தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் அளவில்லாத காதல் கொண்டு, தாய் தந்தையர் உற்றார் உறவினர் ஊரார் என யாரும் அறியாமல், சில நேரங்களில் நெருங்கிய தோழியர்களும் அறியாமல், திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழ்வது சங்க காலத்தில் ஏற்கப்பட்ட இலக்கிய மரபாக இருந்தது. அதனைக் களவியல் என்றார்கள். அனைவரும் அறிய மணம் செய்து கொண்டு வாழ்ந்ததை கற்பியல் என்றார்கள்.
தமிழ்ப்பெருந்தெய்வங்களான கண்ணனும் முருகனும் இரு வகைகளிலும் திருமணம் செய்திருப்பதாகச் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தொழுனைக் கரையில் அண்டர் மகளிரை கண்ணன் களவு மணம் செய்ததையும் ஏறுகள் ஏழினைத் தழுவி நப்பின்னையைக் கற்பு மணம் செய்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதே போல் முருகன் வள்ளியை களவு மணம் புரிந்ததையும் கற்பின் வாணுதலான தேவசேனையை கற்பு மணம் புரிந்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ்க்கடவுளர்கள் இருவரும் இவ்விரு வகை மணங்களும் செய்திருக்கும் செய்தி இவ்விரு வகை மணங்களும் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தன என்பதை காட்டுகிறது.
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வகைகளில் பாக்களை உடைய வள்ளுவத்தை இயல்களாகவும் முன்னோர் பகுத்து வைத்திருக்கிறார்கள். இன்பத்துப்பாலில் அப்படி அமைந்த இயல்கள் இரண்டு - களவியல், கற்பியல்.
இது வரை இந்தத் தொடரில் களவியலில் அமைந்த 'காதற்சிறப்பு உரைத்தல்' என்ற அதிகாரம் வரை பொருள் கண்டோம். அந்த அதிகாரத்தில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே உள்ள அளவில்லாத அன்பைக் காதலை உரைக்கும் அவர்களின் வாய்சொற்களைக் கண்டோம்.
களவியலில் நாட்கள் மகிழ்வுடன் சென்றன அவ்விருவருக்கும். அரசல் புரசலாக ஊராருக்கு இவர்களின் களவொழுக்கம் தெரிய வந்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் அலர் பேசத் தொடங்கினர்; அதாவது சாடைமாடையாகக் கேலி பேசத் தொடங்கினர். அதுவரையில் இவ்விருவரும் இணைந்து இன்பம் துய்ப்பதற்கு உதவியாக இருந்த தோழியும் இவர்கள் சந்திப்பைத் தடுக்கத் தொடங்கினாள். பிரிவினால் காதலர்களின் காதல் பெருகியதே ஒழிய குறையவில்லை.
சங்க காலத்தில் இப்படி பிரிவினால் வருந்திய காதலன் தனது காதல் நோய் தீர மடலேறுதல் என்றொரு வழியைப் பின்பற்றியதாக இலக்கிய மரபு கூறுகிறது. ஊரார் கேலி பேசுவார்களே என்று எண்ணி நாணாமல் அந்த நாணத்தைத் துறந்து மடலேறுவேன் என்று கூறிய வாய்மொழிகளைக் கூறும் அதிகாரம் என்பதால் இந்த அதிகாரத்திற்கு 'நாணுத்துறவுரைத்தல்' என்ற பெயர் அமைந்தது.
மடல் என்றால் என்ன? அதில் ஏறுதல் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
பனை மரத்தின் மட்டையைத் தான் மடல் என்றார்கள். அது இரண்டு பக்கமும் கூராக இருக்கும். குதிரையின் உருவத்தை அந்த கூரான பனை மட்டைகளால் செய்து, கீழே உருளை வைத்து, அதனை உருட்டிக் கொண்டு ஒரு நாற்சந்தியில் நிறுத்தி, அதன் மேல் ஏறி அமர்ந்து கொள்வான் காதலன். அப்போது அவன் மானத்தை மறைக்கும் அளவிற்கு ஆன உடையை மட்டுமே அணிந்திருப்பான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்பான். கையில் காதலியின் உருவத்தை வரைந்த ஓவியத்தை வைத்துக் கொண்டு அதனையே பார்த்துக் கொண்டிருப்பான். சில நேரம் காதலன் ஏறி அமர்ந்திருக்கும் அந்த மடற்குதிரையைச் சிறுவர்கள் தெருத் தெருவாக இழுத்துச் செல்வார்கள்.
இப்படி நாணத்தை விட்டு தன் காதலை ஊரறிய வெளிப்படுத்தி மடலேறிய காதலனைக் கண்ட ஊரார்கள் அவனது அடக்க இயலா காதலை உணர்ந்து காதலியின் வீட்டாருடன் பேசி இருவரையும் இணைத்து வைப்பார்கள்.
மடலேறுவேன் என்று காதலன் கூறுவதும் மடலேறாதே என்று தோழி மறுத்துரைப்பதும் என்றே தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலான இடங்களில் வந்துள்ளது. அதனால் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் இந்த மரபு உண்மையில் இருந்திருக்கலாம்; ஆனால் சங்க காலத்தில் அதனைப் பேசுவது மட்டுமே மரபாக இருந்திருக்கும் என்று தேவநேயப் பாவாணர் எண்ணுகிறார்.
இருக்கலாம். ஆனால் 'காதலன் சும்மா பயமுறுத்துகிறான். உண்மையிலேயே மடல் ஏறும் மரபு இப்போது இல்லை' என்று தோழிக்குத் தெரிந்திருந்தால் அவள் மீண்டும் மீண்டும் காதலனிடம் மடலேறாதே என்று மறுத்துரைத்திருக்க மாட்டாள். இலக்கியங்களில் அப்படி மறுத்துக் கூறுதல் மீண்டும் மீண்டும் வருவதால் அப்படி ஏறிய காதலர்கள் சில பேராவது இருந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். பேதையர் என்று பெண்களைச் சொன்னாலும் வெற்றுப் பயமுறுத்தலுக்கெல்லாம் பயப்படும் அளவிற்குச் சங்க கால மகளிர் பேதையர்களாக இருந்திருப்பார்கள் என்று தோன்றவில்லை.
நாணுத்துறவுரைத்தல் என்ற இந்த அதிகாரத்தில் சில குறட்பாக்கள் காதலன் கூறுவதாகவும் சில குறட்பாக்கள் காதலி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றன. அடுத்த பகுதிகளில் அந்த குறட்பாக்களையும் அவற்றின் பொருட்களையும் பார்ப்போம்.
அன்பன்,
குமரன்.
குறிப்பு: இந்த முன்னுரை பிடித்திருக்கிறதா? இது போல் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன் முன்னுரை வேண்டுமா? இன்பத்துப்பால் அதிகாரங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை பார்க்க இயலும் என்று நினைக்கிறேன். அந்த இடைவெளி சரியான இடைவெளி தானா? இடைவெளியைக் குறைக்க வேண்டுமா? என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
9 comments:
ஒருமுறை என்ன பலமுறை வரலாம் உங்கள் வலைப்பதிவிற்கு. ஒவ்வொரு பூவும் நன்று. வைகைக்கரையாம் கூடலுக்கு வைகறையின் வருகைக்கு நன்றி.
குறளின்பம் நன்று குமரன்....
நன்றி பாசமலர். நீங்கள் எழுதும் குறள், சிலம்பு இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
தமிழ்ப்பெருந்தெய்வங்களான கண்ணனும் முருகனும்":
தமிழ் கடவுள் என்று சொன்னால் அளவாகுமோ?
சோதியாகி* எல்லா உலகும் தொழும்*
ஆதி மூர்த்திஎன்றால்* அளவாகுமோ?*
வேதியர்* முழு வேதத்து அமுதத்தை*
தீதில் சீர்* திரு வேங்கடத்தானையே
அது என்னமோ தெரியலங்க உங்க பதிவ படிச்சா இப்படி பின்னூட்டம் போடணும்னு தோணுது! ஏன்னு தெரியல ::))))))
இராஜேஷ். அப்படி பார்த்தால் அளவாகாது தான். :-))
//இன்பத்துப்பால் அதிகாரங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை பார்க்க இயலும் என்று நினைக்கிறேன். அந்த இடைவெளி சரியான இடைவெளி தானா? //
ரொம்ப சரியான இடைவெளி தான். :-)
நான் எழுதும் போது என்ன நினைத்துக் கொண்டேனோ அந்தப் பொருளில் எடுத்துக் கொண்டு விடை சொல்லியிருக்கிறீர்கள் இராதா. :-)
முன்னுரை நன்று குமரா.
நன்றி அக்கா.
Post a Comment