Thursday, July 12, 2007

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!


சிந்தாநதி அவர்கள் மனோன்மணீயம் காவியத்தில் திரு.சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பகுதியைத் தன் பதிவில் இட்டிருந்தார். அந்தப் பகுதியிருலிருந்து எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்றையும் கொடுத்திருந்தார். அந்தப் பகுதிக்குப் பொருள் உரைத்தால் நலமாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த சிறு முயற்சி.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டம் இதில்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே

நீர் ஆர்ப்பரிக்கும் கடலினை ஆடையாக உடுத்தியிருக்கும் நிலமடந்தைக்கு அழகு கொஞ்சும் பெருமைகள் எல்லால் ஆர்ப்பரிக்கும் வதனம் (முகம்) எனத் திகழ்கிறது பரத கண்டமாகிய இந்தியா. இதில் தக்காணம் (தென்னிந்தியா) அந்த முகத்தில் இருக்கும் அதன் அழகுற்கு ஏற்ற பிறை போல் வளைந்த நெற்றி. திராவிட நல் திருநாடு அந்த நெற்றியில் தரித்திருக்கும் நறுமணம் கமழும் பொட்டு (திலகம்). அந்த கஸ்தூரித் திலக வாசனை போல் அனைத்து உலகத்தாரும் இன்பம் அடைய எல்லாத் திசையும் புகழ் மணக்க என்றும் இருந்த, இருக்கும், இருக்கப் போகும் தமிழ்ப்பெண்ணே.

இந்தப் பகுதியில் உவமையணி நன்கு அமைந்திருக்கிறது.

உலகம் - கடலாடை சூட்டியிருக்கும் நிலமடந்தை
பரத கண்டம் - அந்த நிலமடந்தையின் வதனம்
தக்காணம் - அந்த வதனத்தில் இருக்கும் நெற்றி
திராவிட நாடு - அந்த நெற்றியில் சூட்டிய திலகம்
தமிழ் - அந்தத் திலகத்தின் நறுமணம்.

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும் அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சியாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்

இங்கும் உவமை அணி நன்கு அமைகிறது. எல்லா உயிர்களையும் உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் இறை எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது - அது போல் பல மொழிகளைத் தன்னுள் இருந்து படைத்தும் தமிழ் எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது. மற்ற மொழிகளைப் போல் அழிந்தொழியவில்லை.

கடல்குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே

கடலினைக் குடித்த குடமுனியாம் அகத்தியர் உன்னைப் படித்து உன் கரையைக் காண குருவினை நாடி உனக்கு வானத்தைத் தொடும் கடலை உவமையாகச் சொல்லுவது உனக்குப் புகழாகுமா? உன் புகழ் பெரும்புகழ். உப்புக்கடலைக் குடிக்கலாம்; ஆனால் தமிழ்க்கடலைக் குடிக்க முடியாது. அது வான் வரை உள்ளது என்கிறார்.

ஒரு பிழைக்கா அரனார் முன் உரை இழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

ஒரு சிறு பொருட்பிழைக்காக முன்பொரு நாள் சிவபெருமான் என்ன சொல்வது என்று தெரியாமல் நெற்றிக்கண்ணை விழிப்பார் என்றால் இறையான சிவனுக்கே அறிய அரியது உனது இலக்கணம் என்று சொல்லுவதும் அற்புதமா?

விழிப்பார் என்று உலக வழக்கில் இருக்கும் ஒரு சொல்லை சிலேடையாக இங்கே சொல்லியிருக்கிறார்; நெற்றிக்கண்ணை விழித்ததைக் குறிப்பால் உணர்த்தி.

சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே

என்றுமுள்ளன வேதங்கள் என்று சொல்கிறார்கள். அந்த நான்கு மறைகளை உடைய ஆரியம் தோன்றும் முன் உலகம் முழுதிலும் நீ இருந்தாய் என்றால் உன்னை முதுமொழி என்றும் அநாதி என்றும் சொல்லுவதும் வியப்போ?

வேகவதிக்கு எதிர் ஏற விட்டது ஒரு சிற்றேடு
காலநதி நினைக் கரவா காரணத்தின் அறிகுறியே

வேகவதியாம் வைகையில் வேற்று மொழியில் எழுதிய நூல்களையும் தமிழ்ப்பா எழுதிய ஒரு சிற்றேட்டையும் விட்ட போது நதியின் வேகத்திற்கு எதிராக கரை ஏறியது என்றால் அது காலம் எனும் நதி உன்னை மறைக்காமல் (காலவெள்ளத்தில் அழிக்காமல்) விட்ட காரணத்தின் ஒரு அறிகுறியே.

கடையூழி வரும் தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே

உலகங்கள் எல்லாம் அழிந்து யாருமே இல்லாத போது இறைவன் மட்டுமே தனிமையாக இருப்பான். அந்தத் தனிமையின் துணையாக இருக்க வேண்டியே திருச்சிற்றம்பலம் உடையாரான சிவபெருமான் உன் வாசகமாம் திருவாசகத்தில் ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்.

தக்க வழி விரிந்து இலகும் சங்கத்தார் சிறுபலகை
மிக்க நலம் சிறந்த உன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே

தக்க நூற்களுக்கு மட்டும் வழி தந்து விரிந்தும் சுருங்கியும் இருக்கும் மதுரைத் தமிழ்ச்சங்கப் பலகை மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம்.

வியஞ்சனம் - குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்

வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.

கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.

வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்

பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.

கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்

கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?

பத்துபாட்டு ஆதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம் இல் கற்பனையே

பத்துபாட்டு முதலிய நூற்களில் மனம் பற்றியவர்கள் எந்த வகையிலும் பொருள் இல்லாத இலக்கணம் இல்லாத கற்பனைகளைக் கூறும் நூற்களில் மனம் வைப்பார்களோ?

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி.

திருவள்ளுவர் செய்த திருக்குறளை குற்றம் இல்லாமல் நன்கு படித்து உணர்ந்து கொண்டவர்கள் மநு முதலிய ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் நூற்களை மனத்தில் கொள்ளுவார்களோ?

மனம் கரைத்து மலம் கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென்று உருவேற்றிக் கண் மூடிக் கதறுவரோ

மனத்தைக் கரைத்து நம் குற்றங்களை எல்லாம் நீக்கும் திருவாசகத்தில் ஆழ்ந்தவர்கள் கனபாடம் என்று சொல்லி வேதங்களையும் மந்திரங்களையும் உருவேற்றி கண் மூடிக் கதறுவார்களா?

கடம்பம் 4: அன்பே இலாதவர் செய்யும் கொடிய அவமதிப்பால்...

அன்பில்லாதவருடன் பழக வேண்டி வந்தால் எத்தனை துன்பம்? அன்பே இல்லாதவர் என்றால்? அவர் செய்யும் அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால்? அது பெருந்துன்பமே!





மதுரை நகராம் கடம்ப வனத்தில் வாழும் கடம்பவனவல்லி மீனாட்சி அம்மையைப் போற்றும் கடம்பவனவல்லி பதிகத்தில் வரும் பாடல்களில் ஒன்று இப்படி தொடங்குகின்றது.

அன்பே இலாதவர் செய்யும் கொடிய அவமதிப்பால்
துன்பே அடையும் மனத்தேனை ஆளத் தொடங்குவையோ
இன்பே செறி மதுராபுரி அன்பர் இதயமுற்றோய்
வன்பே சமை மணித்தீவக கடம்பவனவல்லியே (9ம் பாடல்)

அன்பு சிறிது கூட இல்லாதவர்கள் செய்யும் கொடிய அவமதிப்பால் துன்பங்களே அடையும் மனத்தை உடைய அடியேனை ஆளத் துவங்குவாயா? இன்பமே நிறைந்து நிற்கும் மதுரை வாழ் உன் அன்பராம் சொக்கரின் இதயத்தில் நின்றாய்! கடிய இதயமுள்ள மாணிக்க சிலையே! கடம்ப வன வல்லியே!

காணிக்கை வைத்து அமரேசர் வணங்கும் நின் கான்மலரை
பேணித் தொழுது நினைக்கவருள்செய் பெரியம்மையே
ஆணிப்பொன் வில்லி தனக்கு அமிழ்தே அகிலாண்டம் பெற்ற
மாணிக்கமே மணித்தீவக கடம்பவனவல்லியே (10ம் பாடல்)

காணிக்கை வைத்து தேவர் தலைவன் வணங்கும் உன் கால் மலரை என்றும் பற்றிப் பேணித் தொழுது நான் நினைக்க அருள் செய்வாய் பெரியம்மையே! ஆணிப்பொன்னால் செய்த வில்லையுடைய சொக்கர் தனக்கு அமிழ்தே! அகிலமெல்லாம் பெற்ற மாணிக்கமே! மாணிக்கத் திருமேனி கொண்டவளே! கடம்பவனவல்லியே!

கடம்பவனவல்லி பதிகத்தின் மற்ற பாடல்களை இந்தச் வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

***

பிரமனும் இந்திரனும் மாலும் அறியா அரசன் கல்லால் அடியில் அமர்ந்திருக்கிறான். அவனைப் போற்றிப் பாடுகிறது திருக்காளத்தி இட்டகாமிய மாலை காப்பு.



தமரக் கடலைக் கடைந்த முகுந்தன் தனக்கும் மெய்க்கே
பமரக் கண்ணாயிரத்தாற்கும் எட்டாது பனிக்கதிர்வேல்
குமரக் கடம்பன் முன் அத்தியை ஈன்ற கொடியையும் கொண்டு
அமரர்க்கு அரசொரு கல்லால் அடியில் அமர்ந்ததுவே


பாற்கடலைக் கடைந்த முகுந்தன் தனக்கும், உடலெல்லாம் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திரனுக்கும் எட்டாமல், பனிக்கதிர் வேலையுடைய குமரக் கடம்பனையும் அவனுக்கு அண்ணனாம் யானைமுகனையும் ஈன்ற கொடி போன்ற அன்னையையும் கொண்டு, தேவர்களுக்கெல்லாம் அரசனான ஒருவன் கல்லால் அடியில் அமர்ந்தான்.

மாரக் கடம்பனைப் பெற்ற கண்ணா உனை வாழ்த்தும் என் மேல்
கோரப் பிணி கெடப் பார்த்தருள்வாய் நின் சொல் குற்றமென்ற
கீரற்கு நின் சொரூபம் காட்ட வேண்டிக் கிளைத்தெழுந்த
ஈரச் சடாமுடியாய் திருக்காளத்தி ஈச்சுரனே


மன்மதனைப் போன்ற கந்தக் கடம்பனை பெற்ற முக்கண்ணா! உன்னை வாழ்த்தும் என் மேல் கோரமான பிணிகள் எல்லாம் நீங்க கண் பார்த்து அருள்வாய். நின் பாடலைக் குற்றமென்று சொன்ன நக்கீரருக்கு உன் திருவுருவைக் காட்டவேண்டி கிளைத்து எழுந்த ஈரச் சடைமுடியாய்! திருக்காளத்தி ஈஸ்வரனே!

***

மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில் ...

Wednesday, July 11, 2007

அடியேன் சிறிய ஞானத்தன்

ஜெய்க்குமார் என்றொரு அன்பர் என் பதிவில் என்னைப் பற்றி இருக்கும் 'அடியேன் சிறிய ஞானத்தன்...' என்ற குறிப்பைக் கண்டு அதன் பொருள் கேட்டு நவம்பர் மாதத்தில் மின்னஞ்சல் எழுதியிருந்தார். கூடிய விரைவில் பொருள் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்புறம் வேலைப்பளுவில் அதனைச் செய்ய இயலவில்லை. மீண்டும் இன்று அவரிடமிருந்து பொருள் கேட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதனால் அவருடைய பொறுமைக்கு நன்றி கூறி, பொருளுடன் இந்த இடுகை.




இவை நம்மாழ்வார் பாசுர வரிகள்.

அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் யார்க்கும் அரியானை
கடிசேர் தண்ணந்துழாய்க்கண்ணி
புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ஆக்கை அடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே

அடியேனோ அறிவு சிறிதும் இல்லாதவன். குறை அறிவு கொண்டவன். அறிவு மயக்கம் கொண்டவன். அப்படி இருக்க பிரமன் முதலான தேவர்களுக்கும் யாருக்கும் அறிவதற்கு அரியவனை, மிகுந்த மணம் கொண்ட குளிர்ச்சியான துளசிமாலை அணிந்தவனை, கண்ணனை, குற்றம் குறை கொண்ட உடம்பு தன் அடியாரை மீண்டும் அடையா வண்ணம் எல்லா வினைகளையும் தீர்க்கும் திருமாலை, அடியவன் காண்பதற்கு புலம்பிக்கொண்டிருக்கிறேன். இதனை விட அயர்வு தரும் வேறொன்றுண்டோ?

இந்த பாசுரம் அடிக்கடி மனத்தில் ஓடும் பாசுரம். அதில் இருந்து முதல் அடியையும் கடைசி அடியையும் தான் அடியேனைப் பற்றி என்றிருக்கும் குறிப்பில் இட்டிருக்கிறேன்.

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!!!


பாரதி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களும் வடமொழி இலக்கியங்களும் இந்தக் கால எண்ணச்சூழலுக்கு ஏற்ப விமரிசனத்திற்கு உள்ளாகும் போது சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும் கருத்துகளும் விமரிசனத்திற்கு உள்ளாவதில் எந்த தவறும் இல்லை. பாரதி மேல் குறை காண்போர் அவன் பிறந்த சாதியை வைத்தோ, அவன் வாழ்க்கை முழுவதும் (அவன் கவிதைகளிலும் தெரியும்) தான் முன்பு சொன்னதையே பிற்காலத்தில் மறுக்கும் முரண்பாடுகளையோ, முன்னுக்குப் பின் முரண்பாடாகத் தெரியும் சொற்களையோ கவிதை வரிகளையோ வைத்துப் பேசலாம். அதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அவன் பொதுச் சொத்து. அவன் கவிதைகளும் கட்டுரைகளும் கருத்துகளும் பொதுச் சொத்து. அவனைப் பற்றியோ அவன் கருத்துகளைப் பற்றியோ வைக்கப்படும் வாதங்களில் சரி தவறு என்பது அவரவர் கருத்து நிலைப்பாட்டைக் கொண்டதே தவிர மற்றில்லை. ஒரு நல்ல இலக்கியம் என்றால் அதற்கு பல்வகைப்பட்ட விளக்கங்கள் வரவேண்டும் என்றே சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள் - அந்த விளக்கங்களில் சில ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகக் கூட இருக்கலாம். அது அந்த இலக்கியத்தைப் படித்தவர்களின் புரிதல். அந்தவகையில் அது சரியே.

அண்ணன் கோவி.கண்ணன் பாரதியின் வரிகளில் இரண்டினை எடுத்துக் கொண்டு அவற்றில் முன்னுக்குப் பின் முரணான செய்தியைக் காண்கிறார். கீதையைப் போற்றும் எல்லோருக்கும் எந்த வகையான எண்ணம் இருக்கும் என்று ஒரு வரையறையைக் கூறி அதனை மெய்ப்பிப்பதாக பாரதியின் வரிகளைக் காண்கிறார். அது சரி தவறு என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை. அது தேவையும் இல்லை. அது அவர் கருத்து.

அந்த இடுகையில் இரு நண்பர்கள் கேட்ட கேள்விக்கு இங்கே நான் சொல்வது விடையாக அமைகிறதா என்று பார்க்கலாம்.

சிபி சொன்னது 'குலம் இருந்தால் தானே தாழ்த்தி உயர்த்திச் சொல்ல முடியும். குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க'.

சிவபாலன் கேட்டது: 'இங்கே கேள்வி என்னவென்றால் சாதி இல்லை. குலம் உண்டா ? என்பது தான். ஒவ்வொருவரும் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கேள்விக்கு பதில் வரவில்லை என்பதே என் எண்ணம். பாரதியும் மனிதன் தான். அவர் படித்த கீதையின் தாக்கம் இருந்திருக்கலாம். இதை சரியான ஆதாரத்துடன் மறுக்கும் கருத்தை யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்.'

இந்த இருவருக்காகவும் இதில் ஆர்வமுடைய மற்றவர்களுக்காகவும் இந்த இடுகையை இடுகிறேன்.

'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'

என்றான் பாரதி. இதற்கு நான் சொல்லும் பொருள் 'சாதிகள் இல்லையடி பாப்பா. அதனால் இல்லாத சாதி/குல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு குலத்தாழ்ச்சியோ குல உயர்ச்சியோ சொல்வது பாவம்'. இப்படி பொருள் கொண்டால் அவன் சாதி இல்லை; ஆனால் குலம் உண்டு என்று முரண்பட்டதாகச் சொல்ல இயலாது. பலரும் படிக்கும் போது இப்படித் தான் பொருள் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

கீதையின் தாக்கத்தைப் பற்றிய என் கருத்து: திருக்குறளைப் போற்றுவோர் எல்லோரும் ஒவ்வொரு குறட்பாவினையும் ஏற்றுக் கொள்பவர் என்பது சரியான கருத்தென்றால் கீதையில் இருக்கும் ஒவ்வொரு வரியினையும் ஏற்றுக் கொள்பவராகத் தான் கீதையினைப் போற்றுபவர் இருக்க முடியும் என்ற கருத்தும் சரி. திருக்குறளைப் போற்றுபவர்களில் பலர் மனப்பாடச் செய்யுளில் வந்த குறட்பாக்களை மட்டுமே படித்தவர்கள் (என்னை உட்பட); சிலர் எல்லா குறட்பாக்களையும் படித்தவர் - ஆனால் சில குறட்பாக்களை அந்தக் கால எண்ணச் சூழலில் அது சரி இப்போதில்லை என்று அந்தக் குறட்பாவினை கண்டு கொள்ளாதவர்கள். அப்படியே தான் கீதையைப் போற்றுபவர்களும் - பலர் கீதையைப் படித்ததில்லை; சிலர் படித்து சில கருத்துகளை மறுத்தவர்கள். பாரதி இரண்டாம் வகை - அதனை அவனின் கீதையின் முன்னுரையிலும் பற்பல கவிதைகளிலும் காணலாம். காண மறுப்பது அவரவர் உரிமை.


Monday, July 09, 2007

கடம்பம் - 3

கொற்றவை சிறுவனாம் குமரன் மட்டுமே கடம்பன் இல்லை - கொற்றவை அம்மையும் கடம்பாடவியில் (கடம்பங்காட்டில்) விரும்பி உறைபவள்; கடம்பம்பூ மாலையை விரும்பி அணிபவள். அம்மையைப் போற்றிப் பாடும் பாடல்களிலேயே ஒரு உன்னத இடத்தைப் பெற்றிருக்கும் அபிராமி அந்தாதியில் கடம்பம் வரும் இடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

பாடல் 26

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

அன்னையே. உன்னைப் போற்றிப் பணிபவர்கள் பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் முத்தொழில் புரியும் முப்பெரும்தேவர்கள். அப்படிப்பட்ட பெருமை கொண்ட, மணம் கமழும் கடம்ப மலரை குழலில் அணிந்திருக்கும் தெய்வப்பெண்ணே! நறுமணம் கமழும் உன் திருவடி இணைகளுக்கு என் நாவில் நீங்காது நிற்கும் புன்மொழிகள் புகழ்மொழிகளாக (கடம்ப மலர்களுக்கு இணையாக) அமைந்தது பெரும் வியப்பாக இருக்கிறது. (உன் எளிமையே எளிமை).

***

பாடல் 70

கண் களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.

கடம்ப வனமாம் மதுரையில் பல பாடல்களைப் பாடிக் களிக்கும் வீணை போன்ற குரலையும், அழகிய திருக்கைகளையும், திருமார்பினையும், மண்ணில் வளத்தைக் காட்டி நிற்கும் பச்சை வண்ணத்தைப் போல் வண்ணம் கொண்ட திருமேனையையும் கொண்டு மதங்கர் குலப் பெண்களில் ஒருவளாகத் தோன்றிய எம் தலைவியின் பேரழகை என் கண் களிக்கும் படி கண்டு கொண்டேன்.

***

பாடல் 73

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றொடு இரண்டு நயனங்களே

அன்னையே! உன் மாலை கடம்பமாலை. உன்னுடைய படைகள் ஐந்து மலர்க்கணைகள். உன்னுடைய வில் கரும்பு வில். உன்னைத் தொழும் பொழுது வயிரவர்கள் தொழும் நள்ளிரவு. எமக்கு என்று இந்த உலகத்தில் இருக்கும் ஒரே பற்றுக்கோடு (வங்கியில் இருக்கும் பணம்) உன் திருவடிகள். உன்னுடைய நான்குத் திருக்கரங்கள் செம்மையானவை. உன்னைச் சுற்றி சிவந்த ஒளி. அம்மை உன் திருநாமமோ திரிபுரை. உனக்கு எல்லோருக்கும் இருக்கும் இரண்டு கண்களுடன் மூன்றாவதாக நெற்றிக் கண்ணும் உண்டு.

***

பாடல் 99:

குயிலாய் இருக்கும் கடம்பாடவியில் கோல வியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

கயிலாயநாதருக்கு அன்று இமயமலைக்கரசன் கொடுத்த அழகிய பார்வதி தேவி கடம்பவனத்தில் குயிலாய் இருப்பாள். இமய மலையில் அழகிய மயிலாய் இருப்பாள். வான வெளியில் வெயிலாய் இருப்பாள். தாமரையில் அன்னமாய் இருப்பாள்.

***

1. கடம்பாடவியில் வாழும் குயில்
2. கடம்ப மலர்கள்
3. கடம்ப மரம்

மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில்...

Saturday, July 07, 2007

கடம்பம் - 2

இந்தப் பாடல் மக்கள் நடுவே மிக நன்கு அறியப்பட்டது. பலரும் பாடியிருப்பார்கள்.

(கந்தர் அலங்காரம் - 38ம் பாடல்)

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


குமரேசரின் இரு திருவடிகளும் அவற்றில் அணிந்த சிலம்பும் சதங்கையும் தண்டையும், ஆறுமுகங்களும், பன்னிரு தோள்களும் அவற்றில் அணிந்த கடம்பமாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிவிட்டால் - நல்ல நாள் கெட்ட நாள் தான் என்னை என்ன செய்யும்? நான் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் தான் என்னை என்ன செய்யும்? வினைப்பயன்களை அளிக்க எனை நாடி வந்த ஒன்பது கோள்களும் என்ன செய்யும்? என் உயிரை எடுக்க வரும் கொடிய கூற்றும் என்ன செய்யும்? அவன் அருளால் இவற்றை எல்லாம் வெல்லுவேன்.

முருகனின் திருவுருவத்தில் எவை எவை எடுப்பாகத் தெரியுமோ அவற்றை எல்லாம் பாடிக் கொண்டு வரும் போது கடம்பையும் பாடுகிறார்.

***


அடுத்தப் பாடலும் நன்கு அறியப்பட்டப் பாடல்.

(கந்தர் அலங்காரம் 40ம் பாடல்)

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.

திருச்செந்தூர் அருகில் இருக்கும் வயல்களில் நீர்வளம் மிகுந்து இருப்பதால் வயல்களில் நிறைய மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த மீன்கள் துள்ளித் துள்ளி விளையாடுவதால் செந்தூர் வயற்பொழில்கள் சேறாகிவிட்டன.

முருகனின் தோளில் இருக்கும் தேனைச் சொரியும் கடம்ப மாலையின் மயக்கத்தில் (அவன் தோளைத் தழுவி அந்த மாலைகளின் மணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில்) பூங்கொடியார் மனம் துவண்டது.

மாமயில் ஊர்தியைக் கொண்டவன் வேலால் கடலும் கடல் நடுவே மாமரமாய் நின்ற சூரனும் கிரௌஞ்ச மலையும் அழிந்தார்கள்.

அவனுடைய திருவடிகள் பட்டதால் என் தலை மேல் பிரமன் எழுதிய தலையெழுத்து அழிந்தது.

***

அடுத்தப் பாடல் நம் இராகவனுக்கு மிகவும் பிடித்தப் பாடல்.

(கந்தர் அலங்காரம் - 62ம் பாடல்)

ஆலுக்கு அணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கு அணிகலம் தண்ணம் துழாய் மயில் ஏறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே.

ஆலமுண்ட சிவபெருமானுக்கு அணிகலம் வெண் தலை மாலை. உலகங்களை எல்லாம் உண்ட திருமாலுக்கு அணிகலம் குளிர்ந்த துளசி. மயில் ஏறும் எங்கள் ஐயனின் காலுக்கு அணிகலம் வானவர்கள் திருமுடியும் கடம்ப மாலையும். அவன் கையில் இருக்கும் வேலுக்கு அணிகலம் அந்த வேல் அழித்த கடலும் சூரனும் கிரௌஞ்ச மலையுமே.

***

இந்தப் பாடல் எனக்கும் மிகப் பிடித்தப் பாடல்

(கந்தர் அலங்காரம் - 72ம் பாடல்)

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

சிவந்தவனை, கந்தனை, திருச்செங்கோட்டு மலையை உடையவனை, சிவந்த சுடர் வேல் உடைய மன்னனை, செந்தமிழ் நூல் பல செய்தானை, புகழ் விளங்கும் வள்ளியின் மணவாளனை, கந்தனை, கடம்பமாலை அணிந்தவனை, கரிய மயிலை வாகனமாக உடையவனை, சாகும் வரையில் மறவாதவர்களுக்கு ஒரு தாழ்வும் இல்லையே.
***
படங்கள்:

1. திருமுருகன்
2. மலர்ந்த மலர் முகத்துடனும் கடம்ப மலர்க் கொத்துடனும் ஒரு சிறுமி
3. பழனி மலை அடிவாரத்தில் இருக்கும் கடம்பமரம்
4. சில மொட்டுக்களுடன் ஒரு கடம்ப மலர்க் கொத்து.
மேலும் சில பாடல்கள் அடுத்த இடுகையில்

Friday, July 06, 2007

கடம்பம் - 1

கடம்ப மரத்தைப் பற்றி இலக்கியத்தில் எங்கெங்கு வருகிறது என்று எடுத்துச் சொல்ல முடியுமா என்று வெற்றி முன்பு ஒரு முறை கேட்டிருந்தார். என்னால் முடியவில்லை, நேரம் கிடைக்கவில்லை என்று இராகவனிடம் உங்களால் முடியுமா என்று கேட்டேன். அதே நேரத்தில் இராகவன் பதிவிலும் வெற்றி அதே கோரிக்கையை வைத்தார். இராகவன் பேச்சோடு பேச்சாக அந்த வேலையை என்னிடம் தள்ளிவிட்டுவிட்டார். :-) சரி. இனி மேலும் வெற்றியைக் காக்க வைக்கக் கூடாது என்று கூகிளாண்டவரின் துணையோடு இந்தத் தொடரைத் தொடங்குகிறேன். கூகிளாண்டவர் யூனிகோடில் இருக்கும் எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறார். அவையே வெற்றியின் ஆவலைத் தணிக்கப் போதும் என்று நினைக்கிறேன்.

கடம்ப மரம் என்றதுமே முருகன் நினைவு தான் வரும். கடம்ப மாலை, கடப்ப மாலை அணிந்திருப்பவன் முருகன் என்பது பழைய இலக்கியங்களிலும் அண்மைக்கால இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. கடம்ப மரம் அம்பிகையோடும் தொடர்புடையது என்பது அபிராமி அந்தாதி படித்தவருக்குத் தெரியும். அதில் பல இடங்களில் அன்னை கடம்பு அணிந்தவளாகப் புகழப்படுகிறாள். நான்மாடக்கூடலாம் மதுரையம்பதிக்கு இருக்கும் பல பெயர்களில் கடம்பவனம் என்பதும் ஒரு பெயர். அந்தப் பெயர் கொண்டு மீனாட்சி அம்மையைப் போற்றும் பாடல்களும் இருக்கின்றன.

இவை எல்லாம் போக பழைய இலக்கியங்களில் வேறு சில இடங்களிலும் கடம்பு, கடம்ப மரம், கடப்ப மரம், கடப்ப மாலை போன்றவை மற்றவருடனும் தொடர்பு கொண்டு வருவது போல் தோன்றுகிறது. அவை பழந்தமிழ் இலக்கியம் என்பதால் கொஞ்சம் பொறுமையுடன் அவற்றின் பொருளைப் பார்க்கவேண்டும். அதனால் அவற்றைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.

***

திரு. முத்துக் கறுப்பணன் எழுதிய 'பழனியாண்டவன் காவடிச் சிந்து' என்ற நூலினை இந்த வலைப்பக்கத்தில் பார்க்கலாம். இதில் கந்தனைக் கடம்பன் என்று அழைக்கிறார். கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று அவனை வணங்குவது பொது மக்கள் நடுவிலும் பெரும்பான்மையாக இருக்கிறதே.

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மானப் புகழ் குமரன்


பாடல் வரிகளுக்குப் பொருள் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். மிக எளிதான வரிகள். மானப் புகழ் என்றால் பெரும் புகழ்.

***

ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரம், வேல் - மயில் - சேவல் விருத்தம் போன்ற நூற்களிலும் பல இடங்களில் கந்தனைக் கடம்பனைப் பாடியிருக்கிறார். அவற்றை இந்த வலைப்பக்கத்தில் பார்க்கலாம்.

(கந்தர் அலங்காரம் - 19ம் பாடல்)

சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்
மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! மௌனத்தையுற்று
நின்னை உணர்ந்து உணர எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்திருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே

பொன்னால் ஆகிய (சொர்ண - சொன்ன) கிரௌஞ்ச மலையை ஊடுருவித் துளைத்த சிறந்த வேல் மன்னவனே! கடம்ப மலர் மாலை அணிந்த மார்பனே! சொல், செயல், எண்ணம் என்ற மூன்று விதங்களிலும் மௌனத்தை உற்று உன்னை நன்கு உணர்ந்து கொண்டேன். அதனால் எல்லாம் ஒடுங்கி நிர்க்குண நிலை பூண்டு 'நான்' என்ற எண்ணம் மறந்திருந்தேன். அதனால் இந்த உடம்பு இறந்தது போல் ஆயிற்று - இனிப் பிறவா நிலை கிட்டிற்று.

அருணகிரிநாதர் கடம்பனைப் போற்றும் மற்ற பாடல்களை அடுத்த இடுகையில் பார்ப்போம்.