Sunday, July 13, 2008

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

எயிலது அட்டது நீறு - திரிபுராசுரர்களின் முப்புரம் எனும் மூன்று கோட்டைகள் சிரித்தெரி கொளுத்தியது திருநீறு.

இருமைக்கும் உள்ளது நீறு - இம்மை மறுமை எனும் இருமைக்கும் உறுதுணையாக உண்மையாக உள்ளது திருநீறு.

பயிலப்படுவது நீறு - கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற நிலையில் கல்வி கரையின்றி இருக்கும் போது எதனைக் கற்றால் எல்லாவற்றையும் கற்றதாகுமோ அப்படிப்பட்டது திருநீறு.

பாக்கியமாவது நீறு - இம்மைக்கும் மறுமைக்கும் நல்வினைப்பயனாவது திருநீறு.

துயிலைத் தடுப்பது நீறு - அறியாமையையும் அந்தகன் கைப் பாசத்தால் வரும் அருந்துயிலையும் தடுப்பது திருநீறு.

சுத்தமதாவது நீறு - அணிபவர்களையும் நினைப்பவர்களையும் பேசுபவர்களையும் சுத்தம் ஆக்கும் சுத்தங்களில் சுத்தம் அதாவது திருநீறு.

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே - கூர்மையான ஒளிவீசும் திருசூலத்தை ஏந்திய திருவாலவாயான் திருநீறே!

Friday, July 11, 2008

அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்


பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே

நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்த்தோன் - நீண்ட அழகிய இதழ்களைக் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் மென்மை மிகுந்த அன்னப் பறவையை கொடியாக உடைய பிரம்ம தேவனின்

செந்நாவும் - செம்மையான திருநாவையும்

அகமும் - உள்ளத்தையும்

வெள்ளைக் கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே - வெள்ளைத் தாமரையால் செய்த சிம்மாசனமாகக் கொண்டு வீற்றிருந்தாய் சகலகலாவல்லியாகிய கலைவாணியன்னையே!

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் - பஞ்சினைப் போல் இனிமைதரும் மென்மையான உன் திருவடித் தாமரைகள்

என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? - என் நெஞ்சமாகிய நீர்நிலையில் மலராதது என்ன காரணத்தினால்?

***********

அன்னப் பறவை மென்மையானது. தூய்மையானது. அசுத்தங்களைக் கண்டு அஞ்சுவது. அதனால் அன்னக் கொடியை அஞ்சத் துவசம் என்கிறார். துவசம் என்பது த்வஜம் என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம்.

அன்னை கலைவாணி பிரம்ம தேவனின் நாவிலும் மனத்திலும் தங்கியுள்ளாள் என்பது ஐதிகம். மும்மூர்த்திகளும் தம் தம் தேவியரை தம் உடம்பில் ஒரு பகுதியில் வைத்திருக்கிறார்கள். பிரம்மதேவன் கலைமகளை நாவிலும், நாராயணன் அலைமகளை நெஞ்சிலும், சிவபெருமான் மலைமகளை உடலின் இடப்புறத்திலும் வைத்திருக்கிறார்கள்.

***

11 ஜூலை 2008 அன்று சேர்க்கப்பட்டது:

த்வஜன் என்ற வடசொல் துவசம் ஆனது போல் ஹம்ஸம் என்ற வடசொல் அம்சம் ஆகி இங்கே அஞ்சம் ஆகியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆகையினால் அஞ்சத்துவசம் என்பது ஹம்ஸத்வஜம் என்ற வடசொல்லின் தமிழ்வடிவமே என்று தோன்றுகிறது.

பஞ்சைப் போல் மெல்லிய தாமரைப் பாதங்கள் என் நெஞ்சத்தில் மலரக் கூடாதா என்று கேட்கும் போது 'உன் நெஞ்சம் கல்லைப் போல் இருக்கின்றதே - என் பஞ்சு மலர்ப்பாதங்கள் நோகுமே' என்று அன்னை சொல்லிவிட்டால்? அதனால் தான் அன்பினால் உருகி நீர்நிலையைப் போல் ஆகிவிட்டது அம்மா என் நெஞ்சம் என்று குறிப்பதைப் போல் நெஞ்சத்தடத்தில் என்கிறார் போலும் குமரகுருபரர்.

Thursday, July 10, 2008

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு


அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

அருத்தம் அதாவது நீறு - நீங்காத செல்வம் ஆவது திருநீறு

அவலம் அறுப்பது நீறு - துயரங்களை நீக்குவது திருநீறு

வருத்தம் தணிப்பது நீறு - மன வருத்தங்களை எல்லாம் தணிப்பது திருநீறு

வானம் அளிப்பது நீறு - வானுலகத்தை தருவது திருநீறு

பொருத்தம் அதாவது நீறு - அணிபவர்களுக்கெல்லாம் பொருந்துவது திருநீறு

புண்ணியர் பூசும் வெண்ணீறு - புண்ணியம் செய்தவர்கள் அணியும் வெண்ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே - செல்வம் கொழிக்கும் மாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே.

***

நிலையில்லாச் செல்வங்களை வேண்டி நாம் அவனிடம் செல்லாமல் நிலைபேறான வைத்தமாநிதியான ஐயனையே வேண்டி செல்லும் படி நம்மைச் செய்வது திருநீறு. பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தருவதால் வேறு பொருட்செல்வமே தேவையில்லை; திருநீறே பொருள் என்னும் சொல்லுக்கே பொருளதாவது.

நிலையில்லாச் செல்வங்களைத் தேடி அலையும் போதும் துயரங்கள் வருகின்றன. அவை கிடைத்தாலோ அவற்றைக் காப்பாற்ற வேண்டுமே என்ற துயரம். அந்தச் செல்வங்கள் தொலைந்தாலோ பெருந்துயரம். இப்படிப்பட்டத் துயரங்களையெல்லாம் தீர்த்து பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தந்து அவலம் அறுப்பது திருநீறு.

நிலைபேறில்லாச் செல்வங்களால் வந்த மனவருத்தங்களும் வைத்தநிதி (வங்கிக்கணக்கு), பெண்டிர், மக்கள், குலம், கல்வி போன்றவற்றால் வந்த மனவருத்தங்களும் தணிப்பது திருநீறு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் பொய்யாமொழிக்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்து வானத்தையும் அளிப்பது திருநீறு.

உயர்வு தாழ்வு இன்றி எந்த வித வேறுபாடும் இன்றி யார் அணிந்தாலும் பொருத்தமாய் இருப்பது திருநீறு.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப அவன் அருள் பெறும் புண்ணியம் செய்தவர்கள் அணிவது வெண்ணிறத் திருநீறு.

இப்படிப்பட்ட திருநீறு அணிந்து பெருஞ்செல்வத்தை அடைந்து திருமகள் அருள் நிறைந்த அடியவர்கள் வாழும் திருமாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே இப்பெருமைகளை உடையது.

Tuesday, July 08, 2008

வடநூல்கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே!


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் - எல்லோரும் பாடிப் பரவும் பாடல்களும், எல்லாத் துறைகளிலும் இயங்கும் கல்வியும்,

சொற்சுவைதோய் வாக்கும் - சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இனிமையுடன் வலிமை பொருந்தி நிற்கும் பேச்சுத்திறமையும்,

வடநூல்கடலும் - வடதிசையில் வாழ்ந்தவர் இயற்றிய கடல் போன்ற நூல்களும் (வடமொழியில் இருக்கும் கடல் போன்ற நூல்களும்),

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - இன்பத்தையும் அறிவையும் தேக்கி நிற்கும் செழுமையான தமிழ்ச் செல்வங்களான நூல்களும்,

பெருகப் பணித்தருள்வாய்! - எனக்கு கிடைத்து நின்று நிலைத்துப் பெருக நீ அருள் புரிவாய்!

தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

Monday, July 07, 2008

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு


பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே

பூச இனியது நீறு - நெற்றியிலும் உடலெங்கும் பூசுவதற்கு இனியது திருநீறு

புண்ணியம் ஆவது நீறு - நல்வினைப்பயன்களைத் தருவ்து திருநீறு

பேச இனியது நீறு - பெருமைகளை எடுத்துப் பேச இனிமையாக இருப்பது திருநீறு

பெரும் தவத்தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு - பெரும் தவம் செய்யும் அடியவர்களுக்கெல்லாம் அவர் தம் 'மற்றை நம் காமங்களைத்' தீர்ப்பது திருநீறு

அந்தமதாவது நீறு - இறுதி நிலையாவது திருநீறு

தேசம் புகழ்வது நீறு - ஊர் உலகமெல்லாம் புகழ்வது திருநீறு

திருவாலவாயான் திருநீறே - மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.

***

மிக எளிமையான பாடல்.

அதிகாலை எழுந்ததும் இறைவன் திருவடிகளைத் தொழுது நெற்றி மணக்கத் திருநீறு பூசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பூசி உணர்ந்தவர்களுக்குத் தெரியும் அதன் இனிமை. அந்த திருநீறை அணிந்து கொண்டு யார் முன்னால் சென்றாலும் அதனைப் பார்ப்பவர்களுக்கும் அதன் புனிதத்தால் நல்ல உணர்வுகள் தோன்றி நல்ல செயல்கள் செய்ய நல்ல தூண்டுதல் கிடைக்கிறது. நமக்கும் திருநீறு அணிந்ததால் உள்ளம் தூய்மை பெற்று நல்வினைகளில் ஈடுபாடு தோன்றுகிறது. அப்படி புண்ணியங்கள் ஆவது திருநீறு. இதன் பெருமைகளைப் பேசத் தொடங்கினால் கேட்பதற்கும் இனியதாக இருக்கிறது. பேசுவதற்கும் இனியதாக இருக்கிறது. திருநீறின் பெருமைகளே பெருமை. முற்பிறவித் தவத்தாலும் நம் முன்னோர் செய்த தவத்தாலும் நமக்குத் திருநீறு அணியும் எண்ணம் தோன்றி நம் ஆசைகளை அறுக்கிறது. ஐயன் வள்ளுவன் சொன்னதைப் போல் பற்றற்றானின் பற்றைப் பற்றி மற்ற பற்றுகளை விட அணி செய்கிறது திருநீறு. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று இறைவனை வேண்டத் தூண்டுகிறது திருநீறு. ஆதி பகவன் முதற்றே உலகு என்று எல்லோருக்கும் தெரியும். அந்தமும் அவனே என்று சொல்லாமல் சொல்லி நிற்பது திருநீறு. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் பொய்யாமொழிப் புலவர். ஊர் உலகம் தேசமெல்லாம் போற்றிப் புகழும் படி நிற்பது திருநீறு. இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே.

Thursday, July 03, 2008

இங்கேயும் ஒரு யசோதை

'நாலாயிரம் கற்போம்ன்னு எழுதத் தொடங்கினேன். ஆனா வாரத்துக்கு ஒரு பாசுரம் கூட எழுத முடியலையே. இன்னைக்காவது அடுத்த பாசுரத்தைப் பாக்கணும்'

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்


'பெரியாழ்வார் இந்தப் பாசுரத்துல என்ன சொல்றார்? படுக்க வச்சா தொட்டில் கிழிந்து போகிற மாதிரி உதைக்கிறான். எடுத்து வச்சிக்கலாம்ன்னா இடுப்பை முறிக்கிறான். நல்லா இறுக்கிக் கட்டிப் பிடிச்சா வயித்தில பாயுறான். இதை எல்லாம் தாங்குறதுக்கு எனக்கு பலம் இல்லை. அதனால நான் மெலிஞ்சு போனேன்னு யசோதை சொல்ற மாதிரி பாடியிருக்காரா?

இதெல்லாம் சின்ன குழந்தைங்க செய்றது தானே? இதைக் கூடவா ஒரு அம்மாவால தாங்க முடியாது. அதைப் போயி இன்னொருத்தர் கிட்ட முறையிடுவாங்களா? உண்மையிலேயே இதைத் தான் யசோதா சொல்றதா பெரியாழ்வார் எழுதியிருக்காரா? கண்ணா புரியலையே'

"என்ன பண்றீங்க? எப்பவும் தமிழ்மணம் தானா? குடும்பத்து மேல கொஞ்சம் கூட அக்கறையில்லையா?"

"இப்ப என்ன ஆச்சு? ஏன் திரும்பவும் இந்தப் பல்லவியைத் தொடங்குற?"

"பின்ன? பையனைப் பத்தி கொஞ்சமாவது கவலை இருக்கா?"

"அவனைப் பத்தி என்ன கவலை? அவன் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருக்கான்"

"ஆமாம். அவன் பாட்டுக்கு ஆடிக்கிட்டு தான் இருக்கான். நீங்க அவனோட கொஞ்சம் ஆடுனா என்ன?"

"என்ன சொல்ற நீ? என்னம்மோ நான் அவன் கூட விளையாட்றதே இல்லைங்கற மாதிரியில்ல சொல்ற?"

"அவனோட விளையாண்டா அவன் என்ன என்ன பண்றான்னு தெரியுமே. சொல்லுங்க அவன் என்ன என்ன பண்றான்?"

"அவன் பாட்டுக்கு அவன் விளையாடிக்கிட்டு இருக்கான். அவ்வளவு தானே?"

"அவ்வளவு தானா? எப்பப் பாரு காலை சுத்திக்கிட்டே இருக்கான். தூக்கி வச்சுக்கணுமாம். தூக்கி இடுப்புல வச்சிக்கிட்டாலோ இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் தாவிக் குதிக்கிறான். இடுப்பு முறிஞ்சிரும் போல இருக்கு"

"அதனால என்ன? குழந்தைங்கன்னா அப்படித் தான் இருப்பாங்க"

"படுக்குறதுன்னா அவன் கூடவே நாமளும் படுத்துக்கணும். பக்கத்துல படுத்திருக்கிறவங்களை உதைச்சு உதைச்சே வயிரு வலி வந்துறும்"

"இதெல்லாம் குழந்தைங்க செய்றது தானேம்மா. இதை எல்லாமா குறையா சொல்லுவாங்க?"

"இதெல்லாம் செய்யட்டுங்க. வேணாங்கலை. ஆனா ஒழுங்கா சாப்புடணுமே. ஒன்னுமே சாப்புடறதில்லை. அப்புறம் எப்படி உடம்புல பலம் இருக்கும். பலமே இல்லாம இப்படி எல்லாம் பண்றானேன்னு தான் கவலை. அவன் சாப்புட்றானா இல்லைன்னு கூட நீங்க பாக்குறதில்லை"

'ஓ இது தான் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேனுக்கு அருத்தமா? கண்ணனுக்கு மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன்னு புலம்புறாங்களா யசோதை. ம்'

Tuesday, July 01, 2008

கண்ணன் பாட்டு 100வது இடுகைக்கு திருமதி. நாகி நாராயணன் அவர்களின் வாழ்த்துகள்


திருமதி. நாகி நாராயணன் அவர்கள் ஒரு தேர்ந்த கருநாடக இன்னிசைப் பாடகி. இவர் இரவிசங்கர் கண்ணபிரான் எழுதிய பாடலை தனது தோழி திருவரங்கப்ரியா ஷைலஜா அவர்களுடன் இணைந்து பாடியதை இந்த இடுகையில் கேட்கலாம்.

இனி அவரது வாழ்த்துச்செய்தி:

அன்புள்ள திரு.கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களுக்கு, கண்ணன் பாட்டு
எண்ணிக்கை நூறு ஆனதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அதைத் தெரிவித்துக் கொள்ள ஒரு சிறு கவிதை முயற்சி !!!

கண்ணனின் அற்புத லீலைகளும் - மணி
வண்ணனின் திவ்யப் பண்களும்
கண்ணன் பாட்டுப் பதிவகத்தில்
எண்ணிக்கை நூறை எட்டியதில்
மண்ணெங்கும் பரவசமடைந்து
விண்ணை எட்டும் குரலில்
உண்மையாக உரைப்போம்
வாழ்க உம் பணி, வளர்க உங்கள் தொண்டு !!!!

- வாழ்த்துக்களுடன்,
நாகி நாராயணன்.