவத்தில் இருக்கும் மேன்மையைச் சுட்டும் முகமாகவே குலத்தைப் பற்றி இங்கே பேசியிருக்கிறேன்; அந்த அபராதத்தை இறைவனும் அடியார்களும் பொறுத்தருள வேண்டும்.

மாறன் என்ற பெயருக்கான காரணமாக இடுகையில் ஒன்றைக் கூறியிருக்கிறேன். ஆனால் நம்மாழ்வார் பாண்டியர் குலத்தவராக இருந்ததால் பாண்டியர்களின் பெயரான மாறன் என்ற பெயர் அவருக்கு இடப்பட்டது என்றும் சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.