Tuesday, April 12, 2011

அதுவும் அவன் பேரு தான்!

காலையில எந்திரிச்சதுல இருந்து ஒரே குதூகலமா இருக்கு மனசு. இராமநவமின்னாலே ஒவ்வொரு வருஷமும் மனசு சந்தோசத்துல குதிக்குது. நாள்பூரா பொழுது போறதே தெரியாம சொந்தக்காரங்களோட பொழுது போக்கலாம்.

எங்க பாட்டிவீட்டுக்காரங்க இராமநவமி அன்னிக்கு ஒவ்வொரு வருஷமும் (மதுரை சௌராஷ்ட்ர) ஹைஸ்கூல் எதிர்ல இருக்குற இராமர் கோவில்ல சாமி புறப்பாடு செய்வாங்க. அனுமார் வால் கோட்டை கட்டிக்கிட்டு மேலே உக்காந்திருக்கிற மாதிரி கோபுரம் இருக்குமே அந்த கோவில் தான். ஹைஸ்கூல்ல படிச்சவுங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஹைஸ்கூல்ன்னா கல் பள்ளிக்கூடம்; பசங்க பள்ளிக்கூடம். அனுப்பானடியில இருக்குற (சௌராஷ்ட்ர) பெண்கள் பள்ளிக்கூடம் இல்லை.கோவிலுக்கு எல்லாரும் வந்துட்டாங்க. கல்யாணம் ஆனபின்னாடி புதுப் பொண்டாட்டியோட நான் வர்ற முதல் இராமநவமி திருவிழா இது. அதனால எங்க ரெண்டு பேருக்கும் சொந்தக்காரங்ககிட்ட கவனிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு.

சாமி அலங்காரம் எல்லாம் முடிஞ்சு புறப்பாட்டுக்கு தயாரா இருக்கு. அய்யர், கோவில்காரங்க எல்லாரும் இருக்காங்க. ஆனா யாரையோ எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு. ஒரு சித்தப்பா இன்னும் வரலை. வீட்டு மாப்பிள்ளை வராம எப்படி சாமி புறப்பாடு செய்றது. அதனால எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க. கோவில்ல போன் இல்லை. பக்கத்துவீட்டுக்காரங்க தெரிஞ்சவங்க தான். மாமாக்கள் மாத்தி மாத்தி போயி சித்தப்பாவுக்கு போன் பண்ணிட்டு வர்றாங்க. இந்த சித்தப்பா இப்படித் தான். கொஞ்சம் பிகு பண்ணிக்குவார். நான் வராம நீங்க சாமி புறப்பாடு பண்ணிடுவீங்களான்னு ஒரு நினைப்பு. பத்து மணி ஆனபின்னாடி மெதுவா அந்த சித்தப்பா வந்துட்டார். "என்ன மாப்பிள்ளை? உங்களுக்காக எம்புட்டு நேரம் காத்திருக்கிறது? எங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?"ன்னு பெரியப்பாக்கள் எல்லாம் சிரிச்சுக்கிட்டே சத்தம் போடறாங்க. "போகட்டும் பாவா. பத்து மணி தானே ஆகுது'ன்னு சித்தப்பா சிரிச்சுக்கிட்டே பதில் சொல்றார்.

"ஆகட்டும் அய்யரே. ஆகட்டும் ஆகட்டும். எல்லாரும் வந்தாச்சு. சாமி புறப்பாடு செய்யலாம்"ன்னு தாத்தா அவசரப்படறார். அய்யரும் அவங்க அவசரத்துக்கு ஏத்தமாதிரி எல்லார்கிட்டயும் பேரு நட்சத்திரம் கேட்டு வேகவேகமா அர்ச்சனை பண்றார்.சாமி புறப்பாடு ஆனபின்னாடி சாமி கூட கொஞ்ச தூரம் போயிட்டு, பஸ், ஸ்கூட்டர், ஆட்டோன்னு ஏறி எல்லாரும் பாட்டிவீட்டுக்கு வந்துட்டாங்க. வீட்டு அய்யர் (வாத்தியார்) வந்து தயாரா இருக்கார். மாமாக்கள், மாமிகள் எல்லாரும் கச்சம் வச்சுக் கட்டிக்கிட்டு ஹோமத்துக்குத் தயார் ஆகிட்டாங்க. தசரத மகாராஜன் குழந்தைங்க வேணும்ன்னு புத்ரகாமேஷ்டி யாகம் செஞ்சாரில்லையா? அந்த மாதிரி ஒரு ஹோமம் ஒவ்வொரு வருஷமும் எங்க பாட்டிவீட்டுல செய்வாங்க. முன்னாடி எல்லாம் தாத்தாக்கள் பாட்டிகள் ஹோமத்துல உட்காருவாங்க. இப்ப ரெண்டு மூணு வருஷமா மாமாக்கள் உட்கார்றாங்க.

புதுமாப்பிள்ளைன்னு என்னை பெரியப்பா சித்தப்பாக்களோட முன்னாடி உக்கார வச்சிட்டாங்க. சாமி விஷயம்ன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து பிடிக்குங்கறதால நானும் முன்னாடி உக்காந்துக்கிட்டு அய்யர் சொல்ற மந்திரமெல்லாம் கவனிச்சு கேட்டுக்கிட்டு இருக்கேன்.

மணி பன்னெண்டு ஆச்சு. எல்லாருக்கும் பசிக்கத் தொடங்கியாச்சு. "ஆகட்டும் அய்யரே. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?"ன்னு பாவாக்கள் கேட்கத் தொடங்கிட்டாங்க. "இதோ ஆச்சு"ன்னு அய்யர் வேகமா மந்திரம் சொல்றாரு.

திடீர்ன்னு "பகவான் பொறந்தாச்சு. இராமர் பொறந்தாச்சு"ன்னு அய்யர் சொன்னவுடனே, ஊர் கதையெல்லாம் பேசிக்கிட்டு இருந்த சொந்தக்காரங்க எல்லாரும் ஹோமத்தைக் கவனிக்கத் தொடங்கிட்டாங்க. "இராமரைத் தூளியில போட்டு ஆட்டனும். யாரு சாமிக்கு மாமாவா இருக்க போறீங்க?"ன்னு அய்யர் கேட்டவுடனே, பெரிய மாமா " தம்பிக்கு இப்பத் தான் கல்யாணம் ஆயிருக்கு. அவனே பெருமாளை தூளியில போட்டு ஆட்டட்டும்"ன்னு சொல்லி என்னைக் கூப்புட்டாங்க. நானும் சந்தோஷமா போயி மாமா குடுத்த வேட்டியைத் தோள்ல தூளியா போட்டுக்கிட்டு வீட்டுல கும்புடற பெருமாள் விக்ரஹத்தை தூளியில வைச்சு ஆட்டத் தொடங்கினேன். "யாராவது பொண்ணுங்க பாட்டு பாடுங்க"ன்னு அய்யர் சொன்னவுடனே எல்லா பொண்ணுகளும் ஒவ்வொருத்தர் முகத்தைப் பாக்குறாங்களே ஒழிய யாரும் பாடலை. கொஞ்ச நேரம் தயங்கிட்டு நான் பாட்டுப் பாடத் தொடங்கினேன்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!


எல்லாரும் கவனிச்சுக் கேக்குறாங்கன்னு தெரியுது. நானும் சாவகாசமா பாட்டு பாடினேன். போதுமா இன்னும் ஒரு சரணம் பாடலாமான்னு நினைச்சுக்கிட்டே இருக்கிறப்ப அய்யர் "போதும்பா"ன்னு சொல்லிட்டார். "நல்லா இருந்துச்சுப்பா. யாரு எழுதுன பாட்டு?"ன்னு அய்யர் கேட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. இது குலசேகராழ்வார் பாசுரம்ன்னு அய்யருக்குக் கூட தெரியலையேன்னு. "எங்க பையனே பாட்டெல்லாம் நல்லா எழுதுவான்'னு இதுல பாட்டி வேற சொல்றாங்க. "இல்லை பாட்டி. இது நான் எழுதுனது இல்லை. குலசேகராழ்வார் பாசுரம்"ன்னு நான் சொல்ல வேண்டியிருந்தது. என்ன பண்றது? காலம் இப்படி ஆயிருச்சு.

"இப்ப பேரு வைக்கணும். என்ன பேரு வைக்கலாம்"ன்னு அய்யர் கேக்குறார். தாத்தா "ராமசந்த்ரமூர்த்தி'ன்னு சொன்னார். "அந்த பேரு ஒவ்வொரு வருஷமும் வைக்கிறது தானே தாத்தா. காகுஸ்தன்னு வைக்கலாம்"ன்னு சொல்லிட்டு நான் பெருமையா என் புதுப்பொண்டாட்டி பக்கம் பார்த்தேன். யாருக்கும் தெரியாம அவ மெதுவா தலையில அடிச்சுக்கிறா.

"இல்லைப்பா. எப்பவுமே ராமசந்த்ரமூர்த்தின்னு தான் பேரு வக்கிறது வழக்கம்"ன்னு பெரிய பெரியப்பா சொல்றார். "தெரியும் பெரியப்பா. என் மனசுல இந்த பேரு முன்னாடி வந்து நிக்குது. அதனால தான் சொல்றேன்"ன்னு சொன்னேன். 'புது மாப்பிள்ளை சொல்றான். ஆழ்வார் பாசுரம் எல்லாம் பாடறான். இவன் சொல்ற பேரு வைக்கிறதா பெரியவங்க சொல்ற பேரு வைக்கிறதா'ன்னு எல்லாரும் யோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அய்யர் "அதுவும் அவன் பேரு தான். அந்த பேரே வைக்கலாம்"ன்னு சொல்லிட்டு "தம்பீ. நீயே பேரு வைச்சுருப்பா"ன்னு சொன்னார். நான் பெருமாள் காதுல மூணு தடவை "காகுஸ்த காகுஸ்த காகுஸ்த"ன்னு சொன்னேன்.எல்லாரும் சாப்புட போனபின்னாடி அய்யர் தனியா என்கிட்ட "காகுஸ்தன்னா என்ன அர்த்தம்பா"ன்னு கேட்டதும் இந்த பேரு என் மனசுல எதுக்கு வந்ததுங்கறதை பின்னாடி நான் கண்டுபிடிச்சதையும் நான் உங்ககிட்ட சொல்லப் போறதில்லை!

**

முந்தைய இடுகையான 'தெல்லெ மெல்லி தெகொ நாவுஸ்!' என்ற சௌராஷ்ட்ர கதையின் மொழிபெயர்ப்பு.

7 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

:)
காகுத்தன், காகுத்தன், காகுத்தன்!

பாடின பாட்டிலேயே (பாசுரத்திலேயே) அதைவிட நல்ல பேரு ஒன்னு இருக்கே! கவனிக்கலை போலும்! :)

குமரன் (Kumaran) said...

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்க முடியுதா? இல்லாட்டி இப்போதைக்கு அப்போதே சொல்லி வைக்கத் தான் முடியுதா? பாட்டுல இருக்குற நல்ல பேரு இப்பத் தான் மனசுல முன்னாடி நிக்குது; அப்போதைக்கு காகுத்தன் தான் நின்னான். :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//காகுஸ்தன்னு வைக்கலாம்"ன்னு சொல்லிட்டு நான் பெருமையா என் புதுப்பொண்டாட்டி பக்கம் பார்த்தேன். யாருக்கும் தெரியாம அவ மெதுவா தலையில அடிச்சுக்கிறா//

:)
Awesome Anni!
அவிங்களுக்கு கூடத் தெரிஞ்சிருக்கு பாட்டில் இருக்கும் நல்ல பேரை இவரு விட்டுட்டாரே-ன்னு :)

சரி, யார் தலையில் (யாருக்கும் தெரியாமல்) அடிச்சாங்க? ஒங்க தலையில் தானே? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

காகுத்தன் - பரவாயில்லை! ஓக்கே! காகு காகு-ன்னு கொஞ்சம் அதே மாதிரித் தான் வருது! அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்! :)

அந்த வால் கோபுரப் புகைப்படம் இல்லீங்களா?

sury said...

//கொஞ்ச நேரம் தயங்கிட்டு நான் பாட்டுப் பாடத் தொடங்கினேன்.//

நீங்க பாடினதை வீடியோவா போட்டிருந்தா எத்தனை நன்னா இருக்கும் !!

போகட்டும். நான் இந்த பாசுரத்தை பாடணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேன்.
என் பையனுக்கு தூளி ஆட்டும்பொழுது 1969 லே பாடினது. அவனுக்கு இப்ப வயசு 42


இன்னிக்கு இன்னும் ஒருமுறை அந்த நீலாம்பரிலே பாட ஆசையா இருக்கு.
பாடிடறேன்.
யூ ட்யூபிலே போடறேன். வந்து கேளுங்கோ !!

சுப்பு தாத்தா.

குமரன் (Kumaran) said...

உங்க பையனை விட மூணு வயசு தான் நான் சின்னவன் சுப்பு ஐயா. பாடித் தந்ததற்கு நன்றிகள்.

http://www.youtube.com/watch?v=tARtoMYA07c&feature=player_embedded

குமரன் (Kumaran) said...

தேடிப் பார்த்தேன் இரவி. கோபுரம் படம் கிடைக்கவில்லை.