Tuesday, July 03, 2007

உருத்திராட்ச பூனைகள்

உருத்திராட்ச பூனைகளைப் பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருக்கிறோம்; பார்த்திருக்கிறோம். இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலை என்று பலமுறை நொந்துக் கொண்டும் இருக்கிறோம். திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞர் சொன்னதும் சரி தான். காலம் காலமா உலகம் தோன்றிய நாள் தொடங்கி இப்படிப்பட்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். எதற்கு இவ்வளவு தூரம் பீடிகை போடுகிறேன் என்று பார்க்கிறீர்களா? ஒன்றுமில்லை. காலம் காலமாய் அழியாமல் இருக்கும் படி மாமல்லன் காலத்தில் கல்லிலே உருத்திராட்ச பூனையைச் செதுக்கி வைத்திருக்கிறார்களே, சென்னை சென்ற போது அதனைப் பார்த்து வந்தேன், அதைப்பற்றிச் சொல்லத்தான். :-)

நாங்கள் மாமல்லபுரமாம் மகாபலிபுரம் சென்ற போது சரியான வெயில் காலம். வெயில் அதிகமாக வருவதற்குள் சென்று வந்துவிட வேண்டும் என்று எண்ணி காலை 8 மணிக்கெல்லாம் மாமல்லபுரத்தில் இருந்தோம். அப்படியிருந்தும் வெயில் வாட்டி எடுத்துவிட்டது.

முதலில் பாறைச் சரிவில் நிற்கும் உருண்டைப் பாறையைக் காட்டி கண்ணனின் வெண்ணெய் உருண்டை என்று சொன்னார்கள். அவ்வளவு தான் என் மகள் பார்க்கும் பாறையை எல்லாம் கண்ணனின் வெண்ணெய்; மண் எல்லாம் அவன் தின்ற மண் என்று கதை சொல்லத் தொடங்கிவிட்டாள். வீடு வந்து சேரும் வரை இது கண்ணன் தின்ற வெண்ணெயா; இது அவன் தின்ற மண்ணா; நானும் தின்று பார்க்கலாமா என்று ஒரே தொல்லை.

ஒரு கல் மண்டபத்தில் மும்மூர்த்திகளின் கோவில் இருந்தது. நன்றாக இருந்தது. ஒரு தனிக்கோவிலில் அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட தொந்தி கணபதி இருந்தார். ஒரு குடைவரை மண்டபத்தில் வராகமூர்த்தியும் கஜலக்ஷ்மியும் இருந்தார்கள். இன்னொரு குடைவரை மண்டபத்தில் கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கி நிற்கும் காட்சி அழகுறச் செதுக்கப்பட்டிருந்தது. பாம்பு, புலி முதல் எல்லா மிருகங்களும் மழைக்கு மலையின் கீழ் ஒதுங்கியதை அழகாக வடித்திருந்தார்கள். என் மகளுக்கு பலராமன் உருவம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. கதை கேட்டு கதை கேட்டு அவள் கற்பனையில் வடித்திருந்த பலராமன் உருவத்துடன் இந்த உருவம் நன்கு ஒத்துப் போனது போல.

அடுத்து அருச்சுனன் தவத்தைக் காட்டும் ஒரே கல்லில் செதுக்கிய நெடிய தொடர் சிற்பங்களைப் பார்த்தோம். (படத்தை அழுத்திப் பெரிதாக்கிப் பாருங்கள்). பாறையில் மேல்பகுதி எல்லாம் தேவர்கள். நடுவே இருக்கும் பிளவு பாதாள உலகத்தில் இருந்து நாகர்கள் வருவதற்காக இருக்கும் பிலம் (பிளவு). அதிலிருந்து நாகர்கள் வெளிப்படுகிறார்கள். ரிஷிகளும் முனிவர்களும் பிளவின் இருபுறமும் காட்டப்பட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே வன விலங்குகள். ஒரு பெருமாள் கோவிலும் உண்டு. பெருமாள் கோவிலின் மேல் பகுதியில் எலும்பும் தோலுமாக ஒற்றைக்காலில் நின்று இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி நிற்கும் உருவம் தான் அருச்சுனன். அவன் தவத்தை மெச்சி பாசுபத அஸ்திரம் தருவதற்காக அதனை ஏந்திக் கொண்டு சிவபெருமான் அவனது வலப்புறத்தில் நிற்கிறார்.

சரி. இதெல்லாம் சொல்லிவிட்டீர்களே; உருத்திராட்ச பூனை எங்கே என்று கேட்கிறீர்களா? வலப்பக்கம் பெரிய யானை ஒன்று நிற்கிறதே. அதன் தந்தத்தின் கீழே பாருங்கள். அருச்சுனன் நிற்பது போலவே ஒரு பூனை நிற்பதைப் பார்க்கலாம். அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த உருத்திராட்ச பூனையைச் சுற்றி கைகளைக் கூப்பிக் கொண்டு பல எலிகளும் நிற்கின்றன. நகைச்சுவை உணர்வு மிகுந்த சிற்பி போலும். நன்கு வடித்திருக்கிறார். நீங்கள் மாமல்லபுரம் சென்றால் தவறாமல் இந்தப் பூனையையும் எலிகளையும் பார்த்துவிட்டு வாருங்கள்.



அடுத்து கடற்கரை கோவிலுக்குச் சென்றோம். அது கடற்கரையில் இருப்பதால் கடற்காற்றின் அரிப்பை கல்லில் நன்கு காண முடிந்தது. அந்த நேரத்தில் வெயிலின் கடுமை அதிகமாக இருந்ததால் கோவிலை அனுபவித்துப் பார்க்க முடியவில்லை. விரைவில் வீட்டிற்குப் போனால் போதும் என்று திரும்பி வந்துவிட்டோம்.

Monday, July 02, 2007

வலைப்பதிவு நண்பர்கள் மன்னிக்கவும்!

ஒரு மாத காலம் இந்தியாவிற்குச் சென்று வந்தேன். சென்னையில் நான்கு நாட்கள், மதுரையில் பத்து நாட்கள், கோவையில் ஒரு நாள், ஊட்டியில் மூன்று நாட்கள், பெங்களூருவில் பத்து நாட்கள், ஹைதராபாத்தில் மூன்று நாட்கள் என்று பொழுதைக் கழித்து விட்டு வந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரிடம் தொலைபேசி எண்கள் பெற்றுச் சென்றிருந்தாலும் யாருக்கும் தொலைபேச இயலவில்லை. யாரையும் சந்திக்க இயலவில்லை. நண்பர்கள் அனைவரிடமும் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கோவித்துக் கொள்ளவேண்டாம்.

Sunday, July 01, 2007

தங்கம் - வாங்கினால் குறைந்த விலை; விற்றால் அதிக விலை


அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்த போது ஒரு விந்தையைக் கண்டேன். நாங்கள் நகைக்கடைக்குச் சென்றிருந்த நேரம் ஒரு கிராம் தங்கம் 809 ரூபாய்க்கு விற்றது. கஜானா நகைக்கடையினர் ஒரு கிராம் தங்கம் 784 ரூபாய்க்கு விற்றனர் (சந்தை விலையை விட 25 ரூபாய் குறைவு). இதனை வேண்டுமானால் புரிந்து கொள்ள இயன்றது. சேதாரம், செய்கூலி என்று நகையின் விலையை ஏற்றி இறக்கும் போது இப்படி சந்தை விலையை விடக் குறைவாகக் கொடுக்க முடியும். இன்னொன்று தான் புரிந்து கொள்ள இயலவில்லை. நாங்கள் முன்பு வாங்கியிருந்த ஒரு நகையை விற்று புது நகையை வாங்கினோம். அப்படி பழைய நகையை விற்கும் போது ஒரு கிராமிற்கு 840 ரூபாய் போட்டு வாங்கிக் கொண்டனர். சேதாரமும் மிகுதியாகப் போடவில்லை. இப்படி பழைய நகையை கூடுதல் விலைக்கு வாங்குவதால் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று புரியவில்லை. இதனைப் பற்றி அறிந்தவர்கள் சொன்னால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

Thursday, May 24, 2007

குருவாயூருக்கு வாருங்கள்!!!

ஒரு மனிதன் எந்த மதத்தினனாக இருந்தாலும் பக்தியுடன் எங்கும் இருக்கும் இறைவன் இந்தச் சிலையிலும் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கோவிலுக்கு உள்ளே வந்து வணங்கும் போது மரபின் பெயரால் அதனை மறுப்பதும் மற்றவர் வற்புறுத்தலால் அனுமதித்துவிட்டுத் தீட்டு கழிப்பதும் மகா பாதகச் செயல்; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

'உன்னுடன் ஐவரானோம்' என்று குகனிடம் சொல்லி அவனைக் கட்டித் தழுவிய இராமன் இதனைக் கண்டிப்பான்.

'தந்தையின் நண்பன் நீயும் என் தந்தை' என்று சொல்லி பறவையான ஜடாயுவுக்கு தந்தைக்கு உரிய முறையில் இறுதிச்சடங்குகள் செய்த இராமன் இதனைக் கண்டிப்பான்.

'தீண்டத் தகாதவள்' என்று குமுகத்தால் வகைப்படுத்தப்பட்டவளாக இருந்தாலும் 'பக்தியுடன் கடித்துக் கொடுத்த' எச்சில் பழங்களை சபரியிடம் இருந்து பெற்று உண்டு மகிழ்ந்த இராமன் இதனைக் கண்டிப்பான்.

ஆயர் குலத்தவருடன் அனைத்து குறும்புகளும் செய்த கண்ணன் இதனைக் கண்டிப்பான்.

சமமான பார்வையுடைய அறிஞன் எல்லோரிடமும் என்னையே காண்கிறான் என்று கீதையில் சொன்ன கண்ணன் இதனைக் கண்டிப்பான்.

திருப்பாணாழ்வாரை கருவறையுள் தன்னருகிலேயே வைத்திருக்கும் அரங்கன் இதனைக் கண்டிப்பான்.

பக்தியுடன் வந்த துலுக்க நாச்சியாருக்காக தன் உணவையும் உடையையும் மாற்றிய அரங்கன் இதனைக் கண்டிப்பான்.

கனகதாசருக்காக தானே திரும்பிய கண்ணன் இதனைக் கண்டிப்பான்.

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று கொண்ட கந்தன் இதனைக் கண்டிப்பான்.

குல முதல்வன் என்று வைணவர்களால் போற்றிப் புகழப்படும் வேளாளர் திலகமான மாறன் சடகோபன் நம்மாழ்வார் இதனைக் கண்டிப்பார்.

பல்வேறு சாதிகளில் பிறந்து கண்ணனின் மேல் உள்ள காதலினால் அனைவரும் போற்றும் ஆழ்வார்களான பன்னிருவர் இதனைக் கண்டிப்பர்.

காதலினால் கண்ணையே எடுத்து ஒத்திய, செருப்புக்காலுடன் கண்ணை அடையாளமிட்ட, வாயினால் திருமுழுக்கு செய்த, தான் அணிந்த மலர்களை இறைவனுக்குச் சூட்டிய கண்ணப்ப நாயனார் முதலிய அனைத்துக் குல அறுபத்தி மூவர் இதனைக் கண்டிப்பர்.

திருக்குலத்தார் என்று அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற நம்மை உடையவர் இராமனுஜர் இதனைக் கண்டிப்பார்.

இப்படி இதனைக் கண்டிக்கும் மக்களைப் பட்டியல் இட்டுக் கொண்டே செல்லலாம். ஆனால் இவர்கள் அனைவரும் இறைவனைச் சிலையில் காண்பவர்கள்; அதனைச் சிலை என்று சொல்பவர்கள் இல்லை. கோவிலுக்குள் இருப்பது சிலை என்பவர்கள் கொள்ளும் ஆவேசத்தை விட அதிக ஆவேசம் எங்கும் உள்ளவன் இங்கேயும் இருக்கிறான் என்ற நம்பிக்கை உடையவருக்கு வர வேண்டும். வரட்டும்.

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்; பக்தர்களே துயிலெழுப்ப வாரீரோ!!!

Tuesday, May 08, 2007

தமிழ்மணம் செய்தது சரியா?

தமிழ்மணத்தில் இப்போது புதிதாக 'சூடான பதிவுகள்' என்று ஒரு பட்டியல் தமிழ்மண முதல் பக்கத்தின் இடப்பகுதியில் வருகிறது. இதனைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது? அதனால் என் மனத்தில் குறுகுறுத்துக் கொண்டிருக்கும் கேள்வியை இங்கே கேட்டுவிடுகிறேன். பதில் சொல்வதும் சொல்லாததும் தமிழ்மணத்தாரின் விருப்பம்.

இதுவரை Blog என்பதைப் பதிவு என்றும் Posting என்பதை இடுகை என்றும் சொல்லிவந்த தமிழ்மணம் இப்போது திடீரென்று 'சூடான இடுகைகள்' என்று இடாமல் 'சூடான பதிவுகள்' என்று குழப்புவது ஏன்?

இது தானப்பா என் கேள்வி! மற்ற ஏதாவது கேள்விகள் கேட்டு சொ.செ.சூ. வைத்துக் கொள்வேன் என்று நினைத்து வந்திருந்தால் மன்னித்துவிடுங்கள். அப்படியாவது நிறைய பேர் இந்த இடுகையைப் பார்த்து அது 'சூடான ...' பட்டியலில் வருகிறதா என்று பார்ப்போம். நிறைய பேர் பார்த்தால் தான் இடுகை அந்தப் பட்டியலில் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அந்தப் பட்டியல் எதன் அடிப்படையில் வருகிறது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். :-)

Sunday, May 06, 2007

இருவகை மேலாளர்கள் - (ஒரு நிமிட மேலாளர் பகுதி 2)

இந்தத் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

***

இந்த உலகில் இருக்கும் மேலாளர்கள் பெரும்பாலானவர்கள் இருவகையில் அடங்கிவிடுவார்கள். இரண்டு வகையான மேலாளர்களையும் நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கலாம். நீங்கள் ஒரு மேலாளர் என்றால் நீங்கள் எந்த வகையில் வருபவர் என்பதை உங்களால் எளிதாகச் சொல்லிவிடமுடியும். ஒரு வகை மேலாளர் மற்றொரு வகை மேலாளர் செய்வது போல் செய்ய முயன்றிருக்கலாம்; ஆனால் இயற்கையாக வரும் வகையிலேயே செல்வது எளிதாக இருப்பதைக் காணலாம். இரண்டு வகைகளிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. அதனால் நமக்கு எது எளிதாக வருகிறது என்று பார்த்து அதன் தீமைகளைக் குறைக்க முயலும் மேலாளர்களும் உண்டு; நானும் அப்படி முயன்றிருக்கிறேன்.

முதல் வகை மேலாளர்களை உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கலாம். மேலை நாடுகளில் இவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நாசூக்காக நடந்து கொள்வார்கள்; நம் நாட்டில் இவர்கள் நேரடியாகவே நடந்து கொள்வார்கள். அதனால் முதலில் நம்மவர்கள் எல்லோரும் இந்த வகைதான் என்று தோன்றும். கவனித்துப் பார்த்தால் உலகில் பெரும்பாலும் இந்த வகையினர் தான் என்று புரியும். மேலே சொன்னது போல் மேலை நாட்டவர்கள் மென்மையாக மறைமுக வழிகளில் அதனைச் செயல்படுத்துவார்கள்.

இந்த வகை மேலாளர்களைப் பார்த்தால் அவர்கள் செய்யும் பணி எல்லாம் திறம்பட நிறைவேறும்; நேரத்தோடு (on time), செலவு ஒதுக்கிய பணத்தை மீறாமல் (on budget), சொன்னதைச் சொன்னபடி (on scope) எல்லாப் பணியையும் இவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு மிக மிக நல்ல பெயர் இருக்கும். சொன்னதை சொன்னபடி செய்து முடிக்க வல்லவர் என்ற பெயர் இருக்கும். இவர்களால் இவர்கள் பணி புரியும் நிறுவனங்கள் பயன்பெறும்.

அதே நேரத்தில் இவர்களிடம் பணி புரிந்தவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்களுக்கு இவர்களைப் பிடிக்காது; இவர்களிடம் வேலை செய்வதைப் பெரும் தண்டனையாகக் கருதுவார்கள். சிலர் வேறு பணியைத் தேடிச் சென்றிருப்பார்கள். எளிதாக வேலை கிடைக்காத துறையென்றால் பல்லைக் கடித்துக் கொண்டு தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு வேலை செய்து கொண்டிருப்பார்கள். நிறைய பேர் நோய்வாய்ப்படுவதற்குக் கூட அவர்களின் மேலாளர்கள் காரணமாக இருந்ததுண்டு.

இந்த முதல் வகை மேலாளர்கள் சர்வாதிகார மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் நிறுவனம் பயன்பெறலாம்; ஆனால் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பயன் அடைவதில்லை.

இரண்டாம் வகை மேலாளர்களையும் நீங்கள் நிறைய இடங்களில் பார்க்கலாம். ஆனால் என்ன அவர்கள் ரொம்ப நாள் ஒரு நிறுவனத்தில் தங்குவதில்லை. அதனால் அந்த வகையினரைப் பார்ப்பது அரிதாக இருப்பது போல் தோன்றும். ஆனால் சரி பாதி இந்த வகையினர் என்பது என் அனுபவம்.

இவர்களிடம் பணிபுரிந்தவர்களும் புரிபவர்களும் இவர்களை மிகவும் மெச்சுவார்கள். மீண்டும் இவர்களிடம் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னர் இவர்களிடம் பணி புரிந்தவர்களும் இவர்களைப் பற்றிப் பேசும் போது 'மிக நல்லவர்; மிகத் திறமையானவர்' என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்காது. இவர்கள் செய்யும் பணிகள் ஏதோ ஒரு வகையில் குறையுடையதாக இருக்கும் - ஒன்று நேரத்தோடு பணிகள் முடியாது; அல்லது ஒதுக்கிய பணத்தை விட அதிக செலவு பிடிக்கும்; அல்லது சொன்னதை சொன்னபடி செய்திருக்கமாட்டார்கள் - சில நேரங்களில் இவற்றில் ஒன்றிற்கும் மேற்பட்ட குறைகளும் இருக்கலாம். இவர்களின் மேலாளர்களிடம் இவர்களுக்கு நல்ல பெயர் இல்லாததால் இவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

இந்த இரண்டாம் வகை மேலாளர்கள் மக்களாட்சி மேலாண்மை வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களால் மக்கள் பயன்பெறுவார்கள்; ஆனால் நிறுவனம் பயன்பெறுவதில்லை.

இப்படி இருக்கும் மேலாளர்கள் எல்லாம் 'பாதி மேலாண்மை' செய்பவர்கள் தான். பணியையும் மேலாண்மை செய்ய வேண்டும்; பணிபுரிபவர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். மேலாண்மை என்றால் தகுந்த முறைப்படி எல்லாவற்றையும் செய்வது. அதனால் மக்களைக் கவனிக்காமல் பணியை மட்டுமே கவனிப்பதும் தவறு. பணியைக் கவனிக்காமல் மக்களை மட்டுமே கவனிப்பதும் தவறு.

நான் எந்த வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள். நான் இதில் ஒரு வகை என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் இருக்கும் தீமைகளைக் குறைக்க முயல்வதுண்டு. பல நேரம் வெற்றி பெற்றதுண்டு. சில நேரம் வெற்றி பெற்றதில்லை.

நீங்களும் இதில் எந்த வகை என்பதைச் சொல்லுங்கள்.

Saturday, May 05, 2007