Saturday, October 23, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 1




வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாலோ ஊரார் பழிச்சொற்களை அஞ்சியோ தலைவியைக் காண முடியாமல் தவிக்கும் தலைவன், தன் காதலை ஊரார் அறியச் சொல்லித் தலைவியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்று கூறுவது 'நாணுத்துறவுரைத்தல்' என்னும் இந்த அதிகாரம்.

***

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல் அல்லது இல்லை வலி.

காதல் மிகுந்ததால் வருந்தி காதலியைக் காண முயன்றும் இயலாதவருக்கு தமது உயிரைக் காக்கும் காப்பாக அமைகின்றவற்றில் மடல் ஏறுதலே மிகுந்த வலிமையுடையதாகும்.

காமம் உழந்து வருந்தினார்க்கு - காதல் மிகுந்து முயன்று வருந்தியவர்களுக்கு

ஏமம் - காப்பாக அமைவதில்

மடல் அல்லது இல்லை வலி - மடலை விட வலிமையானது இல்லை.

காதலன் கூற்றாக அமைகிறது முதல் குறள். காதலியைக் கண்டு இயற்கைப் புணர்ச்சியில் மகிழ்ந்து காலம் கழிக்க உதவியாக இருந்த தோழி இப்போது அந்த உதவியைச் செய்ய மறுத்த போது காதல் நோயால் மிகுந்த துன்பம் கொண்ட தலைவன் மடல் ஏறுவதை விட வேறு வழி தனக்கு இல்லை என்று கூறுகிறான்.

தலைவி காவலில் இருந்தாலும் தோழியின் உதவி இருந்தால் காவலைக் கடந்து தனது காதலியைக் காண்பான் தலைவன். பெற்றோரும் உற்றோரும் அறியாமல் தலைவனும் தலைவியும் சேர்ந்து வீட்டை விட்டுச் செல்வதற்கும் (உடன்போக்கு) தோழியின் உதவி வேண்டும். இப்படி காதல் மிகுந்து வாடுபவர்களுக்கு காப்பாக அமையும் சில வழிகள் உண்டு. இங்கே அவை பயன் தராமையால் மடல் ஏறுவதே சிறந்த காப்பு. அதனால் நாணத்தை விட்டு மடல் ஏறுவேன் என்கிறான் காதலன்.

***

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.


காதலியின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தைப் பொறுக்காத உடம்பும் உயிரும் நாணத்தை நீக்கி வேறிடத்தே நிறுத்திவிட்டு மடல் ஏறும்.

நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - பொறுக்க முடியாத உடம்பும் உயிரும் மடல் ஏறும்

நாணினை நீக்கி நிறுத்து - நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு.

'ஊராரின் மதிப்பில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர். அந்த மதிப்பை இழக்கும் படி உமது நாணத்தை விட்டுவிட்டு உம்மால் மடல் ஏற இயலாது' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'காதல் மிகுதியால் பிரிவுத்துன்பம் மேலிட்டு என் உடலுடன் உயிர் நிற்காது போலிருக்கிறது. அதனால் எனது நாணத்தை தனியே நீக்கி நிறுத்திவிட்டு உயிரும் தூண்ட உயிரும் உடலும் இரண்டுமே சேர்ந்து மடல் ஏறும். இது உறுதி' என்றான் காதலன்.

நாணம் உடலைக் கூனிக் குறுகச் செய்யும். ஆனால் உயிரும் இங்கே துன்பப்படுவதால் அந்த உயிரின் தூண்டுதலால் துன்பத்தைப் பொறுக்காத உடலும் உயிரும் ஒருங்கே மடல் ஏறத் துணிந்துவிட்டன என்கிறான் காதலன்.

***



நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

நாணமும் நல்ல ஆண்மைக்குணமும் முன்பு உடையவனாக இருந்தேன். ஆனால் இன்றோ காதலில் துன்பப்படுபவர்கள் ஏறும் மடல் என்பதை மட்டுமே உடையவனாக ஆனேன்.

நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் - நாணத்தொடு நல்லாண்மையும் முன்னர் உடையவனாக இருந்தேன்.

இன்று உடையேன் காமுற்றார் ஏறும் மடல் - இன்றோ காதல் கொண்டவர்கள் ஏறும் மடலை உடையவனாக இருக்கிறேன்.

'இழிவிற்கு அஞ்சும் நாணத்தை மட்டுமே உம்மால் விட இயலும். ஒன்றிற்கும் தளராத ஆண்மைக் குணம் உம்மிடம் இருக்கிறது. அதனால் காதல் துன்பத்தால் தளர மாட்டீர். மடலும் ஏற மாட்டீர்' என்று கூறிய தோழியிடம் காதலன் கூறும் மறுமொழி இது.

'நாணத்தையும் எதற்கும் தளராத ஆண்மையையும் உடையவனாக முன்னர் இருந்தேன். ஆனால் இப்போதோ காதலியின் பிரிவால் நாணத்தையும் ஆண்மைக் குணத்தையும் இழந்து காதலர்களின் ஒரே கதியான மடல் ஏறுதல் மட்டுமே உடையவனாக இருக்கிறேன்' என்று கூறுகிறான் காதலன்.

***



காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாண், நல்லாண்மை என்னும் படகுகளை காதல் என்னும் காட்டுவெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே.

காமக் கடும்புனல் - காதல் என்னும் கடுமையான வெள்ளம்

உய்க்குமே - அடித்துக் கொண்டு செல்லுமே

நாணொடு நல்லாண்மை என்னும் புணை - நாணத்தொடு ஆண்மை என்னும் மிதவைகளை.


'எல்லா துன்பங்களையும் உமது நாணம், எதற்கும் தளராத ஆண்மை என்னும் குணங்களால் தாண்டுவீர்களே' என்ற தோழியிடம் 'நாணம், நல்ல ஆண்மை என்னும் மிதவைகள் வேறு ஆறுகளைக் கடப்பதற்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். இந்த காதல் என்னும் காட்டு வெள்ளத்தைக் கடப்பதற்கு உதவவில்லை. இந்தக் கடும்புனல் அவற்றை அடித்துக் கொண்டு செல்கிறது' என்று கூறினான் காதலன்.

***

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய என் காதலி தான் மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயரத்தையும் அந்தத் துயரத்தைத் தாங்க முடியாமல் ஏறும் மடலையும் தந்தாள்.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் - மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையல்களை உடைய தலைவி தந்தாள்

மடலொடு - மடல் ஏறுதலுடன்

மாலை உழக்கும் துயர் - மாலை நேரத்தில் என்னை நோகவைக்கும் துயர்.

'நாணத்தையும் ஆண்மையையும் விடும்படியான இந்த நிலைமையை நீர் எப்படி அடைந்தீர்?' என்று வியந்த தோழியிடம் 'இந்தத் துன்பத்தையும் மடலேறும் துணிவையும் தந்தவள் உன் தலைவி தான்' என்று சொல்கிறான் தலைவன்.

காதல் நோய் எல்லா நேரத்திலும் துன்பத்தைக் கொடுத்தாலும் மாலை நேரத்தில் மிகுதியான துன்பத்தைக் கொடுக்கும் என்பதால் அதனை 'மாலை உழக்கும் துயர்' என்றான் தலைவன்.

தலைவி மிகவும் மென்மையானவள் என்றும், அவள் தானே ஒன்றைச் செய்யும் வயதினள் இல்லை; தோழியின் காவலில் இருக்கும் இளவயதினள் என்றும் கூறுவதற்காக மாலை போல் தொடுக்கப்பட்ட சிறிய வளையலை அணிந்தவள் என்று தலைவியைக் குறித்தான். அவள் தந்த நோயை அவளே போக்க வேண்டும். அவள் தோழியின் காவலில் இருப்பதால் தோழியே அதற்கு உதவ வேண்டும் என்று குறிப்பால் வேண்டினான்.

(தொடரும்)

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)
ஐ லைக் மடலேறுதல்! என்ன தனியா ஏறாமல் ஜாயின்ட்டா ஏறலாம்! பெத்தவங்க ரெண்டு சைடுலயும் பயந்து கண்ணாலம் கட்டி வச்சிருவாக! :)

மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவதுண்டு அதனை யாம் தெளியோம்!
மன்னு "வடநெறியே" வேண்டினோம்!!! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//காமக் கடும்புனல்//

என்னமா சொல்லாட்சி நம்ம ஐயன் கிட்ட!
ஏன் கடும்புனல்-ன்னு சொல்லணும்?

பெரு வெள்ளம்-ன்னா, அதுக்கு முன்னாடியே பெரு மழை பெய்ஞ்சி, ஏரி குளம் உடைத்திருக்கணும்! அப்ப தானே கடும்புனல் வரும்?
இங்கே காதலர்க்கு என்ன பெய்து, எது உடைந்தது, வெள்ளம் வர? சொல்லுங்க பார்ப்போம்!

தெரிலீன்னா செஞ்-சொற்கொல்லர் கிட்ட கேளுங்க! அங்கன எப்பவோ, எந்தப் பதிவிலோ இதுக்கு வெளக்கம் குடுத்திருக்கேன்! :)

குமரன் (Kumaran) said...

சும்மா மடலேறுவேன்னு பயமுறுத்தாம உண்மையிலேயே மடல் ஏறுனதைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சி ஏதாவது இலக்கியம் பேசுதா இரவி?

எங்கே, எந்தப் பதிவில, எப்ப, என்ன சொன்னீங்கன்னு சொன்னாத்தான் தேடிப் பார்ப்பேன். உங்களுக்குத் தான் என்னைப் பத்தி தெரியுமே. கூடல்ல நானே எப்பவோ சொன்னதே எனக்கு நினைவிருக்காது. :-)