காண்பதற்கு உலகில் எத்தனையோ நல்லவைகள் இருக்கின்றன. ஐந்து புலன்களாலும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிய இந்த உலகத்தில் எத்தனையோ அற்புதங்கள் உண்டு. நாமோ அவற்றை விடுத்து தீயவைகளில் மனத்தைச் செலுத்துவதிலேயே பெரும் காலத்தைப் போக்குகின்றோம்.
இரு கண்களும் நன்றாக அமைந்து நாம் விரும்பியபடி இவ்வுலக இன்பங்களை எல்லாம் கண்டு களிக்க நமக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கும் போது நாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை; ஆனால் கண்களில் ஏதேனும் குறை இருப்பதால் நம்மைப் போல் இயல்பான வாழ்க்கை வாழ இயலாதவர்கள் பலர் நுட்பியலின் (டெக்னாலஜி) துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற ஒரு வழிவகை செய்கிறது மதுரைக்கு அருகில் அழகர் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சுந்தரராஜன்பட்டி என்ற ஊரில் இருக்கும் ஒரு நிறுவனம்.

'Indian Association for the blind' என்ற இந்த நிறுவனத்தை நிறுவியவர் திரு. எஸ்.எம்.ஏ. ஜின்னா. நேற்று இந்த நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன் இவரும் ஒரு கண்பார்வையற்றவர் என்பது தெரியாது. அதனால் அங்கே சென்று இவரை முதலில் பார்க்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. கண்பார்வையில்லாமலேயே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறாரே என்ற வியப்பு ஏற்பட்டது. கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்திருந்தோம்.
அழகர் கோவில் போகும் வழியில் இருப்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் (நாங்கள் நால்வர், என் மாமியார் மாமனார், என் தம்பி அவர் மனைவி) அழகர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் இங்கே சென்றோம். நாங்கள் சென்று அடையும் சிறிது நேரத்திற்கு முன்னர் சீனா ஐயா, அவர் துணைவியார், திருஞானம் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் மூவரும் அங்கே வந்து காத்திருந்தனர்.
இந்த நிறுவனம் இருபத்தைந்து வருடங்களாக நடந்து வருகின்றது. பலருடைய நன்கொடைகளின் பயனாகச் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று நல்ல கட்டிடங்களுடன் பார்வைக்குறைவுடையோர் தங்கிப் படித்து முன்னேறும் வகையில் அமைந்திருக்கிறது. நாங்கள் சென்று இறங்கிய போது சில பார்வையற்ற சிறுவர்கள் பார்வையுள்ள சிறுவர்களுடன் பந்து எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வையற்ற சிறுவர்கள் எப்படி பந்து தங்களிடம் வருவதை அறிந்து அதனைப் பிடித்துப் பின் எறிந்து விளையாடுகிறார்கள் என்று புரியாமல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனை வாய் விட்டுச் சொல்லவும் செய்தேன். என் அருகில் இருந்த மகள் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துவிட்டு, அந்தச் சிறு பந்து ஒலியெழுப்பும் வகையில் அதில் சிறு கற்களை இட்டிருக்கிறார்கள்; அந்த ஒலியின் மூலம் பந்து வரும் திக்கை உணர்ந்து பார்வையற்ற சிறுவர்கள் விளையாடுகிறார்கள் என்று சொன்னாள். கண்ணில்லாததால் இவர்களுக்குக் காது நன்கு செயல்படுகிறது என்றும் சொன்னாள். உண்மை தானே. கண்ணால் நாம் செய்யும் பல செயல்களைக் காதுகளால் கேட்டும், கைகளால் உணர்ந்தும் தான் இவர்கள் செய்கிறார்கள் என்பதைப் பின்னர் இவர்களைப் பற்றி மேலும் கேட்டு அறிந்ததில் உணர்ந்தேன்.


பள்ளியின் நிறுவனருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பள்ளியில் படித்து நுட்பவியலாகராக இருக்கும் பார்வைக்குறைவுள்ள (பார்வை உண்டு; ஆனால் அது முழு அளவில் இல்லை) ஒரு இளம்பெண் நாங்கள் பள்ளிக்கு வாங்கித் தந்த இரு கைக்கணினிகளுடன் வந்தார். அவற்றை இயக்கி அவை எப்படி பார்வையற்றவர்களுக்குப் பயனாக இருக்கிறது என்று செய்து காண்பித்தார். விசைப்பலகையின் மேல் ப்ரெய்ல் குறிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு மென்பொருள் திரையில் இருப்பதைப் படித்துக் காட்டுகிறது. இவ்விரண்டின் துணை கொண்டு நாம் என்ன என்ன கணினியில் செய்வோமோ அத்தனையும் பார்வையற்றோரும் பார்வைக்குறையுள்ளோரும் செய்யமுடியும் என்பதைச் செய்து காட்டினார்.
அந்த செயல்முறை விளக்கத்திற்குப் பின்னர் அக்கணினிகளை நாங்கள் வழங்குவது போல் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று நிறுவனர் சொன்னதை ஒட்டி அப்படியே செய்தோம்.


மாணவ மாணவியர் மதிய உணவு உண்ண ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனே உணவுண்ணும் அறைக்கு எல்லோரும் சென்றோம். மதுரை அன்பகத்தில் சொல்லி ஆயத்தப்படுத்தியிருந்த ஆட்டுக்கறி பிரியாணி, காய்கறி பிரியாணி, தயிர்சாதம், அவித்த முட்டை, தயிர் வெங்காயம், இருவகை குழம்புகள், உருளைக்கிழங்கு வறுவல் அங்கே காத்திருந்தன.







முன்னூறு மாணவ மாணவியர் அங்கே தங்கிப் படிப்பதாக சீனா ஐயா சொல்லியிருந்ததால் அவர்களுக்கும் அங்கே பணிபுரியும் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் என்று பதினைந்து படி மட்டன் பிரியாணியும் இரண்டு படி வெஜிடபிள் பிரியாணியும் ஒரு படி தயிர்சாதமும் செய்திருந்தோம். அந்த உணவறையில் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ண இயலாது என்பதால் வயதில் சிறியவர்கள் ஒரு நூறு பேர் மட்டும் வந்து அமர்ந்தார்கள். இறைவணக்கத்தின் பிறகு நான், சரவணன், சேந்தன், தேஜஸ்வினி, சீனா ஐயா ஐவரும் உணவு பரிமாறினோம். அவர்கள் விருப்பப்படி உணவு கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்கள் உண்டார்கள் என்று உணர்ந்தோம். சிலருக்கு இரண்டாம் முறை கேட்டுப் பரிமாறினோம்.







பின்னர் நாங்கள் அனைவரும் அவர்களுடன் அமர்ந்து உண்டோம். நேரம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரையும் அந்த அறையில் அமர வைத்துப் பரிமாறினால் வெகு நேரம் ஆகிவிடும்; அதனால் மாணவர்கள் வரிசையில் வர அவர்களுக்கு உணவை அவர்கள் தட்டில் தரலாம்; அவர்கள் அதனை வாங்கிக் கொண்டு வளாகத்தில் அவர்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து உண்டு கொள்ளலாம் என்று உணவைப் பரிமாற எங்களுக்கு உதவிய அப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் சொன்னதால், சரி அப்படியே செய்யுங்கள் என்று சொன்னோம்.
நாங்கள் உணவுண்டு வரும் போது கீழே வரிசையாக மாணவர்களும் முதல் மாடியில் வரிசையாக மாணவியர்களும் வந்து உணவைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் மிக இயல்பாக நடந்து வந்து உணவைப் பெற்றுச் செல்வதால் அவர்கள் பார்வைக் குறை உடையவர்கள் என்பதே மறந்து போகிறது. தற்செயலாக சில மாணவர்களின் வழியில் நின்று கொண்டு அவர்களுடன் மோதிக் கொண்டேன். சில முறை இப்படி நடந்த பின்னர் தான் அவர்கள் பழக்கத்தால் அப்படி இயல்பாக நடக்கிறார்கள்; அதனால் புதியவரான நாம் தான் அவர்கள் பாதையில் இருந்து விலக வேண்டும்; அவர்கள் நாம் அங்கே இருப்பதை அறியார்கள் என்பது புரிந்தது. அவர்கள் பாதையில் இருந்து விலகி சிறிது தூரத்தில் வந்து நின்று கொண்டோம்.

மற்றவர்கள் படிக்கும் அதே பாடபுத்தகங்களைத் தான் இம்மாணவர்களும் படிக்கிறார்கள் என்று சரவணன் சொன்னார். அப்புத்தகங்களில் இருப்பதை ஒலிப்பதிவு செய்து அதனைக் கேட்டுக் கேட்டு இவர்கள் படிக்கிறார்கள் என்றும் சொன்னார். +2 தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள் என்றும் அவர்கள் பெயர்களுடன் மதிப்பெண் பட்டியலை அங்கே ஓரிடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
மெய்யம்மை அம்மா அவர்கள் தேர்வெழுதும் போது அவர்களுக்குத் துணையாகச் சென்று அவர்கள் சொல்லச் சொல்ல எழுதிய அனுபவத்தைப் பற்றி சொன்னார். என் தம்பியும் அப்படி சென்று உதவியது உண்டென்றும் பாடங்களை ஒலிப்பதிவு செய்தும் தந்துள்ளார் என்றும் அழகர்கோவிலில் இப்பள்ளியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சொல்லியிருந்தார்.
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உணவு பெற்ற பின்னர் கல்லூரி மாணவர்கள் வந்து உணவு பெறத் தொடங்கினார்கள். அருகிலேயே காதக்கிணறு என்ற ஊரில் இருக்கும் தாய் தந்தையர் அற்ற ஆதரவற்ற சிறுவர்கள் வாழ்ந்து படிக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சீனா ஐயாவிடம் சொல்லியிருந்ததால் அவர் அப்பள்ளி ஆசிரியரிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அங்கே செல்ல நேரமாகிவிட்டதால் பார்வையற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம்.



நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் தன் செலவிலேயே நடத்தும் இந்த ஆதரவற்ற சிறுவர்களின் பள்ளிக்குச் சென்றோம். அங்கே மாணவர்கள் எங்கள் வருகை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார்கள். சென்று சிறிது நேரம் அவர்களுடன் செலவழித்து பின்னொரு நாள் வருவதாகச் சொல்லி வந்தோம்.
இன்னும் சில உதவிகளை எங்கள் சார்பில் சீனா ஐயா செய்வதற்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய பேருதவி மட்டும் இல்லையென்றால் இந்த உதவிகளை எல்லாம் இவ்வளவு குறுகிய காலத்தில் செய்திருக்க இயலாது. உதவி தர முன் வருபவர்களையும் உதவி வேண்டுபவர்களையும் இணைக்கும் இந்த நற்செயலை தனது பொன்னான நேரத்தை எல்லாம் செலவழித்துச் செய்யும் ஐயாவின் மனத்திற்கும் அம்மாவின் மனத்திற்கும் பல்லாயிரம் நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது!