Tuesday, April 29, 2008

உயிரெழுத்துகள் எத்தனை?

அண்மையில் என் மகளுக்குத் தமிழ் எழுத்துகள் சொல்லிக் கொடுக்கும் போது இந்த கேள்வி வந்தது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தமிழில் உயிரெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

உடுக்கை இழந்தவன் கை - 13 (பாரி வள்ளலின் கதை)

பாரி வள்ளல் மூவேந்தர்களின் சதியால் கொல்லப்பட்ட பின்னர் பாரியின் நண்பரான புலவர் கபிலரும் பாரி மகளிரான அங்கவையும் சங்கவையும் பறம்பு நாட்டிலிருந்து கிளம்பி பறம்பு நாட்டின் வடக்கிலிருக்கும் வேளிர்களால் ஆளப்படும் நாடுகளுக்குச் சென்றார்கள். ஒவ்வொரு நாடாகச் சென்று பாரி மகளிரை அறிமுகம் செய்து அந்த நாட்டை ஆளும் வேளிரிடம் அந்த மகளை மணம் செய்து கொள்ள கபிலர் வேண்டினார். மூவேந்தர்களுக்குப் பெண் தர மறுத்து அதனால் உயிர் இழந்த பாரியின் மக்களை மணம் கொண்டு மூவேந்தர்களின் சினத்திற்கு ஆளாக அந்த வேளிர் அரசர்கள் விரும்பவில்லை. சிலர் நேரடியாகவும் பலர் மறைமுகமாகவும் தங்கள் இயலாமையை கபிலரிடம் சொல்லிவிட்டனர். அப்படி ஒவ்வொரு நாடாக வரும் போது கபிலரும் பாரி மகளிரும் விச்சிக்கோ என்னும் வேளிர் அரசன் ஆளும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அரசவைக்கு அங்கவையையும் சங்கவையையும் அழைத்துக் கொண்டு வந்து அரசனுக்கு அறிமுகப்படுத்துகிறார் கபிலர்.

***

"மன்னவா. உன்னுடைய மலை மிகவும் குளிர்ச்சி உடைய மலை. மிகவும் உயர்ந்த மலை. நீ தாங்கிய வேலோ பகைவர்களின் ஊனை உண்டு நெருப்பு போல் ஒளி வீசும் தன்மை கொண்டது. பெரிய யானைகளை உடையவன் நீ. விச்சிக்கோவே. இந்தப் பெண்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள். நாத்தழும்பேறும் அளவிற்குப் பாடும் பாணர்களுக்குப் பல பரிசில்களைக் கொடுக்கும் வள்ளல்கள் உண்டு. அப்படி பாடாமல் போனாலும் நலிந்து நிற்கிறதே என்று முல்லைக்குத் தேர் தந்தானே பாரி அவனுடைய மக்கள் இவர்கள். நான் ஒரு புலவன்; அந்தணன். யான் உனக்குத் தர நீ இவர்களை மணம் முடித்துக் கொள்வாய். அவர்கள் தந்தை விரும்பியது போல் நீ வீரம் மிகுந்த வேளிர் குலத்தில் உதித்தவன். அதனால் இந்தப் பெண்களை மணக்கத் தகுதியுடையவன்.

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந்துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
மழை மிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடுவேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே
இவரே பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே
"

விச்சிக்கோன் கபிலரின் பாடலையும் வேண்டுதலையும் கேட்டு தன் அவையோருடன் கலந்து பின்னர் பாரி மகளிரை மணக்க மறுத்துவிட்டான். கபிலரும் மன வருத்தத்துடன் இருங்கோவேளின் ஊருக்குச் சென்று அவனிடம் பேசுகின்றார்.

"வாருங்கள் புலவரே. தங்களைப் பார்த்தால் பாணராகத் தெரியவில்லை. இந்தப் பெண்களைப் பார்த்தாலும் விறலியர்களாகத் தெரியவில்லை. தாங்கள் யார்? இங்கே வந்த காரியம் என்ன?"

"மன்னவா. இவர்கள் யார் என்று கேட்கிறாய். சொல்கிறேன் கேள். இரந்து வந்தவர்களுக்கு ஊர்களையே பரிசாகக் கொடுத்தவனும் வாடி நின்ற முல்லைக்கொடிக்குத் தன் தேரைத் தந்தவனும் என்றும் அழியாத புகழை உடையவனும் ஆன பறம்பு நாட்டரசன் பாரியின் மக்கள் இவர்கள். நான் அவர்களின் தந்தையின் தோழன். அதனால் அவர்கள் என் மக்களும் ஆவர். நான் ஒரு அந்தணப் புலவன். என் பெயர் கபிலன்"

"பறம்பு வேந்தர் பாரியின் மக்களா? மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இங்கே வந்ததன் நோக்கம் என்ன கபிலரே?"

"மன்னவா. நாற்பத்தொன்பது தலைமுறைகளுக்கு முன் துவரைப்பதியை ஆண்டு பெரும் புகழ் கொண்ட வேளிர்களின் வழி வந்தவனே. துவரையை ஆண்ட மாலின் வழி வந்த நீயும் புலியைக் கொன்று புலிகடிமால் என்று பெயர் பெற்றாய். வேளிர் குலத்திற்கு ஏற்பத் தேடி வரும் பாணர்களுக்கு எல்லாம் பரிசில்களை வாரி வழங்கும் வள்ளலே. இருங்கோவேளே. இந்தப் பெண்களை நான் இங்கே அழைத்து வந்த காரணத்தைக் கூறுகிறேன் கேள். இவர்கள் தந்தை பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்துதித்தவர்க்கே இந்தப் பெண்களை மணம் முடித்துத் தர விரும்பினான். அவன் விரும்பிய படி பெரும் புகழ் கொண்ட வேளிர் குலத்தில் பிறந்த உனக்கு நான் தர இவர்களை நீ மணந்து கொள்ள வேண்டும்.

இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊர் உடன் இரவலர்க்கு அருளி தேர் உடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமா பாரி மகளிர் யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா வீகைத் துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போரண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங்கோவே
ஆண்கடன் உடைமையில் பாண் கடனாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே
"

"ஐயனே. தாங்கள் சொல்வதெல்லாம் வியப்பாக இருக்கிறது. பாரி வள்ளல் வேந்தர்கள் சதியால் இறந்ததை அறிந்துள்ளேன். பாரி மன்னர் பெண் தர மறுத்ததால் படை எடுத்து பழி தீர்த்தனர் வேந்தர்கள் என்றும் அறிந்துள்ளேன். அந்தப் பெண்களை இன்று நீங்கள் என் அவைக்கு அழைத்து வந்திருப்பதைக் கண்டு என் மனம் துணுக்குறுகிறது. தங்களுக்குத் தகுந்த பதிலை என் அவை முன்னவர்களிடம் கலந்து கொண்டு தருகிறேன். அது வரை தாங்கள் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்"

***

பாடற்குறிப்புகள்:

இரு பாடல்களும் பாடாண் திணையிலும் (பாடப்படுபவரது பெருமைகளைக் கூறுதல்) பரிசில் துறையிலும் (பரிசை வேண்டிப் பாடுவது) அமைந்திருக்கின்றன.

1. பனிவரை நிவந்த என்று தொடங்கும் பாடல் கபிலர் விச்சிக்கோ வேளைப் பாடியது. புறநானூறு 200வது பாடல்.

பொழிப்புரை: குளிர்ந்த மலையின் மீது ஓங்கி வளர்ந்த பச்சை இலையையுடைய பலா மரத்தினது கனியைக் கவர்ந்து உண்ட கரிய விரலையுடைய கடுவன் (ஆண் குரங்கு) சிவந்த வாயையுடைய தன் மந்தியொடு (பெண் குரங்கு) விற்றிருக்கும். பார்க்கும் போது மலையின் உச்சி வெகு தூரத்தில் விளங்கும். மேகங்களும் இந்த மலையின் உச்சியை அறியாமல் மலையின் இடையில் தவழ்ந்து கொண்டிருக்கும் (மலை அவ்வளவு உயரமானது). ஆனால் அந்த மலை உச்சியில் மூங்கில்கள் முழைத்துப் பரவியிருக்கும். அப்படிப்பட்ட மலையை உடையவனே. பகைவர்களின் உடலைக் கிழித்ததால் பெற்ற நிணத்தை உண்டு அதனால் செருக்கிய நெருப்பினைப் போல் ஒளிவீசிச் சுடும் தலையையுடைய வேலை உடையவன் நீ. போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு கனல் வீசும் கடிய கண்களையுடைய யானைகளைக் கொண்டவன் நீ. ஒளி வீசும் மாணிக்கங்களைக் கொண்ட வளைந்த அணிகலன்களை உடைய விச்சிக்கோவே! இவர்கள், எப்போதும் பூக்கள் பூத்துக் குலுங்கும் முல்லைக் கொடி நாத்தழும்பேறும் படி பாடாது ஆயினும் ஒலிக்கும் மணிகளையுடைய பெரிய தேரினை கொழுகொம்பாகக் கொள்க என்று கொடுத்த எல்லாத் திசைகளிலும் பரந்து ஓங்கி நிற்கும் புகழை உடைய பாரி வள்ளலின் மகளிர். நான் பரிசினை வேண்டி வந்திருக்கும் பரிசிலன். அந்தணனும் ஆவேன். நீயோ தகுந்த போர் முறைகளால் பகைவரை தாழச் செய்யும் வாளினை உடையவன். உனக்கு நான் இவர்களைத் தர நீ மணம் கொள்வாய். சினத்தால் போர் செய்து அடங்காத பகையரசர்களை அடக்கும், அளவில்லாத விளைச்சலைத் தரும் நாட்டையுடைய தலைவனே!

கடுவன் மந்தியோடு மகிழ்ந்திருப்பதைப் போல் நீ இந்தப் பெண்களுடன் மகிழ்ந்து இருக்கலாம் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

முகம் என்ற சொல் வடசொல் என்றும் தமிழில் அந்தச் சொல் இல்லை என்றும் சிலர் கூறக் கேட்டுள்ளேன். இங்கே செம்முகம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. அதனால் இது சங்ககாலத்திலேயே இருந்த தமிழ்ச்சொல் என்று தெரிகிறது.

2. இவர் யார் என்குவை என்று தொடங்கும் பாடல் கபிலர் இருங்கோவேளைப் பாடியது. புறநானூறு 201வது பாடல்.

பொழிப்புரை: இவர் யார் என்று வினவுவாய் ஆயின், இவர்கள், இரப்பவர்களுக்கு ஊர்களையே உடனே அருளி தேரினை முல்லைக்கு உடனே தந்து என்றும் மறைந்து போகாத நல்ல புகழை உடைய ஒலிக்கும் மணிகளைக் கழுத்தில் அணிந்த யானைகளை உடைய பறம்பு நாட்டின் தலைவனும் நெடியவனும் ஆன பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன்; அதனால் இவர்கள் என் மகளிரும் ஆவர். அந்தணனும் புலவனும் ஆகிய நான் இவர்களைக் கொண்டு வந்தேன். நீயோ வடதிசையில் ஒரு முனிவருடைய வேள்வித்தீயில் தோன்றி உயர்ந்த நெடிய செம்பினால் ஆனது போன்ற மதிலை உடைய துவரைப் பதியை என்றும் குறையாத ஈகைக் குணத்துடன் ஆண்டவர்களின் வழியில் நான்பத்தொன்பது தலைமுறைக்குப் பின்னர் வந்திருக்கும் வேளிர்களில் சிறந்த வேளே! வெற்றியைத் தரும் போரினைச் செய்யும் அண்ணலே! தார் என்னும் மலர் மாலையை அணிந்த யானைகளை உடைய பெரிய இருங்கோவே! உன்னுடைய ஆண்மைக்கு ஏற்ற கடமையாக பாணர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எப்போதும் செய்து, தழைந்த மாலைகளைச் சூடிய புலிகடிமாலே! நான் தர இவர்களை மணம் கொள்வாய்! வானத்தால் கவிழப்பட்டும் பெரும்கடல்களால் ஆடையைப் போல் சூழப்பட்டும் இருக்கும் இந்த உலகத்தில் அருமையான வலிமையையுடைய பொன்விளைக்கும் மிக உயர்ந்த மலைக்குத் தலைவனே1 வெற்றி வேலுடன் பகைவர்கள் நடுங்கும் படையைக் கொண்ட கேடில்லாத நாட்டினை உடைய தலைவனே!

இரு பாடல்களிலும் 'நான் புலவன். பரிசிலன். அந்தணன்' என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் கபிலர். பெண் கேட்டு வரும் போது அதனை ஏற்றுப் பெண் கொடுப்பது முறையாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. அந்த முறையை மீறி இப்போது தானே வந்து பெண்களைத் தருகிறேன்; பெற்றுக் கொள் என்று வேண்டி நிற்பதால் இது பரிசில் துறை ஆயிற்று. அப்படிப் பரிசில் வேண்டுவதால் தன்னைப் பரிசிலன் என்றும் புலவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வேறெங்கும் அந்தணன் என்று சொல்லாமல் 'பெண் கொடுக்கிறேன். கொண்மதி' என்னும் போது மட்டும் தன்னை அந்தணன் என்று சொல்வதைப் பார்த்தால் 'அந்தணர் தர மன்னர் பெறுதல்' முறையுடையது என்ற குறிப்பைத் தருகிறதோ என்று தோன்றுகிறது. இங்கே அந்தணன் என்பது குணத்தால் வந்ததா பிறப்பால் வந்ததா என்ற குறிப்பு இல்லை. பலரும் பிறப்பால் வந்த பெயர் என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் துவரைப்பதி கருநாடகத்திலிருக்கும் துவாரசமுத்திரம் என்று சிலரும் துவாரகை என்று சிலரும் பொருள் கொள்கிறார்கள். தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் 'துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதிணென்மரையும் பதிணென்குடி வேளிர் உள்ளிட்டோரையும் கொண்டு போந்து' என்றும் 'மலையமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதிணென்வகைக் குடி பிறந்த வேளிர்' என்றும் சொல்லுபவை இந்த இரு வகைக் கருத்துக்கும் துணை நிற்கிறது. துவரைப் பதி துவாரகை தான் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் சொல்லும் 'நிலங்கடந்த நெடுமுடியண்ணல்' வாமன திரிவிக்கிரம அவதாரத்தில் உலகை அளந்தவனாகக் கூறப்படும் மாயோனாகிய கண்ணன் என்று பொருள் கொள்கிறார்கள். கண்ணனின் வழி வந்தவர்களே வேளிர்கள் என்ற கருத்து அவர்களுடையது. துவரைப்பதி துவாரசமுத்திரம் என்று எண்ணுபவர்கள் நச்சினார்க்கினியர் கூறும் 'நிலம் கடந்தவர்' அகத்தியர் என்று பொருள் கொள்கிறார்கள். வடக்கிலிருந்து அகத்தியரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் வேளிர்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள். வேளிர் குடியினர் வேந்தர் குடியினரை விட காலத்தால் மூத்தவர்கள் என்ற செய்தியைக் கொண்டு பார்க்கும் போது இந்த இருவிதமான கருத்தும் சுவையாக இருக்கின்றன.

Sunday, April 27, 2008

கிழவன்

யாரு யாரு இந்தக் கிழவன் யாரு?
நாரு நாரு இது தேங்கா நாரு!

இந்தப் பாட்டு தெரியாதவர் யார்? குரு சிஷ்யன் படத்தில் கிழவன் வேடத்தில் வருகின்ற ரஜினியைப் பார்த்து பிரபு பாடுகின்ற பாடல். கிழவனென்றால் அத்தனை இளப்பம்! அதனால்தான் பாருங்கள், பாட்டின் முதல் வரியில் கிழவர் என்று கூடச் சொல்லாமல் கிழவன் என்று ஒருமையில் அழைக்கிறார் பிரபு. இரண்டாவது வரிக்கு வருவோம். தேங்கா நாரு! இது அந்தக் கிழவனின் வயதுக் குறிப்பு. வயது முதிர்ந்த காரணத்தால் வளர்ந்த தாடி வெளிரிப் போய் வெண்ணிறமாய் இருக்கிறது. அதையும் கிண்டலடிக்கிறார் பிரபு.

நல்ல வேளை நக்கீரர் இங்கே இல்லை. இருந்திருந்தால் பிரபுவை ஒரு கை என்ன, இரண்டு கைகளும் பார்த்திருப்பார்? சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்? (இதுவும் ரஜினி படப் பாட்டுதானே!) கிழவனுக்குத் தாடி இருக்கலாம்! அவனுக்கு வெண்ணிறத் தாடி இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்பார் நக்கீரர். (நாகேஷ் திருவிளையாடல் படத்தில் சொன்னது நினைவிற்கு வருகிறது. உம்மைப் போல்...இல்லை நீர் ஒருவரே போதும். உலகம் உருப்படும்.) நக்கீரர் நம்மையெல்லாம் குழப்பவில்லை. அவர் சொல்ல வருவது என்னவென்றால், கிழவன் என்பவன் வயது முதிர்ந்தவனாக இருக்க வேண்டியதில்லை!

குழப்பமில்லை என்று கூறிவிட்டு குழப்பினால் எப்படி? நக்கீரர் சங்கப் புலவர். அதிலும் செண்பகப் பாண்டியனின் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலமைப் புலவர். ஈசருடன் நேருக்கு நேர் வாதிட்டு வென்றவர். அவர் தவறாகச் சொல்வாரா? எதனால் அப்படிச் சொல்கிறார் என்று நாமும் சற்று சிந்திக்க வேண்டும். கிழவன் என்ற சொல்லுக்கு அன்றைக்குப் பொருளே வேறு. இன்றைக்கு அதன் பொருள் வேறு. அன்றைய பொருளுக்கு இன்றைக்கு ஒரு சொல் இருக்கிறது. அது தலைவன். இன்றைக்குத் தலைவர்கள் எல்லோரும் கிழவர்களாய்த்தானே இருக்கிறார்கள். அப்படி வந்ததுதான் கிழவன் என்ற சொல்லுக்கு முதியவர் என்ற பொருள்.

இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர்ச் சோலைமலை கிழவோனே!
இந்த இரண்டு அடிகளும் நக்கீரரின் திருமுருகாற்றுப்படையின் கடைசி இரண்டு அடிகள். இதற்கு நான் பொருள் சொல்லவும் வேண்டுமோ?

வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு திருத்தலத்தில் இறைவனுக்குக் கிழவன் என்றும் இறைவிக்குக் கிழவி என்றும் பெயர். கோயில்களில் வடமொழி நுழைந்த காலத்தில் பெயர்களை முறையே விருத்தகிரீசுவரன் என்றும் விருத்தகிரீசுவரி என்றும் மாற்றி விட்டார்கள். சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் (அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர்) அந்தக் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பெயர்களைப் பார்த்துவிட்டு, கிழவனையையும் கிழவியையும் பாடமாட்டேன் என்று கோவித்துக் கொண்டு போய்விட்டாராம். தேவாரப் பாடல் பெற்ற தலம் என்ற பெயருக்காக இறைவனுக்கும் இறைவிக்கும் முறையே பாலகிரீசுவரர் என்றும் பாலாம்பிகை என்றும் புதுப் பெயர்களை சூட்டினார்களாம். அதன் பிறகு அந்த குரவர் அந்தக் கோயிலுக்குத் தேவாரம் பாடினாராம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, April 24, 2008

Intelligence: அறிவாற்றல், அறிவாண்மை

ஓகை நடராஜன் அவர்கள் தற்போது இளைஞர்கள் நடுவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை இந்த 'சொல் ஒரு சொல்' வலைப்பூவில் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அது எனக்கும் சரியாகத் தோன்றியது. அதனால் தமிழில் கலந்திருக்கும் பிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைச் சொல்லும் அதே நேரத்தில் தமிழாகவே பாவிக்கப்பட்டு தற்போது புழங்கும் ஆங்கிலச் சொற்களில் எளிதாகத் தமிழ்ப்படுத்த முடியாத (தமிழ்ச்சொல் என்னவென்று உடனே நினைவிற்கு வராத) சில சொற்களையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.

இன்டெலிஜென்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவாற்றல், அறிவாண்மை என்ற சொற்களைப் புழங்கலாம் என்று எண்ணுகிறேன். என்ன சொல்கிறீர்கள்? வேறு ஏதாவது சொல் இன்னும் பொருத்தமாக இருக்குமா? அப்படியானால் அதனையும் சொல்லுங்கள்.

Wednesday, April 23, 2008

Zero = சுழி

சுழி என்ற சொல்லை zero என்ற சொல்லுக்கு பரிந்துரைக்கிறேன்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். பிள்ளையார் சுழியுடன் எழுத்தைத் தொடங்குவது பலரின் மரபு. ஆனால் எண்களோ சுழியிலிருந்தே தொடங்குகின்றன. zero, சைபர், பூஜ்ஜியம், சூன்யம் என்று பல பெயர்களில் நாம் இந்த எண்ணைக் கூறுகிறோம். இந்த எண்ணுக்கு சுழி என்கிற அழகான பெயர் இருக்கிறது. சுழி என்ற சொல்லை இவ்வெண்ணுக்குப் பதிலாக எழுதுவதையோ அல்லது பேசுவதையோ நாம் இன்னும் தொடங்கவில்லை. பல தமிழறிஞர்களாலும், விக்கியிலும், அகராதிகளிலும் zero என்பதற்கு சுழி அல்லது சுழியம் என்றே குறிக்கப் பெற்றிருக்கிறது. இராம கி ஐயா அவர்கள் பல பதிவுகளில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு சுட்டி. நான் என்னுடைய தனித்தமிழ் பேசும் ஒரு நண்பருடனும் மேலும் பல நேரங்களிலும் இச்சொல்லையே பாவிக்கிறேன்.

சரியாகப் படிக்காவிட்டால் ஆசிரியர் சுழி மதிப்பெண் கொடுப்பார் என்பதை 'ஆசிரியர் சுழித்துவிடுவார்' என்று கூறுவர் பாமரர். இவ்வகையில் பாமரரிடம் இச்சொல் வினைச்சொல்லாகப் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் பொதுவாக இந்த எண்ணைச் சொல்வதற்கு சைபர் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். சிலர் இதைத் தமிழில் சொல்ல வேண்டும் என்று விரும்பி மிகுந்த சிரமத்துடன் பூஜ்ஜியம் என்று உரைப்பார்கள். முன்பே இப்பதிவுகளில் குறித்தாற்போல் கிரந்த எழுத்து உச்சரிப்பு தமிழர்க்கு அந்நியமானதென்பதால் பூஜ்ஜியத்தை பூச்சியம் என்றும் zero என்பதை ஜீரோ என்றும் சீரோ என்றும் அல்லது வடிவேலு வழக்கில் ச்சீரொ என்றும் பல்விதமாக உச்சரிப்பார்கள். ஆனால் சுழி என்பது எளிதும் சிறிதுமான சொல். இச்சொல் நேரடியாக அவ்வெண்ணின் வடிவத்தைக் குறிக்கிறது. ழகர உச்சரிப்பு சரியாக வராதவர்கள் சுலி என்று உச்சரித்தாலும் எனக்கு அது உடன்பாடே. ஏனெனில் சுலி என்றொரு தமிழ்ச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. குழப்பத்திற்கு வழியில்லை.

சுழி என்பதுடன் இந்த எண்ணை சுழியம் என்றும் சொல்லலாம். சுழியம் என்ற பெயரில் தலையில் அணியும் நகை ஒன்று உண்டு. சுழியம் என்றபெயரில் ஒரு திண்பண்டமும் உண்டு. இது சுழியன் என்றும் அழைக்கப்படும். தீப ஒளித்திருநாளில் பெரும்பாலான தமிழர் வீடுகளில் இத்திண்பண்டம் செய்யப்படும். இவற்றுடன் சுழி எண்ணையும் சிற்ப்பாகக் கூறவேண்டிய இடங்களில் சுழியம் என்று நாம் கூறத் தொடங்கலாம். காட்டாக வெப்பயியக்கவியலில் சுழியமென்றால் அது நேரடியாக absolute zeroவைக் குறிக்க வல்லது.

கருவிகளில் zero error எனப்படுவது சுழிப்பிழை என்று சிறப்பாக மொழியாக்கம் பெற்றிருக்கிறது. அமாவசையை நாம் சுழிப்பிறை என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். சுழிமதி என்றும் அழைக்கலாம். தொலைபேசி எண் அல்லது இது போன்ற எண்களைச் சொல்லுகையில் தமிழில் சொல்ல விரும்பும்போதோ அல்லது தமிழ் மட்டுமே அறிந்தோரிடம் சொல்லும் போதிலோ மற்ற எண்களை எளிதாகச் சொல்லிவிட்டு சுழி வரும்போது இடறுவது வழக்கம். இது போன்ற சுழல்களில் சுழி என்ற சொல் அழகாகப் பொருந்திவரும். நான் உணர்ந்து மகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் சொல்லிப் பாருங்கள். மகிழுங்கள்.

எல்லோரிடமும் எண்கள் இனி சுழியுடன் தொடங்கட்டுமாக!

எழுதியவர்: ஓகை நடராஜன்.

Tuesday, April 22, 2008

அன்பே அன்பே கொல்லாதே!

எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது. திரைப்படத்தில் இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் மிக நன்றாக இருக்கும்.

திரைப்படம்: ஜீன்ஸ்
வெளிவந்த வருடம்: 1998
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்கள்: அனுராதா ச்ரிராம், ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே (அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி (அன்பே)



கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்


மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)

Friday, April 18, 2008

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ?

தமிழ்மணம் சூடா இருக்கு; சூடா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. அந்த சூடு தணிக்க என் பங்காக:

:-)

எந்த மனநிலையில் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டால் மனம் அமைதி ஆகிவிடுகிறது. சிறந்த பாடல் வரிகள். நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

திரைப்படம்: என் சுவாசக் காற்றே
வெளிவந்த வருடம்: 1999
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்: எம்.ஜி. ச்ரிகுமார்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபடபட தடதடதட சடசடசடவெனச் சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ (சின்னச் சின்ன)

சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
இழுத்துப் பிடித்து விண்ணில் செல்வேனோ (சின்னச் சின்ன)




சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது (சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்
கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ (3)

(சக்கரவாகமோ)