Wednesday, March 23, 2011

சூரியன் ஹாட்டா இருக்குறதால ஸ்னோ ஃப்லை பண்ணி போகும்

ஸ்னோ பூரா கோஸே சேந்தன்? அஸ்கி ஸ்னோ தெ3க்கானி.

தெங்கொ3 கொ4ம்மொ ஜேட்ரியொ!

தெங்கோ3 கொ4ம்மொ கோட் ஸேத்தே?

ஸுரிது3ம் ஸேத்தே!

ஸுரிது3ம்-ஆ? ஸ்னோ திக்கெ து3தூ4ர் ச2லி ச2லி ஜேடையா?

ச2லி ஜானா! ஸ்னோக் பாய்ன் ந்:ஹி! ஃப்லை கெரி ஜாய்!

ஃப்லை கெரி ஜாய்யா?

ஹாய். சன் ஹாட்கன் ஜேத்தெ ஹால்தி ஸ்னோ ஃப்லை கெரி ஜாய்!


சௌராஷ்ட்ரத்தில் எழுதச் சொல்லி சௌராஷ்ட்ர அன்பர்கள் பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு அன்பர் கடுமையாகக் கோவித்துக் கொண்டதில் இருந்து எழுத வேண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம். ஆனால் எடுத்தவுடனேயே எழுதிவிட முடிகிறதா என்ன? அதனால் குழவி அடிகளுடன் (baby steps) தொடங்குகிறேன். 

மேலே இருப்பது இதோ தமிழில்...

ஸ்னோ எல்லாம் எங்கே சேந்தன்? எல்லா ஸ்னோவும் காணோம்.

அவங்க வீட்டுக்குப் போயிருச்சு.

அவங்க வீடு எங்கே இருக்கு?

சூரியனில் இருக்கு.

சூரியன்லயா? ஸ்னோ அவ்வளவு தூரம் நடந்து நடந்து போயிருச்சா?

நடந்து போகாது. ஸ்னோவுக்குக் கால் இல்லை. ஃப்லை பண்ணி போகும்.

ஃப்லை பண்ணி போகுமா?

ஆமாம். சூரியன் ஹாட்டா இருக்குறதால ஸ்னோ ஃப்லை பண்ணி போகும்.

Tuesday, March 22, 2011

அப்பாவும் சிக்கன் துண்டுகளும்....

அமெரிக்க வரலாற்றைப் பற்றிய கேள்வி பதில்களுடன் ஒரு குறுவட்டு இருக்கிறது. அதனை நேற்று மகிழுந்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். மகனும் மகளும் அப்போது வண்டியில் இருந்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பின் ஒரு சிறு இடைவெளி விட்டு பின்னர் பதில் வந்து கொண்டிருந்தது. அப்போது வந்த இரு கேள்விகளும் அதற்கு சேந்தன் சொன்ன பதில்களும்:

Who is the Father of our country?

Baabaa

இரு குழந்தைகளும் என்னை பாபா என்று அழைப்பார்கள். ஃபாதர் என்ற சொல்லைக் கேட்டவுடன் உடனே என்னைத் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து இந்த பதிலைச் சொல்லிவிட்டான். நானும் மகளும் இந்தப் பதிலைக் கேட்டு வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த கேள்வி வந்தது.

What territory did the United States buy from France in 1803?

Chicken Nuggets

Purchase என்ற சொல் மட்டும் புரிந்தது போல. உடனே அவனது விருப்ப உணவைச் சொல்லிவிட்டான். விழுந்து விழுந்து சிரித்தோம்.

Friday, March 18, 2011

பங்குனி உத்திரத் திருநாள்!

இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.




வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.


கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

***

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.


(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)

***

துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.

உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.

இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.



அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

***

மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

***

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

***


தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.

கண்ட நாள் முதலாய்...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு!



கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி!
கையினில் வேல் பிடித்த, கருணைச் சிவ பாலனை!
(கண்ட நாள் முதலாய்)

வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்
வந்து, சுகம் தந்த, கந்தனை, என் காந்தனை!
(கண்ட நாள் முதலாய்)

நீல மயில் தனை, நெஞ்சமும் மறக்கவில்லை!
நேசமுடன் கலந்த, பாசமும் மறையவில்லை!
கோலக் குமரர், மனக் கோயிலில் நிறைந்துவிட்டார்!
குறுநகை தனைக் காட்டி, நறுமலர் சூட்டி விட்டார்!
(கண்ட நாள் முதலாய்)

Thursday, March 17, 2011

ஆராவமுதே - சில கேள்விகள்!

ஆழ்வாரின் ஆராவமுதே திருவாய்மொழியில் முதல் பாசுரத்தின் பொருளை - முன்னோர் சொன்ன பொருளின் திரண்ட கருத்துகளை - மூன்று இடுகைகளில் எழுதியிருக்கிறேன். அவற்றைப் பதிவில் வந்தோ கூகிள் ரீடரிலோ படித்த அன்பர்களுக்கு சில கேள்விகள்:

1. எழுதியவை சுவையாக இருந்ததா? சுவை இன்னும் கூடுதலாக எழுத வேண்டுமா? அப்படியென்றால் என்ன செய்யலாம்?
2. எளிமையாக இருந்ததா? இன்னும் எளிமை வேண்டுமென்றால் என்ன செய்யலாம்?
3. இத்துடன் பாசுரப் பொருள் சொல்வதைத் தொடரலாமா? அப்படித் தொடர்வதென்றால் விரிவாக எழுத வேண்டுமா? சுருக்கமாக எழுதினால் போதுமா?
4. தொடரவேண்டாம் என்றால் என்ன வகையான பதிவுகள் எழுதலாம்? ஏற்கனவே நான் எழுதியிருக்கும் வகைகளில் இருந்து சொல்லுங்கள்.

Saturday, March 12, 2011

கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால்நிலா



கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால்நிலா
நீதானே வானிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா (கல்யாணத் தேனிலா)

தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் தூறலா
என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலா வா வா நிலா ஆ ஆ அ (கல்யாணத் தேனிலா)

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப் பலா உன் சொல்லிலா ஆ ஆ ஆ (கல்யாணத் தேனிலா)

இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜேசுதாஸ், சித்ரா
திரைப்படம்: மௌனம் சம்மதம்

Saturday, March 05, 2011

ஆராவமுதே! - 3



"நெடுமால் ஆழ்வார் மேல் கொண்டுள்ள அன்பால் ஆழ்வாரின் உடலமும் அன்பாகி நீர்பண்டம் போல் உருகி நிற்கச் செய்தான். ஆனால் அவனது அந்த அன்பின் வெளிப்பாடாக குளிர நோக்குதல், வாவென்று அழைத்தல், நலம் வினவுதல், ஆரத் தழுவுதல் என்று ஒன்றுமே செய்யவில்லை. குளிர்ந்த காற்று வீசவும் அதில் மயங்கி உறங்குபவன் போல் தன் திருமேனியின் அழகெல்லாம் நன்கு திகழும்படி கிடந்தான். நீ கிடந்ததை மட்டும் தான் காண்கிறேன் என் தலைவனே; உன் அன்பின் வெளிப்பாடுகளைக் காணவில்லை என்கிறார் ஆழ்வார்"

"ஆழ்வார் இதனை எல்லாம் பாசுரத்தில் சொல்லியிருக்கிறாரா? ஆகா அருமை. எப்படி என்று விளக்குங்கள்".

"சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

என்பவை இந்த பாசுரத்தின் அடுத்த அடிகள்.

தூமலர்த் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து என்று உடல், மொழி, மனம் என்ற மூன்றாலும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே உயிர்களின் இயல்பு என்று சான்றோர் சொல்வார்கள் அல்லவா? பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவுள்ள உயிர்கள் மட்டுமின்றி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களுக்கும் அது தானே இயல்பு. அந்த இயல்பையே செந்நெல்லின் சீர் என்று ஆழ்வார் இங்கே குறிக்கிறார்.

காற்றில் இயல்பாக ஆடி அசையும் செந்நெல்லைக் கண்டு அது இறைவனுக்குக் கவரி வீசுவதாகச் சொல்லலாமே என்று ஒரு மறுப்பு எழலாம். அப்படி சொல்லலாம் தான். ஆனால் இந்த ஆழ்வாரும் ஆழ்வாரை அடிமை கொண்டுள்ள இறைவனும், உயிர்களுக்கும் இறைவனுக்கும் இயல்பாக அமைந்துள்ள உடைமை உடையவன் என்ற தொடர்பை நன்கு உணர்ந்தவர்கள் என்பதால் அவ்விருவர் பார்வைக்கும் காற்றில் அசையும் செந்நெல் இறைவனுக்குத் தொண்டு செய்வது போன்றே தோன்றுகிறது.

ஆழ்வார் என்றும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே தன் இயல்பு என்பதை உணர்ந்தவர் என்பதாலும் அதுவே எல்லா உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்று அறிந்ததாலும் செந்நெலும் இறைவன் உறங்க கவரி வீசித் தொண்டு செய்வதாக நினைக்கிறார்.

இயல்பாக உயிர்களிடத்தில் தனக்குத் தோன்றும் கருணையை வாரி வழங்க தற்செயலாக ஏதேனும் ஒன்றை உயிர் செய்யாதா என்று எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவனும் தற்செயலாக ஆடும் செந்நெல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எண்ணிக் கொண்டு அதற்கு தன் கருணை என்னும் செழுநீரை வாரி வழங்குகிறான்".

"ஆகா. ஆகா. அடுத்த முறை திவ்ய தேசங்களில் தற்செயலாக ஆடும் மரம் செடி கொடிகளைக் கண்டால் இந்த நினைவு வந்து தானே நம் கைகள் வணங்காதா?! அதனைக் கண்டு இறைவனும் ஆஆ என்று ஆராய்ந்து அருளானா?! அவன் திருவுள்ளம் தான் உகக்காதா?! ஆழ்வாரின் அமுத மொழிகள் நம் நினைவில் என்றும் நின்று அவன் உள்ளம் உகக்கும்படி செய்யட்டும்!"

"உண்மை தான் பகவரே. ஆழ்வார் பாசுரங்களில் ஒரு சொல் போதுமே உலகைக் கடைத்தேற்ற.

இப்படி தொண்டு என்னும் சீர் நிறைந்த செந்நெல் இறைவனின் அருள் என்று சொல்லலாம்படியான செழுமையான நீர் நிலைகளில் நின்று ஆடி அசைந்து கவரி வீசும் ஊர் திருக்குடந்தை. அந்த திருப்பதியில் தனது அழகெல்லாம் திகழும் படியாக இறைவன் உறங்குகின்றான்.

சிலரை நிற்கும் போது பார்த்தால் அழகாக இருப்பார்கள். சிலர் அமரும் போது அவர்களது அழகு வெளிப்படும். ஆனால் இவனுக்கோ இவனது ஒப்பில்லாத அழகு எல்லாம் கிடக்கும் போது தான் திகழ்ந்து விளங்குகிறது. அப்படி அழகெல்லாம் திகழும் படியாக இவன் திருக்குடந்தையிலே கிடக்கிறான். அதனைக் கண்டேன் என்கிறார் ஆழ்வார்".

"கண்டேன் எம்மானே என்று தானே சொன்னார். வருத்தப்படுவதாக தேவரீர் சொன்னீர்களே"

"ஆமாம் பகவரே. திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே என்று சொல்லும் போது என் உயிரையும் உடலையும் உருக்கும் திருக்கோலத்தைக் கண்டது மட்டும் தான் உண்டு; ஆனால் நான் எதிர்பார்த்து வந்தவை நடக்கவில்லை என்று சொல்வதாகத் தானே பொருள். வந்தாயா என்று அன்புடன் வினவுதல், தாமரைக்கண் திறந்து குளிரக் காணுதல், ஆரத்தழுவுதல் போன்றவை தானே இவர் விரும்பி வந்தவை. அவற்றை எல்லாம் காணேன். கிடந்ததை மட்டுமே கண்டேன் என்கிறார்.

வாரும் பிள்ளாய். அருகில் அமருக".

வந்த இளைஞன் இருவரையும் பணிந்து அமர்கிறான்.




"இவன் பெயர் கண்ணபிரான். எம்பெருமானார் திருவுள்ளம் எதையெல்லாம் விரும்பியதோ அவற்றை பற்றியே என்றும் சிந்திக்கும் உள்ளத்தவன்.

பிள்ளாய். ஆழ்வாரின் ஆராவமுதே பாசுரத்தின் பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்".

"ஐயா. அடியேன் தேவரீர் திருமாளிகைப் புறத்திலே நின்று தேவரீர் அருளியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் புக வேண்டாம் என்று தயங்கி நின்றிருந்தேன்".

"பெரியோரை மதிக்கும் உன் பணிவைத் தான் இந்த ஊரே நன்கு அறியுமே. இடையில் புக வேண்டாம் என்று தயங்கிய நீ இப்போது வந்தது ஏனோ?"

"சீரார் செந்நெல் கவரி வீசும் என்ற ஆழ்வார் அருளிச்செயலின் இருக்கும் இன்னொரு அருத்த விசேஷமும் மனத்தில் தோன்றியதால் அதனை தங்களிடம் விண்ணப்பிக்க உள்ளே நுழைந்தேன். அடியேனை மன்னிக்கவேண்டும்"

"ஆகா. இன்னொரு அருத்த விஷேசமா? எம்பெருமானார் திருவுள்ளம் போன்ற உள்ளம் அல்லவா உன்னது. அந்தப் பொருளையும் சொல். கேட்போம்!"

"எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது தான் உயிர்களின் இயல்பு என்பதை லக்ஷ்மி சம்பன்னான இளைய பெருமாளும் பரதாழ்வானும் காட்டி நின்ற போது எம்பெருமான் தொண்டு என்பதோ நம் இயல்புக்கு சத்ரு எம்பெருமான் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே நம் இயல்பு என்று நின்றானே சத்ருக்கனாழ்வான். அவனைப் போன்றது இந்த சீரார் செந்நெல்".

"ஆகா. ஆகா. ஆழ்ந்த பொருள் சொன்னாய் கண்ணபிரான். இன்னும் எளிமையாக விளக்கமாகச் சொல்".

"இறைவனுக்குத் தொண்டு செய்வது உயிர்களின் இயல்பு. பெருமாள் காட்டில் வாழ்ந்த காலம் எல்லாம் இளைய பெருமாள் தொண்டே வடிவாக இருந்து உயிர்களின் இயல்பினை விளக்கும் ஓர் அரிய எடுத்துக் காட்டாக இருந்தான்".

"ஆமாம்".

"ஆனால் அவனும் காட்டுக்கு என்னுடன் வராதே என்ற காகுத்தனின் சொல்லை மறுத்து அடம் பிடித்து அவனுடன் காட்டுக்கு ஏகி நிலையான தொண்டினைச் செய்தான். தொண்டிலே அவனுக்கு ஊக்கம்".

"ஆமாம்".

"பரதனோ சுவர்க்கமோ நரகமோ நாடோ காடோ எங்கே நீ என்னை இருத்துகிறாயோ அங்கேயே இருக்கிறேன் என்று பரமன் சொல்படி பாதுகா ராஜ்யம் என்னும் மகா பாரத்தைச் சுமந்தான். அவன் இளையபெருமாளை விட ஒரு படி ஏற்றம்".

"ஆமாம்".

"இவ்விரு வகையில் இறைவனுக்குத் தொண்டு செய்வது இதனை விட உயர்ந்ததான அடியவருக்குத் தொண்டு செய்யும் பேற்றினை அடையாமல் செய்துவிடும். அதனால் பகவத் கைங்கர்யம் என்பதே மகாவிரோதி! சத்ரு! இப்படி எண்ணிக் கொண்டு இராகவனுக்கு மட்டுமே தொண்டு செய்யாமல் அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே சிறப்பு என்று பரதனுக்குத் தொண்டு செய்தான் சத்ருக்னன். பகவத் கைங்கர்யம் என்னும் மகாசத்ருவை வென்று பாகவத கைங்கர்யம் என்னும் அடியவர் தொண்டில் ஆட்பட்டதால் அன்றோ அவன் சத்ருக்களை வென்றவன் சத்ருக்னன் என்று புகழ் பெற்றான்"

"ஆகா. உண்மை. உண்மை. சீரார் செந்நெல் எந்த வகையில் சத்ருக்னனைப் போன்றது என்றும் விளக்கமாகச் சொல்".

"ஆடி அசையும் செந்நெல் இலக்குவனைப் போல் தனக்கு கவரி வீசித் தொண்டு செய்வதாக எம்பெருமான் நினைத்துக் கொள்கிறான். அருகில் இருந்து தொண்டு செய்ய இயலாமல் செழுநீர்க் குளத்தில் இருந்து கவரி வீசுவதால் பரதனைப் போல் என்று ஆழ்வார் எண்ணிக் கொள்கிறார். ஆனால் இவ்விரண்டையும் இந்த சீர் பெறும் செந்நெல் செய்யவில்லை. அடியவர்களின் தலைவரான ஆழ்வார் திருக்குடந்தையில் நுழைவதைக் கண்டு அவருக்குத் தானே கவரி வீசி வரவேற்கிறது இந்த செந்நெல்! அதனைத் தான் சொன்னேன்!"

"ஆகா. ஆகா. என்ன அற்புதமான விளக்கம். ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே!"