Monday, January 07, 2013

குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!



அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!

திருவிக்கிரம அவதாரம் எடுத்த போது இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்தவனே! உன் திருவடிகள் போற்றி!

கடல் கடந்து சென்று அங்கே தென்னிலங்கையில் இருந்த பகையை அழித்தவனே! உன் திறமை போற்றி!

தூள் தூள் ஆகும்படி வண்டிச்சக்கரமாக வந்த சகடாசுரனை உதைத்தவனே! உன் புகழ் போற்றி!

கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை மரத்தில் எறிந்து கொன்றவனே! உன் வீரக்கழல்கள் போற்றி!

பெருமழை பெய்து ஆயர்பாடி வெள்ளத்தில் தவித்த போது கோவர்த்தனம் என்னும் குன்றை குடையாக எடுத்தவனே! உன் குணம் போற்றி!

பகையை வென்று இல்லாமல் செய்யும் உனது திருக்கையில் இருக்கும் வேல் போற்றி!

என்றென்றும் உன் பெருமைகளையே போற்றி எங்களுக்கு வேண்டியதெல்லாம் பெறுவதற்காக இன்று நாங்கள் வந்தோம்! எங்கள் மேல் இரக்கம் கொள்வாய்!




Sunday, January 06, 2013

மாரி மலை முழைஞ்சில் ...




மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதரு மா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்து அருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

மழை எப்போதும் பெய்து கொண்டிருக்கும் மலையில் இருக்கும் குகை. அதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த சிங்கம். அது தனது உறக்கத்தை விட்டு எழுந்து தீ போல் விழித்து, பிடரி மயிர் பொங்க, எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு, உடலை நிமிர்த்தி, கர்ஜனை செய்து புறப்பட்டு வரும்.

அந்த சிங்கத்தைப் போலே பூவைப்பூவண்ணக் கண்ணா, நீயும் நின் அரண்மனையை (அந்தப்புரத்தை) விட்டு எழுந்து இங்கே வந்து அழகானதும் பெருமை வாய்ந்ததும் ஆன உனது சிங்காசனத்தில் அமர்ந்து கொண்டு, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு அறிந்து எங்களுக்கு அருள் செய்யவேண்டும்!


Saturday, January 05, 2013

செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?!



அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே
சங்கம் இருப்பாற் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூ போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!

அழகு நிறைந்த மிகப்பெரிய இந்த பூமியின் அரசர்கள் பலரும் உன் பெருமையின் முன்னர் தங்கள் கருவம் தொலைந்து போக, மிகப்பணிவுடன் உன்னைக் காண வந்து உனது இருக்கையின் அருகில் கூடி இருப்பதைப் போல் நாங்கள் கூடி நிற்கின்றோம்!

சிறிதே திறந்து கிண்கிணி (சதங்கை) போல் தோன்றும் உன் தாமரைப் போன்ற சிவந்த திருக்கண்களை இன்னும் சிறிது சிறிதாகத் திறந்து எங்கள் மேல் நோக்காதா?

சந்திரனும் சூரியனும் ஒரே நேரத்தில் உதித்ததைப் போல் உன் இரண்டு அழகிய திருக்கண்களாலும் எங்களை நீ பார்த்தால் எங்கள் குறைகள் எல்லாம் உடனே நீங்கிவிடும்!

Friday, January 04, 2013

ஊற்றம் உடையாய்! பெரியாய்!




ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

பாலைப் பிடிப்பதற்காக ஏந்திய பாத்திரங்கள் எல்லாம் நிறைந்து பொங்கி வழியும்படி தடையே இன்றி பாலைச் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் நிறைய உடையவனான நந்தகோபனின் மகனே எழுந்திருப்பாய்!

ஊக்கம் உடையவனே! பெரியவனே! உலகினில் எல்லாம் விளங்கும்படி தோன்றி நின்ற சுடரே! எழுந்திருப்பாய்!

உன் பகைவர்கள் உன்னிடம் தங்கள் வலிமையெல்லாம் இழந்து தோற்று உன் வாசலில் வந்து உன் திருவடிகளைத் தொழுவார்களே அது போல் நாங்களும் உன்னைப் போற்றிப் புகழ்ந்து வந்து உன் வாசலில் நிற்கின்றோம்!

Thursday, January 03, 2013

நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்!



முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்!
செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்!
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னால் சென்று அவர்களது இடர்களை எல்லாம் நீக்கும் கடவுளே எழுந்திருப்பாய்!

சிறந்த குணங்களை உடையவனே! வலிமை உடையவனே! உன்னை வெறுத்தார்களுக்கு வெப்பம் கொடுக்கும் குற்றமில்லாதவனே! எழுந்திருப்பாய்!

செப்பு போன்ற மெல்லிய முலையும் சிவந்த வாயும் சிறிய இடையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! திருமகளே! எழுந்திருப்பாய்!

உன் கணவன் மூலமாக நாங்கள் வேண்டியதெல்லாம் தந்து இப்போதே நாங்கள் மார்கழி நீராடும்படி செய்வாய்!

Wednesday, January 02, 2013

குத்துவிளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல்...




குத்துவிளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேல் ஏறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்!
மைத்தடங்கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனைப் போதும் துயில் எழ ஒட்டாய் காண்!
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!

குத்துவிளக்கு எரிய தந்தக்கால்களை உடைய கட்டிலின் மேல் மெத்து மெத்தென்ற பஞ்சினால் ஆன மெத்தையின் மேல், கொத்து கொத்தாக மலர்கள் சூடிய தலைமுடியை உடைய நப்பின்னையின் கொங்கையைத் தழுவியபடி கிடக்கும் மலர் போன்ற மார்பை உடையவனே! வாயைத் திறந்து பேசுவாய்!

மையணிந்த கண்ணை உடையவளே! நீ உன் கணவணை எத்தனை நேரமானாலும் துயில் நீங்கி எழ விடமாட்டேன் என்கிறாய்! எள்ளளவு நேரமும் உன் கணவனைப் பிரிந்து உன்னால் இருக்க இயலாது போலும்! அப்படி இருப்பது உன் தகுதிக்கு சரியானது இல்லை!

Tuesday, January 01, 2013

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!



உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

வலிமையான மதங்கொண்ட யானைகளை உடையவனும் தோற்காத தோள் வலிமையை உடையவனும் ஆன நந்தகோபாலனின் மருமகளே நப்பின்னைப் பிராட்டியே! மணம் கமழும் தலைமுடியை உடையவளே! கதவைத் திறப்பாய்!

ஆண்கோழிகள் (சேவல்கள்) எல்லாப் பக்கங்களிலும் கூவுகின்றன பார்! மாதவிப் பந்தல் மேல் பல விதமான குயில் இனங்கள் கூவுகின்றன பார்!

பந்து விளையாடும் விரல்களை உடையவளே! உன் கணவனது திருப்பெயர்களை நாங்கள் பாட, உன் கைகளில் இருக்கும் பெருமை மிக்க வளையல்கள் ஒலி எழுப்ப, உன் செந்தாமரை போன்ற திருக்கைகளால் மகிழ்ச்சியுடன் வந்து கதவை திறப்பாய்!

***


இராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வினை இந்தப் படத்தில் சித்தரித்திருக்கிறார்கள். இராமானுஜர் ஒரு முறை பிக்ஷைக்குச் செல்லும் போது தனது வழக்கம் போல் திருப்பாவை பாசுரங்களைப் பாடிக் கொண்டு சென்றார். பெரிய நம்பிகளின் திருமாளிகைக்கு முன் வரும் போது 'உந்து மத களிற்றன்' என்று தொடங்கும் இந்த பாசுரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அப்போது பிக்ஷை அளிப்பதற்காக வெளியே வந்த பெரிய நம்பிகளின் திருமகள் அத்துழாய் வெளியே வந்தார். அந்த பெண்ணைப் பார்த்தவுடன் நந்தகோபனின் மருமகள் நப்பின்னைப் பிராட்டி தனது சீர் ஆர் வளையல்கள் ஒலிக்க செந்தாமரைக் கையால் கதவைத் திறந்து வந்தாள் என்று எண்ணி அவளது கால்களில் விழுந்து வணங்கினார் எம்பெருமானார்.