Friday, October 08, 2010

ஓர் உருவம் ஒரு பெயர் இல்லாததற்கு ஆயிரம் உருவங்கள் ஆயிரம் திருப்பெயர்கள்!


உங்கள் ஊர் திருக்கோவிலில் நீங்கள் கண்டு மகிழ்ந்த தெய்வ அலங்காரங்களை தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து வணங்க முடியாத நிலையா உங்களுக்கு?! அதனால் ஏங்குகின்றீர்களா?

திருவிழாக்கள் நடக்கும் போது நாம் அங்கில்லையே என்று எண்ணி வருந்தியதுண்டா?

இடுகை இடும் போது அலங்காரத்துடன் கூடிய தெய்வத் திருமேனிகளின் படம் வேண்டுமென்று கூகிளாரைக் கேட்டு அவர் நீங்கள் விரும்பும் படங்களைத் தரவில்லையா?

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நீங்கள் செல்ல வேண்டிய இடம் நமது கைலாஷி ஐயாவின் பதிவுகளுக்கே!

கைலாய யாத்திரையை மேற்கொண்டவர் என்பதால் கைலாஷி! அஹோபில யாத்திரையும் மேற்கொண்டவர்! முருகான (அழகான) தெய்வத் திருமேனிகளை அழகாகப் படம் பிடித்துத் தன் பதிவில் இட்டு அனைவருக்கும் ஆனந்தம் தருகிறார் இந்த கைலாஷி முருகானந்தம்! எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது இவரது பணிவும் பண்பும். இவருடைய பணிவும் பண்பும் பதிவுகளில் இருக்கும் ஒவ்வொரு சொல்லிலும் துலங்கும்!

கொஞ்சமே கொஞ்சம் இலக்கியம் தெரிந்தவர்கள் எல்லாம் அனைத்தும் அறிந்தவர் போல் ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று யாராவது அழைத்தால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும் போது ஆழ்வார் அருளிச்செயல்களும் நாயன்மார் தேவாரமும் நன்கு அறிந்து தகுந்த இடத்தில் தகுந்த வகையில் தகுந்த பாடல்களை இட்டு இவர் எழுதுவதைப் பார்த்தால் இவரே ஆன்மிக சூப்பர் ஸ்டார் என்று சொல்லத் தோன்றும். இவரும் மற்ற ஆன்மீக பதிவர்களும் மலையும் மடுவும் போன்று என்று சொன்னாலும் தகும்!

இறையுருவங்களில் எனக்கு பேதமில்லை பேதமில்லை என்று பறை சாற்றிக் கொண்டே முருகன், கண்ணன், சிவன், அம்மன் என்று நேரடியாகவும் மறைவாகவும் பிற ஆன்மிகப் பதிவர்கள் பிதற்றிக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் பேசாமல் கருமமே கண்ணாய் சேவையே தேவையாய் ஆலய தரிசனங்கள் செய்து, 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எண்ணி தெய்வத் திருப்படங்களைத் தொடர்ந்து இட்டு வரும் கைலாஷி ஐயாவின் பதிவுகளை நீங்களும் தொடர்ந்து பார்த்துப் படித்துப் பாராட்டி வர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மேலே உள்ள படம் கைலாஷி ஐயாவின் பதிவில் இருந்து சுபவரம் என்ற இதழ் எடுத்து இட்ட படங்களின் தொகுப்பு. ஐயாவைப் பற்றிய சிறு குறிப்பும் அதில் இருக்கிறது.

கைலாஷி முருகானந்தம் ஐயாவின் பதிவுகள்:

அன்னையின் நவராத்திரி: அன்னையின் நவராத்திரி அலங்காரப் படங்கள்

ந்ருஸிம்ஹர்: விண்ணவனின் அலங்காரப் படங்கள்

கைலாய மானசரோவர் யாத்திரை: திருக்கயிலாய தரிசனப் படங்கள்

வைகுந்த ஏகாதசி: தமிழ்ப்பெருவிழாவான ஆழ்வார் அருளிச்செயல் விழா படங்கள்

கயிலையே மயிலை: திருமயிலை திருவிழா படங்கள்

கருடசேவை: புள்ளேறும் பெருமாளின் படங்கள்

அம்பலத்தரசே அருமருந்தே: சிவாலயங்களின் படங்கள்

திருப்பாவை: ஆண்டாளின் திருப்பாவையின் விளக்கங்கள்

திருவெம்பாவை: மாணிக்கவாசகரின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கங்கள்

அன்பன்,
குமரன்.

குறிப்பு: தொடர்ந்து இப்படி என்னைக் கவர்ந்த பதிவுகளை/பதிவர்களைப் பற்றி எழுதலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

16 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// கூகிளாரைக் கேட்டு அவர் நீங்கள் விரும்பும் படங்களைத் தரவில்லையா?//

எக்ஜாக்ட்லி! ஆன்மீக கூகுளார்-ன்னா அது கைலாஷி ஐயாவே தான்! :)

எல்லாத்தையும் சொன்னீங்க! ஒன்னை மட்டும் விட்டுட்டீங்களே குமரன் அண்ணா!

கைலாஷி ஐயா நல்ல புகைப்படக் கலைஞரும் கூட! இயற்கைப் படங்களை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்! PiT போட்டிக்கெல்லாம் அனுப்பி இருக்காரு! இதோ http://thirumoorthi.blogspot.com

ஆனா அதுலயும் சில சமயம் ஆன்மீகம் வந்து விடும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கைலாஷி ஐயாவிடம் பிடித்த குணம், "கைங்கர்யம்" என்ற அந்தத் தொண்டு நோக்கு தான்!

வெறும் பதிவு தானே, "வாங்க, வருகைக்கு நன்றி"-ன்னு வாய் அளவில் சொல்லிடாது, அடியார்கள் அனுபவித்து மகிழ வேண்டும் என்ற நோக்கில், தான் விழாவுக்குப் போக முடியாவிட்டாலும், அங்குள்ள நண்பர்களிடம் சொல்லி, புகைப்படம் எடுத்து, அதையும் இங்கு மெனக்கெட்டு வெளியிடுவார்!

இந்த "மெனக்கெடுதல்" என்னும் குணம், தான் மட்டும் அனுபவியாது கூடி இருந்து குளிர வேணும் என்னும் குணம் - இது கைங்கர்யபாரர்களுக்கே உரித்தானது!

கைங்கர்யச் செம்மல் கைலாஷி ஐயா - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!!

sury siva said...

// எழுதலாமா //

லாம்

suppu thatha.

Kavinaya said...

நீங்கள் இதனை பதிவாக இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது, குமரா :) நல்ல விஷயம். கைலாஷி அவர்களின் சேவை தொடரட்டும்.

நீங்களும் தொடருங்கள் ;)

குமரன் (Kumaran) said...

புகைப்படப் பதிவும் வரிசையில் இருந்தது இரவி. எப்படி தப்பியது என்று தெரியவில்லை. நான் அந்தப் பதிவை அவ்வளவாகப் பார்க்கவில்லை என்பதால் இருக்கலாம். :-)

இந்த 'மெனக்கிடுதல்' எனக்குத் தெரிந்த 'அடியேன் சிறிய ஞானத்த'னுக்குக் கொஞ்சம் கூட இல்லை இரவி. சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி சுப்பு தாத்தா.

குமரன் (Kumaran) said...

நான் எழுதியதில் அப்படி என்ன சிறப்பு அக்கா? மற்றவர்களைப் பாராட்டுவதே இல்லையோ நான்? அதனால் தான் அப்படி சொல்கிறீர்களா? :-)

தொடர்கிறேன்.

Kavinaya said...

அடக் கடவுளே! அப்படி ஒரு பொருள் வருதா :( ஆனா நான் சொன்னது அதில்ல. அவர் பதிவில் மட்டும் போய் பாராட்டாமல், தனிப் பதிவே இட்டு சிறப்பித்ததைச் சொன்னேம்ப்பா :)

நாடி நாடி நரசிங்கா! said...

கைலாஷி ஐயாவா! மிகவும் பிடிக்கும்!

அஹோபில நரசிம்மர் கோவிலை பற்றி அவர் பதிவில்தான் தெரிந்து கொண்டேன்
மிக்க நன்றி!

jeevagv said...

கைலாசி ஐயா பற்றி எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் குமரன்.

பிரகாசம் said...

""குறிப்பு: தொடர்ந்து இப்படி என்னைக் கவர்ந்த பதிவுகளை/பதிவர்களைப் பற்றி எழுதலாமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டங்களில் சொல்லுங்கள்""

கண்டிப்பாக எழுதுங்கள். நானும் 5 வருடங்களுக்குமுன்பே அஹோபிலம் சென்று நவநரசிம்மர்களை தரிசித்து வந்திருக்கிறேன். ஆனால் திரு.கைலாஷி அவர்கள் போல விபரமாக எழுதவேண்டும் என்று ஏனோ தோன்றாமல் போய் விட்டது. தங்கள் தயவில்தான் அவரின் பதிவைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மிக்க நன்றி

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜேஷ், ஜீவா,பிரகாசம் ஐயா.

பிரகாசம் ஐயா, ஏதோ என்னால் ஆனது. இன்னும் நிறைய எழுத வேண்டும்.

Radha said...

மிக்க நன்றி குமரன்.
இவரது பதிவுகளைப் பார்த்து எனக்கும் கேமரா வாங்க வேண்டும் என்றும் ஆசை வந்து விட்டது. :-)

குமரன் (Kumaran) said...

கட்டாயம் வாங்குங்க இராதா. நீங்க இவரை மாதிரி படம் எடுத்துப் பதிவு போடுவீங்கன்னா நானே பரிசா ஒரு நல்ல டிஜிட்டல் காமெரா வாங்கிக் அனுப்புறேன். :-)

S.Muruganandam said...

அடியேனுக்காக ஒரு தனிப் பதிவா? மிக்க நன்றி குமரன் ஐயா.

தங்களைப்போன்ற அன்பர்களின் ஆதரவினால்தான் இன்னும் சமயம் இல்லாதபோதிலும் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தங்களுக்கும் மற்றும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

வழக்கம் போல் தாமதமாக வந்ததற்க்கு மன்னிக்கவும்.

குமரன் (Kumaran) said...

தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டும் கைலாஷி ஐயா. உங்கள் ஆர்வமும் ஊக்கமும் தொண்டும் மிக உன்னதமானவை.