Sunday, June 16, 2013

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் (கோதையின் கதை)

அன்புத் தோழி. நீ சொன்னது போல் நேற்று மாலை நாம் கூடல் இழைத்துப் பார்த்தோம். கோவிந்தன் வரும் நாள் கூடி வரும் என்று நாம் இழைத்தக் கூடல்கள் எல்லாம் சொல்லின. நேற்று இரவு அந்த கோவிந்தனே வந்தானடி. கனவில் வந்து என்னைக் கைப்பிடித்தான்.

ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

தேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்னாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

எல்லாத் திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பல பேர் அதனை எடுத்து மந்திரங்களால் புகழ்ந்து, தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் புனிதனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

மத்தளம் கொட்ட வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பந்தலின் கீழ் என் தலைவன் அழகன் மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

நல்ல சொற்களையே பேசுபவர்கள் மேன்மையான மறைச் சொற்களைச் சொல்லி பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கதிரவன் முன் வைத்த பின், எரியும் நெருப்பைப் போல் கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி தீயை வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.

இந்தப் பிறவிக்கும் இனி வரும் ஏழேழ் பிறவிக்கும் நமக்குக் கதியானவன், நம்மைத் தன் செல்வமாக உடையவன், நாராயணனாகிய நம் தலைவன், தன் செம்மையுடையத் திருக்கையால் என் கால்களைப் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.

வில்லை கையில் ஏந்தியிருக்கும் ஒளிமிகுந்த முகம் கொண்ட என் உடன்பிறந்தோர் வந்து தீயினை வளர்த்து என்னை அதன் முன்னே நிறுத்தி சிங்கமுகம் கொண்ட (நரசிம்மன்) அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரியை அந்த தீயினில் இடக் கனாக் கண்டேன் தோழி நான்

வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

குங்குமம் அப்பிக் குளிர்ந்த சந்தனக்குழம்பை உடலெங்கும் பூசி எங்கள் இருவரையும் நீராட்டிய பின், அங்கு அவனோடு யானை மேல் ஏறி மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஆயனாரை அடைவதாகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழும் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் கோதை சொல்லும் இந்தத் தூய தமிழ் மாலை பத்துப் பாடல்களும் வல்லவர் பெறற்கரிய நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்திருப்பார்கள்.

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.
------------------------------------------------------------------------------

மாதவனுடன் மணம் நடந்த மகிழ்ச்சியில் கோதைக்கு சொற்கள் முன்னும் பின்னுமாய் வருகின்றன. குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மணநீர் மஞ்சனமாட்டி அங்கவனோடும் உடன் சென்று அங்கானை மேல் மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் என்று சொல்லாமல் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்துச் சொல்கிறாள்.

(2005ல் எழுதியதன் மறுபதிவு)

12 comments:

குமரன் (Kumaran) said...

Comments from the original post:

40 comments: மதுமிதா said...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
நன்றி குமரன்.
பொருளோ,விளக்கமோ தெரிந்து கொள்ளுமுன்பே மனதைக் கவர்ந்த பாடல் இது குமரன்.

கனவு கண்ட கோதையின் மனவிலாசம் மகிழ்வளிப்பதே எந்நாளும்.

December 20, 2005 6:42 AM
G.Ragavan said...
குமரன் இந்த வதுவை என்ற சொல்லைப் பற்றி எனக்கு ஒரு ஐயமுள்ளது. இந்த வதுவைதான் இன்று கன்னடத்தில் மதுவே-யாகித் திருமணம் என்ற பொருளில் வருகின்றதோ என்று.

நாளை வதுவை மணம் என்றால் நாளை திருமணம் என்று பொருள் கொள்ள வேண்டுமோ! எனக்குத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவர் சொல்லுங்களேன்.

December 20, 2005 7:04 AM
G.Ragavan said...
குமரன் இந்தப் பாடல் எனக்கு மிகவும் படிக்கும். தான் நினைத்ததைச் சொல்வது ஒன்று. அது எளிது. என்ன நினைக்கின்றோமே அதை அப்படியே சொன்னால் போதும்.

ஆனால் கண்டதைச் சொல்வது மிகக் கடிது. அதுவும் கனவில் கண்டதென்றால்! அது அடுத்தவர்களைச் சரியாகச் சென்றடைய வேண்டும். அந்த அளவிற்கு நுணுக்கமான விளக்கங்கள் அளவாக இருக்க வேண்டும். நாச்சியாரின் இந்தப் பாடல் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காடு.

December 20, 2005 7:08 AM
Ravishankar Kannabiran said...
குமரன்,

முதலில் வாழ்த்துக்கள்.
எளிய தமிழில், "ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடர்க்கும்" ஆண்டாளின் தமிழ்ச்சுவை அறிய வைக்கும் தங்கள் முயற்சி, நன்று!

நீங்கள் குறிப்பிட்டதில், ஒரே ஒரு எழுத்தினால், சற்றே பொருள் மாறி விட்டது. அவ்வளவு தான்.

"வரிசிலை வாள்முகத் தன்னைமார் வந்திட்டு ... பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்..."

இங்கு, அன்னைமார் என்பதற்குப் பதிலாக, "என்னைமார்" என்று இருக்க வேண்டும்.
"என்னைமார்" என்பது, கூடப் பிறந்தவனோ இல்லை அந்த முறையில் உள்ளவனோ குறிக்கும்.

கவிதையை (பாசுரத்தை) இங்கு பார்க்க:
http://www.prapatti.com/slokas/tamil/naalaayiram/aandaal/vaaranamaayiram.pdf


ஆக பொரிமுகம் தட்டுவது, அந்தக் காலத்திலும், உடன் பிறந்தவர் தான் என்பதே சரி.

December 20, 2005 9:20 AM
குமரன் (Kumaran) said...
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்தது மிக்க மகிழ்ச்சி அக்கா. அடுத்த முறை நீங்கள் இராஜபாளையம் போகும் போது அப்படியே சூடிக்கொடுத்த நாச்சியார் திருக்கோவிலுக்கும் சென்று என்னைப் பற்றி கோதையிடம் கொஞ்சம் சிபாரிசு செய்கிறீர்களா?

December 20, 2005 10:16 AM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
இராகவன், நீங்கள் சொன்னத் சரி. இப்போது தான் நினைவுக்கு வந்தது. வதுவை என்றால் திருமணம் என்று தான் பொருள். பதிவிலும் மாற்றிவிட்டேன். நன்றி.

December 20, 2005 10:17 AM
குமரன் (Kumaran) said...
திரு. ரவிசங்கர் கண்ணபிரான். உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் எழுத்துப்பிழையைச் சொன்னதற்கும் மிக்க நன்றி. என்னிடம் இருக்கும் பாசுரத்தில் 'வாள்முகத்தென்னைமார்' என்று இருந்தது. நான் தான் தவறாக 'வாள்முகத்து அன்னைமார்' என்று பிரித்துவிட்டேன் - வரிசிலை வாள்முகம் என்பதைப் பார்த்தவுடன். 'என்னைமார்' என்னும் பொருளில் பதிவில் இருக்கும் விளக்கத்தையும் மாற்றி எழுதிவிட்டேன்.

அடிக்கடி வந்து உங்கள் கருத்தைக் கூறுங்கள். பெரியாழ்வார் பற்றிய 'விஷ்ணு சித்தன்' பதிவைப் பார்த்தீர்களா? இல்லையென்றால் 'view my complete profile'ஐ தட்டுங்கள்.

December 20, 2005 10:24 AM
தேசிகன் said...
குமரன்,
நன்றாக இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை, நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன் திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாள் ( அல்லது கனவு காண்கிறாள்) ஆனால், அதில் தாலி ( அல்லது மங்கல நாண் ) இல்லை!

December 20, 2005 2:00 PM
குமரன் (Kumaran) said...
உண்மைதான் தேசிகன். நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன். ஏற்கனவே எங்கோ இதைப் பற்றிப் படித்துள்ளேன். ஆனால் நினைவில் நிற்கவில்லை.

ஏன் தாலியைப் பற்றிப் பாடவில்லை என்று தெரியுமா? என்ன விளக்கம் அதற்கு சம்பிரதாயத்தில் கூறுகிறார்கள்?

December 20, 2005 2:35 PM
சிவா said...
குமரன்! ஒவ்வொரு பாடலும் திருமண நிகழ்வுகளை வரிசையாக சொல்வது, மிகவும் அழகாக இருக்கிறது. உங்கள் விளக்கமும் நன்று.

//**வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்**//

இந்த பாடல் ஒரு படத்தில் ராஜாவின் இசையில் வரும் கேட்டிருக்கிறீர்களா?. சுசீலா பாடி இருப்பார். 'கேளடி கண்மணி' என்று நினைக்கிறேன். பொதுவாக இந்த பாடல் வந்தவுடன் ஓட்டி விடுவேன். அது இதில் வருவது தானா?. இன்று மறுபடி கேட்டு பார்க்கிறேன்.

December 20, 2005 5:03 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
சிவா, இந்த பாடல் ஜானகி பாடி ஹே ராம் படத்திலும் வரும். கேட்டுப் பாருங்கள். நல்ல பாடல். முடிந்தால் உங்கள் நேயர் விருப்பத்திலும் போடுங்கள்.

December 20, 2005 7:31 PM
Anonymous said...
Kumaran,

Arumayana vilakkam. Enakku piditha padal. Oru santhegam - "அந்தரி" endral enna uravu/porul?

Nandri,
Kumaresh

December 21, 2005 3:12 PM
குமரன் (Kumaran) said...
குமரேஷ். அந்தரி என்பது பார்வதிதேவியின் பெயர். இந்தப் பெயரின் விளக்கத்திற்கு 'சுந்தரி எந்தை துணைவி' என்று தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலின் விளக்கத்தைப் பாருங்கள், அபிராமி பட்டர் வலைப்பதிவில். :-)

மணமகனின் சகோதரி மணப்பெண்ணுக்கு மணமாலை சூட்டுவது வழக்கம். அதைத் தான் இங்கே கூறுகிறார். பார்வதிதேவி பரந்தாமனின் தங்கை அல்லவா?

December 21, 2005 3:17 PM
Anonymous said...
Nandri Kumaran - Abirami Anthathi valavai padithirukkiren, anal intha sollukkana vizhakkathai gavanikkavillai.

Kumaresh

December 21, 2005 3:30 PM
தி. ரா. ச.(T.R.C.) said...
thali aniyum sadangu aathi nalil illay. Athu pinbu namaka yerpadithikonda ooru security allathu adayala chinnam.Kalyanathil
periyorgalal oppukolla patathu kaithalam partruthal,ammy mithithal,arunthathy parthal matrum
saptahpathy.Andalum athai mattumthan padinal. TRC

December 22, 2005 6:38 AM

குமரன் (Kumaran) said...

sree said...
இதோ மாலனுக்கு உகந்த மார்கழி மாதம் ,எனது கிராமத்திலே இதோ இந்த அதிகாலை வேளையில் பாகவத பெரியோர்களுடன் ஆயர் சிறுவர் சிறுமியரை போன்றே கிராமத்து சிறுவர் சிறுமியர்கள் பஜனை பாடிக்கொண்டு செல்வதை பார்ப்பதில் கிடைத்த இன்பம் உங்களின் இந்த பதிவிலும் எனக்கு கிட்டியது.வாழ்க வளர்க

December 22, 2005 7:12 AM
இராமநாதன் said...
நன்றாக இருக்கிறது குமரன்.

கேளடி கண்மணியில் தான் முதன்முதலில் கேட்டேன். பொருள் புரியாவிடினும் பிடித்துவிட்டது.

December 22, 2005 10:54 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் TRC. நண்பர்களாக மணமகளும் மணமகனும் ஏழு அடி எடுத்துவைத்து தீயினை வலம் வரும் சப்தபதி சடங்கே இந்துத் திருமணத்தின் முக்கியக்கட்டம் என்று இந்திய இந்துத் திருமணச் சட்டமும் சொல்வதாய்ப் படித்துள்ளேன். இன்றைக்கும் தாலி கட்டும் பழக்கம் சில இந்து இனத்தவர்களிடம் இல்லை என்றும் படித்துள்ளேன்.

December 22, 2005 12:09 PM
குமரன் (Kumaran) said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sree. ஆயர் சிறுவர் சிறுமியர் செய்யும் நாம சங்கீர்த்தன இன்பம் இங்கும் உங்களுக்குக் கிடைத்ததென்றால் அது உங்களின் மேன்மையான மனநிலையைக் காட்டுகிறது. தொடர்ந்துப் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

December 22, 2005 12:11 PM
குமரன் (Kumaran) said...
இராமநாதன், பொருள் புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன, நல்ல பாடல்களும் இசையும் புரியாவிட்டாலும் பிடித்துவிடும். இனிப்பைச் சுவைக்க அது எதில் செய்யப்பட்டது என்று தெரியத் தேவையில்லை. :-)

December 22, 2005 12:13 PM

குமரன் (Kumaran) said...

Anonymous said...
kumaran, thirumanam koodi vara kaathirukkum mangayar parayanam seyya vendiya paadalkal ivai endru engalukku antha naatkalil koorapattathu.
ungal blog paarkkumbothu varapogum naatkalaukkum bagavath sankalpam and sambantham niraya kidaikkum endru thaan thondrukirathu. with blessings. athuzhai.

January 10, 2006 11:49 PM
குமரன் (Kumaran) said...
அத்துழாய் அம்மையாரே. நீங்கள் ஆசிகள் கூறியிருப்பதால் வயதில் பெரியவர் என்று எண்ணி இப்படி அழைக்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.

நீங்கள் சொன்ன மாதிரி வாரணமாயிரத்தைப் பாராயணம் செய்தால் நல்ல கணவன் கிடைப்பான்; விரைவில் திருமணம் கூடிவரும் என்று கூறுவார்கள்.

ஆண்டாள் இந்தப் பாடல்களுக்குப் பலன் சொல்லும்போது 'வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே' என்று சொல்லியிருப்பதால் இந்தப் பாடல்களை இருபாலரும் பாடுவது ஏற்புடைத்து என்று எண்ணி நான் பல முறை பாடியிருக்கிறேன்.

முதலில் கோதையின் கதையைக் கூறி முடித்துப் பின்னர் திருப்பாவை விளக்கம் தருவதாய் திட்டம். நீங்கள் தொடர்ந்து படித்து உங்கள கருத்துகளைக் கூறுங்கள்.

January 11, 2006 10:50 AM
ஷைலஜா said...
கோதைகண்ட கனாவை இங்கு எழுத்தில் நனவாகக் கண்டேன்! மகிழ்ச்சி குமரன். எப்போதோ படித்திருக்கவேண்டிய பதிவு, சில நேரங்களில் விலைபெறுமான விஷயங்களின் பெருமையையும் அருமையையும் தாமதமாய்ப் புரிந்து அல்லது அறிந்து கொள்வதுபோல நான் இங்கே வந்திருக்கிறேன்.பரவாயில்லை ஆங்கிலத்தில் சொல்வார்களே "Better late than never!"


இதில் வாரணமாயிரம் சூழவலம் செய்து ஜானவாசப் பாடல் அதாவது மண நாளுக்கு முதல்தினம் மாப்பிள்ளை அழைப்பு நடக்குமே அன்றைய தினப்பாடலாய் சொல்வார்கள்

அடுத்தது நிச்சயதார்த்தம்

பெரியோர்களின் அனுமதியாக அடுத்த பாடல் 'இந்திரனுள்ளிட்ட..'

அடுத்தது காப்புகட்டுதல்

அடுத்தபாடல் பிடி சுற்றுதல்.கல்யாணங்களில் இது திருஷ்டி கழிப்பாய் நடக்கும். ஒளி பொருந்திய தீபங்களை குடங்களுக்குள் வைத்து மணமக்களை சுற்றிவருவது இப்போதும் பழக்கத்தில் உள்ளது.

மத்தளம் கொட்ட பாடல் பாணிக்ரஹணம்

வாய்நல்லார் நல்ல மறையோதி..ஸப்தபதியாகும்

அம்மிமிதிக்கக் கனா கண்டேன் தோழி..அம்மிமிதித்தல்

வரிசிலை வாண்முகத்து...பொரி இடுதல்

குங்குமப்பி பாடல்....மஞ்சள்நீர் தெளித்தல்

ஷைலஜா

November 12, 2006 9:58 PM
குமரன் (Kumaran) said...
ஷைலஜா. திருமணச்சடங்குகள் இந்த பாசுரங்களில் எப்படி அடுத்தடுத்து வருகிறது என்று மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். பல முறை இந்தப் பாசுரங்களைக் கேட்டு அனுபவித்திருந்தால் தான் இவ்வளவு தூரம் சொல்ல முடியும். :-)

November 17, 2006 6:26 AM
சாத்வீகன் said...
குமரன்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் படிக்க படிக்க அருமை.
கோதையின் தீதிலா தமிழை இவ்வண்ணம் பொருள் பதித்து தருதல் நன்று..

தொடர்க தங்கள் திருப்பணி..

November 20, 2006 2:34 PM

குமரன் (Kumaran) said...

Anonymous said...
Kumaran or anyone....

Please send me the thiruppavai, Thiruvempavai and Thirupalliyeluchi songs and meanings. Every year I used to listen Coimbatore radio station....Its been 10 years now.

Please help me

November 20, 2006 4:59 PM
யாரோ ஒருவன் said...
குமரன், இந்தப் பாடல் MP3 வடிவில் எங்காவது கிடைக்குமா?

November 21, 2006 6:30 AM
குமரன் (Kumaran) said...
நன்றி சாத்வீகன். தாங்களும் தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

November 21, 2006 6:46 AM
குமரன் (Kumaran) said...
திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களும் பொருளும் கேட்டிருக்கும் அன்பரே. நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பினால் இணையத்தில் கிடைக்கும் இவற்றைத் தேடி உங்களுக்கு அனுப்புகிறேன். என் மின்னஞ்சல் முகவரி என் ப்ரொபைலில் இருக்கிறது.

November 21, 2006 6:48 AM
குமரன் (Kumaran) said...
'யாரோ ஒருவன்' ஐயா. இணையத்தில் எம்பி3 வடிவில் கிடைக்கலாம். தேடிப் பார்க்கிறேன். பாடலைக் கேட்பது மட்டும் போதுமென்றால் www.musicindiaonline.com சென்று பாருங்கள். கிடைக்கும்.

November 21, 2006 6:51 AM

குமரன் (Kumaran) said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
hmmmmm...2005 post! 2005 post! 2005 post!
evlo nalla irukku! re-wind paNNa mudiyaatha pathivulagathai? :)

May 04, 2010 4:44 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
intha kanavu nanavaana vitham pathi cheekiram eppo ezhutha pOReenga?
kaathirunthu kaathirunthu kaalangaL poguthadi!

ava, antha paambaNai mela melliya kaal vachi ERuvathum, kOthaiyum-ranga mannaarum chernthu varuvathum ellam eppo cholla pOReengaLo?

May 04, 2010 4:52 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ithu kanaa kaNden nu mudichaalum, kanave illa! kalyaaNam thaan! athaan aduthu adutha nachiar tirumozhi-la, shez preparing to embrace him (karupporam naaRumo kamalam naaRumo) and alos preparing to know abt puguntha veedu (vrinthavanathe kaNdOme) :)

But cheekiram, poNNai puguntha veetil kONdu poyi vidunga kumaran aNNa! ore thavippaa irukku :)

May 04, 2010 4:53 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
Ragavan vERa appave vathuvai-nu ellam cholli thiruthi irukkaanaa? hurrah! :)

naan thinamum inga vanthu meyalaam nu irukken! mEivaan paranthana kaaN, mikkuLLa piLLaigaLum :)
pazhaiya pul is tastier than new grass :)

May 04, 2010 5:01 PM

குமரன் (Kumaran) said...

ஜெகன் said...
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத - இந்த வரியில் வரிசங்கமா அல்லது
வரிச்சங்குமா ? என எனக்கு சந்தேகம். ஏன் எனில் வரிச்சங்கு என்றுதான்
கூறுகிறார்கள். பின் ஏன் வரிசங்கம் என்று பாடலில் உள்ளது. விளக்கம் ப்ளீஸ். நன்றி.

July 15, 2011 12:32 AM
குமரன் (Kumaran) said...
ஜெகன்,

சங்கை சங்கு என்றும் சங்கம் என்றும் இரண்டு விதமாகவும் இலக்கியத்தில் அழைத்துள்ளார்கள். தமிழ்ச்சங்கம் என்பதில் இருக்கும் சங்கம் என்ற பொருளை இங்கே எடுத்துக் கொள்ளக் கூடாது. வரிச்சங்கம் என்று சொல்லப்படுவது சங்கு தான்.

July 15, 2011 10:10 AM
Jagan said...
Mikka Nandri Kumaran

July 22, 2011 9:32 AM
The Thinker said...
மிக அருமையான, உயிருள்ள கவிதை! அவள் கண்ட கனாவை மனதிற்குள் கற்பனை செய்து பார்க்க முடிகிரது. அதற்கு எளிமையான உங்கள் தெளிவுரை ஒரு காரணம், மிக்க நன்றி நண்பரே! மெச்சினேம் :)

August 20, 2011 8:31 AM
குமரன் (Kumaran) said...
நன்றி The Thinker.

August 20, 2011 9:49 AM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திரு. ரவிசங்கர் கண்ணபிரான்
அடிக்கடி வந்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.
பெரியாழ்வார் பற்றிய 'விஷ்ணு சித்தன்' பதிவைப் பார்த்தீர்களா?
இல்லையென்றால் 'view my complete profile'ஐ தட்டுங்கள்//

:))
தட்டி விட்டேன்

அப்போதெல்லாம், என்னைத் திரு என்று மொழிஞ்சமைக்கு மிக்க நன்றி:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
ஏரகன் முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(1)

நாளைத் திருமணம் அதற்கென்றே நாளிட்டு
பாளைக் கமுகுடன் பசும் வாழைப்-பந்தல் கீழ்
வேளைப் போதினில் வேல்முருகன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்!...(2)

தோணியன் ஈசரோடு தேவர் குழாம் எல்லாம்
வேணியன் எந்தை வேங்கடவன் மகள்பேசி
காணியல் கூறைச் சீலையொடு மாலையும்
வாணியள் சூட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(3)

நால்திசை நாரங்கள் கொணர்ந்து நனிநல்கி
வேல்முறைச் சான்றோர் வேதமாம் தமிழ்ஓதி
சேல்விழி் மைந்தன் சேந்தனோடு என்தன்னை
ஆல்மரக் காப்பிடக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(4)

கதிரொளித் தீபம் வரிசைகள் பலவேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையின் சங்கத் தமிழ்வேள் மண்டபத்துள்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(5)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மத்தளம் கொட்ட நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம் மாதவிப் பந்தல் கீழ்
மைத்துனன் முருகன் திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(6)

வாய்நல்லார் மாறன் தமிழ்ஓதி மந்திரத்தால்
சேய்வேண்டி நாணல் படுத்துப் பரிதிவைத்து
சீர்வளர் மயில்அன்னான் மயிலாள் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக்கண்டேன் - தோழீ நான்! ...(7)

இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில் முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்டக் கனாக்கண்டேன் - தோழீ நான்! ...(8)

வரிசிலை மன்மதன் அண்ணன்மார் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
கரிமுகத்து இளையோன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் - தோழீ நான்! ...(9)

குங்குமம் இட்டு குளிர்ச் சாந்தம் எனக்கிட்டு
மங்கலக் குடதீபம் கையேந்தி மனைக்குள்ளே
அங்கவனோடு நான் உடன்சென்று இல்வாழ
முங்கினேன் முருகொடு முதலிரவில் - தோழீ நான்! ...(10)
---------

கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தலின் பேதை சொல்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் முருகனின் சேவடிச் சேர்வரே!

Information said...

மிக்க நன்று.